Wednesday, July 20, 2005

ஹாரி ஓம் பாட்டராய நமஹ

ஹாரி ஓம் பாட்டராய நமஹ

நாலு வருடங்களுக்கு முன்னாலே.......தன்னாலே ஒரு நண்பர் கொடுத்த புத்தகம்........பின்னாலே இப்படி ஒரு நிலைக்குக் கொண்டு வந்து விடும் என்று தெரிந்திருந்தால்ல்ல்ல்ல்ல்ல்.......அந்தப் புத்தகத்தை நான் வாங்கியிருக்கவே மாட்டேன்.

தற்செயலாக நண்பர் ஒருவரிடமிருந்து படிப்பதற்காக வாங்கியதுதான் ஹாரி பாட்டரின் முதல் புத்தகம். அதைப் படித்து முடிக்கும் முன்னமே அதுவரை வந்திருந்த நான்கு புத்தகங்களையும் வாங்கி நானே படிக்கத் தொடங்கினேன். ஒன்றை முடித்ததும் அடுத்தது. இப்படி நான்கு புத்தகங்களையும் நான் படித்து முடித்திருக்கையில் என்னாலும் சிலருக்கு ஹாரி பாட்டர் பைத்தியம் பிடித்திருந்தது.

அடுத்த புத்தகம் எப்பொழுது வருமென்று காத்திருந்து விழுந்தடித்து வாங்கியதுதான் ஹாரி பாட்டரின் ஐந்தாவது புத்தகம். இரண்டாண்டுகள் கழித்து இப்பொழுது ஆறாவது புத்தகமும் வந்திருக்கிறது.

ஆக கடந்த நான்கு ஆண்டுகளில் ஹாரிபாட்டரில் மூழ்கி முத்தெடுத்து அதை மற்றவர்களுக்கும் காட்டிய புண்ணியம் நிறையவே கிடைத்து விட்டது.

ஆறாவது புத்தகத்தின் வெளியீட்டுத் தேதி முடிவானதிலிருந்தே அந்தப் புத்தகத்திற்கு என்னைத் தயார்படுத்திக் கொண்டிருந்தேன். பெங்களூரின் பிரபல Strand புத்தகக் கடையில் விசாரித்து முன்பதிவிற்கு பெயரைப் பதிவு செய்து வைத்திருந்தேன். பின்னே முதல் நாளே வாங்கிப் படிக்க வேண்டுமே.

Strand புத்தகக் கடையில் முன்பதிவிற்கு பணம் வாங்க மறுத்து விட்டார்கள். காரணம்? சென்ற முறை எல்லாரும் ஐந்தாம் புத்தகத்தை அறுநூற்றுச் சொச்சத்திற்கு விற்றுக் கொண்திருந்த பொழுது ஐநூற்றுச் சொச்சத்திற்கு விற்றார்கள் அவர்கள். இந்த முறையும் அப்படிச் செய்ய விலையைச் சொல்லவில்லை. பெரிய கடைகளில் எழுநூறு, எண்ணூறு என்று பல விலைகளில் இலவசப் பொருட்களோடு முன்பதிவைச் செய்து கொண்டிருந்தார்கள்.

Strand புத்தகக் கடையின் ஒரு மாதம் முன்னால் ஹாரி பாட்டர் பதிவு செய்தவர்களை அழைத்து ஒரு வினாடிவினா நிகழ்ச்சியும் நடத்தி மேலும் பிரபலப் படுத்தினார்கள். அந்தச் சமயத்தில்தான் எனது வேலைப்பளு கூடி கடைப்பக்கமே போக முடியாமல் இருந்தது. அவர்களும் அறுநூற்று எழுபது ரூபாய் என்று விலை நிர்ணயித்து முன்பதிவுகளை ஏற்றுக் கொண்டிருந்தார்கள்.

புத்தகம் வெளியிடுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னால் ஹாரி பாட்டர் வெறி பிடித்து தொலைவில் இருக்கும் கடைக்குச் செல்ல முடியாமல் இருந்த பொழுது ஒரு நண்பர் உதவிக்கு வந்தார். அவரது நண்பரின் அலுவலகம் Premire புத்தகக் கடைக்கு மிக அருவில். அவரை அனுப்பி அங்கே முன்பதிவு செய்து ரசீதை வாங்கித் தந்தார். வாழ்க அந்த நண்பர்கள்.

புத்தக வெளியீட்டுக்கு முதல்நாள் சரியான தூக்கமில்லை. பாலும் கசந்ததடி. படுக்கை நொந்ததடி கதைதான். காலையிலேயே குளித்து எழுந்து பைக்கை எடுத்துக் கொண்டு கடைக்குப் போய் ரசீதைக் காட்டி புத்தகத்தை கையில் வாங்கியதும் ஒரு மகிழ்ச்சி. அடடா! எப்படிச் சொல்வது அதை.

ஆனால் அன்றைக்கும் அலுவலகம் செல்ல வேண்டியிருந்தது. பகல் பொழுதில் படிக்க முடியவில்லை. மாலையில் கொஞ்ச நேரம் படித்தால்....திடீரென நண்பர்கள் வந்து விட்டார்கள். அன்றைய பொழுது முடிந்தது.

ஞாயிற்றுக் கிழமை புதிதாக தாயாகியிருந்த நண்பரின் வீட்டிற்குச் சென்றிருந்தேன். அங்கேயே மாலை வரை பொழுது போய் விட்டது. பிறகு வீட்டுக்கு வந்து கொஞ்சம் படித்தேன். நண்பர்களின் வற்புறுத்தலுக்காக பக்கத்திலிருந்த ஜீவன் பீமா நகரிலுள்ள தோசா ஸ்டாப் என்ற கடைக்குச் சென்று சாப்பிட்டோம். கிளம்பும் பொழுது மழை பிடித்துக் கொண்டது. மழை விட்டு வீட்டுக்குப் போய் கொஞ்சம் படிக்கையிலேயே அலுப்பில் கண்ணயர்ந்து போனேன்.

அலுவலகம் வந்தால் e-copy மெயில்களில் தவழத் தொடங்கியிருந்தது. அதை இறக்கி வைத்து விட்டு வேலையைப் பார்த்தேன். அதற்குள் வலையில் விமர்சனங்களும் கதையில் வரும் ரகசிய விவரங்களும் வந்திருந்தன. நல்ல வேளையாக அவைகளை முழுமையாக படிக்கவில்லை. மீனாக்ஸ் அவரது வலைப்பூவில் பிறகு படிக்கிறேன் என்று பதிவிட்டேன். அதற்குள் டோண்டுவின் வலைப்பூவில் முதல் வரியிலேயே மிகப் பெரிய ரகசியத்தைப் போட்டுடைத்திருந்தார். அவரைக் குற்றம் சொல்ல முடியாது. காரணம் பெரும்பாலும் விவரம் தெரிந்து போனது. இரண்டு நாட்கள் என்பது அதிகம். என்னைப் போன்ற அபாக்யவாதிகளும் இருக்கிறார்களே. திங்கள் இரவு மூன்று முப்பதுக்குத் தூங்கினேன். செவ்வாய் இரவு (புதன் காலை) ஐந்து முப்பதுக்கு புத்தகத்தை முடித்தேன். ம்ம்ம்ம்ம்ம்ம்...

புத்தகம் நன்றாகவே வந்திருக்கிறது. இரண்டு திருப்பங்களை நான் எதிர் பார்த்திருந்தேன். அவைகள் அப்படியே பலித்திருந்தன. Half-blood Prince யாரென்ற எனது ஊகம் மிகச் சரியாகவே இருந்தது. அதேபோல் இறந்து போவார் என்று நான் நினைத்திருந்த பாத்திரமே இறந்து போனது. அதைத்தான் டோண்டு சொல்லியிருந்தாலும், எப்படி என்று தெரிந்து கொள்ளும் ஆவல் நிறையவே இருந்ததால், புத்தகத்தை விறுவிறுப்பாகவே படிக்க முடிந்தது.

முடிக்கும் பொழுது மனதில் ஒரு இறுக்கம் பரவுவது உண்மைதான். ஆனால் இப்பொழுது கதை மிகச் சரியான பாதையில் போவதாகத் தோன்றுகிறது. அடுத்த புத்தகமே கடைசி புத்தகம். இப்பொழுது பிரச்சனை உச்சத்தில் இருக்கிறது. அடுத்த புத்தகத்தில் எப்படி முடிகிறது என்று பார்க்கலாம். இன்னும் இரண்டாண்டுகள் இருக்கின்றன. ஹாரி ஓம் பாட்டராய நமஹ. கதையில் வரும் Time Turner (காலத்தின் முன்னும் பின்னும் செல்ல வைக்கும் மிகச் சிறிய கருவி ) இருந்தால் இரண்டு வருடங்களுக்கு முன்னால் போய் அடுத்த புத்தகத்தையும் படித்திருக்கலாம். எல்லாம் வல்ல ஹாரிப் பெருமான் மனம் வைத்தால் எதுவும் நடக்கும்.

அன்புடன்,
கோ.இராகவன்

3 comments:

said...

மூர்த்தி, புத்தக விமரிசனமாக எழுதலாம். அது பெரிதாக வரும். கொஞ்சம் நேரம் தேவை. மேலும் இப்பொழுதுதான் புத்தகம் வந்திருக்கிறது.

முந்தய ஐந்து புத்தகங்களையும் தொட்டுக் கொண்டு செல்கிறது இந்தப் புத்தகம். நானும் எல்லாவற்றையும் தொட வேண்டியிருக்கும்.

Lord of the Rings புத்தகத்திற்கு விமர்சனம் எழுதத் தொடங்கி.....எழுதிக்கிட்டே போனேன். எதையும் விட முடியல. எல்லாத்தையும் தொட முடியல. அத அப்படியே விட்டுட்டேன்.

said...

tallwalker, I am neither a child nor old (or middle age). And I somehow I feel I have all the ages with me all the time. This I feeling I have just after my teenage.

btw, whatz ur blog name? I cudnt reach through ur profile.

said...

படிக்க வேண்டிய புத்தகங்களின் பட்டியலில் இப்போது ஹாரி பாட்டரின் பெயரும் சேர்ந்து விட்டது.
ஹாரி பாட்டரின் ஒரு புத்தகமாவது பெற்றுப் படிக்க வேண்டுமென்ற ஆவலை மீனாக்ஸ் டோண்டு அவர்களுக்கு அடுத்ததாக உங்கள் பதிவும் ஏற்படுத்தியுள்ளது.