Monday, March 05, 2007

காலபைரவன் - விமர்சனம்

இவருதாங்க காகாகாகாலபைரவன்
தூத்துக்குடியில் ஒரு பொழுது போகாத சனிக்கிழமை மதியம் பார்த்த படம்தான் காலபைரவன். நிக்கோலஸ் கேஜ் நடித்த காலபைரவன். அட...அதாங்க...Ghost Rider. தூத்துக்குடி மக்களோட மக்களா உக்காந்து அவங்க எப்படி ரசிக்கிறாங்கன்னு ரசிச்சுப் பாத்த படம் காலபைரவன்.

ரெண்டு மணிக்குப் படம்னு சொன்னாங்க. ஒன்னே முக்காலுக்குப் போய் நின்னப்போ தொணைக்குக் கூட யாருமேயில்லை. சரியா ரெண்டு மணிக்குத்தான் டிக்கெட் குடுத்தாங்க. படம் போடும் போது கிட்டத்தட்ட ரெண்டரை.

உக்காந்திருந்தது மின்விசிறி ஓடிக்கிட்டிருந்த ஏசி வகுப்பு. அதுனால திரைக்கு முன்னால தடுப்புக்கு ஒரு கண்ணாடி இருந்தது. அது வழியாப் பாத்தா படம் ஒழுங்காத் தெரியும்லன்னு பக்கத்துல உக்காந்திருந்த சின்னப் பயக கேட்டாங்க. மொத வாட்டி வர்ராங்க போல. தெரியும்னு சொன்னேன். அதக் கேட்ட பெறகுதான் அவங்களுக்கு நிம்மதி.

படத்தோட கதை ரொம்ப லேசு. ஒரு சாத்தான். அது தப்பு பண்ணுது. அதாவது ஒப்பந்தம் போடுது. ஒப்பந்தம் போடுறது தப்பான்னு கேக்காதீங்க. என்ன மாதிரி ஒப்பந்தங்குறதுதான் சூழ்ச்சி. படத்துல யாரெல்லாம் சாத்தான் கிட்ட ஒப்பந்தம் போடுறாங்கன்னு ஒரு போட்டி வைக்கலாம். ஒரு குறிப்பிட்ட ஊர்ல இருக்குற மக்களெல்லார் கிட்டயும் ஒரு ஒப்பந்தம் போடுது சாத்தான். அவங்க வாழ்க்கைல அவங்க விரும்புனதெல்லம் செஞ்சு குடுக்குமாம்...ஆனா அவங்க ஆன்மாக்கள் எல்லாம் சாத்தானுக்கடிமைன்னு. அதுனால எல்லா ஆன்மாக்களையும் அந்த ஊர்லயே சிறை வைக்கிறான் சாத்தான். அந்த நரகத்தக் காவல் காக்க சாத்தான் உருவாக்குனதுதான் காலபைரவன். காலபைரவனோ ஆன்மாக்கள் படுற துன்பத்தப் பாத்து அந்த ஒப்பந்தத்தையே திருடிக்கிட்டு ஓடீர்ரான். இப்ப சாத்தானோட ஒப்பந்தம் சாத்தான் கைய விட்டுப் போயிருச்சு. அதுனால ஆன்மாக்கள் எல்லாம் தப்பிச்சு அந்த பாழடைஞ்சு போன ஊருக்குள்ளயே அடஞ்சு கெடக்குதுங்க.

அடுத்து என்ன செய்யனும்? இன்னொரு காலபைரவனச் செய்யனும். மிஸ்டர். சாத் கூட அதத்தான் செய்றாரு. ஒரு பைக் ஓட்டுறவனோட அப்பாவுக்கு கான்சர். அத குணப்படுத்துறதாகவும் அதுக்குப் பதிலா அந்த பைக் பையன் அவனோட ஆன்மாவை சாத்தானுக்குக் குடுத்துறனும்னும் இன்னொரு ஒப்பந்தம் போடுது சாத்தான். அந்தப் பையன் அந்த ஒப்பந்தத்தைத் தெறக்கும் போது கை கிழிச்சி ரத்தச் சொட்டே கையெழுத்தா விழுந்துருது. அடுத்த நாள் காலைல அவனோட அப்பா நல்லாயிர்ராரு. ஆனா அன்னைக்கு நிகழ்ச்சியில சாத்தான் அவர நெருப்புல தள்ளிக் கொன்னுருது. கேட்டதுக்கு...அவரைக் குணப்படுத்துறதப் பத்தித்தான் ஒப்பந்தம். அது நடந்ததுல்லன்னு திமிராக் கேக்குது. அத்தோட சாத்தானுக்குத் தேவை வரும் போது அவனைப் பயன்படுத்திக்கும்...இப்ப அவன் பைக் ஓட்டுறதுல சாதிக்கட்டும்னு சொல்லீட்டுப் போயிருது.

இவனும் பைக் சாதனைல பெரிய ஆளாயிர்ரான். ஆறு எலிகாப்டர வரிசையா நிக்க வெச்சு பைக்ல தாண்டுறான். விபத்து நடந்தாக் கூட அவனைச் சாத்தான் காப்பாத்துது. நாளைக்கு வேலைக்கு ஆள் வேணுமே. அப்பத்தான் சாத்தானோட மகன் அந்த ஒப்பந்தத்தத் திருட முயற்சிக்கிறான். அப்பனக் கவுத்துட்டு இவன் பெரிய ஆளாகத் திட்டம். அப்பத்தான் உலக ஆன்மாக்கள இவன் கட்டுப்படுத்தலாம்னு. ரொம்பவே அழகாகவும் கும்முன்னும் இருக்குறவரச் சாத்தானோட மகன்னு சொல்றாங்க. அந்த நடிகர் மேல நமக்குப் பரிதாபந்தான் வருது. அவருக்கு ஒதவி செய்ய மூனாளு. நிலப்பூதம். காத்துப் பூதம். நீர்ப்பூதம்னு மூனு பேரு.இவருதாங்க சாத்தாரோட மகரு...


அதுக்குள்ள அந்த பைக் பையன் வளர்ந்து நிக்கோலஸ் கேஜ் ஆயிர்ராரு. அப்பத்தான் நமக்கு ஒன்னு புரியுது. நிக்கோலஸ் கேஜுக்கு ஏஜ் ரொம்ப ஆயிருச்சுன்னு. அதுக்கு அவரு என்ன செய்ய முடியும்! சாத்தான் ஒரு பைக்கோட வந்து கேஜப் பாக்குது. "இந்தாப்பா...இந்த மாதிரி ரொம்ப நாளைக்கு முன்னாடி ஒருத்தன் ஒப்பந்தத் திருடீட்டு ஓடீட்டான். அந்த ஒப்பந்தத்த எப்படியாவது கண்டுபிடிக்க என்னோட மகன் முயற்சி செய்றான். நீ என்னோட மகனோட கதையை முடிச்சிட்டு அந்த ஒப்பந்தத்தையும் எங்கிட்ட கொண்டாந்து தரனும்னு சொல்லுது. இவனால மறுக்க முடியலை. ஏன்னா அவனோட ஆன்மாதான் சாத்தானுக்கு அடிமையாச்சே. அதுனால ராத்திரி வந்தாலே அவன் எரியிற எலும்புக்கூடா மாறி...எரியிற பைக்குல போறான். காகாகாகாலபைரவன் பைக்ல போறாரு.

அவனை அழிக்க இந்தப் பூதங்கள் ஒன்னொன்னா முயற்சி செய்யுது. ஆனா ஒவ்வொரு பூதமா கொன்னுர்ரான். கதாநாயகன்னா ஒரு காதலி இருக்கனுமே. அவளை வில்லன் கடத்தீட்டுப் போய் மெரட்டனுமே. அது இங்கயும் நடக்குது. இப்ப ஒப்பந்ததக் கண்டு பிடிச்சி அதை சாத்தான் மகன் கிட்ட ஒப்படைக்க வேண்டிய வேலையும் கேஜுக்கு வந்துருது. ஒருவழியா பழைய காலபைரவனக் கண்டுபிடிச்சி ஒப்பந்தத்த வாங்குறாரு. புதுக் காலபைரவன் கிட்ட பொறுப்பை ஒப்படைச்சுட்டு அவரு ரிட்டயர் ஆயிர்ராரு. அதுக்கப்புறம் என்ன? வில்லனை அழிச்சி காதலியைக் காப்பாத்துறாரு. தன்னுடைய காதலன் மனுசனே இல்லைன்னு தெரிஞ்சு காதலி மொதல்ல வருத்தப்பட்டாலும் பிறகு ஒத்துக்கிறாங்க. அப்பத்தான் சாத்தான் வந்து இன்னொரு ஒப்பந்தம் போடுது. இனிமே காலபைரவனா இருக்க வேண்டியதில்லை. அந்த வேலைய ரிசைன் பண்ணீட்டா திரும்பவும் மனுசனாக்கீர்ரேன்னு. ஆனா கேஜ் ஒத்துக்குற மாட்டேங்குறாரு. கெட்டவங்க கிட்ட இருந்து ஒலகத்தக் காப்பாத்துறதுதான் காலபைரவனோட வேலைன்னு சொல்லீட்டு எரியிற பைக்குல ஜம்முன்னு எலும்புக்கூடா போறாரு.

இதுதாங்க கதை. ஆனா அதை முழுசாப் பாக்க விடாம தேட்டர்ல வெட்டுக எக்கச்சக்கம். திடீர்னு சத்தம் ஒன்னு வரும். படம் வேற வரும். பாத்துக்கிட்டிருக்கும் போதே திரையில இருட்டு விழுந்து அப்படியே வெளிச்சம் திரும்ப வரும். நடுவுல பக்கத்துப் பயக படத்தப் பத்தி உணர்ச்சி வசப்பட்டு பேசிக்கிட்டிருக்காங்க. "ஏலா கோயிலுக்குள்ள போயிருவாம் பாரேன்." தூத்துக்குடி வட்டாரத்துல சர்ச்சும் கோயில்தான். "அந்தக் கெழவனும் காலபைரவன்லா...அதான் அவனுக்கு எரியுற குதிரல." "ஏலே..முத்தங் கொடுக்காம் பாரேன். வெளிநாட்டுல எங்ஙன பாத்தாலும் இப்பிடித்தாம்ல. ஒரே ஜாலியா இருக்குமாம். எல்லாமே ரொம்ப லேசு." இப்பிடி கொடுத்த காசுக்குக் கூடவே சினிமா கெடைச்சது.

படத்துல சிறப்புன்னு சொன்னா அந்த எரியிற எலும்புக்கூடு எரியிற பைக்குல சாகசங்கள் எக்கச்சக்கமா செய்றதுதான். நல்லா எடுத்திருக்காங்க. ஆனா மத்த எல்லா கிராபிக்சும்...ம்ம்ம்ம்.....ராஜகாளியம்மன்...கோட்டைப்புரத்து மாரியம்மன்....வீரகாளி வெக்காளியம்மன் படங்கள் பாத்த மாதிரி இருந்தது. இன்னொன்ன பாராட்டியே ஆகனும். ஒலிமாற்றம். அதாங்க டப்பிங்கு. ரொம்ப நல்லாவே செஞ்சிருக்காங்க. நிக்கோலஸ் கேஜோட குரல் எனக்குத் தெரியும்னாலும்...புதுக்குரல்னு உறுத்தாம நல்லாப் பேசியிருந்தாங்க. இப்பல்லாம் இந்த மாதிரி நெறையப் படங்கள் வருதே. ஹாரி பாட்டர் கூட தமிழ்ல வருது. ஆனா பாக்கத்தான் மனசில்லை. புத்தகத்த படிச்சிர்ரோம்ல. அதான்.

என்ன? படத்தப் பாக்கலாமான்னு கேக்குறீங்களா? ம்ம்ம்ம்...நேரமிருக்கு....எப்படியாவது போக்கனும்னா பாக்கலாம்.

அன்புடன்,
கோ.இராகவன்

21 comments:

said...

எனக்கு பிரியாதது ஒரு விஷயம். ஆரம்பத்துல பைக் ஓட்டுற ஆள் எப்படி நிக்கொலஸ் கேஜ் ஆக மாறுகிறார் ? அது பத்தி என்ன விளக்கம் சொன்னாங்க தமிழ்ல ? நான் டிவிடியில் பார்த்தப்ப ஒரு மண்ணும் புரியல.

செந்தழல் ரவி

said...

// Anonymous said...
எனக்கு பிரியாதது ஒரு விஷயம். ஆரம்பத்துல பைக் ஓட்டுற ஆள் எப்படி நிக்கொலஸ் கேஜ் ஆக மாறுகிறார் ? அது பத்தி என்ன விளக்கம் சொன்னாங்க தமிழ்ல ? நான் டிவிடியில் பார்த்தப்ப ஒரு மண்ணும் புரியல.

செந்தழல் ரவி //

என்ன ரவி? அனானிமசா வந்திருக்கீங்க!

அதாவதுங்க....மகராசன் படம் பாத்தீங்களா? சின்னப்ப உரிச்ச கோழி...வளர்ந்தப்புறம் உரிச்சது...அதே மாதிரி சின்னப்ப படம் பிடிச்சது அந்தப் பையன். அதுக்கப்புறம் 20 வருசம் கழிச்சி பிடிச்சது நிக்கலசு கேஜு. ஆனா படத்துல நெறைய வெட்டுகள்...எனக்கும் அங்கங்க புரியலை. ஆனா நனா அங்கங்க சிமிண்டப் போட்டு நெரப்பீட்டேன். :-)

said...

//எனக்கு பிரியாதது ஒரு விஷயம். ஆரம்பத்துல பைக் ஓட்டுற ஆள் எப்படி நிக்கொலஸ் கேஜ் ஆக மாறுகிறார் ? அது பத்தி என்ன விளக்கம் சொன்னாங்க தமிழ்ல ? நான் டிவிடியில் பார்த்தப்ப ஒரு மண்ணும் புரியல.

செந்தழல் ரவி //

ரவி பைக் ஓட்டுறது சின்னவயசு நிகோலஸ் கேஜ். அதான் அடையாளம் தெரியல. நான் இந்த படத்த டெல்லியில பாத்து பைத்தியம் பிடிக்காத குறைதான். ஏண்டா படத்துக்கு வந்தோம்ன்னு ஆயிடுச்சு.
இனிமே நிகோலஸ் கேஜ் போஸ்டர பாத்து ஏமாறக்கூடாது போல.

said...

// சென்ஷி said...
ரவி பைக் ஓட்டுறது சின்னவயசு நிகோலஸ் கேஜ். அதான் அடையாளம் தெரியல.//

:-) அதே அதே சபாபதே!

// நான் இந்த படத்த டெல்லியில பாத்து பைத்தியம் பிடிக்காத குறைதான். ஏண்டா படத்துக்கு வந்தோம்ன்னு ஆயிடுச்சு.
இனிமே நிகோலஸ் கேஜ் போஸ்டர பாத்து ஏமாறக்கூடாது போல. //

இங்கிலூசுல பாத்தா நிச்சயம் லூசாத்தான் ஆகனும் தமிழ்ல பாத்தப்ப எனக்குத் தோணிச்சு. உங்க கமெண்டுகளும் அதை உறுதிப்படுத்தீருச்சு. ஒங்களப் போலவே நிக்கோலசு கேஜு நடிச்சிருக்காரேன்னு போனேன். ஆனா ஒன்னுங்க...தூத்துடி மக்கள் படத்த ரசிச்சுப் பாத்தாங்க. அது சரி. விஜய், அஜீத், விஷால் நடிச்ச படங்களையே பாக்குறவங்களுக்கு! ம்ம்ம்.... இடைவேளைக்கு அப்புறம் ஃபேனையும் நிப்பாட்டீட்டாங்க :-(

said...

அட ஏமய்யா வயித்தெரிச்சல கொட்டிக்கிறீரு.. நான் பாத்தது ஹிந்தியில... இங்கிலீஷுல பாத்திருந்தாலாவது புரிஞ்சிருக்கும் போல... உங்களை மாதிரி ரொம்ப கஷ்டப்பட்டு கதைய உருவாக்கிக்கிட்டேன்..

இதுல என்ன பெரிய கொடுமன்னா நான் டெல்லி வந்து தியேட்டர்ல போய் பாத்த மொதோ படம் இது..
நம்ம ராசியே இப்படித்தான் போல.

சென்னையில பாத்த மொதோ படம் திருவான்மியூர்-ல நரசிம்மா..
அந்த படம் பாத்த பாவம் கழுவ மறுநாள் ரிலீசான திருவான்மியூர்ல ஜெயந்தியில - "தில்" படத்த முத நாளே பாத்து தீர்த்துக்கிட்டேன். :)


சென்ஷி

said...

// சென்ஷி said...
அட ஏமய்யா வயித்தெரிச்சல கொட்டிக்கிறீரு.. நான் பாத்தது ஹிந்தியில... இங்கிலீஷுல பாத்திருந்தாலாவது புரிஞ்சிருக்கும் போல... உங்களை மாதிரி ரொம்ப கஷ்டப்பட்டு கதைய உருவாக்கிக்கிட்டேன்.. //

ஓ இந்தியிலயா? நமக்கு இந்தியில இந்திப்படத்தப் பாத்தாலே புரியாது. இதுல ஆங்கிலப் படமெல்லாம் தேவையா! உங்கள நெனச்சுப் பரிதாபப் படத்தான் தோணுது. :-(

// இதுல என்ன பெரிய கொடுமன்னா நான் டெல்லி வந்து தியேட்டர்ல போய் பாத்த மொதோ படம் இது..
நம்ம ராசியே இப்படித்தான் போல.

சென்னையில பாத்த மொதோ படம் திருவான்மியூர்-ல நரசிம்மா..
அந்த படம் பாத்த பாவம் கழுவ மறுநாள் ரிலீசான திருவான்மியூர்ல ஜெயந்தியில - "தில்" படத்த முத நாளே பாத்து தீர்த்துக்கிட்டேன். :) //

நரசிம்மா! என்ன துணிச்சல்? என்ன துணிச்சல்? அதான் நறசிம்மாவா இருந்ததுன்னு சொன்னாங்களே!

said...

ஜி.ரா. நம்மூர்ல்ல எந்த தியேட்டர்ல்ல படம் பாத்தீய.. போக்கிரி இன்னும் ஓடுதா?

said...

// தேவ் | Dev said...
ஜி.ரா. நம்மூர்ல்ல எந்த தியேட்டர்ல்ல படம் பாத்தீய.. போக்கிரி இன்னும் ஓடுதா? //

வாங்க தேவ். கே.எஸ்.பி.எஸ்.கணபதியில பாத்தேன். போக்கிரி இன்னும் பாலகிருஷ்ணாவுல ஓடுது. மொழியும் நல்லாவேப் போகுது. பச்சைக்கிளி முத்துச்சரத்த நேத்துதான் எடுத்துட்டு மினிசார்லஸ்ல ஏக்கம்-ங்குற இந்தி டப்பிங் படத்தை, கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும் எச்சரிக்கையோட போட்டிருக்காங்க.

போன வாட்டி தேங்காபன்னு கெடைக்கலை. இந்த வாட்டி நல்லா நெறைய வாங்கி....ஹி ஹி. அப்படியே சீலா, நெத்திலிக் கருவாடுக வாங்கிக் கொண்டாந்திருக்கேன். பஸ்சுல மணம் பரவாமக் கட்டிக் கொண்டாந்தேன்.

said...

படம் நல்லாயிருக்குன்னு சொன்னாங்க? அப்போ ந்ல்லா இல்லயா?

said...

யப்பா, இந்த படத்தை இத்தினி பேரு பாத்திருக்கீங்களா? சரிதான்.

எனக்கு என்னவோ இந்த மொழி மாற்றம் செஞ்ச படங்களைப் பார்ப்பது பிடிக்கறதே இல்லை.

said...

// கார்த்திக் பிரபு said...
படம் நல்லாயிருக்குன்னு சொன்னாங்க? அப்போ ந்ல்லா இல்லயா? //

நல்லாயிருக்குன்னு யார் சொன்னா? யார் சொன்னா? யார் சொன்னா? யாருன்னு சொல்லு காபி. அப்போ மட்டுமில்ல..இப்பவும் நல்லாயில்ல.

said...

// இலவசக்கொத்தனார் said...
யப்பா, இந்த படத்தை இத்தினி பேரு பாத்திருக்கீங்களா? சரிதான். //

என்ன செய்ய கொத்சு? நிக்கோலஸ் கேஜு படத்தப் போட்டு ஏமாத்தீட்டாங்களே!

// எனக்கு என்னவோ இந்த மொழி மாற்றம் செஞ்ச படங்களைப் பார்ப்பது பிடிக்கறதே இல்லை. //

நானும் பாக்குறதில்லை. ஆனாலும் சமயத்துல இந்த மாதிரி முயற்சி எடுத்துப் பாக்குறது.

said...

இன்னும் இந்த சாத்தான் கதைகளை விடவில்லையா??

\\ வெளிநாட்டுல எங்ஙன பாத்தாலும் இப்பிடித்தாம்ல. ஒரே ஜாலியா இருக்குமாம். எல்லாமே ரொம்ப லேசு." இப்பிடி கொடுத்த காசுக்குக் கூடவே சினிமா கெடைச்சது.\\

அந்த சாத்தான் கதைவிட இந்த குட்டிசாத்தான்களின் கதை அருமைய இருக்கு :))

சரி...கள்ளியிலும் பால் என்ன ஆச்சு???

said...

நல்லாயிருக்குன்னு யார் சொன்னா? யார் சொன்னா? யார் சொன்னா? யாருன்னு சொல்லு காபி. அப்போ மட்டுமில்ல..இப்பவும் நல்லாயில்ல//


என் எதிரி ஒருத்தன் சொன்னான்!!

said...

ராகவா!
படம் பார்க்க வேண்டாம் என்னு சொல்லியதாக நான் கொள்கிறேன்.

said...

இப்படிபட்ட படத்தையும் இவ்வளவு அழகா விமர்சனம் எழுத முடியுமா? ஆச்சரியமாக தான் இருக்கு!

//நிக்கோலஸ் கேஜு படத்தப் போட்டு ஏமாத்தீட்டாங்களே!
//

ஏனுங்க.. நிக்கோலஸ் கேஜு அவ்வளவு நல்ல நடிகரா?

அவரோட, The Rock, Face off பார்த்து இருக்கி ன். அப்படி ஒன்னும் impress ஆகலை.

ஆனா, இந்த மாதிரி மொழி மாற்றம் செஞ்ச படங்களைப் பார்க்கணும்-னு ரொம்ப நாள் ஆசை.

said...

அட மக்கா இந்த படம் இன்னும் ஓடிட்டிருக்கா... :))

said...

// யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
ராகவா!
படம் பார்க்க வேண்டாம் என்னு சொல்லியதாக நான் கொள்கிறேன். //

அதே அதே. சரியாகப் புரிந்து கொண்டீர்கள். பிழைத்துக் கொள்வீர்கள். :-)

said...

// வசந்தம் said...
இப்படிபட்ட படத்தையும் இவ்வளவு அழகா விமர்சனம் எழுத முடியுமா? ஆச்சரியமாக தான் இருக்கு! //

நன்றி நன்றி.

////நிக்கோலஸ் கேஜு படத்தப் போட்டு ஏமாத்தீட்டாங்களே!
//

ஏனுங்க.. நிக்கோலஸ் கேஜு அவ்வளவு நல்ல நடிகரா? //

அவ்வளவு நல்ல நடிகர்னு சொல்ல முடியாது. மொகமெல்லாம் வெரப்பாத்தான் வெச்சிருப்பாரு. ஆனா படத்துல ஏதாவது வித்தியாசமா இருக்கும். நேஷனல் டிரஷர் கூட மசாலான்னு சொன்னாலும் பாக்க நல்லாயிருக்கும்.

// அவரோட, The Rock, Face off பார்த்து இருக்கி ன். அப்படி ஒன்னும் impress ஆகலை.

ஆனா, இந்த மாதிரி மொழி மாற்றம் செஞ்ச படங்களைப் பார்க்கணும்-னு ரொம்ப நாள் ஆசை. //

நானும் நெறையப் பாத்ததில்லை. மொதல்ல பாத்தது ஜுராசிக் பார்க். அப்புறம் லார்டு ஆப் தி ரிங்க்ஸ் ரெண்டாவது பாகம். நல்லாவே செஞ்சிருந்தாங்க.

said...

பைக்,நிகலஸ் கேஜ்,
தூத்துக்குடி,எலும்புக்கூடு
ஏசி எனக்குப் புரிந்தது இவ்வளவுதான்.

மகா பொறுமை உங்களுக்கு.:-)

said...

தமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,

தமிழ் ஒலி ஒளி நாடா
தமிழ் படப்பாடல்
தமிழ் நகைச்சுவை
தமிழ் படம்
தமிழ் நடிகர் நடிகை புகைபடம்


சூரியன் வானொலி.
தமிழன்
சூரியன் வானொலி, கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க...........

ரேடியோ.ஹாப்லாக்.காம்
( radio.haplog.com )

சன் டிவி..............
கே டிவி..............
தமிழன்
உங்கள் கணிணி திரையில் வண்ணக்கோலங்கல் படைக்கும் சன் டிவி.......

டிவி.ஹாப்லாக்.காம்
( Tv.Haplog.Com )
தமிழ்.ஹப்லாக்.காம்
(Tamil.Haplog.com)