Monday, July 11, 2005

என் கொங்கை நின் அன்பர்

என் கொங்கை நின் அன்பர்


கதவைச் சாத்திக் கொண்டவள் மோகனா. அதனால் மனதைச் சாத்திக் கொண்டவன் வரதன். பின்னே! காதலித்த பெண் இவன் வருகின்ற நேரமாகப் பார்த்துக் கதவைத் தாழிட்டுக் கொண்டால் யார்தான் வருந்த மாட்டார்கள்!

வரதன் எந்த வம்பு தும்பிற்கும் வராதவன். மோகனாவிடமும் பழுதில்லை. அப்புறம் என்ன?

வரதனோ சீரங்கத்துப் பரம வைணவன். அதிலும் அரங்கனுக்கு நித்தம் படைப்பவன். இவன் கைப் பக்குவம்தான் அரங்கனுக்கு வட்டிலில் விழும் உணவு. கொஞ்சமும் பிசகில்லாத கைச்சுத்தம். புளியோதரையோ சர்க்கரைப் பொங்கலோ வரதன் செய்தாலே தனி மணமும் குணமும்.

திரையை மூடிக்கொண்டு படைக்கும் பொழுது உண்மையிலேயே பெருமாள் கொஞ்சத்தை எடுத்து விடுகிறார் என்று ஊருக்குள் பேசிக் கொள்கின்றார்கள். யார் கண்டார் உண்மையை? பெருமாளோ! படைக்கின்ற தாத்தாச்சாரியோ! ஆனால் பெருமையெல்லாம் வரதனுக்குத்தான்.

எண்ணெய் கரிக்காத வடை. புளிக்காத ததியோன்னம். வரட்டாத புளியோதரை. திகட்டாத அக்காரவடிசில். பிசுபிசுப்பேயில்லாத நொய்யப்பம். எத்தனை வகைகள். அடடா! அண்டாப் பொங்கல் கிண்டினாலும் அரைப்படியில் கிண்டினாலும் சுவை மாறவே மாறது. எங்கிருந்து வந்ததோ இந்தக் கைவண்ணம்.

சீரான சீரங்கத்து வரதனின் கைவண்ணம் ஆனைக்காவையும் விட்டு வைக்கவில்லை. ஆனைக்கா வீரசைவர்கள் சீரங்கத்தின் எல்லையைக் கூட மிதிக்க மாட்டார்கள். ஆனாலும் வரதன் கைப்பக்குவம் கொல்லை வழியாக அவர்களுக்குப் போகும். இரண்டு இடங்களுக்கும் போகின்ற பொதுவான மக்கள் இங்கிருந்து வாங்கி அங்கு கொண்டு சென்று கொடுப்பார்கள்.

ஆனைக்கா கோயிலின் பெரிய சிவாச்சாரியாரும் வரதன் வதக்கியவைகளை வகை வகையாக வளைத்துக் கட்டுகின்றவரே! நாராயணா என்று மறந்தும் ஒரு பேச்சு பேச மாட்டார். ஆனால் பெருமாளுக்குப் படைத்த பிரசாதங்களை பிற சாதங்களாக கருதாமல் ஏற்றுக் கொள்ளும் பரந்த வாய்ப் பக்குவம் அவருக்கு இருந்தது.

உணவில் வேற்றுமை பாராட்டக் கூடாது என்ற நல்ல எண்ணம் மட்டும் எப்படியோ இருந்தது. கண்ணப்பன் படைத்த பன்றிக்கறியை பரம்பொருள் ஏற்றுக் கொண்டாரே என்று வக்கனை பேசுவார். எது எப்படியோ! வரதன் பெருமைதான் பெருகியிருந்தது.

நளனும் பீமனும் கூட வரதன் சமைக்கின்ற மாதிரிதான் சமைத்திருப்பார்கள் என்று எல்லாரும் பேசிக் கொள்கிறார்கள். என்னவோ இவர்கள் நளபாகத்தையும் பீமபாகத்தையும் பத்து நாள் உட்கார்ந்து தின்றது போல!

இந்தப் பிரபல வரதனுக்கும் வந்தது காதல். அதுவும் மோகனாவின் மேல். அழகுச் சிலைதான் அவள். இவனும் குறைந்தவன் அல்லன். நல்ல ஐயங்கார் சிவப்பு. நல்ல வடிவம். இடுப்பில் கச்சம். திறந்த மார்பு. குறுக்கே பூணூல். தென்கலை நாமங்கள். அள்ளி முடிந்த குடுமி. சவரம் செய்த முகம். வேறென்ன வேண்டும். மோகனாவும் மயங்கி விட்டாள். திருவானைக்காவல்காரி மனதைக் காவல் காக்க மறந்து விட்டாள். வரதனும் கண்ணனடி பற்றிக் கள்வனாகி விட்டான்.

நாளும் கிழமையும் எம்பெருமானைக் காண திருவானைக்கா போவது ஊரார் வழக்கம். ஆனால் மோகனாவைப் பார்க்கப் போவது வரதன் வழக்கம். எம்பெருமானும் எத்தனை நாள் பொறுப்பார்? தன்னைப் பார்க்காமல் மோகனாவைப் பார்க்கிறானே என்று சேர்த்து வைத்து பழி வாங்குவது போல மோகனாவைக் கதவை மூட வைத்து விட்டார்.

உண்மைதான். ஈசன் விளையாட்டில்தான் மோகனா கதவடைத்தது. மாதமோ மார்கழி. சைவப் பெண்ணல்லவா மோகனா! காலையில் எழுந்து நந்நீரில் நீராடி வெண்ணீறில் நீறாடி திருவெம்பாவை பாடிக் கொண்டு காலையில் கூட்டத்தோடு கோயிலுக்குப் போவாள்.

நல்ல பக்தி சிரத்தையுள்ள பெண். உள்ளமுருகிப் பாடுவாள். திருவெம்பாவையும் தேவாரப் பாசுரங்களும் மோகனா பாடினால் தேனாக ஒலிக்கும். பரமசிவனின் இளைய மகனுக்கு குடங்குடமாக தேனாபிஷேகம் செய்தால்தான் அப்படிக் குரல் வாய்க்குமாம். நல்ல குரல்வளம்.

"எங்கள் பெருமான் உனக்கு ஒன்று உரைப்போம் கேள்
என் கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க
என் கை உனக்கு அல்லாது எப்பணியும் செய்யற்க"

இந்தப் பாட்டில்தான் அவளுக்கு அந்த சந்தேகம் வந்தது. வராமலா இருக்கும்? நல்ல தமிழறிவு மோகனாவிற்கு. செண்பகப் பாண்டியனுக்கு ஐயம் வந்த பொழுது மாட்டிக் கொண்டது தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் புலவர் நக்கீரர். மோகனாவிற்கு வந்த பொழுது மாட்டிக் கொண்டவன் வரதன். தாங்குவானா வரதன்?

சரி. பிரச்சனைக்கு வருவோம். இந்தப் பாடல் என்ன சொல்கிறது? சிவனைப் பார்த்து சைவப் பெண்கள் சொல்வது போல அமைந்த திருவெம்பாவைப் பாட்டு.

"எம்பெருமானே! உனக்கு ஒன்று சொல்கின்றோம் கேள். சைவப் பெண்டிர்களாகிய எங்கள் கொங்கைகள் உன்னை வணங்குகின்றவர்களின் தோளை மட்டுமே சேரும்." அதாவது சைவர்களையே மணப்போமென்றும் உடலால் கூடுவோமென்றும் சொல்வது போல வருகிறது.

இப்பொழுது புரிந்திருக்குமே மோகனாவின் குழப்பம். வரதனோ பரம வைணவன். இவளோ சிவக் கொழுந்து. ஒத்து வருமா? கலப்புத் திருமணம் செல்லுபடியாகுமா? ஊரார் ஒப்புக் கொள்வார்களா? ஊராரை விடுங்கள். அவளது வீட்டிலேயே ஒப்புக் கொள்வார்களா?

சரி. மற்றவர்களை விடுங்கள். வாழப் போவது இவள்தானே. ஊரார் என்ன சொல்ல? பெற்றோரும் உற்றோரும் என்ன சொல்ல? வரதனைக் கல்யாணம் செய்து கொள்கிறாள் என்றே வைத்துக் கொள்வோம். அப்படி நடந்து விட்டால் அவள் இத்தனை நாள் உள்ளமுருகச் சொன்னது பொய் என்று ஆகிவிடும் அல்லவா? அதுதான் அவள் கவலை.

அதனால்தான் வரதன் வரும் வேளையில் படக்கென்று வீட்டுக்குள் சென்று கதவையும் தாழிட்டுக் கொண்டாள். திடுக்கிட்ட வரதனோ மனமும் வாயும் மூடிக் கொண்டான். அருகிலிருந்த மண்டபத்துத் தூணோடு ஒட்டிக் கொண்டான்.

அவன் கலக்கம் நீடிக்கவில்லை. விரைவிலேயே மோகனாவின் தோழியர் மூலம் வரதனுக்குத் தகவல் போய்ச் சேர்ந்தது. காரணம் புரியாததால் காவிரிக்குள் விழ இருந்தான். நல்ல வேளையாக பரமேசுவரன் காப்பாற்றினான்.

பிரச்சனை புரிந்ததும் அடுத்து வருவது தீர்வுதானே! இந்தப் பிரச்சனைக்கு என்ன தீர்வு காண்பான் வரதன்?

நேராக பெரிய சிவாச்சாரியாரைப் பார்த்தான். காலில் விழுந்தான். சிவதீட்சை வேண்டுமென்று வணங்கிக் கேட்டான். சீரங்கத்தை மறந்து விட்டு ஆனைக்காவிலேயே காவலிருக்கவும் உறுதி சொன்னான்.

எடுத்த எடுப்பிலேயே ஒத்துக்கொள்வாரா பெரிய சிவாச்சாரியார். திருமுறைகளைக் கரைத்துக் குடித்தவராயிற்றே. நிபந்தனைகளைப் போட்டார். திருவானைக்காவல் மடப்பள்ளிக்குத் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று ஒரு கட்டளை வேறு போட்டார்.

அங்கே பார்த்த அதே வேலைதான். அங்கே பரந்தாமன். இங்கே பரமேசுவரன். இரண்டு இடத்திலும் இருப்பது பரம் தானே! மோகனா என்னும் வரம் கிடைக்க எதற்கும் அவன் தயார்தான். ஒத்துக் கொண்டான்.

வரதன் கையில் மீண்டும் கரண்டி. மோகனா கழுத்தில் தங்கத் தாலி. என்றைக்கும் அவளுடன் அவன் தங்கத் தாலி.

புதுப் பூணூல். நாமம் போயிற்று. திருநீற்றுப் பட்டை நெற்றியில் ஏறியது. நாராயண மந்திரம் சிவோகமாக ஒலித்தது. மோகனாவின் குளிர்விழியில் நாச்சியார் திருமொழி மறந்து போனது.

சீரங்கமோ பற்றி எரிந்தது. குலத் துரோகி வரதனைச் சாதிப் பிரஷ்டம் செய்தார்கள். கிரியைகளைக் கூட முடித்து விட்டார்கள். அவன் சமைத்த மடப்பள்ளியை காவிரியைக் கொண்டு மீண்டும் மீண்டும் கழுவி தீட்டுக் கழிக்க யாகம் வளர்த்தார்கள். அவன் புழங்கிய வெங்கலப் பாத்திரங்கள் வீதிக்கு வந்தன. மண்பாண்டங்கள் பிறந்த வீட்டிற்குப் போயின.

"நாரிமணிக்காக நாராயணனை மறக்கலாமா? நீல மேனியனுக்குப் படைத்த கைகள் திருநீற்று மேனியனுக்கு படைக்கலாமா! வெண்ணெய் உண்டவனுக்கு படைத்துக் கொண்டிருந்தவன் விடமுண்டவனுக்குப் படைக்கலாமா? அப்படிப் படைத்தாலும் அந்த நஞ்சு விழுங்கிக்கு எட்டிக்காய் பாயாசமும் வேப்பங்காய் பொங்கலுமே ஆகும். காதலுக்காக மதம் மாறினானே இந்த மூர்க்கன்!" இப்படியெல்லாம் குழம்பிக் கொண்டார்கள்.

அங்கே அப்படியென்றால் திருவானைகாவில் வேறு மாதிரி. ஒரே கொண்டாட்டம். வரதன் கையால் பரமனுக்கு பலவிதப் பலகாரங்களைப் படைத்து அவற்றைத் தாமே உண்டனர். ஆயாசமே இல்லாமல் பாயாசங்களைப் பருகினார்கள். ஆசை குறையாமல் தோசைகளை அடுக்கினார்கள். பொன்னைக் கண்டதும் அதில் பொன்னார் மேனியனைக் கண்டார் சம்பந்தர். இவர்கள் வெண்பொங்கலில் வெந்நீறணிந்தவன் மேனியைக் கண்டு, சிவாநுபூதி பெற வெண்பொங்கலாக விழுங்கினார்கள்.

பரந்தாமனோ பரமசிவனோ அடித்துக் கொள்ளவில்லை. வட்டில் சோற்றுக்காகவா பரந்தாமன் வரதனை விட்டுக் கொடுத்து பரமன் பெற்றுக் கொண்டான்? எல்லாம் காரணமாகத்தான். நாளைக்கு வரதனோ அம்பிக்கை தரித்த தாம்பூலத்தைப் பிரசாதமாகப் பெறப் போகிறான். அதனால் நிற்காமல் மழை கொடுக்கும் காளமேகமாய் தீந்தமிழ்ப் பாக்களைப் பொழியப் போகிறான் என்றும் இவர்களுக்குத் தெரியவா போகிறது!

அன்புடன்,
கோ.இராகவன்

23 comments:

said...

வலைப்பூவிலும் சிறப்பான பெயர் பெற வாழ்த்துகள் அண்ணா.

said...

படித்துப் பாராட்டிய பரஞ்சோதிக்கும் மூர்த்திக்கும் TallWalkerக்கும் நன்றிகள் பல.

அன்புடன்,
கோ.இராகவன்

said...

ராகவன் அருமையாக எழுதியிருக்கிறீர்கள்., தேர்ந்தெடுத்த சொற்களை தகுந்த இடத்தில் பயன்படுத்தி நன்றாக எழுதியிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்., மென்மேலும் எழுதுங்கள்!.

said...

ராகவன் சார். கனக்கச்சிதமா வார்த்தைகளை உபயோகப்படுத்தியிருக்கிறீர்கள்.. தலைப்பை மட்டும் மாத்தியிருந்தீர்களென்றால் இன்னும் நிறைய வலைப்பதிவரைச் சென்றடைந்திருக்கும் ;-)

said...

படித்துப் பாராட்டியமைக்கு நன்றிகள் கணேஷ். கதையின் பெயரில் கொங்கை என்று வருவதால் சொல்கின்றீர்களா? சரி. நீங்களே ஒரு நல்ல பெயரைச் சொல்லுங்கள்.

said...

திருவெம்பாவையின் அழகிய வரிகளை தயவு செய்து மாற்றாதீர்கள். வினோத ரச மஞ்சரி என்ற ஒரு தமிழ் வெளியீடு 1800-களில் வந்தது. அதில் காளமேகப் புலவரைப் பற்றிய இந்தக் கதை வந்தது. இவ்வரிகளைப் பாடிய அப்பெண் தன்னையறியாமல் தலை குனிய அவள் தோழியர் அவளை இடித்துரைக்கின்றனர். அதன் பிறகுதான் கதையில் திருப்பமே வருகிறது. வைணவன் சைவனாகிறான்.

இவ்வரிகளையும் ஒரு ஹைப்பெர்லிங்க் என்று நான் கூறினால் நண்பர்கள் உதைக்க வருவார்கள். ஆகவே ஓட்றா டோண்டு.

ஆகவே தலைப்பை மாற்றாதீர்கள் ராகவன் அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

உண்மைதான் டோண்டு. இந்தக் கதை மனதில் உருவானதுமே அதற்குத் தலைப்பு என்று நான் முடிவு செய்தது "என் கொங்கை நின் அன்பர்" என்பதுதான். மிகவும் அழகான பாடல் வரிகள். படித்தவர்களு அதன் ஆழம் புரியும்.

ஆனாலும் நண்பர் கணேஷ் என்ன பெயர் சொல்கிறார் என்ற ஆவல்தான். கணேஷ். நீங்கள் உங்களுக்குத் தோன்றும் பெயரைச் சொல்லுங்கள். அதுவும் நன்றாகவே இருக்கலாம்.

said...

நன்றாயிருக்கிறது.

said...

படித்துப் பாராட்டியமைக்கு நன்றி சந்திரவதனா.

said...

இராகவன்....ஒரு நல்ல கவிதையைப் படித்த மாதிரி இருக்கிறது. சொல்லும் பொருளும் ஒன்றுகொன்று போட்டிப் போட்டுக் கொண்டு உங்களிடம் விளையாடியிருக்கிறது. பத்து வரியில் இந்த கதையைப் படித்துள்ளேன். ஆனால் இத்தனை சுவையாய் இருந்ததில்லை. மேலும் பல கதைகள் இப்படி எழுதுங்கள்.

said...

அன்புள்ள ராகவன்,

பிரமாதமாக எழுதி இருக்கிறீர்கள். என் பாராட்டுகள்!

said...

படித்துப் பாராட்டிய குமரனுக்கும் ராமிற்கும் எனது நன்றி. இன்னும் சிறப்பாக எழுத முயல்கிறேன்.

said...

Ragavan,

I left comments to most of your postings. Did you read them? As all the postings were done earlier, I am not sure whether you are tracking them now or not.

Kumaran.

said...

இல்லை குமரன். பழைய பதிப்புகளாக இருப்பின் நான் விட்டிருப்பேன். இப்பொழுதே போய்ப் பார்க்கிறேன்.

உங்களுடைய பதிப்புகளையும் நான் பார்த்தேன். அபிராமி அந்தாதியைப் படித்தேன். இன்னும் ஒவ்வொன்றாகப் படிக்க வேண்டும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு பிளாக்கில் இருப்பதால் கொஞ்சம் சிரமமாக இருக்கிறது. கண்டிப்பாக அனைத்தையும் படிக்க வேண்டும்.

said...

உண்மை ராகவன். நண்பர்கள் சிலர் இதே கருத்தைக் கூறியிருக்கிறார்கள். ஆனால் ஒவ்வொரு ப்ளாக்கும் ஒவ்வொரு பொருளைப் பற்றி என்பதால் இப்படி பிரித்து வைத்துள்ளேன். ஒரு நாளுக்கு ஒரு பதிவு என்ற முறையில் எல்லா ப்ளாக்குகளிலும் வாரத்திற்கு ஒரு பதிவாவது எழுத முயல்கிறேன். சிரமமாய் இருந்தாலும் படித்து உங்கள் கருத்தினையும் குறைகளையும் கூறவேண்டும்.

said...

அற்புதமான எழுத்துக்கள்!!
தொடரட்டும் உங்கள் எழுத்துப்பயணம்!! :)

said...

// CVR said...
அற்புதமான எழுத்துக்கள்!!
தொடரட்டும் உங்கள் எழுத்துப்பயணம்!! :) //

வாருங்கள் CVR. நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தக் கதை மீண்டும் வெளியில் வந்திருக்கிறது. வெட்டிப்பயல் வேலை. :-) இந்தக் கதையை நீங்கள் படித்து ரசித்தமைக்கு மிக்க நன்றி.

said...

// muthalvan said...
ஹரியும் சிவனும் ஒன்னு அறியாதவன் வாயில் மண்ணு. //

நன்றி முதல்வன். மொத்தத்தில் எல்லாம் பரம்தானே. நீண்ட நாள் கழித்து உங்களுக்கு நன்றி சொல்வதற்கு மன்னிக்கவும். :-) இந்தக் கதை நீண்ட நாட்களுக்கு முன்னர் எழுதியதால்..அப்பொழுதெல்லாம் பின்னூட்ட முறைகள் தெரிந்திருக்கவில்லை.

said...

//அதனால் நிற்காமல் மழை கொடுக்கும் காளமேகமாய் தீந்தமிழ்ப் பாக்களைப் பொழியப் போகிறான் என்றும் இவர்களுக்குத் தெரியவா போகிறது!//

அடடா,கவி காளமேகததிற்குப் பின்னால்
இப்ப்டியொரு சுவையான காதல் கதை இருக்கிறதா ஸ்வாமி, தெரியாமல் போய்விட்டதே!

said...

ராகவன்,
தமிழ் இப்படி அருமையாக வலம் வருகிறதெ. ஒரு தடவைக்கு இரண்டு தடவை படித்து மகிழ்ந்தேன்.
இந்தக் கதை(உண்மைக் கதை)யில் வருவதுபோல் முற்காலத்தில் சைவமும் வணைவமும் ஒன்றாக இருந்துதான் பிறகு பிரிந்தார்கள் என்று பெரியவர்கள் சொல்லக் கேள்வி. அடுத்த பதிவு எப்போது?

said...

// SP.VR.சுப்பையா said...
//அதனால் நிற்காமல் மழை கொடுக்கும் காளமேகமாய் தீந்தமிழ்ப் பாக்களைப் பொழியப் போகிறான் என்றும் இவர்களுக்குத் தெரியவா போகிறது!//

அடடா,கவி காளமேகததிற்குப் பின்னால்
இப்ப்டியொரு சுவையான காதல் கதை இருக்கிறதா ஸ்வாமி, தெரியாமல் போய்விட்டதே! //

ஆமாங்க. வரலாற்றை நோண்டிப் பார்த்தால் காதல் எங்கெங்கும் இருக்கும். காளமேகம் மட்டுமென்ன விதிவிலக்கா என்ன?

said...

// வல்லிசிம்ஹன் said...
ராகவன்,
தமிழ் இப்படி அருமையாக வலம் வருகிறதெ. ஒரு தடவைக்கு இரண்டு தடவை படித்து மகிழ்ந்தேன்.
இந்தக் கதை(உண்மைக் கதை)யில் வருவதுபோல் முற்காலத்தில் சைவமும் வணைவமும் ஒன்றாக இருந்துதான் பிறகு பிரிந்தார்கள் என்று பெரியவர்கள் சொல்லக் கேள்வி. அடுத்த பதிவு எப்போது? //

வாருங்கள் வல்லி. நீங்கள் சொல்வது போலச் சைவமும் வைணவமும் ஒன்றாக இருந்ததா என்று தெரியாது. ஆனால் எனக்குத் தெரிந்த வரையில் அதற்கு வாய்ப்பில்லை என்று தோன்றுகிறது. சிலப்பதிகாரத்தை எடுத்துக் கொண்டால் இரண்டையும் தனித்தனியாகவே சொல்கிறது. செங்குட்டுவன் சைவக் கோயில் மாலையைச் சென்னியில் சூடிக் கொண்டதும்....சேடகமாடக வைணவக் கோயில் மாலையை ஒற்றைத் தோளில் (அதை அவமதிக்காமலும்...முழுமதிக்காமலும்) சூடிக் கொண்டதையும் வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார் இளங்கோ. ஆகையால் இது குறித்து நிறைய படித்தவர்கள்தான் சொல்ல வேண்டும்.

said...

வார்த்தைகளில் ஜாலம்..
வாக்கியங்களில் மாயாஜாலம்..
நெளிவு.. சுளிவு.. தெளிவு..
உனது இந்தப் பதிவு..