Thursday, May 26, 2005

மனைவி கணவனுக்குக் கட்டிய சேலை

கொஞ்ச நாட்கள் முன்பு ஒரு சேவை மையத்திற்குச் செல்ல நேர்ந்தது. ஒரு நண்பருடன் சென்றிருந்தேன். அது மனமுறிவு கொண்டவர்களுக்கான சேவை மையம்.

அங்கே ஒரு விசித்திரப் பிரச்சனை. இதற்குத் தீர்வு சொல்வது மிகக் கடினம். ஆனால் பிரச்சனைக்குறியவரின் மனைவியே தீர்வு கண்டிருந்தார். பிரச்சனைக்குரியவருக்கு வயது எழுபதை நெருங்கிக் கொண்டிருந்தது. மூன்று பிள்ளைகள். அவர்கள் வழியாகப் பேரப் பிள்ளைகள். எல்லாம் மகிழ்ச்சியான குடும்பம். சிறுவயதில் தெருவோரத்தில் மிகவும் துன்பப்பட்டு படிப்படியாக முன்னேறியவர். இப்பொழுது முதுமைக்குத் தேவையான ஓய்வு. அப்படியிருக்கையில் ஒரு பிரச்சனை.

அவருக்குக் கொஞ்ச நாட்களாகவே பெண்ணாக வாழ வேண்டுமென்று விருப்பம். எப்படி வந்தது? ஏன் வந்ததென்று தெரியவில்லை. ஆனால் அப்படியொரு விருப்பம். உடலுறவு வகையில் அல்ல. மாறாக ஒரு குடும்பத்தலைவராக இருந்த அவருக்குக் குடும்பத் தலைவியாக இருக்க ஆசை. சேலை கட்டிக் கொண்டு, சமையல் செய்து கொண்டு, வீட்டு வேலைகளையும் நிர்வாகங்களையும் கவனித்துக் கொண்டு குடும்பத் தலைவியாக இருக்க ஆசை.

இதென்ன கூத்து! என்ன செய்வது? மனைவியிடம் அப்படியே சொல்லிவிட்டார். அவரும் படிக்காதவர். முடிவுக்கு வரமுடியவில்லை. இறுதியில் இருவரும் சேவை மையத்தை அணுகியிருக்கின்றார்கள். தேர்ந்த மருத்துவரை வைத்துச் சோதித்திருக்கிறார்கள். பிரச்சணையின் தொடக்கத்தைக் கண்டுபிடித்தார்கள். அவர் தெருவோரச் சிறுவனாக இருந்த பொழுது வளர்ந்த தெருவோர வாலிபர்கள் அவரை வன்புணர்ந்திருக்கின்றார்கள். பாவம். அதனுடைய விளைவு...இந்த வயதில் இப்படி. அப்பொழுது அவர்கள் அவரை பெண்ணாக நினைத்துச் செய்தது அவர் மனத்தின் ஓரத்தில் எங்கோ படிந்திருந்திருக்கிறது. அது இத்தனை வருடங்களாக முகங்காட்டாமல் வயோதிகத்தில் காட்டியிருக்கிறது.

அவரைப் புரிந்து கொண்ட மனைவி, வீட்டில் இருக்கும் பொழுதுகளில் சேலையும் பாவாடையும் அணிந்து கொள்ளவும் வீட்டு அடுக்களைப் பொருப்புகளைப் பார்த்துக் கொள்ளவும் ஒப்புதல் கொடுத்துள்ளார். அவர் இதிலிருந்து விடுபட மனப்பயிற்சியும் மருத்துவப் பயிற்சியும் எடுத்து வருகிறார். அவருக்கு அந்தக் குடும்பம் ஒத்துழைத்து வருகிறது. புரிந்து கொண்ட இல்வாழ்க்கை என்பதால் இது சாத்தியமாகியிருக்கிறது. அந்தத் துணிகர மனைவியின் மீது மதிப்பும் மரியாதையும் கூடி விட்டது.

Tuesday, May 24, 2005

பொங்கிய பால் தாக்கரே

பால் பொங்கியே விட்டது. பின்னே? மராட்டியப் பத்திரிகைகள் சும்மாயிருக்க வேண்டியதுதானே! பால் தாக்கரே குடும்பத்தோடு வெளிநாடு போவார். சுற்றிப் பார்ப்பார். அதையெல்லாமா பத்திரிகையில் போடுவது. வெளிநாடு சென்று சுற்றிப் பார்ப்பது அவரவர் சொந்த விஷயம். அப்படி இவர் வெளிநாட்டுக்குப் போவதையும் சிவசேனா தொண்டர்கள் வெயிலில் களப்பணி செய்வதையும் பத்திரிகையில் போட்டால் பால் பொங்காமலா இருக்கும்?

இந்தியாவிற்கு வந்த பிறகு பத்திரிகைகளை ஒரு பிடிபிடித்து விட்டார். அதுவும் சிவசேனைக் கட்சியின் சாம்னா பத்திரிகை வழியாகவே. முள்ளைக் கொண்டு முள்ளைக் குத்துவது போல. "இளைய பத்திரிகையாளர்கள் நிறைய வந்து விட்டதால் சிவசேனை மீது தாக்குதல் அதிகரித்து விட்டது. குழந்தைகளோடு வெளிநாடு செல்வது தனிப்பட்ட விஷயம். இந்த வெளிநாட்டுப் பயணங்கள் உலக அரசியல் நிகழ்வுகளைக் கற்றுக் கொள்ள வசதியாக இருக்கும். மற்ற தலைவர்கள் எல்லாம் வெளிநாடு போகின்றார்கள். அதனால் அவர்களுக்கும் நாட்டிற்கும் தொடர்பு அற்றுப் போய் விட்டதா என்ன?"
பால் தாக்கரேயின் நகைச்சுவை உணர்வு அவர் ஆத்திரத்தில் இருக்கையில்தான் அதிகரிக்கிறது. வெளிநாட்டுப் பயணங்களில் உலக அரசியலை அவர் எவ்வளவு கற்றார் என்று சொல்லும் பொழுது நமக்கு நிறுத்த முடியாத சிரிப்பும் அதனால் வயிற்று வலியும் வருகிறது.

பால் தாக்கரே புளித்த பால்.

Monday, May 23, 2005

ஜோதி அணைந்த பாசு

பீகாரை நாம் விட நினைத்தாலும் பீகார் நம்மை விட மாட்டேன் என்கிறது. பீகாரில் குடியரசுத் தலைவர் ஆட்சி. சட்டப் பேரவை கலைக்கப் பட்டு விட்டது. பலருக்கு மகிழ்ச்சி. பலருக்கு எரிச்சல். என்ன செய்வது! அரசியலாயிற்றே!

கலைத்ததை நியாயப் படுத்தி ஒரு கூட்டத்தாரும் அநியாயப் படுத்தி ஒரு கூட்டத்தாரும் கூக்குரலிட்டுக் கொண்டிருக்கின்றார்கள். நீதிமன்றத்தை நாடப் போவதாக பாஜாக சொல்கிறது. ஆனால் அனைவரையும் விட நகைச்சுவை உணர்வு தமக்கே அதிகம் என்று ஜோதிபாசு நிருபித்திருக்கிறார்.
லல்லுவும் பாஸ்வானும் கூட்டணி வைத்துக் கொண்டிருந்தால் இந்த நிலை வந்திருக்காதாம். அதனால் கலைப்பு நியாயமானதாம்! ஏன் நிதிஷ¤ம் பாஸ்வானும் கூட்டணி வைத்துக் கொள்ளக் கூடாதா? அப்படி நடந்தால் அது குதிரை பேரம். அதைத் தடுக்க வேண்டும். ஆனால் குதிரையோ கழுதையோ எந்தப் பேரமும் நடக்கட்டும் ஆனால் லல்லுவும் பாஸ்வானும் கூட்டணி வைத்துக் கொள்ளலாமா. இந்த அரசியல் பிதாமகரை நினைக்கும் பொழுது எனக்குத் தோன்றுவது....ச்ச்சீ!

பீகாரும் குதிரை வியாபாரமும்

பீகாரில் குதிரை வியாபாரம் நடக்கிறது என்று கூப்பாடு போடுகிறார்கள். ஆளாளுக்கு கத்தல். எப்படியோவது லல்லு பதிவிக்கு வரவேண்டுமென்று செஞ்சட்டையர்கள் விரும்புகிறார்கள். அதனால் வேறு யாரும் பதவிக்கு வரக்கூடாது. அல்ல....அல்ல....பிஜேபி ஆதரவோடு நிதீஷ் பதவிக்கு வரக்கூடாது. அதனால் லல்லு வரலாம். அடக் கொடுமையே!

பிஜேபியின் கொள்கைகளில் ஏற்பு மறுப்பு என்பது வேறு. தேர்தல் முடிவுகள் என்பது வேறு. இந்த இழுபறி நிலையில் நிதீஷ் முதல்வராக பதவி ஏற்பதில் என்ன தவறு? அவரது ஆட்சி எப்படியிருக்கும் என்று இப்பொழுதே சொல்ல முடியாது. நாள்படத்தான் தெரியும். இழுபறி நிலை நீடிக்கக் கூடாது என்று எல்லாரும் விரும்புகிறார்கள். நிதீஷுக்கு குதிரை வியாபாரத்தில் லாபம் கிடைக்கக் கூடாது என்பது காங்கிரசின் ஆசை. அதற்காக குடியரசுத் தலைவர் ஆட்சிக்குப் பரிந்துரை செய்கிறது. மீண்டும் தேர்தல் வந்தால் ஏதாவது தேராதா என்ற ஏக்கம்.

முஸ்லிம்தாம் முதல்வராக வேண்டும் என்று பாஸ்வான் குரல். யார் வேண்டாம் என்றார்கள்? எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்தால் யாரும் வரலாமே. அவர் எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தால் என்ன? மதத்தை முதலமைச்சர் பதவிக்குத் தகுதியாக்குவதெல்லாம் ஓட்டுக்குத்தான். இவருக்கு இரண்டு மனைவியராம். ஒருவர் தாழ்த்தப் பட்ட சமூகம் (அப்படிச் சொல்வதே பாவம்) சேர்ந்தவராம். அவர் பட்டிக்காட்டில் சாணி தட்டிக் கொண்டுதான் இருக்கிறாராம். மற்றொரு மனைவி உயர் சமூகத்தைச் சேர்ந்தவராம் (குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்). அவர்தான் டில்லியில எல்லா வசதிகளோடும் இருப்பவராம். ம்ம்ம்ம்ம்ம். அரசியல் வியாதிகள்.

ஆனது ஆகிவிட்டது. நிதிஷ் வரட்டும். என்ன நடக்கிறதென்று பார்க்கலாம். சரியோ சரியில்லையோ...பீகார் மக்கள் தீர்மானிக்கட்டும். லாலுவின் கைகளிலிருந்து பீகார் தப்பித்தே ஆகவேண்டும்.

Sunday, May 22, 2005

டிவி குவிசும் ஆசையும்

ஸ்டார் தொலைக்காட்சியில் சித்தார்த்த பாசு இந்தியாவின் அறிவாளிக் குழந்தையைக் கண்டுபிடிக்கும் வினாடிவினா நிகழ்ச்சியை நடத்துகிறார். இந்த நிகழ்ச்சி ஒரு தோராய மதிப்பீடுதான் என்பது எனது கருத்து. இந்த நிகழ்ச்சியைப் பற்றித் தெரியாத அறிவாளிக் குழந்தைகள் எத்தனையோ உண்டு. ஆனாலும் பார்க்க விறுவிறுப்பான நிகழ்ச்சி.

பொதுவாகவே இந்த நிகழ்ச்சியில் மும்பை, பூனே, தில்லி ஆகிய ஊர்களிலிருந்து கலந்து கொள்ளும் மாணவர்களே நிறைய. காரணம் நிகழ்ச்சி நடைபெறும் இடமும் மும்பை என்பதாலும் நடத்தும் தொலைக்காட்சிகள் தேசியத் தொலைக்காட்சிகள் என்பதாலும். நல்லவேளை பாசு வங்காளியாகப் போனதால் நிகழ்ச்சி இந்தியில் நடக்காமல் ஆங்கிலத்தில் நடக்கிறது.

நேற்று தற்செயலாக இந்த நிகழ்ச்சியைப் பார்க்க நேரிட்டது. அதில் இரண்டு சிறுவர்கள் மோதிக்கெண்டிருந்தார்கள். அல்லது பங்கு பெற்றுக்கொண்டிருந்தார்கள். அரையிறுதி நிகழ்ச்சி. ஒரு சிறுவனின் பெயர் சச்சித். மற்றொருவன் அஷ்வத். இருவருக்கும் கடுமையான போட்டி. ஒரு கேள்விக்கு இவன் விடை சொன்னால், அடுத்த கேள்விக்கு அவன் விடை சொல்கிறான். பாசுவும் கேள்விக் கணைகளை பல துறைகளிலும் கலந்து மாற்றி மாற்றிக் கேட்டுச் சலித்து விட்டார்.

நடுநடுவே சிறுவர்களின் பெற்றோர்களைக் காட்டினார்கள். அவர்கள்தான் அதிக பரபரப்பில் இருந்தார்கள். இந்தச் சிறுவர்களிடம் அவ்வளவு பரபரப்பு இல்லை. மாறாக மற்றொருவர் விடை சொன்னால் கை தட்டிப் பாராட்டும் நல்ல பண்பு இருந்தது. இதற்காகவே அவர்களைப் பாராட்ட வேண்டும். கடைசியில் ஒரு சிறுவன் வெற்றி பெற்றான். மற்றொரு சிறுவன் உடனே அவனுக்குக் கை கொடுத்து தோளில் கை போட்டு பாராட்டினான். கண்கொள்ளாக் காட்சி. நஞ்சு இல்லாப் பிஞ்சு மனதில் நல்லவைகளைப் பதிக்க வேண்டும் என்று சொல்லாமலா சொன்னார்கள்.

பெற்றோர்களையும் மேடைக்கு அழைத்தார்கள். வென்ற சிறுவன் மேடைக்கு வந்த தாயை ஓடிச் சென்று கட்டிக் கொண்டான். நல்ல தாய் மகன் உறவு. எத்தனை பேருக்கு இது வாய்க்கிறது? உண்மையான பிள்ளை வ்ளர்ப்பு பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடைவெளியை உண்டாக்காது. அது நல்ல முடிவுகளையே கொடுக்கும்.

இதையெல்லாம் பார்க்கும் பொழுது எனக்கு ஒரு ஆவல். அடடா! எங்கிருந்தோ மாணவர்கள் கலந்து கொள்கிறார்களே. நமது தமிழ்நாட்டு மாணவர்களும் கலந்து கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும். பொதுவாகவே தமிழகத்தில் பிள்ளைகளைப் படிக்கச் சொல்லிக் கட்டாயப் படுத்தும் பெற்றோர்களே நிறைய. அறிவாளிகளை உருவாக்குவதை விட, புத்தகப் புழுக்களை உருவாக்கும் பெற்றோர்களே நிறைய. இந்த மாதிரி நிகழ்ச்சிகளில் ஊக்குவிப்பதெல்லாம்.............ம்ம்ம்ம்ம்ம். ஆதங்கம்.

அப்பொழுது சித்தார்த்த பாசு அறிவித்தார். போட்டியில் வெற்றி பெற்றது சென்னை மாணவனாம்! அட நம்மூரு! எனது முகத்தில் புன்னகைக் கீற்று. உள்ளத்தில் சின்னதாய் துள்ளல். இன்னொரு மாணவன் மும்பையைச் சேர்ந்தவன். பொதுவாகவே இனப்பாகுபாடு பார்க்கக் கூடாது என்பார்கள். அதுவும் குழந்தைகள் விஷயத்தில். ஆனாலும் நம்மூர் மாணவன் வெற்றி உவப்பில் ஓங்கியே இருக்கிறது.

Thursday, May 19, 2005

பார்களும் பண்பாட்டு வேர்களும்

நடன பார்களுக்கு மகாராஷ்டிரம் தடை...............என்ன நடக்கிறது? பண்பாடு காக்கின்றார்களா? மராட்டிய முதல்வரின் மகன் திரைப்படங்களில் ஆபாசமாக நடிகைகளை ஆடுவதைத் தடுப்பார்களா? ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் ஏன் தடை செய்யவில்லை. விலை கூடிய சரக்கைத்தான் விற்க வேண்டுமோ!

வெள்ளைக் குர்தா கசங்காமல் குளிர்சாதன அறையில் கும்மாளம் போட்டல் சரி. அதே கும்மாளத்தை ஏழையும் நடுத்தரவர்க்கத்தினனும் சாதாரண அறையில் வண்ண விளக்குகளுக்கிடையில் போட்டால் சட்டம் கைது செய்யுமாம். மூன்று லட்சம் ரூவாய் வரை அபராதம் விதிக்குமாம். மூன்றாண்டு சிறைத்தண்டனையாம். அடப் போங்கய்யா!

பதினாயிரம் பெண்கள் வீதியில் நிற்கின்றார்களே....அவர்களுக்கு என்ன வழி? மராட்டியப் பெண்களுக்கு மட்டும் மறுவாழ்வு தருவார்களாம். சீரழிக்கும் பொழுது தோன்றாத இனம் மறுவாழ்வில் தெரிகிறது. அதிகார வர்க்கம் அதிக கார வர்க்கமாக நடக்கிறது.

இந்த நடன பார்களும் விபச்சாரமும் சட்டப்படி அனுமதி கொடுக்கப் படவேண்டியவை. அதை விட்டு விட்டு.......

சோதனைப் பதிவு!

அருமை நண்பர்களுக்கு வணக்கம்!

எனது பெயர் கோ.இராகவன். பெங்களூரில் பணிபுரிகிறேன். குழுமம் என்றும் தளமென்றும் பங்களித்து வந்த நான் இந்த வலைப்பதிவு உலகிற்கு புதியவன். புதியவன்தான் என்றாலும் வலைப்பதிவுலகில் நிறைய நண்பர்களைக் கொண்டவன். உங்களின் உற்சாக வரவேற்புக்குப் பின் தொடர்வேன்!

இப்படிக்கு,
கோ.இராகவன்.