Sunday, May 21, 2006

9. கோமதி செஞ்ச சேட்டை

சங்கரங்கோயில் எனக்குச் சின்ன வயசுலயே பழக்கம். தூத்துக்குடீல அத்த வீட்டுல இருந்து படிச்சப்போ மாதத்துக்கு ஒரு வாட்டி அங்க போவோம். காலைலயே எந்திரிச்சி அத்த இட்டிலி அவிச்சி அதோட கெட்டித் துவையல் அரைச்சு, அதுவும் கெட்டுப் போகாம இருக்க அதச் சுட வெச்சுக் கொண்டு வருவாங்க. கோயில்ல சாமி கும்பிட்டுட்டு அங்க குளத்தடில உக்காந்து சாப்பிட்டிட்டு பகல்ல கெளம்பி வருவோம். மறக்காத நினைவுகள்.

அதே போலச் சங்கரங்கோயில் பிரியாணியும் நல்லாயிருக்கும். அங்க ஒரு சாயிபு கடை இருக்கு. அதுல பிரியாணி பிரமாதமா இருக்கும். அங்க போன பல சமயங்கள்ள அதைப் பார்சல் வாங்கீட்டும் வந்திருக்கோம்.

இப்பிடியாகப் பட்ட சங்கரங்கோயிலுக்குப் போறோம்னதுமே ரெண்டு வாங்கனும்னு உறுதியா இருந்தேன். ஒன்னு புத்து மண்ணு. இன்னொன்னு பிரியாணி. புத்து மண்ணக் குழச்சி நெத்தீல புருவ நடுவுல வெச்சுக்கிறது ரொம்ப நாள் பழக்கம். அந்தப் புத்து மண்ண உருட்டிச் சின்னச் சின்னக் குழாயா பாக்கெட்ல போட்டு விப்பாங்க. புத்துமண் குழாயோட தண்டியப் பொருத்து விலை கூடிக் கொறயும்.

கோயிலுக்குள்ள நுழையும் போதே கடைகள்ள புத்துமண் எக்கச்சக்கமா கண்ணுல பட்டது. திரும்ப வர்ரப்ப வாங்கிக்கலாம்னு நேரா உள்ள போனோம்.

மொதல்ல கண்ணுல பட்டது பூலித்தேவன் அறை. அவர் இறைவனோட இணைஞ்சதாச் சொல்ற எடத்துல அழகா மரவேலைப்பாடு செஞ்சிருக்காங்க. உண்மையிலே பிரமாதம். குறிப்பா சின்னச் சின்ன அழகான மரவேலைப்பாடுகள்.

அடுத்து சங்கரனைப் பாத்தோம். தோடுடைய செவியன். விடை ஏறியோர் தூவெண்மதி சூடியவன் இங்கு ஆவுடையாராக காட்சி தந்தான். வணங்கி விட்டு அப்படியே நேராகச் சங்கரகோமதியைக் கண்டோம். சரிவளை. விரிசடை. எரிபுரை வடிவினள். அன்பொழுக அருள் செய்து கொண்டிருந்தாள். வணங்கி விட்டுச் சுற்றி வந்தோம்.

மாவிளக்குப் போடுறத இங்க நெறையப் பாக்கலாம். எனக்கும் இங்க எங்கத்த மாவிளக்குப் போட்டிருக்காங்கன்னு நெனைக்கிறேன். சரியா நெனவு இல்ல. பச்சரிசிய இடிச்சி வெல்லஞ் சேத்து இடிச்சி விளக்கு செஞ்சி அதுல குழியாக்கி நெய் நெரப்பி ஏத்துறதுதான் மாவிளக்கு. கண்ணு வலி சரியாப் போச்சுன்னா வாழையெலைல மாவிளக்கு வெச்சி யாருக்கு வேண்டுனாங்களோ அவங்க கண்ணுக்கு மேலா வெச்சிக் காட்டுறது. வயித்துவலிக்கு வயித்து மேல வெக்கிறது. இப்பிடி நெறைய.

அதே மாதிரி அங்க ஒரு தொட்டீல புத்து மண்ணப் போட்டு வெச்சிருப்பாங்க. வேணுங்கிறவங்க எடுத்துக்கலாம்.

அப்புறம் சங்கரநாராயணர். பாதி சங்கரன். பாதி நாராயணன். ஒரு பக்கம் வில்வம். இன்னொரு பக்கம் துளசி. ஒரு பக்கம் புலித்தோல். இன்னொரு பக்கம் பட்டுத்துணி. ஒரு பக்கம் பாம்பு தொங்குது. இன்னொரு பக்கம் மணிமாலைகள் தொங்குது. இப்படி ரெண்டு வேறுபட்ட துருவங்கள் ஒன்னா இருக்குறதுதான் சங்கரநாராயணர். அவருக்கும் ஒரு வணக்கம் போட்டுட்டு நேரா கோமதி இருக்கிற எடத்துக்குப் போனோம்.

கோமதீங்குறது ஆனையோட பேரு. ஒரு பெரிய கொட்டாரத்துல இருந்துச்சு. நல்லா தென்ன மட்டைகள உரிச்சித் தின்னுக்கிட்டிருந்த கோமதி கிட்டப் போயி ஆசீர்வாதம் வாங்கினேன். காசு கொடுத்துதான். அப்ப இன்னொரு நண்பனும் பக்கத்துல வந்து நின்னான். அவனுக்குக் கொஞ்சம் நடுக்கம்னு வெச்சுக்கோங்களேன். ஏதோ எப்படியோ வந்துட்டான்.

அதுவும் கழுத்துல ரோஜா மாலையோட. சந்நிதீல போட்ட மாலையோட வந்து நின்னான். கோமதி தும்பிக்கைய நீட்டி அவனத் தடவிப் பாத்தா. ரோஜா மாலைய ரெண்டு வாட்டி மோந்து பாத்தா. அந்த வாசம் அவளுக்கு ரொம்பப் பிடிச்சிப் போச்சு. என்னடா தடவுதே மோந்து பாக்குதேன்னு இவனுக்கு லேசா ஆட்டம்.

ஆனா கோமதி விடலை. மாலையத் தும்பிக்கைல பிடிச்சு லேசா இழுத்தா. இவன் கிடுகிடுன்னு ஆடி என்ன பண்றதுன்னு முழிக்கிறான். ஓடக் கூடத் தோணாம. நாந்தான் மாலையக் கழட்டிக் குடுன்னு சொன்னேன். சொன்னதும் படக்குன்னு குனிஞ்சி மாலையக் கழட்டீட்டான்.

கோமதி அப்படியே அந்த மாலையக் கால்ல வெச்சு பட்டுன்னு முடிச்ச உடைச்சது. இப்ப மாலை நீளமான பூச்சரமாச்சு. தும்பிக்கையால பிடிச்சிக்கிட்டே தும்பிக்கையால சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ருன்னு ரோஜாப் பூக்கள உருவி லபக்குன்னு வாயில போட்டுக்கிட்டா. ரெண்டு சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ருதான்...அப்புறம் நாருதான் மிச்சம். ஒரு சந்தோஷம் அவளோட மொகத்துல.

கோமதிக்கு டாட்டா காட்டீட்டு வெளியே வந்தோம். நான் புத்து மண் வாங்கினேன். தினைமாவும் வெல்லமும் கொஞ்சம் நெய்யும் கலந்து நண்பன் வாங்கிச் சாப்பிட்டான். இப்போ நல்ல பசி வேளை. எல்லாருக்கும் பசி. வெயில் வேற. அவதியவதியா ஓடி வண்டீல ஏறுனோம். ஆனா சாப்பாடு என்னாச்சு?

தொடரும்.....

அன்புடன்,
கோ.இராகவன்

32 comments:

said...

ராகவன்,

கோமதிக்கு ரோஜா இஷ்டமா? எனக்குத்தெரியாதே? எவ்வளவு புத்திசாலி பாருங்க. பூவை
மட்டும் எடுத்துத் தின்னுருக்கு!

ஆமாம். அது என்ன புத்து மண்ணு விசேஷம்? அதைப் பத்திச் சொல்லுங்க.
எனக்குத்தெரிஞ்சு நாகர்கோயிலேதான் புத்துமண்ணைக் கோயில் பிரசாதமா நெத்தியில்
வைக்கத் தந்தாங்க.

அப்புறம் இன்னொரு சின்ன சந்தேகம். ஆவுடையார்ன்னா சிவன், லிங்க ரூபமா இருக்கறதுதானே?

கர்நாடகாலே ஹரிஹார்னு ஒரு ஊருக்குப் போயிருக்கேன். அங்கெயும் ஹரனும் ஹரியும்தான் பப்பாதி.
அந்த ஊர்லே 108 சிவலிங்கம் வச்ச கோயில் ஒண்ணும் இருக்கு.

said...

//புத்துமண் குழாயோட தண்டியப் பொருத்து விலை கூடிக் கொறயும்.//

தண்டியன்னா எத்தன பேத்துக்கு விளங்கப்போவுது? ஒரு வெளக்கத்தைப் போடும் சாமி!

said...

சங்கரன்கோயில் எனக்கு மிகவும் பிடிச்ச இடம். அருமையான கோயில். அதுமட்டுமில்லாம எங்க அய்யன் பேரு சங்கரன். அம்மா கோமதி. பின்னப் பாசமில்லாம போகுமா?

said...

இ.கொ.

தண்டின்னா size. உருண்டையோட sizeக்கு ஏத்தாமாதிரி விலையும் இருக்கும்..

என்ன, சரியா ராகவன்?

said...

//காலைலயே எந்திரிச்சி அத்த இட்டிலி அவிச்சி அதோட கெட்டித் துவையல் அரைச்சு, அதுவும் கெட்டுப் போகாம இருக்க அதச் சுட வெச்சுக் கொண்டு வருவாங்க//

அந்த துவையலை இட்லி அவிக்றதுக்கு முன்னாடியே இட்லி கொப்பரயில மாவுக்குள்ள வச்சிட்டா அதையும் தனியா தொட்டு சாப்பிட தேவை இல்லை, கட்லட்டை சாப்ட்ர மாதிரி 'அப்பிடியே' சாப்பிடலாம்.

//பாதி சங்கரன். பாதி நாராயணன். ஒரு பக்கம் வில்வம். இன்னொரு பக்கம் துளசி. ஒரு பக்கம் புலித்தோல். இன்னொரு பக்கம் பட்டுத்துணி. ஒரு பக்கம் பாம்பு தொங்குது. இன்னொரு பக்கம் மணிமாலைகள் தொங்குது. இப்படி ரெண்டு வேறுபட்ட துருவங்கள் ஒன்னா இருக்குறதுதான் சங்கரநாராயணர்.//

வாழ்வில் இன்பம் துன்பம் சமமா பார்கனுங்கரது இதோட தத்துவம்(சரிதானே?). காப்பவரிடம் பல விலையுயர்ந்த பொருட்கள் இருக்கலாம், அழிப்பவரிடம் இருக்காது என்பதர்க்கு சங்கரனே சாட்சி.


//அவதியவதியா ஓடி வண்டீல ஏறுனோம். ஆனா சாப்பாடு என்னாச்சு?//
பயங்கரமா சஸ்பென்ஸ் வைக்ரீங்க. அதான் உங்க பதிவுக்கு இழுத்துக்கிட்டு வருது.

said...

// துளசி கோபால் said...
ராகவன்,

கோமதிக்கு ரோஜா இஷ்டமா? எனக்குத்தெரியாதே? எவ்வளவு புத்திசாலி பாருங்க. பூவை
மட்டும் எடுத்துத் தின்னுருக்கு! //

எங்களுக்கும் தெரியாது. மொதப் படத்துல கழுத்துல ரோஜாமாலையோட இருக்குறவன்...அடுத்த படத்துல கழுத்துல மாலையில்லாம இருக்குறதப் பாருங்க......ரெண்டு சர்ருதான்...பூவெல்லாம் வாயில.

// ஆமாம். அது என்ன புத்து மண்ணு விசேஷம்? அதைப் பத்திச் சொல்லுங்க.
எனக்குத்தெரிஞ்சு நாகர்கோயிலேதான் புத்துமண்ணைக் கோயில் பிரசாதமா நெத்தியில்
வைக்கத் தந்தாங்க. //

நாகர்கோயில்ல தந்திருப்பாங்க. அது நாகராஜா கோயில்தான. புத்துமண்ணுங்குறது மருத்துவப் பண்புடையது. இதை facial பண்ணவும் பயன்படுத்தலாம். அதை அப்படியே மண்ணா வெச்சிருக்கக் கஷ்டம்னு உருட்டி உருட்டி குச்சி குச்சியா விக்குறாங்க.

// அப்புறம் இன்னொரு சின்ன சந்தேகம். ஆவுடையார்ன்னா சிவன், லிங்க ரூபமா இருக்கறதுதானே? //

ஆமா. சரியாச் சொன்னீங்க. ஆ-உடையார்-ன்னு பிரிக்கனும். உயிர்கள் தோன்றுவதற்கு ஆண்-பெண் சங்கமம் அடிப்படை. இந்த உலகத்தில் நாமெல்லாம் உயிர்கள். ஆண்-பெண் சங்கமத்தில் பிறந்தவர்கள். ஆனால் ஆண்டவனுக்கு இந்த உலகமே ஒரு உயிர்தான். அந்த உயிரை ஆண்டவன் ஆண்-பெண் சங்கமமாய்ப் படைத்ததை விளக்குவதே சிவதத்துவம்.

இதே தத்துவந்தான் முருகதத்துவமும். நாத விந்து கலாதி - அருவும் உருவும் கூடி உண்டாவது உலகம். அதாவது ஓசையும் அமைதியும் கூடி உண்டாவது. ஓங்காரம் என்பதே ஓசையும் அமைதியும் கலந்தது. எங்கு ஓசையும் அமைதியும் கலக்கிறதோ அங்கு ஓங்காரம் பிறக்கும். ஒரு சுவர் கட்டுங்கள். அந்தப்பக்கம் ஆர்ப்பரிக்கும் கடல். இந்தப் பக்கம் முழு அமைதி. இப்பொழுது சுவரில் காதை வைத்தால் ஓங்காரம் கேட்கும். அதுதான் திருச்செந்தூர்.

// கர்நாடகாலே ஹரிஹார்னு ஒரு ஊருக்குப் போயிருக்கேன். அங்கெயும் ஹரனும் ஹரியும்தான் பப்பாதி.
அந்த ஊர்லே 108 சிவலிங்கம் வச்ச கோயில் ஒண்ணும் இருக்கு. //

அட..நான் போனதேயில்லையே. கர்நாடகாவுல எங்க இருக்குன்னு தெரியலையே...

said...

// இலவசக்கொத்தனார் said...
//புத்துமண் குழாயோட தண்டியப் பொருத்து விலை கூடிக் கொறயும்.//

தண்டியன்னா எத்தன பேத்துக்கு விளங்கப்போவுது? ஒரு வெளக்கத்தைப் போடும் சாமி! //

அதான் ஜோசப் சார் சொல்லீருக்காரு பாருங்க. தண்டின்னா பருமன். தமிழில் தண்டிங்குறது அளவு. இத்தாந்தண்டின்னு சொல்ற வழக்கு உண்டு. அவன் ரொம்பவே தண்டியா இருக்கான்னும் சொல்வாங்க. புரிஞ்சதா எலவசம்?

said...

// tbr.joseph said...
இ.கொ.

தண்டின்னா size. உருண்டையோட sizeக்கு ஏத்தாமாதிரி விலையும் இருக்கும்..

என்ன, சரியா ராகவன்? //

ரொம்பச் சரி ஜோசப் சார். ஒரு பொருளோட சுற்றளவு...அதாவது தடிமனத்தான் தண்டி என்று தெற்கில் சொல்வார்கள்.

said...

// அந்த துவையலை இட்லி அவிக்றதுக்கு முன்னாடியே இட்லி கொப்பரயில மாவுக்குள்ள வச்சிட்டா அதையும் தனியா தொட்டு சாப்பிட தேவை இல்லை, கட்லட்டை சாப்ட்ர மாதிரி 'அப்பிடியே' சாப்பிடலாம். //

இதத் தோசைல முயற்சி செஞ்சிருக்கோம். இட்லியில இல்ல. தோசை மாவுல துவையலையோ சாம்பாரையோ கலந்து சுடுவோம். இட்டிலியை முயற்சி செய்யலாம்.

////பாதி சங்கரன். பாதி நாராயணன். ஒரு பக்கம் வில்வம். இன்னொரு பக்கம் துளசி. ஒரு பக்கம் புலித்தோல். இன்னொரு பக்கம் பட்டுத்துணி. ஒரு பக்கம் பாம்பு தொங்குது. இன்னொரு பக்கம் மணிமாலைகள் தொங்குது. இப்படி ரெண்டு வேறுபட்ட துருவங்கள் ஒன்னா இருக்குறதுதான் சங்கரநாராயணர்.//

வாழ்வில் இன்பம் துன்பம் சமமா பார்கனுங்கரது இதோட தத்துவம்(சரிதானே?). காப்பவரிடம் பல விலையுயர்ந்த பொருட்கள் இருக்கலாம், அழிப்பவரிடம் இருக்காது என்பதர்க்கு சங்கரனே சாட்சி. //

:-)

// //அவதியவதியா ஓடி வண்டீல ஏறுனோம். ஆனா சாப்பாடு என்னாச்சு?//
பயங்கரமா சஸ்பென்ஸ் வைக்ரீங்க. அதான் உங்க பதிவுக்கு இழுத்துக்கிட்டு வருது. //

அடுத்த பதிவு வரைக்கும் கொஞ்சம் பொறுங்க....

said...

ராகவன்,
இந்த ஊர் பேரே ஹரிஹார்தான். அரிசிக்கரே ஜங்ஷன்லெ இருந்து போகணும். ஹூப்ளி தார்வாட் லைன் னு நினைக்கிறேன்.


இந்த சட்டினியை மாவுலே கலக்கக்கூடாது. இட்டிலி அவிக்கும் போது தட்டுலே அரைக்கரண்டி மாவை ஊத்திட்டு இந்த சட்டினி அல்லது மசாலாக் கலவையை வைக்கணும். அதும் மேலே இன்னும் அரைக் கரண்டி மாவு ஊத்தி அவிக்கணும். சாண்ட்விச் இட்லி.

said...

கோமதி சங்கரனார் கோவில் தரிசனம் ஆனது எங்களுக்கும். நன்றி இராகவன்.

said...

ஜிரா / ஜோசப் சார்,

தண்டின்னா எனக்குத் தெரியும். ஆனா நம்ம ஊரு பாஷையில் சொல்லிட்டீங்களே. மத்தவங்களுக்கு புரியணுமேன்னு சொன்னேன். அந்த பின்னூட்டத்தை அதனால்தான் நெல்லைத் தமிழில் எழுதினேன்.

இதெல்லாம் தெரியாம நீ எங்க லண்டனிலா பிறந்தாய் என கௌசிகன் கலாய்ப்பார். அதான் விளக்கம்.

said...

//கோமதி அப்படியே அந்த மாலையக் கால்ல வெச்சு பட்டுன்னு முடிச்ச உடைச்சது. இப்ப மாலை நீளமான பூச்சரமாச்சு. தும்பிக்கையால பிடிச்சிக்கிட்டே தும்பிக்கையால சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ருன்னு ரோஜாப் பூக்கள உருவி லபக்குன்னு வாயில போட்டுக்கிட்டா. ரெண்டு சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ருதான்...அப்புறம் நாருதான் மிச்சம்//

அதாவது, முதல் மரியாதை சிவாஜி, கெழுத்தி மீனை வாயில் வைத்து உறிஞ்சி, முள்ளை மட்டும் வாயில் இருந்து வெளியில் எடுப்பாரே, அது மாதிரித்தானே?

அமாங்க லண்டனில், நல்ல மீன் சாப்பிடாம இருந்து அந்த ஞாபகமாவே இருக்குதுங்க.

said...

நல்ல பதிவு ராகவா!
இந்தச் சங்கரன் கோவில் எனும் ஊர்ப்பெயர்,இந்த மாநிலத் தேர்தலுடன்; அதிகம் கண்ணிற்பட்டது. வைகோ தொடர்பாக.- இது தவிர எனக்கு எதுவும் தெரியாது. கோவிலை எழுத்திலும் ;கோமதியைப் படத்திலும் காண்பித்ததற்கு நன்றி!
ஈழத்திலும் நாகதம்பிரான் கோவிலுக்குச் சென்றால்; புற்று மண்பிரசாதமே!! நான் சிறுவனாக இருந்த பொழுது, தலை வலி,காச்சல் என்றால்; நெற்றியில் புற்றுமண் குழைத்துப் பூசுவார்; என் பேத்தியார்;தலைவலி மாறிவிடும். "விக்ஸ்- பாவனைக்கு முற்பட்ட காலத்தில். மகாத்மா காந்தி கூட ; நீர் ;மண் சிகிச்சை, தன் பிள்ளைகளுக்கு செய்ததாக தன் சுயசரிதையில்; எழுதியதைப் படித்ததாக ஞாபகம்;எங்கள் உறவினர் ஆயுள் வேத வைத்தியர். கனிம உப்புக்கள், புற்றுமண்ணில் சேதாரமாக இருப்பதால், அதற்கு மருத்துவக் குணம் உண்டெண்றார்.
அடுத்து யானை தென்னங்கீற்றுக்கு; ஈக்கில் எடுத்து உண்ணும் ,நேர்த்தியைப் பார்த்திருக்கிறீர்களா,நாள் பூராப் பார்த்துக் கொண்டேயிருக்கலாம்.
தனிப் பதிவொன்றே போடலாம்.
யோகன் - பாரிஸ்

said...

யோகன் ஐயா. பேத்தியார் என்று நீங்கள் சொல்வது யாரை? அம்மாவின் அம்மாவா அப்பாவின் அம்மாவா? தமிழகத்தில் பேத்தி என்று மகனின் மகளையும் மகளின் மகளையும் சொல்லுவார்கள். நீங்கள் இதே சொல்லை மதுரை - 3 பதிவிலும் சொல்லியிருந்தீர்கள். அப்போதும் எனக்குப் புரியவில்லை.

said...

சங்கரன்கோவில் அருமையான கோவில். அதனை அழகாக பதிவு செய்துள்ளீர்கள். அங்குள்ளஸ்ரீசக்ர மேருவும் சிறப்பானதாகும். கோமதியின் ஆடிதவசை காண கண்கோடி வேண்டும்.

said...

எனக்கும் சங்கரநயினார் கோயிலுக்குப் போவணுமின்னு ரொம்ப ஆசை. சீக்கிரமே ஒரு வாரம் லீவு எடுத்துக்கிட்டு அங்க இங்க போலாமின்னு இருக்கேன். கூட்டமோ இல்லை தனியாவோ... அப்ப உங்க பதிவை பிரிண்டவுட் எடுத்துக்கிருவேன்.

ஆமா, சாப்பாடு என்னதான் ஆச்சு?

கர்நாடகாவில இருக்குறது 108 சிவலிங்கம் வச்ச கோயில் இல்லைங்க துளசி மேடம்.

அது கோடிலிங்கம். கோலார் பக்கத்துல இருக்கு. அதாவது ஒரு கோடி லிங்கங்கள் வைக்க முயற்சிகள் நடந்துகிட்டு இருக்கு. ஏற்கனவே நிறைய வச்சாச்சு. நாங்களும் எங்க பங்குக்குப் போயி ஒண்ணு வச்சுட்டு வந்தோம் :)

said...

யாபருக்கும்!
ஈழத்தின் பெருவாரியான தமிழர் மத்தியில்; பேத்தி;பேத்தியார் எனும் சொற்பிரயோகம்- பேரன் -பேத்தி என்பது ;மகனதோ;மகளதோ ஆண் - பெண் பிள்ளைகளக் குறிப்பிடும் சொல். பேரனார்- பேத்தியார்
என்பன, பெற்றோரின் பெற்றோரைக் குறிப்பிடும் சொற்கள். பின்பு பாட்டா பாட்டியாகியது. இவற்றில் தந்தை வழியா?;தாய் வழியா? எனும் தெளிவின்மை இருந்தது உண்மை; அதுவும் அப்பையா,அப்பப்பா,அப்பம்மா; அம்மையா;அம்மப்பா;அம்மம்மா; வருகைக்குக் பின் "அப்பப்பா",,,, தீர்ந்ததடா!! சாமி!!!!
யோகன் -பாரிஸ்

said...

தெருட்டியதற்கு நன்றி யோகன் ஐயா.

said...

ஆகா, இத்தனை தாமதமா வந்துட்டேனே.. இருந்தாலும் கோமதி கொள்ளை அழகுங்க.. எல்லாக் கோணத்திலும் போட்டோ எடுத்திருக்கீங்க..

மாலையெல்லாம் போடும் அளவுக்கு பூஜை பண்ணி இருக்கீங்க, ஒரு வாழைப்பழம், தேங்காய் பிரசாதம் ஏதாச்சும் கோமதிக்கும் கொடுத்திருக்கலாம் இல்ல?!! அதான் இப்படி ரோஜா மாலையை உருவி பயங்காட்டி இருக்கு :)

சாப்பாட்டுக்கு என்ன பண்ணீங்க ராகவன்? எங்க ஆபீஸுக்கு நீங்க எடுத்து வந்து சாப்பிட்டதைப் பார்த்ததுக்கப்புறம், நீங்க சாப்பாட்டுக்கு என்ன பண்ணினீங்கன்னு நிஜமாவே கவலையா(?!) இருக்கு :))))).. ரொம்ப சஸ்பென்ஸ் வைக்காதீங்க!! :)

said...

// குமரன் (Kumaran) said...
கோமதி சங்கரனார் கோவில் தரிசனம் ஆனது எங்களுக்கும். நன்றி இராகவன். //

வாங்க குமரன். என்ன ஒங்க படத்தத் தூக்கீட்டு அம்மா படத்தப் போட்டுட்டீங்க.

said...

// இலவசக்கொத்தனார் said...
ஜிரா / ஜோசப் சார்,

தண்டின்னா எனக்குத் தெரியும். ஆனா நம்ம ஊரு பாஷையில் சொல்லிட்டீங்களே. மத்தவங்களுக்கு புரியணுமேன்னு சொன்னேன். அந்த பின்னூட்டத்தை அதனால்தான் நெல்லைத் தமிழில் எழுதினேன்.

இதெல்லாம் தெரியாம நீ எங்க லண்டனிலா பிறந்தாய் என கௌசிகன் கலாய்ப்பார். அதான் விளக்கம். //

அதானவே....தின்னவேலிக்காரருக்குத் தெரியாதா தண்டியும் தடிமனும்.....அப்பப்ப ஊர்ப்பேச்சு வந்துருதுல்லா....அதுக்கென்ன செய்ய?

said...

// // மகேஸ் said...
//கோமதி அப்படியே அந்த மாலையக் கால்ல வெச்சு பட்டுன்னு முடிச்ச உடைச்சது. இப்ப மாலை நீளமான பூச்சரமாச்சு. தும்பிக்கையால பிடிச்சிக்கிட்டே தும்பிக்கையால சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ருன்னு ரோஜாப் பூக்கள உருவி லபக்குன்னு வாயில போட்டுக்கிட்டா. ரெண்டு சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ருதான்...அப்புறம் நாருதான் மிச்சம்//

அதாவது, முதல் மரியாதை சிவாஜி, கெழுத்தி மீனை வாயில் வைத்து உறிஞ்சி, முள்ளை மட்டும் வாயில் இருந்து வெளியில் எடுப்பாரே, அது மாதிரித்தானே?

அமாங்க லண்டனில், நல்ல மீன் சாப்பிடாம இருந்து அந்த ஞாபகமாவே இருக்குதுங்க. //

அட இருக்கட்டுமே...அதுனால என்ன....சிவாஜி மீன் சாப்புடுற காட்சியப் பாத்து என்னோட சைவ நண்பனே வாயூறுவான். எனக்கெல்லாம் கையும் வாயும் பரபரங்கும்....

லண்டன்ல இல்லாத மீனா...வாங்கி ரெண்டு உப்பு மெளகாப்பொடி தடவி சுட்டுக்கிற வேண்டியதுதானே....இதுக்கெல்லாமா வகுப்பு எடுக்கனும்?

said...

// paarvai said...
நல்ல பதிவு ராகவா!
இந்தச் சங்கரன் கோவில் எனும் ஊர்ப்பெயர்,இந்த மாநிலத் தேர்தலுடன்; அதிகம் கண்ணிற்பட்டது. வைகோ தொடர்பாக.- இது தவிர எனக்கு எதுவும் தெரியாது. கோவிலை எழுத்திலும் ;கோமதியைப் படத்திலும் காண்பித்ததற்கு நன்றி!
ஈழத்திலும் நாகதம்பிரான் கோவிலுக்குச் சென்றால்; புற்று மண்பிரசாதமே!! நான் சிறுவனாக இருந்த பொழுது, தலை வலி,காச்சல் என்றால்; நெற்றியில் புற்றுமண் குழைத்துப் பூசுவார்; என் பேத்தியார்;தலைவலி மாறிவிடும். "விக்ஸ்- பாவனைக்கு முற்பட்ட காலத்தில். மகாத்மா காந்தி கூட ; நீர் ;மண் சிகிச்சை, தன் பிள்ளைகளுக்கு செய்ததாக தன் சுயசரிதையில்; எழுதியதைப் படித்ததாக ஞாபகம்;எங்கள் உறவினர் ஆயுள் வேத வைத்தியர். கனிம உப்புக்கள், புற்றுமண்ணில் சேதாரமாக இருப்பதால், அதற்கு மருத்துவக் குணம் உண்டெண்றார்.
அடுத்து யானை தென்னங்கீற்றுக்கு; ஈக்கில் எடுத்து உண்ணும் ,நேர்த்தியைப் பார்த்திருக்கிறீர்களா,நாள் பூராப் பார்த்துக் கொண்டேயிருக்கலாம்.
தனிப் பதிவொன்றே போடலாம்.
யோகன் - பாரிஸ் //

வாங்க யோகன். ரொம்ப அழகாச் சொன்னீங்க....அந்தத் தும்பிக்கைல அழகாப் பிடிச்சிச் சர்ருன்னு கீத்தக் கிழிச்சிச் சாப்பிடுற அழக நானும் பாத்திருக்கேன். அப்பல்லாம் தூத்துக்குடியில வீதியில ஆன போகைல விட்ட போட்டா....செருப்பில்லாம அதுல ஏறி மிதிப்போம். ஏன் எதுக்குன்னு தெரியாது...ஆனா அப்படி ஒரு விளையாட்டு..கெக்கேபிக்கேன்னு சிரிச்சிக்கிட்டு மிதிப்போம்.

said...

// மணியன் said...
சங்கரன்கோவில் அருமையான கோவில். அதனை அழகாக பதிவு செய்துள்ளீர்கள். அங்குள்ளஸ்ரீசக்ர மேருவும் சிறப்பானதாகும். கோமதியின் ஆடிதவசை காண கண்கோடி வேண்டும். //

மணியன், நான் ஆடித்தவசுக்குப் போனதில்லையே. போனாலும் போயிருப்பேன்....சின்னப்புள்ளைல. சரியா நினைவில்லை.

said...

// பொன்ஸ் said...
ஆகா, இத்தனை தாமதமா வந்துட்டேனே.. இருந்தாலும் கோமதி கொள்ளை அழகுங்க.. எல்லாக் கோணத்திலும் போட்டோ எடுத்திருக்கீங்க.. //

பின்னே....கோமதியும் நாலு பக்கமும் திரும்பி அழகு காட்டும் போது படமெடுக்காம விடுவோமா?

// மாலையெல்லாம் போடும் அளவுக்கு பூஜை பண்ணி இருக்கீங்க, ஒரு வாழைப்பழம், தேங்காய் பிரசாதம் ஏதாச்சும் கோமதிக்கும் கொடுத்திருக்கலாம் இல்ல?!! அதான் இப்படி ரோஜா மாலையை உருவி பயங்காட்டி இருக்கு :) //

நான் பூஜையெல்லாம் செய்யலை. பக்கத்துல நிக்கிறான் பாருங்க. அவந்தான் செஞ்சது. தேங்கா பழம்...என்னாச்சுன்னு தெரியலை..

// சாப்பாட்டுக்கு என்ன பண்ணீங்க ராகவன்? எங்க ஆபீஸுக்கு நீங்க எடுத்து வந்து சாப்பிட்டதைப் பார்த்ததுக்கப்புறம், நீங்க சாப்பாட்டுக்கு என்ன பண்ணினீங்கன்னு நிஜமாவே கவலையா(?!) இருக்கு :))))).. ரொம்ப சஸ்பென்ஸ் வைக்காதீங்க!! :) //

அடடா! அடுத்த பதிவு வரைக்கும் காத்திருக்க முடியாதா? ஒங்க ஆபீசுக்கு வந்து சாப்பிட்டதைச் சொல்லனுமா? அது பத்திய பதிவு என்னாச்சு?

said...

//வாங்க குமரன். என்ன ஒங்க படத்தத் தூக்கீட்டு அம்மா படத்தப் போட்டுட்டீங்க.
//

தெளிவா எந்த அம்மா படம்ன்னு சொல்லுங்க இராகவன். ஏற்கனவே என் தலை நிறைய இடத்துல உருளுது. சும்மாத் தான் மாத்தினேன்னு சொன்னா நம்பவா போறீங்க? :-)

said...

சேட்டைன்னா!!! குறும்புன்னுதான்னே அர்த்தம், அதான் ...
அந்த பக்கமா வந்த நானும் கோமதிய பாக்குறேன்

நன்றி
நாகராஜ்
குமரன்@முத்தமிழ்மன்றம்.காம்

said...

// ஒங்க ஆபீசுக்கு வந்து சாப்பிட்டதைச் சொல்லனுமா? அது பத்திய பதிவு என்னாச்சு? //
எழுதலாம்னுதாங்க இருந்தேன்.. அதுக்குள்ள தமிழ்மணத்துல என்னன்னவோ நடந்து போச்சு..

நம்ம வரலாற்றுப் புகழ் பெற்ற கூட்டத்தை (குமரன், ரெண்டு பேர் இருந்தாலும் கூட்டம் தானே? :) ) யாருமே கவனிக்காம விட்டுட்டா? அதான் பொறுமையா எழுதலாம்னு அப்படியே தள்ளிப்போச்சு.. எழுதிடுவோம் :)

said...

// குமரன் (Kumaran) said...
//வாங்க குமரன். என்ன ஒங்க படத்தத் தூக்கீட்டு அம்மா படத்தப் போட்டுட்டீங்க.
//

தெளிவா எந்த அம்மா படம்ன்னு சொல்லுங்க இராகவன். ஏற்கனவே என் தலை நிறைய இடத்துல உருளுது. சும்மாத் தான் மாத்தினேன்னு சொன்னா நம்பவா போறீங்க? :-) //

நான் சொல்ற அம்மா....அகிலாண்ட கோடி ஈன்ற அன்னையை...அந்தம்மாவச் சொன்னேன். நீங்க எந்தம்மாவ நெனச்சீங்க?

said...

// பொன்ஸ் said...
// ஒங்க ஆபீசுக்கு வந்து சாப்பிட்டதைச் சொல்லனுமா? அது பத்திய பதிவு என்னாச்சு? //
எழுதலாம்னுதாங்க இருந்தேன்.. அதுக்குள்ள தமிழ்மணத்துல என்னன்னவோ நடந்து போச்சு..

நம்ம வரலாற்றுப் புகழ் பெற்ற கூட்டத்தை (குமரன், ரெண்டு பேர் இருந்தாலும் கூட்டம் தானே? :) ) யாருமே கவனிக்காம விட்டுட்டா? அதான் பொறுமையா எழுதலாம்னு அப்படியே தள்ளிப்போச்சு.. எழுதிடுவோம் :) //

நம்ம ரெண்டு பேரு இருந்ததே ரெண்டு கடல் போலன்னு எல்லாரும் பேசிக்கிறாங்க....அதுனால சீக்கிரமா அந்தப் பதிவைப் போடனும். ஆமாம்...

said...

போன வருசம் நானும் ஆவனி மாசம் சங்கரங்கோவில் போயிருந்தேன் வே... திருநெல்வேலி -சங்கரங்கோவில் ரோட்ட பூரா கொத்தி பொட்ருந்தானுவ... தாமிரபரணித் தண்ணிய சங்கரங்கோவிலுக்கு கொண்டுட்டு போறானுவன்னு கேள்விப் பட்டேன். இப்போ ரோடு நல்லா இருக்காய்யா...?