Sunday, August 27, 2006

1. லம்பயீ கரியோ லொவீயா - பாகம் ஒன்னு

வெயிலும் வெக்கையும் கொளுத்தும் ஒரு நல்ல ஞாயிற்றுக் கிழமையிலே சென்னையிலே பல திட்டங்கள் போட்டு ஒன்றும் நடக்காமல் என்னென்னவோ நடக்கக் கண்ட உத்தம பொழுதினிலே வலைப்பதிவர் சந்திப்பு நடக்க வேண்டும் என்று விதித்திருந்த தலையெழுத்திலே மாட்டிக் கொண்டு முழிக்கக் கண்டார் ஜி.ரா என்று அன்போடு(!) நண்பர்களால் அழைக்கப்படும் கோ.இராகவன். அதாவது ஆகஸ்டு 20ம் தேதி.

காலையிலிருந்து பல வேலைகளில் மாட்டிக் கொண்டு ஜிரா பிழிந்து எடுக்கப் பட்ட கரும்பு போல இருந்த ஜி.ரா பைக்கை எடுத்துக் கொண்டு நுங்கம்பாக்கம் விரைய வேண்டியதாயிற்று. கூடவே படபடவென றெக்கையை அடித்துக் கொண்டு தோகையைத் தொங்கப் போட்டுக் கொண்டு மயிலாரும் பறந்தார்.

ஒன்வே டூவேக்களிலெல்லாம் நுழைந்து திருப்பங்களில் நெளிந்து பன்றிமலைச் சித்தர் ஆசிரமம் வழியாகச் சென்று சடக்கென்று நுழைந்த இடம் Alliance Francaise. தமிழை விட ஃபிரெஞ்ச்சை ஒழுங்காகத் தமிழர்கள் பலர் உச்சரிக்கும் கலைவளர்க்கும் புண்ணிய பூமி அது. தீடீரென்று பாரீசுக்குள் நுழைந்தது போல இருந்தது என்று பொய் சொல்ல மனமில்லாததால் நேரடியாக சொல்ல வந்ததிற்கு வருகிறேன்.

போண்டாவும் பாசந்தியும் இல்லாமல் வலைப்பதிவர்கள் சந்திக்க முடியுமா என்று பட்டி மன்றம் வைக்க வேண்டியிதில்லை என்று நிருபிக்கவோ என்னவோ எஸ்.பாலபாரதியும், அருளும், ப்ரியனும், ஜி.ராவும் AF வாசலில் கூடினார்கள். கூடவே சாட்சியாக மயிலார்.

யார் யார் யார் என்று தெரியாமல் அரிமுகமாக இருக்காமல் படக்கென்று அறிமுகம் செய்து கொண்டார்கள். ஆடு கிடைக்குப் போகும். இல்லையென்றால் பிரியாணியாக கடைக்குப் போகும். இவர்கள் ஏன் இங்கு வந்தார்கள்? இதில் மாபெரும் சதி இருக்கும் என்று எல்லாரும் நினைப்பதற்கு வாய்ப்பிருப்பதால் அப்படியே அனைவரும் நினைக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

பின் நவீனத்துவத்திலிருந்து எக்ஸிஸ்டென்ஷியலிசம் வழியாக மரபுக்கவிதைக் காவியங்களுக்குள் நுழையும் வழிமுறைகளைப் பற்றியெல்லாம் பேசத் தெரியாயதாலோ என்னவோ நேராக அனைவரும் டீ குடிக்கப் போனார்கள். டீ என்பது தமிழா என்று கேட்கும் அறிவு அதி ஜி.ராவுக்கு அந்நேரம் இல்லாததால் அனைவரும் நிம்மதியாக டீ குடித்தார்கள்.

இவர்கள் டீ குடித்த வேளையில் மயிலார் ஜி.ராவின் காதில் போய் "நேரமாச்சு. வர்ரியா...நான் போகட்டுமா? நீ வேணா இவங்க கிட்ட வெட்டிப் பேச்சு பேசிக்கிட்டு இரு" என்று மெதுவாகக் கேட்டது எல்லார் காதிலும் விழுந்து தொலைத்தது. பாபா(அதாங்க பாலபாரதி)வும் அப்படியே சமாளித்துக் கொண்டு "ஓ! போலாமே...நேரமாச்சு" என்று சமாளித்தார். அந்த அவசரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒழுங்காக வரவில்லை. ஆனாலும் கொடுக்கிறேன். யாரையாவது கண்டு பிடிக்க முடிந்தால் கண்டு பிடித்துக் கொள்ளுங்கள்.

ஏற்கனவே எல்லார் கையிலும் நுழைவுச் சீட்டை வைத்துக் கொண்டு நுழைய இடம் தெரியாமல் முழித்துக் கொண்டிருந்த வேளையில் சிகப்பு நிற போஸ்டரைப் பார்த்துக் கொண்டே இரண்டு மாடிகளைத் தாண்டி அரங்கத்துக்குள் நுழைந்தோம். நூறு பேருக்கு மேல் யாரும் நுழைந்தால் எல்லாரும் வெளியே வந்து விட வேண்டிய அளவுக்கு ஒரு அரங்கம். ஆனால் வசதியாக இருந்தது. மேலே ஏறியிருப்பது மேடை என்பதைப் பொய்யாக்கி மேடையை கீழே வைத்திருந்தார்கள். பார்வையாளர்கள் மாடிப் படியில் உட்கார்ந்து கொண்டு கீழே பார்ப்பது போல ஒரு அமைப்பு.

ஆளாளுக்கு இருந்த இடத்தில் தமிழர்களின் பாரம்பரிய முறையில் அடித்துப் பிடித்து அமர்ந்தோம். குற்றம் காணின் அதை உரக்கச் சொல்வோம் என்பது போல "எனக்கு மறைக்குது...ஒனக்கு இடிக்குது" என்று குரலெழுப்பிக் கொண்டனர் சிலர். ஆனாலும் நாகரீகத்தில் உச்சியில் இருக்கும் நாம் மறைக்கிறது என்று சொல்லிக் கொள்ளக் கூச்சப்பட்டுக் கொண்டு அமைதியாக இருந்தனர் பலர். மயிலார் தோகையை நன்றாக விரித்துக் கொண்டு வசதியாக உட்கார்ந்திருந்தார். அவரிடம் மட்டும் யாரும் மறைக்கிறது தோகையை மடக்குங்கள் என்று சொல்லவேயில்லை.

சரி. என்னதான் நடக்கப் போகிறது. நாடகம்தான். வேறென்ன. உலகமே ஒரு நாடகமேடையாம். அப்படியானால் இது நாடகத்தில் நாடகமா? கதைக்குள் கதை மாதிரி.

தொடரும்....

(படம் போடுறதுல சின்ன பிரச்சனை....சாந்தரம் வீட்டுக்குப் போயி படத்தப் போடுறேன்)

Monday, August 14, 2006

சென்னையில் பரமார்த்த குரு

பரமார்ந்த குரு சென்னைக்கு வருகிறார். ஆம். வருகின்ற ஞாயிறு, அதாவது ஆகஸ்டு மாதம் 20ம் தேதி 2006ம் ஆண்டு.

ஆமாம். நம்புங்கள். தன்னுடைய சீடர்களோடு கும்மாளம் போட்டு நம்மையும் மகிழ்விக்க வருகிறார். அதுவும் இரண்டு முறை.

கூத்துப்பட்டறை எல்லாருக்கும் தெரியும். அவர்கள் பொன்னியின் செல்வனை மேடை வடிவமாக்கியவர்கள் என்று நினைக்கிறேன். பெங்களூரில் இருந்து கொண்டு இதெல்லாம் பத்திரிகையில் படிப்பதோடு முடிந்து போனது. அப்படியிருக்க இந்த மூன்று மாத சென்னைப் பயணத்தில் இரண்டு முறை மேடைக் கச்சேரியில் திரையிசை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. முதல்முறை பி.சுசீலாவும் எஸ்.ஜானகியும் இணைந்து பாடியாது. இரண்டாம் முறை பி.சுசீலா அவர்களின் கச்சேரி. காமராஜர் அரங்கத்தில். அதுவும் முதல் வரிசையில்.

நேற்று மாலை Chennai City Centre என்ற சென்னையின் புதிய ஈர்க்கைக்குச் சென்றிருந்தேன். அங்கு landmark கடையில் வாயிலில்தான் பரமார்த்த குருவுக்கான விளம்பரத்தைக் கண்டேன். இந்தக் கடைகளுக்குள் செல்லும் முன் பைகளை வெளியே ஒப்படைத்துச் செல்ல வேண்டும். அங்குதான் அந்த விளம்பரம் கண்டேன். பரமார்த்த குரு நாடகத்தைக் கூத்துப் பட்டறையினர் அரங்கேற்றம் செய்யப் போவதை.

சிறுவயதில் பலமுறை படித்துப் படித்து ரசித்துக் கும்மாளமும் கும்மரிச்சமும் போட்ட பரமார்த்த குருவின் கதைகளை நாடக வடிவில் பார்க்கக் கிடைக்கிறது என்பது நல்ல அனுபவமாக இருக்கும்.

மாலை மூன்று முப்பதுக்கும் ஏழு முப்பதுக்கும் என இரண்டு அரங்கேற்றங்கள். Alliance Francieயில் நடக்கப் போகிறது. நூறு ரூபாய்க் கட்டணம். ஆனால் நல்ல தரமான பொழுதுபோக்காக இருக்கும் என நம்புகிறேன். அதைப் பார்த்ததுமே நானும் எனது நண்பனும் அங்கு செல்வதாக முடிவு செய்து விட்டோம். ஆனால் இன்னும் நுழைவுச் சீட்டு வாங்கவில்லை. ஏனென்றால் எந்த நேரத்தைத் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம்தான். விரைவில் முடிவு செய்து நாடகம் பார்ப்போம். பார்த்து விட்டு அது பற்றி பதிவும் போடுகிறேன்.

இந்தச் செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டிதான் இந்தப் பதிவு. நீங்கள் யாராவது வருகிறீர்களா?

அன்புடன்,
கோ.இராகவன்

ஜெயராமனுக்கு அதிமேதாவியின் பதில்

உலகத் தொலைக்காட்சியில் முதன் முறையாக என்பது மாதிரி உலக வலைப்பதிவுகளில் முதன் முறையாக இந்த மாதிரி ஜி.ரா போடும் முதல் பதிவு என்று சொல்லலாம் என்றே நினைக்கிறேன்.

வழக்கமாக ஒருவர் பின்னூட்டம் இட்டால் அதற்கான மறுமொழியைப் பின்னூட்டமாகவே இடுவது வழக்கம். விடாது கருப்பு என்னைக் குறிப்பிட்ட இனத்தின் அடிவருடி என்று எழுதிய பொழுதும் அந்தப் பதிவுக்குத் தொடர்பான கருத்தை மட்டும் சொல்லி ஒதுங்கிச் சென்றவன் நான். போலியின் அசிங்கமான பின்னூட்டங்களைக் கூட கண்டுகொள்ளாமல் இருக்கும் நான் ஒரு பின்னூட்டத்திற்குப் பதிவு போட வேண்டிய நிலை. புரியாதவர்கள் இங்கே சென்று பதிவையும் பின்னூட்டங்களையும் ஜெயராமனின் பின்னூட்டத்தையும் பார்க்கவும். பிறகு இந்தப் பதிவைத் தொடர்ந்து படிக்கவும்.

சண்டப் பிரச்சண்டன் பத்திரிகை நிருபர் பாராமுகம் ஜி.ராவைப் பேட்டி காண வருகிறார்.

பாரா : வணக்கம் ஜி.ரா. நல்லாயிருக்கீங்களா?

ஜி.ரா : நல்லாயிருக்கேங்க. நீங்க எப்படி?

பாரா : எனக்கென்ன! ஒரு பய திரும்பிப் பாக்க மாட்டேங்குறான். பாராமுகமாவே இருக்காங்க எல்லாரும்.

ஜி.ரா : ஹா ஹா ஹா. சரி. சொல்லுங்க.

பாரா : இல்ல. ஒங்களுக்கு நல்ல வேல இருக்கான்னு....

ஜி.ரா : இருக்குன்னு நெனைக்கிறேன். ஓரளவு படிச்சிருக்கேன். ஓரளவு பிரபலமான நிறுவனத்துல ஓரளவு நல்ல பதவியில இருக்கேன்.

பாரா : அப்புறம் ஏன் சொல் ஒரு சொல்லுன்னு பதிவு போடுறீங்க? வேலைக்கு மத்த வேலையா?

ஜி.ரா : அது வந்துங்க.....தமிழ்ல எல்லாரும் பயன்படுத்திக்கிட்டிருந்த சொற்கள் பல இன்னைக்கு விலகிப் போயிருக்கு. அதையெல்லாம் திரும்ப மக்களுக்கு ஞாபகப் படுத்தத்தான்.

பாரா : ஆனா மத்த மொழியெல்லாம் மற்ற மொழிச் சொற்களை ஏத்துக்கிட்டு நல்லா ஓடுறதாகவும்...உங்களுக்கப் போன்ற அதிமேதாவிகள் தமிழை வளர விடாம ஓட விடாம பிடிச்சு வெச்சுக்கிறதாகவும் சொல்றாங்களே!

ஜி.ரா : அடடே! அப்படியா சொல்றாங்க! நான் அதிமேதாவீங்கறத இப்பவாச்சும் கண்டு பிடிச்சாங்களே. ரொம்ப நன்றி. இந்த சமயத்துல எல்லாரும் என்னை அதி ஜி.ரா-ன்னு கூப்பிடனும்னு கேட்டுக்கிறேன்.

அப்புறம் இன்னொரு தகவல். எந்த மொழியும் தன்னிடத்தில் இல்லாதத அடுத்த மொழியில் இருந்து கடன் வாங்கலாம். தப்பில்லை. நேத்து மொளச்ச மொழிகள் எல்லாம் அப்படிச் செஞ்சுதான் வளந்திருக்கு. ஆனா நம்ம கிட்ட ஏற்கனவே இருக்குறத தூக்கிப் போட்டுட்டு புதுசு வாங்கக் கூடாது. நம்ம கிட்ட என்ன இருந்ததுங்குறதயும் என்ன இருக்குங்கறதயும் நினைவு படுத்திக்கிறதுலயும் தப்பில்ல. எங்க தாத்தா முன்சீப்பு. எங்க பெரிய தாத்தா பெரிய பாகவதர்னு பெருமை பேசுறது சுகமா இருக்குது. இது தப்பாப் படுதா? கோயில்ல புதுமையப் புகுத்தனும்னா மட்டும் பழைய சம்பிரதாயம்னு சொல்லி மாறக்கூடாதுன்னு சொல்றாங்க. நீதிமன்றத் தீர்ப்புன்னு சொல்லி கொண்டாடிக்கிறாங்க. மாத்தச் சொன்னா சண்டைக்கு வாராங்க. ஆனா தமிழ்ல இருக்குற பழைய சொல்லு மட்டும் மாறனுமா?

பாரா : புரியுது. புரியுது. அப்புறம் இந்த வடமொழி பத்தி....

ஜி.ரா : ஆம வடயா? உளுந்த வடயா?

பாரா : விட்டா கீழ வுழுந்த வடம்பீங்க போல. நான் சொல்றது வடபழநீல இருக்குதே அந்த வட.

ஜி.ரா : வடபழநீல ஓட்டல் சரவணபவன் ரொம்பப் பிரபலம். கோயிலுக்குப் போனா அங்கயும் போகாம விடுறதில்ல. அங்க தயிர் வட கிடைக்கும். அதச் சொல்றீங்களா?

பாரா : ஐயொ! அதி ஜீ.ரா. நான் சொல்றது வடக்கு. வடக்கு.

ஜி.ரா : ஓ வடக்கு மொழியா....அதாவது சமஸ்கிருதம். அதுவும் ஒரு பழைய மொழி. நிறைய இலக்கியங்களும் இருக்கு. அதுக்கென்ன?

பாரா : அதில்லைன்னா தமிழ் இல்ல.....பல தமிழ்ச் சொற்கள் அதுலருந்துதான் வந்ததுன்னு சொல்றாங்களே.....அதப் பத்தி.

ஜி.ரா : சமஸ்கிருதச் சொற்கள் தமிழில் இன்னைக்குப் புழக்கத்துல இருக்குங்கறது உண்மைதான். ஆனா அதுலருந்துதான் தமிழ் வந்துச்சுன்னு சொல்றது பால்பாயாசத்துலதான் பால் கறக்குறாங்கன்னு சொல்ற மாதிரி. ஹா ஹா. இன்னைக்கு தமிழில் ஆங்கிலச் சொற்களும் கலந்து பேசுறாங்க. நாளைக்கு ஆங்கிலம் இல்லைன்னா தமிழ் இல்லைன்னு சொல்வாங்க. ஆங்கிலத்துல இருந்துதான் தமிழ் வந்ததுன்னு பீட்சாவுல இருந்துதான் சீஸ் எடுக்குராங்கன்னு சொல்வாங்க. நாமளும் ஆமான்னு கேட்டுக்கனும் போல. மொத்தத்துல தமிழப் பலி குடுத்தாவது சமஸ்கிருதத்தைக் காப்பாத்தனுமா! பெரிய கொடுமையா இருக்கே!

பாரா : அப்ப தமிழர்கள் தமிழ்ல மட்டுந்தான் பேசனுங்கிறீங்களா?

ஜி.ரா : இதென்ன கொடுமையா இருக்கு. கேழ்வரகு ஒடம்புக்கு நல்லதுன்னு சொன்னா....அத மட்டுந்தான் திங்கனுமான்னு கேப்பீங்க போல. தமிழில் பேசுறப்போ முடிஞ்ச வரைக்கும் தப்பில்லாம தமிழ்ல பேசனும். அடுத்த மொழிகளும் தெரிஞ்சிருக்கனும். அடுத்தவங்களோட தொடர்பு கொள்ள வேண்டி போது தேவைப்படுமில்லையா. அந்தந்த மொழியில சிறப்பா பேச முயற்சிக்கிறதுல தப்பில்ல. தமிழ்ல அப்படி இப்பிடி பேசுனா என்னன்னு பேசுறவங்க.....அடுத்தவங்களோட அடுத்த மொழியில பேசுறப்போ அத ரொம்பச் சரியா பேச முயற்சிப்பாங்க. அவ்வளவுதான்.

பாரா : அவ்வளவுதானா?

ஜி.ரா : இன்னும் நெறைய சொல்லலாம். இவங்களுக்கு சொன்னாப் புரியாது. இது போதும்னு நெனைக்கிறேன்.

பாரா : அப்ப என்னதான் முடிவு? நீங்க என்ன செய்யப் போறீங்க? நல்ல வேலையப் பாக்கப் போறீங்களா? இல்ல...

ஜி.ரா : எனக்கிருக்குற நல்ல வேலையப் பாக்கப் போறேன். அத்தோட சொல் ஒரு சொல்லுல இன்னும் நிறைய தமிழ்ச் சொற்களை அறிமுகப் படுத்தும் ரொம்ப நல்ல வேலையையும் தொடர்ந்து செய்யப் போறேன். வடமொழிச் சொல்லப் பயன்படுத்தனும்னு ரொம்பப் பேர் விரும்பும் போது தமிழ்ச் சொல்லப் பயன்படுத்தனும்னு எனக்கு விருப்பம் இருக்கக் கூடாதா? சொல் ஒரு சொல் திரியில நான் தொடர்ந்து பதிவுகள் போடுறதில்லைன்னு வருத்தப்பட்டாரு. இனிமே அந்த வருத்தம் அவருக்கு இருக்காதுன்னு சொல்லி இப்ப முடிச்சிக்கிறேன்.

பாரா : இதுக்கெல்லாம் ஒங்களுக்குத் தொணையா யாரு இருக்காங்க? வலைப்பதிவுல சங்கம் வெச்சிருக்கீங்களா? இல்ல...அடையாளம் தெரியாத பின்னூட்டம் போட ஏற்பாடு செஞ்சிருக்கீங்களா? இல்ல வேற ஏதாவது?

ஜி.ரா : எனக்கு எப்பவும் வேலும் மயிலும் வடிவேலனும்தான் துணை. அவனை மட்டும் நம்பித்தான் நான் எதுவும் செய்றது.

பாரா : அப்பச் சரி. எல்லாம் நல்லா நடக்கட்டும். நான் பொறப்படுறேன்.

ஜி.ரா : ரொம்ப நல்லது. பலகாரத்தச் சாப்பிட்டீங்க. சரி. பலகாரத் தட்ட வெச்சுட்டுப் போங்க.

அன்புடன்,
கோ.இராகவன்

Sunday, August 13, 2006

5. லாலி லாலி லாலி லாலி

எஸ்.பி.பீ தொடர்ந்து சொன்னார். "சான்சுக்காக விஸ்வநாதன் சார் கிட்ட போனப்போ ஒடனே என்னைய ஏத்துக்கல. ரெண்டு வருஷம் கழிச்சுதான் வாய்ப்பு குடுத்தாரு. ஏன்? நான் ஆந்திரா கொல்ட்டி. என்னோட தமிழ் சரியாயிருக்காது. அதுனாலதான் ரெண்டு வருஷம் கழிச்சு தமிழ் நல்லா படிச்சப்புறமா வாய்ப்பு கொடுத்தார். இந்த விஷயத்துல அவரு சார் ரொம்ப ஸ்டிரிக்ட். இந்தக் கண்டிப்பு எல்லா இசையமைப்பாளர் கிட்டயும் இருக்கனும்"

இந்தக் கருத்தை அனைவருமே வலியுறுத்தினார்கள். மெல்லிசை மன்னராகட்டும். பி.சுசீலாவாகட்டும். எஸ்.ஜானகியாகட்டும். மலேசியா, எஸ்.பி.பீ, மாணிக்க விநாயகமாகட்டும், பி.பீ.ஸ்ரீநிவாஸ் ஆகட்டும். அனைவரும் வலியுறுத்தியது பாடல்களில் முறையான தமிழ் உச்சரிப்பு.

உபசரணைகளும் இடைவேளையும் முடிந்த பின் ஜானகி அவர்கள் பாடத் துவங்கினார்கள். டிக் டிக் டிக் என்ற படத்தில் வரும் "இது ஒரு நிலாக் காலம்" பாடலைப் பாடினார். திரையில் ஸ்வப்னா என்ற நடிகை நடித்த பாடல் அது. மேக்கப் இல்லாத மாதவியையும் ராதாவையும் இந்தப் பாட்டில் பார்க்கலாம் (அல்லது பயப்படலாம்). அதைத் தொடர்ந்து ஜெயப்ரதாவிற்காக ஏழைஜாதி படத்தில் பாடிய "அதோ அந்த நிதியோரம்" என்ற பாடலைப் பாடினார்.

ஒரு பாடலுக்கு மெல்லிசை மன்னர் திரும்பத் திரும்ப மெட்டுப் போட்டும் திருப்தி இல்லாமல் ஆறு மாதங்கள் கழித்து நிறைவான ஒரு மெட்டுப் போட்டாராம். அந்தப் பாடலைத்தான் அடுத்து சுசீலா பாடினார். ஆம். நமது நெஞ்சம் மறக்காத "நெஞ்சம் மறப்பதில்லை" பாடல்தான் அது.

என்னுடைய நண்பன் ஒருவன் வங்காளத்தைச் சேர்ந்தவன். இப்பொழுது அமெரிக்காவில் இருக்கிறான். மூன்று நான்கு வருடங்களுக்கு முன்பெல்லாம் என்னுடைய அலுவலகக் கணிணியில் பாடல்கள் ஒலித்துக் கொண்டேயிருக்கும். பாட்டுக் கேட்காமல் வேலை செய்ததே இல்லை. அப்பொழுது ஒரு குறிப்பிட்ட பாடல் மட்டும் அவனை மிகவும் கவர்ந்தது. அந்தப் பாடலை வருகையில் மட்டும் அமைதியாக வேலைகளைப் போட்டு விட்டு பாட்டு கேட்பான். பாட்டு முடிந்த பிறகே வேலையைத் தொடர்வான். இசைஞானி இளையராஜாவின் இசையில் வந்த "வரம் தந்த சாமிக்கு" என்ற பாடல்தான் அது. சுசீலா அவர்களின் தாலாட்டும் குரலில் சாமியே தூங்கும் பொழுது...இவன் எம்மாத்திரம்! அந்தப் பாடலைத் தெலுங்கில் "வடபத்ர சாயிக்கி" என்று மேடையில் பாடினார் பி.சுசீலா. கூட்டம் அமைதியாக ரசித்தது. அந்தப் பாட்டு முடிந்ததும் நிகழ்ச்சிக்கு குன்னக்குடி வைத்தியநாதன் வந்திருப்பதாக அறிவித்தார்கள்.

மனதோடு மழைக்காலம் என்று திரைப்படம் வெளிவரயிருக்கிறது. அதில் கார்த்திக்ராஜாவின் இசையில் கௌசிக் என்று ஒரு பாடகர் அறிமுகமாகிறார். அவரும் ஜானகியும் சேர்ந்து அடுத்து பாடலாக "அடி ஆத்தாடீஈஈஈஈஈஈஈஈஈஈ இளமனசொன்னு றெக்க கட்டிப் பறக்குது" என்று பாடி நம்மைப் பறக்க வைத்தார்கள். புதுப்பாடகராக இருந்தாலும் கௌசிக்கின் குரல்வளம் சிறப்பாக இருந்தது. அவர் நன்றாக வரவேண்டும் என்று ஜானகி வாழ்த்தினார்.

அமைந்த பாடல் என்று சொல்வார்கள். குறிப்பிட்ட பாடகருக்கென்றே அமைந்த பாடலாக இருக்கும். வரம் தந்த சாமிக்கு பாடல் பி.சுசீலாவுக்கு அமைந்த பாடல் என்றே சொல்லலாம். அதே போல ஜானகிக்கு அமைந்த பாடல்களில் இந்தப் பாடலும் ஒன்று. மெல்லிசை மன்னர் மெட்டமைத்து இசைஞானி இசைக்கருவி கோர்த்த அருமையான பாடல் அது. ஆம். "ஊரு சனம் தூங்கிருச்சே" என்ற பாடல்தான். ஜானகிக்கென்றே அமைந்த பாடல். மெல்லிசை மன்னரின் பிரத்யேக சங்கதிகள் அமைந்த அந்தப் பாடலை ஜானகி மிகவும் லகுவாகப் பாடினார். கூட்டம் மிகவும் ரசித்தது என்று சொல்லவும் வேண்டுமோ!

இத்தனை பாடல்கள் பாடப் பட்டுக் கொண்டிருக்கும் பொழுது நடிகர் ஜெயராம் ஒரு மலையாளப் பாடலைக் கேட்டார். உடனே ஜானகி "கானக்குயிலே" என்ற மலையாளப் பாட்டின் சிறுபகுதியைப் பாடினார்.

"முத்துமணி மால...என்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட....!" சின்னக்கவுண்டர் படத்தில் இடம்பெற்ற பாடலை பி.சுசீலாவும் சங்கரும் இணைந்து பாடினார்கள். A.M.ராஜா-ஜிக்கி கிருஷ்ணவேணி அவர்களின் புதல்வரான சந்திரசேகருடன் இணைந்து அடுத்த பாடலாக "வாடிக்கை மறந்ததும் ஏனோ" என்ற கல்யாணப் பரிசு பாடலைப் பாடினார் சுசீலா. தொடர்ந்தது ஜானகியின் குரலில் "முதல்வனே முதல்வனே முதல்வனே".

அடுத்த பாட்டுக்கு அரங்கத்தில் அங்கெங்கு எழுந்து ஆடினார்கள். லலிலலிலலோ என்று தொடங்கிய ஜானகி மூச்சு விடச் சிரமப் பட்டார். உடனே மைக்கை விட்டு ஓடிச் சென்று மூச்சுமருந்து எடுத்துக் கொண்டு வந்து பாடலைத் தொடர்ந்தார். "மச்சானப் பாத்தீங்களா" பாடலைத்தான். இளையராஜாவிற்கு திரைவாழ்வு தந்த பாடல். ஜானகி அவர்களுக்கும் புகழைத் தந்த பாடல். எல்லோரும் இந்தப் பாடலை ரசித்தார்கள். பலர் விசிலடித்துக் கொண்டு ஆடினார்கள். மகிழ்ச்சியோடு பாடி முடிந்ததும் அதே பாடலைச் சோகமாகப் பாடினார் ஜானகி.

அடுத்து இன்னொரு இளையராஜா பாடல். ஆனால் இந்த முறை பி.சுசீலா. வைதேகி காத்திருந்தாள் படத்திலுள்ள "ராசாவே ஒன்னக் காணாத நெஞ்சு" பாடலைப் பாடினார். முடிந்ததும் பாடகி மஹதி மேடையேறி இசைக்குயில்கள் இருவருக்கும் மலர்க்கொத்து கொடுத்து வாழ்த்துப் பெற்றுக் கொண்டார். திரையிசைத் திலகம் இசையில் பாடிய "உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல" பாடலை அடுத்து பாடினார் பி.சுசீலா. நேரம் மிகவும் ஆகியிருந்தது. பத்தரை மணி. அடுத்த நாள் திங்கள். அலுவலகம் போக வேண்டிய அவசரம். நானும் கூட வந்த கமலாவும் கிளம்பி விட்டோம். கடைசியாக எஸ்.ஜானகி அவர்கள் "இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலைக் கேட்கின்றேன்" என்ற மெல்லிசை மன்னரின் பாடலைப் பாடி நிகழ்ச்சியை நிறைவு செய்தாராம். மொத்தத்தில் மிகவும் நிறைவான நிகழ்ச்சி.

அன்புடன்,
கோ.இராகவன்

Wednesday, August 09, 2006

தாயா தாரமா - சிறுகதை

தாயா தாரமா என்ற கேள்வி எழாத நாளுமில்லை. நாடுமில்லை. தாய்க்குப் பின் தாரம் என்பார்கள் சிலர். தாரத்தால் தாயாக முடியும். ஆனால் தாயால் தாரமாக முடியுமா என்று கேட்பர் சிலர். இரண்டுமே தவறு. தாய் வேறு. தாரம் வேறு. தாய் தாரமாவது மட்டும் கொடுமையன்று. தாரம் தாயாவதும் கொடுமைதான்.

ஆம். அப்படி ஒரு நிகழ்ச்சி என் வாழ்விலும் நிகழ்ந்தது. அதனால்தான் அடித்துச் சொல்கின்றேன். தாரம் தாயாகவே முடியாது. ஆகவும் கூடாது. அவரவர் பொறுப்பு அவரவர்க்கு. இப்பொழுது இது உங்களுக்குப் புரியாமல் போகலாம். ஆனால் என்னுடைய கதையைக் கேட்டால் கண்டிப்பாகப் புரியலாம்.

நானும் மணமானவள்தான். மனைவியாக மகிழ்ச்சியாகக் குடும்பம் நடத்தியவள்தான். இனிய இல்லறம் எனக்கும் தெரியும். கூட்டிப் பெருக்கவும் ஆக்கிப் போடவும் இரவில் படுக்கையைத் தட்டிப் போடவும் தெரிந்தவள்தான். நல்ல வளமான குடும்பமும் கூட. வியாபாரக் குடும்பம். வெளிநாடு போனார் ஒரு முறை. பொருள் சேர்க்க எங்கள் குடும்பத்தில் ஆண்கள் செல்லும் பயணம்தான். எனது தந்தையார் சென்றிருக்கின்றார். அண்ணன் சென்றிருக்கின்றார். என்னுடைய மாமனாரும் சென்றிருக்கின்றார். அந்த வழியில் எனது கணவரும் பல முறை திரைகடலோடியவர்தான்.

ஒவ்வொரு முறையும் திரும்ப வந்து என்னைக் கண்டவர், கைகளில் அள்ளிக் கொண்டவர் ஒரு முறை காணாமல் போனார். வாடிப் போனேன். வதங்கிப் போனேன். நாட்கள் வாரங்களாகி வாரங்கள் மாதங்களாகி மாதங்களும் ஆண்டுகளாயின. கண்ணீர் ஒன்றுதான் விதியென்று ஆனேன். அந்த விதியைக் காணச் சகிக்காத சுற்றத்தார்களும் நாடு நாடாகப் போய்த் தேடினர்.

கிழக்குக் கடலையும் மேற்குக் கடலையும் கடைந்து தேடினாலும் ஒரு துப்பும் கிடைக்கவில்லை. ஆனாலும் தேடுதல் நிற்கவில்லை. என்றாவது ஒரு நாள் வருவார் என்று காத்திருந்த எனக்கு அந்த நல்ல செய்தியும் வந்தது. ஆம். வெளிநாடுகளிலெல்லாம் தேடியவர்கள் பக்கத்தில் தேடாமல் விட்டார்கள்.

மதுரையிலே அவர் இருக்கின்றார் என்று நம்பகமான செய்தி வந்தது. வேறு தகவல் எதுவுமில்லை. வீட்டில் எல்லாரும் கிளம்பிச் சென்றோம். அவர் என்ன நிலையில் இருக்கின்றாரோ என்று வருந்திதான். ஏதேனும் குற்றங் குறை வந்து மனமும் குணமும் வாடிக் கிடந்தால் என்ன செய்வது? என்ன குழப்பத்தில் எங்கு மாட்டிக்கொண்டிருக்கிறாரோ? எல்லாரும் சென்றால்தான் அவரைப் பாதுகாப்பாக அழைத்து வரமுடியுமென்று முடிவு கட்டிச் சென்றோம்.

சென்ற பிறகுதான் ஏன் சென்றோம் என்று தோன்றியது. ஆம். ஊருக்குள் நுழைந்ததும் கிடைத்த செய்தி அப்படி. மதுரையம்பதியிலே அவர் ஒரு பெண்ணின் பதியென இருந்தார். கைக்குழந்தையோடு கதியென்று இருந்தார். ஆனால் விதி செய்த சதியென்று நானிருக்க முடியுமா? சத்திரத்தில் தங்கிக்கொண்டு அவரை வரவழைத்தோம். வந்தார். மனைவி மக்களோடு. அந்தக் காட்சியைக் கண்ட பொழுதே உலகத்தின் மீதிருந்த பாதிப்பற்று போய் விட்டது.

வந்தவர் என்னைப் பார்த்ததும் இரண்டு கைகளையும் வணங்கிக் கும்பிட்டார். அவர் மட்டுமல்ல...நான் சுமந்த தாலியைச் சுமந்து....நான் மகிழ்ந்த மேனியை மகிழ்ந்து....நான் சுமக்க வேண்டிய குழந்தையைச் சுமந்த அந்தப் பெண்ணும் அவள் பெற்ற குழந்தையும் என்னை வணங்கினார்கள். பேச்சின்றி எல்லாரும் வியந்த பொழுது பேசியும் வியப்பூட்டினார் அவர். என்னைப் பார்த்துச் சொன்னார். "அம்மா" என்று.

அது கணவனின் குரலாகக் கேட்கவில்லை. அந்த அழைப்பில் குழந்தையின் பாசத்தை மட்டுமே கண்டேன். பெண்கள் கணவனை ஐயா என்று அழைப்பதற்கும் ஆண்கள் மனைவியை அம்மா என்று அழைப்பதற்கும் வேறுபாடு உண்டு. கணவன் அப்பாவாக முடியாது. ஆகையால்தான் ஐயா என்று அழைப்பார்கள். ஆனால் மனைவி என்பவள் அம்மாவாக முடியாது என்பதை அறியாமல் எதற்கெடுத்தாலும் அம்மா அம்மா என்று அழைத்து அம்மா என்ற சொல்லுக்கே புதுப் பொருளை வழங்கி விட்டார்கள்.

ஆனால் இன்றைக்கு அவர் அம்மா என்று அழைத்த பொழுது அந்தத் தூய சொல்லுக்கான உண்மையான பொருளைத்தான் நானும் கண்டேன். என்னோடு வந்தவர்களும் கண்டார்கள். அந்த அதிர்ச்சியில்தான் வந்தவர்கள் அவரை அதட்டிக் காரணம் கேட்டார்கள். அவரும் சொன்னார்.

"அன்றொரு நாள் பகலுணவிற்காக நான் இரண்டு மாங்கனிகள் கொடுத்தனுப்பினேன். ஆனால் புனிதவதியாரோ நான் உணவுக்கு வருமுன்னமே ஒரு கனியைச் சிவனடியாருக்குப் படைத்து விட்டார். களைப்பில் உணவிற்கு வந்த எனக்குக் கிட்டியது ஒரு மாம்பழம். நானும் அதை உண்டு ருசித்து மற்றொன்றையும் கேட்ட பொழுது என்னுடைய மனம் மகிழ இறைவனை வேண்டி இன்னொரு கனியைக் கொண்டு தந்தார் புனிதவதியார். அது சுவையிலும் மணத்திலும் குணத்திலும் மேலோங்கி இருக்கக் கண்டு......வியந்த பொழுது...கனி கிடைத்த கதை சொன்னார் புனிதவதியார். பொய்யோ மெய்யோ எனச் சோதிக்க இன்னொன்றையும் அப்படி வேண்டிக் கொண்டு வா பார்க்கலாம் என்று சொன்னேன். உடனே வேண்டினார். கனியும் கிடைத்தது. பார்க்கலாம் என்று கேட்டதாலேயே பார்க்க மட்டும் கிடைத்தது. பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே கண் முன்னே மறைந்தது. அப்பொழுதுதான் அந்தப் பெரிய உண்மையைப் புரிந்து கொண்டேன். ஆண்டவனை எப்பொழுதும் அருகில் இருக்கக் கொள்ளும் ஞானப் பெருமகளே புனிதவதி என்றுணர்ந்தேன் நான்.

அந்தப் பெருமகளை என் குலமகளாக் கொண்டு இல்லறம் செய்வது எங்ஙனம்? இறைவன் கனி கொடுத்த கைகளுக்குப் பணி கொடுப்பேனா! இறைவனை அழைத்த இதழ்களோடு என்னிதழ்களை இழைப்பேனா! உள்ளமெல்லாம் பாசமும் உடலெல்லாம் நேசமும் அந்தச் சடையன் மீது கொண்ட தூயவராம் புனிதவதியை இந்த மடையன் அணைப்பேனா! இல்லறம் சிறப்பது கட்டிலில் தானே. அங்கே தாயைக் காண நாயாக முடியுமா என்னால்? பண்பெல்லாம் கற்றவனாயிற்றே நான். ஆகையால்தான் அன்னையை நீங்கினேன். மதுரையம்பதிக்கு வந்தேன். வணிகம் செய்தேன். திருமணமும் செய்து குழந்தையும் கொண்டு இறைப்பணியையும் சிறப்பித்து வருகிறேன். இப்பொழுது சொல்லுங்கள். நான் செய்தது தவறா? பிழையா?"

இப்படி எல்லாம் அவர் சொன்னது எல்லாருக்கும்...ஏன்...என்னுடைய பெற்றோருக்கும் சரியெனவே பட்டது. ஆனால் என்னால் ஒத்துக் கொள்ள முடியவில்லை. ஆண்டவர்களின் அடியவர்களாக இருக்கும் ஆண்களுக்குப் பெண்கள் மனைவியானதில்லையா? அப்படியிருக்க பெண்ணிடத்தில் மட்டும் என்ன ஓரவஞ்சனை? ம்ம்ம்...பயந்து போனவரை நினைத்துப் பயன் என்ன? அதனால்தான் சொல்கிறேன். தாய் வேறு. தாரம் வேறு. இரண்டும் ஒன்றாகவே முடியாது. தாயைப் பாசத்தில் நினைக்கத்தான் முடியும். ஆனால் தாரத்தை நேசத்தில் அணைக்கவும் முடியும். ம்ம்ம்...எப்படியோ இல்வாழ்க்கை இல்லாத வாழ்க்கையாகப் போயிற்று. போகட்டும். கணவன் வாயில் கனமாகக் கேட்ட பிறகு உடல் பற்றுப் போயிற்று. போகட்டும். அகப்பற்றும் புறப்பற்றும் போயிற்று. போகட்டும். எல்லாம் இறையருள். நான் தாயாகவும் இல்லை. இப்பொழுது தாரமும் இல்லை. ஆனால் உறவுகளுக்கும் பந்தங்களுக்கும் எனக்கு வெகுதூரம். தாயாகவும் இல்லாமல் தாரமாகவும் இல்லாமல் மண்ணுக்குப் பாரமாக இருக்கவா!

ஆனால் ஒன்று. என்னைத் தாயென்றவரை மகனாக ஏற்றுக் கொள்ள மனம் ஒப்பவில்லை. எப்படி ஒப்பும்? பிறந்த மேனியாய்த் தொட்டிலில் கண்டவரை மகன் எனலாம். கட்டிலில் கண்டவரை? கட்டிக் கொண்டவரை? அவராலும் நான் இன்னும் தாயாகவில்லை. என்னிடத்தில் தாயை உருவாக்க வேண்டியவரோ பாயை மடித்து வைத்து விட்டார். பிறப்பால் மகளானேன். பெற்றோரை மகிழ வைத்தேன். திருமணத்தால் மனைவியானேன். கணவனை மகிழ வைத்தேன். ஆனால் இப்பொழுது தாயென்று பெயர் மட்டும் உண்டு. ஆனால் அந்தப் பதவி?

ஆலவாயண்ணலைத் தொழுது உலகம் சுற்றினேன். அழகெலாம் துறந்து வற்றினேன். ஆயினும் தீந்தமிழைச் சிவன் காலடியில் ஊற்றினேன். துன்பம் என்று வந்தவர்களை எல்லாம் தேற்றினேன். நடந்தேன். நடந்தேன். நடந்து கொண்டேயிருந்தேன். நோக்குமிடமிங்கும் நீக்கமின்றி நிறைந்தவனை வணங்கிக் கயிலையைச் சேர்ந்தேன். அந்த மலையே சிவலிங்கமாக நின்றது. இதில் எப்படி காலால் ஏறுவது என்று தலையால் ஏறினேன்.

வற்றிப் போய் உடலெல்லாம் நாறிய என்னை.....உடையெல்லாம் விழுந்து உடலெல்லாம் தெரிந்தாலும் கால் படாது தலையாலே கயிலையை ஏறிய என்னை....அம்மையே என்று அழைத்தார் செஞ்சடையர். அன்று மதுரையில் கேட்ட சொல்லல்ல இது. தாந்தோன்றியே அம்மையே என்று அழைத்த சொல்லல்லவா! தன்னைத்தான் தோன்றி, அதிலிருந்து உலகம் தோன்றி, உலகத்தில் உயிர் தோன்றி, அந்த உயிர்களுக்கெல்லாம் அருள் தோன்றிய அற்புதக் கனியானது என்னை அம்மையே என்று அழைத்த அழைப்பில் நான் யார் என்று தெரிந்து போனது. ஆம். நான் தாய். நான் தாய்தான். தாயேதான்.

அம்மையே அப்பா என்று உலகம் அழைக்கும் பெருந்தேவனின் தாயன்பு எனக்குத் தாய் அன்பை உணர்த்திய அந்தப் பொழுதினிலேயே எல்லாம் மறந்தும் போனது. மறைந்தும் போனது. தான் போய் ஊன் போய் நான் போய் என்னிலிருந்து ஒவ்வொன்றாகப் போய் பிறப்பும் இறப்பும் போய் எல்லாம் ஓங்காரச் சிவவொலியாகி எங்கும் நிறைந்து பரவசமானது. சிவ! சிவ! சிவ!

அன்புடன்,
கோ.இராகவன்

Monday, August 07, 2006

4. மெல்லிசை மன்னரும் ஆந்திரா கொல்ட்டியும்

"இல்ல எதுவும் சொல்லனுமா? பாடுறதுக்கு முன்னாடின்னு கேட்டேன்" என்று இரண்டாம் முறையாக சுசீலா கேட்டார். "ஆமாம். கண்டிப்பாச் சொல்லனும்"னு என்று சுசீலாவிடம் சொன்னவர் கூட்டத்தைப் பார்த்துச் சொன்னார். "கொஞ்ச நேரத்துக்கு நான் பி.சுசீலாவைக் காதலிக்கப் போறேன். ஆமா. இப்போ ஒரு டூயட் பாட்டு. டீ.எம்.எஸ் பாடியது. இப்ப அவருக்குப் பதிலா நான் பாடப் போறேன். பாடலாமா?"

கேட்டு விட்டு இசைக்குழுவிற்குச் சைகை காட்டினார். பாடல் தொடங்கியது. டொக் டொக் டொக் டொக்...குதிரைக் குளம்பு ஒலிக்க....ஜானகி "ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்" என்று தொடங்கினார். அதுவும் கனமான ஆண் குரலில். அரங்கம் ஸ்தம்பித்தது. ஆனால் ஜானகி படக்கென்று சிரித்து விட்டார். பிறகு சமாளித்துக் கொண்டார். பாடல் மீண்டும் முதலில் இருந்து தொடங்கியது.

பாட்டில் பி.சுசீலா "ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்" என்று பாடுகையில் ஜானகியைக் கை காட்டினார். புரிகிறது அல்லவா. இப்பிடிக் குறும்பு கொப்புளிக்கும் விளையாட்டுகளாக பாடல் நகர்ந்தது. பாடல் முடிந்ததும் "தேங்க் யூ வெரி மச்" என்று டீ.எம்.எஸ் சொல்வது போலச் சொல்லி முடித்தார் எஸ்.ஜானகி. எல்லாருக்கும் கை வலித்தது. ஆமாம். அந்த அளவு தட்டியிருக்கிறோம்.

பிறகு பேசிய ஜானகி இது புதிய முயற்சி என்றார். பிறகு கீழே அமர்ந்திருந்த பி.பீ.ஸ்ரீநிவாஸ் போலப் பாடப் போவதாகச் சொல்லி அவர் பாடிய "அனுபவம் புதுமை" பாடலைக் கொஞ்சம் பாடினார். அதற்கு ஸ்ரீநிவாஸ் அவர்களும் ஒன்ஸ்மோர் கேட்டார். அடுத்து எஸ்.பீ.பாலசுப்பிரமணியம் பாடிய பனிவிழும் மலர்வனம் பாடலை முயற்சித்தார்.

முதலில் நன்றாக இருந்த இந்தச் சோதனை பிறகு கொஞ்சம் சோதனையாக இருந்தது என்பது என் கருத்து. இப்படிச் சொல்வது ஜானகியின் குரல்வளத்தைக் குறை சொல்வதாகாது.

ஆனால் அந்தச் சோதனையைச் சாதனையாக்கும் வகையில் வந்தது அடுத்த பாடல். ஆமாம். பதினாறு வயதினிலே படத்தில் உள்ள "செந்தூரப் பூவே பாடல்". எஸ்.ஜானகி முதன்முதலாக தேசிய விருது பெற்ற பாடல். அந்தப் பாடலைத் தெலுங்கில் பாடியது பி.சுசீலா. "சிறுமல்லிப் பூவா...சிறுமல்லிப் பூவா" என்று தொடங்கும் அந்தப் பாடல். ஆனால் மேடையில் தமிழில் பி.சுசீலாவும் தெலுங்கில் எஸ்.ஜானகியும் பாடினார்கள்.

அதிலும் எப்படி ஒருவர் பல்லவி பாடி முடிப்பார். உடனே அடுத்தவர் பல்லவியைப் பாடுவார். அடுத்து அனுபல்லவி...இப்படி இருவரும் மாறிமாறி பாடுவார்கள். இசைக்கருவியாளர்களுக்குக் கடினமான வேலை. ஒரு இசைக்கோர்வையை வாசித்து விட்டு உடனே அதே கோர்வையை மீண்டும் வாசிக்க வேண்டும். இப்படி ஒவ்வொன்றையும் இரண்டு முறை வாசிக்க வேண்டும். ஒவ்வொரு முறையில் ஒவ்வொரு மொழி. ஒவ்வொரு குரல். ஆனாலும் மிகச்சிறப்பாக அமைந்தது இந்தப் பாடல். நிகழ்ச்சியிலேயே மிகச்சிறப்பாகக் கையாளப்பட்ட பாடல் என்று இதைச் சொல்லலாம். ராஜாவின் பார்வைக்குக் கிடைத்த வரவேற்பைப் போல இரண்டு மடங்கு வரவேற்பை இந்தப் பாடல் அள்ளிக் கொண்டு போனது.

இந்தப் பாடல் முடிந்தது எஸ்.ஜானகி "மன்றத்தில் ஓடி வரும்" என்ற மெல்லிசை மன்னரின் பாடலை நினைவு கூர்ந்து சிறிது பாடினார். அதற்குள் இடைவேளை வந்தது. ஒவ்வொரு சிறப்பு விருந்தினராக மேடைக்கு அழைக்கப்பட்டனர். பி.பீ.ஸ்ரீநிவாஸ் முதலில் மைக்கைப் பிடித்தார். இரண்டு இசைமேதைகளையும் புகழ்ந்து அவர்களுடன் பாடிய பாடல்களை நினைவு கூர்ந்தார். இருவரையும் பாராட்டி ஒரு பெரிய குறுங்கவிதை எழுதி வந்து படித்தார்.

எஸ்.பி.பீ, மலேசியா வாசுதேவன், ஜெயராம், மாணிக்க விநாயகம் போன்றோர் இருவரின் கால்களிலும் விழுந்து வணங்கினார்கள். அடுத்து மெல்லிசை மன்னர் மேடையேறினார். மேடையில் இருந்த அனைவரும் அவரது காலில் விழுந்தார்கள். முதலில் பி.சுசீலா. பின்னர் எஸ்.ஜானகி. பிறகு பி.பீ.எஸ். பிறகு எஸ்.பி.பீ. பிறகு மலேசியா. பிறகு மாணிக்க விநாயகம். பிறகு எல்லாரும் விழுந்தார்கள். ஒரு பெரிய பட்டுத் துண்டை சுசீலாவிற்கும் ஜானகிக்கும் சேர்த்துப் போர்த்தினார்.

மைக்கைக் கையில் பிடித்தார் மெல்லிசை மன்னர். "இந்த மாதிரி நிகழ்ச்சிக்கு வந்தா எல்லாரும் என்னோட கால்ல விழுந்து என்னைக் கெழவனாக்கிறாங்க. எனக்கு வயசு 22தான். நான் கலைஞன் இல்லை. முதலில் ஒரு ரசிகன். என்னவோ என்னாலதான் இவங்களுக்கு நல்ல பேர் கெடச்சதுன்னு இங்க எல்லாரும் சொன்னாங்க. ஆனா அது உண்மையில்ல. இவங்கள்ளாம் நல்லாப் பாடி எனக்கு நல்ல பேரு வாங்கிக் கொடுத்தாங்க. அதுதான் உண்மை. பி.சுசீலாவும் சரி. எஸ்.ஜானகியும் சரி. இரண்டு பேருக்கும் தமிழ் உச்சரிப்பு ரொம்பச் சுத்தமா இருக்கும். அவர்களுடைய சாதனை மிகப் பெரியது" இப்படி வஞ்சனையில்லாமல் இருவரையும் மனமாரப் பாராட்டினார். பேசி முடித்ததும் மேடையை அடைத்துக் கொண்டிருக்காமல் படபடவென சுறுசுறுப்புடன் (இந்த வயதில்) கீழிறங்கினார்.

அடுத்து எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மைக்கைப் பிடித்தார். அவருடைய திரையுலகப் பயணம் தொடங்கவே இவர்கள் இருவரும்தான் காரணம் என்பதைக் குறிப்பிட்டார். ஒரு போட்டியில் பாடிய இவரை நடுவராக இருந்து ஊக்குவித்து திரைப்படத்திற்கு முயற்சிக்கச் சொன்னவர் எஸ்.ஜானகியாம். பின்னாளில் வாய்ப்புக் கிட்டியபின் தமிழில் (மெல்லிசை மன்னரின் இசையில்) முதல் பாடல் பி.சுசீலாவுடன். தெலுங்கில் பி.சுசீலாவுடன். கன்னடத்தில் பி.சுசீலாவுடன்.

தொடர்ந்து சொன்னார். "நான் ஆந்திரா கொல்ட்டி..............."

தொடரும்....

Thursday, August 03, 2006

3. எதுவும் சொல்லனுமான்னு கேட்டேன்

தேடினேன் வந்தது பாடலைச் சிறப்பாகப் பாடி முடித்ததுமே ஜானகி அவர்கள் எழுந்து வந்து பளார் என்று சுசீலாவின் கன்னத்தில் அறைந்தார்கள். சுசீலா மட்டுமல்ல மொத்த அரங்கமும் ஒரு நொடி அமைதியானது. உடனே மைக்கைப் பிடித்த ஜானகி, "படத்துல இந்தப் பாட்டு முடிஞ்சதும் சிவாஜி கே.ஆர்.விஜயாவை அறைவாரு. அதான் நானும் அது மாதிரி செஞ்சேன். இந்தப் பாட்டு என்னோட பையனுக்கு ரொம்பவும் பிடிச்ச பாட்டு"னு சொன்னாங்க. ஆகா! பொய்யடி அடிச்சிருக்காங்கன்னு புரிஞ்சதும் எல்லாருக்கும் மகிழ்ச்சி.

பி.சுசீலாவும் கிண்டலை விடவில்லை. "என்னடா அறைஞ்சிட்டாங்களே....வயசு காலத்துல தடுமாறி விழுந்துட்டேன்னா...இன்னும் நெறையா பாட்டு இருக்கே. யார் பாடுறதுன்னு பயந்துட்டேன்." என்று சொல்லிச் சிரித்தார்.

அரங்கமே ஒரு மெல்லிய நகைச்சுவையலையில் இருக்கும் பொழுது தொடர்ந்து சொன்னார். "ஜானகி அம்மா பையன் முரளி கிருஷ்ணா இந்தப் பாட்ட மொபைல்ல விரும்பிக் கேட்டார். அதான் பாடினேன்"னு உரிமையை உவப்போடு சொன்னார்.

சுசீலாம்மா என்னென்ன பாட்டுப் பாடுவாங்கன்னு கமலாவுக்குத் தெரிஞ்சிருந்தது. ஆனா இந்தப் பாட்டு அதுல இல்லையேன்னு யோசிச்சிக்கிட்டு இருந்தவங்களுக்கு இந்தப் பாட்டு உள்ளே நுழைந்த விவரம் புரிந்தது.

இந்தச் சிறிய விளையாட்டுகள் அடங்கியதும் அடுத்து ஒரு மிகக்கடினமான பாடலைப் பாடினார் சுசீலா. மெல்லிசை மன்னரின் இசையில் கனமான ராகத்தின் அடிப்படையில் எக்கச்சக்க சங்கதிகளோடு உள்ள ஒரு இனிய பாடல். கவியரசர் எழுதிய தீந்தமிழ்ப் பாடல். கர்ணன் என்ற படத்தில் இடம் பெற்ற "கண்கள் எங்கே? நெஞ்சமும் எங்கே? கண்ட போதே சென்றன அங்கே!" என்ற பாடல்தான் அது. பாடலைக் கேட்க இங்கே சுட்டவும்.

இந்தப் பாடலில் வீணையொலி நிறைய வரும். மெல்லிசை மன்னரின் இசையில் இசைத்தட்டில் கேட்கும் பொழுது அது பிரம்மாண்டமாக இருக்கும். அந்த உணர்வை மேடையில் இசைக்கலைஞர்கள் கொண்டு வந்திருந்தார்கள். அவர்களுக்கு என்னுடைய பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சாதகப் பறவைகள் குழுவை நடத்தி வரும் சங்கர் அடுத்த பாடலை ஜானகியோடு பாடினார். என்ன பாடல் என்று சொல்லுங்கள் பார்க்கலாம். இளையராஜா இசை. வைரமுத்து பாடல். பாலு மகேந்திரா படம். அர்ச்சனா அந்தப் பாட்டில் நாயகி. இன்னும் எது சொன்னாலும் பட்டென்று சொல்லி விடுவீர்கள். ஆம். பானுச்சந்தர் கதாநாயகன். இப்பொழுது பாட்டு தெரிந்து விட்டதுதானே. எஸ்.பி.பாலசுப்பிரமனியமும் எஸ்.ஜானகியும் பாடிய "ஓ! வசந்த ராஜா! தேன் சுமந்த ரோஜா!" என்ற பாடல்தான். பாடல் வரிகளும் மிகச் சிறப்பு.

"வெண் பஞ்சு மேகங்கள்
உன் பிஞ்சுப் பாதங்கள்
மண் தொட்டதால் இங்கே
செவ்வானம் போல் ஆச்சு
விண் சொர்க்கமே பொய் பொய்
என் சொர்க்கம் நீ கண்ணே!
சூடிய பூச்சரம் வானவில் தானோ"

நல்ல பாடல். ஜானகி பாடுவதைப் பற்றிச் சொல்ல வேண்டுமா. சங்கரும் முடிந்த அளவிற்குச் சிறப்பாக பாடினார். கூட்டத்தார் மிகவும் ரசித்தார்கள்.

ஒன்று சொல்ல வேண்டும். நிகழ்ச்சி தொடங்கி நெடு நேரம் ஆன பிறகும் நிறைய பேர் நேரம் கழித்து வந்து அங்கும் இங்கும் நகர்ந்து மறைத்து சத்தம் கொடுத்து தொந்தரவு கொடுத்தார்கள். இல்லாத இடத்திற்கு இந்தக் கடைசியிலிருந்து அந்தக் கடைசி தேடினார்கள். ஒரே தொந்தரவு. நடுநடுவில் செல்போனில் வேறு...."இது என்ன பாட்டு சொல்லு.....ஒனக்குப் பிடிக்குமே...ஹி ஹி ஹி" வேறு யார்? எனக்குப் பின்னால் உட்கார்ந்திருந்த ஒரு ஆள். மயிலாருக்குப் பயங்கர ஆத்திரம். திரும்பிக் கொத்தியிருப்பார். ஆனால் பாட்டைக் கேட்பது கெட்டு விடுமோ என்று அமைதியாக இருந்தார்.

"காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே" ஆம். அதுதான் ஜானகி பாடிய அடுத்த பாடல். இந்தப் பாட்டு ஜானகிக்காகவே. வேறு யார் பாடினாலும் சிறப்பாக இருக்காது என்பது என் கருத்து. அதை மீண்டும் நிரூபித்தார் ஜானகி.

இதற்குள் சிறப்பு விருந்தினர்கள் வரத் தொடங்கியிருந்தார்கள். பி.பீ.ஸ்ரீநிவாஸ், எஸ்.பி.பாலசுப்ரமணியம், மலேசியா வாசுதேவன், நடிகர் ஜெயராம், நடிகை அம்பிகா ஆகியோர் அந்த பொழுதில் வந்திருந்தார்கள். அவர்கள் மேடைக்கு முன்னால் அமர்த்தப்பட்டார்கள்.

இந்த அறிவுப்புகள் முடிந்ததும் பி.சுசீலா எழுந்து மைக் முன் நின்றார். எஸ்.ஜானகியும் எழுந்து சுசீலாவின் அருகில் வந்தார். "எதுவும் சொல்லனுமா?" என்று ஜானகியைப் பார்த்துக் கேட்டார். "இல்ல எதுவும் சொல்லனுமா? பாடுறதுக்கு முன்னாடின்னு கேட்டேன்" என்று இரண்டாம் முறையாக சுசீலா கேட்டார். "ஆமாம். கண்டிப்பாச் சொல்லனும்"னு என்று சுசீலாவிடம் சொன்னவர் கூட்டத்தைப் பார்த்துச் சொன்னார்......

தொடரும்.....

(பி.கு சென்ற பதிவில் கண்ணன் வந்து பாடுகிறான் பாடல் நீங்கள் கேட்டவை என்ற படத்தில் என்று தவறாகச் சொல்லி விட்டேன். அது ரெட்டை வால் குருவி என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்)

2. சுசீலாவை ஜானகி ஏன் அறைந்தார்?

பிரபல திரையிசைப் பாடகி பி.சுசீலா பாடத் தொடங்குகிறார் என்ற பரபரப்பில் பக்கத்தில் உட்கார்ந்திருந்தவர் யாரென்று கவனிக்கவில்லை. பாப்கார்னும் கட்லெட்டும் மணமணக்கத் திரும்பிப் பார்த்தால் நமது மயிலார். என்னைக் கண்டு கொள்ளவேயில்லை. நிகழ்ச்சியில் மூழ்கியிருந்தார். நானும் கவனத்தை மேடையின் பக்கம் திருப்பினேன்.

நிகழ்ச்சியைத் துவக்கும் பாடல் அல்லவா. பிரம்மலோகத்துக் கலைவாணியை வாழ்த்திச் சென்னைக் கலைவாணி தேன் தமிழ்ச் சொல்லெடுத்துப் பாடிய பாடல். "மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி! தேன் தமிழ்ச் சொல்லெடுத்துப் பாட வந்தேன் அம்மா! பாட வந்தேன்! அம்மா பாட வந்தேன்!"

இந்தப் பாடல் திரைப்பாடல் அல்ல. பக்தியிசைப் பாடல். சோமு-காஜா என்ற இரட்டை இசையமைப்பாளர்கள் இசையில் வெளிவந்த இனிய பாடல்களின் தொகுப்பிலுள்ள பாடல். எல்லாப் பாடல்களுமே இனியவை.

(பக்திப் பாடல் என்பதால் மயிலார் கொஞ்சம் ஓவர் உணர்ச்சிவசப்பட்டிருந்தார். பாப்கார்ன்களை நான் எடுத்ததைக் கூட அவர் கவனிக்கவில்லை.)

எழுபது வயதைக் கடந்த சுசீலா அவர்களின் குரலில் சற்று அயர்வு இருந்தது உண்மைதான். ஆனால் இனிமையும் திறமையும் வளமையும் சிறிதும் குறையவில்லை. பாடலில் வரும் வீணையொலி இனிதா! சுசீலா அவர்களின் குரலொலி இனிதா! ஒன்றுக்கொன்று சரியான இணை.

முதல் பாடலை முடித்ததும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த கூட்டம் கைதட்டி ஆரவாரித்தது. (மயிலார் தோகை விரித்தாடினார்.) அடுத்த பாடலை ஜானகி அவர்கள் பாடுவார்கள் என நினைத்தேன். ஆனால் அடுத்த பாடலும் சுசீலா அவர்களே பாடினார்கள்.

தமிழில் புதுக்கவிதையைக் கொண்டு வந்தவர் பாரதி என்றால், அவருக்குப் பிறகு மெருகேற்றிச் சிறப்பித்தவர் பாரதிதாசன். அவருடைய கவிதை ஒன்றைத்தான் அடுத்து பாடினார். "தமிழுக்கும் அமுதென்று பேர்! அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! உயிருக்கு நேர்!"

மெல்லிசை மன்னரின் இனிய இசையில் வந்த சுவை மிகுந்த பாடல். தன்னுடைய தாய்மொழி தெலுங்காக இருந்தாலும் தமிழும் தெலுங்கும் தனது இரு கண்கள் என்று கூறிய பாடகி அல்லவா.....ஆகையால் உணர்வு ததும்பப் பாடினார்கள். "தமிழ் எங்கள் அசதிக்கு" என்று பாடுகையில் குரலில் உண்மையிலேயே அசதி தெரிந்தது. அது வயதினாலா? இல்லை பாவத்தினாலா? ஆனால் "அசதிக்குச் சுடர் தந்த தேன்" என்று பாடுகையில் அந்த அசதியெல்லாம் போய் சுடர் எழுந்து அதை உணர்த்த அவருடைய கையும் எழுந்தது. பாடுகின்றவருக்குப் பாட்டு புரிந்தால்தானே இதெல்லாம் நடக்கும்!

பழைய பாடலானாலும் மக்கள் ரசித்து ருசித்தனர் என்பது அவர்களின் கைதட்டலொலியிலிருந்தே தெரிந்தது. இரண்டு இனிய பாடல்களை சுசீலா அவர்கள் பாடி முடித்ததும் பாட வந்தார் ஜானகி அவர்கள். அவரது முதல் பாடல் என்னவாக இருக்கும் என்பது எல்லாருடைய ஆவல். எனக்கும்தான். சிங்கார வேலனே தேவா பாடல் அவருக்குப் பெயரும் புகழும் பெற்றுத்தந்த பாடல். அந்தப் பாடலையோ அல்லது அதுபோன்ற வேறு பாடலையோ பாடுவார் என நினைத்தேன்.

ஆனால் பாடல் துவங்கியது. முதலில் இசைக்கருவிகள் இசைந்தன. கேட்டதுமே இளையராஜா இசை என்று தெரிந்து விட்டது. தெரிந்த பாடல் போல இருந்தது. "மாமனுக்குப் பரமக்குடி" பாட்டு மாதிரி இருந்தது. இதையா பாடப் போகிறார் என்று நினைக்கும் பொழுதே பாட்டு தெரிந்து போனது. ஜானகி அவர்களின் குரலும் எழுந்தது. "நான் வணங்குகிறேன்! இசையிலே தமிழிலே! நான் பாடும் பாடல் தேனானது! ரசிகனை அறிவேன்!" குரு படத்தில் இருந்து இந்தப் பாடல். எனக்கு மிகவும் பிடித்த பாடல். பாடலை நானும் ரசித்தேன். (மயிலார் காலை மாற்றி மாற்றி வைத்து ஆடிக் கொண்டிருந்தார். அவர் மறைக்கிறார் என்று ஒருவர் கூட குற்றம் சொல்லவில்லை.)

அடுத்து ஒரு இனிய பாடல். மிகவும் இனிய பாடல். பாட்டு தொடங்கும் பொழுதே எல்லாருக்கும் பாட்டு தெரிந்து ஒரு துள்ளலும் மகிழ்ச்சியும் எல்லாரையும் பற்றிக் கொண்டது. ஜானகியின் குரல் தொடங்கியதுமே பாட்டுக்குள் எல்லாரும் மூழ்கி விட்டார்கள். ஆமாம். "சின்னச் சின்ன வண்ணக் குயில்...கொஞ்சிக் கொஞ்சி கூவுதம்மா" என்று ஜானகி அவர்கள் குரலால் கொஞ்சும் பொழுது யார்தான் மயங்காமல் இருக்க முடியும்! பின்னணி இசையும் மிகச் சிறப்பாக இசைக்குழுவினர் செய்தார்கள்.

அடுத்து பி.சுசீலா வந்தார். ஜானகி உருவாக்கி வைத்திருந்த உணர்விலிருந்து மக்களை தன்னுடைய குரலுக்கு இழுக்க வேண்டும். என்ன பாட்டை தேர்ந்தெடுப்பார் என்று நினைக்கிறீர்கள்? அது ஒரு அழகிய இனிய பாடல். தூங்குகிறவர்களைக் கூட தென்றலாக வருடி எழுப்பும் பாடல். இசைஞானியின் இசையில் வெளிவந்த அதியற்புதமான பாடல். "காலைத் தென்றல் பாடி வரும் ராகம் புது ராகம்" சுசீலாவின் குரலில் வெளி வந்தது. வைரமுத்து எழுதிய ஒரு அழகிய கவிதை. உயர்ந்த உள்ளம் என்ற படத்தில் இடம் பெற்ற பாடல். கூட்டம் சொக்கிப் போனது.

இப்படி எல்லாரையும் தென்றலாய் வருடிய பாடல் முடிந்ததும்...அடுத்த பாட்டு....சற்றுத் துள்ளலாக. இந்தப் பாட்டு இசை தொடங்கும் போதும் உடனே எல்லாருக்கும் தெரிந்து விட்டது. மெல்லிசை மன்னரின் இசையில் கவியரசர் இயற்றிய மிகப் பிரபலமான பாடல். "பார்த்த ஞாபகம் இல்லையோ! பருவ நாடகம் தொல்லையோ!" தென்றலைக் காட்டிய குரலில் இப்பொழுது உற்சாகமும் மகிழ்ச்சியும் கொப்பளித்தன. எப்படித்தான் அடுத்தடுத்து வெவ்வேறு பாவத்தை படக்கென்று கொண்டு வந்துவிடுகிறார்களோ! அதுவும் இவ்வளவு திறமையுள்ள பாடகிகளுக்கு சொல்லித் தரவா வேண்டும்?

(நல்லவேளையாக மயிலார் என்னைத் தொந்தரவு செய்யவேயில்லை. வழக்கமாக வெளியில் போனால் அது இது என்று தொந்தரவு செய்வார். ஆனால் இன்று ஒன்றும் கண்டுகொள்ளவேயில்லை)

அடுத்தது ஜானகியின் வரிசை. பாடி முடித்து விட்டு சிரமப் பரிகாரம் செய்வதற்காக உள்ளே சென்றார் பி.சுசீலா. படியில் ஏறுகையிலும் இறங்குகையிலும் சற்றுப் பிடிமானம் அவருக்குத் தேவைப்பட்டது. ஆனால் பாடுவதற்கு அவருக்கு எந்தப் பிடிமானமும் தேவையிருக்கவில்லை.

அலைகள் ஓய்வதில்லை படத்தில் "புத்தம் புதுக்காலை" என்ற பாடல். படத்தில் இல்லை. ஆனால் இசைத்தட்டுகளில் உண்டு. அந்தப் பாட்டைத்தான் அடுத்து பாடினார் ஜானகி. அதனைத் தொடர்ந்து நீங்கள் கேட்டவை படத்தில் வரும் "கண்ணன் வந்து பாடுகிறான்" என்ற பாடல். இரண்டும் மெல்லிசையில் மனதைக் கவர்ந்தனர்.

ஆளுக்கு இரண்டு பாடல்களாகப் பாடி வருகையில் சுசீலா அவர்களின் வரிசையில் அடுத்த பாடல் "தேடினேன் வந்தது!" மீண்டும் அரங்கத்தில் ஒரு துள்ளல். இந்தப் பாடலை சுசீலா பாடி முடித்ததும் ஜானகி எழுந்து வந்து சுசீலா அவர்களின் கன்னத்தில் பளார் என்று அறைந்தார். ஏன்?

தொடரும்....

Tuesday, August 01, 2006

1. ரெட்டைக் குரல் துப்பாக்கி

சென்னைக்கு மூன்று மாதங்கள் வேலை தொடர்பாக வந்ததுமே பாட்டுக்கச்சேரியும் நாடகமும் நிறைய பார்க்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் அது இரண்டரை மாதங்கள் கழித்தே நிறைவேறியது. ஊரெல்லாம் போஸ்டர்கள். டீவியில் விளம்பரங்கள். நாளிதழ்களில் விளம்பரங்கள். அட! அதுதான் பி.சுசீலாவும் எஸ்.ஜானகியும் இணைந்து இசை நிகழ்ச்சியில் பாடுகிறார்கள் என்று. நேரு உள்விளையாட்டரங்கத்தில் கச்சேரியாம். அது எங்க இருக்கிறதென்றே தெரியாது...இந்த நிலையில் டிக்கெட் வாங்கி நிகழ்ச்சிக்குப் போய்...ம்ம்ம்....தமிழ்நாட்டுக்காரன் சிம்ரனுக்கு ஆசைப்பட்ட கதையாகப் போய்விடுமோ என்று முதலில் நினைத்தேன்.

ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி. அதாவது ஜூலை முப்பதாம் தேதி 2006. வெள்ளிக்கெழமை இரவு யாஹுவில் ஆன்லைனில் இருந்தப்போது ஒரு நண்பர் வந்து வணக்கம் சொன்னார். அவர் பெயர் கமலா. அவரிடம் நிகழ்ச்சியைப் பற்றிச் சொல்லி ஆசையச் சொன்னேன். பக்கத்து இலைக்குப் பாயசம் கேட்கிற மாதிரி அவங்க போகிறார்களா என்று கேட்டேன். முதலில் யோசித்தார்கள்....பிறகு சனிக்கிழமை எனக்கு விவரம் சொல்வதாகச் சொன்னார்கள். நானும் சரீயென்று இருந்து விட்டேன்.

சொன்னது போலவே சனிக்கிழமை என்னைக் கூப்பிட்டு நான்கு பாஸ்கள் இருக்கிறதென்று சொன்னார்கள். அந்த நான்கும் யார் கொடுத்ததென்று நினைக்கிறீர்கள்? நம்பித்தான் ஆக வேண்டும். இசையரசி பி.சுசீலா அவங்களே கொடுத்தது. பழம் நழுவிப் பாலில் விழுவது பழைய பழமொழி. செர்ரி நழுவி ஐஸ்கிரீமில் விழுந்து அது நழுவி வாயில விழுந்ததென்று சொல்லலாம். இல்லையென்றால் கொஞ்சம் கிக்கோடு வேண்டுமென்றால் பியர் நழுவி கோப்பையில் விழுந்து அது நழுவி வாயில் விழுந்த மாதிரியென்று சொல்லலாம். அட...அவ்வளவு மகிழ்ச்சி!

ஞாயிற்றுக் கிழமை மாலை நான்கு மணிக்கெல்லாம் கிளம்பி அவர்கள் வீட்டிற்குப் போய்விட்டேன். அங்கிருந்து ஐந்து மணிக்கு நேராக நேரு உள்விளையாட்டரங்கம். அங்கு இன்னொரு நண்பரைக் கமலா அறிமுகம் செய்து வைத்தார்கள். அவருடைய தந்தை அந்தக் காலத்தைய பெரிய பாடகர். அவருடைய மகன்களில் இரண்டு பேர் திரைப்படங்களில் பாடியிருக்கிறார்கள். ஆமாம். திருச்சி லோகநாதன் அவர்களைத்தான் சொல்றேன். அவருடைய இளைய மகன்தான் நான் சந்திச்சது. அவருடைய அண்ணன்களான டி.எல்.மகாராஜன், தீபன் சக்கரவர்த்தி ஆகிய இருவரும் சினிமாவில் பாடியிருக்கிறார்களே!

நன்றாக மேடை மறைக்காத இடமாகப் பார்த்து உட்கார்ந்து கொண்டோம். கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக வரத் தொடங்கியது. நிகழ்ச்சியை ஃபோட்டோ பிடிக்க ஆசை. பதிவு போடும் பொழுது அதையும் போடலாமென்றுதான். ஆனால் டிக்கெட்டில் காமிரா கொண்டு வரக்கூடாதென்று தெளிவாகச் சொல்லியிருந்தார்கள். அதனால் எதற்கு வம்பு என்று கொண்டு செல்லவில்லை. வெளியே வைத்து விட்டு வரச் சொல்லி அனுப்பினால் எங்கு போவது?

ஆச்சி மசாலா, தினத்தந்தி விளம்பரங்கள் எல்லாம் அங்கு அமைக்கப்பட்டிருந்த இரண்டு திரைகளில் ஓடிக்கொண்டிருந்தன. நேரமும்தான். ஆறு மணி ஆகி பத்து நிமிடங்கள் ஆகியிருந்தது. அரங்கமும் நிறைந்திருந்தது. அப்பொழுது மேடையில வேண்டிய லைட்டப் போட்டு வெளிச்சமாக்கினார்கள். அப்பாடா! நிகழ்ச்சி தொடங்கப் போகிறதென்று ஒரு மகிழ்ச்சி. அவசர அவசரமாக உட்கார இடம் தேடினார்கள்

சங்கரின் சாதகப் பறவைகள் குழுவினர்தான் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. அதனால் அவர்கள் அணிப்பாடலாக "எந்த்தரோ மகானுபாவுலு அந்தரிகீ வந்தனம்" பாடினார்கள். ஆனால் பின்னணி இசையைப் புதுமையாச் செய்திருந்தார்கள். அலைபாயுதே படத்தில் அலைபாயுதே கண்ணா பாட்டுக்கு ரகுமான் செய்திருந்த மாதிரி. ஆனால் அலைபாயுதே வருவதற்கு முன்பே சாதகப் பறவைகள் இசைக்குழு இருக்கிறது.

தனது இசைக்குழுவை அறிமுகம் செய்து வைத்தார் சங்கர். பிறகு நிகழ்ச்சியைப் பற்றிச் சுருக்கமாக முன்னுரை கொடுத்துட்டு, பிரபல பாடகி ஸ்ரீலேகா பார்த்தசாரதியை அழைத்தார். எதற்கு? இரண்டு பெரிய பாடகிகளைப் பற்றி ஒரு பாடகி அறிமுகம் கொடுத்தால் எப்படி இருக்கும்! அதற்குத்தான்.

ஆனால் இவர்களுக்கு அறிமுகம் தேவையா? அந்தக் கேள்விதான் ஸ்ரீலேகா அவர்களும் கேட்டது. ஆகையால் சுருக்கமாக இருவரும் திரையுலகத்தில் நுழைந்ததைப் பற்றிச் சொன்னார். 1952ல் பெற்ற தாய் படத்தில் எதுக்கழைத்தாய் என்று தொடங்கும் பாடலைப் பாடி இசைப் பயணத்தைத் தொடங்கினாராம் பி.சுசீலா. எதுக்கழைத்தாயா? அவருடைய இனிய பாடல்கள் நமக்கெல்லாம் கிடைக்கத்தான். 1957ல் ஜானகி அவர்கள் இசைப்பயணத்தைத் தொடங்கினார்களாம். விதியின் விளையாட்டு என்ற படத்திற்காக. ஆமாம். விதியின் விளையாட்டுதான். ஜானகி அவர்கள் 57ல் அறிமுகமானாலும் இளையராஜாவின் வருகைக்குப் பிறகே பிரபலமானார்கள். அதுவரை இசைச் சிம்மாசனம் பி.சுசீலா அவர்களிடமே இருந்தது. அதுதான் விதியின் விளையாட்டு.

அறிமுகம் முடிந்ததும் இசைக்குயில்கள் இருவரும் இசையாரவாரத்தோடும் அதையமுக்கும் ரசிகர்களின் ஆரவாரத்தோடும் மேடையேறினார்கள். முதன் முதலாக மேடையில் பி.சுசீலா அவர்களைப் பார்க்கும் பரவசம் எனக்கு. என்னைப் போலவே பலருக்கு. அதே போல எஸ்.ஜானகி அவர்கள் ரசிகர்களும் பரவசமடைந்தார்கள்.

இருவரும் பணிவாக ரசிகர்களை வணங்கினார்கள். முதலில் எஸ்.ஜானகி அவர்கள் பி.சுசீலா அவர்களை மகாகுயில் என விளித்து அந்த மகாகுயிலோடு பாட வந்திருப்பது பெருமகிழ்ச்சி என்றார்கள். உடனே பி.சுசீலா தடுத்து இரண்டு மகாகுயில்கள் என்று திருத்தினார்கள். ஆனால் அதை ஏற்க மறுத்த எஸ்.ஜானகி, பி.சுசீலாதான் இசையரசி. அவருக்கு இணை என்று யாருமில்லை என்று ஆணித்தரமாக எடுத்துச் சொன்னார்.

அப்பொழுது எனக்கு "இசையரசி எந்நாளும் நானே" என்ற பாடல் நினைவிற்கு வந்தது. இளையராஜா இசையில் தாய் மூகாம்பிகை படத்தில் நடக்கும் பாட்டுப் போட்டி. தெய்வமே வந்து பாடும். "இசையரசி எந்நாளும் நானே" என்று. அதை மறுத்துப் பாடுவார் ஒருத்தி. ஆனால் பாட்டில் வெற்றி பெற பாலில் மருந்து கொடுத்து தெய்வத்தை ஊமையாக்கி விட்டதாக நினைப்பார். ஆனால் தெய்வத்தின் அருளால் ஊமை பாடி "இசையரசி எந்நாளும் நீயே! உனக்கொரு இணையாராம்மா? எல்லோரும் இசைப்பது இசையாகுமா?" என்று போட்டி முடியும். இந்தப் பாட்டில் தெய்வத்திற்குப் பி.சுசீலாவும் தெய்வ அருளால் குரல் பெற்ற பெண்ணிற்கு எஸ்.ஜானகியும் பாடியிருந்தார்கள். இன்றல்ல அன்றே பி.சுசீலாவை இசையரசி என்று எஸ்.ஜானகி புகழ்ந்திருக்கிறார்.

அடுத்து பேசினார் பி.சுசீலா. "ஜானகி பேசீட்டாங்க. நான் என்ன பேசுறது? நேரா பாட்டுக்கே போயிர்ரேன்" என்று தனது முதல் பாடலைத் துவங்கினார். அரங்கம் அமைதியானது. அந்த முதற் பாடல்?

தொடரும்....