Monday, September 12, 2005

பன்னீர் இலையில்

பன்னீர் இலையில்

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்திலிருந்து அந்த அரசாங்கப் பேருந்து கிளம்பும் பொழுதுதான் எனக்கு நினைவுக்கு வந்தது. நான் தனியாகப் போகிறேன். திருச்செந்தூருக்குத் தனியாகப் போகிறேன். இதுவரை அப்படிப் போனதேயில்லை.

தூத்துக்குடி புதுக்கிராமத்தில் இருந்தவரையில் (சிறு வயதில்) பால்பண்ணை ஸ்டாப்பிலோ பீங்கான் ஆபீசு ஸ்டாப்பிலோ போய் ஏறினால் அழகான ஊர்களின் வழியே போய் திருச்செந்தூரைச் சேரலாம். அப்பொழுது கூட ஒரு கூட்டமே வரும்.

தூத்துக்குடி, மதுரை, கரூர், கோயில்பட்டி, சென்னை, பெங்களூர் என்று வந்த பிறகும் கூட தனியாகப் போனதில்லை. இப்பொழுது போகிறேன். மனம் என்னவோ செய்தது. ஆனாலும் பெருமையாக இருந்தது. தனியாக முருகனைப் பார்க்கப் போகிறேனே.

மாலை ஏழு மணி ஆகியிருந்ததால் இருள் கவியத் துவங்கியிருந்தது. வெளியில் ஒன்றும் சரியாகத் தெரியவில்லை. சிறு வயதில் நான் ஓடிய ஆடிய தெருக்கள் இன்னும் இருக்கின்றன என்று நினைக்கும் பொழுது ஏதோ ஒரு பாசம் எழுந்தது.

ஆத்தூர், காயல்பட்டினம், வீரபாண்டியன் பட்டிணம் எல்லாம் தாண்டி திருச்செந்தூருக்குள் நுழையும் பொழுதே கோபுரம் தெரிந்தது. நியான் விளக்குகளால் வேல் ஒளிர்ந்து கொண்டிருந்தது. பாசமா பக்தியா என்று தெரியவில்லை. கன்னத்தில் போட்டுக் கொண்டேன். வாய் மெல்ல முருகா என்று எனக்குத் தெரியாமலேயே முணுமுணுத்தது.

திருச்செந்தூர் பேருந்துகளில் கோயில் வாசல் என்று எழுதியிருக்கும். அதற்கு ஏற்றாற்போல கோயில் வாசலில் சென்று இறக்கி விடுவார்கள். இப்பொழுது நாழிக்கிணற்றுக்கு அருகில் புதிதாக பேருந்து நிலையம் கட்டி அங்கு இறக்கி விடுகிறார்கள். நானும் அங்கு இறங்கினேன்.

பனைமரங்கள் கண்ணில் தென்பட்டன. எனக்கு பனைமரங்களைக் கண்டாலே ஒருவித அன்பு பொங்கும். பனம்பழம், பனங்கிழங்கு, பனங்கற்கண்டு என்றால் சொல்லவே வேண்டாம். தேவஸ்தான தங்கும் அறைகளைத் தவிர்த்து விட்டு நல்ல விடுதியைத் தேடினேன்.

ஓரளவு நன்றாக இருந்த விடுதியில் இடம் பிடித்தேன். ஒரு நாளைக்கு நூறு ரூபாய் வாடகை. ஒத்துக்கொண்டு அந்த நூறோடு இன்னொரு நூறையும் அட்வான்ஸ் என்ற பெயரில் கொடுத்தேன். அறைக்குச் சென்று குளித்து விட்டு உடைகளை மாற்றினேன். முக்காப் பேண்ட்டும் சட்டையும் போட்டுக் கொண்டு கோயிலுக்குச் சென்றேன். நடை சாத்தியிருந்தது. அப்படியே கோயிலை ஒரு சுற்று சுற்றி விட்டு கடற்கரையில் அமர்ந்தேன்.

சுனாமி வந்த ஒன்றிரண்டு மாதங்கள் என்பதால் போலீஸ் பாதுகாப்பு கடற்கரையில் இருந்தது. தருமபுரி ஆதீன மடத்தில் முன்பெல்லாம் பக்தர்கள் படுத்துத் தூங்குவார்கள். இப்பொழுது கடற்கரையை ஒட்டி இருப்பதால் யாரையும் அங்கே படுக்க அனுமதிப்பதில்லை.

கடற்கரையில் கொஞ்ச நேரம் அமர்ந்தேன். பதினோரு மணிக்கு மேல் கடற்கரையில் யாரையும் போலீசார் அனுமதிப்பதில்லை. விடுதியை நோக்கி நடந்தேன். வழியில் சுக்குத் தண்ணி விற்றுக் கொண்டிருந்தார் ஒருவர். ஆசை உந்த அதை வாங்கிக் குடித்தேன். எனக்குப் பிடித்த கருப்பட்டி போட்டுக் காய்ச்சிய சுக்குத் தண்ணீர். ருசித்துக் குடித்தேன்.

நான் வாங்கியதைப் பார்த்ததும் மேலும் இரண்டு மூன்று பேர் துணிந்து வாங்கிக் குடித்தார்கள். பிறகு மேலும் இருவர்.

கோயில் வாசலில் இருக்கும் கடையில் தமிழ்ப் புத்தகங்களைப் படிப்பதற்காக வாங்கினேன். இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் விற்பனையாகும் கோபால் பல்பொடியும் வாங்கினேன். இதெல்லாம் இங்கே வாங்கினால்தானே......

விடியற்காலையில் எழுந்து குளித்து விட்டு நேராகக் கோயிலுக்குச் சென்றேன். சட்டையைக் கழட்டி இடுப்பில் சுற்றிக் கொண்டேன். இன்னமும் முருகனுக்கு திருப்பள்ளியெழுச்சி பாடிக் கொண்டிருந்தார்கள். கருவறைக்குள் இருக்கும் கந்தனைக் காண கூட்டமில்லை. நேராக வரிசைக்குச் சென்றேன்.

தட்டில் திருநீற்றை மலை போலக் குவித்து வைத்துக் கொண்டு ஐயர் தயாராக இருந்தார். ஆனால் திரைச்சீலை போட்டுக் கொண்டு முருகன் தயாராக இல்லை.

திருச்செந்தூர்த் திருநீற்றிற்குத் தனி மணம் உண்டு. மிகவும் மென்மையாக மெத்தென்று இருக்கும் திருநீற்றை நெற்றி நிறைக்கப் பூசினாலெ ஒரு களை வந்துவிடும். அழகு பார்க்காமல் அங்கு எல்லாரும் பூசிக் கொள்வார்கள். பழைய வழக்கம் என்ன வென்றால் திருநீற்றை பன்னீர் இலையில் வைத்துத் தருவது.

பழைய வழக்கமது. நீளமாக அழகாக இருக்கும் பச்சைப் பன்னீர் இலையில் வெள்ளைத் திருநீற்றைத் தருவார்கள். திருநீறோடு பன்னீர் இலையின் வாடையும் கலந்து சுகமாக மூக்கில் ஏறும். முன்பு நானும் அப்படி வாங்கியிருக்கிறேன். இன்றைக்கு கிடைக்கப் போவதில்லை. திருநீற்றுத் தட்டில் பன்னீரிலை இல்லை.

ஒருவேளை பத்து ரூபாய் தட்டில் போட்டால் பன்னீரிலையில் திருநீறு கிடைக்குமோ என்று நினைத்தேன். அடுத்த நொடியிலேயே அந்த எண்ணத்தைக் கைவிட்டேன். முருகன் குடுப்பதை வாங்கிக் கொண்டு போகவேண்டுமென்று உள்ளம் முடிவெடுத்தது.

அதற்குள் திருப்பள்ளியெழுச்சி முடிந்தது கந்தன் காட்சி தந்தான். "சீர்கெழு செந்தில்" என்று இளங்கோவடிகள் பாடியிருக்கிறார். எப்பொழுதும் சீர் மிகுந்த என்று பொருள். கந்தனின் கருணை மிக்க முகம் கண்டதும் கண்ணீர் பெருகியது. "முருகா! முருகா!" என்று உள்ளம் கதறியது. கையிரண்டையும் மேலே தூக்கி வணங்கினேன். அஞ்சும் முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றியது! அஞ்சேல் எனச் சொல்லி வேல் தோன்றியது! நெஞ்சில் பலகாலும் கண்டிருந்த அவனிரு கால்கள் தோன்றின. அன்போடு வணங்கி விட்டு ஐயர் எனது கையில் தள்ளிய திருநீற்றை நெற்றி நிறைய பூசிக் கொண்டு கருவறைப் பிரகாரத்தை விட்டு வெளியே வந்தேன்.

வெளிப்பிரகாரம் வந்ததும் அப்படியே அமைதியான காலையில் சுகமாக அந்தக் கற்கட்டிடத்தில் நடந்தேன். அங்கே ஒரு ஐயர் சந்தனத்தை ஒருவர் கையில் ஊற்றிக் கொண்டிருந்தார். அவருக்கு மட்டுந்தான் சந்தனமா? எனக்குக் கிடைக்கக் கூடாதா? கிடைத்தால் நானும் பூசிக்கொள்ள மாட்டேனா?

படக்கென்று எனது கையை நீட்டினேன். தூய சந்தனம். அப்பொழுது அரைத்தது என நினைக்கிறேன். கமகமத்தது. கிண்ணத்திலிருந்து என் கையில் விழுந்தது. அத்தோடு படக்கென்று இன்னொன்றும் விழுந்தது. அட! பன்னீர் இலையில் திருநீறு.

அன்புடன்,
கோ.இராகவன்

26 comments:

said...

பேஷ் திருச்செந்தூரில் சிறுபிராயத்தை கழித்தீர்களா? அப்படியானால் தேவன் அவர்கள் எழுதிய மிஸ் ஜானகி படியுங்கள். கதையின் முக்கால் பகுதி அந்த ஊரில்தான் நடைபெறுகிறது. தேவன் பெரிய முருக பக்தர். அவர் திருச்செந்தூர் கோவிலைப் பற்றி இக்கதையில் எழுதியிருப்பதை முடிந்தவரை இங்கு தருவேன்.

"இருபுறமும் இரு மனைவிமார்கள் இணைந்து நிற்க, சக்திவேலும் குக்குடத்வஜமும் கரத்தில் மின்ன, ஷண்முகநாயனார் என்ற பெயருடன் நிற்கும் செந்தில் முருகனுக்கு ஸஹஸ்ரநாம அர்ச்சனை யதோக்தமாக நடந்து கொண்டிருந்தது. கமகமவென்று சுகந்தம் வீசும் புஷ்பப்பந்தலில் அமர்ந்திருப்பதும், ஜிலுஜிலுவென்ற பன்னீரில் அபிஷேகம் செய்து கொள்வதும் முருகனுக்குப் பழகிப்போன விஷயங்களே. பக்த கோடிகள்தான் அலுக்காமல் சலிக்காமல் பார்த்தார்கள், போய்விட்டுத் திரும்பிவந்தும் பார்த்தார்கள்.கண்ணை மூடிக்கொண்டும் திறந்துகொண்டும் அந்தச் சுந்தர விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்துகொள்ள முயன்றார்கள். அடுத்தடுத்து நடந்த ஐந்தடுக்கு தீபாராதனைகளின்போது வாய்விட்டுத் துதித்தார்கள். எங்கு நிற்கிறோம் என்பதை முற்றிலும் மறந்து போனார்கள்."

"வெட்ட விடியற்காலத்தில் வெள்ளை வெளேரென்று உடை உடுத்து, ருத்ராக்ஷம் அணிந்து, அவன் அப்பாவைப் போல் வருவான்; மாலையில் பச்சைப் பீதாம்பரம் கட்டிக் கொண்டு அவன் மாமாவைப் போல் வருவான். என் முருகன் விளையாட்டுப் பிள்ளை ஆயிற்றே, மிஸ்டர் நடராஜன்! நம் உள்ளக்கோயிலில் விளையாடுகிறான் இங்கே! ஷண்முகனை நம்பினால், ஒரு காலும் அவன் கைவிடமாட்டான். இது நிச்சயம்!"

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

ஆறுமுகன் மயிலேறிச் சென்ற ஆறுமுகநேரி வழியாகப் போய்விட்டு அதைச் சொல்ல மறந்துவிட்டீர்களே!எங்கள் ஊரை விட்டுவிட்டதில் வருத்தமே!

அப்பாடி!கருப்புக்கட்டி பற்றி அறிந்தவர்கள் இணையத்திலும் இருக்கிறார்கள்!

உட்பிரகாரம்,வெளிப்பிரகாரம் பற்றியெல்லாம் இன்னும் கொஞ்சம் சொல்லியிருக்கலாம். ஆவணித்திருவிழாவை ஒட்டிப் போயிருந்தால் ஏகப்பட்ட கண்ணுக்குகந்த விருந்துகள் கிடைத்திருக்கும்.

said...

படிக்க ரொம்ப சுகமாக இருந்தது இராகவன். எண்ணம் போல எல்லாம் நடக்கும் என்பது இதுதானா..? சில முறை நம்மாலேயே நம்ப முடிவதில்லை. இல்லையா..? நானும் சில முறை நடைப்பயணமாக சென்று அதிகாலை பூஜையைப் பார்த்ததுண்டு.மிகவும் நன்றாக இருக்கும்.

said...

என்னதான் இருந்தாலும் வெல்லமும், கருப்பட்டியும் மாதிரி வராது. கோவில்பட்டி கருப்பட்டி மிட்டாய் நினைவுக்கு வந்துவிட்டது.

திருச்செந்தூர் கோவிலின் இன்றைய நிலையையும் சொல்லுங்களேன். நான் 96ல் சென்றிருந்தபோது, நாழிக்கிணறு நாசமாகப் போய்விட்டிருந்தது. பூசாரிகளின் சுயநலமும், தரங்குறைந்த பிரசாதமும் மனதை காயப்படுத்தின. தமிழகமெங்கும் கிட்டத்தட்ட இந்த நிலைதான். பணம் அவனுடைய பாதா(தத)ளம் வரை பாய்ந்திருக்கிறது.

said...

ராகவன்,

அருமையான தரிசனமும் பிரசாதமும் கிடைத்துள்ளது. இதுதான் மனம் போல் வாழ்வு.

ச்சின்ன ஓலைப்பெட்டியிலே சுக்கு சேர்த்த கருப்பட்டிச் சில்லு மிட்டாய், இன்னும் பிஞ்சுபிஞ்சா
வெள்ளரிக்காய்( கோணா மாணான்னு வளைஞ்சிருக்கும்) ருசியெல்லாம் மனசுலே
அப்படியே நிக்குது.

said...

// பேஷ் திருச்செந்தூரில் சிறுபிராயத்தை கழித்தீர்களா? //
இல்லை டோண்டு. தூத்துக்குடிதான் நான் பிறந்து வளர்ந்த ஊர். ஆனால் பிறகு தமிழகத்தில் பல ஊர்களில் படித்து இன்றைக்கு பெங்களூரில் இருக்கிறேன். தூத்துக்குடியில் இருந்ததால் திருச்செந்தூர் மிகவும் பழக்கமான ஊர்.

தேவன் எனக்கும் பிடித்த எழுத்தாளர். மிஸ்.ஜானகியை கண்டிப்பாகப் படிக்கிறேன்.

said...

// ஆறுமுகன் மயிலேறிச் சென்ற ஆறுமுகநேரி வழியாகப் போய்விட்டு அதைச் சொல்ல மறந்துவிட்டீர்களே!எங்கள் ஊரை விட்டுவிட்டதில் வருத்தமே! //
உண்மைதான் தாணு. எப்படியோ மறந்து விட்டேன். மன்னிக்கவும்.

// அப்பாடி!கருப்புக்கட்டி பற்றி அறிந்தவர்கள் இணையத்திலும் இருக்கிறார்கள்! //
என்னங்க இது? கருப்பட்டியை மறக்க முடியுமா? உண்டவர் மறந்திலர். மறந்தவர் உண்டிலர். இது பழமொழியாச்சே. ஹி ஹி.

// உட்பிரகாரம்,வெளிப்பிரகாரம் பற்றியெல்லாம் இன்னும் கொஞ்சம் சொல்லியிருக்கலாம். ஆவணித்திருவிழாவை ஒட்டிப் போயிருந்தால் ஏகப்பட்ட கண்ணுக்குகந்த விருந்துகள் கிடைத்திருக்கும். //
இன்னும் பல சுவையான விஷயங்கள் உள்ளன. இந்தப் பன்னீரிலையைப் பற்றிச் சொல்ல வந்ததால் அவைகளைச் சொல்லவில்லை. வேறு பதிப்பில் கண்டிப்பாகச் சொல்லப் பட வேண்டியவை அவை.

said...

// படிக்க ரொம்ப சுகமாக இருந்தது இராகவன். எண்ணம் போல எல்லாம் நடக்கும் என்பது இதுதானா..? //

முருகன், சென்னை அஷ்டலட்சுமி கோயிலும் இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்தது. அதைப் பிறகு சொல்கிறேன்.

said...

// என்னதான் இருந்தாலும் வெல்லமும், கருப்பட்டியும் மாதிரி வராது. கோவில்பட்டி கருப்பட்டி மிட்டாய் நினைவுக்கு வந்துவிட்டது. //

ரமேஷ் உங்கள் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்வது என்று முடிவெடுத்து விட்டேன். ஆமாம். இரண்டு வாரங்களுக்கு முன்புதான் தனியாளாக அரைக்கிலோ கருப்பட்டி மிட்டாயை நான்கு நாட்களுக்கு வைத்துத் தின்றேன். ஹி ஹி.

// ச்சின்ன ஓலைப்பெட்டியிலே சுக்கு சேர்த்த கருப்பட்டிச் சில்லு மிட்டாய், இன்னும் பிஞ்சுபிஞ்சா
வெள்ளரிக்காய்( கோணா மாணான்னு வளைஞ்சிருக்கும்) ருசியெல்லாம் மனசுலே
அப்படியே நிக்குது. //
துளசி கோபால், இத்தனை சொல்லீட்டு அந்தப் பனங்கிழங்க விட்டுட்டீங்களே!!!!!!!!!

வேக வெச்சப் பனங்கெழங்க ஒடிச்சிக் கடிச்சி நார உரிச்சி....சக்கசக்கன்னு மென்னு.....ம்ம்ம்ம்ம்ம்....எங்க போவேன் இப்போ? ஒரு வாட்டி பெங்களூருக்கு வாங்கீட்டு வந்து ஆபீசுல ஒளிச்சு வெச்சு தின்னேன். எல்லாரும் நான் tribal ஆயிட்டேன்னு பேசிக்கிட்டாங்க.

said...

திருச்செந்தூருக்கு போயிட்டு வந்த மாதிரி இருக்கு. அதெப்படி ராகவன் பேசின டயலாக்ல இருந்து யோசிச்ச விஷயம் வரை எல்லாத்தையும் நியாபகம் வச்சிருக்கீங்க..... குறிப்பெடுக்கும் பழக்கமிருக்கிறதா ?

பாருங்க அருள் தேடி வர்றவங்களுக்கு அருள் கண்டிப்பா கிடைக்குது.

said...

>அட! பன்னீர் இலையில் திருநீறு.
பன்னீர் இலை திருநீறுக்கு பெரும் மருத்துவக்குணம் உண்டு.

தல! எனக்கு ஒரு போன் பண்ணியிருக்கலாம்ல! போன வாரம் நான் ஊரில்தான் இருந்தேன். நேரில் பார்த்திருக்கலாமே!

said...

ராகவன் சார்,
வழக்கம் போல் படிப்பதற்கு மிக அழகான பதிவு. பன்னீர் இலை விபூதி எங்களுக்கும் கிடைத்தது. மிகவும் விசேஷமானது என்று சும்மா சொல்லி கொடுத்தார்கள். உற்சவரின் மேல் இருக்கும் கரப்புகளுக்கு அளவே இல்லை தானே?

ஒரு பெரிய அண்டா சந்தனத்தை வைத்து பூசுகிறேன் என்று படுத்திவிட்டார் அங்கு எங்களை அழைத்து சென்றவர். பொன்னொளி வீசும் சந்தன திருமேனியனாய் குளுகுளுவென்று கொஞ்ச நேரம் இருந்தது.

சுக்கு கருப்பட்டி எல்லாம் அம்மாதான் நிறைய வாங்கினார்கள். ஒரே ஒரு விள்ளல் வாயில் போனதுக்கப்புறம், அது கிட்டேயே மறுபடி போகவில்லை.

said...

// அதெப்படி ராகவன் பேசின டயலாக்ல இருந்து யோசிச்ச விஷயம் வரை எல்லாத்தையும் நியாபகம் வச்சிருக்கீங்க..... குறிப்பெடுக்கும் பழக்கமிருக்கிறதா ? //
கிண்டல் பண்ணாதீங்க கணேஷ். குறிப்பெடுக்கதான் நேரமிருக்கா. முதல்நாள் இரவு முதல் அடுத்த நாள் காலை வரை நான் திருச்செந்தூரில் இருந்தவைகளை நாவல் அளவுக்கு எழுதலாம். பன்னீரிலைக்கு மட்டும் முக்கியத்துவம் வைத்து இதை எழுதியதால் நிறைய விஷயங்களை விட்டு விட்டேன்.

// பாருங்க அருள் தேடி வர்றவங்களுக்கு அருள் கண்டிப்பா கிடைக்குது. //
கேளுங்கள் தரப்படும்
தட்டுங்கள் திறக்கப்படும்
தேடுங்கள் கிடைக்குமென்றார்
ஏசு தேடுங்கள் கிடைக்குமென்றார் - என்பது எவ்வளவு உண்மை. பலமுறை வியந்திருக்கீறேன்.

said...

// தல! எனக்கு ஒரு போன் பண்ணியிருக்கலாம்ல! போன வாரம் நான் ஊரில்தான் இருந்தேன். நேரில் பார்த்திருக்கலாமே! //

இல்ல ராம். இது ரொம்ப நாளாச்சு. மார்ச்சுல போனப்போ நடந்தது.

said...

// உற்சவரின் மேல் இருக்கும் கரப்புகளுக்கு அளவே இல்லை தானே? //

அத நான் கவனிக்கலை ராமநாதன். நான் பொது தரிசனத்தில் போனேன். ஆகையால் அவ்வளவு அருகில் சென்று பார்க்கவில்லை. ஆனால் கரப்புகள் நிறைய இருக்க வாய்ப்புகள் உண்டு. ஒரே நசநசவென்று இருக்கும். அங்கிருக்கும் போத்திகளும் ஐயர்களும் காசு பார்க்க மட்டுமே முக்கியத்துவம் தருவதால் அப்படி.

// சுக்கு கருப்பட்டி எல்லாம் அம்மாதான் நிறைய வாங்கினார்கள். ஒரே ஒரு விள்ளல் வாயில் போனதுக்கப்புறம், அது கிட்டேயே மறுபடி போகவில்லை. //

சில்லுக் கருப்பட்டி என்பார்கள். கருப்பஞ்சாற்றுக் கட்டிக்குள்ளே கொஞ்சமாய்ச் சுக்கு வைத்திருப்பார்கள். எனக்கு மிகவும் பிடிக்கும். நல்ல தரமான சில்லுக் கருப்பட்டி வாயில் போட்டதும் கரைந்து விடும். இப்பொழுது நிறைய பேர் போடுகிறார்கள். தரம் குறைந்திருப்பது உண்மைதான்.

said...

//கிண்டல் பண்ணாதீங்க கணேஷ். குறிப்பெடுக்கதான் நேரமிருக்கா.//
கிண்டல் பண்ணல ராகவன் சார். சத்தியமா கொஞ்சம் அசந்து தான் போயிட்டேன். நானெல்லாம் இப்போ எல்லாம் வெளியே செல்லும் பொழுது சின்ன டயரியும் பேனாவையும் மறப்பதேயில்லை.

// கேளுங்கள் தரப்படும்
தட்டுங்கள் திறக்கப்படும்
தேடுங்கள் கிடைக்குமென்றார்
ஏசு தேடுங்கள் கிடைக்குமென்றார் - என்பது எவ்வளவு உண்மை. பலமுறை வியந்திருக்கீறேன். //
ஆமா ஏசு சொன்னதும் வியப்பா இருக்கு, பன்னீர் இலை திருநீறுக்கு ஏசுவை முன்னிறுத்துவதும் வியப்பா இருக்கு.
கருத்துக்களும் நோக்கங்களும் தெளிவா இருக்கு கலக்குங்க

said...

// கிண்டல் பண்ணல ராகவன் சார். சத்தியமா கொஞ்சம் அசந்து தான் போயிட்டேன். நானெல்லாம் இப்போ எல்லாம் வெளியே செல்லும் பொழுது சின்ன டயரியும் பேனாவையும் மறப்பதேயில்லை. //

நானும் அப்படி புத்தகம் வெச்சி குறிப்பெடுக்கனுமுன்னு நெனைச்சேன். ஆனா ஏனோ செய்யவேயில்லை.

அப்புறம் சாரெல்லாம் வேண்டாம். பேரைச் சொல்லியே கூப்பிடுங்க. ஒங்கள விட மூனு நாலு வயசுதான் கூட இருக்கும். :-)

said...

பீங்கான் ஆபீஸ் பஸ் ஸ்டாப் காமராஜ் கல்லூரி நிறுத்தம் ஆகியிருக்குமே.. அந்தப் போராட்ட வரலாறில் எனது பங்கும் கொஞ்சம் இருக்கிறது..

பீங்கான் ஆபிஸ் சுவரின் உயரத்தில் எனக்கு வாக்களிக்குமாறு கோரியிருந்த சுவர் எழுத்துக்கள் கூட வருடக்கணக்கில் அழியாமல் இருந்தன.. இப்போது எல்லாம் மாறி இருக்கிறது..

said...

//அப்புறம் சாரெல்லாம் வேண்டாம். பேரைச் சொல்லியே கூப்பிடுங்க. ஒங்கள விட மூனு நாலு வயசுதான் கூட இருக்கும். :-)//

கணேஷு பார்க்கத்தான் சின்னப் பையன் மாதிரி இருக்க? அவ்வளவு வயசாச்சா? :)

said...

// பீங்கான் ஆபீஸ் பஸ் ஸ்டாப் காமராஜ் கல்லூரி நிறுத்தம் ஆகியிருக்குமே.. அந்தப் போராட்ட வரலாறில் எனது பங்கும் கொஞ்சம் இருக்கிறது..

பீங்கான் ஆபிஸ் சுவரின் உயரத்தில் எனக்கு வாக்களிக்குமாறு கோரியிருந்த சுவர் எழுத்துக்கள் கூட வருடக்கணக்கில் அழியாமல் இருந்தன.. இப்போது எல்லாம் மாறி இருக்கிறது.. //

அடடே! ராம்கி நீங்களும் தூத்துக்குடியா? ரொம்ப சந்தோஷம். சிறுவயதில் பீங்கான் ஆபிசில்தான் பஸ்டாப். இப்ப சக்தி விநாயகர் கோயிலுக்கு எதிர்ப்பக்கமா காமராஜ் காலேஜ ஒட்டி பஸ்டாப் இருக்குன்னு நினைக்கிறேன். சரியா?

said...

// கணேஷு பார்க்கத்தான் சின்னப் பையன் மாதிரி இருக்க? அவ்வளவு வயசாச்சா? :) //

ஆகா...கெளம்பீட்டாரய்யா ரமேசு....இனி நிறுத்த முடியாது.

said...
This comment has been removed by a blog administrator.
said...

ராகவன்,
கருப்புகட்டி ,சுக்கு காபி ,கடலை மிட்டாய்,பனங்கிழங்கு-ன்னு ஊரை நெனச்சு ஏங்க வச்சுடீங்களே? கோவில்பட்டி கடலை மிட்டாய் தனி தான்.

said...

அடடே!

நம்ம ஊரு மக்க இத்தனை பேரு இங்கே இருக்காகலா?

எவ்வளவு சந்தோசமா இருக்குது தெரியுமா அண்ணாச்சி.

அண்ணாச்சி, பனங்கிழங்கு, பதநீ, சில்லுகருப்பட்டி, கூப்பனி, நொங்கு, மாலைப்பயினீ எல்லாமே நெனவுக்கு வருதே.

என்னப்பன் முருகன் அருள் முருக பக்தனான உங்களுக்கு என்றும் உண்டு.

ஆமாம், அந்த சுவற்றில் காதை வைத்து ஓங்காரம் கேட்டீங்களா?

said...

ஜோ!

கடலை மிட்டாய் என்றதும் ஜெயவிலாஸ் கடலைமிட்டாய் தான் பேஸ் பேஸ் ரொம்பவே நன்னா இருக்கும்.

பள்ளியில் படிக்கும் போது தமிழ் வாத்தியார் ஒவ்வொரு தேர்வுக்கும் போட்டி வைப்பார், வெற்றி பெறுபவருக்கு ஒரு ரூபாய் கடலை மிட்டாய் பாக்கெட் (1988ல்). மாணவர்களின் முதல் மதிப்பெண் வாங்கும் மாணவனுக்கும், மாணவிகளில் முதலிடம் பெறும் மாணவிக்கும் போட்டி, பெஞ்ச் வாரியாக போட்டி என்று ஒரு கலக்கலாக இருக்கும். தனிப்பட்ட போட்டியில் கடலைமிட்டாய் வாங்கினாலும், பெஞ்ச் கணக்கில் கடலை மிட்டாய் போய் விடும், என்ன செய்வது நான் இருந்தது மாப்பிள்ளை பெஞ்ச் (அதிகமாக காம்பிளான் குடித்து விட்டேன்).

said...

பரஞ்சோதி, அந்த ஓங்காரத்தைக் கேட்டேனே. திருச்செந்தூர் போய் கேட்காமல் வருவதா.

எங்க வாத்தியார் ஒருத்தரும் கடலைமிட்டாய் பரிசு கொடுப்பார். தூத்துக்குடி சேவியர்ஸ் பள்ளியில். அவர் பெயர் பெர்க்மான்ஸ் என்று நினைக்கிறேன்.