Monday, May 29, 2006

11. பட்டுச் சேலைக் காத்தாட

திருநெல்வேலி டவுண்ல நடுவுல இருக்கிறது நெல்லையப்பர் கோயில்னா....அதச் சுத்தி இருக்குற வீதிகள்ள ரொம்பப் பிரபலமா இருக்குறது குறிப்பா மூனு கடைகள். அல்வாவுக்குப் பேர் போன இருட்டுக்கடை ஒன்னு. துணிமணிகளுக்குப் பேர் போன போத்தீஸும் ஆரெம்கேவியும். இப்ப இவங்க சென்னைலயும் பெரிய கடைகளைத் தொறந்து பெட்டிய நெரப்புறது எல்லாருக்கும் தெரியும்.

அதுல போத்தீஸ்ல போயி மொட்ட போடுற வேளைக்கு வேணும்னு ரெண்டு துண்டு வாங்க உள்ள போனேன். நெல்லையப்பர் கோயில் நடை நாலு மணிக்குத்தான் தொறக்கும். இருட்டுக்கடையும் அஞ்சு மணிக்கு மேலதான் தொறக்கும். அதுனால நடுவுல் இருக்குற பொழுத ஓட்ட போத்தீஸ்தான் சரியான இடம்னு உள்ள போனோம். ஒருத்தன் வேட்டி வாங்கனுங்கறது நெனவுக்கு வந்தது.

சரீன்னு மொதல்ல அவனுக்கு வேட்டி வாங்க அதுக்கான எடத்துக்குப் போனோம். அவனுக்குத் தமிழ் தெரியாதுங்கறதால அவன் கன்னடத்துல சொல்றதத் தமிழ்ல மாத்திச் சொல்லியும் கடைக்காரர் தமிழ்ல சொல்றத அவனுக்குக் கன்னடத்துல மாத்திச் சொல்லியும் மொழிச்சேவை செஞ்சேன். அப்பத்தான் இன்னொருத்தனுக்கு வேற ஏதாவது பாக்கலாம்னு தோணிச்சு. அவன் ஒரு பக்கமா போனான். இன்னொருத்தன் இந்தப் பக்கம். இப்பிடி அங்குட்டும் இங்குட்டுமாப் போயி கடைய ஒழப்பிக்கிட்டிருந்தோம்.

மொதல்ல வாங்க வேண்டிய துண்டையும் வேட்டியையும் வாங்கிக்கிட்டோம். அதுக்குள்ள ஒருத்தன் பட்டுச்சேலை பாக்கனும்னு சொன்னான். அவனக் கூட்டீட்டுப் போய் அந்தப் பகுதீல விட்டாச்சு. அவன் அதப் பெரட்டீட்டு இருக்கும் போது இன்னொருத்தன் பிரிண்டேட் சில்க்ஸ் அவனோட அம்மாவுக்கு வாங்கனும்னு விரும்புனான். அந்தப் பகுதிக்கு அவனோட ஓடு. ஒவ்வொன்னா பாக்கும் போது தாமரைச் செவப்புல ஒரு சேலை. பிரிண்டேட் சில்க்தான். நல்லாயிருந்தது. செந்தாமரை பாத்திருப்பீங்களே. ரொம்பப் பளீருன்னும் இருக்காது. ரொம்பக் கம்மலாவும் இருக்காது. அந்த நெறத்துல அழகான கருப்புப் பிரிண்ட் போட்ட சேலை. கொஞ்ச நேரம் அப்படி இப்பிடி யோசிச்சி அம்மாவுக்கு வாங்கீட்டேன். கூட இருந்தவன் அவனோட அம்மாவுக்குப் பொருத்தமா ஒரு பட்டுச்சேலை எடுத்துக்கிட்டான்.

அதுக்குள்ள இன்னொருத்தன் பொண்டாட்டிக்கு ஒன்னு, அம்மாவுக்கு ஒன்னு, தங்கச்சிக்கு ஒன்னுன்னு மூனு பட்டுச்சேலைகள அள்ளீட்டு வந்தான். அள்ளல் நெறையா இருந்ததும் கொஞ்சம் தள்ளுபடியும் கிடைச்சது. பிக் ஷாப்பர்னு சொல்ற சணல் பைகள ஒவ்வொருத்தரும் தூக்கீட்டு வந்தோம். அட! சொல்ல மறந்துட்டேன். தூத்துகுடீல இருக்குற அத்தைக்கு ஒரு காட்டன் சேலையும் எடுத்துக்கிட்டேன்.

ஆறு ஆம்பளைங்க சேலைக் கடைக்குள்ள போனாலே இப்பிடி ஆச்சே.....பொம்பளைங்க போனா என்னாகும்னு நெனச்சுக்கிட்டேன். அவங்களச் சொல்லிக் குத்தமில்லை.

வெளிய வந்ததும் பைகள வண்டீல வெச்சிட்டுக் கோயிலுக்குப் போனோம். நெல்லையப்பர் கோயில். பழைய கோயில். இன்னொரு தகவல் சொல்றேன். குறிச்சிக்கோங்க. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை விட நெல்லையப்பர் கோயில் பெருசு. போய்ப் பாத்தவங்க கண்டிப்பாச் சொல்வாங்க. நீங்களும் அடுத்து போனீங்கன்னா தெரியும். ஆனா மதுரைல வெளிப் பிராகாரங்க ரொம்பப் பெருசு.

இசைத்தூண்கள். நெல்லையப்பர் சந்நிதி நுழைவில இருக்கு. தட்டிப் பாத்தேன். நல்ல இசை வந்துச்சு. இதையே இசை தெரிஞ்சவங்க தட்டுனா! ம்ம்ம்...அது சரி...தூணைத் தட்டுனவனும் இசை தெரிஞ்சவனாத்தானே இருக்கனும். கல்லுச சுதி ஏத்துற சிற்பிகள் இப்பவும் இருக்காங்களான்னு தெரியலையே!

காந்திமதியம்மன், முருகன் எல்லாருக்கும் வணக்கம் போட்டுட்டு வந்தோம். கோயிலுக்குள்ள அன்னைக்கு ஏதோ ஒரு பள்ளிக்கூடத்து ஆண்டு விழா நடந்தது. கிட்டத்தட்ட ஆறு மணி வாக்குல வெளிய வந்தோம். வந்ததும் நேராப் போனது இருட்டுக்கடைக்குதான்.

ஆளுக்கு நூறுகிராம் கைல மொதல்ல வாங்கிக்கிட்டோம். அப்புறம் ஒவ்வொருத்தனும் அரக்கிலோ காக்கிலோன்னு பாக்கெட் பாக்கெட்டா வாங்கிக்கிட்டாங்க. கொண்டு போய் பெங்களூர்ல உள்ளவங்களுக்குக் குடுக்கதான். ரொம்ப நேரம் அங்கயே இருக்காம திருச்செந்தூருக்குக் கெளம்ப முடிவு செஞ்சோம்.

முந்தி எல்லா பஸ்சும் ஜங்சன்ல இருந்துதாம் பொறப்படும். இப்ப இன்னொரு பஸ்டாண்டு இருக்கு. அதுவும் பாளையங்கோட்ட தாண்டி...தள்ளிப் போகனும்...அங்க போய் வண்டிய கோயில்பட்டிக்குத் திருப்பி அனுப்பீட்டு திருச்செந்தூர் பஸ்சப் பிடிச்சோம்.

திருநெல்வேலி எனக்குப் புது ஊர் கிடையாது. தூத்துக்குடீல இருந்துன்னாலும் கோயில்பட்டீல இருந்துன்னாலும் முக்கா மணி நேரந்தான். அதுவுமில்லாம என்னோட நெருங்கிய நண்பனின் ஊரும் திருநெல்வேலி. ரொம்ப நெருங்கிய நண்பந்தான். ஆனா இப்ப நாளாவட்டத்துல தொடர்பு கொறஞ்சு போச்சு. அமெரிக்காவுல இருக்கான். ஆனா பேச்சு வழக்கே இல்லைன்னு சொல்லலாம். எப்பவாச்சும் இந்தியாவுக்கு வந்தா ஃபோன் பண்ணுவான். பெங்களூருக்கு வந்தா சந்திப்போம். அதுவும் ஒரு வாட்டிதான். இன்னைக்கு அவனும் நல்ல நெலமைல இருக்கான். நானும் முருகன் புண்ணியத்துல நல்லாயிருக்கேன். அதுதான் உண்மை.

தொடரும்....

அன்புடன்,
கோ.இராகவன்

Sunday, May 28, 2006

10. சாப்பாட்டுச் சண்டையும் சாயிபு பிரியாணியும்

ஏற்கனவே நான் சங்கரங்கோயில் பிரியாணி பத்திச் சொல்லியிருந்தேன். அதுனால அதச் சாப்பிடனும்னு குறியா இருந்தேன். மொதல்ல இருந்தே நண்பர்கள் கிட்ட அதப் பத்திச் சொல்லியிருந்தேன்.

ஆனா எங்க குளுவுல சைவமும் அசைவமும் சரி பாதி. அதுல ஒரு அசைவக்காரனும் கோயில் கோயிலாப் போறதால சைவமாயிருந்தான். யார் வர்ராங்களோ வரலையோ நான் போறதா முடிவு கட்டீருந்தேன்.

அதுனால வண்டிய நேரா பிரியாணி ஓட்டலுக்கு ஓட்டச் சொன்னேன். டிரைவர் கோயில்பட்டிக்காரர். அவருக்குக் கடை நல்லாத் தெரிஞ்சிருந்தது. ஆனா எல்லாரும் வண்டிய அங்க விடக்கூடாதுன்னு சொன்னாங்க. எல்லாரும் சாப்பிடுற மாதிரி ஓட்டலுக்குப் போகனும்னு சொன்னாங்க.

சங்கரங்கோயில்ல சைவச் சாப்பாடு அவ்வளவு நல்லாயிருக்காது. அரமணி பொறுத்துக்கோங்க. திருநெல்வேலீல நல்ல சாப்பாடு வாங்கித்தர்ரேன். ஒரு அஞ்சு நிமிசம் கொடுத்தா நான் பார்சல் வாங்கிக்கிறேன். அப்புறமா நேரா திருநெல்வேலி போலாம்னு சொன்னேன்.

கேட்டாத்தானே. அதெப்படி. இவ்வளவு பெரிய கோயில் இருக்கு. இங்க சைவச் சாப்பாடு கிடைக்காதான்னு ஒருத்தன் கேட்டான்.

கிடைக்கும். ஆனா அவ்வளவு நல்லாயிருக்காது. திருநெல்வேலிக்குப் போயிரலாம்னு சொன்னா அவனுக்குப் புரியலை.

கோயிலுக்கு வந்துருக்குறப்ப ஏன்டா இதெல்லாம்....நாளைக்கு மொட்டையெல்லாம் போட்டுட்டு அப்புறமா சாப்பிடலாம். இன்னைக்கே இன்னொரு கோயிலுக்குப் போகனும்னு இன்னொருத்தன் சொன்னான்.

"ஒங்கள நான் சாப்பிடச் சொல்லல. அதே வேளைல என்னோட சாப்பாடு வழக்கத்துல யாரும் தலையிடாதீங்க. நான் இங்க நேரமாக்க மாட்டேன். அஞ்சே நிமிசம். பார்சல் வாங்கிக்கிறேன். அப்புறம் நேராத் திருநெல்வேலிதான். அங்க நல்ல ஓட்டலுக்கு ஒங்களக் கூட்டீட்டுப் போறேன்"னு சொன்னேன். ஒருத்தனும் கேக்கலை.

இன்னொருத்தன் வேற மாதிரி ஆரம்பிச்சான். "ராகவா! நீனு பர்லில்லாந்தரே நமகெல்லாம் ஊட்டா பேடா...நாவு ஏனு தினல்லா! (ராகவா நீ வரலைன்னா எங்களுக்கெல்லாம் சாப்பாடு வேண்டாம். நாங்க எதுவும் திங்க மாட்டோம்.)"

நானும் விடலை. "சரி. நீவேனு தின பேடா. நானு தின பேக்கு. நீவெல்லா இல்லிரி. நானு ஹோகி பர்த்தினி. (சரி. நீங்க ஒன்னும் திங்க வேண்டாம். நான் திங்கனும். நீங்கள்ளாம் இங்கயே இருங்க. நான் போயிட்டு வர்ரேன்.)"

இதென்னடா வம்பாப் போச்சுன்னு எல்லாரும் முழிக்கிறாங்க. சரீன்னு பேசி ஒரு முடிவுக்கு வந்தோம். அவங்கள அங்கயே ஒரு சைவ ஓட்டல்ல எறக்கி விட்டுட்டு நானும் இன்னொருத்தனும் பிரியாணி திங்கப் போறதுன்னு.

ஒரு ரொம்பச் சுமாரான ஓட்டல் (அதுதான் அங்க ரொம்பப் பிரமாதம்) ஒன்னுல அவங்கள விட்டுட்டு நானும் இன்னொருத்தனும் போயி பிரியாணிய வெட்டுனோம். திருப்தியா முடிச்சிட்டு வந்தா இங்க ஒவ்வொருத்தனும் பேருக்குத் தின்னு வெச்சிருக்கானுக. ஒன்னும் சரியில்லை போல. எல்லாரும் ஒரு அர மணி நேரம் பொறுத்திருந்தா திருநெல்வேலீல நல்ல சாப்பாடு வாங்கிக் கொடுத்திருப்பேன். எல்லாம் தலையெழுத்து. சாப்பாடு சரியில்லைன்னு ஒரே புலம்பல். அவங்கள எல்லாரையும் திருநெல்வேலீல மொதல்ல நல்ல எடத்துக்குக் கூட்டீட்டுப் போறேன்னு உறுதி சொன்னேன்.

அப்புறம் நேரா வண்டீல ஏறித் திருநெல்வேலி போனோம். வழியில நெறைய காற்றாலைகள். எக்கச் சக்கமா சுத்திக்கிட்டு இருந்தது. அதையெல்லாம் பாத்துக்கிட்டே திருநெல்வேலி ஜங்சன் வந்து சேந்தோம். நேரா எல்லாரையும் அரசனுக்குக் கூட்டீட்டுப் போயி ஐஸ்கிரீம், மில்க் ஷேக் எல்லாம் வாங்கிக் கொடுத்து சாந்தி பண்ணியாச்சு. நான் நண்பர்களோட பலமுறை போன கடை அரசன். ஐஸ்கிரீம் மில்க் ஷேக் எல்லாம் அங்க கிடைக்கும். நண்பர்களோட வந்த பழைய நினைவுகளை எல்லாம் பகிர்ந்து கிட்டேன்.

அப்புறம் ஒரு கடைக்குக் கூட்டீட்டுப் போனேன். சும்மா நான் ரெண்டு துண்டு வாங்கலாம்னுதான் நெனச்சு உள்ள போனேன். வந்தவங்களும் சும்மா பாக்கலாம்னுதான் வந்தாங்க. ஆனா......

தொடரும்....

அன்புடன்,
கோ.இராகவன்

Sunday, May 21, 2006

9. கோமதி செஞ்ச சேட்டை

சங்கரங்கோயில் எனக்குச் சின்ன வயசுலயே பழக்கம். தூத்துக்குடீல அத்த வீட்டுல இருந்து படிச்சப்போ மாதத்துக்கு ஒரு வாட்டி அங்க போவோம். காலைலயே எந்திரிச்சி அத்த இட்டிலி அவிச்சி அதோட கெட்டித் துவையல் அரைச்சு, அதுவும் கெட்டுப் போகாம இருக்க அதச் சுட வெச்சுக் கொண்டு வருவாங்க. கோயில்ல சாமி கும்பிட்டுட்டு அங்க குளத்தடில உக்காந்து சாப்பிட்டிட்டு பகல்ல கெளம்பி வருவோம். மறக்காத நினைவுகள்.

அதே போலச் சங்கரங்கோயில் பிரியாணியும் நல்லாயிருக்கும். அங்க ஒரு சாயிபு கடை இருக்கு. அதுல பிரியாணி பிரமாதமா இருக்கும். அங்க போன பல சமயங்கள்ள அதைப் பார்சல் வாங்கீட்டும் வந்திருக்கோம்.

இப்பிடியாகப் பட்ட சங்கரங்கோயிலுக்குப் போறோம்னதுமே ரெண்டு வாங்கனும்னு உறுதியா இருந்தேன். ஒன்னு புத்து மண்ணு. இன்னொன்னு பிரியாணி. புத்து மண்ணக் குழச்சி நெத்தீல புருவ நடுவுல வெச்சுக்கிறது ரொம்ப நாள் பழக்கம். அந்தப் புத்து மண்ண உருட்டிச் சின்னச் சின்னக் குழாயா பாக்கெட்ல போட்டு விப்பாங்க. புத்துமண் குழாயோட தண்டியப் பொருத்து விலை கூடிக் கொறயும்.

கோயிலுக்குள்ள நுழையும் போதே கடைகள்ள புத்துமண் எக்கச்சக்கமா கண்ணுல பட்டது. திரும்ப வர்ரப்ப வாங்கிக்கலாம்னு நேரா உள்ள போனோம்.

மொதல்ல கண்ணுல பட்டது பூலித்தேவன் அறை. அவர் இறைவனோட இணைஞ்சதாச் சொல்ற எடத்துல அழகா மரவேலைப்பாடு செஞ்சிருக்காங்க. உண்மையிலே பிரமாதம். குறிப்பா சின்னச் சின்ன அழகான மரவேலைப்பாடுகள்.

அடுத்து சங்கரனைப் பாத்தோம். தோடுடைய செவியன். விடை ஏறியோர் தூவெண்மதி சூடியவன் இங்கு ஆவுடையாராக காட்சி தந்தான். வணங்கி விட்டு அப்படியே நேராகச் சங்கரகோமதியைக் கண்டோம். சரிவளை. விரிசடை. எரிபுரை வடிவினள். அன்பொழுக அருள் செய்து கொண்டிருந்தாள். வணங்கி விட்டுச் சுற்றி வந்தோம்.

மாவிளக்குப் போடுறத இங்க நெறையப் பாக்கலாம். எனக்கும் இங்க எங்கத்த மாவிளக்குப் போட்டிருக்காங்கன்னு நெனைக்கிறேன். சரியா நெனவு இல்ல. பச்சரிசிய இடிச்சி வெல்லஞ் சேத்து இடிச்சி விளக்கு செஞ்சி அதுல குழியாக்கி நெய் நெரப்பி ஏத்துறதுதான் மாவிளக்கு. கண்ணு வலி சரியாப் போச்சுன்னா வாழையெலைல மாவிளக்கு வெச்சி யாருக்கு வேண்டுனாங்களோ அவங்க கண்ணுக்கு மேலா வெச்சிக் காட்டுறது. வயித்துவலிக்கு வயித்து மேல வெக்கிறது. இப்பிடி நெறைய.

அதே மாதிரி அங்க ஒரு தொட்டீல புத்து மண்ணப் போட்டு வெச்சிருப்பாங்க. வேணுங்கிறவங்க எடுத்துக்கலாம்.

அப்புறம் சங்கரநாராயணர். பாதி சங்கரன். பாதி நாராயணன். ஒரு பக்கம் வில்வம். இன்னொரு பக்கம் துளசி. ஒரு பக்கம் புலித்தோல். இன்னொரு பக்கம் பட்டுத்துணி. ஒரு பக்கம் பாம்பு தொங்குது. இன்னொரு பக்கம் மணிமாலைகள் தொங்குது. இப்படி ரெண்டு வேறுபட்ட துருவங்கள் ஒன்னா இருக்குறதுதான் சங்கரநாராயணர். அவருக்கும் ஒரு வணக்கம் போட்டுட்டு நேரா கோமதி இருக்கிற எடத்துக்குப் போனோம்.

கோமதீங்குறது ஆனையோட பேரு. ஒரு பெரிய கொட்டாரத்துல இருந்துச்சு. நல்லா தென்ன மட்டைகள உரிச்சித் தின்னுக்கிட்டிருந்த கோமதி கிட்டப் போயி ஆசீர்வாதம் வாங்கினேன். காசு கொடுத்துதான். அப்ப இன்னொரு நண்பனும் பக்கத்துல வந்து நின்னான். அவனுக்குக் கொஞ்சம் நடுக்கம்னு வெச்சுக்கோங்களேன். ஏதோ எப்படியோ வந்துட்டான்.

அதுவும் கழுத்துல ரோஜா மாலையோட. சந்நிதீல போட்ட மாலையோட வந்து நின்னான். கோமதி தும்பிக்கைய நீட்டி அவனத் தடவிப் பாத்தா. ரோஜா மாலைய ரெண்டு வாட்டி மோந்து பாத்தா. அந்த வாசம் அவளுக்கு ரொம்பப் பிடிச்சிப் போச்சு. என்னடா தடவுதே மோந்து பாக்குதேன்னு இவனுக்கு லேசா ஆட்டம்.

ஆனா கோமதி விடலை. மாலையத் தும்பிக்கைல பிடிச்சு லேசா இழுத்தா. இவன் கிடுகிடுன்னு ஆடி என்ன பண்றதுன்னு முழிக்கிறான். ஓடக் கூடத் தோணாம. நாந்தான் மாலையக் கழட்டிக் குடுன்னு சொன்னேன். சொன்னதும் படக்குன்னு குனிஞ்சி மாலையக் கழட்டீட்டான்.

கோமதி அப்படியே அந்த மாலையக் கால்ல வெச்சு பட்டுன்னு முடிச்ச உடைச்சது. இப்ப மாலை நீளமான பூச்சரமாச்சு. தும்பிக்கையால பிடிச்சிக்கிட்டே தும்பிக்கையால சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ருன்னு ரோஜாப் பூக்கள உருவி லபக்குன்னு வாயில போட்டுக்கிட்டா. ரெண்டு சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ருதான்...அப்புறம் நாருதான் மிச்சம். ஒரு சந்தோஷம் அவளோட மொகத்துல.

கோமதிக்கு டாட்டா காட்டீட்டு வெளியே வந்தோம். நான் புத்து மண் வாங்கினேன். தினைமாவும் வெல்லமும் கொஞ்சம் நெய்யும் கலந்து நண்பன் வாங்கிச் சாப்பிட்டான். இப்போ நல்ல பசி வேளை. எல்லாருக்கும் பசி. வெயில் வேற. அவதியவதியா ஓடி வண்டீல ஏறுனோம். ஆனா சாப்பாடு என்னாச்சு?

தொடரும்.....

அன்புடன்,
கோ.இராகவன்

Wednesday, May 17, 2006

பரபரப்புப் புத்தகமும் பக்குவமற்ற கொள்கைகளும்

டாவின்சி கோடு புத்தகம் பரபரப்பான புத்தகந்தானே. அது வந்த பொழுது எத்தனை விதமான விமர்சனங்கள். ஏற்புகள். மறுப்புகள். ஆனாலும் புத்தகம் விற்பனையில் புதுச் சாதனை படைத்தது. நானும் அந்தப் புத்தகத்தைப் படித்தேன். என்னைப் பொருத்த வரையில் அந்தப் புத்தகத்தில் கலை மதிப்பு என்பது சுழி. அதாவது அந்தப் புத்தகத்தில் கொஞ்சமும் கலைத்தன்மை இல்லை என்கிறேன். ஆயினும் தொடர்ந்து படிக்க வைக்கும் நடை. முடிவில் காத்திருக்கும் பரபரப்புத் தகவல். இவையிரண்டுந்தான் அந்தப் புத்தகத்தின் சிறப்புகள்.

விற்பனையில் சிறந்த புத்தகங்கள் திரைப்படங்களாவது ஆங்கிலத்தில் நிறைய உண்டு. அந்த வகையில் டாவின்சி கோடு புத்தகத்தைப் படமாக்குவதில் எந்தத் திரைப்படத் தயாரிப்பாளருக்கும் மறுகருத்து இருக்கப் போவதில்லை. ஆகையால்தான் மிக விரைவிலேயே திரைப்படமும் தயாரானது. வெளியாக இருக்கிறது. நானும் ஆவலுடன் காத்திருந்தேன். பொதுவாகவே ஆங்கிலத்தில் நான் படித்த புத்தகங்கள் படங்களாக வந்திருக்கின்றன. அவைகளை ரசித்தும் இருக்கிறேன். விலக்கியும் இருக்கிறேன். டாவின்சி கோடை மற்றும் வரவேற்காமல் போவேனா?

இந்தப் படத்தைப் பார்ப்பதற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்ய இருக்கும் பொழுதுதான் படத்தைத் தடை செய்து விட்டதாகச் செய்தி. தணிக்கைக் குழுவா மத்திய அரசா என்று முதலில் தெரியவில்லை. பிறகுதான் தணிக்கைக் குழு படத்தை வெளியிடலாம் என்று சான்று கொடுத்த பிறகும் அரசு அதைத் தடை செய்திருப்பது தெரிந்தது.

என்ன காரணம் என்று கேள்விப்படுகையில் சிரிப்பும் வேதனையும் கலந்து வந்தன. கிருத்துவ மதச் சாமியார்கள் சிலர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருப்பதுதான். அதுவும் சாகும் வரை உண்ணாவிரதம். உடனே அரசாங்கமும் அவர்கள் அனுமதியின்றி படத்தை வெளியிட மாட்டோம் என்று கேணத்தனமான ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கின்றனர்.

கேணத்தனம் என்று சொல்வதற்காக யாரும் ஆத்திரப் படத் தேவையில்லை. கருத்து சுதந்திரம் என்பது அடுத்தவனைப் பற்றிப் பேசும் வரைக்குந்தான் என்ற நிலைக்கு அரசாங்கம் நம்மைக் கொண்டு வந்து விட்டிருக்கிறது. வலைப்பூவிலும் இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பற்றியெல்லாம் பேசி இந்தப் படத்தைத் தடை செய்தது சரியென்று வாதம்.

கீமாயணம் எழுதிய பொழுது பெரியாருக்குக் கருத்துச் சுதந்திரதிரத்தைக் கொடுக்கவில்லையா? என்னைக் கேட்டால் அவர் கீமாயணம் எழுதியது சரி என்பேன். அவருடைய கருத்தைச் சொல்லியிருக்கிறார். அவ்வளவுதார். ஏற்பவர் ஏற்கட்டும். ஏற்காதல் ஏற்காமல் போகட்டும். அவ்வளவுதான் விஷயம். எது எப்படியோ....ராமாயணத்தைப் பெரிதாக நினைக்கின்றவர்களது மனது புண்படுமே என்று பலரும் நினைக்கவில்லை.

இராமாயணம் பொய் என்று நிரூபிக்கத்தான் பெரியார் கீமாயாணம் எழுதினார் என்று சொல்கிறவர்களுக்கு ஒரு செய்தி. பைபிளில் சொல்லியிருப்பது பொய் என்று நிரூபிக்கத்தான் இந்தக் கிருத்துவக் டாவின்சிக் கோடாயணம் எழுதப் பட்டிருக்கிறதாம். பெரியாருக்கு இருந்த சுதந்திரம் டேன் பிரவுனுக்கும் கொடுக்க வேண்டும்.

இன்றைக்கும் வலைப்பூவில் இந்துக் கடவுள்கள் கடவுள்களே இல்லை என்று சொல்லும் அளவிற்குக் கருத்துச் சுதந்திரம் இருக்கிறது. அப்பொழுதெல்லாம் மற்றவர்கள் மனம் புண்படும் என்று வருத்தப்படாதவர்கள் இப்பொழுது இந்தப் படத்தால் குறிப்பிட்டவர்கள் மனம் புண்படும் என்று சொல்லும் நிலைதான் இப்பொழுதைய உண்மையான நிலை.

அர்ச்சகர்களாக யாரும் வரலாம் என்ற சட்டம் மிகச் சரிதான். அதை அரசாங்கம் கொண்டு வந்ததும் சரிதான். அதை எதிர்ப்பவர்களை எதிர்க்க எத்தனை பேர் கச்சை கட்டிக் கொண்டு வந்தீர்கள். ஒவ்வொரு மதத்திலிருந்தும். எந்த மதத்தில் இல்லாதவர்களும் கூட.

படத்தினை வெளியிடுவதில் எந்தத் தவறும் இல்லை என்று தணிக்கைக் குழுவும் சொல்லி விட்டது. அதற்குப் பிறகு படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று சில சாமியார்கள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். எத்தனை பேர் வந்து கேட்டீர்கள்? ஒரே ஒரு பதிவுதான். அதிலும் கூட இந்தத் தடை தேவையில்லாதது என்று பட்டும் படாமல்தான் ஒரு சிலரால் சொல்ல முடிந்தது. தவறு என்று கூடச் சொல்லும் துணிவு ஒரு சிலரைத் தவிர யாருக்கும் இல்லை.

கிருத்துவ மதம் பிறந்து வளர்ந்து செழித்தோங்கி இருக்கும் நாடுகளில் எல்லாம் தடை இல்லை. எந்தச் சாமியாரும் கேட்கவில்லை. ஏன்? அவர்களுக்கு இருக்கும் பக்குவம். ஒரு முறை வலைப்பூவில் ஜோசப் சார் சொன்னார். "இது போல நிறைய ஏடுகள் கிடைத்திருக்கின்றன. அவைகள் நிரூபித்தவை ஒன்றுமில்லை" என்று. (யூதாஸ் தொழுகை ஏடுகள் தொடர்பாக.) அது நம்பிக்கை. அது பக்குவம். அதுதான் சகிப்புத்தன்மை. "நீ சொல்வதைச் சொல்லிக் கொள். எனக்குத் தெரியும் எது உண்மையென்று." ஆகையால்தான் கிருத்துவ நாடுகளில் இந்தப் படத்திற்குத் தடையை யாரும் கோரவில்லை. வாடிகன் அதிகார மையமும் அமைதி காக்கிறது.

ஆனால் இந்தியாவில் எழுகிறது பிரச்சனை. சகிப்புத்தன்மையும் பக்குவமும் கருத்துச் சுதந்திரமும் இன்றி. இது போராட்டத்திற்கான நோக்கத்தையே ஐயத்திற்குள்ளாக்குகிறது.

ஃபயர், வாட்டர் பிரச்சனையில் தணிக்கைக் குழு இருக்கிறது என்று வரிந்து கட்டிக் கொண்டு வந்தவர்களில் நானும் ஒருவன். ஆனால் இன்றைக்குத் தணிக்கைக் குழு இருக்கிறது என்று சொல்ல அன்றைக்கு வந்த குரல்கள் வரவில்லை.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையால் மதச்சார்பின்மையையும் இந்தியர்களின் சகிப்புத்தன்மையும் இன்னமும் கீழே போயிருக்கின்றன என்றால் மிகையாகாது.

போராடுகின்றவர்களே.....இந்தப் படம் மிகப் பெரிய வெற்றி அடையப் போகிறது. இதோ இன்னும் ஒரு வாரத்தில் திருட்டு டீவிடியில் எந்த வெட்டும் இன்றி முழுப்படமும் காணக் கிடைக்கப் போகிறது. தியேட்டரில் போய்ப் பார்க்க நினைத்தவர்கள் வீட்டிலேயே பார்க்கப் போகிறார்கள். அதுவும் அவர்களிடமே அந்த டீவிடி சொந்தமாக இருக்கப் போகிறது. இதுதானா உங்கள் எண்ணம்? இந்தப் படத்திற்கு நல்லதொரு விளம்பரத்தை நீங்களே தேடித் தந்துவிட்டீர்கள். நன்றி.

அன்புடன்,
கோ.இராகவன்

Sunday, May 14, 2006

8. கழுகுமலை

இந்தப் பேர நெறையப் பேரு கேள்விப் பட்டிருப்பீங்க. கொஞ்சப் பேரு பாத்திருப்பீங்க. ஆனா இந்தக் கோயிலோட பெருமையும் பழமையும் ஒங்களுக்கெல்லாம் தெரிஞ்சிருக்க வாய்ப்புகள் குறைவுன்னே நெனைக்கிறேன்.

தமிழகத்துல இருக்குற பழைய முருகன் கோயில்கள்ள இதுவும் ஒன்னு. குடவரைக் கோயில் வகையைச் சார்ந்தது. அதாவது மலையக் கொடஞ்சி கோயில் கட்டுறது. இன்னொரு பிரபலமான குடவரைக் கோயில் திருப்பரங்குன்றம். இந்தக் குடவரைக் கோயில்ல சாமியச் சுத்த முடியாது. ஏன்னா சாமிய குகைச் சுவத்துல செதுக்கீருப்பாங்க. அதுனால சுத்துனா முழு மலையையும் சுத்தனும். திருப்பரங்குன்றத்துலயும் மலைவலம் வருவாங்க. கழுகுமலைலயும் அப்படிச் செய்வாங்க.

தமிழ்நாட்டுல பெரிய கோயில்கள் எல்லாமே அரசாங்கத்தோட அறநிலையத்துறையோட கட்டுப்பாட்டுல இருக்கு. சில பழைய கோயில்கள்தான் தனியார் கிட்ட இருக்கு. கழுகுமலையும் அதுல ஒன்னு. எட்டையபுரம் சீமைச் சமீனுக்குச் சொந்தமான கோயில்தான் கழுகுமலை. ஒரு எட்டப்பன் தவறு செஞ்சிருக்கலாம். ஆனா அவருக்கு முன்னும் பின்னும் இருந்தவங்க நல்லாவே ஆட்சி செஞ்சிருக்காங்க. இந்தக் கோயிலையும் இன்னமும் நல்லாவே பராமரிச்சிக்கிட்டு வர்ராங்க.

வறண்ட பூமிதான். ஆனா கழுகுமலைக் கோயில் கொளத்துல நான் தண்ணியில்லாமப் பாத்ததில்லை. அதுல எறங்கி நின்னா குளுகுளுன்னு வெயிலுக்குச் சொகமா இருந்துச்சு. அப்படியே கால் கழுவீட்டுப் போனோம். கோயிலோட பழமையும் குளுமையும் ஒன்னா வரவெத்தது. இங்க மயில் மேல உக்காந்த முருகன். வழக்கமா மயில் வலப்பக்கமா திரும்பீருக்கும். இங்க இடப்பக்கமா திரும்பீருக்கும். அமைதியா கூட்டமில்லாம இருந்துச்சு. பொறுமையாக் கோயிலச் சுத்திப் பாத்துட்டு வெளிய வந்தோம்.


கழுகுமலைக்கு இன்னும் ரெண்டு பெருமைகள் இருக்கு. அங்க சமணர்கள் வாழ்ந்த இடம் இன்னமும் இருக்கு. அதாவது பழைய சமணக் கோயில். இப்ப இருக்குற ஊர விட்டு ஒதுக்குப் புறமா இருக்கு. ஆனா நாங்க போக முடியலை. காரணம் நேரமில்லாமைதான்.

அண்ணாமலை ரெட்டியார்னு கேள்விப் பட்டிருப்பீங்க. காவடிச் சிந்து எழுதுறதுல ரொம்பப் பெரிய ஆளு. எல்லாம் முருகன் கொடுத்ததுதான. முருகன் மேல அத்தன காவடிச் சிந்து எழுதீருக்காரு. ஒன்னொன்னும் தமிழருவிதான். அவரோட சொந்த ஊர் கழுகுமலைதான்.

வண்ண மயில் முருகேசன்
குற வள்ளி பதம் பணி நேசன்
உரை வளமே தரு
கழுகாசலபதி கோயிலின்
வளம் நான் மறவாதே

இப்படி எழுதியிருக்காரு அவரு காவடிச் சிந்துல. நெறைய இருக்கு. தெரிஞ்சவங்க ஒன்னொன்னா எடுத்துச் சொன்னா நமக்கும் கேக்குறதுக்கு நல்லாயிருக்கும்.

கோயில்பட்டீல இருந்து நேராப் போனா திருநெல்வேலி. ஆனா கோயில்பட்டி தாண்டி கொஞ்ச தூரத்துலயே இடப்பக்கமா திரும்பி உள்ள போனா கழுகுமலை வரும். அங்கிருந்து அப்பிடியே நேராப் போனா சங்கரங்கோயில் வரும். அப்படியே திரும்பி வளைச்சிக்கிட்டு போனா நேராத் திருநெல்வேலிக்கே கொண்டு போயிரும்.

கோயில்பட்டீல இருந்து நேரா திருநெல்வேலி போனா வழியில கயத்தாறு வரும். கட்டபொம்மனத் தூக்குல போட்ட எடத்தப் பாத்திருக்கலாம். ஆனா நாங்க கழுகுமலை சங்கரங்கோயில்னு போனதால அதப் பாக்கல. நாங்க சங்கரங்கோயில் போறப்போ கிட்டத்தட்ட 11.30 மணி. நல்ல வெயில். 12 மணிக்கு நட வேற சாத்தீருவாங்க. அதுனால விறுவிறுன்னு வண்டிய நிறுத்தீட்டு கோயிலுக்குள்ள போனோம்.

சங்கரங்கோயிலும் பழைய கோயில்தான். அந்தக் காலத்துல நெற்கட்டுஞ்செவல் சமீனுக்குச் சொந்தமா இருந்திருக்கு. கோயிலுக்குள்ள போகும் போது பூலித்தேவனை நெனைக்காமப் போக முடியாது.

நெற்கட்டும் செவல் சீமைக்குத் தலையா இருந்தவர் பூலித்தேவர். இவரு கூடதான் வெள்ளக்காரன் மொதமொதலா இந்தியாவுல சண்ட போட்டான். ஆனா அத வரலாறுல படிக்கிறதே இல்லை. சிப்பாய்க் கலகத்துல இருந்துதான் தொடங்குவாங்க. மொதப் போர்ல பூலித்தேவருக்குத்தான் வெற்றி. அடுத்த போர்ல வஞ்சகமாக் காட்டிக் குடுத்தான் கான் சாகிப்ங்குறவன். அட...அதாங்க கமலோட வாழ்க்கை லட்சியப் பாத்திரம் மருதநாயகம். கமலுக்கு வேணும்னா இவர் கதாநாயகனா இருக்கலாம். ஆனா வரலாற்றுக்கு எதிர்நாயகன்.

இப்ப வெள்ளக்காரன் பூலித்தேவரப் பிடிச்சாச்சு. கொண்டு போறாங்க. எதுக்கு? பேருக்கு விசாரணைன்னு வெச்சு தூக்குல போடத்தான். வழியில சங்கரங்கோயில். குலதெய்வத்தக் கும்புட அனுமதி கேட்டாரு பூலித்தேவர். வெள்ளக்காரனும் கோயிலச் சுத்திக் காவல் போட்டு இவர உள்ள அனுப்புனான். உள்ள போனவரு போனவருதான். எங்க போனாரு...ஏதுன்னு கண்டு பிடிக்க முடியலை. அவர் காணாமப் போன எடத்தைக் குறிச்சி மரப்பந்தல் போட்டு வெச்சிருக்காங்க. இவரக் காணம்னு ரெக்கார்டுல எழுதிக் கேச மூடீட்டான் வெள்ளக்காரன். ஆனா ஒன்னு...அடுத்து பக்கத்தூரு பாஞ்சாலங்குறிச்சிக்காரனப் பிடிச்சப்ப...எங்கயும் நிப்பாட்டலை. நேரா கயத்தாறு. விசாரணை. தூக்கு. வெள்ளக்காரன் சுதாரிச்சிக்கிட்டான்.

தொடரும்.

Thursday, May 11, 2006

அலசிப் பிழிஞ்ச தேர்தல் முடிவுகள்

தேர்தல் முடிஞ்சிருச்சி. முடிவுகளும் தெரிஞ்சிரிச்சி. இப்ப என்ன பண்றது? இந்த முடிவுகள்ள இருந்து நமக்கு என்ன தெரியுதுன்னு அலசிப் பாக்க வேண்டியதுதானே.

மொதல்ல வெற்றி பெற்றவங்களுக்கு வாழ்த்துகள். வெற்றி பெறாதவங்க வருத்தப்பட வேண்டாம். மக்கள ஏமாத்த நமக்கு வாய்ப்புகள் கிடைச்சிக்கிட்டே இருக்கும். காத்துக்கிட்டிருங்க. பலன் கிடைக்கும்.

தேர்தல் தொடங்குனப்பவே எனக்கு ஆசதான். அதாவது கூட்டணி ஆட்சிதான் வரனும்னு. ஜெயலலிதாவையும் கருணாநிதியையும் ஒரே மாதிரிதான் வெச்சிருந்தேன். ரெண்டு பேரும் ஆட்ச்சிக்கு வர்ரது ஏனோ பிடிக்கல. இப்போதைக்கு இவங்க ரெண்டு பேரையும் விட்டா வேற வழியே இல்லைங்கறதால, கூட்டணி ஆட்சி வந்தா நல்லாயிருக்கும்னு நெனச்சேன். நல்ல வேளையா அப்படியே நடந்துருச்சு.

இந்த முடிவுகள்ள இருந்து ஒன்னு நல்லாப் புரியுது. திமுக அதிமுக ரெண்டும் மக்கள் ஒரே மாதிரிதான் பாக்குறாங்கன்னு. யாரு நெறையா கூட்டணி சேக்குறாங்களோ....அவங்களுக்கு கூடுதல் ஓட்டு. அவ்வளவுதாங்க விஷயம்.

இந்தத் தேர்தல் முடிவுகள்ள மூனு தகவல்கள் எனக்கு வியப்பத்தான் குடித்துச்சி. அதுவும் நான் எதிர் பார்க்காத வகையில.

மொதல்ல குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது விஜயகாந்த். இவர நான் ஒரு பொருட்டாவே தேர்தல்ல மதிக்கலை. அதுக்காக தமிழ்மணத்துல இருக்குற பல நண்பர்களைப் போல அசிங்கமாவும் நாகரீகமில்லாமலும் திட்டலை. அது தப்பு. எதிரியாயிருந்தாலும் மரியாதைக் கொறவா பேசக்கூடாது. இத்தன நியாயம் பேசுற நண்பர்களுக்கு என்னோட வேண்டுகோள் இது. நீங்க பேசுற நியாயங்களோட இதையும் சேத்துக்கோங்க.

சரி. விஜயகாந்துக்கு வருவோம். அவருக்கு ஒரு ஓட்டு வங்கி இருக்குன்னு நிரூபிச்சிட்டாரு. அதுதான் உண்மை. லேட்டாவும் லேட்டஸ்டாவும் வர்ரேன் போறேன்னு சொல்லாம ஒரு முடிவோட எறங்குனதுக்கான பலன் கிடைச்சிருக்கு. அவரத் தோக்கடிக்க அத்தன வழிமுறைகளையும் பாமக செஞ்சது. நாலு விஜயகாந்த் போட்டி போட வைக்கிறது. அத நம்ம வலைப்பூ நண்பர்கள் கூட கிண்டலாச் சொல்லிச் சிரிச்சது......வேண்டாங்க. நம்மள்ளாம் கொஞ்சம் படிச்சவங்க. இதெல்லாம் நமக்கு வேண்டாம்.

இவர் ஜெயிக்க மாட்டார்னு நான் நெனைக்கலை. ஆனா நம்புனேன். நல்ல ஓட்டு வாங்கி மூனாவது எடத்துக்கு வருவாருன்னு நெனச்சேன். ஆனா முதலிடங்க. இவர மட்டும் ஜெயலலிதா கூட்டணில சேத்திருந்தாங்க (முயற்சி செஞ்சாங்கன்னு கேள்விப் படுறோம்.)..ஜெயிச்சிருந்திருக்கலாம். ஓட்டுக் கணக்கு சொல்லுதே. ஊருருக்கு ஓரளவு நல்லாவே வாங்கீருக்காங்க. பாராட்டுகள் விஜயகாந்த். விருத்தாச்சலத்த நீங்க விருத்தி பண்றதுலதான் உங்க தெறமைய புரிய வைக்கனும். இது வரைக்கும் சினிமாவுல இருந்து அரசியலுக்கு வந்தவங்கள்ளாம் நெடுநாள்த் திட்டங்கள்னு எதுவுமே யோசிக்கலை (குடும்பத்துக்கும் நண்பர்களுக்கும் யோசிச்சாங்க. பதவிக்கு வர்ரதுக்கும் இலவசத்ததான் யோசிச்சாங்க). நீங்க என்ன பண்ணப் போறீங்களோ.

பாமகவுக்கு இங்க ஒரு வேண்டுகோள். விஜயகாந்த் விருத்தாசலத்துக்கு நல்லது செஞ்சா(!) ஒத்துழைப்புக் குடுக்கலைன்னாலும் குழப்பம் பண்ணாதீங்க. பண்ணலாம்....அது விஜயகாந்த்துக்குத்தான் உதவும்.

அடுத்தது வைகோ பங்கு. இவருடைய பங்கு ஒன்னுமே இல்லைன்னு சொல்ல முடியாது. தமிழகத்துல ஆறும் புதுவைல ஒன்னும்(!). கடைசி நேரத்துல இவரு எடுத்த முடிவுக்கு இவ்வளவு கிடைச்சது மட்டுமல்ல..........தோத்த இடங்கள்ள உள்ள வாக்கு வித்தியாசமும் சொல்லும் உண்மையான நெலமையை. அன்பழகனுக்கே நானூறு ஓட்டு வித்தியாசந்தான். பல இடங்கள்ள கொறஞ்ச வாக்கு வித்தியாசத்துல தோத்ததும் மதிமுகவுக்கு இருக்குற ஓரளவு பரவலான செல்வாக்குக்கு எடுத்துக்காட்டு. அதிமுகவும் மதிமுகவும் ஒருத்தருக்கொருத்தர் ஒழுங்கா உதவியிருக்காங்க. அதுவும் பல தொகுதிகள்ள தெரியுது. சென்னையிலேயே மூன்று தொகுதிகள்ள மதிமுக வாக்குகள் எதிர் பார்த்ததை விடவும் அதிகம். சென்னை திமுகவின் கோட்டைங்கறது இனிமே மாயைதான். ஸ்டாலினுக்கே ரெண்டாயிரம் ஓட்டுதான் வித்தியாசம். பல திமுக தலைகள் பத்தாயிரம் ஓட்டு வித்தியாசத்துல வெற்றி பெற்றப்போ சென்னைல இப்படி ஒரு நெலமைங்குறது திமுகவுக்கு நல்லதில்லை.

இன்னொரு விஷயம். வைகோ நெனச்சத சாதிச்சிட்டாருன்னு சொல்வேன். வைகோவும் கூட்டணியில இருந்திருந்தா நிச்சயமா இத விடவும் அதிக தொகுதிகள் திமுகவுக்குக் கிடைச்சிருக்கும். பெரும்பான்மை கூட கிடைச்சிருக்கலாம்னு ஓட்டுக் கணக்கு வெச்சுப் பாக்கும் போது தெரியுது. திமுகவுக்குத் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால வைகோவுக்குப் பின்னால பலன் கிடைக்கிறதுக்கான வாய்ப்பு இருக்கு. இன்னைக்குப் பொழுதுக்கு ஆக வேண்டியதப் பாத்தாச்சு. நாளைக்கு நடக்கப் போறது யாருக்குத் தெரியும்? விடாம போராடுங்க. ஒங்களுக்கும் வாய்ப்பு வரலாம். ஆனா ஒன்னு, இந்தத் தேர்தல்ல நீங்க கொடுத்தது பெரிய விலை. அதிமுக கூட்டணிக்குப் போனதச் சொல்றேன். மத்தவங்கள்ளாம் யோக்கியங்கன்னு சொல்ல வரலை. அவங்கள்ளாம் மொதல்ல இருந்தே கெட்டவங்க. புதுசா தப்பு செய்ற நீங்க கெட்டவங்களாகி அவங்கள்ளாம் நல்லவங்களாயிட்டாங்க பாத்தீங்களா....இன்னமும் ஒன்னும் கெட்டுப் போகலை. அடுத்தடுத்து பொறுமையா யோசிச்சு எடுக்குற முடிவை முதல்லயே எடுங்க. கடைசீ நேரத்துல எடுக்காதீங்க.

மூனாவது காங்கிரஸ். கருணாநிதி அத்தன சீட்டு அள்ளிக் கொடுத்தப்ப, காங்கிரஸ் எப்படிப் பொழைக்கப் போகுதோன்னு நெனச்சேன். ஆனா கொடுத்த வாய்ப்பை நல்லாப் பயன்படுத்திக்கிட்டாங்க. இன்னைக்கு காங்கிரஸ் இல்லாம ஆட்சியமைக்க முடியாதுங்கறதுதான நெலமை. காங்கிரஸ்காரங்களா...வாழ்த்துகள். அடுத்த தேர்தல்ல சிதம்பரத்த உள்ள எறக்கப் பாக்கலாம். வாய்ப்பு பிரகாசமா இல்லைன்னாலும் நெறைய சீட்டுகள அள்ள வாய்ப்பிருக்கு. அது அடுத்த தேர்தல் நிலவரத்தப் பொறுத்துதான். ஒருவேளை இப்ப இருக்குற மத்திய அரசுக்கும் திமுகவுக்கும் சண்டைன்னு வெச்சுக்கோங்க. அப்ப காங்கிரசும் பாமகவும் நெனச்சா ஜெயலலிதாவையே முதல்வர் ஆக்கலாம். ஆனா..நடக்குற காரியமா அது? இன்னைக்குத் தமிழகத்துல இருக்குற எல்லாத் தலைவர்களுமே கூட்டணி ஆட்சிய ஓரளவுக்கு நல்லா கொண்டு போக முடியும். ஆனா முடியாத ஒரே ஆளு ஜெயலலிதாதான். தின்னாத் தனியிலை. இல்லைன்னா பட்டினிங்குறதுதான் அவரோட கொள்கை. ஒருவேளை பசி வந்தா பத்தும் பறந்து போகுமோ என்னவோ!

மத்த படி விடுதலைச் சிறுத்தைகளுக்கு ரெண்டு இடம் கிடைச்சிருக்கு. பாமக பதினேழு. பாமகவும் முடிஞ்ச வரைக்கும் நல்லாச் செஞ்சிருக்காங்க. கம்யூனிஸ்ட் கட்சிகளும் சிறப்பா செஞ்சிருக்காங்க. எல்லாருக்கும் வாழ்த்துகள்.

ஜெயலலிதாவுக்கு இப்பவாவது எல்லாரையும் அணைச்சிக்கிட்டுப் போறதுன்னா என்னன்னு தெரிஞ்சா நல்லது. இல்லைன்னா திண்டாட்டந்தான். சண்டை போட்டுக்கிட்டேயிருந்தா எப்பிடி. அடுத்தவங்களை மதிக்கக் கத்துக்கனும். மனுசனை மனுசனா நடத்தக் கத்துக்கனும். வேன்ல உக்காந்துக்கிட்டு டயரத் தொட்டுக் கும்பிடுறவங்களை ஆசி குடுக்குற அசிங்கங்கள் நிக்கனும். ஒங்களுக்குன்னு வாக்கு வங்கி நல்லாவே இருக்கு. அதைப் பெருக்குறதும் கரைக்கிறதும் ஒங்க கையிலதான் இருக்கு.

கடைசியா கருணாநிதிக்கு. திரும்ப முதல்வராகப் போறீங்க. வாழ்த்துகள். ஆனா இந்தப் பதவிக்கு வர்ரதுக்கு நீங்க எடுத்த இலவச வாள் மேல எனக்குக் கொஞ்சம் கூடப் பிடித்தம் இல்ல. இந்த இலவசங்க உங்களுக்குத் தேர்தல்ல உதவீருக்கு. இதெல்லாம் சாத்தியம்னு சிதம்பரம் புள்ளி விவரக் கணக்கு சொல்லலாம். ஆனா இந்தத் தேர்தல்ல நீங்க தொடங்கி வெச்ச இலவசக் கூத்து எல்லாரையும் எப்பிடிப் பைத்தியமாக்குச்சு பாத்தீங்களா. போன தேர்தல் வரைக்கும் ஒங்களுக்குத்தான் ஓட்டுப் போட்டேன். இந்தத் தேர்தல்ல ஓட்டே போடல. யாருக்குப் போடுறோமோ இல்லையோ...ஒங்களுக்குப் போடக் கூடாதுன்னு நான் முடிவு செஞ்சிருந்தேன்.

மத்தவங்க வேணும்னா ஜெயலலிதாவை விட நீங்க செம்மல்னு நிருபிக்க ஆயிரம் சொல்லலாம். ஆனால் என்னுடைய மதிப்புல நீங்க கொறஞ்சுதான் போயிட்டீங்க. நான் ஒருத்தன் மட்டும் தமிழ்நாடு இல்லை. ஆனா என்னைப் போல நெறையப் பேரு நெனக்கத் தொடங்குனா அது உங்க கட்சிக்கு நல்லதில்லை. இந்த ஆட்சியில ஒங்க கிட்ட இருந்து எதுவுமே எதிர் பார்க்கலை. ஏன்னா உங்க தேர்தல் அறிக்கைல உண்மையான தொலை நோக்குத் திட்டங்கள் எதுவுமே இல்லை. ஏதாவது செஞ்சீங்கன்னா நிச்சயம் பாராட்டுவேன். இல்லைன்னா.....எது எப்படியோ திரும்ப முதல்வரானதுக்கு என்னோட வாழ்த்துகள்.

வாழ்த்துகளுடன்,
கோ.இராகவன்

Monday, May 08, 2006

7. கதிரேசன் கோயில்

கோயில்பட்டீல எங்க சொந்தக்காரங்க இருக்காங்க. அவங்களுக்கு ஃபோன் போட்டு ஒரு நல்ல லாட்ஜுல ரூம் போடச் சொன்னோம். காலைல எறங்கிக் குளிச்சிட்டு எட்டு மணிக்கு மேல கோயில்பட்டிக் கதிரேசன் கோயில், அப்புறம் கழுகுமலை, சங்கரங்கோயில், திருநெல்வேலிய முடிக்கிறதாத் திட்டம். அதுக்கு ஒரு வண்டியும் ஏற்பாடு செய்யச் சொல்லியிருந்தேன்.

எல்லாம் குளிச்சிக் கெளம்புற வேளைல அவங்க வீட்டுல காலைல டிஃபனுக்கு ஏற்பாடு செஞ்சிருந்தாங்க. அதுக்கு முந்துன ராத்திரிதான் நாங்க கோயமுத்தூர்ல தாக்கப்பட்டிருந்தோம். அதோட தொடர்ச்சி கோயில்பட்டியிலயும் தொடந்துச்சு. தகதகன்னு மஞ்சமஞ்சேர்னு கேசரி. ஒரே அளவா இட்டிலிகள் (அதெப்படி ஊத்துறாங்களோ!). காய்கறியெல்லாம் போட்டுக் கிண்டுன உப்புமா. வீட்டுல சுட்ட மெத்துத் தோசை. இதுகள்ளாம் தனியாப் போகக் கூடாதுன்னு தொணைக்குத் தொவையலு, சாம்பாரு, பொடின்னு ஒரு கூட்டம். முடிஞ்சதும் ஆளுக்கொரு வாழப்பழமும் டீயும். ஒரு வயிறுதான இருக்குன்னு வருத்தப்படத்தான் முடிஞ்சது. அன்னைக்கு முழுக்கவே சாப்பிடத் தேவையில்லைன்னு எல்லாரும் முடிவு கட்டுனாங்க....ஆனா நா மட்டும் இல்ல....மதியம் சங்கரங்கோயில்ல சாப்பிடுவேன்னு உறுதியாச் சொன்னேன் (சங்கரங்கோயில்காரங்க இங்க இருந்தா நான் என்ன சொல்ல வர்ரேன்னு தெரிஞ்சிருக்கும்,)

வீட்டு மாடீக்குப் போனோம். லட்சுமி மில்ஸ் காம்பவுண்டுல மரங்க நெறைய இருந்துச்சு. அதுல அங்கங்க மயில்கள். இந்தப் பக்கந் திரும்புனா மல மேல கதிரேசன் கோயில். கோயில்பட்டீல இருக்குற பழைய கோயில் கதிரேசன் கோயில். அதுவும் ஒரு சின்ன மலை மேல. பாழடஞ்சி போயி ஆளும் பேரும் போகாம சிதஞ்சு போய் இருந்துச்சு. அந்தக் கோயிலச் செம்ம பண்ணி நல்ல படியா ஆக்கனும்னு அப்பவே எனக்கு ஆசை. என்னைக்காவது ஒரு நாள் செய்யனும்னு நெனப்பேன். அப்புறம் படிச்சி முடிச்சி வேலைன்னு வந்தப்புறமும் ஆசை அப்பப்ப எட்டிப் பாக்கும்.

மலைல ஏற்ற படியெல்லாம் செதஞ்சு போய் மண்ணாகி அதுல இருட்டு வேளைல நெறையப் பேரு அசிங்கஞ் செஞ்சிக்கிட்டிருந்தாங்க. என்னையப் போலவே நெறையப் பேரு நெனச்சிருப்பாங்க போல. அந்தக் கோயிலுக்கும் ஒரு விடிவு காலம் வந்துருச்சு. இப்ப பழைய சிதைவுகளைத் தட்டி விட்டுட்டு புதுக் கோயில் கட்டியிருக்காங்க. உள்ள முருகன் சிலை கெடையாது. வேல்தான். கதிர்காமத்துலயும் செல கிடையாது. கதிரேசன் கோயில்லயும் செல கெடையாது. இப்பக் கோயில்ல புதுசா பெரிய வேல்தான் நட்டீருக்காங்க. அதே போல மலைவலம் வர்ரவங்களுக்கு நல்ல தார்ச்சாலையும் போட்டிருக்காங்க. ஏற மாட்டாதவங்களுக்காக வண்டிய நேரடியா மேல கொண்டு போற வசதியும் உண்டு.

எல்லாரும் ஜீப்புல போக, நானும் ஒரு நண்பனும் நடந்தே ஏறுனோம். சாமி கும்பிடுறப்பத்தான் அந்த ஐயரக் கவனிச்சேன். ஒரு பரிவும் பச்சாதாபமும் வந்தது. அதுக்குக் காரணம் அவரோட ஒடம்புல இருந்த வெள்ளிப் புள்ளிகள். சொரியாசிஸ்னு பேரு. சொறிஞ்சா செதில் செதிலா வரும். அதுக்கு மருந்தே இல்லையாம். ஒட்டுவாரொட்டியும் இல்லையாம். அதாவது ஒட்டுவார் ஒட்டி. ஒருத்தர் கிட்ட இருந்து இன்னொருத்தருக்குப் போகாது. ஆனால் ஜீன்கள் வழியாப் போகும். வழிவழியாப் போகுமாம்.

என்ன கொடுமை பாத்தீங்களா! அதுவுமில்லாம இது ஏன் வருதுன்னு கூடக் கண்டு பிடிக்கலையாம். மன அழுத்தம் அது இதுன்னு சொல்றாங்க. அதெல்லாம் நோய் ஊக்கிகள் தானாம். நோய் ஜீனுக்குள்ள உக்காந்துகிட்டு இருக்காம். மன அழுத்தமோ வேலைப்பளுவோ வேறு ஏதாவது பிரச்சனைகளோ கொடுமைப் படுத்தும் போது இது வெளிய வந்துருமாம். சொறிஞ்சிக்கிட்டே இருக்க வேண்டியதுதான். அதுனாலதானோ என்னவோ இங்கிலீஷ்ல பேரு வெக்கும் போது கூட சொரியாசிஸ்னு வெச்சிருக்கான்.

பொதுவா இது தலையில தொடங்குமாம். எல்லாரும் பொடுகு நெனச்சு மொதல்ல கண்டுக்காம விட்டுருவாங்க. ஏதாவது டீவீல காட்டுற ஷாம்புகளைப் போட்டுக் குளிச்சிட்டு ஒன்னும் கேக்கலையே டாக்டர் கிட்ட போனா அவரு குண்டத் தூக்கிப் போடுவாரு. இது வந்து தோற்றத்தைப் பாதிக்கிற ஒரு நோய். தொழுநோயோ வெண்குட்டமோ மொதல்லயே தெரிஞ்சிட்டாப் போயிரும். ஆனா இது அப்படியில்லை. போனாலும் திரும்பத் திரும்ப வரும். தோற்றம் பாதிக்கப்படும் போது அவங்க மனம் ரொம்பப் பாதிக்கப் படும். மத்தவங்களோட ஒழுங்கா பழக முடியாது. கூட இருக்கிறவங்களும் ஒரு மாதிரி அருவெறுப்பு இருக்கும். இதுனால ஒடிஞ்சி நொடிஞ்சி போனவங்க நெறையப் பேரு. அவங்களுக்குக் கவுன்சிலிங் பண்ணக் கூட ஒழுங்கா ஒரு வசதி கிடையாது. பாவம்.

அந்த ஐயர், அதையெல்லாம் பெருசு பண்ணாம தீபாராதனை காட்டித் திருநீறு குடுத்தாரு. வாங்கிப் பூசிக்கிட்டேன். கோயில விட்டு வெளிய வந்து பாத்தாக் கோயில்பட்டி ஊர் முழுக்கப் பாக்கலாம். ஒரு பக்கம் வீடுகள். இன்னொரு பக்கம் நேஷனல் பொறியியல் கல்லூரி. ஒரு பாலிடெக்னிக். ஒரு பெண்கள் கல்லூரி. நீளமாக் கோடு போட்ட மாதிரி தேசிய நெடுஞ்சாலை. பச்சைப் பெயிண்ட் அடிச்ச மேம்பாலம். எல்லாத்தையும் பாத்துட்டு தெரிஞ்சவங்களுக்குப் போயிட்டு வர்ரேன்னு சொல்லீட்டுக் கழுகுமலைக்கு வண்டிய விட்டோம்.

தொடரும்

Tuesday, May 02, 2006

6. மருதமலையில் அல்பப் பண்டம்

கோவைக் குற்றாலம் முடிஞ்சதும் நேரா மருதமலைதான். ரொம்பச் சின்னப் பிள்ளைல மருதமலை பாத்த நெனவு. அதுக்கப்புறம் போனதேயில்லை. அப்பக் கீழ இருந்து மேல நடந்தே ஏறுனோம். பொதுவா முருகங் கோயில் மல மேல இருந்தா நடந்துதான் ஏறுறது வழக்கம். ஆனா மருதமலை அடிவாரம் வந்தது தெரியாம வண்டிக்குள்ள உக்காந்திருந்தேன். வண்டி மலைல ஏறத் தொடங்கீருச்சு.

நிப்பாட்டுங்க நிப்பாட்டுங்கன்னு கத்தி எறங்கீட்டேன். கூடவே நாலு நண்பர்களும் எறங்கீட்டாங்க. அப்படியே படியில ஏறிப் போனோம். நல்ல காத்து. உறைக்காத வெயில். ஏற்கனவே ரொம்பச் சுத்துனதுனால கொஞ்சம் களைப்பு. ஆனாலும் ஏறுனோம். வழியில முழுக்க மண்டபங்கள். அத்தனையும் தேவர் பிலிம்ஸ் சாண்டோ சின்னப்பாத் தேவர் கட்டுனது. அருமையான முருக பக்தர் அவர். கருப்புப் பணமே வெச்சிருக்காத நல்ல திரைத்துறைக்காரர்.

அப்படியே ரெண்டு மூனு போட்டோ பிடிச்சிக்கிட்டு மலையேறுனோம். ஏறுனப்புறந்தான் தெரிஞ்சது தங்கத் தேர் பொறப்பட இருக்குறது. சரி. தேர் நகர்ரதப் பாத்துட்டு முருகனப் பாக்கலாம்னு தேர் கிட்ட போனோம். தங்கத் தேர் இழுக்க நமக்கும் ஆசைதான். ஆசையிருக்கு அம்பாரி ஏறன்னு பழமொழியே இருக்கே. தேர் நகரல. எல்லாரும் வந்து தள்ளுங்கன்னு கூப்டாங்க. ஆகா வந்ததுடா வாய்ப்புன்னு தேரப் பிடிச்சித் தள்ளுனோம். திடீர்னு ஒருத்தர் வந்து நகருங்க நகருங்கன்னாரு. என்னடான்னு நகந்துகிட்டோம்.

அப்புறம் தேர் நகரலை. அங்கையே நின்னுச்சு. இழுத்து இழுத்துப் பாக்குறாங்க....ம்ஹூம்...கடைசீல சங்கிலி ஏதோ மாட்டிக்கிட்டு சிக்கிக்கிட்டு இருக்கு. தேரப் பாக்கனும்னு நெனச்சோம். பாத்தாச்சு. இழுக்கனும்னு நெனச்சோம் தள்ளியே விட்டாச்சு. இப்ப கோயிலுக்குள்ள போவோமுன்னு உள்ள போனோம். கூட்டமில்லை. நல்ல தரிசனம். தமிழில் சொல்லாகி, அந்தச் சொல்லுக்கும் மதிப்பைத் தரும் பொருளாகி எல்லாமுமாகி நிற்கிறவனைக் கண்டு தொழுது வணங்கிகோம்.

அப்புறம் அப்படியே பாம்பாட்டிச் சித்தர் குகைக்குப் போனோம். அது கொஞ்சப் படிக கீழ எறங்கனும். அங்க போகும் போதுதான் எங்க கூட வந்தவரு மலைக்கு மேல இருக்குற பழைய முருகங் கோயிலைப் பத்திச் சொன்னாரு. அதுக்குக் காட்டுக்குள்ள போகனுமாம். முந்தி ஒரு நண்பர் வந்து போகனும்னு அடம் பிடிச்சாராம். இவங்கள்ளாம் என்னடான்னு வேண்டா வெறுப்பாக் கூடப் போனாங்களாம். ஆனா தண்ணி கிண்ணி எடுத்துக்காம. எல்லாரும் கோயிலுக்குப் போயிட்டுத் தவிச்சுப் போயி தவங்கிப் போயி வந்திருக்காங்க. ஆனா அங்க போகனும்னு ஒத்தக்கால்ல நின்னவரு நல்லா ஜம்முன்னு ஏறி எறங்கீட்டாராம்.

இதப் பேசிக்கிட்டே வந்து அங்க பிரசாதக் கடைல முறுக்கு, தினைமாவு எல்லாம் வாங்கிக் கிட்டோம். எறங்குற எடத்துலயே ஒரு ஓட்டல். உள்ள போயி ஆளுக்கொரு காப்பி. நல்லா இருந்தது. சின்னக் கடைன்னாலும் கமகமன்னு ஆவி பறக்கக் காப்பி சுகமா இருந்துச்சு. ரசிச்சுக் குடிச்சிட்டு கீழ எறங்குனோம்.

அப்பத்தான் என் கண்ணுல பட்டுச்சு அது. அதாங்க எலந்தவடை. தூத்துக்குடிப் பக்கமெல்லாம் கெடைக்காது. நாங்க கரூர்ல இருந்தப்பதான் எலந்தவடை எங்களுக்கு அறிமுகம் ஆச்சு. பத்துகாசுக்கு ஒரு சின்ன பாலித்தீன் பாக்கெட்டுல கருப்பாக் களிம்பா கிடைக்கும். அதுக்குள்ள எலந்தக் கொட்டைகளும் முழுசாவோ ஒடஞ்சோ கெடக்கும். அதப் பல்லால கடிச்சு பைக்குள்ள இருக்குறத வாய்க்குள்ள எடுத்துக்கனும். சொவச்சிச் சொவச்சிச் சாப்புட்டுட்டு கொட்டையெல்லாம் மெல்ல முடிஞ்சா மெல்லலாம். இல்லைன்னா துப்பீறலாம். அதுதான் எலந்த வடை. எலந்தப் பழமும் புளியும் வெல்லமும் போட்டு இடிச்சிச் செஞ்ச நம்மூர் அமுதம்.

அது சிட்ட சிட்டயா ஒரு கடைல தொங்குச்சு. அத வாங்குனேன். அப்பயே ஒன்னப் பிச்சித் தின்னு என்னோட பழைய மறந்து போன சுவையத் தெரிஞ்சிக்கிட்டேன். அடடா! எலந்த வடையோ எலந்த வடை!

அப்புறம் இருட்டு வேளை. படபடன்னு லாட்ஜுக்குப் போயி துணிமணிகள எடுத்துக்கிட்டு நண்பனோட அக்கா வீட்டுக்கு வலுக்கட்டாயமா கடத்தப் பட்டோம். அங்க இட்லி, ரவா உப்புமா, வடை, சட்டினி, சாம்பார், பூண்டுக்கொழம்பு, இன்னும் சில பல வகையறாக்களால தாக்கப்பட்டு ஒரு வழியா தப்பிச்சி பஸ்ஸப் பிடிச்சிக் கோயில்பட்டில வந்து விடியக் காலைல நாலரை மணிக்கு எறங்குனோம்.

தொடரும்.