Tuesday, September 06, 2005

ராஜாவும் குட்டியும் பின்னே ஞானும்(ஞங்ஙளும்)

ஏதடா மலையாளப் படத்தலைப்பு போல இருக்கேன்னு படிக்காம விட்டுராதீங்க. படிச்சுப் பாருங்க. பிடிச்சாலும் பிடிக்கலாம். இது என்னோட நினைவுக்கடலில் எழுகின்ற ஒரு அலை. காலையாவது நனைச்சுக்குங்க.

தூத்துக்குடியில் பழைய ஹார்பருக்கு எதிர்ப்பக்கம் உள்ள பொதுப்பணித்துறை குடியிருப்பில் மூன்றாண்டுகள் இருந்தோம். அது தந்தையார் அங்கு வேலை செய்து கொண்டிருந்த நேரம். நல்ல பெரிய காம்பவுண்டு சுவருக்குள் மூன்று வீடுகள். சில கெஸ்ட் ஹவுஸ்கள். நிறைய இடம். நிறைய மரங்கள்.

ஒரு நாள் பகற்பொழுதில் எல்லாரும் வீட்டு வாசலில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். வீட்டிற்கு முன்னேயும் நிறைய இடம். இங்கே எல்லாரும் என்பது நான், என்னுடைய தங்கை மற்றும் பாட்டி. அம்மா வீட்டுக்குள்ளும் அப்பா அலுவலகத்திலும் இருந்தார்கள்.

ஒரு நாட்டு நாய்க்குட்டி எப்படியோ பெரிய காம்பவுண்ட் கதவைத் தாண்டி உள்ளே வந்து விட்டது. சின்ன நாய். மெல்லிசாக இருந்தது. அழகென்று சொல்ல முடியாது. நாங்கள் மூவரும் இருப்பதைப் பார்த்து அங்கு வந்தது. பாட்டி ஒரு பிஸ்கட்டை எடுத்துப் போட்டார்கள். சாப்பிட்டு விட்டு அங்கேயே படுத்துக் கொண்டது. பிறகு கொஞ்சம் சோறு. கொஞ்சம் அது. கொஞ்சம் இது என்று வீட்டில் ஒட்டிக் கொண்டது.

வந்த நாளிலேயே அதற்கு ராஜா என்று பெயரைச் சூட்டியாகி விட்டது. அதுவும் அந்தப் பெயருக்கு அன்றே பழகிக் கொண்டது.

வீட்டுக்குள் விட மாட்டோம். வெளியில் திரிய எவ்வளவு இடமிருக்கிறது. நன்றாகத் திரியும். கட்டிப் போடுவோம். குளிப்பாட்டுவோம். பேசாமல் இருக்கும். பொதுவாக நாய்கள் குளிக்க மறுக்கும் என்பார்கள். ஆனால் இந்த நாயை நானே தண்ணீர் ஊற்றி சோப்பு போட்டுக் குளிப்பாட்டினாலும் பேசாமல் இருக்கும்.

போட்டதைச் சாப்பிடும். அதே நேரத்தில் மீன் முள்ளுக்கும் அலையும். வீடு மீன்பிடித் துறைமுகத்துக்கு எதிரில் இருந்ததால் மரத்திற்கு அடைய வரும் பறவைகள் மீன்களையும் மீன் முட்களையும் போடும். அதற்கு அலையும் ராஜா. இத்தனைக்கும் வாரத்திற்கு ஒருமுறையாவது வீட்டில் அசைவம் இருக்கும்.

வீட்டிற்கு வருகின்றவர்களிடம் மரியாதையாக இருக்கும். அதே நேரத்தில் சிலரை விடவே விடாது. அதற்கு பால்காரன் மேல் அப்படி ஒரு கோவம். அவர் வரும் பொழுதெல்லாம் குலைத்துத் தள்ளிவிடும். அவரும் குச்சியைப் பிறக்கிக் கொண்டு அடிக்க வருவார். நாங்கள் வந்து இருவரையும் சமாதானப் படுத்துவோம்.

மற்றொன்று குறிப்பிட்டே ஆக வேண்டும். மீன் முள் பொறுக்கினால் நாங்கள் அடிப்போம். நான் அல்லது என் தங்கை. அப்பொழுதெல்லாம் பேசாமல் இருக்கும். அடியை வாங்கிக் கொள்ளும். எடுத்து வந்த மீன் முள்ளைத் தொடாது. நாம் அடிப்பதை நிறுத்தியதும் காலடியில் வந்து உட்கார்ந்து கொள்ளும். அல்லது படுத்துக் கொள்ளும். வேறு யாராவது வெளியாட்கள் கையை ஓங்கினால் அவ்வளவுதான்.

நன்றாக வளர்ந்தது ராஜா. வீட்டு நாய்க்குரிய அத்தனை பண்புகளுடனும் வளர்ந்தது. வீட்டில் ஒரு அங்கத்தினராகவே ஆனது.

ஒரு நாள் காலை வீட்டு வாசலில் நாயைக் காணவில்லை. இரவில் அவிழ்த்து விட்டிருப்பதால் எங்கேயாவது வெளியே போயிருக்கும் என்று தேடினோம். ஆனால் கிடைத்ததோ ராஜாவின் உடல்தான். வண்டி எதுவும் அடித்த மாதிரியும் தெரியவில்லை. உடம்பில் ஒரு காயமில்லை. ஆனால் இறந்திருந்தது.

தங்கையினரின் கண்ணீர் ரெண்டு நாட்களுக்கு நிற்கவில்லை. எல்லாருக்கும் ஒருவித தவிப்பும் துக்கமும் இருந்தது. யாரும் நிலையில்லை. இப்படியே எல்லாரும் இருப்பதைச் சகிக்க மாட்டாமல் அப்பா யாரிமோ இருந்து ஒரு நாயை வாங்கி வந்தார்.

மாலையில் நான் நாயை எங்கே என்று தேடிப் போனால் பாத்ரூமுக்குள் முயலைப் போல குட்டியாகப் படுத்திருந்தது. அது ஒரு பாமரேனியன் நாய்க்குட்டி. வெள்ளை வெளேரென்று.

அதற்குப் பெயரே குட்டி என்று நிலைத்து விட்டது. ராஜாவைப் பராமரித்ததிலும் குட்டியைப் பராமரித்ததிலும் வேறுபாடுகள் பல உண்டு. குட்டி எப்பொழுதும் வீட்டிற்குள்தான் இருக்கும். மெத்தை மேலெல்லாம் தேவைப்பட்டால் ஏறும். அதுவும் கூட அதற்கு எப்பொழுதாவது தோன்றினால்தான். இந்தக் களேபரத்தில் நாங்கள் ராஜாவை மறந்திருந்தோம்.

குட்டியை அடிக்க முடியாது. எல்லாரையும் கடிக்க வரும். அப்பாவிடம் மட்டும் அதற்குப் பயம். அம்மாவிடமும் அடி வாங்கும். நான் அடிப்பதேயில்லை. தங்கைகள் சில சமயம் அடிப்பார்கள். அது நான் வேலைக்கு வந்து விட்ட பொழுது. ஆகையால் எனக்கும் குட்டிக்கும் அவ்வளவு தொடர்பில்லாமல் போயிற்று.

பிறகு கோயில்பட்டிக்குக் குடி பெயர்ந்தோம். ஒரு முறை நான் விடுமுறைக்குச் சென்றிருந்தேன். குட்டி என்னிடமும் பாசமாகத்தான் பழகும். அன்றும் அப்படித்தான் பழகியது. நான் கட்டிலில் உட்கார்ந்திருந்தேன். அது கீழே முன்னங்கால்களை நீட்டிக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருந்தது.
ஏதோ சொன்னேன். பேசாமல் இருந்ததும் அதட்டலாக ஏதோ சொன்னேன். படக்கென்று தவ்வி என் கைவிரல் நுனியைக் கடித்து விட்டது. லேசாக சதை கிழிந்து விட்டது. நான் குய்யோ முய்யோ என்று கத்தவும் எல்லாரும் ஓடி வந்தார்கள்.

பாட்டி வெங்காயத்தை இடித்து விரலில் கட்டினார்கள். குட்டிக்கு ஊசி போட்டிருந்ததால் பிரச்சனையில்லை. இருந்தும் நானும் ஒரு முறை ஊசி போட்டுக் கொண்டேன்.

அன்றைக்குத்தான் மீண்டும் ராஜா எங்கள் நினைவுக்கு வந்தது.

அன்புடன்,
கோ.இராகவன்

14 comments:

said...

பிடிச்சிருக்கு.

நானே நாய் ஆளுதான். இப்பத்தான் ஒரு 18 வருசமா பூனையாளாப் போயிட்டேன்.

said...

நன்றி துளசி.

நாயைப் பராமரிப்பதை விடப் பூனையைப் பராமரிப்பது எளிது. ஒன்றும் போடாமல் விட்டாலும் கூட வெளியே போய்த் தேடித் திருடித் தின்று விடும்.

கொல்கத்தாவில் என்னுடைய நண்பர்கள் வீட்டிற்குச் சென்றிருந்த பொழுது ஒரு விடயத்தைக் கவனித்தேன். அங்கே பலர் வீட்டில் நாயை விடப் பூனையை வளர்க்கிறார்கள். ஒன்றிரண்டு பூனைகளாவது இருக்கின்றன.

said...

// 18 வருசமா பூனையாளாப் போயிட்டேன். //

அப்போ ஒங்களுக்குக் கல்யாணம் ஆகி பதினெட்டு வருசமாச்சுன்னு சொல்லுங்க.

said...

எங்க வீட்டுலயும் 2 நாய் குட்டி வளர்த்தோம். 'என் இனிய இயந்திரா' பாதிப்புல 'ஜீனோ'னு பேர் வச்சோம். முதலாவது காணாமப் போச்சு ரெண்டாவது எதிர் வீட்டு டீ.வி வயரைக் கடிச்சு வச்சதுல வெளிய கொடுக்கும்படி ஆயிடிச்சி. இது 15 வருஷம் முன்னால.

இந்த தை மாசம் ஒரு பொமரேனியன் குட்டி வந்திருக்கு. எங்கப்பா அல்சேஷன் நாய் இருக்கான்னு பார்க்கப் போரப்போ இதை ஒரு கூடைக்குள்ள போட்டு மூடி வச்சுருந்துருக்காங்க. கூடையை திறந்தவுடனே ஓடி வந்து அப்பா காலை கட்டி பிடிச்சுகிடுச்சாம். 15 நாள் குட்டி. மனசு கேக்காம கொண்டு வந்துட்டாங்க.

பேரு 'மைலோ'. கிரேக்க வீரனோட பேரு. மூணு தடவைதான் பார்த்திருப்பேன். நல்லா பழகும். ஆனா எங்கம்மா பக்கத்துல நான் உட்கார்ந்திருந்தா அதுக்கு பிடிக்காது அதுவும் வந்து எங்க நடுவுல உட்காரும்.

said...

//அப்போ ஒங்களுக்குக் கல்யாணம் ஆகி பதினெட்டு வருசமாச்சுன்னு சொல்லுங்க//

இல்லையே ராகவன், 31 வருசம் முடிஞ்சிருச்சு.

நேரம் இருந்தா http://www.maraththadi.com/AuthorArticle.asp?lngAuthorId=166
இதுலே பாருங்க.

என் (செல்ல) செல்வங்கள்னு ஒரு தொடர்(!) இருக்கு.

said...

ராகவன் நல்லா இருக்கு...
அதென்ன பிடிச்சாலும் பிடிக்கும்........
ஓ.... கடிச்சாலும் கடிக்கும்கிறத இப்படி மாத்தி எழுதிட்டீங்களோ....

said...

கணேஷ்
//ஓ.... கடிச்சாலும் கடிக்கும்கிறத இப்படி மாத்தி எழுதிட்டீங்களோ.... //

ஹை இது எனக்கு ரொப்ம்பபிடி(கடி)ச்சிருக்கு:-)))))

said...

// பேரு 'மைலோ'. கிரேக்க வீரனோட பேரு. மூணு தடவைதான் பார்த்திருப்பேன். நல்லா பழகும். ஆனா எங்கம்மா பக்கத்துல நான் உட்கார்ந்திருந்தா அதுக்கு பிடிக்காது அதுவும் வந்து எங்க நடுவுல உட்காரும். //

ரமேஷ் - மைலோங்கறது நல்ல பேரு. தெரிஞ்ச பேருதான். ஆனா நாங்க தமிழ்ப் பேருதான் வைக்கனுமுன்னு குட்டின்னு வெச்சோம். ராஜாங்குற பேரு என்னவோ அப்படியே அமைஞ்சிருச்சு.

குட்டிக்கும் நீங்கள் சொல்லும் அந்தக் குணம் உண்டு. பக்கத்தில் வந்து உட்காரும். தங்கைகளை நான் அடித்தால், திட்டினால் (வேண்டுமென்றே) பேசாமல் இருக்கும். அப்பா அம்மா செய்தாலும் பேசாமல் இருக்கும். ஆனால் வெளியாள் (நண்பர்கள் உறவினர்கள்) செய்தால் அவ்வளவுதான். குலைத்துக் கொண்டு மேலே தாவும்.

ராஜாவும் அப்படியே. நாங்கள் வெளியே வந்தால் எங்கிருந்தாலும் அருகில் வந்து விடும்.

said...

// இல்லையே ராகவன், 31 வருசம் முடிஞ்சிருச்சு.//
கல்யாணம் ஆனதும் வேற வீட்டுக்குப் போகையில் நீங்கள் நாயை விட்டுவிட்டுப் போயிருப்பீர்கள் என்று நினைத்தேன். என் தாயின் நிலையில் நீங்கள் இருக்கின்றீர்கள்.

// நேரம் இருந்தா http://www.maraththadi.com/AuthorArticle.asp?lngAuthorId=166
இதுலே பாருங்க. //
நிச்சயமாகப் பார்க்கிறேன். இதுவரை மரத்தடிக்குப் போனதில்லை. போய்ப் பார்க்கிறேன்.

// ஓ.... கடிச்சாலும் கடிக்கும்கிறத இப்படி மாத்தி எழுதிட்டீங்களோ.... //
கோயில்பட்டிக்காரர் எழுத்தில் குறும்புக்குக் குறைவில்லை.

said...

அந்த ராஜா கதை அப்படியே எங்க வீட்டு ராஜா நாய் கதைதான் (உங்க மேல் வழக்கு போடப்போகின்றேன், என் கதையை சுட்டுவிட்டததால் :-) ) ஒரு வரி விடாமல், இது வரை எங்கள் வீட்டில் இருந்த ஒரே செல்ல பிராணி ஒரே ஒரு நாய் அதன் பெயரும் ராஜா தான்,

கீழே ஒரு சாக்கும் மேலே ஒரு சாக்கும் போட்டு போர்த்திக்கொண்டு தான் தூங்கும்.

எந்த காயங்களும் இல்லாமல் வீட்டிற்கு பின்னால் இறந்து கிடந்தது, அன்றோடு நாய் வளர்ப்பு முடிந்தது, வெகு சில மாதங்களே எங்களோடு இருந்தாலும் மறக்க முடியாத ஒன்று.

said...

ராகவன்,

ஊர்லேர்ந்து திரும்பி வந்த சோகத்தில் இருக்கும் என்னிடம் என் செல்ல குட்டிகளை நினைவுபடுத்தீட்டீங்க. இப்பத்தான் 1 1/2 வயசு ஆகுது. பாக்கத்தான் ஓநாய் சைஸில் இருக்கும், ஆனால் கடிப்பது என்றால் என்னவென்றே தெரியாது பாவம் அதுகளுக்கு. பேர சொல்லவேயில்லியே.. உங்களுக்கு தெரிந்த பேர்கள்தான்.

Aragorn and Arwen

said...

அட குழலி. உங்கள் கதையும் அதுதானா. மிகவும் வியப்பாக இருக்கிறது.

// அந்த ராஜா கதை அப்படியே எங்க வீட்டு ராஜா நாய் கதைதான் (உங்க மேல் வழக்கு போடப்போகின்றேன், என் கதையை சுட்டுவிட்டததால் :-) ) //
வழக்குதான. அதெல்லாம் எதுக்கு. ரெண்டு ராஜாவும் ஒரு ராஜாதான்னு நெனைச்சுகிருவோம். ரெட்டைக் கிளவி மாதிரி.

said...

// பேர சொல்லவேயில்லியே.. உங்களுக்கு தெரிந்த பேர்கள்தான்.

Aragorn and Arwen //

சூப்பர். ரெண்டுமே எனக்கு ரொம்பப் பிடிச்ச கேரக்டர். அது சரி. ரெண்டு குட்டியும் அண்ணந் தங்கச்சி இல்லையே. ஏன்னா அரகானும் அர்வெனும் கல்யாணம் பண்ணிக்கிர்ராங்களே.

எனக்குப் பிடித்த ஜோடி Eyowin and Faramir தான்.

said...

நாய்க்குட்டியில இதெல்லாம் வேற பாக்குறதுண்டா? :)

சேர்ந்து பொறந்த வகையிலே அண்ணன் தங்கையில்லே.. ஆனா தத்துக்குட்டிகளா வந்ததில அந்த உறவுதானே. இதுக்கு மேலே இத ரிசர்ச் பண்ணாம இருக்குறது நல்லதுன்னு நினைக்கிறேன். :)))