Wednesday, September 28, 2005

மாறிப் போன பயணங்கள்


மிகச்சிறிய வயதில் (எனக்கு வயது நினைவில்லை. நம்புங்கள். என்னைக் கைக்குழந்தையாக கையில் வைத்துக் கொண்டு எனது அத்தை உறங்கிக் கொண்டிருந்த அம்மாவைக் காட்டி, "யாரு அது சொல்லு" என்று கொஞ்சியதும் நினைவில் இருக்கிறது.) தூத்துக்குடியில் எனது அத்தை வீட்டில் இருந்தேன். இரண்டு வயதிலிருந்து எனது அத்தைதான் கொஞ்ச காலம் வளர்த்தார்கள்.

விளாத்திகுளம், நாகலாபுரம் தாண்டி இருக்கும் புதூர்தான் எங்கள் தந்தை வழி மூதாதையர்களின் சொந்த ஊர். தூத்துக்குடியிலிருந்து நேர் பஸ் உண்டு. ஆனால் அடிக்கடி இருக்காது. விளாத்திகுளம் போய் மாறுவதும் சில சமயம் செய்திருக்கிறோம்.

இரண்டு பஸ் கம்பெனிகள். பெயர்கள் இன்னும் நன்றாக நினைவில் இருக்கிறது. மீரான் டிரான்ஸ்போர்ட், லயன் டிராஸ்போர்ட். இரண்டு வண்டிகளுமே கொஞ்சம் பழைய வண்டிகள். சொல்லி வைத்தாற்போல் இரண்டிலுமே கொஞ்சம் வயதில் பெரியவர்தான் ஓட்டுனராக இருப்பார். கட்டபொம்மன் பேருந்துகளில் கொஞ்சம் இளவயது ஓட்டுனர்கள் இருப்பார்கள்.

அந்தச் சின்ன வயதில் நான் லயன் வண்டியில்தான் போக வேண்டும் என்று அடம் பிடித்திருக்கிறேன். காரணங்கள் இரண்டு.
1. அது நேராகப் புதூருக்குப் போகும்.
2. அதில் இடப்பக்க ஜன்னலை ஒட்டி ஒரே நீளமாக ஒரு சீட் இருக்கும்.

விளாத்திகுளத்திற்கு கட்டபொம்மன் வண்டிகள் நிறைய உண்டு. அங்கு போய்விட்டால் அருப்புக்கோட்டை போகும் பல வண்டிகள் கிடைக்கும். அந்தப் பேருந்துகள் புதூர் வழியாகத்தான் போகும். தூத்துக்குடியிலிருந்து புதூர் வழியாக அருப்புக்கோட்டை செல்லும் கட்டபொம்மன் பேருந்துகளும் உண்டு. ஆனால் எனக்குப் பிடித்தது லயனும் மீரானும்தான்.

கட்டபொம்மன் வண்டிகளைக் கேடீசி (கட்டபொம்மன் டிரான்ஸ்போர்ட் கார்பரேஷன்) என்பார்கள். மதுரைக்குப் பாண்டியன். கோவைப் பக்கம் சேரன். சென்னையில் பல்லவன். தஞ்சைப் பக்கம் சோழன். இவ்வளவுதான் எனக்குத் தெரிந்து முதலில் இருந்த போக்குவரத்துக் கழகங்கள். இவை பல்கிப் பெருகி இன்றைக்கு எல்லாம் ஒன்றே என்று ஆகிவிட்டன.

இந்த லயன் வண்டியிலும் மீரான் வண்டியிலும் போவது பெரியவர்களுக்குப் பிடிக்காது. ஏனென்றால் அவை மெதுவாகச் செல்லும். அதிலும் ஒரு நாளைக்கு இரண்டு முறைதான் அவை புறப்படும். காலையில் ஒன்று. மாலையில் ஒன்று. நாங்கள் பெரும்பாலும் மாலையில்தான் செல்வோம்.

அதுவுமில்லாமல் லயன் வண்டி எல்லா இடங்களிலும் நிற்குமாம். அதுவும் தாமதத்திற்குக் காரணம். நான் இரண்டு பக்கங்களிலும் உள்ள ஊர்களைப் பார்த்துக் கொண்டே செல்வேன். தேவையில்லாத கேள்விகளைக் கேட்டிருக்கின்றேன். அந்த வயதில் சரியான அந்தக் கேள்விகள் இந்த வயதில் கேணத்தனமாகத் தோன்றுகின்றன.

எட்டையாபுரம் போகும் வழியில் எப்போதும் வென்றான் என்று ஒரு ஊர் உண்டு. "எப்பொதென்றான்" என்று வேகமாகச் சொல்லும் போது கேட்கும். நடத்துனர் அடிக்கடி அப்படிச் சொல்வதால் என் காதில் "எப்போண்டா" என்று விழுந்திருக்கிறது. "ஏந்த்த இந்த ஊருல போண்டா போடுவாங்களா? நம்ம புதுக்கிராமம் டீக்கட போண்டா மாதிரி இருக்குமா?" என்றெல்லாம் கேட்டிருக்கிறேன்.

கொஞ்சம் வளர்ந்த பிறகு எப்போதும் வென்றானுக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது என்று கேணத்தனமாக ஒரு கதையை என் அத்தையிடம் சொல்லியிருக்கிறேன். அதை நிச்சயமாக ஒரு காதில் வாங்கி மறுகாதில் விட்டிருப்பார். "ஹர்ஷா எப்ப சண்ட போட்டாலும் ஜெயிச்சாராம். அதான் இந்த ஊருக்கு எப்போதும் வென்றான்னு பேரு." அங்கே அதிசயமாக ஓரு இடத்தில் கொட்டியிருந்த செம்மண்ணைக் காட்டி, "ரொம்ப சண்ட போட்டப்போ...ரெத்தம் சிந்தித்தான் செக்கச் செவேல்னு இருக்கு." இதையெல்லாம் கேட்கும் பொழுது என் அத்தைக்கு எப்படியிருந்திருக்கும் என்று நினைத்துப் பார்த்து அவர் மேல் பரிதாபப் படுகிறேன்.

தூத்துக்குடியில் இருந்து புறப்படும் லயன் வண்டி குறுக்குச்சாலை வழியாகப் போகும். அதென்ன குறுக்குச்சாலை? அது நான்கு ஊர்ச்சாலைகள் கூடுமிடம். பாஞ்சாலங்குறிச்சி, தூத்துக்குடி, எட்டயபுரம், விளாத்திகுளம் ஆகிய நான்கு ஊர்ச்சாலைகளும் கூடும் சாலை குறுக்குச்சாலை. அந்தக் காலத்திலேயே எப்படி பெயர் வைத்திருக்கின்றார்கள் பாருங்கள்.

அதற்கப்புறம் உள்ள ஊர்களின் பெயர்கள் எனக்கு இப்பொழுது நினைவில் இல்லை. ஆனால் யாராவது சொன்னால் கண்டிப்பாகத் தெரியும். அடுத்து நினைவிருக்கும் ஊர் விளாத்திகுளம்தான்.

விளாத்திகுளத்திற்கு முன்னால் சிறிய பாலம் உண்டு. வழக்கமான பாலங்களைப் போல கீழே நீர் ஓடுவதும் தூண்கள் சாலையைத் தாங்கிக் கொண்டிருக்கும் படியும் இருக்காது. பாலம் குழிந்து தரையோடு இருக்கும். மழைக்காலங்களில் தண்ணீர் நிரம்பி ஓடும். அப்பொழுதெல்லாம் போக்குவரத்து பாதிக்கப்படும். ஆனால் அதெல்லாம் நான் கைக்குழந்தையாக இருந்த காலங்களில். எனக்கு விவரம் தெரிந்து அந்தப் பாலத்தில் வெள்ளத்தைப் பார்த்ததில்லை.

விளாத்திகுளத்தை விட்டு வெளியில் செல்லும் இடத்தில் ஒரு பெரிய கண்மாய் உண்டு. அதில் நான் சிறுவயதில் தளும்பத் தளும்பத் தண்ணீரைப் பார்த்திருக்கிறேன். இப்பொழுது அந்தக் கண்மாய் ஆக்கிரமிப்பால் குறுகிக் காய்ந்து வெடித்துப் போயிருக்கிறது.

அடுத்தது நாகலாபுரம். அதுவும் ஒரு சிற்றூர்தான். அங்கு கூட்டமாக இருக்கும். நாகலாபுரம் வந்தாலே புதூர் வந்து விட்டது போல இருக்கும். ஊருக்கு வெளியே ஒரு டெண்ட்டு கொட்டகை. அதைக் கடந்து போகையில் எந்தப் படம் அங்கே ஓடுகிறது என்று எனக்குக் கண்டிப்பாய்ப் பார்க்க வேண்டும். ஜன்னல் ஓரத்தில் எட்டி எக்கிப் பார்ப்பேன்.

புதூருக்குள் நுழையும் போதே இருக்கங்குடி விலக்குக்குப் பக்கத்தில் இருக்கும் வெற்றிலைக் கொடிக்கால்கள் தெரியும். அடுத்தது முருகன் கோயில். அப்படியே புதூர் பேருந்து நிலையம். அங்கும் பெரிய தட்டி வைக்கப் பட்டிருக்கும். சினிமா போஸ்டர்களோடு. ரத்னா, சீதாராம் என்று இரண்டு டெண்ட்டு கொட்டகைகள். இவற்றில் சீதாராம் கொட்டகை எங்கள் நிலத்தில் அமைந்திருந்தது. ஆகையால் அங்கே வீட்டின் பெயரைச் சொன்னால் ஓசியிலேயே படம் பார்க்கலாம்.

புதூரில் இறங்கியதும் அங்கே தெரிந்தவர் கடையில் பெட்டி படுக்கைகளை வைப்போம். காரணம் ஒரு அரைக்கிலோமீட்டர் ஊருக்குள் நடக்க வேண்டும். ஒன்றும் பெரிய தொலைவு இல்லை. ஆனாலும் அப்படித்தான். பிறகு வீட்டிற்கு நடந்து போய் அங்கிருந்து யாரையாவது சைக்கிளில் அனுப்பி எடுத்து வருவோம். சுற்றி பெரும்பாலும் எப்படியாவது உறவாகத்தான் இருப்பார்கள். ஆகையால் இளம் பையன்களை சைக்கிளில் பை எடுக்க பெரியவர்கள் அனுப்புவார்கள்.

இப்பொழுது லயன் பேருந்துகள் ஓடுவதில்லை. கட்டபொம்மனைத் தூக்கிப்(ல்) போட்டாயிற்று. பெரும்பாலும் தேவைப்படுகின்ற சமயங்களில் கார் வைத்துக்கொண்டுதான் போகின்றோம். நாங்கள் பை வைத்த கடை இன்னும் இருக்கிறது. ஆனாலும் பைகள் காரில் நேராக வீட்டிற்குப் போகின்றன. நாகலாபுரம் கொட்டகையில் என்ன படமென்று கூட எட்டிப் பார்க்கவில்லை. சீதாராம் கொட்டகைக்குக் குத்தகை முடிந்தது. ஆகையால் அவர்கள் கொட்டகையைக் கலைத்து விட்டார்கள். ரத்னா மட்டும் இன்னும் இருக்கிறது. போன முறை போயிருந்த பொழுது Lord of the rings தமிழில் பார்த்ததுதான் மிச்சம்.


அன்புடன்,
கோ.இராகவன்

Sunday, September 25, 2005

தருமனும் தருமமும்

தருமனும் தருமமும்

அந்தப் புட்பக விமானம் கால தேச வர்த்தமானங்களைக் கடந்து உயரப் போய்க் கொண்டிருந்தது. அழகிய பொன் விமானம். அதற்கு முத்து விதானம். தருமனும் தருமதேவதையும் அதில் பயணித்துக் கொண்டிருந்தார்கள். இருவர் முகத்திலும் பெருமிதம்.

பின்னே. ஐந்து தம்பியருடனும் திரவுபதியுடனும் நாட்டைத் துறந்து சொர்கம் புக வந்து, தனியொருவனாகப் போகிறான் அல்லவா. முதலில் திரவுபதி வீழ்ந்தாள். அடுத்து சகாதேவன். கொஞ்ச நேரத்திலேயே நகுலன். அந்தோ! அழகிய அருச்சுனனும் மாண்டான். பலசாலி பீமன் கூட பாவம். வீழ்ந்தான். மிஞ்சியன் தருமனே. அவனை, தன் மகனை உடலோடும் உயிரோடும் சொர்க்கத்திற்கு அழைத்துக் கொண்டு போகிறான் தருமதேவதை. ஆகையால்தான் இருவர் முகத்திலும் பெருமிதம்.

தருமதேவன் சொர்க்கத்திலேயே தங்க முடியாது. அவனுடைய உலகத்திற்குச் சென்று காலம் தவறாமல் காலன் பணியைச் செய்ய வேண்டும். ஆகையால் மகனைச் சொர்க்கம் ஏற்றி விட்டு அவனும் உடனே விலக வேண்டும். கடமை தவறினால் சர்வேசுவரன் விட மாட்டான்.

தருமனுக்கும் மகிழ்ச்சிதான். "சொர்க்கத்தில் தம்பியரைச் சந்திக்கலாம். திரவுபதையைச் சந்திக்கலாம். பெரிய பாட்டனார் பீஷ்மரையும், ஆசான் துரோணரையும், குலகுரு கிருபாச்சாரியரையும் சந்திக்கலாம். தாயார் குந்தியையும் கூடவே சிற்றன்னை மாதிரியையும் சந்திக்கலாம். என்னதான் இருந்தாலும் பெரியப்பா திருதுராட்டினரையும் பெரியம்மா காந்தாரியையும் கண்டிப்பாக வணங்க வேண்டும். பீமன் என்று நினைத்து இரும்புத் தூணை நொறுக்கினாரே பெரியப்பா. அது போல தன்னையும் நொறுக்கி விடாமல் இருக்க பேசாமல் அவர் காலில் விழுந்து வணங்குவதே நல்லது." இன்னும் உயிராசை தருமனை விடவில்லை.

ஆசைகளும்தான். "பேசாமல் தம்பியரையும் தாயாரையும் திரவுபதையையும் கூட்டிக் கொண்டு ஒருபுறமாக சென்று ஒதுங்கி வாழ வேண்டும். பின்னே! மற்ற உறவினர்களைச் சந்திக்கையில் தேவையில்லாமல் போர் நினைவுகளும் அதில் நடந்த கொலைகளும் அக்கிரமங்களும் வரும். நம்முடைய பொய்யால்தான் துரோணரும் வீழ்ந்தார். அவர் நம்மை மன்னிக்க மாட்டார். அவரிடமிருந்தும் தள்ளியிருப்பதே நல்லது. துரியோதனாதிகள் நூறுவரும் நிச்சயம் நரகத்தில் இருப்பார்கள். ஆகையால் அவர்களால் பிரச்சனையில்லை. கர்ணர் எங்கிருப்பார்? நமது அண்ணன் ஆகையால் சொர்கத்தில்தான் இருக்க வேண்டும்." புதிதாக இந்த அண்ணன் பாசம் வேறு.

"அவர் நம்மோடு வருவாரா? ஒருவேளை துரியோதனனோடு இருக்க அவரும் நரகத்திற்குப் போயிருந்தால்?" தருமனின் மூளை கணக்குப் போட்டது. முடிவும் கண்டது. "சரி. அம்மாவிடம் சொல்லிக் கூப்பிடலாம். அம்மாவின் மீது அண்ணனுக்குப் பாசமுண்டு. இல்லையென்றால் உண்மையைச் சொல்லக்கூடாது என்ற வரமும் வாங்கி, போர்க்களத்தில் தான் வீழ்ந்தால் தன்னை மடியில் தூக்கி வைத்துக் கதற வேண்டும் என்று கேட்டிருப்பாரா? அம்மாவை வைத்துத்தான் அண்ணனை வளைக்க வேண்டும். அட! இதென்ன நறுமணம். மனதை மயக்குகிறதே. சொர்கம் வந்து விட்டதா?"

ஆம். உண்மையிலேயே சொர்கம் வந்து விட்டது. புட்பக விமானமும் நின்றது. மகனை இறங்கச் சொன்னான் தருமதேவதை. "மகனே. உடலோடு சொர்கம் புகுந்தான் என் மகன் என்ற பெருமை எனக்கு. இனியும் உன்னோடு நான் வரலாகாது. தரும விதிகளின் படி உன்னை இங்கு அழைத்து வரத்தான் கடமை. அதற்கு மேல் நான் என் கடமையைச் செய்யச் செல்ல வேண்டும். நீ இப்படியே சென்றால் உனக்கு வேண்டியவர்களையெல்லாம் காண்பாய். நான் வருகிறேன்."

தருமதேவதை புட்பக விமானத்தில் புறப்பட்டதும் வந்தடைந்த இடத்தை நன்றாகக் கவனித்தான். பச்சைப் பசேலென்று எங்கும் புல்வெளிகள். மரங்கள். செடிகள். கொடிகள். அவைகளில் மலர்கள் பூத்து நறுமணம் எங்கும் பரவியிருந்தது. கடும் வெயிலும் இல்லை. நடுக்கும் குளிரும் இல்லை. இதமான தட்பவெட்பம் சுகமாக இருந்தது. ஒரு பெரிய ஆறு ஓடிக் கொண்டிருந்தது. ஆற்றில் தண்ணீர் நிறைய ஓடினாலும் கரையைத் தாண்டவில்லை. சொர்கமல்லவா! வெள்ளம் வராது.

ஆற்றில் எல்லா உயிர்களும் ஒன்றாகவே தண்ணீர் குடித்தன. புலியும் பசுவும் கூடிக் குடித்தன. புலியும் பசுவைத் துறத்தவில்லை. பசுவும் மருளவில்லை. வரிசையாக நடப்பட்டிருந்த மரங்களின் ஓரமாகச் சென்ற பாதையில் நடந்தான் தருமன். சொர்கத்தின் விந்தைகளை வியப்பாக பார்த்துக் கொண்டு சென்றான். என்ன இருந்தாலும் ஊருக்குப் புதிதுதானே.

"இதென்ன சொர்கம். மயன் நமக்குக் கட்டிக் கொடுத்த மாளிகையையும் தோட்டத்தையும் விட அருமையாக இருக்கிறதே. இங்கே ஒரு ஆனந்த அமைதி நிலவுகிறதே. எப்படி? ஒரெ விலங்குகளும் பறவைகளுமாகத் தெரிகின்றனவே. மனிதர்கள் எங்கே இருப்பார்கள்? தேவர்கள் எங்கே இருப்பார்கள்? நான் வருகிறேன் என்று யாருக்கும் சொல்லவில்லையா? கிருஷ்ணர் கூட வந்து வரவேற்கவில்லையே. ஒவ்வொருவராக எங்கு போய்த் தேடுவது?"

கொஞ்ச தூரம் செல்லச் செல்ல பொன் மாளிகைகள் தொலைவில் தென்பட்டன. அங்குதான் எல்லாரும் இருக்க வேண்டும் என்று எண்ணி நடந்தான் தருமன். "பெரிய ஊர் போலத் தெரிகிறது. இவ்வளவு பெரிய அழகான மாளிகைகள் தெரிகின்றன. நமக்கு வேண்டியவர்கள் எல்லாம் இங்குதான் இருக்க வேண்டும். ஒவ்வொருவராகப் போய்ப் பார்க்கலாம். முதலில் யாரைப் பார்ப்பது? திரவுபதியைப் பார்த்து நாளாயிற்று. அவளோடு கூடிக் களிக்க வேண்டும். தாயாரை முதலில் பார்த்தாலும் நல்லதே. ஆசி வாங்கலாம். இவர்கள் எங்கேயிருக்கின்றார்கள் என்று ஊருக்குள் போய் கேட்கலாம்."

இப்படி நினைத்துக் கொண்டு நடக்கையில் எதிரே ஓடி வந்தான் சகுனி. "தருமா! வா! வா! நீ வருவதாகச் சொன்னார்கள். அதான் ஓடி வந்தேன்." பாசம் மிகுந்த குரலில் அழைத்தான் சகுனி.

"அடடா! முதலில் போயும் போயும் சகுனி முகத்திலா விழிக்க வேண்டும். இவர் எப்படி இங்கு வந்தார்? இவர் செய்த அட்டூழியங்களுக்கு நரகத்தில் எண்ணெய்க் கொப்பரையில் வெந்து கொண்டிருப்பார் என்று நினைத்தேன். தீயவர்கள் நரகத்தில் நெருப்புக்கு இரை என்றுதானே வேதம் சொல்கிறது. இவரைப் பார்த்தால் சுகமாக உண்டு வாழ்கிறவரைப் போலிருக்கிறாரே!"

"என்ன தருமா யோசனை?" சகுனி இடைமறித்தார்.

"இல்லை மாமா. எல்லாரும் எங்கே இருக்கிறார்கள் என்று தேடினேன். இங்கே என்ன ஏது என்று ஒன்றும் புரியவில்லை. இது சொர்கந்தானா?" கொஞ்சம் ஐயத்தோடே கேட்டான் தருமன்.

சிரித்து விட்டான் சகுனி. "மருமகனே! உன்னை உண்மையான பாசத்தோடு நான் வரவேற்றதிலிருந்தே தெரியவில்லையா! இது சொர்கந்தான் மருமகனே."

இத்தனை கொடுமை செய்த மாமனும் சொர்கத்தில் இருப்பதை தருமன் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை. தருமன் நினைத்ததைச் சகுனி புரிந்து கொண்டான். "மருமகனே! ஏதடா இவ்வளவு அடாது செய்த மாமன் சொர்கத்திலும் விடாது தொடர்ந்து வருகிறானே என்று பார்க்கிறாயா? நான் செய்த காரியங்கள் அனைத்தையும் இறைவன் பெயரால் செய்ததால் சொர்கம் எனக்கு கதவு திறந்தது. காந்தார தேசத்திலிருந்து அஸ்தினாபுரம் வந்தவன் நான். ஆனாலும் இறைவனை விடாது தொழுது, அவன் பெயரிலேயே அனைத்தையும் செய்ததால் இறைவன் அருளிய பரிசு இது."

தருமனக்கு இன்னொரு ஐயம் வந்தது. "அப்படியென்றால் தாங்கள் காந்தார தேசத்துச் சொர்கத்தில் அல்லவா இருக்க வேண்டும்? இங்கு என்ன செய்கின்றீர்கள்? காந்தாரி பெரியம்மா இருப்பதால் இங்கும் வந்து விட்டீர்களா?"

சிரித்து விட்டான் சகுனி. தருமனுக்குப் பதமாகச் சொன்னான் ஒரு மறுமொழி. "சொர்கம் என்பது தேசங்களுக்கல்ல. நேசங்களுக்கு. இங்கு அன்பின் வழியதுதான் அனைவரின் நிலை. மாண்டாரை அன்றி உயிரோடு மீண்டார் சொர்கத்தின் மகத்துவத்தை அறியார் என்பது உண்மைதான் போலும். மேலும் நீ உன் காந்தாரி பெரியம்மாவைப் பற்றிச் சொன்னாய். மருமகனே. நானும் ஒரு அண்ணன். எனக்கும் சகோதரி மேல் கொஞ்சம் பாசம் உண்டு. இங்கு வந்த பிறகு அது பல்கிப் பெருகி விட்டது. மேலும் காந்திரியைப் பார்க்கும் பொழுது உண்டாகும் அதே பாசம் உனது தாய் குந்தியைப் பார்த்தாலும் இப்பொழுது வருகிறது. சொர்க்கத்திற்கு நன்றி."

"என்ன அம்மாவையும் பெரியம்மாவையும் பார்த்தீர்களா?" ஆவல் பொங்கக் கேட்டான் தருமன்.

"ஆம் தருமா! உன்னுடைய தாயும் நலம். பெரியம்மாவும் நலம். இன்னொன்றும் சொல்ல வேண்டும். இங்கு உனது பெரியம்மா கண்களைக் கட்டிக் கொண்டிருக்கவில்லை. ஏனென்றால் சொர்கத்தில் குருடர்கள் இல்லை. உன்னுடைய பெரியப்பா அனைத்தையும் பார்க்கலாம். ஆகையால் கண்ணைக் கட்டிக் கொள்ளாத உனது பெரியம்மாவைப் பார்க்க உனக்கே புதுமையாக இருக்கும். சரி. வா. போய்ப் பார்க்கலாம்."

யுதிஷ்டிரன் வியப்பின் உச்சிக்கே போனான். சரி பெரியம்மாவையும் பெரியப்பாவையும் சந்தித்து ஆசி பெற எண்ணி சகுனியுடன் சென்றான்.

சற்று முன்னே நடந்திருப்பார்கள். யாரோ ஒரு பெண் சிரித்துக்கொண்டே சாலையின் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்கு ஓடினாள். அவள் சரக்கென்று கடந்து போனதால் அடையாளம் தெரியவில்லை. பின்னால் ஒரு ஆண்மகனும் ஓடினான். அட! அது கர்ணன். தருமனுக்குப் பாசம் பொத்துக் கொண்டு வந்தது. "அண்ணா என்று அழைத்தான்."

கர்ணனும் திரும்பிப் பார்த்தான். முகத்தில் வியப்பும் அன்பும் தெரிந்தன. கொடுத்துப் பழக்கப் பட்ட கர்ணனிடத்தில் கொடுக்க அன்பும் நிறைய இருந்தது. "தம்பி, நலமா? உன்னை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்." தருமனைக் கட்டி அணைத்துக் கொண்டான்.

தருமனுக்குக் கண்ணில் தண்ணீர் வழிந்தது. "அண்ணா என்று உங்களை வாய் நிறைய பூமியில் கூப்பிட முடியாமல் போனதை நினைத்து நான் வருந்தாத நாளே இல்லை. நீங்கள் இருந்து ஆட்சி செய்ய வேண்டிய அரியணையை நட்புக்காக துரியோதனனுக்குக் கொடுக்க போர் புரிந்தீர்களே. ஐயோ! உங்களுக்கு உரிய அந்த ஆட்சியை நான் அபகரித்தேனே. அண்ணா! எனக்கு மன்னிப்பே கிடையாது. இந்த பாவத்திற்கு விமோசனமே கிடையாதே!"

அழுத தம்பியைத் தேற்றினான் கர்ணன். "தம்பி யுதிஷ்டிரா, அழாதே. வா! நாம் முதலில் அன்னையைக் காணலாம். பிறகு தம்பியர்களைக் காணலாம்." தருமனின் கண்ணைத் துடைத்து அழைத்துச் சென்றான் கர்ணன். சகுனியும் உடன் சென்றான்.

சற்று நடந்ததுமே ஊர் வந்தது. அழகிய எடுப்பான வீதிகள். இருமருங்கிலும் புத்தம்புது வீடுகள். மாட மாளிகைகள். கூட கோபுரங்கள். நடுநடுவே அழகிய மலர்ச்சோலைகள். மடுக்கள். மடுக்களைச் சுற்றி அழகிய பொன்னிற அன்னங்கள். மடுவில் செந்தாமரையும் வெண்டாமரையும் பூத்துக் குலுங்கின. அந்தி வேளையோ எந்த வேளையோ என்று தெரியாமல் அல்லியும் மலர்ந்திருந்தது.

சூரியன் கண்ணில் தென்படவேயில்லை. ஆனாலும் வெளிச்சம் பரவியிருந்தது. அந்த வெளிச்சமும் கண்ணை உறுத்தவில்லை. தோலைச் சுடவில்லை. வியர்க்கவில்லை. என்னவோ ஒரு மென்மையான ஒளி பரவியிருந்தது போல சுகமாக இருந்தது.

பெரியம்மாவையும் பெரியப்பாவையும் பார்க்க அவர்கள் நீண்ட தூரம் நடக்க வேண்டியிருக்கவில்லை. காந்தாரியும் திருதுராஷ்டிரனும் குந்தியும் ஒரு பெயர் தெரியாத மரத்தடியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். பொன்னிறது மரத்தில் வெள்ளி இலைகளும் வைர மொட்டுகளும் பவழப் பூக்களும் நிறைந்திருந்தன. பார்த்த கண்ணை தருமனால் எடுக்க முடியவில்லை. மூவரின் கையிலும் கோப்பைகள் இருந்தன. ஏதோ அருந்திக் கொண்டிருந்தனர். கலகலப்பாகச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர்.

மூவரையும் வணங்கி விட்டு கர்ணன் சொன்னான். "மதிப்பிற்குரிய பெரியப்பாவிற்கும் பெரியம்மாவிற்கும் எனது வணக்கங்கள். தாயார் குந்திக்கும் எனது வணக்கங்கள். நமது யுதிஷ்ட்டிரன் நம்மிடம் வந்துள்ளான். அவனது வணக்கங்களை உங்களுக்குக் காணிக்கையாக்குகிறான்."

கர்ணன் சொன்னதும் தருமன் மூவரையும் பணிந்து எழுந்தான். குந்தி அவனை உச்சி முகர்ந்து அன்பை வெளிப்படுத்தினாள். யாருக்கும் பேச்சு வரவில்லை. காந்தாரிதான் முதலில் பேச்சைத் துவக்கினாள்.

"மகனே தருமா! உன்னை இன்றுதான் நான் கண்கொண்டு காண்கிறேன். உனது பெரியப்பாவும் அப்படித்தான். உன்னைச் சொர்கத்தில் காண மகிழ்ச்சியே. நீ வருவதை நாங்கள் ஏற்கனவே அறிந்திருந்தோம். எங்களோடு நீ வந்து சேர்ந்து நமது குடும்பம் ஒன்றாகச் சேர்வதில் மெத்த மகிழ்ச்சி. உன்னைச் சந்திப்பதில் சுயோதனன் மிகவும் மகிழ்வான்."

திருதுராஷ்டிரனும் காந்தாரியும் எப்பொழுதும் துரியோதனனை சுயோதனன் என்றுதான் அழைப்பார்கள். காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சல்லவா.

"தாயே தங்கள் அனைவரையும் இங்கு மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தம்பி துரியோதனனோடு சேர்த்து நூறுவரையும் சந்திக்க மகிழ்ச்சிதான் எனக்கு. அவர்கள் எங்கே இருக்கிறார்கள் இப்பொழுது?" கவுரவர்கள் நூறுவரும் சொர்கத்திலா இருக்கிறார்கள் என்ற ஐயம் தருமனுக்கு. தருமனின் ஐயத்தைத் தீர்க்கும் வகையில் குந்தி சொன்னாள்.

"யுதிஷ்டிரா! உனது தம்பிகள் நூற்று ஐவரும் இங்குதான் இருக்கின்றார்கள். மற்றவர்கள் இப்பொழுது எங்கேயிருக்கின்றார்கள் என்று தெரியவில்லை. ஆனால் சற்று முன்னேதான் சுயோதனனோடு பீமனும் விஜயனும் சென்றார்கள். அனேகமாக மானசரோவருக்குச் சென்றிருப்பார்கள் என்று நினைக்கிறேன். பீமன் அங்கு சென்ற கதையைச் சொல்லிக் கொண்டிருந்த பொழுது சுயோதனனுக்கும் அங்கு செல்ல ஆசை வந்தது. ஆகையால் அவர்கள் மூவரும் மானசரோவர் சென்று நீராடப் போயிருக்கிறார்கள்."

தருமனுக்குத் திடுக்கென்றது. ஏற்கனவே ஒருமுறை இப்படித்தான் துரியோதனன் பீமனைக் கட்டி ஆற்றில் போட்டான். அதே போல இப்பொழுதும் செய்து விட்டால் என்று அவன் மனம் அஞ்சியது. கொஞ்சமும் யோசிக்காமல் அனுப்பிய குந்தியின் மேல் லேசான கோவம் வந்தது. ஆனால் இங்கே வெளிக்காட்டினால் நன்றாக இருக்காது என்று பேசாமல் இருந்தான். நகுல சகாதேவர்களையாவது பார்க்க ஆசை கொண்டான்.

"அம்மா! நான் நகுலனையும் சகாதேவனையும் பார்க்க வேண்டும். அவர்கள் எங்கே அம்மா?"

"நகுலனும் சகாதேவனும் மாதரியோடும் தந்தையாரோடும் ஓடம் விளையாடுகிறார்கள். இன்னும் சற்று நேரத்தில் நம்மோடு வந்து சேர்வார்கள். அவர்களை அழைத்து வர பிதாமகர் பீஷ்மரும் பெரிய பாட்டியார் சத்தியவதியும் போயிருக்கிறார்கள்"

குந்தியை இடைமறித்தார் திருதிராஷ்டிரர். "குந்தி, முதலில் தருமன் தனது களைப்பைப் போக்கட்டும். தருமா! நீ நிற்பது கற்பக மரத்தடியில். உனக்கு வேண்டியவைகளைக் கேட்டு அருந்து. நல்ல கனிகளைக் கேள். இல்லை உனக்கு எது வேண்டுமோ அதைக் கேள். கிடைக்கும்."

லேசாகப் பசித்தது தருமனுக்கு. கற்பகமரத்திடம் எதையும் கேட்கலாம் அல்லவா. உண்டால் தனக்கு உண்மையிலேயே நிறைவு தரும் உணவு வேண்டும் என்று கேட்டான். ஒரு தங்கத் தாம்பாளத்தில் பலவித உணவுகள் வந்தன. காய்கறிகளைச் சேர்த்துச் சமைத்தது. சுட்ட இறைச்சி. செந்நெற் சோறு. கிண்ணம் நிறைய நெய். பழவகைகள் என்று இருந்தது. அமர்ந்து உண்டான். கர்ணனும் சகுனியும் அமுதரசம் வேண்டுமென்று கற்பக மரத்திடம் கேட்டு அருந்தினார்கள்.

உண்ட பின்பு தருமன் சற்று அமைதியானான். கர்ணனைப் பார்த்து கேட்டான். "அண்ணா! சொர்கத்தைப் பற்றிச் சொல்லுங்கள் அண்ணா! மண்ணுலகிற்கும் இந்த விண்ணுலகிற்கும் என்ன வேறுபாடு?"

"தம்பி, சொர்கம் என்பது இன்பபுரி. இங்கு இறைவனின் அன்புக்குப் பாத்திரமானர்கள் வாழும் ஊர். இறைவனின் அன்பிற்குப் பாத்திரமாகாதவர்களும் இறைவனை வணங்காதவர்களும் தண்டனைக்கு உள்ளாவார்கள் என்று சொல்கிறார்கள். நரகத்தில் நெருப்பில் உழல்வார்கள் என்றும் சொல்கிறார்கள். ஆனால் நான் பார்த்ததில்லை.

இந்தச் சொர்கத்தில் பசியில்லை. பட்டினியில்லை. வேண்டிய பொழுது வேண்டியதைச் சாப்பிடலாம். எல்லாம் கிடைக்கும். உடலும் ஒத்துளைக்கும். இங்கு ஊனம் இல்லை. ஒருவரின் அனைத்து அவயங்களும் எல்லா வகையிலும் ஒத்துழைக்கும். இரவுமில்லை. பகலுமில்லை. நமது மனம் எப்படி விரும்புகிறதோ அப்படியிருக்கும் பருவநிலை. மழையை விரும்பினால் விரும்பியவருக்கு மட்டும் மழை பெய்யும். ஆனால் மற்றவருக்கு அதே இடம் நிலாக் காயலாம். இல்லை வெயிலும் அடிக்கலாம். எல்லாம் நமது மனத்தையும் ஆசையையும் பொருத்தது. ஆங்காங்கே கற்பகதருக்கள். வேண்டிய உணவும் பானங்களும் கிடைக்கும். இங்கே பெண்கள் எப்பொழுதுமே தூயவர்கள். அவர்களோடு கூடிக் களிப்புறலாம். இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்."

தருமனுக்கு அலுப்புத் தட்டத் தொடங்கியது. அவன் மனமும் உடலும் திரவுபதிக்காக ஏங்கியது. திரவுபதி இப்பொழுது இங்கு வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தான். நினைத்த இடமோ கற்பக மரத்தடி. அது திரவுபதியின் மனதை மாற்றி அங்கு வரவழைத்தது.

தொலைவில் திரவுபதி வருவது தருமனின் கண்களுக்குப் புலப்பட்டது. "எத்தனை முறை பார்த்த முகம். எளிதில் மறக்குமா! அந்த நடையும் உடையுமே சொல்லுமே பாஞ்சாலியின் பாங்கை! ஆனால் உடன் வருவது யார்? தெரிந்தவன் போல இருக்கிறது. நகுலனா? இல்லையே. நகுலன் தந்தையோடும் தாயோடும் ஓடம் விளையாடப் போயிருக்கிறானே. சகாதேவனும் உடன் சென்றிருக்கிறான். அருச்சுனனும் பீமனும் துரியோதனனைக் கூட்டிக் கொண்டு மானசரோவரம் வரை சென்றிருக்கிறார்கள். வேறெந்த ஆண்மகன் பாஞ்சாலியின் தோள் மீது கை போட்டுக் கொண்டு விளையாட முடியும்?"

பாஞ்சாலியும் உடன் வருகின்றவனும் இன்னும் நெருங்கி வந்தார்கள். இப்பொழுது அது யாரென்று யுதிர்ஷ்டனுக்குத் தெரிந்தது. தெரிந்ததுமே தலை சுற்றியது. இரத்தம் கொதித்தது. "பாவி துச்சாதனா! நீயா! எவ்வளவு துணிவிருந்தால் பாஞ்சாலியின் தோளில் கை போட்டுக் கொண்டு வருவாய்! குருஷேத்திரத்தில் கண்ட பீமனின் கதையின் வேகத்தை உனது நெஞ்சு மறந்து விட்டதா! அவை நடுவே அவளை அம்மணமாக்க நினைத்து சீலையை உரித்தாயே! உன் தோலைப் போர்க்களத்தில் உரித்தது மறந்து போனதா? ஆனால்.........பாஞ்சாலியும் உன்னோடு குலவிக் கொண்டு வருகிறாளே! என்ன ஆயிற்று!"

தருமனின் ஐயத்திற்குக் காரணமில்லாமல் இல்லை. திரவுபதியானவள் துச்சாதனனோடு கூடிக் குலவிக் கொண்டுதான் வந்தாள். ஏதோ காதலர் இருவர் மகிழ்ந்து சுகித்து அந்த நினைவுகளில் திளைத்து வருவது போல இருந்தது. அருகில் வரட்டும் என்று கொதித்துக் கொண்டிருந்தான் தருமன்.

தருமனைக் கண்டதுமே திரவுபதியின் முகம் விடியற்காலை மலர் போல மலர்ந்தது. "குந்தி நந்தனா வணக்கம். உங்கள் வரவு நல்வரவாகுக!" பணிந்து வரவேற்றாள். அப்படியே அங்கிருந்த மற்றவர்களுக்கும் வணக்கம் சொன்னாள். துச்சாதனனும் தருமனை வரவேற்று மற்றவர்களை வணங்கினான்.

தருமன் தன்னுடைய கட்டுப்பாட்டை இழந்து கத்தினான். "திரவுபதி! இதென்ன அலங்கோலம். துச்சாதனனோடு தோளோடு தோள் சேர்த்துக் கொஞ்சிக் கொண்டு வருகின்றாயே! நீ குலமகளா? விலைமகளா? உனக்கு அறிவு மழுங்கிப் போயிற்றா!"

இப்படி அவன் கேட்டது எல்லாரையும் திடுக்கிட வைத்தது. திருதுராஷ்டிரர் எதையோ சொல்ல வந்தார். ஆனால் திரவுபதி அவரைத் தடுத்து தானே பேசினாள். "மாமா! சற்று அமைதியாக இருங்கள். நான் அவருக்கு விடை சொல்கிறேன். ஆரிய புத்திரரே! கணவன் என்ற வகையில் அதிகாரத்தைக் காட்ட இது ஒன்றும் மண்ணுலகம் இல்லை. இந்திரப்பிரஸ்த சட்டங்கள் சொர்கத்தில் நீதிமன்றத்தில் மதிக்கப்படுவதில்லை..

சொர்கம் என்பது இன்பமயமானது. இங்கு பெண்கள் என்றென்றும் நித்தியகன்னிகள். அது ஆடவருக்கு ஆண்டவன் அளிக்கும் பரிசு. இறைவனை நம்பி வணங்கி வரும் ஆண்டவர்களுக்கு என்றென்றும் இன்பம் தருவதே சொர்கம். இங்கே இல்லை என்று சொல்ல எதுவும் இல்லை. துச்சாதனனோடு நான் கூடினேன். ஆமாம். இருந்தும் நான் கன்னிகைதான். ஐயமிருந்தால் என்னைக் கூடித் தெளிவு பெறுங்கள்."

உலகமே சுழல்வது போல இருந்தது தருமனுக்கு. தருமங்கள் அனைத்தையும் அறிந்தவன் என்று எண்ணிக் கொண்டிருந்தவனுக்கே திரவுபதியின் பேச்சு குழப்பமாக இருந்தது. "இதென்ன பைத்தியக்காரத்தனம். கண்டவனோடு கூடுவதா பெண்மை?" எதையோ கேட்க வேண்டும் என்பதற்காக கேட்டான்.

திரவுபதியிடம் சீற்றமில்லை. ஆனால் உறுதியாகச் சொன்னாள். "பெண்மை என்றால் என்னவென்பதை ஆண்மை விளக்கக்கூடாது. ஒரு பெண்ணின் கன்னித்தன்மைதானே ஆடவர்க்குத் தேவை. அதைக் காப்பதுதானே பெண்ணின் கடமை என்று மண்ணுலகில் சொல்கின்றீர்கள். அதற்குத்தானே எங்களுக்கு அத்தனை கட்டுப்பாடுகள். இதோ பாருங்கள். உடலை முழுமையாக மூடியிருக்கிறேன். எனது அங்கங்கள் மறைக்கப்பட்டிருக்கின்றன. எந்த ஆடவனும் என்னைப் பார்த்து கிறங்க மாட்டான். அதுதானே உங்களுக்கு வேண்டியது. பெண்கள் மனதில் என்ன நினைத்தால் உங்களுக்கு என்ன வந்தது?"

தருமன் கொஞ்சம் சுதாரித்துக் கொண்டான். "திரவுபதி, நீ என் மனைவி. பாண்டவர் ஐவருக்கும் மனைவியாகக் கடமைப் பட்டவள். எங்கள் பிள்ளைகள் விளைந்த நிலம் நீ. இப்படி மற்றவர்களோடு கூடினால் எப்படி? அதற்கு விளக்கம் சொன்னால் எப்படி?"

சிரித்து விட்டாள் பாஞ்சாலி. "ஆரிய புத்திரருக்கு இன்னும் விளங்கவில்லை போலும். மனைவி என்றால் அழைத்ததும் வந்து கூட வேண்டும். வேசி போல நடந்து கொள்ள வேண்டும். மறுக்கக் கூடாது. இல்லையா! உங்களுக்குப் பிள்ளைகளைப் பெற்றுப் போடும் இயந்திரமாக இருந்தால் போதும். அல்லவா!

எங்கள் மாதவிடாய்க் கணக்கை வைத்துதானே நாங்கள் ஒருவனுக்கு மட்டுமே ஆனவள் என்று ஆண்களால் உபதேசிக்கப்பட்ட மண்ணுலக நீதி சொல்கிறது. இது விண்ணுலகம். ஆனாலும் மண்ணுலகத்திலும் புரட்சி செய்தவர் நீர். உங்கள் சகோதரர் ஐவருக்கும் மனைவியாக நான் இருந்ததே மண்ணுலகில் பெரும் புரட்சிதான். இதை பல காலம் கடந்தாலும் ஆணாதிக்க வெறியர்கள் கேலி செய்து கொண்டுதான் இருப்பார்கள்.

அப்படிப் புரட்சி செய்த நீங்கள் கூட விளைநிலம் என்று பேசத் தொடங்கி விட்டீர்கள். சொர்கத்தின் நீதி தெரியாமல் பேசாதீர்கள். இங்கே மாதவிலக்கு என்ற தொல்லையே எங்களுக்கு இல்லை. ஆகையால் எங்களோடு யார் கூடினாலும் பிரச்சனையில்லை. ஆகையால் எங்களோடு கூடியவன் விட்டு விலகினால் எத்தனை நாள் கழித்து அவன் விலகலாம் என்று கணக்குப் போட முடியாது.

இதை சொர்கத்திலுள்ள ஆடவர்கள் அனைவருமே அறிவார்கள். நீங்கள் உயிரோடு இங்கு வந்திருக்கின்றீர்கள். உயிரோடு உங்கள் இதயமும் வந்ததால், அது அங்குள்ள நியாயங்களையே இங்கும் பேசுகிறது. பாவம்! பொருந்தாத இடத்தில் இருக்கின்றீர்கள்."

இப்பொழுது திருதுராஷ்டிரன் வாயைத் திறந்தான். "யுதிஷ்டிரா! பெண்கள் பிள்ளைகளைப் பெறுவதால் மண்ணுலகில் அவர்களை அடக்கி அதையே அவர்கள் சிறப்பு என்று அவர்களும் எண்ணும் அளவிற்குச் செய்ய முடிந்தது. ஆனால் இது சொர்கம். இங்கு பெண்கள் கருத்தரிப்பதே இல்லை. ஆகவே அவர்கள் யாரிடம் கூட வேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்து கொள்கிறார்கள். மேலும் இங்கு ஆண்களும் தங்கள் நிலையை உணர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். இங்கு எந்த ஆணும் எந்தப் பெண்ணையும் வன்முறை கொண்டு கூடுவதில்லை. சொர்கம் அவர்களுக்கு அந்த அறிவைத் தந்திருக்கிறது. ஆகையால் வன்முறை செய்து விட்டு பெண்களின் ஆடை மீதும் நடவடிக்கை மீதும் குற்றம் சொல்வதுமில்லை. சொர்கத்திற்கு வரும் பொழுதே அனைவரும் நல்லவர்களாகவும் இங்குள்ள விதிகளுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்கின்றார்கள்."

தருமனுக்குக் கிறுக்குப் பிடிக்கத் தொடங்கியிருந்தது. திருதுராஷ்டிரன் விட்ட இடத்தில் கர்ணன் தொடர்ந்தான். "தம்பி தருமா! இறைவனை வணங்கி அவன் மீது உண்மையான நம்பிக்கை கொண்டு வாழ்ந்தவர்களுக்கான சொர்கமும் அதன் விதிகளும் சொர்கத்தின் உண்மையான குடியினருக்குத் தானாகப் புரியும். தெரியும். ஆகையால் இங்கு இதனால் குழப்பங்கள் எதுவுமே வருவதில்லை."

முழுப் பைத்தியமாகியிருந்தான் தருமன். இரண்டடி பின்னால் சென்று கத்தினான். "இல்லை. நீங்கள் சொல்வதெல்லாம் பொய். என்னை ஏமாற்றப் பார்க்கின்றீர்கள். இதுவும் சொர்கத்திற்கு வருவதற்கான ஒரு சோதனையா! உண்மையைச் சொல்லுங்கள். நீங்கள் எல்லாரும் உண்மையிலேயே எனது உறவினர்களா? இல்லை மாயையா? எனக்கு உடனடியாக பகவான் ஸ்ரீகிருஷ்ணரைப் பார்க்க வேண்டும். அவர் எங்கேயிருக்கிறார்? அவரிடம் என்னை அழைத்துப் போங்கள். என்னை அழைத்துப் போங்கள்." கதறினான் தருமன்.

கொஞ்சம் முன்னால் வந்து சொன்னான் சகுனி. "மருமகனே! கிருஷ்ணன், ருத்ரன் என்றெல்லாம் நீ வணங்கியது மண்ணோடு போயிற்று. இங்கேயும் அங்கேயும் எங்கேயும் இறைவன் ஒருவனே. நீ விரும்புகிற வடிவத்தில் உனக்காக ஓடிவந்த இறைவன் உருவாயும் அருவாயும் இருப்பவன். கல்லில் இருப்பதால் கல்லே கடவுள் அல்ல. இறைவன் கல்லிலும் சொல்லிலும் நமக்கு உள்ளிலும் நம்மைக் கடந்தும் இருப்பவன்.

நீ உன் பண்பாட்டோடு ஒட்டி இறைவனைப் படைத்தாய். வணங்கினாய் உனக்காக உன் மீது கருணை கொண்டு நீ விரும்பியபடியே வந்தார் இறைவன். ஆனால் சொர்கம் அனைவருக்கும் பொதுவானது. ஆகையால் இறைவனை இங்கே தேடிப் போகவேண்டியதில்லை. உண்மையாக அழைத்தால் உனக்காக எங்கும் இருப்பவர் இங்கும் தெரிவார்."

"இல்லை. இல்லை. என்னை ஏமாற்றுகின்றீர்கள். என்னைக் குழப்புகின்றீர்கள். நான் இங்கிருந்து செல்கிறேன். உங்களோடு என்னால் இருக்க முடியாது. இது ஏதோ மூளையைக் குழப்பும் மாயை நிறைந்த சோதனை."

சொல்லிக் கொண்டே திரும்பி ஓடினான் தருமன். முதலில் தருமனைத் தடுக்க நினைத்தவர்கள் அந்தத் திட்டத்தை உடனேயே கை விட்டார்கள். சொர்கத்தினர் அவர்கள் தத்தம் வேலையைப் பார்க்கப் போய் விட்டார்கள்.

விடுவிடுவென ஓடினான் தருமன். எங்கே போவதென்றே தெரியவில்லை. அவன் உள்ளம் முழுவதும் நூறு சிந்தனைகள் சிலந்தை வலை கட்டியிருந்தன. எங்கே ஓடுகிறோம் என்பதே தெரியாமல் ஓடினான். தடக்கென்று காலை ஏதோ ஒன்று இடறியது. தடுமாறி கீழே சரிந்தான். கீழே என்றால் உண்மையிலேயே கீழே. சர்ர்ர்ர்ர்ர்ரென்று மண்ணுலகை நோக்கி வீழ்ந்தான். ஓவென்ற ஓலம் உலகிற்கே கேட்கும் வகையில் கத்தினான். ஆனால் யார் காதிலும் விழவில்லை. சத்தென அவன் உடல் இமயத்தில் இடித்தது விழுந்தது. அந்த ஒரு நொடியில் உண்மையிலேயே உயிரை விட்டான் தருமன்.

அன்புடன்,
கோ.இராகவன்

Sunday, September 18, 2005

பெங்களூரில் ஓட்டல்கள் பாகம் - இரண்டு

இரண்டாம் பாகம்

இத்தனை விடுதிகளா என்று மலைத்திருப்பீர்கள். இன்னும் இருக்கின்றன. குறிப்பாக இந்திரா நகரில் இருக்கும் மற்றொரு சைவ விடுதியைப் பற்றிச் சொல்லியே தீர வேண்டும். அதுதான் இட்லி பஜார். சி.எம்.ஹெய்ச் ரோடு என்பது இந்திரா நகரின் மிகவும் பிரபலமான ரோடு. பல பெரிய கடைகள் அங்கே உள்ளன. அங்கு இருப்பதுதான் இட்லி பஜார். தமிழர்களால் நடத்தப் படுவது. சுத்த சைவம். இங்கு மீல்சும் கிடைக்கிறது.

இருந்தாலும் இங்கு பலகாரங்களே மிகப் பிரபலம். கையைக் கடிக்காத விலை. வாயை விடாத சுவை என்று சமீபத்தில் பிரபலமான கடைகளில் இதுவும் ஒன்று. இங்கு இட்டியிலேயே பல வகை. தோசையில் பல வகை என்று நமது நாவிற்கு வேலை கொடுத்துக் கொண்டே இருக்கின்றார்கள். அனைத்திலும் கொத்துமல்லி இட்டிலி முன்னிலையில் இருக்கிறது என்று சொல்வேன். மெத்தன வெந்த இட்டிலிகளை நான்காக வெட்டி, அவைகளைக் கொத்துமல்லிச் சட்டினியில் பிரட்டி எடுத்துத் தேங்காய்ச் சட்டினியோடும் பொடியோடும் தருவார்கள். கண் முந்தியதோ. கை முந்தியதோ. வாய் முந்தியதோ. வயிறு முந்தியதோ என்றுதான் சொல்ல வேண்டும். இங்கு அடையும் நன்றாகவே இருக்கிறது. கொஞ்சம் மெல்லிசாக இருந்தாலும் சிவக்கச் சுட்டுத் தருகிறார்கள். கூட அவியலும். சொல்லவே வேண்டாம். கண்டிப்பாக ஒருமுறையேனும் போக வேண்டிய கடை.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய மற்றொரு விடுதி ஹள்ளி மனே. அதாவது தமிழில் பட்டி வீடு. பட்டிக்காட்டு வீடு என்ற பெயரில் கர்நாடக உணவு வகைகள் கிடைக்கின்றன. மல்லேஷ்வரத்தில் இருக்கிறது இந்த ஹள்ளி மனே. இங்கும் மீல்ஸ் மற்றும் டிபன் வகைகள் கிடைக்கும். ஐம்பது ரூவாயில் மீல்ஸ். தக்காளி சூப் தருகிறார்கள். நானும் பனீர் பட்டர் மசாலாவும் வருகிறது. அனேகமாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சப்ஜி தருகிறார்கள் என நினைக்கிறேன். பிறகு புலாவும் தாலும் (அதாங்க பருப்பு). அப்புறம் வழக்கமான கூட்டு, பொரியல், சாம்பார், ரசம், தயிர் என்று சம்பிரதாயமாக முடியும்.

கர்நாடக சாம்பார்களைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். தமிழர்கள் எல்லாரும் பெங்களூர் வந்ததுமே கன்னட சாம்பார் எதிர்ப்புச் சங்கத்தில் தங்களைப் பதிவு செய்து கொள்வார்கள். பருப்பிருக்கும். ஆனால் இருக்காது. காயிருக்கும். ஆனால் இருக்காது. சுவையிருக்கும். ஆனால் இருக்காது. லேசாக இனிப்பாக இருக்கும் அந்தச் செந்நிறக் குழம்பில் மிதக்கும் வெள்ளரிக்காயைக் கண்டு பயந்து பரதேசம் போனவர்களைப் பட்டியல் போட முடியாது. பயமுறுத்தவில்லை. உண்மையைச் சொல்கிறேன்.

ரசம் கொஞ்சம் தப்பித்துக் கொண்டது. அதே முறையான உடுப்பிக்காரர்களின் மென்சின் சாறு (மிளகாய்ச் சாறு) என்றால் விடாதீர்கள். கொஞ்சம் கிண்ணத்தில் வாங்கிச் சாப்பிடுங்கள். நன்றாக இருக்கும்.

சரி. ஹள்ளி மனேக்கு வருவோம். இங்கு வழக்கமான இட்டிலி தோசை வகைகள் எல்லாம் கிடைக்கும். கர்நாடகத்தில் அக்கி ரொட்டி என்று பிரபலம். அக்கி என்றால் அரிசி. அரிசியில் செய்த ரொட்டிதான் அக்கி ரொட்டி. செய்வது எளிதுதான். ஆனாலும் பழக்கம் வேண்டும். முடியாதவர்கள் நேராக ஹள்ளி மனேக்குச் சென்று வாங்கித் திங்கலாம். ஏற்கனவே சர்க்கரை. இதற்கு மேலே அக்கி ரொட்டியா என்று சர்க்கரை வியாதிக்காரர்கள் அலுத்துக் கொள்ள வேண்டாம். அங்கே ராகி ரொட்டியும் கிடைக்கிறது. கேழ்வரகில் செய்த ரொட்டி. சுவையாக இருக்கும். எண்ணெய் குறைவாக ஊற்றிச் செய்யச் சொல்லுங்கள். கூட தேங்காய்ச் சட்டினியும் வெங்காயச் சட்டினியும் தருகிறார்கள். ஒன்றோடு நிறுத்த மாட்டீர்கள். கூட்டம் குறைவாக இருக்கும். ஆகையால் நின்று கொண்டுதான் சாப்பிட வேண்டியிருக்கும்.

காமத் யாத்ரீ நிவாஸ் பற்றியும் சொல்ல வேண்டும். இதுவும் கன்னட ஓட்டல்தான். பெங்களூரில் மெஜஸ்டிக் பகுதியில் இருக்கிறது. இங்கு மீல்ஸ் என்றால் சப்பாத்தி கிடைக்காது. ஜோளத ரொட்டிதான் கிடைக்கும். அதாவது சோள ரொட்டி. சப்பாத்தி போலத்தான் இருக்கும். ஆனால் சுவையில் சின்ன மாற்றம். வடகர்நாடகாவில் சோளம் மிகப் பிரசித்தம். அத்தோடு கத்தரிக்காய்க் கூட்டு. இது போதும் அவர்களுக்கு. வெளுத்து வாங்குவார்கள்.

இப்பொழுது காமத் யாத்ரீ நிவாஸ் அவ்வளவு நன்றாக இல்லை என்று சொல்கிறவர்களும் உண்டு. நானும் போய் நாளாகிறது. பெங்களூரிலிருந்து மைசூர் போகும் வழியில் ஒரு காமத் யாத்ரீ நிவாஸ் இருக்கிறது. அங்கே உணவோடு வெற்றி வேரில் செய்த பொருட்களும் கிடைக்கும். நான் இரண்டு வெற்றி வேர் விசிறிகள் வாங்கினேன். வெற்றி வேர் செருப்பு, பை, பர்ஸ் என்று பல பொருட்கள் கிடைக்கின்றன.

மேலும் அங்கு போனால் கஷாயா பேக்கு என்று கேளுங்கள். அதாவது கஷாயா வேண்டும். இது சுக்குத் தண்ணி போலத்தான். ஆனால் பாலோடு கலந்து தருவார்கள். மெல்லிய நறுமணம் கமழ சுவையாக தொண்டைக்குள் கஷாயா இறங்கும் சுகமே அலாதி. அதுவும் மாலை வேளையில் லேசாக காத்து வீசும் பொழுதென்றால் கேட்கவே வேண்டாம். இன்னொந்து கஷயா என்று நீங்கள் கேட்கா விட்டால் உணவை வாழ்வதற்காகவே சாப்பிடுகிறவர் நீங்கள். அங்கே ரவாதோசையும் நன்றாக இருக்கும்.

பெங்களூரில் நாட்பட இருப்பவர்கள் கேட்டிருக்கும் மற்றொரு உணவு ராகி மொத்தே. கேள்வரகுக் களியின் உருண்டை வடிவம். தேவே கவுடாவிற்கு மிகவும் பிடித்த உணவு. வடகன்னடட்தில் சோளம் என்றால் தெற்கில் கேப்பை. இதை எல்லாரும் விரும்பி உண்வுவது கடினந்தான். ஆனால் எனக்கு மிகவும் பிடிக்கும். இதை சைவ அசைவ முறைகளில் சாப்பிடலாம். சைவ முறையென்றால் தயிரே சிறந்தது. ராகி மொத்தேயை தட்டில் போட்டுப் பிசைந்து அதில் தயிரை ஊற்றிப் பிசைந்து கொண்டு, கொஞ்சம் உறைப்பாக எதையும் தொட்டுக் கொண்டு சாப்பிட்டால் அமுதமாக இருக்கும். நான் பச்சை மிளகாயை கடித்துக் கொண்டும் சாப்பிட்டிருக்கிறேன். விதான சவுதாவை ஒட்டியிருக்கும் எம்.எல்.ஏ ஹாஸ்டலுக்குள் போக முடிந்தவர்கள் அங்கிருக்கும் விடுதியில் சாப்பிட்டுப் பாருங்கள். நன்றாக இருக்கும்.

அசைவ முறைப்படி என்றால் கறிக்குழம்புதான். கருப்பாக இருக்கும் உருண்டையின் தலையில் கறிக்குழம்பை ஊற்றிச் சாப்பிடுகிறவர்களைப் பார்த்தீர்களானால் அவர்கள் இந்த உலகத்தில் இல்லை என்பது விளங்கும். ஆனால் ஒன்று. ராகி மொத்தே சாப்பிட வேண்டுமானால் நல்ல விடுதியைத் தேர்ந்தெடுத்து உண்ணுங்கள். அங்கு நீங்கள் சந்திக்கும் கன்னட நண்பர்களிடம் கேட்டுச் செல்லுங்கள்.

இப்படி அடுக்கிக் கொண்டே போகையில் மற்றொன்றையும் சொல்லியே ஆக வேண்டும். ஆமாம். ஆந்திர ஓட்டல்களைத்தான். ஆந்திரா ஸ்டைல் என்ற பெயரைப் போட்டுக் கொண்டு பெங்களூரில் தெருவிற்கு ஒரு ஓட்டலாவது இருக்கிறது. அவைகள் எந்த அளவிற்கு ஆந்திர உணவுகளைக் குடுக்கின்றன என்று தெரியாது. அவைகளில் சிலவற்றைச் சொல்லியே ஆகவேண்டும். காரணம் நானும் அங்கு போய் வெளுத்து வாங்கியிருக்கிறேன்.

நந்தினி என்றால் காமதேனுவின் மகள். அள்ளக் குறையாத உணவு தரும் நந்தினிக்காகத்தான் விசுவாமித்திரரே சண்டை போட்டாராம். அந்தப் பெயரில் அமைந்திருக்கும் இந்த ஆந்திர ஓட்டல் பெங்களூரில் பல கிளைகளை வைத்துள்ளது. அனைத்திலும் சுவை கிட்டத்தட்ட ஒரே போலத்தான் இருக்கும்.

இங்கு ஆந்திர மீல்ஸ் கிடைக்கும். அத்தோடு ரொட்டி, நான் போன்ற வடக்கத்தி உணவுகளும் கிடைக்கும். அத்தோடு அசைவ உணவு வகைகளும் இங்கு மிகவும் பிரசித்தம். ஐதராபாத் பிரியாணியும் இங்கு கிடைக்கும். ஆனாலும் இங்கு எனக்கு மிகவும் பிடித்தது தோசை இட்டிலி கூட்டணிதான்.

மாலை வேளைகளில் மட்டும் தோசை+கோழிக் குழம்பு, தோசை+ஆட்டுக்கறிக் குழம்பு ஆகியவை கிடைக்கும். நாட்டுக் கோடி புலுசு, மாம்ச புலுசு என்று சொல்வார்கள். சேப்பாலு புலுசு (மீன் குழம்பு)ம் கிடைக்கும். இட்டிலிப் பிரியர்கள் தோசைக்குப் பதிலாக இட்டிலி வாங்கிக் கொள்ளலாம். லேசான குளிரடிக்கும் பெங்களூரின் மாலை வேளைகளில் (குறிப்பாக மழைக்காலத்தில்) இந்தக் கூட்டணியை அடித்துக் கொள்ள ஒன்றுமேயில்லை. சைவப் பிரியர்களுக்காக கேரட் 65 கிடைக்கிறது. நன்றாகவே இருக்கிறது. சிக்கன் 65 அளவிற்கு இல்லையென்றாலும் சைவர்களுக்குச் சுவையாகவே இருக்கும்.

இத்தோடு இரண்டாம் பாகம் முடிந்தது. அடுத்த பாகத்திலும் ஆந்திரா தொடரும். அதுவும் ஒரு அருமையான ஓட்டலோடு.

Wednesday, September 14, 2005

பெங்களூரில் ஓட்டல்கள் பாகம் - ஒன்று

பெங்களூரில் ஓட்டல்கள் பாகம் - ஒன்று

கொஞ்சம் சீரியசான விஷயங்களையே எழுதிக் கொண்டிருந்தால் எப்படி என்று ஒரு மாறுதலுக்குச் சின்ன தொடர். பெங்களூரில் நான் ருசித்த ரசித்த உணவு விடுதிகளைப் பற்றி ஒரு சின்ன அறிமுகம். சின்ன அறிமுகமே தொடராக வருகிறது பாருங்கள்.

என்னுடைய உணவுப் பழக்கம் என்ன? மிகவும் எளிமையான சிக்கலான உணவுப் பழக்கமே என்னுடையது. காலையில் கார்ன் ஃப்ளேக்ஸும் பாலும். பகலில் அலுவலகத்தில் சப்பாத்தியும் கூட்டும். கூட ஒரு கப் தயிர். ஒவ்வொரு வேளை சப்பாத்தியைக் குறைத்துக் கொண்டு சோறு எடுத்துக் கொள்வதுண்டு. இரவில் பெரும்பாலும் கோதுமை ரவைதான். உடன் பாசிப்பருப்பும் காய்கறிகளும் போட்டு கதம்பமாகச் செய்து சாப்பிடுவதுதான் வழக்கம். தயிரும் சேர்த்துக் கொள்வதுண்டு.

இரவில் தொட்டுக்கொள்ள ஏதேனும் வேண்டுமென்று தோன்றினால் ஃபிரீசரில் இருந்து இரண்டு சிக்கன் சாசேஜ்களையோ சிக்கன் ஃபிங்கர்களையோ லேசாக எண்ணெய்யில் வதக்கிக் கொள்வதுண்டு.
இது பெரும்பாலான வார நாட்களில் நடப்பது. வார இறுதியில் சைவமோ அசைவமோ தோன்றியதைச் செய்து சாப்பிடுவது. ஆனால் அத்தோடு முடிகிறதா பெங்களூரில். எத்தனையெத்தனையோ வகையான ஓட்டல்கள் புதிது புதிதாக வருகையில் எதைத் தேர்ந்தெடுப்பது?

எனது வயிற்றைச் சோதனைச் சாலையாக்கி ஓரளவுக்கு சிறந்த ஓட்டல்களைத் தேர்ந்தெடுத்துள்ளேன். அங்கே என்ன கிடைக்கும் என்பதையும் முடிந்த வரை உங்களுக்குச் சொல்கிறேன்.

நான் தமிழன். தென்னிந்தியன். ஆகையால் முதலில் தமிழ் நாட்டு உணவு விடுதிகளையும் தென்னிந்திய விடுதிகளையும் பற்றிச் சொல்லி விடுகிறேன்.
கதம்பம் என்ற ஓட்டலைச் சொல்லியே ஆக வேண்டும். ஜெயநகரில் இருக்கிறது. முன்பு டிக்கென்சன் ரோட்டிலும் இருந்தது. இப்பொழுது அதை மூடி விட்டார்கள். மிகவும் அருமையான ஐயங்கார் உணவுகள் கிடைக்கும். அங்கு கிடைக்கும் மெது தோசை மிகவும் அருமை. மெல்லிய துணி போன்ற இரண்டு தோசைகளோடு பருப்புத் துவையலும் குருமாவும் குடுப்பார்கள். மேசையில் பொடியும் எண்ணெய்யும் இருக்கும். நான் குருமாவை தலாக்கி விட்டு பொடியையும் எண்ணெய்யையும் சேர்த்துக் கொள்வேன். அடடா! அனுபவிக்க வேண்டுமய்யா!

அவர்களின் அடுத்த சிறந்த படைப்பு புளியோதரை. கூட கெட்டித் தயிர் ஒரு கப் தருவார்கள். ஸ்பூனில் தயிரை எடுத்து புளியோதரையோடு கலந்து சுவைத்தால் அமுதம் என்பதற்குப் பொருள் விளங்கும். அடுத்தது வெண்பொங்கல். உதிரியாக இருக்காது. கொழகொழப்பாக இருக்கும். அதனோடு தேங்காய்ச் சட்டினியும் புளிக்கரைசலும். தேங்காய்ச் சட்டினிக்கு மங்களம் பாடி மூடி வைத்து விட்டு, தாளித்த புளிக்கரைசலை (லேசான தித்திப்பு இருக்கும்) பொங்கலோடு கலந்தடிக்க மூன்று நாட்களுக்கு நாக்கு அதை மறக்காது.

எல்லா தமிழ் உணவுகளும் கிடைக்குமென்றாலும் இவை மூன்றுமே கதம்பத்தில் எனக்குப் பிடித்தவை.

அடுத்து சொல்ல வேண்டியது எம்.டீ.ஆரைப் பற்றித்தான். அவர்களின் ரெடிமேட் உணவுகள் எங்கும் கிடைக்கின்றன. மாவள்ளி டிஃபன் ரூம் என்பதுதான் எம்.டீ.ஆர். பெங்களூரிலுள்ள பழைய ஓட்டல். இன்னும் மாறாமல் இருக்கிறது. இங்கு ஸ்பெஷல் என்றால் மீல்ஸ்தான். எழுபத்தைந்து ரூபாய். முதலிலேயே டோக்கன் வாங்கி விட்டு வரிசையில் நின்று இடத்தைப் பிடிக்க வேண்டும். அவ்வளவு கூட்டம் வரும்.

முன்பெல்லாம் வெள்ளி முலாம் பூசிய தட்டில்தான் பரிமாறினார்கள். இப்பொழுது கூட்டம் கூடக் கூட எவர்சில்வர் தட்டில்தான் பரிமாறல். ஆனால் பழச்சாறு மட்டும் வெள்ளி பூசிய டம்ளரில் வரும். மீல்ஸ் என்பது அள்வில்லாதது. தோசை/சப்பாத்தி/பூரி/ருமாலி ரொட்டி இவற்றில் ஒன்று கொடுப்பார்கள். எத்தனை வேண்டுமோ கேட்டு வாங்கிச் சாப்பிடலாம்.
பிறகு ஒரு கலந்த சாதம் வரும். புளியோதரை, எலுமிச்சை சாதம், தேங்காய்ச் சோறு என்று ஏதாவது ஒன்று இருக்கும். கூட்டுகளும் சட்டினிகளும் வரும். கூட சிப்ஸ் கொடுப்பார்கள். பாயாசம் இருக்கும். ஒரு ஸ்வீட் இருக்கும். பழச்சாறைப் பற்றியும் சொல்லியாகி விட்டது. அடுத்தது சாம்பார், ரசம் இரண்டும் சோற்றோடு வரும். முடிந்ததும் தயிர்ச் சாதத்தைப் பரிமாறுவார்கள். கடைசியில் ஃபுரூட் சாலட் ஐஸ்கிரீமோடு கொஞ்சிக் கொண்டு வரும். முடிக்கையில் பீடாவும் வாழைப் பழமும் கிடைக்கும். பகலில் சாப்பிட்டால் இரவு உணவு தேவையேயில்லை.

காலையிலும் மாலையிலும் டிபன் ஐட்டங்கள் கிடைக்கும். ரவா இட்டிலி மிகப் பிரசித்தம். கெட்டிச் சட்டினியோடு வரும். உருளைக் கிழங்கு சாகு கொடுப்பார்கள். அப்படியே இட்டிலின் தலையில் நெய்க் குளியல் நடக்கும். ஆனால் என்னுடைய ஓட்டு மீல்ஸ்க்குத்தான். ஒரு நாளைக்கு இத்தனை மீல்ஸ் என்று கணக்கு வைத்திருக்கிறார்கள். ஆகையால் சீக்கிரம் போவது நல்லது. ஜெயநகரில் ஊர்வசி தியேட்டருக்கும் லால்பாக் மெயின் கேட்டுக்கும் இடையில் இருக்கிறது.

இல்லை. இதையெல்லாம் ஒத்துக் கொள்ள முடியாது. தமிழ்நாட்டுச் சாப்பாடுதான் வேண்டும் என்று அடம் பிடிக்கும் தமிழ்க் குடிதாங்கிகளுக்கென்றே இருக்கிறது கிருஷ்ணா கஃபே. கோரமங்களாவில் இருக்கிறது. சிறப்பாகச் செய்கிறார்கள். இங்கு நான் சாப்பிட்டதெல்லாமே நன்றாக இருந்தது. பகலில் சாப்பாட்டிற்கு அப்பாவையும் அம்மாவையும் ஒருமுறை கூட்டிச் சென்றிருந்தேன். மிகவும் ரசித்துச் சாப்பிட்டார்கள்.
இத்தனை ஓட்டல்களைச் சொன்னபின் பிருந்தாவனத்தைச் சொல்லவிட்டால் வத்தல்குழம்பு என்னை மன்னிக்கவே மன்னிக்காது. ஆமாம். அருமையான வத்தக்குழம்பு அங்கே கிடைக்கும். பெங்களூரின் மையப் பகுதியான எம்.ஜி ரோட்டில் இருக்கிறது இந்த ஓட்டல். உடுப்புக்காரரின் ஓட்டல். ஆனாலும் தமிழர்கள் மிகவும் விரும்புவது.

மீல்சில் சப்பாத்தியும் உண்டு. அப்பளம் கேட்கக் கேட்கத் தருவார்கள். அருமையான வத்தல் குழம்பும் கிடைக்கும். மீல்ஸ் சாப்பிட்டால் மறக்காமல் கேட்டு வாங்கிச் சாப்பிடுங்கள். புளிப்பும் உறைப்புமாய் சுர்ரென்று இருக்கும். டிபன் பிரியர்களையும் அவர்கள் விட்டு வைப்பதில்லை. வகை வகையாய் இட்டிலிகளையும் தோசைகளையும் சுட்டுத் தாக்குகிறார்கள். எல்லாமே அருமை. பொடியை எண்ணெய்யோடு குழைத்து ஒரு கிண்ணத்தில் வைத்திருப்பார்கள். வேண்டிய மட்டும் அள்ளிப் போட்டுக் கொள்ளலாம். கண்டுகொள்ளவே மாட்டார்கள்.

ஆனால் டிபன்களில் எனக்குப் பிடித்தது நீர்தோசை. என்னடா நீர்யானை போல பெருசாக இருக்குமா என்று நினைக்காதீர்கள். மிகவும் மெல்லிய தோசையிது. அற்புதமாக இருக்கும். இத்தோடு இனிப்பான பழக்கலவையும் தருவார்கள். தோசையோடு சாப்பிட அல்ல. தோசைக்குப் பின்னே சாப்பிட. மிகவும் சுவையோ சுவை.

தென்னிந்திய உணவு வகைகளை விரும்புகிறவர்கள் இந்தக் குறிப்பிட்ட ஓட்டல்களுக்குச் சென்றே ஆகவேண்டும். இப்பொழுது தமிழ்நாட்டுப் புகழ் முருகன் இட்டிலிக் கடையையும் திறந்திருக்கிறார்கள் கோரமங்களாவில். அங்கு இதுவரை சென்றதில்லை. சென்றால் அதைப் பற்றியும் கண்டிப்பாகச் சொல்கிறேன்.

இத்தோடு பாகம் ஒன்று முடிந்தது. இன்னும் ஒன்றிரண்டு சைவ விடுதிகளையும் மற்ற விடுதிகளையும் அடுத்த பாகத்தில் பார்க்கலாம்.

(பின் குறிப்பு : கோ.கணேஷிற்கு - சத்தியமாக நான் எந்த நோட்டுப் புத்தகத்தையும் கொண்டு போய் குறிப்பு எடுக்கவில்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன்.)

அன்புடன்,
கோ.இராகவன்

Monday, September 12, 2005

பன்னீர் இலையில்

பன்னீர் இலையில்

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்திலிருந்து அந்த அரசாங்கப் பேருந்து கிளம்பும் பொழுதுதான் எனக்கு நினைவுக்கு வந்தது. நான் தனியாகப் போகிறேன். திருச்செந்தூருக்குத் தனியாகப் போகிறேன். இதுவரை அப்படிப் போனதேயில்லை.

தூத்துக்குடி புதுக்கிராமத்தில் இருந்தவரையில் (சிறு வயதில்) பால்பண்ணை ஸ்டாப்பிலோ பீங்கான் ஆபீசு ஸ்டாப்பிலோ போய் ஏறினால் அழகான ஊர்களின் வழியே போய் திருச்செந்தூரைச் சேரலாம். அப்பொழுது கூட ஒரு கூட்டமே வரும்.

தூத்துக்குடி, மதுரை, கரூர், கோயில்பட்டி, சென்னை, பெங்களூர் என்று வந்த பிறகும் கூட தனியாகப் போனதில்லை. இப்பொழுது போகிறேன். மனம் என்னவோ செய்தது. ஆனாலும் பெருமையாக இருந்தது. தனியாக முருகனைப் பார்க்கப் போகிறேனே.

மாலை ஏழு மணி ஆகியிருந்ததால் இருள் கவியத் துவங்கியிருந்தது. வெளியில் ஒன்றும் சரியாகத் தெரியவில்லை. சிறு வயதில் நான் ஓடிய ஆடிய தெருக்கள் இன்னும் இருக்கின்றன என்று நினைக்கும் பொழுது ஏதோ ஒரு பாசம் எழுந்தது.

ஆத்தூர், காயல்பட்டினம், வீரபாண்டியன் பட்டிணம் எல்லாம் தாண்டி திருச்செந்தூருக்குள் நுழையும் பொழுதே கோபுரம் தெரிந்தது. நியான் விளக்குகளால் வேல் ஒளிர்ந்து கொண்டிருந்தது. பாசமா பக்தியா என்று தெரியவில்லை. கன்னத்தில் போட்டுக் கொண்டேன். வாய் மெல்ல முருகா என்று எனக்குத் தெரியாமலேயே முணுமுணுத்தது.

திருச்செந்தூர் பேருந்துகளில் கோயில் வாசல் என்று எழுதியிருக்கும். அதற்கு ஏற்றாற்போல கோயில் வாசலில் சென்று இறக்கி விடுவார்கள். இப்பொழுது நாழிக்கிணற்றுக்கு அருகில் புதிதாக பேருந்து நிலையம் கட்டி அங்கு இறக்கி விடுகிறார்கள். நானும் அங்கு இறங்கினேன்.

பனைமரங்கள் கண்ணில் தென்பட்டன. எனக்கு பனைமரங்களைக் கண்டாலே ஒருவித அன்பு பொங்கும். பனம்பழம், பனங்கிழங்கு, பனங்கற்கண்டு என்றால் சொல்லவே வேண்டாம். தேவஸ்தான தங்கும் அறைகளைத் தவிர்த்து விட்டு நல்ல விடுதியைத் தேடினேன்.

ஓரளவு நன்றாக இருந்த விடுதியில் இடம் பிடித்தேன். ஒரு நாளைக்கு நூறு ரூபாய் வாடகை. ஒத்துக்கொண்டு அந்த நூறோடு இன்னொரு நூறையும் அட்வான்ஸ் என்ற பெயரில் கொடுத்தேன். அறைக்குச் சென்று குளித்து விட்டு உடைகளை மாற்றினேன். முக்காப் பேண்ட்டும் சட்டையும் போட்டுக் கொண்டு கோயிலுக்குச் சென்றேன். நடை சாத்தியிருந்தது. அப்படியே கோயிலை ஒரு சுற்று சுற்றி விட்டு கடற்கரையில் அமர்ந்தேன்.

சுனாமி வந்த ஒன்றிரண்டு மாதங்கள் என்பதால் போலீஸ் பாதுகாப்பு கடற்கரையில் இருந்தது. தருமபுரி ஆதீன மடத்தில் முன்பெல்லாம் பக்தர்கள் படுத்துத் தூங்குவார்கள். இப்பொழுது கடற்கரையை ஒட்டி இருப்பதால் யாரையும் அங்கே படுக்க அனுமதிப்பதில்லை.

கடற்கரையில் கொஞ்ச நேரம் அமர்ந்தேன். பதினோரு மணிக்கு மேல் கடற்கரையில் யாரையும் போலீசார் அனுமதிப்பதில்லை. விடுதியை நோக்கி நடந்தேன். வழியில் சுக்குத் தண்ணி விற்றுக் கொண்டிருந்தார் ஒருவர். ஆசை உந்த அதை வாங்கிக் குடித்தேன். எனக்குப் பிடித்த கருப்பட்டி போட்டுக் காய்ச்சிய சுக்குத் தண்ணீர். ருசித்துக் குடித்தேன்.

நான் வாங்கியதைப் பார்த்ததும் மேலும் இரண்டு மூன்று பேர் துணிந்து வாங்கிக் குடித்தார்கள். பிறகு மேலும் இருவர்.

கோயில் வாசலில் இருக்கும் கடையில் தமிழ்ப் புத்தகங்களைப் படிப்பதற்காக வாங்கினேன். இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் விற்பனையாகும் கோபால் பல்பொடியும் வாங்கினேன். இதெல்லாம் இங்கே வாங்கினால்தானே......

விடியற்காலையில் எழுந்து குளித்து விட்டு நேராகக் கோயிலுக்குச் சென்றேன். சட்டையைக் கழட்டி இடுப்பில் சுற்றிக் கொண்டேன். இன்னமும் முருகனுக்கு திருப்பள்ளியெழுச்சி பாடிக் கொண்டிருந்தார்கள். கருவறைக்குள் இருக்கும் கந்தனைக் காண கூட்டமில்லை. நேராக வரிசைக்குச் சென்றேன்.

தட்டில் திருநீற்றை மலை போலக் குவித்து வைத்துக் கொண்டு ஐயர் தயாராக இருந்தார். ஆனால் திரைச்சீலை போட்டுக் கொண்டு முருகன் தயாராக இல்லை.

திருச்செந்தூர்த் திருநீற்றிற்குத் தனி மணம் உண்டு. மிகவும் மென்மையாக மெத்தென்று இருக்கும் திருநீற்றை நெற்றி நிறைக்கப் பூசினாலெ ஒரு களை வந்துவிடும். அழகு பார்க்காமல் அங்கு எல்லாரும் பூசிக் கொள்வார்கள். பழைய வழக்கம் என்ன வென்றால் திருநீற்றை பன்னீர் இலையில் வைத்துத் தருவது.

பழைய வழக்கமது. நீளமாக அழகாக இருக்கும் பச்சைப் பன்னீர் இலையில் வெள்ளைத் திருநீற்றைத் தருவார்கள். திருநீறோடு பன்னீர் இலையின் வாடையும் கலந்து சுகமாக மூக்கில் ஏறும். முன்பு நானும் அப்படி வாங்கியிருக்கிறேன். இன்றைக்கு கிடைக்கப் போவதில்லை. திருநீற்றுத் தட்டில் பன்னீரிலை இல்லை.

ஒருவேளை பத்து ரூபாய் தட்டில் போட்டால் பன்னீரிலையில் திருநீறு கிடைக்குமோ என்று நினைத்தேன். அடுத்த நொடியிலேயே அந்த எண்ணத்தைக் கைவிட்டேன். முருகன் குடுப்பதை வாங்கிக் கொண்டு போகவேண்டுமென்று உள்ளம் முடிவெடுத்தது.

அதற்குள் திருப்பள்ளியெழுச்சி முடிந்தது கந்தன் காட்சி தந்தான். "சீர்கெழு செந்தில்" என்று இளங்கோவடிகள் பாடியிருக்கிறார். எப்பொழுதும் சீர் மிகுந்த என்று பொருள். கந்தனின் கருணை மிக்க முகம் கண்டதும் கண்ணீர் பெருகியது. "முருகா! முருகா!" என்று உள்ளம் கதறியது. கையிரண்டையும் மேலே தூக்கி வணங்கினேன். அஞ்சும் முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றியது! அஞ்சேல் எனச் சொல்லி வேல் தோன்றியது! நெஞ்சில் பலகாலும் கண்டிருந்த அவனிரு கால்கள் தோன்றின. அன்போடு வணங்கி விட்டு ஐயர் எனது கையில் தள்ளிய திருநீற்றை நெற்றி நிறைய பூசிக் கொண்டு கருவறைப் பிரகாரத்தை விட்டு வெளியே வந்தேன்.

வெளிப்பிரகாரம் வந்ததும் அப்படியே அமைதியான காலையில் சுகமாக அந்தக் கற்கட்டிடத்தில் நடந்தேன். அங்கே ஒரு ஐயர் சந்தனத்தை ஒருவர் கையில் ஊற்றிக் கொண்டிருந்தார். அவருக்கு மட்டுந்தான் சந்தனமா? எனக்குக் கிடைக்கக் கூடாதா? கிடைத்தால் நானும் பூசிக்கொள்ள மாட்டேனா?

படக்கென்று எனது கையை நீட்டினேன். தூய சந்தனம். அப்பொழுது அரைத்தது என நினைக்கிறேன். கமகமத்தது. கிண்ணத்திலிருந்து என் கையில் விழுந்தது. அத்தோடு படக்கென்று இன்னொன்றும் விழுந்தது. அட! பன்னீர் இலையில் திருநீறு.

அன்புடன்,
கோ.இராகவன்

Tuesday, September 06, 2005

ராஜாவும் குட்டியும் பின்னே ஞானும்(ஞங்ஙளும்)

ஏதடா மலையாளப் படத்தலைப்பு போல இருக்கேன்னு படிக்காம விட்டுராதீங்க. படிச்சுப் பாருங்க. பிடிச்சாலும் பிடிக்கலாம். இது என்னோட நினைவுக்கடலில் எழுகின்ற ஒரு அலை. காலையாவது நனைச்சுக்குங்க.

தூத்துக்குடியில் பழைய ஹார்பருக்கு எதிர்ப்பக்கம் உள்ள பொதுப்பணித்துறை குடியிருப்பில் மூன்றாண்டுகள் இருந்தோம். அது தந்தையார் அங்கு வேலை செய்து கொண்டிருந்த நேரம். நல்ல பெரிய காம்பவுண்டு சுவருக்குள் மூன்று வீடுகள். சில கெஸ்ட் ஹவுஸ்கள். நிறைய இடம். நிறைய மரங்கள்.

ஒரு நாள் பகற்பொழுதில் எல்லாரும் வீட்டு வாசலில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். வீட்டிற்கு முன்னேயும் நிறைய இடம். இங்கே எல்லாரும் என்பது நான், என்னுடைய தங்கை மற்றும் பாட்டி. அம்மா வீட்டுக்குள்ளும் அப்பா அலுவலகத்திலும் இருந்தார்கள்.

ஒரு நாட்டு நாய்க்குட்டி எப்படியோ பெரிய காம்பவுண்ட் கதவைத் தாண்டி உள்ளே வந்து விட்டது. சின்ன நாய். மெல்லிசாக இருந்தது. அழகென்று சொல்ல முடியாது. நாங்கள் மூவரும் இருப்பதைப் பார்த்து அங்கு வந்தது. பாட்டி ஒரு பிஸ்கட்டை எடுத்துப் போட்டார்கள். சாப்பிட்டு விட்டு அங்கேயே படுத்துக் கொண்டது. பிறகு கொஞ்சம் சோறு. கொஞ்சம் அது. கொஞ்சம் இது என்று வீட்டில் ஒட்டிக் கொண்டது.

வந்த நாளிலேயே அதற்கு ராஜா என்று பெயரைச் சூட்டியாகி விட்டது. அதுவும் அந்தப் பெயருக்கு அன்றே பழகிக் கொண்டது.

வீட்டுக்குள் விட மாட்டோம். வெளியில் திரிய எவ்வளவு இடமிருக்கிறது. நன்றாகத் திரியும். கட்டிப் போடுவோம். குளிப்பாட்டுவோம். பேசாமல் இருக்கும். பொதுவாக நாய்கள் குளிக்க மறுக்கும் என்பார்கள். ஆனால் இந்த நாயை நானே தண்ணீர் ஊற்றி சோப்பு போட்டுக் குளிப்பாட்டினாலும் பேசாமல் இருக்கும்.

போட்டதைச் சாப்பிடும். அதே நேரத்தில் மீன் முள்ளுக்கும் அலையும். வீடு மீன்பிடித் துறைமுகத்துக்கு எதிரில் இருந்ததால் மரத்திற்கு அடைய வரும் பறவைகள் மீன்களையும் மீன் முட்களையும் போடும். அதற்கு அலையும் ராஜா. இத்தனைக்கும் வாரத்திற்கு ஒருமுறையாவது வீட்டில் அசைவம் இருக்கும்.

வீட்டிற்கு வருகின்றவர்களிடம் மரியாதையாக இருக்கும். அதே நேரத்தில் சிலரை விடவே விடாது. அதற்கு பால்காரன் மேல் அப்படி ஒரு கோவம். அவர் வரும் பொழுதெல்லாம் குலைத்துத் தள்ளிவிடும். அவரும் குச்சியைப் பிறக்கிக் கொண்டு அடிக்க வருவார். நாங்கள் வந்து இருவரையும் சமாதானப் படுத்துவோம்.

மற்றொன்று குறிப்பிட்டே ஆக வேண்டும். மீன் முள் பொறுக்கினால் நாங்கள் அடிப்போம். நான் அல்லது என் தங்கை. அப்பொழுதெல்லாம் பேசாமல் இருக்கும். அடியை வாங்கிக் கொள்ளும். எடுத்து வந்த மீன் முள்ளைத் தொடாது. நாம் அடிப்பதை நிறுத்தியதும் காலடியில் வந்து உட்கார்ந்து கொள்ளும். அல்லது படுத்துக் கொள்ளும். வேறு யாராவது வெளியாட்கள் கையை ஓங்கினால் அவ்வளவுதான்.

நன்றாக வளர்ந்தது ராஜா. வீட்டு நாய்க்குரிய அத்தனை பண்புகளுடனும் வளர்ந்தது. வீட்டில் ஒரு அங்கத்தினராகவே ஆனது.

ஒரு நாள் காலை வீட்டு வாசலில் நாயைக் காணவில்லை. இரவில் அவிழ்த்து விட்டிருப்பதால் எங்கேயாவது வெளியே போயிருக்கும் என்று தேடினோம். ஆனால் கிடைத்ததோ ராஜாவின் உடல்தான். வண்டி எதுவும் அடித்த மாதிரியும் தெரியவில்லை. உடம்பில் ஒரு காயமில்லை. ஆனால் இறந்திருந்தது.

தங்கையினரின் கண்ணீர் ரெண்டு நாட்களுக்கு நிற்கவில்லை. எல்லாருக்கும் ஒருவித தவிப்பும் துக்கமும் இருந்தது. யாரும் நிலையில்லை. இப்படியே எல்லாரும் இருப்பதைச் சகிக்க மாட்டாமல் அப்பா யாரிமோ இருந்து ஒரு நாயை வாங்கி வந்தார்.

மாலையில் நான் நாயை எங்கே என்று தேடிப் போனால் பாத்ரூமுக்குள் முயலைப் போல குட்டியாகப் படுத்திருந்தது. அது ஒரு பாமரேனியன் நாய்க்குட்டி. வெள்ளை வெளேரென்று.

அதற்குப் பெயரே குட்டி என்று நிலைத்து விட்டது. ராஜாவைப் பராமரித்ததிலும் குட்டியைப் பராமரித்ததிலும் வேறுபாடுகள் பல உண்டு. குட்டி எப்பொழுதும் வீட்டிற்குள்தான் இருக்கும். மெத்தை மேலெல்லாம் தேவைப்பட்டால் ஏறும். அதுவும் கூட அதற்கு எப்பொழுதாவது தோன்றினால்தான். இந்தக் களேபரத்தில் நாங்கள் ராஜாவை மறந்திருந்தோம்.

குட்டியை அடிக்க முடியாது. எல்லாரையும் கடிக்க வரும். அப்பாவிடம் மட்டும் அதற்குப் பயம். அம்மாவிடமும் அடி வாங்கும். நான் அடிப்பதேயில்லை. தங்கைகள் சில சமயம் அடிப்பார்கள். அது நான் வேலைக்கு வந்து விட்ட பொழுது. ஆகையால் எனக்கும் குட்டிக்கும் அவ்வளவு தொடர்பில்லாமல் போயிற்று.

பிறகு கோயில்பட்டிக்குக் குடி பெயர்ந்தோம். ஒரு முறை நான் விடுமுறைக்குச் சென்றிருந்தேன். குட்டி என்னிடமும் பாசமாகத்தான் பழகும். அன்றும் அப்படித்தான் பழகியது. நான் கட்டிலில் உட்கார்ந்திருந்தேன். அது கீழே முன்னங்கால்களை நீட்டிக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருந்தது.
ஏதோ சொன்னேன். பேசாமல் இருந்ததும் அதட்டலாக ஏதோ சொன்னேன். படக்கென்று தவ்வி என் கைவிரல் நுனியைக் கடித்து விட்டது. லேசாக சதை கிழிந்து விட்டது. நான் குய்யோ முய்யோ என்று கத்தவும் எல்லாரும் ஓடி வந்தார்கள்.

பாட்டி வெங்காயத்தை இடித்து விரலில் கட்டினார்கள். குட்டிக்கு ஊசி போட்டிருந்ததால் பிரச்சனையில்லை. இருந்தும் நானும் ஒரு முறை ஊசி போட்டுக் கொண்டேன்.

அன்றைக்குத்தான் மீண்டும் ராஜா எங்கள் நினைவுக்கு வந்தது.

அன்புடன்,
கோ.இராகவன்

Friday, September 02, 2005

பெண்ணைப் பெற்றவன்

பெண்ணைப் பெற்றவன்

பெண்கள் வீட்டின் கண்கள். ஏன் தெரியுமா? கண்ணீருக்குக் காரணம் இந்த இரண்டும்தான். ஆனந்தக் கண்ணீரோ! அழுகைக் கண்ணீரோ! பெண்களைப் பெற்றாலே கொஞ்சமாவது கண்களைக் கசக்க வேண்டும் என்பது உண்மை போல. நானும் பெண்ணைப் பெற்றவன்தான். ஆகையால்தான் அடித்துச் சொல்கிறேன்.

இல்லையென்று சாதிக்க வராதீர்கள். விளக்கமாகச் சொல்கிறேன். உங்களுக்கும் பெண் குழந்தை பிறந்தால், அந்தக் குழந்தையைப் பேணி வளர்ப்பதும், கல்வி கற்பிப்பதும், ஆடலும் பாடலும் சொல்லிக் கொடுப்பதும், சீராட்டிக் கொண்டாடுவதும் எத்தனை சந்தோஷங்கள். மறுக்கவில்லை. ஆனால் அத்தனை சந்தோஷங்களையும் நீங்கிக் கொண்டு, நம்முடைய அன்பையெல்லாம் வாங்கிக் கொண்டு, மற்றொருவன் தோளைத் தாங்கிக் கொண்டு போகிறாளே! அப்பப்பா! எப்பேற்பட்ட கல்மனங் கொண்ட ஆண்பிள்ளைகளையும் அழுக வைத்துவிடும்.

சரி. ஒருவன் கையில் பிடித்துக் குடுத்து விட்டோமென்று நிம்மதியாக இருக்க முடிகிறதா? நம்மை விட்டுப் போனதுதான் போனாள்! இன்னொருத்தனுக்கு மனைவி ஆனதுதான் ஆனாள்! புக்ககத்தில் எல்லோருக்கும் மனம் கோணவும் கோணாள்! இருந்தாலும் நம்மை மட்டும் அடிக்கடி காணவும் காணாள்! சரி! அவள்தான் புக்காத்துப் பெண்ணாகி விட்டாள். நம்மையும் மறந்து விட்டாள். நம்முடைய உள்ளமாவது சும்மா உட்கார்ந்திருக்கிறதா? எப்பொழுதும் அவள் நினைவு. எப்படி இருக்கிறாளோ! எப்படிச் சாப்பிடுகிறாளோ! வேலைகளெல்லாம் செய்ய முடிகிறதோ! ஒழுங்காக பார்த்துக் கொள்கிறார்களோ! கவலைகள் எல்லாம் நமக்குத்தான்.

என் கதைக்கு வருவோம். அவள் கைக்குழந்தையாக இருக்கையில் எத்தனை இன்பங்கள் தெரியுமா! அதெல்லாம் சொன்னால்தான் புரியுமா! என் மகள்! செல்ல மகள்! ஆனால் பாருங்கள், எனக்குப் பிறக்கவில்லை. கீழே கிடந்தாள். புழுதியில் பூப்பந்தாகப் புரண்டிருந்தாள். நான் எடுத்து வளர்த்தேன். பாசத்தையெல்லாம் கொடுத்து வளர்த்தேன். அன்பிலும் ஆசையிலும் என் மகளென்றே அவளை வளர்த்தேன். யாரும் அதை மறுக்க முடியாது.

அவளுக்கு நீளக் கண்கள். தொட்டிலில் கிடக்கையில் கைகளில் எடுத்தால் மினுக்கென்று கண்களைச் சிமிட்டுவாள். கொள்ளை அழகு. அப்படியே பொக்கை வாயைக் காட்டி லேசாக குமிழ்ச் சிரிப்பு சிரிப்பாள்! அடடா! எனக்கு எல்லாம் மறந்து போகும். கையில் அப்படியே வைத்துக் கொண்டிருப்பேன். திருமகள் கையில் பூக்களை வைத்துக் கொண்டிருப்பது போல. எனக்கும் கைவலி தெரியாது. அந்தப் பஞ்சு உடலும் நோகாது. மெத்தை போலிருக்கும் பிஞ்சுக் கால்களை நீட்டி மிதிக்கையில் ஒருவிதமான மகிழ்ச்சியும் பெருமிதமும் முதுகுத் தண்டிலிருந்து புறப்படுமே! இதெல்லாம் ஒரு தகப்பனுக்கு மட்டுமே அகப்பட்டு சுகப்படும் ரகசியம்.

சிறப்பாக வளர்ந்தாள். எல்லாரின் கண்களையும் கவர்ந்தாள். விதவிதமாக உடுப்புகளில் வண்ண வண்ணப் பூக்களாக மலர்ந்தாள். எந்த உடுப்பும் அவளுக்கு எடுப்புதான். பச்சைப் பட்டுப் பாவாடை கேட்டாள். அதில் அலைமகளைப் போல ஜொலித்தாள். செக்கச் செவேலென்று சிற்றாடை. அலர்மேல் மங்கையே அவள்தானோ! என் கண்ணே பட்டுவிடும் போலிருந்தது.

பாவி நான். நான் பெறவில்லையே. கொட்டடியில் இருந்தாலும் பசுவிற்கு கொட்டடி உறவாகுமா? ஆனாலும் அந்த அழகு தெய்வம் என்னை அப்பா என்று அன்போடு அழைக்க நான் என்ன புண்ணியம் செய்திருக்க வேண்டும்! நான் பெற்ற பேறு அந்தப் பிள்ளைக் கனியமுதைப் பெற்றவர்களுக்குக் கிடைக்காமல் போனதே! எல்லாம் ஆண்டவன் செயல். தாயிடத்தில் கருவாக்கி, ஓரிடத்தில் உருவாக்கி, வேறிடத்தில் மெருவாக்க விட்டானே! அவன் செயலை யார் அறிவார்? உலகளந்தவன் எண்ணத்தை யார் அளப்பார்?

பக்தி அதிகம் அவளுக்கு. தெய்வப் பாசுரங்களைக் கோகிலங்கள் கூவுவது போலப் பாடுவாள். யாரையும் மயக்கும் அவள் கானம். விடியலிலேயே குளித்துவிட்டு பாடுவாள். மத்யமாவதியில் "சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்து உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்" என்று அவள் பாடினால்...............பரந்தாமனே பறந்து வந்து கேட்க வேண்டும். இல்லமெங்கும் அருள் துலங்கும். பாடலோடு ஆடலும் கற்றாள். "ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்" பாடி ஆடி அவளது பிஞ்சுப் பாதங்களால் மூன்று உலகங்களும் அளக்கும் பொழுது மூன்றாவது அடிக்கு என் தலை தகுமோ என்று வியப்பேன்.

"அம்மா! அன்று பரந்தாமன் அளந்த போது மூன்றாவது அடிக்குச் சிரசைக் காட்டினான் மாவலி. இன்றைக்கு மாவலி இல்லை. ஆனால் நான் இருக்கிறேன். உனது மலர்ப்பாதங்களை எனது தலையில் வையம்மா! இந்தத் தந்தையின் உச்சி கொஞ்சம் குளிரட்டும். எப்பொழுதும் உன் பெருமயை நினைத்து நினைத்தே தலை சூடேறியிருக்கிறதம்மா!"

பெண்களுக்குப் பருவம் வந்தால் பெற்றவனுக்கு பயம் வரும். காக்கவும் ஒருவன் கையில் சேர்க்கவும் எண்ணம் வரும். நான் அவளிடமே கேட்டேன்.

"அம்மா குழந்தை, அப்பா உனக்கு கலியாணம் செய்து வைக்கலாம் என்று நினைக்கிறேன். உன் கருத்து என்னம்மா? உனக்கு எந்த மாதிரி மாப்பிள்ளை பார்க்கட்டும்! சொன்னால் அப்பா சொன்னபடி செய்கிறேனம்மா!"

இப்படித்தான் கேட்டேன். அதற்கு அவள் என்ன சொன்னாள் தெரியுமா? காதல் வந்ததாம். கனவு வந்ததாம். வந்தவன் கையையும் பிடித்தானாம். அதுவும் மாட்டுக்கார மன்னாருடன். எனக்கு தலையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை.

அவனுடன் சிறுவயதுப் பழக்கம் அவளுக்கு. வயது வந்தால் எல்லாம் சரியாகப் போகுமென்று விட்டுவிட்டது தப்பாயிற்று. எடுத்துச் சொன்னேன்.

"குழந்தை, நாம் யார்? உன் தந்தை யார்? அவனொரு தமிழ்ப் பண்டிதன். கோயிலில் பாரளந்த பரந்தாமனுக்குக் பணிவிடை புரியும் தொண்டன். என் மகள், உனக்கு இப்படி ஒரு ஆசை வரலாமா? நீ யார்? உனது வளர்ப்பு என்ன? நீ கற்ற கலைகள் என்ன? ஆடலும் பாடலும் கூடும் நீ மாட்டிடையனை நாடல் எங்ஙனம்?"

கேட்டால் பதிலுக்குப் பதில் பேச்சு. நான் கற்றுத் தந்த தமிழை எனக்கு எதிராகத் திருப்புகிறாள்.

"பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ குற்று ஏவல் எங்களைக் கொள்ளாமல் போகாது" என்று பாடுகிறாள்.

"அம்மா! தமிழும் பாட்டால் அதற்கு இனிமை சேர்க்கும் கலையும் நான் தந்தது. பல்லாண்டுகளாக நான் பல்லாண்டு பாடியதைக் கேட்டுதான் நீ இப்பொழுது சொல்லாண்டு வருகிறாய். அப்படியிருக்க எனக்கே பாட்டுப் பாடிக் காட்டுகிறாயா! சைவத்தில் தந்தைக்கு மைந்தன் பாடம் சொன்ன கதையுண்டு. வைணவத்தில் தந்தைக்கு மகள் பாடம் சொல்லும் கதை உன்னால் வரப் போகிறதே!"

அவளுடைய காதலை நான் ஊரில் சொன்னால் என்ன ஆகும்? உற்றோர் சிரிப்பர். ஊரோர் சுழிப்பர். உலகோர் வெறுப்பர். ஒரே தடுமாற்றம். திரும்பத் திரும்ப எடுத்துச் சொன்னேன். ஆகாத அது. நடவாது அது. புலம்பினேன். மறந்து விடம்மா என்று கெஞ்சினேன். கையெடுத்துக் கும்பிட்டேன்.

கைகளால் கும்பிட்ட என்னிடம் வார்த்தைகளால் வம்பிட்டாள். எனக்கு விருப்பமில்லையென்றால் அந்த மாட்டுக்காரனை மணக்க மாட்டாளாம். ஆனால் வேறு யாரையும் மணக்கச் சொல்வதும் இந்த மண்ணை மறக்கச் சொல்வதும் ஒன்றாம். எனக்கு நெஞ்சே வெடித்து விட்டது.

வெங்கலப் பானை கீழே விழுந்தால் ஓசை வரும். மண்பானை விழுந்தால்? நொறுங்கிப் போனேன். இதற்குத்தானா பிள்ளையை வளர்ப்பது? முதலடியில் சுதாரிப்பதற்குள் அடுத்த அடி இடியாக நெஞ்சில் இறங்கியது. காலம் முழுதும் கன்னியாகவே வாழ்ந்து எனது கடைசி காலம் வரை என்னைப் பார்த்துக் கொண்டு இருந்து விடுவாளாம்.

ஒரு தகப்பன் மகளிடம் கேட்க வேண்டிய பேச்சா இது? என்ன பாடு பட்டிருப்பேன் அப்பொழுது! ஒரு முடிவுக்கு வந்தேன். "சரி. ஊரும் பழிக்கட்டும் உலகமும் ஒழிக்கட்டும், மகளும் விரும்பியவனை மணக்கட்டும்."

உள்ளூர் மன்னாரை திருவரங்கம் அழைத்துச் சென்று ரங்கமன்னாராக்கினேன். வேறென்ன செய்வது? வெளியூரில் போய் மாட்டுக்காரனைக் கூட்டுக்காரன் என்றால் தெரியவா போகிறது? பொய்தான். மகளுக்காக! பெண்ணைப் பெற்றவனய்யா நான்!

அங்கேயே திருமணமும் செய்து வைத்தேன். ஒரு நல்ல வேலையும் அவனுக்குச் செய்து வைத்தேன். ஆனாலும் பாருங்கள் பெரும் பொழுது அவனுக்குத் தூக்கம் தான். அவள் செய்து வைக்கும் புளியோதரையிலும் அக்காரவடிசலிலும் மேனி பளபளத்தான்.

ஊர் திரும்பவும் விருப்பமில்லை. பின்னே? மகளும் அரங்கத்திலேயே கணவனோடு ஒன்றி விட்டாள். எப்பொழுதும் தூங்கினாலும் தாங்குற வேளையில் தாங்குகிறானாம். இவளென்ன பூபாரமா? அவனுடைய நேரம் அவனிடத்தில் காரணமில்லாமல் செல்வமும் சேர்ந்தது. நான் மட்டும் திரும்பினால் நன்றாக இருக்குமா? அங்கே நாங்கள் மூவரும் காணமல் போனதுதான் எல்லாருக்கும் தெரிந்திருக்குமே! தனியாகச் சென்றால் தாளித்து விடுவார்களே!

என்ன செய்வது என்று யோசித்தேன். எனது அறிவை நல்ல வழிக்காக யாசித்தேன். ஆண்பிள்ளை பெறாதவனுக்குத் தனித்தட்டு. இல்லாவிட்டால் மகள் வீட்டுக் கதவைத் தட்டு.

"மாப்பிள்ளை வீட்டோடு சேர்ந்து இருப்பதா? அது சரியா?" எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை. வயது ஆகிவிட்டதல்லவா! முடிவெடுக்க முடியாமல் மூளை தடுமாறியது.

சரி. மானத்தை விட்டு விட்டு, எல்லா உணர்ச்சிகளையும் தொலைத்து விட்டு அவனுடைய பெரிய வீட்டிற்குப் போவதென்றே முடிவெடுத்தேன். வெறும் கை. அப்படியே போக முடியுமா? கையில் ஒன்றுமில்லை என்பதைச் சொல்லாமல் சொல்லும் விதமாக இரண்டு கைகளையும் கூப்பினேன். உள்ளே அவன் இருக்கவில்லை. எங்கு சுற்றினும் ரங்கனைத்தானே சேர வேண்டும். சுற்றினேன். காவிரிக்கரையில் காலை நீட்டிப் படுத்திருந்தான். அவனது நீட்டிய காலைப் பிடித்தேன். எனது தலையை அதில் இடித்தேன்.

"பரந்தாமா! மாதவா! கேசவா! எனது மகள் சொன்னதென்ன?
........ பட்டர் பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப்பரிகரைப்பார் ஈரிரண்டு மால்வரைத் தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்

அவளுக்கு, அந்த அழகிய கோதைக்கு இறங்கிய ந,£ இந்தப் பழகிய பட்டனுக்கு இறங்க மாட்டாயா?

எனது மகள் சூடிக் கொடுத்த மாலைகளை உனக்கு ஒவ்வொரு நாளும் அணிவித்தேனே! மாலையைக் கொடுத்த அவளை ஏற்றுக் கொண்ட நீ, அதற்கு மலர்களைக் கொய்த என்னை விட்டு விடலாமா? பரமபதம் காட்ட மாட்டாயா? முகுந்தா! வேங்கடவா! மாடு மேய்க்கும் சிந்தனை இன்னுமிருந்தால் இந்த விஷ்ணு சித்தனை நீ மறக்கலாமா? எனக்கு நல்ல வழியை மறுக்கலாமா?

உனக்கு நான் தமிழால் செய்த தொண்டுகளால்தானே என்னைப் பெரிய ஆழ்வார் என்று பொருள் கொள்ளும் படி பெரியாழ்வார் என்று எல்லோரும் அழைக்கிறார்கள். அந்த வாக்கு பொய்யாகும் படியான காடியத்தை நீ செய்யலாமா? அது உனக்குத்தானே குறையாகும்!"

கதறினேன். கண்களின் வழியாகக் கண்ணீரை அவன் காலடியில் உதறினேன். தூக்கம் கலைந்தது அவனுக்கு. மகளை ஆண்டவன் என்னையும் ஆட்கொண்டான்.

பிறகு நாளும் எனது பாக்களைக் கேட்டு மகிழ்ந்தான். அதுவும் என் செல்ல மகளோடு! சூடிக் கொடுத்த சுடர்கொடியோடு! தமிழோடு திருமாலையும் மணமாலை போட்டுக் கொண்ட ஆண்டாளோடு! கோதை நாச்சியாரோடு! மாப்பிள்ளை வீடு, பெண்ணைக் கொடுத்தது, கண்ணீர் விட்டு அழுதது எல்லாம் மறந்து போனது. எங்கும் பேரின்பம். அனைத்தும் சரணாகதி. எல்லாம் கண்ணன் செயல். பெண்ணைப் பெற்றவனுக்குப் பொன்னைப் பெற்றவனை விடவும் பெரிய இன்பம்.

அன்புடன்,
கோ.இராகவன்