Monday, June 27, 2005

தென்னவன் தீதிலன்


"யோவ்! இன்சுபெக்டரு! வெளங்குவயாய்யா நீ. என்னத்தப் படிச்சி போலீசு வேலைக்கு வந்த? காசு குடுத்து வந்தியா? குத்தவாளிய கண்டுபிடிக்காம ஒரு தப்புஞ் செய்யாதவகள பிடிச்சி வெச்சிருக்கியே! என்னோட வகுத்தெரிச்சல் ஒன்னச் சும்மா விடாது. எத்தன தடவ மாரியாத்தாவுக்கு கூளு ஊத்திருக்கேன். என் வாயில விழாத. உனக்கு நல்லதில்ல! வீட்டுக்கும் நல்லதில்ல!" போலீஸ் ஸ்டேஷன் வாசலில் நின்று கொண்டு கத்திக் கொண்டிருந்தாள் சண்முகத்தாய்.

உள்ளே அவளது கணவன் பெருமாளைச் சந்தேகத்தில் பிடித்து வந்து முட்டிக்கு முட்டி தட்டிக் கொண்டிருந்தது போலீஸ். பெரிய திருட்டு. பெருமாள் மேல் சந்தேகம். பெரிய இடத்து பிரஷர். அதான் இந்த விசாரணை. வேறு வழி! மாசாமாசம் கவர் வருகிறதே.

ராத்திரி இழுத்து வரப்பட்ட பெருமாளைத் தேடி விடியற்காலையிலேயே போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்துவிட்டாள் சண்முகத்தாய். அவளுக்குத் துணையாக காலனியிலுள்ள உறவுக்காரப் பெண்கள். எல்லாம் ஒன்று விட்ட அக்கா தங்கைகளும் மச்சினிகளும்.

கூக்குரலில் தொடர்ந்தது சண்முகத்தாயின் ஓலம். மெலிந்த அவள் உடம்பின் மேல் சேலை விலகியிருப்பதையும் பொருட்படுத்தாது கதறிக் கொண்டிருந்தாள். இந்தக் குச்சி உடம்புக்குள் இப்படிக் கத்த எங்கிருந்துதான் சக்தி வந்ததோ! கூட வந்தவர்களும் அவளுக்கு ஒத்து ஊதிக் கொண்டிருந்தனர்.

வாசலில் நின்று கொண்டிருந்த கான்ஸ்டபிளும் அவள் வாயில் விழாமல் தப்பிவில்லை.

"அய்யா! பியூன் போலீசு, வாசல்லயே நிக்கியே. உள்ள போய் என்ன ஆச்சுன்னு பாக்கக் கூடாதா? பிடிச்சி வெச்சியே, சோறு வாங்கிக் குடுத்தியா? சம்பளம் கொடுக்குல்ல கெவருமெண்டு. வெச்சி வெச்சி திங்கியே! செமிக்குமா? வயித்தால போகும். ஒமட்டி ஒமட்டிக் கக்குவ. நீ உள்ள போயி பாக்கியா? நாம் போவட்டுமா?" திமிறிக்கொண்டு ஸ்டேஷனுக்குள் நுழையப் பார்த்தாள் சண்முகத்தாய். கூட வந்த பெண்கள் அவளைப் பிடித்துக்கொண்டார்கள்.

"நல்லா பிடிங்கம்மா! உள்ள வந்தா ஏடாகூடாமாயிரும். ஏம்மா! இங்க வந்து கும்மரிச்சம் போட்டா ஆச்சா? தப்புப் செஞ்சா விட்டுருவாங்களா? அதான் வாங்கு வாங்குன்னு வாங்குறாங்க. இங்க கத்துறதுக்கு முன்னால புருசனக்கு புத்தி சொல்லீருக்கனும். அத விட்டுட்டு..."

கான்ஸ்டபிள் சொன்னது சண்முகத்தாயை இன்னும் உசுப்பி விட்டது. "என்னது? எம்புருசனுக்கு புத்தி சொல்லவா! நல்லாச் சொன்னீகய்யா! பியூனு போலிசு வேலை பாக்குற ஒனக்கு என்ன பேச்சு! ஒங்க இன்சுபெக்டருகிட்ட போயி புத்தி சொல்லு. கூரு கெட்ட போலீசு. தோலாந்துருத்தி. தேவாங்கு."

சற்றே ஒல்லியாக இருந்த அந்த கான்ஸ்டபிளுக்குக் ஆத்திரம் வந்தது. பின்னே இப்படிப் பேசினால்! கையிலிருந்த லட்டியைச் சுழற்றிக்கொண்டு விரட்ட வந்தார். அவர் அடிக்க வரும் முன்னமே வந்திருந்த பெண்கள் அனைவரும் ஓலமிட்டார்கள்.

"ஐயோ! இப்படி பொம்பளைகளப் போட்டு அடிக்காகளே! கேக்க ஆளில்லியா! நாதியத்துப் போனோமே இந்தப் பொம்பள செம்மம்!"

அவர்களின் கூக்குரலில் கொஞ்சம் பயந்து போன கான்ஸ்டபிள் தயங்கினார். அந்நேரம் ஸ்டேஷனுக்குள்ளிருந்து மற்றொரு கான்ஸ்டபிள் பெருமாளைக் கைத்தாங்கலாகக் கூட்டி வந்தார். சண்முகத்தாயைக் கூப்பிட்டு "இந்தாம்மா! ஒம் புருசன கூட்டிக்கிட்டு போ. ஒம் புருசன் தப்புப் பண்ணலன்னு இன்ஸ்பெக்டரு முடிவு செஞ்சிட்டாரு. வீட்டுக்குப் போயி நல்லாச் சமச்சுப் போடு. வாங்குன அடிக்கும் வீங்குன வீக்கத்துக்கும் மேலுக்கு நல்லதாச் செஞ்சு போடு." அவளிடம் ஒரு ஐம்பது ரூபாயைக் கொடுத்தார்.

ஒன்றும் பேசாமல் ரூபாயை வாங்காமல் பெருமாளை மட்டும் கைத்தாங்கலாகக் கூட்டிக் கொண்டு வெளியே வந்தாள் சண்முகத்தாய்.

நல்ல அடி. எல்லாம் உள்காயம். எங்கு தொட்டாலும் வலியால் முனகினான் பெருமாள். அவளுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. கீழேயிருந்த புழுதி மண்ணை வாரி வீசினாள்.

"பெரிய இன்சுபெக்டரு, கண்டுபிடிச்சிட்டாரய்யா! குத்தமே செய்யாத எம்புருசன அடிச்சியே, பாவி, நீ ஒரு போலீசா? உனக்கு காக்கிச் சட்ட ஒரு கேடா? தொப்பி வேற. கோமாளி அலங்காரம் மாதிரி. புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ருன்னு போறியே ஜீப்பு. அதுதான இப்ப ஒனக்கு ரொம்பத் தேவ. டயரு பஞ்சராகி நடு ரோட்டுல நிக்கனும். நல்ல போலீசு நம்ம ஊருப் போலீசு. த்தூ" காறித் துப்பிளாள்.

ஒரு வழியாய் வீட்டிற்கு பெருமாளை அழைத்து வந்து படுக்க வைத்து உப்பு வறுத்து ஒத்தடம் கொடுத்தாள். உள்காயத்திற்கு இதமாய் கொழம்புக்கு வைக்க பக்கத்து வீட்டு செவ்வந்தியிடம் கருவாடு கடன் கேட்டாள்.

"ஏ செவ்வந்தி! நெத்திலி கெடக்கா? கொஞ்சங் கொடேன். கொழம்பு வெச்சா மேலுக்கு ஆகுமே."

மண்சட்டிகளை உருட்டி, இருந்த கொஞ்ச நெத்திலியைக் காகிதத்தில் சுற்றித் தந்தாள் செவ்வந்தி. "அடி பலமா சம்முகம்? அந்தப் போலீசுக்காரப் பாவி நல்லா நச்சிருக்காம் போல. வெளங்குவானா அவன்." உண்மையான அக்கறையும் கோவமும் செவ்வந்தியின் குரலில் இருந்தது.

மெல்லிய புன்னகையுடன் சொன்னாள் சண்முகத்தாயி. "போலீச வையாத. அவுக மேல ஒரு தப்புமில்ல. இந்தாளு தெனமும் என்ன போட்டு சாத்துறதுக்கும் வையுறதுக்கும், அண்ணந் தம்பி இல்லாதவ எனக்காக எங்கப்பா வந்து கேட்டிருக்கனும். அவரு கேக்கல. பாவம் பெரிய மனுசன் வாயப் பொத்திக்கிட்டு அழுகத்தாஞ் செஞ்சாரு. ஆனா பாரு. இன்னக்கி பெறாத தகப்பம் போல போலீசு கேட்டிருக்கு. முட்டியப் பேத்து விட்டுருக்கு. இனிமே கையும் காலுஞ் சும்மாயிருக்குமில்ல." கருவாடை வாங்கிக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்தாள் சண்முகத்தாய்.

தென்னவன் தீதிலன்; நானவன் தன் மகள்;
-சிலப்பதிகாரத்தில் தனக்குக் கோயில் எடுத்த சேர மன்னனிடம் பாண்டியன் நெடுஞ்செழியன் பற்றி கண்ணகி சொன்னது. வஞ்சிக் காண்டம். "தென்புலமாளும் பாண்டியன் குற்றமற்றவன். நான் அவனுக்கு மகளைப் போற்றவள்."

அன்புடன்,
கோ.இராகவன்

Wednesday, June 22, 2005

இன்னுமொரு பிரபல சந்திப்பு

டி.ராஜேந்தரைச் சந்திச்சது பத்தி ஒரு பதிவு போட்டிருந்தேன். அதுக்கப்புறம் நடந்த இன்னொரு தற்செயல் சந்திப்பு இது.

அக்டோபரு ஒம்பதாந் தேதி சனிக்கெழம காலைல பெங்களூரு இந்திரா நகருல இருக்குற ஸ்டேட் பேங்க் ஆ·ப் இந்தியாவுக்குப் போனேன். ஒரு ஒம்பதர இருக்கும். உள்ள போயி பாஸ்புக்க குடுத்துட்டு நின்னுக்கிட்டிருந்தேன். உள்ள வரிசையா நாற்காலி போட்டிருக்கும். நிக்காம சொகுசா உக்காந்துக்கிறத்தான். வாடிக்கையாளர் சேவையாம். இங்க பெங்களூர்ல ரயில்வே டிக்கட்டு எடுக்குற எடத்துலயும் வரிசைல நிக்க முடியாது. வரிசைல உக்காந்துக்கலாம். நல்ல வசதி.

சரி. கதைக்கு வருவம். அந்த வரிசைல கூட்டமில்ல. அங்கொருத்தரு இங்கொருத்தருன்னு உக்காந்திருந்தாங்க. அதுல ஒரு அம்மா, வயசானவங்க, கூட மக வயசுப் பொண்ணோட உக்காந்திருந்தாங்க. அவங்களப் பாத்ததுமே எனக்குச் சந்தேகம். "இவங்க அவங்களா? அவங்க எங்க இங்க வந்தாங்க?" போய்க் கேட்டுருவமான்னு யோசிச்சேன். எப்பிடிக் கேக்குறது. அவங்க இல்லைன்னா என்ன நெனப்பாங்க. சரின்னு பேங்கு வேலய முடிச்சிட்டு அவங்ககிட்ட போனேன். நீங்க அவங்கதான்னு கேட்டேன். அவங்க மொகத்துல மலர்ச்சி. ஆமாம்னு சொன்னதும் எனக்கும் சந்தோசம்.

அட அவங்க யாருன்னு சொல்லலையே! அவங்க ஒரு பின்னனிப் பாடகி. ஆதி மனிதன் காதலுக்கு அடுத்த காதலுக்குப் பாடிய பாடகி.

கண்டுபிடிச்சிருப்பீங்களே! பிரபலமாக இருந்த பின்னணிப்பாடகி ஜமுனாராணிதான் அவங்க. ரொம்ப வயசாத் தெரிஞ்சாங்க. நானும் அவங்களக் கண்டு பிடிச்சதுல அவுங்களுக்கு ரொம்பச் சந்தோசம். எப்பிடிக் கண்டுபிடிச்சேன்னு ஆச்சிரியமாக் கேட்டாங்க. டிவில பாத்துருக்கேன்னு சொன்னேன். அவுங்க மருமகளோட வந்திருந்தாங்க. இப்ப இங்க வந்துட்டாங்களாம். கச்சேரின்னு கூப்புட்டா சென்னைக்கும் ஹைதராபாத்துக்கும் போறாங்களாம். அவங்க பதிமூனு பதினாலு வயசுல பாடவந்தாங்களாம். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாப்பது அஞ்சுல. அவங்க பாட வந்தே அறுவது வருசம் ஆயிப்போச்சு. அவுங்க தாய்மொழி தெலுங்காம். இருந்தும் உச்சரிப்பு நல்லாயிருந்துச்சேன்னு கேட்டேன். சென்னையில பொறந்து வளந்ததால தமிழு நல்ல பழக்கமாம். பேச்சுவாக்குல சுசீலா, ஜானகி, லீலா மாதிரிப் பாடகிகள நெனவு வச்சிருந்து சொன்னாங்க. அப்புறம் அவங்க பாட்டுகள் செலதச் சொல்லி நல்லா பாடியிருந்தாங்கன்னு சொன்னேன். அவங்க அத ரொம்பச் சந்தோசமா கேட்டுக்கிட்டாங்க. இன்னைக்குப் பாட்டுகளப் பத்திப் பேசுனோம். உச்சரிப்பு பத்தி கொஞ்சம் வருத்தமாச் சொன்னாங்க.

இந்த வாட்டியும் கையில ஆட்டோகிரா·பு வாங்க எந்தப் புத்தகமும் இல்ல. டெலிபோன் பில்லு கட்டுன ரசீது இருந்திச்சி. அதுல பின்னாடி வாழ்த்திக் கையெழுத்துப் போட்டுக் குடுத்தாங்க. இங்லீசுல போட்டுக் குடுத்தாங்க. அப்புறம் அவங்களுக்கு நன்றி சொல்லீட்டு பொறப்பட்டுட்டேன். அம்புட்டுதேங்.

அன்புடன்,
கோ.இராகவன்

முருங்கைக் கீர சமாச்சாரம்

முருங்கக் கீர சாமாச்சாரம் பெரிய சமாச்சாரம். பல கலியாணங்களுக்குக் காரணமான சாமச்சாரம்.

கதைக்கு வருவம். பாரியும் பாரி மகள்களும் ஔவையாரு மேல எம்புட்டு பாசமா இருந்தாகன்னு தெரியுமுல்ல. ஔவையாரு ஊரூரா கோயிலு கோயிலா சுத்துற கெழவி. அப்படி சுத்திகிட்டு இருக்கைல, பாரி எறந்து போனான். இந்தப் பிள்ளைக நடுத்தெருவுக்கு வந்திருச்சி. பாவம். ஊருல இருக்க முடியாம காட்டுக்கு வந்துட்டாக. அங்க இருந்த ஒரு பழைய குடிசைல ஒண்டிக்கிட்டு கெடச்சத பொங்கிட்டும் தின்னுகிட்டும் இருந்தாக. இருந்தது மூணு சீல. கட்டுறது ரெண்டு பேரு. எப்படியோ சமாளிச்சிக்கிட்டாங்க.

இந்த வெவரம் தெரியாத ஔவையாரு அந்தக் காட்டுப் பக்கமா வந்தாரு. மழ வேற வந்திருச்சி. இந்தம்மா என்ன தேருலயா ஊரு சுத்துது. நடந்துதான போகனும். மழைக்கு ஒதுங்கிக்கிற எடமில்லாம தவிச்சது. அப்பத்தாங் கண்ணுல பட்டது குடிச. உள்ள பாத்தா இந்தப் பிள்ளைக. ஔவையாரப் பாத்ததும் ரெண்டு பிள்ளைகளூக்கும் கண்ணுல தண்ணியா ஊத்துது. நடந்ததெல்லாங் கேட்டு இந்தக் கெழவி ரொம்பவும் தவங்கிப் போச்சி. அப்புறமா ஔவையாருக்கு இருந்த ஒரு மாத்துச் சீலயக் குடுத்தாக. அதியமானு கொடுத்த நெல்லிக்காயி இன்னமு யாராரோ கொடுத்த என்னென்னமோ சாமனமெல்லாம் இந்தப் பிள்ளைக குடுத்த பழய சீலைக்கு ஈடாகாதுன்னு ஒரு பாட்டு பாடிச்சி. அப்புறமேட்டு பசிச்சது. அரிசியில்ல. கம்பில்ல. கேப்பயில்ல. குருதேலியில்ல. காட்டுல அந்தமானிக்கு முருங்கமரங்க நெறயா இருந்திச்சி. போயி எலய பிடிங்கிட்டு வந்து நல்லா ஆஞ்சி வெஞ்சனமா வெச்சிக் குடுத்தாக. ஔவையாரும் நல்லா சாப்பிட்டுட்டு ஒரு பாட்டு சொல்லுச்சாம்.

வெய்யதாய் நறுவிதாய் வேண்டளவும் தின்பதாய்
நெய்தான் அளாவி நிறம்பசந்த - பொய்யா
அடகென்று சொல்லி அமுதத்தை இட்டார்
கடகம் சொரிந்த கையார்

வெய்யதாய் - நல்லா கொதிக்கக் கொதிக்கவுமில்லாம ஆறிப்போயிமில்லாம வெதுவெதுன்னு

நறுவிதாய் - நல்லாக் கமகமன்னு இருந்துச்சாம்

வேண்டளவுந் தின்பதாய் - வேணுங்கறம்புட்டு திங்கலாமுல. இன்னமும் வேணுமுன்ன மரத்துல பறிச்சிக்கிறது

நெய்தான் அளாவி - நல்ல நல்லெண்ணெய விட்டு

நிறம் பசந்த - பச்சப் பசேலுன்னு இருக்குற கீரய

பொய்யா அடகென்று சொல்லி அமுதத்தை இட்டார் - தின்னா வயித்தக் கெடுக்காத நல்லா சத்துள்ள சாப்பாடுன்னு சொல்லி அமுதத்த கொடுத்தாகளே

கடகம் சொரிந்த கையார் - கையில வளவி மாட்டீருக்குற இந்த பிள்ளைக.

அப்புறமா தின்ன கீரைக்கு நன்றி செய்யுறதாச் சொல்லி அந்தப் பிள்ளைகளுக்குக் கொல்லி மல அரசங் கூட கலியாணம் முடிச்சி வெச்சிச்சி ஔவையாரு கெழவி.

இப்பப் புரிஞ்சதா முருங்கைக் கீர சமாச்சாரம்.

அன்புடன்,
கோ.இராகவன்

பாண்டி பஜாரில் விஜய டி ராஜேந்தர்

அடுக்கு மொழிக்காரர் டி.ஆர். அவரை ஒரு முறை தற்செயலாக சந்திக்க நேர்ந்தது. சந்திப்பும் ரொம்பக் கொஞ்ச நேரந்தான். இது அவர் விஜய டி ராஜேந்தராக மாறும் முன் நடந்தது.

தியாகராய நகரில் பாண்டி பஜாரில் ஏதோ பொருட்கள் வாங்கிக்கொண்டிருந்தேன். மாலை வேளை. இருட்டியிருந்தது. வீதியெங்கும் விளக்குகள் பொருத்தியிந்தது. பழைய இராஜகுமாரி தியேட்டர் பக்கத்தில் நிறைய பூக்கடைகள் உண்டு. அந்தப்பக்கமாக நடந்து கொண்டிருந்தேன். கண்ணில் தட்டுப்பட்டது ஒரு ஜீப். முன் சீட்டில் டிரைவர் தவிர இன்னொருவர் அமர்ந்திருந்தார். அவரிடம் யாரோ பேசிக்கொண்டிருந்தார்கள். நன்றாகப் பார்த்தபின் தெரிந்தது அது டி.ஆர் என்று.

"அடடே! டி.ஆர்" என்று அருகில் சென்று வணக்கம் சொன்னேன். அவரும் பதில் வணக்கம் சொன்னார். கையில் ஆட்டோகிராப் வாங்க எந்தப் புத்தகமும் இல்லை. ஆனால் சின்னதான டெலிபோன் புக் இருந்தது. அதன் கடைசிப் பக்கத்தைப் புரட்டி ஆட்டோகிராப் கேட்டேன். அன்புடன் டி.ஆர் என்று உருண்டை உருண்டையாக கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார். ஏதாவது பேச வேண்டுமே என்று "எப்பிடி இருக்கீங்க?" என்று கேட்டேன். கேட்டது தவறென்று உடனே புரிந்தது. அவரது கண்கள் கலங்கின. உதடுகள் துடித்தன. கன்னச் சதை லேசாக உதறத் துவங்கியது. தொண்டைக் குழி மேலும் கீழும் குதித்தது தாடியை மீறித் தெரிந்தது. குழறலாய் உடைந்த சொல்லில் பதில் வந்தது. "நல்ல்ல்ல்ல்ல்லா இருக்கேம்ப்பா!" அவரது கண்கள் நிரம்பியிருந்தாலும் இன்னும் உடைப்பெடுக்கவில்லை. எனக்கு என்ன செய்வதென்றா தெரியவில்லை. ஒரு மாதிரியான முள்மேல் நிற்கும் உணர்ச்சி. "ரொம்ப நன்றி. வர்ரேங்க" என்று கூறிவிட்டு விடைபெற்றுக் கொண்டேன். இதை வீட்டிலும் நண்பர்களிடத்திலும் சொன்னேன். எல்லாரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். நான்தான் அவரிடத்தில் "எப்படி இருக்கீங்க" என்று கேட்ட முதல் நபராக இருக்கும் என்று சொல்லிச் சிரித்தார்கள். எப்படியோ நினைவில் நின்ற சந்திப்பு.

Monday, June 20, 2005

Gone With The Wind (காற்றோடு போனதே)

Gone With The Wind (காற்றோடு போனதே)
எழுதியவர் : Margeret Mitchell (மார்கரெட் மிஷெல்)

பைபிளுக்கு அடுத்தபடியாக அதிகம் அச்சிடப்பட்டு விற்பனையாகும் புத்தகம் "Gone with the wind" என்றால் மிகையாகாது. படித்தவர்களுக்கெல்லாம் பிடிக்கும் கதை. இல்லை. காவியம். சற்று பெரிய புத்தகம்தான். உள்ளே இருப்பதும் பெரிய விஷயமல்லவா! அமெரிக்கர்களுக்கு மிகவும் பிரியமான புத்தம் இது. அவர்கள் பார்த்த விஷயங்களையும் நடப்புகளையும் கபடமில்லாமல் சொல்லும் புத்தகமிது.

ஒரு பெண் ஒருவனை மனதில் நினைத்து விட்டால், பிறகு அவனை எந்தச் சூழ்நிலையிலும் மறக்க மாட்டாளென்று கூறுவார்கள். அது எவ்வளவு உண்மையோ தெரியாது. ஆனால் இந்தக் கதையின் கதாநாயகி ஸ்கார்லெட் ஓ ஹாரா (Scarlet O' Hara) அதற்கு இலக்கணமாக இருக்கிறார். எத்தனையோ இழப்புகள், திருமணம், குழந்தை, போர், உழைப்பு என்று நூறு பிரச்சனைகளுக்கு இடையிலும் முதல் காதலை மூளைக்குள்ளேயே மூட்டம் போட்டு வைத்திருக்கும் கதாபாத்திரம் ஸ்கார்லெட்டினுடையது. அமெரிக்காவில் தெற்குப் பகுதியில் டாரா என்ற பண்ணை வீட்டில் பிறந்து வளர்ந்த பணக்கார இளம்பெண் ஸ்கார்லெட். விளையாட்டுப் பெண். செல்லமாக வளர்ந்த பெண். காண்போரைக் கவரும் பேரழகு. அதில் அவளுக்கு பெருமையும் கர்வமும் உண்டு. இரண்டு தங்கைகளும் அவளுக்கு உண்டு. நிறைய ஆண் நன்பர்கள். அவளை மனதில் விதைத்தவர் பலர். ஆயினும் அவள் மனதைத் தைத்தவன் ஆஷ்லே (Ashley). அவனுக்கும் அவனது முறைப்பெண் மெலனிக்கும் (melanie) திருமணம் உறுதியாகிறது. பதறிய ஸ்கார்லெட், அவனிடம் காதலை வெளிப்படுத்துகிறாள். அந்தோ பரிதாபம். காதல் மறுக்கப்படுகிறது. பதினேழு வயது பெண்ணின் உள்ளம் உடைக்கப்படுகிறது. கதறிய பெண்ணின் காதல் உதறப்படுகிறது. ஸ்கார்லெட்டும் ஆஷ்லேயும் பேசுவது ரெட் பட்லர் (Rhett Butler) என்பவனின் காதில் விழுந்து விடுகிறது. ஸ்கார்லெட்டின் இரகசியம் அவனுக்குத் தெரிந்து போனதே!

ஏமாற்றத்தில் உண்டான தடுமாற்றத்தில் மெலனினின் அண்ணன் சார்லஸை திருமணம் செய்கிறாள். அஷ்லேயும் மெலனியை மணந்து கொள்கிறாள். அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் வெடிக்கிறது. சார்லஸ் இறக்கிறான். அவளுக்கு குழந்தையும் பிறக்கிறது. அட்லாண்டாவில் சார்லஸின் வீட்டில் தங்கியிருக்கிறாள் ஸ்கார்லெட். அவளுடன் மெலனியும். மெலனியின் வேறு குழந்தையைச் சுமந்து கொண்டிருக்கிறாள். ஆஷ்லேயோ போர்க்கைதியாக எதிரியிடத்தில். இதற்கிடையில் ஸ்கார்லெட்டுடனும் மெலனியுடனும் நன்றாக பழகுகிறான் ரெட் பட்லர். அவனை வேறு யாருக்குமே பிடிக்கவில்லை. போரில் தெற்கு அமெரிக்கவினர் பின்வாங்குகிறார்கள். பீரங்கி ஒலிகளுக்கு நடுவில் மெலலினுக்கு குழந்தை பிறக்கிறது. அவர்கள் டாராவிற்குத் தப்பித்துச் செல்ல உதவுகிறான் ரெட். ஆனால் வழியிலேயே அவர்களை விட்டுவிட்டு போரில் கலந்து கொள்ள போய்விடுகிறான்.

அன்னையின் மடி தேடி ஒரு வழியாக டாராவிற்கு வருகிறார்கள். அங்கேயும் அதிர்ச்சி. ஆம். எதிரிகள் எல்லாப் பண்ணை வீடுகளையும் பண்ணைகளையும் அழித்திருக்கிறார்கள். டாராவின் வீடு மட்டும் தப்பித்திருக்கிறது. மகிச்சியோடு டாராவிற்குள் நுழையும் ஸ்கார்லெட்டிற்கு அதிர்ச்சி. ஆம். ஸ்கார்லெட்டின் தாய் நிமோனியாவில் இறந்திருக்கிறாள். தந்தை சித்தம் கலங்கியிருக்கிறார். இரண்டு தங்கைகளும் நோயின் பிடியில். வீட்டிலும் பண்ணையிலும் வேலை செய்த சில கருப்பர்கள் வேறு இருக்கிறார்கள். ஆனால் பொறுப்பானவர் யாரும் வீட்டில் இல்லை. ஏன்! ஒன்றுமே இல்லை. உண்ண உணவில்லை. உடுக்க உடையில்லை. அவளது தோள்களில் சுமை இறங்குகிறது. அதையும் திறம்பட சமாளிக்கிறாள். விளையாட்டு ஸ்கார்லெட் பொறுப்புள்ளவளாக மாறுகிறாள். இப்போது மெலனியையும் அவளது குழந்தையையும் காப்பாற்றும் பொறுப்பு வேறு. போர் முடிவுக்கு வருகிறது. எதிரிகளின் கட்டுப்பாட்டில் இப்போது அவர்களது பகுதி. அவர்களது குழறுபடிகள். அப்பப்பா! மென்மேலும் நெருப்புக் கனல்களாய் துன்பங்கள். அவளை மேலும் உறுதியாக்குகிறது அது. அத்தனையும் தாண்டி படிப்பவர்களின் நெஞ்சத்தில் நீங்காமல் நிறைகிறாள் ஸ்கார்லெட்.

அவள் ஒவ்வொரு அடி எடுத்துவைக்கும் வேளையிலும் காலுக்கு கீழே நிலம் நழுவுவது போல அடுக்கடுக்காய் பிரச்சனைகள். அத்தனை சோதனைகளிலும் சர்ச்சைக்குரிய வகையில் முடிவுகளை எடுத்து தீர்வு காணுகிறாள். பெண்ணியம் பேசியே பொழுதைப் போக்காமல் புரிய வைக்கிறாள் ஸ்கார்லெட். நவகிரகங்களானாலும் நடுவிலிருப்பது சூரியன் என்றால், இந்தக் கதையின் சூரியன் ஸ்காட்லெட். அவளைச் சுற்றியே எல்லாம் இயங்குகின்றன.

இந்தக் கதையின் மற்றொரு சிறப்பு, போரின் கொடுமைகளையும் அதன் பின்விளைவுகளையும் நெஞ்சை உலுக்கும் விதத்தில் சொல்லியிருப்பது. போரின் விளைவாக எப்படியெல்லாம் அவர்களது பழக்கவழக்கங்கள், உணவுகள், தொழில்முறைகள், சம்பிரதாயங்கள் எல்லாம் மாறுகின்றன என்பதை அப்பட்டமாக காட்டியுள்ளார் மார்கரெட் மிஷெல். உலகத்தின் பல நாடுகளின் மீது போர் தொடுக்கும் அமெரிக்கா அவர்களது உள்நாட்டில் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் நடந்தவைகளை ஒரு முறையேனும் நினைத்துப் பார்க்க வேண்டும். அல்லது இந்தக் கதையை ஒரு முறையேனும் படித்துப் பார்க்க வேண்டும். நீங்களும் நேரமும் வாய்ப்பும் கிடைத்தால் இந்தக் கதையை படியுங்கள். இந்திய மதிப்பில் ரூபாய் நூற்று ஐம்பதிற்கு இந்தப் புத்தகம் கிடைக்கிறது. வாசித்து நேசிக்க வேண்டிய புத்தகம்.

இந்தக் கதையின் ஆசிரியை மார்கரெட் மிஷெலைப் பற்றியும் சுவையான தகவல்கள் உள்ளன. ஆயிரத்து தொள்ளாயிரமாம் ஆண்டு அட்லாண்ட்டாவில் பிறந்தவர் மார்கரெட் மிஷெல். அவரது இருபத்தியிரண்டாவது வயதில் பத்திரிகைகளில் பணிபுரியத் தொடங்கிய அவர், Gone with the wind-ஐ எழுதத் தொடங்கியது 1926-இல். அதுவும் குதிரையேற்ற பயிற்சியின் போது கீழே விழுந்ததால் கிடைத்த கட்டாய ஓய்வின் போது. மார்கரெட் மிஷெலில் உயரம் ஐந்தடிக்கும் குறைவு. இந்தக் கதையை அவர் எழுதிய தாள்களை அடுக்கி வைத்தால் அவரை விட உயரமாக இருக்குமாம். கதை எழுதி கிட்டத்தட்ட ஆறேழு வருடங்களுக்குப் பிறகுதான் புத்தகமாக வெளிவந்திருக்கிறது. அதன் பிறகு அந்தப் புத்தகம் பெற்ற புகழை உலகே அறியும். புத்தகம் வெளியான மூன்று ஆண்டுகளிலேயே திரைப்படமாகவும் எடுக்கப் பட்டது. அந்தப் படமும் மாபெரும் வெற்றி பெற்றது. 1946-ல் சாலையைக் கடக்கும் போது ஒரு கார் மோதி இறந்தார் மார்கரெட்.

பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் இறுதியில் நடந்த உள்நாட்டுப் போரினால் அமெரிக்காவின் பண்பாடும் கலாச்சாரமும் பெரும் மாற்றம் கண்டது. குறிப்பாக அமெரிக்காவின் தெற்கு மாகாணங்கள் முழுவதுமாக புரட்டிப் போடப் பட்டன. பேரிழப்பும் சீரழிவும் உள்ளத்தை உருக்குபவை. பெரிய பண்ணைக்காரர்களும் தொழிலதிபர்களும் பட்டாணி விற்கும் நிலைக்கு ஆளானார்கள். வெள்ளையர்களுக்கும் கருப்பர்களுக்கும் இடையே இருந்த உறவு முறைகள் மாறின. பண்ணையில் வேலைக்கு கருப்பர்களை வாங்கிக் கொண்டிருந்த நிலைமாறி, ஒருவிதமான திடீர் சுதந்திரம் கருப்பர்களுக்குக் கிடைத்தது. ஆனால் தவறான வேளையில். தவறான வகையில். மிகவும் கட்டுப்பாடான வெள்ளை அமெரிக்கர்களின் வாழ்க்கை முறையில் பண்பாட்டுச் சீரழிவு புகுந்தது. விலைமாதர்களும் திருடர்களும் பெருகினர். சலூன்கள் என்றழைக்கப்படும் கேளிக்கை விடுதிகள் பெருகின. வண்ணம் பூசி முகத்தழகைக் கூட்டிக் காட்டுவது தவறாக கருதப் பட்டது என்ற நிலை மாறியது. பெண்களுக்கு மாப்பிள்ளை கிடைப்பதும் கடினமானது. பல வீடுகளில் பெண்கள் திருமணமாகாமலே வாழும் நிலை ஏற்பட்டது. இந்த நிகழ்வுகளையெல்லாம் பின்புலமாக வைத்து எழுதப்பட்ட கதைதான் gone with the wind.

மார்கரெட் பிறந்த சமயத்தில் உள்நாட்டுப் போர் முடிந்து அமைதி திரும்பிக் கொண்டிருந்தது. போர்க்காலத்தில் தனது தந்தை பட்ட பாட்டை அடித்தளமாக வைத்து எழுதினார் மார்கரெட். அவரது உறவினர்களும் நண்பர்களும் கொடுத்த தகவல்களும் விவரங்களும் கதையை முழுமையாக்கின. அட்லாண்டாவிலேயெ பிறந்து வளர்ந்தவராதலால், கதையில் அந்த ஊரைப் பற்றி சொல்லும் பொழுது சிறப்பாகவும் முழுமையாகவும் சொல்லியிருக்கிறார். பெண்கள் தொழில் செய்வது கேவலமாக கருதப் பட்ட நிலை மாறி பெண்களாலும் தொழில் செய்ய முடியும் என்று நிரூபிக்கப் பட்டதும் இதே காலகட்டத்தில்தான்.

இந்தக் கதையைப் பற்றி இன்னும் என்னென்னவோ சொல்லிக் கொண்டு போகலாம். அவ்வளவு சரக்குள்ள கதை. படிக்கச் சிறந்த கதை. இதில் வரும் கதாபாத்திரங்கள் நமது உள்ளங்களை கொள்ளை கொள்ளுவது மற்றுமல்ல, நமக்குள்ளே ஒரு பகுதியாகி விடும் தன்மையும் பெற்றவை. படியுங்கள். படித்து விட்டு சொல்லுங்கள். அசைபோடத் தோதான கதை.

Thursday, June 16, 2005

வெட்டு கத்திரி

வெட்டு கத்திரி

துணியை வெட்டும் கத்திரி அல்ல. செய்து வைத்தால் எல்லோரும் சேர்ந்து வெட்டும் கத்திரி. கத்திரி வதக்கல்களில் சற்று மாறுபட்ட வகை. இது மிகவும் எளிமையான பதார்த்தம். பூரிக்குத் தொட்டுக்கொள்ள மிகவும் சுவையாக இருக்கும்.

கத்திரிக்காய் (பெரியதும் பயன்படுத்தலாம். சிறியதும் பயன்படுத்தலாம்).
மிளகாய்த் தூள் - தேவையான அளவு
மஞ்சள் தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
நல்ல எண்ணெய் - தேவையான அளவு

1. பெரிய கத்திரிக்காய் என்றால் வட்ட வட்டமாக வெட்டிக் கொள்ளுங்கள். சிறிய கத்திரிக்காய் என்றால் நான்காக வெட்டிக்கொள்ளுங்கள். (கத்திரிக்காய் கழுவப்பட்டும் ஈரமின்றியும் இருக்க வேண்டும். காம்பை நீக்கியிருக்க வேண்டும்).

2. மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்புத் தூளை கலந்து கொள்ளவும்.

3. கத்திரிக்காயின் வெட்டப்பட்ட பக்கங்கள் இந்தக் கலவையில் படுமாறு அழுத்திப் புரட்டிக் கொள்ளவும்.

4. நான்-ஸ்டிக் அல்லது தோசைக்கல்லில் நல்லெண்ணெய் தடவி மிதமான தீயில் காய விடவும்.

5. தூள் கலவையில் புரட்டப்பட்ட கத்திரிக்காய் துண்டங்களை சட்டியில் இட்டு வேக விடவும். நன்றாக வேகும் வரை பக்கங்களை மாற்றி மாற்றி போடவும். கருகி விடக் கூடாது.

6. நன்றாக வெந்ததும் தட்டில் எடுத்து சுடச்சுட பரிமாறவும்.

இதை பூரிக்குத் தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும். சப்பாத்திக்கும் பொருந்தும். தயிற் சோற்றோடு சேர்த்து உண்டால், ஒவ்வொரு நாளும் இதைச் செய்ய வேண்டி வரலாம். பெரிய கத்திரிக்கயானால் சுடு சோற்றோடு கலந்து சிறிது நல்லெண்ணெய் சேர்த்து பிசைந்து தின்றால் நன்றாக இருக்கும். தண்ணீரே தேவைப்படாத எண்ணெயும் குறைவாகப் பிடிக்கும் பதார்த்தமிது. நல்லெண்ணெய் பயன்படுத்தினால் சுவை கூடும். செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள்.

Monday, June 13, 2005

ஓம் புத்தகப் பிரியாயை நமஹ

ஓம் புத்தகப் பிரியாயை நமஹ

அதாகப் பட்டது...ஆதியிலே, வேலை வெட்டிகளைப் பாதியிலே நிறுத்தி விட்டு, கைகால் நொந்தவரெல்லாம் கூடித் தொடங்கினார்கள் எழுதுவதற்கு. தாங்களாக எழுதினால் போதுமா? படிப்பார் வேண்டாமா? எண்ணும் எழுத்தும் கண்ணென்றார்கள். கற்க கசடற என்றார்கள். சேதியிலே கேட்டதெல்லாம் சோதியிலே கலந்திட தாமும் படிக்கத் தொடங்கினார்கள். எழுதும் படிக்கும் வழக்கம் வந்தது.

அப்படி எழுதியும் படித்தும் வந்த மரபிலே இராகவன் தோன்றினான். அவன் உண்டு வீங்கியவன். புத்தகம் நிறைய வாங்கியவன். அதற்காக திட்டுகள் நிறையத் தாங்கியவன்.

அவனுடைய வீட்டுக்குள்ளே இருக்கும் புத்தகங்களைப் பட்டியல் போட நாமும் உள்ளே நுழைந்தேன். தமிழுக்கே அகராதி கேட்கும் இந்த அகராதி பிடித்தவன் ஆங்கிலத்தில் அடுக்கி வைத்திருந்தான் ஏடுகளை. ஆங்காங்கே தமிழும் கொஞ்சம். மிச்சமும் சொச்சமும் ஊரிலிருப்பதாக கதை கட்டினான். இருந்தாலும் விடாமல் இருக்கின்றவைகளை கணக்கெடுத்தோம். இதோ பட்டியல்.

அவனுக்குப் பிடித்த புத்தகங்கள் பற்றி பேட்டியும் எடுத்தோம். அதைப் பிறகு இடுகிறோம்.

நந்தவனம் - மீ.ப.சோமு
அர்த்தமுள்ள இந்துமதம் - அனைத்து பாகங்களும் - கவியரசர் கண்ணதாசன்
மனோண்மணீயம் - பேராசிரியர் சுந்தரம்பிள்ளை - விளக்கம் - சு.பாலசுப்பிரமணியன்
மதனகாமராஜன் கதைகள்
கந்தவேள் கருணை - தவத்திரு கிருபானந்த வாரியார்
கந்தர் திருவிளையாடல் - தவத்திரு கிருபானந்த வாரியார்
கந்தர் அநுபூதி விரிவுரை - தவத்திரு கிருபானந்த வாரியார்
கந்தரலங்காரம் விரிவுரை - தவத்திரு கிருபானந்த வாரியார்
சிவனருட் செல்வர் - தவத்திரு கிருபானந்த வாரியார்
வாசன் உயர்தரத் தமிழ்க் கையகராதி
இல்லத்தரசிகளுக்கு இனிய சமையல் (அசைவம்) - யசோதா சண்முகம்
A-1 முஸ்லிம் சமையல் - பாத்திமா ஷாஜஹான்
தமிழ்ப் புலவர் கவி காளமேகம் - பூவை அமுதன்
பேய்க்கரும்பு - பாலகுமாரன்
கி.ராஜநாராயணன் கதைகள் - தொகுப்பு
பெயர் போன புளுகுகள் - தேவன்
ராஜத்தின் மனோரதம் - தேவன்
கண்ணதாசனின் திரையிசைப் பாடல்கள் - பாகம் 1 முதல் 5.
கவிராஜன் கதை - வைரமுத்து
பாரதியார் கவிதைகள்
சிலப்பதிகாரம் - விரிவுரை - பேராசிரியர் ஜே.ஸ்ரீசந்திரன்
மணிமேகலை - விரிவுரை - பேராசிரியர் ஜே.ஸ்ரீசந்திரன்
சீவக சிந்தாமணி - விரிவுரை - பேராசிரியர் ஜே.ஸ்ரீசந்திரன்
குண்டலகேசி - விரிவுரை - பேராசிரியர் ஜே.ஸ்ரீசந்திரன்
வளையாபதி - விரிவுரை - பேராசிரியர் ஜே.ஸ்ரீசந்திரன்
குப்பத்து சாஸ்திரிகள் - பி.வி.ஆர்
தமிழ் இலக்கிய வரலாறு - மு.வரதராசனார்
கடல் கொண்ட தென்னாடு - கவியரசர் கண்ணதாசன்
பி.சுசீலா - குயிலை மிஞ்சும் இனிய கீதங்கள்
பத்துப்பாட்டு (திருமுருகாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, சிறும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, முல்லைப்பாட்டு) விரிவுரை - புலவர். அ.மாணிக்கனார்
வந்தார்கள் வென்றார்கள் - மதன்
அக்ரஹாரத்தில் கழுதை - அ.வெங்கட் சாமிநாதன்
விகடன் பழவவிழா மலர்
சிரிக்க வைக்கிறார் கிவாஜ
தனிப்பாடல் திரட்டு (முதல் தொகுதி) - விளக்கம் அ,மாணிக்கம்
சிலம்போ சிலம்பு - முனைவர் சுந்தர சண்முகனார்
சிலப்பதிகாரம் - விரிவுரை - புலியூர்க் கேசிகன்
திருப்புகழ் (தொகுப்பு) - அருணகிரிநாதர்

அன்புடன்,கோ.இராகவன்

Thursday, June 09, 2005

கொளுத்துவோம்

மடமையைக் கொளுத்துவோம்

"தாயே! அண்ணல் காத்துக்கொண்டிருக்கிறார். பல்லக்கும் ஆயத்தமாக இருக்கிறது. புறப்படலாமா அம்மா?". பணிவோடு கேட்டுவிட்டு மறுமொழிக்காக அன்னையின் திருமுகத்தையே ஆவலுடன் நோக்கிக்கொண்டிருந்தான் அனுமன். இதுநாள்வரை மேகம் மறைத்த நிலவைப் போல ஒளி இழந்திருந்த சீதையின் திருமுகத்தில் புன்னகை பெருகி பொலிவைக் கூட்டியது. அனுமனுக்கோ கால்கள் தரையில் நிற்கவில்லை. அன்னையையும் அண்ணலையும் ஒருசேரக் காணும் பேறல்லவா கிடைக்கப் போகிறது. கூடுதலாக அன்னையின் புன்னகை அவன் உள்ளத்தை குதியாட்டம் போடவைத்தது.

"அனுமா! நல்ல செய்தி கொண்டு வந்தாய். என்னிடத்தில் இப்பொழுது தருவதற்கு அன்பைத்தவிர ஒன்றுமில்லை. அது உனக்கு என்றும் குறைவில்லாமல் உண்டு. நீடு வாழி! மகனே! என்று அண்ணல் காடேகினாறோ அன்றே பல்லக்கு ஏறுவதை புறக்கணித்துவிட்டேன். வனவாச வாக்கை முறிக்கும் கோடாலியல்லவா அது. நான் நடந்தே வருகிறேன். நீ என்னுடன் வந்து வழிகாட்டு. காத்துக் காத்துப் பூத்த என் கண்கள் அவரின் கோலக்காட்சியைக் காண ஆவலாக உள்ளன. நிறையப் பேசினால் அழுதுவிடுவேன் போல் இருக்கிறது. நேரத்தைக் கடத்தவேண்டாம். செல்வோம் வா" என அனுமனை அழைத்துக் கொண்டு நடந்தாள் ஜானகி. கால்களில் துள்ளல். கண்களில் கண்ணீர். உள்ளத்தில் உவப்பு. விரைந்து நடக்கவோ நாணம். மெதுவாகச் செல்ல மனம் விடவில்லை. தவிப்போடு நடந்தாள் வைதேகி.

கரிய திருமேனி கரும்பாறையில் அமர்ந்திருந்தது. வீடணன், சுக்ரீவன், அங்கதன், ஜாம்பவன் முதலானோர் முன்னின்றனர். ஏனைய வானரக் கூட்டம் பின்னின்றது. இலக்குவன் அருகில் நின்றான். அவனுக்கோ அண்ணியெனும் அன்னையைக் காணும் ஆவல். அண்ணன் முகத்தில் அந்த ஆவலைக் காணத் திரும்பியன் குழப்பத்தில் ஆழ்ந்தான். கருப்பு நிறமென்றாலும் களையான இராமனின் வதனம் மேலும் கருத்து புயலுக்கு முந்திய முகிலைப் போல அமுக்கமாகவும் அச்சப்படுத்தும் விதமாகவும் இருந்தது. ஒன்றும் புரியாமல் தவித்தான் இலக்குவன். கூடிவரும் வேளையில் குழப்பம் நேர்ந்து விடக்கூடாதே என்று அவன் நெஞ்சம் வேண்டிக்கொண்டு இருந்தது.

கூட்டத்தில் எழுந்த சிறிய சலசலப்பு சீதையின் வரவுக்குக் கட்டியங் கூறியது. இராமனுக்கு எதிராக எதையுமே நினைத்திராத அவள் இன்று அவன் எதிரே தலைகுனிந்து அமைதியாக நின்றாள். விம்மலை வெளிக்காட்டாமல் உள்ளமும் உடலும் ஒடுங்கியிருந்தாள். அன்னையைக் கண்டு அன்போடு வணங்கி நின்றான் இலக்குவன். "இலக்குவா!" என்ற அண்ணனின் குரல் அபஸ்வரமாக அவன் செவிகளில் விழுவும் திரும்பிப் பணிந்து நின்றான். சிறிய தூறலாகத் தொடங்கும் பெருமழைபோல இராமன் திருவாயினின்று சொற்கள் வந்து விழலாயின. "இலக்குவா! நெருப்பு மூட்டு". முதலில் திடுக்கிட்டாலும் ஒருவழியாகச் சமாளித்துக் கொண்டு விறகு சேகரித்தான் இலக்குவன். எல்லாம் ஈரவிறகுகளாகக் கிடைத்தன. அனைத்தையும் கூட்டி நெருப்பு மூட்டினான். புகையே இல்லாமல் ஈர விறகுகள் எரியத்தொடங்கின. புகையப்போவதெல்லாம் வேறிடத்தில் என்று அந்த ஈர விறகுகள் அறியுமோ என்னவோ!

"சீதா இந்த நெருப்பில் மூழ்கி என்னிடம் வா" உணர்ச்சியற்று ஒலித்தது அண்ணலின் குரல். அரண்டான் இலக்குவன். விதிர்த்தான் வீடணன். அதிர்ந்தான் அனுமன். கலங்கியது கூட்டம். அனுமனின் கண்களில் குற்றாலம் குமுறியது. உடம்பு வெடவெடவென நடுங்கியது. "அன்னையின் மீது ஐயன் ஐயம் கொண்டாரே! அன்னையைப் பார்க்கையில் பரிதவிப்பு தோன்றுகிறது. ஆனால் அண்ணலிடம் நான் என்ன சொல்ல இயலும். யார் பக்கம் இருப்பேன்". மருண்டு போனான் அனுமன். இராமன் கூறியது அனைவரின் காதுகளிலும் இன்னும் ஒலித்துக்கொண்டிருந்தது. ஆயினும் எங்குமில்லாத அமைதி.

இதுவரை ஒடுங்கியிருந்த சீதையின் பெண்மை விழித்தெழுந்தது. "ஸ்வாமி! இதுவரை உங்களை ஏன் எதற்கு என்றெல்லாம் கேட்டறியாத நான், உங்களைக் கைப்பிடித்தவள் கேட்கிறேன். எதற்காக இந்த நெருப்புக் குளியல்?"

"தேவி! உன்னுடைய புனிதத்தன்மையை ஊராருக்கும் உலகோருக்கும் உணர்த்தும் சோதனைக் களமிது. தனலாடி வா"

"என் மீது ஐயமா? அதை உடன் பிறந்தே கொல்லும் வியாதி என்றல்லவா பழிப்பார்கள். அது உங்களைத் தீண்டியதா? இரகு குலத்தில் இதென்ன புது வழக்கம். நம் இல்லறத்துக்கே இது இழுக்கல்லவா. நீங்களே இப்படிச் சொன்னால், ஊரும் உலகமும் உங்களைப் பின்பற்றாதா?"

இராமனின் இதழ்களில் என்றுமில்லாத அமைதி குடிபுகுந்தது. இலக்குவனும் அனுமனும் கண்களில் காவிரி பெருக்கினர். அமைதியை உடைக்க வானர மன்னன் சுக்ரீவன் வாய்திறந்தான். "அம்மா! ஐயனுக்கு உங்கள் மீது சந்தேகம் இருக்குமென்று நாங்கள் கருதவில்லை. அப்படி இருக்க வாய்ப்பே இல்லை. நாளை நாட்டுக்கு அரசியாகப் போகும் நீங்கள் குற்றமற்றவராக இருக்கவேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பார்கள். அதை நீங்கள் உறுதிபடுத்துவது முறையல்லவா? தங்களை குற்றமற்றவர் என்று அவர்களுக்கு விளங்கவைக்க வேண்டியது உங்கள் கடமை அல்லவா"

"நன்று! கிஷ்கிந்தை மன்னர் சுக்ரீவரே நன்று! அப்படியானால் அரசுக் கட்டிலில் அமர்வதென்று அவர் முடிவெடுத்துவிட்டாரா? என்னைக் குற்றமற்றவள் என்று ஊருக்குச் சொல்லி பதவியைப் பிடிக்கப் போகிறாரா? என்னை நெருப்பில் ஏற்றி அவர் அரியணை ஏறப்போகிறாரா? நான் நெருப்பில் இறங்கினால் எல்லோரும் நம்பிவிடுவார்கள் என்று உறுதியிட்டுக் கூறயியலுமா? அதற்குப்பின்னும் யாரேனும் கேள்வி எழுப்பினால் என்ன செய்வார்? என்னைத் துறப்பாரா? பதவியைத் துறப்பாரா?" இராமனின் வில்லம்புகளை விடவும் வேகமாக சீதையின் சொல்லம்புகள் பாய்ந்தன.

"அம்மா! இந்த மண்ணுக்கு அவரைப்போல மன்னர் கிடைக்க வேண்டுமல்லவா? மக்கள் அவரை இழக்கலாமா?". சொற்களை உடைந்த கற்களைப் போல் அடுக்கினான் வீடணன்.

"இலங்கை வேந்தே! நல்ல மன்னரைப் பற்றி நீங்கள் வாய்திறந்து விட்டீர்கள். உங்களை ஒன்று கேட்கிறேன். நீங்கள் உங்கள் அண்ணனை விட்டு நீங்கியது எதனால்? அவர் இந்த நாட்டு மக்களுக்கு அடாது செய்தாரா? அவருடைய ஆட்சியில் இலங்கை மக்கள் துன்பப்பட்டார்களா? இங்கே பெண்களுக்கு பாதுகாப்பில்லாது போய்விட்டதா? சிறுவர்களுக்கு கிடைக்க வேண்டிய கல்விக்குத் தடையிட்டாரா? சொல்லுங்கள். மாற்றான் மனைவியாகிய என்னைத் தீண்ட நினைத்த குற்றத்தினால்தானே அவரை விட்டுவிலகினீர்கள். அதற்குன்டான தண்டனையை அவர் அடைந்துவிட்டார். அது முறைதான். இலங்கைக் குடிமகன் என்ற நிலையிலிருந்து நீங்கள் சொல்லுங்கள். உங்கள் தமையர் சிறந்த மன்னரா? இல்லையா?"

தலைகுனிந்தான் வீடணன். பெண்குலத்தின் பிரதிநிதியாக வைதேகி தொடர்ந்தாள். "என்னுடைய மாமன் நல்ல அரசர் இல்லையா? என் மகனை ஒத்த பரதன் சிறந்த மன்னன் இல்லையா? அவனுடைய ஆட்சியில் அயோத்தி மக்கள் நலமாகத்தானே வாழ்கிறார்கள். என்னவர் மன்னவரானாலும் சிறப்பாகத்தான் ஆட்சி புரிவார். பிறகு ஏன் இத்தனை பேச்சு என்று நினைக்கின்றீர்களா? அயோத்தி இவருக்கு முன்னும் இருந்தது. இவருக்குப் பின்னும் இருக்கும். அயோத்திக்கு வேறோர் அரசர் கிடைப்பார்கள். ஆனால் எனக்கு...?". உணர்ச்சியின் வேகத்தில் விம்மல் பொருமலாக மாறுகிறது. "நெருப்பில் இறங்க வேண்டியது நான். இறங்கச் சொன்னது அவர். நான் கேள்வி கேட்டது அவரிடம். அவரைத்தவிர அனைவரும் ஒவ்வொரு விளக்கம் கொடுக்கிறீர்கள். அவர் என்ன கூறப்போகிறார் என்பதை அவர் கட்டிய மனைவி என்ற முறையில் கேட்க விருப்பப்படுகிறேன்."

பவழ இதழ்கள் திறந்தன. "தேவி! உன்னுடைய இந்த நிலைக்குக் காரணம் நீயேதான். ஒருவருடைய உயர்வுக்கும் தாழ்வுக்கும் அவரவரே காரணம். யாகாவாராயினும் நாகாக்க வேண்டும். காவாக்கல் ஊரார் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாக நேரிடும். எந்த நிலையிலும் மற்றவர் மனம் புண்படும்படி பேசுதல் தகாது. அதிலும் எதிர்பாலாரிடம் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தேவி! உனக்கு நினைவிருக்கிறதா? அன்று மானைத்தேடி நான் சென்ற நாள். நாம் பிரிந்த நாள். அன்று நீ செய்த பிழைக்குத் தண்டனையாகத்தான் இந்த அக்கினிப் பிரவேஸம்."

"ஸ்வாமி. அன்று நான் செய்த தவறா! இலக்குவன் கிழித்த கோட்டைத் தாண்டியதைச் சொல்கிறீர்களா?".

"இல்லை தேவி. இலக்குவன் கோட்டைத் தாண்டியது விருந்தோம்பலுக்காக. அதில் தினையளவும் தவறில்லை. நல்ல இல்லத்தரசியாக உன் கடமையை நீ செய்ய நினைத்தாய். அது பாராட்டுக்குறியது. ஆனால் இது மாரீசன் உன் பெயரையும் இலக்குவன் பெயரையும் உரக்கச் சொல்லி அழைத்தவேளை நடந்தது. முதலில் இலக்குவனை போய் பார்த்துவரச் சொன்னாய். அவன் முதலில் மறுத்தான். அப்போது நீ உரைத்தது நினைவிருக்கிறதா?"

ஆத்திரத்திலும் ஆவேசத்திலும் அன்று பேசியது இன்று நினைவுக்கு வந்தது ஜானகிக்கு. "இலக்குவா! நீ என் பேச்சை மீறலாமா? உன் அண்ணனுக்கு ஒரு துன்பமென்றால் போய்க்காப்பாற்ற மறுக்கிறாயே! என்ன உடன்பிறப்பு நீ! அன்று ஒரு தம்பி நாட்டை கைப்பற்ற சூழ்ச்சி செய்தான். இன்று நீ என்னைக் கைப்பற்ற முயற்சி செய்கிறாயா?". அப்பொழுது சொன்னதற்கு இப்பொழுது வருந்தினாள் சீதை.

இலக்குவன் சோகத்தின் வேகம் தாங்கமாட்டாது இலங்கை நிலத்தில் வீழ்ந்து அழுகிறான். தன்னால் தன் அன்னைக்கு நேர்ந்த இக்கட்டின் குற்ற உணர்ச்சி அவனைத் துன்புறுத்தியது. செவ்விதழ்கள் மீண்டும் அசைந்தன. "இப்பொழுது புரிகிறதா தேவி. அன்று ஒரு குற்றமும் அறியாத இலக்குவன் மீது நீ சாற்றிய குற்றச்சாட்டுக்கு என்ன சொல்லப் போகிறாய். அவன் அதை அன்றே மறந்துவிட்டான். ஆனால் அவனுக்கு நேர்ந்த கொடுமைக்கு பரிகாரமே இது".

மெல்லத் தெளிந்தாள் சீதை. "நன்று! மிக நன்று! வீட்டுக்குள் நடந்த விவாதத்திற்கு வீதியில் விசாரணை. அரங்கத்துக்குள் நடக்க வேண்டியது அம்பலத்துக்கு வந்தது ஏன்? தெரியாமல் செய்த பிழைக்கு ஊரார் அறிய தண்டனையா? குற்றம் என்னுடையதுதான். அன்று நான் அப்பிடிப் பேசியிருக்கக் கூடாது. இலக்குவா அன்று நீ பட்ட வேதனையை இன்று நான் புரிந்துகொண்டேன். என்னை மன்னித்துவிடு. தவறுக்கு உண்டான தண்டனையை நான் ஏற்கனவே அடைந்து விட்டேன். அப்படியிருக்க வழக்கு மீண்டும் அவைக்கு வரக்காரணம் என்ன? ஒருவேளை தனிமையில் இலக்குவன் முன் என்னை இதே தண்டனைக்கு உட்படச் சொன்னால் ஒத்துக்கொண்டிருப்பேன். அந்தக் குற்றத்திற்கு ஊரரிய தண்டனை ஏற்க நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். அப்படி ஒருவேளை நான் ஏற்றுக்கொண்டாலும் உலகம் இதை நாளை எப்படி எடுத்துக்கொள்ளும்? எதையும் பேசும். சீதையின் மேல் ஐயம் கொண்டுதான் இப்படிப் பட்ட தண்டனை கொடுக்கப்பட்டது என்றும் பேசும். இதையே காரணம் காட்டி நாளைய பெண்களை நெருப்பில் தள்ளினாலும் தள்ளும் இந்த உலகம். அப்படி நேர ஒரு தவறான வழிகாட்டியாக இருக்க எனக்கு விருப்பமில்லை. கோசலை நந்தா! நெருப்பைத் தழுவி உம்மைச் சேரச் சொன்னீர்கள். அது நடக்காது. உங்களுக்குத் தெரியுமா? உங்கள் மோதிரத்துடன் அனுமன் என்னைச் சந்திக்க வந்தான். என்னை அவன் தோள்களில் தொற்றிக் கொள்ளச் சொன்னான். ஒரு மகனாய் என்னை உங்களிடத்து சேர்ப்பேன் என்றான். அவனிடம் மறுத்து நான் சொன்னேன். அனுமா! இங்கிருந்து செல்லவும் இராவணனைக் கொல்லவும் என் சொல்லால் முடியும். ஆனால் அன்னார் வில்லுக்கு அது இழுக்கு. என்னைக் கவர்வதன் மூலம் அவரைச் சீண்டிப் பார்க்கிறான் இலங்கை வேந்தன். ஆதலால் அவர் வந்து வில்லால் அழைத்தால் மட்டுமே நான் வருவேன்."

"இப்படியெல்லாம் உங்கள் வில்லுக்குக் கூட மதிப்புக் கொடுத்த என் பெண்மைக்கு மதிப்புக் கொடுக்கத் தவறிவிட்டீர்களே! ஒரு நல்ல கணவன் மனைவிக்கு அழகு நாலுபேர் அறியாவண்ணம் குடும்ப விவகாரத்தை சீர்செய்வது. ஆனால் நீங்கள் அப்படிச் செய்யத் தவறிவிட்டீர்கள். உறவுகளுக்குள் குழப்பம் வந்தால் பிரிவுதான் சிறந்த மருந்து. அதுமட்டுமல்லாது நான் நெருப்பில் இறங்கப்போவதுமில்லை. ஆகவே உங்களைப் பிரிவது என்ற முடிவுக்கு நான் வந்துவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள்."

"அதுமட்டுமல்ல. என்று சந்தேகம் என்று வந்துவிட்டதோ அன்றே உறவு சீர்கெட்டுவிடும். அதை செம்மை செய்யும் வழிமுறைகள் இதுவரை இல்லை. நெருப்பு என்னை வென்றால், களங்கம் எனக்குக் கற்பிக்கப்படும். நெருப்பை நான் வென்றால், நெருப்பின் மீதே களங்க முத்திரை குத்தப்படும். இருவருக்கு இடையில் உள்ள பிரச்சனையில் மூன்றாவதாக நுழைய மனிதர்கள் என்ன, உயிரற்ற எந்தப் பொருளுக்கும் உரிமையில்லை. அப்படியிருக்க, சேர்ந்தாரைக் கொல்லிக்கு நீதிபதி பதவியா? பெண்களுக்காக நாளைக்கு அவர்கள் இப்படிப்பட்ட நீதிமன்றத்தில் நிற்கக்கூடாதென்பதற்காக என் கணவரைப் பிரிகிறேன். இலக்குவா! அன்று உன் தூய மனதிற்கு துன்பம் தந்தறக்காக என்னவரை ஒரு முறை பிரிந்து வருந்தினேன். இன்று என் பெண்மைக்கு நேர்ந்த துயரத்தில், வருத்தமின்றி என் கணவரைப் பிரிகிறேன். வருகிறேன்."

"நான் தனியாக இருந்தால் என்மீது தூற்றல்கள் இடையறாது விழும். கணவனைப் பிரிந்த பெண்களுக்குத் தாய் வீடுதானே முதல் அடைக்கலம். நாளைய மகளிர் குலம் தனியாக வாழும் திறம் பெறட்டும். தன்னுடைய கால்களில் தாமாகவே நிற்கும் திறம் பெறட்டும். பெண்ணாலும் தனித்து வாழ இயலும் என்ற நிலை உண்டாகட்டும். அதற்கு முதல்படியாக என்னுடைய முடிவு இருக்கட்டும். அம்மா! என்னைப் பெற்றவளே மண்மகளே! உன் மகள் அழுகிறாளம்மா! உன்னை அழைக்கிறாளம்மா! என்னை உன்னோடு சேர்த்துக்கொள்! அதன் மூலம் என் தூய்மை எல்லோர்க்கும் விளங்கட்டும். நாளை எந்தப் பெண் மீதும் பழிபோட நினைப்பவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கட்டும். உன்னிடத்தில் பிறந்தாலும் உன்னோடு வாழ எனக்கு இதுவரை கொடுத்து வைக்கவில்லை. இனியாவது ஒரு மகளாக என் கடமையைச் செய்ய எனக்கு வழிகாட்டம்மா!" கதறினாள் சீதை.

விண்ணீர் விழுந்தாலே நெகிழ்பவள், தன் மகளின் கண்ணீரைப் பொறுப்பாளா? வெடித்துக்கொண்டு வந்தாள். மகளை வாரி அணைத்தாள். பழித்தோர் நடுவே இன்னும் தன் மகளை இருக்கவிடாமல் விரைந்து மறைந்தாள். மறைந்த இடத்தில் மேடிட்டிருந்தது. அங்கே மாதர் தம்மை இழிவு செய்யும் மடமை கொளுத்தப்பட்டிருந்தது.

Tuesday, June 07, 2005

பெண்ணைப் பெற்றவன்

பெண்கள் வீட்டின் கண்கள். ஏன் தெரியுமா? கண்ணீருக்குக் காரணம் இந்த இரண்டும்தான். ஆனந்தக் கண்ணீரோ! அழுகைக் கண்ணீரோ! பெண்களைப் பெற்றாலே கொஞ்சமாவது கண்களைக் கசக்க வேண்டும் என்பது உண்மை போல. நானும் பெண்ணைப் பெற்றவன்தான். ஆகையால்தான் அடித்துச் சொல்கிறேன்.

இல்லையென்று சாதிக்க வராதீர்கள். விளக்கமாகச் சொல்கிறேன். உங்களுக்கும் பெண் குழந்தை பிறந்தால், அந்தக் குழந்தையைப் பேணி வளர்ப்பதும், கல்வி கற்பிப்பதும், ஆடலும் பாடலும் சொல்லிக் கொடுப்பதும், சீராட்டிக் கொண்டாடுவதும் எத்தனை சந்தோஷங்கள். மறுக்கவில்லை. ஆனால் அத்தனை சந்தோஷங்களையும் நீங்கிக் கொண்டு, நம்முடைய அன்பையெல்லாம் வாங்கிக் கொண்டு, மற்றொருவன் தோளைத் தாங்கிக் கொண்டு போகிறாளே! அப்பப்பா! எப்பேற்பட்ட கல்மனங் கொண்ட ஆண்பிள்ளைகளையும் அழுக வைத்துவிடும்.

சரி. ஒருவன் கையில் பிடித்துக் குடுத்து விட்டோமென்று நிம்மதியாக இருக்க முடிகிறதா? நம்மை விட்டுப் போனதுதான் போனாள்! இன்னொருத்தனுக்கு மனைவி ஆனதுதான் ஆனாள்! புக்ககத்தில் எல்லோருக்கும் மனம் கோணவும் கோணாள்! இருந்தாலும் நம்மை மட்டும் அடிக்கடி காணவும் காணாள்! சரி! அவள்தான் புக்காத்துப் பெண்ணாகி விட்டாள். நம்மையும் மறந்து விட்டாள். நம்முடைய உள்ளமாவது சும்மா உட்கார்ந்திருக்கிறதா? எப்பொழுதும் அவள் நினைவு. எப்படி இருக்கிறாளோ! எப்படிச் சாப்பிடுகிறாளோ! வேலைகளெல்லாம் செய்ய முடிகிறதோ! ஒழுங்காக பார்த்துக் கொள்கிறார்களோ! கவலைகள் எல்லாம் நமக்குத்தான்.

என் கதைக்கு வருவோம். அவள் கைக்குழந்தையாக இருக்கையில் எத்தனை இன்பங்கள் தெரியுமா! அதெல்லாம் சொன்னால்தான் புரியுமா! என் மகள்! செல்ல மகள்! ஆனால் பாருங்கள், எனக்குப் பிறக்கவில்லை. கீழே கிடந்தாள். புழுதியில் பூப்பந்தாகப் புரண்டிருந்தாள். நான் எடுத்து வளர்த்தேன். பாசத்தையெல்லாம் கொடுத்து வளர்த்தேன். அன்பிலும் ஆசையிலும் என் மகளென்றே அவளை வளர்த்தேன். யாரும் அதை மறுக்க முடியாது.

அவளுக்கு நீளக் கண்கள். தொட்டிலில் கிடக்கையில் கைகளில் எடுத்தால் மினுக்கென்று கண்களைச் சிமிட்டுவாள். கொள்ளை அழகு. அப்படியே பொக்கை வாயைக் காட்டி லேசாக குமிழ்ச் சிரிப்பு சிரிப்பாள்! அடடா! எனக்கு எல்லாம் மறந்து போகும். கையில் அப்படியே வைத்துக் கொண்டிருப்பேன். திருமகள் கையில் பூக்களை வைத்துக் கொண்டிருப்பது போல. எனக்கும் கைவலி தெரியாது. அந்தப் பஞ்சு உடலும் நோகாது. மெத்தை போலிருக்கும் பிஞ்சுக் கால்களை நீட்டி மிதிக்கையில் ஒருவிதமான மகிழ்ச்சியும் பெருமிதமும் முதுகுத் தண்டிலிருந்து புறப்படுமே! இதெல்லாம் ஒரு தகப்பனுக்கு மட்டுமே அகப்பட்டு சுகப்படும் ரகசியம்.

சிறப்பாக வளர்ந்தாள். எல்லாரின் கண்களையும் கவர்ந்தாள். விதவிதமாக உடுப்புகளில் வண்ண வண்ணப் பூக்களாக மலர்ந்தாள். எந்த உடுப்பும் அவளுக்கு எடுப்புதான். பச்சைப் பட்டுப் பாவாடை கேட்டாள். அதில் அலைமகளைப் போல ஜொலித்தாள். செக்கச் செவேலென்று சிற்றாடை. அலர்மேல் மங்கையே அவள்தானோ! என் கண்ணே பட்டுவிடும் போலிருந்தது.

பாவி நான். நான் பெறவில்லையே. கொட்டடியில் இருந்தாலும் பசுவிற்கு கொட்டடி உறவாகுமா? ஆனாலும் அந்த அழகு தெய்வம் என்னை அப்பா என்று அன்போடு அழைக்க நான் என்ன புண்ணியம் செய்திருக்க வேண்டும்! நான் பெற்ற பேறு அந்தப் பிள்ளைக் கனியமுதைப் பெற்றவர்களுக்குக் கிடைக்காமல் போனதே! எல்லாம் ஆண்டவன் செயல். தாயிடத்தில் கருவாக்கி, ஓரிடத்தில் உருவாக்கி, வேறிடத்தில் மெருவாக்க விட்டானே! அவன் செயலை யார் அறிவார்? உலகளந்தவன் எண்ணத்தை யார் அளப்பார்?

பக்தி அதிகம் அவளுக்கு. தெய்வப் பாசுரங்களைக் கோகிலங்கள் கூவுவது போலப் பாடுவாள். யாரையும் மயக்கும் அவள் கானம். விடியலிலேயே குளித்துவிட்டு பாடுவாள். மத்யமாவதியில் "சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்து உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்" என்று அவள் பாடினால்...............பரந்தாமனே பறந்து வந்து கேட்க வேண்டும். இல்லமெங்கும் அருள் துலங்கும். பாடலோடு ஆடலும் கற்றாள். "ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்" பாடி ஆடி அவளது பிஞ்சுப் பாதங்களால் மூன்று உலகங்களும் அளக்கும் பொழுது மூன்றாவது அடிக்கு என் தலை தகுமோ என்று வியப்பேன்.

"அம்மா! அன்று பரந்தாமன் அளந்த போது மூன்றாவது அடிக்குச் சிரசைக் காட்டினான் மாவலி. இன்றைக்கு மாவலி இல்லை. ஆனால் நான் இருக்கிறேன். உனது மலர்ப்பாதங்களை எனது தலையில் வையம்மா! இந்தத் தந்தையின் உச்சி கொஞ்சம் குளிரட்டும். எப்பொழுதும் உன் பெருமயை நினைத்து நினைத்தே தலை சூடேறியிருக்கிறதம்மா!"

பெண்களுக்குப் பருவம் வந்தால் பெற்றவனுக்கு பயம் வரும். காக்கவும் ஒருவன் கையில் சேர்க்கவும் எண்ணம் வரும். நான் அவளிடமே கேட்டேன்.

"அம்மா குழந்தை, அப்பா உனக்கு கலியாணம் செய்து வைக்கலாம் என்று நினைக்கிறேன். உன் கருத்து என்னம்மா? உனக்கு எந்த மாதிரி மாப்பிள்ளை பார்க்கட்டும்! சொன்னால் அப்பா சொன்னபடி செய்கிறேனம்மா!"

இப்படித்தான் கேட்டேன். அதற்கு அவள் என்ன சொன்னாள் தெரியுமா? காதல் வந்ததாம். கனவு வந்ததாம். வந்தவன் கையையும் பிடித்தானாம். அதுவும் மாட்டுக்கார மன்னாருடன். எனக்கு தலையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை.

அவனுடன் சிறுவயதுப் பழக்கம் அவளுக்கு. வயது வந்தால் எல்லாம் சரியாகப் போகுமென்று விட்டுவிட்டது தப்பாயிற்று. எடுத்துச் சொன்னேன்.

"குழந்தை, நாம் யார்? உன் தந்தை யார்? அவனொரு தமிழ்ப் பண்டிதன். கோயிலில் பாரளந்த பரந்தாமனுக்குக் பணிவிடை புரியும் தொண்டன். என் மகள், உனக்கு இப்படி ஒரு ஆசை வரலாமா? நீ யார்? உனது வளர்ப்பு என்ன? நீ கற்ற கலைகள் என்ன? ஆடலும் பாடலும் கூடும் நீ மாட்டிடையனை நாடல் எங்ஙனம்?"

கேட்டால் பதிலுக்குப் பதில் பேச்சு. நான் கற்றுத் தந்த தமிழை எனக்கு எதிராகத் திருப்புகிறாள்.

"பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ குற்று ஏவல் எங்களைக் கொள்ளாமல் போகாது" என்று பாடுகிறாள்.

"அம்மா! தமிழும் பாட்டால் அதற்கு இனிமை சேர்க்கும் கலையும் நான் தந்தது. பல்லாண்டுகளாக நான் பல்லாண்டு பாடியதைக் கேட்டுதான் நீ இப்பொழுது சொல்லாண்டு வருகிறாய். அப்படியிருக்க எனக்கே பாட்டுப் பாடிக் காட்டுகிறாயா! சைவத்தில் தந்தைக்கு மைந்தன் பாடம் சொன்ன கதையுண்டு. வைணவத்தில் தந்தைக்கு மகள் பாடம் சொல்லும் கதை உன்னால் வரப் போகிறதே!"

அவளுடைய காதலை நான் ஊரில் சொன்னால் என்ன ஆகும்? உற்றோர் சிரிப்பர். ஊரோர் சுழிப்பர். உலகோர் வெறுப்பர். ஒரே தடுமாற்றம். திரும்பத் திரும்ப எடுத்துச் சொன்னேன். ஆகாத அது. நடவாது அது. புலம்பினேன். மறந்து விடம்மா என்று கெஞ்சினேன். கையெடுத்துக் கும்பிட்டேன்.

கைகளால் கும்பிட்ட என்னிடம் வார்த்தைகளால் வம்பிட்டாள். எனக்கு விருப்பமில்லையென்றால் அந்த மாட்டுக்காரனை மணக்க மாட்டாளாம். ஆனால் வேறு யாரையும் மணக்கச் சொல்வதும் இந்த மண்ணை மறக்கச் சொல்வதும் ஒன்றாம். எனக்கு நெஞ்சே வெடித்து விட்டது.

வெங்கலப் பானை கீழே விழுந்தால் ஓசை வரும். மண்பானை விழுந்தால்? நொறுங்கிப் போனேன். இதற்குத்தானா பிள்ளையை வளர்ப்பது? முதலடியில் சுதாரிப்பதற்குள் அடுத்த அடி இடியாக நெஞ்சில் இறங்கியது. காலம் முழுதும் கன்னியாகவே வாழ்ந்து எனது கடைசி காலம் வரை என்னைப் பார்த்துக் கொண்டு இருந்து விடுவாளாம்.

ஒரு தகப்பன் மகளிடம் கேட்க வேண்டிய பேச்சா இது? என்ன பாடு பட்டிருப்பேன் அப்பொழுது! ஒரு முடிவுக்கு வந்தேன். "சரி. ஊரும் பழிக்கட்டும் உலகமும் ஒழிக்கட்டும், மகளும் விரும்பியவனை மணக்கட்டும்."

உள்ளூர் மன்னாரை திருவரங்கம் அழைத்துச் சென்று ரங்கமன்னாராக்கினேன். வேறென்ன செய்வது? வெளியூரில் போய் மாட்டுக்காரனைக் கூட்டுக்காரன் என்றால் தெரியவா போகிறது? பொய்தான். மகளுக்காக! பெண்ணைப் பெற்றவனய்யா நான்!

அங்கேயே திருமணமும் செய்து வைத்தேன். ஒரு நல்ல வேலையும் அவனுக்குச் செய்து வைத்தேன். ஆனாலும் பாருங்கள் பெரும் பொழுது அவனுக்குத் தூக்கம் தான். அவள் செய்து வைக்கும் புளியோதரையிலும் அக்காரவடிசலிலும் மேனி பளபளத்தான்.

ஊர் திரும்பவும் விருப்பமில்லை. பின்னே? மகளும் அரங்கத்திலேயே கணவனோடு ஒன்றி விட்டாள். எப்பொழுதும் தூங்கினாலும் தாங்குற வேளையில் தாங்குகிறானாம். இவளென்ன பூபாரமா? அவனுடைய நேரம் அவனிடத்தில் காரணமில்லாமல் செல்வமும் சேர்ந்தது. நான் மட்டும் திரும்பினால் நன்றாக இருக்குமா? அங்கே நாங்கள் மூவரும் காணமல் போனதுதான் எல்லாருக்கும் தெரிந்திருக்குமே! தனியாகச் சென்றால் தாளித்து விடுவார்களே!

என்ன செய்வது என்று யோசித்தேன். எனது அறிவை நல்ல வழிக்காக யாசித்தேன். ஆண்பிள்ளை பெறாதவனுக்குத் தனித்தட்டு. இல்லாவிட்டால் மகள் வீட்டுக் கதவைத் தட்டு.

"மாப்பிள்ளை வீட்டோடு சேர்ந்து இருப்பதா? அது சரியா?" எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை. வயது ஆகிவிட்டதல்லவா! முடிவெடுக்க முடியாமல் மூளை தடுமாறியது.

சரி. மானத்தை விட்டு விட்டு, எல்லா உணர்ச்சிகளையும் தொலைத்து விட்டு அவனுடைய பெரிய வீட்டிற்குப் போவதென்றே முடிவெடுத்தேன். வெறும் கை. அப்படியே போக முடியுமா? கையில் ஒன்றுமில்லை என்பதைச் சொல்லாமல் சொல்லும் விதமாக இரண்டு கைகளையும் கூப்பினேன். உள்ளே அவன் இருக்கவில்லை. எங்கு சுற்றினும் ரங்கனைத்தானே சேர வேண்டும். சுற்றினேன். காவிரிக்கரையில் காலை நீட்டிப் படுத்திருந்தான். அவனது நீட்டிய காலைப் பிடித்தேன். எனது தலையை அதில் இடித்தேன்.

"பரந்தாமா! மாதவா! கேசவா! எனது மகள் சொன்னதென்ன? ........ பட்டர் பிரான் கோதை சொன்ன சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே இங்கு இப்பரிகரைப்பார் ஈரிரண்டு மால்வரைத் தோள் செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்
அவளுக்கு, அந்த அழகிய கோதைக்கு இறங்கிய நீ இந்தப் பழகிய பட்டனுக்கு இறங்க மாட்டாயா?

எனது மகள் சூடிக் கொடுத்த மாலைகளை உனக்கு ஒவ்வொரு நாளும் அணிவித்தேனே! மாலையைக் கொடுத்த அவளை ஏற்றுக் கொண்ட நீ, அதற்கு மலர்களைக் கொய்த என்னை விட்டு விடலாமா? பரமபதம் காட்ட மாட்டாயா? முகுந்தா! வேங்கடவா! மாடு மேய்க்கும் சிந்தனை இன்னுமிருந்தால் இந்த விஷ்ணு சித்தனை நீ மறக்கலாமா? எனக்கு நல்ல வழியை மறுக்கலாமா?

உனக்கு நான் தமிழால் செய்த தொண்டுகளால்தானே என்னைப் பெரிய ஆழ்வார் என்று பொருள் கொள்ளும் படி பெரியாழ்வார் என்று எல்லோரும் அழைக்கிறார்கள். அந்த வாக்கு பொய்யாகும் படியான காடியத்தை நீ செய்யலாமா? அது உனக்குத்தானே குறையாகும்!"

கதறினேன். கண்களின் வழியாகக் கண்ணீரை அவன் காலடியில் உதறினேன். தூக்கம் கலைந்தது அவனுக்கு. மகளை ஆண்டவன் என்னையும் ஆட்கொண்டான். பிறகு நாளும் எனது பாக்களைக் கேட்டு மகிழ்ந்தான். அதுவும் என் செல்ல மகளோடு!
சூடிக் கொடுத்த சுடர்கொடியோடு!
தமிழோடு திருமாலையும் மணமாலை போட்டுக் கொண்ட ஆண்டாளோடு!
கோதை நாச்சியாரோடு!
மாப்பிள்ளை வீடு, பெண்ணைக் கொடுத்தது, கண்ணீர் விட்டு அழுதது எல்லாம் மறந்து போனது. எங்கும் பேரின்பம். அனைத்தும் சரணாகதி. எல்லாம் கண்ணன் செயல். பெண்ணைப் பெற்றவனுக்குப் பொன்னைப் பெற்றவனை விடவும் பெரிய இன்பம்.