Wednesday, July 26, 2006

நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

வலைப்பூ நண்பர்களே! சென்ற பதிவில் அவசர உதவி தேவைப்படும் இதய சிகிச்சை மையம் பற்றிச் சொல்லியிருந்தேன். அதற்கு உதவி செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய முகவரியும் தகவல்களும் இதோ. உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள்.

ஹேமலதா அவர்களின் மின்னஞ்சல் முகவரியை (zeushema@yahoo.com) ஏற்கனவே கொடுத்திருந்தேன்.

நீங்கள் நேரடியாகத் திரு.மூர்த்தி(mdu_khggt@sancharnet.in) அவர்களையும் தொடர்பு கொள்ளலாம்.

உங்கள் பங்களிப்பைச் செலுத்த வேண்டிய தகவல் இங்கே.
1. Name of the receiving bank : Canara Bank,
Gandhigram - 624 302,
Dindigul District,
Tamil Nadu State,
India.
2. Bank Code No. : 0967

3. Account Name : Gandhigram Trust

4. Account No. : SB a/c. No.43

அன்புடன்,
கோ.இராகவன்

Friday, July 21, 2006

அவசர உதவி தேவைப்படும் அவசர உதவி மையம்

ஒரு பிரபலமான ஜவுளித் தொழிலதிபர், சொத்துகள் நிறைய இருந்தும் அன்பான மனைவி மக்கள் இருந்தும் இறக்கும் பொழுது போர்த்திக் கொள்ளத் துணியின்றி இருந்தார் என்றால் நம்ப முடிகிறதா? இந்தக் கொடுமையான நிகழ்ச்சியையும் அதன் விளைவாக நடந்த நல்ல நிகழ்ச்சியையும் நீங்கள் தெரிந்து கொள்ளத்தான் வேண்டும்.

பெங்களூரில் வசிக்கும் ஹேமலதாவின் தந்தை என்.எஸ்.எஸ்.முருகேசன் அவர்களுக்குச் சொந்த ஊர் சின்னாளப்பட்டி. கடின உழைப்பும் இறைநம்பிக்கையும் கொண்டு சிறப்பாக முன்னுக்கு வந்தவர் அவர். பின்னாளில் பெங்களூரில் குடும்பத்தோடு தங்கி விட்டார். நிலக்கோட்டைக்கு ஒரு நண்பரைச் சந்திக்க வந்திருந்த பொழுதுதான் அந்தத் துயரச் சம்பவம் நடந்திருக்கிறது. நெஞ்சுவலிதான். அருகில் உள்ள சிறிய மருத்துவமனையில் வசதிகள் இருக்கவில்லை. அங்கிருந்த மருத்துவரும் பக்கத்திலிருக்கும் பெரிய மருத்துவமனைக்குக் கொண்டு செல்லச் சொல்லியிருக்கிறார். அதாவது மதுரைக்கு. ஆனால் அவரது நிலையின் தீவிரத்தை உணராத நண்பர் காலம் கடத்தி விட்டார். அந்தக் காலதாமதம்தான் எமனாகியிருக்கிறது.

மதுரையிலிருந்த மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்று கொண்டிருப்பதாக பெங்களூரில் இருந்தவர்களுக்குத் தகவல் போயிருக்கிறது. குடும்பத்தினர் பதறிப் போனார்கள். ஹேமலதாவும் அவரது தம்பியும் உடனியாக மதுரைக்குக் கிளம்பியிருக்கிறார். ஆனாலும் வழியிலேயே அவர்கள் தந்தை இறந்த செய்தி கிடைத்துத் துடித்துப் போயிருக்கிறார்கள்.

ஆனாலும் பாருங்கள். மதுரையின் அத்தனை பெரிய மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்ததற்குச் சரியான விளக்கம் கூடத் தரவில்லையாம். நெஞ்சு வலி வந்து நான்கு மணி நேரம் கழித்துதான் மருத்துவமனைக்கே சென்றிருக்கிறார். அதுவும் அவரே நடந்து சென்றிருக்கிறார். அதுவும் இரவு பதினோரு மணியளவில். அந்த அளவிற்கு தன்னுடைய நினைவில் இருந்த ஒருவர் எப்படி இறந்தார் என்று கூட ஒரு மருத்துவமனையால் சொல்லமுடியவில்லை என்றால் எப்படி?

இவர்கள் சென்று சேர்ந்த பொழுதுதான் போர்த்திக் கொள்ளக் கூடத் துணியின்றிக் கிடந்த தந்தையின் உடலைப் பார்த்திருக்கிறார்கள். பதறிக் கதறியிருக்கிறார்கள். அதற்குப் பிறகு துயரம். துயரம். துயரம். இந்த இழப்பு மிகப் பெரிய வெற்றிடத்தை மட்டுமல்ல ஹேமலதா அவர்களின் உள்ளத்தில் ஒரு புது வேகத்தையும் உண்டாக்கி விட்டது. தனக்கு நேர்ந்த இழப்பு இன்னும் பலருக்கு ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்ற எண்ணந்தான் அது.

கல்வி என்பது அழியாச் சொத்து. அந்தச் சொத்தை தந்தையார் அளித்துச் சென்றதால்தான் இன்று நல்ல பதவியில் பெங்களூரில் இருக்கிறோம் என்று நம்பும் ஹேமா, அந்தச் சொத்தின் பலனை ஒரு மருத்துவமனை வடிவில் அவரது சொந்த ஊருக்கு அர்ப்பணிக்க முடிவு செய்தார். அதுவும் கிட்டத்தட்ட 20 முதல் 25 ஆண்டுகள் வரை சின்னாளப்பட்டியின் பக்கமே சென்றிராதவர் ஹேமா. இந்த மருத்துவமனை தொடர்பாக கடந்த ஒன்றரை வருடங்களில் பலமுறைகள் சென்று அந்தக் கனவை நனவாக்கியிருக்கிறார்.

இப்படி ஒரு அவசர சிகிச்சை மருத்துவமனை வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதும் ஹேமா தொடர்பு கொண்டது பெங்களூரில் பிரபலமான நாராயண் ஹிருதயாலயா என்னும் மிகப் பெரிய மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் தேவி ஷெட்டி அவர்களைத்தான். நிறைய நேரம் அவருடன் பேசி ஆலோசனை பெற்று ஒரு இதய நோய் கவனிப்பு மையம் ஒன்றைத் தொடங்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். டாக்டர் தேவி ஷெட்டி அவர்கள் இந்த Telemedicine பற்றி எடுத்துக் கூறி அதற்கான உதவிகள் அனைத்தையும் செய்வதாக உறுதி கூறினார். இன்னும் சொல்லப் போனால் இந்த முடிவெடுப்பதற்கே கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் ஆகி விட்டன.

அதற்குப் பிறகு சின்னாளப்பட்டியில் காந்திகிராம அறக்கட்டளை சார்பில் இருக்கும் கஸ்தூரிபா மருத்துவமனையிலிருந்து டாக்டர் மனோன்மணியும் மூன்று அனுபவமிக்க செவிலியர்களும் பெங்களூரில் இரண்டு வாரங்கள் பயிற்சி பெற்றுள்ளார்கள். வீடியோ கான்பிரன்சிங் முறையில் பெங்களூர் நாராயண் ஹிருதயாலயாவின் உதவியோடு டெலிமெடிசின் மூலம் சிகிச்சை அளிக்கும் மையமும் ஜூன் 2, 2006 அன்று தொடங்கப்பட்டது. இதனால் அனைத்து பரிசோதனைகளையும் சிகிச்சைகளையும் பெங்களூரில் இருக்கும் மருத்துவர்களின் நேரடிக் கண்காணிப்பில் நடைபெறும். காலதாமதமும் இதனால் குறையும். சிறப்பான சிகிச்சையும் உடனடியாக வழங்கப்படும்.

சுமார் 12 லட்சம் ரூபாய் செலவில் நிறைவேறிய இந்தக் கனவு முயற்சியில் உறுதுணையாக நின்ற தனது தாயார் ருக்மணி முருகேசன், சகோதரர் சுதாகர், டாக்டர் தேவி ஷெட்டி, டாக்டர் விஜய் சிங், டாக்டர் பொம்மையா மற்றும் அனைத்து நண்பர்களையும் நன்றியோடு ஹேமா நினைவுகூர்கிறார்.

நாம் செய்யும் உதவியும் பணியும் எவ்வளவு பெரிது என்பது முக்கியமல்ல. ஆனால் எந்த மனப்பாங்குடன் செய்கிறோம் என்பதே முக்கியம் என்ற எண்ணமும் தனது தந்தை கடைசி நேரத்தில் என்ன துன்பம் அனுபவித்திருப்பாரோ என்ற மனவேதனையுமே இப்படி ஒரு மருத்துவ உதவி மையம் எழுப்ப ஊக்கம் கொடுத்ததாகக் கருதுகிறார் ஹேமா.

ஆனால் இந்தப் பணி இன்னும் முடிவடைந்து விடவில்லை. ஏன்? இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்ற ஏழை நோயாளிகளுக்கு இலவச அறுவை சிகிச்சை செய்து கொடுக்க பெங்களூர் நாராயண் ஹிருதயலயாவின் டாக்டர் தேவி ஷெட்டி ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் இங்கிருந்து பெங்களூர் சென்று வரக் கூட வசதியில்லாமல் இருக்கும் கூலித் தொழிலாளர்கள் நிறைய இருக்கிறார்கள். ஒரு நாள் சோற்றுக்குச் சம்பாதிக்கும் இவர்களுக்கு எந்த வகையில் உதவி செய்வது? சிகிச்சை பெறுகிறவரும் அவருக்குத் துணையாக ஒருவரும் பெங்களூர் சென்று அங்கு ஒரு வாரகாலம் மருத்துவமனையில் தங்கியிருக்கவும் சிகிச்சை முடிந்த பிறகு திரும்பி வரவும் சொறபத் தொகையே தேவைப்படும். ஆனால் அந்தத் தொகை தேவைப்படுகிறவர்கள் நிறைய. அதற்காக ஒரு நிதி திரட்டி அதை வங்கியில் வைப்புத் தொகையாக வைத்து உதவி செய்யவும் திட்டமிட்டுள்ளது. எதெற்கெதற்கோ செலவிடுகிறோம். இந்தப் புனிதப் பணிக்காகவும் ஒரு தொகையை நாம் மனமுவந்து கொடுத்தலே சிறப்பு. அப்படிச் செய்ய வேண்டுமென்று உங்கள் அனைவரையும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். ஊர் கூடித்தான் தேரிழுக்க வேண்டும். நண்பர்களே தேரிழுக்க வாருங்கள். பல உயிர்களைக் காத்திடுங்கள்.

இந்த மருத்துவமனையைப் பற்றி இந்து நாளிதழில் வெளி வந்த செய்தி இங்கே.

ஜூலை 15, 2006 அன்று ஒரு மருத்துவ மையத்தை நடத்தியிருக்கிறார்கள். அதற்கு சுற்றியிருக்கும் பட்டிக்காடுகளில் இருந்து கிட்டத்தட்ட 250 பேர் வந்திருக்கிறார்கள். பெண்களும் குழந்தைகளும் ஆண்களுமாய் வந்தவர்களில் கிட்டத்தட்ட 165 பேருக்கு மேல் பெரிய சிகிச்சைகள் தேவைப்படுகின்றன. பெரும்பாலும் சின்னக் குழந்தைகளும் இருக்கிறார்கள். உடனடியாக ஏதாவது செய்யவில்லை என்றால் இந்தப் பிஞ்சுகள் பிஞ்சிலேயே நஞ்சு போய்விடும். நூற்றுக் கணக்கில் அல்ல. ஆயிரக் கணக்கில் அல்ல. லட்சக்கணக்கில் நிதியுதவி தேவைப்படுகிறது. ஒருவரால் முடிகிறதல்ல இது. உங்களால் ஆனதைக் கண்டிப்பாகச் செய்யுங்கள். பல ஏழைக் குழந்தைகள் பிழைக்க உதவி செய்யுங்கள். பல தமிழ்க் குடும்பங்களை ஒரு வேளையாவது சாப்பிட வைத்துக் கொண்டிருக்கும் குடும்பத் தலைவனையும் தலைவியையும் காப்பாற்றுங்கள். உங்களால் நாளை காப்பாற்றப் படப் போகும் பலருக்காக இன்று உங்களிடம் கையேந்திக் கேட்கிறோம்! மனவுவந்து பெருநிதி தாருங்கள்.

(உதவிகள் செய்யத் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி zeushema@yahoo.com )

நன்றியுடன்,
கோ.இராகவன்

Monday, July 17, 2006

சென்னை - பிளாக் ஸ்பாட் - பி.எஸ்.என்.எல் - டமால்

சென்னையில் பி.எஸ்.என்.எல் பிராட்பேண்ட் வைத்திருக்கும் என்னாலும் இன்று மாலை முதல் பிளாக் ஸ்பாட் பிளாகுகளைப் பார்க்க முடியவில்லை. மத்திய அரசின் இந்தப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஏன் இப்படியொரு முடிவோ! இனி என்னுடைய வலைப்பூவை நானே பார்க்க முடியாது.

வருத்தத்துடன்,
கோ.இராகவன்

சிதம்பர சர்ச்சையும் ஒரு மீள்பதிவும்

தில்லை எனப்படும் சிதம்பரம் பற்றி எழுதிய வரலாற்றுச் சிறுகதை. முன்பே இட்டது. இப்பொழுது படித்துப் பாருங்கள்.
பொற்சிலையும் சொற்குவையும்!

அன்புடன்,
கோ.இராகவன்

Friday, July 07, 2006

அறுவர் தந்த ஆறு இசையாறுகள்

சும்மாயிருக்காமல் குமரன் என்னையும் ஆறு பதிவில் இழுத்து விட்டு விட்டார். எனக்கு இப்பொழுது இருக்கும் மனநிலையில் ஆழ்மையான பதிவு இட மனமில்லை. ஒரு இசைப் பதிவு. இசை என்றாலே தமிழில் சினிமா இசை என்று ஆகி விட்டதே. எனக்குப் பிடித்த ஆறு பாடகர்களும் அவர்கள் பாடிய ஆறு பாடல்களும் சொல்லலாம் என இருக்கிறேன். இந்த ஆறுதான் பிடிக்குமென்று இல்லை. ஆனாலும் முடிந்த வரையில் சுவையான ஆறுகள். இன்னொரு விஷயம். இந்தப் பட்டியலால் இவர்கள்தான் சிறந்தவர்கள். மற்றவர்கள் எல்லாரும் பாடத் தெரியாதவர்கள்னு சொல்லலை. எனக்குப் பிடிச்ச ஆறு. அவ்வளவுதான்.

இசையரசி பி.சுசீலா

1. அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் - பஞ்சவர்ணக்கிளி, மெல்லிசை மன்னர்கள், கவியரசர்
2. கண்ணான பூ மகனே கண்ணுறங்கு சூரியனே - தண்ணீர் தண்ணீர், மெல்லிசை மன்னர், வைரமுத்து
3. கண்ணுக்கு மை அழகு கவிதைக்குப் பொய்யழகு - புதிய முகம், இசைப்புயல், வைரமுத்து
4. மாப்பிள்ளைக்கு மாமன் மனசு மாமனுக்கோ - படத்தின் பெயர் நினைவில்லை, இசைஞானி, வாலி
5. அத்தானின் முத்தங்கள் அத்தனையும் முத்துக்கள் - உயர்ந்த மனிதன், மெல்லிசை மன்னர், கவியரசர்
6. மறைந்திருக்கு பார்க்கும் மர்மமென்ன - தில்லானா மோகனாம்பாள், திரையிசைத் திலகம், கவியரசர்

இசைக்குயில் வாணி ஜெயராம்

1. மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரலல்வோ - தீர்க்க சுமங்கலி, மெல்லிசை மன்னர், வாலி என நினைவு
2. நானே நானா யாரோ தானா மெல்ல மெல்ல மாறினேனா - அழகே உன்னை ஆராதிக்கிறேன், இசைஞானி, வாலி
3. நித்தம் நித்தம் நெல்லிச் சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா - முள்ளும் மலரும், இசைஞானி, கங்கை அமரனா?
4. மலைராணி முந்தானை சரியச் சரிய - ஒரே வானம் ஒரே பூமி, மெல்லிசை மன்னர், கவியரசர்
5. கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம் - புன்னகை மன்னன், இசைஞானி, வைரமுத்து
6. யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது - படத்தின் பெயர் தெரியவில்லை, சங்கர்-கணேஷ், வைரமுத்து

இசைத்துள்ளல் எல்.ஆர்.ஈஸ்வரி

1. இனிமை நிறைந்த உலகம் இருக்கு - நினைத்தாலே இனிக்கும், மெல்லிசை மன்னர், கவியரசர்
2. கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா (பாடியவர் டீ.எம்.எஸ் என்றாலும் ஈஸ்வரியின் அந்த அதியற்புதமான ஹம்மிங்...ஆகா) - ஆலயமணி, மெல்லிசை மன்னர்கள், கவியரசர்
3. பளிங்கினால் ஒரு மாளிகை பருவத்தால் மணி மண்டபம் - வல்லவனுக்கு வல்லவன், வேதா, கவியரசர்
4. அடடா என்ன அழகு அருகே வந்து தழுவு - நீ, மெல்லிசை மன்னர், வாலி என நினைவு
5. வாராயென் தோழி வாராயோ - பாசமலர், மெல்லிசை மன்னர்கள், கவியரசர்
6. இது மாலை நேரத்து மயக்கம் - தரிசனம், சூலமங்கலம் ராஜலட்சுமி, கவியரசர் (இது ஒரு மிகச்சிறந்த பாடல். எல்.ஆர்.ஈஸ்வரியின் திறமையை திரையுலகம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாததை இந்தப் பாடலில் அறியலாம். )

இசைவேந்தர் டீ.எம்.எஸ்

1. இசை கேட்டால் புவி அசைந்தாடும் - தவப்புதல்வன், மெல்லிசை மன்னர், கவியரசர்
2. முத்தைத்தரு பத்தித் திருநகை - அருணகிரிநாதர், ஜி.ராமநாதன் - டீ.ஆர்.பாப்பா, அருணகிரிநாதர்
3. சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம் - நல்லதொரு குடும்பம், இசைஞானி, கவியரசர்
4. நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு - தியாகம், இசைஞானி, கவியரசர் (மிகவும் அருமையான பாடல். கேட்டுப் பாருங்கள். மனமயக்கும்.)
5. ஆண்டவன் இல்லா உலகமெது ஐலசா - நந்தா என் நிலா, தட்சிணாமூர்த்தி, கவியரசர் (இன்னொரு அருமையான பாடல். வாணி ஜெயராமுடன் பாடியது)
6. மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் - இரு மலர்கள், மெல்லிசை மன்னர், வாலி

இன்னிசைக் குரலோன் ஜெயச்சந்திரன்

1. கவிதை அரங்கேறும் நேரம் - அந்த ஏழு நாட்கள், மெல்லிசை மன்னர், கவியரசர் என நினைவு
2. ராசாத்தி ஒன்னக் காணாத நெஞ்சு - வைதேகி காத்திருந்தாள், இசைஞானி, பாட்டு எழுதுனது யார்னு தெரியலையே!
3. கன்னத்தில் முத்தமிட்டால் - கன்னத்தில் முத்தமிட்டால், இசைப்புயல், வைரமுத்து
4. கத்தாழங் காட்டு வழி கள்ளிப்பட்டி ரோட்டு வழி - கிழக்குச் சீமையிலே, இசைப்புயல், வைரமுத்து
5. பொன்னென்ன பூவென்ன கண்ணே - அலைகள், மெல்லிசை மன்னர், கவியரசர் (ஜெயச்சந்திரன் அறிமுகமாகிய பாடல். மிகவும் இனியது.)
6. புல்லைக் கூடப் பாட வைத்த புல்லாங்குழல் - என் புருஷந்தான் எனக்கு மட்டுந்தான், இசைஞானி, வாலியா?


சிறந்தவை ஆறு

இந்த ஆறும் பல பாடகர்களும் பாடி எனக்கு மிகவும் பிடித்தவைகளில் வரும். எந்தப் பாகுபாடும் இல்லாமல் நான் சுவைக்கும் இனிய பாடல்கள்.

1. அழகிய கண்ணே உறவுகள் நீயே - எஸ்.ஜானகி, இசைஞானி, உதிரிப் பூக்கள், கவியரசர் (யாருக்குப் பிடிக்காது இந்தப் பாட்டு!)
2. காதல் ரோஜாவே எங்கே நீயெங்கே - எஸ்.பி.பாலசுப்பிரமணியம், இசைப்புயல், ரோஜா, வைரமுத்து
3. கூண்ட விட்டு ஒரு பறவ கோடு தாண்டிப் போச்சு - பி.சுசீலா, யேசுதாஸ், கட்டபொம்மன், தேவா, பாடலாசிரியர் தெரியலை. தேவா இசையமைத்த சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று.
4. உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை - யேசுதாஸ், இசைஞானி, அவள் அப்படித்தான், கவியரசர்
5. மாட விளக்க யாரு இப்போ தெருவோரம் ஏத்துனா - கமலஹாசன், விருமாண்டி, இசைஞானி, வாலியா?
6. சுட்டும் விழிச் சுடரே சுட்டும் விழிச் சுடரே - ஹரிஹரன், பாம்பே ஜெயஸ்ரீ, ஹாரிஸ் ஜெயராஜ், முத்துக்குமார்

பாடல்களில் தேர்ந்தெடுத்துக் கேட்பதுதான் வழக்கம். இந்தத் தேர்ந்தெடுத்தலில் இப்பொழுது எண்ணிக்கைகள் குறுகிக்கொண்டே வருகின்றன. ஏ.ஆர்.ரகுமான் வந்த புதிதில் அத்தனை கேசட்டுகளும் சீடீக்களும் வாங்குவேன். கொஞ்ச நாளாகவே இசை வட்டுகள் வாங்குவது மிக மிகக் குறைந்திருக்கிறது. டீவியில் வரும் ஒன்றிரண்டு பாடல்களள மிகவும் ரசிக்கிறேன். எ.டு பொய் சொல்லப் போறேன், ரகசியமானது காதல் மிக மிக....ஆனால் அந்தப் படத்தில் மற்ற பாடல்களை ரசிக்க முடியாததால் இசைவட்டு வாங்குவதில்லை.

ஆறு பேரக் கூப்பிடனுமா? ஏற்கனவே எல்லாரும் போட்டுட்டாங்க...நான் கட்டக் கடைசீல வந்திருக்கேன். யாராவது தங்களை இன்னும் யாரும் கூப்பிடலைன்னு நினைக்கிறீங்களா? இதோ இராகவன் அழைக்கிறான் (இதெல்லாம் ஓவராத் தெரியல!) சரி. இதுவரை அழைக்கப் படாதா ஆறு நண்பர்கள் இதை அழைப்பா எடுத்துக்கிட்டு பதிவு போடுங்க.

அன்புடன்,
கோ.இராகவன்

Saturday, July 01, 2006

வாணி ஜெயராமிடம் சில கேள்விகள்

coffee with suchi என்ற நிகழ்ச்சியில் இந்த வாரம் வாணி ஜெயராம். தமிழகத்தின் சிறந்த பாடகிகளில் ஒருவர். வடக்கில் இவர் புகழ் பெற்று விடுவாரோ என்று அரசியல் செய்யப்பட்டு வாய்ப்பு மறுக்கப்பட்ட தமிழ்ப் பெண். தமிழகம் அவரை அரவணைத்துக் கொண்டது. தென்னகம் நல்ல வழி தந்தது. எனக்கும் மிகவும் பிடித்த பாடகியும் கூட. அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் சில அருமையான துளிகள்.

கேள்வி: எம்.எஸ்.வியா? இளையராஜாவா?

வாணி: அப்படியெல்லாம் பாகுபாடு பாக்க முடியாது. ஆனா நிறையப் பாடுனது எம்.எஸ்.வி சார் கிட்டதான். என்னால என்ன முடிஞ்சதுன்னு தெரிஞ்சு அதச் சிறப்பா ஊக்குவிச்சவர் அவர். I enjoyed working with him.

கேள்வி : ஏழு சுரங்களுக்குள் எத்தனை பாடல், bole re pappihara, மேகமே மேகமே. இந்த மூனுல ஒங்களுக்குப் பிடிச்சது எது?

வாணி : மூனும் பிடிக்கும்.

கேள்வி: பி.சுசீலா பாடல்களை விரும்பிப் பாடுவீங்களாமே. எங்களுக்காக ஒரு பாடல்....

வாணி: ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன் பாடலைப் பாடுகிறார்.

கேள்வி: இப்ப இருக்குற இசையமைப்பாளர்கள் கிட்ட உள்ள குறை?

வாணி: குறையச் சொல்லக்கூடாது. நிறையத்தான் சொல்லனும். ஆனாலும் ஒரு குறையைச் சொல்லலாம். தமிழ் உச்சரிப்பு தெரியாதவங்களக் கூட்டீட்டு வந்து பாட வைக்காதீங்க. மும்பைல இருந்து கூட்டீட்டு வாங்க வெளிநாட்டுல இருந்து கூட்டீட்டு வாங்க. ஆனா தமிழ் தெரிஞ்சவங்களாக் கூட்டீட்டு வாங்க. பல பாட்டுகளைக் கேக்கவே முடியலை. தமிழ்க் கொலை பண்றாங்க. தமிழ் தெரியாதவங்கள வடக்க இருந்து ஏன் கூட்டீட்டு வாரீங்க? நம்மளக் கூப்புடுறாங்களா அவங்க?

நிகழ்ச்சியின் இடையிடையே அருமையாகப் பாடி மகிழ்ச்சியில் ஆழ்த்தினார் வாணி ஜெயராம். மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னால மலரல்லவோ........இதை தமிழகம் என்றும் மறக்காது.

அன்புடன்,
கோ.இராகவன்