Sunday, September 25, 2005

தருமனும் தருமமும்

தருமனும் தருமமும்

அந்தப் புட்பக விமானம் கால தேச வர்த்தமானங்களைக் கடந்து உயரப் போய்க் கொண்டிருந்தது. அழகிய பொன் விமானம். அதற்கு முத்து விதானம். தருமனும் தருமதேவதையும் அதில் பயணித்துக் கொண்டிருந்தார்கள். இருவர் முகத்திலும் பெருமிதம்.

பின்னே. ஐந்து தம்பியருடனும் திரவுபதியுடனும் நாட்டைத் துறந்து சொர்கம் புக வந்து, தனியொருவனாகப் போகிறான் அல்லவா. முதலில் திரவுபதி வீழ்ந்தாள். அடுத்து சகாதேவன். கொஞ்ச நேரத்திலேயே நகுலன். அந்தோ! அழகிய அருச்சுனனும் மாண்டான். பலசாலி பீமன் கூட பாவம். வீழ்ந்தான். மிஞ்சியன் தருமனே. அவனை, தன் மகனை உடலோடும் உயிரோடும் சொர்க்கத்திற்கு அழைத்துக் கொண்டு போகிறான் தருமதேவதை. ஆகையால்தான் இருவர் முகத்திலும் பெருமிதம்.

தருமதேவன் சொர்க்கத்திலேயே தங்க முடியாது. அவனுடைய உலகத்திற்குச் சென்று காலம் தவறாமல் காலன் பணியைச் செய்ய வேண்டும். ஆகையால் மகனைச் சொர்க்கம் ஏற்றி விட்டு அவனும் உடனே விலக வேண்டும். கடமை தவறினால் சர்வேசுவரன் விட மாட்டான்.

தருமனுக்கும் மகிழ்ச்சிதான். "சொர்க்கத்தில் தம்பியரைச் சந்திக்கலாம். திரவுபதையைச் சந்திக்கலாம். பெரிய பாட்டனார் பீஷ்மரையும், ஆசான் துரோணரையும், குலகுரு கிருபாச்சாரியரையும் சந்திக்கலாம். தாயார் குந்தியையும் கூடவே சிற்றன்னை மாதிரியையும் சந்திக்கலாம். என்னதான் இருந்தாலும் பெரியப்பா திருதுராட்டினரையும் பெரியம்மா காந்தாரியையும் கண்டிப்பாக வணங்க வேண்டும். பீமன் என்று நினைத்து இரும்புத் தூணை நொறுக்கினாரே பெரியப்பா. அது போல தன்னையும் நொறுக்கி விடாமல் இருக்க பேசாமல் அவர் காலில் விழுந்து வணங்குவதே நல்லது." இன்னும் உயிராசை தருமனை விடவில்லை.

ஆசைகளும்தான். "பேசாமல் தம்பியரையும் தாயாரையும் திரவுபதையையும் கூட்டிக் கொண்டு ஒருபுறமாக சென்று ஒதுங்கி வாழ வேண்டும். பின்னே! மற்ற உறவினர்களைச் சந்திக்கையில் தேவையில்லாமல் போர் நினைவுகளும் அதில் நடந்த கொலைகளும் அக்கிரமங்களும் வரும். நம்முடைய பொய்யால்தான் துரோணரும் வீழ்ந்தார். அவர் நம்மை மன்னிக்க மாட்டார். அவரிடமிருந்தும் தள்ளியிருப்பதே நல்லது. துரியோதனாதிகள் நூறுவரும் நிச்சயம் நரகத்தில் இருப்பார்கள். ஆகையால் அவர்களால் பிரச்சனையில்லை. கர்ணர் எங்கிருப்பார்? நமது அண்ணன் ஆகையால் சொர்கத்தில்தான் இருக்க வேண்டும்." புதிதாக இந்த அண்ணன் பாசம் வேறு.

"அவர் நம்மோடு வருவாரா? ஒருவேளை துரியோதனனோடு இருக்க அவரும் நரகத்திற்குப் போயிருந்தால்?" தருமனின் மூளை கணக்குப் போட்டது. முடிவும் கண்டது. "சரி. அம்மாவிடம் சொல்லிக் கூப்பிடலாம். அம்மாவின் மீது அண்ணனுக்குப் பாசமுண்டு. இல்லையென்றால் உண்மையைச் சொல்லக்கூடாது என்ற வரமும் வாங்கி, போர்க்களத்தில் தான் வீழ்ந்தால் தன்னை மடியில் தூக்கி வைத்துக் கதற வேண்டும் என்று கேட்டிருப்பாரா? அம்மாவை வைத்துத்தான் அண்ணனை வளைக்க வேண்டும். அட! இதென்ன நறுமணம். மனதை மயக்குகிறதே. சொர்கம் வந்து விட்டதா?"

ஆம். உண்மையிலேயே சொர்கம் வந்து விட்டது. புட்பக விமானமும் நின்றது. மகனை இறங்கச் சொன்னான் தருமதேவதை. "மகனே. உடலோடு சொர்கம் புகுந்தான் என் மகன் என்ற பெருமை எனக்கு. இனியும் உன்னோடு நான் வரலாகாது. தரும விதிகளின் படி உன்னை இங்கு அழைத்து வரத்தான் கடமை. அதற்கு மேல் நான் என் கடமையைச் செய்யச் செல்ல வேண்டும். நீ இப்படியே சென்றால் உனக்கு வேண்டியவர்களையெல்லாம் காண்பாய். நான் வருகிறேன்."

தருமதேவதை புட்பக விமானத்தில் புறப்பட்டதும் வந்தடைந்த இடத்தை நன்றாகக் கவனித்தான். பச்சைப் பசேலென்று எங்கும் புல்வெளிகள். மரங்கள். செடிகள். கொடிகள். அவைகளில் மலர்கள் பூத்து நறுமணம் எங்கும் பரவியிருந்தது. கடும் வெயிலும் இல்லை. நடுக்கும் குளிரும் இல்லை. இதமான தட்பவெட்பம் சுகமாக இருந்தது. ஒரு பெரிய ஆறு ஓடிக் கொண்டிருந்தது. ஆற்றில் தண்ணீர் நிறைய ஓடினாலும் கரையைத் தாண்டவில்லை. சொர்கமல்லவா! வெள்ளம் வராது.

ஆற்றில் எல்லா உயிர்களும் ஒன்றாகவே தண்ணீர் குடித்தன. புலியும் பசுவும் கூடிக் குடித்தன. புலியும் பசுவைத் துறத்தவில்லை. பசுவும் மருளவில்லை. வரிசையாக நடப்பட்டிருந்த மரங்களின் ஓரமாகச் சென்ற பாதையில் நடந்தான் தருமன். சொர்கத்தின் விந்தைகளை வியப்பாக பார்த்துக் கொண்டு சென்றான். என்ன இருந்தாலும் ஊருக்குப் புதிதுதானே.

"இதென்ன சொர்கம். மயன் நமக்குக் கட்டிக் கொடுத்த மாளிகையையும் தோட்டத்தையும் விட அருமையாக இருக்கிறதே. இங்கே ஒரு ஆனந்த அமைதி நிலவுகிறதே. எப்படி? ஒரெ விலங்குகளும் பறவைகளுமாகத் தெரிகின்றனவே. மனிதர்கள் எங்கே இருப்பார்கள்? தேவர்கள் எங்கே இருப்பார்கள்? நான் வருகிறேன் என்று யாருக்கும் சொல்லவில்லையா? கிருஷ்ணர் கூட வந்து வரவேற்கவில்லையே. ஒவ்வொருவராக எங்கு போய்த் தேடுவது?"

கொஞ்ச தூரம் செல்லச் செல்ல பொன் மாளிகைகள் தொலைவில் தென்பட்டன. அங்குதான் எல்லாரும் இருக்க வேண்டும் என்று எண்ணி நடந்தான் தருமன். "பெரிய ஊர் போலத் தெரிகிறது. இவ்வளவு பெரிய அழகான மாளிகைகள் தெரிகின்றன. நமக்கு வேண்டியவர்கள் எல்லாம் இங்குதான் இருக்க வேண்டும். ஒவ்வொருவராகப் போய்ப் பார்க்கலாம். முதலில் யாரைப் பார்ப்பது? திரவுபதியைப் பார்த்து நாளாயிற்று. அவளோடு கூடிக் களிக்க வேண்டும். தாயாரை முதலில் பார்த்தாலும் நல்லதே. ஆசி வாங்கலாம். இவர்கள் எங்கேயிருக்கின்றார்கள் என்று ஊருக்குள் போய் கேட்கலாம்."

இப்படி நினைத்துக் கொண்டு நடக்கையில் எதிரே ஓடி வந்தான் சகுனி. "தருமா! வா! வா! நீ வருவதாகச் சொன்னார்கள். அதான் ஓடி வந்தேன்." பாசம் மிகுந்த குரலில் அழைத்தான் சகுனி.

"அடடா! முதலில் போயும் போயும் சகுனி முகத்திலா விழிக்க வேண்டும். இவர் எப்படி இங்கு வந்தார்? இவர் செய்த அட்டூழியங்களுக்கு நரகத்தில் எண்ணெய்க் கொப்பரையில் வெந்து கொண்டிருப்பார் என்று நினைத்தேன். தீயவர்கள் நரகத்தில் நெருப்புக்கு இரை என்றுதானே வேதம் சொல்கிறது. இவரைப் பார்த்தால் சுகமாக உண்டு வாழ்கிறவரைப் போலிருக்கிறாரே!"

"என்ன தருமா யோசனை?" சகுனி இடைமறித்தார்.

"இல்லை மாமா. எல்லாரும் எங்கே இருக்கிறார்கள் என்று தேடினேன். இங்கே என்ன ஏது என்று ஒன்றும் புரியவில்லை. இது சொர்கந்தானா?" கொஞ்சம் ஐயத்தோடே கேட்டான் தருமன்.

சிரித்து விட்டான் சகுனி. "மருமகனே! உன்னை உண்மையான பாசத்தோடு நான் வரவேற்றதிலிருந்தே தெரியவில்லையா! இது சொர்கந்தான் மருமகனே."

இத்தனை கொடுமை செய்த மாமனும் சொர்கத்தில் இருப்பதை தருமன் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை. தருமன் நினைத்ததைச் சகுனி புரிந்து கொண்டான். "மருமகனே! ஏதடா இவ்வளவு அடாது செய்த மாமன் சொர்கத்திலும் விடாது தொடர்ந்து வருகிறானே என்று பார்க்கிறாயா? நான் செய்த காரியங்கள் அனைத்தையும் இறைவன் பெயரால் செய்ததால் சொர்கம் எனக்கு கதவு திறந்தது. காந்தார தேசத்திலிருந்து அஸ்தினாபுரம் வந்தவன் நான். ஆனாலும் இறைவனை விடாது தொழுது, அவன் பெயரிலேயே அனைத்தையும் செய்ததால் இறைவன் அருளிய பரிசு இது."

தருமனக்கு இன்னொரு ஐயம் வந்தது. "அப்படியென்றால் தாங்கள் காந்தார தேசத்துச் சொர்கத்தில் அல்லவா இருக்க வேண்டும்? இங்கு என்ன செய்கின்றீர்கள்? காந்தாரி பெரியம்மா இருப்பதால் இங்கும் வந்து விட்டீர்களா?"

சிரித்து விட்டான் சகுனி. தருமனுக்குப் பதமாகச் சொன்னான் ஒரு மறுமொழி. "சொர்கம் என்பது தேசங்களுக்கல்ல. நேசங்களுக்கு. இங்கு அன்பின் வழியதுதான் அனைவரின் நிலை. மாண்டாரை அன்றி உயிரோடு மீண்டார் சொர்கத்தின் மகத்துவத்தை அறியார் என்பது உண்மைதான் போலும். மேலும் நீ உன் காந்தாரி பெரியம்மாவைப் பற்றிச் சொன்னாய். மருமகனே. நானும் ஒரு அண்ணன். எனக்கும் சகோதரி மேல் கொஞ்சம் பாசம் உண்டு. இங்கு வந்த பிறகு அது பல்கிப் பெருகி விட்டது. மேலும் காந்திரியைப் பார்க்கும் பொழுது உண்டாகும் அதே பாசம் உனது தாய் குந்தியைப் பார்த்தாலும் இப்பொழுது வருகிறது. சொர்க்கத்திற்கு நன்றி."

"என்ன அம்மாவையும் பெரியம்மாவையும் பார்த்தீர்களா?" ஆவல் பொங்கக் கேட்டான் தருமன்.

"ஆம் தருமா! உன்னுடைய தாயும் நலம். பெரியம்மாவும் நலம். இன்னொன்றும் சொல்ல வேண்டும். இங்கு உனது பெரியம்மா கண்களைக் கட்டிக் கொண்டிருக்கவில்லை. ஏனென்றால் சொர்கத்தில் குருடர்கள் இல்லை. உன்னுடைய பெரியப்பா அனைத்தையும் பார்க்கலாம். ஆகையால் கண்ணைக் கட்டிக் கொள்ளாத உனது பெரியம்மாவைப் பார்க்க உனக்கே புதுமையாக இருக்கும். சரி. வா. போய்ப் பார்க்கலாம்."

யுதிஷ்டிரன் வியப்பின் உச்சிக்கே போனான். சரி பெரியம்மாவையும் பெரியப்பாவையும் சந்தித்து ஆசி பெற எண்ணி சகுனியுடன் சென்றான்.

சற்று முன்னே நடந்திருப்பார்கள். யாரோ ஒரு பெண் சிரித்துக்கொண்டே சாலையின் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்கு ஓடினாள். அவள் சரக்கென்று கடந்து போனதால் அடையாளம் தெரியவில்லை. பின்னால் ஒரு ஆண்மகனும் ஓடினான். அட! அது கர்ணன். தருமனுக்குப் பாசம் பொத்துக் கொண்டு வந்தது. "அண்ணா என்று அழைத்தான்."

கர்ணனும் திரும்பிப் பார்த்தான். முகத்தில் வியப்பும் அன்பும் தெரிந்தன. கொடுத்துப் பழக்கப் பட்ட கர்ணனிடத்தில் கொடுக்க அன்பும் நிறைய இருந்தது. "தம்பி, நலமா? உன்னை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்." தருமனைக் கட்டி அணைத்துக் கொண்டான்.

தருமனுக்குக் கண்ணில் தண்ணீர் வழிந்தது. "அண்ணா என்று உங்களை வாய் நிறைய பூமியில் கூப்பிட முடியாமல் போனதை நினைத்து நான் வருந்தாத நாளே இல்லை. நீங்கள் இருந்து ஆட்சி செய்ய வேண்டிய அரியணையை நட்புக்காக துரியோதனனுக்குக் கொடுக்க போர் புரிந்தீர்களே. ஐயோ! உங்களுக்கு உரிய அந்த ஆட்சியை நான் அபகரித்தேனே. அண்ணா! எனக்கு மன்னிப்பே கிடையாது. இந்த பாவத்திற்கு விமோசனமே கிடையாதே!"

அழுத தம்பியைத் தேற்றினான் கர்ணன். "தம்பி யுதிஷ்டிரா, அழாதே. வா! நாம் முதலில் அன்னையைக் காணலாம். பிறகு தம்பியர்களைக் காணலாம்." தருமனின் கண்ணைத் துடைத்து அழைத்துச் சென்றான் கர்ணன். சகுனியும் உடன் சென்றான்.

சற்று நடந்ததுமே ஊர் வந்தது. அழகிய எடுப்பான வீதிகள். இருமருங்கிலும் புத்தம்புது வீடுகள். மாட மாளிகைகள். கூட கோபுரங்கள். நடுநடுவே அழகிய மலர்ச்சோலைகள். மடுக்கள். மடுக்களைச் சுற்றி அழகிய பொன்னிற அன்னங்கள். மடுவில் செந்தாமரையும் வெண்டாமரையும் பூத்துக் குலுங்கின. அந்தி வேளையோ எந்த வேளையோ என்று தெரியாமல் அல்லியும் மலர்ந்திருந்தது.

சூரியன் கண்ணில் தென்படவேயில்லை. ஆனாலும் வெளிச்சம் பரவியிருந்தது. அந்த வெளிச்சமும் கண்ணை உறுத்தவில்லை. தோலைச் சுடவில்லை. வியர்க்கவில்லை. என்னவோ ஒரு மென்மையான ஒளி பரவியிருந்தது போல சுகமாக இருந்தது.

பெரியம்மாவையும் பெரியப்பாவையும் பார்க்க அவர்கள் நீண்ட தூரம் நடக்க வேண்டியிருக்கவில்லை. காந்தாரியும் திருதுராஷ்டிரனும் குந்தியும் ஒரு பெயர் தெரியாத மரத்தடியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். பொன்னிறது மரத்தில் வெள்ளி இலைகளும் வைர மொட்டுகளும் பவழப் பூக்களும் நிறைந்திருந்தன. பார்த்த கண்ணை தருமனால் எடுக்க முடியவில்லை. மூவரின் கையிலும் கோப்பைகள் இருந்தன. ஏதோ அருந்திக் கொண்டிருந்தனர். கலகலப்பாகச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர்.

மூவரையும் வணங்கி விட்டு கர்ணன் சொன்னான். "மதிப்பிற்குரிய பெரியப்பாவிற்கும் பெரியம்மாவிற்கும் எனது வணக்கங்கள். தாயார் குந்திக்கும் எனது வணக்கங்கள். நமது யுதிஷ்ட்டிரன் நம்மிடம் வந்துள்ளான். அவனது வணக்கங்களை உங்களுக்குக் காணிக்கையாக்குகிறான்."

கர்ணன் சொன்னதும் தருமன் மூவரையும் பணிந்து எழுந்தான். குந்தி அவனை உச்சி முகர்ந்து அன்பை வெளிப்படுத்தினாள். யாருக்கும் பேச்சு வரவில்லை. காந்தாரிதான் முதலில் பேச்சைத் துவக்கினாள்.

"மகனே தருமா! உன்னை இன்றுதான் நான் கண்கொண்டு காண்கிறேன். உனது பெரியப்பாவும் அப்படித்தான். உன்னைச் சொர்கத்தில் காண மகிழ்ச்சியே. நீ வருவதை நாங்கள் ஏற்கனவே அறிந்திருந்தோம். எங்களோடு நீ வந்து சேர்ந்து நமது குடும்பம் ஒன்றாகச் சேர்வதில் மெத்த மகிழ்ச்சி. உன்னைச் சந்திப்பதில் சுயோதனன் மிகவும் மகிழ்வான்."

திருதுராஷ்டிரனும் காந்தாரியும் எப்பொழுதும் துரியோதனனை சுயோதனன் என்றுதான் அழைப்பார்கள். காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சல்லவா.

"தாயே தங்கள் அனைவரையும் இங்கு மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தம்பி துரியோதனனோடு சேர்த்து நூறுவரையும் சந்திக்க மகிழ்ச்சிதான் எனக்கு. அவர்கள் எங்கே இருக்கிறார்கள் இப்பொழுது?" கவுரவர்கள் நூறுவரும் சொர்கத்திலா இருக்கிறார்கள் என்ற ஐயம் தருமனுக்கு. தருமனின் ஐயத்தைத் தீர்க்கும் வகையில் குந்தி சொன்னாள்.

"யுதிஷ்டிரா! உனது தம்பிகள் நூற்று ஐவரும் இங்குதான் இருக்கின்றார்கள். மற்றவர்கள் இப்பொழுது எங்கேயிருக்கின்றார்கள் என்று தெரியவில்லை. ஆனால் சற்று முன்னேதான் சுயோதனனோடு பீமனும் விஜயனும் சென்றார்கள். அனேகமாக மானசரோவருக்குச் சென்றிருப்பார்கள் என்று நினைக்கிறேன். பீமன் அங்கு சென்ற கதையைச் சொல்லிக் கொண்டிருந்த பொழுது சுயோதனனுக்கும் அங்கு செல்ல ஆசை வந்தது. ஆகையால் அவர்கள் மூவரும் மானசரோவர் சென்று நீராடப் போயிருக்கிறார்கள்."

தருமனுக்குத் திடுக்கென்றது. ஏற்கனவே ஒருமுறை இப்படித்தான் துரியோதனன் பீமனைக் கட்டி ஆற்றில் போட்டான். அதே போல இப்பொழுதும் செய்து விட்டால் என்று அவன் மனம் அஞ்சியது. கொஞ்சமும் யோசிக்காமல் அனுப்பிய குந்தியின் மேல் லேசான கோவம் வந்தது. ஆனால் இங்கே வெளிக்காட்டினால் நன்றாக இருக்காது என்று பேசாமல் இருந்தான். நகுல சகாதேவர்களையாவது பார்க்க ஆசை கொண்டான்.

"அம்மா! நான் நகுலனையும் சகாதேவனையும் பார்க்க வேண்டும். அவர்கள் எங்கே அம்மா?"

"நகுலனும் சகாதேவனும் மாதரியோடும் தந்தையாரோடும் ஓடம் விளையாடுகிறார்கள். இன்னும் சற்று நேரத்தில் நம்மோடு வந்து சேர்வார்கள். அவர்களை அழைத்து வர பிதாமகர் பீஷ்மரும் பெரிய பாட்டியார் சத்தியவதியும் போயிருக்கிறார்கள்"

குந்தியை இடைமறித்தார் திருதிராஷ்டிரர். "குந்தி, முதலில் தருமன் தனது களைப்பைப் போக்கட்டும். தருமா! நீ நிற்பது கற்பக மரத்தடியில். உனக்கு வேண்டியவைகளைக் கேட்டு அருந்து. நல்ல கனிகளைக் கேள். இல்லை உனக்கு எது வேண்டுமோ அதைக் கேள். கிடைக்கும்."

லேசாகப் பசித்தது தருமனுக்கு. கற்பகமரத்திடம் எதையும் கேட்கலாம் அல்லவா. உண்டால் தனக்கு உண்மையிலேயே நிறைவு தரும் உணவு வேண்டும் என்று கேட்டான். ஒரு தங்கத் தாம்பாளத்தில் பலவித உணவுகள் வந்தன. காய்கறிகளைச் சேர்த்துச் சமைத்தது. சுட்ட இறைச்சி. செந்நெற் சோறு. கிண்ணம் நிறைய நெய். பழவகைகள் என்று இருந்தது. அமர்ந்து உண்டான். கர்ணனும் சகுனியும் அமுதரசம் வேண்டுமென்று கற்பக மரத்திடம் கேட்டு அருந்தினார்கள்.

உண்ட பின்பு தருமன் சற்று அமைதியானான். கர்ணனைப் பார்த்து கேட்டான். "அண்ணா! சொர்கத்தைப் பற்றிச் சொல்லுங்கள் அண்ணா! மண்ணுலகிற்கும் இந்த விண்ணுலகிற்கும் என்ன வேறுபாடு?"

"தம்பி, சொர்கம் என்பது இன்பபுரி. இங்கு இறைவனின் அன்புக்குப் பாத்திரமானர்கள் வாழும் ஊர். இறைவனின் அன்பிற்குப் பாத்திரமாகாதவர்களும் இறைவனை வணங்காதவர்களும் தண்டனைக்கு உள்ளாவார்கள் என்று சொல்கிறார்கள். நரகத்தில் நெருப்பில் உழல்வார்கள் என்றும் சொல்கிறார்கள். ஆனால் நான் பார்த்ததில்லை.

இந்தச் சொர்கத்தில் பசியில்லை. பட்டினியில்லை. வேண்டிய பொழுது வேண்டியதைச் சாப்பிடலாம். எல்லாம் கிடைக்கும். உடலும் ஒத்துளைக்கும். இங்கு ஊனம் இல்லை. ஒருவரின் அனைத்து அவயங்களும் எல்லா வகையிலும் ஒத்துழைக்கும். இரவுமில்லை. பகலுமில்லை. நமது மனம் எப்படி விரும்புகிறதோ அப்படியிருக்கும் பருவநிலை. மழையை விரும்பினால் விரும்பியவருக்கு மட்டும் மழை பெய்யும். ஆனால் மற்றவருக்கு அதே இடம் நிலாக் காயலாம். இல்லை வெயிலும் அடிக்கலாம். எல்லாம் நமது மனத்தையும் ஆசையையும் பொருத்தது. ஆங்காங்கே கற்பகதருக்கள். வேண்டிய உணவும் பானங்களும் கிடைக்கும். இங்கே பெண்கள் எப்பொழுதுமே தூயவர்கள். அவர்களோடு கூடிக் களிப்புறலாம். இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்."

தருமனுக்கு அலுப்புத் தட்டத் தொடங்கியது. அவன் மனமும் உடலும் திரவுபதிக்காக ஏங்கியது. திரவுபதி இப்பொழுது இங்கு வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தான். நினைத்த இடமோ கற்பக மரத்தடி. அது திரவுபதியின் மனதை மாற்றி அங்கு வரவழைத்தது.

தொலைவில் திரவுபதி வருவது தருமனின் கண்களுக்குப் புலப்பட்டது. "எத்தனை முறை பார்த்த முகம். எளிதில் மறக்குமா! அந்த நடையும் உடையுமே சொல்லுமே பாஞ்சாலியின் பாங்கை! ஆனால் உடன் வருவது யார்? தெரிந்தவன் போல இருக்கிறது. நகுலனா? இல்லையே. நகுலன் தந்தையோடும் தாயோடும் ஓடம் விளையாடப் போயிருக்கிறானே. சகாதேவனும் உடன் சென்றிருக்கிறான். அருச்சுனனும் பீமனும் துரியோதனனைக் கூட்டிக் கொண்டு மானசரோவரம் வரை சென்றிருக்கிறார்கள். வேறெந்த ஆண்மகன் பாஞ்சாலியின் தோள் மீது கை போட்டுக் கொண்டு விளையாட முடியும்?"

பாஞ்சாலியும் உடன் வருகின்றவனும் இன்னும் நெருங்கி வந்தார்கள். இப்பொழுது அது யாரென்று யுதிர்ஷ்டனுக்குத் தெரிந்தது. தெரிந்ததுமே தலை சுற்றியது. இரத்தம் கொதித்தது. "பாவி துச்சாதனா! நீயா! எவ்வளவு துணிவிருந்தால் பாஞ்சாலியின் தோளில் கை போட்டுக் கொண்டு வருவாய்! குருஷேத்திரத்தில் கண்ட பீமனின் கதையின் வேகத்தை உனது நெஞ்சு மறந்து விட்டதா! அவை நடுவே அவளை அம்மணமாக்க நினைத்து சீலையை உரித்தாயே! உன் தோலைப் போர்க்களத்தில் உரித்தது மறந்து போனதா? ஆனால்.........பாஞ்சாலியும் உன்னோடு குலவிக் கொண்டு வருகிறாளே! என்ன ஆயிற்று!"

தருமனின் ஐயத்திற்குக் காரணமில்லாமல் இல்லை. திரவுபதியானவள் துச்சாதனனோடு கூடிக் குலவிக் கொண்டுதான் வந்தாள். ஏதோ காதலர் இருவர் மகிழ்ந்து சுகித்து அந்த நினைவுகளில் திளைத்து வருவது போல இருந்தது. அருகில் வரட்டும் என்று கொதித்துக் கொண்டிருந்தான் தருமன்.

தருமனைக் கண்டதுமே திரவுபதியின் முகம் விடியற்காலை மலர் போல மலர்ந்தது. "குந்தி நந்தனா வணக்கம். உங்கள் வரவு நல்வரவாகுக!" பணிந்து வரவேற்றாள். அப்படியே அங்கிருந்த மற்றவர்களுக்கும் வணக்கம் சொன்னாள். துச்சாதனனும் தருமனை வரவேற்று மற்றவர்களை வணங்கினான்.

தருமன் தன்னுடைய கட்டுப்பாட்டை இழந்து கத்தினான். "திரவுபதி! இதென்ன அலங்கோலம். துச்சாதனனோடு தோளோடு தோள் சேர்த்துக் கொஞ்சிக் கொண்டு வருகின்றாயே! நீ குலமகளா? விலைமகளா? உனக்கு அறிவு மழுங்கிப் போயிற்றா!"

இப்படி அவன் கேட்டது எல்லாரையும் திடுக்கிட வைத்தது. திருதுராஷ்டிரர் எதையோ சொல்ல வந்தார். ஆனால் திரவுபதி அவரைத் தடுத்து தானே பேசினாள். "மாமா! சற்று அமைதியாக இருங்கள். நான் அவருக்கு விடை சொல்கிறேன். ஆரிய புத்திரரே! கணவன் என்ற வகையில் அதிகாரத்தைக் காட்ட இது ஒன்றும் மண்ணுலகம் இல்லை. இந்திரப்பிரஸ்த சட்டங்கள் சொர்கத்தில் நீதிமன்றத்தில் மதிக்கப்படுவதில்லை..

சொர்கம் என்பது இன்பமயமானது. இங்கு பெண்கள் என்றென்றும் நித்தியகன்னிகள். அது ஆடவருக்கு ஆண்டவன் அளிக்கும் பரிசு. இறைவனை நம்பி வணங்கி வரும் ஆண்டவர்களுக்கு என்றென்றும் இன்பம் தருவதே சொர்கம். இங்கே இல்லை என்று சொல்ல எதுவும் இல்லை. துச்சாதனனோடு நான் கூடினேன். ஆமாம். இருந்தும் நான் கன்னிகைதான். ஐயமிருந்தால் என்னைக் கூடித் தெளிவு பெறுங்கள்."

உலகமே சுழல்வது போல இருந்தது தருமனுக்கு. தருமங்கள் அனைத்தையும் அறிந்தவன் என்று எண்ணிக் கொண்டிருந்தவனுக்கே திரவுபதியின் பேச்சு குழப்பமாக இருந்தது. "இதென்ன பைத்தியக்காரத்தனம். கண்டவனோடு கூடுவதா பெண்மை?" எதையோ கேட்க வேண்டும் என்பதற்காக கேட்டான்.

திரவுபதியிடம் சீற்றமில்லை. ஆனால் உறுதியாகச் சொன்னாள். "பெண்மை என்றால் என்னவென்பதை ஆண்மை விளக்கக்கூடாது. ஒரு பெண்ணின் கன்னித்தன்மைதானே ஆடவர்க்குத் தேவை. அதைக் காப்பதுதானே பெண்ணின் கடமை என்று மண்ணுலகில் சொல்கின்றீர்கள். அதற்குத்தானே எங்களுக்கு அத்தனை கட்டுப்பாடுகள். இதோ பாருங்கள். உடலை முழுமையாக மூடியிருக்கிறேன். எனது அங்கங்கள் மறைக்கப்பட்டிருக்கின்றன. எந்த ஆடவனும் என்னைப் பார்த்து கிறங்க மாட்டான். அதுதானே உங்களுக்கு வேண்டியது. பெண்கள் மனதில் என்ன நினைத்தால் உங்களுக்கு என்ன வந்தது?"

தருமன் கொஞ்சம் சுதாரித்துக் கொண்டான். "திரவுபதி, நீ என் மனைவி. பாண்டவர் ஐவருக்கும் மனைவியாகக் கடமைப் பட்டவள். எங்கள் பிள்ளைகள் விளைந்த நிலம் நீ. இப்படி மற்றவர்களோடு கூடினால் எப்படி? அதற்கு விளக்கம் சொன்னால் எப்படி?"

சிரித்து விட்டாள் பாஞ்சாலி. "ஆரிய புத்திரருக்கு இன்னும் விளங்கவில்லை போலும். மனைவி என்றால் அழைத்ததும் வந்து கூட வேண்டும். வேசி போல நடந்து கொள்ள வேண்டும். மறுக்கக் கூடாது. இல்லையா! உங்களுக்குப் பிள்ளைகளைப் பெற்றுப் போடும் இயந்திரமாக இருந்தால் போதும். அல்லவா!

எங்கள் மாதவிடாய்க் கணக்கை வைத்துதானே நாங்கள் ஒருவனுக்கு மட்டுமே ஆனவள் என்று ஆண்களால் உபதேசிக்கப்பட்ட மண்ணுலக நீதி சொல்கிறது. இது விண்ணுலகம். ஆனாலும் மண்ணுலகத்திலும் புரட்சி செய்தவர் நீர். உங்கள் சகோதரர் ஐவருக்கும் மனைவியாக நான் இருந்ததே மண்ணுலகில் பெரும் புரட்சிதான். இதை பல காலம் கடந்தாலும் ஆணாதிக்க வெறியர்கள் கேலி செய்து கொண்டுதான் இருப்பார்கள்.

அப்படிப் புரட்சி செய்த நீங்கள் கூட விளைநிலம் என்று பேசத் தொடங்கி விட்டீர்கள். சொர்கத்தின் நீதி தெரியாமல் பேசாதீர்கள். இங்கே மாதவிலக்கு என்ற தொல்லையே எங்களுக்கு இல்லை. ஆகையால் எங்களோடு யார் கூடினாலும் பிரச்சனையில்லை. ஆகையால் எங்களோடு கூடியவன் விட்டு விலகினால் எத்தனை நாள் கழித்து அவன் விலகலாம் என்று கணக்குப் போட முடியாது.

இதை சொர்கத்திலுள்ள ஆடவர்கள் அனைவருமே அறிவார்கள். நீங்கள் உயிரோடு இங்கு வந்திருக்கின்றீர்கள். உயிரோடு உங்கள் இதயமும் வந்ததால், அது அங்குள்ள நியாயங்களையே இங்கும் பேசுகிறது. பாவம்! பொருந்தாத இடத்தில் இருக்கின்றீர்கள்."

இப்பொழுது திருதுராஷ்டிரன் வாயைத் திறந்தான். "யுதிஷ்டிரா! பெண்கள் பிள்ளைகளைப் பெறுவதால் மண்ணுலகில் அவர்களை அடக்கி அதையே அவர்கள் சிறப்பு என்று அவர்களும் எண்ணும் அளவிற்குச் செய்ய முடிந்தது. ஆனால் இது சொர்கம். இங்கு பெண்கள் கருத்தரிப்பதே இல்லை. ஆகவே அவர்கள் யாரிடம் கூட வேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்து கொள்கிறார்கள். மேலும் இங்கு ஆண்களும் தங்கள் நிலையை உணர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். இங்கு எந்த ஆணும் எந்தப் பெண்ணையும் வன்முறை கொண்டு கூடுவதில்லை. சொர்கம் அவர்களுக்கு அந்த அறிவைத் தந்திருக்கிறது. ஆகையால் வன்முறை செய்து விட்டு பெண்களின் ஆடை மீதும் நடவடிக்கை மீதும் குற்றம் சொல்வதுமில்லை. சொர்கத்திற்கு வரும் பொழுதே அனைவரும் நல்லவர்களாகவும் இங்குள்ள விதிகளுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்கின்றார்கள்."

தருமனுக்குக் கிறுக்குப் பிடிக்கத் தொடங்கியிருந்தது. திருதுராஷ்டிரன் விட்ட இடத்தில் கர்ணன் தொடர்ந்தான். "தம்பி தருமா! இறைவனை வணங்கி அவன் மீது உண்மையான நம்பிக்கை கொண்டு வாழ்ந்தவர்களுக்கான சொர்கமும் அதன் விதிகளும் சொர்கத்தின் உண்மையான குடியினருக்குத் தானாகப் புரியும். தெரியும். ஆகையால் இங்கு இதனால் குழப்பங்கள் எதுவுமே வருவதில்லை."

முழுப் பைத்தியமாகியிருந்தான் தருமன். இரண்டடி பின்னால் சென்று கத்தினான். "இல்லை. நீங்கள் சொல்வதெல்லாம் பொய். என்னை ஏமாற்றப் பார்க்கின்றீர்கள். இதுவும் சொர்கத்திற்கு வருவதற்கான ஒரு சோதனையா! உண்மையைச் சொல்லுங்கள். நீங்கள் எல்லாரும் உண்மையிலேயே எனது உறவினர்களா? இல்லை மாயையா? எனக்கு உடனடியாக பகவான் ஸ்ரீகிருஷ்ணரைப் பார்க்க வேண்டும். அவர் எங்கேயிருக்கிறார்? அவரிடம் என்னை அழைத்துப் போங்கள். என்னை அழைத்துப் போங்கள்." கதறினான் தருமன்.

கொஞ்சம் முன்னால் வந்து சொன்னான் சகுனி. "மருமகனே! கிருஷ்ணன், ருத்ரன் என்றெல்லாம் நீ வணங்கியது மண்ணோடு போயிற்று. இங்கேயும் அங்கேயும் எங்கேயும் இறைவன் ஒருவனே. நீ விரும்புகிற வடிவத்தில் உனக்காக ஓடிவந்த இறைவன் உருவாயும் அருவாயும் இருப்பவன். கல்லில் இருப்பதால் கல்லே கடவுள் அல்ல. இறைவன் கல்லிலும் சொல்லிலும் நமக்கு உள்ளிலும் நம்மைக் கடந்தும் இருப்பவன்.

நீ உன் பண்பாட்டோடு ஒட்டி இறைவனைப் படைத்தாய். வணங்கினாய் உனக்காக உன் மீது கருணை கொண்டு நீ விரும்பியபடியே வந்தார் இறைவன். ஆனால் சொர்கம் அனைவருக்கும் பொதுவானது. ஆகையால் இறைவனை இங்கே தேடிப் போகவேண்டியதில்லை. உண்மையாக அழைத்தால் உனக்காக எங்கும் இருப்பவர் இங்கும் தெரிவார்."

"இல்லை. இல்லை. என்னை ஏமாற்றுகின்றீர்கள். என்னைக் குழப்புகின்றீர்கள். நான் இங்கிருந்து செல்கிறேன். உங்களோடு என்னால் இருக்க முடியாது. இது ஏதோ மூளையைக் குழப்பும் மாயை நிறைந்த சோதனை."

சொல்லிக் கொண்டே திரும்பி ஓடினான் தருமன். முதலில் தருமனைத் தடுக்க நினைத்தவர்கள் அந்தத் திட்டத்தை உடனேயே கை விட்டார்கள். சொர்கத்தினர் அவர்கள் தத்தம் வேலையைப் பார்க்கப் போய் விட்டார்கள்.

விடுவிடுவென ஓடினான் தருமன். எங்கே போவதென்றே தெரியவில்லை. அவன் உள்ளம் முழுவதும் நூறு சிந்தனைகள் சிலந்தை வலை கட்டியிருந்தன. எங்கே ஓடுகிறோம் என்பதே தெரியாமல் ஓடினான். தடக்கென்று காலை ஏதோ ஒன்று இடறியது. தடுமாறி கீழே சரிந்தான். கீழே என்றால் உண்மையிலேயே கீழே. சர்ர்ர்ர்ர்ர்ரென்று மண்ணுலகை நோக்கி வீழ்ந்தான். ஓவென்ற ஓலம் உலகிற்கே கேட்கும் வகையில் கத்தினான். ஆனால் யார் காதிலும் விழவில்லை. சத்தென அவன் உடல் இமயத்தில் இடித்தது விழுந்தது. அந்த ஒரு நொடியில் உண்மையிலேயே உயிரை விட்டான் தருமன்.

அன்புடன்,
கோ.இராகவன்

15 comments:

said...

ராகவன்,

இப்போ இந்தக் கதை ??????

புரிந்தும் புரியாமலும்
நிற்கிறேன்.

said...

துளசி கோபால், இந்தக் கதையை இன்றைக்கு எழுதவில்லை. வெள்ளிக் கிழமையே எழுதி முடித்து விட்டேன்.

திங்கட் கிழமை போடலாம் என்று வைத்திருந்தேன். பார்த்தால் இன்றைக்கு இது தொடர்பாகவே பல விவகாரங்கள். என்னவோ பொருத்தமாக அமைந்து விட்டது.

மீண்டும் படித்துப் பாருங்கள். புரியும் என நினைக்கிறேன்.

said...

ராகவன் சார்,
நானும் ரெண்டு தடவை படிச்சு பார்த்துட்டேன். என்ன சொல்ல வரீங்கன்னு அவ்வளவா புரியலை :((

குஷ்பு சொன்னதுக்கு இதுக்கும் சம்பந்தமா?

said...

ஐயோ ராமநாதன், ஒங்களுக்கும் புரியலையா! இதென்ன கொடுமை.

குஷ்பூ பேச்சும் இந்தக் கதையும் ஒரு தற்செயல் சமநிகழ்வுகளே. இந்தக் கதையை நான் ஒரு வாரமாக எழுதினேன். வெள்ளிக் கிழமையே போட வேண்டியது. இன்று திங்களன்று போட்டேன்.

பெண்களுக்கு உண்மையான சுதந்திரம் என்று கிடைக்கும் என்று சொல்ல வந்திருக்கிறேன்.

சந்திரவதனாவிற்குப் புரிந்தாலும் புரியலாம். அவர்கள் என்ன சொல்கின்றார்கள் என்று பார்க்கலாம்.

said...

பாஞ்சாலி வாழ்ந்த பரிதாப வாழ்வைப்
பாராட்ட யாருமில்லை இந்த பூமியிலே
பலபேரைச் சேரும் பரந்தாமன் தன்னைப்
புகழ்பாடக் கேட்டதுண்டு இந்த வாழ்க்கையிலே.

`நியாயங்களோ பொதுவானது
புரியாமல் போனது’

said...

அற்புதமாகச் சொன்னீர்கள் தாணு. ஆணுக்கொரு நீதி. பெண்னுக்கொரு நீதி என்ற நிலை மாற வேண்டும். கண்டிப்பாக மாறும்.

said...

அருமையான கதை, கருத்துகள். வித்தியாசமான கருத்துகள் கூறுவதில் நீங்க வல்லவர்.

நீங்க இந்த கதை போட்ட நேரம் குஷ்புவின் பேட்டியும் வந்ததா? அதான் சந்தேகம்.

பனை மரத்தின் கீழ் இருந்து நீங்க குடிச்சது பைனி, ஆனா நான் சொல்றேன் கள்ளூ.

said...

பரஞ்சோதி,
பால் கள்ளாய்த் தெரிந்தால்
பார்வையில் குற்றம்

மற்றவர்கள் நினைப்பது பற்றிக் கொஞ்சமும் கவலையில்லை. கண்டிப்பாக காலம் மாறும். பெண்கள் உண்மையான சுதந்திரம் பெறத்தான் போகின்றார்கள்.

said...

என்ன சொல்ல ராகவன். சொர்க்கத்தின் கருத்துக்களையும் கண்ணோட்டத்தையும் கேட்பதற்கே இவ்வளவு நிறைவாக இருக்கிறதே உண்மையில் இப்படியொரு சொர்க்கத்தை பூமியிலேயே கொண்டு வந்தால் எப்படியிருக்கும்?

said...

சொர்கம் பூமியிலேயே இருக்கிறது கணேஷ். நாம்தான் அதை நரகமாக்கிக் கொண்டிருக்கிறோம்.

"தீதும் நன்றும் பிறர் தர வாரா"

said...

ராகவன்
நல்ல பதிவு. இப்போது அப்படி இல்லையே என்றெண்ணி வாளாவிருப்பதைவிட்டு, முயண்ரால் மாற்றாங்கள் வரும்.

said...

இங்கே முதல் முறை வருகை.. அருமையான பதிவு...

said...

kalakkal.

sorkathil edhuku needhi mandram. angeyum thagararu iruka enna?

said...

உங்களுக்கு கொஞ்சம் தைரியம் அதிகம் தான். மாறுபட்ட கருத்தைக் கூறியதோடல்லாமல், திரௌபதியையும் துரியோதனனையும் சேர்த்து எழுதியுள்ளீர்கள்.

பெண்களிடம் தான் இந்தக் கதையின் கருத்தைப் பற்றிக் கேட்கவேண்டும். என் மனைவியைப் படித்துப் பார்த்துக் கருத்து சொல்லச் சொல்லலாம் என்று இருக்கிறேன். பார்க்கலாம் என்ன சொல்கிறார் என்று. என்னை ஆச்சரியப் படுத்துகிறாரா இல்லையா என்று.

said...

படித்துப் பாராட்டிய தேன்துளி, செந்தில், பொழுது ஆகியோருக்கு நன்றி.

குமரன். அவரது கருத்துகளை கேட்டு இடுங்கள். நானும் ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.