Wednesday, August 09, 2006

தாயா தாரமா - சிறுகதை

தாயா தாரமா என்ற கேள்வி எழாத நாளுமில்லை. நாடுமில்லை. தாய்க்குப் பின் தாரம் என்பார்கள் சிலர். தாரத்தால் தாயாக முடியும். ஆனால் தாயால் தாரமாக முடியுமா என்று கேட்பர் சிலர். இரண்டுமே தவறு. தாய் வேறு. தாரம் வேறு. தாய் தாரமாவது மட்டும் கொடுமையன்று. தாரம் தாயாவதும் கொடுமைதான்.

ஆம். அப்படி ஒரு நிகழ்ச்சி என் வாழ்விலும் நிகழ்ந்தது. அதனால்தான் அடித்துச் சொல்கின்றேன். தாரம் தாயாகவே முடியாது. ஆகவும் கூடாது. அவரவர் பொறுப்பு அவரவர்க்கு. இப்பொழுது இது உங்களுக்குப் புரியாமல் போகலாம். ஆனால் என்னுடைய கதையைக் கேட்டால் கண்டிப்பாகப் புரியலாம்.

நானும் மணமானவள்தான். மனைவியாக மகிழ்ச்சியாகக் குடும்பம் நடத்தியவள்தான். இனிய இல்லறம் எனக்கும் தெரியும். கூட்டிப் பெருக்கவும் ஆக்கிப் போடவும் இரவில் படுக்கையைத் தட்டிப் போடவும் தெரிந்தவள்தான். நல்ல வளமான குடும்பமும் கூட. வியாபாரக் குடும்பம். வெளிநாடு போனார் ஒரு முறை. பொருள் சேர்க்க எங்கள் குடும்பத்தில் ஆண்கள் செல்லும் பயணம்தான். எனது தந்தையார் சென்றிருக்கின்றார். அண்ணன் சென்றிருக்கின்றார். என்னுடைய மாமனாரும் சென்றிருக்கின்றார். அந்த வழியில் எனது கணவரும் பல முறை திரைகடலோடியவர்தான்.

ஒவ்வொரு முறையும் திரும்ப வந்து என்னைக் கண்டவர், கைகளில் அள்ளிக் கொண்டவர் ஒரு முறை காணாமல் போனார். வாடிப் போனேன். வதங்கிப் போனேன். நாட்கள் வாரங்களாகி வாரங்கள் மாதங்களாகி மாதங்களும் ஆண்டுகளாயின. கண்ணீர் ஒன்றுதான் விதியென்று ஆனேன். அந்த விதியைக் காணச் சகிக்காத சுற்றத்தார்களும் நாடு நாடாகப் போய்த் தேடினர்.

கிழக்குக் கடலையும் மேற்குக் கடலையும் கடைந்து தேடினாலும் ஒரு துப்பும் கிடைக்கவில்லை. ஆனாலும் தேடுதல் நிற்கவில்லை. என்றாவது ஒரு நாள் வருவார் என்று காத்திருந்த எனக்கு அந்த நல்ல செய்தியும் வந்தது. ஆம். வெளிநாடுகளிலெல்லாம் தேடியவர்கள் பக்கத்தில் தேடாமல் விட்டார்கள்.

மதுரையிலே அவர் இருக்கின்றார் என்று நம்பகமான செய்தி வந்தது. வேறு தகவல் எதுவுமில்லை. வீட்டில் எல்லாரும் கிளம்பிச் சென்றோம். அவர் என்ன நிலையில் இருக்கின்றாரோ என்று வருந்திதான். ஏதேனும் குற்றங் குறை வந்து மனமும் குணமும் வாடிக் கிடந்தால் என்ன செய்வது? என்ன குழப்பத்தில் எங்கு மாட்டிக்கொண்டிருக்கிறாரோ? எல்லாரும் சென்றால்தான் அவரைப் பாதுகாப்பாக அழைத்து வரமுடியுமென்று முடிவு கட்டிச் சென்றோம்.

சென்ற பிறகுதான் ஏன் சென்றோம் என்று தோன்றியது. ஆம். ஊருக்குள் நுழைந்ததும் கிடைத்த செய்தி அப்படி. மதுரையம்பதியிலே அவர் ஒரு பெண்ணின் பதியென இருந்தார். கைக்குழந்தையோடு கதியென்று இருந்தார். ஆனால் விதி செய்த சதியென்று நானிருக்க முடியுமா? சத்திரத்தில் தங்கிக்கொண்டு அவரை வரவழைத்தோம். வந்தார். மனைவி மக்களோடு. அந்தக் காட்சியைக் கண்ட பொழுதே உலகத்தின் மீதிருந்த பாதிப்பற்று போய் விட்டது.

வந்தவர் என்னைப் பார்த்ததும் இரண்டு கைகளையும் வணங்கிக் கும்பிட்டார். அவர் மட்டுமல்ல...நான் சுமந்த தாலியைச் சுமந்து....நான் மகிழ்ந்த மேனியை மகிழ்ந்து....நான் சுமக்க வேண்டிய குழந்தையைச் சுமந்த அந்தப் பெண்ணும் அவள் பெற்ற குழந்தையும் என்னை வணங்கினார்கள். பேச்சின்றி எல்லாரும் வியந்த பொழுது பேசியும் வியப்பூட்டினார் அவர். என்னைப் பார்த்துச் சொன்னார். "அம்மா" என்று.

அது கணவனின் குரலாகக் கேட்கவில்லை. அந்த அழைப்பில் குழந்தையின் பாசத்தை மட்டுமே கண்டேன். பெண்கள் கணவனை ஐயா என்று அழைப்பதற்கும் ஆண்கள் மனைவியை அம்மா என்று அழைப்பதற்கும் வேறுபாடு உண்டு. கணவன் அப்பாவாக முடியாது. ஆகையால்தான் ஐயா என்று அழைப்பார்கள். ஆனால் மனைவி என்பவள் அம்மாவாக முடியாது என்பதை அறியாமல் எதற்கெடுத்தாலும் அம்மா அம்மா என்று அழைத்து அம்மா என்ற சொல்லுக்கே புதுப் பொருளை வழங்கி விட்டார்கள்.

ஆனால் இன்றைக்கு அவர் அம்மா என்று அழைத்த பொழுது அந்தத் தூய சொல்லுக்கான உண்மையான பொருளைத்தான் நானும் கண்டேன். என்னோடு வந்தவர்களும் கண்டார்கள். அந்த அதிர்ச்சியில்தான் வந்தவர்கள் அவரை அதட்டிக் காரணம் கேட்டார்கள். அவரும் சொன்னார்.

"அன்றொரு நாள் பகலுணவிற்காக நான் இரண்டு மாங்கனிகள் கொடுத்தனுப்பினேன். ஆனால் புனிதவதியாரோ நான் உணவுக்கு வருமுன்னமே ஒரு கனியைச் சிவனடியாருக்குப் படைத்து விட்டார். களைப்பில் உணவிற்கு வந்த எனக்குக் கிட்டியது ஒரு மாம்பழம். நானும் அதை உண்டு ருசித்து மற்றொன்றையும் கேட்ட பொழுது என்னுடைய மனம் மகிழ இறைவனை வேண்டி இன்னொரு கனியைக் கொண்டு தந்தார் புனிதவதியார். அது சுவையிலும் மணத்திலும் குணத்திலும் மேலோங்கி இருக்கக் கண்டு......வியந்த பொழுது...கனி கிடைத்த கதை சொன்னார் புனிதவதியார். பொய்யோ மெய்யோ எனச் சோதிக்க இன்னொன்றையும் அப்படி வேண்டிக் கொண்டு வா பார்க்கலாம் என்று சொன்னேன். உடனே வேண்டினார். கனியும் கிடைத்தது. பார்க்கலாம் என்று கேட்டதாலேயே பார்க்க மட்டும் கிடைத்தது. பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே கண் முன்னே மறைந்தது. அப்பொழுதுதான் அந்தப் பெரிய உண்மையைப் புரிந்து கொண்டேன். ஆண்டவனை எப்பொழுதும் அருகில் இருக்கக் கொள்ளும் ஞானப் பெருமகளே புனிதவதி என்றுணர்ந்தேன் நான்.

அந்தப் பெருமகளை என் குலமகளாக் கொண்டு இல்லறம் செய்வது எங்ஙனம்? இறைவன் கனி கொடுத்த கைகளுக்குப் பணி கொடுப்பேனா! இறைவனை அழைத்த இதழ்களோடு என்னிதழ்களை இழைப்பேனா! உள்ளமெல்லாம் பாசமும் உடலெல்லாம் நேசமும் அந்தச் சடையன் மீது கொண்ட தூயவராம் புனிதவதியை இந்த மடையன் அணைப்பேனா! இல்லறம் சிறப்பது கட்டிலில் தானே. அங்கே தாயைக் காண நாயாக முடியுமா என்னால்? பண்பெல்லாம் கற்றவனாயிற்றே நான். ஆகையால்தான் அன்னையை நீங்கினேன். மதுரையம்பதிக்கு வந்தேன். வணிகம் செய்தேன். திருமணமும் செய்து குழந்தையும் கொண்டு இறைப்பணியையும் சிறப்பித்து வருகிறேன். இப்பொழுது சொல்லுங்கள். நான் செய்தது தவறா? பிழையா?"

இப்படி எல்லாம் அவர் சொன்னது எல்லாருக்கும்...ஏன்...என்னுடைய பெற்றோருக்கும் சரியெனவே பட்டது. ஆனால் என்னால் ஒத்துக் கொள்ள முடியவில்லை. ஆண்டவர்களின் அடியவர்களாக இருக்கும் ஆண்களுக்குப் பெண்கள் மனைவியானதில்லையா? அப்படியிருக்க பெண்ணிடத்தில் மட்டும் என்ன ஓரவஞ்சனை? ம்ம்ம்...பயந்து போனவரை நினைத்துப் பயன் என்ன? அதனால்தான் சொல்கிறேன். தாய் வேறு. தாரம் வேறு. இரண்டும் ஒன்றாகவே முடியாது. தாயைப் பாசத்தில் நினைக்கத்தான் முடியும். ஆனால் தாரத்தை நேசத்தில் அணைக்கவும் முடியும். ம்ம்ம்...எப்படியோ இல்வாழ்க்கை இல்லாத வாழ்க்கையாகப் போயிற்று. போகட்டும். கணவன் வாயில் கனமாகக் கேட்ட பிறகு உடல் பற்றுப் போயிற்று. போகட்டும். அகப்பற்றும் புறப்பற்றும் போயிற்று. போகட்டும். எல்லாம் இறையருள். நான் தாயாகவும் இல்லை. இப்பொழுது தாரமும் இல்லை. ஆனால் உறவுகளுக்கும் பந்தங்களுக்கும் எனக்கு வெகுதூரம். தாயாகவும் இல்லாமல் தாரமாகவும் இல்லாமல் மண்ணுக்குப் பாரமாக இருக்கவா!

ஆனால் ஒன்று. என்னைத் தாயென்றவரை மகனாக ஏற்றுக் கொள்ள மனம் ஒப்பவில்லை. எப்படி ஒப்பும்? பிறந்த மேனியாய்த் தொட்டிலில் கண்டவரை மகன் எனலாம். கட்டிலில் கண்டவரை? கட்டிக் கொண்டவரை? அவராலும் நான் இன்னும் தாயாகவில்லை. என்னிடத்தில் தாயை உருவாக்க வேண்டியவரோ பாயை மடித்து வைத்து விட்டார். பிறப்பால் மகளானேன். பெற்றோரை மகிழ வைத்தேன். திருமணத்தால் மனைவியானேன். கணவனை மகிழ வைத்தேன். ஆனால் இப்பொழுது தாயென்று பெயர் மட்டும் உண்டு. ஆனால் அந்தப் பதவி?

ஆலவாயண்ணலைத் தொழுது உலகம் சுற்றினேன். அழகெலாம் துறந்து வற்றினேன். ஆயினும் தீந்தமிழைச் சிவன் காலடியில் ஊற்றினேன். துன்பம் என்று வந்தவர்களை எல்லாம் தேற்றினேன். நடந்தேன். நடந்தேன். நடந்து கொண்டேயிருந்தேன். நோக்குமிடமிங்கும் நீக்கமின்றி நிறைந்தவனை வணங்கிக் கயிலையைச் சேர்ந்தேன். அந்த மலையே சிவலிங்கமாக நின்றது. இதில் எப்படி காலால் ஏறுவது என்று தலையால் ஏறினேன்.

வற்றிப் போய் உடலெல்லாம் நாறிய என்னை.....உடையெல்லாம் விழுந்து உடலெல்லாம் தெரிந்தாலும் கால் படாது தலையாலே கயிலையை ஏறிய என்னை....அம்மையே என்று அழைத்தார் செஞ்சடையர். அன்று மதுரையில் கேட்ட சொல்லல்ல இது. தாந்தோன்றியே அம்மையே என்று அழைத்த சொல்லல்லவா! தன்னைத்தான் தோன்றி, அதிலிருந்து உலகம் தோன்றி, உலகத்தில் உயிர் தோன்றி, அந்த உயிர்களுக்கெல்லாம் அருள் தோன்றிய அற்புதக் கனியானது என்னை அம்மையே என்று அழைத்த அழைப்பில் நான் யார் என்று தெரிந்து போனது. ஆம். நான் தாய். நான் தாய்தான். தாயேதான்.

அம்மையே அப்பா என்று உலகம் அழைக்கும் பெருந்தேவனின் தாயன்பு எனக்குத் தாய் அன்பை உணர்த்திய அந்தப் பொழுதினிலேயே எல்லாம் மறந்தும் போனது. மறைந்தும் போனது. தான் போய் ஊன் போய் நான் போய் என்னிலிருந்து ஒவ்வொன்றாகப் போய் பிறப்பும் இறப்பும் போய் எல்லாம் ஓங்காரச் சிவவொலியாகி எங்கும் நிறைந்து பரவசமானது. சிவ! சிவ! சிவ!

அன்புடன்,
கோ.இராகவன்

28 comments:

said...

ஆனால் மனைவி என்பவள் அம்மாவாக முடியாது என்பதை அறியாமல் எதற்கெடுத்தாலும் அம்மா அம்மா என்று அழைத்து அம்மா என்ற சொல்லுக்கே புதுப் பொருளை வழங்கி விட்டார்கள்.//

இந்த அம்மாங்கற சொல் தாய்க்கு மட்டும் சொந்தமல்லவே. எத்தனை தந்தையர் பெற்ற மகளையும் அம்மா என்று பாசத்துடன் அழைக்கிறார்கள். தூத்துக்குடியில் ஏறத்தாழ எல்லா பெண்களுக்குமே திரேசம்மாள், லீனம்மாள் என அம்மாள் என்ற துணைப்பெயரும் சேர்ந்துக்கொள்ளும்.

தாரத்தை அம்மா என்றழைப்பதும் உண்டுதான்.. அதிலும் ஒரு பாசம்தான் தொனிக்கின்றது..

ஆனால் நீங்கள் கூறியதுபோல் சமீப காலமாக அ.வாதிகள்தான் அம்மா என்ற சொல்லுக்கே அர்த்தமில்லாமல் செய்துவிட்டனர்.

said...

வித்தியாசமான சிந்தனை.
நான் எனது பேத்தியையும் இங்கே வாங்கோ அம்மா என்பேன். அது ஒரு செல்லமான கூப்பிடலே.

தாரத்தைத் தாயாக இருக்க வேண்டும் என்றுதான் பலரும் விரும்புவார்கள்.
பாசத்தில் நெஞ்சில் ஏற்றி வைக்கும் தெய்வம் தாய். இதயத்தில் அவளுக்குத்தான் முதலிடம்.
ஆனால் நேசத்தில் அணைக்கக் கூடியவளும் பல நேரங்களில் அருகில் தேவைப்படுபவளும் தாரம்
வாழ்வெல்லாம் கூட வரப் போகிறவளும் அவளே

இது பெண்களுக்கும் பொருந்தக் கூடியதே.

said...

காரைக்கால் அம்மையார் கதையை அழகாக அருமையாகச் சொல்லி இருக்கீங்க ராகவன்.

நல்ல சொல்லாடல் இருக்கு உங்க எழுத்திலே.

பிடிச்சிருக்கு.

நல்லா இருங்க.

said...

ஓ இது தான் காரைக்கால் அம்மையார் கதையா? மாங்கனி திருவிழாவும் இதனால் தானோ.

said...

ரொம்ப நாள் ஆச்சு ஜிரா, இந்த மாதிரி ஒரு சரித்திரத் தகவலை சிறுகதையாய்த் தந்து. வழக்கம் போல் நன்றாக இருக்கிறது.

said...

// இந்த அம்மாங்கற சொல் தாய்க்கு மட்டும் சொந்தமல்லவே. எத்தனை தந்தையர் பெற்ற மகளையும் அம்மா என்று பாசத்துடன் அழைக்கிறார்கள். தூத்துக்குடியில் ஏறத்தாழ எல்லா பெண்களுக்குமே திரேசம்மாள், லீனம்மாள் என அம்மாள் என்ற துணைப்பெயரும் சேர்ந்துக்கொள்ளும்.

தாரத்தை அம்மா என்றழைப்பதும் உண்டுதான்.. அதிலும் ஒரு பாசம்தான் தொனிக்கின்றது..//

அம்மா என்று அழைப்பதற்கும் அம்மா என்று ஆவதற்கும் வேறுபாடு உண்டல்லவா சார். அம்மா என்ற பெயரை வேண்டுமானால் மனைவி எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அம்மாவின் இடத்தை மனைவி எடுக்க முடியாது. அப்படி இருக்க முடியுமானால் புனிதவதி புனிதவதியாராக மாறியிருக்க வேண்டியதில்லை.

// ஆனால் நீங்கள் கூறியதுபோல் சமீப காலமாக அ.வாதிகள்தான் அம்மா என்ற சொல்லுக்கே அர்த்தமில்லாமல் செய்துவிட்டனர். //

இது அரசியல். அம்மா என்ற அடைமொழி மட்டுமல்ல எல்லா அடைமொழிகளிலும் பொருளில்லாமல் போய் விட்டது இன்றைக்கு. இதை வேறு தளத்தில் பேசுவோம்.

said...

// Chandravathanaa said...
வித்தியாசமான சிந்தனை.
நான் எனது பேத்தியையும் இங்கே வாங்கோ அம்மா என்பேன். அது ஒரு செல்லமான கூப்பிடலே. //

என்னது உங்கள் பேத்தியா? இந்த வயதிலேயே பேத்தி பார்த்து விட்டீர்களா! வாழ்த்துகள்.

// தாரத்தைத் தாயாக இருக்க வேண்டும் என்றுதான் பலரும் விரும்புவார்கள். //

அதற்குக் காரணம் உள்ளது சந்திரவதனா. தாய்ப்பாசத்தையும் அரவணைப்பையும் முழுமையாக அனுபவிக்காதவர்கள் அதை தாரத்திடம் எதிர்பார்ப்பார்கள்.

// பாசத்தில் நெஞ்சில் ஏற்றி வைக்கும் தெய்வம் தாய். இதயத்தில் அவளுக்குத்தான் முதலிடம்.
ஆனால் நேசத்தில் அணைக்கக் கூடியவளும் பல நேரங்களில் அருகில் தேவைப்படுபவளும் தாரம்
வாழ்வெல்லாம் கூட வரப் போகிறவளும் அவளே

இது பெண்களுக்கும் பொருந்தக் கூடியதே. //

மறுக்க முடியாத கருத்து. ஆனால் புனிதவதியாரின் வாழ்வில் விவாதப் பொருளானது தாரம் தாயாக முடியுமா என்பதே! கணவனே தாய் என்று அழைத்தாலும் தாரம் மகனே என்று அழைக்க முடியுமா? நினைக்க முடியுமா? இத்தனை காலம் கட்டிலில் கூடிக் களித்தவன் திடீரென்று அம்மா என்று அழைப்பது படம் முடியப் போகும் நேரத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருத்தி எம்.ஜி.ஆரை அண்ணா என்று அழைப்பது போல அல்லவா இருக்கும்.

said...

// துளசி கோபால் said...
காரைக்கால் அம்மையார் கதையை அழகாக அருமையாகச் சொல்லி இருக்கீங்க ராகவன். //

கதை சொல்றதுல நீங்கள்ளாம் எங்களுக்கு டீச்சர். :-) நீங்க ஆல். நான் வேல். ஆனாலும் உங்கள் பாராட்டு மகிழ்ச்சி தருகிறது.

// நல்ல சொல்லாடல் இருக்கு உங்க எழுத்திலே.

பிடிச்சிருக்கு. //

நன்றி டீச்சர்.

// நல்லா இருங்க. //

ரொம்ப நன்றி டீச்சர்.

said...

காரைக்கால் அம்மையார் கதையா ? இன்னிக்குத்தான் படிக்கிறேன் ... வெகு அருகில் இருந்தும் கதை தெரியவில்லை ... தாரத்தை அன்னையென்றால் அங்கு தாரம் இருக்க முடியாதுதான் ! நல்ல கருத்துக்கள்

said...

// ENNAR said...
ஓ இது தான் காரைக்கால் அம்மையார் கதையா? மாங்கனி திருவிழாவும் இதனால் தானோ. //

என்னாரா கேட்பது! வியப்புதான். காரைக்கால் அம்மை என்ற பெயரை நான் பயன்படுத்தாததால் அப்படிக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். சரிதானே?

said...

// இலவசக்கொத்தனார் said...
ரொம்ப நாள் ஆச்சு ஜிரா, இந்த மாதிரி ஒரு சரித்திரத் தகவலை சிறுகதையாய்த் தந்து. வழக்கம் போல் நன்றாக இருக்கிறது. //

இன்னும் நிறைய இருக்கு கொத்ஸ். எடுத்துச் சொல்ல. சிறப்பாச் சொல்லனுமேன்னுதான் யோசிச்சு யோசிச்சுச் செய்ய வேண்டியிருக்கு.

said...

//ஆனால் என்னால் ஒத்துக் கொள்ள முடியவில்லை. ஆண்டவர்களின் அடியவர்களாக இருக்கும் ஆண்களுக்குப் பெண்கள் மனைவியானதில்லையா? அப்படியிருக்க பெண்ணிடத்தில் மட்டும் என்ன ஓரவஞ்சனை? ம்ம்ம்...பயந்து போனவரை நினைத்துப் பயன் என்ன?//

ஆண்டவர்களின் அடியவர்களாக இருக்கும் பெண்களுக்கு ஆண்களும் உற்ற துணையாக இருந்துள்ளார்களே? அருந்ததிக்கு வசிட்டர், சாரதாமணி தேவிக்கு ராமகிருஷ்ணர், கஸ்தூரி பாய்க்கு காந்தியடிகள், இவ்வளவு ஏன்? நாம் வாழும் காலத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு சதாசிவம்...இன்னும் பலர்!

உண்மை என்னவென்றால்...தாங்களே இதற்கு பதிலும் சொல்லிவிட்டீர்கள். //ம்ம்ம்...பயந்து போனவரை நினைத்துப் பயன் என்ன// பயம் தான் காரணம்!! இருவரும் ஒரே இறை தளத்தில் இல்லாத சூழ்நிலையில், லெளகீக வாழ்க்கை என்ன ஆகி விடுமோ என்ற பயம்! இல்லற சுகங்கள் எல்லாம் போய்விடுமோ என்ற மனப்பான்மை.
இது இரு பாலருக்கும் உண்டு.

சும்மா ஒரு பழைய படம் பார்க்கலாம் என்று ஒளவையார் படம் பார்த்தார் நண்பர். அவர் மனைவி பயந்தடித்துக் கொண்டு, "அய்யோ இப்படியே போச்சுனா...இவர் சாமியாரா போய்டுவாரோ...நீங்கள் கொஞ்சம் எடுத்து சொல்லக்கூடாதா" என்று தொலைபேசியில் புலம்ப...மறு நாள் நண்பரை "ஒளவையாரானந்தா சாமிகளே" என்று ஓட்டித் தீர்த்தார்கள் :-)

புனிதவதியின் கணவன் இதில் சேர்த்தி...அம்மையாரோடு அருள் வெள்ளத்தில் திளைத்திருக்கலாம்; புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் என்பது போலாவது இருந்திருக்கலாம். ஆனால் இறைவனின் திருவுள்ளம் வேறு. அம்மையார் குன்றில் இட்ட விளக்காக ஆகி விட்டார்கள்.
அறுபத்து மூவரில்...ஒருவர்

கவனித்தீர்களா ராகவன்? அதே அறுபத்து மூவரில் தான் சடையனார்-இசைஞானியார் தம்பதியர், இருவருமே நாயன்மார்கள் இல்வாழ்க்கையில் இருந்து கொண்டே, இறைப்பணி செய்தனர்!
அப்படி ஒன்று என்றால், இப்படி ஒன்று!

said...

என்னது உங்கள் பேத்தியா? இந்த வயதிலேயே பேத்தி பார்த்து விட்டீர்களா!

றாகவன்
எனக்குப் பேர்த்திகள் இருப்பது உங்களுக்குத் தெரியாது என்பதுதான் எனக்கு ஆச்சரியம்.

மூன்று பேர்த்திகள் இருக்கிறார்கள். இதைப் பாருங்கள். http://manaosai.blogspot.com/2006/06/blog-post_06.html

எனது பிள்ளைகளுக்கு 29, 26.. என்று வயதுகள் இருக்கும் போது எனக்குப் பேத்திகள் இருப்பது
ஆச்சரியமில்லைத்தானே!

said...

// கோவி.கண்ணன் said...
காரைக்கால் அம்மையார் கதையா ? இன்னிக்குத்தான் படிக்கிறேன் ... வெகு அருகில் இருந்தும் கதை தெரியவில்லை ... தாரத்தை அன்னையென்றால் அங்கு தாரம் இருக்க முடியாதுதான் ! நல்ல கருத்துக்கள் //

காரைக்காலம்மையார் வரலாறு பலருக்குத் தெரியாது என்பது உண்மை.

இன்று ஒரு நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன். அவர் சொன்னார். புனிதவதியாரின் கணவர் ரொம்ப அப்பாவி போல. கொஞ்சம் சுதாரிப்பா இருந்திருந்தா மாம்பழ மண்டியே வெச்சிருந்திருக்கலாம்னு. :-)

said...

// Ravishankar Kannabiran said...
//ஆனால் என்னால் ஒத்துக் கொள்ள முடியவில்லை. ஆண்டவர்களின் அடியவர்களாக இருக்கும் ஆண்களுக்குப் பெண்கள் மனைவியானதில்லையா? அப்படியிருக்க பெண்ணிடத்தில் மட்டும் என்ன ஓரவஞ்சனை? ம்ம்ம்...பயந்து போனவரை நினைத்துப் பயன் என்ன?//

ஆண்டவர்களின் அடியவர்களாக இருக்கும் பெண்களுக்கு ஆண்களும் உற்ற துணையாக இருந்துள்ளார்களே? அருந்ததிக்கு வசிட்டர், சாரதாமணி தேவிக்கு ராமகிருஷ்ணர், கஸ்தூரி பாய்க்கு காந்தியடிகள், இவ்வளவு ஏன்? நாம் வாழும் காலத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு சதாசிவம்...இன்னும் பலர்! //

இருக்கலாம் ரவி. இந்த எடுத்துக்காட்டுகளில் இருவருக்கும் ஒத்த எண்ணம் ஓரளவு இருந்திருக்கிறது. ஆனால் கணவன் ஆன்மீகத்தில் சிறந்தவனாகவும் மனைவி ஒன்றுமறியாதவளாகவும் இருப்பது எளிதாகின்ற பொழுது அதற்கு நேர்மாறாக நடப்பது மிகமிக அரிதே!

// உண்மை என்னவென்றால்...தாங்களே இதற்கு பதிலும் சொல்லிவிட்டீர்கள். //ம்ம்ம்...பயந்து போனவரை நினைத்துப் பயன் என்ன// பயம் தான் காரணம்!! இருவரும் ஒரே இறை தளத்தில் இல்லாத சூழ்நிலையில், லெளகீக வாழ்க்கை என்ன ஆகி விடுமோ என்ற பயம்! இல்லற சுகங்கள் எல்லாம் போய்விடுமோ என்ற மனப்பான்மை.
இது இரு பாலருக்கும் உண்டு.

சும்மா ஒரு பழைய படம் பார்க்கலாம் என்று ஒளவையார் படம் பார்த்தார் நண்பர். அவர் மனைவி பயந்தடித்துக் கொண்டு, "அய்யோ இப்படியே போச்சுனா...இவர் சாமியாரா போய்டுவாரோ...நீங்கள் கொஞ்சம் எடுத்து சொல்லக்கூடாதா" என்று தொலைபேசியில் புலம்ப...மறு நாள் நண்பரை "ஒளவையாரானந்தா சாமிகளே" என்று ஓட்டித் தீர்த்தார்கள் :-)

புனிதவதியின் கணவன் இதில் சேர்த்தி...அம்மையாரோடு அருள் வெள்ளத்தில் திளைத்திருக்கலாம்; புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் என்பது போலாவது இருந்திருக்கலாம். ஆனால் இறைவனின் திருவுள்ளம் வேறு. அம்மையார் குன்றில் இட்ட விளக்காக ஆகி விட்டார்கள்.
அறுபத்து மூவரில்...ஒருவர்

கவனித்தீர்களா ராகவன்? அதே அறுபத்து மூவரில் தான் சடையனார்-இசைஞானியார் தம்பதியர், இருவருமே நாயன்மார்கள் இல்வாழ்க்கையில் இருந்து கொண்டே, இறைப்பணி செய்தனர்!
அப்படி ஒன்று என்றால், இப்படி ஒன்று! //

ரொம்பச் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள் ரவி. ஒவ்வொன்றிலும் ஒவ்வொன்று. இருந்தாலும் இறைப்பணிக்கு ஏது தடைப்பணி!

said...

ம்ம்ம். இது. இது தான் இராகவன் உங்கள் வலிமை. (பலம் என்று சொல்லவந்து பின் தயங்கி வலிமை என்றேன். பலம் என்ற வடசொல்லுக்கு வலிமை சரியான தமிழ் தானே?). ஒவ்வொரு சொல்லிலும் பல பொருள்களைக் கண்டு அதனைச் சுவை தர தருவதற்கு நீங்கள் வாரியாரிடம் தான் கற்றுக் கொண்டீர்கள் போலும். வாரியார் அடிப்பொடியே வாழ்க வாழ்க.

said...

காரைக்கால் அம்மை புனிதவதியாரின் கதையை அருமையாகவும் புதுமையாகவும் எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள். தாயா தாரமா - தலைப்பைப் பார்த்தவுடன் ஒரு புன்சிரிப்புடனேயே படிக்கத் தொடங்கினேன். பெரியாழ்வாரின் பார்வையையும் கண்ணகியின் பார்வையையும் அழகுடன் புதுமையாக முன்பு சொல்லியிருந்தீர்களே. அது போல் இங்கேயேயும் சொல்லியிருப்பீர்கள் என்று தோன்றியது. அந்த எதிர்பார்ப்பு வீண்போகவில்லை. நன்றி.

தொடக்கத்தில் யார் கதையைச் சொல்கிறீர்கள் என்று புரியவில்லை. கண்ணகியின் கதையோ என்று எண்ணினேன். ஆனால் 'நாட்கள் வாரங்களாகி வாரங்கள் மாதங்களாகி மாதங்களும் ஆண்டுகளாயின.' என்று படித்தவுடன் இது கண்ணகி அம்மையின் கதையில்லை என்று தெரிந்தது. இராம.கி. ஐயா தெளிவாக இலக்கியச் சான்றுகளுடன் கண்ணகியைக் கோவலன் பிரிந்திருந்தது மாதக் கணக்கில் தான்; ஆண்டுக் கணக்கில் இல்லை என்று எழுதியிருந்தாரே. அதனை நீங்கள் படித்துப் பின்னூட்டமும் இட்டிருந்தீர்களே. அதனால் இது கண்ணகி அம்மையின் கதையில்லை என்று தெரிந்தது.

'மதுரையிலே அவர் இருக்கிறார்' என்று படித்தவுடன் இது பிறப்பில்லாப் பெம்மானின் அன்னையின் கதை என்று புரிந்தது. :-)

நீங்கள் தேடித் தேடி நாங்கள் ரசித்து மகிழத் தந்த முத்துகள்:

மதுரையம்பதியிலே அவர் ஒரு பெண்ணின் பதியென இருந்தார். கைக்குழந்தையோடு கதியென்று இருந்தார். ஆனால் விதி செய்த சதியென்று நானிருக்க முடியுமா?

அவர் மட்டுமல்ல...நான் சுமந்த தாலியைச் சுமந்து....நான் மகிழ்ந்த மேனியை மகிழ்ந்து....நான் சுமக்க வேண்டிய குழந்தையைச் சுமந்த அந்தப் பெண்ணும் அவள் பெற்ற குழந்தையும் என்னை வணங்கினார்கள்.

பேச்சின்றி எல்லாரும் வியந்த பொழுது பேசியும் வியப்பூட்டினார் அவர்.

இறைவன் கனி கொடுத்த கைகளுக்குப் பணி கொடுப்பேனா! இறைவனை அழைத்த இதழ்களோடு என்னிதழ்களை இழைப்பேனா!

உள்ளமெல்லாம் பாசமும் உடலெல்லாம் நேசமும் அந்தச் சடையன் மீது கொண்ட தூயவராம் புனிதவதியை இந்த மடையன் அணைப்பேனா!

எப்படியோ இல்வாழ்க்கை இல்லாத வாழ்க்கையாகப் போயிற்று.

இப்படி எத்தனையோ எடுத்துக் காட்டலாம். ஒரு முறைக்குப் பல முறை சுவைத்துப் படிக்கச் செய்யும் வல்லமை உங்கள் எழுத்துகளுக்கு உண்டு என்பதைக் காட்டும் பதிவு இந்தப் பதிவு. :-)

said...

// குமரன் (Kumaran) said...
ம்ம்ம். இது. இது தான் இராகவன் உங்கள் வலிமை. (பலம் என்று சொல்லவந்து பின் தயங்கி வலிமை என்றேன். பலம் என்ற வடசொல்லுக்கு வலிமை சரியான தமிழ் தானே?). //

மிக்க நன்றி குமரன். என் மீதிருக்கும் உங்கள் அன்பினால் நிறைய் பாராட்டுகள்.
வலிமை என்ற சொல் சரியே. ஆனால் இந்த இடத்தில் சிறப்பு என்ற சொல் சிறப்பாக இருக்கும் என்று கருதுகிறேன்.

// ஒவ்வொரு சொல்லிலும் பல பொருள்களைக் கண்டு அதனைச் சுவை தர தருவதற்கு நீங்கள் வாரியாரிடம் தான் கற்றுக் கொண்டீர்கள் போலும். வாரியார் அடிப்பொடியே வாழ்க வாழ்க. //

வாரியார் அரும் பெரும் தமிழ்த் திருக்கடல். நான் அந்தக் கடலில் கண் நனைக்கிறவன். :-)

said...

// குமரன் (Kumaran) said...
காரைக்கால் அம்மை புனிதவதியாரின் கதையை அருமையாகவும் புதுமையாகவும் எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள். தாயா தாரமா - தலைப்பைப் பார்த்தவுடன் ஒரு புன்சிரிப்புடனேயே படிக்கத் தொடங்கினேன். பெரியாழ்வாரின் பார்வையையும் கண்ணகியின் பார்வையையும் அழகுடன் புதுமையாக முன்பு சொல்லியிருந்தீர்களே. அது போல் இங்கேயேயும் சொல்லியிருப்பீர்கள் என்று தோன்றியது. அந்த எதிர்பார்ப்பு வீண்போகவில்லை. நன்றி. //

முருகன் அருளால் முடிந்ததைச் செய்தேன் குமரன்.

// தொடக்கத்தில் யார் கதையைச் சொல்கிறீர்கள் என்று புரியவில்லை. கண்ணகியின் கதையோ என்று எண்ணினேன். ஆனால் 'நாட்கள் வாரங்களாகி வாரங்கள் மாதங்களாகி மாதங்களும் ஆண்டுகளாயின.' என்று படித்தவுடன் இது கண்ணகி அம்மையின் கதையில்லை என்று தெரிந்தது. இராம.கி. ஐயா தெளிவாக இலக்கியச் சான்றுகளுடன் கண்ணகியைக் கோவலன் பிரிந்திருந்தது மாதக் கணக்கில் தான்; ஆண்டுக் கணக்கில் இல்லை என்று எழுதியிருந்தாரே. அதனை நீங்கள் படித்துப் பின்னூட்டமும் இட்டிருந்தீர்களே. அதனால் இது கண்ணகி அம்மையின் கதையில்லை என்று தெரிந்தது. //

இன்னாருடைய கதை என்று கடைசி வரைக்கும் தெரியாமல் இருந்தால் சுவைக்காது. நடுவில் தெரிய வேண்டும். அப்புறம் கதைக்குள் ஒன்ற வைக்க வேண்டும். அதற்கு முயற்சித்தேன்.

// 'மதுரையிலே அவர் இருக்கிறார்' என்று படித்தவுடன் இது பிறப்பில்லாப் பெம்மானின் அன்னையின் கதை என்று புரிந்தது. :-) //

ஆம். அதுதான் வெளிப்படையான முதல் குறிப்பு.

// நீங்கள் தேடித் தேடி நாங்கள் ரசித்து மகிழத் தந்த முத்துகள்:

மதுரையம்பதியிலே அவர் ஒரு பெண்ணின் பதியென இருந்தார். கைக்குழந்தையோடு கதியென்று இருந்தார். ஆனால் விதி செய்த சதியென்று நானிருக்க முடியுமா?

அவர் மட்டுமல்ல...நான் சுமந்த தாலியைச் சுமந்து....நான் மகிழ்ந்த மேனியை மகிழ்ந்து....நான் சுமக்க வேண்டிய குழந்தையைச் சுமந்த அந்தப் பெண்ணும் அவள் பெற்ற குழந்தையும் என்னை வணங்கினார்கள்.

பேச்சின்றி எல்லாரும் வியந்த பொழுது பேசியும் வியப்பூட்டினார் அவர்.

இறைவன் கனி கொடுத்த கைகளுக்குப் பணி கொடுப்பேனா! இறைவனை அழைத்த இதழ்களோடு என்னிதழ்களை இழைப்பேனா!

உள்ளமெல்லாம் பாசமும் உடலெல்லாம் நேசமும் அந்தச் சடையன் மீது கொண்ட தூயவராம் புனிதவதியை இந்த மடையன் அணைப்பேனா!

எப்படியோ இல்வாழ்க்கை இல்லாத வாழ்க்கையாகப் போயிற்று.

இப்படி எத்தனையோ எடுத்துக் காட்டலாம். ஒரு முறைக்குப் பல முறை சுவைத்துப் படிக்கச் செய்யும் வல்லமை உங்கள் எழுத்துகளுக்கு உண்டு என்பதைக் காட்டும் பதிவு இந்தப் பதிவு. :-) //

:-) இந்தப் புன்னகையே சரியான மறுமொழி

said...

Sorry for English! I'm from net cafe!!!
I studied the story of karaikal ammaiyar in year 8, but I'm sure that that story is not that much interesting as you said here.
Thanks alot.

said...

// mayooresan மயூரேசன் said...
Sorry for English! I'm from net cafe!!!
I studied the story of karaikal ammaiyar in year 8, but I'm sure that that story is not that much interesting as you said here.
Thanks alot. //

நன்றி மயூரேசன். ஆங்கிலமானால் என்ன தமிழானால் என்ன...படித்ததும் கருத்துச் சொல்ல உந்தியதே....அந்த அன்பு பெரிது.

said...

மாம்பழம் மறைந்ததும், கயிலைக்கு தலையால் நடந்ததும் சேர்க்காமல் விட்டால், மனிதத்தன்மை நிறைந்த பார்வை - காரைக்கால் அம்மையார் என்பவர் மீது! இன்னும் தைரியமாக மனிதத்தன்மை சேர்க்கலாமே!

மாம்பழத்தை அவர் சிவனடியார்க்கு கொடுத்தது புருஷனுக்கு வருத்தம் தருவதையும், கயிலைக்கு தலையால் போனது, உடலால் காணாத இன்பம், தலைக்குள் இருக்கும் கனவால் கண்டார் என்ற மனித இயற்கையையும் சேர்த்து அசத்திப் பாருங்களேன். மனுஷிக்கு தரும் மரியாதையை மாயைக்கு தர வேண்டாமே!

said...

ஜிரா,
இன்று தான் இக்கதையைப் படித்தேன். அருமையாய் எழுதியிருக்கிறீர்கள். தங்கள் தமிழ் படிக்க படிக்க இனித்தது. வரலாற்றுக் கதையையும் அறிந்து கொண்ட மகிழ்ச்சி கிடைத்தது. பாராட்டுகள்.

said...

// Madura said...

மாம்பழம் மறைந்ததும், கயிலைக்கு தலையால் நடந்ததும் சேர்க்காமல் விட்டால், மனிதத்தன்மை நிறைந்த பார்வை - காரைக்கால் அம்மையார் என்பவர் மீது! இன்னும் தைரியமாக மனிதத்தன்மை சேர்க்கலாமே! //

வாங்க மதுரா. தைரியம் தேவையில்லை. சேர்க்க வேண்டுமென்றால் சேர்க்கலாம். மாங்கனி மறையாமல் இருந்திருந்தால் இத்தனையும் நடந்திருக்காதே. மறைவது மட்டும் மாயை என்றால் வருவதும் மாயைதானே. இரண்டையும் விடுத்துச் சொல்வது எங்ஙனம்!

// மாம்பழத்தை அவர் சிவனடியார்க்கு கொடுத்தது புருஷனுக்கு வருத்தம் தருவதையும், கயிலைக்கு தலையால் போனது, உடலால் காணாத இன்பம், தலைக்குள் இருக்கும் கனவால் கண்டார் என்ற மனித இயற்கையையும் சேர்த்து அசத்திப் பாருங்களேன். மனுஷிக்கு தரும் மரியாதையை மாயைக்கு தர வேண்டாமே! //

இல்லை. மாம்பழத்தைச் சிவனடியார்க்குக் கொடுத்தது அவர்தம் கணவர்க்கு எந்த வருத்தத்தையும் கொடுக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் இரண்டாவது வந்த மாங்கனியின் சுவை மாறுபடவே இதென்ன சுவை என வினவினார். உண்மை தெரிந்ததும் அச்சம் கொண்டார். அவ்வளவுதான். கணவன் ஆத்திரம் கொண்டு திட்டியதால் இவர் இப்படிப் போனார் என்று எழுதுவது திரிபாகி விடும்.

said...

// கைப்புள்ள said...

ஜிரா,
இன்று தான் இக்கதையைப் படித்தேன். அருமையாய் எழுதியிருக்கிறீர்கள். தங்கள் தமிழ் படிக்க படிக்க இனித்தது. வரலாற்றுக் கதையையும் அறிந்து கொண்ட மகிழ்ச்சி கிடைத்தது. பாராட்டுகள். //

நன்றி கைப்பு. வரலாற்றுக் கதையும் படிப்பீங்க போலிருக்கு :-)

said...

இதே போன்ற வரலாற்று கதைகளை எளிய தமிழில் எழுதுங்கள் அண்ணா!!
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்!! :-)

said...

ராகவா,
நீங்க அப்போது கதை சொன்ன மென்மையில், என் கோபம் அடங்கிடிச்சி போல! ஆனால் திரும்பப் படிக்கும் போது, அதுவும் பரம தத்தனைக் கூட விட்டு விடுங்கள், அந்தச் சமூகம் அவளை நிராதரவாக விட்ட போது...சுடுகாட்டுக்குள் பெண்களை வராதே-ன்னு சொல்லிட்டு, இந்தப் பச்சிளம் பெண்ணை அங்கே தான் அனுப்பி வச்சிருக்காங்க! :(

கதை மட்டும் அல்லாமல், இன்றும் இந்தக் கதைக்கு உற்சவம் கொண்டாடி, பரம தத்தனைக் கப்பலேற்றி விடுவது-ன்னு எல்லாம் இன்னும் கொண்டாடுறாங்க-ன்னு தெரிஞ்ச போது தான் அறச்சீற்றம் இன்னும் அதிகம் ஆகுது!

இது பற்றிய அண்மைப் பதிவு இதோ:
தேவாரம் பாடிய "ஒரே" பெண் - Icon Poetry!"
http://madhavipanthal.blogspot.com/2008/11/icon-poetry.html

said...

//தாயைக் காண நாயாக முடியுமா என்னால்? பண்பெல்லாம் கற்றவனாயிற்றே நான்.//

அடா அடா அடா! என்ன பண்பு! என்ன பண்பு!

//ஆகையால்தான் அன்னையை நீங்கினேன். மதுரையம்பதிக்கு வந்தேன். வணிகம் செய்தேன். திருமணமும் செய்து குழந்தையும் கொண்டு இறைப்பணியையும் சிறப்பித்து வருகிறேன்//

அருமையான இறைப்பணி செய்யறீங்க மிஸ்டர் பரம தத்தன்!

//இப்பொழுது சொல்லுங்கள். நான் செய்தது தவறா? பிழையா//

பிழையா? அருள் மழை-ன்னு சொல்லுங்க!

சரிங்க, ஒன்னே ஒன்னு கேக்குறேன்!
அன்னை, அன்னை-ன்னு சொல்லுறீங்க! இறைவன் அருள் பெற்றவள், அதனால் அம்மா-ன்னு சொல்லிட்டீங்க!

அம்மாவைப் புள்ளை காப்பாற்றி இருக்கலாமே? மதுரை-ல வணிகம் செஞ்சவரு, அம்மாவைக் காப்பாற்ற வழி வகை செய்திருக்கலாமே! வீட்டை விட்டு கோச்சிக்கிட்டு ஓடிப் போன புள்ளை கூட, மொத சம்பளம் வாங்கும் போது அம்மாவை நினைக்குமே!

சரி, அம்மாவை நேர்-ல பாத்த பிறகாவாது, அம்மாவைக் காப்பாற்றி இருக்கலாமே! அம்மாவைப் பேயா அலைய வுட்டிருக்க வேணாமே! என்ன மிஸ்டர் பரம தத்தன்? பேச்சே காணோம்?

உண்மை என்னான்னா
நீங்க அம்மா-ன்னு சொன்னீங்களே தவிர, அம்மாவாகவும் பார்க்கலை! அதான் சோகம்! :(