Tuesday, October 30, 2007

காதல் குளிர் - 6

சென்ற பகுதிக்கு இங்கே செல்லவும்.

ஓ ஆமோர்
பூ வண்ணம்
சஜோனி கோ
போல மின்னும்

சித்ரா பெங்காலியில் பாடினாள். சப்யா தமிழில் பாடினாள். ரெண்டும் ஒரே மெட்டுதான். தாஜ்மகால் இருவரையும் காதல் காலத்திற்கே அழைத்துச் சென்றது. அதான் டூயட் தொடங்கி விட்டார்கள்.

"ஸ்டாப் ஸ்டாப்... என்ன நடக்குது இங்க? ஃபெராவை எங்க கிட்ட குடுத்துட்டு....ரெண்டு பேரும் டூயட் பாடுறீங்களா? நீ என்ன பி.சுசீலாவா...சப்யா என்ன ஜெயச்சந்திரனா?" வேறு யார்? ரம்யாதான்.

"ஏண்டி....நாங்க டூயட் பாடுனா ஒனக்கென்னடி? ஆக்ரா கோட்டைலயும் நீங்க ரெண்டு பேரும் ஒட்டிக்கிட்டே வந்தீங்க. தாஜ்மகால்லயாவது எங்களைப் போலக் காதலர்களைத் தனியா விடுவீங்கன்னு பாத்தா....இங்கயும் பின்னாடியே வந்து நின்னா எப்படி?" சித்ரா விடுவாளா.

"என்னது காதலர்களா? இது யாரு? ஒங்க பையன். இவனை எங்க கைல குடுத்துட்டு... காதலர் வேஷமா? அதுல என்னடான்னா நீ பெங்காலில பாடுற. சப்யா தமிழ்ல பாடுறான்....என்ன நடக்குது?"

மனைவியானாலும் காதலிதானே. உதவிக்கு வந்தான் சப்யா. "ஹே ரம்யா...நான் கோலங்கள் அரசி எல்லாம் பாக்குறேன். எனக்குத் தமிழ் படிக்கவும் தெரியும். அ ஆ எல்லாம் படிப்பேன். மொதல் மொதலா...நான் சித்ரா கிட்ட தமிழ்லதான் காதலைச் சொன்னேன். தெரியுமா? அதுக்குச் சித்ரா அமீ துமாக்கே பாலோ பாஷின்னு பெங்காலில காதலைச் சொன்னா......"

"பாத்தியா பிரகாஷா... சப்யா மொதமொதல்ல காதலைச் சொல்றப்போ தமிழ்ல சொல்லீருக்கான். அதான் சித்ரா ஒத்துகிட்டா."

பிரகாஷாவுக்குச் சின்ன குழப்பம். ரம்யா என்ன தன்னையும் காதலைத் தமிழில் சொல்லச் சொல்கிறாளா என்று. அதையும் சொல்லி விட்டான். "ஓ ஆமாவா. ரம்யா நான் உன்னே காதலிக்கிறே"

நெஞ்சில் கை வைத்துக் கொண்டு...இன்னொரு கையைப் பின்னால் கட்டிக் கொண்டு...குனிந்து ப்ரகாஷா சொன்னது உண்மையிலேயே அழகாக இருந்தது. ரம்யாவிற்கும் அது பிடித்திருந்தது. ஒரு நொடி யோசித்தாள். "காதலிக்கிறே" என்பதில் ன் விட்டு விட்டதைக் கிண்டலடித்து பேச்சைத் திசை திருப்பலாமா எனவும் யோசித்தாள். அடுத்த நொடியே வேறு முடிவெடுத்தாள். சித்ராவும் சப்யாவும் ஆவலாக அவளையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். அதுவுமில்லாமல் ப்ரகாஷாவையும் பார்க்க அவளுக்குப் பாவமாக இருந்தது.

"சரி. ப்ரகாஷா... உக்காரு." சப்யாவையும் சித்ராவையும் உட்காரச் சொல்லி விட்டு தானும் உட்கார்ந்தாள். எல்லாரும் இருக்கையிலேயே பிரச்சனையைத் தீர்த்து விடவும் முடிவு செய்தாள். சப்யாவும் சித்ராவும் ப்ரகாஷாவும் அவள் வாழ்க்கையில் பாகம்தானே.

"ப்ரகாஷா... காதலிக்கிறேன்னு சொன்ன. நானும் காதலிக்கனும்னு எதிர்பார்க்குற. காதலிக்கிறதுன்னா நான் என்ன செய்யனும்?"

மலையாளக் கலைப்படம் பார்ப்பது போல இருந்தது சப்யாவிற்கும் சித்ராவிற்கும். ஆனாலும் இந்தக் கூத்தையும் பார்த்துவிடுவோம் என்று இருந்தார்கள். ப்ரகாஷா பேசினான். அவனுக்காக. தன் பசிக்குத் தன் கைதான் ஊட்டும் என்பதைத் தெரிந்துதான் வைத்திருந்தான்.

"ரம்யா... காதல்னா...என் மேலே ப்ரீத்தியா இருக்கனும்."

"ம்ம்ம்...ப்ரீத்தி. அதாவது அன்பு. இப்ப ஒன் மேல எனக்கு அன்பில்லைன்னு நெனைக்கிறயாடா?" அவன் கண்களைப் பார்த்துக் கேட்டாள்.

அதே கண்களுக்கே பதில் சொன்னான். "இருக்கு. அன்பு இருக்கு. ப்ரீத்தி இருக்கு. ஆனா அது மட்டும் போதாது. அம்ருதம் வேணும். அம்ருத பாத்ரமும் வேணும். ப்ரகாஷா வேற...ரம்யா வேற இல்ல. ரெண்டும் ஒன்னுதான்னு வேணும். மதுவேனோ திருமணமோ கல்யாணமோ....பேரு என்னவும் இருக்கட்டும். ஆனா வேணும்."

இதை அவன் சொல்லட்டும் என்றுதானே காத்திருந்தாள் ரம்யா. "ம்ம்ம்...கல்யாணம். உனக்கும் எனக்கும். ம்ம்ம்..."

சித்ராவால் பொறுக்க முடியவில்லை. "என்னடி யோசிக்கிற. பாரு அவனும் மனசுல இருந்ததச் சொல்லீட்டான். அவனுக்குத் தமிழ் கத்துக் குடுத்திரலாம்டி....இது ஒரு பிரச்சனையா?"

"அவனுக்குத் தமிழ் சரியா வராதது ஒரு பிரச்சனையே இல்லை சித்ரா. அவனுக்குத் தமிழே வரலைன்னாலும் எங்களுக்கு இங்கிலீஷ் தெரியும். அதுல பேசிக்கிறோம். ஆனா எல்லாருமே ஒன்னு யோசிக்கலை. ப்ரகாஷா யாரு? எப்படிப்பட்ட குடும்பம். எவ்ளோ வசதி. அதையெல்லாம் யோசிச்சீங்களா? நாங்க ஏழைங்க கெடையாதுதான். ஆனா நடுத்தரவர்க்கம். என்னையும் தம்பியையும் வளக்கவும் படிக்க வைக்கவும் எங்கப்பாம்மா எவ்ளோ கஷ்டப்பட்டாங்கன்னு எனக்குத்தான் தெரியும். இப்ப நானும் வேலை பாக்குறேன். தம்பியும் வேலைக்குப் போகத் தொடங்கீட்டான். அதுனால எங்க நெலமை முன்னேறியிருக்கு. ஆனாலும் எனக்குள்ள எங்கப்பாம்மாவோட பொண்ணுதான் இருக்கா. அப்படியிருக்கிறப்போ...வசதியா வளர்ந்த அவனை எப்படிடீ?"

சித்ராவிற்கு பொந்தில் இருக்கும் எலியில் வால் தெரிந்தது. அமைதியானாள்.

"சரி. ப்ரகாஷா....நீ வேலைக்கு வரும் போது..ஒங்கப்பா என்ன சொல்லி அனுப்பினாரு? மகனே...நாலஞ்சு வருசம் வேலையப் பாரு...அப்புறமா நாங்க ஒனக்குப் பொண்ணு பாக்குறோம். அந்தப் பொண்ணக் கட்டிக்கிட்டு சொத்தப் பாருன்னுதான சொன்னாரு. அதுனால்தான நீ வேலைக்கு வந்தப்பவே ஒரு வீடு எடுத்து.. கார் வாங்கிக் குடுத்து... அட... அந்தக் கார்லதானப்பா நாம ஊர் சுத்துனோம். அப்படியிருக்குறப்போ ஒங்கப்பா கல்யாணத்துக்கு ஒத்துக்குவாரா? எங்கப்பாம்மா என் பக்கம். ஒங்கப்பா? அவர் ஒத்துக்குவாரா?"

ப்ரகாஷா ஒன்றுமே பேசவில்லை. என்ன பேசுவதென்று தெரிந்தால்தானே....காதலை அளவிற்கு மீறி வளர்க்கத் தெரிந்த அவனுக்கு...அந்தக் காதலினால் வரப்போகும் பிரச்சனைகளே இப்பொழுதுதான் புரியத் தொடங்கின.

ரம்யா தொடர்ந்தாள். "ஒத்துக்கிட்டார்னு வெச்சிக்கோ...நோ ப்ராபளம்....நான் தயார். எங்க வீட்டுல தயார். எங்க வெச்சி கழுத்தை நீட்டனும்னு மட்டும் நீ சொன்னாப் போதும். ஆனா... ஒத்துக்கலைன்னா...என்ன செய்வ?"

"ரம்யா....சரியாதான் கேக்குற. அப்பா ஒப்பு கொண்டரே கல்யாணம். ஒப்பு கொண்டில்லானாலும் கல்யாணம். நான் கண்டிப்பா ஒன்னையக் கல்யாணம் பண்ணுவேன் ரம்யா. என்ன நம்பு." கெஞ்சினான். முதலில் ஆங்கிலத்தில் ஆசையோடு காதலைச் சொன்னான். பின்னர் கம்பீரத்தோடு தமிழில் சொன்னான். இப்பொழுது கெஞ்சலாகச் சொல்கிறான். எப்படியாவது அவனுக்கு ரம்யா வேண்டுமே.

"சரிப்பா...ஒங்கப்பா சத்தம் போடுவாரு. நீயும் எதுத்துப் பேசீட்டு வந்துருவ. ஒங்கம்மா? ஒங்கம்மா அழுதா? அப்ப என்னப்பா செய்யப் போற?"

தொடரும்...

Monday, October 22, 2007

காதல் குளிர் - 5

சென்ற பாகத்திற்கு இங்கே சுட்டவும்.

ரம்யா அமைதியாக ப்ரகாஷாவையே பார்த்துக் கொண்டிருந்தாள். ஒன்றும் பேசவில்லை. அவன் சொன்னதை முழுமையாக மனசுக்குள் நினைத்து ரசித்துக் கொண்டிருந்தாள். ஆனால் அந்த அமைதி ப்ரகாஷாவின் அமைதியைக் குலைத்தது. ஏற்கனவே ஒருமுறை சொல்லி விட்ட துணிவில் மறுபடியும் சொன்னான்.

"ரம்யா, I love you"

"loveனா என்னடா" அந்த டாவில் கொஞ்சல் இருந்தது.

"தெரியாது. நீ பேக்கு. I want you in my life for all. எனக்கு அதான் love."

"ம்ம்ம்ம்ம்." யோசித்தாள் ரம்யா. என்ன சொல்வதென்று தெரியாமல். ஒத்துக்கொள்ளவா வேண்டாமா என்று அவளுக்குத் தெரியவில்லை. அவன் அப்படிச் சொல்வது அவளுக்குப் பிடித்துத்தான் இருந்தது. ஆனாலும் "ஏதோ ஒன்னு" தடுத்தது. அத்தோடு ப்ரகாஷாவின் குடும்பச் செல்வாக்கும் அவளுக்கு ஒரு தடுப்பாகத் தெரிந்தது. யோசித்து யோசித்துச் சொன்னாள்.

"டேய். ஒன்ன எனக்கு ரொம்பப் பிடிக்கும். உன் கூட இருக்குறது ரொம்ப ரொம்பப் பிடிக்கும். நீயும் என்னோட வாழ்க்கைல ஒரு பகுதிதான். சப்யா யாரோ! சித்ரா யாரோ! இருந்தாலும் அவங்கள்ளாம் என்னோட வாழ்க்கைல ஒரு பகுதியாயிட்டாங்க. அவங்க இல்லாம என்னால என்னோட வாழ்க்கைய நினைக்க முடியாது. அது மாதிரி நீயும் என்னோட வாழ்க்கைல ஒரு மறுக்க முடியாத பகுதி. ஆனா வாழ்க்கையே நீதான்னு சொல்றதுக்கு.......தெரியலைடா....நீ வேணும். எனக்கு வேணும். ஆனா எந்த அளவுக்கு வேணும்னு எனக்குப் புரியலை. ஆனா ஒன்னு....எனக்கு ஒங்கிட்ட இருந்து என்னென்ன வேணுமோ....அதையெல்லாம் தேவைப்படுறப்போ தோணுறப்போ எடுத்துக்குவேன். அது நட்பானாலும் சரி... காதலானாலும் சரி...வேற எதுன்னாலும் சரி....நானே கேட்டு எடுத்துக்குவேன். அதோட எனக்கு வேற யார் மேலையும் காதல் கிடையாது. You are obviously special for me."

அவன் கைகளைப் பிடித்துக் கொண்டாள். "வாடா.....அந்தப் பக்கம் போகலாம்."

என்னதான் செய்வான் ப்ரகாஷா. ஒருவேளை ரம்யா காதலிக்கவில்லை என்று சொல்லியிருந்தால் கூட அவன் நிம்மதியாகியிருப்பான். சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்று சொல்லி கனக்புராவில் கணக்கு பார்க்கப் போயிருப்பான். ஆனால் ரம்யா கதவை மூடவில்லையே. அவன் கண்டிப்பாக வேண்டும் என்று சொல்லிவிட்டாள். அதென்ன "Obviously Special"? உண்மையைச் சொன்னால் ரம்யா சொல்ல வந்தது "I love you"தான். அதை நேரடியாகச் சொல்ல அவளுக்கு மூளை வேலை செய்யவில்லை. என்ன மூளையோ? கம்ப்யூட்டர் புரோகிராமிங்கில் மட்டும் வேலை செய்யும் மூளை வாழ்க்கை புரோகிராமிங்கில் ஒழுங்காகச் செய்யவில்லையே.

இதையெல்லாம் யோசித்துதான் ப்ரகாஷா ஒரு முடிவுக்கு வந்தான். முன்னை விடவும் ரம்யாவோடு நெருக்கமாகப் பழகுவதென்று. அவளுடனேயே இருந்து அவனுடைய அருகாமையும் தேவையும் அணைப்பும் அவளுக்கு எவ்வளவு விருப்பமானது என்று புரியவைத்து...அவளையே காதலையும் சொல்ல வைக்க முடிவு செய்தான். இனிமேல் அழப்போவதில்லை அவன். பாவம் ரம்யா. அவள்தான் அழப்போகிறாள்.

"OK. சரி ரம்யா. உன்னோட இஷ்டம்." அவளைப் பக்கவாட்டில் அணைத்துக் கொண்டு நடந்தான். இத்மத் உத் தௌலா அவர்கள் காதல் ஸ்விட்ச்சை இயக்கிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

"ஏய்...என்னடி...ரொம்ப நேரமா குசுகுசுன்னு....நாங்க மூனு பேரும் இங்க இருக்கோம்." சித்ராதான் ரம்யாவையும் ப்ரகாஷாவையும் அழைத்தான்.

"எங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும்ப்பா.... அதெல்லாம் ஒனக்கெதுக்கு? என்னடா...சரிதானே?" கேட்டு விட்டு அவன் முதுகில் தட்டினாள். முதுகில் என்றால்..முதுகுக்குக் சற்றுக்கீழே. சற்றுக் கீழே என்றால் பின்புறத்துக்குச் சற்று மேலே.

அவன் விடுவானா. "என்ன அடிக்கிற...எவ்ளோ தைர்யா..." அவளது வலது கையில் கிள்ளி விட்டான். "ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ"வென்று கத்திக் கொண்டே...."என்னக் கிள்ளீட்ட...என்னக் கிள்ளீட்ட" என்று அவனது நெஞ்சில் படக்கென்று குத்தினாள். அவன் மட்டும் மிதமா? அவளை இரண்டு கைகளாலும் இறுகப் பிடித்துக்கொண்டு...கிறுகிறுவெனச் சுற்றினான்.

அவள் கத்திய கத்தில்...அங்கிருந்த அதிகாரி ஓடிவந்து விட்டார். "க்யா ஹோரா ஹே". வந்தவர் சித்ராவின் கையிலிருந்த ஃபெராவைப் பார்த்து விட்டு ஏதோ குடும்பத்தினர் விளையாட்டு என்று பேசாமல் திரும்பி விட்டார்.

"சரி. விளையாண்டது போதும். வாங்க. அடுத்து எல்லாரும் ஆக்ரா கோட்டைக்குப் போகலாம். நேரமாச்சு." சப்யா அடுத்தடுத்து பார்க்க வேண்டிய இடங்களை நியாபகப் படுத்தினான்.

காரில் ஏறுகையில் ரம்யாவிற்கு முந்தி ப்ரகாஷா ஏறி பின் சீட்டின் நடுவில் உட்கார்ந்தான். "ஏய்...அது என்னோட இடம்....நகரு...நகரு" என்று வம்படித்தாள் ரம்யா.

"ஹே....இது நின் காரா? வாடகே கார். எங்கயும் உக்காருவேன்." ப்ரகாஷா அடம் பிடித்தான். ரம்யா விடுவாளா? அவள் படக்கென்று காருக்குள் ஏறி ப்ரகாஷாவின் மடியில் உட்கார்ந்து கொண்டாள். ப்ரகாஷா ரம்யாவைத் தள்ள....ரம்யாவோ அவனை இறுகப் பிடித்துக் கொண்டு ஒட்டிக்கொள்ள.... ஒரே தள்ளுமுள்ளுதான்.

"ஆப்கோ ஷாதி ஹோகய்.. ஹி ஹி" கே.ஆர்.எஸ் மூக்கு நுழைந்தது.

"சாதியுமில்ல...பேதியுமில்ல...." கோபத்தில் முணுக்கினாள் ரம்யா. இவன் எவன் குறுக்கே வருவதென்று.

"நீங்க மொதல்ல ஆக்ரா ஃபோர்ட் போங்க" டிரைவரை விரட்டினான் சப்யா. அவர்கள் குதூகலத்தில் கே.ஆர்.எஸ் மூக்கை நுழைப்பது அவனுக்குப் பிடிக்கவில்லை. "சரி. மொதல்ல உக்காருங்க. நம்ம சண்டையை போற எடத்துல வெச்சுக்கலாம்."

அனைவரும் அவரவர் இடத்தில் அமர்ந்ததும் காரை ஆக்ரா கோட்டைக்கு ஓட்டினான் கே.ஆர்.எஸ்.

தொடரும்....

Monday, October 15, 2007

காதல் குளிர் - 4

சென்ற பகுதியை இங்கே படிக்கவும்

"ஆப்கா நாம் கியா ஹேய்" ஹிந்தியில்..இல்லை இல்லை. இந்தியில் கேட்டாள் ரம்யா. சமீபத்தில் ரம்யா பேசிய மிகப் பெரிய இந்திப் பேச்சு இதுவாகத்தான் இருக்கும்.

"மேரா நாம் கே.ஆர்.எஸ். மத்லப் கௌஷல் ரகுபீர் ஷர்மா." சொன்னது கார் டிரைவர். தாஜ்மகால் போவதற்காக ஏற்பாடு செய்திருந்த கார் விடியலிலேயே சொன்ன நேரத்திற்கு வந்துவிட்டது. தன்னுடைய பையைப் ப்ரகாஷாவை எடுத்து வரச் சொல்லிவிட்டுக் கீழே காருக்கு வந்தாள் ரம்யா.

அடுத்த வரியை இந்தியில் சொல்ல ரம்யா தடுமாறுகிறாள் என்பதைப் புரிந்து கொண்டான் கே.ஆர்.எஸ். "ஹம்கோ மதராஸி பாஷா, கன்னட், டெலுகு, கேரள்...சப்குச் ஆத்தா ஹே."

மனசுக்குள், "சரி சரி ஆத்தா ஒன்னோட மொகரையப் பேத்தா" என்று திட்டிக்கொண்டே முகத்தில் பொய்ப்புன்னகையோடு நின்றாள். அதற்குள் எல்லாரும் கீழே இறங்கி வந்துவிட்டார்கள். சித்ராவிடமிருந்து ஃபெராவை வாங்கிக் கொண்டாள் ரம்யா. சப்யா வசதியாக டிரைவருக்குப் பக்கத்தில் முன்னாடி உட்கார்ந்து கொண்டான்.


பின்னாடி சீட்டில் ப்ரகாஷா வலது ஜன்னலோரமும் சித்ரா இடது ஜன்னலோரமும் உட்கார்ந்து கொள்ள...ரம்யா நடுவில் உட்கார்ந்து கொண்டாள். "புருஷனையும் பொண்டாட்டியையும் பிரிச்சிட்டீங்களே" என்று பொய்யழுகை அழுத சப்யாவின் தலையில் சித்ரா "நறுக்"கினாள். கலகலப்பாகத் அவர்களது ஆக்ரா பயணம் தொடங்கியது.

டிரைவருக்குப் பேரெல்லாம் சொல்ல வேண்டுமா என்று நீங்கள் நினைப்பது தெரிகிறது. என்ன செய்வது? பெரிய பாத்திரமில்லையென்றாலும் கதையில் கே.ஆர்.எஸ் ஒரு வருத்தத்திற்குரிய செயலைச் செய்யப் போகிறான். ம்ம்ம்ம்....சரி. அதை அவன் செய்யும் பொழுது எப்படிச் செய்கிறார் என்பதை அணுவணுவாகப் பார்ப்போம். இப்பொழுதே பேசி மனதை வருத்தப்படுத்திக் கொள்ள வேண்டாம். பயணம் வேறு மகிழ்ச்சியாகத் தொடங்கியிருக்கிறது. அப்படியே நாமும் உடன் செல்வோம். கதையில் நமது வசதிக்காக கே.ஆர்.எஸ்சும் இனிமேல் தமிழ்தான் பேசப் போகிறான்.

"சார். ஒரு உதவி"

சப்யா ஆச்சரியக்குறியோடு பார்த்தான். பயணம் தொடங்கியதும் பணம் கேட்கப் போகிறானோ என்று. ஏற்கனவே முழுப் பணமும் அலுவலகத்தில் கட்டியாகி விட்டது. டிரைவர் கையில் பேட்டா மட்டும் குடுத்தால் போதும் என்று சொல்லித்தான் அனுப்பியிருக்கிறார்கள்.

"ஒன்னுமில்லை சார். இந்தக் கார் டூரிஸ்ட் ரிஜெஸ்டிரேஷன் கார் இல்ல. இதுல டூர் கூட்டீட்டுப் போகக் கூடாது. ஒருவேளை போலீஸ் யாரும் கேட்டாங்கன்னா...காருக்குச் சொந்தக்காரர் ஒங்க நண்பர்னு சொல்லனும். அவரோட பேரு நித்தின் நயால்."

"இது வேறையா?"

"என்ன செய்றது சார். இப்பிடித்தான் போனவாட்டி ஆக்ரா போனப்போ வெள்ளக்காரங்கள ஏத்தி அனுப்புனாங்க. அவங்ககிட்ட நூறுதடவை சொன்னேன். அவங்களுக்குப் புரியவேயில்லை. என்னோட கெட்ட நேரம் போலீஸ் பிடிச்சிட்டாங்க. அங்கிரேசிக்காரன் டூரிஸ்ட் வந்தோம்னு சொல்லீட்டான். ரெண்டாயிரம் ரூவா தண்டம். ஆகையால டூரிஸ்ட் வந்தோம்னு சொல்லாதீங்க சார்."

"சரி...அவரோட பேர் என்ன நித்தின் நயால்தானே."

"ஆமா சார். அதுவுமில்லாம ஆக்ரா ஊருக்குள்ள நான் சின்னச் சின்ன ரோடு வழியாப் போறேன். எனக்கு எல்லா ரோடும் தெரியும். பெரிய ரோடுகள்ள போலீஸ் இருப்பாங்க சார். போலீஸ் கிட்ட மாட்டாம போய்ட்டு வந்தாப் போதும் சார்."

ரம்யாவுக்கு அந்தப் பக்கத்து ஊர்கள் ரொம்பவும் புதுமையாக இருந்தன. நொய்டாவை விட்டு வெளியே வந்தால் பட்டிக்காடுகள்தான். புழுதிக்காடு என்று சொல்லலாம். கரிசல் மண். ஆனாலும் ஏதோ வித்தியாசம் அவளுக்குத் தெரிந்தது. மரங்கள் நெடுநெடு மரங்களாக இருந்தன. ஒரு சாப்பாட்டுக்கடையில் நிறுத்தி ரொட்டி, சப்ஜி, சாய் சாப்பிட்டார்கள். ஃபெர்ரா விழித்துக் கொண்டதால் ரம்யாவும் ப்ரகாஷாவும் சிறிது நேரம் அவனோடு விளையாடினார்கள்.

அந்தப் பயணத்தில் ஒவ்வொருவர் மனநிலையும் ஒவ்வொரு விதமான மகிழ்ச்சியில் இருந்தது. சப்யா சற்றுக் களைப்பாக இருந்தான். இரண்டு நாட்களாகக் கடுமையான வேலை. தூக்கமும் குறைவு. ஆனாலும் அனைவரும் இருக்கும் மகிழ்ச்சியில் களைப்பே தெரியவில்லை. சித்ராவுக்கும் மகிழ்ச்சிதான். ஆனால் இந்தப் பயணம் முடிந்து திரும்பி வருவதற்குள் ரம்யாவைச் சம்மதிக்க வைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். ப்ரகாஷா ஒரு முடிவோடுதான் இருந்தான். எப்படியாவது தன்னுடைய மனதில் இருப்பதை ரம்யாவிடம் சொல்லிவிட வேண்டும். அதற்குப் பின் என்ன நடந்தாலும் சரிதான் என்ற முடிவுக்கு வந்திருந்தான். சரியான சமயத்திற்கு எதிர்பார்த்திருந்தான். பயணத்தில் ரம்யாவுக்கும் மகிழ்ச்சிதான். நேற்றிரவு சித்ரா சொன்னது இன்னமும் மனதில் இனித்துக் கொண்டிருந்தது. ஆனால் ஒப்புக்கொள்ளத்தான் அவளால் முடியவில்லை. சரி. யாராவது மறுபடியும் பேச்செடுப்பார்கள் என்று காத்திருந்தாள். ப்ரகாஷாவின் தோளில் சாய்ந்து கொண்டு சுகமான இருந்தாள்.

ஆக்ராவிற்குள் நுழைந்ததுமே கே.ஆர்.எஸ் சந்துகளிலும் பொந்துகளிலும் வண்டியை ஓட்டினான். "மொதல்ல எங்க போறது சார்?"

"இத்மத் உத் தௌலா போங்க. அதான் மொதல்ல பாக்கனும்." சப்யா எங்கெங்கு போக வேண்டும் என்று திட்டம் வைத்திருந்தான்.

இத்மத் உத் தௌலாவின் வாசலில் கார் நின்ற பொழுது ஆட்டுப்புழுக்கைகளும் தள்ளுவண்டிகளும் ஓரத்தில் ஓடும் சாக்கடையும்தான் வரவேற்றன. ஆனால் உள்ளே நுழைந்ததும் அழகான பெரிய சலவைக்கல் நகைப்பெட்டி தெரிந்தது. கொஞ்ச நேரம் அதனுடைய அழகில் மயங்கியிருந்தவர்கள் புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டார்கள்.


ரம்யாவிற்கும் ப்ரகாஷாவிற்கும் வாய்ப்புக் குடுத்து சப்யாவும் சித்ராவும் ஒதுங்கியிருந்தார்கள். ரம்யாவும் ப்ரகாஷாவின் துணையை ரசித்துக் கொண்டிருந்தாள்.

"டேய்....என்ன அழகாக் கட்டீருக்காங்க பாரேன். நகைப்பெட்டி மாதிரி இருக்கு. அதுலயும் ஆத்தங்கரை ஓரம். இந்த எடத்துல சந்தோஷமா தங்கீருப்பங்கள்ள."

"முட்டாளா..இது மனே இல்ல. இது சமாதி. இங்கதான் நூர்ஜஹானோட அப்பாவையும் அம்மாவையும் பொதைச்சிருக்காங்க. இத தன்னோட தாயி தந்தைக்கோஸ்கரா நூர்ஜஹான் கட்டீருக்காங்க. அதோட நூர்ஜஹானோட சமாதியும் இதுலதான் இருக்கு."

"ஓ...அப்படியா? நூர்ஜஹானோட சொந்த ஊர் இதுதானா? அதான் இங்க கட்டீருக்காங்க"

"இல்ல. நூர்ஜஹானுக்குப் பெர்ஷியாதான் சொந்த நாடு. இப்ப ஈரான். அப்போ அப்பா இந்தியா வந்தாங்க. வர்ர வழியில நூர்ஜஹான் பொறந்திருக்காங்க. ஆனா வறுமை தாங்காம குழந்தைய விட்டுட்டுக் கெளம்பீருக்காங்க. ஆனா முடியாம திரும்ப வந்து எடுத்துக்கிட்டாங்க. அதுக்கப்புறம் அக்பர் கிட்ட வேலைக்குச் சேந்து ரிச்சாயிட்டாங்க."

"ஆகா...இதெல்லாம் நல்லாத் தெரிஞ்சி வெச்சிருக்க. பெரிய ஆளுதான்."

"ஹா ஹா ஹா..இன்னொந்து சொல்றேன். யமுனா ரொம்ப ரொமாண்டிக்கான நதி. மொகல்ஸ் இந்த நதிக்கரைலதான் ரொமாண்ஸ் பண்ணீருக்காங்க. தாஜ்மகால் கூட யமுனா ஓரத்துலே இருக்குல்ல."

"ம்ம்ம்......" ப்ரகாஷாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள் ரம்யா. ஏதோ ஒரு ஈர்ப்பு. சலவைக் கல் கட்டிடத்தின் குளிர்ச்சியும் அழகும் அவள் உள்ளத்தை "என்னவோ செஞ்சு" வைத்தன. ப்ரகாஷா சொன்ன ரொமாண்டிக் அவளுக்குள் வேலையத் தொடங்கியிருந்தது. அவன் ஏற்கனவே காதல் ஊறுகாய். இருவரும் சற்று நேரம் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

"ரம்யா. I love you."

தொடரும்...

Tuesday, October 09, 2007

சூனியமான நண்பன்

விவாஜியோட கவுஜைக்கும் ராயலார் கவுஜைக்கும் எதிர்க்கவிதை இது.

சனி உன்னைப் பிடிச்சிருக்குன்னு
தெரு முக்கு ஆசாரி சொன்னாரே
கேட்க மறுத்தது உன்னோட பகுத்தறிவு
அன்னிக்குதான்டா நீ என்னப் பாத்த

நான் ஒங்க தெருவுக்கு குடியேறின முதல் நாள்
ஒன்னோட அட்டையாட்டம் ஒட்டிகிட்டேன்!
ஒன்னோட கடங்கார அட்டையெல்லாம்
ஒன் பேர சொல்லியே தேய்ச்சுகிட்டேன்!

பாட்டில் ஒப்பன் பண்ணும்போது மட்டும்
எனக்கு எப்படியோ மூக்குல் வேக்குது!
இருக்கிறத எல்லாம் நானே குடிக்கிறதால
எப்பவுமே ஒனக்கு மண்டை காயுது.

டீ கடைக்கு நீ போறத
யாரும் சொல்லாம எனக்கு எப்படி தெரியுது?
காசு குடுக்கிற போது மட்டும் நீ எப்படி
மாட்டிக்கிறன்னு எவனுக்கும் தெரியாது

சம்பள நாள் வந்தா கவர் வருதோ இல்லியோ
ஆபிசுக்கு சிரிச்சுகிட்டே வந்து ஸ்டைலா நிப்பேன்!
மாசக் கடைசி ஆகி நீ என்னைத் தேடினா
யார்கிட்டேயும் சொல்லாம ஊரைவிட்டே ஓடிப் போயிருப்பேன்!

சுனாமி வந்து ஊரை யெல்லாம் தூக்குச்சு
அப்பவும் உன்னாலதான பரோட்டா பார்சல் தூக்குனேன்
கழுதைய பார்த்தா யோகமாம், ஊர்ல சொன்னாங்கடா
உன்னைய பார்த்தா என் வாழ்க்கையே யோகம்டா.

உன் நட்பு வேணாமுன்னு யாருடா சொல்வா?
நீ வருவேன்னு தெரிஞ்துன்னா போடுவேன் பெரிய "Salute"டா!
போகும் போது மறக்காம சொல்லி அனுப்புடா
நட்பத் தூக்கீட்டு நானும் வந்துர்ரேண்டா!

Monday, October 08, 2007

காதல் குளிர் - 3

முந்தைய பகுதிக்கு இங்கே சொடுக்கவும்.

"ஒன்ன மாதிரி பொண்ணுதான்" ப்ரகாஷா யோசிக்கவேயில்லை.

"என்னது...என்ன மாதிரி பொண்ணா?" சின்னதாய் ஒரு மகிழ்ச்சி மழை ரம்யாவுக்குள். ஆனால் மண்டு அதை ஒழுங்காகப் புரிந்து கொள்ளவில்லை.

"என்ன மாதிரிப் பொண்ணா....ம்ம்ம்ம்ம்....என்னையே ஒன்னால சமாளிக்க முடியலை...இதுல என்ன மாதிரி வேற....ஆனா இன்னொரு கண்டிஷனை மறந்துட்டியே."

"என்ன கண்டிஷன்?" ப்ரகாஷாவிற்கு எதையாவது விட்டு விட்டோமா என்று திடீர்ச் சந்தேகம்.

"ஆமா. பொண்ணு பெரிய எடத்துப் பொண்ணா இருக்கனும். பொண்ணு கவுடா பொண்ணா இருக்கனும். அப்பத்தான ஒன்னோட ஸ்டேடசுக்குப் பொருத்தமா இருக்கும். இல்லைன்னா ஒங்கப்பாம்மா ஒத்துக்குவாங்களா? கனக்புராவச் சுத்தி இருக்குற நெலமெல்லாம் ஒங்களோடதானே. நீ வேலைக்கு வந்ததே ஒங்கப்பாவுக்குப் பிடிக்கலை. ஒன்னோட தொந்தரவு தாங்காமத்தான் ஒரு நாலஞ்சு வருசத்துக்கு வேலையப் பாருன்னு விட்டு வச்சிருக்காரு. போதாததுக்கு நீ இங்க வேலைக்கு வந்ததுமே டொம்லூர்ல வீடு. ஆபீஸ் போக வரக் காரு. அப்படியிருக்குறப்போ பொண்ணும் நல்லா வசதியா இருந்தாத்தான வீட்டுல ஒத்துக்குவாங்க."

ரம்யா கேட்ட கேள்வியில் நியாயம் இல்லாமல் இல்லை. சந்திர கவுடாவின் செல்வாக்கு கனக்புரா வட்டாரத்தில் மிகப் பிரபலம். நல்ல நிலம் நீச்சு விவசாயம் பணம். ஊர்க்கட்டுமானம்.....சங்கம்..இத்யாதி இத்யாதி...வீட்டிற்கு கடைசிப் பிள்ளையான ப்ரகாஷா படித்ததில் அவருக்கு மகிழ்ச்சிதான். ஆனால் இருக்கின்ற நிலத்தையும் பண்ணைகளையும் சொத்துகளையும் பார்த்துக் கொள்ளாமல் வேலைக்குப் போக வேண்டும் என்று விரும்பிய பொழுது கனக்புராவையே ஆத்திரத்தில் குலுக்கி விட்டார். வேறு வழியில்லாமல் நான்கைந்து வருடங்கள் கெடு குடுத்து அனுப்பி வைத்தார். திருமணம் முடிவானதும் எல்லாவற்றையும் விட்டுவிட்டு கனக்புரா வந்து விட வேண்டும் என்பதும் அவருக்கும் ப்ரகாஷாவின் அண்ணன் சுரேஷாவிற்கும் உதவியாக இருக்க வேண்டும் என்பதும் அவர் கட்டளை. இது ப்ரகாஷாவிற்கும் தெரிந்ததுதான். ஆனால் அவனுக்கு ஊரில் உட்காரவும் விருப்பமில்லை. வேலை செய்ய வேண்டும். தானாக வீடு வாசல் வாங்க வேண்டும் என்று விரும்புகிறவன். நாலு இடங்களுக்குப் போக வேண்டும். நிறைய பேரைச் சந்திக்க வேண்டும் என்று ஆசையோடு இருப்பவனைக் கனக்புராவிற்குள் கட்டிப் போடலாமா? நமக்குத் தெரிகிறது. சந்திரகவுடாவுக்குத் தெரியலையே.

"என்னடா யோசனைக்குள்ள போயிட்ட. நான் சொன்ன கண்டிஷன் சரிதானே." பொய்ப் பெருமிதம் பொங்க அவனைப் பார்த்தாள். பார்த்ததும் முகம் மாறினாள்.

"டேய்...சாரிடா. I didnt mean to hurt you. நீ அதுக்காக இப்படியெல்லாம் வருத்தப் படாத. உன்னைய இப்பிடிப் பாக்கவே எனக்குப் பிடிக்கலை."

ப்ரகாஷா சகஜமாக இருப்பது போல காட்டிக் கொண்டான். "ஹே முட்டாளா....சும்மா யோசனே. You didnt hurt me. மொதல்ல சாப்டு."

டெல்லியில் விமானம் தரையிறங்கும் போது குளிராக இருப்பதாக அறிவித்தார்கள். இருவரும் குளிரை அனுபவித்தபடியே வெளியே வந்தார்கள். சப்யா ஏற்பாடு செய்திருந்த டாக்சிச் சக்கரங்கள் நொய்டாவை நோக்கிச் சுற்றின. பின் சீட்டில் ப்ரகாஷாவின் தோளில் சாய்ந்தபடி தூங்கி விட்டாள் ரம்யா. எப்படித்தான் தூங்கினாளோ? இவனால்தான் தூங்க முடியவில்லை. பின்னே...காதலிக்கும் பெண்...தோளில் சாய்ந்து நிம்மதியாகத் தூங்குகிறாள். இவனுடைய மனம் மட்டும் தூங்கவில்லையே. அவள் சாய்ந்திருப்பது அவன் தோள் என்பதால்தான் அவள் நிம்மதியாகப் பாதுகாப்பாகத் தூங்குகிறாள் என்பது அவளுக்கும் புரியவில்லை. அவனுக்கும் புரியவில்லை. மண்டு + மண்டு...இவர்களுக்குக் காதல்தான் குறைச்சல். ரம்யாவின் கதகதப்பு டெல்லிக் குளிரை விரட்டி விட்டுக் காதல் குளிரை மூட்டியது. சப்யா சித்ரா வீடு வரும்வரையிலும் என்னென்னவோ நினைத்து நினைத்துத் தவித்தான்.

"ஏஏஏஏஏஏஏஏ கழுத...." வீட்டிற்குள் நுழைந்த ரம்யாவைகச் சித்ரா ஓடி வந்து கட்டிக் கொண்டாள். "பார்த்து எவ்ளோ நாளாச்சு. ஆராமாயிருக்கியா(நல்லாருக்கியா)?" ப்ரகாஷாவைப் பார்த்து "பாரோ...ஆராமா?" என்றும் கேட்டாள்.

ரம்யாவிற்கு சித்ராவைப் பார்க்க மிகவும் வித்தியாசமாக இருந்தது. அவளோடு துள்ளித் துள்ளி பெங்களூரையே கதிகலக்கிய சித்ரா இப்பொழுது பார்ப்பதற்கே வேறு மாதிரி இருந்தாள். "நீ வெயிட் போட்டிருக்கடீ." முதல்முதலாக தன்னுடைய தோழியை ஒரு அம்மாவாகப் பார்க்கிறாள் அல்லவா.

ஒரு பத்துப் பதினைந்து நிமிடங்களுக்கு அந்த இடத்தில் ஆனந்தச் சூறாவளி வீசியது. அந்தப் புயலில் நான்கு பெரிய திமிங்கிலங்கள் விளையாடின. பெங்களூரில் இருந்து சப்யாவுக்கும் சித்ராவுக்கும் அவர்கள் குழந்தை ஃபெராமியருக்கும் (Faramir) வாங்கி வந்த உடைகளையும் பரிசுகளையும் கடை விரித்தனர். என்ன பெயர் என்று பார்க்கின்றீர்களா? சப்யாவும் சித்ராவும் Lord of the Rings என்ற புத்தகத்தின் பரம ரசிகர்கள். அதில் வரும் ஃபெராமியர் பாத்திரம் இருவருக்கும் பிடித்ததால் அந்தப் பெயரையே மகனுக்கும் வைத்தார்கள். இன்னும் சொல்லப் போனால் அந்தப் புத்தகத்தைப் பற்றிப் பேசிப் பேசித்தான் இருவருக்குமே காதலே வந்தது.

"சரிடீ. நேரமாச்சு. மொதல்ல எல்லாரும் போய்த் தூங்குங்க. காலைல சீக்கிரம் எந்திரிச்சுக் குளிச்சிக் கெளம்பனுமே..." சித்ரா அனைவரையும் விரட்டினாள்.

"என்னது? சீக்கிரம் எந்திரிச்சிக் கெளம்பனுமா? எங்க கெளம்பனும்?" பக்பக்கினாள் ரம்யா.

"ஹே ரம்மீ...ப்ரகாஷா சொல்லலையா? சித்ராவும் ப்ரகாஷாவும் படா பிளான் போட்டாங்களே. என்னம்மா ரம்மீக்கு ஒன்னுமே தெரியாதா?"

பொங்கினாள் ரம்யா. "சப்யா...அவங்கதான் சொல்லலை. நீ சொல்லீருக்கலாமே. ப்ரகாஷா கூட வர்ரான்னு நீயும் சொல்லலை. டாக்சியோட மொபைல் நம்பர் குடுக்க ஃபோன் பண்ணீல்ல. அப்ப சொல்லீருக்கலாம்ல. இப்ப சித்ரா ப்ரகாஷா மேல பழி போடுறியா?"

"சரண்டர். சரண்டர். சரண்டர் ரம்மீ. ப்ரகாஷா...நீயே ஹேண்டில் பண்ணுப்பா."

"ரம்யா.... ஒனக்கு தாஜ்மஹல் பாக்க தும்ப நாள் ஆஷை இருக்குல்ல. நானும் போயிருக்கேன். சப்யாவும் சித்ராவும் போயிருக்காங்க. ஆனா நீ போகலை. ஒனக்காகத்தான் தாஜ்மஹல் பாக்க பிளான் பண்ணேன். சித்ரா சப்யா ஒத்துக்கினாங்க. அதான்."

"சரி. சரி. எனக்காகத்தான் எல்லாரும் தாஜ்மகால் போறோமாக்கும். எனக்காக இப்பிடி ஒரு திட்டம் போட்டதுக்கு ரொம்ப நன்றி மிஸ்டர்.ப்ரகாஷா. எனக்குத் தெரியாமலே எனக்குப் பிடிச்சதுக்குத் திட்டம் போடுறது. ம்ம்ம்ம்ம். போற போக்குல என்னோட கல்யாணம் தேனிலவுன்னு எல்லாத்துக்கும் எனக்குப் பாத்த மாப்பிள்ளை மாதிரி நீயே திட்டம் போடுவ போல."

ப்ரகாஷாவின் வாயில் ஒரு கிலோ அல்வா. தித்திப்புக்குத் தித்திப்பு. பேச முடியாமல் வாயும் ஒட்டிக்கொண்டது.

"ஏண்டீ. ப்ரகாஷாவுக்கு என்ன கம்மி? அழகில்லையா? அறிவில்லையா? துட்டு இல்லையா? He is handsome and hot. அவன் மாப்பிள்ளையா வந்தா ஒத்துக்க மாட்டியா?" சித்ரா வேண்டுமென்றே வாயைக் கிண்டினாள். அவளுக்கு ரொம்ப நாளாகவே ரம்யாவின் மேல் சந்தேகம். கழுதை....ஆசையை மனதுக்குள் வைத்துக் கொண்டு பேச மாட்டேன் என்கிறாளோ என்று. அதுவும் ஒருவிதத்தின் உண்மைதானே. ப்ரகாஷா மேல் தனக்குத் தோன்றும் உரிமைக்குக் காதல் என்று பெயர் என்று ரம்யாவுக்குப் புரிந்து விட்டால் போதுமே. அதுவுமில்லாமல் ரம்யாவின் வீம்பு வேறு.

"என்னது...ப்ரகாஷாவை கல்யாணம் செஞ்சுக்கனுமா? நாங்க நல்ல ஃப்ரண்ட்ஸ் பா. அப்படித்தான் நான் நெனைக்கிறேன். டாக்சீல வீட்டுக்கு வரும் போது கூட...ப்ரகாஷா தோள்ளதான் சாஞ்சு தூங்கீட்டு வந்தேன். எனக்குள்ளயோ ப்ரகாஷாக்குள்ளயோ அந்த மாதிரி ஆசை இருந்தா அப்படி வந்திருக்க முடியுமா? சொல்லு ப்ரகாஷா?" ப்ரகாஷாவின் பக்கத்தில் உட்கார்ந்து அவன் கையைப் பிடித்துக் கொண்டாள்.

அவன் வாயில் இருந்த அல்வாவானது பிரசவ நடகாய லேகியமாகியது. இப்பொழுதும் பேச முடியவில்லை.

"அதுவுமில்லாம ப்ரகாஷா எவ்ளோ பெரிய எடம். அவன் கன்னடம். நான் தமிழ்."

"சித்ரா தமிழ். நான் பெங்காலி." முடுக்குச் சந்தில் ராக்கெட் ஓட்டினான் சப்யா.

"சரி. சரி....இதப் பத்தி இப்பப் பேச வேண்டாம். எனக்குத் தூக்கம் வருது. காலைல எந்திரிக்கனும்." பேச்சை வெட்டினாள் ரம்யா. அவளால் உணர்ச்சிகளைத் தாங்க முடியவில்லை. தாங்க முடியாத உணர்ச்சிகள் எழும் பொழுது அவைகளை அனுபவிக்கவும் புரிந்து கொள்ளவும் முடியாதவர்கள், அந்த உணர்ச்சிகளை அடக்கி விடுவார்கள். அல்லது அந்த உணர்ச்சிகளே தங்களுக்கு இல்லை என்று ஏமாற்றிக் கொள்வார்கள். ரம்யா அதைத்தான் செய்தாள். சித்ராவும் சப்யாவும் இதைப் பற்றித் திரும்பவும் எதுவும் சொல்வார்கள் என்று ஒரு நொடி நினைத்தால். அவர்கள் ஒன்றும் சொல்லாமல் வாயடைத்து நின்றிருந்ததைப் பார்த்து விட்டு அவளுடைய ஏமாற்றத்தையும் மறைத்துக் கொண்டு அவளுக்கென்று சித்ரா ஒதுக்கிக் கொடுத்திருந்த அறைக்குள் "குட் நைட்" சொல்லி விட்டு தூங்கப் போனாள்.

ப்ரகாஷாவின் மனதில் இருந்த ஏமாற்றத்தை சப்யாவுக்கும் சித்ராவுக்கும் அவனது முகம் டீவி போட்டுக் காட்டியது. ப்ரகாஷாவின் முதுகில் மெதுவாகத் தட்டினான் சப்யா. "Dont worry Prakasha. It will work. She is still Kid. Now go to sleep. Itz too late. Good night."

ஹாலில் இருந்த பெரிய சோபா அவனுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. அதில் வசதியாக படுத்துக் கொண்டான் குளிருக்கு இதமாகக் கம்பளி போர்த்துக் கொண்டாலும் இரண்டு வெந்நீர் ஊற்றுகள் அவன் கண்களில் திறந்தன. "தூத்தூ....கண்டு அள பாரது (சீச்சீ ஆம்பள அழக்கூடாது)" என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டு தூங்கிப் போனான்.

தொடரும்...

Monday, October 01, 2007

காதல் குளிர் - 2

சென்றைய பகுதியை இங்கே படிக்கவும்.

பெங்களூர் ஏர்ப்போர்ட் ரோட்டில் எல்லா வண்டிகளும் டிராஃபிக் கடவுளின் வரத்திற்காக அமைதியாக நின்றபடித் தவமிருந்தன. அவ்வளவு நெருக்கடி. அந்த நெருக்கடியில் ஒரு ஆட்டோ. அந்த ஆட்டோவிற்குள் ரம்யா. ரம்யாவிற்குள் எரிச்சல்.

"எட்டரைக்கு ஃபிளைட். சீக்கிரம் போலாம்னு கெளம்பி வந்தா இப்பிடி டிராஃபிக். எறங்கி நடந்தாக் கூட பத்து நிமிசந்தான் ஆகும். முருகேஷ்பாளையா சிக்னலயே இன்னமும் தாண்டலை. ஆட்டோமேட்டிக் சிக்னல் போட்டா எல்லாம் ஒழுங்காப் போகும். எப்ப டிராபிக் போலிஸ் வந்து நிக்குறாங்களோ அப்பல்லாம் டிராபிக் ஜாம்தான்!!!!" எரிச்சலில் நினைத்ததைச் செயல்படுத்தியும் விட்டாள் ரம்யா.

"தொகளி மூவத் ரூபாய். நானு இல்லே இளிக்கொள்ளுதினி (இந்தாங்க முப்பது ரூவா. நா இங்கயே எறங்கிக்கிறேன்)" பணத்தைக் குடுத்து இறங்கி நடக்கத் தொடங்கினாள். அவள் இறங்கிய நேரம் டிராஃபிக் தெய்வம் கடைக்கண்ணைத் திறந்து சிக்னலும் கிடைத்து. ஆட்டோவும் விருட்டென்று போய் விட்டது.

ரம்யாவின் எகிறிப்போன எரிச்சலையும் கூடிப்போன கடுப்பையும் சொல்ல வேண்டுமா? விடுவிடுவென கோவத்தோடு நடந்து ஏர்ப்போர்ட்டிற்குள் நுழைந்தாள்.

நெருக்கடி ரோட்டில் மட்டுமல்ல ஏர்ப்போர்ட்டிலும் இருந்தது. சிறிய விமான நிலையம். ஆனால் நிறைய கூட்டம். பெட்டியை ஸ்கேன் செய்ய ஒரு நீள வரிசை. செக்கின் செய்ய ஒரு நீள வரிசை. செக்யூரிட்டி செக் செய்ய இன்னொரு நீள வரிசை. பார்க்கும் பொழுதே தலையைச் சுற்றியது ரம்யாவிற்கு. "என்ன நேரத்துல கெளம்புனோமோ! ச்சே! கெளம்புறப்போ ப்ரகாஷாவுக்குக் கூட ஃபோன் பண்ணலை. சரி இப்பவாச்சும் கூப்புடுவோம். வரிசையப் பாத்தா செக்கின் பண்ண இன்னும் பத்துப் பதினஞ்சு நிமிஷம் ஆகும் போல இருக்கு...."

மொபைல் ஃபோனில் அவனை அழைத்தாள். "ஹலோ ப்ரகாஷா...நான் கெளம்புறேன். ஏர்ப்போர்ட் வந்துட்டேன். வீட்டுலயே கூப்பிடலாம்னு நெனச்சேன். கெளம்புற அவசரத்துல மறந்துட்டேன். அதான் ஏர்ப்போர்ட் வந்ததும் கூப்டேன்."

"இருக்கட்டும் ரம்யா. பத்திரமா போய்ட்டு வா. டிராபிக் மோசமா இருந்திருக்குமே இந்நேரம். ஆட்டோ கெடைச்சதா?"

"ஆட்டோதான...கெடைச்சது..கெடைச்சது. டிராபிக் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப மோசம். இந்தா இருக்குற ஜீவன்பீமா நகர்ல இருந்து ஏர்ப்போர்ட் வர முப்பது நிமிஷம். ஆமா. நீ எங்க இருக்க?"

"நானா? திரும்பிப் பாரு. வரிசைல ஒனக்கு நாலு பேருக்குப் பின்னாடி நிக்கிறேன்."

ஆச்சரியத்தில் படக்கென்று ஆந்தை முழி முழித்துக்கொண்டே திரும்பினாள். அங்கே ப்ரகாஷாவேதான். ஓட்கா புன்னகையோடு.

"நீ எங்கடா இங்க?" கேட்டுக்கொண்டே வரிசையில் தனக்குப் பின்னாடி இருந்த நாலு பேரையும் முன்னாடி விட்டுவிட்டு ப்ரகாஷாவோடு சேர்ந்து கொண்டாள்.

நறுக்கென்று அவன் தலையில் கொட்டினாள். "எங்கயோ போறேன்னு எனக்குச் சொல்லவேயில்லையேடா? நீ எங்க இங்க?"

"ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....மெதுவா மெதுவா...என்னோட தலையில ஒன்னோட கன்னம் மாதிரி குழி விழுந்திருந்திரப் போகுது. சரி..சரி..முறைக்காத. நீ டெல்லிக்குப் போற.....கூடப் போய்ப் பாத்துக்கோன்னு ஹெச்.ஆர் என்னையக் கேட்டதால...சரி..சரி..முறைக்காத...உண்மையச் சொல்லீர்ரேன். நீ டெல்லிக்குப் போற. சப்யாவையும் சித்ராவையும் பாக்கனும்னு எனக்கு மட்டும் ஆசை இருக்காதா? அதான் நான் ஹெச்.ஆர் கிட்ட பேசி....நீ கெளம்புற அதே பிளைட்டில்...அதே மாதிரி வெள்ளிக்கிழமை லீவு போட்டு....எப்படி என் ஐடியா?" பெருமையாகக் கேட்டான்.

பொய்க் கோவத்தோடு மூஞ்சியைக் கோணங்கியாய் வைத்துக் கொண்டு சொன்னாள். "ஓ! சப்யாவையும் சித்ராவையும் பாக்கத்தான் டெல்லி வர்ரியா? நாங்கூட ஏதோ நான் தனியாப் போறேனோன்னு தொணைக்கு நீ வர்ரதா தப்பா நெனைக்க இருந்தேன்."

உள்ளபடி சொன்னால்....டெல்லிக்குப் போவதை ப்ரகாஷாவிடம் அவள் சொன்னதே அவனும் வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்துதான். சொன்னால் எப்படியாவது இவனும் வருவான் என்று நினைத்தாள். அவனும் வந்தது ரம்யாவிற்கு மகிழ்ச்சியே. ஆனால் சப்யாவையும் சித்ராவையும் பார்ப்பதற்காக அவன் வருவதாகச் சொன்னது அவளுக்கு ஏமாற்றமாக இருந்தது.

இவள் இப்படியென்றால் ப்ரகாஷா வேறுமாதிரி. அவள் வந்து சொன்னதுமே ஹெச்.ஆரை உடனடியாகத் தொடர்பு கொண்டான். ஒருவேளை அவர்கள் ஒத்துக்கொள்ளாவிட்டாலும் இவன் டெல்லிக்குப் போவதாகவே முடிவு செய்ந்திருந்தான். நல்லவேளையாக ஹெச்.ஆரில் உடனே ஒத்துக்கொண்டார்கள். ஏற்கனவே வர ஒப்புக்கொண்ட யாரோ வரமுடியாது என்று சொல்லி விட்டதால் ப்ரகாஷாவிற்கு டெல்லி பயணம் எளிதானது.


அட...என்ன...எல்லாரும் ப்ரகாஷாவும் டெல்லிக்குப் போவான் என்று ஊகித்திருந்தீர்களா? சூப்பரப்பு. ரம்யா...ப்ரகாஷா...டெல்லி....குளிர்...காதல்..இப்படித்தானே முடிச்சுப் போட்டு வைத்திருப்பீர்கள். அந்த முடிச்சுப்படியேதான் போகப் போகிறோம். ஆகையால் தொடர்ந்து இப்பிடியே சரியாக ஊகித்துக் கொண்டு வாருங்கள். இப்பொழுது கதைக்குப் போவோம்.

சோற்றுக்கரண்டியில் அரைக்கரண்டி சிக்கன் பிரியாணி. ரெண்டு சின்ன கோழித் துண்டுகள். இரண்டு குலாப்ஜாமூன்கள். எல்லாரும் தத்தமது கத்திகளையும் முள்கரண்டிகளையும் ஏதோ ஒரு ஸ்டார் ஓட்டலில் இருந்து வந்த உணவோடு சண்டைக்கு விட்டிருந்தார்கள்.

"ஏண்டா...நீ வரப்போறன்னு சொல்லீருக்கலாம்ல. உங்கூட கார்லயாவது வந்திருப்பேன். ஆட்டோவுல வந்து...சிக்னல்ல எறங்கி....பெரிய கூத்தாப் போச்சு..." ஆட்டோ கதையைச் சொன்னாள்.

"ஹா ஹா ஹா....ஒரு சர்ப்ரைசுக்கு மஸ்த் பிளான். அதான் சொல்லலை. சப்யாவுக்கும் சித்ராவுக்கும் ஃபோன் போட்டுச் சொல்லீட்டேன்."

"சரி சரி பொழைச்சுப் போ. பாரேன்...இந்த ரெண்டையும்....எங்கிட்ட நீயும் வர்ரேன்னு சொல்லவே இல்லை. ஏர்ப்போர்ட்ல இருந்து நொய்டாவுக்குப் போக டாக்சி புக் பண்ணீருக்கான் சப்யா. ஒரு மொபைல் நம்பர் குடுத்திருக்கான். எறங்குனதும் அதுல கூப்புடனும். அது டாக்சி டிரைவரோட மொபைல் நம்பர்."

"அந்த நம்பர் எங்கிட்டயும் இருக்கு. சப்யா குடுத்தான்." பேசிக்கொண்டேயிருந்தவன் படக்கென்று ரம்யாவின் டிரேயில் இருந்து ஒரு குலாப்ஜாமூனை எடுத்து வாயில் போட்டு முழுங்கி விட்டான். ரம்யா சுதாரிப்பதற்குள் அவனுக்குக் குடுத்திருந்த குலாப்ஜாமூனையும் முழுங்கி விட்டான்.


ரம்யாவுக்கு ஆத்திரம். அட....செல்லமாதான். அந்த ஆத்திரத்தில் குலாப்ஜாமூன் ஜிராவை எடுத்து ப்ரகாஷாவின் பிரியாணியில் ஊற்றிக் கலந்து விட்டாள். அவன் விடுவானா? அந்த பிரியாணியை எடுத்து அவள் பிரியாணியோடு கலந்து விட்டான். அட...எப்பொழுதும் அப்படித்தான். நட்பான காலத்திலிருந்தே இப்படித்தான். ப்ரகாஷா, சப்யா, ரம்யா, சித்ரா சாப்பிட உட்கார்ந்தால் வேறு யாரும் பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிட முடியாது. மில்க் ஸ்வீட் சூப், (தக்காளி)ரசகுல்லா, நூடுல்ஸ் சப்பாத்தி, பால்கோவா ரைஸ்...இப்படித்தான்...யாருடைய தட்டில் யார் எதைக் கலந்தார்கள் என்ற வரைமுறையே இல்லாமல் இருக்கும். ஆனால் நால்வரும் நிம்மதியாம மகிழ்ச்சியாக சாப்பிட்டிருப்பார்கள். சப்யா சித்ரா போன பிறகு ப்ரகாஷா ரம்யா...

"வானம் பொழிகிறது. பூமி விளைகிறது. உனக்கேன் கொடுக்க வேண்டும் குலாப்ஜாமூன். கொட்டடிக்கு வந்தாயா? பால் பீய்ச்சினாயா? காய்ச்சினாயா? எங்களோடு வயலுக்கு வந்தாயா? கரும்பு நட்டாயா? அதைப் பிழிந்துச் சாறாக்கிச் சர்க்கரைச் சேறாக்கினாயா? மாமனா மச்சானா? வயிறு கெட்டவனே!!!!!" கட்டபொம்மியானாள் ரம்யா.

"ஸ்டாப் ஸ்டாப்..எனக்கு எதுவும் அர்த்தாகலை. நிதானா நிதானா."

"என்னடா நிதானா....நாங்க மறத் தமிழர்கள். அப்படித்தான் பேசுவோம்."

"மரமா? என்ன மரம்?"

"ஆகா...தமிழக் கேவலப் படுத்துறியா...ஒன்ன........அது மரம் இல்ல. மறம்...சொல்லு பாப்போம்."

"மர்ரம். என்ன மர்ரமோ.எனக்கு ஷமா குடுத்துரு." தலையைக் குனிந்து கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டான். பெருந்தன்மையாக ரம்யாவும் மன்னித்து விட்டாள். இத்தனையையும் பார்த்துக் கொண்டிருந்த பக்கத்து சீட்காரர் இவர்களது பொய்ச்சண்டையை ரசித்துக் கொண்டிருந்தார்.

"அம்மா தாயீ....உன்னோட இருக்குறது ரொம்ப ரொம்ப கஷ்டம்."

"பின்னே...நாங்க யாரு...மர்ர்ர்ர்ர்ர்ர்ர...சரி... விடு. என்னோட இருக்குறது இருக்கட்டும்...ஒனக்கு எந்த மாதிரி பொண்ணு வேணும்? அத மொதல்ல சொல்லுடா."

தொடரும்...