Friday, September 02, 2005

பெண்ணைப் பெற்றவன்

பெண்ணைப் பெற்றவன்

பெண்கள் வீட்டின் கண்கள். ஏன் தெரியுமா? கண்ணீருக்குக் காரணம் இந்த இரண்டும்தான். ஆனந்தக் கண்ணீரோ! அழுகைக் கண்ணீரோ! பெண்களைப் பெற்றாலே கொஞ்சமாவது கண்களைக் கசக்க வேண்டும் என்பது உண்மை போல. நானும் பெண்ணைப் பெற்றவன்தான். ஆகையால்தான் அடித்துச் சொல்கிறேன்.

இல்லையென்று சாதிக்க வராதீர்கள். விளக்கமாகச் சொல்கிறேன். உங்களுக்கும் பெண் குழந்தை பிறந்தால், அந்தக் குழந்தையைப் பேணி வளர்ப்பதும், கல்வி கற்பிப்பதும், ஆடலும் பாடலும் சொல்லிக் கொடுப்பதும், சீராட்டிக் கொண்டாடுவதும் எத்தனை சந்தோஷங்கள். மறுக்கவில்லை. ஆனால் அத்தனை சந்தோஷங்களையும் நீங்கிக் கொண்டு, நம்முடைய அன்பையெல்லாம் வாங்கிக் கொண்டு, மற்றொருவன் தோளைத் தாங்கிக் கொண்டு போகிறாளே! அப்பப்பா! எப்பேற்பட்ட கல்மனங் கொண்ட ஆண்பிள்ளைகளையும் அழுக வைத்துவிடும்.

சரி. ஒருவன் கையில் பிடித்துக் குடுத்து விட்டோமென்று நிம்மதியாக இருக்க முடிகிறதா? நம்மை விட்டுப் போனதுதான் போனாள்! இன்னொருத்தனுக்கு மனைவி ஆனதுதான் ஆனாள்! புக்ககத்தில் எல்லோருக்கும் மனம் கோணவும் கோணாள்! இருந்தாலும் நம்மை மட்டும் அடிக்கடி காணவும் காணாள்! சரி! அவள்தான் புக்காத்துப் பெண்ணாகி விட்டாள். நம்மையும் மறந்து விட்டாள். நம்முடைய உள்ளமாவது சும்மா உட்கார்ந்திருக்கிறதா? எப்பொழுதும் அவள் நினைவு. எப்படி இருக்கிறாளோ! எப்படிச் சாப்பிடுகிறாளோ! வேலைகளெல்லாம் செய்ய முடிகிறதோ! ஒழுங்காக பார்த்துக் கொள்கிறார்களோ! கவலைகள் எல்லாம் நமக்குத்தான்.

என் கதைக்கு வருவோம். அவள் கைக்குழந்தையாக இருக்கையில் எத்தனை இன்பங்கள் தெரியுமா! அதெல்லாம் சொன்னால்தான் புரியுமா! என் மகள்! செல்ல மகள்! ஆனால் பாருங்கள், எனக்குப் பிறக்கவில்லை. கீழே கிடந்தாள். புழுதியில் பூப்பந்தாகப் புரண்டிருந்தாள். நான் எடுத்து வளர்த்தேன். பாசத்தையெல்லாம் கொடுத்து வளர்த்தேன். அன்பிலும் ஆசையிலும் என் மகளென்றே அவளை வளர்த்தேன். யாரும் அதை மறுக்க முடியாது.

அவளுக்கு நீளக் கண்கள். தொட்டிலில் கிடக்கையில் கைகளில் எடுத்தால் மினுக்கென்று கண்களைச் சிமிட்டுவாள். கொள்ளை அழகு. அப்படியே பொக்கை வாயைக் காட்டி லேசாக குமிழ்ச் சிரிப்பு சிரிப்பாள்! அடடா! எனக்கு எல்லாம் மறந்து போகும். கையில் அப்படியே வைத்துக் கொண்டிருப்பேன். திருமகள் கையில் பூக்களை வைத்துக் கொண்டிருப்பது போல. எனக்கும் கைவலி தெரியாது. அந்தப் பஞ்சு உடலும் நோகாது. மெத்தை போலிருக்கும் பிஞ்சுக் கால்களை நீட்டி மிதிக்கையில் ஒருவிதமான மகிழ்ச்சியும் பெருமிதமும் முதுகுத் தண்டிலிருந்து புறப்படுமே! இதெல்லாம் ஒரு தகப்பனுக்கு மட்டுமே அகப்பட்டு சுகப்படும் ரகசியம்.

சிறப்பாக வளர்ந்தாள். எல்லாரின் கண்களையும் கவர்ந்தாள். விதவிதமாக உடுப்புகளில் வண்ண வண்ணப் பூக்களாக மலர்ந்தாள். எந்த உடுப்பும் அவளுக்கு எடுப்புதான். பச்சைப் பட்டுப் பாவாடை கேட்டாள். அதில் அலைமகளைப் போல ஜொலித்தாள். செக்கச் செவேலென்று சிற்றாடை. அலர்மேல் மங்கையே அவள்தானோ! என் கண்ணே பட்டுவிடும் போலிருந்தது.

பாவி நான். நான் பெறவில்லையே. கொட்டடியில் இருந்தாலும் பசுவிற்கு கொட்டடி உறவாகுமா? ஆனாலும் அந்த அழகு தெய்வம் என்னை அப்பா என்று அன்போடு அழைக்க நான் என்ன புண்ணியம் செய்திருக்க வேண்டும்! நான் பெற்ற பேறு அந்தப் பிள்ளைக் கனியமுதைப் பெற்றவர்களுக்குக் கிடைக்காமல் போனதே! எல்லாம் ஆண்டவன் செயல். தாயிடத்தில் கருவாக்கி, ஓரிடத்தில் உருவாக்கி, வேறிடத்தில் மெருவாக்க விட்டானே! அவன் செயலை யார் அறிவார்? உலகளந்தவன் எண்ணத்தை யார் அளப்பார்?

பக்தி அதிகம் அவளுக்கு. தெய்வப் பாசுரங்களைக் கோகிலங்கள் கூவுவது போலப் பாடுவாள். யாரையும் மயக்கும் அவள் கானம். விடியலிலேயே குளித்துவிட்டு பாடுவாள். மத்யமாவதியில் "சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்து உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்" என்று அவள் பாடினால்...............பரந்தாமனே பறந்து வந்து கேட்க வேண்டும். இல்லமெங்கும் அருள் துலங்கும். பாடலோடு ஆடலும் கற்றாள். "ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்" பாடி ஆடி அவளது பிஞ்சுப் பாதங்களால் மூன்று உலகங்களும் அளக்கும் பொழுது மூன்றாவது அடிக்கு என் தலை தகுமோ என்று வியப்பேன்.

"அம்மா! அன்று பரந்தாமன் அளந்த போது மூன்றாவது அடிக்குச் சிரசைக் காட்டினான் மாவலி. இன்றைக்கு மாவலி இல்லை. ஆனால் நான் இருக்கிறேன். உனது மலர்ப்பாதங்களை எனது தலையில் வையம்மா! இந்தத் தந்தையின் உச்சி கொஞ்சம் குளிரட்டும். எப்பொழுதும் உன் பெருமயை நினைத்து நினைத்தே தலை சூடேறியிருக்கிறதம்மா!"

பெண்களுக்குப் பருவம் வந்தால் பெற்றவனுக்கு பயம் வரும். காக்கவும் ஒருவன் கையில் சேர்க்கவும் எண்ணம் வரும். நான் அவளிடமே கேட்டேன்.

"அம்மா குழந்தை, அப்பா உனக்கு கலியாணம் செய்து வைக்கலாம் என்று நினைக்கிறேன். உன் கருத்து என்னம்மா? உனக்கு எந்த மாதிரி மாப்பிள்ளை பார்க்கட்டும்! சொன்னால் அப்பா சொன்னபடி செய்கிறேனம்மா!"

இப்படித்தான் கேட்டேன். அதற்கு அவள் என்ன சொன்னாள் தெரியுமா? காதல் வந்ததாம். கனவு வந்ததாம். வந்தவன் கையையும் பிடித்தானாம். அதுவும் மாட்டுக்கார மன்னாருடன். எனக்கு தலையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை.

அவனுடன் சிறுவயதுப் பழக்கம் அவளுக்கு. வயது வந்தால் எல்லாம் சரியாகப் போகுமென்று விட்டுவிட்டது தப்பாயிற்று. எடுத்துச் சொன்னேன்.

"குழந்தை, நாம் யார்? உன் தந்தை யார்? அவனொரு தமிழ்ப் பண்டிதன். கோயிலில் பாரளந்த பரந்தாமனுக்குக் பணிவிடை புரியும் தொண்டன். என் மகள், உனக்கு இப்படி ஒரு ஆசை வரலாமா? நீ யார்? உனது வளர்ப்பு என்ன? நீ கற்ற கலைகள் என்ன? ஆடலும் பாடலும் கூடும் நீ மாட்டிடையனை நாடல் எங்ஙனம்?"

கேட்டால் பதிலுக்குப் பதில் பேச்சு. நான் கற்றுத் தந்த தமிழை எனக்கு எதிராகத் திருப்புகிறாள்.

"பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ குற்று ஏவல் எங்களைக் கொள்ளாமல் போகாது" என்று பாடுகிறாள்.

"அம்மா! தமிழும் பாட்டால் அதற்கு இனிமை சேர்க்கும் கலையும் நான் தந்தது. பல்லாண்டுகளாக நான் பல்லாண்டு பாடியதைக் கேட்டுதான் நீ இப்பொழுது சொல்லாண்டு வருகிறாய். அப்படியிருக்க எனக்கே பாட்டுப் பாடிக் காட்டுகிறாயா! சைவத்தில் தந்தைக்கு மைந்தன் பாடம் சொன்ன கதையுண்டு. வைணவத்தில் தந்தைக்கு மகள் பாடம் சொல்லும் கதை உன்னால் வரப் போகிறதே!"

அவளுடைய காதலை நான் ஊரில் சொன்னால் என்ன ஆகும்? உற்றோர் சிரிப்பர். ஊரோர் சுழிப்பர். உலகோர் வெறுப்பர். ஒரே தடுமாற்றம். திரும்பத் திரும்ப எடுத்துச் சொன்னேன். ஆகாத அது. நடவாது அது. புலம்பினேன். மறந்து விடம்மா என்று கெஞ்சினேன். கையெடுத்துக் கும்பிட்டேன்.

கைகளால் கும்பிட்ட என்னிடம் வார்த்தைகளால் வம்பிட்டாள். எனக்கு விருப்பமில்லையென்றால் அந்த மாட்டுக்காரனை மணக்க மாட்டாளாம். ஆனால் வேறு யாரையும் மணக்கச் சொல்வதும் இந்த மண்ணை மறக்கச் சொல்வதும் ஒன்றாம். எனக்கு நெஞ்சே வெடித்து விட்டது.

வெங்கலப் பானை கீழே விழுந்தால் ஓசை வரும். மண்பானை விழுந்தால்? நொறுங்கிப் போனேன். இதற்குத்தானா பிள்ளையை வளர்ப்பது? முதலடியில் சுதாரிப்பதற்குள் அடுத்த அடி இடியாக நெஞ்சில் இறங்கியது. காலம் முழுதும் கன்னியாகவே வாழ்ந்து எனது கடைசி காலம் வரை என்னைப் பார்த்துக் கொண்டு இருந்து விடுவாளாம்.

ஒரு தகப்பன் மகளிடம் கேட்க வேண்டிய பேச்சா இது? என்ன பாடு பட்டிருப்பேன் அப்பொழுது! ஒரு முடிவுக்கு வந்தேன். "சரி. ஊரும் பழிக்கட்டும் உலகமும் ஒழிக்கட்டும், மகளும் விரும்பியவனை மணக்கட்டும்."

உள்ளூர் மன்னாரை திருவரங்கம் அழைத்துச் சென்று ரங்கமன்னாராக்கினேன். வேறென்ன செய்வது? வெளியூரில் போய் மாட்டுக்காரனைக் கூட்டுக்காரன் என்றால் தெரியவா போகிறது? பொய்தான். மகளுக்காக! பெண்ணைப் பெற்றவனய்யா நான்!

அங்கேயே திருமணமும் செய்து வைத்தேன். ஒரு நல்ல வேலையும் அவனுக்குச் செய்து வைத்தேன். ஆனாலும் பாருங்கள் பெரும் பொழுது அவனுக்குத் தூக்கம் தான். அவள் செய்து வைக்கும் புளியோதரையிலும் அக்காரவடிசலிலும் மேனி பளபளத்தான்.

ஊர் திரும்பவும் விருப்பமில்லை. பின்னே? மகளும் அரங்கத்திலேயே கணவனோடு ஒன்றி விட்டாள். எப்பொழுதும் தூங்கினாலும் தாங்குற வேளையில் தாங்குகிறானாம். இவளென்ன பூபாரமா? அவனுடைய நேரம் அவனிடத்தில் காரணமில்லாமல் செல்வமும் சேர்ந்தது. நான் மட்டும் திரும்பினால் நன்றாக இருக்குமா? அங்கே நாங்கள் மூவரும் காணமல் போனதுதான் எல்லாருக்கும் தெரிந்திருக்குமே! தனியாகச் சென்றால் தாளித்து விடுவார்களே!

என்ன செய்வது என்று யோசித்தேன். எனது அறிவை நல்ல வழிக்காக யாசித்தேன். ஆண்பிள்ளை பெறாதவனுக்குத் தனித்தட்டு. இல்லாவிட்டால் மகள் வீட்டுக் கதவைத் தட்டு.

"மாப்பிள்ளை வீட்டோடு சேர்ந்து இருப்பதா? அது சரியா?" எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை. வயது ஆகிவிட்டதல்லவா! முடிவெடுக்க முடியாமல் மூளை தடுமாறியது.

சரி. மானத்தை விட்டு விட்டு, எல்லா உணர்ச்சிகளையும் தொலைத்து விட்டு அவனுடைய பெரிய வீட்டிற்குப் போவதென்றே முடிவெடுத்தேன். வெறும் கை. அப்படியே போக முடியுமா? கையில் ஒன்றுமில்லை என்பதைச் சொல்லாமல் சொல்லும் விதமாக இரண்டு கைகளையும் கூப்பினேன். உள்ளே அவன் இருக்கவில்லை. எங்கு சுற்றினும் ரங்கனைத்தானே சேர வேண்டும். சுற்றினேன். காவிரிக்கரையில் காலை நீட்டிப் படுத்திருந்தான். அவனது நீட்டிய காலைப் பிடித்தேன். எனது தலையை அதில் இடித்தேன்.

"பரந்தாமா! மாதவா! கேசவா! எனது மகள் சொன்னதென்ன?
........ பட்டர் பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப்பரிகரைப்பார் ஈரிரண்டு மால்வரைத் தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்

அவளுக்கு, அந்த அழகிய கோதைக்கு இறங்கிய ந,£ இந்தப் பழகிய பட்டனுக்கு இறங்க மாட்டாயா?

எனது மகள் சூடிக் கொடுத்த மாலைகளை உனக்கு ஒவ்வொரு நாளும் அணிவித்தேனே! மாலையைக் கொடுத்த அவளை ஏற்றுக் கொண்ட நீ, அதற்கு மலர்களைக் கொய்த என்னை விட்டு விடலாமா? பரமபதம் காட்ட மாட்டாயா? முகுந்தா! வேங்கடவா! மாடு மேய்க்கும் சிந்தனை இன்னுமிருந்தால் இந்த விஷ்ணு சித்தனை நீ மறக்கலாமா? எனக்கு நல்ல வழியை மறுக்கலாமா?

உனக்கு நான் தமிழால் செய்த தொண்டுகளால்தானே என்னைப் பெரிய ஆழ்வார் என்று பொருள் கொள்ளும் படி பெரியாழ்வார் என்று எல்லோரும் அழைக்கிறார்கள். அந்த வாக்கு பொய்யாகும் படியான காடியத்தை நீ செய்யலாமா? அது உனக்குத்தானே குறையாகும்!"

கதறினேன். கண்களின் வழியாகக் கண்ணீரை அவன் காலடியில் உதறினேன். தூக்கம் கலைந்தது அவனுக்கு. மகளை ஆண்டவன் என்னையும் ஆட்கொண்டான்.

பிறகு நாளும் எனது பாக்களைக் கேட்டு மகிழ்ந்தான். அதுவும் என் செல்ல மகளோடு! சூடிக் கொடுத்த சுடர்கொடியோடு! தமிழோடு திருமாலையும் மணமாலை போட்டுக் கொண்ட ஆண்டாளோடு! கோதை நாச்சியாரோடு! மாப்பிள்ளை வீடு, பெண்ணைக் கொடுத்தது, கண்ணீர் விட்டு அழுதது எல்லாம் மறந்து போனது. எங்கும் பேரின்பம். அனைத்தும் சரணாகதி. எல்லாம் கண்ணன் செயல். பெண்ணைப் பெற்றவனுக்குப் பொன்னைப் பெற்றவனை விடவும் பெரிய இன்பம்.

அன்புடன்,
கோ.இராகவன்

20 comments:

said...

உங்கள் நடை மிகவும் நன்றாக இருக்கிறது.
எல்லாப் பெண்களுமே சூடிக் கொடுக்கும் சுடர்க் கொடிகள்தான். ஆனாலும் ,எல்லா கால கட்டத்திலும் பெண்ணைப் பெற்று பரிதவிப்பது தந்தைக்குலம்தான் போலும்! எங்கள் வீட்டில் கூட என் பெண்னைப் பற்றி மிகவும் சிரமப்படுவது என் கணவரே! பெண் வலம் போவாளா இடம் போவாளா என்பது அன்னைக்கு அடிப்படையிலேயே தெரிந்துவிடுகிறது.

said...

அதென்னவோ போங்க அப்பாக்களுக்குத்தான் மகள்கள் மீது அதிக பாசம். இந்த ரசாயன உணர்ச்சி எனக்கு புரிவதேயில்லை. அதே போல அம்மாக்களுக்குத்தான் மகன் மீது பாசம் அதிகம். ஒரு வீட்டில் மகனுக்கு மகளுக்கு சண்டை வந்துவிட்டால் அம்மா மகளையும் அப்பா மகனையும் அதட்டுவது இயற்கையாகிப்போகிறது.

அதனால் தானோ என்னவோ கல்லான மனுஷன் கூட மகள் திருமணமாகிப் போகிற பொழுது கறைந்து விடுகிறான்.....

said...

நன்றி தாணு, கணேஷ்.

இந்த வேதியல் அன்பை நானும் உணர்ந்திருக்கிறேன். அம்மாவின் அன்பு பெரும்பாலும் மகனுக்கும் அப்பாவின் அன்பு பெரும்பாலும் மகளுக்கும் செல்வது.

இதே போலத்தான் அக்காள்-தம்பி பாசமும் அண்ணன் - தங்கைப் பாசமும்.

இந்த உணர்ச்சி எல்லாத் தந்தைக்கும் இருக்குமா என்பதை நினைத்து எழுதியதுதான் இந்தக் கதை.

கடவுளுக்கு பெண் கொடுத்தாலும் தந்தையாருக்குத் திருப்தி இருக்காது என்பதற்கு பெரியாழ்வாரும் நம்பிராஜனுமே சாட்சி. நம்பியை வைத்து எழுதலாமென்றால் வேட்டுவன் என்ற சொல்லை வைத்தே முதலிலேயே அவர் யாரென்று கண்டு பிடித்து விடலாம். ஆகையால் பெரியாழ்வாரை வைத்து எழுதினேன்.

said...

திருவிண்ணகர ஒப்பில்லா அப்பன் பற்றிய என் பதிவில் காஞ்சி பிலிம்ஸின் பின்னூட்டம் ஒன்றுக்கு நான் இட்டப் பதில் பின்னூட்டத்தின் ஒரு பகுதி இதோ. பார்க்க: http://dondu.blogspot.com/2005/06/blog-post_112014704092368631.html

மிருகண்டு மகரிஷியின் மகன் மார்க்கண்டேயர் திருமகள் தனக்கு மகளாய் வர வேண்டும் எனத் தவம் செய்து அவரை மகளாய் பெற்றார். சீதையைப் போல அவரும் பூமியிலிருந்து மார்க்கண்டேயருக்கு கிடைத்ததால் அவருக்கு பூமிதேவி என்று பெயர். அவள் திருமணப் பருவத்துக்கு வரும்போது கிழ வேடத்தில் திருமால் மார்க்கண்டேயரிடம் சென்று பெண் கேட்டார். வந்தவர் யார் என்று தன் ஞான திருஷ்டியால் புரிந்து கொண்டார் மார்க்கண்டேயர். அவரிடம் பவ்வியமாக நீரோ முதியவர் என் மகளோ மிகச் சிறியவள், உப்பு போட்டு கூட சமைக்கத் தெரியாதவள் என்று கூற எம்பெருமானும் உப்பில்லாத பண்டமே எமக்கு சிறப்பு என்று கூறி திருமகளை மணந்தார்.

ஆகவே இக்கோவிலில் பிரசாதங்களில் உப்பு இருக்காது. ஆனால் என்ன ஆச்சரியம்! அவை மிக ருசியாகவே உள்ளன. அதுவும் புளிய்போதரையின் சுவையே சுவை.

தன் மனைவியால் முடியாது என நினைத்த காரியத்தையே தனக்கு தேவையில்லை என்று கூறிய திருமாலின் அருள் அளவற்றது. மார்க்கண்டேயருக்கு இல்லாத ஞானமா? ஆனால் பாருங்கள் அவரும் தன் பெண் எப்போதும் குழந்தை என்ற அஞ்ஞானத்தில் இருந்திருக்கிறார். அதுவும் எப்படிபட்டப் பெண்? உலகத்துக்கே உணவு அளிக்கும் அன்னபூரணி அல்லவா அவள்! ஒரு பெண்ணின் தகப்பனின் மன நிலையை என்னைப் போன்ற பெண்ணின் தகப்பன் புரிந்து கொள்ளவில்லையென்றால் எப்படி?

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

உண்மைதான் டோண்டு. மகள் என்று வந்தாலே எந்தத் தகப்பனும் இளகித்தான் போய் விடுகிறான். என்ன செய்வது? அதைத்தான் பாசம் என்கிறார்கள்.

said...

Ippathaan parthaen. Really good.

I wish I could get that much unwavering confidence and faith in god like the greats. May be thats why they are greats.

said...

நன்றி ரமேஷ்.

உண்மைதான். செயற்கரிய செய்வர் பெரியார். வள்ளுவரின் சத்திய வாக்கு இது.

said...

என் பொண்ணுக்கு இப்பத்தான் ஒரு வயசு ஆகுது! இன்னும் நான் போகவேண்டிய தூரம் ரொம்ப அதிகமோ! கொஞ்சம் பயமாத்தான் இருக்கு! :)

ஆனா குழந்தைகளிடம் இருக்கும் ஒவ்வொரு கணமும் அற்புதமானவை! இப்போதைக்கு அதனை முழுசா அனுபவிக்கறேன்! :)

நல்ல எழுத்து ராகவன்!

said...

அருமையான பதிவு ராகவன் சார்,

அந்த திருவரங்கப்பெருமானை மாப்பிள்ளையாகப் பெற்றவருக்கே தன்னுடைய பெண் பற்றி இத்தனை கவலை என்றால், நம் காலத்தில் பெண்பெற்ற தகப்பனார்களுக்கு இருக்கும் கவலைகள் தான் எத்தனையோ?

said...

படித்துக் கருத்துக் கூறிய இளவஞ்சிக்கும் ராமநாதனுக்கும் நன்றி.

ஒய்யாரே. என்னுடைய எழுத்துகளில் என்னுடைய கருத்துகளைத் திணிப்பதில்லை. இது ஏற்கனவே நடந்த நிகழ்ச்சி. அது எப்படி நடந்திருக்கும் என்பதை கற்பனை செய்து எழுதியிருக்கிறேன்.

அதே போல சானியா மிர்சா தொடையைக் காட்ட வேண்டும் என்று எழுதவில்லை. அவருடைய உடையைத் தேர்வு செய்வது அவரது உரிமை. அதுவும் அவருடைய விளையாட்டிற்குப் பொருத்தமாக இருக்கும் உடையை அணிவது அவர் விருப்பம். இதுதான் என் கருத்து.

பாரதி் கற்பை மட்டுமே ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வைப்போம் என்றான். எதையுமே பொதுவில் வைக்க வேண்டும் என்பது என் கருத்து. அவ்வளவே. அதை அசிங்கமான கோணத்திலேயே பார்க்க வேண்டும் என்று நீங்கள் கருதினால் மேற்கொண்டு விவாதிக்க நான் தயாராக இல்லை.

said...

// ஒசாமா பின்லாடனை ஏன் கண்டிக்கவில்லை என மட்டும் கேட்கும் இந்தக் கூட்டம். சானியா மிர்சாவைக் கண்டித்தால் கோபம் வருவது ஏன்? அது வலிக்குது இது இனிக்குதோ? //

அடியாத்தி, நீங்கள் நேரடியாகவே என்னிடம் கேள்விகள் கேட்கலாம். யாரிடமோ பேசுவது போலப் பேச வேண்டாம்.

ஒசாமா பின் லேடன் பற்றி எனக்கு அக்கறையில்லை. ஆனால் சானியா மிர்சாவின் மேல் எனக்கு அக்கறை உண்டு. சானியா இந்தியர். இந்தியத் திருநாட்டிற்காக விளையாடுகின்றவர். அவருடைய வெற்றியின் மீதும் முன்னேற்றத்தின் மீதும் எனக்கு அக்கறையுண்டு. புரிகிறதா. ஏன் இனிக்கிறது என்று. முஸ்லீம், இந்து, கிருத்துவன் என்று பார்ப்பதில்லை நான். அவர் ஒரு இந்தியர். அவ்வளவுதான். இந்துப் பெண் விளையாண்டு பெருமை சேர்த்தால்தான் மகிழ்ச்சி என்று இல்லை. புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

said...

// ஒரு இஸ்லாமிய பெண் எப்படி இருக்க வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் சானியா சார்ந்த மதத்தலைவர் சமூகப் பொறுப்பில் கருத்துச் சொல்வதை எதிர்ப்பவர்களுக்கு மட்டும் சானியா எப்படியும் உடை அணியலாம் என்று கருத்து சொல்ல யார் சார் உரிமை கொடுத்தார்கள்? //

ஒய்யாரே, நான் சானியா எதையும் அணியலாம் என்று சொல்லவில்லை. தனக்குப் பொருத்தமான உடையைத் தேர்ந்தெடுக்க சானியாவிற்கு உரிமை உண்டு என்றுதான் சொன்னேன். நான் எழுதியதை கீழே இடுகிறேன் படித்துப் பாருங்கள்.
//அதே போல சானியா மிர்சா தொடையைக் காட்ட வேண்டும் என்று எழுதவில்லை. அவருடைய உடையைத் தேர்வு செய்வது அவரது உரிமை. அதுவும் அவருடைய விளையாட்டிற்குப் பொருத்தமாக இருக்கும் உடையை அணிவது அவர் விருப்பம். இதுதான் என் கருத்து. //

// ஒரு பெண்ணின் தகப்பன் என்ற ஸ்தானத்தில் இருந்து அருமையாக எழுதி இருக்கும் நீங்கள், இன்னொரு பக்கம் ஒழுக்கச் சீர்கேட்டை ஆதரித்து எழுதி இருப்பதைத்தான் நான் சுட்டிக் காட்டினேன்.

ஒழுக்கமாக இருக்க வேண்டும் என மதம் சொல்வதில் என்ன சார் தவறு? இது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொருந்தும். //

நான் எழுதியிருக்கும் இந்தக் கதையில் எனது கருத்துகளைத் திணிக்கவில்லை என்று மீண்டும் தெளிவு படுத்துகிறேன். அந்தக் கதையில் வரும் கதாபாத்திரத்தின் எண்ணங்களை மட்டுமே எழுதியுள்ளேன்.

ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று மதம் வலியுறுத்துவதில் தவறில்லை. நான் அப்படி எதுவும் சொல்லவில்லையே. சானியா போகுமிடமெல்லாம் அரைகுறையாகப் போட்டுக் கொண்டு செல்லவில்லையே. அவருடைய எல்லைகளை அவர் அறிந்திருக்கிறார் என்று நினைக்கிறேன். ஷாருக்கானுக்கு அவர் சூடாக மறுமொழி கொடுத்த பொழுதே அவருடைய முதிர்ச்சி வெளிப்பட்டது.

என்னுடைய ஆதங்கமெல்லாம் இந்த மாதிரி நிகழ்வுகள் அவருடைய ஆர்வத்திற்கு அணை போட்டு விடக் கூடாதே என்பதுதான்.

// ஒரு மத அறிஞர் என்ற முறையில் தனக்குறிய பொறுப்பை உணர்ந்து சொல்லி இருக்கிறார். அதற்காக கல்லால் அடித்துக் கொல்லவா சொன்னார்? //

கல்லால் அடித்த வலியை விட சொல்லால் அடித்தால் நிரம்ப வலிக்கும் நண்பரே. தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு.

// மனம் புண்படுத்தி இருந்தால் மன்னிக்க. //
நன்றி. உங்கள் மனத்தையும் நான் புண்படுத்தவில்லை என்று நினைக்கிறேன்.

said...

இப்பொழுதுதான் படித்தேன். நல்ல பதிவு.
தந்தைக்கும் மகளுக்குமிடையிலான பாசப் பிணைப்பு அற்புதமானது. அதை அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.

said...

படித்துக் கருத்திட்டமைக்கு நன்றி சந்திரவதனா.

பாத்திமா, உங்களது கருத்துக்களும் உற்சாகமளிக்கின்றன. நன்றி.

said...

அன்புள்ள ராகவன்,
படிக்க மிகவும் அருமையாக இருந்தது .உங்கள் தமிழ் செழுமை கண்டு வியக்கிறேன்.

said...

இராகவன்,

பெரியாழ்வார் தன் திருமொழியில் புலம்பியதை மிக நன்றாய் இங்கு கொண்டு வந்துள்ளீர்கள். சிறுவயதிலிருந்தே திருப்பாவையில் நன்றாய் தோய்ந்திருப்பீர்கள் போல.

குமரன்.

said...

நன்றி குமரன். கொஞ்சம் இலக்கியப் பரிச்சயம் உண்டு எனக்கு. அதுதான் இப்படி வந்து விழுகிறது. அதிலும் இந்தக் கதை என் கனவில் வந்தது. நடிகர் திலகம் பெரியாழ்வாராக வந்து புலம்பியதை அப்படியே கதையாக மாற்றி விட்டேன்.

said...

The way you have narrated is really wonderful. This is not something that has happened long back.. this is what is happening to most of the Dads these days.. lots of maturity!!

றொம்ப நல்லா இருக்கு..

said...

நன்றி தென்றல். தென்றல் இதமாகவே வீசியிருக்கின்றது.

said...

நீங்க எந்தக் காலத்துலயோ எழுதினதை நான் இப்பதான் படிக்கிறேன் :( ஆனா இப்பவாச்சும் படிச்சேனேன்னு இருக்கு. ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க! உங்களோட பின்னூட்டங்கள் படிச்சே உங்க தமிழும் ஆன்மீகமும் பார்த்து வியந்திருக்கேன். அபிராமியில இருந்து, கோதை வழி இங்கே வந்தேன். நன்றிகள் உங்களுக்கு.