Saturday, May 17, 2008

சு-வா? ஜா-வா?

போட்டீன்னு வந்துருச்சுய்யா.... நல்லதோ கெட்டதோ... வந்தாச்சு... அப்ப என்ன செய்யனும்? ரெண்டு பேருக்கு ஒரு வேலையக் குடுத்து யாரு நல்லா செஞ்சாங்கன்னு பாக்கனும். அப்பத்தான ஒரு முடிவுக்கு வர முடியும்? அதுக்குத்தான் இந்தப் பதிவு.

இசையரசிக்கு வலைப்பூ வெச்சிருக்குறதால நான் பி.சுசீலா பாடுன பாட்டு மட்டுந்தான் கேப்பேன்னு நீங்க நெனச்சா அது தப்பு. எஸ்.ஜானகி, வாணி ஜெயராம், எல்.ஆர்.ஈஸ்வரின்னு தொடங்கி இப்ப இருக்குற ஷ்ரேயா கோஷல், சாதனா சர்கம்னும் கேப்பேன். பிடிக்கனும். அவ்வளவுதான்.

ஆனா இங்க சர்வேசன் கெளப்புன பிரச்சனை பி.சுசீலாவா எஸ்.ஜானகியான்னுதான். ஆகையால மத்தவங்கள விட்டுருவோம். இவங்க ரெண்டு பேரோட நேரம்... நம்மளப் போல ஞானசூனியங்க கிட்டயும் கேள்வி ஞானங்க கிட்டயும் மாட்டனும்னு இருக்கு. என்ன செய்றது.

எஸ்.ஜானகியோட குரல் செயற்கையா இருப்பது போல எனக்கு ஒரு உணர்வு. அதுக்காக எஸ்.ஜானகிக்குப் பாடத் தெரியாதோன்னு சந்தேகப்படுற அளவுக்கு எனக்கு ஐயப்பாடு கிடையாது. அவங்க பாடுன பல பாட்டுகள் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். ஒன்னா ரெண்டா...நெறைய இருக்கு. ஆனா இசையரசியின் பாடல்கள் மிகவும் பிடிக்கும். முதலிடம் அவங்களுக்கு. அவ்வளவுதான். அதுனால எஸ்.ஜானகிக்குப் பாடத் தெரியாதுன்னு சொல்ல மாட்டேன்.

சரி. பதிவோட மையக்கருத்துக்கு வருவோம். எஸ்.ஜானகியா பி.சுசீலாவான்னு போட்டி வைக்கனும்ல. ரெண்டு பேத்துக்கும் ஒரே பாட்டைக் குடுத்துப் பாட வைப்போமா?

வைதேகி காத்திருந்தாள் படத்துல பி.சுசீலா பாடுன ராசாவே ஒன்னக் காணாத நெஞ்சு பாட்டு இங்க இருக்கு.


அதே பாட்டைத் தெலுங்குல எஸ்.ஜானகி பாடியிருக்காங்க. ஜாபில்லிக்கோசம் ஜாபில்லிக்கோசம்னு. அந்தப் பாட்டு இங்க.



ரெண்டையும் கேட்டுப் பாருங்க. உங்க கருத்து என்னனு மட்டும் சொல்லுங்க.

இப்ப ஒரே பாட்டை ரெண்டு பேரையும் பாட விட்டுக் கேட்டோம். ரெண்டு பேரும் ஒரே பாட்டுல பாடுனா? அதுக்கும் இளையராஜா கிட்டயும் எம்.எஸ்.விஸ்வநாதன் கிட்டயும் பேசி ஏற்பாடு செஞ்சாச்சு. ஆளுக்கு ஒரு பாட்டு கச்சிதமா போட்டுக் குடுத்துட்டாங்க.

கற்பூர தீபம் படத்துல காலம் காலமாய் பெண்தானே கற்பூர தீபம்னு ரெண்டு பேரும் சேந்து பாடுறாங்க. கேளுங்க. கேட்டுட்டு ஒங்க கருத்தைச் சொல்லுங்க.



அடுத்து யாருய்யா.. ஓ.. எம்.எஸ்.விஸ்வநாதனா? என்ன படங்க? சொல்லத்தான் நினைக்கிறேனா? நினைச்சுக்கிட்டே இருந்தா எப்படி? சொல்லுங்க. ஓ! படத்தோட பேரே அதானா? அந்தப் படத்துல பல்லவி என்று மன்னன் கேட்கப் பாடுவேனடின்னு ரெண்டு பேரும் பாடுறாங்க. கேளுங்க. கேளுங்க.




அட... ஒரு டூயட் பாட்டு வேற இருக்கா. சூப்பர். யாரு கூட டூயட். எஸ்.பி.பாலசுப்ரமணியம் கூடயா. அப்பச் சரி. என்ன படம்? கண்ணில் தெரியும் கதைகளா? என்ன பாட்டு? நான் ஒரு பொன்னோவியம் கண்டேன். நல்ல பாட்டு. இந்தப் படத்துல இந்தப் பாட்டுக்கு மட்டும் இளையராஜா இசை. சரி. அந்தப் பாட்டையும் கேட்டுருவோம்.



என்னது கன்னடப் பாட்டு விட்டுப் போயிருச்சா? என்ன பாட்டு? பிரியாங்குற படமா? ஸ்ரீதேவி நடிச்சாங்களே.. ரஜினிகாந்த். ஆமா.. அந்தப் படத்துல டார்லிங் டார்லிங்குன்னு ஒரு பாட்டு பி.சுசீலா பாடியிருக்காங்க. அதுக்கென்ன? ஓ! அந்தப் படத்த கன்னடத்துல டப்பிங் பண்றப்போ அதே பாட்டை எஸ்.ஜானகி பாடியிருக்காங்களா? அப்பச் சரி. அதையும் கேட்டுருவோம்.

எஸ்.ஜானகி பாடியது



பி.சுசீலா பாடியது





என்ன மக்களே...எங்க ஓட்டுப் போடுறதுன்னு பாக்குறீங்களா? இங்க ஓட்டெல்லாம் போட வேண்டாம். கருத்து சொன்னாப் போதும். ஏன்னா இவங்க ரெண்டு பேருமே இசைத்துறையில் நிறைய சாதிச்சவங்க. நம்ம ரசிகர்கள். ஆகையால நம்ம கருத்துகளை மட்டும் சொல்லலாம். அந்த உரிமை நமக்கு இருக்கும். மக்களே ஸ்டார்ட் தி மூசிக் :)

அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

பிரியாணி - 1

அதாவதுங்க.. பிரியாணின்னா நமக்கு ... அதாவது எனக்கு ரொம்பப் பிடிக்கும். கடைசியா இந்தியாவுல சாப்ட பிரியாணி இன்னும் மறக்க முடியாம இருக்கு. அதுவும் காரசாரமான ஐதராபாத் பிரியாணி. ருசி நாக்குலயே இருக்கு.

சரி கதைக்கு வருவோம்...

கியோக்கன்ஹாஃப் (Keukenhof) அப்படீங்குற ஊர் பேர் உங்களுக்குத் தெரிஞ்சிருக்காது. ஆனா அங்க என்ன இருக்குன்னு சொன்னா உங்களுக்குக் கண்டிப்பாத் தெரியும். டூலிப் (tulips) மலர்த் தோட்டங்களை அந்நியன் படத்துல கூமாரீஈஈஈஈஈன்னு பாடுவாரே... அந்தத் தோட்டங்கள்தான்.

போன வருசம் நான் இங்க நெதர்லாந்து வந்தப்பவே போயிருக்க வேண்டியது. ஆனா பாருங்க இந்தத் தோட்டங்கள் மூனு மாசத்துக்குத்தான் இருக்கும். அப்புறம் பூவே இருக்காது. மார்ச்சுல இருந்து மே மாசத்துக்குள்ளதான் பாக்க முடியும்.

நான் இங்க வந்தது ஏப்ரல் கடைசி. வந்து ஒரு வாரத்துலயே அம்மை போட்டுருச்சு. அதுல இருந்து எந்திரிச்சு தெளிவாகுறதுக்குள்ள தோட்டங்கள் காஞ்சு போச்சு. இந்த வருசம் எப்பிடியாச்சும் போயிருனுமப்போய்னு இருந்தப்பதான் அம்மாவும் அப்பாவும் ரெண்டு மாசத்துக்கு இங்க வந்தாங்க. இப்ப இங்கதான் இருக்காங்க.

சரீன்னு அவங்களையும் கூட்டீட்டு போனேன். அவங்க ஐரோப்பாவுல மொதல்ல போன சுற்றுலா கியோக்கன்ஹாஃப்க்குத்தான். ரொம்பவே ரசிச்சாங்க. ஒரு மாதிரி மூடுன மேகங்கள். அப்பப்போ தெறிச்ச தூறல்கள். ஒன்றா ரெண்டா என்று கூட்டிப் பாக்க நமக்கு 20 வெரல்களுக்கு மேல இல்லையேன்னு வருத்தப்பட வைக்கிற பலப்பல வண்ணங்களில் மலர்கள். காதலர்களுக்காகவே உண்டான தோட்டம் அது. கண்டிப்பா அவங்களுக்குப் பிடிச்சதுல வியப்பில்லை.

கீழ இருக்குற படங்களைப் பாருங்க. நீங்களே சொல்வீங்க.































அத்தனை படங்கள்ளயும் எனக்குப் பிடிச்சது இந்தப் படம். பாருங்க காதலன் காதலிக்கு முத்தம் குடுக்குற மாதிரி இருக்கு. மலர்கள் மனதை பதமாக்கும். இதமாக்கும். எவ்வள்வு உண்மை. கண்களுக்கும் கருத்துக்கும் குளுமையோ குளுமை.

************************************************************

அப்புறம் நெதர்லாந்துலயும் அரிசி வெலை ஏறுது. ஆமா. இங்க நான் இருக்குற எடத்துல இந்திய உணவுப் பொருட்கள் வாங்கனும்னா ஒரே வழி பக்கத்துல இருக்குற ஒரு காஷ்மீரி கடைதான். ஆம்ஸ்டர்டாம்ல இன்னோரு ஓரத்துல ஒரு இலங்கைத் தமிழர் கடை இருக்கு. ஆனா அங்க போயிட்டு வர்ரதுக்கே பாதி நாளுக்கு மேலயே போயிரும். ஆகையால இங்க காஷ்மீரிக்காரங்க கடையிலேயே வாங்குறது வழக்கம்.

தஞ்சாவூர் பொன்னி அரிசி, நல்ல இட்டிலி அரிசி, உழுந்து, பருப்பு எல்லாமே கெடைக்கும். அந்தப் பருப்புகளுக்கு மொதல்ல வெலை ஏறுச்சு. இப்ப அரிசிக்கு. எனக்கு அரிசி இல்லைன்னா ஒன்னுமில்லை. ஆனா அம்மா அப்பா இருக்காங்க. அவங்களுக்காகத்தான் வாங்குறது. அதுவுமில்லாம எனக்குத் தோசைன்னா ரொம்பப் பிடிக்கும். மிக்சியில அப்பப்ப மாவரைச்சுச் சுட்டுக்குறது.

*************************************************************

ஆங்கிலப் படங்கள்னாவே பிரம்மாண்டமும் கிராபிக்சும்னு பெரும்பாலும் ஒரு எண்ணம் இருக்குது. ஆனா பாருங்க....தமிழ்ப் படங்களை விட சிறப்பான கதையம்சங்களோடவும் நடிப்போடயும் ஆங்கிலப் படங்கள் நிறையவே வருது. சமீபத்துல அப்படிப் பாத்த இரண்டு படங்கள் 27 Dresses மற்றும் Nanny's Diaries. இரண்டுமே புதுமையான கதைக்களன். இந்த பிரியாணியில 27 Dresses படத்தப் பத்திப் பாப்போம்.

இது ஆனா ஃபிளெச்சர் (Anne Fltecher) அப்படீங்குற பெண் இயக்குனர் இயக்கிய படம். 27 முறை மணப்பெண்களின் தோழியா அலங்கார உடையணிந்த ஒரு பெண் 28வது முறை தனக்காகவே திருமண உடை அணியிறதுதான் கதை. சொல்லறப்பவே வித்தியாசமா இருக்குல்ல.

ஜேன், அவதான் அந்தப் பொண்ணு. ரொம்பவும் சுறுசுறுப்பு. நல்ல பொண்ணு. வேலை பாக்குற எடத்துல அவ பாஸ் மேல ஆசைப்படுறா. ஆனா அவரோட பாசும் ஜேனோட தங்கச்சியும் விரும்புறாங்க. பாஸ் இருக்காரே... அவரு மரக்கறி சாப்புடுறவரு. இயற்கையை ரசிக்கிறவரு. நல்லவரு. வல்லவரு. இப்பிடி பலப்பல. ஆனா ஜேனோட தங்கச்சி அதுக்கெல்லாம் நேர்மாறு. ஆனாலும் அவரைக் கல்யாணம் பண்ணிக்கிறதுக்காக நடிக்கிறா. அவ கிட்ட ஜேன் சொல்லிப் பாத்தாலும் கேக்கலை. உண்மையச் சொல்லீட்டா ஒப்புக்கிறவர்தான் அந்த பாஸ். ஆனா இவ சொல்லனுமே.

நம்ம கதாநாயகி ஒரே நாள்ள ரெண்டு கல்யாணத்துல தோழியா இருக்க வேண்டி வருது. ஒன்னு அமெரிக்கக் கல்யாணம். இன்னொன்னு இந்தியக் கல்யாணம். இங்கயும் அங்கயும் மாறி மாறி ஓடி...உடைய மாத்தி...அத இதன்னு மாத்தி.. ரெண்டு எடத்துலயும் நல்ல பேரு வாங்குற. அந்த சமயத்துலதான் கெவினைச் சந்திக்கிறா. அவன் ஒரு பத்திரிக்கையாளன். ஆனா வேற பேர்ல எழுதுறான். அவனோட எழுத்து மேல ஜேனுக்கு ரொம்ப விருப்பம்.

ரெண்டு பேரும் நட்பா பழகுறாங்க. 27 உடைகளையும் வெச்சு ஜேனை கெவின் படங்கள் எடுக்குறான். ஒரு கட்டுரை எழுதுறான். அத அவனுக்குத் தெரியாமலேயே பத்திரிக்கைல போட்டுர்ராங்க. அப்பத்தான் கெவின் யாருன்னு ஜேனுக்குத் தெரிய வருது. அவன் மேல கோவிச்சிக்கிட்டு பேசாம இருந்துர்ரா.

ஜேனோட தங்காச்சீ பாஸை டாவடிச்சாளே.. அவங்க திருமணம் செஞ்சுக்கிறதா முடிவெடுக்குறாங்க. அக்காக்கு முன்னாடி தங்காச்சீ கல்யாணம். அதுனால அவங்க அம்மாவோட கல்யாண உடையை இளையமகளுக்குக் குடுக்குறாரு அப்பா. ஆனா அந்த மரமண்டை அந்த உடையை வெட்டித் தச்சு வேற உடையா மாத்தீர்ரா. ஜேனுக்கு ஆத்திரம்னா ஆத்திரம். தன்னோட கல்யாணத்துக்குப் போட வெச்சிருந்த உடையை... அதுவும் இறந்து போன அம்மாவோட கல்யாண உடையை கிழிச்சிட்டாளேன்னு ஆத்திரப் பட்டு பாஸ் கிட்ட தங்காச்சீ பத்தி உண்மையைச் சொல்லீர்ரா. நடக்க இருந்த திருமணம் நின்னு போகுது.

இந்தக் கெவின் பயலும் அப்பப்பா அம்மா தாயே நானும் இருக்கேன்னு பின்னாடியே வர்ரான். ஆனா இவதான் கோவிச்சிக்கிட்டாளே. அதுனால ஒதுங்கிப் போறா.

அப்ப ஆபீஸ்ல இருக்குற பாசு... இவகிட்ட புதுசா ஏற்படுற பிடிப்பைச் சொல்றாரு. ஆனா அவளுக்கு இப்ப அவர் மேல இருந்த ஆசை போயிருச்சு. எங்க போயிருச்சு? அதான். அந்தக் கெவின் பய இருக்கானே...அவன் கிட்ட போயிருச்சு. ஆனாலும் முந்தி தான் விரும்புனதையும்....தங்காச்சீ மேல பொறாமை இருந்ததையும் ஒத்துக்கிறா. ஒத்துக்கிட்டு ஓடுறா. எங்க? அந்தக் கெவின் கிட்டதான். அப்புறமென்ன முடிவு சுபமோ சுபம். கெவினும் ஜேனும் சேர்ந்துர்ராங்க. பின்னாடி பாசும் தங்காச்சீயும் கூட புரிஞ்சிக்கிட்டு சேந்துர்ராங்க. இதாங்க கதை. ஆனா... படத்தப் பாக்கனுமே... ஒரு எடத்துல கூட தொய்வு இல்லை. அவ்ளோ நேர்த்தி.

அதுலயும் ஜேனா நடிச்ச Katherine Heiglம் கெவினா நடிச்ச James Marsdenம் ரொம்பவே அருமையா நடிச்சிருப்பாங்க. வாய்ப்புக் கெடைச்சா படத்தக் கண்டிப்பா பாருங்க. உண்மையிலேயே பார்த்து மனசுக்குத் திருப்தியான படம். அதுலயும் ஜேனுக்கும் கெவினுக்கும் திருமணம் நடக்குறப்போ ஜேனின் தோழிகள் 27 பேரும், அவள் அவங்கவங்க கல்யாணத்துக்குப் போட்ட உடையோட வரிசையா நிப்பாங்க. பாக்கவே நல்லா இருக்கும்.



பிரியாணிகள் தொடரும்.....

அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

Monday, May 12, 2008

தங்க மரம் - 13

சென்ற பகுதியை இங்கே படிக்கவும்.

பாகம் - 13

பறக்க முடியாமல் தடுமாறிய பிடிமா கீழே இறங்க நினைத்தது. ஆனால் அதுவும் முடியவில்லை. அப்பொழுதுதான் அந்த பெருத்த சிரிப்போசை கேட்டது.

"ஆகா.. ஆகா... அழகான பொம்மைகள். பறக்கும் யானைப் பொம்மை. அதன் மேல் ரெண்டு மனிதப் பொம்மைகள். ஹா ஹா ஹா"

குரல் வந்த திசையில் பார்த்த பொழுதுதான் அவர்கள் கண்ணில் பட்டாள் அந்த அரக்கி. பத்தாள் உயரம். அந்த அளவிற்குத் தண்டி. பத்து ஆளை விழுங்கினாற் போல் வயிறு. விரிந்து சிக்கு விழுந்த தலைமுடி. கள்ளு குடித்துச் சிவந்த முண்டக்கண்கள். ஆனால் மூஞ்சியில் ஏதோ ஒரு கண்ணாடி முகமூடி மாட்டியிருந்தாள். நல்லவேளையாக அவளது அதியழகான முகத்தைக் கொஞ்சம் மறைத்தது.

அவளைப் பார்த்ததும் சித்திரை கேட்டான்.

"யாரடா இவள். நம்மைப் பொம்மை என்கிறாளே. இவளைப் போன்ற அரக்கிகள் எல்லாம் நம்மளைப் போன்றவர்களைப் பிடித்து விழுங்குவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன். இவள் நம்மைச் சொப்பாக வைத்து விளையாடப் போகின்றாளோ."

கதிரவனிடம் சித்திரை சொன்னது லேசுமாசாக அவள் காதுகளில் விழுந்து விட்டது.

"ஏஏஏஏ பொம்மைகளே! உங்களுக்குப் பறக்க மட்டுமே தெரியும் என்று நினைத்தேன். பேசவும் தெரிந்திருக்கிறதே. நீங்கள் பேசியது என் காதில் விழுந்து விட்டது."

சித்திரையின் வாயால் சும்மாயிருக்க முடியவில்லை. இடுக்கண் வந்தாலும் வைரக் கடுக்கன் வந்தாலும் நகுகின்றவன் அவன்.

"அம்மா அழகரசி. உன் காதில் தடுமாறி ஆனையே விழுமே...நான் பேசியது விழாமல் போகுமா? உன் பேர் என்ன? எங்களை எதற்காக நிறுத்தி வைத்திருக்கின்றாய்?

சித்திரை பேசப்பேச அவளுக்கு மகிழ்ச்சி கூடிக் கொண்டே போனது.

"ஆகா ஆகா.. அழகாகப் பேசுகிறாய். என்னுடைய பெயர் அண்டி. நீங்கள் என்னுடைய இடத்திற்கு மேல் பறந்தீர்கள். மிகவும் அழகான பொம்மைகளான உங்களை எனக்கு மிகவும் பிடித்து விட்டது. உங்களை என்னுடைய வீட்டில் வைத்து அழகு பார்க்கப் போகின்றேன். என்னிடம் இருக்கும் மற்ற பொம்மைகள் உணர்ச்சியே இல்லாமல் பேசாமல் இருப்பவை. ஆனால் நீங்கள் எனக்குப் பொழுது போகும் வகையில் நன்றாகப் பேசுகின்றீர்கள்."

"அண்டிதான் உன் பெயரா! நல்ல பெயர். அண்டியாம் அண்டி. வேண்டாம். எதையாவது சொல்லி விடப் போகிறேன். சரி. உன்னுடைய வீடு எங்கே இருக்கிறது? அங்கு சாப்பிடுவதற்கு எதுவும் கிடைக்குமா?"

என்னுடைய வீடு இந்த மலைக்குகையில் இருக்கிறது. உங்களுக்குச் சாப்பிடுவதற்கு வேண்டியன கிடைக்கும். நன்கு உருண்டு திரண்ட...பார்த்தாலே நாவூறும் எட்டு எருமைகளை இப்பொழுதுதான் அடித்துப் போட்டிருக்கிறேன். மாலைச் சிற்றுண்டிக்காக. நீங்கள் ஒரு பக்கமாகச் சாப்பிடுங்கள். நான் ஒரு பக்கமாகச் சாப்பிடுகிறேன். நீங்கள் எவ்வளவு சாப்பிட்டு விடப் போகின்றீர்கள். ஹா ஹா ஹா.. சாப்பிடும் பொம்மைகள். சாப்பிடும் பொம்மைகள்."

"ஆகா...எட்டு எருமைகளை அடித்துப் போட்டிருக்கிறாளா... அது சரி. இவள் அடித்துப் போட்டிருக்கும் எட்டுக்கு முன்னால் நாம் சிறிதுதானே. நாம் வாயில் நுழைந்தால் போனதும் தெரியாது. வந்ததும் தெரியாது. ஆனாலும் எதற்கு வம்பு. இவள் எப்படியும் நம்மை விடமாட்டாள். இங்கே இறங்கித்தான் நாம் தப்பிப்பதற்கு ஏதாவது செய்ய வேண்டும் நீ சற்று அமைதியாக இரு. நான் பேசுகிறேன்." முணுமுணுப்பாக சித்திரையிடம் சொன்ன கதிரவன் அண்டியைப் பார்த்துச் சொன்னான்.

"எட்டு எருமை தின்னும் அண்டியே... உன்னுடைய வீட்டில் பொம்மைகளாக இருக்க நாங்கள் மூவரும் ஒப்புக்கொள்கிறோம். இப்பொழுது எங்களை இறக்கி விடு."

கதிரவன் ஒப்புக்கொண்டவுடன் தனது மண்டையை ஆட்டி ஆட்டி மகிழ்ந்த அண்டி மூவரையும் கீழே இறக்கியது.

"அதோ என்னுடைய வீடு. வாருங்கள்." என்று ஒரு பெரிய குகைக்குள் அழைத்துச் சென்றது. அந்தக் குகையை வீடு என்று சொல்ல முடியாது. ஆனால் அந்தப் பெரிய குகைக்குள் சின்னச் சின்ன குகைகள் இருந்தன. சூரிய வெளிச்சம் வருவதற்கும் வழிகள் இருந்தன. அந்த வழிகளில் ஒளிக்கதிர் வருவது பார்வைக்கு மிக அழகாக இருந்தது.

வழியில் அண்டி சொன்னது போலவே எட்டு எருமைகள் கிடந்தன. அண்டி அடித்த அடியில் குருதி கசிந்து பார்ப்பதற்குச் செக்கச் செவேல் என்று இருந்தன. அதைப் பார்த்ததும் அண்டியின் பசி குத்தாட்டம் போட்டது. பொம்மைகளை ஒரு நொடி மறந்து விட்டாள். கண்ணாடி முகமூடியைக் கழற்றி வைத்து விட்டு எட்டையும் கொஞ்சம் கொஞ்சமாக வாய்க்குள் திணித்துக் கொண்டாள். அவள் வாய்க்குள் திணித்துக் கொண்ட அழகைப் பார்த்த மூவருக்கும் கண்ணைக் கட்டிக்கொண்டு வந்தது.

"ஸ்ஸ்லபஷ்" என்று உதடுகளை நக்கிக் கொண்டவள்.. திரும்பவும் கண்ணாடி முகமூடியைப் போட்டுக் கொண்டாள். சற்றுத் திரும்பித் தேடிப் பார்த்து இவர்கள் இருக்கிறார்கள் என்று உறுதி செய்து கொண்டாள். "வாருங்கள் பொம்மைகளே. உங்களை பொம்மை அறைக்குள் அழைத்துச் செல்கிறேன்."

சற்றுத் தள்ளி உள்ளேயிருந்த அறைக்குள் (குகைதான்) அழைத்துச் சென்றாள். அந்த அறைக்குள்ளே பலப்பல சிலைகள். இறைவனின் உருவச் சிலைகள்..மனிதர்களின் சிலை.. விலங்குகள்...பறவைகள் என்று பலப்பலச் சிலைகள் இருந்தன. கற்சிலைகளிலிருந்து உலோகம்..மரம் என்று பல வகைகள் வேறு. எங்கிருந்து எடுத்து வந்தாளோ!

"இங்குதான் நீங்கள் இருக்க வேண்டும். இங்கேயே இருங்கள். நான் போய் உங்களுக்கு உணவு கொண்டு வருகிறேன்."

மூவருக்கும் அடிவயிற்றை அமிலம் அரித்தது. கதிரவன் கேட்டு விட்டான். "அண்டி..எங்களுக்கு என்ன உணவு கொண்டு வரப் போகிறாய்?"

"ஹா ஹா ஹா உங்களுக்கா...நீங்கள் சின்ன்ன்ன்ன்ன்ன்ன்னப் பொம்மைகள். ஆகையால் எட்டு எருமைகளை அடிக்க மாட்டேன். அதெல்லாம் எனக்குத்தான்" அவள் சொல்லும் போதே நிம்மதி வந்ததும் மூவருக்கு.

"உங்களுக்கு ஒரேயொரு மலைப்பாம்பு மட்டும் போதுமே. இருங்கள் உடனே சென்று பிடித்து..அதன் கழுத்தைத் திருகிக் கிழித்துத் தருகிறேன். நீங்கள் சுவைத்துச் சுவைத்து உண்ணலாம்."

வயிறு என்று ஒன்று இருப்பதே மூவருக்கும் மறந்து போனது.

"தாயே அண்டி. மலையும் வேண்டாம். பாம்பும் வேண்டாம். நாங்கள் பொம்மைகள். அதையெல்லாம் சாப்பிட முடியாது. எங்களுக்கு மரங்களில் பழுக்கும் கனிகள்தான் உணவு. அவைகளைக் கொண்டு வந்தாலே போதும். புரிந்தது."

"ம்ம்ம்ம்ம்... புரிந்தது புரிந்தது. நீங்கள் பொம்மைகள். உங்களால் நல்ல உணவைச் சாப்பிட முடியாது. மரங்களில் இருக்கும் கனிகளைத்தான் சாப்பிட வேண்டும். இதோ விரைவில் வருகிறேன்." என்று சொல்லிவிட்டுத் தடதடவென ஓடினாள். மூவரும் நிற்க முடியாமல் தடுமாறினார்கள்.

அவள் போனதும் குகையை ஆராய்ந்தார்கள். ஏதாவது வழி தென்படுகிறதா என்று அவர்கள் உள்ளே வந்த வாசலைத் தவிர வேறு வழிகள் எதுவும் தென்படவில்லை. அந்த வாயில் வழியே வெளியே போகவும் முடியவில்லை. ஏதோ ஒரு தடுப்பு இருந்தது. அதற்குள் அண்டி வரும் அதிர்வுகள் தெரிந்ததும் உள்ளே பொம்மையறைக்குள் வந்து விட்டார்கள்.

தொடரும்...

படிக்கின்றவர்களின் வசதிக்காக






அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

Monday, May 05, 2008

தங்க மரம் - 12

சென்ற பகுதியை இங்கு படிக்கவும்.

பாகம் - 12

தனிமா பிடிமாவை விட்டு வந்தது போல நாமும் விட்டுவிட்டோம். பிடிமாவின் நிலையை என்னவென்று பார்க்கலாம்.

கதிரவனும் சித்திரையும் பிடிமாவின் மீது பரிவு காட்டியது அதன் கலக்கத்தைக் குறைத்து ஆசுவாசப்படுத்தியது. அதுவுமில்லாமல் சுடர்மகள் லிக்திமாவின் படத்தைப் பார்த்ததும் அவர்கள் மேல் நம்பிக்கையும் பிடிமாவிற்கு உண்டானது. நம்பிக்கை வந்தாலே தன்னைப் பற்றிச் சொல்லத்தானே விருப்பம் வரும். அதற்காகத் தன்னிடமிருந்த நாவிலூறியை வாயில் போட்டுக் கொண்டது பிடிமா. ஆலோரில் மனதினாலேயே அங்குள்ளவர்களிடம் தகவலைப் பரிமாற முடியும். ஆனால் பூமி மனிதர்கள் மனது தகவல்களைப் பெறும் திறனை காலவோட்டத்தில் இழந்து விட்டதால் அவர்களிடம் பேசுவதற்கு இந்த நாவிலூறி தேவைப்படுகிறது. அதை வாயில் போட்டுக் கொண்டால் அவர்களுக்குப் புரியும் மொழியில் தகவலைச் சொல்லலாம்.

பிடிமாவைப் பற்றியும் தனிமாவைப் பற்றியும் நன்கு தெரிந்து கொண்ட கதிரவனுக்கு வந்திருப்பவர்கள் நண்பர்கள் என்றும் இருவரின் கொள்கையும் ஒன்றுதான் என்றும் மிக எளிதில் புரிந்து போனது. இந்த விஷயத்தை முதலில் அன்னையிடம் சொல்லி விட்டு காரியத்தில் இறங்க நினைத்தான்.

பிடிமாவிற்கு உணவு ஏற்பாடு செய்து தரச் சொல்லி சித்திரையிடம் சொல்லி விட்டு நேராக வீட்டிற்குச் சென்றான். ஆனால் அங்கிருந்த நிலவரம் கலவரத்தையே உண்டாக்கியது. என்ன நடந்ததென்றே புரியவில்லை. அம்மாவைக் காணவில்லை. ஏதோ பிரச்சனை நடந்திருக்கிறது என்று மட்டும் புரிந்தது. வீட்டுக்குள் மட்டும் அலங்கோலமாக இருந்தது அவன் ஐயத்தை அதிகப் படுத்தியது. நிலமையைக் கண்டதும் ஊழிவாயன் மேல்தான் சந்தேகம் வந்தது. ஆனால் எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை.

அதற்கு மேல் சற்றும் தாமதிக்க விரும்பாமல் மீண்டும் சித்திரையிடமும் பிடிமாவிடமும் ஓடினான். அதற்குள் சூரிய வெளிச்சத்தாலும் சித்திரை ஒடித்துப் போட்ட நல்ல தென்னங்குறுத்துகளாலும் வயிறு நிரம்பி மிகவும் தெளிவாக இருந்தாள் பிடிமா. வீட்டில் கண்டதை இருவருக்கும் விளக்கினான் கதிரவன்.
மூன்று பேரும் அமர்ந்து அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று பட்டியல் இட்டார்கள்.

முதலில் கதிரவனின் அன்னை அமுதம் என்ன ஆனார்கள் என்று கண்டுபிடிக்க வேண்டும்.

பிடிமாவோடு வந்த தனிமாவையும் காணவில்லை. அவளையும் கண்டுபிடிக்க வேண்டும்.

ஊழிவாயன் எங்கிருக்கிறான் என்று கண்டுபிடிக்க வேண்டும். அவனிடமிருந்து லிக்திமா, கதிரவனின் தந்தை, சித்திரையின் தந்தை...ஒருவேளை அமுதத்தையும் பிடித்துக் கொண்டு போயிருந்தால் அவரையும் சேர்த்து விடுவிக்க வேண்டும்.

இந்தச் செயல்களை எப்படித் தொடங்குவது என்று தெரியாமல் முழித்தார்கள் நண்பர்கள் இருவரும். ஏதேனும் சின்னக் குறிப்பு கிடைத்தாலும் நன்றாக இருக்குமே என்ற இருவரின் கவலையையும் பிடிமா குடுத்த தகவல் போக்கியது.

ஊழிவாயன் இருக்குமிடத்தை அடைய முதலில் தங்கமரத்தை அடைய வேண்டும் என்றும்... அந்தத் தங்கமரமோ ஏறாத மண்மலையில் இருக்கிறது. அந்த ஏறாத மண்மலையோ தணலேரிக்கு அருகில் இருப்பதாகவும் லிக்திமா ஏற்கனவே சொல்லி வைத்திருப்பதை பிடிமா சொன்னது. (லிக்திமாவிற்கு இந்த விவரங்கள் எப்படித் தெரிந்தது என்பதைப் பிறகு பார்ப்போம்.)

ஆக இப்பொழுது தணலேரியைக் கண்டுபிடிக்க வேண்டும். ஏரியில் நீரிருக்கும். தணலிருக்குமா? அல்லது வெறும் பெயரா? மண்ணிலே மலையிருக்கும். மலையே மண்ணாயிருக்குமா? தங்கத்தில் மரம் முளைக்குமா? ஒருவேளை தங்குவதற்கான மரமா?

இந்தச் சந்தேகங்கள் மூவரின் உள்ளத்திலும் எழுந்தன. அப்பொழுது பிடிமா சொன்னாள்.

"நண்பர்களே என் மீது ஏறிக் கொள்ளுங்கள். உங்களைச் சுமந்து என்னால் பறக்க முடியும். என்னுடைய இறக்கைகள் மிகவும் வலுவானவை. இந்தச் சூரியவொளி மிகுந்த ஆற்றலைக் கொடுக்கிறது எனக்கு. ஆகையால் பறந்து சென்று தேடுவதே வசதியாக இருக்கும். மேலும் என்னோடு வந்த தனிமாவும் அருகில் எங்கேயாவது விழுந்திருக்க வாய்ப்புள்ளது. வாருங்கள். என் மீது ஏறிக் கொள்ளுங்கள்"

பிடிமாவின் அழைப்பை இருவராலும் மறுக்க முடியவில்லை. விண்ணிலிருந்து பார்த்தால் விசாலமான காட்சி கிடைக்கும். அது தேடுதலை எளிமையாக்கும் என்றும் புரிந்தது. சரியென்று ஒப்புக்கொண்டு பிடிமாவின் மேல் ஏறினார்கள். இருவரையும் சுமந்து கொண்டு ஜிவ்வென்று வானில் ஏறிப் பறந்தது பிடிமா.

விண்ணிலிருந்து அழகான பூமியைக் காணும் காட்சி மூவரையும் பரவசப்படுத்தியது. களைப்பே தோன்றாமல் பறந்து கொண்டிருந்த பிடிமாவும் நண்பர்கள் இருவரும் அவர்கள் வேலையையே சற்று மறந்திருந்தார்கள் என்றாலும் மிகையாகது. கிட்டத்தட்ட இரண்டு மூன்று மணி நேரங்கள் பறந்த பிறகு மலைகள் நிறைந்த பகுதியை அடைந்தார்கள். அங்கு இறங்கி களைப்பாறி உணவு தேடலாம் என்று கதிரவனுக்குத் தோன்றியது.

தோன்றியதைச் சொல்லும் முன்னமே பிடிமா விண்ணிலேயே நின்றது. அதனால் சிறிதும் நகரமுடியவில்லை. முழு ஆற்றலையும் பயன்படுத்தினாலும் அசையக் கூட முடியவில்லை. கீழேயும் விழவில்லை. என்னடா அதியம் என்று அசந்து போகும் வேளையில் கேட்டது இடியோசை போன்ற சிரிப்போசை.

தொடரும்...

படிக்கின்றவர்களின் வசதிக்காக






அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

Thursday, May 01, 2008

தங்கமரம் - 11

சென்ற பகுதியை இங்கே படிக்கவும்.

பாகம் - 11

தங்கக்கத்தி தனிமாவின் கைகளில் சேர்ந்ததும் பூகனின் கண்கள் அச்சத்தால் விரிந்தன. தனிமா அவசரப்பட்டு பூகனைக் கொல்லவில்லை. சற்றுப் பொறுமையாக இருந்தாள். ஆனாலும் பூகன் அவள் மேல் பாய்ந்ததினால் ஆத்திரத்தோடே இருந்தாள்.

"ஹே... யார் நீ?" அதட்டலோடு கேட்டாள்.

"பார்த்தால் எப்படித் தெரிகிறது? உனக்குக் கண்கள் உண்டுதானே?" திமிராகக் கேட்டது அந்த பூகன்.

"அடி வாங்கிப் பிடி பட்ட பிறகும் பேச்சு பெரும் பேச்சு."

"அது சரி... வந்திருப்பது பூகனூருக்கு.... பிடித்து வைத்திருப்பதோ பூகனை.... வெளியிலிருந்து வந்திருக்கும் நீ இவ்வளவு பேசும் பொழுது என் பேச்சு பெரும் பேச்சாவதில் வியப்பில்லையே." பூகனின் பேச்சில் ஆத்திரமும் எரிச்சலும் வெடித்துச் சிதறின.

மெல்லச் சிரித்தாள் தனிமா. "பூகனாக மட்டுமே இருந்தால் பேசலாம். ஆனால் மானம் மரியாதை அனைத்தும் ஊழிவாயனிடம் அடகு வைத்து விட்டு வாயினை உண்ண மட்டுமே திறக்கின்றவர்கள் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். பேசவும் திறப்பீர்கள் என்று இன்றுதான் தெரிந்து கொண்டேன்."

"ஆஆஆ அவமானம். பூகன்கள் அந்த ஊழிவாயனிடம் விரும்பியா வேலை செய்கின்றன? வேறு வழியில்லாமல் அந்த வெளியண்டத்து ஊழிவாயனிடம் அடங்கி நடக்கின்றார்கள். என்னைத் தவிர. நான் ஒருவன் இருப்பதையே அறியான் அந்த ஊழிவாயன். உன்னைப் பார்த்தால் கூட அந்த ஊழிவாயனின் முகச்சாயல் தெரிகின்றது. நீயும் அவனைப் போல மாயாவியாகத்தான் இருக்க வேண்டும். ஆகையால்தான் மனிதர்களே நுழைய முடியாத இந்தப் பூகனூருக்குள் நுழைந்து...என்னையும் பிடித்து....என்னையே குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறாய்." ஆத்திரத்தில் பொறுமினான் அந்த பூகன்.

தனிமாவிற்கு நிலமை சட்டென்று புரிந்து போனது. ஆலோரில் இருக்கும் பொழுதே ஊழிவாயன் பூகன்களின் தலைவனை ஏமாற்றி மந்திரக்கோலை அபகரித்துக் கொண்டதை அறிவாள். ஆனால் அனைத்து பூகன்களும் அடிமையாகியிருப்பதாக நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு ஒரு பூகம் சுதந்திரமாக இருப்பது மகிழ்ச்சியைக் கொடுத்தது.

பைய அந்த பூகனைக் கீழே இறக்கினாள். தங்கக் கத்தியையும் அந்தரத்திலேயே நகட்டி அந்த பூகன் கையில் வைத்தாள். அதற்கோ வியப்பு. தரையில் ஒரு நிலையில் இறங்கிய பிறகு கேட்டது. "நீ யார்?"

"பூகனே. ஊழிவாயன் என்று நீங்கள் சொல்லும் நபரின் மகள் நான். என்னுடைய பெயர் தனிமா. ஊழிவாயனிடமிருந்து என்னுடைய தாயை விடுவிக்க வந்திருக்கிறேன்."

பூகனுக்கு ஒன்றும் புரியவில்லை. பளக் பளக் என்று முதலில் முழித்தது.

"சரி. என்னுடைய பெயர் ககன். நீ அப்படியானால் ஊழிவாயனுக்கு ஆதரவானவள் என்று நான் நம்புவதற்குக் காரணம் இல்லையல்லவா!"

ககன் சொன்னது எடுத்ததும் தனிமாவிற்குப் புரியாவிட்டாலும் தான் ஊழிவாயனுக்கு ஆதரவானவள் இல்லை என்பதைத்தான் அப்படிக் கேட்கிறான் ககன் என்று உணர்ந்தாள்.

"சரி தனிமா. அப்படியானால் நீ இங்கே வந்ததற்கான காரணத்தின் மேலதிகத் தகவல்களை நான் அறிந்து கொள்வதில் உனக்குத் தயக்கம் இருக்கப் போவதில்லை என்றே நம்புகிறேன்."

சிரித்து விட்டாள். "ஹா ஹா ஹா.. இல்லை இல்லை. தாராளமாகச் சொல்லலாம். நாங்கள் ஆலோரிகள். நானும் என்னுடைய ஆனையான பிடிமாவும் பூமிக்கு வந்தோம். பூமியின் எல்லைக்குள் நுழையும் பொழுது தடுமாறினோம். அப்படிக் கீழே விழுகையில் பிடிமா ஒருபுறம் போனாள். நான் இங்கு தவறி தண்ணீருக்குள் விழுந்து இங்கு வந்திருக்கிறேன்."

தனிமா சொன்னது பூகனை யோசிக்க வைத்தது. "தனிமா...இப்பொழுது நீ எப்படி இங்கே வந்ததாகச் சொன்னாயோ அப்படித்தான் முன்னம் ஒருவன் உள்ளே வந்ததாகச் சொல்லிக் கொண்டிருந்தான். அவன் வேறு யாருமல்ல. யாரை நீ உன்னுடைய தந்தை என்று கூறிக்கொண்டு..அவனையே எதிர்க்க வந்திருப்பதாகக் கூறுகின்றாயோ...அந்த ஊழிவாயந்தான். நீயும் அதை வழியில் இங்கு வந்திருப்பதிலிருந்து இரண்டு விஷயங்கள் என்னுடைய யோசனைக்கு வருவதால் அவைகளை உன்னிடம் சொல்லிவிடுவதே நல்லது என்று இப்பொழுது தோன்றுகிறது. கேள்."

கூர்ந்து கேட்கத் தொடங்கினாள் தனிமா.

"முதலாவது. ஊழிவாயன் என்னதான் ஏமாற்றுக்காரனாக இருந்தாலும் அவன் ஆற்றலிலும் அறிவிலும் குறையுள்ளவன் என்று யாரும் சொல்ல முடியாத அளவிற்குச் சிறந்தவன்.

இரண்டாவது. ஊழிவாயன் வந்திறங்கிய பொழுது அவனிடமிருந்த சக்தியனைத்தும் தொடர்ந்து வைத்துக் கொண்டிருக்க முடியாத நிலை வந்தது. அதாவது சுருங்கச் சொன்னால்...இந்த பூமிக்கு வெளியே சிறந்து பணியாற்றிய அவனது ஆற்றலனைத்தும் பூமிக்குள் வந்ததும் சிறிது சிறிதாக தன்னை இழந்தது. அதாவது என்னை அந்தரத்தில் தொடாமல் நிறுத்தி வைத்திருக்க உன்னால் தொடர்ந்து செய்ய முடியாது போகும்."

ககன் சொன்ன இரண்டு தகவல்களில் இரண்டாவது தகவல் தனிமாவை யோசிக்க வைத்தது. ஒரு பிரச்சனையை தீர்க்க வந்த அவளுக்குப் பிடிமாவை இழந்தது இன்னொரு பிரச்சனையாக வந்து நிற்கிறது. அவளை முதலில் கண்டுபிடித்தாக வேண்டும். ஆனால் தன்னுடைய ஆற்றலை விரைவில் இழக்க நேரிடும் என்ற எண்ணம் வேறு சலனப்படுத்தியது. கெட்ட நேரத்திலும் நல்ல நேரமாக ககனின் நட்பு வேறு கிடைத்திருக்கிறது. ஆனால் எதையும் சுருக்கமாகச் சொல்லத் தெரியாத ககனால் எவ்வளவு நன்மை என்றும் தெரியவில்லை. மொத்தத்தில் ஆற்றல் குறையும் முன்னமே விரைந்து செயல்படுவது நன்று என்று அவளுக்குத் தோன்றியது.

"ககன். நீ சொல்வதை வைத்துப் பார்க்கும் பொழுது நான் விரைந்து செயலாற்ற வேண்டும் என்பது புரிகிறது. முதலில்....எனக்கு ஒன்று புரிய வேண்டும். ஆற்றலை அனைத்தும் இழந்தார் ஊழிவாயன் என்றால்....எப்படி பூகன்கள் அனைவரையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்? ஏன் எந்த பூகனும் எதிர்க்கவில்லை. நீ ஊழிவாயனை எதிர்ப்பதாகச் சொன்னாலும் இத்தனை ஆண்டுகளில் ஒன்றும் செய்யவில்லையே! ஏன்?"

ககன் சொல்லத் தொடங்கினான்.

தொடரும்...