Sunday, May 14, 2006

8. கழுகுமலை

இந்தப் பேர நெறையப் பேரு கேள்விப் பட்டிருப்பீங்க. கொஞ்சப் பேரு பாத்திருப்பீங்க. ஆனா இந்தக் கோயிலோட பெருமையும் பழமையும் ஒங்களுக்கெல்லாம் தெரிஞ்சிருக்க வாய்ப்புகள் குறைவுன்னே நெனைக்கிறேன்.

தமிழகத்துல இருக்குற பழைய முருகன் கோயில்கள்ள இதுவும் ஒன்னு. குடவரைக் கோயில் வகையைச் சார்ந்தது. அதாவது மலையக் கொடஞ்சி கோயில் கட்டுறது. இன்னொரு பிரபலமான குடவரைக் கோயில் திருப்பரங்குன்றம். இந்தக் குடவரைக் கோயில்ல சாமியச் சுத்த முடியாது. ஏன்னா சாமிய குகைச் சுவத்துல செதுக்கீருப்பாங்க. அதுனால சுத்துனா முழு மலையையும் சுத்தனும். திருப்பரங்குன்றத்துலயும் மலைவலம் வருவாங்க. கழுகுமலைலயும் அப்படிச் செய்வாங்க.

தமிழ்நாட்டுல பெரிய கோயில்கள் எல்லாமே அரசாங்கத்தோட அறநிலையத்துறையோட கட்டுப்பாட்டுல இருக்கு. சில பழைய கோயில்கள்தான் தனியார் கிட்ட இருக்கு. கழுகுமலையும் அதுல ஒன்னு. எட்டையபுரம் சீமைச் சமீனுக்குச் சொந்தமான கோயில்தான் கழுகுமலை. ஒரு எட்டப்பன் தவறு செஞ்சிருக்கலாம். ஆனா அவருக்கு முன்னும் பின்னும் இருந்தவங்க நல்லாவே ஆட்சி செஞ்சிருக்காங்க. இந்தக் கோயிலையும் இன்னமும் நல்லாவே பராமரிச்சிக்கிட்டு வர்ராங்க.

வறண்ட பூமிதான். ஆனா கழுகுமலைக் கோயில் கொளத்துல நான் தண்ணியில்லாமப் பாத்ததில்லை. அதுல எறங்கி நின்னா குளுகுளுன்னு வெயிலுக்குச் சொகமா இருந்துச்சு. அப்படியே கால் கழுவீட்டுப் போனோம். கோயிலோட பழமையும் குளுமையும் ஒன்னா வரவெத்தது. இங்க மயில் மேல உக்காந்த முருகன். வழக்கமா மயில் வலப்பக்கமா திரும்பீருக்கும். இங்க இடப்பக்கமா திரும்பீருக்கும். அமைதியா கூட்டமில்லாம இருந்துச்சு. பொறுமையாக் கோயிலச் சுத்திப் பாத்துட்டு வெளிய வந்தோம்.


கழுகுமலைக்கு இன்னும் ரெண்டு பெருமைகள் இருக்கு. அங்க சமணர்கள் வாழ்ந்த இடம் இன்னமும் இருக்கு. அதாவது பழைய சமணக் கோயில். இப்ப இருக்குற ஊர விட்டு ஒதுக்குப் புறமா இருக்கு. ஆனா நாங்க போக முடியலை. காரணம் நேரமில்லாமைதான்.

அண்ணாமலை ரெட்டியார்னு கேள்விப் பட்டிருப்பீங்க. காவடிச் சிந்து எழுதுறதுல ரொம்பப் பெரிய ஆளு. எல்லாம் முருகன் கொடுத்ததுதான. முருகன் மேல அத்தன காவடிச் சிந்து எழுதீருக்காரு. ஒன்னொன்னும் தமிழருவிதான். அவரோட சொந்த ஊர் கழுகுமலைதான்.

வண்ண மயில் முருகேசன்
குற வள்ளி பதம் பணி நேசன்
உரை வளமே தரு
கழுகாசலபதி கோயிலின்
வளம் நான் மறவாதே

இப்படி எழுதியிருக்காரு அவரு காவடிச் சிந்துல. நெறைய இருக்கு. தெரிஞ்சவங்க ஒன்னொன்னா எடுத்துச் சொன்னா நமக்கும் கேக்குறதுக்கு நல்லாயிருக்கும்.

கோயில்பட்டீல இருந்து நேராப் போனா திருநெல்வேலி. ஆனா கோயில்பட்டி தாண்டி கொஞ்ச தூரத்துலயே இடப்பக்கமா திரும்பி உள்ள போனா கழுகுமலை வரும். அங்கிருந்து அப்பிடியே நேராப் போனா சங்கரங்கோயில் வரும். அப்படியே திரும்பி வளைச்சிக்கிட்டு போனா நேராத் திருநெல்வேலிக்கே கொண்டு போயிரும்.

கோயில்பட்டீல இருந்து நேரா திருநெல்வேலி போனா வழியில கயத்தாறு வரும். கட்டபொம்மனத் தூக்குல போட்ட எடத்தப் பாத்திருக்கலாம். ஆனா நாங்க கழுகுமலை சங்கரங்கோயில்னு போனதால அதப் பாக்கல. நாங்க சங்கரங்கோயில் போறப்போ கிட்டத்தட்ட 11.30 மணி. நல்ல வெயில். 12 மணிக்கு நட வேற சாத்தீருவாங்க. அதுனால விறுவிறுன்னு வண்டிய நிறுத்தீட்டு கோயிலுக்குள்ள போனோம்.

சங்கரங்கோயிலும் பழைய கோயில்தான். அந்தக் காலத்துல நெற்கட்டுஞ்செவல் சமீனுக்குச் சொந்தமா இருந்திருக்கு. கோயிலுக்குள்ள போகும் போது பூலித்தேவனை நெனைக்காமப் போக முடியாது.

நெற்கட்டும் செவல் சீமைக்குத் தலையா இருந்தவர் பூலித்தேவர். இவரு கூடதான் வெள்ளக்காரன் மொதமொதலா இந்தியாவுல சண்ட போட்டான். ஆனா அத வரலாறுல படிக்கிறதே இல்லை. சிப்பாய்க் கலகத்துல இருந்துதான் தொடங்குவாங்க. மொதப் போர்ல பூலித்தேவருக்குத்தான் வெற்றி. அடுத்த போர்ல வஞ்சகமாக் காட்டிக் குடுத்தான் கான் சாகிப்ங்குறவன். அட...அதாங்க கமலோட வாழ்க்கை லட்சியப் பாத்திரம் மருதநாயகம். கமலுக்கு வேணும்னா இவர் கதாநாயகனா இருக்கலாம். ஆனா வரலாற்றுக்கு எதிர்நாயகன்.

இப்ப வெள்ளக்காரன் பூலித்தேவரப் பிடிச்சாச்சு. கொண்டு போறாங்க. எதுக்கு? பேருக்கு விசாரணைன்னு வெச்சு தூக்குல போடத்தான். வழியில சங்கரங்கோயில். குலதெய்வத்தக் கும்புட அனுமதி கேட்டாரு பூலித்தேவர். வெள்ளக்காரனும் கோயிலச் சுத்திக் காவல் போட்டு இவர உள்ள அனுப்புனான். உள்ள போனவரு போனவருதான். எங்க போனாரு...ஏதுன்னு கண்டு பிடிக்க முடியலை. அவர் காணாமப் போன எடத்தைக் குறிச்சி மரப்பந்தல் போட்டு வெச்சிருக்காங்க. இவரக் காணம்னு ரெக்கார்டுல எழுதிக் கேச மூடீட்டான் வெள்ளக்காரன். ஆனா ஒன்னு...அடுத்து பக்கத்தூரு பாஞ்சாலங்குறிச்சிக்காரனப் பிடிச்சப்ப...எங்கயும் நிப்பாட்டலை. நேரா கயத்தாறு. விசாரணை. தூக்கு. வெள்ளக்காரன் சுதாரிச்சிக்கிட்டான்.

தொடரும்.

33 comments:

said...

கழுகு மலை விசேடங்களைச் சொல்லாமல் சங்கரன்கோயிலுக்குப் போயிட்டீரே. அதுக்காவது தனிப்பதிவா இல்லை வேன் உள்ள உக்காந்துகிட்டே பிரச்சாரக் கூட்டமா?

said...

//நெறைய இருக்கு. தெரிஞ்சவங்க ஒன்னொன்னா எடுத்துச் சொன்னா நமக்கும் கேக்குறதுக்கு நல்லாயிருக்கும்.//
இது எழுதியது அவரா என்று தெரியாது. எங்கள் ஊர் நாகப்பட்டினம் அருகில் எட்டுக்குடி என்ற சிறப்பு மிகுந்த சிற்றூரில் உள்ள முருகன் கோவிலில் ஆண்டு தோறும் சித்ரா பவுர்ணமி அன்று திருவிழா நடக்கும் நான் சிறுவயதில் ஆண்டு தோறும் அங்கு செல்வேன். அப்பொழுது பாடப்படும் ஒற்றையடி பாட்டு இது.

சீர் மேவும் எட்டுகுடி வாழும்
வேல் வேல்
தெய்வானை தன்னுடைய மனாளனே வாவா
வேல் வேல்
பார்புகழும் சிந்துதமிழ் பாடி
வேல் வேல்
பண்ணிருகை ஆண்டவனே என்னருகே வாவா
வேல் வேல்
எச்சரிக்கை என்று இடும்பன் கூற
வேல் வேல்
இருபுறமும் காவடிகள் ஆடிடுதே நீ வாவா
வேல் வேல்
காணிக்கை செய்பவர்கள் கோடி
வேல் வேல்
காத்திடவே என் அருமை கந்தனே நீ வாவா
வேல் வேல்


இப்படியாக நீண்டு கொண்டே செல்லும். பாடும் போது மேளமும், ஒற்றையடி பம்பை சத்ததுடன் கேட்கும் போது கேட்பவர்கள் பரவச நிலை அடைவர்.

said...

இப்பதிவை படிக்கும் பொது,

எட்டாம் வகுப்பு தமிழ் பாடத்தில் வரும் கழுகுமலை பற்றிய வரலாறும், பூலித்தேவனின் வரலாறும், ஞாபகத்தில் ஆடியது.

அசை போடவைத்த இராகவனுக்கு நன்றிகள் பல.

said...

அருமைய்யா.
கழுகுமலையத் தொட்டுக்கிட்டு பூலித்தேவன் பத்திச் சொல்லிருக்கீங்க... திருப்பரங்குன்றத்துல இருக்குறது மிகப் பிரம்மாண்டமான குடைவரைக் கோயில். கோபுரத்தைத் தவிர மீதி எல்லாமே ஒரு பெரிய மலையக் கொடைஞ்சு செஞ்சது. அதில பாருங்க திருப்பரங்குன்றம் குளத்திலயும் மதுரை ஜில்லா முழுக்கத் தண்ணி இல்லைன்னாலும் வத்தினதில்லை. அங்க மீனுக்கு உப்பும் பொரியும் வாங்கிப் போடுவாங்க. எவ்வளவு உப்புப் போட்டாலும் அந்தத் தண்ணிக் கரிக்கிறதில்லைன்னு எங்க அம்மாச்சி சொல்லுவாங்க.

said...

கழுகுமலை பத்தி நானும் எங்கயோ கேள்விப்பட்டிருக்கேன்.. போனதில்லை.. பதிவு நல்லா இருக்கு.. கொத்ஸ் சொல்வது போல் இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாம் :)

ஜிரா, முதல் படம் திரும்பி இருக்கா? இல்லை சரியாத் தான் இருக்கா?

said...

///இந்தப் பேர நெறையப் பேரு கேள்விப் பட்டிருப்பீங்க. கொஞ்சப் பேரு பாத்திருப்பீங்க. ///

ராகவன்,
நம்ம தமிழ் வலைப்பதிவர்களில் கழுகுமலைக்காரர் ஒருத்தர் இருக்கார். காவடிச் சிந்தை அறிமுகப்படுத்திய அண்ணாமலை ரெட்டியாருக்கு ஒருவேளை சொந்தக்காரராக இருக்கப்போகிறார் :-).

said...

// இலவசக்கொத்தனார் said...
கழுகு மலை விசேடங்களைச் சொல்லாமல் சங்கரன்கோயிலுக்குப் போயிட்டீரே. அதுக்காவது தனிப்பதிவா இல்லை வேன் உள்ள உக்காந்துகிட்டே பிரச்சாரக் கூட்டமா? //

ஹி ஹி என்ன பண்றதுங்க. அவ்வளவுதான் அந்நேரம் தோணிச்சு. நீங்க சொன்னப்புறந்தான் தோணிச்சு. இப்ப எப்படி எழுதுறது. கழுகுமலை பத்தி ஒங்களுக்குத் தெரிஞ்சத சொல்லுங்களேன்.

said...

// GOVIKANNAN said...
//நெறைய இருக்கு. தெரிஞ்சவங்க ஒன்னொன்னா எடுத்துச் சொன்னா நமக்கும் கேக்குறதுக்கு நல்லாயிருக்கும்.//
இது எழுதியது அவரா என்று தெரியாது. எங்கள் ஊர் நாகப்பட்டினம் அருகில் எட்டுக்குடி என்ற சிறப்பு மிகுந்த சிற்றூரில் உள்ள முருகன் கோவிலில் ஆண்டு தோறும் சித்ரா பவுர்ணமி அன்று திருவிழா நடக்கும் நான் சிறுவயதில் ஆண்டு தோறும் அங்கு செல்வேன். அப்பொழுது பாடப்படும் ஒற்றையடி பாட்டு இது. //

கோவி, ரெட்டியார் நெறையப் பாட்டு எழுதீருக்காரு. ஆனா அத்தனைக்கும் எங்க போறதுன்னு தெரியலை. சென்னையில புத்தகக் கடையில கெடைக்குமான்னு தெரியலை. தேடிப் பாக்கனும்.

// சீர் மேவும் எட்டுகுடி வாழும்
வேல் வேல்
தெய்வானை தன்னுடைய மனாளனே வாவா
வேல் வேல்
பார்புகழும் சிந்துதமிழ் பாடி
வேல் வேல்
பண்ணிருகை ஆண்டவனே என்னருகே வாவா
வேல் வேல்
எச்சரிக்கை என்று இடும்பன் கூற
வேல் வேல்
இருபுறமும் காவடிகள் ஆடிடுதே நீ வாவா
வேல் வேல்
காணிக்கை செய்பவர்கள் கோடி
வேல் வேல்
காத்திடவே என் அருமை கந்தனே நீ வாவா
வேல் வேல்


இப்படியாக நீண்டு கொண்டே செல்லும். பாடும் போது மேளமும், ஒற்றையடி பம்பை சத்ததுடன் கேட்கும் போது கேட்பவர்கள் பரவச நிலை அடைவர். //

என்ன அருமையான காவடிப் பாடல். ஆகா. ஆகா.

said...

// சிவமுருகன் said...
இப்பதிவை படிக்கும் பொது,

எட்டாம் வகுப்பு தமிழ் பாடத்தில் வரும் கழுகுமலை பற்றிய வரலாறும், பூலித்தேவனின் வரலாறும், ஞாபகத்தில் ஆடியது.

அசை போடவைத்த இராகவனுக்கு நன்றிகள் பல. //

நன்றி சிவமுருகன். அப்பிடியே ஒங்களுக்குத் தெரிஞ்சதுகளையும் எடுத்து விடுங்க.........

said...

// பிரதீப் said...
அருமைய்யா.
கழுகுமலையத் தொட்டுக்கிட்டு பூலித்தேவன் பத்திச் சொல்லிருக்கீங்க... திருப்பரங்குன்றத்துல இருக்குறது மிகப் பிரம்மாண்டமான குடைவரைக் கோயில். கோபுரத்தைத் தவிர மீதி எல்லாமே ஒரு பெரிய மலையக் கொடைஞ்சு செஞ்சது. அதில பாருங்க திருப்பரங்குன்றம் குளத்திலயும் மதுரை ஜில்லா முழுக்கத் தண்ணி இல்லைன்னாலும் வத்தினதில்லை. அங்க மீனுக்கு உப்பும் பொரியும் வாங்கிப் போடுவாங்க. எவ்வளவு உப்புப் போட்டாலும் அந்தத் தண்ணிக் கரிக்கிறதில்லைன்னு எங்க அம்மாச்சி சொல்லுவாங்க. //

திருப்பரங்குன்றமும் எனக்குப் பிடிச்ச கோயில்தான். எனக்குத் தெரிஞ்ச பெரிய குடவரைக்கோயில். அஜந்தா எல்லோராவுல இருக்கு பாத்தீங்களா....அத்தன பிரம்மாண்டந்தான் இங்கயும். ஆனா அதெல்லாம் பாழடைஞ்சு போச்சு. அதுனால ஒரு வெறுமை. அந்த வெறுமை அதுகள ரொம்பப் பெருசாக் காட்டுது. ஆனா திருப்பரங்குன்றம் நெறஞ்ச கோயிலு. அதுனால நெருக்கடியாத் தெரியுது. மத்தபடி ரொம்ப நல்ல கோயிலுங்க.

said...

// பொன்ஸ் said...
கழுகுமலை பத்தி நானும் எங்கயோ கேள்விப்பட்டிருக்கேன்.. போனதில்லை.. பதிவு நல்லா இருக்கு.. கொத்ஸ் சொல்வது போல் இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாம் :) //

ஆமா...இன்னுங் கொஞ்சம் எழுதீருக்கலாம்.

// ஜிரா, முதல் படம் திரும்பி இருக்கா? இல்லை சரியாத் தான் இருக்கா? //

திரும்பீருக்கு. எடுத்தப்ப திருப்பி வெச்சி எடுத்தது. அத அப்பிடியே போட்டுட்டேன். :-)

said...

எட்டுக் குடியிலும் கழுகுமலையிலும் இருக்கும் முருகன் திருவுருவச் சிலைகளைச் செய்த சிற்பி ஒருவரே என்று படித்திருக்கிறேன். இரண்டு இடங்களிலும் மயில் இடப்புறம் நோக்கியிருக்கும். எட்டுக் குடியிலோ கழுகுமலையிலோ திருவுருவச்சிலை மிகவும் தத்ரூபமாக (தமிழில் என்ன சொல்வது?) இருந்ததால் குடமுழுக்காட்டின் போது சிலையின் கண்ணைத் திறந்தவுடன் அது பறந்து போக இருந்தததாகவும் அதனால் சிற்பி எங்கோ ஒரு இடத்தில் தட்டி சிலையில் சிறு குறையை ஏற்படுத்தி சிலையை அங்கேயே நிலை நிறுத்தியதாகவும் படித்திருக்கிறேன்.

கழுகுமலை கந்தன், எட்டுக்குடி வேலவன் என்று திருமுருகன் திருப்பாடல்களில் படித்தவை நினைவிற்கு வந்தன இந்தப் பதிவைப் படித்தவுடன்.

said...

ராகவன்,
இங்கே ஒரு காவடிச்சிந்து இருக்கிறது, ஆனால் இது அண்ணாமலை ரெட்டியார் எழுதியது இல்லை. அண்ணாமலையாரின் காவடிச்சிந்தை கூகிள் கேச்சேயில்(cache) இருந்து உருவி எடுத்தேன். விரும்பினால் நீங்களும் சேமித்துக்கொள்ளலாம், இது கேச்சேயில் எவ்வளவு நாள் இருக்கும் என்று தெரியவில்லை.

தொடர்புடைய சுட்டிகள் சில.
சுட்டி1
சுட்டி2
சுட்டி3

said...

ராகவன்,
கழுகுமலை எல்லாம் பாக்கலையேன்னு இருந்த குறை நீங்கிருச்சு.

அருமையா பச்சப்பசேல்னு இருக்கு அங்கெல்லாம்.

ம், அப்புறம் 'கோமதி' என்ன சொன்னாங்க?

said...

கழுகுமலைக் கந்தனுக்கு அரோகரா. ஒரே பதிவில் கழுகுமலை படங்கள், ரெட்டியார் சிந்துகள், மருதநாயகம் கதை ... கலக்குறீங்க.
சங்கரன் கோயில் யானை பிரசித்தம். இப்போது எப்படியோ தெரியவில்லை. சக்தியை வழிபடுபவர்களுக்கு ஸ்ரீசக்ர மேரு அமைந்த சிறப்புத் தலம். அடுத்த பதிவை எதிர்நோக்கியிருக்கிறேன்

said...

தமிழ் குமரனுக்கே தமிழ் தகராறா ? என்ன கொடுமை சரணவனன் இது ( சந்திரமுகி பாதிப்புங்க, விடுங்க)

தத்ரூபமாக - என்பதற்கு 'நேர்த்தியாக' என்றும் மேலும் சிறப்பிக்க வேண்டுமானால் 'மிக நேர்த்தியாக' என்று சொல்லலாம்

said...

// குமரன் (Kumaran) said...
எட்டுக் குடியிலும் கழுகுமலையிலும் இருக்கும் முருகன் திருவுருவச் சிலைகளைச் செய்த சிற்பி ஒருவரே என்று படித்திருக்கிறேன். இரண்டு இடங்களிலும் மயில் இடப்புறம் நோக்கியிருக்கும். எட்டுக் குடியிலோ கழுகுமலையிலோ திருவுருவச்சிலை மிகவும் தத்ரூபமாக (தமிழில் என்ன சொல்வது?) இருந்ததால் குடமுழுக்காட்டின் போது சிலையின் கண்ணைத் திறந்தவுடன் அது பறந்து போக இருந்தததாகவும் அதனால் சிற்பி எங்கோ ஒரு இடத்தில் தட்டி சிலையில் சிறு குறையை ஏற்படுத்தி சிலையை அங்கேயே நிலை நிறுத்தியதாகவும் படித்திருக்கிறேன். //

குமரன் அது நடந்தது சிக்கலில். பிறகு அவரது கை விரலை வெட்டி விட்டானாம் அரசன். அதற்குப் பிறகு தட்டியதுதான் எட்டிக்குடி சிலை.

// கழுகுமலை கந்தன், எட்டுக்குடி வேலவன் என்று திருமுருகன் திருப்பாடல்களில் படித்தவை நினைவிற்கு வந்தன இந்தப் பதிவைப் படித்தவுடன். //

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ஞாபகம் வருதே

said...

// Muthu said...
ராகவன்,
இங்கே ஒரு காவடிச்சிந்து இருக்கிறது, ஆனால் இது அண்ணாமலை ரெட்டியார் எழுதியது இல்லை. அண்ணாமலையாரின் காவடிச்சிந்தை கூகிள் கேச்சேயில்(cache) இருந்து உருவி எடுத்தேன். விரும்பினால் நீங்களும் சேமித்துக்கொள்ளலாம், இது கேச்சேயில் எவ்வளவு நாள் இருக்கும் என்று தெரியவில்லை.

தொடர்புடைய சுட்டிகள் சில.
சுட்டி1
சுட்டி2
சுட்டி3 //

ஆகா! மிக நன்றி முத்து. இவைகளை சேமித்துக் கொள்கிறேன். படக்குன்னு தேடிக் குடுத்தீங்களே...ரொம்ப நன்றி.

said...

// துளசி கோபால் said...
ராகவன்,
கழுகுமலை எல்லாம் பாக்கலையேன்னு இருந்த குறை நீங்கிருச்சு. //

டீச்சர். கண்டிப்பா போகனும் டீச்சர். வெயில் நெறையத்தான். கோயிலும் பழசுதான். ஆனாலும் ஒரு வாட்டியாவது போகனும்.

// அருமையா பச்சப்பசேல்னு இருக்கு அங்கெல்லாம்.//

கேமராவை அப்பிடித் திருப்பி வெச்சி எடுத்திருக்கு டீச்சர். அந்தக் கேமராவை இப்பிடித் திருப்புனா வெப்பக்காடுதான்.

// ம், அப்புறம் 'கோமதி' என்ன சொன்னாங்க? //

என்ன செஞ்சாங்கன்னு கேளுங்க. அது அடுத்த பதிவுல வருது.

said...

// மணியன் said...
கழுகுமலைக் கந்தனுக்கு அரோகரா. ஒரே பதிவில் கழுகுமலை படங்கள், ரெட்டியார் சிந்துகள், மருதநாயகம் கதை ... கலக்குறீங்க.//

ஹி ஹி நன்றி மணியன்.

// சங்கரன் கோயில் யானை பிரசித்தம். இப்போது எப்படியோ தெரியவில்லை. //

ஓ ஏற்கனவே பிரசித்தமா? அதான் அப்படி.....

said...

// GOVIKANNAN said...
தமிழ் குமரனுக்கே தமிழ் தகராறா ? என்ன கொடுமை சரணவனன் இது ( சந்திரமுகி பாதிப்புங்க, விடுங்க) //

:-)))))))))) பிரபு சொல்றது என் காதுல அப்படியே விழுந்துச்சு...

// தத்ரூபமாக - என்பதற்கு 'நேர்த்தியாக' என்றும் மேலும் சிறப்பிக்க வேண்டுமானால் 'மிக நேர்த்தியாக' என்று சொல்லலாம் //

நேர்த்தியானங்கறது நல்ல சொல். தத்ரூபமாகங்கறதுக்குப் பதிலா சொல்லலாம். திருத்தமா அமைஞ்சதுன்னும் சொல்லலாம்.

said...

ராகவன்,

தத்ரூபம்'ன்றதுக்கு நேர்த்தியாக ன்னு சொல்லலாம். ஆனால் சரியான அர்த்தம் அதான்
தத்ரூபத்துக்கு நேரான அர்த்தம் வரலையேப்பா(-:

'அச்சில் வார்த்தாற்போல்' இருக்குன்னு சொல்லலாமா?

'பிரதி' எடுத்தாற்போல் ( பிரதி'ன்றது தமிழான்னு தெரியலையே)

அப்புறம் 'மயில்' இடப்புறம், வலப்புறம் திரும்பி இருக்கறதுன்ற விஷயமே இப்பத்தான் தெரியவருது.

கட்டாயம் போய்த்தான் ஆகணும். எப்பக்கொடுத்து வச்சிருக்கோ?

said...

துளசி அக்கா சரியாகக் கேட்டார்கள். நேர்த்தியாக என்பதோ திருத்தமாக அமைஞ்சது என்பதோ தத்ரூபமா என்பதற்கு சரியான பொருள் தரவில்லை. நேரே நின்றாற்போல என்று சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

said...

//தத்ரூபம்'ன்றதுக்கு நேர்த்தியாக ன்னு சொல்லலாம். ஆனால் சரியான அர்த்தம் அதான்
தத்ரூபத்துக்கு நேரான அர்த்தம் வரலையேப்பா(-:

'அச்சில் வார்த்தாற்போல்' இருக்குன்னு சொல்லலாமா?

'பிரதி' எடுத்தாற்போல் ( பிரதி'ன்றது தமிழான்னு தெரியலையே)//

தத்ரூபம் - தத் -- உந்த (அந்த)
ரூபம் -- வடிவம்

பொதுவாக ' அவரின் உண்மை வடிவமாக' அல்லது 'நேரில் காண்பது போல ' எனக் குறிப்பிடலாம். அச்சில் வார்த்தால்போல, பிரதி எடுத்தாற்போலவும் சரிதான்.

said...

இன்னொரு பிரபலமான குடவரைக் கோயில் திருப்பரங்குன்றம்
பிள்ளையார் பட்டியும் ஒரு குடவரைக் கோயில்னு நினைக்கிறேன்.

சில பழைய கோயில்கள்தான் தனியார் கிட்ட இருக்கு. கழுகுமலையும் அதுல ஒன்னு.
என்னோட நண்பர் ஒருத்தர் செட்டினாட்டைச் சேர்ந்தவர்.அவரோட கூற்றுப்படி பார்த்தா செட்டினாட்டில இருக்கிற எந்தக் கோயிலும் அரசோட கட்டுப்பாட்டுக்குக் கீழ வரவில்லை.தனியாராலேயே நிர்வகிக்கப்படுகின்றன.

உள்ள போனவரு போனவருதான். எங்க போனாரு...ஏதுன்னு கண்டு பிடிக்க முடியலை
ஓ.இது எனக்கு ஒரு புதிய செய்தி.

said...

திரு. ராகவன், என்னங்கய்யா இது அநியாயமா இருக்கு, என்னோட சொந்த ஊரைப் பத்தி பொளந்து கட்டுறது யாரு! அட ரொம்ப பெருமையா இருக்கு. நான் கழுகுமலை பற்றி எழுதிய காலத்தில் தமிழ்மணம் கிடையாது. அதனால என்னவோ, எனக்கு இத்தனை பேருக்கு கழுகுமலை தெரியுங்கிறது எனக்கு தெரியாமலே போயிடுச்சு!
'Kalugumalai'http://kalugumalai.com
'கழுகுமலை பற்றிய எனது பழைய பதிவு'
வாழ்த்துக்கள் ராகவன். ஊருக்குப் போய் வருசக்கணக்கா ஆயிடுச்சு. நீங்க புண்ணியவாங்க போங்க.

said...

// 'அச்சில் வார்த்தாற்போல்' இருக்குன்னு சொல்லலாமா?

'பிரதி' எடுத்தாற்போல் ( பிரதி'ன்றது தமிழான்னு தெரியலையே)//

தத்ரூபம் - தத் -- உந்த (அந்த)
ரூபம் -- வடிவம்

பொதுவாக ' அவரின் உண்மை வடிவமாக' அல்லது 'நேரில் காண்பது போல ' எனக் குறிப்பிடலாம். அச்சில் வார்த்தால்போல, பிரதி எடுத்தாற்போலவும் சரிதான். //

அச்சுல வார்த்தாப்புலன்னு சொல்லலாம். ஆனா அது உருவ ஒற்றுமைக்குப் பயன்படுத்தனும்.

பிரதி என்பது தமிழ்ச்சொல் அல்ல.

நேருல பாத்தாப்புல இருக்குன்னு சொல்றதுதான் ரொம்பச் சரி.

said...

// சுதர்சன்.கோபால் said...
இன்னொரு பிரபலமான குடவரைக் கோயில் திருப்பரங்குன்றம்
பிள்ளையார் பட்டியும் ஒரு குடவரைக் கோயில்னு நினைக்கிறேன். //

தெரியலையே சுதர்சன். அந்தப் பக்கத்துக்காரங்க யாராவது இருக்கீங்களா? சொல்லுங்களேன்?

// சில பழைய கோயில்கள்தான் தனியார் கிட்ட இருக்கு. கழுகுமலையும் அதுல ஒன்னு.
என்னோட நண்பர் ஒருத்தர் செட்டினாட்டைச் சேர்ந்தவர்.அவரோட கூற்றுப்படி பார்த்தா செட்டினாட்டில இருக்கிற எந்தக் கோயிலும் அரசோட கட்டுப்பாட்டுக்குக் கீழ வரவில்லை.தனியாராலேயே நிர்வகிக்கப்படுகின்றன. //

உண்மைதான் சுதர்சன். செட்டிநாட்டுக் கோயில்கள் எல்லாம் தனியார் கோயில்கள்தான். விருதுநகரில் கூட நாடர்கள் கோயில்கள் சிலவற்றைத் திறம்பட நிர்வாகித்து வருகிறார்கள்.

// // உள்ள போனவரு போனவருதான். எங்க போனாரு...ஏதுன்னு கண்டு பிடிக்க முடியலை //
ஓ.இது எனக்கு ஒரு புதிய செய்தி. //

பலபேருக்குத் தெரியாது. பூலித்தேவனுக்கு அடுத்த படியா அட்டாக்குனது கட்டபொம்மன..அப்புறம் மருது...இப்பிடி ஒன்னொன்னா...தட்டி விட்டுட்டான். ஆனா ஒவ்வொரு எடத்துலயும் உள்குத்து வெச்சுத்தான் வீழ்த்துனான். அதுதான் உண்மை.

said...

// John ஜான் போஸ்கோ said...
திரு. ராகவன், என்னங்கய்யா இது அநியாயமா இருக்கு, என்னோட சொந்த ஊரைப் பத்தி பொளந்து கட்டுறது யாரு! அட ரொம்ப பெருமையா இருக்கு. நான் கழுகுமலை பற்றி எழுதிய காலத்தில் தமிழ்மணம் கிடையாது. அதனால என்னவோ, எனக்கு இத்தனை பேருக்கு கழுகுமலை தெரியுங்கிறது எனக்கு தெரியாமலே போயிடுச்சு!
'Kalugumalai'http://kalugumalai.com
'கழுகுமலை பற்றிய எனது பழைய பதிவு'
வாழ்த்துக்கள் ராகவன். ஊருக்குப் போய் வருசக்கணக்கா ஆயிடுச்சு. நீங்க புண்ணியவாங்க போங்க. //

வாங்க போஸ்கோ. ஆகா...கழுகுமலைக்காரங்க யாருமே வலைப்பூவுல இல்லையோன்னு நெனச்சேன். ஆனா இருக்கீங்கய்யா...ஊர் மானத்தைக் காப்பாத்திட்டீங்க.

கழுகுமலையோட வெப்சைட்டுக்குப் போயும் பாக்குறேன்.

சரி....அந்தச் சமணக் குகைகளப் பத்தியும் அண்ணாமலை ரெட்டியார் பத்தியும் எழுதுங்களேன். நாங்களும் தெரிஞ்சிக்கிறோம்.

said...

ஆமாம். பிள்ளையார்பட்டி கோவிலும் குடவரைக் கோவிலே.

said...

இதெல்லாமே எனக்குப் புதுசுங்க. இந்த எடமெல்லாம் ஒன்னு கூட பாத்ததில்லை. நேர்ல பாத்த உணர்வு வந்துச்சு. படங்களும் ரொம்ப அருமையா இருக்கு. "கழுகுமலை கள்ளன்"னு ஒரு படம் பேர் ஞாபகத்துக்கு வருது...சரண்ராஜ் நடிச்சது. அப்புறம் பூலித்தேவன் மாயமா மறைஞ்சு போன எடம் வாசுதேவநல்லூர்னு நெனக்கிறேன்...எஸ்.ஜே.சூரியாவோட சொந்த ஊர்.

said...

ராகவன்... உங்களுக்கும் கழுகுமலைதானா... நானும் கழுகுமலைப் பதிவொன்று போட்டிருக்கிறேன், அதில் உங்களை சுட்டியிருக்கிறேன் மேலும் தெப்பக்குளத்தின் புகைப்படத்தையும் எடுத்துப் பயன்படுத்தியுள்ளேன்.

உங்கள் பதிவு மற்றும் புகைப்படங்கள் மிக அருமை.

said...

// ராசுக்குட்டி said...
ராகவன்... உங்களுக்கும் கழுகுமலைதானா... நானும் கழுகுமலைப் பதிவொன்று போட்டிருக்கிறேன், அதில் உங்களை சுட்டியிருக்கிறேன் மேலும் தெப்பக்குளத்தின் புகைப்படத்தையும் எடுத்துப் பயன்படுத்தியுள்ளேன்.

உங்கள் பதிவு மற்றும் புகைப்படங்கள் மிக அருமை. //

வாங்க ராசுக்குட்டி...நான் தூத்துக்குடி. பக்கத்துல கோயில்பட்டி வழியாத்தான கழுகுமலை. பலவாட்டி போன ஊர்தான். போன கோயில்தான். அது சரி...ஒங்கூரப் பத்தி பதிவுகள் போடறதுதானே!