Monday, November 28, 2005

நான் நன்றி சொல்வேன்

நான் நன்றி சொல்வேன்

ஆச்சு. ஒரு வாரம் போச்சு. நட்சத்திர வாரம். தெரிஞ்சத எழுதிப் போட்டாச்சு. அதுக்கு நெறைய பின்னூட்டங்களும் பாத்தாச்சு.

சரி. நட்சத்திர வாரம் எப்படிப் போச்சுன்னு நான் சொல்ல வேண்டாமா? சொல்றேன். சொல்றேன்.

ரொம்ப நல்லபடியாவே போச்சு. மொதல் ரெண்டு நாளும் கொஞ்சம் சோர்வா இருந்ததுன்னு கேள்விப்பட்டேன். உண்மைதான். டெலிபோன எடுத்தப்புறந்தான ராங் நம்பருன்னு தெரியுது.

எல்லாருக்கும் இருந்த சந்தேகம், நான் சுஜாதா போல எழுதுறேனான்னு. உண்மை அது இல்லை. மொதல்ல வந்த வாடைக் கதை ஒரு ஜாலி கலந்துரையாடலா ரொம்ப நாளைக்கு முன்னாடி எழுதுனது. அத எங்கயும் போடாம வெச்சிருந்தேன். நட்சத்திர வாரத்துல சரியா போட்டாச்சு.

ரெண்டாவது கதைல ஒரு புதுமையப் புகுத்தப் பாத்தேன். அது சரியில்லாமப் போயிருச்சு. அத யாருமே கண்டு பிடிக்க முடியாத அளவுக்குக் கதை சோர்வாப் போயிருச்சு. அதனால நானே சொல்லீர்ரேன். கதாபாத்திரமே இல்லாம கதை எழுத முடியுமான்னு முயற்சி செஞ்சதுதான் அந்தக் கதை. நிலா நிலா ஓடி வா. ஆனா கட்டுரை மாதிரி ஆயிருச்சி. அடுத்த வாட்டி சிறப்பா செஞ்சிக்கலாம்.

கவிதைகள் ரெண்டையும் மக்கள் ரசிச்சிருக்காங்கன்னு தெரியுது. ஆனா திருச்செந்தூரின் கடலோரத்தில் கதைக்கு இருந்த வரவேற்பே தனிதான். மொதல் மொதலா ஐம்பது பின்னூட்டம் விழுந்த என்னுடைய பதிப்பு அதுதான்னு நினைக்கிறேன். முருகக் கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கூட ரசித்துப் படித்துப் பாராட்டியிருந்தார்கள். அவர்களின் நல்ல பண்பிற்கு மிக்க நன்றி.
இதுதான் இன்றைக்கு நமக்குத் தேவை. கருத்து வேறுபாடு கண்டிப்பாக இருக்கத்தான் செய்யும். எத்தனை மனங்களுண்டோ அத்தனை குணங்களுண்டு. கருத்து வேறுபாடு வேறு நட்புணர்வு வேறு என்ற நடுநிலைமையை உணர்ந்தால் நாம் மற்றவர்களை மதிக்கின்றவர்களாவோம். அருட்பெருங்கோ உங்களுக்கு எனது நன்றி பல.

இந்த வலைத்தளத்தில் ஊடாடுகின்றவர்கள் அனைவருமே படித்தவர்கள். கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். நாமே உணர்ச்சியின் வசப்பட்டு தனிநபர், மத, மொழி, இனத் தாக்குதல்களில் ஈடுபட்டால் நம்மளவுக்குக் கல்வியறிவு கிடைக்காதவர்களை என்ன சொல்வது? தவறு நேர்வது இயல்பு. ஆனால் அதை நீக்க நேர்மையான வழிமுறைகளைக் கையாளுங்கள். உங்களால் முடியாயது இல்லை. இந்த வேண்டுகோளை நான் இந்த பொழுதில் உங்களுக்கு வைக்கிறேன். குழலி இந்த முயற்சியை தொடங்கியிருக்கிறார். குழலி உங்களுக்கும் எனது நன்றி பல.

அடுத்து பெங்களூரில் ஒரு நாள். தூத்துக்குடியில் ஒரு நாள். இரண்டுமே இரண்டு விதங்களில் மக்களுக்குப் பிடித்திருந்தன என்றே சொல்ல வேண்டும். அந்தச் சூழலில் தங்களைப் பொருத்திப் பார்த்திருப்பார்கள் என்றே நினைக்கிறேன்.

அடுத்தது கனவுகள் பற்றிய பதிவு. இதற்கும் ஓரளவு நல்ல வரவேற்பு இருந்தது. வாரயிறுதி வேறு. ஞாயிறு போட வேண்டிய பதிவைத் திங்கள் அன்று காலையில் போட்டேன். அதற்கும் பின்னூட்டங்கள் விழுந்தன என்றால் பாருங்களேன். நன்றி மக்களே.

மொத்தத்தில் அன்போடும் பரிவோடும் என்னை ஆதரித்து, எனது பதிவுகளைப் படித்துப் பின்னூட்டம் இட்ட தமிழ்மண நண்பர்களுக்கு எனது நன்றி. வாய்ப்பளித்த மதி கந்தசாமிக்கும் காசி ஆறுமுகத்திற்கும் நன்றி பல.

அன்புடன்,
கோ.இராகவன்

Sunday, November 27, 2005

அரசனும் நானும்

அரசனும் நானும்

நான் பார்த்து ரசித்த திரைப்படங்களில் ஒன்றை உங்களுக்காக விமர்சிக்கிறேன்.

தி கிங் அண்ட் ஐ

ஆயிரத்துத் தொள்ளாயிரது ஐம்பத்தாறில் வந்த திரைப்படம் இது. ஐந்து ஆஸ்கார் விருதுகளை அள்ளிக் கொண்ட அற்புதப் படம். கட்டாயம் பார்க்க வேண்டிய கலைப்படம்.

யூல் பிரைனர் எனக்கு மிகவும் பிடித்த ஆங்கில நடிகர் என்று சொன்னால் மிகையில்லை. அற்புதமான நடிப்பாலும் உடலசைவுகளாலும் முகபாவங்களலாலும் பாத்திரமாகவே மாறிவிடும் சிறப்பான கலைஞர். டென் கமேண்ட்மென்ட்ஸ் பார்த்தவர்களுக்கு இவரைத் தெரிந்திருக்கும். ராம்சிஸ் எனப்படும் வில்லனாக வந்து சிறப்பாகச் செய்திருப்பார். இந்தப் படத்தில் அவர் கதாநாயகன்.

ராட்ஜர்ஸ் அண்ட் ஹேமெர்ஸ்டெய் என்பவர்கள் நம்ம ஊர் விஸ்வநாதன்-ராமமூர்த்தி போல. தொட்டதெல்லாம் சிறக்கும் சிறந்த இசையமைப்பாளர்கள். தி சவுண்ட் ஆ·ப் ம்யூசிங் என்பது இவர்களது சிறந்த இசைக்கோர்ப்புகளில் ஒன்று. இந்தப் படத்திற்கும் இவர்கள்தான் இசை.

ஒரு மேடை நாடகம்தான் திரைப்படமாகியிருக்கிறது. கதை ஆயிரத்து எண்ணூறில் நடப்பதாக வருகிறது. யூரோசெண்ட்ரிக் உலகம். அதாவது ஐரோப்பாவை மையமாக வைத்து உலகம் இயங்கி வந்த காலகட்டத்தில் நடந்த கதை.

இங்கிலாந்திலிருந்து கணவனை இழந்த பெண் தனது மகனுடன் சயாமிற்கு வேலைக்குச் செல்கிறாள். அவளுக்கு மாதம் இருபது பவுண்டு சம்பளம் (இன்றைய மதிப்பில் கிட்டத்தட்ட இருபதாயிரம் பவுண்டு). அப்படியென்ன வேலை? சயாம் அரசரின் பிள்ளைகளுக்கும் ராணிகளுக்கும் ஆங்கிலம் கற்றுக் கொடுத்து உலக அனுபவங்களைக் கற்றுக் கொடுக்கும் வேலை.

சயாம் ஒரு கட்டுப்பாடான தேசம். அரசரை அங்கு தெய்வத்திற்கு சமமாக மதிக்கிறார்கள். பௌத்தத்தைப் பின்பற்றும் நாடு. அரசரின் தலைக்கு மேல் யார் தலையும் இருக்கக் கூடாதென்று எழுதாத சட்டம். அவர் உட்கார்ந்தால் எல்லாரும் உட்கார வேண்டும். அவர் படுத்துவிட்டால் எல்லாரும் படுத்துவிட வேண்டும்.

வேலைக்கு வந்த அந்தப் பெண் ஆனா (டெபரா கெர் - ஜூஹி சாவ்லா பார்பதற்கு இவரைப் போல இருப்பார்) அரண்மனையிலேயே தங்க நேரிடுகிறது. அவருக்கும் மதகுருவிற்கும் கருத்து மோதல்கள் ஏற்படுகிறது.

சரி....அரசரின் பிள்ளைகளுக்குத்தானே பாடம்....எத்தனை பிள்ளைகள்? மூச்சைப் பிடித்துக் கொள்ளுங்கள். இருபத்தாறு பிள்ளைகள். அடுத்த மாதம் இன்னமும் ஐந்து பிறக்க இருக்கின்றன. பத்துக்கும் மேற்பட்ட ராணிகள். மூத்த ராணியின் மூத்த பிள்ளை அடுத்த பட்டத்து இளவரசன்.

சயாமே உலகம் என்றிருந்த அனைவருக்கும் உலகத்தில் சயாம் என்ற உண்மையை போதிக்கிறாள். அவளது சீர்திருத்தங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அரண்மனையில் பரவுகின்றன. மன்னனும் அவைகளிலிருந்து தப்ப முடியவில்லை.

கொஞ்சம் பிடிவாதக்கார மன்னன் (யூல் பிரைனர்) சண்டை போட்டாலும் ஆனாவிடம் மதிப்பாகவே நடக்கிறார். எடுத்துச் சொல்லும் சீர்திருத்தங்களை முடிந்த வரை ஏற்றுக் கொள்கிறார். மன்னனின் பிடிவாதம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து இருவருக்கும் உண்மையான நட்பு மிளரத் தொடங்குகிறது.

பிரச்சனை என்று ஒன்று வந்தால்தானே கதை நகரும். அந்த அரண்மனையில் பர்மாவிலிருந்து வந்த ராணி ஒருத்தி இருக்கிறாள். காதலனைப் பிரிந்து அரண்மனையில் வாழ்கிறவள். அவளுக்கு மகிழ்ச்சியேயில்லை. ஒருமுறை ஒரு நாடகம் நடத்தி நாடகத்தின் முடிவில் காதலனுடன் ஓடிப் போகிறாள்.

ஆனால் பாவம் பிடிபட்டு விடுகிறாள். காதலன் தண்ணீரில் விழுந்து இறந்து போகிறான். அவளை இழுத்து வந்து அரசன் முன் நிறுத்துகிறார்கள். அவளைக் கீழே படுக்க வைத்து பெரிய சவுக்கால் அடிக்கப் போகிறான் மன்னன். அப்பொழுது தடுக்கிறாள் ஆனா. இருவருக்கும் பெரிய வாக்குவாதம். ஆனால் சீர்திருத்தங்களை கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றுக் கொண்ட மன்னனால் அவளை அடிக்க முடியவில்லை. சவுக்கைக் கீழே போட்டு விட்டு போய் விடுகிறான்.

மதகுரு ஆனாவைத் திட்டுகிறார். ஆனா சயாமிற்கு வராமலேயிருந்திருக்கலாம் என்று சொல்கிறார். "நானும் அதையேதான் விரும்புகிறேன்" என்று ஆனாவும் பதிலுக்குச் சொல்கிறாள். அதற்கு மேலும் அங்கிருக்கப் பிடிக்காமல் உடனே ஊருக்குப் புறப்பட அனைத்து ஆயத்தங்களையும் செய்கிறாள்.

சவுக்கை கீழே போட்டது ஆனைக்கு அடி சறுக்குவது போல ஆயிற்று மன்னனுக்கு. படுக்கையில் வீழ்ந்து விடுகிறான். சறுக்கி விழுந்த ஆனையால் எழுந்திருக்க முடியாது. எழுப்பவும் முடியாது. அதே நிலைதான் மன்னனுக்கும்.

சொல்லிக் கொள்ளாமல் இங்கிலாந்திற்குக் கிளம்புகிறாள் ஆனா. ஆனால் மூத்த ராணி கேட்டுக் கொண்டதற்கு இணங்க, ஆனா படுக்கையில் வீழ்ந்த மன்னனைக் பார்க்கப் போகிறாள்.

அவளை பத்திரமாக ஊருக்குப் போகச் சொல்கிறான் மன்னன். பிள்ளைகள் எல்லாம் கதறுகின்றன. குழந்தைகளின் பாசமும் மன்னனின் நிலமையும் ஆனாவின் மனதை மாற்றுகின்றன. கடைசியில் ஊருக்குப் போவதை கைவிடுகிறாள் ஆனா. அதற்காக நன்றி கூறுகிறான் மன்னன். அப்படியே அவளது சம்பளத்தை மாதத்திற்கு இருபத்தைந்து பவுண்டுகளாக கூட்டுகிறான். அந்தோ பாவம்! நன்றி சொல்லி முடித்து விட்டு இறந்து போகிறான் மன்னன்.

உடனேயே அடுத்த இளவரசன் பட்டத்திற்கு வருகிறான். அவனால் கொஞ்சம் கொஞ்சமாக சீர்திருத்தங்கள் உள்ளே நுழையத் தொடங்குகின்றன.

இதுதான் கதை. ஆனால் படத்தைப் பார்க்க வேண்டுமே........அடடா! என்ன வகையான அரங்கமைப்புகள். சயாமிலேயே இருப்பது போலத் தோன்றும். அரங்கமைப்பிற்கும் உடையலங்காரத்திற்கும் கூட ஆஸ்கார் கிடைத்தது என நினைக்கிறேன்.

இசையையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். மிகவும் சிறப்பாக இருக்கும். அருமையான பாடல்கள்.

ஆனால் படம் முழுக்க நிறைந்திருப்பது யூல் பிரைனர்தான். அமெரிக்கராகிய அவர் சயாமியர் போல உருவத்தை மாற்றிக் கொண்டு....அடடா! (யூல் பிரைனரின் தாய் ரஷ்யர் என்று நினைக்கிறேன். விவரம் தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லலாம்.)

ஆனாக வரும் டெபரா கெர்ரும் மிகவும் அருமையாக செய்திருப்பார்.

இங்கிலாந்துதான் உலகம் என்றும் எலிசபெத் அரசிதான் பெரியவர் என்று வரும் ஒன்றிரண்டு வசனங்களை விட்டு விட்டால் மிகவும் அருமையான படம். கண்டிப்பாக பார்த்து ரசிக்க வேண்டிய படம் The King and I.

அன்புடன்,
கோ.இராகவன்

Friday, November 25, 2005

கனவுகளே ஆயிரம் கனவுகளே

கனவுகளே ஆயிரம் கனவுகளே

கனவு யாருக்குதான் இல்லை? விலங்குகளுக்கும் கனவு வருகிறது என்று இப்பொழுது சொல்கின்றார்கள். மனிதனும் ஒரு விலங்குதானே. அப்படி நான் கண்ட சில கனவுகளைப் பற்றிச் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

கனவு எப்படி வருகிறது? எங்கிருந்து வருகிறது? ஏன் வருகிறது? இந்த மூன்று கேள்விகளுக்கும் இந்தப் பதிவில் இடமில்லை. கனவோடு எனக்கிருக்கும் அனுபவங்களை மற்றும் பகிர்ந்து கொள்கிறேன்.

கனவு என்பது கனவில் புரிவதில்லை. நினைவு என்பது நினைவில் புரியவில்லை என்று சொல்வார்கள். அதாவது நாம் நினைவுலகத்தில் இருக்கும் பொழுது நாம் நினைவுலகத்தில்தான் இருக்கிறோம் என்ற உணர்வு நம்மிடம் இருப்பதில்லை. அந்த நினைப்பேயில்லாமல் இயல்பாய் இருப்போம். அதுபோல கனவு காணும் பொழுது கனவு காண்கிறோம் என்ற உணர்வு இருக்காது என்று சொல்வார்கள்.

ஆனால் பாருங்கள். என்னுடைய கதையே வேறு. நினைவுலகத்தில் எல்லாரையும் போல இருந்தாலும் என்னுடைய கனவுலகமே வேறு. கனவு காணும் பொழுது எனது மனம் எனக்குச் சொல்லும். என்ன சொல்லும்? "இப்பொழுது கண்டுகொண்டிருப்பது கனவு". அதாவது நான் கனவு கண்டுகொண்டிருக்கிறேன் என்ற உணர்வு பெரும்பாலான கனவு வேளைகளில் எனக்கு இருக்கும்.

பல எடுத்துக்காட்டுகள் சொல்லலாம். சின்ன வயதில் பெரியவர்கள் பேசும் பொழுது கனவில் பாம்பு வந்தால் கெட்டது என்றும் ஆனால் வந்த பாம்பு நம்மைக் கடித்து விட்டால் நல்லது என்றும் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.

அப்படிக் கேட்டது ஆழ்மனதில் எப்படியோ பதிந்து விட்டது. எப்படியோ! அதற்குப் பிறகு நடந்தது, நடப்பதுதான் பெருங்கூத்து.

கனவில் பாம்பு வரும். நமக்குதான் கனவு காண்கிறோம் என்று அப்பொழுது தெரியுமே. உடனே என்னுடைய மனம் அந்தப் பாம்பு என்ன செய்கிறது என்று பார்க்கும். பேசாமல் இருந்தால் என்னுடைய மனம் ஒன்று செய்யும். "பாம்பே நீ கனவில் வந்திருக்கிறாய். நீ கடித்தால்தான் எனக்கு நல்லது. ஆகவே கடிப்பாய்." என்று சொல்லி அந்தப் பாம்பை என்னைக் கடிக்க வைக்கும். அத்தோடு கனவு முடிந்துவிடும்.

இதை எப்படி எடுத்துக் கொள்வது? கனவையே கட்டுப்படுத்த முடியும் தன்மை என்றா? இல்லை. கனவு காண்கின்ற உணர்வு கனவு காணும் பொழுது இருக்கிறது என்றா?

ஏன் கேட்கின்றேன் என்றால் பொதுவாகவே கனவு காணும் பொழுது அந்த உணர்ச்சி இருப்பது மட்டுமல்லாமல், அடுத்த நாள் இந்தக் கனவில் நடதவைகளை நண்பர்களுக்கு மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும் என்று முடிவும் செய்யப்படும்.

இந்தக் கனவு இப்படி என்றால் மற்றொரு கனவு இன்னும் வித்தியாசமானது. குறைந்த பட்சம். என்னைப் பொருத்தவரை. என்னைச் சுற்றியுள்ளவர்களைப் பொருத்த வரை.

அன்றைக்குக் கனவில் வந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். திரைப்படத்தில் நான் அவரைப் பார்த்திருந்த தோற்றத்தில் இருந்தார். பேசினார். பேசினார். பேசிக்கொண்டே போனார். அவர் பேசியதை அடிப்படையாக வைத்து (கொஞ்சம் மாற்றியும் சேர்த்தும்) எழுதியதுதான் பெண்ணைப் பெற்றவன் என்ற சிறுகதை.

இன்னொரு நாள். அரைத்தூக்கம் என்று நினைக்கிறேன். அந்தத் தூக்கத்தில் ஒரு விருப்பம். மனம் கதைக்கருவைத் தேடி அலைகிறது. எங்கெங்கோ கிடைக்குமா என்று அலைபாய்வது எனக்குத் தெரிகிறது. திடீரென ஒரு வெளிச்சம். படக்கென்று எழுந்து உட்காருகிறேன். விளக்கைப் போட்டு விட்டு கணிப்பொறியைத் துவக்கி எழுதத் துவங்குகிறேன். கிட்டத்தட்ட ஒருமணியாகியிருக்கும். கதையைத் தட்டெழுதிவிட்டுப் போய் உடனே தூங்கி விடுகிறேன். இந்தக் கதை இதுவரை நான் இங்கு பதியவில்லை. ஏன் தெரியுமா? அதைத்தான் நான் நாளைக்குப் பதியப் போகிறேன்.

இன்னும் நிறைய நிறைய. இதெல்லாம் ஏனென்று ஆராய்ந்து அறியும் அறிவு எனக்கு இல்லை. இந்தக் கனவுகளால் எனக்கு பயனா என்றால் ஆம் என்பதே விடை. பின்னே. கதைகளுக்கும் கவிதைகளுக்கும் கற்பனை வருகையில் ஏன் விட வேண்டும்!

என்னுடைய கனவுகளை விடுங்கள். கனவுகள் பற்றி யாரிடமோ எப்பொழுதே பேசிய பொழுது கிடைத்த ஒரு செய்தி. நாம் வாழும் வாழ்க்கை என்பதே ஒருவருடைய கனவாம். அந்தக் கனவு முடியும் பொழுது நமது வாழ்க்கையும் முடிந்து போகுமாம். அவ்வளவு பெரிய கனவு யார் காண்கிறார்களாம்? நிச்சயமாக நம்மைப் போன்ற மண்ணுலகவாசிகள் இல்லையாம். நம்மை விட நிலையில் உயர்ந்தவர்களாம். அதுபோல நாம் காணும் கனவும் அதில் வருகின்றவர்களின் வாழ்க்கையாம். நம் கனவு முடியும் பொழுது அவர்களின் வாழ்க்கை முடியுமாம். இது எப்படி இருக்கு!

அப்படியே உங்கள் கனவுலக வாழ்க்கையைப் பற்றியும் எடுத்து விடுங்களேன்.

அன்புடன்,
கோ.இராகவன்

Thursday, November 24, 2005

தூத்துக்குடியில் ஒரு நாள்

தூத்துக்குடியில் ஒரு நாள்

"என்னடா பாட்டு நினைவிருக்கா? ஒருவாட்டி பாடிப் பாத்துக்க!" அக்கறையோடு அத்தை சொன்னார்கள். வாய் விட்டு ஒருமுறை பாடிப் பார்த்துக் கொண்டேன். மேடையில் மறந்து போனால்?

தூத்துக்குடியை நன்றாக அறிந்தவர்கள் சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேநிலைப்பள்ளியை அறிவார்கள். அதில் ஆண்டு விழா நடக்கும். ஆண்டு தோறுந்தான். அந்த ஆண்டு விழாவில் புதுக்கிராமத்தில் இருக்கும் மகளிர் சங்கத்தவரும் பங்கு கொள்வார்கள். நான் சொல்வது கிட்டத்தட்ட இருபத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்னால்.

இப்பொழுது சொல்லும் விஷயங்கள் தூத்துக்குடியை நன்றாக அறிந்தவர்களுக்குப் புரியும். புதுக்கிராமத்தில் இருக்கும் பழைய பெரிய வீடுகள் மூன்று. ஒன்று பல் டாக்டர் ஸ்டீபன் அவர்களின் வீடு. இப்பொழுது அவரில்லை. தந்தையின் இடத்தில் குறைவின்றி மகன் செய்து வருகிறார். இருவருமே மிகக் கனிவானவர்கள். இன்னொன்று அக்சார் வீடு என்பார்கள். அக்சார் பெயிண்ட் வியாபாரம் செய்தவர்கள் என்று கேள்விப்பட்டதைத் தவிர எனக்கு வேறொன்றும் தெரியாது. மற்றொரு வீடு மிகப் பெரியது. தமயந்தி அம்மா வீடு என்பார்கள். எங்களுக்கெல்லாம் அது சங்கத்தம்மா வீடு.

அவர்கள் வீடே ஒரு சிறிய கோட்டை போல இருக்கும். காம்பவுண்டுக்குள் பலமுறை சென்றிருக்கின்றேன். மிகப் பெரிய கூண்டில் முயல்களும் ஆமைகளும் இருக்கும். வாட்ச் மேனிடம் உத்தரவு வாங்கி கூண்டுக்குள் சென்று முயல்களோடும் ஆமைகளோடும் விளையாடியிருக்கிறோம். இந்த மூன்று வீடுகளுக்கும் அருகில் இருந்த சிறிய வீடுகளில் ஒன்று நாங்கள் இருந்த வீடு. என்னுடைய இரண்டாம் கருவறை என்றே சொல்வேன். எங்கள் வீட்டுக்கு நேரெதிராக ஒரு சாலை செல்லும். அந்தச் சாலையில்தான் ஏ.எஸ்.கே.ஆர் திருமண மண்டபம் இருக்கிறது. அங்கு எனக்கு விவரம் தெரியாத வயதில் சீர்காழி கோவிந்தராஜன், நாட்டியத் தாரகை சொர்ணமுகி ஆகியோர்கள் நிகழ்ச்சி நடத்தியிருக்கின்றார்கள்.

தமயந்தியம்மாவின் சங்கம் அந்தப் பள்ளியின் ஆண்டு விழாவில் பங்கு வகிக்கும். என்னுடைய அத்தையும் சனிக்கிழமை தோறும் கூடிடும் சங்கத்தில் ஒரு உறுப்பினர். அதனால் எனக்கும் அந்தப் பள்ளி ஆண்டு விழாவில் பாட வாய்ப்பு. அதற்குதான் பாடல் ஒத்திகை. எனது பக்கத்து வீட்டு நண்பன் தேன்ராஜ். அவனும் சொல்வதற்கு ஒரு பொன்மொழியைப் பயிற்சி செய்தான். ராமகிருஷ்ணரின் பொன்மொழி என்று நினைக்கிறேன். இதையெல்லாம் சொன்னால் சின்னதாகப் பரிசு கொடுப்பார்கள். அதிலொரு சந்தோஷம்.

சரி. நமது கதைக்கு வரலாம். பாடலை மனதுக்குள் சொல்லிப் பார்த்துக் கொண்டு இருந்தேன். ஆண்டு விழா தொடங்கியது. முதலில் யார் யாரோ பேசினார்கள். நாங்கள் எல்லாரும் பவுடர் பூசிக் கொண்டும், லிப்ஸ்டிக் பூசிக் கொண்டும் மேடைக்குப் பக்கத்திலிருந்த அறையில் இருந்தோம். பலரும் பலவித அலங்காரத்தில். மான் போல. மயில் போல. போலீஸ் போல. சாமியார் போல. நாடகத்திற்கும் ஆட்டத்திற்கும்.

ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் நடுவில் உண்டாகும் இடைவெளியில் நாங்கள் ஒவ்வொருவராக சென்று எங்கள் நிகழ்ச்சியை அரங்கேற்ற வேண்டும். அதை ஒரு டீச்சர் நிரல் படுத்திக் கொண்டிருந்தார். ஒரு சில நிகச்சிகளுக்குப் பின்னால் தேன்ராஜை அழைத்தார் அந்த டீச்சர். மேடையின் நடுவின் நின்றான். மைக் அவனது உயரத்திற்கு இறக்கப்பட்டது. சொல்ல வந்த பொன்மொழியைச் சொன்னான். எல்லாரும் கை தட்டினார்கள். நானும்தான்.

அடுத்து சில நிகழ்ச்சிகள். எனக்கான இடைவெளி வந்தது. டீச்சர் என்னை அழைத்தார். மேடையில் திரை போட்டிருந்தது. நான் போனதும் திறப்பார்கள் என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் டீச்சர் என்னை மேடையின் ஓரத்திலேயே நிறுத்தினார். அங்கு ஒரு மைக் இருந்தது. அதன் வழியாகத்தான் டீச்சர் நாடகத்திற்கு நடுவில் வசனங்களை எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அந்த மைக்கில் நிற்க வைத்தார்கள். "பாடு ராகவன்" என்றார்கள்.

"என்ன பாட வேண்டுமா? மேடைக்கு நான் போக வேண்டாமா? ஏன் இங்கே பாட வேண்டும்? திரையைத் திறக்க மாட்டார்களா?" உள்ளம் தவித்தது. சட்டென்று ஒரு அவமான உணர்ச்சி வந்து பிஞ்சு மனதில் நஞ்சு போல விழுந்தது. எப்படி அழாமல் இருந்தேன் என்று எனக்கே தெரியவில்லை. ஆனாலும் டீச்சரிடம் என்ன சொல்வது? மைக்கில் பாடினேன்.

"ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப் போல்
மாயக் கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
அவன் வாய் நிறைய மண்ணை உண்டு
மண்டலத்தைக் காட்டிய பின் ஓய்வெடுத்துத் தூங்குகிறான் தாலேலோ"

ஆயர்பாடியில் ஆனந்தமாகத் துயிலப் பாடும் பாடலில் எனது சோகந்தான் தெரிந்தது. கடனுக்குப் பாடினேன். கொஞ்சப் பட வேண்டியது மிஞ்சப் பட்டதால் தஞ்சப் படத் தவித்தது நெஞ்சப் படம். ஆயிரம் கேள்விகள் அந்த வயதில். சீவிச் சிங்காரித்து மூக்கறுத்த நிலை என்பார்கள். அந்த வயதில் அது ரொம்ப வலித்தது. நிகழ்ச்சி முடிந்து கொடுத்த சிறிய எவர்சில்வர் கோப்பையை விட உள்ளக் கோப்பை கனமாக இருந்தது.

அந்த டீச்சர் ஏனப்படிச் செய்தார்கள் என்று எனக்கு சத்தியமாகத் தெரியாது. ஆனால் அந்த நிகழ்வு ஆழ்மனதில் வடுவாக நிலைத்து இன்று பதிவு போடுகின்ற வரைக்கும் வந்திருக்கிறது. இன்னும் எவ்வளவு வருமோ! சத்தியமாகச் சொல்கிறேன். அதற்குப் பிறகு நான் அந்தப் பள்ளியின் ஆண்டு விழாவில் பங்கு பெற்றதே இல்லை. என்னுடைய அத்தையும் என்னை பங்கு பெறச் சொல்லிக் கேட்டதுமில்லை.

அன்புடன்,
கோ.இராகவன்

பெங்களூரி ஒரு நாள்.........சும்மா திக்குன்னு இருக்கு......

இது நடந்து ஆறு வருஷம் இருக்கும். இப்ப நெனச்சாலும் கொஞ்சம் திக்கு இருக்கும்.

ஒரு பிரச்சனை. பெங்களூர் சிட்டி பஸ் டிரைவர் ஒருத்தன ஏத்திக் கொன்னுட்டான். விபத்துதான். அதுக்கு அந்த டிரைவருக்கு கோர்ட் தண்டனை கொடுத்திருச்சு. அத எதுத்துதான் போராட்டம். எல்லா பஸ் டிரைவர்களும் கண்டெக்டர்களும்.

எந்த பஸ்சும் ஓடல. எல்லாம் அப்படியே நிக்குது. அப்போ ஆபிசுல இருந்து வீட்டுக்கு வரனும். சிவாஜி நகர் பஸ்டாண்ட் வரைக்கும் நடந்து வந்தாச்சு. அங்கயிருந்து சஞ்ஜய நகருக்குப் பஸ் பிடிக்கனும். ஆனா பஸ் இல்லை. ஒரே கூட்டம். கொஞ்ச நேரங்கழிச்சி பஸ் கிளம்புமுன்னு பெருங் கூட்டம் காத்திருக்குது.

ஆட்டோக்கள்ல ஏறிப் போறவங்க போய்க்கிட்டே இருக்காங்க. கையில இருந்தது கொஞ்சப் பணம்தான். மீட்டர் போட்டுப் போனா போயிறலாம். ஆனா யாருமே அன்னைக்கு மீட்டர் போட மாட்டேங்குறாங்க. அதுனால ரெண்டு மூனு பேரு சேந்து ஆட்டோல போறாங்க.

ஒவ்வொரு ஆட்டோக்காரனும் ஏரியா பேரச் சொல்லிக் கத்துறான். ஆனா சஞ்ஜய நகருக்கு எவனும் கத்த மாட்டேங்குறான். எவ்வளவு நேரந்தான் காத்திருக்கிறது. ஒரு ஆட்டோவைக் கூப்பிட்டு சஞ்ஜய நகரு போகனுமுன்னு சொன்னேன். டிரைவரு முடியாதுன்னு சொல்லீட்டாரு. கங்கா நகர் வரைக்கும் போனா அங்கிருந்து நடந்துரலாமுன்னு கங்கா நகருக்குக் கேட்டேன். சரீன்னு ஒத்துக்கிட்டு பத்து ரூபாய் எக்ஸ்ட்ரா குடுக்கனுமுன்னு சொன்னாரு. அதுக்கு நானும் ஒத்துக்கிட்டேன்.

வண்டி என்னைய ஏத்திக்கிட்டு கொஞ்சம் முன்னாடி போச்சு. அப்ப இன்னொருத்தன் வண்டிய நிறுத்தி சுல்தான்பாளையான்னு கேக்குறான். போறவழிதான். ஆனா கொஞ்சம் விலகனும். ஆட்டோ டிரைவர் ஒத்துக்கிட்டு அவனையும் ஏத்தியாச்சு.

ஏறுனதுக்குப் பெறகுதான் தெரிஞ்சது அவன் தண்ணி போட்டிருக்குற விஷயமே. அப்பவே எனக்குக் கொஞ்சம் பயம். ஒருவேளை ரெண்டு பேரும் பேசி வெச்சுக்கிட்ட ஆளுங்களோன்னு. அடிச்சுப் போட்டுட்டா? கடத்தீட்டுப் போயிட்டா! எதுக்கு வம்புன்னு நான் பேசாம வெளிய பாத்துக்கிட்டு வந்தேன். மழை வேற தூறிக்கிட்டேயிருந்தது.

பக்கத்துல உக்காந்திருந்தவன் பேச்சத் தொடங்கினான். கன்னடத்துலதான். கர்நாடகா போனதுமே வெளியில கன்னடம் பேசனுமுன்னு முடிவு செஞ்சி அப்படியே கொஞ்சம் கொஞ்சமா பழகிக்கிட்டிருந்தேன். அதுனால அரைகொற கன்னடத்தில் நானும் ரெண்டொரு பேச்சு பேசினேன்.

ஆட்டோக்காரர் ஒரு இஸ்லாமியர். ஏறுனவன் குடிவெறியில தாறுமாறா அவரப் பேசுறான். மொதல்ல ஒருத்தர தாறுமாறா பேசுறதே பிடிக்காது. அதுல இப்படி ஒரு பேச்சு தேவையா.

"பாயினு மூச்சுகொண்டு சும்னே பன்னீ"ன்னு சொன்னேன். (வாய வெச்சுக்கிட்டு சும்மா வாங்க)

"ஹே! ஏனு மாடு பிடுத்தானே? பாம் ஹாக்தானா! நாவு சும்னே இரல்லா. கொத்தா?" (ஹே! என்ன செஞ்சிருவான்? குண்டு போடுவானா? நாங்க சும்மா இருக்க மாட்டோம். தெரியுமா?)

நா முடிவே பண்ணீட்டேன். வீட்டுக்கு ஒழுங்கா முழுசா போய்ச் சேந்தா போதுமுன்னு. அதுலயும் வழியில இருக்குற ஆர்.டீ.நகரும், அந்த ஆள் போக வேண்டிய சுல்தான் பாளையாவும் இஸ்லாமியர்கள் நிறைய இருக்கும் இடங்கள். இவன் எக்கச்சக்கமா பேசி ஏதாவது ஒரு பிரச்சனையானா என்ன பண்றதுன்னு பயந்துகிட்டு இருந்தேன். ஏன்னா! கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் கிரிக்கட் விவகாரத்துல இந்து-முஸ்லீம் பிரச்சனையாயிருச்சு. அந்த ஏரியா வழியாத்தான இப்பப் போகனும்.

ஆனா அந்த ஆட்டோ டிரைவர் பொறுமையா வந்தாரு. நான் பேசாம இருந்தேன். கொஞ்ச நேரங் கழிச்சு பேச்ச எங்கிட்ட திருப்புனான் அந்த குடிகாரன்.

"நீவு யாவூரு சார்? தெலுகா?" (நீங்க எந்த ஊரு சார்? தெலுங்கா?) என்னையப் பாத்து தெலுங்கான்னு கேட்ட மொத ஆளு இவந்தான். என்னையப் பாத்ததுமே டிபிக்கல் தமிழியன்னு எல்லாரும் சொல்லீருவாங்க. நெத்தீல எழுதியிருக்கும் போல.

அந்தக் குடிகாரன் கேட்டதும் தமிழ்நாடுன்னு துணிச்சலா சொல்லீருப்பேன்னு நெனைக்கிறீங்க? ஏற்கனவே காவிரி பிரச்சனை. அதுல இப்படி ஒரு ஆளு. நானும் ஊருக்குப் புதுசு. ஒரு பயந்தான். பொய்யச் சொன்னேன்.

"நாவு பெளகாமு." (எனக்கு பெளகாம்.)

"ஒள்ளேதாயுத்து சார். ஈக எல்லாக்கடேயிந்தனும் பர்த்தாரே. அதுக்கே கேளிதே!" (நல்லதாச்சு சார். இப்ப எல்லாப் பக்கத்துலயிருந்தும் வர்ராங்க. அதுக்குதான் கேட்டேன்.)

எப்படியோ ஒரு அஞ்சு நிமிசம் பொழுத ஓட்டுனேன். அதுக்குள்ள சுல்தான் பாளையா வந்துருச்சு. ஆட்டோவ விட்டு எறங்குன குடிகாரன் டாடா சொல்லீட்டு போய்க்கிட்டேயிருக்கான். ஆட்டோ டிரைவர் எறங்கி அவனப் பிடிச்சுக் காசு கேக்குறாரு. அவன் நடுரோட்டுல நின்னுகிட்டு கத்துறான். அவனோட ஏரியான்னு சொல்லி மெரட்டுறான்.

நான் ஒடுங்கிப் போயிருந்தேங்குறது உண்மைதான். பைய மடியில வெச்சுக்கிட்டு கம்முன்னு உக்காந்திருந்தேன். இறங்கிப் போயிறலாமுன்னும் நெனச்சேன். ஆனா முடியலை. ஆட்டோக்காரனுக்குப் பணம் கொடுக்கனுமே.

குடிகாரங் கிட்ட என்ன நியாயம் எதிர் பார்க்க முடியும். ஆட்டோ டிரைவர் வெறுத்துப் போய் வந்தாரு. அவன திட்டிக்கிட்டே ஆட்டோவ ஓட்டுனாரு. நான் கங்கா நகருல எறங்கிக்கிட்டு பேசுன காசக் குடுத்துட்டு நடந்தே வீடு வந்து சேந்தேன்.

இப்ப இத்தன வருசம் இங்க இருந்தப்புறம் துணிச்சலும் இருக்கு. கன்னடப் பழக்கமும் நல்லாயிருக்கு. ஆனா அந்த சமயத்துல புதுசா அப்படி ஒரு அனுபவம். இன்னைக்கு நெனச்சாலும்....சும்மா திக்குன்னு இருக்கு......

இப்ப நான் கேக்க வர்ரது என்னன்னா? நான் செஞ்சது சரியா? நீங்களா இருந்தா என்ன செஞ்சிருப்பீங்க? அவ்வளவுதான் கேள்வி. விடைகள அள்ளி வீசுங்க.

அன்புடன்,
கோ.இராகவன்

Wednesday, November 23, 2005

திருச்செந்தூரின் கடலோரத்தில்

திருச்செந்தூரின் கடலோரத்தில்

இரவு மணி பத்தைத் தாண்டியிருந்தது. கடற்கரைக் காற்று குளுகுளுவென வீசியது. உப்புக் காற்றாய் இருந்தாலும் சுகமாக இருந்தது. தொலைவில் ஒரு வட்ட நிலா கடலைத் தொட்ட நிலாவாகக் கரைந்து கொண்டிருந்தது. திருச்செந்தூர் கோயிலுக்கு எதிரே உள்ள கடற்கரையில் ஆங்காங்கே ஆட்கள். சிலர் கடலில் காலை நனைத்துக் கொண்டிருந்தார்கள். சிலர் படுத்துக் கொண்டிருந்தார்கள். சிலர் உட்கார்ந்து கொண்டு கதை பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு ஊடாக நாய்கள் சில ஓடிக் கொண்டிருந்தன. சில படுத்துக் கொண்டிருந்தன.

சுக்குத்தண்ணி விற்றுக் கொண்டிருந்தான் ஒருவன். கருப்பட்டி போட்ட சுக்குத்தண்ணி. தம்ளர் மூன்று ரூபாய். ஒரு வாளியில் தண்ணீர் வைத்துக் கொண்டு அதில் கண்ணாடித் தம்ளர்களை ஊறப் போட்டிருந்தான். பிளாஸ்டிக் தம்ளர்களும் அவனிடம் இருந்தன. ஆளைப் பார்த்து தம்ளரைத் தேர்ந்தெடுப்பான் போல. குளிர்காற்றிற்கும் கடற்கரை மணலிற்கும் அந்தச் சுக்குக் தண்ணி சிலருக்குத் தொண்டையில் இதமாக இறங்கியது. வாயைத் திறந்து பாராட்ட விரும்பாமல் தலையை ஆட்டி தங்களுக்குள் சுக்குத்தண்ணியை பாராட்டினார்கள். அவர்கள் குடிப்பதையே ஒரு நாய் பார்த்துக் கொண்டிருந்தது. நக்கிக் குடிக்காமல் எக்கிக் குடிக்கிறானே என்ற நினைத்த நாயின் பார்வையில் ஏளனம்.

நாளிக்கிணற்றிற்குப் போகும் பாதை மலைப் பாம்பு போல இருட்டில் தெரிந்தது. அதன் ஓரத்திலேயே சில சிமிண்ட் பெஞ்சுகள். கடற்கரை மணலில் உட்காரச் சங்கோசப் பட்ட சிலர் அதில் உட்கார்ந்திருந்தார்கள். பனங்கிழங்கைப் பிய்த்து மென்று கொண்டிருந்தார்கள். இந்த வேளையிலா?

கோயிலுக்கும் கடற்கரைக்கும் நடுவில் ஒரு போலீஸ் காவல் வைக்கப்பட்டிருந்தது. சுனாமி வந்ததிலிருந்து இப்படித்தான். அருகில் பளிச்சென்று மூன்று சோடியம் வேப்பர் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. செயற்கைப் பகலாக இருந்தது கடற்கரை.

கடற்கரையிலிருந்து கோயிலைப் பார்த்தேன். நிலவொளியைப் பூசிக் கொண்டு மினுமினுப்பாகத் தெரிந்தது. வலப்பக்கத்தில் தருமபுரி ஆதீன மண்டபம் கடலை ஒட்டி இருந்தது. பெரிய மண்டபம். இடப்பக்கம் கடைகள் வரிசையாக இருந்தன. நான் இடப்பக்கம் திரும்பினேன். மூடப்பட்டிருந்த கடைகளின் ஓரமாக நடந்து சென்றேன். ஒரு வளைவில் திரும்பினால் கோயில் யானைக் கொட்டாரம். அதனுள் இருந்தது வள்ளி. பெண்யானை. என்னைப் பார்த்ததும் தும்பிக்கையைத் தூக்கி லேசாகப் பிளிறியது.

அப்படியே திரும்பி கோயிலின் முன்பக்கத்திற்கு வந்தேன். அதே சுக்குத்தண்ணி விற்பவன். அவன் முகத்தில் கவலை தெரிந்தது. சரியாக விற்கவில்லை. அவனிடம் சுக்குத்தண்ணி வாங்கிக் குடிக்க முடிவு செய்தேன். "சுக்குத்தண்ணி குடுங்க." என்னைப் பார்த்தான். வாளியிலிருந்து தம்ளர் எடுக்காமல் பிளாஸ்டிக் தம்ளரில் சுக்குத்தண்ணியை ஊற்றிக் கொடுத்தான்.

வெறும் வியாபாரமாக இல்லாமல் இரண்டொரு வார்த்தை பேசினேன். "கருப்பட்டி போட்டிருக்கீங்க போல! வாட ஜம்முன்னு இருக்கு!"

"ஆமாங்க. நயங்கருப்பட்டி. வெல வேற கூடிப்போச்சு. இருந்தாலும் மொத்தமா வாங்குனா கொஞ்சம் கொறைக்காங்க."

நான் வாங்கிக் குடிக்கத் தொடங்கியதும் சிலர் வந்தார்கள். கார் டிரைவர்கள். ஒவ்வொரு ஊரிலிருந்து வந்தவர்கள். அங்கே வந்து பேச்சுத் துணைக்குப் பழகிக் கொள்வது. ஒரு ஐந்து நிமிடத்தில் பத்து பேர் வந்து சுக்குத்தண்ணி குடித்தார்கள். விற்பவன் முகத்தில் மலர்ச்சி வந்தது. நான் மூன்று ரூபாய் சில்லரையை அவன் கையில் கொடுத்து விட்டு நடந்தேன்.

கோயிலைச் சுற்றி சின்னப்பாத் தேவர் கட்டிய மண்டபம். அந்தப் பிரகாரத்தில் நடந்தேன். அது கோயிலைச் சுற்றி வரும். மறுபடியும் கடல் கண்ணில் பட்டது. பிரகாரத்திலேயே மேலும் நடக்க தருமபுரி ஆதீன மண்டபம் மறுபடியும் கண்ணில் பட்டது. மண்டபம் மட்டுமா! அங்கு நடந்ததும் கூடத்தான். வெளியூராள் அங்கே படுத்துக் கொண்டிருக்க, போலீஸ் அவனை அங்கிருந்து நகட்டுவதிலேயே குறியாக இருந்தது.

"ஏய்! எந்தி! இங்க படுக்கக் கூடாதுல்லா. நகருவேய்." லத்திக் கம்பை மண்டபத் தரையில் தட்டினார் போலீஸ். படுத்திருந்தவனுக்கு அது கவுரவக் குறைச்சலாகப் பட்டிருக்க வேண்டும். முணுமுணுத்துக் கொண்டே எழுந்தான். அவன் எழுந்து நடந்ததும் போலீஸ் வேறு பக்கம் ரோந்து நடக்கத் தொடங்கியது.

கோபத்தில் குமைந்து கொண்டிருந்தான் எழுப்பப் பட்ட ஆள். "எய்யா முருகா! பாத்தியால அக்குரமம். இவனுகள என்னங்க! இதெல்லாம் கேக்காம இருக்குயே. செவுட்டுல விழலையா. அப்படியே கடலு பொங்கி மொத்தத்தையும் கொண்டு போயிரய்யா. அப்பத்தான் இவனுக அட்டூழியம் ஒழியும். எம்முருகன் கோயில்ல படுக்க விட மாட்டேங்குதானுகளே. கேப்பாரில்லாமப் போச்சு. எல்லாத்தையும் பாத்துக்கிட்டு சும்மாருக்கியே. நா என்ன ஓட்டல்லயா தங்க? ஒங்கோயிலுக்கு வந்தேன். இங்கன தங்க விடமாட்டேங்கானுகளே. அக்குரமம் பிடிச்சவனுக"

சத்தமாகவே பொரிந்து தள்ளிக் கொண்டிருந்தான். எனக்கு லேசாக சிரிப்பு வந்தது. அந்த ஆள் "முருகா முருகா" என்று புலம்பிக் கொண்டிருந்தான். நான் அருகில் போய்க் கேட்டேன். "என்னாச்சு?"

"இங்க கெடந்து தூங்க விடமாட்டேங்குதானுக. குச்சியக் கொண்டு தட்டி எழுப்புதானுக. கோயிலுக்கு எதுக்கு வர்ரோம். சாமியப் பாக்கத்தான. பாக்க விடாம இவனுக தடுக்கானுக. ரெண்டு அப்பு அப்பீருப்பேன். முருகங் கோயிலாச்சேன்னு விட்டேன். ஓட்டல்லயா நாம் படுத்துத் தங்க. அங்கன ரெண்டு நாயி படுத்துக் கெடக்கு. அதப் பத்த மாட்டேங்கானுக. எம்மேல பாயுதானுக."

அவருக்கு விளக்கம் சொன்னேன். "அவங்க அங்க படுக்கக் கூடாதுன்னு ஏன் சொல்றாங்க தெரியுமா? எல்லாம் பாதுகாப்புக்காகத்தான். இருட்டு வேளை. கடலோரம் வேற. அதுனாலதான். சுனாமி வந்ததுன்னு சொல்றாங்களே. அதுனாலதான் இந்தப் பாதுகாப்பு."

"இப்படி வெளக்கமாச் சொன்னாத்தானே தம்பி. லொட்டு லொட்டுன்னு தட்டுதானுகளே. எந்தி எந்தீன்னு பத்துதானுகளே. முருகங் கோயில்ல இப்படி நடக்கானுகளேன்னு எனக்கு வருத்தம். அவ்வளவுதான் தம்பி. ஏந்தம்பி, சுனாமியா! இது திருச்செந்தூரு. இங்க கடலு உள்ள வந்துருமா? என்ன தம்பி பேசுறீங்க! அத்தன ஊருல வெள்ளம் அடிச்சப்ப இங்க மட்டும் கடலு உள்ள போச்சு. தெரியுமுல்ல. பேப்பருல எல்லாம் போட்டுருந்துச்சுல்லா!"

அவருடைய நம்பிக்கை எனக்கு வியப்பளிக்கவில்லை. நம்பினால்தானே கடவுள்.

அவருடைய புலம்பல் தொடர்ந்தது. "இங்க படுக்கவிடாம தடுத்துட்டானுக. எங்க போய்ப் படுக்க? ஓட்டலுக்குக் குடுக்கக் கொட்டியா கெடக்கு? நானே கைக்காசு சேத்து உவரீல இருந்து வந்துருக்கேன். புள்ளக நல்லாப் படிக்கனுமுன்னு வேண்டிக்கிட்டுப் போக வந்தேன். எல்லாரும் வரச் செலவுக்கு ஆத்த மாட்டமத்தான் நா மட்டும் வந்தேன்."

"ஒங்க நம்பிக்க வீண் போகாது. ஒங்க பிள்ளைங்க நல்லா படிச்சு முன்னுக்கு வந்து ஒங்களக் காப்பாதுவாங்க. நீங்க நம்புற முருகன் கைவிட மாட்டான்."

"ரொம்ப நல்லது தம்பி. படிச்சவக சொல்றீங்க. எல்லாம் பலிக்கட்டும். நமக்கென்ன. பிள்ளைக நல்லாருந்தாச் சரிதான். கடைசி பஸ்சுக்கு வந்தேன். காலைல கும்புட்டுட்டு அப்படியே பொறப்பட்டு போலாமுன்னு பாத்தேன். இந்தப் பயலுக தூங்க விடல. இப்ப ராத்திரி முழுக்க இப்பிடியே நடக்கவா?"

"தேவையில்ல. கொஞ்சம் முன்னாடி போனீங்கன்னா ஆறுமுக ஆசாரி கலையரங்கம் வரும். அங்க படுத்துக்கலாம். பாதுகாப்பா இருக்கும். அங்க யாரும் ஒன்னும் சொல்ல மாட்டாங்க. காலைல சீக்கிரமா எந்திரிச்சு சாமியப் பாத்துருங்க. அப்புறம் கூட்டம் வந்துரும்."

"ஆகட்டும் தம்பி. இப்படித் தெளிவாச் சொன்னாதான தெரியுது எங்களுக்கு. இதுக்குதான் படிக்கனுங்கறது. இனிமே நமக்கு எங்க? ஆமா. ஒங்க பேரு என்ன தம்பி?"

"எம்பேரு முருகன்."

பேருக்கும் ஊருக்கும் இருக்கும் தொடர்பை உணர்ந்து சொன்னார். "சந்தோசம் தம்பி. சாமி பேரு. அதான் இம்புட்டுப் பேசுறீக. அந்த முருகன் ஒங்கள நல்லா வெச்சிக்கிறட்டும். வர்ரேன் தம்பி!" சொல்லி விட்டு அந்த ஆள் கலையரங்கத்தில் துண்டை விரித்துப் படுத்துக் கொண்டார். உடனே தூங்கியும் விட்டார். கள்ளமில்லாத மனது.

திரும்பி நடந்தேன். காலையில் சீக்கிரமாக இவரை எழுப்பி விட வேண்டும். பின்னே. மெனக்கெட்டு என்னைப் பார்ப்பதற்கு உவரியிலிருந்து வந்திருக்கின்றாரே. கூட்டம் வருவதற்கு முன்னால் என்னைப் பார்த்து விட்டால் அவன் என்னிடம் கூடக் கொஞ்சம் பேசுவான் அல்லவா!

அன்புடன்,
கோ.இராகவன்

Tuesday, November 22, 2005

கிழவியின் கவிதை

நண்பர்களே. இந்த நட்சத்திர வாரத்தில் இரண்டு கவிதைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

ஒன்று கிழவியின் கவிதை. இது நான் பெங்களூர் தமிழ்ச் சங்க மேடையில் சொல்லியது. மற்றொன்று தினம் ஒரு கவிதை குழுவில் இட்டது. இரண்டையும் உங்களுக்குக் கொடுப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். கொஞ்சம் கஷ்டப்பட்டாவது ஒரு முறை படியுங்கள். (குறிப்பாக துளசி டீச்சர்).

கிழவியின் கவிதை

படிப்பு
(படிப்பதற்காக விடுதிக்குச் செல்லும் பேரனிடம் கிழவி சொல்கிறாள்.)

குச்சிகள அடுக்கி வெச்சி
கூடு ஒன்னு கெட்டி வாழ
குருவிக் கூட்டம் படிச்சதாக
கதையேயில்ல!

ஒத்தக் காலில் நின்னுக்கிட்டு
ஒத்த மணி காத்திருந்து
வந்த மீன கொத்தித் திங்க
கொக்குகளும் படிச்சதாக
கேட்டதேயில்ல!

மண்ணுலதாம் பொறந்த பின்னே
கண்ணு ரெண்டும் தெறந்த பின்னே
நிக்க நடக்க ஓட செய்ய
மாட்டுக் கன்னு படிச்சதாக
ஏட்டுல இல்ல!

பசிச்சி சாகக் கெடந்தாலும்
திங்காத பச்சப் புல்ல
நோவு நொடி வந்து நொந்தா
மருந்தாகத் திங்கனுன்னு
புலிகளுமே படிச்சதாக
படிச்சதுமில்ல!

பாழும் மனுசப் பொறப்ப எடுத்தோம்
வாழும் வகைக்கு படிக்கனுமே!
நிமிந்து நிக்க உட்கார,
சோத்தப் பெணஞ்சு வாயில் வெக்க,
காலக் கழுவ, குளிச்சி மொழுக,
காசு பணஞ் சேகரிக்க,
சேத்ததையுங் கட்டிக் காக்க,
வீடு மாடு காடு வாங்க,
வாங்குனத வெச்சி வாழ,
காச்ச கீச்ச வந்தா மீள,
அத்தனைக்கும் படிக்கனுமே
பருவம் இருக்கையிலே!

காமனாரு பூசையால
பருவத்துல ஆச வரும்
ஆசையோட ஆளும் வரும்
அது நெருங்கி நேசம் வரும்
அப்படியே போனாலோ மோசம் வரும்
மாட்டிக்கிறாத!
மாணவப் பருவத்துல
வீணாத் தாம் போனா,
மானத்தோடு வாழுறது
ரொம்பவுஞ் செரமம்!

சேக்காளி சரியில்லாட்டி
போக்கிடமுந் தப்பாகும்!
தப்பான எடம் போனா,
சரசுவதி வரமாட்டா
அறிவ அவளுந் தரமாட்டா!
நல்லாப் பாத்துக்கோ சாமி!
நல்லபடி படிச்சுக்கோ சாமி!
அதுபடி நடந்துக்கோ சாமி!

இதையெல்லாஞ் செஞ்சாலே,
உத்தமமாய் இருந்தாலே,
நியாயப்படி நடந்தாலே,
ஊரு உலகம் மதிச்சி நிக்கும்!
உறவெல்லாந் தேடி வரும்!
லட்சுமியும் வருவா! பொருளெல்லாந் தருவா!
மீனாட்சி வருவா! நெஞ்சுல ஒரந் தருவா!
நல்லாப் பாத்துக்கோ சாமி!
நல்லபடி படிச்சுக்கோ சாமி!
அதுபடி நடந்துக்கோ சாமி!


கரை

இக்கரையில்
இவர்கள் இருவரும்
அல்லாடும் தடுமாற்றம்
அக்கரையில்
அவர்கள் அனைவரும்
ஆனந்தக் கொண்டாட்டம்

அக்கரைக்குப் போவதில்
இவர்களுக்கு
விருப்பமோ இல்லையோ
அவர்களுக்கு
அக்கறையில்லை
இக்கரைக்கு வருவதில்
அவர்களுக்கு
விருப்பமோ இல்லையோ
இவர்களாசைக்குக்
குறைவேயில்லை

ஆண்டவன் பழநி முருகன்
டாலர்தான்
இவர்களுக்குப் பெருஞ் சொத்து
ஆள்பவன் அமெரிக்கன்
டாலர்தான்
அவர்களுக்குப் பெருஞ் சொத்து

அத்தகையச்
சொத்தைத் தேடியே
சொத்தைகளான
அக்கரைவாசிகளின்
வித்தைகளுக்குக்
கத்தை கத்தையாகக்
கொட்டிக் கொடுத்த
இக்கரைவாசித்
தந்தைகளும் தாயார்களும்
கந்தைகளாகக் கசங்கி
இப்போது தனிமையில்

இக்கரையில்
செக்கு மாடுகளாய்ச்
சுற்றுகின்றவர்களுக்கு
அக்கரையின்
செக்குத் தாள்கள்
சுற்றமாகுமா சுகமாகுமா

இவர்களுக்கு
வாரத் தொலைபேசிகளே
வரமாய் இருந்தன
அவர்களுக்குப்
பாரமாய்க் கட்டணங்கள்
மின்னஞ்சல் வசதிகள்
இருபுறத்திலும்
வாராத் தொலைபேசிகள்
ஊமைகளாயின

நோவையுஞ் சொல்லாது
நோக்கங் குழம்பிப்
பாவைகளாய்க் கிடக்கும்
இவர்களின் தலையெழுத்திற்கும்
அவைகளை உணராது
ஆக்கங் கெட்டக்
கூவைகளாய் வாழும்
அவர்களின் தலையெழுத்திற்கும்
ஒன்றே காரணம்
இக்கரைக்கு அக்கரைப் பச்சை

அன்புடன்,
கோ.இராகவன்

நிலா நிலா ஓடி வா

நிலா நிலா ஓடி வா

உலகெங்கும் ஒரே பதட்டம். மனித முயற்சிகள் அத்தனையும் இயற்கையின் முன்னே ஒன்றுமில்லை என்பதை மீண்டும் ஒரு முறை இயற்கை நிரூபிக்கிறது. கி.பி.2505. உலகத்தின் தட்பவெட்ப நிலையே மாறிப் போயிருக்கிறது. எப்பொழுது பார்த்தாலும் மழை. எங்கு பார்த்தாலும் மழை. எல்லாம் கடந்த ஐம்பதாண்டுகளாகத்தான். உலகில் சுற்றுப்புறச் சூழல் மிகவும் கெட்டு பூமிப்பந்தே கொதித்துக் கிடந்தது. பனிமலைகள் எல்லாம் உருகத் தொடங்கின. உலகெங்கும் நீர்மட்டங்கள் உயர்ந்தன.

அப்படி நீர்மட்டம் உயர்ந்ததால் பல இடங்கள் நீரில் போயின. அங்கிருந்த மக்கள் எல்லாம் தண்ணீரில் மூழ்கிப் போயினர். யாராலும் தடுக்க முடியவில்லை. ஆனாலும் பல இடங்கள் தப்பிப் பிழைத்தன. சில இடங்களில் கடல் உள்ளே போய் நிலம் வந்தது. கடுமையான தட்பவெட்ப நிலையைச் சமாளிக்க மாட்டாமல் மக்கள்தொகை குறைந்து கொண்டே வந்தது. இந்தியாவின் மக்கள் தொகை இருபத்தைந்து கோடியாகக் குறைந்தது. அறிவியல் ஆராச்சிகள் பல செய்து இன்னும் ஐம்பதாண்டுகளில் உலகெங்குமே நீருக்கடியில் போய் விடும் என்று ஆராய்ச்சியாளர்கள் சொன்னார்கள்.

உலக மக்கள் பயந்து போனார்கள். எப்படித் தப்பிப் பிழைப்பது என்று யோசித்தார்கள். ஒருவழியும் உருப்படியாகப் பிடிபடவில்லை. நிலாவிற்கும் செவ்வாய்க் கிரகத்திற்கும் போய்ப் பிழைக்க முடியுமா என்று யோசித்தார்கள். அதுவும் முடியுமென்று முடிவு கட்டி சோதனை முயற்சிகள் பல செய்தார்கள். இருபதாம் நூற்றாண்டிலிருந்தே நிலாவிற்கு மனிதர்கள் சென்று வந்து கொண்டிருந்தார்கள்.

அப்படி ஒவ்வொரு முறை செல்லும் பொழுதும் அங்கு மானிடர்கள் வாழத் தேவையான அடிப்படை வசதிகளை விதைக்கத் தொடங்கினார்கள். நீர் வளத்திற்கு ஏற்பாடு செய்தார்கள். முதலில் செயற்கை மேகங்களை உருவாக்கினார்கள். அதில் மழையைப் பொழிய வைத்தார்கள். ஒரு ஐம்பதாண்டு காலம் அப்படியே போனது. பிறகு ஒரு கட்டத்தில் தானாகவே மேகங்கள் உருவாகத் தொடங்கின. மழையும் பொழியத் துவங்கின. அடிக்கடி இல்லையென்றாலும் அவ்வப்பொழுது பெய்தன. கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலம் கழிந்த பின்னே தாமாகவே மழை பொழியத் தொடங்கின.

மழை அடிக்கடிப் பெய்யத் தொடங்கியதால் மண் பக்குவப் பட்டது. அது விவசாயத்திற்குத் தக்கதானது. அனைத்தும் அறிவியலாளர்களின் உழைப்பு. அமெரிக்கா இதில் முன்னிலை வகித்தது. ஐரோப்பிய யூனியனும் ரஷ்யாவும் இந்தியாவும் சைனாவும் சில அரபு நாடுகளும் தங்களது கனிசமாக உழைப்பைக் கொட்டியிருந்தன.

இத்தனை முன்னேற்றங்கள் நடந்ததால் மண்ணில் இருந்து பார்க்கும் பொழுது நிலாவின் தோற்றம் மாறிப் போயிருந்தது. பால் வெண்ணிலா என்று கவிஞர்கள் புகழ முடியாமல் போயிற்று. மேகங்கள் சூழும் போது நிலா கருஞ்சாம்பல் நிறத்தில் தெரிந்தது. மேகங்கள் விலகிய பொழுதுகளில் பச்சை வெளிகளால் பச்சை நிறத்தில் ஒளிர்ந்தது. ஆராய்ச்சியாளர்கள் சில வேளைகளில் ஒளி வெள்ளங்களை அங்கே உருவாக்கிக் கொண்டிருந்ததால் அம்மாவாசைகளில் கூட நிலாவில் ஆங்காங்கே வெளிச்சப் பொட்டுக்கள் தெரிந்தன.

ஆனாலும் கவிஞர்கள் விட்டுக் கொடுக்காமல் புதுப்புது விதங்களில் நிலவைப் பாடிக் கொண்டிருந்தார்கள். அதுதான் மனித வாழ்க்கையைக் காப்பாற்றப் போகிறது என்பதால் அதைக் காதலியாகப் பார்ப்பதை விடுத்து தாயாகப் பார்த்தார்கள். தமிழர்கள் சென்னைக் கடற்கரையில் மிகப்பெரிய சந்திராலயம் கட்டினார்கள். அங்கு கூட்டம் குவியத் தொடங்கியது. சந்திரனிலிருந்து பார்த்தாலும் தெரிகிறது என்று அங்கிருந்து புகைப்படங்களை வேறு எடுத்து அனுப்பினார்கள். அந்தப் படங்களை தங்கள் உடைகளில் அச்சிட்டுக் கொள்வது பிரபலமானது.

கிட்டத்தட்ட முந்நூறு வருட கடின உழைப்பிற்குப் பின்னர் நிலா என்பது மற்றொரு பூமி என்றாகி விட்டது. மனிதகுலம் காப்பாற்றப் படுமென்று உலக நாடுகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டன. ஆனால் அதுவும் நீண்டு நிலைக்கவில்லை. காரணம்? அடிக்கடி நிலாவிற்கு ஆட்களை அனுப்பிக் கொண்டிருந்த அமெரிக்கா அவர்களுக்கு ஆயுதப் பயிற்சியையும் கொடுத்து, ஆயுதங்களையும் கொடுத்து அனுப்பிக் கொண்டிருந்தனர். இது மிகவும் ரகசியமாக நடந்தது.

கிட்டத்தட்ட முக்கால்வாசி நிலவை அவர்கள் வளைத்திருந்தனர். கடுமையான காவல் போடப் பட்டது. அங்கிருந்த மற்ற நாட்டு விஞ்ஞானிகளையும் வழிக்குக் கொண்டு வந்திருந்தனர். ஆகையால் விஷயம் மற்ற நாடுகளை அடையவில்லை. மொத்தமாக மூன்று கோடிப் பேர்கள் அங்கு போக முடியும் என்று உலக விஞ்ஞானிகள் முடிவு செய்தார்கள். எந்தெந்த நாடுகளிலிருந்து எத்தனை பேர்களை அனுப்புவது என்று முடிவு செய்ய ஐக்கிய நாட்டுச் சபையைக் கூட்டினர்.

அப்பொழுதுதான் பிரச்சனைகள் வெடித்தன. இரண்டு கோடிப் பேர்களை அனுப்பவும் பாதுகாக்கவும் அமெரிக்கா அங்கு ஏற்பாடு செய்திருப்பது தெரிய வந்தது. அமெரிக்காவிற்கு இரண்டு கோடிப் பேர். மற்ற அனைத்து நாடுகளுக்கும் சேர்த்தே ஒரு கோடிப் பேரா! ஆராய்ச்சியில் மற்ற நாடுகளை விடவும் தான் செலவழித்திருப்பதை ஆதாரத்தோடு எடுத்துச் சொன்னது அமெரிக்கா. இத்தனை காலம் அமெரிக்காவின் உதவியுடன் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த பல நாடுகள் தங்கள் பங்கு வெறும் உடல் உழைப்பு என்றாகிப் போனதைக் கண்டு நொந்தன.

இரண்டு கோடி அமெரிக்கர்களை இன்னும் இருபது ஆண்டுகளில் அமெரிக்கா அனுப்பும் என்று தன்னிச்சையாக அறிவித்தது. அப்படி அனுப்பப் பட வேண்டியவர்களை அமெரிக்கா பட்டியலிடத் தொடங்கியது. அறிஞர்கள், அரசியல்வாதிகள், மருத்துவர்கள், பொறியாளர்கள் என்று சிறந்தவர்களாக தேர்ந்தெடுத்தனர். குறிப்பாக முப்பதிலிருந்து நாற்பது வரை வயதுள்ளவர்களுக்கு முன்னுரிமை கிடைத்தது. அவர்களுக்காக அங்கே ஒரு நாடாளுமன்றத்தைக் முன்னேற்பாடாக அமைத்தனர். அந்த நாடாளுமன்றத்தில் பணியாற்ற அமெரிக்க அதிபர் அடிக்கடி சென்று வந்து கொண்டிருந்தார். அவருக்காக அங்கே ஒரு வெள்ளை மாளிகை உண்டாகப்பட்டது.

பல ஏற்பாடுகள் நடந்தன. கடைசியாக முதற்கட்டமாக ஆள் அனுப்பும் நாளும் நெருங்கியது. அமெரிக்காவில் இதற்காகவே ஒரு நிலா நிலையம் கட்டப்பட்டது. ஐநூறு பயணிகள் செல்லும் வகையில் மூன்று நிலாக் கப்பல்கள் கட்டப்பட்டு வெற்றிகரமாக சோதிக்கவும் பட்டன. அடிக்கடி மழை பெய்து கொண்டிருந்த போதிலும் நிலாக் கப்பலின் பயணத்தைப் பார்க்கப் பலர் குவிந்திருந்தார்கள். தொலைக்காட்சிகளிலும் ஆயத்தங்களைக் காட்டிக் கொண்டிருந்தார்கள். எங்கும் பலத்த பாதுகாப்பு.

தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரத்து ஐநூறு பேர்களுக்கு மக்கள் ஆராவார விடை கொடுத்தனர். ஷாம்பெயின் பாட்டில் உடைக்கப்பட்டு நிலாக்கப்பல்கள் ஒவ்வொன்றாக மேலெழும்பின. எந்தத் திசையிலும் திரும்பும் வகையில் அமைந்தவை அந்தக் கப்பல்கள். மொத்தக் கப்பலும் தலைகீழாகத் திரும்பினாலும் கூட உள்ளே அமர்ந்திருப்பவர்கள் நேராகவே உட்கார்ந்திருப்பார்கள். அத்தனை வசதிகள் நிறைந்தவை. நெருப்பை உமிழும் பழைய ராக்கெட்டுகளைப் போன்றவை அல்ல இந்தக் கப்பல்கள். கிட்டத்தட்ட இருபதாம் நூற்றாண்டு விமானங்கள் போல பார்வைக்கு இருக்கும்.

பிரச்சனை என்னவென்றால் மற்ற நாடுகளின் நிலாக் கப்பல் சோதனை இன்னும் முழுமையாக வெற்றியடையவில்லை. அமெரிக்காவிடம் மட்டுமே ஒழுங்கான நிலாக் கப்பலின் தயாரிப்புத் திட்டங்கள் இருந்தன. ஆனால் அந்தத் திட்டங்களை வைத்துக் கப்பல்களைச் செய்ய வேண்டுமென்றாலும் மற்ற நாடுகளுக்குப் பத்து வருடங்கள் ஆகும். மேலும் முதலில் நிலா நிலையம் ஒன்று அமைக்க வேண்டும். அதற்கே ஐந்து வருடங்களுக்கு மேலாகும். அதோடோ அல்லது அதன் பின்னரோ நிலாக் கப்பல் செய்ய வேண்டும். எவ்வளவு செலவு பிடிக்கும்! எவ்வளவு அறிவியல் மூளை வேண்டும்!

அமெரிக்க அதிபர் நிலாவிலுள்ள வெள்ளை மாளிகையில் இவர்களை வரவேற்கக் காத்திருந்தார். ஏழு நாட்களில் அவர்கள் நிலவை அடைந்து விடுவார்கள் அல்லவா. நிலாக் கப்பல்கள் மேலெழும்பும் காட்சியை அவரது கணினியில் பார்த்தார். ஒவ்வொன்றாக மேலெழும்பும் காட்சி மிக அழகாக இருந்தது. பெருமை மிக்க அமெரிக்கர்களுக்கு அவர் உரையாற்றினார்.

அப்பொழுதுதான் அந்த விபரீதம் நடந்தது. மேலெலும்பிய மூன்று கப்பல்களும் திசைமாறி நிலா நிலையத்தை நோக்கியே திரும்பின. நேரிலும் தொலைக்காட்சியிலுமாகப் பார்த்துக் கொண்டிருந்த மொத்த உலகமும் ஸ்தம்பித்தது. நிலா நிலையம் மூன்று பகுதிகளை உடையது. பயணியர் பகுதி. கட்டுப்பாட்டுப் பகுதி. நிலாத் தொடர்புப் பகுதி. ஒவ்வொரு கப்பலும் ஒவ்வொரு பகுதியை நோக்கித் திரும்பியது. மிகுந்த வேகத்தில் வந்து மூன்று பகுதிகள் மேலும் மோதின.

பெருத்த ஓசை. பயங்கர ஓலம். ஒவ்வொரு பகுதியின் கட்டிடங்களும் பொலபொலவென உதிர்ந்தன. ஏன் அப்படி நடந்தது என்று யாருக்கும் தெரியவில்லை. எல்லாம் பாதுகாப்பாகத்தானே இருந்தது. பிறகெப்படி. கட்டிடங்களிலிருந்து பலர் தப்பிப்பதற்காகக் கீழே குதித்தனர். அந்தோ பரிதாபம்! அந்த உயரத்திலிருந்து குதித்தால் எதுவும் மிஞ்சுமா! பேரிழப்பு! மிகப் பெரிய இழப்பு! மொத்தத்தில் நிலாக் கனவு நிலாச்சோறானது.

பி.கு : இந்தக் கதை முழுக்க முழுக்க கற்பனையே. எந்த நாட்டையும் இனத்தையும் மட்டம் தட்டுவதற்காக எழுதப் பட்டது அல்ல.

அன்புடன்,
கோ.இராகவன்

Monday, November 21, 2005

வாடை எனை வாட்டுது!

இன்றைக்கு இருபது வருடங்களுக்குப் பிறகு தமிழ் நாட்டு இளம் பெண்களின் பேச்சு எப்படியிருக்கும் என்று ஒரு நகைச்சுவையான கற்பனை. கற்பனையில் உலகம் நிறையவே மாறிவிட்டது. அதனால் படிக்கிறவர்கள் தலையைப் பிய்த்துக் கொள்ள வேண்டாம். எப்படியாவது புரிந்து கொள்ளுங்கள்.

ரமாவும் சுமாவும் கல்லூரி மாணவிகள். கல்லூரி நேரத்தில் ஒழுங்காக நூலகத்தில் உட்கார்ந்து கொண்டு அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள்.

"ஏய் சுமா? மல்லிகை மொட்டு சிடி வாங்கினியா? நான் நேத்துதான் வாங்கினேன். ராத்திரி கண்ண மூடிப் படுத்துக்கிட்டு அதக் கேட்டுட்டும் மோந்து பாத்துகிட்டும் தூங்கினேன். ரொம்ப நல்லா இருந்தது."

"அடடா! நான் இனிமேதான் வாங்கனும். எத்தனை பாட்டு இருக்கு? எல்லாம் நல்லாயிருக்கா? ஆமா வாடையமைப்பாளர் யாரு?"

"இசை ஏ.ஆர்.ரகுமான் போட்டிருக்கார். பாட்டெல்லாம் நல்லாயிருக்கு. வாடையமைப்பாளர் சசி. ரொம்பப் புதுமையா இருக்குடி. மல்லிகைக் கொடின்னு ஒரு பாட்டு. அதுல ஒரு மாதிரி மல்லிகை மணம் வருது. அடடா! என்னமா இருக்கு தெரியுமா? அதே மாதிரி பீச்சுக்குப் போனேன் பாட்டுல பீச்சுல வருமே....அதே மாதிரி உப்புக்காத்து வாடைய ரொம்ப நேச்சுரலா போட்டிருக்காரு. அப்பப்ப பானீபூரி வாடையும் லேசான கருவாட்டு வாடையும் ரொம்ப நேச்சுரலா இருக்கு."

"ஐயோ! ரமா! நீ வேற ஏத்தி விடுறயே! சசி ஒவ்வொரு வாடையும் கம்யூட்டர்ல போடுறாராமே. நல்லா இருக்கா?"

"சூப்பராயிருக்கு சுமா. கதிரவன் மாதிரி வாடையமைப்பாளர்கள் இயற்கையாவே வாடைய ரெக்கார்ட் பண்ணுவாங்களாம். ஆனா சசிதான் கம்யூட்டர் வெச்சி வாடையமைக்கிறார். அதுவும் எல்லாருக்கும் பிடிச்சுதான் இருக்கு. என்ன இருந்தாலும் டிஜிட்டல் ரெக்கார்டிங் ஆச்சே!"

"தியேட்டர்ல போய் பாக்கனும் நீ. திருச்சி எக்ஸ்பிரஸ் படத்த தியேட்டர்ல பாக்கும் போது கும்முன்னு இருந்துச்சே. நல்ல டால்பி ஸ்மெல்லர்ஸ். ஒவ்வொரு வாசனையும் தெளிவா இருந்ததே. நீயுந்தான வந்த?"

"ஆமாமா. அந்த ரயில்வே ஸ்டேஷன் சீன்ல.....ஒரு நாத்தம் வருமே. தியேட்டர்ல இருக்கோமான்னு எனக்கே டவுட் வந்துருச்சி. ஆனா ஒன்னுப்பா....பழநி பஞ்சாமிர்தத்த கமல் நக்கும் போது எனக்கு வாயில எச்சி ஊறிடிச்சி."

"அதெல்லாம் கம்யூட்டர்ல போட்டதுதானே. நல்லாதான் இருந்தது. பழைய ஆளுங்கதாம்ப்பா இன்னமும் நேச்சுரலா ரெக்கார்ட் பண்ணனும்னு சொல்வாங்க. பழைய படமெல்லாம் அப்படிதான வந்தது."

"ஆமாம் சுமா. நம்ம சின்னக் குழந்தையா இருந்தப்போ வாசனைய ரெக்கார்டே பண்ண முடியாதாமே. வெறும் ஒலியும் ஒளியும்தானாம்."

அப்பொழுது ரமாவிற்கு ·போன் வருகிறது. ரமாவின் தாயார் வீட்டிலிருந்து கூப்பிடுகிறார். ரமா கொஞ்ச நேரம் பேசிவிட்டு ·போனை வைத்து விடுகிறாள். அந்த இடத்தில் கொஞ்ச நேரம் கம்மென்று பாயாச வாடை.

"ரமா...இன்னைக்கு வீட்டுல என்ன விசேஷம்? பாயாச வாடை பலமா இருக்கு."

"ஊருல இருந்து சித்தி சித்தப்பால்லாம் வந்துருக்காங்க. அதான். இந்த மொபைல் ·போனால இதுதான் பிரச்சனை. அன்னைக்கு நம்ம காலேஜ் போகாம ஹோட்டலுக்குப் போனோமே. கரெக்ட்டா அப்பதான் வீட்லருந்து போன். டேபிள்ள என்னடான்னா ஒவ்வொருத்தரும் ஒவ்வொன்னு ஆர்டர் பண்ணி வெச்சிருக்காங்க. அந்த வாடையெல்லாம் போகாம நான் ·போன பொத்தி வெச்சுக்கிட்டு பேச வேண்டியிருந்தது. நல்ல வேள என்கிட்ட கேமராவை ஆஃப் பண்ணி வெச்சிருந்தேன். இல்லைன்னா நான் இருக்குற எடம் தெரிஞ்சி போயிருக்கும்."

"ஆமா. நல்ல வேள. தப்பிச்சோம். இல்லைன்னா உங்க வீட்லருந்து எங்க வீட்டுக்கும் விஷயம் போயி ஒரே பிரச்சனையாப் போயிருக்கும்."

சுமாவுக்கு ஒரு சந்தேகம். "ஏய்! அன்னைக்கு உன்னோட பாய் பிரண்ட் ஏதோ பெர்பியூம் போட்டுட்டு வந்தான்னு மொபைல்ல ரெக்கார்டு பண்ணியே. அதக் கொஞ்சம் போடுடி. நல்ல ஸ்மெல்."

"சுமா! இதெல்லாம் வேண்டாம். அந்த வாடையத்தான் ஒரு வாட்டி போட்டேன்ல. அப்புறம் என்ன அடிக்கடி. ரொம்ப அலையாத!"

"சரிம்மா. விட்டுத்தள்ளு. என்னவோ மேன்லியா நல்லா இருந்ததேன்னு கேட்டேன். சரி. சரி. அந்த மல்லிகை மொட்டு சிடியை நாளைக்குக் கொண்டு வா. நான் கம்ப்யூட்டர்ல போட்டு காப்பி பண்ணிக்கிறேன்."

இருவரும் ஒருவருக்கொருவர் டாட்டா சொல்லி விட்டு வீட்டிற்குக் கிளம்புகிறார்கள்.


அவ்வளவுதான். கதை முடிந்தது. மக்களே! இந்தக் கற்பனையைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்? இப்படியும் நடக்குமா?

அன்புடன்,
கோ.இராகவன்

பட்டியல் போடுவோமா?

பட்டியல் போடுவோமா?

நட்சத்திர வாரம் தொடங்கியாச்சு. மொத நாள் எல்லாரையும் போல அறிமுகம் போட்டாச்சு. வேறென்ன போடலாம்? ஒரு பட்டியல்? அதுவும் இந்த வாரம் என்னென்ன போடலாமுன்னு ஒரு பட்டியல் போட்டா எல்லாருக்கும் வசதியா இருக்குமில்லையா! ஹோட்டல்ல மெனு குடுக்குற மாதிரி. நமக்கு ஏதாவது பிடிச்ச மாதிரி இருந்தா அன்னைக்கு மட்டும் பிளாக் வந்து படிச்சிக்கலாம். இல்லையா!

சரி. பட்டியலைப் பாப்போமா!

திங்கள் - 21 நவம்பர் - என்னைத் தெரியுமா போட்டாச்சு. பட்டியல் போட்டுக்கிட்டு இருக்கோம். அதுனால இன்னைக்கு இதுக்கு மேல ஒங்கள தொந்தரவு செய்யல.

செவ்வாய் - 22 நவம்பர் - ஒரு நகைச்சுவைக் கதை. படிச்சிட்டு சிரிப்பு வரலைன்னு உங்களுக்கு ஆத்திரம் வரக்கூடாது. கொஞ்சம் கேணத்தனமா இருக்கும். ஒருவேளை ஒங்களுக்குப் பிடிச்சுப் போனா, புதுமையா இருந்ததுன்னு சொல்லீரலாம். சரியா?

புதன் - 23 நவம்பர் - ஒரு கதை. இதுவும் கற்பனைக் கதைதான். காலைல கதை. மாலைல கவிதை. இரண்டு கவிதைகள். இரண்டும் நான் ஏற்கனவே எழுதியவை. இருந்தாலும் அத இன்னைக்குப் போடனுமுன்னு ஒரு ஆசை. கவிதைக்குக் கீழ, அந்தக் கவிதையை எப்போ எதுக்கு எழுதினேன்னு ஒரு சின்ன குறிப்பு குடுத்திரலாம்.

வியாழன் - 24 நவம்பர் - ஒரு கதை. அதுக்கு மேல ஒன்னும் சொல்ல வேண்டாமுன்னு நினைக்கிறேன். இன்னைக்கு இந்தக் கதை போதும்.

வெள்ளி - 25 நவம்பர் - பெங்களூரில் ஒரு நாள். பெங்களூருக்கு நான் வந்தப்ப நடந்த ஒரு அனுபவம். அப்புறம் மாலையில் தூத்துக்குடியில் ஒரு நாள். இரண்டு ஒரு நாளுக்கும் வித்தியாசம் எக்கச்சக்கம்.

சனி - 26 நவம்பர் - கனவுகளே! ஆயிரம் கனவுகளே! எனக்கு வந்த கனவுகளைப் பத்தி ஒரு பதிவு. பகல்ல கனவு.

ஞாயிறு - 27 நவம்பர் - ஒரு திரைப்பட விமர்சனம். நான் பார்த்த ஒரு ஆங்கிலத் திரைப்பட விமர்சனம். இந்தப் பதிவைப் போடும் முன்னாடி எந்தப் படமுன்னு சரியா ஊகிச்சா பரிசு காத்திருக்கு. ஊகிங்க ஊகிங்க.

என்ன நண்பர்களே.....பட்டியலைப் பாத்தீங்களா? என்ன நினைக்கிறீங்க பட்டியலைப் பத்தி! எதையாவது மாத்தனுமா? பட்டியல் பற்றிய ஒங்க கருத்துகளை அள்ளி விடுங்க.

அன்புடன்,
கோ.இராகவன்

தடாகம்: இன்போசிஸ் நாராயணமூர்த்தி ரூபாய் 80-க்கு

தடாகம்: இன்போசிஸ் நாராயணமூர்த்தி ரூபாய் 80-க்குஉண்மையைச் சொல்லட்டுமா......வருடம் தவறாமல் செல்கின்றவன் நான். இந்த ஆண்டு பல காரணங்களால்..நேரமின்மை என்பதே உண்மையான நியாயமான காரணம்...செல்ல முடியவில்லை. நடந்ததைப் பார்த்தால் அடுத்த ஆண்டு இன்னும் கூட்டம் குறையுமென்று தெரிகிறது. இது எனக்கு வருத்தம்தான்.

Sunday, November 20, 2005

என்னைத் தெரியுமா!

என்னைத் தெரியுமா!

அன்பு நண்பர்களே, என்னைத் தெரியுமா? என்னுடைய பெயர் இராகவன் என்பதைத் தவிர, இந்த வார தமிழ்மண நட்சத்திரம் என்பதைத் தவிர. தெரியாவிட்டால் உங்களுக்கு என்னை முறையாக அறிமுகம் செய்து கொள்ள வேண்டியது கடமையாகிறது.

உலகத்திலேயே மிகவும் புண்ணியப்பட்ட பூமி என்று என்னைக் கேட்டால் தூத்துக்குடி என்று சொல்வேன். நான் பிறந்த ஊராயிற்றே. எனது ஆரம்பகால நினைவுகளை முழுமையாகக் கொண்ட ஊராயிற்றே. ஆகையால் தூத்துக்குடியை நினைக்கும் பொழுது மட்டும் ஒரு ரெட்டிப்பு சந்தோஷம்.

அப்புறம் மதுரை, கரூர், கோவில்பட்டி, சென்னை, பெங்களூர் என்று பல சுற்றுகள் சுற்றியாகி விட்டது. இப்பொழுது இருப்பு பெங்களூரில். பொறுப்பு மென்பொருளில். ஆகையால் இப்பொழுது நான் பெங்களூரியன். ஆனால் ஆழத்தில் தோண்டித் தூர் வாரிப் பார்த்தால் ஒரு தூத்துக்குடிச் சின்னப் பையன் உட்கார்ந்திருப்பான். மற்ற ஊர்களில் எல்லாம் இல்லாத ஒரு ஒட்டுதல் தூத்துக்குடிக்கு மட்டும்.

எழுத்து என்பது எனக்கு எப்படிப் பழக்கம்? யோசித்துப் பார்க்கிறேன். எனக்குச் சின்ன வயதில் படிக்கும் வழக்கம் நிறைய உண்டு. நடுத்தரக் குடும்பத்தில் புத்தகங்களை வாங்கிப் படிப்பது என்பது கனவாக இருந்த அளவுக்கு நடுத்தரக் குடும்பம்.

ஆகையால் லெண்டிங் லைப்ரரியிலிருந்து புத்தகங்கள் வரும். வீட்டில் பெரியவர்கள் படிக்கும் புத்தகங்களே பெரும்பாலும் வரும். எனக்கு? அதற்கும் ஒரு வழியை ஆண்டவன் காட்டத்தான் செய்தார். என்னுடைய நண்பன் ராஜேஷின் தந்தை தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் பேராசிரியராக இருந்தவர். அவர்கள் வீட்டில் அம்புலிமாமா, ரத்னபாலா, பொம்மை, பூந்தளிர் ஆகிய புத்தகங்கள் படிக்கக் கிடைக்கும். ராணி காமிக்ஸ் புத்தகங்களும் கிடைக்கும். அங்குதான் தவமாய்த் தவமிருப்பேன்.

அதே நேரத்தில் பெரியவர்கள் படிக்கும் புத்தகங்களையும் படிக்காமல் விட்டதில்லை. அவைகளையும் புரட்டாமல் விட மாட்டேன். படிப்பது என்பது அவ்வளவு சுகம். படைப்பது?

அப்படியாக நான் படிக்கையில் எழுதும் ஆர்வமும் வந்தது. மூன்றாம் வகுப்பு என்று நினைக்கிறேன். அப்பொழுது எழுதத் தொடங்கிய கதை ராமாயணம். ஒரு ஊரில் ஒரு தந்தை. அவருக்கு நான்கு மகன்கள் என்று போகும். தப்பும் தவறுமாக ஒரு பக்கம் எழுதியிருப்பேன். ஆனால் ஊக்கமில்லாமையால் அது தொடராமல் போனது.

பிறகு அப்படி இப்படி என்று எப்படியோ அங்கும் இங்குமாய் எழுதி இப்பொழுது தமிழ்மணத்திற்கும் வந்தாயிற்று. வந்ததோடு இல்லாமல் நட்சத்திரம் என்ற புதிய பட்டம் கிடைத்த கௌரவம். வரும்பொழுது வாங்கிக் கொள்வது சரிதானே.

இத்தனைக்கும் யார் காரணம்? யோசித்துப் பார்த்தால் பலர் நினைவிற்கு வருகின்றார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில். அத்தனையையும் பயன்படுத்திக் கொண்ட என்னுடைய ஆழ்மன ஆசையையும் சொல்லியே ஆகவேண்டுமல்லவா.

சின்ன வயதில் என்னைப் பாம்பாட்டி என்பார்கள். ஏன் தெரியுமா? என் வயதொத்தவர்களும் குறைந்தவர்களும் என்னைச் சுற்றித்தான் உட்கார்ந்திருப்பார்கள். வாய்க்கு வந்ததைச் சொல்வேன். கருத்தும் இருக்காது. திருத்தும் இருக்காது. ஆனாலும் கதை. காலில்லாக் கதை. அவர்களும் ஆவென வாய் திறந்து கேட்பார்கள். அதனால் வீட்டில் என்னைப் பாம்பாட்டி என்பார்கள்.

அதாவது கதை சொல்லும் ஆர்வம். நாலு பேருக்கு நாம் சொல்லி அவர்கள் விரும்பிக் கேட்டால் ஒரு சந்தோஷம். அந்த வயதில் நான் சொன்ன கதைகள் எனக்கு இந்த வயதில் நினைவில்லை. ஆனால் கதை சொன்னது நினைவிருக்கிறது.

இந்த கதை சொல்லும் அடையாளம் வயது வளர வளர குறைந்து போனது. படிப்பும் ஒரு காரணம். நான் கல்லூரியில் படிக்கும் பொழுது நான் எதையாவது எழுதிப் படித்தால், அது ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பாடமா அல்லது தமிழில் எழுதப்படும் கதையா என்று என் தந்தை ஐயப்பட்டு எட்டிப் பார்த்த நிகழ்ச்சிகளும் உண்டு.

ஆனால் முழுமையான எழுத்துப் பயிற்சி இல்லை. தினமும் ஒரு கவிதை என்று ஒரு குழு இருந்தது. அங்கு சில கவிதைகள் எழுதியிருக்கிறேன். இப்பொழுது அந்தக் குழு இல்லை என்பது வருத்தமான விஷயம். அந்தக் குழுவினர் பெங்களூர் தமிழ்ச்சங்கத்தில் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தினார்கள். இங்கிருக்கும் தமிழறிஞர்களையும் அழைத்திருந்தார்கள். அதில் ஒரு பட்டிமன்றம். அதற்கு என்னை நடுவராக உட்கார வைத்து விட்டார்கள். எப்படியோ நடத்தி முடித்து கொஞ்சம் பாராட்டுகளையும் பெற்றேன்.

மறுபடியும் ஒரு பட்டி மன்றம். மகேந்திரன் என்ற நண்பர் வழியாக. பெங்களூர் டவுன் ஹாலில் நடந்தது. இந்த முறை அணித்தலைவர் பதவி. பாரதியின் படைப்புகளில் விஞ்சியது நாட்டுக்காகவா? வீட்டுக்காகவா? எனக்கு வீடு பேறு கிடைத்தது. பேசும் பொழுது மற்றவர்களை விட கைதட்டல் நிறைய கிடைத்தது. ஆனால் வெற்றி அடுத்த அணிக்கு. அதனால் என்ன. செய்ய வேண்டியதைச் சரியாகச் செய்தோமே என்ற மகிழ்ச்சி.

மறுபடியும் கொஞ்சம் தொய்வு. நான் எழுதும் கவிதைகள் செய்யுள் போல இருப்பதாக என்னுடைய நண்பர் பிரதீப் கருத்துக் கூறினார். அவர் சொன்னதிலும் காரணமில்லாமல் இல்லை. அப்பொழுது ஆசிரியப்பாவைக் கொஞ்சம் பழகத் தொடங்கியிருந்தேன்.

ஃபோரம் ஹப்பில் கொஞ்சம் கதைகள் எழுதினேன். வீரப்பன் கன்னட நடிகர் ராஜ்குமாரை விடுதலை செய்திருந்த நேரம். விக்கிரமாதித்தன் கதையையும் வீரப்பன் கதையையும் குழப்பி ஒரு நகைச்சுவைத் தொடர்கதை எழுதினேன். அது கொஞ்சம் நன்றாக ரசிக்கப்பட்டது. ஒன்றிரண்டு சிறு கதைகளும் எழுதினேன். பக்குவமில்லாத எழுத்து நடையில் (இப்ப மட்டும் என்ன வாழுதுன்னு நீங்க சொல்றது புரியுது. ஹி ஹி)

மறுபடியும் கொஞ்சம் தொய்வு. இந்த முறை வேலையால். கிட்டத்தட்ட ஒரு வருடம். பிறகு தமிழ் மன்றத்தின் அறிமுகம் கிடைத்தது. அங்கும் நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள். பிறகு முத்தமிழ் மன்றத்தின் அறிமுகமும் கிடைத்தது. கொஞ்சம் எழுதத் தொடங்கினேன். நடை கொஞ்சம் கை வந்தது. அதே நேரத்தில் மீண்டும் ஃபோரம் ஹப். அங்கு கவிதைகள் பகுதிக்கு நடத்துனராகப் பதவி. எனக்கென்ன தெரியும் கவிதையைப் பத்தி என்று சொன்னாலும் கேட்கவில்லை. நம்பிக்கையோடு கொடுத்ததை நம்பிக் கையோடு பெற்று முடிந்தவரை சிறப்பாகச் செய்து வருகிறேன்.

இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக எழுத்து கைவந்து கொண்டிருந்த வேளையில்தான் தமிழ் மணத்தின் அறிமுகம். ஒரு பெரிய வட்டத்தில் கலந்த உணர்வு. இங்கும் நல்ல நண்பர்கள். நல்ல பதிவுகள். படிக்க நிறைய அனுபவங்களும் விஷயங்களும் கிடைக்கும் இடம். அருவியிலிருந்து நேரே வாயைப் பிளந்து தண்ணீர் குடிக்கும் நிலை. எவ்வளவு தண்ணீர்! ச்சேசே...ஒரே ஒரு வாயைப் படைத்தானே பிரம்மன் என்று நினைக்கும் நிலை. அவ்வளவு விஷயக் கடல். அதை விட தாங்கள் நினைப்பதைச் சொல்ல மக்களுக்கு ஒரு இடம்.

அப்படிப்பட்ட இனிய தமிழ் மணத்தில் இப்பொழுது எழுதி உங்களுக்கெல்லாம் பதித்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் செல்ல வேண்டிய தொலைவு நிறைய. இறைவன் அருளால் அனைத்தும் நடக்கும்.

ஆகையால் முதலில் அனைவருக்கும், வாய்ப்பளித்த மதி கந்தசாமி மற்றும் காசி ஆறுமுகத்திற்கும் தமிழ் மணத்தின் நட்சத்திரமாக நன்றி சொல்லி விட்டு இந்த ஒருவாரப் பயணத்தைத் துவக்குகிறேன். வழக்கம் போல உங்களோடு கை கோர்த்துக் கொண்டு.

அன்புடன்,
கோ.இராகவன்

Monday, November 14, 2005

கந்தனும் ஸ்கந்தனும்

கந்தனும் ஸ்கந்தனும்

(இந்தப் பதிவு இராமநாதன் கேட்டுக் கொண்டதற்கிணங்க.....)

இவங்க ரெண்டு பேரும் ஒன்னா? வெவ்வேறயா? பல கோயில்கள்ள ஸ்கந்தன்னு எழுதீருக்கே. புத்தகத்துல போட்டிருக்கேன்னு சொல்றது தெரியுது. ஆனா ரெண்டு பேரும் வேறவேறங்குறதுதான் உண்மை.

இன்னைக்கு இந்த ரெண்டும் ஒரே சாமியத்தான் குறிக்குது. அதுனால பலபேரு ஸ்கந்தன் அப்படீங்குற வடமொழிப் பெயருல இருக்குற ஸ்ஸ விட்டுட்டுதான் கந்தன் அப்படீங்குற பேரு வந்துச்சுன்னு சொல்றாங்க. ஆனா ஒத்துக்காதீங்க.

பேரு வைக்கிறதுல தமிழர்கள் பெரிய ஆளுங்க. தமிழனோட முதற்கடவுள் முருகன். அந்தப் பேரையும் எப்படி யோசிச்சு வெச்சிருக்காங்க தெரியுமா?

அகர உகர மகரங்களின் சேர்க்கைதான ஓங்காராம். அதாவது அ+உ+ம = ஓம்.

இதுல,
அகரம் - படைப்பைக் குறிப்பது (உலகம் படைப்பாலதான் தொடங்குச்சு. தமிழ் எழுத்தின் தொடக்கமும் அகரந்தானே.)

உகரம் - காத்தலைக் குறிப்பது. (காக்கப்படுவது உலகம். ஆகையால உகரம் காத்தல் எழுத்து. பெரிய ஆளுங்க எழுதுன நூல்களெல்லாம் எடுத்துப் பாத்தா உகரத்துலதான் தொடங்கும்.)

மகரம் - இது அழித்தல் எழுத்து. (முடிவுதானே அழிவு. தமிழ் எழுத்துகளின் கடைசி எழுத்துதானே மகரம்.)

இதெல்லாம் அன்னைக்கே நம்மாளுங்க யோசிச்சு வெச்சிருக்காங்க. மத்த நாடுகள்ல எல்லாம் இதெல்லாம் யோசிக்கும் முன்னாடியே இந்த மாதிரி யோசிச்சிருக்காங்க.

இதுல முருகுங்குற பேரப் பாருங்க. மு+ரு+கு = முருகு. இந்த மூனு எழுத்துகள்ளயும் உகரம் வருது பாத்தீங்களா? முருகனைப் பணிந்தால் காக்கப்படலாமுன்னு சொல்றதுக்காக அப்படி. அதுவுமில்லாம முருகன் என்ன செய்தாலும் அது காத்தல்தான்னு சொல்றதுக்குதான் அப்படிப் பேரு. பேர் வைக்கிறதுல கூட ஒரு சூச்சுமம்.

இப்படி முருகுன்னு யோசிச்சுப் பேரு வெச்சவனா, ஸ்கந்தன்ல இருக்குற ஸ்ஸ விட்டுட்டுக் கூப்பிடுவான்?

ஸ்கந்தன்னு சொல்ற பேருக்கும் கந்தன்னு சொல்ற பேருக்கும் பொருள் வேறுபாடு ரொம்ப இருக்கு. பொருளில் ஒன்னுக்கொன்னு தொடர்பே இல்லாதது.

மொதல்ல ஸ்கந்தனப் பாப்போம். ஸ்கந்தன்னா என்ன பொருள்? வடமொழியில் இதுக்கு ரெண்டு பொருளாம்.

சத்ரூன் சோஷயதீதீ ஸ்கந்தகா - பகைவர்களுடைய வலிமையை குறைக்கின்றவன் என்று பொருள்.

ஸ்கந்தஸ்ய கீர்த்தீம் அத்துலாம் கலீ கல்மஷ நாசீனீம் - கலியுகத்தின் கொடுமைகளில் இருந்து நீக்க வல்லது ஸ்கந்தனின் கீர்த்தி.

(வடமொழி எனக்குத் தெரியாது. ஆகையால நான் எழுதுனதுல எழுத்துப் பொருட் பிழை இருந்தா மன்னிச்சுக்கிருங்க.)

இந்த ரெண்டு வெளக்கமுமே மேம்போக்கான வெளக்கமே தவிர ஸ்கந்தன்னா என்னன்னு ஆழமா விளக்கலை.

ஆனால் கந்தன் என்கிற பேரப் பாருங்க. அதுக்கு ஆழமான விளக்கம் இருக்கு.

"கந்து சுழிக்கும் கடாக் களிற்றின்" அப்படீங்குற சங்கத் தமிழ் வரிகள் எதைச் சொல்லுது தெரியுமா? கந்துன்னா என்னன்னு சொல்லுது.

சரி. கந்துன்னா என்ன? ஆனை பார்த்திருப்பீங்க. அந்த ஆனைய அந்தக்காலத்துல தமிழர்கள் நெறையப் பயன்படுத்துனாங்க. ஒரு எடத்துல இருந்து இன்னோரு எடத்துக்குக் கூட்டீட்டுப் போவாங்க. போருக்காக இருக்கலாம். கட்டிடம் கட்ட இருக்கலாம். வேறு எதுக்கும் இருக்கலாம். (மதுரைல ஆனையக் கட்டிப் போரடிச்சாங்களாம் அந்தக் காலத்துல. அதுக்காகக் கூட இருக்கலாம்.)

அப்ப ஒரு இடத்துல இருந்து இன்னோரு எடத்துக்குக் கூட்டீட்டுப் போறப்போ எங்க கட்டிப் போடுறது? போற எடத்துல எல்லாம் கொட்டாரம் இருக்குமா?

அதுக்கும் ஒரு வழி கண்டுபிடிச்சான். ஆனையோட கழுத்துல ஒரு சங்கிலியக் கெட்டி (இல்லைன்னா கயத்தக் கட்டி), அந்தச் சங்கிலிய ஒரு பெரிய கட்டைல கட்டீருவாங்க. ஆன போற எடத்துக்கெல்லாம் அந்தக் கட்டைய இழுத்துக்கிட்டே போகும். எங்க தங்கனுமுன்னு முடிவு செய்யுறாங்களோ அங்க ஒரு பெரிய குழியத் தோண்டி அந்தக் கட்டைய அதுல பொதைச்சிருவாங்க. இப்ப ஆனையக் கட்டிப் போட்டாச்சு இல்லையா.

சரி. கந்துன்னா என்னன்னு இன்னமும் சொல்லலையே. ஆன இழுத்துக்கிட்டே திரியுற அந்தக் கட்டைக்குத்தான் கந்துன்னு பேரு.

அப்புறம் கந்தனுக்கும் அதுக்கும் உள்ள தொடர்பு? அந்த கந்துங்குற கட்ட எப்பவுமே ஆனை கூடவே இருக்கு. ஆனா தேவையானப்போ அந்த ஆனையைக் கட்டுப்படுத்துது பாத்தீங்களா!

அது போல முருகக் கடவுள் எப்பவுமே நம்ம கூடயே இருந்து தேவையான பொழுதுகளில் நம்மளக் கட்டுப்படுத்திக் காப்பாத்துவாருன்னு சொல்லி அவருக்குக் கந்தன்னு பேரு வெச்சாங்க. புரிஞ்சதா?

அன்புடன்,
கோ.இராகவன்

Wednesday, November 09, 2005

தீபாவளி - 2005

தீபாவளி - 2005

சின்ன வயசு தீபாவளிகளையும் அதனால் கிடைத்த வலிகளையும் ஒரு பட்டியல் போட்டப்புறம் இந்த வருசம் தீபாவளி எப்படி இருந்ததுன்னு எழுதனுமுன்னு தோணிச்சு. அதான் இந்தக் கட்டுரை.

பண்டிகைன்னாலே திங்குறதும் கொண்டாடுறதும் தான. ஆகையால தீபாவளிப் பலகாரகங்களைப் பத்தி மொதல்ல பாப்போம்.

ஊர்ப் பலகாரங்களிலேயே எனக்கு அதிரசமும் சுசியமும் ரொம்பப் பிடிக்கும். அப்படீன்னா என்னன்னு எல்லாருக்கும் தெரியுமுன்னு நினைக்கிறேன். அதிரசம் எல்லாரும் கேள்விப்பட்டிருப்பீங்க. சுசியத்துக்கு ஊரூருக்கு ஒவ்வொரு பேரு. உருண்டைய இருக்கும். உள்ள இனிப்பா பூரணம் இருக்கும். அதுதான் சுசியம். எண்ணெய்ல பொரிச்சி எடுக்குறது.

அதிரசம் கொஞ்சம் சிரமம். ஆகையால இந்த தீபாவளிக்குச் சுசியம் செய்யலாமுன்னு ஆசை. ஆனா எப்படிச் செய்யுறதுன்னு தெரியாது. இனிப்பு உருண்டைய மாவுல முக்கி எண்ணெயில போடுறத பாத்துருக்கேன். முழுப் பாசிப்பருப்புல செஞ்சதுன்னு தெரியும். ஆகையால நானே என்னுடைய ஆராய்சியைத் தொடங்கி சுசியம் சுடலாமுன்னு நெனச்சேன். ஒருவேளை ஆராய்ச்சி தோல்வியாயிட்டா? அதுக்குதான இருக்கு ரவாலட்டு. நானொரு ரவாலட்டு ஸ்பெஷலிஸ்ட். அப்படியே அம்மாகிட்ட இருந்து வந்தது. ரவாலட்டும் செய்வோமுன்னு முடிவு செஞ்சேன். அப்பத்தான் ஒன்னு போனாலும் இன்னோன்னு இருக்குமுன்னு தீபாவளிக்கு மொத நாள் சாங்காலமே ஏற்பாடுகளைத் தொடங்கினேன்.

மொதல்ல பாசிப்பருப்பைக் கொஞ்சமா தண்ணி ஊத்தி குக்கர்ல வெச்சாச்சு. அப்படியே ரவையையும் ஏலக்காயையும் ஒன்னா வறுத்து ஆற வெச்சாச்சு. ஆற வெச்ச ரவையையும் ஏலக்காயையும் ஒன்னா அரைச்சுக்கிட்டு அதுக்குப் பாதிக்குக் கொஞ்சம் குறைவா சீனியை அரைச்சிக்கிட்டாச்சு. ரெண்டையும் கலந்து ஒரு சட்டியில எடுத்துக்கிட்டேன். அப்புறம் நெய்யக் காய்ச்சி அதுல முந்திரியும் திராட்சையும் போட்டு, அந்த நெய்யை அப்படியே ரவைக் கலவைல கொட்டி, சூடு ஆறும் முன்னாடியே உருண்டை பிடிச்சாச்சு. கமகமன்னு வாடை. பக்கத்து வீட்டுக்கே போயிருச்சு. அவங்களுக்கு ஒரு அஞ்சு உருண்டை.

அடுத்தது வெல்லத்தப் பொடிச்சு வேக வைத்த பாசிப்பருப்புல கலந்தேன். என்னவோ கோளாறு. கொழகொழன்னு இருந்தது. கட்டியா இருந்தாதானே உருண்டை பிடிக்க வரும். சரி. ஆண்டவன் விட்ட வழின்னு, கொஞ்சம் அரிசிமாவையும் மைதா மாவையும் கலந்து கரைச்சிக்கிட்டேன். சஃபோலா கரடி ஆயிலை ஊத்திக் காயவெச்சு, உருண்டைய மாவுல முக்கிப் போட்டா..........எல்லாம் ஒடஞ்சு போயி எண்ணெய்யோட கலந்திருச்சி.

ஒரே சோகம். ச்ச. ஒரு பலகாரம் செய்ய வரலையேன்னு வருத்தப்பட்டு அடுப்ப அணைச்சாச்சு. இப்ப ரெண்டு இனிப்பு ஆச்சு. ஒன்னு ரவாலட்டு. ரெண்டாவது இனிப்புப் பருப்பு. பின்னே அந்தப் பருப்பை என்ன செய்வது?

தீபாவளி அன்னைக்குக் காலைல ஏழு மணிக்கெல்லாம் ஃபோன். அப்பாதான். வாழ்த்துகள் சொல்லத்தான் எழுப்புனாரு. அப்பாவுக்கும் அம்மாவுக்கும் வாழ்த்துச் சொல்லீட்டு மறுபடியும் படுத்தாச்சு. அப்படியே ஒரு எட்டு மணிக்கெல்லாம் எழுந்து தீபாவளி மெசேஜ் டைப் பண்ணி, அனுப்ப வேண்டியவங்களுக்கெல்லாம் மொபைல்ல அனுப்பினேன்.

அப்படியே குளிச்சி முடிச்சிட்டு பூஜைய முடிச்சேன். அரளிப்பூவும் குட்டிக்குட்டியா ரோஜாப்பூக்களும் இருந்தது. சாமி ஷெல்ஃபைத் தொடச்சு மறுபடியும் அடுக்கி விளக்கேத்தி சாமியும் கும்பிட்டாச்சு. அப்புறமென்ன சாப்பிட வேண்டியதுதான.

பக்கத்துல தங்கீருக்குற ரெண்டு நண்பர்களை தீபாவளிக் காலைச் சாப்பாட்டிற்கு வரச் சொல்லீருந்தேன். வந்தவங்கு இனிப்பு வகைகளையும் தோசையும் குடுத்து திருப்திப் படுத்தியாச்சு. அதுல பாருங்க, அந்த இனிப்புப் பருப்பை ரெண்டாவது வாட்டி கேட்டு வாங்கிச் சாப்பிட்டாங்க.

பெறகு கொஞ்ச நேரம் டீவி. ஆனா ஒழுங்கா டீவி பாக்க யார் விட்டா? ஒரே வேட்டுச் சத்தம். போன வருசத்தை விட இந்த வருசம் சத்தம் கூடியிருக்கு. சின்ன வயசில் இருந்தே அதிர் வேட்டுகளை விட வேடிக்கை வானங்களிலே ஈடுபாடு உண்டு. அதுனால இந்த வருசம் ஒன்னும் வாங்கலை. ஆஃபீசுல தீபாவளிப் பண்டிகைக் கொண்டாட்டத்துல வான வேடிக்கைகள் காட்டுனாங்க. அது ரொம்ப நல்லா இருந்தது. அதுலயே திருப்தி வந்துருச்சு.

சன் டீவிய அப்படியே விட்டுட்டு ஜெயாவைக் கொஞ்ச நேரம் பார்த்தேன். இளையராஜாவின் இன்னிசை நிகழ்ச்சி நடந்ததே. இளையராஜாவுக்கு வயசாச்சுன்னு இந்த நிகழ்ச்சி பாத்துதான் தெரிஞ்சது. ஜெயச்சந்திரன் வந்து பாடுவாருன்னு காத்திருந்தேன். ஆனா நான் காத்திருக்குற வரைக்கும் அவரு வரலை. மதியம் அத்தை வீட்டுக்குச் சாப்பிடப் போகுற நேரம் ஆச்சே. டீவியை நிப்பாட்டீட்டு கெளம்பியாச்சு. ரவாலட்டோடதான். விட முடியுமா?

ஒரு பன்னிரண்டு கிலோமீட்டர் தூரம். பைக்குல ஒருவழியா போய்ச் சேந்தேன். ரோடுகள் ரொம்ப மோசம். பாத்ததும் மாமா கேட்டுட்டார். வேற எத? என்னப்பா வெயிட் போட்டிருக்கன்னுதான். கடந்த ரெண்டு மாசத்துல கொஞ்சம் பூசுன மாதிரி ஆயிட்டேன். அதான்.

மாமா வடகர்நாடகாவைச் சேர்ந்தவர். அதுனால அன்னைக்கு அவங்க முறைப்படி சாப்பாடும் பூஜையும். ஊரிலிருந்து அவங்க சொந்தக்காரங்க வந்திருந்தாங்க. ஆகையால அவங்களே சமைச்சிருந்தாங்க.

கோதுமைப் போளி கடலைப் பருப்பு வெச்சதுதான் அவங்களுக்கு பிரதானம். ஹோளிகே-ன்னு சொல்வாங்க. அதுல நெய்யையும் பாலையும் ஊத்திச் சாப்பிடனும். எனக்கு நெய் தொண்டையில எறங்காது. என்னோட எலையில பெரிய போளிய வெச்சு, மறுக்க மறுக்க நெய்யக் கொட்டுனாங்க. வேற வழி! முடிச்சதும் அப்பளமும் வெங்காய பஜ்ஜி வந்தது. இது அத்தை ஸ்பெஷல். கூட ஊறுகாய். அப்பத்தான் நெறைய ஹோளிகேயைத் திகட்டாம திங்கலாமாம். ஊறுகாய் இல்லாமலேயே திகட்டாமச் சாப்பிட்டான் மச்சினன்.

கேக்கக் கேக்க விடாம இன்னும் ரெண்டு ஹோளிகேகளையும் அதோட அதுகளுக்கு நெய்க்குளியல் வேற. "முருகா! இதுக்கெல்லாம் நான் பொறுப்பில்லை"ன்னு சொல்லி மனசைத் தேத்திக்கிட்டேன்.

அத்தோட விட்டாங்களா? எலைல விழுந்தது ரெண்டு சப்பாத்தியும் சென்னா கறியும். அட ஆண்டவா! வயிறா! வண்ணாந்தாழியா! அப்புறம் சோறு வேறு. இதில் விஷயம் என்னன்னா....ஒரு வாட்டி மட்டும் சோறு போடக்கூடாதம். ஒரு கரண்டி போட்டதும் கண்டிப்பா இன்னொரு கரண்டி போடனுமாம். ஆம்பரான்னு ஒன்னு. நம்மூரு ரசம் போல. அத ஊத்திச் சாப்பிட்டாச்சு. அப்புறம் தயிர். அடேங்கப்பா. எந்திரிக்க முடியல.

அப்புறம் கொஞ்ச நேரம் பேசீட்டு இருந்திட்டு வீட்டுக்குக் கெளம்புனேன். விஜய் டீவியில மிஸஸ்.டவுட்பயர் ஓடிச்சு. தமிழில். நல்லாவே இருந்தது. அத முழுசும் பாத்தேன். அப்புறம் ஜெயா டீவியில் விட்டு விட்டு சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி.

மதியம் அவ்வளவு சாப்பிட்டாலும் ராத்திரி பட்டினியா கிடக்க முடியும்? மூனு தோசையச் சுட்டுச் சாப்பிட்டேன். தொட்டுக்க வெங்காயம் தாளிச்சுப் போட்ட தயிர். அந்த நேரத்துல வான வேடிக்கைகள் நல்லா இருந்தது. மாடியில நின்னு ரசிச்சுப் பாத்தேன்.

அப்புறம் சிஸ்சும் பில்லும் ஃபோன் பண்ணினாங்க. சிஸ்-பில்லுன்னா தெரியும் தானே. சிஸ் - சிஸ்டர். பில் - பிரதர் இன் லா. அவங்ககிட்ட கொஞ்ச நேரம் கத பேசீட்டு வெச்சாச்சு.

அட! ஒரு விஷயத்தைச் சொல்லலையே. பெங்களூர்ல பெஞ்ச மழைல ரோடெல்லாம் சகதி. பைக்லயும் ஒரே சகதி. வண்டியப் பாத்த அத்த, "என்ன ராகவா! வண்டி பழசு மாதிரி தெரியுது"ன்னு வேற சொல்லீட்டாங்க. சாங்காலமா வாளில தண்ணி எடுத்துட்டு வந்து கழுவினேன். நல்லாக் கழுவி வண்டியோட மானத்தைக் காப்பாத்தினேன். (அதுக்கப்புறம் பெஞ்ச மழைல மறுபடியும் வண்டி சகதியானது வேறு கத.)

நெறைய வெடி போட்டதுல, ஏழெட்டு மணி வாக்குல பயங்கர ஹீட். வீட்டுக்குள்ளயும் வெளியேயும் ஒரே வெக்கை. வெடி மருந்து நாத்தம் வேற. என்னடா வேதனைன்னு நெனைக்கும் போதே மழை பேஞ்சு அத்தனையையும் அமத்தீருச்சு. வருணபகவானுக்கு மானசீக ஃபோன் போட்டு நன்றி சொல்லீட்டுப் படுத்துத் தூங்கியாச்சு. இப்படித்தாங்க போச்சு என்னோட தீபாவளி.

கடைசியா ஒரு விஷயம். தீபாவளி முடிஞ்சு ரெண்டு நாளைக்கு எனக்கு வயிறு சரியில்லைங்க. எல்லாம் ஹோளிகேயின் நெய் வண்ணமுன்னு நெனைக்கிறேன்.

அன்புடன்,
கோ.இராகவன்

Wednesday, November 02, 2005

பொற்சிலையும் சொற்குவையும்

பொற்சிலையும் சொற்குவையும்

நிற்பதற்கு அன்றைக்குத் தில்லையின் எல்லையில் கூட இடமேயில்லை என்ற நிலை. பின்னே! மாமன்னர் ராசராசன் வருகின்றானே! அதுவும் ஒரு பெரிய பிரச்சனையை முன்னிட்டு. தில்லைக்கு ராசராசன் வருகின்றான் என்றால் உடன் தமக்கை குந்தவை நாச்சியாரையும் அழைத்து வரத்தான் போகிறான். பாலோடு சுவை வருவது போல உடன் வருவார் வந்தியத்தேவர். ராசராசனின் பட்டத்தரசி உலகமாதேவியும் இல்லத்தரசி வானதி தேவியும் வேறு உடன் வருகின்றார்கள். இளங்குழவிகளாகிய ராசேந்திரனும் குந்தவையும் கூட வருவதைக் காண்பதற்கே கூட்டம் கூடியிருந்தது.

ஆனால் வழக்கமாய் இறைவணக்கத்திற்கு மட்டும் வருகின்ற மன்னன் இந்த முறை வழக்கிற்கு வருகின்றான். மேலோட்டமாகப் பார்த்தால் பிரச்சனையே இல்லையென்று தோன்றும். ஆனால் அதில் தமிழின் மானமே அடங்கியிருந்தது. எல்லாம் ராசராசன் நம்பியாண்டார் நம்பியைச் சந்தித்ததால் வந்த வினை.

நம்பியோ தமிழ்த் தும்பி. அவரும் தனது விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள ஆசை கொண்டு ராசராசனிடம் வெளியிட்டார். ஒன்றுமில்லை. தமிழ்நாட்டில் இறைவனைத் தமிழில் வணங்க விரும்பியதுதான் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் மூலம். அதிலும் தேவாரத் தீந்தமிழ்ப் பாக்களைத் தொகுத்து நாள்தோறும் இறைவனை வழிபட விரும்பினார். ஆனால் அவரறிந்தவை ஒரு சில தேவாரப் பண்களே.

மற்றவை எல்லாம் எங்கே போயின? அப்பரும் சுந்தரரும் சம்பந்தரும் ஊரூராகச் சென்று திருக்கோயில் பல ஏறிப் பாடிய அருந்தமிழ்ப் பண்கள் எங்கே? கதவு திறக்கவும் மூடவும் பாடிய தெய்வப் பதிகங்கள் எங்கே? பூம்பாவைக்கு உயிர் தந்த அமுதப் பாக்கள் எங்கே? எல்லாம் மறைந்து கரைந்து போயினவா! இல்லை. பூட்டப்பட்டன. இறைவணக்கத்திற்க்கு தகுதி அற்றவை எனக் குற்றம் சாட்டப் பட்டன. தில்லை வாழ் அந்தணர் கையிலிருந்த அந்த அற்புத ஓலைச்சுவடிகளுக்கு பலர் பாடிய உரிமை போய் மூடிய அறையே கிடைத்தது. அவைகளை நாடியவரும் தேடியவரும் சோர்ந்து ஓடிடும் நிலை.

இதென்ன கொடுமை! தமிழுக்குத் தமிழகத்திலேயே தாழா! இத்தனை காலம் பெரியவர்கள் பாடியதெல்லாம் பாழா! நம்பியால் இதைப் பொறுக்க முடியவில்லை. ஆண்டவன் அருட்பாக்களைக் காக்க ஆள்பவனை நாடினார். தமிழுக்கு எதிரான வங்கொடுமையைச் சாடினார். நிலமையை உணர்ந்து தமிழுக்கு இடப்பட்ட விலங்கை உடைக்க ராசராசனும் விரும்பினான். தமக்கையோடு கூடி ஆலோசித்துத் தில்லை சென்றான். பெரிய சிவாச்சாரியிடம் பதமாகவே சொன்னான். தேவார ஓலைச்சுவடிகளைத் தருமாறு வேண்டினான்.

ஆனால் சிவாச்சாரிக்கு ஓலைச்சுவடிகளை வெளியே விட விருப்பமேயில்லை. எப்படித் தடுப்பது என்று எண்ணி ஒரு குயுக்தியான மறுமொழி கொடுத்தார். "சோழர் பெரும! தாங்கள் அறியாததல்ல. தேவாரப் பண்கள் சமயக் குரவரால் பாடப் பட்டவை. தெய்வத் தன்மை பொருந்தியவை. அப்படிப்பட்ட பாக்கள் இந்த அறைக்குள் எப்படிச் சென்றன என்று அறியோம். பன்னெடுங்காலமாக இப்படி மூடிக்கிடக்கின்றன. இதைத் தில்லை வாழ் அந்தணர்களாகிய நாங்கள் சமயக்குரவர்களின் விருப்பமாகவே எண்ணுகிறோம். இறைவனோடு ஒன்று கலந்த அவர்களுக்கே இந்த ஓலைச்சுவடிகள் மீது உரிமையுண்டு என்பதே எங்கள் நம்பிக்கை. அவர்களே வந்துதான் இந்த அறையைத் திறந்து ஓலைச்சுவடிகளை எடுக்க வேண்டுமென்று இறைவன் விருப்பம் கொண்டுள்ளதாகவே தினமும் இறைத்தொண்டு புரிந்து வரும் நாங்கள் நம்புகிறோம். அதையும் மீறித் திறந்தால் நாட்டிற்கும் மன்னர்களுக்கெல்லாம் மன்னராகிய தங்களுக்கும் ஏதேனும் குறை நேறுமோ என்று அஞ்சுகின்றோம். உங்கள் மீதும் நாட்டின் மீதும் நாங்கள் கொண்டுள்ள அக்கறையை நீங்கள் உணர்ந்து எங்களை இதற்கு மேலும் வற்புறுத்த மாட்டீர்கள் என்று நம்புகிறோம்."

சர்க்கரை தடவிய பேச்சில் அக்கறை தெரிந்தாலும் வெல்லத்தை உதட்டிலும் கள்ளத்தை உள்ளத்திலும் வைத்த பெரிய சிவாச்சாரியின் எண்ணத்துப் பொருட்கறையை ராசராசன் உணர்ந்தான். அப்பொழுதைக்கு அவர்களை ஒன்றும் கேட்காமல் தஞ்சை திரும்பினான். ஆணையிட்டுத் திறந்திருக்கலாம். அப்படித் திறந்து எடுத்தால் பின்னால் ஏது நேர்ந்தாலும் அந்தணர் பேச்சை மீறி அறையைத் திறந்த குற்றம் தன் மேல் என்று பொதுமக்களும் எண்ணக்கூடும் என்பதையும் அறிந்திருந்தான் மன்னன்.

குறிப்பிட்ட நல்ல நாளொன்றில் தானும் சமயக்குரவர் மூவரும் வந்து ஓலைச்சுவடிகளைப் பெற்றுக் கொள்வதாக ஓலையொன்றை தில்லையர்களுக்கு அனுப்பினார். பெரிய சிவாச்சாரி உண்மையிலேயே திகைத்துப் போனார். மன்னன் எண்ணத்தைக் கொஞ்சமும் அவரால் ஊகிக்க முடியவில்லை. "மறைந்த அப்பரும் சம்பந்தரும் சுந்தரரும் வரவா போகின்றார்கள்! மன்னனால் எப்படி அழைத்து வர முடியும். மானிடன் முடிக்கக் கூடிய செயலா அது! சரி. வரட்டும் பார்க்கலாம்!" சிவாச்சாரிக்கும் தாம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருந்தது.

அப்படி ராசராசன் குறிப்பிட்ட நந்நாளில்தான் தில்லையில் கூட்டம் நிறைந்திருந்தது. ஆறு குதிரைகள் பூட்டிய பெரிய தேரில் ராசராசனும் அவனது தேவியர் இருவரும் வந்தனர். உடன் வந்த மற்றொரு தேரில் குந்தவை நாச்சியாரும் வந்தியத் தேவரும் இருந்தனர். அவர்களோடு ராசேந்திரனும் குந்தவையும். அடுத்து வந்த தேரில் நம்பியாண்டார் நம்பி இருந்தார். பின்னால் மூன்று பெரும் பல்லக்குகள் வந்தன. அழகிய வேலைப்பாடுகள் அமைந்த பல்லக்குகள் பட்டுத்திரைச்சீலைகள் கொண்டு மூடப்பட்டிருந்தன. அந்தத் திரைச்சீலைகளில் ஐந்தெழுத்து மந்திரமும் ஆவுடையாரும் எழுதப்பட்டிருந்தன. அவைகளுக்குப் பின்னால் பெரிய பட்டத்தானை வந்தது. அதில் பொன்னம்பாரி ஏற்றப்பட்டிருந்தது. ஆனால் அதில் யாரும் இருக்கவில்லை.

இருமருங்கிலும் நின்று மன்னனை வாழ்த்தி மக்கள் ஆர்ப்பரித்தனர். சோழ வளநாட்டைப் புகழ்ந்து குரலெழுப்பினர். அனைவருக்கும் தனது கையை அசைத்து அன்பைத் தெரிவித்த ராசராசன் நேராகத் தில்லையம்பலம் சென்றான். அந்தணர் கூட்டமே புனித நீர்க்குட மதிப்பளிக்க நின்று கொண்டிருந்தது. அவைகளை ஏற்றுக் கொண்ட மன்னன், உடன் வந்தவரோடும் பல்லக்குகளோடும் பட்டத்தானையோடும் கோயிலுள் நுழைந்தான். மூன்று பல்லக்குகளும் இறக்கி வைக்கப்பட்டன. நடப்பவைகளை ஒன்றும் புரியாமல் பெரிய சிவாச்சாரி பார்த்துக் கொண்டிருந்தார். மன்னன் என்ன சொல்லப் போகிறான் என்று ஆவலோடும் குழப்பத்தோடும் காத்திருந்தார். மக்களும்தான். ஆனால் நீண்ட நேரம் காக்க வைக்கவில்லை ராசராசன்.

"தில்லையூர் அந்தணர்களின் தலைவரும் தில்லைக் கோயில் பொறுப்பாளியுமாகிய பெரிய சிவாச்சாரியிடம் நான் ஒப்புக் கொண்ட வகையில் நாடெங்கும் சென்று தீந்தமிழ் பாடி இறைவனோடு கலந்த சமயக் குரவர் மூவரையும் அழைத்து வந்திருக்கிறேன். நீங்கள் ஒப்புக் கொண்ட படி தேவாரச் சுவடிகளைத் தருவீர்கள் என்று நம்புகிறேன்."

அசந்து போனார் சிவாச்சாரி. "அப்பரா வந்திருக்கிறார்! சுந்தர் வந்திருக்கிறார் என்றாலும் நம்ப முடியவில்லையே! ஞானசம்பந்தர் உண்மையிலே வந்து விட்டாரோ! சரி யார் வந்திருக்கின்றார்கள் என்று பார்க்கலாம்!" இப்படி மனதில் நினைத்தவர் அரசனிடத்தில் இப்படி கேட்டுக் கொண்டார். "மாமன்னரே! மும்முடிச் சோழராகிய தாங்கள் கங்கையும் கொண்டான். தங்கள் மனம் நினைத்தால் நடவாதது ஒன்றில்லை. ஆனாலும் வந்தவர்கள் தேவாரப் பாடல்களைத் தந்தவர்கள்தானா என்று அறிய எனது மனம் ஆவலில் ததும்புகிறது. சமயக்குரவர் மூவரையும் எங்கள் கண்குளிரக் காட்டுங்கள்." பேச்சில் மட்டும் இதமும் பதமும் இருந்தது.

"ஆகட்டும்" என்று மட்டும் சொன்ன ராசராசன் தானே பல்லக்குகளின் அருகில் சென்றான். முதற் பல்லக்கின் அருகின் நின்று சொன்னான். "கல்லைக் கட்டிக் கடலில் போட்டாலும் நமசிவாய என்ற சொல்லைக் காட்டிக் கரை கண்ட பெருந்தொண்டர்! தாயும் தந்தையுமாய் ஆண்டவனைத் தொழுது என்றும் திருக்கோயில்களில் புற்களை உழுது செம்மைப் படுத்திய பெருந்தகை! அப்பர் என்று மதிப்புடன் போற்றப் படும் திருநாவுக்கரசர்! இதோ உங்களுக்காக வந்திருக்கிறார்!" பல்லக்கின் சீலையைத் திறந்தான். உள்ளே அப்பரைப் போலவே ஒரு பொற்பாவை இருந்தது.

இரண்டாவது பல்லக்கின் அருகில் சென்றான். "குழந்தையின் அழுகை கூடத் தொழுகை என்று உமையம்மை ஏற்று ஞானப்பால் புகட்டிய தமிழ்க் குழந்தை! கை தட்டித் தட்டிப் பாடினால் குழந்தையின் கை சிவக்கும் என்று பொன்னில் தாளம் தந்த ஓசை கொடுத்த நாயகியின் செல்லப் பிள்ளை! தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்று கருதித் தமிழில் பாடி பூம்பாவைக்கு உயிர் கொடுத்த ஞானசம்பந்தப் பெருமான் மீண்டும் தமிழுக்காக வந்துள்ளார்!" பல்லக்குத் திறக்கவும் உள்ளே பொற்சிலையாக நின்றார் திருஞானசம்பந்தர்.

"இறைவனுக்கும் அடியவர்களுக்கும் தொண்டு செய்ய ஊரூராய் நடந்தவர் உண்டு. ஆனால் தனது காதலுக்காக இறைவனே தூது நடக்கப் பெற்ற சுந்தரர்! சித்தமெங்கும் நிறைந்த இறைவனை பித்தன் என்று வைத வன்தொண்டர்! அந்தப் பித்தன் என்றை சொல்லையே வைத்துத் துவக்கிப் பண் சமைத்த நம்பி ஆருரன் இன்று இங்கு வந்து தான் முன் சமைத்த பண்களைக் கேட்கின்றார்." மூன்றாம் பல்லக்கின் திரையும் விலகி உள்ளிருந்த நம்பி ஆரூரனின் பொற்சிலையைக் காட்டியது.

அசந்து போனார் சிவாச்சாரி. "மன்னா! இது முறையா! பொய்யும் பொய்த்துப் போய் உண்மை உய்த்த நாவினராகிய தங்கள் வாய்ச்சொல் பிழையாதல் முறையா! சமயக் குரவர் மூவரையும் அழைத்து வருகிறேன் என்று சொல்லி மூன்று பொற்சிலைகளைக் கொண்டு வந்தால் எப்படி? இதை எப்படி ஏற்றுக் கொள்வது?"

சிவாச்சாரி சொன்னதும் சிரித்து விட்டான் ராசராசன். சிவாச்சாரி தொலைந்தார் என்றே எல்லாரும் முடிவு கட்டி விட்டார்கள். ஆனால் ராசராசன் இதமாகச் சொன்னான். "தில்லையரே! இந்த அம்பலத்தில் ஆவுடையாராக நீங்கள் வணங்குவது யாரை?"

"எல்லாம் வல்ல ஈசனைத்தான் ஆவுடையாராக வணங்குகிறோம்."

அடுத்த கேள்வியும் வந்தது மன்னனிடமிருந்து. "ஒற்றைக் காலைத் தூக்கிக் கற்றைச் சடையை விரித்து பற்றைப் பழிக்கும் உடுக்கையைத் தட்டிக் கொண்டு அம்புலியின் கீற்றையும் ஆற்றையும் சூடியாடுகின்றனாக நீங்கள் வணங்குவது யாரை?"

"அதுவும் ஈசனைத்தான்!"

"அப்படி இருக்க, இந்தப் பொற்சிலைகள் மட்டும் ஏன் சமயக் குரவர்கள் ஆகா? நீங்கள் ஏற்க மறுக்க நியாயமான காரணம் எதுவும் எனக்குத் தோன்றவில்லை."

"சோழர் பெரும! சமயக் குரவர் மூவரும் பெருமைக்குரியவர்கள். அவர்களை நேற்றுத் தட்டிய பொற்சிலை என்றால் எப்படி நம்புவது? என்ன ஆதாரம்?"

"சிவாச்சாரி! சமயக் குரவர்கள் இப்பொழுது எங்கே என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்?" படக்கென ஒரு கேள்வி ராசராசனிடமிருந்து.

"ஆண்டாண்டு காலமாய் ஆண்டவனைத் தொழுது பாடித் தொண்டாற்றியவர்கள் இறைவனோடு கலந்தனர் என்பது கருத்து."

"சரி. அப்படியே வைத்துக் கொள்வோம். நீங்கள் வணங்கும் சிலை இறைவனா? இல்லை இறைவன் சிலையா? இதற்கு விடை சொல்லுங்கள் சிவாச்சாரி!"

சிவாச்சாரி ஒரு நொடி திகைத்துப் போனார். ஆனாலும் அவருக்குத் தெரிந்த விளக்கத்தைச் சொன்னார். "மன்னா! இறைவனே சிலை. சிலையே இறைவன்."

சிவாச்சாரி சொன்னதை விளக்கச் சொன்னான் ராசராசன்.

"எங்கும் நிறைந்த இறைவன் இந்தக் கல்லில் நிறைந்திருக்கிறான். ஆகையால்தான் அப்படிச் சொன்னேன்."

"நல்லது. இறைவன் எங்கும் நிறைந்தவன் என்று நீங்கள் நம்புகின்றீர்களா?"

"ஆம். மன்னா! அப்படித்தான் நான் நம்புகிறேன்." சிவாச்சாரியார் உறுதியாகச் சொன்னார்.

"அப்படியானால் எங்கும் நிறைந்த இறைவன் இந்தப் பொற்சிலைகளிலும் நிறைந்திருக்கின்றான் என்றுதானே பொருள். அப்படி இந்தப் பொற்சிலைகளில் இறைவன் நிறைந்திருக்கிறான் என்றால் இறைவனோடு இரண்டறக் கலந்த அப்பரும் சுந்தரரும் சம்பந்தரும் இந்தப் பொற்சிலைகளிலும் நிறைந்தவர்கள்தானே. ஆகையால் மீண்டும் சொல்கின்றேன். சமயக் குரவர்கள் தங்கள் பாக்களைக் கேட்கிறார்கள். கொடுக்கின்றீர்களா?"

சிவாச்சாரியாருக்குப் பேச்சு வரவில்லை. என்ன சொன்னாலும் மன்னன் விட மாட்டான் என்று தெரிந்து போனது. எதற்கு நாடாளும் வேந்தனோடு வீண்வம்பு என்று தெளிந்து திறவுகோலைக் கொடுத்தார்.

திறவுகோலைக் கம்பீரமாகப் பெற்றுக் கொண்ட ராசராசன் பூட்டியிருந்த அறையை நோக்கிச் சென்றான். கதவு கூட துடைக்கப் படாமல் இருந்தது. திறவுகோல் பட்டதும் பூட்டு நெகிழ்ந்து விழுந்தது. நாள்பட்ட பூச்சு துருப்பிடித்து இற்றுப் போயிருந்தது. கதவைத் தள்ளித் திறந்து ஒட்டடை நிறைந்த அறைக்குள் நுழைந்தார். நம்பியாண்டார் நம்பியையும் அழைத்தார்.

அந்த அறைக்குள்ளே பைந்தமிழ்ப் புதையலைக் காணவில்லை. மாறாக கரையான் புற்று மட்டும் பெரிதாக வளர்ந்திருந்தது. வெற்றி கொண்டோம் என்று நினைத்து மகிழ்ந்த வேளையில் அந்த வெற்றியெல்லாம் அற்றுப் போனதே எனச் சோர்ந்தான். நம்பி தான் ராசராசனுக்குத் தெம்பூட்டினார். "சோழ மன்னா! பற்றை விலக்கினால் இறை கிடைக்கும். புற்றை விலக்கினால் உன் தமிழ்ப் பசிக்கு இரை கிடைக்கலாம். தேடுக."

மன்னனும் ஆலவாயண்ணலை உள்ளத்தில் நிறுத்தி புற்றைத் தட்டினான். மண் உதிரவும் உள்ளிருந்து பழம் ஓலைச் சுவடிகள் சிதறின. சேற்றில் விழுந்த பொற்காசுகளை அள்ளுவது போல ஓலைச் சுவடிகளை அகமும் முகமும் மலர்ந்து அள்ளினான் ராசராசன். அந்தோ பரிதாபம். ஒன்று நன்றாக இருந்தால் ஒன்று பழுதாகி உதிர்ந்தது. இப்படி பாதிக்குப் பாதி பூதியாகியிருந்தது. "ஆண்டவா!" தன்னை மறந்து கதறினான் ராசராசன்.

அவன் அழுகைக்கு உடனே ஆறுதல் கிடைத்தது. ஆம். மங்கலப் பொற்சலங்கையின் ஒலி எழும்பியது. ஈசன் குரல் எழுப்பினார். "ராசராசா! இருப்பவைகளைக் கொள்க. பழையன கழிந்தன. என்றும் புதியன நிலைத்தன. வருந்தற்க."

பெருமகிச்சிக் கடலில் மிதந்தான் மன்னன். மக்கள் அனைவரும் இன்பமாய் ஆர்ப்பரித்தனர். சிவாச்சாரி வெலவெலத்துப் போயிருந்தார். இப்படியும் நடக்குமோ என்று வியந்து வியந்து குமைந்து போனார். அவர் கண்முன்னேயே பிழைத்த ஓலைச்சுவடிகள் எடுத்துச் செல்லப் பட்டன. இறைவன் திருவடிகளில் வைத்து வழிபடப் பட்டன. அவரை எதிர் நோக்குவார் யாருமில்லை. இறைவனே சொன்ன பிறகு மறுபேச்சேது.

பொற்பேழையில் அந்த ஓலைச்சுவடிகள் அடுக்கப்பட்டு பட்டத்தானையின் பொன்னம்பாரியில் ஏற்றப்பட்டன. ராசராசனும் ஆனையேறி அம்பாரியின் பின் அமர்ந்து வெள்ளிப் பிடியும் மாணிக்கங்களும் பதிக்கப்பட்ட கவிரியைக் கொண்டு வீசினான். ஆனை தஞ்சையை நோக்கித் திரும்பியது. தமிழ் தனக்கான இடத்தை மீண்டும் மீண்டு கொண்டது.

அதே நேரத்தில் பூரிப்போடு தனது கணவன் வந்தியத்தேவருக்கு முகவியர்வை போக்கிக் கொண்டிருந்தாள் குந்தவை நாச்சியார். பின்னே இன்றைய நாடகத்தின் மையப் பாத்திரமே அவர்தானே. குந்தவையும் ராசராசனும் போட்ட திட்டப்படி திருக்கோயிலுள் ஒளிந்து நின்று பொற்சிலம்பை ஒலித்ததும் குரல் கொடுத்ததும் அவர்தானே.

அன்புடன்,
கோ.இராகவன்