Thursday, February 23, 2006

நாலே நாலா ஏதோ நாலா

ஜோசப் சார் என்னை இப்பிடி இழுத்து விட்டுட்டீங்களே.....நாம் பாட்டுக்குச் செவனேன்னு இருந்தேன்.....சரி....நானும் எதையாவது சொல்லி வெக்கேன். யாருஞ் சண்டைக்கு வராதீங்க...

பிடித்த நான்கு பெரியவர்கள்

1. வாரியார் சுவாமிகள் - தமிழ்ப் பெருங் கடல். நல்ல செய்தியோடு போய் நின்றால் உடனே வாழ்த்து வெண்பா பாடக் கூடிய தமிழறிவு. ஊர் ஊராக நாடு நாடகப் போய்த் தமிழ் தொண்டும் தமிழ்க் கடவுளுக்குத் தொண்டும் செய்த பெருமகனார். ஆன்மீக இலக்கியச் செம்மல். நகைச்சுவையும் தத்துவமும் கலந்து கதைக் கருத்து சொல்லும் இவரது பாங்கிற்கு இன்று வரை போட்டியில்லை.

2. காயிதே மில்லத் - ஒப்பற்ற இஸ்லாமியத் தலைவர். இஸ்லாம் எங்கள் சமயம். தமிழ் எங்கள் மொழி என்று முழங்கிய தமிழர். ஒரு குற்றம் என்று இவரைக் கை காட்ட முடியுமா! தூயவர். அரியவர். என்றும் நினைத்துப் போற்றத் தக்கவர். அனைவருக்கும் பொதுவானவர்.

3. காமராஜர் - உண்மையிலேயே மதிய உணவுத் திட்டத்தைத் துவக்கிய பெருமைக்கு உரியவர். கல்விக் கண் திறந்த ஞானச் சுடர். இந்த அளவிற்கு தமிழகத்தில் கல்வி உயர்ந்திருக்கிறது என்றால் அதற்கு அடித்தளம் இட்ட பெருமை இவரையே சேரும். இன்னொரு கர்ம வீரர் இன்னும் காணக் கிடைக்கவில்லை என்பதே உண்மை.

4. உ.வே.சா - கால் தேய்ந்தாலும் தேயட்டும்.....என் தமிழ் தேயக் கோடாது என்று....தெருத் தெருவாக அலைந்து அலைந்து ஓலைச் சுவடிகளைத் தேடி எடுத்து பல அரிய தமிழ் நூல்களை நாம் அறியத் தந்த அற்புதத் தமிழர். ஒவ்வொரு தமிழனும் ஒருமுறையாவது நன்றி சொல்ல வேன்டிய உழைப்பாளி. தமிழ்த் தொண்டின் தலைமைப் பதவி இவருக்குப் பின்னால் இன்னமும் வெறுமையாகத்தான் இருக்கிறது.

பிடித்த நான்கு உணவு வகைகள்

1. தோசை - இதுக்குதான் முதல் இடம். எந்தக் கூட்டணியிலும் சேரக் கோடிய O-ve உணவு. சைவமா இருந்தாலும் சரி. முன்னாடி அ போட்ட சைவமா இருந்தாலும் சரி....நல்லா பொருந்தி வரும். ஒன்னுமில்லையா...கூட்டணி இல்லாமலேயே ருசிக்கும் மசால் தோசையும் உண்டு.

2. கோதுமை ரவைக் கதம்பம் - இது எனது கண்டுபிடிப்பு. இதுக்கு இங்க குறிப்பும் கொடுத்திருக்கேன். பாதி நாட்களில் இரவு உணவு இதுதான். கோதுமை ரவையில் செய்தது. ஆனால் அரிசி வகைக்கான சுவை.

3. மீன் - குழம்பு...பொரிச்சது...இல்லை பாலக்கோட போட்டு செய்றது....எதுவானலும் எனக்குப் பிடிக்கும். சீலா மீனு, வெறால் மீனு, நெத்திலி மீனு, ஜிலேபிக் கெண்டை (ரொகு) - இந்த நாலு மீன்களும் ரொம்பப் பிடிக்கும். (இதுலயும் நாலா!)

4. கீரை - இதுவும் ரொம்பப் பிடிக்கும். கீரைக் குழம்போ...மசியலோ..பொரியலோ...எப்படி இருந்தாலும் கீரை எனக்குப் பிடிக்கும். எல்லாக் கீரைகளுமே பிடிக்கும். காலி ஃபிளவர் அடியில் இருக்கும் கீரையாகட்டும் முள்ளங்கியில் மேலே இருக்கும் கீரையாகட்டும்....எதையும் விட்டு வைப்பதில்லை.

எனக்குப் பிடித்த நான்கு கலைஞர்கள்

1. நடிகர் திலகம் - பெயரைச் சொல்லவே தேவையில்லை. அந்தக் காலத்திற்கு என்ன தேவையோ அதைச் சரியாகச் செய்தார். இந்தக் காலத்திற்கு வந்த பிறகு என்ன தேவையோ அதைச் செய்தார். கேட்டதைக் கொடுக்கும் நடிப்பு வள்ளல். சந்தேகமேயில்லை. இப்படி ஒரு தமிழன் இருந்தான் என்று பெருமிதம் கொள்ளலாம்.

2. அனிதா ரத்னம் - பாரம்பரியக் கலையை அப்படியே வைத்துப் பராமரிப்பவர்களுக்கு நடுவில் அதில் கூடுதல் புதுமைகளைச் சேர்க்கும் ஆடலார். நாட்டிய நிகச்சிகளில் கதை சொல்லும் விதங்களின் புதிய முறைகளைக் காட்டுகிறவர். இன்னும் நிறைய செய்ய வேண்டும்.

3. இளம்பிறை மணிமாறன் - தூத்துக்குடிக்காரர்களுக்கு இவரை நிச்சயம் தெரிந்திருக்கும். அங்கு ஒரு பெரிய கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியர். சரி. என்ன கலை என்று கேட்கின்றீர்களா? இவர் ஒரு தமிழ் சொற்பொழிவாளர். அதுவும் ஆன்மீகத்தில். தமிழிலும் ஆன்மீகத்திலும் இவர் தொடாதது இல்லை. ஒரு விஷயம் தெரியுமா? இவர் ஒரு கிருஸ்துவர். ஆனாலும் மக்கள் இவரை ஆன்மீகச் சொற்பொழிவாளராக ஏற்றுக் கொண்டார்கள். அதுதான் தமிழ்ப் பண்பாட்டின் சிறப்பு. உண்மையான மதச்சார்பின்மை.

4. எல்.ஆர்.ஈஸ்வரி - எனக்கு இவரை விடப் பிடித்த பாடகர்கள் இருந்தாலும் இவரையே குறிப்பிட விரும்புகிறேன். இவருக்கு முன்னும் பின்னும் பல பெரிய பாடகர்கள் பாரம்பரிய இசைப் பிண்ணனியிலிருந்தோ படித்திருந்தோ வந்தார்கள். அல்லது வெளிமாநிலத்திலிருந்து வந்தார்கள். அவர்களையும் நான் கொண்டாடினோம். கொண்டாடிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் எந்த விதப் பிண்ணனியும் இல்லாமல் ஒரு கிருஸ்துவக் குடும்பத்திலிருந்து வந்து, எந்த இசைமுறையையும் கற்றிராமல், தன்னறிவைக் கொண்டே முன்னுக்கு வந்த தமிழச்சி. இவர் கிளப் பாடகி என்று எளிதாக கிண்டலடித்து விடலாம். ஆனால் இவர் இல்லாமல் தமிழ்நாட்டில் பல வீடுகளில் கல்யாணமும் நடப்பதில்லை. ஆடி மாதத்தில் மகமாயி கூழை ஏற்றுக் கொள்வதும் இல்லை. முதலில் சொன்னது "வாராயென் தோழி வாராயோ" பாடலைப் பற்றி. அந்தப் பாடலைப் பெரும்பான்மையான கல்யாண வீடுகளில் கேட்கலாம். லூர்து ஆர் ஈஸ்வரியாக இருந்தாலும் அம்மன் பாடல்கள் என்றால் ஈஸ்வரிதான் என்று முத்திரை கொண்ட இந்தப் பாடகியும் போற்றப்பட வேண்டியவரே.

விடுமுறைக்குச் செல்ல விரும்பும் நான்கு இடங்கள்

1. கேரளா - சேர நாட்டின் அழகைச் சொல்லவும் வேண்டுமா....பச்சை வயல்களும்...உயர்ந்த மலைகளும்.....ஆறுகளும்...ஏரிகளும்....வனப்பும் வளமையும் இயற்கையும் எங்கும் நிறைந்த கேரளம். ஏற்கனவே சென்றிருக்கிறேன். இன்னும் செல்ல வேண்டும்.

2. Valley Of Flowers - இந்த இடத்தைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன். நண்பர்கள் சென்று வந்த புகைப்படங்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் நான் சென்றதில்லை. டெல்லி சென்று அங்கிருந்து செல்ல வேண்டும். ஒரு பயணத்திட்டம் நீண்ட நாட்களாக ஊறிக்கொண்டு இருக்கிறது. என்று நடக்குமோ!

3. ஜெர்மெனி - போயிருக்க வேண்டியது. போக முடியாமல் போய் விட்டது. இன்னொரு முறை வாய்ப்புக் கிடைத்தால் கண்டிப்பாக போக விரும்பும் நாடு ஜெர்மெனி.

4. கிரீஸ் - கதைகளில் நிறைய படித்த நாடு. ஒடிசியும் பெனிலோப்பும் மகிந்திருந்த நாடு. ஹெலன் என்ற அழகு தேவதையால் நிறைய இழந்த நாடு. நிச்சயம் பார்க்க வேண்டும்.

நான் அழைக்க விரும்பும் நால்வர்

1. பரஞ்சோதி

2. இளவஞ்சி

3. சிவா

4. இராமநாதன்

அன்புடன்,
கோ.இராகவன்

Monday, February 06, 2006

ணின் பின்புறத்தில் ஓங்காரம்

என்ன தலைப்பு தப்பா இருக்குன்னு தோணுதா? அப்ப "பெண்"னுங்குற சொல்ல முன்னாடி போட்டுக்கோங்க. அதிர்ச்சியாகாதீங்க. கொஞ்சம் கொஞ்சமா விஷயத்துக்கு வருவோம்.

இது நடந்து சரியா அஞ்சு வருசம் ஆச்சு. நடந்தது பெல்ஜியத்துல. அப்ப பெல்ஜியத்தோட ஆண்ட்வெர்ப் நகரத்துல தங்கீருந்தோம். நான் இருந்த நகரங்கள்ளயே எனக்கு ரொம்பப் பிடிச்ச நகரம் அதுதான். வசதிக்கு வசதி. சுத்தத்துக்குச் சுத்தம்.

வார நாட்கள்ள வேல. சனி-ஞாயிறுன்னா ஊரு சுத்த வேண்டியதுதான. அப்படி அந்த வாரக்கடைசீல ஹண்சூர் லெஸ்ஸே (Han-Sur-Lese) போலான்னு முடிவு செஞ்சோம். ஊர்ப் பேரு நினைவிருக்கு. ஆனா ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருந்தாலும் இருக்கலாம்.

முதலில் ஜெமிலி என்ற இடத்துக்கு ரயிலில் போய் அங்கிருந்து ஹண்சூர் லெஸ்ஸேக்கு பஸ்ஸில் செல்ல வேண்டும். ஹண்சூர் லெஸ்ஸேயில் அழகான சுண்ணக் குகைகள் இருக்கின்றன. உள்ளேயே படகிலும் போக முடியும். வண்ண வண்ண விளக்குகளால் அலங்காரங்களும் செய்திருப்பார்கள். ஐரோப்பாவில் இருப்பவர்கள் ஒருமுறையேனும் போக வேண்டும். மழைக் காலத்தில் போகக் கூடாது. ஏனென்றால் குகைக்குள் தண்ணீர் வரத்து அதிகாம இருக்கும். உள்ளே நுழைவதே கடினம்.

சரி. விஷயத்துக்கு வருவோம். ஹண்சூரப் பாத்துட்டு திரும்பி வந்து ஜெமிலியில ரயிலப் பிடிக்கக் காத்திருந்தோம். இன்னும் ஒன்னர மணி நேரம் இருக்கு. ரயில்வே ஸ்டேஷனுக்குள்ள கதகதன்னு இருக்கு. ஜம்முன்னு உக்காந்திருந்தோம்.

அப்போ பக்கத்துல கொஞ்சம் தள்ளி உக்காந்திருந்த ஒரு பெரிய அக்காவுக்கு கோக்கு குடிக்கிற ஆச வந்து எந்திருச்சு நடந்தாங்க. கோக்கு மெஷின் எங்களுக்கு முன்னாடிதான் இருந்தது. அந்த அக்கா கோக்கு மெஷின்ல ஃபிராங்க்ஸ்கள தள்ளும் போதுதான் அதக் கவனிச்சோம்.

அந்தக்கா போட்டிருந்தது ஒரு பாவாடையும் தொளதொளன்னு ஒரு சட்டை மாதிரியும். அந்தப் பாவாடையோட டிசைன் என்ன தெரியுமா? தமிழ் எழுத்துகள். உயிரெழுத்து உயிர்மெய்யெழுத்துன்னு எதையும் விடலை. ஆயுத எழுத்தும் இருந்தது. எங்கன்னு நான் சொல்ல மாட்டேன். ஏன்னா....நமக்கு முக்கியம் குடிலைதான்.

குடிலைன்னா ஓம். ஓங்காரத்துக்குத்தான் குடிலைன்னு பேரு. இந்தக் குடிலை அந்தப் பெண்ணோட பின்புறத்துல நட்ட நடுவுல இருந்தது.

இத மொதல்ல நான் கவனிக்கலை. அலஞ்ச அலுப்புல லேசா அசந்தாப்புல இருந்தேன். கூட இருந்த மலையாளி நண்பன் தான் இதப் பாத்து எனக்குச் சொன்னான். எனக்கு அலுப்பெல்லாம் போச்சு.

இந்தப் பாவாடைய எங்க வாங்கீருப்பாங்கன்னு யோசிச்சுப் பாத்தேன். ஒன்னும் தோணலை. நம்மூர்ல நெஞ்ச பாவாடையாக்கூட இருக்கலாம். இல்லைன்ன டிசைனரு வேருன்னு யாராவது புது டிசைனரு, இந்த ஐடியா மூளைல உதிக்கவும் நெஞ்சதா இருக்கலாம்.

எதுவா இருந்தா என்ன? ஓங்காரங்குறது இறை தத்துவம். அதப் பின்னாடி வைக்கிறதான்னு மொதல்ல ரத்தம் கொதிச்சது. சைவ சித்தாந்தத்துல என்னதான் முருகா சிவனேன்னு இருந்தாலும் கடைசீல எல்லாம் ஓங்காரந்தான்.

சேவல் ஓங்காரத்தோட ஒலி வடிவம். மயில் ஒளி வடிவம். அதுதான் நாத விந்து. நாதம் சேவல். விந்து மயில். மயில்தோகை விந்து வடிவத்துலதான இருக்கு. இப்பிடி இன்னும் நெறைய அதப் பத்திச் சொல்லலாம்.

எப்பிடிக் கும்பிட்டாலும் எல்லாம் கடைசீல ஓங்காரத்தான். அந்த ஓங்காரத்தைப் பாவாடைல...அதும் பின்னாடியா?

சரி. கழுத. இதென்ன வெறும் குறியீடுதான. இதப் பாவாடைல போட்டதால என்ன கொறஞ்சு போச்சு! அங்க இருக்குறதால இதோட மதிப்புக் கொறஞ்சு போகுமா! கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை! இப்பிடியெல்லாம் சொல்லிக் கண்டுக்காம விட்டுட்டேன்.

"தமிழை இகழ்ந்தவனைத் தாய் தடுத்தாலும் விடேன்"னு படிச்சது நினைவுக்கு வந்தது. அட! தாய் தடுத்தாத்தான! நம்ம தாய்தான் ஊருக இருக்காங்களே. தடுக்கலைலன்னு பேசாம விட்டுட்டேன்.

அடுத்த வாட்டி "ஓல மறைகள் அரைகின்ற ஒன்றது"ன்னு ஓதும் போது அந்த அக்காவோட பின்புறமோ அந்த ஓங்காரமோ நினைவுக்கு வரலை. மறந்தே போச்சு.

சரி. இத எதுக்கு இப்ப சொல்றேன்னு கேக்குறீங்களா! என்னவோ தெரியலை. சொல்லமுன்னு தோணிச்சு. நேத்து ராத்திரி ஒரு விஷயத்தை யோசிக்கும் போது இது நினைவுக்கு வந்தது. அதான் சொல்றேன்.

அன்புடன்,
கோ.இராகவன்

Thursday, February 02, 2006

சேப்பாக்கமும் சிலப்பதிகாரமும்

மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு இருக்கத்தான் செய்கிறது. எப்படியோவது...இல்லையென்றால் சேப்பாக்கத்தைப் பற்றிச் சொல்ல வருகையில் சிலப்பதிகாரம் உள்ளே நுழையுமா?

ஜனவரி கடைசி வாரக்கடைசியில் குடியரசு தினத்தை ஒட்டி சென்னைக்குச் சென்றிருந்தேன். அங்கு நண்பர்களோடு சந்திக்கச் சென்னைச் சேப்பாக்கத்தில் உள்ள சென்னை கிரிக்கெட் கிளப்பிற்குச் சென்றிருந்தேன். என்னைப் பார்த்ததுமே உள்ளே விட முடியாது என்று சொல்லி விட்டார்கள். என்ன காரணம் என்று ஊகிக்க முடிகிறதா?

என்னுடைய உடையலங்காரந்தான். வட்டக்கழுத்து டி-ஷர்ட் அணிந்திருந்தேன். இது போன்ற பெரிய கிளப்களில் உடைக்கட்டுப்பாடு உண்டு. சென்ற முறை சென்றிருந்த பொழுது ஒழுங்காக நல்லதொரு சட்டையை மாட்டிக் கொண்டு சென்றேன். இந்த முறை நாலு இடங்களில் சுற்றி விட்டுப் பிறகு கிளப்பிற்குச் சென்றதால் எனக்குத் தோன்றவேயில்லை.

பிறகு அங்கு எங்களை அழைத்துச் சென்ற நண்பர் உடனே வீட்டிற்கு ஃபோன் செய்து கிளம்பிக் கொண்டிருந்த அவரது துணைவியாரை ஒரு சட்டையைக் கொண்டு வரச் சொன்னார். அந்தச் சட்டை வந்த பிறகு கிளப்பிற்குள் சென்றோம்.

நல்ல இடம். மாலைப் பொழுதுகளில் நண்பர்களோடு பொழுது போக்கச் சிறந்த இடம். Under-19 குழுவினர் ஒளி வெள்ளத்திலும் வியர்வை வெள்ளத்திலும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். ஒவ்வொருவருக்குள்ளும் என்னென்ன கனவுகளோ. ஆசைகளோ. சிறுவயதிலேயே விளையாட்டில் ஈடுபட்டிருந்ததால் இந்த வயதிலேயே எல்லாருக்கும் நல்ல உடல்வாகு வந்திருந்தது.

அவர்கள் விளையாடுவதைப் பார்ப்பதற்கு ஏதுவாக நாற்காலிகளை அமைத்துக் கொண்டோம். முதலில் மசால்வடைகளையும் முட்டைக்கோஸ் வடைகளையும் கொண்டு வரச்சொன்னோம். போட்டி பலமாக இருக்க உருளை போண்டாவையும் கொண்டாவென்றோம்.

சொன்னவை வந்து (அல்லது வெந்து) கொண்டிருக்கும் நேரத்தில் சுற்றிப் பார்க்கையில் என் கண்களில் பட்டார் பேராசிரியர் ராஜகோபாலன். தொலைக்காட்சியில் வரும் தமிழ்ப் பட்டிமன்றங்களைப் பார்ப்பவர்களுக்குப் பேராசியர் ராஜகோபாலனைத் தெரியாமல் இருக்காது. நக்கீரன், இளங்கோ, கம்பன் என்று கரைத்துக் குடித்த கலியுக அகத்தியர். வெறும் வெற்றுப் படிப்பல்ல. ஒவ்வொரு இலக்கியத்தையும் படித்து ஆய்ந்து அதன் பாத்திரங்களைத் தெளிந்த அறிஞர்.

அவருடைய பேச்சைத் தொலைக்காட்சியில் கேட்டுதான் நான் சிலப்பதிகாரத்தில் ஈடுபாடு கொண்டேன். தென்னவன் தீதிலன் என்ற கதையை எழுதியதற்குக் காரணமே அவர் மேற்கோள் காட்டிய சிலப்பதிகார வரிகள்தான். ஆகையால் அவரிடம் நேரில் சென்று மரியாதை செய்வதே தமிழுக்கு நான் செய்யும் மரியாதை என்று எண்ணி அப்படியே செய்தேன். அவரும் மிகவும் மகிழ்ந்து போனார். அவர் பேசியதையும் அதிலிருந்து நான் எடுத்ததையும் சொல்லச் சொல்ல அவர் கண்களில் சில மகிழ்ச்சிப் பொறிகள் பறந்ததை என்னால் காண முடிந்தது. அவருக்கு நன்றி கூறி விட்டு அவரை அவரது நண்பர்களோடு அளவளாவ விட்டுவிட்டு நான் நமது மன்றத்தினரோடு சேர்ந்து கொண்டேன்.

சிலப்பதிகாரத்தில் மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட பாத்திரம் ஒன்று உண்டென்றால் அது கண்ணகி. மிகவும் சரியாகப் புரிந்து கொள்ளப்பட்ட பாத்திரம் உண்டென்றால் அது பாண்டியன் நெடுஞ்செழியன். அவன் மனைவி கோப்பெருந்தேவியையும் சொல்லலாம். கண்ணகி வெறும் அடங்கிக் கிடந்த மனைவி பாத்திரமல்ல என்று வாதங்களோடு நிரூபித்தவர் பேராசிரியர் ராஜகோபாலன் அவர்கள். அடியார்க்கு நல்லாரும் நச்சினார்க்கினியாரும் கூட கவனியாது விட்ட விஷயங்கள் இவை. நான் படித்த வேறெந்தச் சிலப்பதிகார ஆய்வு நூலிலும் இதைச் சொல்லவில்லை. நேற்று எழுதியவர்கள் முதற்கொண்டு. ஆகையால்தான் நான் சிலப்பதிகாரத்தை முடிந்த வரையில் ஆழமாகப் படித்து வருகிறேன்.

இப்பொழுது சொல்லுங்கள். சேப்பாக்கத்திற்கும் சிலப்பதிகாரத்திற்கும் விட்ட குறை தொட்ட குறை உண்டுதானே?

அன்புடன்,
கோ.இராகவன்