"இந்தாம்மா காஃபி." கோப்பையை சந்தியாவிடம் நீட்டினார் சிவகாமி. மடியில் சுந்தரை வைத்திருந்த சந்தியா ஒற்றைக் கையால் கோப்பையை வாங்கினாள். காஃபியைச் சிறிது உறிஞ்சியவள்..."அப்பா எப்ப வர்ராங்களாம்? அரவிந்துக்கு இப்ப எப்படி இருக்காம்?"
மெத்துமெத்தான அந்தக் கருப்பு ரெக்சின் சோஃபாவில் சந்தியாவின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு சுந்தரை வாங்கினார் சிவகாமி. "இப்பத் தாவலையாம். அப்பா நாளைக்கு காலைல கெளம்பி வர்ராங்க. வாணி மதியம் ஃபோன் பண்ணீருந்தப்போ சொன்னா. கண்ணனும் புதுக் கார் பதிஞ்சிருக்கானாம்."
யார் இந்த அரவிந்த், வாணி, கண்ணன் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. சரி. ஒவ்வொருவராக அறிமுகப்படுத்துகிறேன்.
சுந்தரராஜன் - சிவகாமியின் கணவர் - ஓய்வு பெற்ற அரசு உயரதிகாரி
கண்ணன் - சந்தியாவின் தம்பி. ஒன்றரை வயது சிறியவன். அயல்நாட்டுத் தூதரகத்தில் பணிபுரிகிறான்.
வாணி - கண்ணனின் மனைவி. திநகரில் கணவனோடு வசிக்கிறாள். இடுப்பெலும்பு அறுவை சிகிச்சை செய்த இவளது தாயும் கடந்த மூன்று மாதங்களாக இவர்களுடன் இருக்கிறார். அவரது பெயர் ராஜம்மாள். இட்டிலிப் பிரியர்.
அரவிந்த் - வாணிக்கும் கண்ணனுக்கும் பிறந்த மகன்
சுடச்சுட இறக்கி வைத்த இட்டிலியை வெறும் கையால் பிசைந்து விட்டான் குழந்தை அரவிந்த். உள்ளங்கை சிவந்து காய்ச்சல் வேறு வந்து விட்டது. அதனால் அங்கு துணைக்கும் உதவிக்கும் சுந்தர்ராஜன் சென்றிருந்தார். அரவிந்துக்குச் சரியானதையும் சுந்தரராஜன் வருவதையும் மதியம் வாணி அத்தையைத் தொலைபேசியில் அழைத்துச் சொல்லியிருக்கிறாள். அத்தோடு கண்ணன் புதிதாக கார் வாங்கப் போவதையும் சொல்லியிருக்கிறாள். இப்பொழுது பாத்திரங்கள் யார்யாரென்று உங்களுக்குப் புரிந்திருக்குமே! கதைக்குப் போவோமா?
காஃபியைக் குடித்து முடித்திருந்தாள் சந்தியா. "என்ன காராம்? ஏற்கனவே இருக்குற சாண்ட்ரோவ என்ன செய்யப் போறானாம்?"
"எனக்கு அதெல்லாம் தெரியாது. என்னவோ பேர் சொன்னா வாணி. சரியாக் கேட்டுக்கலை. சுந்தர் எப்படியிருக்கான்னு கேட்டா. சனிக்கிழமை வர்ரேன்னு சொன்னா. சம்மந்தியம்மாவும் அங்க இருக்குறதால....பாவம்...எங்கயும் நகர முடியலையாம். ஏற்கனவே அவங்க இடுப்பு ஆப்பரேஷன் செஞ்சவங்க. ஒரு வேலையும் செய்ய முடியாது. அரவிந்த் வேற துறுதுறுப்பா இருக்கான். இவங்களால சமாளிக்க முடியலையாம்." சுந்தரைச் சந்தியாவின் கைகளில் கொடுத்து விட்டு காஃபி கோப்பையோடு அடுக்களைக்குள் நுழைந்தார் சிவகாமி.
தம்பி புதுக்கார் வாங்கப் போவதை நினைத்து மகிழ்ச்சிதான் சந்தியாவுக்கு. அதிலும் இரண்டாவது கார். சந்தியாவைக் கூப்பிட்டுச் சொல்லியிருக்கலாம்தான். ஆனால் அது இப்போதைக்கு நடக்காது. பின்னே ஒன்றரை வருடங்களுக்கு முன்னால் நடந்த அந்தச் சண்டை. ம்ம்ம்ம்....
அப்பொழுது அரவிந்த் மூன்றுமாதக் கைக்குழந்தை. வாணி குழந்தையோடு மதுரையில் தாய் வீட்டில் இருந்தாள். பெசண்ட் நகர் அப்பார்ட்மெண்ட்டை சந்தியா வாங்கி ஓராண்டுதான் ஆயிருந்தது. அப்பார்ட்மெண்ட் சந்தியாவின் பெயரில் இருந்தாலும் அங்கு மனைவியோடு இருப்பது கண்ணனுக்கு உறுத்தலாக இருக்கவில்லை. மகிழ்ச்சியாகத்தான் இருந்தார்கள்.
ஒருநாள் இரவுச் சாப்பாட்டில்தான் அந்தப் பேச்சு தொடங்கியது. சிவகாமி அனைவருக்கும் தட்டில் போட்டு விட்டு தானும் போட்டுக் கொண்டு உட்கார்ந்தார்.
"அப்பா, நான் ஒரு முடிவெடுத்திருக்கேன். அத உங்க எல்லார் கிட்டயும் சொல்லலாம்னு நெனைக்கிறேன்." பாதிச் சாப்பாட்டில் சந்தியா பேச்சைத் தொடங்கினாள்.
எல்லாரும் சாப்பாட்டை மறந்து சந்தியாவையே ஆர்வத்தோடு பார்த்தார்கள். என்ன முடிவு எடுத்திருக்கிறாளோ என்று.
"கொழந்தை பெத்துக்கலாம்னு இருக்கேம்ப்பா."
மற்ற மூவருக்கும் ஒரு நொடி ஒன்றும் புரியவில்லை. சுந்தரராஜன் சுதாரித்துக் கொண்டு முதலில் கேட்டார். "என்னம்மா சொல்ற? கல்யாணமே செஞ்சுக்காம கொழந்த பெத்துக்கப் போறியா?"
"ஆமாம்பா! எனக்கு ஒரு கொழந்தை வேணும்னு தோணுது. அதான் இந்த முடிவு. தப்பாப்பா?"
தட்டில் சாப்பாடு காய்வது கூடத் தெரியாமல் சிவகாமியும் கண்ணனும் ஒருவித கலக்கத்தோடு அவர்கள் உரையாடலை கவனித்துக் கொண்டிருந்தார்கள்.
"இதுதான் தப்பு இதுதான் சரின்னு எதையும் உறுதியாச் சொல்ல முடியாதும்மா. ஆனா இப்படி ஒரு முடிவு எடுத்தா அதோட பின்விளைவுகளையும் யோசிச்சுப் பாக்கனும். பாத்தியா?"
"நல்லா யோசிச்சுப் பாத்தேம்ப்பா. அதுக்கப்புறந்தான் இந்த முடிவுக்கு வந்திருக்கேன். இதுல எனக்குக் கெட்ட பேர் கூட வரலாம். ஆனா உங்க துணை இருந்தா எல்லாத்தையும் தாண்டி வருவேம்ப்பா."
இனம்புரியாத ஒரு உணர்ச்சியில் பெருமூச்சு விட்டார் சுந்தரராஜன். "கெட்ட பேர் ஒனக்கு மட்டும் வராதும்மா. எங்களுக்கும் சேத்துதான் வரும். ஏற்கனவே உனக்குக் கல்யாணம் செய்யாம வெச்சிருக்கோம்னு ஒவ்வொருத்தரும் பேசுறாங்க. உனக்கு முடிக்காம கண்ணனுக்கு முடிக்கும் போது நல்ல வேளையா பெரிய சலசலப்பு எதுவும் வரலை. ஆனா குழந்தை பெத்துக்குறதுங்குறது...."
"என்னப்பா? நீங்களாப்பா இப்படிப் பேசுறீங்க? அவங்கவங்க முடிவை அவங்கவங்க சரியா எடுக்கக் கத்துக்குடுத்ததே நீங்கதானப்பா. அப்படியிருக்குறப்போ இப்பத் தயங்குறீங்களேப்பா?"
"சந்தியா என்னது இது? பைத்தியக்காரத்தனமா இருக்கு. இப்படி ஒரு முடிவு எடுத்துக்கிட்டு அதுக்கு நாங்களும் சம்மதிக்கனும்னு எதிர்பார்க்குறயா? எங்களால கண்டிப்பா முடியாது. அப்பா பேச்சையும் கேக்காம நீ வாதாடுறது நல்லாயில்ல." குறுக்கிட்டான் கண்ணன். கொஞ்சம் எரிச்சல் அவனுக்கு.
"டேய். சும்மா இரு. அப்பா பேசுறாங்கள்ள." என்று சொல்லி மகனை அடக்கினார் சிவகாமி.
சுந்தரராஜன் மகளின் கையை மென்மையாகப் பிடித்தார். "சந்தியா. நீ படிச்ச பொண்ணு. இப்படி ஒரு முடிவு எடுக்குறதால ஒனக்கு மட்டும் கெட்ட பேர் வராது. அந்தக் குழந்தையப் பத்தி நெனச்சுப் பாத்தியா? இனிஷியல் வேண்டாமா?"
"இப்பத்தான் அம்மா பேர இனிஷியலா போடலாம்னு சட்டமே இருக்கேப்பா."
"உண்மைதான். சட்டத்தோட மட்டும் நீ வாழப் போறதில்லை. சமுதாயத்தோடதான் வாழனும். நம்ம ஊர்ல இதெல்லாம் ஒத்து வராதும்மா."
"அப்ப நான் ஒத்து வர்ர ஊருக்குப் போயிரட்டுமாப்பா?"
திகைத்துப் போனார் தந்தை. மகள் தங்களை விட்டுப் போய் விடுவாளோ என்று சற்று பயந்தார். பிறகு உறுதியாகச் சொன்னார். "சந்தியா. உண்ணால எந்த நாட்டுலயும் நல்ல வேலை வாங்கிக்க முடியும்னு எனக்குத் தெரியும். ஆனா இனிமே வரப்போற ஒரு உறவுக்காக இருக்குற அத்தனை உறவுகளையும் இழக்கனுமா என்ன? அது சரியாத் தெரியலை. நல்லா யோசிச்சுப் பாத்தா எனக்கென்னவோ நீ எடுத்திருக்குற முடிவு சரியா வராதுன்னு தோணுது. வேணும்னா ஒரு குழந்தையைத் தத்தெடுக்கலாம். அது உனக்கு நல்ல பேரையும் வாங்கித் தரும். ஒரு குழந்தைக்கு அனாதைங்குற பட்டமும் போகும். இதுதான் சரியான வழின்னு எனக்குப் படுது. இதுதாம்மா என்னோட முடிவு."
நேராக நிமிர்ந்து அப்பாவைப் பார்த்தாள். சுந்தரராஜன் முடிவைச் சொன்ன விதத்திலிருந்து அவருக்குச் சம்மதமில்லை என்று புரிந்து கொண்டாள். அம்மாவிடம் இதற்கு மேல் ஒன்றும் எதிர்பார்க்க முடியாது. கண்ணனோ திருமணம் செய்து குழந்தை பெற்றவன். அவனுடைய உதவியையும் இனிமேல் கேட்க முடியாது. தன்னுடைய முடிவைச் சொல்வதே நல்லது என்று இப்படிச் சொன்னாள்.
"சரி. நீங்க ஒங்க முடிவைச் சொல்லீட்டீங்க. என்னுடைய முடிவையும் நான் சொல்லீர்ரேன். I am already pregnant."
தொடரும்.....
Monday, January 29, 2007
Subscribe to:
Post Comments (Atom)
23 comments:
ஆஹா...
கதை பயங்கர த்ரில்லிங்கா போகுது...
சீக்கிரம் அடுத்த பகுதி போடுங்க...
மிகவும் வித்தியாசமானக் கதைக் களம்.. இரண்டாம் பாகமும் நல்லா வந்துருக்கு...
இன்னும் ஒரு வாரம் வெயிட் பண்ணித் தான் ஆகணுமா ஜி.ரா.. வாரம் இரண்டு பாகம் போடலாமே..
// வெட்டிப்பயல் said...
ஆஹா...
கதை பயங்கர த்ரில்லிங்கா போகுது... //
என்னது? த்ரில்லிங்கா போகுதா? ஒரு பொண்ணு கல்யாணம் செஞ்சுக்காம கொழந்த பெத்துக்கப் போறேன்னா அது த்ரில்லிங்கா ஒனக்கு? ;-)
// சீக்கிரம் அடுத்த பகுதி போடுங்க... //
சரிங்க சார். :-)
ராகவன், முதல் ஆளா வந்து ஒரு ப்ளேட் உக்காரை தருவீங்களானு கேட்கலாம்னு பாத்தா அதுக்குள்ள இரண்டு பேர் வந்துட்டாங்களே! :)
ரொம்ப டேஞ்சரான ஏரியாவுக்கு போறீங்க! :) ...
கத்தி மேல் நடைதான். வலது காலும் வலிக்காம, இடது காலும் வலிக்காம நடங்க ப்ளீஸ்! :) ஒரு பக்கம் வெயிட் விழுந்தா அந்த கால் பாதிச்சிரும்!
வாழ்த்துக்கள்.
// தேவ் | Dev said...
மிகவும் வித்தியாசமானக் கதைக் களம்.. இரண்டாம் பாகமும் நல்லா வந்துருக்கு... //
நன்றி தேவ்
// இன்னும் ஒரு வாரம் வெயிட் பண்ணித் தான் ஆகணுமா ஜி.ரா.. வாரம் இரண்டு பாகம் போடலாமே.. //
அதுக்கான ஏற்பாடுகளைச் செஞ்சிட்டு இருக்கேன். இந்த வாரம் புது பிளாகருக்கு மாறுனதால....அந்த வேலையே இன்னமும் ஓடிக்கிட்டிருக்கு. அடுத்த வாரத்துல இருந்து ரெவ்வெண்டு பதிவாப் போட்டுறலாம்.
// Madura said...
ராகவன், முதல் ஆளா வந்து ஒரு ப்ளேட் உக்காரை தருவீங்களானு கேட்கலாம்னு பாத்தா அதுக்குள்ள இரண்டு பேர் வந்துட்டாங்களே! :) //
வாங்க மதுரா. எப்படி இருக்கீங்க? ரொம்ப நாளாச்சு. உங்களுக்கு இல்லாத உக்காரையா? எத்தனை பேர் வந்தாலும் உக்காரைச்சுரபி வற்றாது. :-)
// ரொம்ப டேஞ்சரான ஏரியாவுக்கு போறீங்க! :) ...
கத்தி மேல் நடைதான். வலது காலும் வலிக்காம, இடது காலும் வலிக்காம நடங்க ப்ளீஸ்! :) ஒரு பக்கம் வெயிட் விழுந்தா அந்த கால் பாதிச்சிரும்!
வாழ்த்துக்கள். //
உண்மைதான் மதுரா. நானும் கால் வலிக்காம பாதிக்காமத்தான் போறேன்னு நெனைக்கிறேன். பாக்கலாம். அதுக்கு நீங்க ஒங்க கருத்துகளைத் தவறாமச் சொல்லுங்க. ஏன்னா எதுவும் தப்பு இருந்ததுன்னா அதுதான் காட்டிக் கொடுக்கும்.
உண்மையச் சொல்லட்டுமா?
இந்தப் பொண்ணு இத்தனை பேசும்போதே நான் நினைச்சேன். அவ ஏற்கனவே மாசமாத்தேன் இருக்கணும்னு ஹி ஹி! உங்களைத் தெரிஞ்சு வச்சுருக்குறதுல என்னவெல்லாம் லாபம் பாருங்க!
அப்படியே சூடு பிடிச்சு அடுத்த பகுதியில எரிய வச்சுருவீங்க போல... சீக்கிரம் சீக்கிரம்!
/"அப்ப நான் ஒத்து வர்ர ஊருக்குப் போயிரட்டுமாப்பா?"/
ராகவா!
இன்றைய பெண்களால் இது முடியும்....! வித்யாசமாகவும்,விறுவிறுப்பாகவும் செல்கிறது. பார்போம் அடுத்ததை!
யோகன் பாரிஸ்
ராகவன் கதையை விறுவிறுப்பாக்் கொண்டு போறிங்க...
ஒருவார இடைவெளிய சீக்கிரமேக் கொறச்சிடுங்க :-)
// பிரதீப் said...
உண்மையச் சொல்லட்டுமா?
இந்தப் பொண்ணு இத்தனை பேசும்போதே நான் நினைச்சேன். அவ ஏற்கனவே மாசமாத்தேன் இருக்கணும்னு ஹி ஹி! உங்களைத் தெரிஞ்சு வச்சுருக்குறதுல என்னவெல்லாம் லாபம் பாருங்க! //
என்னய்யா இது..போற போக்குல...நானே மாசமாயிருக்கேன்னு சொல்வீகளோ!
// அப்படியே சூடு பிடிச்சு அடுத்த பகுதியில எரிய வச்சுருவீங்க போல... சீக்கிரம் சீக்கிரம்! //
சூடு பிடிக்கப் போகுதா! அப்பத் தண்ணி நெறைய குடிக்க வேண்டியதுதான். வேறென்ன செய்ய? நீங்களும் தெனமும் நெறைய தண்ணி குடிங்க. நல்லது ஒடம்புக்கு.
// Johan-Paris said...
/"அப்ப நான் ஒத்து வர்ர ஊருக்குப் போயிரட்டுமாப்பா?"/
ராகவா!
இன்றைய பெண்களால் இது முடியும்....! வித்யாசமாகவும்,விறுவிறுப்பாகவும் செல்கிறது. பார்போம் அடுத்ததை!
யோகன் பாரிஸ் //
உண்மைதான் யோகன் ஐயா. பெண்ணால் தனித்துச் சம்பாதித்து வாழமுடியும் என்ற நிலை அவர்களுக்கு இந்தச் சுதந்திரங்களைக் கொடுக்கிறது. சுதந்திரம் கிடைத்த ஆரம்ப காலங்களில் இப்படித்தான் இருக்கும். பிறகு இந்தச் சுதந்திரத்திற்கு இருபாலாரும் பழகிப் பழகி எல்லாம் சரியாகி விடும்.
// அருட்பெருங்கோ said...
ராகவன் கதையை விறுவிறுப்பாக்் கொண்டு போறிங்க...
ஒருவார இடைவெளிய சீக்கிரமேக் கொறச்சிடுங்க :-) //
இந்த வாரமே குறைக்க இருந்தேன் கோ. ஆனால் இந்த புது பிளாகர் மாற்றல் அதைத் தடுத்திருச்சு. அடுத்த வாரத்திலிருந்து ஆவண செய்யப்படும்.
ஆ.... என்னது இது?
சீட்டு கெடச்சதுக்கப்புறம்தான் அப்ளிகேஷன் ஃபார்மேவா?
வெயிட்டுங் டூ னெக்ஸ்ட் டிவிஸ்ட்...
ஆஹா...
சூப்பரா போகுது..
வித்தியாசமான கதை தான் சார்..
// ஜி said...
ஆ.... என்னது இது?
சீட்டு கெடச்சதுக்கப்புறம்தான் அப்ளிகேஷன் ஃபார்மேவா? //
வாங்க ஜி. என்ன செய்றது? முந்தியெல்லாம் தேட்டருக்குப் போய் டிக்கெட் வாங்குவாங்க. இப்ப டிக்கெட் வாங்கீட்டுதானே தேட்டருக்கே போறோம். பஸ்ல ஏறீட்டு டிக்கெட் எடுத்தது ஒரு காலம். டிக்கெட் எடுத்துட்டுத்தான் ஏறனுங்குறது இப்பக் காலம்.
// வெயிட்டுங் டூ னெக்ஸ்ட் டிவிஸ்ட்... //
ட்விஸ்ட்டா! ஏற்கனவே ரெண்டு ட்விஸ்ட் குடுத்தாச்சு. இனிமே இந்த ட்விஸ்டுகளால சந்தியா படப்போறதப் பாப்போம்.
// கோபிநாத் said...
ஆஹா...
சூப்பரா போகுது..
வித்தியாசமான கதை தான் சார்.. //
வாங்க கோபிநாத். உங்க கருத்துக்கு நன்றி. தொடர்ந்து படிச்சுக் கருத்து சொல்லுங்க.
யப்பா ரொம்ப காக்க வைக்காம அடுத்த பகுதியைப் போடுங்க.
// இலவசக்கொத்தனார் said...
யப்பா ரொம்ப காக்க வைக்காம அடுத்த பகுதியைப் போடுங்க. //
இதுதான் பின்னூட்டமா? பின்னூட்ட இளவரசன் பட்டத்தக் கொடுத்ததுக்கு இப்படியொரு பின்னூட்டமா? கதைய இவ்வளவு படிச்சீங்களே? அத அலசிப் பிழிஞ்சு காயப் போட வேண்டாமா?
சரி. கதையில ஒரு கேள்வி கேக்குறேன். அதுக்குச் சரியான விடையைச் சொல்லுங்க பாப்பம்.
கதையில் வரும் கதாநாயகனின் பெயர் என்ன?
// லெச்சுமி பாட்டி said...
ஜி.ரா அவர்களே,
"மனதினில் உட்கார்ந்து மணி அடித்தாய்" என்ற பி.சுசீலாவின் பாடல் எந்தப் படத்தில் உள்ளது. நீங்கள் முன்பு இதைப் பற்றி கூறியது நினைவில் உள்ளது அதனால் தான் உங்களைக் கேட்கிறேன்.
நன்றி. //
லெச்சுமிப் பாட்டி, நல்லாயிருக்கீங்களா? எங்க ரொம்ப நாளா ஆளைக் காணோம்?
என்னை எதுக்கு அவர்களே எல்லாம் போட்டுக்கிட்டு. சும்மா ஜிரான்னு சொல்லுங்க. போதும்.
மனசுக்குள் உட்கார்ந்து மணியடித்தால் பாடல் கல்யாண அகதிகள் படத்தில் உள்ளது. பி.சுசீலா பாடிய மிக அருமையான பாடல். எனக்கும் ரொம்பப் பிடிக்கும். வி.எஸ்.நரசிம்மன் இசை. வைரமுத்து எழுதியது. பாலச்சந்தர் படம்.
// லெச்சுமி பாட்டி said...
ஜி.ரா,
மிக்க நன்றி. ரொம்ப நல்லா இருக்கேன். இப்பொழுதெல்லாம் படிக்கறதோட சரி.
கூகிள்ல தலையால தண்ணி குடிச்சாலும் இன்னும் பாட்டக் கேக்க முடியல. ஆனா மனசுக்குள்ள ஓடிக்கிட்டே இருக்கு. ரொம்ப நல்லப் பாட்டு.
நன்றி. //
என் கிட்ட அந்தப் பாட்டு இல்லைன்னு நெனைக்கிறேன். ஒங்களுக்காகத் தேடிப் பாக்குறேன். இருந்தா ஒங்களுக்காக உடனே சொல்றேன்.
யோவ் ஜி.ரா...அநியாயத்துக்கு ஸஷ்பென்ஸ் வைக்றீரே..எப்பொ அடுத்த பாகம் போடுரத உத்தேசம்?
அட இராகவா! :)))))))
// gurusri said...
யோவ் ஜி.ரா...அநியாயத்துக்கு ஸஷ்பென்ஸ் வைக்றீரே..எப்பொ அடுத்த பாகம் போடுரத உத்தேசம்? //
குருஸ்ரீ, அடுத்த பாகம் போட்டாச்சே. அதுக்கடுத்த பாகமும் நாளைக்குப் போடப் போறேனே!
// இராமநாதன் said...
அட இராகவா! :))))))) //
திட்டுறீங்களா? பாராட்டுறீங்களா? கிண்டலாச் சிரிக்கிறீங்களா? என்ன சொல்றீங்க இராமநாதன்?
Post a Comment