Sunday, September 18, 2005

பெங்களூரில் ஓட்டல்கள் பாகம் - இரண்டு

இரண்டாம் பாகம்

இத்தனை விடுதிகளா என்று மலைத்திருப்பீர்கள். இன்னும் இருக்கின்றன. குறிப்பாக இந்திரா நகரில் இருக்கும் மற்றொரு சைவ விடுதியைப் பற்றிச் சொல்லியே தீர வேண்டும். அதுதான் இட்லி பஜார். சி.எம்.ஹெய்ச் ரோடு என்பது இந்திரா நகரின் மிகவும் பிரபலமான ரோடு. பல பெரிய கடைகள் அங்கே உள்ளன. அங்கு இருப்பதுதான் இட்லி பஜார். தமிழர்களால் நடத்தப் படுவது. சுத்த சைவம். இங்கு மீல்சும் கிடைக்கிறது.

இருந்தாலும் இங்கு பலகாரங்களே மிகப் பிரபலம். கையைக் கடிக்காத விலை. வாயை விடாத சுவை என்று சமீபத்தில் பிரபலமான கடைகளில் இதுவும் ஒன்று. இங்கு இட்டியிலேயே பல வகை. தோசையில் பல வகை என்று நமது நாவிற்கு வேலை கொடுத்துக் கொண்டே இருக்கின்றார்கள். அனைத்திலும் கொத்துமல்லி இட்டிலி முன்னிலையில் இருக்கிறது என்று சொல்வேன். மெத்தன வெந்த இட்டிலிகளை நான்காக வெட்டி, அவைகளைக் கொத்துமல்லிச் சட்டினியில் பிரட்டி எடுத்துத் தேங்காய்ச் சட்டினியோடும் பொடியோடும் தருவார்கள். கண் முந்தியதோ. கை முந்தியதோ. வாய் முந்தியதோ. வயிறு முந்தியதோ என்றுதான் சொல்ல வேண்டும். இங்கு அடையும் நன்றாகவே இருக்கிறது. கொஞ்சம் மெல்லிசாக இருந்தாலும் சிவக்கச் சுட்டுத் தருகிறார்கள். கூட அவியலும். சொல்லவே வேண்டாம். கண்டிப்பாக ஒருமுறையேனும் போக வேண்டிய கடை.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய மற்றொரு விடுதி ஹள்ளி மனே. அதாவது தமிழில் பட்டி வீடு. பட்டிக்காட்டு வீடு என்ற பெயரில் கர்நாடக உணவு வகைகள் கிடைக்கின்றன. மல்லேஷ்வரத்தில் இருக்கிறது இந்த ஹள்ளி மனே. இங்கும் மீல்ஸ் மற்றும் டிபன் வகைகள் கிடைக்கும். ஐம்பது ரூவாயில் மீல்ஸ். தக்காளி சூப் தருகிறார்கள். நானும் பனீர் பட்டர் மசாலாவும் வருகிறது. அனேகமாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சப்ஜி தருகிறார்கள் என நினைக்கிறேன். பிறகு புலாவும் தாலும் (அதாங்க பருப்பு). அப்புறம் வழக்கமான கூட்டு, பொரியல், சாம்பார், ரசம், தயிர் என்று சம்பிரதாயமாக முடியும்.

கர்நாடக சாம்பார்களைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். தமிழர்கள் எல்லாரும் பெங்களூர் வந்ததுமே கன்னட சாம்பார் எதிர்ப்புச் சங்கத்தில் தங்களைப் பதிவு செய்து கொள்வார்கள். பருப்பிருக்கும். ஆனால் இருக்காது. காயிருக்கும். ஆனால் இருக்காது. சுவையிருக்கும். ஆனால் இருக்காது. லேசாக இனிப்பாக இருக்கும் அந்தச் செந்நிறக் குழம்பில் மிதக்கும் வெள்ளரிக்காயைக் கண்டு பயந்து பரதேசம் போனவர்களைப் பட்டியல் போட முடியாது. பயமுறுத்தவில்லை. உண்மையைச் சொல்கிறேன்.

ரசம் கொஞ்சம் தப்பித்துக் கொண்டது. அதே முறையான உடுப்பிக்காரர்களின் மென்சின் சாறு (மிளகாய்ச் சாறு) என்றால் விடாதீர்கள். கொஞ்சம் கிண்ணத்தில் வாங்கிச் சாப்பிடுங்கள். நன்றாக இருக்கும்.

சரி. ஹள்ளி மனேக்கு வருவோம். இங்கு வழக்கமான இட்டிலி தோசை வகைகள் எல்லாம் கிடைக்கும். கர்நாடகத்தில் அக்கி ரொட்டி என்று பிரபலம். அக்கி என்றால் அரிசி. அரிசியில் செய்த ரொட்டிதான் அக்கி ரொட்டி. செய்வது எளிதுதான். ஆனாலும் பழக்கம் வேண்டும். முடியாதவர்கள் நேராக ஹள்ளி மனேக்குச் சென்று வாங்கித் திங்கலாம். ஏற்கனவே சர்க்கரை. இதற்கு மேலே அக்கி ரொட்டியா என்று சர்க்கரை வியாதிக்காரர்கள் அலுத்துக் கொள்ள வேண்டாம். அங்கே ராகி ரொட்டியும் கிடைக்கிறது. கேழ்வரகில் செய்த ரொட்டி. சுவையாக இருக்கும். எண்ணெய் குறைவாக ஊற்றிச் செய்யச் சொல்லுங்கள். கூட தேங்காய்ச் சட்டினியும் வெங்காயச் சட்டினியும் தருகிறார்கள். ஒன்றோடு நிறுத்த மாட்டீர்கள். கூட்டம் குறைவாக இருக்கும். ஆகையால் நின்று கொண்டுதான் சாப்பிட வேண்டியிருக்கும்.

காமத் யாத்ரீ நிவாஸ் பற்றியும் சொல்ல வேண்டும். இதுவும் கன்னட ஓட்டல்தான். பெங்களூரில் மெஜஸ்டிக் பகுதியில் இருக்கிறது. இங்கு மீல்ஸ் என்றால் சப்பாத்தி கிடைக்காது. ஜோளத ரொட்டிதான் கிடைக்கும். அதாவது சோள ரொட்டி. சப்பாத்தி போலத்தான் இருக்கும். ஆனால் சுவையில் சின்ன மாற்றம். வடகர்நாடகாவில் சோளம் மிகப் பிரசித்தம். அத்தோடு கத்தரிக்காய்க் கூட்டு. இது போதும் அவர்களுக்கு. வெளுத்து வாங்குவார்கள்.

இப்பொழுது காமத் யாத்ரீ நிவாஸ் அவ்வளவு நன்றாக இல்லை என்று சொல்கிறவர்களும் உண்டு. நானும் போய் நாளாகிறது. பெங்களூரிலிருந்து மைசூர் போகும் வழியில் ஒரு காமத் யாத்ரீ நிவாஸ் இருக்கிறது. அங்கே உணவோடு வெற்றி வேரில் செய்த பொருட்களும் கிடைக்கும். நான் இரண்டு வெற்றி வேர் விசிறிகள் வாங்கினேன். வெற்றி வேர் செருப்பு, பை, பர்ஸ் என்று பல பொருட்கள் கிடைக்கின்றன.

மேலும் அங்கு போனால் கஷாயா பேக்கு என்று கேளுங்கள். அதாவது கஷாயா வேண்டும். இது சுக்குத் தண்ணி போலத்தான். ஆனால் பாலோடு கலந்து தருவார்கள். மெல்லிய நறுமணம் கமழ சுவையாக தொண்டைக்குள் கஷாயா இறங்கும் சுகமே அலாதி. அதுவும் மாலை வேளையில் லேசாக காத்து வீசும் பொழுதென்றால் கேட்கவே வேண்டாம். இன்னொந்து கஷயா என்று நீங்கள் கேட்கா விட்டால் உணவை வாழ்வதற்காகவே சாப்பிடுகிறவர் நீங்கள். அங்கே ரவாதோசையும் நன்றாக இருக்கும்.

பெங்களூரில் நாட்பட இருப்பவர்கள் கேட்டிருக்கும் மற்றொரு உணவு ராகி மொத்தே. கேள்வரகுக் களியின் உருண்டை வடிவம். தேவே கவுடாவிற்கு மிகவும் பிடித்த உணவு. வடகன்னடட்தில் சோளம் என்றால் தெற்கில் கேப்பை. இதை எல்லாரும் விரும்பி உண்வுவது கடினந்தான். ஆனால் எனக்கு மிகவும் பிடிக்கும். இதை சைவ அசைவ முறைகளில் சாப்பிடலாம். சைவ முறையென்றால் தயிரே சிறந்தது. ராகி மொத்தேயை தட்டில் போட்டுப் பிசைந்து அதில் தயிரை ஊற்றிப் பிசைந்து கொண்டு, கொஞ்சம் உறைப்பாக எதையும் தொட்டுக் கொண்டு சாப்பிட்டால் அமுதமாக இருக்கும். நான் பச்சை மிளகாயை கடித்துக் கொண்டும் சாப்பிட்டிருக்கிறேன். விதான சவுதாவை ஒட்டியிருக்கும் எம்.எல்.ஏ ஹாஸ்டலுக்குள் போக முடிந்தவர்கள் அங்கிருக்கும் விடுதியில் சாப்பிட்டுப் பாருங்கள். நன்றாக இருக்கும்.

அசைவ முறைப்படி என்றால் கறிக்குழம்புதான். கருப்பாக இருக்கும் உருண்டையின் தலையில் கறிக்குழம்பை ஊற்றிச் சாப்பிடுகிறவர்களைப் பார்த்தீர்களானால் அவர்கள் இந்த உலகத்தில் இல்லை என்பது விளங்கும். ஆனால் ஒன்று. ராகி மொத்தே சாப்பிட வேண்டுமானால் நல்ல விடுதியைத் தேர்ந்தெடுத்து உண்ணுங்கள். அங்கு நீங்கள் சந்திக்கும் கன்னட நண்பர்களிடம் கேட்டுச் செல்லுங்கள்.

இப்படி அடுக்கிக் கொண்டே போகையில் மற்றொன்றையும் சொல்லியே ஆக வேண்டும். ஆமாம். ஆந்திர ஓட்டல்களைத்தான். ஆந்திரா ஸ்டைல் என்ற பெயரைப் போட்டுக் கொண்டு பெங்களூரில் தெருவிற்கு ஒரு ஓட்டலாவது இருக்கிறது. அவைகள் எந்த அளவிற்கு ஆந்திர உணவுகளைக் குடுக்கின்றன என்று தெரியாது. அவைகளில் சிலவற்றைச் சொல்லியே ஆகவேண்டும். காரணம் நானும் அங்கு போய் வெளுத்து வாங்கியிருக்கிறேன்.

நந்தினி என்றால் காமதேனுவின் மகள். அள்ளக் குறையாத உணவு தரும் நந்தினிக்காகத்தான் விசுவாமித்திரரே சண்டை போட்டாராம். அந்தப் பெயரில் அமைந்திருக்கும் இந்த ஆந்திர ஓட்டல் பெங்களூரில் பல கிளைகளை வைத்துள்ளது. அனைத்திலும் சுவை கிட்டத்தட்ட ஒரே போலத்தான் இருக்கும்.

இங்கு ஆந்திர மீல்ஸ் கிடைக்கும். அத்தோடு ரொட்டி, நான் போன்ற வடக்கத்தி உணவுகளும் கிடைக்கும். அத்தோடு அசைவ உணவு வகைகளும் இங்கு மிகவும் பிரசித்தம். ஐதராபாத் பிரியாணியும் இங்கு கிடைக்கும். ஆனாலும் இங்கு எனக்கு மிகவும் பிடித்தது தோசை இட்டிலி கூட்டணிதான்.

மாலை வேளைகளில் மட்டும் தோசை+கோழிக் குழம்பு, தோசை+ஆட்டுக்கறிக் குழம்பு ஆகியவை கிடைக்கும். நாட்டுக் கோடி புலுசு, மாம்ச புலுசு என்று சொல்வார்கள். சேப்பாலு புலுசு (மீன் குழம்பு)ம் கிடைக்கும். இட்டிலிப் பிரியர்கள் தோசைக்குப் பதிலாக இட்டிலி வாங்கிக் கொள்ளலாம். லேசான குளிரடிக்கும் பெங்களூரின் மாலை வேளைகளில் (குறிப்பாக மழைக்காலத்தில்) இந்தக் கூட்டணியை அடித்துக் கொள்ள ஒன்றுமேயில்லை. சைவப் பிரியர்களுக்காக கேரட் 65 கிடைக்கிறது. நன்றாகவே இருக்கிறது. சிக்கன் 65 அளவிற்கு இல்லையென்றாலும் சைவர்களுக்குச் சுவையாகவே இருக்கும்.

இத்தோடு இரண்டாம் பாகம் முடிந்தது. அடுத்த பாகத்திலும் ஆந்திரா தொடரும். அதுவும் ஒரு அருமையான ஓட்டலோடு.

12 comments:

said...

ராகவன்,

இந்த மாதிரிப் பதிவுகளையெல்லாம் இனி ரகஸியமா வச்சுக்கணும்.
நம்ம ராமனாதனும், தாணுவும் கூட்டணி போட்டுக்கிட்டு யாராரு பதிவுலே
சாப்பாடு ஐட்டம் பத்தி எத்தனைதடவை வருதுன்னு கணக்குப் பாக்குறாங்கப்பா.
ஏதோ எண்ணிக்கை இருக்கு போல. மீறுனா எழுதறவங்களுக்கு 'டயட்'
சொல்லுவாங்களாம்.

சாப்புடன்னு ஒரு ஜென்மம் தனியா எடுக்க முடியுமா? அதான் இப்ப இருக்கற ஜென்மத்துலேயே
கொஞ்சம் வாய்க்கு ருசியா சாப்புட்டுக்கலாமுன்னா, விடமாட்டாங்க போல:-)

ஜாக்கிரதை. கவனம் தேவை.

வர வர எதுக்குத்தான் பயப்படறதுன்னே தெரியலை.

said...

அடடா! இதென்ன பயமுறுத்துறீங்க? இதுலயும் டயட்டா? இது நான் பெங்களூரு வந்த ஆறரை வருசத்துல சாப்புட்டதுங்க. ஒரே நாளுல இல்ல.

இதுல டயட் வேறயா? சரி. டயட்தான. டயட் கண்ட்ரோல் இல்லையே. ஹி ஹி.

said...

புதுசு புதுசா ஏகப்பட்ட ஐட்டங்கள் சொல்றீங்க..

//வெந்த இட்டிலிகளை நான்காக வெட்டி, அவைகளைக் கொத்துமல்லிச் சட்டினியில் பிரட்டி //

சதுரமா வெட்டின இட்லியோட தேங்காய், உளுத்தம்பருப்பு, கடுகு, பச்ச மிளகாயெல்லாம் சேர்த்து தாளிப்பாங்களே? இட்லி உப்புமா, அது மாதிரியா?

//கர்நாடக சாம்பார்களைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும்//
//செந்நிறக் குழம்பில் மிதக்கும் வெள்ளரிக்காயைக் கண்டு பயந்து //

என்னங்க இது? சாம்பாரில இத இதத்தான் போடுறதுங்கறது கிடையாது?

இன்னொரு விஷயம், நம் சமையலில் இன்றியமையாததாகிவிட்ட ஒன்று சாம்பார். ஆனால் இந்த சாம்பார் என்பதே மராட்டிய மன்னன் சரபோஜி காலத்தில்தான் தமிழ்நாட்டுக்கு வந்ததுன்னு கொஞ்ச நாள் முன்னாடி படிச்சேன். அதுக்கு முன்னாடி இட்லி தோசையையெல்லாம் நம்ம மக்கள் ரெகுலரா எதுல முக்கி சாப்பிட்டுருப்பாங்கன்னு தெரியலையே?

//காமத் யாத்ரீ நிவாஸ் //
ஒரு 15 வருஷத்துக்கு முன்னாலன்னு நினைக்கிறேன். இந்த காமத் ஓட்டலுக்குப் போய்ட்டுதான் என் பம்பாய் கஸின் ஸ்டைலா நான் -னு ஆர்டர் பண்ண, நமக்கு நான்-னா என்னவென்றே தெரியாதுங்கறத எப்படி காட்டிக்கிறது? நானும் அதே ஆர்டர் பண்ணி முதல்முதலா சாப்பிட்டது அப்போதான்.

துளசியக்கா,
//நம்ம ராமனாதனும், தாணுவும் கூட்டணி போட்டுக்கிட்டு யாராரு பதிவுலே
சாப்பாடு ஐட்டம் பத்தி எத்தனைதடவை வருதுன்னு கணக்குப் பாக்குறாங்கப்பா//
மருத்துவர் பாதுகாப்பு கழகத்தின் சார்பாக, உங்களுக்கு ஸ்பெஷல் டிஸ்கவுண்ட்.. டயட்டெல்லாம் வேணாம். நீங்க பாட்டுக்கு சாப்பாடு பதிவு போடுங்க..ஆனா, நிறைய போடணும்..

சால்னா பத்தி ராகவன் சார் சொன்னாரே இன்னும் பாக்கலியா? அதப்பத்தி மூச்சே விடலியே ;)

சே.. மெகாத்தொடர் எழுத ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சேன். பின்னூட்டம் போடறது கூட ஒரு பெரிய பதிவு மாதிரி வந்துடுது! :(

said...

// சதுரமா வெட்டின இட்லியோட தேங்காய், உளுத்தம்பருப்பு, கடுகு, பச்ச மிளகாயெல்லாம் சேர்த்து தாளிப்பாங்களே? இட்லி உப்புமா, அது மாதிரியா? //

கிட்டத்தட்ட அப்படித்தான் ராமநாதன். ஆனால் எங்கள் வீட்டில் இட்டிலி உப்புமா என்றால் இட்டிலியை உதிரியாக உதிர்த்து விடுவோம். நீங்கள் சொன்ன மாதிரி பக்குவத்திலேயே இவர்கள் கொத்துமல்லிச் சட்டினியையும் கலந்திடுகிறார்கள். அவ்வளவே.

// என்னங்க இது? சாம்பாரில இத இதத்தான் போடுறதுங்கறது கிடையாது? //

எனக்கும் மொதல்ல ஒரு மாதிரிதான் இருந்தது. இப்ப பழகீருச்சு.

// இன்னொரு விஷயம், நம் சமையலில் இன்றியமையாததாகிவிட்ட ஒன்று சாம்பார். ஆனால் இந்த சாம்பார் என்பதே மராட்டிய மன்னன் சரபோஜி காலத்தில்தான் தமிழ்நாட்டுக்கு வந்ததுன்னு கொஞ்ச நாள் முன்னாடி படிச்சேன். அதுக்கு முன்னாடி இட்லி தோசையையெல்லாம் நம்ம மக்கள் ரெகுலரா எதுல முக்கி சாப்பிட்டுருப்பாங்கன்னு தெரியலையே? //

இல்லை ராமநாதன். சாம்பார் என்ற பெயர் புதிதாக இருக்குமோ என்னவோ. ஆனால் குழம்பு என்பதே தூய தமிழ்தான். புறநாநூற்றிலேயே இந்தச் சொல் இருக்கிறது. பருப்புக் குழம்புதான் சாம்பாராக மாறியிருக்கும்.

இன்றைக்கு பிரியாணி என்கிறோம். என்னவோ அங்கிருந்து வந்தது. இங்கிருந்து வந்து என்கிறார்கள். நம்ம தமிழ் இலக்கியத்துல இதுக்கு ஊன்சோறுன்னு பேரு.

எல்லாம் இங்க உள்ளதுதான். வேற பேருல வரும்போது நம்ம பேர மாத்திக்கிர்ரோம்.

said...

//இருந்தாலும் இங்கு பலகாரங்களே மிகப் பிரபலம். கையைக் கடிக்காத விலை. வாயை விடாத சுவை//

டெல்லியில் வாயை விடாத சுவை பலகாரங்கள் கிடைக்கின்றன ஆனா பாருங்க கையைக் கடியோ கடின்னு கடிக்குதுங்க

//நந்தினி என்றால் காமதேனுவின் மகள். அள்ளக் குறையாத உணவு தரும் நந்தினிக்காகத்தான் விசுவாமித்திரரே சண்டை போட்டாராம். அந்தப் பெயரில் அமைந்திருக்கும் இந்த ஆந்திர ஓட்டல் பெங்களூரில் பல கிளைகளை வைத்துள்ளது. அனைத்திலும் சுவை கிட்டத்தட்ட ஒரே போலத்தான் இருக்கும்.//

உண்மையில் தெரியாத இடங்களைப் பற்றி படிக்கும் பொழுது ஒருவித சலிப்பு ஏற்படும் ஆனா நீங்க தரும் உபரி தகவலுக்காகவே உங்க பதிவுகளைப் படிக்கிறேன்.

said...

சாப்பாடாக இருக்கட்டும், ஆன்மீகமாக இருக்கட்டும், இராகவன் அண்ணா சும்மா புகுந்து விளையாடிடுவார்.

இதுக்காகவே பெங்களூர் வரணமுங்கோ.

said...

// உண்மையில் தெரியாத இடங்களைப் பற்றி படிக்கும் பொழுது ஒருவித சலிப்பு ஏற்படும் ஆனா நீங்க தரும் உபரி தகவலுக்காகவே உங்க பதிவுகளைப் படிக்கிறேன். //

நன்றி கணேஷ். இன்னும் விறுவிறுப்பாக எழுத முயல்கிறேன்.

// இதுக்காகவே பெங்களூர் வரணமுங்கோ. //
வா பரஞ்சோதி வா. பெங்களூர் உன்னை வரவேற்கிறது.

said...

After reading the posting recommended by Kumaran I chanced upon your two postings on B'lore eating places.
One more place I enjoy is Raghavendra Prasanna tiffin room behind K.R. Market. The iddlies here with unlimited real coconut chatney is so soft and tasty that you can't stop with one plate.
They also serve Poori sagu, Upma and real good coffee.
K.V.Pathy.

said...

தலைவரே!

பேச்சலர்களின் சொர்க்கமான மடிவாளா மாருதிநகர் மெயின் ரோடு 'பொங்கல் (ஜீவன்பீமாநகரிலும், ஈஸ்ட் என்டிலும் கிளைகள் உள்ளன), நளாஸ் கஃபே, காரைக்குடி மெஸ்'ஸையெல்லாம் விட்டுட்டீங்களே!


சரி .. முதல் பாகத்துக்கு சுட்டி குடுங்க .. தேடிப்பார்த்தேன் கிடைக்கல .. :)

said...

இப்போ அஞ்சப்பர் உணவகம் கோரமங்களா இன்னர் ரிங் ரோட்ல நந்தினிக்குப் பக்கத்திலேயே ஆரம்பிச்சுட்டாங்க .. ஐந்து மாடி என்று நினைக்கிறேன் ..

said...

ஆமா உங்க பதிவு சூடான இடுகைகளில் வந்திருக்கே .. சூடான சாப்பாடு பற்றிய பதிவுன்றதுனாலயா?

:)))

said...

அப்புறம் 'கன்னட சாம்பார் எதிர்ப்புக் கழக'த்தில் நானும் உறுப்பினர் தான். முதல் நாள் செக்கச்செவேல்ன்னு இருந்ததைப் பார்த்துட்டு காரத்தால நாக்கு புண்ணாகப்போகுதுன்னு வாயில வைச்சா ஒரு இனிப்பு இனிச்சது பாருங்க .. அட .. அட .. ச்சை ன்னு ஆகியிருச்சு .. அதுக்கபுறம் அதைத் தொடுறது கூட கிடையாது.... :))