Monday, January 28, 2008

தங்க மரம் - 3

முன்கதைச் சுருக்கம்

கதிரவனின் தாயார் அவனது பதினெட்டாவது வயதில் ஒரு சிறிய பெட்டியைக் கொடுத்து தந்தையாரின் கட்டளைப் படி ஒரு செயலைச் செய்து முடிக்க வேண்டுமென்று சொன்னார். அதை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் உட்கார்ந்திருந்த கதிரவன் நண்பன் சித்திரையிடன் இந்தச் செய்தியைச் சொல்லச் சென்றான்.

ஏரி சூழ் கூம்புமலையில் ஊழிவாயன் தன்னுடைய அறையில் இருந்த ஏழு உருளைகளை ஒவ்வொன்றாகத் திறந்து பார்க்கிறான். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு நிறத்தில் ஒரு பெண் வந்து கொஞ்சலில் தொடங்கி மிரட்டலில் முடிக்கிறாள். அவளை விடுவிக்காவிடில் ஊழிவாயன் வீழ்வான் என்று மிரட்டுகிறாள். அதே நேரத்தில்......

பாகம் - 3

ஆலோர் பற்றித் தெரிந்து கொள்வோமா? நாம் கதையின் தொடக்கத்தில்தானே இருக்கிறோம். ஆகையால் இந்த அறிமுகங்கள் தேவையிருக்கிறது. அதுவுமில்லாமல் ஆலோர் பற்றித் தெரிந்து கொள்வது கதிரவனுக்குக் கிடைத்த பொறுப்பு பற்றியும் ஊழிவாயனைப் பற்றியும் மேலும் புரிந்து கொள்ள உதவும். ஆகையால் அறிமுகத்திற்குப் போவோமா.

ஆலோர் என்பது வேறொரு உலகம். நமது அண்டங்களை விட்டு வெகு தொலைவில் உள்ளது. அது ஒரு தட்டைக் கிரகம். நமது பூமியில் ஓரிடத்தில் தொடங்கி அப்படியே நேராகச் சென்றால் புறப்பட்ட இடத்திற்கே வந்து விடலாம். ஆனால் ஆலோரில் அப்படியில்லை. கிரகத்தின் ஒரு விளிம்பில் வந்து நிற்போம். அங்கிருந்து குதித்தால் அவ்வளவுதான். கிரகத்தை விட்டு விண்வெளியில் போய்விடுவோம். அதனால்தான் விளிம்பைச் சுற்றி மிக உயரமான மதில்கள் கதவில்லாமல் கட்டப்பட்டுள்ளன.

அந்த மதில்களில் நான்கு பக்கங்களிலும் நான்கு கோபுரங்களில். ஒவ்வொரு கோபுரமும் ஒவ்வொரு காவல் தெய்வத்திற்கு. அந்த மதில்களுக்கு நடுவில்தான் ஆலோரின் இயக்கம் முழுவதும். கிரகத்தில் நட்டநடுவில் மிகப்பெரிய அரண்மனை. அதன் கோபுரம் காவல்தெய்வங்களின் கோபுரங்களை விடவும் உயரமானது. அந்தக் கோபுரத்தின் உச்சிமட்டும் ஒளிர்ந்து கொண்டிருந்தது.


ஆலோரில் வாழ்கிறவர்களுக்கு ஆலோரி என்று பெயர். ஆலோரியிலும் நமது பூமியில் இருப்பவை போலவே விலங்குகளும் பறவைகளும் உண்டு. ஆனால் அங்கு எல்லாமே பறக்கும். ஆனால் அனைத்தும் மதிற்சுவற்றுக்குள் மட்டுமே பறக்கும். ஆனைகளைத் தவிர. ஏனென்றால் ஆனைகள் கிரகத்தை விட்டும் அண்டங்களை விட்டும் பறக்கும் திறமை கொண்டவை. முன்பெல்லாம் நிறைய ஆனைகள் கிரகத்தைச் சுற்றிப் பறக்கும் காட்சியைக் காணலாம். ஆனால் இப்பொழுதெல்லாம் எந்த ஆனைகள் பறப்பதையும் பார்க்க முடிவதில்லை.

ஆலோரிகள் உயிர்வாழ இரண்டு அடிப்படை விஷயங்கள் தேவை. முதலில் ஒளி. பிறகு உணவு. ஒளியின் ஆற்றலைக் கொண்டுதான் அவர்கள் அனைத்தையும் செய்யும் திறன் பெறுகிறார்கள். ஆலோரிகள் எந்தச் செயலையும் கையால் காலால் செய்ய மாட்டார்கள். மாறாக நினைவால் செய்வார்கள். ஒரு பொருளை நகர்த்த வேண்டுமென்றால் கையால் தள்ள மாட்டார்கள். மனதால் தள்ளுவார்கள். இப்படி அனைத்திற்கும் உள்ளத்தைப் பயன்படுத்திச் செய்வார்கள். அதற்குத்தான் அவர்களுக்கு ஒளியின் ஆற்றல் தேவைப்படுகிறது. உணவு அவர்கள் உடலை வளர்க்கத்தான்.

சரி. வாருங்கள். ஆலோரிக்குள் நுழைவோம். பார்க்கின்ற ஒவ்வொன்றும் ஒளியின்றி அரைஉயிரோடு இருப்பது போல இருக்கிறதல்லவா. பார்க்கின்ற மக்கள் கூட இயக்கமின்றி மிகமிக மெதுவாக அசைகின்றார்கள். அல்லது அப்படியே இருக்கின்றார்கள். மனிதர்களே அப்படியிருக்கையில் விலங்குகளைச் சொல்ல வேண்டுமா? பாருங்கள். எல்லாம் ஒவ்வொரு மூலையில் முடங்கிக் கிடப்பதை. நினைவாலே எல்லாவற்றையும் செய்யும் மக்கள் ஏன் இப்பிடிக் கட்டைகளைப் போலக் கிடக்கிறார்கள்!

குளங்களும் ஏரிகளும் கூட அசைவில்லாமல் இருந்தன. சுவாசிக்கக் காற்று இருக்கிறதா இல்லையா என்றே புரியாத நிலை. மொத்தத்தில் அப்படியொரு அழகான மாடமாளிகைகள் நிறைந்த சிறந்த கிரகம் அரைப்பிணம் போல் இருக்கிறது. சரி. நாம் அரண்மனைக்குச் செல்லும் பாதைக்குச் செல்வோம். ஏனென்றால் அந்த வழியில்தானே ஒரு இளம்பெண் நடந்து செல்கிறாள். அவள் ஒருத்தி மட்டுமே சுறுசுறுப்பாகவும் தெளிவாகவும் முழுவுயிரோடயும் இருக்கிறாள். ஆகையால்தான் அவள் சாதாரணமாக நடந்தாலும் விரைவாக நடப்பது போல உள்ளது.

அரண்மனையின் பெரிய கதவு பூட்டப்பட்டிருந்தது. காவலுக்கும் யாருமில்லை. போரில் தோற்றுக் கொள்ளை போன அரண்மனையைப் போலத் தென்பட்டது. தன்னுடைய மனதில் கதவு திறக்க வேண்டும் என்று நினைத்தாள். அந்த நினைப்பினால் இரண்டு கதவுகளும் பிரிந்து திறந்தன. திறந்த கதவு கூட சக்தியில்லாமல் எந்த ஓசையையும் எழுப்பவில்லை.

பொலிவிழந்திருந்த அந்த அரண்மனையின் கொலு மண்டபத்தில் மிகமிக மெல்லிய வெளிச்சத்தில் உள்ளே நுழைந்தாள் அந்த இளம்பெண். அரண்மனைக் கொலுவில் பெரிய அரியாசனம் இருட்டுக்குள் ஒளிந்திருந்தது. அந்த இருட்டிலிருந்து "வா தனிமா. உனக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறேன்" என்று பெண் குரல் ஒலித்தது. குரலில் ஒரு கம்பீரம் இருந்தாலும் அடிக்கிணற்றிலிருந்து வந்தது போல் மிகவும் பல்வீனமாக இருந்தது. தனிமா என்று அழைக்கப்பட்டவள் அரியாசனத்தின் முன் மண்டியிட்டு வணங்கினாள்.

"எழுந்திரு தனிமா. உன்னுடைய ஆற்றலை இரண்டு பெரிய கதவுகளைத் திறப்பதில் வீணாக்காதே. சிறிய கதவைத் திறந்தால் போதாதா? உனக்குரிய கடமை காத்துக் கொண்டிருக்கிறது. அதற்காக ஆற்றலைப் பயன்படுத்து. மங்கிக் கிடங்கும் நமது ஆலோர் உன்னுடைய உதவியால் மட்டுமே ஒளிபெற முடியும். இழந்த ஒளியை மீண்டும் பெறும் நாள் விரைவில் வரும் என்ற நம்பிக்கையை மட்டும் வைத்துக் கொண்டு ஆலோர் வாழ்ந்து கொண்டிருக்கிறது. நான் சொல்வது உனக்குப் புரியும் என்று நினைக்கிறேன்."

தலையை அசைத்தாள் தனிமா. "புரிகிறது அரசி. இதற்காகத்தானே நமது உலகமே கால் வயிற்றுக்கு உண்டு....ஆற்றலையும் உணவையும் தியாகம் செய்து என்னை வளர்த்திருக்கின்றார்கள். அந்த உணவின் நன்றி என்னுடலின் ஒவ்வொரு அணுவிலும் கலந்து படிந்திருக்கிறது. கடமையைச் செய்வேன். இன்றே கிளம்பவும் ஆயத்தமாக உள்ளேன்."

தனிமாவிடம் விரிவாகப் பேச அரசி விரும்பினாலும் தளர்ச்சி அவரை வாட்டியது. அவரும் கால் வயிறுதானே உண்கிறார். தளர்ச்சியையும் மீறி தனிமாவிடம் சொன்னார். "தனிமா, நீ செல்ல வேண்டியது பூமிக்கு. அங்கு சென்றதும் அங்கேயே உனக்கு வேண்டிய உணவையும் ஆற்றலையும் மிக எளிதாகப் பெறலாம். நாளைக்கே புறப்பட ஆயத்தங்களைச் செய். தேவையானவற்றை எடுத்துக் கொள். பிடிமாவும் ஆயத்தமாக இருக்கிறாள் அல்லவா?"

"ஆம் அரசி. நானும் பிடிமாவும் எந்த நொடியிலும் எங்கள் உலகப்பற்றைக் காட்டக் காத்துக் கொண்டிருக்கிறோம். நமது உலகம் இழந்ததை மீண்டும் கொண்டு வந்து சேர்ப்போம்"

தனிமாவின் குரலில் தெரிந்த உறுதி அரசியின் உள்ளத்தில் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் எழுப்பியது. பழைய நாட்கள் மீண்டும் வரும் என்ற நம்பிக்கைப் பூ அவரது முகத்தில் புன்னகையாகப் பூத்தது.

என்ன மக்களே....அறிமுகமெல்லாம் முடிந்து விட்டது. அடுத்த அத்தியாயத்திலிருந்து சுறுசுறு நிகழ்ச்சிகளும் திருதிரு திருப்பங்களுந்தான்.

தொடரும்

அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

Monday, January 21, 2008

தங்க மரம் - 2

சென்ற பாகத்தை இங்கே படிக்கவும்

ஆளரவமில்லாக் காட்டில் வட்ட வடிவத்தில் ஒரு ஏரி. தளும்பித் தளும்பி நீர் தத்தளிக்கும் மிகப்பெரிய ஏரி. இருந்தாலும் எந்த ஒரு விலங்கும் அந்த ஏரியில் நீர் பருகவோ....அருகில் செல்லவோ இல்லை. ஏரியின் நட்டநடுவில் கூர்மையான உச்சியுடன் கடும்பாறைகளால் ஆன ஒரு கூம்புமலை.

அந்த ஏரிக்கு மேலே மலையைச் சுற்றி நிறைய குண்டரப் பறவைகள் பறந்து கொண்டிருந்தன. பறக்கும் பொழுதே வாயைத் திறந்து குரல் வெளியே கேட்காமல் தொடர்ந்து கத்தின. மற்றபடி வேறு எந்தப் பறவையும் அந்தப் பகுதியில் தென்படவில்லை.

குண்டரப் பறவையைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். பார்க்க எப்படியிருக்குமென்று சொல்கிறேன். கால்கள் இல்லாத பறவை அது. இறக்கைகளும் கிடையாது. பளபளக்கும் பொன்மஞ்சள் நிறம். மற்றபடி பார்க்க வாத்து போலவே இருக்கும். ஆனால் உருவத்தில் மூன்று நான்கு மடங்கு பெரியதாக இருக்கும். இது உட்கார்ந்த இடத்திலிருந்து இறக்கையில்லாமலே அப்படியே மேலே எழும்பிப் பறக்கும். இந்தப் பறவைகளுக்கு உணவு நெருப்புக் குழம்பு. அந்தக் குழம்பின் ஆற்றலால் இவை பறக்கின்றன. அப்படிப் பறக்கையில் அவைகளின் பின்னால் சிறிது புகையெழும்பும். இதனுடைய மற்றைய சிறப்புகளைப் பிறகு பார்ப்போம். முதலில் கூம்புமலைக்குள் நுழைவோம். அங்கு என்ன நடக்கிறதென்று தெரிய வேண்டாமா!


இந்த மலை யாருக்குச் சொந்தமானது தெரியுமா? ஊழிவாயனுக்குச் சொந்தமானது. ஊழிவாயன் கதையைப் பிறகு பார்க்கலாம். முதலில் அவன் கோட்டைக்குள் நுழைவோம். கூம்புமலைக்குள் நுழைய இரகசிய வழி மட்டுமே உண்டு. ஆனால் பார்க்கும் யாருக்கும் தெரியாமல் மறைந்திருக்கிறது.

அந்த மலைக்குள் நிறைய பூகன்களும் பூகிகளும் ஊழிவாயனிடம் வேலைக்கு இருக்கிறார்கள். இவைகள் பூதங்கள். ஆனால் குள்ள பூதங்கள். ஆண் பூதங்களுகுப் பூகன்கள் என்றும் பெண் பூதங்களுக்குப் பூகிகள் என்றும் பெயர். குட்டையாக உருண்டையாக தலையில் இரண்டு கொம்புடன் பார்த்தாலே சிரிக்க வைக்கும் தோற்றத்தில் இவைகள் இருக்கும். ஆனால் அபார சக்தி பெற்றவை. ஊழிவாயனால்தான் அவைகளைக் கட்டுப்படுத்தி வேலை செய்ய வைக்க முடிந்தது. நிலத்தைக் குடைந்து சென்று பூமியின் நடுவில் இருக்கும் நெருப்புக் குழம்புகளை குண்டரப் பட்சிகளுக்கு உணவாகக் கொண்டு வருவதும் பூகன்களின் வேலைகளில் ஒன்று.

சரி. அந்த மலைக்குகைக்குள்ளே போவோம். அதுவும் ஊழிவாயனின் அறைக்குள்ளே. வட்டமாக இருந்த அறையின் சுவற்றில் மாயத்தீவட்டிகள் எரிந்தன. நெருப்பு எரிகையில் சுடுமல்லவா. அப்படிச் சுடாமல் இருக்கத்தான் இந்த மாயத்தீவட்டிகள். வேறொரு அறையில் பூகிகள் நெருப்பு உண்டாக்குவார்கள். ஆனால் தந்திரமாக அந்த நெருப்பின் ஒளியை மட்டும் மந்திரக்கயறுகளின் வழியாக மாயத்தீவட்டிக்குக் கொண்டு வந்திருக்கிறான் ஊழிவாயன். அந்த அறையிலேயே குமிழ் பொறிகளும் வைத்திருக்கிறான். அவைகளைத் திருகி வெளிச்சத்தின் அளவைக் கூட்டவும் குறைக்கவும் கூட அவனால் முடியும்.

அப்படிப் பட்ட ஊழிவாயன் எப்படியிருப்பான் தெரியுமா? ஏழு அடி உயரம். பரந்து விரிந்த உடற்கட்டு. இடுப்பில் ஒரு ஆடை. அது குண்டரப்பறவைகளின் தோலால் ஆனது. பொன்னிறத்தில் பளபளத்தது. தலைமுடி வளர்ந்து இடுப்புவரை தொங்கியது. அதே நேரத்தில் உச்சந்தலையில் கூம்புக்குடுமி ஒன்று. நெஞ்சில் உள்ளங்கையளவு பெரிய வைரம் பதித்திருந்தான். அமைதி காணாத முகமும் உள்ளமும். தேவையில்லாத பரபரப்பும் வெறுப்பும் முகத்தில்.

அறைக்குள் நுழைந்தவன் முதலில் மாயத்தீவட்டிகளின் ஒளியைக் குறைத்து இருட்டாக்கினான். ஆனாலும் அவன் அந்த அறைக்குள் அவனால் மிக எளிதாக நடமாட முடிந்தது. கையில் வைத்திருந்த தடியால் தரையில் ஒரு இடத்தில் மூன்று முறை தட்டினான். உடனே தரை திறந்து உள்ளிருந்து ஏழு ஆளுயர கருப்பு உருளைகள் மேலே வந்தன. முதல் உருளையின் முன் சென்று கைத்தடியை நீட்டினான். உருளையின் மேல் பகுதியில் சிறிய செவ்வகம் திறந்தது. அதன் வழியாக ஊதாநிறத்தில் வெளிச்சம் வந்தது. செவ்வகச் சன்னலில் ஒரு அழகான பெண்ணின் முகம் தெரிந்தது. ஊதா நிறத்திலுள்ள அவளுடைய மேனியிலிருந்துதான் அந்த ஒளி வந்தது. அவள் வாய் திறந்து பேசினாள்.

"ஊழிவாயா...ஆழி போல் ஏரிசூழ் கூம்புமலைத் தலைவா...வைர நெஞ்சம் என்று ஊரார் சொல்வர். அந்த வைரத்தையே நெஞ்சில் பதித்தவா...என்னைப் பாரு...என்னைச் சேரு. நீயின்றி வாழ்க்கை சேறு. நல்ல மறுமொழி ஒன்று கூறு." கேட்ட குரலில் தாபமும் மோகமும் பொங்கிப் பெருகின.

கேட்கும் பொழுதே ஊழிவாயன் உணர்ச்சிக் கொந்தளிப்பின் உச்சத்திற்குச் சென்றான். படக்கென்று தடியைக் காட்டி உருளையை மூடினான். அடுத்த உருளைக்குச் சென்று அதே போலத் திறந்தான். இந்த முறை கருநீலநிற ஒளி வந்தது. மீண்டும் பெண்ணின் முகம். ஆனால் அதே முகம். ஆனால் மேனி கருநீலநிறத்தில் இருந்தது. வாய் திறந்து பேசினாள்.

"தலைவா....வானம் காத்திருக்கிறது. அந்த வானத்தில் நிலவு காத்திருக்கிறது. நிலவில் ஒளியும், ஒளிக்குள் குளுமையும், குளுமைக்குள் ஆசையும் காத்திருக்கின்றன. காத்திருப்பது சுகம்தான். அந்தச் சுகத்திற்குச் சுகத்தைக் கொடுக்க நீ வா!" குரலில் மோகத்தின் அளவு கொஞ்சம் குறைந்திருந்தாலும் காதல் எக்கச்சக்கமாக இருந்தது.

மேலே பேச்சைக் கேட்காமல் மூடினான். அடுத்த உருளையைத் திறந்தான். அதே முகம். ஆனால் நீலநிறம். அந்த அறை முழுவதும் நீலம் பரவியது. "தலைவன் ஒருவன் இருந்தால் தலைவி ஒருத்தி வேண்டும். இந்தக் கூம்புமலை தலைவியைக் காண்பது எப்பொழுது? உனது அரியணையிலே நானும் அமர்ந்து தலைவியாகி உன்னுடைய கூம்புமலையை ஆள்வது எப்பொழுது?" கேட்கும் பொழுதே நெஞ்சில் நஞ்சு சேர்வது போல இருந்தது ஊழிவாயனுக்கு. படக்கென்று மூடிவிட்டு அடுத்த உருளையைத் திறந்தான்.

ஆம். அதே பெண். ஆனால் பசுமை நிறம். அந்த அறை அழகிய வசந்தகாலப் புல்தரைபோலத் தோன்றியது. "ஊழிவாயா, நீ வாழ்வதற்கு நல்லதொரு வழியைச் சொல்கிறேன். இந்த வையகம் புகழும்படி நீ மெச்சப்படும் நிலையை அடைவதற்கான வழிமுறை நான் அறிவேன். நீ அதைக் கேள்." மோகம் காணமல் போய்....காதல் கறைந்து போய்....ஆசை அற்றுப்போய்...ஆனால் நல்லது சொல்லும் திறம் மட்டுமே பேச்சில் இருந்தது. ஆனால் அதைத் தொடர்ந்து கேட்காமல் உருளையை மூடிவிட்டு அடுத்த உருளைக்குச் சென்றான்.

மஞ்சள் பளபளக்க அதே பெண்ணின் முகம் மீண்டும் தோன்றியது. அந்த அறையே பொன்னறையாக மிளிர்ந்தது. அவள் பேசினாள். நல்ல பொன்மொழிகளைச் சொன்னாள். அவைகளைக் கேட்டும் மனநிலை அவனுக்கு இருக்கவில்லை. அடுத்த உருளைக்குச் சென்றான். இந்த முறை ஒளிர்காவி நிறம். பொன்மொழிகள் மறைந்து குரலில் சீற்றம் தெரிந்தது. "ஊழிவாயா...என்னை அடைத்து வைத்திருப்பது உனக்கு நல்லதைத் தராது. அழிவையே தரும். ஆகையால் உன்னைக் காப்பாற்றிக் கொள்ள என்னை விடுவிப்பாய்." அந்தப் பெண்ணின் பேச்சை மதிக்காமல் கதவை மூடிவிட்டு கடைசி உருளைக்குச் சென்றான்.

செக்கச் செவேல் என்ற ஒளி அறையை நிறைத்தது. குருதி பெருகிய போர்க்களத்தில் இருப்பது போல உணர்ந்தான் ஊழிவாயன். "மூடனே. என்னைப் பிடித்து வைத்திருப்பதனால் நீ உன்னுடைய இறுதி முடிவுக்கு அழைப்பிதழ் விடுத்திருக்கிறாய். வீணாய் மண்ணோடு மண்ணாகும் முன்னே என்னை விடுதலை செய்து பிழைத்துப் போவாய். இல்லையேல் உனது அறிவிழந்து ஆற்றலிழந்து....உனக்காக வேலை செய்யும் பூகன்களையும் பூகிகளையும் இழந்து குண்டரப் பறவைகளையும் கூம்புமலையையும் சுற்றியுள்ள ஏரியையும் இழந்து பிண்டமாகத் திரிவாய்."

தொடரும்....

அன்புடன்,
ஜிரா என்ற கோ.இராகவன்

Monday, January 14, 2008

தங்க மரம் - 1

நண்பர்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள். பொங்கல் அன்று இந்தப் புதிய தொடரை இடுகிறேன். இது காதல், ஆன்மீகம் என்றில்லாமல் விட்டலாச்சார்யா படம் போலச் செல்லும். உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். சரி கதைக்குப் போகலாம்.

---------------------------------------------------------

"கதிரவா, இன்றோடு உனக்கு வயது பதினெட்டு. இந்த நாளுக்காகத்தான் நான் காத்துக் கொண்டிருந்தேனப்பா. உன்னுடைய தந்தை உனக்கென்று ஒதுக்கி வைத்திருந்த பொறுப்பை உன்னிடம் இந்த நாளில் ஒப்படைக்கச் சொன்னார்."

கதிரவனிடம் சொன்னது அவனது அன்னை அமுதம். பொறுப்பு என்று முதன்முதலாகக் கேட்டதும் திகைத்தான் மகன். "என்னம்மா பொறுப்பு? தந்தை எனக்கிட்ட கட்டளைதான் என்ன? நான் என்ன செய்ய வேண்டும்?"

அவனுடைய தலையைக் கோதியவர், கையைப் பிடித்து மச்சு வீட்டிற்குள் அழைத்துச் சென்றால். பட்டிக்காடுகளில் பெரிய வீடுகளில் மச்சு வீடு என்று உள்ளறை இருக்கும். உள்ளே முக்கியமான பொருட்கள் பல இருக்கும். கதிரவன் பலமுறை சென்ற அதே அறைதான். சுவற்றின் ஒரு பக்கம் மஞ்சளும் குங்குமமும் இட்ட வேல்கள். ஒரு பக்கம் பல பெட்டிகள். அவைகளுக்குள் மதிப்புள்ள பல பொருட்கள். ஒருபுறம் பெரிய குலுக்கை. அந்தக் குலுக்கை நிறைய கம்பு சேமித்து வைக்கப்பட்டிருந்தது. அதன் மணம் மச்சுவீடு முழுவதும் நிறைந்திருந்தது. அந்த நறுமணத்தை அனுபவித்தவாரே இருவரும் உள்ளே சென்றனர்.

அங்கிருந்த பெரிய பெட்டி ஒன்றிலிருந்து சிறிய பெட்டி ஒன்றை எடுத்தார் அமுதம். அந்தப் பெட்டிக்குப் பூட்டே இல்லாமல் இருந்தது. பார்த்தால் எல்லாப்புறமும் மூடியிருந்தது போல இருந்தது. அதன் ஒரு பக்கத்தில் ரம்பப்பல் போல வரிசையாகச் செதுக்கியிருந்தது. அதை மகனிடம் கொடுத்தார். "இந்தாப்பா. உன்னிடம் அவர் கொடுக்கச் சொன்ன பெட்டி."


பெட்டியை வாங்கி அப்படியும் இப்படியும் திருப்பிப் பார்த்தான். எப்படித் திறப்பதென்றே தெரியவில்லை. "என்னம்மா இது? இதை எப்படித் திறப்பதென்றே தெரியவில்லையே. இதை வைத்துக் கொண்டு நான் என்ன செய்ய வேண்டும்?"

மகனின் கேள்வியைக் கேட்டு சிறிதாகச் சிரித்தார். "கதிரவா, அது எனக்குத் தெரியாதே. உன்னிடம் ஒப்படைக்கச் சொல்லிக் கொடுத்தார். ஆனால் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லவில்லையே. ஆனால் இதைப் பொறுப்பு என்றுதான் சொன்னார். நீ அறிவுள்ளவனாக இருந்தால் இதைச் செய்து முடிப்பாய் என்று அவர் நம்புவதாகச் சொன்னார்."

கேட்கக் கேட்க கதிரவனின் படபடப்புக் கூடியது. "அம்மா....வணிகம் செய்யச் சென்ற தந்தை ஆண்டு பலவாகியும் நாடு திரும்பவில்லை. அப்படியிருக்க இது எப்பொழுதம்மா நடந்தது?"

கவலைப்பனி அமுதத்தின் முகத்தை மூடியது. "ம்ம்ம்ம்....என்னை மன்னித்து விடப்பா. வணிகம் சென்ற தந்தை திரும்பவில்லை என்று உன்னிடம் பொய் சொன்னேன். உன்னுடைய பாட்டனார் செங்கையார் ஒரு மருத்துவர். உயிர்தொடுச் செங்கையார் என்று ஊர் புகழ்ந்தது. அவர் தொட்ட இலை மூலிகை. மிதித்த வேர் சஞ்சீவி என்று சொல்வார்கள். அத்தோடு விவசாயமும் செய்து வந்த குடும்பம். அப்படியிருக்க உன்னுடைய தந்தை செங்கோமான் மட்டும் ஆனைகளின் மேல் ஈடுபாடு கொண்டிருந்தார். பெருஞ் செல்வந்தர்கள் வீடுகளிலும் அரண்மனைக் கொட்டடியிலும் இருக்கும் ஆனைகளோடு பழகினார்.

ஆனாலும் அவருக்கு மருத்துவப் பயிற்சியை உனது பாட்டனார் முறையாகக் குடுத்தார். பொருத்தமான சமயத்தில் என்னையும் திருமணம் செய்து வைத்தார். முருகன் அருளால் நீயும் பிறந்தாய். மருத்துவத்தில் உன் தந்தை சிறப்பாக தேர்ந்திருந்தாலும் ஆனைப் பழக்கம் அவரை விடவில்லை. அவரும் அவருடைய உற்ற தோழர் இளங்கோவும் ஆனைப் பயிற்சியிலும் போர்ப் பயிற்சியிலும் கூட ஈடுபட்டிருந்தார்கள்."

இடைமறித்தான் மகன். "இளங்கோ என்றால் சித்திரையின் தந்தைதானே அம்மா?" சித்திரை என்பவன் கதிரவனின் தோழன். வயதொத்தவன்.

"ஆம். சித்திரையின் தந்தையேதான். இந்தப் பெட்டியை என்னிடம் கொடுக்கும் பொழுது உனக்கு வயது மூன்று. அப்பொழுது உன் தந்தை தோழருடன் ஆனை வணிகம் நடந்த களிற்றூருக்குச் சென்றார். அதாவது அப்படித்தான் ஊரிலும் வீட்டிலும் சொன்னார். என்னிடம் மட்டும் இந்தப் பெட்டியைக் கொடுத்து, ஏதோ கடமை இருப்பதாகவும் அதை முடித்து விட்டுத் திரும்புவதாகவும், எவ்வளவு நாளானாலும் மாதங்களானாலும் ஆண்டுகளானாலும் அவர் வருகைக்காக் காத்திருக்குமாறும் சொல்லிச் சென்றார். சென்றவர் சென்றவர்தான். இன்னும் வரவில்லை. இதைத்தவிர வேறு எதுவும் எனக்குத் தெரியாதப்பா. அவருக்காகவும் அவர் கொடுத்த பொறுப்பு உன்னால் முடிக்கப் படவும்தான் காத்திருக்கிறேன்." சொல்லும் பொழுதே விசும்பினார் அமுதம்.

தாயின் பழைய நினைவுகளைக் கண்ணீரில் காணச் சகிக்காத கதிரவன் அவரது கண்களைத் துடைத்தான். "வருந்தாதீர்கள் அம்மா. தந்தை கொடுத்த கடமையையும் நிறைவேற்றி...அப்பா எங்கிருந்தாலும் உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பேனம்மா. நீங்கள் அழாதீர்கள். உங்கள் வருத்தம் என்னையும் துன்புறுத்துகிறதம்மா."

மகனின் உறுதிமொழி அவரின் உள்ளத்தை நெகிழ வைத்திருக்க வேண்டும். "கதிரவா, உன் மீது நம்பிக்கை இருக்கிறதப்பா. தாத்தா இருக்கும் வரை அவரிடம் மருத்துவமும் ஓரளவு கற்றிருக்கிறாய். பாட்டியும் நானும் கற்றுக் கொடுத்த உழவும் உனக்குத் தெரியும். ஊரில் அனைவரும் உன்னைப் புகழ்கின்றனர். நீ தந்தை கொடுத்த பொறுப்பைச் சிறப்பாக முடிப்பாய் என்று நம்புகிறேன். சரி...முதலில் உணவு. உனக்குப் பிடித்த விரால் மீன் குழம்பும் செந்நெற்சோறும் கெட்டித் தயிரும் காத்திருக்கிறது."

பிறந்த நாளன்று நல்ல உணவு உண்டு திண்ணையில் வந்தமர்ந்தான். உண்ட சுவையுணவும் அணிந்திருந்த புது வேண்டியும் தோளில் போட்டிருந்த புதுத்துண்டும் அவனுக்கு மகிழ்ச்சியைக் குடுக்கவில்லை. தந்தை கொடுத்த பொறுப்பும் தாயார் கொடுத்த பெட்டியும் அவன் மனதைக் குழப்பிக் கொண்டேயிருந்தன. துண்டையெடுத்து தலையில் கட்டிக்கொண்டு தோழன் சித்திரையைப் பார்க்கலாம் என்று குதித்துக் கிளம்பினான். சித்திரையிடம் அவனுக்கு இன்னொரு வியப்பான செய்தியை காத்துக் கொண்டிருந்தது.

தொடரும்....

Saturday, January 12, 2008

மொக்கையாகப் பரணி

மொக்கை நன்றே மொக்கை நன்றே என்று உஷா பதிவு போட்டு...நம்மளையும் இழுத்து விட்டுட்டாங்க. 2008ல போடுற மொதப் பதிவு அதுவும் மொக்கையாப் போகனுமா.. பொக்கையாப் போகனுமா யோசிச்சி யோசிச்சி...மூளை மொக்கையானது. மொக்கையைச் சக்கையாகக் காண்பர் சக்கையை மொக்ககயாகக் காணணதவர்-னு தெருவள்ளுவர் சொன்னது நெனவுக்கு வந்துச்சு. அப்படியே முருகன் கிட்ட கேட்டேன். ஐயா....எதாச்சும் சொல்லிக் குடுன்னு. அப்ப ஒரு தொடுப்பு குடுத்தான். அதுல இது இருக்கு!!!!!!




மூனு பேரைக் கூப்புடுடனுமாமே...

கப்பிப் பயல்
தேவ தேவ தேவாதி தேவ்
பொன்ஸ்

வாங்க வாங்க வாங்க... மொக்கைப் பதிவோட...

மொக்கையுடன்,
ஜிரா என்ற கோ.இராகவன்