Tuesday, August 01, 2006

1. ரெட்டைக் குரல் துப்பாக்கி

சென்னைக்கு மூன்று மாதங்கள் வேலை தொடர்பாக வந்ததுமே பாட்டுக்கச்சேரியும் நாடகமும் நிறைய பார்க்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் அது இரண்டரை மாதங்கள் கழித்தே நிறைவேறியது. ஊரெல்லாம் போஸ்டர்கள். டீவியில் விளம்பரங்கள். நாளிதழ்களில் விளம்பரங்கள். அட! அதுதான் பி.சுசீலாவும் எஸ்.ஜானகியும் இணைந்து இசை நிகழ்ச்சியில் பாடுகிறார்கள் என்று. நேரு உள்விளையாட்டரங்கத்தில் கச்சேரியாம். அது எங்க இருக்கிறதென்றே தெரியாது...இந்த நிலையில் டிக்கெட் வாங்கி நிகழ்ச்சிக்குப் போய்...ம்ம்ம்....தமிழ்நாட்டுக்காரன் சிம்ரனுக்கு ஆசைப்பட்ட கதையாகப் போய்விடுமோ என்று முதலில் நினைத்தேன்.

ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி. அதாவது ஜூலை முப்பதாம் தேதி 2006. வெள்ளிக்கெழமை இரவு யாஹுவில் ஆன்லைனில் இருந்தப்போது ஒரு நண்பர் வந்து வணக்கம் சொன்னார். அவர் பெயர் கமலா. அவரிடம் நிகழ்ச்சியைப் பற்றிச் சொல்லி ஆசையச் சொன்னேன். பக்கத்து இலைக்குப் பாயசம் கேட்கிற மாதிரி அவங்க போகிறார்களா என்று கேட்டேன். முதலில் யோசித்தார்கள்....பிறகு சனிக்கிழமை எனக்கு விவரம் சொல்வதாகச் சொன்னார்கள். நானும் சரீயென்று இருந்து விட்டேன்.

சொன்னது போலவே சனிக்கிழமை என்னைக் கூப்பிட்டு நான்கு பாஸ்கள் இருக்கிறதென்று சொன்னார்கள். அந்த நான்கும் யார் கொடுத்ததென்று நினைக்கிறீர்கள்? நம்பித்தான் ஆக வேண்டும். இசையரசி பி.சுசீலா அவங்களே கொடுத்தது. பழம் நழுவிப் பாலில் விழுவது பழைய பழமொழி. செர்ரி நழுவி ஐஸ்கிரீமில் விழுந்து அது நழுவி வாயில விழுந்ததென்று சொல்லலாம். இல்லையென்றால் கொஞ்சம் கிக்கோடு வேண்டுமென்றால் பியர் நழுவி கோப்பையில் விழுந்து அது நழுவி வாயில் விழுந்த மாதிரியென்று சொல்லலாம். அட...அவ்வளவு மகிழ்ச்சி!

ஞாயிற்றுக் கிழமை மாலை நான்கு மணிக்கெல்லாம் கிளம்பி அவர்கள் வீட்டிற்குப் போய்விட்டேன். அங்கிருந்து ஐந்து மணிக்கு நேராக நேரு உள்விளையாட்டரங்கம். அங்கு இன்னொரு நண்பரைக் கமலா அறிமுகம் செய்து வைத்தார்கள். அவருடைய தந்தை அந்தக் காலத்தைய பெரிய பாடகர். அவருடைய மகன்களில் இரண்டு பேர் திரைப்படங்களில் பாடியிருக்கிறார்கள். ஆமாம். திருச்சி லோகநாதன் அவர்களைத்தான் சொல்றேன். அவருடைய இளைய மகன்தான் நான் சந்திச்சது. அவருடைய அண்ணன்களான டி.எல்.மகாராஜன், தீபன் சக்கரவர்த்தி ஆகிய இருவரும் சினிமாவில் பாடியிருக்கிறார்களே!

நன்றாக மேடை மறைக்காத இடமாகப் பார்த்து உட்கார்ந்து கொண்டோம். கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக வரத் தொடங்கியது. நிகழ்ச்சியை ஃபோட்டோ பிடிக்க ஆசை. பதிவு போடும் பொழுது அதையும் போடலாமென்றுதான். ஆனால் டிக்கெட்டில் காமிரா கொண்டு வரக்கூடாதென்று தெளிவாகச் சொல்லியிருந்தார்கள். அதனால் எதற்கு வம்பு என்று கொண்டு செல்லவில்லை. வெளியே வைத்து விட்டு வரச் சொல்லி அனுப்பினால் எங்கு போவது?

ஆச்சி மசாலா, தினத்தந்தி விளம்பரங்கள் எல்லாம் அங்கு அமைக்கப்பட்டிருந்த இரண்டு திரைகளில் ஓடிக்கொண்டிருந்தன. நேரமும்தான். ஆறு மணி ஆகி பத்து நிமிடங்கள் ஆகியிருந்தது. அரங்கமும் நிறைந்திருந்தது. அப்பொழுது மேடையில வேண்டிய லைட்டப் போட்டு வெளிச்சமாக்கினார்கள். அப்பாடா! நிகழ்ச்சி தொடங்கப் போகிறதென்று ஒரு மகிழ்ச்சி. அவசர அவசரமாக உட்கார இடம் தேடினார்கள்

சங்கரின் சாதகப் பறவைகள் குழுவினர்தான் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. அதனால் அவர்கள் அணிப்பாடலாக "எந்த்தரோ மகானுபாவுலு அந்தரிகீ வந்தனம்" பாடினார்கள். ஆனால் பின்னணி இசையைப் புதுமையாச் செய்திருந்தார்கள். அலைபாயுதே படத்தில் அலைபாயுதே கண்ணா பாட்டுக்கு ரகுமான் செய்திருந்த மாதிரி. ஆனால் அலைபாயுதே வருவதற்கு முன்பே சாதகப் பறவைகள் இசைக்குழு இருக்கிறது.

தனது இசைக்குழுவை அறிமுகம் செய்து வைத்தார் சங்கர். பிறகு நிகழ்ச்சியைப் பற்றிச் சுருக்கமாக முன்னுரை கொடுத்துட்டு, பிரபல பாடகி ஸ்ரீலேகா பார்த்தசாரதியை அழைத்தார். எதற்கு? இரண்டு பெரிய பாடகிகளைப் பற்றி ஒரு பாடகி அறிமுகம் கொடுத்தால் எப்படி இருக்கும்! அதற்குத்தான்.

ஆனால் இவர்களுக்கு அறிமுகம் தேவையா? அந்தக் கேள்விதான் ஸ்ரீலேகா அவர்களும் கேட்டது. ஆகையால் சுருக்கமாக இருவரும் திரையுலகத்தில் நுழைந்ததைப் பற்றிச் சொன்னார். 1952ல் பெற்ற தாய் படத்தில் எதுக்கழைத்தாய் என்று தொடங்கும் பாடலைப் பாடி இசைப் பயணத்தைத் தொடங்கினாராம் பி.சுசீலா. எதுக்கழைத்தாயா? அவருடைய இனிய பாடல்கள் நமக்கெல்லாம் கிடைக்கத்தான். 1957ல் ஜானகி அவர்கள் இசைப்பயணத்தைத் தொடங்கினார்களாம். விதியின் விளையாட்டு என்ற படத்திற்காக. ஆமாம். விதியின் விளையாட்டுதான். ஜானகி அவர்கள் 57ல் அறிமுகமானாலும் இளையராஜாவின் வருகைக்குப் பிறகே பிரபலமானார்கள். அதுவரை இசைச் சிம்மாசனம் பி.சுசீலா அவர்களிடமே இருந்தது. அதுதான் விதியின் விளையாட்டு.

அறிமுகம் முடிந்ததும் இசைக்குயில்கள் இருவரும் இசையாரவாரத்தோடும் அதையமுக்கும் ரசிகர்களின் ஆரவாரத்தோடும் மேடையேறினார்கள். முதன் முதலாக மேடையில் பி.சுசீலா அவர்களைப் பார்க்கும் பரவசம் எனக்கு. என்னைப் போலவே பலருக்கு. அதே போல எஸ்.ஜானகி அவர்கள் ரசிகர்களும் பரவசமடைந்தார்கள்.

இருவரும் பணிவாக ரசிகர்களை வணங்கினார்கள். முதலில் எஸ்.ஜானகி அவர்கள் பி.சுசீலா அவர்களை மகாகுயில் என விளித்து அந்த மகாகுயிலோடு பாட வந்திருப்பது பெருமகிழ்ச்சி என்றார்கள். உடனே பி.சுசீலா தடுத்து இரண்டு மகாகுயில்கள் என்று திருத்தினார்கள். ஆனால் அதை ஏற்க மறுத்த எஸ்.ஜானகி, பி.சுசீலாதான் இசையரசி. அவருக்கு இணை என்று யாருமில்லை என்று ஆணித்தரமாக எடுத்துச் சொன்னார்.

அப்பொழுது எனக்கு "இசையரசி எந்நாளும் நானே" என்ற பாடல் நினைவிற்கு வந்தது. இளையராஜா இசையில் தாய் மூகாம்பிகை படத்தில் நடக்கும் பாட்டுப் போட்டி. தெய்வமே வந்து பாடும். "இசையரசி எந்நாளும் நானே" என்று. அதை மறுத்துப் பாடுவார் ஒருத்தி. ஆனால் பாட்டில் வெற்றி பெற பாலில் மருந்து கொடுத்து தெய்வத்தை ஊமையாக்கி விட்டதாக நினைப்பார். ஆனால் தெய்வத்தின் அருளால் ஊமை பாடி "இசையரசி எந்நாளும் நீயே! உனக்கொரு இணையாராம்மா? எல்லோரும் இசைப்பது இசையாகுமா?" என்று போட்டி முடியும். இந்தப் பாட்டில் தெய்வத்திற்குப் பி.சுசீலாவும் தெய்வ அருளால் குரல் பெற்ற பெண்ணிற்கு எஸ்.ஜானகியும் பாடியிருந்தார்கள். இன்றல்ல அன்றே பி.சுசீலாவை இசையரசி என்று எஸ்.ஜானகி புகழ்ந்திருக்கிறார்.

அடுத்து பேசினார் பி.சுசீலா. "ஜானகி பேசீட்டாங்க. நான் என்ன பேசுறது? நேரா பாட்டுக்கே போயிர்ரேன்" என்று தனது முதல் பாடலைத் துவங்கினார். அரங்கம் அமைதியானது. அந்த முதற் பாடல்?

தொடரும்....

20 comments:

said...

இருவருமே இணைந்து பாடினார்கள். இதில் யார் இசையரசி என்பது கேள்வி இல்லை. என்னை பொருத்தவரையில் இருவருமே இசையரசிகள் தான். நிகழ்ச்சியில் ஜானகி சுசிலாவை புகழ்ந்து பேசியது ஜானகியின் பெருந்தன்மையை வெளிப்படுத்துகிறது. சுசிலா ஜானகியை பற்றி எதுவும் சொல்லவில்லை என்பதால் ஜானகி இசையரசி இல்லை என்றாகி விடாது. இந்த நிகழ்ச்சியை பற்றிய என் பதிவை படியுங்கள்

http://sreesharan.blogspot.com/2006/07/blog-post.html

said...

சீக்கிரம் சொல்லுங்க...லைவ் ஷோக்கெல்லாம் போகணும்னு ஆசைதான்...ஆனால் நேரந்தான் இல்லை..

said...

குயில்களின் பாட்டு - உங்க எழுத்துகளில். அதுவும் தொடரா? போட்டுத்தாக்கும்வோய்.

said...

// sreesharan said...
இருவருமே இணைந்து பாடினார்கள். இதில் யார் இசையரசி என்பது கேள்வி இல்லை. என்னை பொருத்தவரையில் இருவருமே இசையரசிகள் தான். நிகழ்ச்சியில் ஜானகி சுசிலாவை புகழ்ந்து பேசியது ஜானகியின் பெருந்தன்மையை வெளிப்படுத்துகிறது. சுசிலா ஜானகியை பற்றி எதுவும் சொல்லவில்லை என்பதால் ஜானகி இசையரசி இல்லை என்றாகி விடாது. இந்த நிகழ்ச்சியை பற்றிய என் பதிவை படியுங்கள்

http://sreesharan.blogspot.com/2006/07/blog-post.html //

ஸ்ரீ, இசையில் இருவரும் செய்திருக்கும் சாதனைகள் மிகப் பெரியவை. அதை மறுக்க முடியாது. ஆனால் கட்டுரை என்னுடைய பார்வையில் இருந்து எழுதப்பட்டது என்பதையும் நீங்கள் கவனிக்க வேண்டும். பி.சுசீலா அவர்களின் ரசிகன் என்ற முறையில் அவரைப் பற்றி நிறைய எழுதியிருப்பேன். என்னுடைய கருத்தையும் எழுதியிருப்பேன். ஒருவன் அறிவாளி என்றால் மற்றவரெல்லாம் முட்டாள் என்று முடிவு கட்ட முடியாது. இல்லையா! அப்படித்தான் இங்கும்.

நீங்களும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தீங்களா! இருங்க ஒங்க பதிவுக்கும் வாரேன்.

said...

// Udhayakumar said...
சீக்கிரம் சொல்லுங்க...லைவ் ஷோக்கெல்லாம் போகணும்னு ஆசைதான்...ஆனால் நேரந்தான் இல்லை.. //

இங்க மட்டும் என்ன வாழுதாம் உதய். உண்மையச் சொன்னா...நான் பாத்த முதல் திரையிசை நிகழ்ச்சி இதுதான். இவ்வளவு பெரியவங்களப் பாக்குற சந்தோஷம். அவங்க பாடுறத நேர்ல கேக்குற சந்தோஷம். அத ஏன் கேக்குறீங்க. இதே மாதிரி வாணி ஜெயராம், ஜெயச்சந்திரன் கச்சேரிகளும் கேட்க ஆசை. நிறைவேறுதான்னு பாக்கலாம்.

said...

// இலவசக்கொத்தனார் said...
குயில்களின் பாட்டு - உங்க எழுத்துகளில். அதுவும் தொடரா? போட்டுத்தாக்கும்வோய். //

வாங்க இலவசம். உங்க பதிவுகளுக்கே கொஞ்ச நாளா வரலை....இனிமே வரப்பாக்குறேன்.

கண்டிப்பா போட்டுத்தாக்கிருவோம். இவங்க ரெண்டு பேரும் மேடையில போட்டுத்தாக்குனாங்களே...அடேங்கப்பா!

said...

ராகவன்,

கொடுத்து வைத்தவர் நீங்க. இன்னும் நல்லா விளக்கமா எழுதுங்க.
அடடா....... எவ்வளோ நல்லா இருந்திருக்குமில்லை!!!

இப்ப வயச்சாயிருச்சு ரெண்டு பேருக்கும். ஆனாலும் குரல் எப்பவும் போலத்தானே இருக்கு.
இல்லையா?

சீக்கிரம் அடுத்த பதிவைப் போடுங்க.

said...

இந்நிகழ்ச்சியை காண முடியாத பலருக்கு கண்முன்னே நிறுத்தும் விதத்தில் அழகிய வர்ணனை.

இத்தகைய அரிய நிகழ்ச்சிகளை காண கமலா போல் பல நண்பர்களை பெற வேண்டும்.

:-)

said...

ராகவன் நேரடி ஒலி பரப்பு நன்றாக இருந்தது.

said...

// துளசி கோபால் said...
ராகவன்,

கொடுத்து வைத்தவர் நீங்க. இன்னும் நல்லா விளக்கமா எழுதுங்க.
அடடா....... எவ்வளோ நல்லா இருந்திருக்குமில்லை!!! //

ரொம்ப நல்லாயிருந்தது டீச்சர். 11ம் தேதி இன்னொரு நிகழ்ச்சி இருக்காம். அது என்னன்னு பாக்கனும்.

// இப்ப வயச்சாயிருச்சு ரெண்டு பேருக்கும். ஆனாலும் குரல் எப்பவும் போலத்தானே இருக்கு.
இல்லையா? //

ரெண்டு பேரோட குரல்லயும் வயசு தெரியுது டீச்சர். இதுல சுசீலா எழுபதைத் தாண்டீட்டாங்க. ஜானகி எழுபதை நெருங்கிக்கிட்டு இருக்காங்கன்னு நெனைக்கிறேன். ஆனா ரெண்டு பேரும் கொஞ்சம் எடவெளி வெச்சுப் பாடும் போது இனிமையில எந்தக் குறைவும் இல்லை. திறமையிலயும் எந்தக் குறைவும் இல்லை.

// சீக்கிரம் அடுத்த பதிவைப் போடுங்க. //

வருது டீச்சர்...ஆனா நாளைக்கு.

said...

// நன்மனம் said...
இந்நிகழ்ச்சியை காண முடியாத பலருக்கு கண்முன்னே நிறுத்தும் விதத்தில் அழகிய வர்ணனை. //

நன்றி நன்மனம்.

// இத்தகைய அரிய நிகழ்ச்சிகளை காண கமலா போல் பல நண்பர்களை பெற வேண்டும்.

:-) //

உண்மைதான். கமலா செய்த உதவி பெரிய உதவிதான்.

said...

// ENNAR said...
ராகவன் நேரடி ஒலி பரப்பு நன்றாக இருந்தது. //

நன்றி என்னார். இன்னும் வருகிறது.

said...

ராகவன் பிரபலமான பீர்பால் கதை தெரியுமா உங்களுக்கு. இரு கோடுகளில் ஒரு கோடு பெரியதென்றால் மற்ற கோடு சிறிதென்று தானே அர்த்தம்.
உங்கள் பதிவை எல்லோரும் நேரடி ஒளிபரப்பாக தான் படிக்கிறார்கள். நான் நிகழ்ச்சிக்கு வந்திருந்தாலும் உங்கள் பதிவை ஆவலோடு எதிர்பார்க்கிறேன். நான் ஜானகியின் விசிறி என்பது ஞாபகம் இருக்கட்டும்

said...

டி.எம்.எஸ்., சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி மூவரும் ஒரே மேடையில் பாடிப் பார்த்திருக்கேனே (கேட்டிருக்கேனே). ஆனா எப்பன்னு தான் நினைவுக்கு வரமாட்டேங்குது. :-) (யாருப்பா அது 'உங்க கனவுல'ன்னு சத்தம் போடறது?)

said...
This comment has been removed by a blog administrator.
said...

இசை நிகழ்ச்சியில் கலந்துக்க முடியலைன்னு கவலை இருந்துச்சுங்க. இப்போ அது இல்லை. அருமையா ஆரம்பிச்சு இருக்கீங்க, தொடருங்க...விவசாயி நாம இருக்கோம் படிக்க

said...

// sreesharan said...
ராகவன் பிரபலமான பீர்பால் கதை தெரியுமா உங்களுக்கு. இரு கோடுகளில் ஒரு கோடு பெரியதென்றால் மற்ற கோடு சிறிதென்று தானே அர்த்தம்.
உங்கள் பதிவை எல்லோரும் நேரடி ஒளிபரப்பாக தான் படிக்கிறார்கள். நான் நிகழ்ச்சிக்கு வந்திருந்தாலும் உங்கள் பதிவை ஆவலோடு எதிர்பார்க்கிறேன். நான் ஜானகியின் விசிறி என்பது ஞாபகம் இருக்கட்டும் //

கண்டிப்பாக ஸ்ரீ. அடுத்த பதிவு நாளை இடுகிறேன். படித்து விட்டுச் சொல்லுங்கள். :-)

said...

ஆரம்பமே அமர்க்களம்.
இசைவிருந்துக்கு ஒரு சொல் விருந்து!
எங்களுக்கும் ரெட்டை விருந்து !
இதுவும் ஒரு ரெட்டைக் குழல் துப்பாக்கிதான்!!
ஆவலோடு எதிர் பார்க்கிறேன்!

said...

//ம்ம்ம்....தமிழ்நாட்டுக்காரன் சிம்ரனுக்கு ஆசைப்பட்ட கதையாகப் போய்விடுமோ என்று முதலில் நினைத்தேன்.
//

இராகவன். இப்படியெல்லாம் வேறு ஆசை இருந்ததா? :-)

said...

அழகான வர்னனை... அருமையாக எழுதி உள்ளீர்கள்..

(ரெட்டை குரல் துப்பக்கி என்றதும் ஒவ்வொரு நேரத்தில் ஒன்று பேசும் அரசியல் வாதிகளை பற்றிய பதிவு என நினைத்து வந்தேன் :-))