Monday, March 12, 2007

தூத்துக்குடியை ஆண்டவந்தான் காப்பாத்தனும்

உண்மை அதுதாங்க. போன வாரம் தூத்துக்குடிக்கு அவசர வேலையாப் போக வேண்டியிருந்தது. அப்பப் பாத்ததையும் கேட்டதையும் வெச்சுத்தான் சொல்றேன் தூத்துக்குடிய ஆண்டவந்தான் காப்பாத்தனும்னு.

மதுரைப் பக்கத்தில இருந்து தூத்துக்குடிக்குப் போறவங்க பாஞ்சாலங்குறிச்சிக்கான குறுக்குச்சாலை வழியாகப் போகனும். அப்படித் தூத்துக்குடிக்குள்ள நொழையும் போது மொதல்ல புதிய பேருந்து நிலையம் வரும். அது நான் சின்னப்பிள்ளையிலேயே பழைய பேருந்து நிலையமாயிருச்சு. இருந்தாலும் அது ரெண்டாவது வந்ததால இன்னைக்கும் புதிய பேருந்து நிலையந்தான். அந்தப் பேருந்து நிலையத்தை ஒட்டி ரயில்வே தண்டவாளம் ஓடும். அதுதான் தூத்துக்குடியப் பிரிக்கிறது.

அந்த ரயில்வே தண்டவாளத்துல ஒன்னாங் கேட்டு, ரெண்டாங் கேட்டு, மூனாங்கேட்டுன்னு மூனு கதவுகள். ரயில் போறப்ப மட்டும் மூடுவாங்க. அதுல மூனாங்கேட்டுங்குறது புதிய பேருந்து நிலையம் பக்கத்துல இருக்கு. அது வழியாத்தான் பழைய பேருந்து நிலையத்துக்கும் ஊருக்குள்ளயும் போயாகனும். ஆனா பாருங்க...அங்க எப்பவுமே ஒரே நெரிசல். கூட்டம். போக்குவரத்துக் குழப்பம்னு எக்கச்சக்க பிரச்சனைகள்.

சரி...இந்த மாதிரிப் பிரச்சனைகளை ஒரு மேம்பாலம் தீத்துருதே. அதுனால ரெண்டு வருசத்துக்கு முன்னாடி பாலம் கெட்டத் தொடங்குனாங்க. அதுக்கேத்த மாதிரி பெரிய தூண்களை எழுப்பியும் சாரச்சுவரு கட்டியும்னு வேலை தொடங்குச்சு. ஆனா இன்னைக்கும் அது அப்படியே இருக்கு. வேலை அதுக்கப்புறம் நடக்கலை.

ஏன்னா அதுக்குக் காரணம் தூத்துக்குடி பெரியசாமிதான்னு ஊருக்குள்ள பேச்சு. இவரு பலமுறை சட்டமன்ற உறுப்பினரா இருந்திருக்காரு. கட்சித் தலைமையிடம் நல்ல செல்வாக்கு. ஊருக்குள்ளயும் வெளியயும் நல்ல சொத்து. அவருதான் பாலங்கட்ட விடாம தடுக்கிறது. அதுக்கு வெளிப்படையா சொல்ற காரணம்...பாலங்கட்டுனாலும் பிரச்சனை தீராதாம். ஆனா உண்மையான காரணம் வேற. பாலம் வந்துச்சுன்னா பக்கத்துலயே இருக்குற அவரோட மக பேர்ல கெட்டுன பெரிய ஓட்டல அது மறைக்குமே. அதுவுமில்லாம அந்த மகதான இப்போதைய சட்டமன்ற உறுப்பினரும் கூட. அமைச்சரும் கூட.

அத்தோட விட்டாரா? இன்னொரு புதுத்திட்டத்தையும் கொண்டு வந்துருக்காரு. அதாவது தூத்துக்குடி வளர்ந்துக்கிட்டே போகுதாம். அதுனால ரயில் நிலையத்த ஏற்கனவே இருக்குற எடத்துல இருந்து நகட்டி ஊருக்கு வெளிய இருக்குற மீளவட்டானுக்குக் (பக்கத்துச் சிற்றூர்) கொண்டு போயிரனுமாம். அப்படிக் கொண்டு போயிட்டா...பழைய தண்டவாளங்க தேவையில்லையே. கேட்டப் பூட்ட வேண்டிய அவசியமில்லையே. அப்ப மேம்பாலம் வேணும்னு கேக்க மாட்டாங்கள்ள. அதுவுமில்லாம மீளவட்டான் வட்டாராத்துல இவரு நெலம் வாங்கிப் போட்டிருக்காருன்னு சொல்றாங்க. ரயில் நிலையம் அங்க போயிட்டா? நெலத்தோட மதிப்பு எங்கயோ போயிரும்ல. அடேங்கப்பா! ஒரே கல்லுல ரெண்டு மாந்தோப்பு.

இதுல இன்னொரு நகைச்சுவை என்னன்னா....முந்தி தூத்துக்குடிக் கலெக்டரா இருந்த ஹேமந்த்குமார் சின்ஹாங்குறவரு ஆயிரத்து தொள்ளாயிரத்துத் தொன்னூறுகள்ளயே தூத்துக்குடிக்கான ரயில்வே நிலையத்தை மீளவட்டானுக்கு மாத்தனும்னு சொன்னாரு. அப்ப அதக் குறுக்க விழுந்து தடுத்தது இவர்தானாம்.

இப்படி ஒரு மக்ரூன் மாதிரி (தூத்துக்குடிக்காரங்களுக்கு லட்ட விட மக்ரூன் பெருசு) பிரச்சனை இருக்கும் போது எதிர்க்கட்சி புகுந்து விளையாடியிருக்க வேண்டாமோ? ஆனா முக்கிய எதிர்க்கட்டிகளான அதிமுகவும் மதிமுகவும் சத்தமே காட்டலை. ஆனா பாருங்க திமுகவோட கூட்டணிக்கட்சியான காங்கிரஸ் கட்சி கிண்டலடிக்கி. முனிசிபல் ஆபீஸ் முன்னாடி மிகப் பெரிய தட்டி வெச்சிருக்காங்க. அதுலதான் நான் சொன்ன தகவல்களைக் கிண்டலாச் சொல்லியிருக்காங்க. அதுல காங்கிரஸ் கட்சியோட உள்ளூரு, மாநில, அகில இந்தியப் புள்ளிகளோட அத்தன பேரோட படங்களும் இருக்கு. இருந்தாலும் இன்னும் ஒரு முடிவும் தெரியல. வேலை நடக்குற அடையாளமே காணோம். அதிகுமவுக்கும் மதிமுகவுக்கும் கிடைச்ச எதோ ஒன்னு காங்கிரசுக்குக் கிடைக்கலையோ என்னவோ!

அதுவுமில்லாம ஊருக்குள்ள சாலைகளைப் பாக்கனுமே.....பிறந்தநாள் கொண்டாடுவாங்களே அது மாதிரி சாலைல போறவங்க வர்ரவங்க அந்தக் குழிக்கு மூனு வயசு. இந்தக் குண்டுக்கு நாலு வயசுன்னு பேசுறாங்க. ஆனாலும் குழிங்களும் குண்டுங்களும் நாளொரு குட்டியா போட்டு வம்ச விருத்தி செய்றாங்க. அதுக்குக் குடும்பக் கட்டுப்பாட்டுக்கும் வழியக் காணோம். இது எந்தக் கட்சியில இருந்து சட்டமன்ற உறுப்பினர் வந்தாலும் இந்த நெலமைதான். அதான் சொன்னேன்....தூத்துக்குடிய ஆண்டவந்தான் காப்பாத்தனும்னு.

(இந்தப் பதிவிற்கான தகவல்கள் தூத்துக்குடி வாழ் மக்கள் சிலரிடம் இருந்தும் தூத்துக்குடிச் சுவரொட்டிகளில் இருந்தும் ரோடுகள், பாலங்கள் ஆகியவற்றின் நிலமைகளை நேரில் பார்த்ததில் இருந்தும் பெறப்பட்டன.)

அன்புடன்,
கோ.இராகவன்

15 comments:

said...

//பாலங்கட்டுனாலும் பிரச்சனை தீராதாம். ஆனா உண்மையான காரணம் வேற. பாலம் வந்துச்சுன்னா பக்கத்துலயே இருக்குற அவரோட மக பேர்ல கெட்டுன பெரிய ஓட்டல அது மறைக்குமே. அதுவுமில்லாம அந்த மகதான இப்போதைய சட்டமன்ற உறுப்பினரும் கூட. அமைச்சரும் கூட.//

ஐயையோ ! ஆண்டவன் இல்லிங்க தற்போது ஆளுபவன் தான் காப்பாத்தனும்.
:)

said...

இந்த பதிவை பாத்தீங்களா?

said...

// கோவி.கண்ணன் [GK] said...

ஐயையோ ! ஆண்டவன் இல்லிங்க தற்போது ஆளுபவன் தான் காப்பாத்தனும்.
:) //

காப்பாத்துனா ரொம்ப சந்தோஷங்க. தூத்துக்குடி மக்கள் ரொம்ப சந்தோசப்படுவாங்க. ஆனா எனக்கு அது அவ்வளவு லேசுல நடக்கும்னு தெரியலை.

said...

// Anonymous said...
இந்த பதிவை பாத்தீங்களா? //

அனானி நண்பரே, அந்தப் பதிவைப் பார்த்தேன். விரைவில் ஒரு பதிவு வருகிறது. அங்கு இதைப் பற்றிப் பேசுவோமே. இந்தப் பதிவில் வேண்டாமே.

said...

ஆஹா மக்ரூன் மக்ரூன் மக்ரூன், இந்த பதிவுல இருக்கு ... :)

அன்னைக்கு உங்க பதிவுல பின்னூட்டம் போட வந்து "சந்தியா மேரி ப்ரவுன்ல தான் சாப்பிடுவாங்களா? மக்ரூன் சாப்பிடுவாங்களா"ன்னு எழுத ஆரம்பிச்சு, கரெண்டு கட்டாகி பின்னூட்டம் போச்சுன்னு நினைக்கிறேன்!

இன்னைக்கு மக்ரூன் பாத்து குஷியாகிட்டேன்! :)

said...

தூத்துக்குடி தமிழ்நாட்டில்தான் இருக்கு. நம்பறேன். :)

said...

உங்கள் ஆதங்கம் புரிகிறது.எனக்கு கோபம் தான் வருகிறது.
நமது மாநிலத்தில் எந்த பொது கட்டுமானமும் நேரத்துக்கு முடிப்பதில்லை.உதாரணம்:
தாம்பரம் பேருந்து நிலையம் ஆரம்பிக்கும் என்ன எஸ்டிமேட்?முடிக்கும் போது எவ்வளவு தெரியுமா?
அங்கு வந்து நிற்க 4~6 பஸ்கள் மட்டுமே முடியுமாதிரி பிளேன்.
இன்னிக்கு போய் பாருங்க 90% வண்டி வெளியில் தான் நிற்கமுடியும்.ரௌத்திரம் பழகவேண்டும் போல் உள்ளது.

said...

// Madura said...
ஆஹா மக்ரூன் மக்ரூன் மக்ரூன், இந்த பதிவுல இருக்கு ... :)

அன்னைக்கு உங்க பதிவுல பின்னூட்டம் போட வந்து "சந்தியா மேரி ப்ரவுன்ல தான் சாப்பிடுவாங்களா? மக்ரூன் சாப்பிடுவாங்களா"ன்னு எழுத ஆரம்பிச்சு, கரெண்டு கட்டாகி பின்னூட்டம் போச்சுன்னு நினைக்கிறேன்! //

ஆகா...சந்தியா மக்ரூன் சாப்பிடுவாளா? தெரியலையே. அவ சாப்பிட்ட மாதிரி தெரியலை. சென்னைக்காரிக்கு அதெல்லாமா தெரிஞ்சிருக்கப் போகுது.

// இன்னைக்கு மக்ரூன் பாத்து குஷியாகிட்டேன்! :) //

ம்ம்ம்ம்....எனக்கு மக்ரூன் வேணும். எனக்கு மக்ரூன் வேணும். :-(((((

said...

// இலவசக்கொத்தனார் said...
தூத்துக்குடி தமிழ்நாட்டில்தான் இருக்கு. நம்பறேன். :) //

ஆகா! என்ன சொல்றீங்க கொத்சு? புரியிற மாதிரியும் இருக்கு. புரியாத மாதிரியும் இருக்கு. இருங்க எதுக்கும் மயிலார் கிட்ட நீங்க சொன்னதுக்குப் பொருள் கேட்டுக்கிறேன்.

said...

// வடுவூர் குமார் said...
உங்கள் ஆதங்கம் புரிகிறது.எனக்கு கோபம் தான் வருகிறது.
நமது மாநிலத்தில் எந்த பொது கட்டுமானமும் நேரத்துக்கு முடிப்பதில்லை.உதாரணம்:
தாம்பரம் பேருந்து நிலையம் ஆரம்பிக்கும் என்ன எஸ்டிமேட்?முடிக்கும் போது எவ்வளவு தெரியுமா?
அங்கு வந்து நிற்க 4~6 பஸ்கள் மட்டுமே முடியுமாதிரி பிளேன்.
இன்னிக்கு போய் பாருங்க 90% வண்டி வெளியில் தான் நிற்கமுடியும்.ரௌத்திரம் பழகவேண்டும் போல் உள்ளது. //

ஆமாங்க. உண்மைதான். ஆனா தாம்பரத்துல தூங்குனவங்க சைதாப்பேட்டைல முழிச்சிக்கிட்டாங்க. இங்க என்னடான்னா போட்ட திட்டத்தையே நடக்க விட மாட்டேங்குறாங்க. :-(

said...

அடடா.......... இப்படியாப் போகுது சேதி?

படங்களில் பார்த்துப்பார்த்து ஒரு நாளைக்குத் தூத்துக்குடி,
உப்பளங்கள் எல்லாம் பார்க்கணுமுன்னு ஆசை.
(என் தோழி வீரபாண்டி பட்டணத்துஆளு. )

நான் போகறதுக்குள்ளேயாவது பாலம் கட்டி முடிச்சுருவாங்களா?

மக்ரூன் நிறைய தின்னுருக்கேன்( எல்லாம் தோழியின் தயவு)

said...

ராகவன்,

இந்த பதிவை நீங்களல்லாமல் வேறு யாரேனும் எழுதியிருந்தால் அதிலுள்ளவற்றைப் பெரிதாக நினைத்திருக்க மாட்டேன்..

ஆனால் நீங்கள் எழுதியவைகள் சரியல்ல என்பதால்தான் எழுதுகிறேன்.

தூத்துக்குடியில் நான் மேலாளராக இருந்த சமயத்திலேயே தூத்துக்குடி வணிக சங்கத்தினரின் உதவியுடன் இந்த லெவல் க்ராசிங் தொல்லையை தீர்க்க முயன்றிருக்கிறோம்.

அப்போது சங்கம் முன்வைத்த பரிந்துரை தூத்துக்குடி ரயில்நிலையத்தை நகரிலிருந்து மாற்ற வேண்டும் என்பதுதான். ஆனால் அதை சில வலிமை வாய்ந்த வணிகர்கள் எதிர்த்ததால் அது இயலாமற் போனது.

நீங்கள் கூறியதுபோன்று மேம்பாலங்கள் அமைப்பதென்பது தூத்துக்குடியைப் போன்ற நகரில் சரிவராது. நீங்கள் எடுத்துக்காட்டிய மூன்று கேட்டுகளும் அமைந்துள்ள இடம் மிகவும் குறுகலானவை. அத்துடன் புதிய பேருந்து நிலையத்திற்கு செல்லும் கேட்டுக்கு மீது பாலம் அமைப்பதால் நகரிலிருக்கும் மற்ற கேட்டுகளால் மக்கள் படும் தொல்லையை தீர்க்க முடியாது.

ஆகவே இதற்கு நிரந்தர தீர்வு ரயில் நிலையத்தை மாற்றுவதுதான். மேலும் போர்ட் ட்ரஸ்ட் வரை செல்லும் ரயில் பாதையையும் முற்றிலுமாக அகற்ற வேண்டும் என்பதும் எங்களுடைய கோரிக்கையாக இருந்தது.

இப்போதும் அதை நிறைவேற்ற விடாமல் தடுக்கின்றனர் ஏற்றுமதியில் ஈடுபட்டிருக்கும் பல வணிகர்கள். இதில் ஸ்பிக்கும் டாக்கும் அடக்கம்.

நீங்கள் கூறிய அரசியல்வாதியையும் அவருடைய மகளையும் பாதிக்கும் விஷயம்தான் இந்த மேம்பாலம் என்றாலும் அதனால் நகர மக்களுக்கும் பாதிப்பும் உண்டு.

இந்த வேலை பாதியில் நிற்பதற்கு அரசியல்தான் காரணம் என்பது உண்மையோ இல்லையோ ஆனால் அதுவும் நல்லதுக்குத்தான்.

said...

ஜீ.ரா. நீங்கச் சொன்ன அத்தனை தகவலும் உண்மைங்கோ... கலைஞரின் முரட்டுப் பக்தன் செய்யும் இந்த வேலைகளால் அவருக்கு இரட்டிப்பு லாபம்..மக்களுக்கு மொத்தமும் சோகம்.. கரை வேட்டிக் காரன் அம்புட்டு பேரும் இப்போ மீளவெட்டான் பக்கம் ரியல் எஸ்டேட் போட்டுட்டு திரியறாங்களாம்...

இனி ஊருக்கு ரயிலில் போனா மறுக்க டவுணுக்குப் போக இன்னொமொரு ஒரு மணி நேரம் ஆகும்... இல்லை பிளசர் கார் பிடிச்சா சென்னை - தூத்துக்குடி ரயில் டிக்கெட் செலவு ஆகும்.. என்னப் பண்றது...

said...

ஜிரா, இன்றைய தினமலரில் இந்த செய்தி, விலாவாரியாய் வந்துள்ளது.

said...

// துளசி கோபால் said...
அடடா.......... இப்படியாப் போகுது சேதி?

படங்களில் பார்த்துப்பார்த்து ஒரு நாளைக்குத் தூத்துக்குடி,
உப்பளங்கள் எல்லாம் பார்க்கணுமுன்னு ஆசை.
(என் தோழி வீரபாண்டி பட்டணத்துஆளு. ) //

தூத்துக்குடியில இருந்து திருச்செந்தூரு போறப்போ நெறைய உப்பளங்க பாக்கலாம். அதே மாதிரி பழைய துறைமுகத்துல இருந்து தெர்மல் நகர் போற வழியிலையும் நெறைய உப்பளங்கள் பாக்கலாம் டீச்சர். அங்க போனா பனங்கெழங்கு கெடைச்சா விடாதீங்க.

// நான் போகறதுக்குள்ளேயாவது பாலம் கட்டி முடிச்சுருவாங்களா? //

சந்தேகந்தான்னு தெரியுது.

// மக்ரூன் நிறைய தின்னுருக்கேன்( எல்லாம் தோழியின் தயவு) //

சூப்பர். மக்ரூன் மக்ரூந்தான்.