Tuesday, March 13, 2007

10ம் பகுதி கள்ளியிலும் பால்

முந்தைய பகுதி இங்கே

"நீ எதுக்கு முசுமுசுன்னு அழுகுற? அதான் டாக்டர் கிட்ட போறோமே. ஒன்னயப் பாத்து இவனோட அழுகையும் கூடுது பாரு." சிவகாமி சந்தியாவை அதட்டினார். எதற்கு என்று கேட்கின்றீர்களா? வரிசையாகச் சொல்கிறேன்.

1. கவிப்பூ தேன்மொழியின் "கள்ளியிலும் பால்" கையெழுத்து நிகழ்ச்சிக்காகச் சுந்தரைத் தூக்கிக் கொண்டு சந்தியாவும் சிவகாமியும் ஸ்பென்சர் பிளாசாவில் உள்ள லேண்ட்மார்க் கடைக்குச் சென்றனர்.

2. அங்கு எக்கச்சக்க கூட்டம் தேனை மொய்த்துக்கொண்டிருந்தது. இருந்தாலும் தேன்மொழி சந்தியாவை முன்னால் அழைத்து ஒரு புத்தகத்தைப் பரிசளித்தாள்.

3. அந்நேரம் பார்த்து சுந்தர் முனகலில் தொடங்கி அழுகைக்கு மாறி கதறலுக்குத் தாவினான். சிவகாமி என்ன செய்தும் அழுகை நிற்கவில்லை.

4. தேன்மொழியிடம் அவசரமாக விடை பெற்று இருவரும் வெளியே வந்தனர். நேராக மலர் மருத்துவமனைக்குச் சென்று குழந்தை மருத்துவர் மதிவதனனைப் பார்க்கச் சென்றார்கள்.

5. வழியில் சரவணன் சந்தியாவைத் தொலைபேசியில் அழைத்திருக்கிறான். சிவகாமியிடம் அழைப்பது யாரென்று பார்க்கச் சொன்னாள் சந்தியா. யாராக இருந்தாலும் பிறகு பேசுவதாகச் சொல்லச் சொன்னாள். ஆனால் அது சரவணன் என்பதால் சிவகாமி "சுந்தருக்கு உடம்பு சரியில்லை. மலருக்குப் போறோம். பிறகு பேசுறோம்" என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லி விட்டார்.

6. ஏற்கனவே சுந்தர் அழுவதால் கலங்கியிருந்த சந்தியா இதைக் கேட்டதும் மிகவும் துவண்டு போனாள். என்ன செய்வது என்று ஒரு அச்சம். அது மெல்லிய அழுகையாகக் கண்களில் வழிந்தது.

அப்பொழுதுதான் சிவகாமி சந்தியாவை அழாமல் இருக்கச் சொன்னார். சுந்தர் அழுவதுதான் அவள் அழுகைக்கான முழுக்காரணம் என்பது சிவகாமியின் நினைப்பு.

சிவகாமியிடம் பேசிய பிறகு குழம்பிப் போனான் சரவணன். சுந்தருக்கு உடம்பு சரியில்லை என்று சொன்னது அவனைக் குழப்பியது. சுந்தரராஜன் என்று சொல்லியிருப்பாரோ என்று நினைத்தான். பெரியவரும் கூட. அவருக்கு எதுவும் பிரச்சனை இருக்கலாம் என்று நினைத்து பயந்தான். அப்பொழுது அடையாறில்தான் இருந்ததால் மலருக்கே நேராகச் சென்று விடலாம் என்று முடிவு செய்தான்.

இதுவரை வாசகர்கள் அனைவரும் எதிர்பார்த்த சரவணன் சுந்தர் சந்திப்பு மலர் மருத்துவமனை வாசலில் நடந்தது. சரவணனை அங்கு எதிர்பார்க்காத சந்தியா கொஞ்சம் திடுக்கிட்டுத்தான் போனாள். அழுததன் காரணமாக மூக்கை உறிஞ்சிக் கொண்டிருந்தாள். சரவணனைப் பார்த்து சிவகாமி சம்பிரதாயமாக "நல்லாயிருக்கியா சரவணா" என்று முதலில் கேட்டார்.

பிறகு, "நீயே சொல்லுப்பா சந்தியாகிட்ட. சுந்தர் அழுகுறான்னு இவளும் முசுமுசுன்னு அழுகுறா. குழந்தைன்னா அப்படி இப்பிடி ஏதாவது இருக்கும். அழுதா ஆச்சா?" என்று சொன்னவர் சந்தியாவைப் பார்த்து "வா உள்ள போகலாம்" என்று அழைத்து உள்ளே சென்றார்.

மலர் மருத்துவமனையில் சுந்தரின் பெயர் ஏற்கனவே பதியப்பட்டிருந்தது. அங்கு பிறந்தவந்தானே. அதுவுமில்லாமல் மதிவதனன்தான் சுந்தருக்கு முதலிலிருந்தே மருத்துவம் பார்ப்பது. ஆகையால் அவனை நன்றாக அறிவார் அவர். சுந்தருடைய விவரங்களை மருத்துவமனை ரிசப்ஷனில் சரிபார்க்கையில் சரவணனுக்குச் சுந்தர் சந்தியாவின் குழந்தை என்று தெரிந்து போனது. அவனுக்கு எப்படி இருந்திருக்கும்? நீங்களே சொல்லுங்கள்? ஒரு நெருங்கிய தோழி. அனைத்தையும் பகிர்ந்து கொள்ளும் உண்மையான அன்புடைய தோழி. அவளுக்குக் குழந்தை பிறந்த செய்தியையே சொல்லாமல் மறைத்திருந்தால்? ஏன் அப்படிச் செய்தாள் என்று கேள்விகள் முளைக்குமல்லவா? அதுவுமில்லாமல் சந்தியாவிற்குக் குழந்தை பிறந்தது....இவனுக்கே குழந்தை பிறந்தது போலத் தோன்றியது. ஒவ்வொரு பொழுது நாமும் இப்பிடிச் சொல்வோம். "ஏய்...என்னோட மருமகனா இருந்தாலும் மகன் மாதிரி." என்று. அந்த மாதிரி...சந்தியாவை வெளியாள் என்று அவனால் நினைக்க முடியவில்லை.

உண்மையைச் சொன்னால் மொத்தத்தில் தடுமாறித்தான் போனான் சரவணன். நல்லவேளை. அவன் சற்று யோசித்து முடிவெடுக்கின்றவன். ஆகையால் அங்கு எதுவும் கேட்கவும் விரும்பவில்லை. சந்தியாவும் சிவகாமியையும் திரும்ப வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டு இவன் வீட்டிற்குச் சென்றான். வீட்டில் படுக்கையில் சாய்ந்து படுத்தவன் யோசித்துக் கொண்டேயிருந்தான். அப்படியா யோசிப்பார்கள்? அதுவும் இரவு பத்து மணி வரைக்கும். பிறகு யோசனைகளைத் தலையணக்கு அடியில் தள்ளி வைத்து விட்டு சந்தியாவை அலைபேசியில் அழைத்தான்.

சந்தியா அதற்குள் சுதாரித்திருந்தாள். இனிமேல் எதையும் மறைப்பதில் பயனில்லை. உண்மையைச் சொல்லிவிட வேண்டியதுதான் என்ற நிலைக்கு அவளும் வந்திருந்தாள். என்ன நடந்தாலும் சரி என்று அவள் துணிந்திருந்தாள். அதுவுமில்லாமல் வயிற்றுச் சூட்டினால் அழுத சுந்தர் மருந்து குடித்து விட்டு அமைதியாகத் தூங்கிக்கொண்டிருந்தான். சரியாக அந்நேரத்தில் சரவணனின் அலைபேசி அழைப்பு வந்தது.

"ஹே சந்தி, என்ன பண்ற?"

"ஒன்னும் பண்ணலடா. சும்மா உக்காந்திருக்கேன்."

"சுந்தருக்கு இப்ப எப்படி இருக்கு?" நேரடியாக பிரச்சனைக்குள் தலையை விட்டான் சரவணன்.

"மருந்து குடுத்தப்புறம் நல்லா தூங்குறான். வயித்து வலி குறைஞ்சிருக்கனும்." அவளும் சளைத்தவள் இல்லையே.

"சுந்தரப் பத்தி எங்கிட்ட ஒன்னுமே சொல்லலையே சந்தி! ஏம்மா?" சமயங்களில் நமக்கு வேண்டியவர்கள் ஏதாவது செய்து விட்டால் அவர்கள் மீது ஆத்திரத்தை விட வருத்தம்தான் வரும். அந்த வருத்தத்தில்தான் கேட்டான் சரவணன்.

"உண்மதான். கண்டிப்பா ஒங்கிட்ட சொல்லீருக்கனும். ஆனா ஏதோ நெனைச்சுக்கிட்டு மறைச்சிட்டேன். உன் கிட்ட மறைச்சது என்னைக் குத்தாத நாளே கிடையாது. ஆனா இந்தக் குழந்தையைப் பெத்துக்கிறதுக்கு நீதான் காரணம் தெரியுமா?"

"என்னது நானா? என்ன சொல்ற?" சரவணன் என்ற பெயரை ஹிரோஷிமா நாகசாகி என்று மாற்றியிருக்கலாம். இல்லை ஈராக் என்று மாற்றியிருக்கலாம்.

"ஆமா. நீ சென்னைல இருந்த வரைக்கும் உன்னோட துணையும் நட்பும் இருந்ததால எனக்கு ஒன்னும் தெரியல. ஆனா நீ நெதர்லாண்ட் போனப்புறம் திடீர்னு ஒலகத்துல தனியா நிக்குற மாதிரி நெனைப்பு வந்தது. ஒன்னய திரும்ப வான்னும் கூப்பிட முடியலை. நீ என்னை அங்க வரச்சொன்னப்பவும் ஒத்துக்க முடியலை. இந்த நிலமைல என்னோட தனிமையப் போக்க ஒரு குழந்தை வேணும்னு தோணிச்சு. அதான் பெத்துக்கிட்டேன். அதுனால என்னோட தனிமை போச்சு. என்னை விட்டு நீ போனதுக்கு உன்னையப் பழி வாங்குனதா ஒரு திருப்தி. அதான் உங்கிட்ட சொல்ல முடியாமத் தவிச்சேன். ஆனா என்னைக்காவது உண்மை வெளிய வரும்னு தெரியும். அதுனால எனக்குக் கஷ்டம் வந்தா உதவ நீ இருக்கன்னு தெரியும். அதுனாலதான் அப்படியே விட்டுட்டேன். இதுக்காக உன் கிட்ட மன்னிப்பு கேக்க மாட்டேன். ஏன்னா நான் செஞ்சது தப்புன்னா நீ கொடுக்குற தண்டனை எதானாலும் சரி. ஏத்துக்கத் தயார்." திரைப்பட வசனம் போல இருந்தாலும் சந்தியா உண்மையைத்தான் சொன்னாள்.

"எல்லாம் சரிம்மா. எதுன்னாலும் எங்கிட்டதான வந்து கேப்ப! அப்படியிருக்குறப்போ ஒனக்குக் கொழந்த வேணும்னதும் என்னோட நெனைப்பு வரலயே. அதத்தான் என்னால தாங்கிக்க முடியல. அந்த அளவுக்கா என் மேல கோவம்?" சரவணனும் உண்மையைத்தான் சொன்னான்.

"இல்லடா. இல்ல. குழந்தை வேணும்னதும் நான் மொதல்ல உன்னையத்தான் நெனச்சேன். அதுனால.......Sundar is our son. அதாவது சுந்தர் ஒனக்கும் எனக்கும் பொறந்தவன்."

தொடரும்.....

18 comments:

said...

சந்தியா சுந்தர் சரவணன் சேர்ந்து பார்த்ததுல நான் ஃபிர்ஸ்டா?

said...

// Madura said...
சந்தியா சுந்தர் சரவணன் சேர்ந்து பார்த்ததுல நான் ஃபிர்ஸ்டா? //

ஆமாங்க. அதுல பாருங்க. மதுராவிலயும் ம. மலர்லயும் ம. ஆகா! எங்கயோ போயிட்டீங்க!

said...

லேண்ட்மார்க் மலர் ஆஸ்பட்த்திரி ஆகிப் போச்சு. மத்தபடி நம்ம கணிப்பு சரிதான். சரவணனை இப்போ சந்தேகப் பேய் பிடிச்சு ஆட்டப் போகுது. எல்லாரும் ஆட்டத்துக்கு தாயாரா, அட இந்த கதை படிச்ச உடனே கன்பியூஷன், தயாராகுங்கப்பா.

said...

//எல்லாரும் ஆட்டத்துக்கு தாயாரா, அட இந்த கதை படிச்ச உடனே கன்பியூஷன், தயாராகுங்கப்பா.//

நான் ரெடி:-)

said...

எப்படி உணர்ச்சிப்பூர்வமா வந்துருக்கவேண்டிய சீன் இது?
என்னமோ ஒண்ணு குறையுது....கதை தொய்வாப் போகுதுன்னு ஒரு தோணல்.


இலவசம் 'தாயாரா'ன்னு சொன்னதும் நானும் தாயாருன்னு சொல்லிட்டேன்.
'தயார்'ன்னு திருத்திப் படிச்சுக்குங்க ப்ளீஸ்.

said...

// இலவசக்கொத்தனார் said...
லேண்ட்மார்க் மலர் ஆஸ்பட்த்திரி ஆகிப் போச்சு. மத்தபடி நம்ம கணிப்பு சரிதான். சரவணனை இப்போ சந்தேகப் பேய் பிடிச்சு ஆட்டப் போகுது. எல்லாரும் ஆட்டத்துக்கு தாயாரா, அட இந்த கதை படிச்ச உடனே கன்பியூஷன், தயாராகுங்கப்பா. //

உங்க கணிப்புக்கு என்ன குறை கொத்ஸ். நீங்க விட்டா கதையோட முடிவைக் கூடச் சொல்லீருவீங்க. ஆனா சொல்லாதீங்க. படிக்கிறவங்களுக்கு சுவாரசியம் போயிரும்.

சந்தேகம் தீராத நோயாமே. சரவணனுக்கு அது வருமா!

said...

// துளசி கோபால் said...
//எல்லாரும் ஆட்டத்துக்கு தாயாரா, அட இந்த கதை படிச்ச உடனே கன்பியூஷன், தயாராகுங்கப்பா.//

நான் ரெடி:-) //

நீங்க ஏற்கனவே தாயார்தான் டீச்சர். :-)

// துளசி கோபால் said...
எப்படி உணர்ச்சிப்பூர்வமா வந்துருக்கவேண்டிய சீன் இது?
என்னமோ ஒண்ணு குறையுது....கதை தொய்வாப் போகுதுன்னு ஒரு தோணல். //

உணர்ச்சிப்பூர்வமா வந்திருக்கலாம். ஆனா வழக்கமான கதாநாயகன் நாயகீன்னா அப்படியே அழுது தொழுது உழுதிருப்பாங்க. இவங்க ரெண்டு பேரும் அப்படி நூறு ரூவா சம்பளம் வாங்கீட்டு ஆயிரம் ரூவாய்க்கு நடிக்கிறவங்க இல்ல போல. தொய்வா? இருக்கலாம். கதை முடியப் போகுது டீச்சர். அதான் அப்படி.

// இலவசம் 'தாயாரா'ன்னு சொன்னதும் நானும் தாயாருன்னு சொல்லிட்டேன்.
'தயார்'ன்னு திருத்திப் படிச்சுக்குங்க ப்ளீஸ். //

சரிங்க டீச்சர்.

said...

ஆமா ஜி.ரா. ஏதோ ஒண்ணு குறையுது.. என்ன தான் எதிர்பார்த்த சஸ்பென்ஸ் வந்துருந்தாலும்..

அதுக்கு நீங்க தந்துருக்கிற விளக்கமும் கரக்ட் தான்..

என்னது .. கத முடியப் போகுதா? எப்போ? அடுத்த எபிசோட்-லயா?

பாக்குறேனுங்க..

said...

ஒரு கருவில் இத்தனை சஸ்பென்ஸா.
சந்தியா சுந்தர் சரவணன்
சக்தி சரவணம் சிவம்.

மூணு பேரும் ஒண்ணு சேருவாங்களா?
இல்லை சிவம் நெதர்லாண்ட் குகைக்குப் போயிடுமா.
சீக்கிரம் சொல்லுங்க சார்.

said...

போன பகுதி மிஸ் பண்ணிட்டேன்.. இந்த தடவ பாத்துட்டேன்....

அடுத்ததையும் படிச்சிட்டு விமர்சனம்...

said...

ஒன்னும் சொல்றதுக்கு இல்ல அடுத்த பகுதியை படிச்சுட்டு வாரேன்..

said...

// Raghs said...
என்னது .. கத முடியப் போகுதா? எப்போ? அடுத்த எபிசோட்-லயா?

பாக்குறேனுங்க.. //

இல்ல ராக்ஸ். அதுக்கு அடுத்த பகுதியில.

said...

// வல்லிசிம்ஹன் said...
ஒரு கருவில் இத்தனை சஸ்பென்ஸா.
சந்தியா சுந்தர் சரவணன்
சக்தி சரவணம் சிவம்.

மூணு பேரும் ஒண்ணு சேருவாங்களா?
இல்லை சிவம் நெதர்லாண்ட் குகைக்குப் போயிடுமா.
சீக்கிரம் சொல்லுங்க சார். //

சத்தியம் சிவம் சுந்தரம்
சரவணன் திருப்புகழ் மந்திரம்
அழகன் முருகனிடம் ஆசை வைத்தாள்
அண்ணல் உறவுக்கென்றே உடலெடுத்தாள்
அவன் குழந்தை பெறுவதற்கே உயிர் கொடுத்தாள் :-)

said...

// ஜி - Z said...
போன பகுதி மிஸ் பண்ணிட்டேன்.. இந்த தடவ பாத்துட்டேன்....

அடுத்ததையும் படிச்சிட்டு விமர்சனம்... //

அடுத்ததும் போட்டாச்சு ஜி.

// கோபிநாத் said...
ஒன்னும் சொல்றதுக்கு இல்ல அடுத்த பகுதியை படிச்சுட்டு வாரேன்.. //

அடுத்தது போட்டாச்சு கோபிநாத். படிச்சுட்டு சொல்லுங்க.

said...

ம்ம்ம்… கதை முடிவ நெருங்கிடுச்சுனுத் தெரியுது… அடுத்தப் பகுதியையும் படிச்சுட்டு வர்றேன்…

said...

அடுத்த பகுதியையும் பாத்துட்டு
இங்கே வரேன்.
அடுத்தக் குழந்தை இப்போதே வரும்:-0)
இவள் தியா என்று பெர் சூட்டிக் கொள்ளுவாள்.!!!!!!

said...

GR,

I read your serial story in total.It is fine. But a man can easily find out
the differnce between a women who had a child and not one - how - think for yourself .

Your portrayal that saravannan didn't know this even after their intimacy is not gel well.

said...

தமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,

தமிழ் ஒலி ஒளி நாடா
தமிழ் படப்பாடல்
தமிழ் நகைச்சுவை
தமிழ் படம்
தமிழ் நடிகர் நடிகை புகைபடம்


சூரியன் வானொலி.
தமிழன்
சூரியன் வானொலி, கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க...........

ரேடியோ.ஹாப்லாக்.காம்
( radio.haplog.com )

சன் டிவி..............
கே டிவி..............
தமிழன்
உங்கள் கணிணி திரையில் வண்ணக்கோலங்கல் படைக்கும் சன் டிவி.......

டிவி.ஹாப்லாக்.காம்
( Tv.Haplog.Com )
தமிழ்.ஹப்லாக்.காம்
(Tamil.Haplog.com)