Monday, May 12, 2008

தங்க மரம் - 13

சென்ற பகுதியை இங்கே படிக்கவும்.

பாகம் - 13

பறக்க முடியாமல் தடுமாறிய பிடிமா கீழே இறங்க நினைத்தது. ஆனால் அதுவும் முடியவில்லை. அப்பொழுதுதான் அந்த பெருத்த சிரிப்போசை கேட்டது.

"ஆகா.. ஆகா... அழகான பொம்மைகள். பறக்கும் யானைப் பொம்மை. அதன் மேல் ரெண்டு மனிதப் பொம்மைகள். ஹா ஹா ஹா"

குரல் வந்த திசையில் பார்த்த பொழுதுதான் அவர்கள் கண்ணில் பட்டாள் அந்த அரக்கி. பத்தாள் உயரம். அந்த அளவிற்குத் தண்டி. பத்து ஆளை விழுங்கினாற் போல் வயிறு. விரிந்து சிக்கு விழுந்த தலைமுடி. கள்ளு குடித்துச் சிவந்த முண்டக்கண்கள். ஆனால் மூஞ்சியில் ஏதோ ஒரு கண்ணாடி முகமூடி மாட்டியிருந்தாள். நல்லவேளையாக அவளது அதியழகான முகத்தைக் கொஞ்சம் மறைத்தது.

அவளைப் பார்த்ததும் சித்திரை கேட்டான்.

"யாரடா இவள். நம்மைப் பொம்மை என்கிறாளே. இவளைப் போன்ற அரக்கிகள் எல்லாம் நம்மளைப் போன்றவர்களைப் பிடித்து விழுங்குவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன். இவள் நம்மைச் சொப்பாக வைத்து விளையாடப் போகின்றாளோ."

கதிரவனிடம் சித்திரை சொன்னது லேசுமாசாக அவள் காதுகளில் விழுந்து விட்டது.

"ஏஏஏஏ பொம்மைகளே! உங்களுக்குப் பறக்க மட்டுமே தெரியும் என்று நினைத்தேன். பேசவும் தெரிந்திருக்கிறதே. நீங்கள் பேசியது என் காதில் விழுந்து விட்டது."

சித்திரையின் வாயால் சும்மாயிருக்க முடியவில்லை. இடுக்கண் வந்தாலும் வைரக் கடுக்கன் வந்தாலும் நகுகின்றவன் அவன்.

"அம்மா அழகரசி. உன் காதில் தடுமாறி ஆனையே விழுமே...நான் பேசியது விழாமல் போகுமா? உன் பேர் என்ன? எங்களை எதற்காக நிறுத்தி வைத்திருக்கின்றாய்?

சித்திரை பேசப்பேச அவளுக்கு மகிழ்ச்சி கூடிக் கொண்டே போனது.

"ஆகா ஆகா.. அழகாகப் பேசுகிறாய். என்னுடைய பெயர் அண்டி. நீங்கள் என்னுடைய இடத்திற்கு மேல் பறந்தீர்கள். மிகவும் அழகான பொம்மைகளான உங்களை எனக்கு மிகவும் பிடித்து விட்டது. உங்களை என்னுடைய வீட்டில் வைத்து அழகு பார்க்கப் போகின்றேன். என்னிடம் இருக்கும் மற்ற பொம்மைகள் உணர்ச்சியே இல்லாமல் பேசாமல் இருப்பவை. ஆனால் நீங்கள் எனக்குப் பொழுது போகும் வகையில் நன்றாகப் பேசுகின்றீர்கள்."

"அண்டிதான் உன் பெயரா! நல்ல பெயர். அண்டியாம் அண்டி. வேண்டாம். எதையாவது சொல்லி விடப் போகிறேன். சரி. உன்னுடைய வீடு எங்கே இருக்கிறது? அங்கு சாப்பிடுவதற்கு எதுவும் கிடைக்குமா?"

என்னுடைய வீடு இந்த மலைக்குகையில் இருக்கிறது. உங்களுக்குச் சாப்பிடுவதற்கு வேண்டியன கிடைக்கும். நன்கு உருண்டு திரண்ட...பார்த்தாலே நாவூறும் எட்டு எருமைகளை இப்பொழுதுதான் அடித்துப் போட்டிருக்கிறேன். மாலைச் சிற்றுண்டிக்காக. நீங்கள் ஒரு பக்கமாகச் சாப்பிடுங்கள். நான் ஒரு பக்கமாகச் சாப்பிடுகிறேன். நீங்கள் எவ்வளவு சாப்பிட்டு விடப் போகின்றீர்கள். ஹா ஹா ஹா.. சாப்பிடும் பொம்மைகள். சாப்பிடும் பொம்மைகள்."

"ஆகா...எட்டு எருமைகளை அடித்துப் போட்டிருக்கிறாளா... அது சரி. இவள் அடித்துப் போட்டிருக்கும் எட்டுக்கு முன்னால் நாம் சிறிதுதானே. நாம் வாயில் நுழைந்தால் போனதும் தெரியாது. வந்ததும் தெரியாது. ஆனாலும் எதற்கு வம்பு. இவள் எப்படியும் நம்மை விடமாட்டாள். இங்கே இறங்கித்தான் நாம் தப்பிப்பதற்கு ஏதாவது செய்ய வேண்டும் நீ சற்று அமைதியாக இரு. நான் பேசுகிறேன்." முணுமுணுப்பாக சித்திரையிடம் சொன்ன கதிரவன் அண்டியைப் பார்த்துச் சொன்னான்.

"எட்டு எருமை தின்னும் அண்டியே... உன்னுடைய வீட்டில் பொம்மைகளாக இருக்க நாங்கள் மூவரும் ஒப்புக்கொள்கிறோம். இப்பொழுது எங்களை இறக்கி விடு."

கதிரவன் ஒப்புக்கொண்டவுடன் தனது மண்டையை ஆட்டி ஆட்டி மகிழ்ந்த அண்டி மூவரையும் கீழே இறக்கியது.

"அதோ என்னுடைய வீடு. வாருங்கள்." என்று ஒரு பெரிய குகைக்குள் அழைத்துச் சென்றது. அந்தக் குகையை வீடு என்று சொல்ல முடியாது. ஆனால் அந்தப் பெரிய குகைக்குள் சின்னச் சின்ன குகைகள் இருந்தன. சூரிய வெளிச்சம் வருவதற்கும் வழிகள் இருந்தன. அந்த வழிகளில் ஒளிக்கதிர் வருவது பார்வைக்கு மிக அழகாக இருந்தது.

வழியில் அண்டி சொன்னது போலவே எட்டு எருமைகள் கிடந்தன. அண்டி அடித்த அடியில் குருதி கசிந்து பார்ப்பதற்குச் செக்கச் செவேல் என்று இருந்தன. அதைப் பார்த்ததும் அண்டியின் பசி குத்தாட்டம் போட்டது. பொம்மைகளை ஒரு நொடி மறந்து விட்டாள். கண்ணாடி முகமூடியைக் கழற்றி வைத்து விட்டு எட்டையும் கொஞ்சம் கொஞ்சமாக வாய்க்குள் திணித்துக் கொண்டாள். அவள் வாய்க்குள் திணித்துக் கொண்ட அழகைப் பார்த்த மூவருக்கும் கண்ணைக் கட்டிக்கொண்டு வந்தது.

"ஸ்ஸ்லபஷ்" என்று உதடுகளை நக்கிக் கொண்டவள்.. திரும்பவும் கண்ணாடி முகமூடியைப் போட்டுக் கொண்டாள். சற்றுத் திரும்பித் தேடிப் பார்த்து இவர்கள் இருக்கிறார்கள் என்று உறுதி செய்து கொண்டாள். "வாருங்கள் பொம்மைகளே. உங்களை பொம்மை அறைக்குள் அழைத்துச் செல்கிறேன்."

சற்றுத் தள்ளி உள்ளேயிருந்த அறைக்குள் (குகைதான்) அழைத்துச் சென்றாள். அந்த அறைக்குள்ளே பலப்பல சிலைகள். இறைவனின் உருவச் சிலைகள்..மனிதர்களின் சிலை.. விலங்குகள்...பறவைகள் என்று பலப்பலச் சிலைகள் இருந்தன. கற்சிலைகளிலிருந்து உலோகம்..மரம் என்று பல வகைகள் வேறு. எங்கிருந்து எடுத்து வந்தாளோ!

"இங்குதான் நீங்கள் இருக்க வேண்டும். இங்கேயே இருங்கள். நான் போய் உங்களுக்கு உணவு கொண்டு வருகிறேன்."

மூவருக்கும் அடிவயிற்றை அமிலம் அரித்தது. கதிரவன் கேட்டு விட்டான். "அண்டி..எங்களுக்கு என்ன உணவு கொண்டு வரப் போகிறாய்?"

"ஹா ஹா ஹா உங்களுக்கா...நீங்கள் சின்ன்ன்ன்ன்ன்ன்ன்னப் பொம்மைகள். ஆகையால் எட்டு எருமைகளை அடிக்க மாட்டேன். அதெல்லாம் எனக்குத்தான்" அவள் சொல்லும் போதே நிம்மதி வந்ததும் மூவருக்கு.

"உங்களுக்கு ஒரேயொரு மலைப்பாம்பு மட்டும் போதுமே. இருங்கள் உடனே சென்று பிடித்து..அதன் கழுத்தைத் திருகிக் கிழித்துத் தருகிறேன். நீங்கள் சுவைத்துச் சுவைத்து உண்ணலாம்."

வயிறு என்று ஒன்று இருப்பதே மூவருக்கும் மறந்து போனது.

"தாயே அண்டி. மலையும் வேண்டாம். பாம்பும் வேண்டாம். நாங்கள் பொம்மைகள். அதையெல்லாம் சாப்பிட முடியாது. எங்களுக்கு மரங்களில் பழுக்கும் கனிகள்தான் உணவு. அவைகளைக் கொண்டு வந்தாலே போதும். புரிந்தது."

"ம்ம்ம்ம்ம்... புரிந்தது புரிந்தது. நீங்கள் பொம்மைகள். உங்களால் நல்ல உணவைச் சாப்பிட முடியாது. மரங்களில் இருக்கும் கனிகளைத்தான் சாப்பிட வேண்டும். இதோ விரைவில் வருகிறேன்." என்று சொல்லிவிட்டுத் தடதடவென ஓடினாள். மூவரும் நிற்க முடியாமல் தடுமாறினார்கள்.

அவள் போனதும் குகையை ஆராய்ந்தார்கள். ஏதாவது வழி தென்படுகிறதா என்று அவர்கள் உள்ளே வந்த வாசலைத் தவிர வேறு வழிகள் எதுவும் தென்படவில்லை. அந்த வாயில் வழியே வெளியே போகவும் முடியவில்லை. ஏதோ ஒரு தடுப்பு இருந்தது. அதற்குள் அண்டி வரும் அதிர்வுகள் தெரிந்ததும் உள்ளே பொம்மையறைக்குள் வந்து விட்டார்கள்.

தொடரும்...

படிக்கின்றவர்களின் வசதிக்காக






அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

11 comments:

Thamiz Priyan said...

ஆகா வழியெங்கும் தடங்கல்களா?... சீக்கிரம் தனிமாவையும், பிடிமாவையும் ஒன்று சேருங்கள்... வெயிட்டிங்.....

குமரன் (Kumaran) said...

நேற்று தான் சன் தொலைக்காட்சியில் தாடகை வதத்தைக் காண்பித்தார்கள். அதில் தாடகையைக் காட்டியதைப் பார்த்து 'இது கொஞ்சம் அதிகமான சித்தரிப்போ?' என்று நினைத்துக் கொண்டிருந்தேன். நீங்கள் கொடுக்கும் அண்டியின் சித்திரத்தைப் பார்த்தால் அது பரவாயில்லை என்று தோன்றுகிறது. :-)

இலவசக்கொத்தனார் said...

இது ஆரு இது புதுசா அண்டி? இருக்கட்டும் அவளை எப்படி இந்தப் பசங்க பயன் படுத்திக்கப் போறாங்கன்னு பார்க்கலாம்.

M.Rishan Shareef said...

ஆஹா...
அண்டி ரொம்ப அன்பான அரக்கியாக இருக்காங்களே...

எட்டு எருமையை சமைக்காமலே சாப்பிட்டுட்டாங்களா?உவ்வே..
சமைச்சு சாப்பிட்டதா சொல்லியிருக்கலாம்.

அடுத்ததா மலைப்பாம்புக் கறியா?

உண்மையைச் சொல்லுங்க ஜிரா அண்ணாச்சி,நீங்க ஏதோ சைனீஸ் ரெஸ்டூரண்ட்லதானே வேலை பார்க்குறீங்க?

மெளலி (மதுரையம்பதி) said...

என்னாது 8 மாடுகளை அடிச்சு தின்னுச்சா,,,,ஓவ்வே!

மெளலி (மதுரையம்பதி) said...

//அடுத்ததா மலைப்பாம்புக் கறியா?

உண்மையைச் சொல்லுங்க ஜிரா அண்ணாச்சி,நீங்க ஏதோ சைனீஸ் ரெஸ்டூரண்ட்லதானே வேலை பார்க்குறீங்க?//

ரீப்பிட்டேஏஏஏஏஏஏஏஏ :-)

G.Ragavan said...

// தமிழ் பிரியன் said...

ஆகா வழியெங்கும் தடங்கல்களா?... சீக்கிரம் தனிமாவையும், பிடிமாவையும் ஒன்று சேருங்கள்... வெயிட்டிங்.....//

வாங்க தமிழ்ப் பிரியன்.... நான் என்ன யோசிக்கிறேன்னா... தனிமாவும் பிடிமாவும் சேரனுமான்னு.... :0

// Blogger குமரன் (Kumaran) said...

நேற்று தான் சன் தொலைக்காட்சியில் தாடகை வதத்தைக் காண்பித்தார்கள். அதில் தாடகையைக் காட்டியதைப் பார்த்து 'இது கொஞ்சம் அதிகமான சித்தரிப்போ?' என்று நினைத்துக் கொண்டிருந்தேன். நீங்கள் கொடுக்கும் அண்டியின் சித்திரத்தைப் பார்த்தால் அது பரவாயில்லை என்று தோன்றுகிறது. :-) //

சன் டீவீல தாடகை வதமா? சினிமாவா நாடகமா?

அண்டியெல்லாம் சான்சேயில்லை. அண்டியப் பத்தித் தெரியாமப் பேசுறீங்க. :)

குமரன் (Kumaran) said...

சன் தொலைக்காட்சியில ஞாயிறு தோறும் புதுசா 'இராமாயணம்' தொடர் வருகிறது இராகவன். அதனைத் தான் சொன்னேன்.

கோபிநாத் said...

அண்டி ஆன்டி ரொம்ப நல்லாவுங்க போல!!!

Anonymous said...

G.Ra - I am a long time reader of your blog and enjoyed so many of your posts about Murugan, trips and happenings around you. your shortstories used to be so good. But unfortunately offlate your serial stories are a drag in your blog. All these serial stories are long and dragging and that too - this thanga maram is real bore. This is an honest opinion. Maybe many others are feeling so but not expressing it openly. Hope you can come back to form through your regular posts.
thanks - Ravikumar

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இடுக்கண் வந்தாலும் வைரக் கடுக்கன் வந்தாலும் நகுகின்றவன் அவன்//

இடுக்கண் வந்தாலும் வைரக் கடுக்கன் வந்தாலும் வெடுக்கெனப் பேசும் சரியான துடுக்கன் போல அவன்! :-)

//அறைக்குள்ளே பலப்பல சிலைகள். இறைவனின் உருவச் சிலைகள்..மனிதர்களின் சிலை.. விலங்குகள்...பறவைகள் என்று பலப்பலச் சிலைகள் இருந்தன//

அண்டி கொலு எல்லாம் வைக்கிறவ போல! :-)

//உண்மையைச் சொல்லுங்க ஜிரா அண்ணாச்சி,நீங்க ஏதோ சைனீஸ் ரெஸ்டூரண்ட்லதானே வேலை பார்க்குறீங்க?//

ரிஷான்
ஜிரா சைனீஸ் கடையில வேலை பாக்கலை! கொரியன் கடைல கோராகவன் வேல பாக்குறாரு! மலைப்பாம்பு நூடுல்ஸ் தான் அப்பிடைசராம்! :-)