Thursday, August 03, 2006

3. எதுவும் சொல்லனுமான்னு கேட்டேன்

தேடினேன் வந்தது பாடலைச் சிறப்பாகப் பாடி முடித்ததுமே ஜானகி அவர்கள் எழுந்து வந்து பளார் என்று சுசீலாவின் கன்னத்தில் அறைந்தார்கள். சுசீலா மட்டுமல்ல மொத்த அரங்கமும் ஒரு நொடி அமைதியானது. உடனே மைக்கைப் பிடித்த ஜானகி, "படத்துல இந்தப் பாட்டு முடிஞ்சதும் சிவாஜி கே.ஆர்.விஜயாவை அறைவாரு. அதான் நானும் அது மாதிரி செஞ்சேன். இந்தப் பாட்டு என்னோட பையனுக்கு ரொம்பவும் பிடிச்ச பாட்டு"னு சொன்னாங்க. ஆகா! பொய்யடி அடிச்சிருக்காங்கன்னு புரிஞ்சதும் எல்லாருக்கும் மகிழ்ச்சி.

பி.சுசீலாவும் கிண்டலை விடவில்லை. "என்னடா அறைஞ்சிட்டாங்களே....வயசு காலத்துல தடுமாறி விழுந்துட்டேன்னா...இன்னும் நெறையா பாட்டு இருக்கே. யார் பாடுறதுன்னு பயந்துட்டேன்." என்று சொல்லிச் சிரித்தார்.

அரங்கமே ஒரு மெல்லிய நகைச்சுவையலையில் இருக்கும் பொழுது தொடர்ந்து சொன்னார். "ஜானகி அம்மா பையன் முரளி கிருஷ்ணா இந்தப் பாட்ட மொபைல்ல விரும்பிக் கேட்டார். அதான் பாடினேன்"னு உரிமையை உவப்போடு சொன்னார்.

சுசீலாம்மா என்னென்ன பாட்டுப் பாடுவாங்கன்னு கமலாவுக்குத் தெரிஞ்சிருந்தது. ஆனா இந்தப் பாட்டு அதுல இல்லையேன்னு யோசிச்சிக்கிட்டு இருந்தவங்களுக்கு இந்தப் பாட்டு உள்ளே நுழைந்த விவரம் புரிந்தது.

இந்தச் சிறிய விளையாட்டுகள் அடங்கியதும் அடுத்து ஒரு மிகக்கடினமான பாடலைப் பாடினார் சுசீலா. மெல்லிசை மன்னரின் இசையில் கனமான ராகத்தின் அடிப்படையில் எக்கச்சக்க சங்கதிகளோடு உள்ள ஒரு இனிய பாடல். கவியரசர் எழுதிய தீந்தமிழ்ப் பாடல். கர்ணன் என்ற படத்தில் இடம் பெற்ற "கண்கள் எங்கே? நெஞ்சமும் எங்கே? கண்ட போதே சென்றன அங்கே!" என்ற பாடல்தான் அது. பாடலைக் கேட்க இங்கே சுட்டவும்.

இந்தப் பாடலில் வீணையொலி நிறைய வரும். மெல்லிசை மன்னரின் இசையில் இசைத்தட்டில் கேட்கும் பொழுது அது பிரம்மாண்டமாக இருக்கும். அந்த உணர்வை மேடையில் இசைக்கலைஞர்கள் கொண்டு வந்திருந்தார்கள். அவர்களுக்கு என்னுடைய பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சாதகப் பறவைகள் குழுவை நடத்தி வரும் சங்கர் அடுத்த பாடலை ஜானகியோடு பாடினார். என்ன பாடல் என்று சொல்லுங்கள் பார்க்கலாம். இளையராஜா இசை. வைரமுத்து பாடல். பாலு மகேந்திரா படம். அர்ச்சனா அந்தப் பாட்டில் நாயகி. இன்னும் எது சொன்னாலும் பட்டென்று சொல்லி விடுவீர்கள். ஆம். பானுச்சந்தர் கதாநாயகன். இப்பொழுது பாட்டு தெரிந்து விட்டதுதானே. எஸ்.பி.பாலசுப்பிரமனியமும் எஸ்.ஜானகியும் பாடிய "ஓ! வசந்த ராஜா! தேன் சுமந்த ரோஜா!" என்ற பாடல்தான். பாடல் வரிகளும் மிகச் சிறப்பு.

"வெண் பஞ்சு மேகங்கள்
உன் பிஞ்சுப் பாதங்கள்
மண் தொட்டதால் இங்கே
செவ்வானம் போல் ஆச்சு
விண் சொர்க்கமே பொய் பொய்
என் சொர்க்கம் நீ கண்ணே!
சூடிய பூச்சரம் வானவில் தானோ"

நல்ல பாடல். ஜானகி பாடுவதைப் பற்றிச் சொல்ல வேண்டுமா. சங்கரும் முடிந்த அளவிற்குச் சிறப்பாக பாடினார். கூட்டத்தார் மிகவும் ரசித்தார்கள்.

ஒன்று சொல்ல வேண்டும். நிகழ்ச்சி தொடங்கி நெடு நேரம் ஆன பிறகும் நிறைய பேர் நேரம் கழித்து வந்து அங்கும் இங்கும் நகர்ந்து மறைத்து சத்தம் கொடுத்து தொந்தரவு கொடுத்தார்கள். இல்லாத இடத்திற்கு இந்தக் கடைசியிலிருந்து அந்தக் கடைசி தேடினார்கள். ஒரே தொந்தரவு. நடுநடுவில் செல்போனில் வேறு...."இது என்ன பாட்டு சொல்லு.....ஒனக்குப் பிடிக்குமே...ஹி ஹி ஹி" வேறு யார்? எனக்குப் பின்னால் உட்கார்ந்திருந்த ஒரு ஆள். மயிலாருக்குப் பயங்கர ஆத்திரம். திரும்பிக் கொத்தியிருப்பார். ஆனால் பாட்டைக் கேட்பது கெட்டு விடுமோ என்று அமைதியாக இருந்தார்.

"காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே" ஆம். அதுதான் ஜானகி பாடிய அடுத்த பாடல். இந்தப் பாட்டு ஜானகிக்காகவே. வேறு யார் பாடினாலும் சிறப்பாக இருக்காது என்பது என் கருத்து. அதை மீண்டும் நிரூபித்தார் ஜானகி.

இதற்குள் சிறப்பு விருந்தினர்கள் வரத் தொடங்கியிருந்தார்கள். பி.பீ.ஸ்ரீநிவாஸ், எஸ்.பி.பாலசுப்ரமணியம், மலேசியா வாசுதேவன், நடிகர் ஜெயராம், நடிகை அம்பிகா ஆகியோர் அந்த பொழுதில் வந்திருந்தார்கள். அவர்கள் மேடைக்கு முன்னால் அமர்த்தப்பட்டார்கள்.

இந்த அறிவுப்புகள் முடிந்ததும் பி.சுசீலா எழுந்து மைக் முன் நின்றார். எஸ்.ஜானகியும் எழுந்து சுசீலாவின் அருகில் வந்தார். "எதுவும் சொல்லனுமா?" என்று ஜானகியைப் பார்த்துக் கேட்டார். "இல்ல எதுவும் சொல்லனுமா? பாடுறதுக்கு முன்னாடின்னு கேட்டேன்" என்று இரண்டாம் முறையாக சுசீலா கேட்டார். "ஆமாம். கண்டிப்பாச் சொல்லனும்"னு என்று சுசீலாவிடம் சொன்னவர் கூட்டத்தைப் பார்த்துச் சொன்னார்......

தொடரும்.....

(பி.கு சென்ற பதிவில் கண்ணன் வந்து பாடுகிறான் பாடல் நீங்கள் கேட்டவை என்ற படத்தில் என்று தவறாகச் சொல்லி விட்டேன். அது ரெட்டை வால் குருவி என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்)

14 comments:

said...

அந்த அடி ஒத்திகை பாத்த அடியா இல்ல நெஜ அடியா? எப்படி இருந்தது சுசிலாமா ரியாக்ஷன்.

மயிலார டென்சன் ஆக வேண்டாம்னு சொல்லுங்க, மொத நேரடி கச்சேரிக்கு வரார் போல அதான். அடிக்கடி வந்த இந்த மாதிரி இம்சையிலும் ரசிக்க கத்துக்கிடலாம். :-)

said...

என்ன ராகவன், திரும்பிப் பார்க்கிறேன் எபெக்ட்டா, சஸ்பென்ஸ் எல்லாம் தூள் பறக்கிறது :-)

***

நல்லா வர்ணிச்சிருக்கீங்க, எப்படிங்க இவ்வுளவு பொறுமையா, நீளமா எழுதறீங்க ?

***

பி.சுசீலாயும், ஜானகியும் இசையுலகின்
மாணிக்கங்கள், அவர்களை நினைவு கூறுவதாய் அமைந்துள்ளது, உங்கள் பதிவு, நன்றி !!

said...

// நன்மனம் said...
அந்த அடி ஒத்திகை பாத்த அடியா இல்ல நெஜ அடியா? எப்படி இருந்தது சுசிலாமா ரியாக்ஷன். //

ஒத்திகை பாக்காத அடிதான். வலிக்காத அடின்னாலும் வயசு காரணமா லேசான தடுமாற்றம் தெரிஞ்சது. அதுக்கு அவங்க சொன்ன கமெண்ட்டையும் பதிவுல போட்டிருக்கேனே.

// மயிலார டென்சன் ஆக வேண்டாம்னு சொல்லுங்க, மொத நேரடி கச்சேரிக்கு வரார் போல அதான். அடிக்கடி வந்த இந்த மாதிரி இம்சையிலும் ரசிக்க கத்துக்கிடலாம். :-) //

ஆமாம்..இந்த மாதிரிக் கச்சேரி அவருக்கு இதுதான் மொத வாட்டி. அதான் யாராவது தொந்தரவு பண்ணுனா அவருக்குக் கோவம் வந்தது. போகப் போகப் பழகீருவாருன்னு நெனைக்கிறேன்.

said...

//ஓ! வசந்த ராஜா! தேன் சுமந்த ரோஜா!"//
வாவ்! என்னுடைய ஆறு பதிவில் சொல்லியிருந்த ஆறு பாடல்களில் இதுவும் ஒன்று.

சுவாரஸ்யமான தொடர் .நிறைய எழுதுங்கள் ராகவன்.

said...

// சோம்பேறி பையன் said...
என்ன ராகவன், திரும்பிப் பார்க்கிறேன் எபெக்ட்டா, சஸ்பென்ஸ் எல்லாம் தூள் பறக்கிறது :-) //

வாங்க சோபை. திரும்பியெல்லாம் பாக்கலங்க. நேராத்தான் உக்காந்து பாத்தேன். :-))))) அதுக்கே இந்தப் பாடு...இதுல திரும்பி வேற பாத்திருந்தா!

***

// நல்லா வர்ணிச்சிருக்கீங்க, எப்படிங்க இவ்வுளவு பொறுமையா, நீளமா எழுதறீங்க ? //

அத ஏன் கேக்குறீங்க. ஒரு வரி எழுதுனா ரெண்டு வரி வருது. அப்படியே ரெண்டு நாலாகி, நாலு எட்டாகி....
***

// பி.சுசீலாயும், ஜானகியும் இசையுலகின்
மாணிக்கங்கள், அவர்களை நினைவு கூறுவதாய் அமைந்துள்ளது, உங்கள் பதிவு, நன்றி !! //

இரண்டு இசை மேதைகளையும் நேரில் கண்டு அவர்கள் பாடக் கேட்டு மகிழ்ந்தது எனக்கு மட்டுமல்ல கிட்டத்தட்ட பத்தாயிரம் பேருக்குக் கிடைத்த பேறு. தொலைக்காட்சியில் வருகையில் லட்சக்கணக்கில் கூடும் என நினைக்கிறேன். விஜய் டீவியில் ஒளிபரப்பப்படும்.

said...

இப்பத்தான் கொஞ்சம் நிம்மதியாச்சு.

பாவம் மயிலார். அவரை ஏன் அடக்கி வச்சீங்க?
இந்த மாதிரி ஆட்களையெல்லாம் ஒரு கொத்து கொத்தவைக்கணும்.

நமக்கு இப்படி ஒரு ச்சான்ஸ் கிடைக்குமான்னு இருக்கறப்ப இவுங்க தொந்திரவு(-:

said...

chance illanga
neetu bayangarama oru thalaippai pottu bayamuruttitinga
ippa idha padichadum dan..oho..vilayatta...nu sandhoshama irukku

said...

அப்பாடா, இப்பதான் பதிவைப் பார்த்தேன். நீங்க வாரப்பத்திரிகைத் துப்பறியும் தொடர் எழுதுவதற்கு தெரிவாகியிருக்கீங்க, சரியா?

said...

இராகவன்.
நீங்கள் கொடுத்து வைத்தவர். இப்படி இசை அரசிகளின் பாடல் கச்சேரிகள் எல்லாம் பார்க்க/கேட்க வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்திருக்கிறது.
இந்தப் பதிவைப் பார்த்ததும்தான் நிம்மதி[ஏன் ஜானகி அம்மா சுசீலா அம்மையாரை அறைந்தார்கள்].

கர்ணன் படத்தில் வரும் பாடல்கள் அனைத்துமே அருமை. கவியரசரின் அற்புதமான வரிகள், மெல்லிசை மன்னரின் மயக்க வைக்கும் இசை. நீங்கள் குறிப்பிட்ட பாடல், "அண்ணலும் நோக்கினாள் அவளும் நோக்கினாள்" என கம்பன் சொன்னது போல் முதல் பார்வையிலேயே காதல் வசப்படுவதை கவியரசர் எவ்வளவு அழகாக அற்புதமாகச் சொல்லியுள்ளார். காதலின் ஏக்கத்தில் தவிக்கும் பெண் போலவே சுசீலா அம்மையார் அற்புதமாக பாடியிருந்தார்கள். நல்ல தொடர். அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளேன். படங்கள் எடுத்திருந்தால் , பதிவில் படங்களையும் இணைக்கப் பாருங்கள்.

said...

// துளசி கோபால் said...
இப்பத்தான் கொஞ்சம் நிம்மதியாச்சு.

பாவம் மயிலார். அவரை ஏன் அடக்கி வச்சீங்க?
இந்த மாதிரி ஆட்களையெல்லாம் ஒரு கொத்து கொத்தவைக்கணும். //

மயிலாரு கொத்தி
அந்தாளு கத்தி
நிகழ்ச்சிக்கு இடஞ்சல் நம்மாள வந்துரக்கூடாதில்லையா! அதான் டீச்சர்.

// நமக்கு இப்படி ஒரு ச்சான்ஸ் கிடைக்குமான்னு இருக்கறப்ப இவுங்க தொந்திரவு(-: //

அது உண்மைதான். இதுல...அங்குட்டும் இங்குட்டும் குறுக்க நெடுக்க நடக்குறது. மேடைய மறைக்கிற மாதிரி எந்திரிச்சு நின்னு ஆடுறது...இன்னும் நெறைய.

said...

ellarum podhuvaa enna ninaichirupomm ??edho kovam or athiram indha kaaranathhinal than oruvar marvarai adipaar..

aanal ingey parthal sellama adithaaram..sooperan thlaipu koduthu engali oru vaaram thlaiya piyakka vaicheetenga..valthukkal..thodarttum ungal pani

said...

//ஆகா! பொய்யடி அடிச்சிருக்காங்கன்னு புரிஞ்சதும் எல்லாருக்கும் மகிழ்ச்சி.//
இந்த மாதிரி தான் எதாவது இருக்கும்னு எதிர்பார்த்தேன். என்ன தான் சிடியில கேசட்ல பாட்டைக் கேட்டாலும் பாடலை நேரடியாகக் கேட்பதில் எப்போதும் ஒரு தனி மகிழ்ச்சி தான் இல்ல?

இப்பல்லாம் 'சிதம்பர ரகசியம்' தொடர் அதிகம் பார்க்க ஆரம்பிச்சிட்டீங்கன்னு நெனக்கிறேன். மறுபடியும் இந்தப் பதிவிலும் ஒரு மர்மத்துல முடிச்சிருக்கீங்க!
:)

said...

முதல் ரெண்டு பாகத்ததையும் தமிழ்மன்றத்தில பார்த்தன். இங்க 3 ம் பாகத்ததைப் பார்த்தேன்....
இப்பத்தான் நிம்மதி.... அறைவிட்டது செல்லமாகத்தான் என்றால் பரவாயில்லை. அதை பத்திரிகைக்காரன் மாதிரி ஊதிப்பெருசாக்கிட்டீங்களே.....

said...

ஒன்று சொல்ல வேண்டும். நிகழ்ச்சி தொடங்கி நெடு நேரம் ஆன பிறகும் நிறைய பேர் நேரம் கழித்து வந்து அங்கும் இங்கும் நகர்ந்து மறைத்து சத்தம் கொடுத்து தொந்தரவு கொடுத்தார்கள். இல்லாத இடத்திற்கு இந்தக் கடைசியிலிருந்து அந்தக் கடைசி தேடினார்கள். ஒரே தொந்தரவு. நடுநடுவில் செல்போனில் வேறு...."இது என்ன பாட்டு சொல்லு.....ஒனக்குப் பிடிக்குமே...ஹி ஹி ஹி" வேறு யார்? எனக்குப் பின்னால் உட்கார்ந்திருந்த ஒரு ஆள். மயிலாருக்குப் பயங்கர ஆத்திரம். திரும்பிக் கொத்தியிருப்பார். ஆனால் பாட்டைக் கேட்பது கெட்டு விடுமோ என்று அமைதியாக இருந்தார்.//

இந்த மாதிரி ஆளுங்கள மயிலார விட்டு கொத்த வைக்கறதுல தப்பே இல்ல ராகவன்..