Saturday, December 31, 2005

2006லாவது இலங்கைக்குப் போவோம்

வணக்கம் நண்பர்களே! உங்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள். 2006 உலக மக்கள் அனைவருக்கும் இனிய ஆண்டாக அமைய வாழ்த்துகள்.

புத்தாண்டில் ஒரு புதிய பதிவு போட எண்ணியிருந்த வேளையில் கிடைத்ததுதான் இந்தத் தலைப்பு. இந்தத் தலைப்பில் எழுத வேண்டுமென்று இன்றைக்குத் தோன்றவில்லை. நான்கைந்து ஆண்டுகளாகவே உள்ளுக்குள் ஊறிக் கொண்டிருக்கும் ஆசையைத்தான் இன்று எப்படியாவது எழுதியே தீருவது என்று முடிவு கட்டி உட்கார்ந்து விட்டேன்.

தலைப்பு என்ன? 2006லாவது இலங்கைக்குப் போவோம். இந்த ஆண்டாவது நாம் இலங்கைக்குப் போக வேண்டிய ஒரு கட்டாயத்தை எனது மனம் உணர்த்தியதை உங்களோடும் பகிர்ந்து கொள்கின்றேன்.

தலைப்பிற்குப் போவதற்கு முன்னர் கொஞ்சம் பாகிஸ்தானைப் பற்றியும் பேச வேண்டியுள்ளது. பாகிஸ்தானைப் பற்றி நான் தவறாகப் பேசப் போகிறேன் என்று யாரும் காத்திருக்க வேண்டாம். அது என்னுடைய தலைப்பிற்குப் பொருந்தாது.

பாகிஸ்தானுடன் நல்லுறவு என்று இந்தியா எவ்வளவு மெனக்கெடுகின்றது. நாளொரு ஊரும் பொழுதொரு இடமுமாக குண்டுகள் வெடித்தாலும் இந்தியர்கள் மாண்டாலும் பாகிஸ்தானுடன் எப்பாடு பட்டாவது நல்லுறவு வேண்டும் என்று எவ்வளவு முயற்சிகளை எடுக்கின்றது இந்திய அரசாங்கம். பாகிஸ்தானின் இந்தியாவிற்கு எதிரான தீவிரவாத நிலைப்பாடுகளையும் மீறி எடுக்கப்படுகின்றன இந்த முயற்சிகள். பாதி காஷ்மீர் போய் விட்டது. நிறைய அகதிகள் காஷ்மீரிலிருந்து வந்தாகி விட்டது. இன்னும் பிரச்சனைகள். கார்கில் போர். பாராளுமன்றக் கட்டிடத் தாக்குதல். கோயிலில் தாக்குதல். அங்கு இங்கு என்று இன்று பெங்களூரிலும் விஞ்ஞானிகளின் மீது தாக்குதல். மென்பொருள் நிறுவனங்களின் மீது குறிவைப்பு என்று பல தகவல்கள் உள்ளன. இவைகளுக்குக் காரணமான தீவிரவாத அமைப்புகளின் பெயர்களும் அவைகளோடு சம்பந்தப் பட்டவர்களின் பெயர்களும் படங்களும் கூட பத்திரிகைகளில் வருகின்றன.

இவையனைத்தையும் மீறி இந்திய அரசாங்கம் நல்லுறவுக்கான முயற்சிகளையே மேற்கொள்கின்றது. பஸ் விடுகின்றார்கள். திரைப்படக் கலைஞர்கள் போகின்றார்கள். கிரிக்கெட் வீரர்களின் பயணம். போர்க்கைதிகள் விடுதலை. இன்னும் பல. இவைகளை நம்மில் பலரும் ஆதரித்து பாகிஸ்தானுடம் நல்லுறவு கண்டிப்பாக வேண்டும் என்று விரும்புகின்றார்கள். தமிழர்களிலும் அப்படி விரும்புகின்றவர்கள் உண்டு. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணங்கள். சில அரசியல் தலைவர்களின் பிறந்த ஊர்களே இன்றைய பாகிஸ்தானில்தான். பாதி பஞ்சாப் அங்குதான் இருக்கின்றது. ஆக பாகிஸ்தானுடன் நட்புறவு கொள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம்.

இதையெல்லாம் சரி என்றோ தவறு என்றோ சொல்ல வரவில்லை. ஆனால் இவற்றையெல்லாம் மீறி நம்மிடம் வேறொரு காரணம் இருக்கின்றது. போக வேண்டிய வேறொரு இடம் இருக்கின்றது. அது ஏன் யாருக்கும் நினைவிற்கு வரவில்லை? தமிழ் மொழியைத்தான் காரணமென்று நான் குறிப்பிடுகின்றேன். இலங்கைத் தீவைத்தான் போக வேண்டிய இடமென்று குறிப்பிடுகின்றேன்.

இலங்கையில் தமிழருக்கு ஆதரவு அளிப்பது என்பது ஏன் நமக்கு நெருடலாக இருக்கின்றது என்று தெரியவில்லை. ராஜீவ் கொலையைக் காரணம் சொல்லலாம். அது தவறுதான். இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் மேலே குறிப்பிட்ட குற்றங்களைப் பாருங்கள். பாராளுமன்றத்திலேயே தாக்குதல் நடந்திருக்கின்றது. இதெற்கெல்லாம் இடம் கொடுக்கின்றவர்கள் யாரென்று தெரிந்தும் நாம் பாகிஸ்தான் போகவில்லையா? போக விரும்பவில்லையா?

அப்படியிருக்க இலங்கையின் மீது மட்டும் என்ன பாரபட்சம்? அங்கு அடிபடுகின்றவன் தமிழன் என்பதலா? இலங்கைப் பிரச்சனையை ஒரு முடிவுக்குக் கொண்டு வர இந்தியா எடுக்க வேண்டிய முயற்சிகளை மத்திய அரசு நிச்சயமாக இப்பொழுது எடுக்காது என்றே நினைக்கின்றேன். ஏனென்றால் மத்திய அரசிற்குப் பாகிஸ்தானைத் தெரிந்த அளவிற்கு ஈழத்தைத் தெரியாது. மேலும் அங்குள்ள தமிழன் தீவிரவாதியாத் தெரிகின்றான். அவன் போராடவில்லையென்றால் மாண்டு போவான் என்ற உண்மை எத்தனை பேருக்குத் தெரிகின்றது! மத்திய அரசுக்கு நேரடியாக இன்னொரு நாட்டு அரசாங்கத்தை எதிர்ப்பது தர்மசங்கடமாகவே இருக்கும் என்றே வைத்துக் கொள்வோம். அறிவுறுத்தலாம் அல்லவா? அதுவும் செய்ய முடியாதா? ஐயோ! அங்கே நமது சகோதரன் உயிருக்கும் மானத்திற்கும் போராடிக் கொண்டிருக்கின்றானே!

இந்தியாவிற்கு எத்தனையோ நட்டங்களை உண்டாக்கிய காஷ்மீருக்குத் தனி அந்தஸ்தும் அதற்காகப் போராடும் பாகிஸ்தானுக்கு நட்புறவும் கொடுத்து வருகின்ற மத்திய அரசாங்கத்திற்குப் புரியும் வகையில் தமிழனின் தேவையை எடுத்துச் சொல்ல வேண்டிய கடமை யாருக்கு இருக்கின்றது? நிச்சயமாகத் தமிழக அரசியல்வாதிகளுக்கு இருக்கின்றது. ஆனால் அவர்களுக்கு அதைச் செய்வதில் உள்ள தயக்கமும் வெறுப்பும் தெள்ளத் தெளிவாகவே தெரிகின்றது.

அவ்வப்பொழுது வைகோ பேசினால் அவருக்கும் ஐநூறு நாட்கள் சிறைத்தண்டனை. வைகோவின் கருத்துகள் மூடத்தனமானது என்று கெக்கெலி. தன் வாயாலேயே தனக்குக் கிடைக்கும் மதிப்பைக் குறைத்துக் கொள்கின்றார் என்று குத்தல் பேச்சுகள்.

இந்தத் தமிழக அரசியல் கட்சிகளின் தயக்கமும் வெறுப்பும் தமிழக மக்களின் மனப் போக்கையே பிரதிபலிக்கின்றன என்பதே மறுக்க முடியாத உண்மை. தமிழகத் தமிழனுக்கே என்ன செய்ய வேண்டுமென்றும் தெரியவில்லை.

நான் எந்த ஒரு நாட்டின் இறையாண்மைக்கும் எதிராகப் பேசவில்லை. பேச விரும்பவுமில்லை. கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் என்றுதான் கேட்கின்றேன். இந்திய அரசாங்கத்திடமும் தமிழக அரசியல்வாதிகளிடமும் தமிழர்களிடமும் கேட்கின்றேன். உங்கள் கவனத்தைக் கொஞ்சம் தெற்கே திருப்புங்கள். நாம் ஏதாவது செய்ய வேண்டும்.

என்ன செய்தால் அங்கு பிரச்சனை தீரும் என்று சொல்ல நான் அறிவாளியோ அரசியல் நிபுணனோ இல்லை. ஆனால் என் தமிழர் நல்லபடியாக வாழ வேண்டும் என்ற ஆசை மட்டுமே என்னிடம் உண்டு.

நாமெல்லாம் அந்த வகையில் சிந்திக்கத் துவங்கினால் அரசியல்வாதிகளும் சிந்திப்பார்கள் என்று நம்புவோம். அவர்களால் கொஞ்சமாவது உந்தப்பட்டு இந்திய அரசாங்கமும் சிந்திக்கும் என்று விரும்புவோம். நல்ல வழி புலப்படும் என்று நம்புவோம். 2006லாவது இலங்கைக்குப் போவோம்.

அன்புடன்,
கோ.இராகவன்

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

தமிழ்மண நண்பர்களுக்கும் அன்பர்களுக்கும் எனது இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள். எல்லா நலமும் வளமும் பெற்று வாழ இறைவனை வணங்குகிறேன்.


வரப்புயர்ந்தாலே நல்லன அனைத்தும் உயரும் என்பது ஆன்றோர் வாக்கு. அந்த வரப்பு உயர்வதற்கும் நீர் வளம் வேண்டுமே. நீரின்றி அமையாது உலகு அல்லவா! அந்த நீரும் கரைக்குட்பட்டு சிறந்து செழிக்க வேண்டும். அதற்கும் ஒரு படம்.


அன்புடன்,
கோ.இராகவன்

Friday, December 30, 2005

முன்னைக்கு முன்னை பின்னைக்குப் பின்னை

முன்னைக்கு முன்னை பின்னைக்குப் பின்னை

அவசர அவசரமாகப் பதிவு போட வேண்டியதாப் போச்சு. அதான் நம்ம குமரன் இப்படி ஒரு பதிவு போட்டாரு, அதுக்குப் பின்னூட்டம் கூடிப் போச்சு. அதுக்கு நான் போட வேண்டிய பின்னூட்டம் எழுதுனா ரொம்ப இருக்கு....சரி பேசாம ஒரு பதிவாப் போட்டுரலாமுன்னு போட்டுட்டேன். படிச்சுட்டு சொல்லுங்க.

// சிவனுக்கு மூத்தவள் என்பதையும் a > b; b > c அதனால் a > c சூத்திரத்துக்குள் அடக்கலாமா தெரியவில்லை. //

குமரன், சூத்திரத்துக்குள் அடங்குகின்றவனா சூத்திரதாரி? இப்படிச் சூத்திரம் போட்டு இறைவனை முடிவு செய்ய முடியுமானால் விஞ்ஞானத்தால் இறைவனை எப்பொழுதோ நிரூபித்திருக்கலாம். ஆனால் இந்த அறிவை விட இறைவனை அறிய மெய்யறிவே தேவை. அதையும் அவந்தான் தர வேண்டும். தந்திருந்தாலும் நமக்கு இந்தக் குழப்பமே வந்திருக்காது.

சமயங்கள் ஆறும் தனித்தனியாக எழுந்தவையே. ஆனால் இந்த ஆறில் மூன்று ஒன்றுக்கொன்று தொடர்புடையனவாக இருந்திருக்கின்றன. சைவம், சாக்தம் கௌமாரம் ஆகிய மூன்றும் எனக்குத் தெரிந்த பழம் இலக்கியங்களில் இருந்தே வந்திருக்கின்றன. சிலப்பதிகாரம், திருமுருகாற்றுப் படை, சங்க இலக்கியங்களி பார்த்தால் இதற்குச் சான்று கிட்டும். காணாபத்தியத்தைப் பழைய நூல்களில் காணவேயில்லை.

ஒவ்வொன்றும் தனித்தனியாக எழுந்து பிறகு ஒன்றானவை. அப்பொழுதுதான் இந்த உறவு முறைகள் உண்டாயின. ஆதித் தமிழ் மதத்தில் முருகக் கடவுளுக்கும் வள்ளிக்குமே தொடர்பில்லை என்று சொல்லவும் கேள்விப் பட்டிருக்கின்றேன். பிறகு அந்த இரண்டும் தமிழர் கலப்பால் இணைந்தன. தெய்வயானை ஆரியக் கலப்பில் இணைந்தார். இப்படி செறிவூட்டப் பட்டுக்கொண்டே இருந்தன. இது சாதகங்கள் மட்டுமின்றி பாதகங்களையும் உண்டாக்கியது உண்மைதான். ஆகையால்தான் ஆதி நூல்களைப் பார்க்கும் பொழுது ஒரு குறிப்பிட்ட கடவுளை மட்டுமே புகழ்ந்திருக்கும்.

பின்னாளில் செறிவூட்டப்பட்ட காலத்தில்தான் யார் பெரியவர் என்ற வீண் விவாதங்கள் நடை பெற்றன. சிவனே பெரியவர் என்றோ திருமாலே பெரியவர் என்றோ யாரேனும் வாதிட்டிருந்தால் அவர்கள் உண்மையிலேயே இறையருளைப் பெறவில்லை என்பது என்னுடைய கருத்து.

மூச்சுக்கு முந்நூறு முறை முருகா முருகா என்று சொன்ன அருணகிரிதான் "ஓல மறைகள் அரைகின்ற ஒன்றது மேலை வெளியில் ஒளிரும் பரஞ்சுடர்" என்று குழப்பிமில்லாமல் கூறியிருக்கின்றார். கந்தரநுபூதியில் ஆங்காங்கு இதே கருத்தை வலியுறுத்தியிருக்கின்றார்.

இன்னும் விளக்கமாகச் சொன்னால் "குறியைக் குறியாது குறித்தறியும் நெறியைத் தனி வேலை நிகழ்த்திடலும்". அதாவது அனைத்தையும் கடந்தும் உள்ளும் இருக்கும் மெய்ஞான தெய்வத்தைக் குறிகளைக் குறியாது குறித்து அறியும் மெய்யறிவை வேல் (ஞானத்தின் வடிவம்) தர வேண்டும் என்பதே. ஆழப் போனவர் கண்டது இதுதான்.

அதையும் முழுதாகச் சொல்ல வந்து சொல்ல முடியாமல் முடியவில்லை என்று முக்கி விடுகின்றார் அருணகிரி. "அறத் தீதாளியை ஆண்டது செப்புமதோ?" கண்டவர் விண்டிலர் என்பது உறுதியாகின்றது.

உண்மையான இந்திய நாட்டு மதவியல் கோட்பாடுகளின் படி நூறு பேரைச் சொன்னாலும் நூறு விதமாய் வணங்கினாலும் நூறூ இடங்களுக்குப் போனாலும் எல்லாம் ஒன்றே. ஒன்றே. ஒன்றே. அதை மறுத்து உரைப்பவரை ஏற்பது கடினம்.

சரி. அபிராமி பட்டருக்கு வருவோம்.
கறைகண்டனுக்கு மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே!

இது அம்பிகையைப் பற்றிச் சொல்லியது. பொதுவாக எந்தச் செய்யுளுக்கும் பொருள் கொள்ளும் பொழுது நேரடியாகப் பொருள் கொள்வது உண்டு. கடலையைப் பார்த்து கடலை உருண்டை என்று சொல்வது போல. உடைத்துப் பார்த்தால் உள்ளே பருப்பிருக்கும். உள்ளே இருப்பது பருப்பா வெறுப்பா என்பது உடைத்தால்தானே தெரியும். ஆகையால் சொற்களை முறையாகப் பகுத்துப் பொருள் கொள்ள முயல வேண்டும்.

அப்படி நானும் முயன்றதாக நம்பிக் கொண்ட பொருளை இப்பொழுது விளக்குகின்றேன்.

நல்லவனுக்கு நல்லவன். கெட்டவனுக்குக் கெட்டவன் என்று சொல்லக் கேட்டிருக்கின்றோம். ஆகையால் கெட்டவனை விட நல்லவன் குறைந்தவன் என்று பொருள் கொள்ள முடியுமா? இது தனி. அது தனி. இந்த முறையைத்தான் மேற்கூறிய அபிராமி பட்டரின் வரிகளுக்கும் கொள்ள வேண்டும்.

ஆதிநாதன் சிவபெருமான். ஆகையால் அது முன்னது. அந்த முன்னதுக்கும் முன்னது முன்னதாகத்தானே இருக்க வேண்டும். வீரனை வீரனே வெல்ல முடியும். ஆக சிவத்தைச் சிவமே வெல்லும். அப்படி முந்தி வெல்வது சிவசக்தியே. அதுதான் கறைகண்டனுக்கு மூத்தவளே.

பின்னைப் புதுமைக்கும் புதுமை என்பார்கள் அல்லவா. அதுதான் இங்கும். முன்னைக்கும் முன்னை என்றால் கிழவியா? இல்லை என்றும் குமரிதான் என்று சொல்லத்தான் மூவா முகுந்தற்கு இளையவளேன்னு அபிராமி பட்டர் சொல்லியிருக்கின்றார் என்று தோன்றுகின்றது.

இதில் முன்னைக்கு முன்னை. பின்னைக்குப் பின்னை என்றும் பொருள் கொள்ளலாம். ஐ என்றால் கடவுள். முன்னை என்றா முதற் கடவுள். முதற் கடவுளுக்கும் முதற் கடவுள். பின்னைக்குப் பின்னை...பின்னால் வந்த கடவுளுக்கும் பின்னால் என்றும் புதுமையாக இருப்பது.

சரிதானா நண்பர்களே!

அன்புடன்,
கோ.இராகவன்

Wednesday, December 14, 2005

பெங்களூர் பெயர்க்காரணம்

பெங்களூர் இன்றைக்கு இந்தியாவில் மட்டுமல்ல உலகளவில் பெயர் பெற்றுள்ள ஊர். உச்சரிப்பதற்கு கொஞ்சம் புதுமையான பெயரும் கூட. ஆனால் இதன் உண்மையான பெயர் என்ன?

இப்பொழுது அந்த உண்மையான பெயரைத் தேடி எடுத்துதான் பெங்களூருக்குச் சூட்டப் போகின்றார்களாம். ஆம். பெங்களூரு என்ற பெயரைச் சூட்டப் போகின்றார்களாம்.

சரி. அது அரசியல். நம்மூரிலும் வடக்கிலும் கேரளாவிலும் நடந்ததுதானே. கர்நாடகா மட்டும் விதிவிலக்கா என்ன! ஆகையால் அந்த விஷயங்களை விட்டு விட்டு இந்தப் பெயரின் மூலகாரணத்தைப் பார்ப்போமா!

பெங்களூரு என்பதை விட பெந்தகாளூரு என்பதே மிகச்சரியான பழைய பெயர். தமிழில் வகரம் வரும் இடங்களில் பகரம் (ba) போட்டு விட்டால் அது கன்னடமாகி விடும். பெரும்பாலான சமயங்களில் இது நடக்கும். வா என்றால் பா. வந்து என்றால் பந்து. வண்டி என்றால் பண்டி. அது போலத்தான் வெந்த என்றால் பெந்த.

பெந்த என்றால் வெந்ததைக் குறிக்கும். காளு என்றால் பயறு. பெந்த காளு என்றால் வெந்த பயறு.

கெம்ப்பே கௌடா என்பவர்தான் பெங்களூரின் தந்தை. அதாவது சிறுசிறு ஊர்களைச் சேர்த்துக் கொஞ்சம் பெரிய ஊராக்கி ஆண்டவர். பெரிய கோட்டை என்று எதுவும் கட்டி விடவில்லை.

எல்லையில் மண்சுவர்களை பெரிதாக எழுப்பிப் பாதுகாப்புத் தூண்களையும் நிறுவியிருக்கின்றார். அங்கு ஆட்கள் காவலுக்கு நிற்பார்களாம். இந்து நடந்தது 1537ல். அதற்குப் பிறகு நூற்றுச் சொச்ச வருடங்களுக்குப் பிறகு பெங்களூர் பிஜாப்பூர் சுல்தான்களின் கைகளுக்கு மாறியிருக்கின்றது.

ஆனால் பிஜாப்பூரில் உட்கார்ந்து கொண்டு பெங்களூரைச் சமாளிக்க முடியவில்லை. (இன்றைக்கு கர்நாடக அரசாங்கத்திற்கு பெங்களூரில் உட்கார்ந்து கொண்டு பிஜாப்பூரைச் சமாளிக்க முடியவில்லை. அவ்வளவு பிரச்சனைகள்.)
எதற்கு வம்பென்று பிஜாப்பூர் சுல்தான் பெங்களூரை மைசூர் மகாராஜாவிற்கு குத்தகைக்கு விட்டு விட்டார். பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு திப்பு சுல்தான், ஆங்கிலேயர் எனப் பல கைகள் மாறி இன்றைக்கு இந்த அளவிற்குப் புகழோடு இருக்கின்றது.

சரி. நாம் பெயர்க் காரணத்திற்கே வரவில்லை. தனக்கென்று ஒரு சிறிய நாட்டை உருவாக்கிக் கொண்டிருந்த கெம்ப்பே கௌடா இன்றைய பெங்களூரின் அன்றைய பகுதிக்கு வந்த பொழுது அங்கிருந்தவர்கள் அவருக்குச் சாப்பிட வேகவைத்த பயறுகளைக் கொடுத்திருக்கின்றார்கள்.

அதாவது மொச்சைப் பயறு. பெங்களூரில் மொச்சை என்றால் எல்லாருக்கும் இச்சை. அந்த அளவிற்கு விரும்பப் படுகிறது. உப்புமாவிலும், சோற்றிலும், அனைத்திலும் கலந்து உண்ண விரும்புவார்கள். கன்னடத்தில் அவரேக்காயி என்பார்கள். இதில் இன்னொரு விநோதப் பழக்கமும் இருக்கிறது. சமயங்களில் மொச்சையைப் பிதுக்கி எடுத்துச் சமைப்பார்கள். அப்படிப் பிதுக்கி எடுத்த தோலை வீட்டு வாசலில் போட்டு விடுவார்கள். அதை வருவோர் போவோர் மிதித்தால் அன்றைக்கான மொச்சைச் சமையல் சுவையாக இருக்குமாம்.

அப்படிச் சாப்பிட்ட மொச்சை நன்றாக வெந்திருந்ததால் அந்த இடத்திற்கு பெந்தகாளூரு என்று பெயரிட்டார் கெம்ப்பே கௌடா. பிறகு அங்கே இருப்பவர்களுக்குக் காவலாக இருந்து தனது ஆட்சியை நிலைநிறுத்தினார்.

அந்த பெந்தகாளூருதான் மருவி இன்று பெங்களூர் என்று வழங்கப்படுகின்றது. ஆங்கிலத்தில் பேங்களூர். ஒவ்வொரு மாநிலமாக பெயர்கள் மாறி வருகின்ற வேளையில் பெங்களூர் அரசியல்வாதிகள் மட்டும் சும்மாயிருக்கலாமா? மண்ணின் மணம் வீசும் பெயர் இருக்க வேண்டும் என்று பெங்களூரு என்று பெயரை மாற்றுகின்றார்கள்.

அதற்கு வழக்கம் போல பலர் எதிர்த்தும் பாராட்டியும் கருத்துகளை அள்ளி விட்டுக் கொண்டிருக்கின்றார்கள். நான் பேசிய வரையில் என்னுடைய கன்னட நண்பர்களுக்கு இந்தப் பெயர் மாற்றத்தில் வருத்தத்தை விட மகிழ்ச்சியே மேலோங்கியிருந்தது தெரிந்தது. எல்லாம் மொழி செய்யும் வேலைதானே.

வடக்கத்தி டைம்ஸ் ஆஃப் இண்டியா இந்தப் பெயர் மாற்றத்தை மறைமுகமாகக் கிண்டலடித்தாலும் மும்பை முகவரியில் பாம்பே என்று எழுதாமல் மும்பை என்றே குறிப்பிடுகிறது. நம்ம கதை நமக்கு நன்றாகத் தெரியும். ஆகையால் நமது கன்னட நண்பர்களோடு சேர்ந்து கொண்டு நாமும் பெங்களூரின் பெயர் மாற்றத்திற்கு வாழ்த்துவோம்.

அன்புடன்,
கோ.இராகவன்

Friday, December 09, 2005

பழம் தின்னு கொட்டை போட்டவன்

பழம் தின்னு கொட்டை போட்டவன்

கீழ்க்கண்ட பதிவில் தருமி ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார். பாண்டியனுக்கு மட்டுந்தான் ஐயம் வரவேண்டுமா? தருமிக்கு வரக்கூடாதா? வந்து விட்டதே!
தருமிக்கு வந்த சந்தேகம்

இந்தப் பழமொழி மிகவும் பிரபலம். யாரைக் கேட்டாலும் ஒரு முறையாவது சொல்லியிருப்பார்கள். அந்த அளவிற்குப் பிரபலம். ஆனால் அதற்கு உண்மையான பொருள் என்ன? யாரைக் கேட்டாலும் முழிப்பார்கள். ஆனால் பாருங்கள். நமது நண்பர் குமரன் அழகான ஒரு தமிழ்ப் பாடலைத் தேடி நமக்காகத் தந்து விளங்காததை விளங்க வைத்திருக்கின்றார். அந்தப் பாடல் கீழே இருக்கிறது.

மூத்தவரை முழுதும் அறிந்தவரை பக்தியுடன்
கூத்தவனைக் கொண்டாடி ஞானப் பழம் தின்றார்
உருத்திராக்கக் கொட்டை அணிந்தாரைக் கூறுவதே
பழம் தின்று கொட்டை போடுவார்

ஆதிநாதன் என்று யாரைச் சொல்வார்கள்? சிவபெருமானைத்தான். அனாதிநாதன் என்று யாரைச் சொல்வார்கள்? முருகப் பெருமானைத்தான்.

ஆதிநாதன் என்றால் அவனே அனைத்திற்கும் ஆதி. அதாவது தொடக்கம். அப்படி ஆதியாக நிற்பவன் என்கின்ற விரிசடைக்கடவுளே அனைவருக்கும் மூத்தவர் அல்லவா!

அனாதிநாதனுக்கு வருவோம். ஆதி என்றாலே ஒரு தொடக்கம் இருக்கிறது அல்லவா. ஆனால் இறைவன் அப்படியா? தொடக்கமும் முடிவும் உள்ளவனா இறைவன்? அனாதி என்றால் தொடக்கம் இல்லாதவன். தொடக்கம் என்று இருந்தால் முடிவு என்று ஒன்று இருக்க வேண்டுமே!

பிறப்பு என்றால் இறப்பும் உண்டு. ஆனால் முருகப் பெருமான் பிறக்கவில்லை. உதித்தார். "ஒரு திரு முருகன் உதித்தனன்." உதிப்பது என்பது ஏற்கனவே இருப்பது. காலையில் சூரியன் பிறப்பதில்லை. உதிக்கின்றது. அந்தச் சூரியன் நேற்றும் இருந்தது. அருணகிரியும் இதைத்தான் "செம்மான் முருகன் பிறவான் இறவான்" என்கிறார்.

அப்படியென்றால் முருகப்பெருமான் சிவனை விடப் பெரியவரா? அப்படியெல்லாம் நாம் முடிவு கட்ட முடியாது. ஏன் தெரியுமா? எல்லாம் ஒன்றுதான். தெய்வம் பலப்பலச் சொல்லிப் பகைத் தீயை வளர்ப்பவர் மூடர். இதற்கும் தமிழ் விளக்கம் சொல்லியிருக்கிறது.

சிவனைப் பார்வதியோடு சேர்த்துப் புகழ்வது எங்கும் நடக்கும். சிவன் பகல் என்றால் பார்வதி இரவு. அப்படியானால் முருகன்? பகலுக்கும் இரவுக்கும் இடைப்பட்ட இதமான மாலை நேரம் போலவாம்.

"ஞாலமேவுறும் பகலொடு இரவுக்கும் நடுவாய் மாலையாவதொன்று அழிவின்றி வைகுமாறு ஒக்கும்"

ஆக எல்லாம் ஒன்றுதான். இங்கே ஆதிதான் அனாதி. அனாதிதான் ஆதி. மொத்தத்தில் எல்லாம் ஒன்றுதான். இறைவன் ஆதியும் அனாதியுமாய் இருப்பவன் என்று இதனால்தான் சொல்கின்றோம்.

அப்படி மூத்தவனை (இறைவனை) முழுதும் அறிந்தவனை (மூத்தவன் என்றால் நடந்தது நடப்பது நடக்கப் போவது எல்லாம் அறிந்தவந்தானே) பக்தியுடன் கொண்டாட வேண்டும்.

அவன் கூத்தன். ஏன் தெரியுமா? உலகமே நாடகமேடை. அந்த நாடக மேடையில் நாளும் ஒரு நாடகம். பொழுதும் ஒரு காட்சி. அத்தனையையும் ஆட்டி வைக்கின்ற கழைக் கூத்தாடிதான் இறைவன்.

அவனைக் கொண்டாடி ஞானப் பழம் திங்க வேண்டுமாம். ஞானப்பழம் என்றால் முருகன். ஞானம் என்றால் அறிவு. எல்லா அறிவும் அறிவல்ல சான்றோர்க்கு மெய்யான அறிவே அறிவு. அதென்ன மெய்யறிவு? பொய்யான அறிவு என்றும் ஒன்று உண்டோ!

கண்டிப்பாக உண்டு. ஒரு சின்ன எடுத்துக்காட்டு. அணுவின் பகுப்பு வடிவம் என்று முதலில் வந்தது. நிரூபிக்கவும் பட்டது. அதை நம்பினோம். பின்னால் அதை விடச் சரியான இன்னொரு வடிவம் வந்து நிரூபிக்கப் பட்டது. அதையும் நம்பினோம். இப்பொழுது முதலில் நம்பியது பொய்யானது. ஆனால் முதலில் நாம் அதை நம்பும் பொழுது உண்மையாகத்தான் இருந்தது. ஆனால் அதுவே இப்பொழுது பொய்யானது. இந்த அறிவினைத்தான் மெய்யறிவு என்று சொல்ல முடியாது.

அப்படியென்றால் மெய்யறிவு என்றால் என்ன? அது எங்கே கிடைக்கும்? எந்தக் கடையில் கிடைக்கும்? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இடத்தில் கிடைத்திருக்கிறது. புத்தருக்கு மரத்தடியில். முகமது நபிக்கு இறையருளில். அருணகிரிக்கு திருவண்ணாமலையில். அப்பருக்கு வயிற்று வலியில். ஆகத் தெரிவதென்ன? இறையருள் இன்றி மெய்யறிவும் கிட்டாது.

அதைத் தேடிச் சென்றால் கண்டிப்பாகக் கிடைக்கும். தண்ணீருக்குள் தவிக்கின்றவன் மூச்சுக்கு எப்படித் தவிப்பானோ அப்படித் தவித்தால் மெய்யறிவு கிட்டும். அதுதான் ஞானப் பழம்.

பொதுவாக பொன்னகைகளையே மணிகளையே அணிவது வழக்கம். ஆனால் உருத்திராட்சம் அணிவது சிவனடியார் வழக்கம். வெறும் கொட்டையைக் கழுத்தில் கட்டினால் சரியா என்று கேட்கலாம். ஆனால் அதன் உட்பொருளைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு சிறிய கொட்டைக்குள்தான் பெரிய மரம் ஒளிந்திருக்கின்றது. அது போல இறைவன் அனைத்திலும் அடங்கியிருக்கின்றார். கண்ணுக்குத் தெரியாத காற்றை விசிறியைக் கொண்டு உணர்கின்றோம் அல்லவா. அதுபோல எங்கும் நிறைந்த இறைவனை உருத்திராட்சக் கொட்டையில் காண்பது. உண்மையிலே இறைவனை உணர்ந்தவருக்கு உருத்திராட்சமும் ஒன்றே. இலந்தைக் கொட்டையும் ஒன்றே.

இப்பொழுது புரிந்திருக்கும் பழம் தின்று கொட்டை போடுவது என்றால் என்னவென்று! இதற்கு மேலும் விளக்கம் வேண்டுமா?

அன்புடன்,
கோ.இராகவன்

Tuesday, December 06, 2005

பெங்களூரில் ஒரு பெர்ஷியா

பெர்ஷியா என்ற பெயரை எல்லாரும் பாடத்தில் படித்திருப்போம். நானும்தான். ஆனால் எப்பொழுது என் மனதில் அழுத்தமாக பதிந்தது தெரியுமா? நான் அஜந்தா-எல்லோரா சுற்றுலா சென்றிருந்த பொழுதுதான். 2003ல் அஜந்தாவிற்கும் எல்லோராவிற்கும் நண்பர்களுடன் சுற்றுலா சென்றிருந்தேன். அஜந்தாவின் குகை ஓவியங்களைப் பார்த்து மயங்கியிருந்த பொழுதுதான் பெர்ஷியா என்ற பெயர் அழுத்தமாக பதிந்தது.

எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட அந்த ஓவியங்கள், உலகின் இன்றைய வளமான பல பகுதிகளில் நாகரீகம் என்பது தொடங்கும் முன்பே வரையப்பட்ட அந்த ஓவியங்கள் பல நிறத்தில் இருந்தன. அதில் வண்ணமயமான அழகான பூக்குவியல் ஓவியமும் ஒன்று. கூரை மேல் வரையப்பட்டிருந்த அந்த ஓவியத்தில் பயன்படுத்தியிருந்த ஊதா நிறம் பெர்ஷியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட ஒருவித பொருளிலிருந்து தயாரிக்கப்பட்டதாம். அவ்வளவு தொலைவிலிருந்து வந்ததாலோ என்னவோ, அந்த ஊதா நிறம் குறைவாகவே பயன்படுத்தப்பட்டிருந்தது. ஆனாலும் சரியான இடத்தில் பூசப்பட்டு மற்ற நிறங்களை மங்கடிக்கச் செய்திருந்தது. அப்படிப் பயன்படுத்திய அந்த பழைய இந்தியத் துறவிகளின் அறிவை வியந்த பொழுதுதான் பெர்ஷியா என்ற பெயர் மனதில் பதிந்தது. பிற்பாடு அந்த ஊதா நிறத்தை பல பழைய தமிழக ஓவியங்களில் எக்கச்சக்கமாக பார்த்திருக்கிறேன் என்பதும் உண்மை. குறிப்பாக தஞ்சையில் பெரிய கோயில் நந்தியின் கூரையில் இருக்கும் ஓவியம்.

அதற்குப் பிறகு பெர்ஷியா மீண்டும் என் காதில் விழுந்தது அலெக்சாண்டர் படம் பார்க்கும் பொழுதுதான். கோலின் ·பேரல் நடித்த அந்தப் படத்தில் அலெக்சாண்டர் பெர்ஷியாவை வென்ற முறையைக் காட்டுவார்கள்.

அதற்குப் பிறகு கிட்டத்தட்ட ஓராண்டு கழித்துதான் மீண்டும் பெர்ஷியா என்னை அழைத்தது. அதுவும் பெங்களூரிலேயே. சு·பி தத்துவங்கள் என்று நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். அது குறித்து ஆழமாக எதுவும் தெரியாவிட்டாலும் பெயரளவில் கேட்டதுண்டு. ஆனால் பெங்களூரில் ஒரு சு·பி உண்டு. இது ஆன்மீக சு·பி அல்ல. சாப்பாட்டு சு·பி.

ஏர்போர்ட் ரோடிற்கு அருகில் உள்ள முருகேஷ் பாளையாவில் உள்ள விண்ட் டனல் ரோடில் (wind tunnel road) உள்ளது. சு·பி என்று பெரிய அளவில் வாயிலில் எழுதி வைத்திருப்பார்கள். உள்ளே போனால் பெர்ஷியாவை முடிந்த வரைக்கும் நமக்காக உருவாக்கியிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். கண்ணில் படும் இடங்களில் எல்லாம் பெர்ஷிய கலைப்பொருட்களையும் ஓவியங்களையும் வைத்துள்ளார்கள். உள்ளே நுழைந்ததுமே நான்கு பெரிய ஹ¥க்காக்கள் நம்மை வரவேற்கின்றன. அவற்றைப் பயன்படுத்த விரும்புகிறவர்கள் பயன்படுத்தலாம். அதற்கு அங்குள்ளவர்களின் அனுமதியைப் பெற வேண்டும். நானும் சரி. என்னுடைய நண்பனும் சரி. இருவருவே புகைப்பிடிப்பதில்லை. ஆகையால் வந்த வேலையைப் பார்க்கப் போனோம்.

சாப்பாட்டு மேசையும் நாற்காலிகளும் பெர்ஷியப் பாரம்பரியப்படியே இருந்தன. உட்காருவதற்கு உயரமான மெத்தென்ற திண்டுகள். சரியாக உட்காராவிட்டால் கீழே விழுந்து விடுவோம். அதாவது மூட்டை மேலே உட்காருவது போல இருக்கும். ஆனால் இது கலையலங்கார மூட்டை. அந்த உட்காரும் மூட்டையை அங்கு விற்கிறார்கள். ஏழாயிரம் ரூயாய்க்கு. மறுபேச்சு பேசாமல் சாப்பிட உட்கார்ந்தோம்.

கையில் குடுக்கப்பட்ட பட்டியலைப் பார்த்தால் முதலில் ஒன்றும் புரியவில்லை. நல்லவேளையாக பெயருக்குக் கீழே குறிப்பும் கொடுத்திருந்தார்கள். வசதியாகப் போனது. வழக்கமாக சூப்பில்தான் தொடங்குவோம். ஆனால் இந்த முறை சூப்பைத் தவிர்த்தோம். ஏனென்றால் சூப் பார்லியில் செய்யப்பட்டிருந்தது. பிறகு ஒழுங்காக சாப்பிட முடியாது என்பதால் அப்படி.

கபாப் என்பது பெர்ஷியர்கள் விரும்பி உண்ணும் பக்குவம் என்று நினைக்கிறேன். எந்தப் பெயரைப் பார்த்தாலும் கபாப் என்றே முடிந்தது. கபாப் என்றாலே நெருப்பில் வாட்டுவதுதானே. ஆனால் வட இந்திய கபாப்களுக்கும் பெர்ஷிய கபாபிற்கும் வேறுபாடு உண்டு. மசாலா மிகக்குறைவு. கபாப் மெத்தென்று இருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு முழம் நீளத்தில் இருக்கிறது கபாப்.

யோயே (Joojeh) கபாப் என்பது கோழியை வாட்டியது. யோயே என்பது ஒருவகையாக பிராய்லர் கோழி. இளங்கோழியின் கறித்துண்டுகளை நெருப்பிலேயே வாட்டி வேகவைத்துத் தருவார்கள். பொன்னிறமாக சுவையாக இருக்கும்.

அப்பொழுது பரிமாறுகிறவர் வந்து, "சார்! தூக் (doogh) என்ற பெர்ஷியன் பானம் இருக்கிறது. முயற்சி செய்கின்றீர்களா?" என்று கேட்டார். அது என்னவென்று கேட்டோம். கெட்டி மோரில் மிண்ட்டும் (புதினா பொடி) உப்பும் கலந்ததுதான் தூக். "அட! கடஞ்ச மோரு" என்று நாங்கள் கொண்டு வரச் சொன்னோம்.

அதோடு சொன்ன இன்னொரு கபாப் kabab-e-chenjeh. தமிழில் சொன்னால் சென்யே கபாப். சென்யே என்றால் எலும்பில்லாத கறி. அதாவது தனிக்கறி. தனிக்கறியை நெருப்பில் வாட்டி காய்கறிகளோடு தருவார்கள். இதுவும் முழ நீளம்தான். ஆட்டிறைச்சியை நெருப்பில் வாட்டும் பொழுது பெரிய தக்காளி ஒன்றையும் வாட்டுகிறார்கள். அந்த வாட்டப்பட்ட தக்காளியோடும் கொஞ்சம் காரட்டோடும் சென்யே கபாப் பரிமாறப்பட்டது. மிகவும் சுவையாக இருந்தது. சில சமயங்களில் அரக்க பறக்க அள்ளிப் போட்டுக் கொள்வோம். அப்படி இல்லாமல் ஆற அமர சாப்பிட வேண்டியது இந்தக் கபாப்.

அதே நேரத்தில் தூக் வந்தது. குடித்தால் ஒரே உப்பு. புதினாத்தூள் வேறு போடப்பட்டிருந்தது. கடைஞ்ச மோரு என்று எண்ணிய மனம் உடைஞ்சு போனது. அப்படி இப்படி பாதி குடித்தோம். ஆனால் முடியவில்லை. தூகை தூக்கி ஒரு ஓரமாக வைத்து விட்டுச் சுவையான சென்யே கபாபை இரண்டு கைகள் பார்த்தோம்.

மெயின் கோர்ஸ் என்று செலோ (chelo) கபாபைக் கேட்டோம். என்னடா மீண்டும் கபாபா என்று ஆச்சரியப்படாதீர்கள். அந்தப் பெயரின் விளக்கம் சொல்கிறேன் முதலில். செலோ என்றால் வேகவைக்கப்பட்ட அரிசியும் இறைச்சியும். பாசுமதி அரிசியை குங்குமப் பூவோடு சேர்த்து மெத்தென்று வேகைவைத்து அதை ஒரு சட்டியில் போட்டு கொண்டு வந்தார்கள். சிறிய எலுமிச்சை அளவு வெண்ணெய் அந்தச் சூடான சோற்றில் லேசாக இளகிக் கொண்டிருந்தது. சோறு சரி. கறி? இன்னொரு முழ நீள கபாப். ஆட்டிறைச்சிதான். ஆனால் மெத்தென்று. மெத்துமெத்தென்று. வெளியே சாப்பிட்டதால் ஸ்பூனும் ·போர்க்கும் வைத்துச் சாப்பிட்டோம். அந்தக் கபாபைச் சோற்றோடு பிசைந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். ஒரு கரண்டி கறியும் ஒரு கரண்டி சோறுமாக மெதுவாக சாப்பிட்டோம். குங்குமப்பூவும் உருகிய வெண்ணெய்யும் கலந்த நெய்ச்சோற்றைக் கறியோடு சாப்பிட கசக்குமா என்ன!

இந்த செலோ கபாப் என்பது பெர்ஷியாவின் தேசிய உணவு என்ற அளவிற்கு பிரபலம். தமிழர்களுக்கு சாம்பாரைப் போல. மலையாளிகளுக்கு புட்டைப் போல. ஆந்திரர்களுக்கு ஆவக்காயைப் போல. பஞ்சாபிகளுக்கு சர்சோங்கி சாக் போல. பெர்ஷியர்களுக்கு செலோ கபாப். பெர்ஷிய அடுக்களையில் கபாப்களின் அரசி என்று செலோ கபாப் அழைக்கப்படுகிறது.

பெர்ஷிய உணவுகள் பெரும்பாலும் வாட்டப்பட்ட இறைச்சியாக இருக்கின்றன. அத்தோடு அரிசி அல்லது கோதுமையைச் சாப்பிடுகிறார்கள். நாம் வைப்பது போல அவர்களும் ஒருவகையான கறிக்குழம்பு செய்கின்றார்கள். கொஞ்சம் புளிப்புச் சுவையோடு இருக்கிறது. அதற்கு அவர்கள் புளி பயன்படுத்துவதில்லை. வேறொரு காயைப் பொடி செய்து பயன்படுத்துகின்றார்கள். இன்னொரு புளிப்பூட்டி என்ன தெரியுமா? காய்ந்த முழு எலுமிச்சம்பழம். குழம்பில் முழு எலுமிச்சம்பழம் உருண்டையாக இருக்கும். அதை ஒதுக்கி வைத்து விட்டு சாப்பிடுவார்கள். இந்தியர்கள் கறிக்குழம்புகளில் பருப்பு பயன்படுத்துவதில்லை. ஆனால் பெர்ஷியர்கள் பயன்படுத்துகிறார்கள். கடலைப்பருப்பைப் போட்டு கறிக்குழம்பு வைக்கின்றார்கள்.

சு·பி அங்காடியில் பெர்ஷிய நாட்டு பொருட்களையும் விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள். என்னதான் இருக்கிறது என்று எட்டிப்பார்த்தோம். உட்காரும் மூட்டையின் விலை ஏழாயிரம் ரூபாய் என்று பார்த்ததும் இங்குதான். அங்கு அழகான தரை விரிப்புகள் நிறைய இருந்தன. கிட்டத்தட்ட ஐயாயிரம் ரூபாயிலிருந்து இருக்கிறது. ஐம்பத்தைந்தாயிரத்திற்கும் ஒரு விரிப்பு. அப்படியென்ன அதிலென்று வாய்விட்டே கேட்டு விட்டேன். முழுக்க முழுக்க கையாலேயே நெய்யப்பட்ட அந்த விரிப்பின் வயது ஐம்பதாம். அட!

நிறைய பீங்கான் சாடிகள். பல நிறங்களில். பல சித்திரங்களுடன். பளபளப்புடன். மிகுந்த அழகுடன். விலையும் கொள்ளை அழகு. மது அருந்துகின்றவர்களுக்காகவே ஒரு கண்ணாடி சீசா. செக்கச் செவேலென்று. அழுத்தி மூடும் மூடியுடன். அதே சிவந்த நிறத்தில் சின்னச் சின்னதாய்க் கோப்பைகள். பார்களில் Irish Cream பரிமாறுவார்களே, அந்த அளவு சிறிய கோப்பைகள். பயன்படுத்தாவிட்டாலும் வீட்டில் அழகிற்கு வைக்கலாம். நமக்கெதுக்கு என்று வந்து விட்டேன்.

அதே போல கடிகாரங்களிலும் பலவிதங்கள். சுவர்கடிகாரத்தின் ஒரு இணுக்கு இடத்தைக் கூட சும்மா விடாமல் ஓவிய வேலைப்பாடு செய்திருந்தார்கள். அதனுடைய விளைவு விலையில் தெரிந்தது. இன்னும் நிறைய கலைப்பொருட்கள் விற்பனைக்கு இருந்தன. வெறும் கலைப் பொருட்களாக மட்டும் இல்லாமல் மிகுந்த விலைப் பொருட்களாகவும் இருந்ததால் கண்களுக்கு மட்டுமே அன்றைக்கு விருந்து.

மொத்தத்தில் வெளியே வருகையில் பெர்ஷியாவிற்குச் சுற்றுலா போய் வந்த உணர்வு. பாஸ்போர்ட் இல்லை. விசா இல்லை. ஆனாலும் பெர்ஷியா போய் வந்தோம். சுவையான விருந்துண்டு வந்தோம்.

அன்புடன்,
கோ.இராகவன்