Wednesday, September 28, 2005

மாறிப் போன பயணங்கள்


மிகச்சிறிய வயதில் (எனக்கு வயது நினைவில்லை. நம்புங்கள். என்னைக் கைக்குழந்தையாக கையில் வைத்துக் கொண்டு எனது அத்தை உறங்கிக் கொண்டிருந்த அம்மாவைக் காட்டி, "யாரு அது சொல்லு" என்று கொஞ்சியதும் நினைவில் இருக்கிறது.) தூத்துக்குடியில் எனது அத்தை வீட்டில் இருந்தேன். இரண்டு வயதிலிருந்து எனது அத்தைதான் கொஞ்ச காலம் வளர்த்தார்கள்.

விளாத்திகுளம், நாகலாபுரம் தாண்டி இருக்கும் புதூர்தான் எங்கள் தந்தை வழி மூதாதையர்களின் சொந்த ஊர். தூத்துக்குடியிலிருந்து நேர் பஸ் உண்டு. ஆனால் அடிக்கடி இருக்காது. விளாத்திகுளம் போய் மாறுவதும் சில சமயம் செய்திருக்கிறோம்.

இரண்டு பஸ் கம்பெனிகள். பெயர்கள் இன்னும் நன்றாக நினைவில் இருக்கிறது. மீரான் டிரான்ஸ்போர்ட், லயன் டிராஸ்போர்ட். இரண்டு வண்டிகளுமே கொஞ்சம் பழைய வண்டிகள். சொல்லி வைத்தாற்போல் இரண்டிலுமே கொஞ்சம் வயதில் பெரியவர்தான் ஓட்டுனராக இருப்பார். கட்டபொம்மன் பேருந்துகளில் கொஞ்சம் இளவயது ஓட்டுனர்கள் இருப்பார்கள்.

அந்தச் சின்ன வயதில் நான் லயன் வண்டியில்தான் போக வேண்டும் என்று அடம் பிடித்திருக்கிறேன். காரணங்கள் இரண்டு.
1. அது நேராகப் புதூருக்குப் போகும்.
2. அதில் இடப்பக்க ஜன்னலை ஒட்டி ஒரே நீளமாக ஒரு சீட் இருக்கும்.

விளாத்திகுளத்திற்கு கட்டபொம்மன் வண்டிகள் நிறைய உண்டு. அங்கு போய்விட்டால் அருப்புக்கோட்டை போகும் பல வண்டிகள் கிடைக்கும். அந்தப் பேருந்துகள் புதூர் வழியாகத்தான் போகும். தூத்துக்குடியிலிருந்து புதூர் வழியாக அருப்புக்கோட்டை செல்லும் கட்டபொம்மன் பேருந்துகளும் உண்டு. ஆனால் எனக்குப் பிடித்தது லயனும் மீரானும்தான்.

கட்டபொம்மன் வண்டிகளைக் கேடீசி (கட்டபொம்மன் டிரான்ஸ்போர்ட் கார்பரேஷன்) என்பார்கள். மதுரைக்குப் பாண்டியன். கோவைப் பக்கம் சேரன். சென்னையில் பல்லவன். தஞ்சைப் பக்கம் சோழன். இவ்வளவுதான் எனக்குத் தெரிந்து முதலில் இருந்த போக்குவரத்துக் கழகங்கள். இவை பல்கிப் பெருகி இன்றைக்கு எல்லாம் ஒன்றே என்று ஆகிவிட்டன.

இந்த லயன் வண்டியிலும் மீரான் வண்டியிலும் போவது பெரியவர்களுக்குப் பிடிக்காது. ஏனென்றால் அவை மெதுவாகச் செல்லும். அதிலும் ஒரு நாளைக்கு இரண்டு முறைதான் அவை புறப்படும். காலையில் ஒன்று. மாலையில் ஒன்று. நாங்கள் பெரும்பாலும் மாலையில்தான் செல்வோம்.

அதுவுமில்லாமல் லயன் வண்டி எல்லா இடங்களிலும் நிற்குமாம். அதுவும் தாமதத்திற்குக் காரணம். நான் இரண்டு பக்கங்களிலும் உள்ள ஊர்களைப் பார்த்துக் கொண்டே செல்வேன். தேவையில்லாத கேள்விகளைக் கேட்டிருக்கின்றேன். அந்த வயதில் சரியான அந்தக் கேள்விகள் இந்த வயதில் கேணத்தனமாகத் தோன்றுகின்றன.

எட்டையாபுரம் போகும் வழியில் எப்போதும் வென்றான் என்று ஒரு ஊர் உண்டு. "எப்பொதென்றான்" என்று வேகமாகச் சொல்லும் போது கேட்கும். நடத்துனர் அடிக்கடி அப்படிச் சொல்வதால் என் காதில் "எப்போண்டா" என்று விழுந்திருக்கிறது. "ஏந்த்த இந்த ஊருல போண்டா போடுவாங்களா? நம்ம புதுக்கிராமம் டீக்கட போண்டா மாதிரி இருக்குமா?" என்றெல்லாம் கேட்டிருக்கிறேன்.

கொஞ்சம் வளர்ந்த பிறகு எப்போதும் வென்றானுக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது என்று கேணத்தனமாக ஒரு கதையை என் அத்தையிடம் சொல்லியிருக்கிறேன். அதை நிச்சயமாக ஒரு காதில் வாங்கி மறுகாதில் விட்டிருப்பார். "ஹர்ஷா எப்ப சண்ட போட்டாலும் ஜெயிச்சாராம். அதான் இந்த ஊருக்கு எப்போதும் வென்றான்னு பேரு." அங்கே அதிசயமாக ஓரு இடத்தில் கொட்டியிருந்த செம்மண்ணைக் காட்டி, "ரொம்ப சண்ட போட்டப்போ...ரெத்தம் சிந்தித்தான் செக்கச் செவேல்னு இருக்கு." இதையெல்லாம் கேட்கும் பொழுது என் அத்தைக்கு எப்படியிருந்திருக்கும் என்று நினைத்துப் பார்த்து அவர் மேல் பரிதாபப் படுகிறேன்.

தூத்துக்குடியில் இருந்து புறப்படும் லயன் வண்டி குறுக்குச்சாலை வழியாகப் போகும். அதென்ன குறுக்குச்சாலை? அது நான்கு ஊர்ச்சாலைகள் கூடுமிடம். பாஞ்சாலங்குறிச்சி, தூத்துக்குடி, எட்டயபுரம், விளாத்திகுளம் ஆகிய நான்கு ஊர்ச்சாலைகளும் கூடும் சாலை குறுக்குச்சாலை. அந்தக் காலத்திலேயே எப்படி பெயர் வைத்திருக்கின்றார்கள் பாருங்கள்.

அதற்கப்புறம் உள்ள ஊர்களின் பெயர்கள் எனக்கு இப்பொழுது நினைவில் இல்லை. ஆனால் யாராவது சொன்னால் கண்டிப்பாகத் தெரியும். அடுத்து நினைவிருக்கும் ஊர் விளாத்திகுளம்தான்.

விளாத்திகுளத்திற்கு முன்னால் சிறிய பாலம் உண்டு. வழக்கமான பாலங்களைப் போல கீழே நீர் ஓடுவதும் தூண்கள் சாலையைத் தாங்கிக் கொண்டிருக்கும் படியும் இருக்காது. பாலம் குழிந்து தரையோடு இருக்கும். மழைக்காலங்களில் தண்ணீர் நிரம்பி ஓடும். அப்பொழுதெல்லாம் போக்குவரத்து பாதிக்கப்படும். ஆனால் அதெல்லாம் நான் கைக்குழந்தையாக இருந்த காலங்களில். எனக்கு விவரம் தெரிந்து அந்தப் பாலத்தில் வெள்ளத்தைப் பார்த்ததில்லை.

விளாத்திகுளத்தை விட்டு வெளியில் செல்லும் இடத்தில் ஒரு பெரிய கண்மாய் உண்டு. அதில் நான் சிறுவயதில் தளும்பத் தளும்பத் தண்ணீரைப் பார்த்திருக்கிறேன். இப்பொழுது அந்தக் கண்மாய் ஆக்கிரமிப்பால் குறுகிக் காய்ந்து வெடித்துப் போயிருக்கிறது.

அடுத்தது நாகலாபுரம். அதுவும் ஒரு சிற்றூர்தான். அங்கு கூட்டமாக இருக்கும். நாகலாபுரம் வந்தாலே புதூர் வந்து விட்டது போல இருக்கும். ஊருக்கு வெளியே ஒரு டெண்ட்டு கொட்டகை. அதைக் கடந்து போகையில் எந்தப் படம் அங்கே ஓடுகிறது என்று எனக்குக் கண்டிப்பாய்ப் பார்க்க வேண்டும். ஜன்னல் ஓரத்தில் எட்டி எக்கிப் பார்ப்பேன்.

புதூருக்குள் நுழையும் போதே இருக்கங்குடி விலக்குக்குப் பக்கத்தில் இருக்கும் வெற்றிலைக் கொடிக்கால்கள் தெரியும். அடுத்தது முருகன் கோயில். அப்படியே புதூர் பேருந்து நிலையம். அங்கும் பெரிய தட்டி வைக்கப் பட்டிருக்கும். சினிமா போஸ்டர்களோடு. ரத்னா, சீதாராம் என்று இரண்டு டெண்ட்டு கொட்டகைகள். இவற்றில் சீதாராம் கொட்டகை எங்கள் நிலத்தில் அமைந்திருந்தது. ஆகையால் அங்கே வீட்டின் பெயரைச் சொன்னால் ஓசியிலேயே படம் பார்க்கலாம்.

புதூரில் இறங்கியதும் அங்கே தெரிந்தவர் கடையில் பெட்டி படுக்கைகளை வைப்போம். காரணம் ஒரு அரைக்கிலோமீட்டர் ஊருக்குள் நடக்க வேண்டும். ஒன்றும் பெரிய தொலைவு இல்லை. ஆனாலும் அப்படித்தான். பிறகு வீட்டிற்கு நடந்து போய் அங்கிருந்து யாரையாவது சைக்கிளில் அனுப்பி எடுத்து வருவோம். சுற்றி பெரும்பாலும் எப்படியாவது உறவாகத்தான் இருப்பார்கள். ஆகையால் இளம் பையன்களை சைக்கிளில் பை எடுக்க பெரியவர்கள் அனுப்புவார்கள்.

இப்பொழுது லயன் பேருந்துகள் ஓடுவதில்லை. கட்டபொம்மனைத் தூக்கிப்(ல்) போட்டாயிற்று. பெரும்பாலும் தேவைப்படுகின்ற சமயங்களில் கார் வைத்துக்கொண்டுதான் போகின்றோம். நாங்கள் பை வைத்த கடை இன்னும் இருக்கிறது. ஆனாலும் பைகள் காரில் நேராக வீட்டிற்குப் போகின்றன. நாகலாபுரம் கொட்டகையில் என்ன படமென்று கூட எட்டிப் பார்க்கவில்லை. சீதாராம் கொட்டகைக்குக் குத்தகை முடிந்தது. ஆகையால் அவர்கள் கொட்டகையைக் கலைத்து விட்டார்கள். ரத்னா மட்டும் இன்னும் இருக்கிறது. போன முறை போயிருந்த பொழுது Lord of the rings தமிழில் பார்த்ததுதான் மிச்சம்.


அன்புடன்,
கோ.இராகவன்

13 comments:

said...

என்ன ராகவன் நோஸ்டால்ஜியா ?

எனக்கு உங்க பதிவ படிக்கும் பொழுது அடிக்கடி தோன்றுகிற விஷயம் இதுதான். ஏற்கனவே உங்களிடமும் கேட்டிருக்கிறேன். சின்ன சின்ன நிகழ்வுகளும் உங்கள் மனதில் நன்றாக பதிந்துவிடுகிறது. பெரிய வரம் இது. உங்களுக்கு கிடைச்சிருக்குன்னு நினைக்கிறேன்.

எனக்கு தெரிந்து இதில் அசகாய சூரர் வைரமுத்து தான்.

பதிவு நல்ல வந்திருக்கு.

said...

நன்றி கணேஷ்.

இது இந்த வார நட்சத்திரப் பதிவாளர் முருகபூபதியின் பயணத்தின் பாதிப்பு.

// சின்ன சின்ன நிகழ்வுகளும் உங்கள் மனதில் நன்றாக பதிந்துவிடுகிறது. பெரிய வரம் இது. உங்களுக்கு கிடைச்சிருக்குன்னு நினைக்கிறேன். //
இறைவன் கொடுத்த பரிசாக நினைக்கிறேன். பல விஷயங்கள் அப்படிப் பதிந்திருக்கின்றன கணேஷ். எழுத வேண்டும். இன்னும் நிறைய.

said...

ராகவன் சார்,
//அப்பொழுதெல்லாம் போக்குவரத்து பாதிக்கப்படும். ஆனால் அதெல்லாம் நான் கைக்குழந்தையாக இருந்த காலங்களில்.//

கைக்குழந்தையா இருந்தப்ப நடந்ததெல்லாம் நினைவில் இருக்கா? ஏதாவது மெமரி கார்ட்டில் ஸ்டோர் பண்றீங்களா?

ஒரு படம் நினைவுக்கு வருது.. The Final Cut. ராபின் வில்லியம்ஸோடது.. அதிலே பிறக்கிற குழந்தைகளுக்கெல்லாம் ஒரு organic implant வெச்சு, அவங்க வாழ்க்கையை அவர் பார்வையில் இருந்து ரெக்கார்ட் பண்ணி, அந்த மனிதர் இறந்தபின் rememberanceக்குகாக ரெக்கார்ட் செய்த வீடியோவ சொந்தக்காரங்க பாப்பாங்க. வித்தியாசமா இருக்கும். கிடச்சா இந்தப்படத்தை பாருங்க...

குட்டி குட்டி ஊர்களிலும் LOTR-ஆ? அதுவும் தமிழிலா? எப்படி இருந்தது?

said...

// கைக்குழந்தையா இருந்தப்ப நடந்ததெல்லாம் நினைவில் இருக்கா? ஏதாவது மெமரி கார்ட்டில் ஸ்டோர் பண்றீங்களா? //

எல்லாமே நினைவில் இல்லை ராமநாதன். சில நிகழ்ச்சிகள் நன்றாக நினைவிருக்கின்றன.

வெள்ளம் வந்தது எனக்கு இரண்டு மூன்று வயதுகளிலும் இருந்தது. ஆகையால் நினைவில் உள்ளது.

// ஒரு படம் நினைவுக்கு வருது.. The Final Cut. ராபின் வில்லியம்ஸோடது.. //

தேடிப் பாக்குறேன் ராமநாதன். ஆனாலும் கிடைக்கிறது டவுட்டுதான்.

// குட்டி குட்டி ஊர்களிலும் LOTR-ஆ? அதுவும் தமிழிலா? எப்படி இருந்தது? //

அது LOTR என்பதால்தான் நான் சென்றேன். பல இடங்களில் கட். கரகாட்டக்காரனில் கனகாவின் அப்பாவாக வருவாரே சண்முகசுந்தரம் அவர்தான் king of rohanக்கு குரல் கொடுத்திருந்தார். தியேட்டரோ டெண்ட்...பல இடங்களில் வெளிச்சமாக விழுந்த சுமாராகத் தெரிந்தது.

படத்தின் கதைக்காக யாரும் பார்க்கவில்லை என்பது தெரிந்தது. காட்சியமைப்புக்காகப் பார்த்தார்கள்.

அதில் கொலும் மீனைப் பிடித்துக் கொண்டு ஒரு பாட்டுப் பாடும். ஃபெராமியர் ஆட்கள் சுற்றி வளைப்பார்கள். அந்தப் பாட்டு தமிழில் சூப்பரோ சூப்பர். மீனே மீனெ என்று கொலும் பாடுவதை எல்லாரும் ரசித்தார்கள். நானுந்தான்.

said...

ராகவன்! வெளிநாடு சென்று வந்த பயணக்கட்டுரைகளை கேள்விப்பட்டுள்ளேன். இப்படி நம் ஊரின் ஞாபகத்தை கட்டுரையில் வடித்து இருப்பது மிக அருமை.

said...

உங்க பதிவுகளைப் படிக்கறப்ப ஊருக்கு போகணும்னு மனசு துடிக்குது. ஏன்னா, நமக்கும் ஊரு முத்து நகர்தான்... - முகில்-

said...

அட ராகவா!

எங்க LOTR உங்க ஊருலே தமிழ் பேசுதா? காட்சிஅமைப்புக்காகப் பாக்கறாங்களா?

எல்லாம் நியூஸின்னு சொல்லலியா?

பதிவு நல்லா வந்திருக்கு.

வாழ்த்துக்கள்.

said...

// உங்க பதிவுகளைப் படிக்கறப்ப ஊருக்கு போகணும்னு மனசு துடிக்குது. ஏன்னா, நமக்கும் ஊரு முத்து நகர்தான்... - முகில்- //

ஐயோ உங்கள் பதிப்பை நான் இத்தனை நாள் பாக்கலையே. நீங்க தூத்துக்குடியா! ரொம்ப சந்தோசம். ரொம்ப சந்தோசம். இருங்க மொதல்ல ஒங்க பிளாக்குக்கு வர்ரேன். :-)

said...

// எங்க LOTR உங்க ஊருலே தமிழ் பேசுதா? காட்சிஅமைப்புக்காகப் பாக்கறாங்களா?

எல்லாம் நியூஸின்னு சொல்லலியா?

பதிவு நல்லா வந்திருக்கு.

வாழ்த்துக்கள். //

நன்றி துளசியம்மா.

நியூஸின்னு எனக்குத் தெரியுமே. நம்மதான் லார்டு ஆப் த லிங்குதாசாச்சே!

ஆனா வந்தவங்க எதை நெனைச்சு வந்தாங்கன்னு தெரியலை. எதை ரசிச்சாங்கன்னும் ஊகிக்க முடியல.

said...

ராகவன், என் மனைவி மதுரையில் பிறந்து தூத்துகுடியில் வளர்ந்தவர். அவருக்கும் இந்த பதிவு பிடித்திருப்பதாய் சொன்னார்.

said...

ராகவன்,
என் சின்ன வயசில் எங்க ஊருக்கு நாகர்கோவிலில் இருந்து கட்டபொம்மன் பஸ் வரும் .எனக்கென்னவோ கட்டபொம்மன் பஸ் தான் கம்பீரமா இருந்ததா ஒரு நினப்பு.

said...

// ராகவன், என் மனைவி மதுரையில் பிறந்து தூத்துகுடியில் வளர்ந்தவர். அவருக்கும் இந்த பதிவு பிடித்திருப்பதாய் சொன்னார். //

நன்றி குமரன். என்னவோ தூத்துக்குடி, திருநவேலி, நாகர்கோயிலு, திருச்செந்தூர்க்காரங்களப் பாத்தா ஒரு சந்தோசம். :-) சகோதரியைக் கேட்டதாகச் சொல்லுங்கள்.

// ராகவன்,
என் சின்ன வயசில் எங்க ஊருக்கு நாகர்கோவிலில் இருந்து கட்டபொம்மன் பஸ் வரும் .எனக்கென்னவோ கட்டபொம்மன் பஸ் தான் கம்பீரமா இருந்ததா ஒரு நினப்பு. //
ஆமாம் ஜோ. நாகர்கோயிலுக்கும் கட்டபொம்மந்தான்னு நினைக்கிறேன். கேடீசின்னு சுருக்கமாச் சொல்லுவாங்க. நீங்க எந்த ஊர் ஜோ?

said...

Very happy to see someone from the place where I grew up - travelling in the same Meeran and Lion buses. I never imagined I could ever meet someone like this. It's a great feeling. By the way, I am from Nagalapuram. It wouldn't be wrong to say Boothalapuram as well. I had written a very similar post on Nagalapuram very recently. :)