Thursday, August 03, 2006

2. சுசீலாவை ஜானகி ஏன் அறைந்தார்?

பிரபல திரையிசைப் பாடகி பி.சுசீலா பாடத் தொடங்குகிறார் என்ற பரபரப்பில் பக்கத்தில் உட்கார்ந்திருந்தவர் யாரென்று கவனிக்கவில்லை. பாப்கார்னும் கட்லெட்டும் மணமணக்கத் திரும்பிப் பார்த்தால் நமது மயிலார். என்னைக் கண்டு கொள்ளவேயில்லை. நிகழ்ச்சியில் மூழ்கியிருந்தார். நானும் கவனத்தை மேடையின் பக்கம் திருப்பினேன்.

நிகழ்ச்சியைத் துவக்கும் பாடல் அல்லவா. பிரம்மலோகத்துக் கலைவாணியை வாழ்த்திச் சென்னைக் கலைவாணி தேன் தமிழ்ச் சொல்லெடுத்துப் பாடிய பாடல். "மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி! தேன் தமிழ்ச் சொல்லெடுத்துப் பாட வந்தேன் அம்மா! பாட வந்தேன்! அம்மா பாட வந்தேன்!"

இந்தப் பாடல் திரைப்பாடல் அல்ல. பக்தியிசைப் பாடல். சோமு-காஜா என்ற இரட்டை இசையமைப்பாளர்கள் இசையில் வெளிவந்த இனிய பாடல்களின் தொகுப்பிலுள்ள பாடல். எல்லாப் பாடல்களுமே இனியவை.

(பக்திப் பாடல் என்பதால் மயிலார் கொஞ்சம் ஓவர் உணர்ச்சிவசப்பட்டிருந்தார். பாப்கார்ன்களை நான் எடுத்ததைக் கூட அவர் கவனிக்கவில்லை.)

எழுபது வயதைக் கடந்த சுசீலா அவர்களின் குரலில் சற்று அயர்வு இருந்தது உண்மைதான். ஆனால் இனிமையும் திறமையும் வளமையும் சிறிதும் குறையவில்லை. பாடலில் வரும் வீணையொலி இனிதா! சுசீலா அவர்களின் குரலொலி இனிதா! ஒன்றுக்கொன்று சரியான இணை.

முதல் பாடலை முடித்ததும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த கூட்டம் கைதட்டி ஆரவாரித்தது. (மயிலார் தோகை விரித்தாடினார்.) அடுத்த பாடலை ஜானகி அவர்கள் பாடுவார்கள் என நினைத்தேன். ஆனால் அடுத்த பாடலும் சுசீலா அவர்களே பாடினார்கள்.

தமிழில் புதுக்கவிதையைக் கொண்டு வந்தவர் பாரதி என்றால், அவருக்குப் பிறகு மெருகேற்றிச் சிறப்பித்தவர் பாரதிதாசன். அவருடைய கவிதை ஒன்றைத்தான் அடுத்து பாடினார். "தமிழுக்கும் அமுதென்று பேர்! அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! உயிருக்கு நேர்!"

மெல்லிசை மன்னரின் இனிய இசையில் வந்த சுவை மிகுந்த பாடல். தன்னுடைய தாய்மொழி தெலுங்காக இருந்தாலும் தமிழும் தெலுங்கும் தனது இரு கண்கள் என்று கூறிய பாடகி அல்லவா.....ஆகையால் உணர்வு ததும்பப் பாடினார்கள். "தமிழ் எங்கள் அசதிக்கு" என்று பாடுகையில் குரலில் உண்மையிலேயே அசதி தெரிந்தது. அது வயதினாலா? இல்லை பாவத்தினாலா? ஆனால் "அசதிக்குச் சுடர் தந்த தேன்" என்று பாடுகையில் அந்த அசதியெல்லாம் போய் சுடர் எழுந்து அதை உணர்த்த அவருடைய கையும் எழுந்தது. பாடுகின்றவருக்குப் பாட்டு புரிந்தால்தானே இதெல்லாம் நடக்கும்!

பழைய பாடலானாலும் மக்கள் ரசித்து ருசித்தனர் என்பது அவர்களின் கைதட்டலொலியிலிருந்தே தெரிந்தது. இரண்டு இனிய பாடல்களை சுசீலா அவர்கள் பாடி முடித்ததும் பாட வந்தார் ஜானகி அவர்கள். அவரது முதல் பாடல் என்னவாக இருக்கும் என்பது எல்லாருடைய ஆவல். எனக்கும்தான். சிங்கார வேலனே தேவா பாடல் அவருக்குப் பெயரும் புகழும் பெற்றுத்தந்த பாடல். அந்தப் பாடலையோ அல்லது அதுபோன்ற வேறு பாடலையோ பாடுவார் என நினைத்தேன்.

ஆனால் பாடல் துவங்கியது. முதலில் இசைக்கருவிகள் இசைந்தன. கேட்டதுமே இளையராஜா இசை என்று தெரிந்து விட்டது. தெரிந்த பாடல் போல இருந்தது. "மாமனுக்குப் பரமக்குடி" பாட்டு மாதிரி இருந்தது. இதையா பாடப் போகிறார் என்று நினைக்கும் பொழுதே பாட்டு தெரிந்து போனது. ஜானகி அவர்களின் குரலும் எழுந்தது. "நான் வணங்குகிறேன்! இசையிலே தமிழிலே! நான் பாடும் பாடல் தேனானது! ரசிகனை அறிவேன்!" குரு படத்தில் இருந்து இந்தப் பாடல். எனக்கு மிகவும் பிடித்த பாடல். பாடலை நானும் ரசித்தேன். (மயிலார் காலை மாற்றி மாற்றி வைத்து ஆடிக் கொண்டிருந்தார். அவர் மறைக்கிறார் என்று ஒருவர் கூட குற்றம் சொல்லவில்லை.)

அடுத்து ஒரு இனிய பாடல். மிகவும் இனிய பாடல். பாட்டு தொடங்கும் பொழுதே எல்லாருக்கும் பாட்டு தெரிந்து ஒரு துள்ளலும் மகிழ்ச்சியும் எல்லாரையும் பற்றிக் கொண்டது. ஜானகியின் குரல் தொடங்கியதுமே பாட்டுக்குள் எல்லாரும் மூழ்கி விட்டார்கள். ஆமாம். "சின்னச் சின்ன வண்ணக் குயில்...கொஞ்சிக் கொஞ்சி கூவுதம்மா" என்று ஜானகி அவர்கள் குரலால் கொஞ்சும் பொழுது யார்தான் மயங்காமல் இருக்க முடியும்! பின்னணி இசையும் மிகச் சிறப்பாக இசைக்குழுவினர் செய்தார்கள்.

அடுத்து பி.சுசீலா வந்தார். ஜானகி உருவாக்கி வைத்திருந்த உணர்விலிருந்து மக்களை தன்னுடைய குரலுக்கு இழுக்க வேண்டும். என்ன பாட்டை தேர்ந்தெடுப்பார் என்று நினைக்கிறீர்கள்? அது ஒரு அழகிய இனிய பாடல். தூங்குகிறவர்களைக் கூட தென்றலாக வருடி எழுப்பும் பாடல். இசைஞானியின் இசையில் வெளிவந்த அதியற்புதமான பாடல். "காலைத் தென்றல் பாடி வரும் ராகம் புது ராகம்" சுசீலாவின் குரலில் வெளி வந்தது. வைரமுத்து எழுதிய ஒரு அழகிய கவிதை. உயர்ந்த உள்ளம் என்ற படத்தில் இடம் பெற்ற பாடல். கூட்டம் சொக்கிப் போனது.

இப்படி எல்லாரையும் தென்றலாய் வருடிய பாடல் முடிந்ததும்...அடுத்த பாட்டு....சற்றுத் துள்ளலாக. இந்தப் பாட்டு இசை தொடங்கும் போதும் உடனே எல்லாருக்கும் தெரிந்து விட்டது. மெல்லிசை மன்னரின் இசையில் கவியரசர் இயற்றிய மிகப் பிரபலமான பாடல். "பார்த்த ஞாபகம் இல்லையோ! பருவ நாடகம் தொல்லையோ!" தென்றலைக் காட்டிய குரலில் இப்பொழுது உற்சாகமும் மகிழ்ச்சியும் கொப்பளித்தன. எப்படித்தான் அடுத்தடுத்து வெவ்வேறு பாவத்தை படக்கென்று கொண்டு வந்துவிடுகிறார்களோ! அதுவும் இவ்வளவு திறமையுள்ள பாடகிகளுக்கு சொல்லித் தரவா வேண்டும்?

(நல்லவேளையாக மயிலார் என்னைத் தொந்தரவு செய்யவேயில்லை. வழக்கமாக வெளியில் போனால் அது இது என்று தொந்தரவு செய்வார். ஆனால் இன்று ஒன்றும் கண்டுகொள்ளவேயில்லை)

அடுத்தது ஜானகியின் வரிசை. பாடி முடித்து விட்டு சிரமப் பரிகாரம் செய்வதற்காக உள்ளே சென்றார் பி.சுசீலா. படியில் ஏறுகையிலும் இறங்குகையிலும் சற்றுப் பிடிமானம் அவருக்குத் தேவைப்பட்டது. ஆனால் பாடுவதற்கு அவருக்கு எந்தப் பிடிமானமும் தேவையிருக்கவில்லை.

அலைகள் ஓய்வதில்லை படத்தில் "புத்தம் புதுக்காலை" என்ற பாடல். படத்தில் இல்லை. ஆனால் இசைத்தட்டுகளில் உண்டு. அந்தப் பாட்டைத்தான் அடுத்து பாடினார் ஜானகி. அதனைத் தொடர்ந்து நீங்கள் கேட்டவை படத்தில் வரும் "கண்ணன் வந்து பாடுகிறான்" என்ற பாடல். இரண்டும் மெல்லிசையில் மனதைக் கவர்ந்தனர்.

ஆளுக்கு இரண்டு பாடல்களாகப் பாடி வருகையில் சுசீலா அவர்களின் வரிசையில் அடுத்த பாடல் "தேடினேன் வந்தது!" மீண்டும் அரங்கத்தில் ஒரு துள்ளல். இந்தப் பாடலை சுசீலா பாடி முடித்ததும் ஜானகி எழுந்து வந்து சுசீலா அவர்களின் கன்னத்தில் பளார் என்று அறைந்தார். ஏன்?

தொடரும்....

38 comments:

said...

ராகவன்,
எப்படி இந்த தொடரை கவனிக்காமல் விட்டேன்? அருமையாக வர்ணனை கொடுக்கிறீர்கள் .நீங்களும் என்னைப் போல சுசீலா ரசிகரா ? மிக்க மகிழ்ச்சி!

said...

ஐய்யோ இது என்ன சஸ்பென்ஸ்?டிபிஆர்ஜோ கிட்டே ட்யூஷனா?:-)

said...

oru nalla isaip payanatthula kuttittu poi
didirnu ippadi mudichuttu thodarumnu vera pottutinga
ennadanga nadandhadu

said...

என்ன ராகவன் கதையா? அங்கே மாயவரத்தான் கைது என்றொருவர் கதைக்கிறார் இங்கே சுசீலாவை அறைந்தார் ஜானகி என்கிறீர்.

said...

:-)

said...

ஏன்? ஏன் அறைந்தார்?

said...

// ஜோ / Joe said...
ராகவன்,
எப்படி இந்த தொடரை கவனிக்காமல் விட்டேன்? அருமையாக வர்ணனை கொடுக்கிறீர்கள் .நீங்களும் என்னைப் போல சுசீலா ரசிகரா ? மிக்க மகிழ்ச்சி! //

அப்பாடி இப்பவாவது கவனிச்சிட்டீங்களே :-)

நீங்களும் நம்ம கூட்டணிதானா...கையக் குடுங்க...

said...

ஜிரா,

டி.பி.ஆர். லீவு வாங்கிட்டுப் போகும் போது உங்க கிட்ட ஹேண்ட் ஓவர் பண்ணிட்டாரா இந்த மெகா சீரியல் பணியை.

பாட்டு எல்லாம் படிக்கும் போது கேட்க ஆசையாய் இருக்கே. அங்கங்கே சுட்டி தெளியுங்களேன். இல்லை அதுக்கு பாபா லீவுல போகணுமா?

செல்லமா தட்டிக் குடுத்ததைத்தானே இப்படி அபாண்டமா அறைந்ததா சொல்லறீங்க?

said...

ஏன் ஏன் ஏன்.....

said...

// துளசி கோபால் said...
ஐய்யோ இது என்ன சஸ்பென்ஸ்?டிபிஆர்ஜோ கிட்டே ட்யூஷனா?:-) //

என்ன டீச்சர் இப்பிடிச் சொல்லீடீங்க. அவரு எங்க...நான் எங்க...அவரு பளபள சாத்துக்குடி....நான் எலந்தப்பழம்.

said...

உங்களோட வர்ணனை அருமைங்க. எதோ நேர்ல பாத்த மாதிரி இருந்தது.
உங்க மயிலார் ரொம்ப சேட்டைகாரரா இருப்பாரு போலிருக்கே?

பயங்கர சஸ்பென்ஸ்ல முடிச்சிருக்கீங்க?

said...

ராகவா!
சாவித்திரி சரோஜாதேவியை;அறைந்தது. விஜயகாந் தன் உதவியாளரை அறைந்தது; படித்துள்ளேன். ஜானகி பாட்டுக் கேட்டுள்ளேன், அறை கேள்விப்படவில்லை.
கெதியில சொல்லுங்கோ!
யோகன் பாரிஸ்

said...

தொடர் நல்லா இருக்கு.

// பாப்கார்னும் கட்லெட்டும் மணமணக்கத் திரும்பிப் பார்த்தால் நமது மயிலார்.//

இதைப் பார்த்ததும் தான் சிரிப்பாயிருக்கு.

திருவிழாக் காலங்களில் மட்டும் 'சப்பும்' ஒரு பண்டம் இது. அதிலும் பட்டாணி, சுண்டல் கடலைக்குச் சற்று இளக்காரமாகக் (மலிவும் கூட) கருதப்படும் சோளம் பொரி தான் இந்தப் "பாப்கார்ண்". இப்ப அது வெளிநாட்டார் பாணியில் அறிமுகமானதும், அது ஒரு தராதரம் சொல்லும் பண்டமாகி விட்டது. வாழ்க நம் பழக்கங்கள்.
கடலையைப் பார்த்து இப்ப சோளம்பொரி சிரிக்குது !!!!!!.

"யாரும் இருக்கும் இடத்தில் இருந்து விட்டால் எல்லாம் செளக்கியமே"
- கண்ணதாசன் வாழ்க.

said...

நண்பரே,

திரையில் இந்தப் பாடல் முடிந்ததும் சிவாஜி கணேசன், கே.ஆர்.விஜயாவை அறைவதான காட்சி.

மேடைக் கச்சேரியில் அதனைக் கொண்டுவரவேண்டும் என்பதால் சுசீலா அம்மையாரை அறைந்திருக்கலாம்.

அன்புடன்
ஆசாத்

said...

// அனிதா பவன்குமார் said...
oru nalla isaip payanatthula kuttittu poi
didirnu ippadi mudichuttu thodarumnu vera pottutinga
ennadanga nadandhadu //

என்ன செய்வது அனிதா. அடுத்த பதிவில் தெரிந்து விடுமே!

said...

// நன்மனம் said...
:-) //

தெய்வீகப் புன்னகையா! ம்ம்ம்.. :-)


// சிவமுருகன் said...
ஏன்? ஏன் அறைந்தார்? //

அது வந்து....அது வந்து....அது வந்து....அடுத்த பதிவுல சொல்றேனே!

said...

// ENNAR said...
என்ன ராகவன் கதையா? அங்கே மாயவரத்தான் கைது என்றொருவர் கதைக்கிறார் இங்கே சுசீலாவை அறைந்தார் ஜானகி என்கிறீர். //

கதையா! கண்ணால் கண்டது....அதைத்தான் சொன்னேன்.

said...

// இலவசக்கொத்தனார் said...
ஜிரா,

டி.பி.ஆர். லீவு வாங்கிட்டுப் போகும் போது உங்க கிட்ட ஹேண்ட் ஓவர் பண்ணிட்டாரா இந்த மெகா சீரியல் பணியை. //

இதத்தான் கொத்சு டீச்சரும் கேக்குறாங்க. ஆனா தெரியலையே! அவரு சொல்லிக் கொடுத்திருந்தா இன்னமும் நல்லா எழுதியிருக்க மாட்டேனா!

// பாட்டு எல்லாம் படிக்கும் போது கேட்க ஆசையாய் இருக்கே. அங்கங்கே சுட்டி தெளியுங்களேன். இல்லை அதுக்கு பாபா லீவுல போகணுமா? //

சுட்டியா? சுசீலாம்மா பாட்டுகளுக்கெல்லாம் குடுக்குறேன். ஜானகியம்மா பாட்டுக்கு யாராவது குடுக்கனும்.

// செல்லமா தட்டிக் குடுத்ததைத்தானே இப்படி அபாண்டமா அறைந்ததா சொல்லறீங்க? //

இல்ல இல்ல இல்ல...நான் பொய் சொல்லல. பொய் சொல்லல.

said...

// செந்தழல் ரவி said...
ஏன் ஏன் ஏன்..... //

அப்பா...எனக்கு இந்தப் பின்னூட்டம் புரிஞ்சிருச்சு ரவி. :-)

ஏன் என்ற கேள்வி கேட்காமல் இங்கு பதிவு இல்லை. :-) அடுத்த பதிவு ப்ளீஸ்.

said...

// கைப்புள்ள said...
உங்களோட வர்ணனை அருமைங்க. //

நன்றி கைப்புள்ள. உங்களமான பிரபலங்கள் பாராட்டும் போது மகிழ்ச்சியா இருக்கு.

// எதோ நேர்ல பாத்த மாதிரி இருந்தது.
உங்க மயிலார் ரொம்ப சேட்டைகாரரா இருப்பாரு போலிருக்கே? //

அவரு சேட்ட பெருஞ் சேட்டைங்க. சில பழைய பதிவுகளப் படிங்க..அவர் செஞ்ச வம்புகள் தெரிய வரும்.

// பயங்கர சஸ்பென்ஸ்ல முடிச்சிருக்கீங்க? //

அப்படீங்குறீங்க...அடுத்த பதிவுல அதச் சொல்லீரலாம்.

said...

தலைப்பைப் பாத்துட்டுப் பதறிப் போய் ஓடியாந்தேன்.

என்னப்பா இப்படி சொல்லிப்புட்ட?

ஏன்? ஏன்? ஏன்?

said...

யப்பா. என்ன ஆச்சு? தலைப்பைப் பாத்துட்டுப் பதறிப் போய் ஓடியாந்தேன்.

ஏனாம்?

said...

// paarvai said...
ராகவா!
சாவித்திரி சரோஜாதேவியை;அறைந்தது. விஜயகாந் தன் உதவியாளரை அறைந்தது; படித்துள்ளேன். ஜானகி பாட்டுக் கேட்டுள்ளேன், அறை கேள்விப்படவில்லை.
கெதியில சொல்லுங்கோ!
யோகன் பாரிஸ் //


ஓ சாவித்திரி சரோஜாதேவியை அறைஞ்சிருக்காங்களா! எப்போ? எதுக்கு? அதுக்கு ஒரு பதிவு போடக் கூடாதா? நீங்க அதச் சொன்னீங்கன்னா நான் இதச் சொல்வேனாம்.

said...

// ஜெயபால் said...
தொடர் நல்லா இருக்கு. //

நன்றி ஜெயபால்

// // பாப்கார்னும் கட்லெட்டும் மணமணக்கத் திரும்பிப் பார்த்தால் நமது மயிலார்.//

இதைப் பார்த்ததும் தான் சிரிப்பாயிருக்கு.

திருவிழாக் காலங்களில் மட்டும் 'சப்பும்' ஒரு பண்டம் இது. அதிலும் பட்டாணி, சுண்டல் கடலைக்குச் சற்று இளக்காரமாகக் (மலிவும் கூட) கருதப்படும் சோளம் பொரி தான் இந்தப் "பாப்கார்ண்". இப்ப அது வெளிநாட்டார் பாணியில் அறிமுகமானதும், அது ஒரு தராதரம் சொல்லும் பண்டமாகி விட்டது. வாழ்க நம் பழக்கங்கள்.
கடலையைப் பார்த்து இப்ப சோளம்பொரி சிரிக்குது !!!!!!.

"யாரும் இருக்கும் இடத்தில் இருந்து விட்டால் எல்லாம் செளக்கியமே"
- கண்ணதாசன் வாழ்க. //

:-)))))) ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும். வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும். இது எவ்வளவு உண்மையாயிருச்சு பாத்தீங்களா!

said...

// ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும்.
வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்//

எழுதும் போது இந்தப் பொன்மொழியும்
ஞாபகம் வந்தது, அதிகம் எழுதி அறுக்க வேண்டாம் என்று விட்டு விட்டேன். இப்பொழுது நீங்களே சொல்லிவிட்டீர்கள்.
நன்றி.

said...

----நீங்கள் கேட்டவை படத்தில் வரும் "கண்ணன் வந்து பாடுகிறான்"----

ரெட்டை வால் குருவியில் ராதிகா கூட ஒரு பாட்டு இதே மாதிரி பாடுவாரே... இல்லை அந்தப் பாட்டுதானா??

said...

நம்பியார் கூட சரோஜாதேவியிடமிருந்து வாங்கிக் கட்டி கொண்டதாக படித்திருக்கிறேன். ஐயப்பன் பக்தரை தார் பூசும் கிசுகிசுவா/உண்மைச் சம்பவமா என்பதை சரோஜா தேவி சொன்னால்தான் தெரிய வரும்.

said...

அத்தனையும் தேன் சிந்தும் பாடல்கள்!
கேட்ட நீங்கள் புண்ணியசாலி!
நாங்கள், படிக்கும் நாங்கள்,.... அதைவிட!
அடுத்தது எங்கே!?

said...

சுசீலாவை ஜானகி அறைந்தாரா......? நான் மயங்கும் வகையில் பாடும் சுசீலாவையா?

...ஸர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்........ ...ஸர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்........ ...ஸர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...........ஸர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்........

...ஸர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்........ ...ஸர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்........ ...ஸர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...........ஸர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்........


...ஸர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்........ ...ஸர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்........ ...ஸர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...........ஸர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்........

...ஸர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்........ ...ஸர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்........ ...ஸர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...........ஸர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்........


(அரிவாள் தீட்டும் சத்தம்)

said...

இராகவன்,
தலைப்பைப் பார்த்ததும் நம்பமுடியாமல் ஆச்சரியத்துடன் ஓடி வந்தேன். ஆனால் கடைசியிலை சங்கதியைச் சொல்லாமல் காக்க வைத்து விட்டீர்களே!
நிற்க. பல இரவுகளில் சுசீலா அம்மையாரின் பாடல்களைக் கேட்டுக் கொண்டுதான் துயில் கொள்ளச் செல்வது வழக்கம். என்னே பாடகி! பாவம் அறிந்து ஒவ்வொரு பாடலையும் பாடியுள்ளார். உண்மையில் கவியரசரின் பல பாடல்களுக்கு உயிர் கொடுத்தவர்.

said...

இதெல்லாம் உங்க கனவா, ஜி.ரா ;)

said...

பாபா (அதாங்க பாஸ்டன் பாலா), நீங்க சொல்றது ரொம்பச் சரி. கண்ணன் வந்து பாடுகிறான் பாட்டு ரெட்டை வால் குருவிதான். நான் தப்பாச் சொல்லீட்டேன். சரியான சமயத்துல எடுத்துக்காட்டியமைக்கு மிக்க நன்றி.

ம்யூஸ், அருவாளத் தீட்ட வேண்டாம். கொஞ்சம் அமைதி. அமைதி. அமைதி.

வெங்கட், இது கனவான்னா கேக்குறீங்க? கனவு மாதிரிதான் இருந்தது. ஆனால் உண்மை.

ஏன் அறைந்தார் என்று தெரிந்து கொள்ள இந்தச் சுட்டிக்குப் போங்க. என்னால் இணைப்புக் கொடுக்க முடியவில்லை. ஏதோ பிரச்சனை. யாராவது குடுத்து விடுங்கள்.
http://gragavan.blogspot.com/2006/08/3.html

said...

// SK said...
அத்தனையும் தேன் சிந்தும் பாடல்கள்!
கேட்ட நீங்கள் புண்ணியசாலி!
நாங்கள், படிக்கும் நாங்கள்,.... அதைவிட!
அடுத்தது எங்கே!? //

http://gragavan.blogspot.com/2006/08/3.html
இங்கே இருக்கிறது SK. யாராவது தமிழ்மணத்தில் இணைத்து விடுங்கள்.

said...

// சுந்தர் said...
தலைப்பைப் பாத்துட்டுப் பதறிப் போய் ஓடியாந்தேன்.

என்னப்பா இப்படி சொல்லிப்புட்ட?

ஏன்? ஏன்? ஏன்? //

சுந்தர் பதறாதீங்க. இங்க போய்ப் பாருங்க.
http://gragavan.blogspot.com/2006/08/3.html

said...

// வெற்றி said...
இராகவன்,
தலைப்பைப் பார்த்ததும் நம்பமுடியாமல் ஆச்சரியத்துடன் ஓடி வந்தேன். ஆனால் கடைசியிலை சங்கதியைச் சொல்லாமல் காக்க வைத்து விட்டீர்களே!
நிற்க. பல இரவுகளில் சுசீலா அம்மையாரின் பாடல்களைக் கேட்டுக் கொண்டுதான் துயில் கொள்ளச் செல்வது வழக்கம். என்னே பாடகி! பாவம் அறிந்து ஒவ்வொரு பாடலையும் பாடியுள்ளார். உண்மையில் கவியரசரின் பல பாடல்களுக்கு உயிர் கொடுத்தவர். //

உண்மைதான் வெற்றி. இந்த இனிய குரலும் தூய உச்சரிப்பும் எளிய பாவமும் பல சமயங்களில் ஆத்திரத்தைப் போக்கியிருக்கிறது. துன்பங்களை நீக்கியிருக்கிறது. இன்பத்தை சேர்த்திருக்கிறது. இன்னும் பலப்பல வகையில் நல்லதைச் செய்திருக்கிறது. பக்திப் பாடலா, தாலாட்டுப் பாடலா, காதல் பாடலா, என்ன பாடலாக இருந்தாலும் சிறப்பித்து பாடிய பாடகி அவர். அவருக்கு இணை அவர்தான்.

said...

உண்மை தெரியும் வரை மண்டை வெடிச்சிடும் போல இருக்குதே, சிக்கிரமா அடுத்த படையலை அனுப்புங்க

said...

//நன்றி கைப்புள்ள. உங்களமான பிரபலங்கள் பாராட்டும் போது மகிழ்ச்சியா இருக்கு.//

தாங்கள் என் மீது வைத்திருக்கும் மதிப்பிற்கு மிக்க நன்றி ஆனாலும் என்றும் ஒரு மாணவனாய் புதியவற்றைக் கேட்பதையும் கற்பதையுமே பெருமையாக நினைக்கிறேன்.

சரி..."உங்களமான" அப்படின்னா "உங்களைப் போன்ற" என்ற பொருளில் சொன்னது தானே...இதுவும் தெக்கத்தி மாவட்டங்களின் வழக்கு மொழியா?

said...

பி.சுசீலா, எஸ். ஜானகி கச்சேரி, உண்மையிலேயே கொடுத்துவைத்திருக்கவேண்டும்.

எப்படியோ ராகவனின் வர்ணனை நேரடியாக கேட்பது போலவே சுகமாக இருந்தது.

மயிலாரும் அமைதியாக இருந்து பார்த்ததும் ஒரு சந்தோசம்.