Wednesday, September 14, 2005

பெங்களூரில் ஓட்டல்கள் பாகம் - ஒன்று

பெங்களூரில் ஓட்டல்கள் பாகம் - ஒன்று

கொஞ்சம் சீரியசான விஷயங்களையே எழுதிக் கொண்டிருந்தால் எப்படி என்று ஒரு மாறுதலுக்குச் சின்ன தொடர். பெங்களூரில் நான் ருசித்த ரசித்த உணவு விடுதிகளைப் பற்றி ஒரு சின்ன அறிமுகம். சின்ன அறிமுகமே தொடராக வருகிறது பாருங்கள்.

என்னுடைய உணவுப் பழக்கம் என்ன? மிகவும் எளிமையான சிக்கலான உணவுப் பழக்கமே என்னுடையது. காலையில் கார்ன் ஃப்ளேக்ஸும் பாலும். பகலில் அலுவலகத்தில் சப்பாத்தியும் கூட்டும். கூட ஒரு கப் தயிர். ஒவ்வொரு வேளை சப்பாத்தியைக் குறைத்துக் கொண்டு சோறு எடுத்துக் கொள்வதுண்டு. இரவில் பெரும்பாலும் கோதுமை ரவைதான். உடன் பாசிப்பருப்பும் காய்கறிகளும் போட்டு கதம்பமாகச் செய்து சாப்பிடுவதுதான் வழக்கம். தயிரும் சேர்த்துக் கொள்வதுண்டு.

இரவில் தொட்டுக்கொள்ள ஏதேனும் வேண்டுமென்று தோன்றினால் ஃபிரீசரில் இருந்து இரண்டு சிக்கன் சாசேஜ்களையோ சிக்கன் ஃபிங்கர்களையோ லேசாக எண்ணெய்யில் வதக்கிக் கொள்வதுண்டு.
இது பெரும்பாலான வார நாட்களில் நடப்பது. வார இறுதியில் சைவமோ அசைவமோ தோன்றியதைச் செய்து சாப்பிடுவது. ஆனால் அத்தோடு முடிகிறதா பெங்களூரில். எத்தனையெத்தனையோ வகையான ஓட்டல்கள் புதிது புதிதாக வருகையில் எதைத் தேர்ந்தெடுப்பது?

எனது வயிற்றைச் சோதனைச் சாலையாக்கி ஓரளவுக்கு சிறந்த ஓட்டல்களைத் தேர்ந்தெடுத்துள்ளேன். அங்கே என்ன கிடைக்கும் என்பதையும் முடிந்த வரை உங்களுக்குச் சொல்கிறேன்.

நான் தமிழன். தென்னிந்தியன். ஆகையால் முதலில் தமிழ் நாட்டு உணவு விடுதிகளையும் தென்னிந்திய விடுதிகளையும் பற்றிச் சொல்லி விடுகிறேன்.
கதம்பம் என்ற ஓட்டலைச் சொல்லியே ஆக வேண்டும். ஜெயநகரில் இருக்கிறது. முன்பு டிக்கென்சன் ரோட்டிலும் இருந்தது. இப்பொழுது அதை மூடி விட்டார்கள். மிகவும் அருமையான ஐயங்கார் உணவுகள் கிடைக்கும். அங்கு கிடைக்கும் மெது தோசை மிகவும் அருமை. மெல்லிய துணி போன்ற இரண்டு தோசைகளோடு பருப்புத் துவையலும் குருமாவும் குடுப்பார்கள். மேசையில் பொடியும் எண்ணெய்யும் இருக்கும். நான் குருமாவை தலாக்கி விட்டு பொடியையும் எண்ணெய்யையும் சேர்த்துக் கொள்வேன். அடடா! அனுபவிக்க வேண்டுமய்யா!

அவர்களின் அடுத்த சிறந்த படைப்பு புளியோதரை. கூட கெட்டித் தயிர் ஒரு கப் தருவார்கள். ஸ்பூனில் தயிரை எடுத்து புளியோதரையோடு கலந்து சுவைத்தால் அமுதம் என்பதற்குப் பொருள் விளங்கும். அடுத்தது வெண்பொங்கல். உதிரியாக இருக்காது. கொழகொழப்பாக இருக்கும். அதனோடு தேங்காய்ச் சட்டினியும் புளிக்கரைசலும். தேங்காய்ச் சட்டினிக்கு மங்களம் பாடி மூடி வைத்து விட்டு, தாளித்த புளிக்கரைசலை (லேசான தித்திப்பு இருக்கும்) பொங்கலோடு கலந்தடிக்க மூன்று நாட்களுக்கு நாக்கு அதை மறக்காது.

எல்லா தமிழ் உணவுகளும் கிடைக்குமென்றாலும் இவை மூன்றுமே கதம்பத்தில் எனக்குப் பிடித்தவை.

அடுத்து சொல்ல வேண்டியது எம்.டீ.ஆரைப் பற்றித்தான். அவர்களின் ரெடிமேட் உணவுகள் எங்கும் கிடைக்கின்றன. மாவள்ளி டிஃபன் ரூம் என்பதுதான் எம்.டீ.ஆர். பெங்களூரிலுள்ள பழைய ஓட்டல். இன்னும் மாறாமல் இருக்கிறது. இங்கு ஸ்பெஷல் என்றால் மீல்ஸ்தான். எழுபத்தைந்து ரூபாய். முதலிலேயே டோக்கன் வாங்கி விட்டு வரிசையில் நின்று இடத்தைப் பிடிக்க வேண்டும். அவ்வளவு கூட்டம் வரும்.

முன்பெல்லாம் வெள்ளி முலாம் பூசிய தட்டில்தான் பரிமாறினார்கள். இப்பொழுது கூட்டம் கூடக் கூட எவர்சில்வர் தட்டில்தான் பரிமாறல். ஆனால் பழச்சாறு மட்டும் வெள்ளி பூசிய டம்ளரில் வரும். மீல்ஸ் என்பது அள்வில்லாதது. தோசை/சப்பாத்தி/பூரி/ருமாலி ரொட்டி இவற்றில் ஒன்று கொடுப்பார்கள். எத்தனை வேண்டுமோ கேட்டு வாங்கிச் சாப்பிடலாம்.
பிறகு ஒரு கலந்த சாதம் வரும். புளியோதரை, எலுமிச்சை சாதம், தேங்காய்ச் சோறு என்று ஏதாவது ஒன்று இருக்கும். கூட்டுகளும் சட்டினிகளும் வரும். கூட சிப்ஸ் கொடுப்பார்கள். பாயாசம் இருக்கும். ஒரு ஸ்வீட் இருக்கும். பழச்சாறைப் பற்றியும் சொல்லியாகி விட்டது. அடுத்தது சாம்பார், ரசம் இரண்டும் சோற்றோடு வரும். முடிந்ததும் தயிர்ச் சாதத்தைப் பரிமாறுவார்கள். கடைசியில் ஃபுரூட் சாலட் ஐஸ்கிரீமோடு கொஞ்சிக் கொண்டு வரும். முடிக்கையில் பீடாவும் வாழைப் பழமும் கிடைக்கும். பகலில் சாப்பிட்டால் இரவு உணவு தேவையேயில்லை.

காலையிலும் மாலையிலும் டிபன் ஐட்டங்கள் கிடைக்கும். ரவா இட்டிலி மிகப் பிரசித்தம். கெட்டிச் சட்டினியோடு வரும். உருளைக் கிழங்கு சாகு கொடுப்பார்கள். அப்படியே இட்டிலின் தலையில் நெய்க் குளியல் நடக்கும். ஆனால் என்னுடைய ஓட்டு மீல்ஸ்க்குத்தான். ஒரு நாளைக்கு இத்தனை மீல்ஸ் என்று கணக்கு வைத்திருக்கிறார்கள். ஆகையால் சீக்கிரம் போவது நல்லது. ஜெயநகரில் ஊர்வசி தியேட்டருக்கும் லால்பாக் மெயின் கேட்டுக்கும் இடையில் இருக்கிறது.

இல்லை. இதையெல்லாம் ஒத்துக் கொள்ள முடியாது. தமிழ்நாட்டுச் சாப்பாடுதான் வேண்டும் என்று அடம் பிடிக்கும் தமிழ்க் குடிதாங்கிகளுக்கென்றே இருக்கிறது கிருஷ்ணா கஃபே. கோரமங்களாவில் இருக்கிறது. சிறப்பாகச் செய்கிறார்கள். இங்கு நான் சாப்பிட்டதெல்லாமே நன்றாக இருந்தது. பகலில் சாப்பாட்டிற்கு அப்பாவையும் அம்மாவையும் ஒருமுறை கூட்டிச் சென்றிருந்தேன். மிகவும் ரசித்துச் சாப்பிட்டார்கள்.
இத்தனை ஓட்டல்களைச் சொன்னபின் பிருந்தாவனத்தைச் சொல்லவிட்டால் வத்தல்குழம்பு என்னை மன்னிக்கவே மன்னிக்காது. ஆமாம். அருமையான வத்தக்குழம்பு அங்கே கிடைக்கும். பெங்களூரின் மையப் பகுதியான எம்.ஜி ரோட்டில் இருக்கிறது இந்த ஓட்டல். உடுப்புக்காரரின் ஓட்டல். ஆனாலும் தமிழர்கள் மிகவும் விரும்புவது.

மீல்சில் சப்பாத்தியும் உண்டு. அப்பளம் கேட்கக் கேட்கத் தருவார்கள். அருமையான வத்தல் குழம்பும் கிடைக்கும். மீல்ஸ் சாப்பிட்டால் மறக்காமல் கேட்டு வாங்கிச் சாப்பிடுங்கள். புளிப்பும் உறைப்புமாய் சுர்ரென்று இருக்கும். டிபன் பிரியர்களையும் அவர்கள் விட்டு வைப்பதில்லை. வகை வகையாய் இட்டிலிகளையும் தோசைகளையும் சுட்டுத் தாக்குகிறார்கள். எல்லாமே அருமை. பொடியை எண்ணெய்யோடு குழைத்து ஒரு கிண்ணத்தில் வைத்திருப்பார்கள். வேண்டிய மட்டும் அள்ளிப் போட்டுக் கொள்ளலாம். கண்டுகொள்ளவே மாட்டார்கள்.

ஆனால் டிபன்களில் எனக்குப் பிடித்தது நீர்தோசை. என்னடா நீர்யானை போல பெருசாக இருக்குமா என்று நினைக்காதீர்கள். மிகவும் மெல்லிய தோசையிது. அற்புதமாக இருக்கும். இத்தோடு இனிப்பான பழக்கலவையும் தருவார்கள். தோசையோடு சாப்பிட அல்ல. தோசைக்குப் பின்னே சாப்பிட. மிகவும் சுவையோ சுவை.

தென்னிந்திய உணவு வகைகளை விரும்புகிறவர்கள் இந்தக் குறிப்பிட்ட ஓட்டல்களுக்குச் சென்றே ஆகவேண்டும். இப்பொழுது தமிழ்நாட்டுப் புகழ் முருகன் இட்டிலிக் கடையையும் திறந்திருக்கிறார்கள் கோரமங்களாவில். அங்கு இதுவரை சென்றதில்லை. சென்றால் அதைப் பற்றியும் கண்டிப்பாகச் சொல்கிறேன்.

இத்தோடு பாகம் ஒன்று முடிந்தது. இன்னும் ஒன்றிரண்டு சைவ விடுதிகளையும் மற்ற விடுதிகளையும் அடுத்த பாகத்தில் பார்க்கலாம்.

(பின் குறிப்பு : கோ.கணேஷிற்கு - சத்தியமாக நான் எந்த நோட்டுப் புத்தகத்தையும் கொண்டு போய் குறிப்பு எடுக்கவில்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன்.)

அன்புடன்,
கோ.இராகவன்

21 comments:

said...

ஈஸ்வர், இப்பொழுது எம்.டீ.ஆர் கிளைகள் பல இடங்களில் திறந்திருக்கிறார்கள். ஆனால் ஊர்வசி தியேட்டர் அருகில் இருக்கும் எம்.டீ.ஆரில் ஒரு முறை மதியச் சாப்பாடு சாப்பிட்டுப் பாருங்கள். தெரியும் சேதி.

சுஸ்சுவாத் எங்க இருக்கு? அதே ரோட்டில் கஃபே சோ ஸ்வீட் போயிருக்கீங்களா? தோசை, இட்டிலி பொங்கல் பிரமாதமா இருக்கும்.

அப்படியே அந்த பைவ் ஸ்டார் தட்டுக் கடாவோட அட்ரசச் சொல்லுங்க பாப்போம்.

(வாயில் போட வேண்டிய சர்க்கரையை பார்சலில் அனுப்பி வைக்கவும். நானே போட்டுக் கொள்கிறேன்.)

said...

வெங்கட்டு....அதுவும் வருது....பின்னாடி....இது தொடர்தான....இன்னும் வரும்.

said...

நாகார்ஜுனா பிரியாணியைப்பற்றி மறந்துவிடாமல் எழுதி விடுங்கள்...அப்புறம், இம்பீரியல் சிக்கன் கபாப் பற்றி எழுதாவிட்டால் கோழிகள் உங்களை கோபித்துக்கொள்ளும்.

said...

ராகவன்,

அருமையான travel guide வாசித்தமாதிரி இருக்கு. உண்மையிலேயே தமிழ்நாட்டுக் கடைகள் தெரியாமல் ஏதோ ஹோட்டலில் என்னவோ சாப்பிட்டு வாந்தி பண்ணியது நினைவுக்கு வருது. தக்காளியெல்லாம் வெட்டிப் போட்டு ஒரு ஊத்தப்பம் போடுவாங்களே, அது நல்லாயிருந்தது. சோறு கண்ட இடம் சொர்க்கம்ப்பா எங்களுக்கு! அப்போ சோறைக் காட்டுற நீங்க கடவுளா பூசாரியா?

சர்க்கரை வியாதிக்காரங்க அளவோட சாப்பிடறமாதிரி ஹோட்டல் பற்றியும் எழுதுங்க!!!!

said...

ராகவன்,

கதம்பம் மனிப்பால் டவரில் ஒன்று இருக்கிறதே (Strands Book stall பக்கத்தில்)

தமிழ்நாட்டு உணவு வகைகள் அப்ப்டியே இருக்கும் கடை (சரவண பவன் மாதிரி) பெங்களூரில் இல்லை என்பது ஒரு குறை.

முருகன் இட்லிக் கடை வந்தது எனக்குச் செய்தி!

said...

ம்ம்.....பேஷ்....பேஷ்.....ரொம்ப நல்லா இருக்கு.

said...

காமத் சாப்பாடு முன்பெல்லாம் நன்றாக இருக்கும். வீணா ச்டோர்ஸ் இட்லி, 8த் cross பஜ்ஜி கடை இதையெல்லாம் கூட சேர்க்கலாம். முன்பெல்லாம் IISc A /B மெஸ்ஸில் நன்றாக இருக்கும் யார் வேண்டுமானாலும போகலாம்.் இப்போது அங்கே வெளியாட்களை அனுமதிப்பதில்லை

said...

//(பின் குறிப்பு : கோ.கணேஷிற்கு - சத்தியமாக நான் எந்த நோட்டுப் புத்தகத்தையும் கொண்டு போய் குறிப்பு எடுக்கவில்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன்.) //
ஆளாளுக்கு என்னை வம்புல இழுக்குறீங்கல்ல (முன்பு துளசி இப்போ நீங்க) :-

இல்லை நல்ல நல்ல பெரிய பதிவா போடுறீங்களே அதனால அந்த பதிவுகளுக்குப் பின்னால இருக்கிற ரகசியமென்னன்னு தெரிஞ்சுக்கலாமேன்னு தான் கேட்டேன். சரி விடுங்க.......இப்போ தான் தெரிஞ்சு போச்சே

ஆனாலும் இந்த மாதிரி பதிவு போட்டு எங்கள மாதிரி காஞ்சு கிடக்கிற ஆளுங்கள உசுப்பேத்தக் கூடாது.

ருமாலி ரொட்டியையும் தவா ரொட்டியையும் சாப்டு சாப்டு நாக்கு செத்துப் போச்சு. இப்போ எல்லாம் மிளகாயும் தயிர்சாதமும் தான் அதிகமா பிடிக்குது...... இதில நீங்க வேற நாக்கூற வைக்கறீங்க....

said...

அடேங்கப்பா எத்தனை பேர் பெங்களூரில் இருக்கின்றீர்கள். பதிவுகளும் கமெண்ட்டுகளும் பிரமாதம். பிரமாதம். நான் மறந்து போனாலும் விடாமல் எடுத்துக் குடுத்த சுரேஷுக்கும் கரைவேட்டிக்கும் நன்றி.

said...

அடப் பாவிகளா:-)))))))

இங்கே நாக்கு செத்த நான், ஒரேஒரு தென்னிந்திய ஓட்டல்கூட இல்லாத இடத்துலே
மாட்டிக்கிட்டு முழிக்கிறப்ப அங்கே ரகம் ரகமா தின்னறதுமில்லாம பதிவுவேற போடறீங்களா?

இருங்க இருங்க , அடுத்தவருசம் அங்கே வர்றப்ப ஒரு வெட்டு வெட்டிரணும்.

சரி சரி. ராகவன் இன்னும் எழுதுங்க. இங்கேயிருந்து வர்ற தீஞ்ச வாசனையைக் கண்டுக்கவேணாம்.
குறைஞ்சபட்சம் படிச்சாலாவது, தின்ன ஃபீலிங் வருதான்னு பாக்கலாம்.

எனக்குக் கல்யாணம் ஆன புதுசுலே, ஓய்வு கிடைக்கிறப்ப எல்லாம் நம்ம மீனாட்சி அம்மாவோட
'சமைத்துப்பார்' புத்தகத்தை ஏதோ நாவல் ரேஞ்சுலே படிச்சுக்கிட்டு இருப்பேன். தினம் மூணு இல்லே நாலு
ஸ்வீட் ரெஸிபியைப் 'படிச்சுட்டு', அதை 'மானசீகமா செஞ்சு'பார்த்துட்டு சும்மா இருந்துருவேன்.

இங்கேயும் எம்.டீ.ஆர். குழம்பு பேக்கெட் கிடைக்குது. ஒரு அவசர ஆத்திரத்துக்கு( தினமுமா?)
உபயோகம்தான். அதுலே பெண்டிமசாலா பரவாயில்லே. மத்தது சுமார்தான்.

ஹூம்.... எல்லாம் நல்லா இருங்க.

said...

// சோறு கண்ட இடம் சொர்க்கம்ப்பா எங்களுக்கு! அப்போ சோறைக் காட்டுற நீங்க கடவுளா பூசாரியா? //

வழி காட்டிவது இறைவன் தானே. இறைவனைக் காட்டுவது பூசாரியென்றால் வலைப்பூதான் பூசாரி. நான் கடவுள். (இதெல்லாம் ஓவரப்பூன்னு நீங்க எல்லாரும் சொல்றது எனக்குக் கேக்குது. ஹி ஹி)

// சர்க்கரை வியாதிக்காரங்க அளவோட சாப்பிடறமாதிரி ஹோட்டல் பற்றியும் எழுதுங்க!!!! //

இதுக்கும் ஒரு ஓட்டல் இருக்கு. அதையும் சொல்லனும். அடுத்த பதிவில் சொல்லலாம். ஆனால் சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு அருமையான ரெசிப்பி இருக்கிறது. எல்லாருக்கும் பிடிக்கும். அதை பிறகு தனிப்பதிப்பில் போடுகிறேன்.

said...

// 3. சர்ச் ஸ்ட்ரீட் 'ஒயாஸிஸ்' போயிருகீங்களா? கேரள ஸ்டைல் மீன் கொழம்பு சூப்பர். //

பார்த்திருக்கிறேன். ஆனால் போனதில்லை கரைவேட்டி. இனி ஒருமுறை முயன்று பார்க்கிறேன். சொல்லீட்டீங்கள்ளா....

said...

// ராகவன்,

கதம்பம் மனிப்பால் டவரில் ஒன்று இருக்கிறதே (Strands Book stall பக்கத்தில்) //

அங்கே இருந்தது தங்கமணி. ஆனால் இப்பொழுது இல்லை. எனக்கு பெங்களூரில் ஏனோ பிடிக்காத ஏரியா ஜெயநகரும் ஜேப்பீ நகரும். ஆகையால் அங்கே போவதில்லை. நான் தின்று ருசித்ததெல்லாம், மணிபால் செண்டர் கதம்பந்தான். இப்போது அது இல்லை. சோகமோ சோகம்.

said...

// காமத் சாப்பாடு முன்பெல்லாம் நன்றாக இருக்கும். //

உண்மை தேன் துளி, இப்பொழுது அவ்வளவு நன்றாக இல்லை. காமத் கஷாயம் பற்றியும் சொல்லியே ஆக வேண்டும். இன்னும் பகுதிகள் இருக்கிறதே. கண்டிப்பாகச் சொல்கிறேன்.

said...

// ஆனாலும் இந்த மாதிரி பதிவு போட்டு எங்கள மாதிரி காஞ்சு கிடக்கிற ஆளுங்கள உசுப்பேத்தக் கூடாது. //

கணேஷ், இதுக்குதான் ரெண்டு கிண்டுதம் கத்துக்கிரனும். நீயா செஞ்சி சாப்பிடலாமுல்ல.....

துளசி கோபால், இதெல்லாம் ஒங்கள மாதிரி உள்ளவங்களுக்கும் பெங்களூரில் இருந்துக்கிட்டே திங்கத் தெரியாம திங்குறவங்களுக்கும் எழுதுனதுதான. தீஞ்ச வாசனைய கண்டுக்க மாட்டேன். :-)

மீனாட்சியம்மாள் புத்தகம் அம்மாகிட்ட இருக்கு. ஆனா அத நானோ அம்மாவோ பயன்படுத்தவோ இல்லை. என் சகோதரிகளும் பயன்படுத்தவில்லை. எல்லாம் அளவு செய்கின்ற வேலைதான். வீசையிலும் உழக்கிலும் அளந்து போடத் தெரியாம விட்டாச்சு.

said...

Loved the food at Kadambam – though I went only once and that too to the one in Manipal Centre. Loved the sweet Pongal.

I like the food at Brindavan too and it is so conveniently located.

Coffee House is another place on MG Road where you get reasonably priced okay food and where you can buy a single coffee and sit and chat for hours - they don't shoo you away. I like their lime juice and masala dosa.

I heard MTR is over-rated from a reliable source. Anyway I hate standing in a queue to have food – however wonderful it may be. So have given that a miss.

Street food – I love the masala dosas off Commercial Street. These shops come up after sundown. They serve the dosas piping hot with 3 or 4 types of chutneys – the guy squirts Nandini ghee straight out of the pack on the dosas. They also serve idlis. It is open till late in the night. And I haven’t got indigestion from eating here.

Food is pretty good at Oasis. They don’t mind kids running around either. But they have jacked up the rates of late. And the ambience could be better.

Went to the Kamat on OPH Road this Sunday – service is terrible. Food is passable – the Darshinis and Shanthi Sagars serve better food, faster, cheaper. Tried out the fried idli – it was good. Idlis deep fried to have a golden brown crunchy outer coating – like a vada.

Try out the lunch buffet at Bamboo Shoots on Museum Road. It is the Thai/Chinese restaurant of Museum Inn – just off Church Street. Wonderful food at a very reasonable rate – at Rs.125 plus taxes per head it is a steal. When we went a couple of weeks back the buffet menu featured a variety of salads, 2 soups – sweet and sour chicken soup and a veg soup, yummy vegetable balls, drums of heaven, a fish dish, a chicken dish, noodles, flat noodles and butter fried rice with bamboo shoots. Dessert included crunchy date cakes, a fruit platter and a concoction with jelly, crushed ice, milkmaid and ice cream. Don’t miss it.

said...

நன்றி ஷிரின் (ஒங்க பேர தமிழ்ல ஒழுங்கா எழுதீருக்கேனா?)

பேம்பூ ஷூட் போனதில்லை. அங்கேத்தி போயிருக்கேன். அங்கும் நன்றாக இருக்கும்.

said...

மல்லேஸ்வரம் பேருந்து நிறுத்தத்திற்கு எதிரே ஒரு சிறிய சந்தில் அய்யர் மெஸ் ஒன்று இருக்குது. அங்க சாப்பாடு அமிர்தமா இருக்கும் அதுவும் ரசம் மிளகுதூள் கொஞ்சம் தூக்கலா போட்டு அருமையா இருக்கும்....

said...
This comment has been removed by a blog administrator.
said...

சாப்படு பிடிக்குன்றதால... அதுபத்தி பேச, படிக்க இன்னும் பிடிக்கும். ஃபுல் மீல்ஸ் சாப்பிட்ட திருப்தி... இதில் பிருந்தாவன், நாகர்ஜினா மட்டும் பலமுறை சென்றிருக்கிறேன் (93ல்). இங்கு namma MTR ஆரம்பித்திருக்கிறார்கள் அவ்ளோ சொல்லிக்கிறமாதிரி இல்லை (ஆர்ச்சர்ட் சாலையில் என்பதால் விலையும் அதிகம்).

தொடர்ந்து எழுதுங்கோ... புண்ணியம் கிட்டும்.

said...

அப்படியே ஜெயநகர் 9ப்ளாக் பக்கத்தில் இருக்கும் வுடீஸ் (கொடைக்கானல், கமர்ஷியல் ஸ்ட்ரீட், கோலார் மற்றும் இந்த 4 இடங்களில் மட்டுமே) , அப்புறம் கோரமங்களாவில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள தமிழ்நாடு ஸ்டைல் உணவகம் (ரஹேஜா ரெஸிடென்ஸி பக்கம்), பிடிஎம் லேஅவுட்டில் 16மெயின் உள்ள சரவணபவன் (அண்ணாச்சியுடையது அல்ல).. எல்லாத்தையும் கவர் பண்ணுங்க. என்ன சொல்லுங்க இந்த தர்ஷனியிலும், சாகர் ஓட்டல்களிலும் கிடைக்கும் ஃபில்டர் காபிக்கு இணை தமிழ்நாட்டில் கூட கிடையாது. 4 அல்லது 5 ரூபாயில் - காபின்னா பெங்களூர் காப்பிதான். பேஷ் பேஷ்.

- அலெக்ஸ்