Tuesday, October 31, 2006

தேன்கூட்டு விடுதலைக்கு நன்றி

மொதல்ல எல்லா நண்பர்களுக்கும் நன்றி. விடுகதை கதையைப் படிச்சுக் கருத்து சொல்லீட்டு அதுக்காக வாக்களித்த அன்பு நண்பர்கள் அனைவர்களுக்கும் எனது நன்றி. எனக்கு வாக்களிக்காதவங்களுக்கும் நன்றி. ஏன்னா உங்களுக்குப் பிடிச்சதுக்கு வாக்களிச்சிருப்பீங்க இல்லையா. அதுக்குதான்.

முதல் பரிசை வென்ற லக்கிலுக்கிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். மூன்றாம் பரிசு பெற்ற சுதர்சனனுக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகள். போட்டியில் பங்கெடுத்துக் கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் எனது வாழ்த்துகள். முயற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணமே வெற்றிக்கு முதற்படி. ஆகையால் நாம் அனைவருமே பாராட்டுக்குரியவர்கள்தான்.

போட்டியைச் சிறப்பாக நடத்திய தேன்கூடு மற்றும் தமிழோவியத்திற்கும் எனது வாழ்த்துகள் நன்றிகள். இது போன்ற போட்டிகள் எழுத்தாளர்களை ஊக்குவிக்கிறது என்பதில் ஐயமில்லை. தொடரட்டும்.

இதுவரைக்கும் இந்தப் போட்டியில கலந்துகிட்டதில்லை. போன மொற போட்டி முடிஞ்சப்புறம் நடந்த சிலபல நிகழ்ச்சிகளால நான் போட்டியில கலந்துக்கலாம்னு முடிவு செஞ்சேன். கலந்துகிட்ட மொதவாட்டியே பரிசு கிடைச்சதுல ரொம்ப மகிழ்ச்சி. எல்லாப் புகழும் முருகனுக்கே. (வழக்கமாச் சொல்றதுதானங்கிறீங்களா...என்ன செய்ய...அப்படியே பழகீருச்சி.)

இன்னைக்கு (31 அக்டோபர் 2006) காலைல கந்தரநுபூதி பதிச்சிட்டு ஆபீசுக்கு ஓடலாம்னு வந்தேன். அப்ப கொத்ஸ் ஆன்லைன்ல இருந்தாரு. அவர்கிட்ட பேசிக்கிட்டு இருக்குறப்போ மக்ரூனு, அல்வா, பிட்டுன்னு இனிப்புகளா வந்துச்சு. ஆபீசுக்குக் கெளம்புறேன்னு சொன்னப்போ "have a sweet morning"னு வாழ்த்துனாரு.

ஆபீசுக்கு வந்தா வேலை...வேலை..வேலை....திடீர்னு ஒரு செல்பேசி. "ஜீரா"ன்னு. வேறயாரு? இளாதான். வாழ்த்துகள் அப்படீன்னாரு. என்னத்துக்குய்யான்னு கேட்டேன். அப்பத்தான் விவரம் சொன்னாரு. வாழ்த்துச் சொன்ன மொத ஆளு அவருதான். அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சி பெயரிலேயே வெட்கத்த வெச்சிருக்குற ஷைலஜா செல்பேசினாங்க. அவங்களும் வாழ்த்துச் சொன்னாங்க. அதே சமயம் சுதர்சனோட மயில் வந்துச்சு. ஆனா வேலை நெறைய இருந்ததால மயிலார அப்புறம் அனுப்பலாம்னு முடிவு செஞ்சேன்.

அப்புறம் வலைப்பூவுக்கு வந்து பாத்தா, யெஸ்பா...அதாங்க பாலபாரதி, துளசி டீச்சர், ஆவி அண்ணாச்சி, வெட்டிப்பயல், ரவி கண்ணபிரான்னு வாழ்த்துப் பின்னூட்டங்கள். அத்தோட லிவிங் ஸ்மைல் வித்யா. அவங்களுடைய வாழ்த்து நான் கதையில ஓரளவாவது இயல்பாச் சொல்லீருக்கேங்குற நம்பிக்கையைக் குடுத்தது. நன்றி லிவிங் ஸ்மைல் வித்யா.

இந்தக் கதைல பலர் கேட்ட கேள்விகள் ரெண்டே ரெண்டு. ஒவ்வொன்னுக்கும் எனக்குத் தெரிஞ்ச விடைகளைச் சொல்லி இந்தப் பதிவை முடிச்சிக்கிறேன்.

கேள்வி 1. சசிக்குமார் சசிகலாவாக மாறுவது விடுதலையா? சிறையா? இதுதான் வழியா? ரயில்தானா வரவேண்டும்! நல்ல வேலை செய்வது போல வரக்கூடாதா?

விடை 1. சசிகலாவிற்கு வேறுவழியே இல்லை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. இதை ஊகத்தின் பேரில்தானே சொல்ல முடியும். பிடிக்காத உடையையே நம்மால் போட்டுக்கொள்ள முடியாத பொழுது...பிடிக்காத உடம்பை எப்படிப் வைத்துக்கொள்வது? அதனால்தான் நிறைய திருநங்கைகள் இந்த விடுதலையை விரும்புகிறார்கள் என நினைக்கிறேன்.

ரயிலிலா இருக்க வேண்டும் என்பதும் நல்ல கேள்வி? ரயிலில் அவர்கள் பிச்சை எடுக்கிறார்கள் என்று நான் சொல்லவில்லை. ரயிலில் அவர்களும் பயணம் போகிறவர்களாக இருக்கலாமே. உட்கார்ந்து கொண்டே இருக்கப் பிடிக்காமல் கதவோரம் நின்றிருக்கலாமே! அதை படிப்பவர்களின் விருப்பத்திற்கே விட்டு விட்டேன்.

கேள்வி 2. அதென்ன எல்லா போட்டிகளிலும் திருநங்கைக் கதை ஒன்று வந்து விடுகிறதே!

விடை 2. எல்லாப் போட்டிகளிலும் ஆண்களையும் பெண்களையும் பற்றிக் கதை வந்து விடுகிறதே. அது ஏன் உறுத்தவில்லை? காரணம் என்னவென்றால் அவர்கள் பொதுநீரோட்டத்தில் (mainstream) கலந்திருக்கிறார்கள். ஆகையால் நமக்கு உறுத்துவதில்லை. கதையில் வருகின்ற பெற்றோர்களைப் போல உண்மையிலும் பெற்றோர்கள் ஏற்றுக் கொள்ளாமல் போவதுதான் நடக்கிறது. ஆக திருநங்கைகளை இன்னும் பொதுநீரோட்டத்தில் நாம் சேர்த்துக்கொள்ளவில்லை.

பொதுநீரோட்டத்தில் புதிதாகச் சேரவரும் ஒரு திருநங்கை தன்னுடைய உணர்வுகளைத்தான் முதலில் அள்ளிக்கொட்ட முடியும். ஏனென்றால் அப்பொழுதுதான் மற்றவர்களால் அதைப் புரிந்து கொள்ள முடியும். அதை விடுத்து மகிழ்ச்சி பொங்க எழுது...வேறு ஏதாவது எழுது என்பதெல்லாம் கவைக்குதவாது. அவர்களுக்கு விளம்பரம் தேவையோ இல்லையோ.....அவர்களை எழுத விடுங்கள்....குமுறல்கள் எல்லாம் கொட்டியபின் எழுத்துகள் மெருகேறும். புதுவெள்ளம் மண்ணையும் அடித்துக்கொண்டு சிவப்பாகத்தான் வரும். பிறகே தெளிந்த நீர் வரும். கலங்கலாக இருக்கிறதே என்று புதுவெள்ளத்தைக் கரிப்பதில்லை நாம். அதைத்தான் அனைவரும் செய்ய வேண்டும்.

மீண்டும் ஒருமுறை வாய்ப்பளித்த தேன்கூடு + தமிழோவியம் குழுவினருக்கு எனது நன்றி. போட்டியில் கலந்து கொண்ட வாக்களித்த கருத்தளித்த நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றியும் வாழ்த்துகளும்.

அன்புடன்,
கோ.இராகவன்

Thursday, October 26, 2006

01. கேடிசி பிஆர்சி தூத்துக்குடி

எத்தனையோ தீபாவளிகளுக்குப் பெறகு தூத்துக்குடியில மறுபடியும் தீபாவளி கொண்டாடினேன். என்னைய வளத்த அத்தையோடயும் மாமாவோடயும். பொறந்த ஊருக்குப் போறதுல அப்படியொரு மகிழ்ச்சி. ஆனா பாருங்க....நான் தூத்துக்குடிக்குப் இந்திய ரயில்வே துறை ரொம்பவும் விருப்பமில்லை போல இருக்கு. நின்னுக்கிட்டு போற பெட்டியில இருந்து தூங்கிக்கிட்டுப் போற குளுகுளு பெட்டி வரைக்கும் டிக்கெட் தர முடியாதுன்னு மறுத்துட்டாங்க. என் மேல இருக்குற தனிப்பட்ட ஆத்திரத்த லாலு பிரசாத் யாதவ் இப்படிக் காட்டியிருக்க வேண்டாம். என்ன ஆத்திரம்னு கேக்குறீங்களா? அத அங்க கேக்க வேண்டியதுதான...ஆனா அவரு அதெல்லாம் ஒன்னுமில்லை. என்னைய அவருக்குத் தெரியவே தெரியாதுன்னு சாதிப்பாரு. சரி. உலகத்துல பலர் அப்படித்தான். விடுங்க.

அடுத்து என்ன செய்ய? சொகுசுப் பேருந்துகள். கே.பி.என், ஷர்மா அது இதுன்னு ரெண்டு மூனு இருக்கே. ஆனா பாருங்க....அந்த வண்டியெல்லாம் மதுர வரைக்குந்தான். சரி. மதுரைக்குப் போயி தூத்துக்குடி வண்டி பிடிச்சாப் போச்சுன்னு நெனச்சேன். நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லைன்னு கவியரசர் இவங்கள நெனச்சுத்தான் பாடியிருப்பாரு போல. டிக்கெட் இல்லைன்னு வெரட்டி விட்டுட்டாங்க. உண்மைதாங்க. இந்திரா நகர் கே.பி.என் டிராவல்ஸ் அலுவலகத்துல கொஞ்சம் அளவுக்கு மீறியே பேசுனாங்க. சரிதான் போங்கன்னு கெளம்பி வந்துட்டேன். அந்த ஆத்திரத்தைத் தனிக்க பக்கத்துல இருந்த அடையாறு ஆனந்த பவன்ல காக்கிலோ பாவக்கா சிப்சு வாங்கிக்கிட்டேன். அதத்தான நொறுக்க முடியும்.

மக்களுக்காக மக்களால் நடத்தப்படுறதுதான் அரசாங்கமாமே! அப்படிப்பட்ட கர்நாடக தமிழக அரசுப் பேருந்துகளைத்தான் அடுத்து நெனச்சேன். ஆனா அவங்களும் வண்டி பொறப்படுறதுக்குச் சரியா பத்தே பத்து நாளைக்கு முன்னாடிதான் டிக்கெட் தருவாங்களாம். அதுவும் பண்டிகைக்காலங்குறதால விடியக்காலைல அஞ்சரைக்கே வந்தாத்தான் ஏதாவது தேறும்னு சொல்லீட்டாங்க. என்ன செய்ய? நம்ம நண்பர் பிரதீப்பு மதுரக்காரரு. அவருக்கு ஒரு அலைபேசி (நன்றி குமரன்) போட்டுக் கேட்டேன். அவரும் அந்த பொழுதுல மதுரைக்குப் போறவராம். ஆனா ஐதராபாத்துல இருந்து. அவரோட தம்பி பெங்களூர்ல இருந்து மதுரைக்குப் போகனும். ரெண்டு பேரும் ஒன்னா டிக்கெட் எடுத்து போயிட்டு வந்துட்டா வசதியாயிருக்குமுன்னு முடிவு செஞ்சி டிக்கெட் எடுக்குற லேசான வேலையை மட்டும் அவரோட தம்பி ராஜ் தலையில கட்டினோம்.

டிக்கெட் எடுக்க வேண்டிய அன்னைக்கு நாலரை மணிக்கு என்னோட அலைபேசியில அலாரம் வெச்சி எழுந்திருச்சி, ராஜக் கூப்பிட்டு எழுப்பி டிக்கெட் எடுக்க விரட்டினேன். அஞ்சர மணிக்கு வரிசையில நின்னவன் விடுவிடுன்னு முன்னேறி பத்தர மணிக்கெல்லாம் ரெண்டு டிக்கட் எடுத்துட்டான். கடைசி வரிசைதான். அதெல்லாம் பாத்தா முடியுமா? திருநவேலி போற வண்டியில திருநவேலிக்கு டிக்கெட் எடுத்து மதுரையில எறங்கத் திட்டம். அதே மாதிரி பிரதீப்போட மாமா மதுரையில எங்க ரெண்டு பேருக்கும் திரும்பி வர டிக்கெட் எடுத்துட்டாரு. அப்பாடி.......ஒரு வழியா ஏற்பாடுகள் முடிஞ்சது.

திருநவேலி வண்டியோ மதியம் மூனரை மணிக்கு. மதுரைக்கு ரெண்டு ரெண்டரைக்குப் போகும். ஆபீசுக்கு பாதி நாள் மட்டம் போட்டுட்டு வியாழக் கெழமை...அதாவது அக்டோபர் 19ம் தேதி பொறப்பட்டோம். கடைசி வரிசை. சீட்டு சரியில்லை. ஒரு பக்கமா நெளிஞ்சிருக்கு. வண்டி ஓடாம நிக்கும் போதே சீட்டு ஆடாம நிக்க மாட்டேங்குது. சரி. ஊருக்குப் போகனும். அதுக்கு இதெல்லாம் நடக்கனும். நடக்கட்டும்.

இன்னும் நாலு பேரு டிக்கெட் எடுத்திருக்காங்க. ஆனா அதுல மூனு பேரு வந்தாச்சு. நாலாவது ஆளு வந்துக்கிட்டே இருந்தாரு. வண்டி கொஞ்ச நேரம் பொறுத்துப் பாத்தது. "டிரைவருங்குற பேர்ல நாயக் கூட்டீட்டு வந்திருக்கேன். அதுனால என்னால ஒன்னும் செய்ய முடியாதுன்னு" சொல்லீட்டாரு நடத்துனரு. சரீன்னு அந்த சீட்ட இன்னொருத்தருக்குக் குடுத்து காசி வாங்கீட்டாங்க. விடுவாரா நடத்துனரு. பேச வேண்டிய பேரத்தப் பேசி அவரு கணக்குக்கு ஒரு நூறு ரூவாய வாங்கிக்கிட்டாரு. வாங்கீட்டு "ஒரு கட்டுக்கு ஆச்சு"ன்னாரு. அதுல கருத்து வேற சொன்னாரு. "சார். நாங்க குடிக்கிறது பசிக்கோ போதைக்கோ இல்ல. வாசனைக்குத்தான். அந்த வாடைக்குத்தான் குடிக்கிறது. பசிக்கோ போதைக்கோ குடிக்கிறோம்னு தப்பா நெனக்கக் கூடாது"ன்னு தன்னிலை வெளக்கம் குடுத்து அவரு நல்லவருன்னு சொல்லீட்டாரு. சரீன்னு நம்ம ஒத்துக்கலைன்னா இன்னும் பெரிய விளக்கமெல்லாம் குடுப்பாருன்னு அவரு சொன்னத அப்படியே ஏத்துக்கிட்டோம்.

பெங்களூர்ல எங்க பாத்தாலும் கூட்டம். மூனரைக்குப் பொறப்பட்ட வண்டி சரியா ரெண்டே மணி நேரங் கழிச்சு அஞ்சரைக்கு பெங்களூர விட்டு வெளிய வந்திருச்சு. அப்புறம் சர்ருன்னு ஓடுச்சு...ரொம்பப் பேரு நின்னுக்கிட்டும் கீழ உக்காந்து கிட்டும் வந்தாங்க. கொஞ்சப் பொம்பளைங்க டிரைவருக்குப் பின்னாடி இருக்குற கேபின் சீட்டுல உக்காந்து கிட்டும் வந்தாங்க. எப்படியோவது பண்டிகைக்கு ஊருக்குப் போனாச் சரிதான்னு. அவங்கவங்க பகுத்து அவங்கவங்களுக்கு.

வழியில பேர் தெரியாத ஊர்ல பேர் தெரியாத ஓட்டல்ல சாப்பிட நிப்பாட்டினாங்க. பரோட்டா ரொட்டி தவிர ஒன்னும் சரியாயில்ல அங்க. ஒரு பரோட்டாவும் முட்டைக் குருமாவும் வாங்கிச் சாப்பிட்டோம். சில்லி காக்காவா சிக்கனான்னு தெரியலை. எதுவாயிருந்தா என்ன...தின்னாச்சு. அவ்வளவுதான். எனக்கு அப்பப் பாத்து டீ குடிக்க அடங்காத ஆசை. அத்தன சின்ன பிளாஸ்டிக் கப்ப நான் அப்பத்தான் பாக்குறேன். அதுல நெறைய நெறைய நொறையா வர்ர மாதிரி கொதிக்கிற டீய ஊத்திக் குடுத்தாரு டீக்கடைக்காரரு. என்னவோன்னு குடிச்சு வெச்சேன். அவ்வளவு நல்லாயிருக்கல.

இருட்டுற வரைக்கும் Lord of the rings புத்தகம் படிச்சிக்கிட்டிருந்தேன். அப்புறம் லைட்ட அணைச்சிட்டு சண்டைக்கோழி படம் வீடியோவுல ஓடிச்சு. மக்கள் ரசிச்சு ரசிச்சு பாத்தாங்க. நானும் அப்பப்ப பாத்துக்கிட்டேன். ரெண்டரை மணிக்கு அலாரம் வெச்சுட்டுத் தூங்கினேன். மதுரையில நான் மூனு மணிக்கு எறங்கி அரை மணி நேரத்துல பஸ் ஏறுனாக் கூட ஆறரைக்கெல்லாம் தூத்துக்குடி போயிரலாம்ல. போனேனா?

தொடரும்....

Friday, October 06, 2006

தென்னைமரத்தில் 9/11 பெங்களூரில் நெரி

நெரி கட்டீருச்சுன்னு சொல்வாங்க. கேள்விப்பட்டிருக்கீங்களா? தூத்துக்குடி மாவட்டத்துல பதவளை கட்டீருக்குன்னு சொல்வாங்க. கைகால்ல எங்கையாவது புண்ணு வந்தா பக்கத்துல எங்கையாவது கட்டிகட்டிக்கிரும். அதத்தான் நெரி கட்டுறதுன்னு சொல்வாங்க. தென்னமரத்துல தேள் கொட்டுனா பனமரத்துல நெரி கட்டுச்சாங்குற சொலவடை ரொம்பவே பிரபலம். அந்த மாதிரி ஒரு தகவல்தான் நான் சொல்லப் போறது.

மூனு வாரத்துக்கு முன்னாடி ஒரு coferenceல் கலந்து கொண்டிருந்தேன். அலுவலகப் பணி தொடர்பாதான். நெறைய மென்பொருள் நிறுவனங்களில் இருந்தெல்லாம் ஆளுங்க வந்திருந்தாங்க. ஒவ்வொருத்தரும் அவங்களுக்குத் தெரிஞ்ச மென்பொருளியல் பத்தி எடுத்து விட்டுக் கிட்டு இருந்தாங்க. மொதல்ல பெரிய பெரிய ஆளுங்க. பல முன்னணி நிறுவனங்கள்ள இருக்குற முன்னணி ஆளுங்க நாலஞ்சு பேருங்க மேடையில பல தகவல்களைச் சொல்லிக்கிட்டு இருந்தாங்க. கோட்டு சூட்டு போட்டுக்கிட்டு ஜம்முன்னு லேப்டாப்கள வெச்சிக்கிட்டு விதவிதமா படம் காட்டிக்கிட்டு இருந்தாங்க.

அப்ப திடீர்னு ஒரு அறிவிப்பு. ஒருத்தர மேடைக்குக் கூப்பிட்டாங்க. ரொம்ப எளிமையா இருந்தார். நல்லாப் படிச்சவருன்னு தெரிஞ்சது. ஆனா ஆளப் பாத்தா அடிச்சிப் போட்ட மாதிரி நொந்து நூலாகி அந்து அல்வாவாகியிருந்தாரு. அவரு இந்த conference நடத்துற அமைப்புக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுக்க வந்திருந்தாரு. அந்த அமைப்பு லாபம் கருதி நடத்தும் அமைப்பு இல்லை. அதற்குக் கண்டிப்பாக நிதி தேவை. ஆனா இவர் ஏன் ஒரு லட்சம் கொடுக்கனும்?

அதையும் அவரே சொன்னாரு. அவரோட பெயரைச் சொல்லலை நான். அவர் ஒரு ஏழைக் குடும்பத்துல இருந்து முன்னுக்கு வந்தவர். அவரோட அப்பா வீடுவீடா டீத்தூளு வித்துக்கிட்டு இருந்தவராம். இவருதான் வீட்டுல ரெண்டாவது. இவருக்கு ஒரு அக்கா. அப்புறம் ரெண்டு தங்கச்சிங்க. கடைசியா ஒரு தம்பி. இவருக்கும் இவரு தம்பிக்கும் கிட்டத்தட்ட பத்துப் பன்னிரண்டு வயசுக்கும் மேலயே வித்யாசம். இவரு படிக்கிறதுக்காக இவருக்கு இவங்க அக்கா படிப்பை விட்டுட்டு வேலைக்குப் போனாங்க. இவரும் படிச்சாரு. நல்லாவே படிச்சாரு. வெளிநாடெல்லாம் போனாரு. குடும்பமும் முன்னேறிச்சு. மாசத்துக்கு முப்பது நாளும் ஏரோப்பிளேன்ல பறக்குற அளவுக்குப் பெரிய ஆளானாரு. தங்கச்சி தம்பிகள படிக்க வெச்சாரு. எல்லாரும் நல்லா வந்தாங்க.

கடைசித் தங்கச்சியும் தம்பியும் மென்பொருள் துறைக்குள்ள நொழைஞ்சாங்க. அதுலயும் அந்தத் தம்பி ஷஷாங்க் ரொம்பவே புத்திசாலியாம். அண்ணனுக்கும் அவனுக்கும் வயசு வேறுபாடு நிறைய இருந்தாலும், வெளிநாட்டுல இருந்தாலும் நல்ல நெருக்கமா இருந்து தெரிஞ்சிக்க வேண்டிய உலக நடப்புகளத் தெரிஞ்சிக்கிட்டு நல்லா படிச்சானாம். Wipro நிறுவனத்துல வேலை கெடச்சு நல்ல வேலையும் செஞ்சானாம்.

அவனுக்கும் வெளிநாட்டுக்குப் போறதுக்கு வாய்ப்பு வந்தது. அவன் வேல பாக்குற கம்பெனியில இருந்து. அமெரிக்கா அவனையும் வரவேற்றது. அவன் அங்கு சென்ற நிறுவனம் WTC கட்டடத்தில் இருந்தது. அவன் தலையெழுத்து. அந்த 9/11 கோரச்சம்பவம் நடந்தது. ஷஷாங்கின் கதை அத்தோடு முடிந்தது. ஆனால் அவனது குடும்பத்தின் கதை?

செய்தியைக் கேட்டு மயங்கி விழுந்தாராம் அவனது தாய். அத்தோடு சரி. இன்னும் மனநிலை தெளியாமல் ஒரு நடைப்பிணமாக வீட்டுக்குள்ளேயே இருக்கிறார். அந்தச் சம்பவத்திற்குப் பிறகு அவர் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. அறுபதுகளில் இருக்கும் அவரது தோற்றம் தொன்னூறுகளில் இருப்பவரைப் போல மாறிவிட்டது. தந்தையோ எப்படியோ உயிரைப் பிடித்துக் கொண்டு மனைவிக்காக இருக்கிறார்.

இவரால் அதற்கு மேல் தாய் தந்தையரை விட்டு இருக்க முடியவில்லை. இந்தியாவிற்குத் திரும்பி விட்டார். ஒரு நல்ல நிறுவனத்திலும் வேலைக்குச் சேர்ந்தார். ஆனால் நிம்மதி? ஷஷாங்கை உலகிலிருந்து அழிக்கத் தீவிரவாதம் என்ற ரப்பர் இருந்தது. ஆனால் இவர்கள் மனதிலிருந்து அழிக்க எந்த ரப்பரையும் எந்த மதத்து ஆண்டவனும் அருளவில்லை. அவன் ஓரிறைவனாக இருந்தாலும் சரி. முப்பத்து முக்கோடி தேவர்களாயும் அவர்களுக்கும் மேலான ஆதிசிவனாக இருந்தாலும் புத்தனாய், அருகனாய் எத்தனை பேரானாலும் சரி.

ஷஷாங்க் எங்கெல்லாம் மகிழ்ந்திருந்தானோ, ஷஷாங்கோடு எவையெல்லாம் தொடர்புடையனவோ அங்கெல்லாம் ஷஷாங்கின் பெயரில் ஏதாவது செய்யத் தொடங்கினார்கள். அவன் படித்த பள்ளிக்கு வகுப்பறைகள். கல்லூரியில் வகுப்பறைகள். அவன் பெயரில் ஒரு கல்வி அறக்கட்டளை. அவன் பணி செய்த மென்பொருள் தொடர்பான உதவிகள். அந்த வகையில்தான் ஒர் லட்ச ரூபாய் நிதியுதவி. இப்படி ஷஷாங்கோடு தொடர்பு கொண்டிருந்த ஒவ்வொன்றையும் தேடித் தேடி ஷஷாங்கைத் தேடிக் கொண்டிருக்கிறது அந்தக் குடும்பம்.

தீவிரவாதத்தை எதிர்ப்பது என்பது தனக்குப் பிடிக்காதவர்களை எதிர்ப்பது மட்டுமே என்று வலைப்பூ வரைக்கும் வந்துவிட்ட நிலையில், அடுத்தவனைச் சொன்னியா...என்னயச் சொல்ல வந்துட்ட போன்ற எண்ணங்களுமே.......அடுத்தவன் எப்படியிருந்தால் என்ன...நான் நல்லவனாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் எப்பொழுது எல்லாருக்கும் வருமோ!

ஒவ்வொரு மதத்திலும் இருக்கின்றவர்களுக்கு ஒரு வேண்டுகோள். குறிப்பாக தங்கள் மதமே சிறந்தது என்று நம்புகின்ற மனிதர்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்களது மதமே சிறந்ததாக இருக்கட்டும். உங்களது மதத்தை அமைதி வழியில் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது. நீங்கள் எதிர்க்காவிட்டாலும் பரவாயில்லை. உங்களோடு உள்ள குற்றவாளிகளை ஆதரிக்காதீர்கள். அடுத்தவன் ஒழுங்கா என்று கேட்பது மிக எளிது. நாம் ஒழுங்கு என்று அடுத்தவனை நம்ப வைப்பது மிகக் கடினம். நான் சொல்ல வந்தது என்னவென்று எல்லாருக்கும் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். புனிதப் பசுவோ, புனிதமில்லாத கொசுவோ...தோன்றியதைச் சொல்லி விட்டேன்.

வேதனையுடன்,
கோ.இராகவன்

Tuesday, October 03, 2006

தேன்கூடு போட்டி: விடுதலை - சிறுகதை

உருளைக் கிழங்கு போண்டாவை சாஸில் தோய்த்து மகனுக்கு ஊட்டிக் கொண்டிருந்தாள் அந்த சேட்டுப் பெண்மணி. அவுக் அவுக்கென்று வாய் நிறைய அமுக்கிக் கொண்டிருந்தான் அந்த உருண்டைப் பையன். பகலில் ரயிலில் போகின்றவர்கள் பொழுது போக்குவது இப்படி வாங்கித் தின்றுதான். திறந்த கதவருகில் நின்று கொண்டிருந்த சசிக்கு இந்தக் காட்சி புன்னகையை வரவழைத்தது.

"ஹே! போண்டாவாலா! இதர் ஆவோ!" வாங்கிய போண்டா பத்தாமல் இன்னும் வாங்கக் கூப்பிட்டாள் அந்தப் பெண்மணி. "போண்டா தின்னும் போண்டா" கேணக் கவிதை படித்தது சசியின் மனம்.

இப்படித்தான் சசியின் அம்மாவும் ஊட்டி ஊட்டி வளர்த்தார். சசிக்கு உளுந்த வடை என்றால் ரொம்பப் பிடிக்கும். வீட்டில் செய்ததை விடக் கடையில் வாங்கினால் இன்னமும் பிடிக்கும். வாரத்துக்கு இரண்டு மூன்று முறை பள்ளிக்கூடத்திலிருந்து வருகையில் வாழையிலையில் கட்டித் தெருமுக்கு டீக்கடை வடை காத்திருக்கும். மிளகாயும் புளியும் உப்பும் மட்டும் போட்டரைத்த ரொம்பவும் உறைத்த சண்டாளச் சட்டியினோடு தொட்டுத் தருவாள் அம்மா.

அந்த அம்மா ஒரு நாள் சொன்னாள். "எனக்கு சசிகுமார்னு மகனே பொறக்கலைன்னு நெனச்சுக்கிறேன். எனக்குப் பொறந்தது ஒரு மகதான். ஒனக்கும் எனக்கும் தொடர்பே கெடையாது. நீ வெளியில போடா! நான் செத்தாக் கூட இந்தப் பக்கம் வரக்கூடாது!" நினைக்கையிலேயே சசியின் முகம் இறுகியது. அழுக விரும்பாமல் அந்த சேட்டம்மாவின் மீது பார்வை திரும்பியது.

"தேக்கோ தேக்கோ....பூரா டிரஸ் மே....." மகனின் டிரஸ்சில் விழுந்த சாஸைத் துடைத்து விட்டார் சேட்டப்பா. நீளமான வெள்ளைத் துண்டு சுருண்டு கிடந்தது. பெயரளவில்தான் அது வெள்ளைத் துண்டு. அழுக்கு அப்பட்டமாகத் தெரிந்தது. துவைக்கவோ மாட்டார்களோ! வடக்கில் ஒழுங்காகக் குளிக்க மாட்டார்களாமே! அந்த அழுக்குத் துண்டை வைத்து மகனின் சட்டையைத் துடைத்து விட்டார். "பானி தேதோ" மனைவியிடம் மகனுக்குத் தண்ணீர் குடுக்கச் சொன்னார்.

வெளியே போனால் சசிக்கு அப்பா கண்டிப்பாக பழரசம் வாங்கித் தருவார். திருநெல்வேலி ஜங்சனில் ஒரு பழரசக் கடை உண்டு. பழங்களையெல்லாம் ஒன்றாகக் கலக்கி அதோடு கலக்க வேண்டியதைக் கலந்து செக்கச் செவேலென்று பழரசம் கண்ணாடித் தம்ளர்களில் கிடைக்கும். வெயிலுக்குக் குடிக்கக் குளுகுளுவென்றும் இனிப்பாகவும் இருக்கும். குடித்த பிறகு வாயோரத்தில் பழரசம் ஒட்டியிருக்கும். அப்பாதான் பேண்ட்டின் பின் பாக்கெட்டில் வைத்திருக்கும் கர்ச்சீப்பை எடுத்து வாய் துடைத்து விடுவார். ஏனென்றால் வீட்டில் தெரிந்தால் பழரசம் வாங்கிக் கொடுத்ததற்குத் திட்டு விழுகுமே. பழரசம் வாங்கிக் கொடுத்தால் வீட்டில் சொல்லக் கூடாது என்று அப்பாவுக்கும் மகனுக்கும் எழுதாத ஒப்பந்தம். ஜங்சனில் குடித்த பழரசத்தின் இனிப்பு சமயநல்லூர் வரை இருக்குமாதலாம் சசியும் ஒப்பந்தத்தில் மானசீக கையெழுத்திட்டிருந்தான்.

அந்த அப்பா ஒரு நாள் சொன்னார். "சீச்சீ! மானத்த வாங்கீட்டியேல...ஊரு மூஞ்சீல முழிக்க முடியுமால.....கங்காணாமப் போயிரு.....இருந்து எங்க பேரையும் கெடுக்காத. ஊராரு மூஞ்சீல நாங்களாவது முழிக்கனும். சொத்துல சல்லிக்காசு கெடையாது ஒனக்கு. அப்படித்தாம்ல உயிலும் எழுதப் போறேன். பாசங் கீசம்னு இங்குட்டு வந்துறாத. அப்புறம் அந்தப் பாசத்தக் காட்ட நாங்க இருக்க மாட்டோம்."

லேசாகக் கண்ணீர்க் கோடு வழிந்து ரயில் காற்றில் உடனே காய்ந்து போனது. ஒரிசாக் காடுகள் மிக அடர்த்தியாக வெளியே தெரிந்தன. ஏதோ ஒரு பட்டிக்காடு அது. ஓலைக்குடிசை வேய்ந்த வீடுகள் நிறைய இருந்தன. வெளியே புழுதியில் பிள்ளைகள் கூடி விளையாடிக் கொண்டிருந்தார்கள். இப்படிக் கூடி விளையாடியவள்தாள் சசியின் தங்கை ராஜேஸ்வரி. அம்மாவும் அப்பாவும் திட்டிய அந்த நாளில் அழுது கொண்டே வீட்டிற்குள் ஓடியவள்தான். அதற்குப் பிறகு பார்க்கவேயில்லை. எப்படி இருக்கிறாளோ! கல்யாணம் ஆயிருக்குமோ! குழந்தைகளும் ஆகியிருக்குமோ! பார்க்க வேண்டும் என்ற ஆவல் வந்தது!

பக்கத்தில் நின்றிருந்த ஏஞ்சல் இடித்தாள். "ஏடி! சசிகலா....அங்க பாருடி....ஹீரோ ஒருத்தன் வர்ரான். கும்முன்னு இருக்கான் பாரு. நார்த் இண்டியன் மாதிரி இருக்கு. நேரா இங்கதான் வர்ரான். அப்படியே தள்ளிக்கிட்டு போயிருவோமா!" கிக்கிக்கெனச் சிரித்தார்கள் ஏஞ்சலும் சசிகலாவும். காக்கைக் கூட்டிலிருந்து விடுதலை வாங்கிய குயில் குஞ்சுகளாய்.

அன்புடன்,
கோ.இராகவன்