Monday, January 28, 2008

தங்க மரம் - 3

முன்கதைச் சுருக்கம்

கதிரவனின் தாயார் அவனது பதினெட்டாவது வயதில் ஒரு சிறிய பெட்டியைக் கொடுத்து தந்தையாரின் கட்டளைப் படி ஒரு செயலைச் செய்து முடிக்க வேண்டுமென்று சொன்னார். அதை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் உட்கார்ந்திருந்த கதிரவன் நண்பன் சித்திரையிடன் இந்தச் செய்தியைச் சொல்லச் சென்றான்.

ஏரி சூழ் கூம்புமலையில் ஊழிவாயன் தன்னுடைய அறையில் இருந்த ஏழு உருளைகளை ஒவ்வொன்றாகத் திறந்து பார்க்கிறான். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு நிறத்தில் ஒரு பெண் வந்து கொஞ்சலில் தொடங்கி மிரட்டலில் முடிக்கிறாள். அவளை விடுவிக்காவிடில் ஊழிவாயன் வீழ்வான் என்று மிரட்டுகிறாள். அதே நேரத்தில்......

பாகம் - 3

ஆலோர் பற்றித் தெரிந்து கொள்வோமா? நாம் கதையின் தொடக்கத்தில்தானே இருக்கிறோம். ஆகையால் இந்த அறிமுகங்கள் தேவையிருக்கிறது. அதுவுமில்லாமல் ஆலோர் பற்றித் தெரிந்து கொள்வது கதிரவனுக்குக் கிடைத்த பொறுப்பு பற்றியும் ஊழிவாயனைப் பற்றியும் மேலும் புரிந்து கொள்ள உதவும். ஆகையால் அறிமுகத்திற்குப் போவோமா.

ஆலோர் என்பது வேறொரு உலகம். நமது அண்டங்களை விட்டு வெகு தொலைவில் உள்ளது. அது ஒரு தட்டைக் கிரகம். நமது பூமியில் ஓரிடத்தில் தொடங்கி அப்படியே நேராகச் சென்றால் புறப்பட்ட இடத்திற்கே வந்து விடலாம். ஆனால் ஆலோரில் அப்படியில்லை. கிரகத்தின் ஒரு விளிம்பில் வந்து நிற்போம். அங்கிருந்து குதித்தால் அவ்வளவுதான். கிரகத்தை விட்டு விண்வெளியில் போய்விடுவோம். அதனால்தான் விளிம்பைச் சுற்றி மிக உயரமான மதில்கள் கதவில்லாமல் கட்டப்பட்டுள்ளன.

அந்த மதில்களில் நான்கு பக்கங்களிலும் நான்கு கோபுரங்களில். ஒவ்வொரு கோபுரமும் ஒவ்வொரு காவல் தெய்வத்திற்கு. அந்த மதில்களுக்கு நடுவில்தான் ஆலோரின் இயக்கம் முழுவதும். கிரகத்தில் நட்டநடுவில் மிகப்பெரிய அரண்மனை. அதன் கோபுரம் காவல்தெய்வங்களின் கோபுரங்களை விடவும் உயரமானது. அந்தக் கோபுரத்தின் உச்சிமட்டும் ஒளிர்ந்து கொண்டிருந்தது.


ஆலோரில் வாழ்கிறவர்களுக்கு ஆலோரி என்று பெயர். ஆலோரியிலும் நமது பூமியில் இருப்பவை போலவே விலங்குகளும் பறவைகளும் உண்டு. ஆனால் அங்கு எல்லாமே பறக்கும். ஆனால் அனைத்தும் மதிற்சுவற்றுக்குள் மட்டுமே பறக்கும். ஆனைகளைத் தவிர. ஏனென்றால் ஆனைகள் கிரகத்தை விட்டும் அண்டங்களை விட்டும் பறக்கும் திறமை கொண்டவை. முன்பெல்லாம் நிறைய ஆனைகள் கிரகத்தைச் சுற்றிப் பறக்கும் காட்சியைக் காணலாம். ஆனால் இப்பொழுதெல்லாம் எந்த ஆனைகள் பறப்பதையும் பார்க்க முடிவதில்லை.

ஆலோரிகள் உயிர்வாழ இரண்டு அடிப்படை விஷயங்கள் தேவை. முதலில் ஒளி. பிறகு உணவு. ஒளியின் ஆற்றலைக் கொண்டுதான் அவர்கள் அனைத்தையும் செய்யும் திறன் பெறுகிறார்கள். ஆலோரிகள் எந்தச் செயலையும் கையால் காலால் செய்ய மாட்டார்கள். மாறாக நினைவால் செய்வார்கள். ஒரு பொருளை நகர்த்த வேண்டுமென்றால் கையால் தள்ள மாட்டார்கள். மனதால் தள்ளுவார்கள். இப்படி அனைத்திற்கும் உள்ளத்தைப் பயன்படுத்திச் செய்வார்கள். அதற்குத்தான் அவர்களுக்கு ஒளியின் ஆற்றல் தேவைப்படுகிறது. உணவு அவர்கள் உடலை வளர்க்கத்தான்.

சரி. வாருங்கள். ஆலோரிக்குள் நுழைவோம். பார்க்கின்ற ஒவ்வொன்றும் ஒளியின்றி அரைஉயிரோடு இருப்பது போல இருக்கிறதல்லவா. பார்க்கின்ற மக்கள் கூட இயக்கமின்றி மிகமிக மெதுவாக அசைகின்றார்கள். அல்லது அப்படியே இருக்கின்றார்கள். மனிதர்களே அப்படியிருக்கையில் விலங்குகளைச் சொல்ல வேண்டுமா? பாருங்கள். எல்லாம் ஒவ்வொரு மூலையில் முடங்கிக் கிடப்பதை. நினைவாலே எல்லாவற்றையும் செய்யும் மக்கள் ஏன் இப்பிடிக் கட்டைகளைப் போலக் கிடக்கிறார்கள்!

குளங்களும் ஏரிகளும் கூட அசைவில்லாமல் இருந்தன. சுவாசிக்கக் காற்று இருக்கிறதா இல்லையா என்றே புரியாத நிலை. மொத்தத்தில் அப்படியொரு அழகான மாடமாளிகைகள் நிறைந்த சிறந்த கிரகம் அரைப்பிணம் போல் இருக்கிறது. சரி. நாம் அரண்மனைக்குச் செல்லும் பாதைக்குச் செல்வோம். ஏனென்றால் அந்த வழியில்தானே ஒரு இளம்பெண் நடந்து செல்கிறாள். அவள் ஒருத்தி மட்டுமே சுறுசுறுப்பாகவும் தெளிவாகவும் முழுவுயிரோடயும் இருக்கிறாள். ஆகையால்தான் அவள் சாதாரணமாக நடந்தாலும் விரைவாக நடப்பது போல உள்ளது.

அரண்மனையின் பெரிய கதவு பூட்டப்பட்டிருந்தது. காவலுக்கும் யாருமில்லை. போரில் தோற்றுக் கொள்ளை போன அரண்மனையைப் போலத் தென்பட்டது. தன்னுடைய மனதில் கதவு திறக்க வேண்டும் என்று நினைத்தாள். அந்த நினைப்பினால் இரண்டு கதவுகளும் பிரிந்து திறந்தன. திறந்த கதவு கூட சக்தியில்லாமல் எந்த ஓசையையும் எழுப்பவில்லை.

பொலிவிழந்திருந்த அந்த அரண்மனையின் கொலு மண்டபத்தில் மிகமிக மெல்லிய வெளிச்சத்தில் உள்ளே நுழைந்தாள் அந்த இளம்பெண். அரண்மனைக் கொலுவில் பெரிய அரியாசனம் இருட்டுக்குள் ஒளிந்திருந்தது. அந்த இருட்டிலிருந்து "வா தனிமா. உனக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறேன்" என்று பெண் குரல் ஒலித்தது. குரலில் ஒரு கம்பீரம் இருந்தாலும் அடிக்கிணற்றிலிருந்து வந்தது போல் மிகவும் பல்வீனமாக இருந்தது. தனிமா என்று அழைக்கப்பட்டவள் அரியாசனத்தின் முன் மண்டியிட்டு வணங்கினாள்.

"எழுந்திரு தனிமா. உன்னுடைய ஆற்றலை இரண்டு பெரிய கதவுகளைத் திறப்பதில் வீணாக்காதே. சிறிய கதவைத் திறந்தால் போதாதா? உனக்குரிய கடமை காத்துக் கொண்டிருக்கிறது. அதற்காக ஆற்றலைப் பயன்படுத்து. மங்கிக் கிடங்கும் நமது ஆலோர் உன்னுடைய உதவியால் மட்டுமே ஒளிபெற முடியும். இழந்த ஒளியை மீண்டும் பெறும் நாள் விரைவில் வரும் என்ற நம்பிக்கையை மட்டும் வைத்துக் கொண்டு ஆலோர் வாழ்ந்து கொண்டிருக்கிறது. நான் சொல்வது உனக்குப் புரியும் என்று நினைக்கிறேன்."

தலையை அசைத்தாள் தனிமா. "புரிகிறது அரசி. இதற்காகத்தானே நமது உலகமே கால் வயிற்றுக்கு உண்டு....ஆற்றலையும் உணவையும் தியாகம் செய்து என்னை வளர்த்திருக்கின்றார்கள். அந்த உணவின் நன்றி என்னுடலின் ஒவ்வொரு அணுவிலும் கலந்து படிந்திருக்கிறது. கடமையைச் செய்வேன். இன்றே கிளம்பவும் ஆயத்தமாக உள்ளேன்."

தனிமாவிடம் விரிவாகப் பேச அரசி விரும்பினாலும் தளர்ச்சி அவரை வாட்டியது. அவரும் கால் வயிறுதானே உண்கிறார். தளர்ச்சியையும் மீறி தனிமாவிடம் சொன்னார். "தனிமா, நீ செல்ல வேண்டியது பூமிக்கு. அங்கு சென்றதும் அங்கேயே உனக்கு வேண்டிய உணவையும் ஆற்றலையும் மிக எளிதாகப் பெறலாம். நாளைக்கே புறப்பட ஆயத்தங்களைச் செய். தேவையானவற்றை எடுத்துக் கொள். பிடிமாவும் ஆயத்தமாக இருக்கிறாள் அல்லவா?"

"ஆம் அரசி. நானும் பிடிமாவும் எந்த நொடியிலும் எங்கள் உலகப்பற்றைக் காட்டக் காத்துக் கொண்டிருக்கிறோம். நமது உலகம் இழந்ததை மீண்டும் கொண்டு வந்து சேர்ப்போம்"

தனிமாவின் குரலில் தெரிந்த உறுதி அரசியின் உள்ளத்தில் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் எழுப்பியது. பழைய நாட்கள் மீண்டும் வரும் என்ற நம்பிக்கைப் பூ அவரது முகத்தில் புன்னகையாகப் பூத்தது.

என்ன மக்களே....அறிமுகமெல்லாம் முடிந்து விட்டது. அடுத்த அத்தியாயத்திலிருந்து சுறுசுறு நிகழ்ச்சிகளும் திருதிரு திருப்பங்களுந்தான்.

தொடரும்

அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

24 comments:

said...

கதை சூப்பரா போகுது... அடுத்த பாகத்துக்காக ஆவலுடன் :-)

said...

அறிமுகமா இருந்தாலும் தொய்வில்லாம சுவாரஸ்யமாதான் நகருது கதை!!
சீக்கிரம் அடுத்த பகுதி போடுங்க! :-)

said...

//ஆனைகளைத் தவிர. ஏனென்றால் ஆனைகள் கிரகத்தை விட்டும் அண்டங்களை விட்டும் பறக்கும் திறமை கொண்டவை. முன்பெல்லாம் நிறைய ஆனைகள் கிரகத்தைச் சுற்றிப் பறக்கும் காட்சியைக் காணலாம். ஆனால் இப்பொழுதெல்லாம் எந்த ஆனைகள் பறப்பதையும் பார்க்க முடிவதில்லை.//

ஹை.....யானைங்க பறக்கறதைக் கற்பனை செஞ்சு பார்த்தேன்:-))))

said...

// வெட்டிப்பயல் said...
கதை சூப்பரா போகுது... அடுத்த பாகத்துக்காக ஆவலுடன் :-) //

நானும் அடுத்த பாகத்துக்கு ஆவலா இருக்கேன் வெட்டிங்க. நீங்க பாராட்டுனது மகிழ்ச்சியளிக்கிறது.

// CVR said...
அறிமுகமா இருந்தாலும் தொய்வில்லாம சுவாரஸ்யமாதான் நகருது கதை!!
சீக்கிரம் அடுத்த பகுதி போடுங்க! :-) //

வாங்க சீவியார். ஒங்களுக்கும் கதைல ஒரு இடம் வெச்சிருக்கேன். :D அப்ப இதவிடவும் தொய்வில்லாமப் போகும். :)

said...

//
நானும் அடுத்த பாகத்துக்கு ஆவலா இருக்கேன் வெட்டிங்க. நீங்க பாராட்டுனது மகிழ்ச்சியளிக்கிறது.//

என்ன மரியாதை ரொம்ப பலமா இருக்கு? ஏதாவது ஆப்பு ரெடியா இருக்கா?

said...

அட, என்னங்க நீங்க! ஒரு புதிய கிரகத்தை அறிமுகப்படுத்தும் போது சும்மா பொங்கல் மாதிரி (இல்லை அது புத்தாண்டா? :P) ஒரு விழா அன்னிக்கு கூட்டிக்கிட்டுப் போய் ஆலோரே ஆலோரேன்னு பாட்டு பாடிக்கிட்டு இருக்கற மாதிரி வேண்டாமா? அது என்ன அழுது வழிஞ்சுக்கிட்டு? சரி தனிமா வர்ணனையே இல்லை! :(

said...

ம்ம்..அறிமுகம் எல்லாம் சூப்பர் ;))

\\என்ன மக்களே....அறிமுகமெல்லாம் முடிந்து விட்டது. அடுத்த அத்தியாயத்திலிருந்து சுறுசுறு நிகழ்ச்சிகளும் திருதிரு திருப்பங்களுந்தான்.\\

மிகவும் ஆர்வமாக இருக்கிறோம்..விரைவில் அடுத்த பதிவை போடுங்கள் ;)

said...

நண்பரே - கதை நன்றாக சென்று கொண்டிருக்கிறது. ஆலோரி - தனிமா பிடிமா - பூமிக்கு வருகிறார்களா ?? நோக்கத்தை நிறைவேற்ற. எண்ணங்கள் ஈடேற வாழ்த்துகள்.

said...

துளசிக்கு ஆனைங்கன்னா உயிரு - அதுவௌம் பறக்குதுன்னா - சின்னப் புள்ளே மாதிரி வேடிக்கை பாத்து மகிழ்வாங்க

said...

கொத்ஸ் சொன்னதுபோல ஆலோர் இன்னும் கொஞ்சம் அழகோடு இருந்திருக்கலாமோ?..ஆனாலும் சுவாரஸ்யக் குறைவில்லாம போகுதுங்க.

said...

சுவாரஸ்யம் குறையாமல், பல தகவல்களூடன் கதையை அழகாக நகர்த்தியிருக்கிறீங்க ராகவன்.

தனிமா...பெயர் அழகாக இருக்கிறது!

said...

//இழந்த ஒளியை மீண்டும் பெறும் நாள் விரைவில் வரும் என்ற நம்பிக்கையை மட்டும் வைத்துக் கொண்டு ஆலோர் வாழ்ந்து கொண்டிருக்கிறது//

//பழைய நாட்கள் மீண்டும் வரும் என்ற நம்பிக்கைப் பூ அவரது முகத்தில் புன்னகையாகப் பூத்தது//

நம்பிக்கையே வாழ்கை!!

அடுத்த பாகத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்!!

said...

ஆலோர் அறிமுகம் நன்று..தனிமா, பிடிமா..ஆலோர்..எங்கிருந்து இந்தப் பெயர்களைப் பிடிக்கிறீங்க ராகவன்? நன்றாக இருக்கின்றன..

said...

அறிமுகங்கள் எல்லாம் நன்றாக இருந்தன இராகவன். முன் கதை சுருக்கங்கள் சொன்னதற்கு நன்றி.

said...

ஜிரா
அரிமுகம்...சாரி...அறிமுகம் மாதிரியே தெரியலை! :-)

எல்லாமே இயல்பான வர்ணனைகள் தான்.
பொதுவா மாயாஜாலக் கதைகள்-ல அறிமுகம்-னாலே பத்துப் பன்னிரெண்டு பேரு, அவங்க பாட்டன் பாட்டி பேரு, ஊரு பேர் எல்லாம் சொல்லி பயமுறுத்திடுவாங்க! பேரை எல்லாம் ஞாபகம் வச்சிக்கவே போதும் போதும்-னு ஆயிடும்! ஆனா நீங்க அப்படி எல்லாம் பண்ணலை! நல்ல பையனா இருப்பீங்க போல! :-)

அப்பாலிக்கா இன்னோரு விஷயம்...இதே போல இனிவரும் ஒவ்வொரு பகுதிக்கும் முன்கதைச் சுருக்கம் கொடுத்துருங்க! நல்லாக் கீது!

said...

ஆலோர் படம் சூப்பர். கிரனுக்குப் பாராட்டுக்கள்! திரிபுரம் எரித்த விரிசடைக் காட்சி தான் நினைவுக்கு வந்துச்சி அந்தக் கோபுரங்களைப் பார்த்தவுடன்!

//தன்னுடைய மனதில் கதவு திறக்க வேண்டும் என்று நினைத்தாள். அந்த நினைப்பினால் இரண்டு கதவுகளும் பிரிந்து திறந்தன//

Wireless Fidility WiFi மாதிரி Bodyless Fidelity BiFi-aaaa? :-)

said...

//நமது பூமியில் ஓரிடத்தில் தொடங்கி அப்படியே நேராகச் சென்றால் புறப்பட்ட இடத்திற்கே வந்து விடலாம்.//

என் அறிவியல் பலகை இதை மறுக்கிறது! ஆலோர்வாசியான அன்புள்ள தனிமாவுக்குத் தவறான தகவல்கள் தரும் ஜிராவைக் கண்டிக்கிறேன்! :-)

Gira, Remember the earth is not a perfect sphere, but an oblong spheroid. Thats why we have an equatorial radius and polar radius.
Polar radius is lesser than Eq. radius by approx 20-40 km. (can somebody tell how much difference?)

அதுனால அப்படியே நேராகச் சென்றால் கூட, விட்ட இடத்துக்கே வந்து சேர மாட்டீங்க! ஒரு நுப்பது நாப்பது கி.மீ தள்ளி, பக்கத்து ஊருக்குத் தான் போய்ச் சேருவீங்க!
ஒங்களுக்காகவே பூமிக்குள் விரியும் அதிசயங்கள்-னு ஒரு தொடர் போடனும் போல இருக்கே! :-)))

said...

// துளசி கோபால் said...

ஹை.....யானைங்க பறக்கறதைக் கற்பனை செஞ்சு பார்த்தேன்:-)))) //

:) உங்க கற்பனைக்குத் தீனி விரைவிலேயே வரும் டீச்சர். :)

// வெட்டிப்பயல் said...
//
நானும் அடுத்த பாகத்துக்கு ஆவலா இருக்கேன் வெட்டிங்க. நீங்க பாராட்டுனது மகிழ்ச்சியளிக்கிறது.//

என்ன மரியாதை ரொம்ப பலமா இருக்கு? ஏதாவது ஆப்பு ரெடியா இருக்கா? //

என்னங்க வெட்டி இப்பிடிச் சொல்லீட்டீங்க :))))))))) யாரு யாருக்கு ஆப்பு வெக்கிறது? உங்க வாயால பாராட்டு வாங்குன சந்தோசத்துல இருந்தே இன்னும் வெளிய வரலை... நீங்க என்னடான்னா... ;)

// இலவசக்கொத்தனார் said...
அட, என்னங்க நீங்க! ஒரு புதிய கிரகத்தை அறிமுகப்படுத்தும் போது சும்மா பொங்கல் மாதிரி (இல்லை அது புத்தாண்டா? :P) ஒரு விழா அன்னிக்கு கூட்டிக்கிட்டுப் போய் ஆலோரே ஆலோரேன்னு பாட்டு பாடிக்கிட்டு இருக்கற மாதிரி வேண்டாமா? அது என்ன அழுது வழிஞ்சுக்கிட்டு? சரி தனிமா வர்ணனையே இல்லை! :( //

ஹா ஹா ஹா பொங்கலும் புத்தாண்டும் கொண்டாடுற நெலைமைல ஆலோர் இருந்திருந்தாத்தான் பிரச்சனையே இல்லையே. அட..கதையே இல்லையே...ஆனா எல்லாம் வரும். :)

என்ன தனிமாவோட வருணனையா...வரும்..வரும்..ரும்..ம்... ;)

said...

//
என்னங்க வெட்டி இப்பிடிச் சொல்லீட்டீங்க :))))))))) யாரு யாருக்கு ஆப்பு வெக்கிறது? உங்க வாயால பாராட்டு வாங்குன சந்தோசத்துல இருந்தே இன்னும் வெளிய வரலை... நீங்க என்னடான்னா... ;)//

Confirmed :-)

said...

// கோபிநாத் said...
ம்ம்..அறிமுகம் எல்லாம் சூப்பர் ;))

மிகவும் ஆர்வமாக இருக்கிறோம்..விரைவில் அடுத்த பதிவை போடுங்கள் ;) //

அடுத்த பதிவு... அடுத்த திங்கள்தான் :) எழுதனும்யா...நேரம் அம்புடனும்ல... :)

// cheena (சீனா) said...
நண்பரே - கதை நன்றாக சென்று கொண்டிருக்கிறது. ஆலோரி - தனிமா பிடிமா - பூமிக்கு வருகிறார்களா ?? நோக்கத்தை நிறைவேற்ற. எண்ணங்கள் ஈடேற வாழ்த்துகள். //

உங்க வாழ்த்துகள் அவங்களுக்குத் தேவைதான். அவங்க ஒலகமே காவயிறு திங்குது. உங்க வாழ்த்து அவங்களுக்கு நல்ல வழி காட்டட்டும்.

// துளசிக்கு ஆனைங்கன்னா உயிரு - அதுவௌம் பறக்குதுன்னா - சின்னப் புள்ளே மாதிரி வேடிக்கை பாத்து மகிழ்வாங்க //

அதையேன் கேக்குறீங்க. ஆனையரசின்னு அவங்களுக்குப் பட்டம் குடுக்கலாமான்னு யோசிக்கிறோம்.

// மதுரையம்பதி said...
கொத்ஸ் சொன்னதுபோல ஆலோர் இன்னும் கொஞ்சம் அழகோடு இருந்திருக்கலாமோ?..ஆனாலும் சுவாரஸ்யக் குறைவில்லாம போகுதுங்க. //

அழகெல்லாம் எக்கச்சக்கமா கொட்டிக்கிடக்குற உலகம் ஆலோர். என்ன செய்ய...அவங்க நெலமை இப்ப சரியில்லையே. அதான் இப்பிடி.

said...

// Divya said...
சுவாரஸ்யம் குறையாமல், பல தகவல்களூடன் கதையை அழகாக நகர்த்தியிருக்கிறீங்க ராகவன்.

தனிமா...பெயர் அழகாக இருக்கிறது! //

ஆமாங்க திவ்யா, அழகான பெயர்தான். சொல்ல நல்லாயிருக்குற மாதிரியும் எரிச்சல் படுத்தாத மாதிரியும் தேர்ந்தெடுக்கிறேன்.

// ஷாலினி said...

நம்பிக்கையே வாழ்கை!!

அடுத்த பாகத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்!! //

ஆமாங்க ஷாலினி. நம்பிக்கையே வாழ்க்கை. நம்பிக்கை வாழ வைக்கும்.

// பாச மலர் said...
ஆலோர் அறிமுகம் நன்று..தனிமா, பிடிமா..ஆலோர்..எங்கிருந்து இந்தப் பெயர்களைப் பிடிக்கிறீங்க ராகவன்? நன்றாக இருக்கின்றன.. //

ஹெ ஹெ என்னங்க பேருகளைத் தூண்டிப் போட்டுப் பிடிக்க முடிஞ்சா நல்லாத்தான் இருக்கும். எல்லாம் அப்படீயே வர்ரதுதான். எங்கயோச்சும்..ஏதாச்சும் கேட்டுருப்போம். அத அப்படி இப்பிடி மாத்திக்கிறதுதான்.

said...

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ஜிரா
அரிமுகம்...சாரி...அறிமுகம் மாதிரியே தெரியலை! :-)

எல்லாமே இயல்பான வர்ணனைகள் தான்.
பொதுவா மாயாஜாலக் கதைகள்-ல அறிமுகம்-னாலே பத்துப் பன்னிரெண்டு பேரு, அவங்க பாட்டன் பாட்டி பேரு, ஊரு பேர் எல்லாம் சொல்லி பயமுறுத்திடுவாங்க! பேரை எல்லாம் ஞாபகம் வச்சிக்கவே போதும் போதும்-னு ஆயிடும்! ஆனா நீங்க அப்படி எல்லாம் பண்ணலை! நல்ல பையனா இருப்பீங்க போல! :-)//

அதாவது நம்ம எழுதுறது நம்ம படிக்கிறது போல இருக்கனும் அப்படீங்குற எண்ணத்துல எழுதுறதுதான். அதான் ரொம்பக் கொழப்பலை. ஆனா எல்லாம் பின்னாடி வருது. :)

// அப்பாலிக்கா இன்னோரு விஷயம்...இதே போல இனிவரும் ஒவ்வொரு பகுதிக்கும் முன்கதைச் சுருக்கம் கொடுத்துருங்க! நல்லாக் கீது!//

சரிங்க...அப்படியே செஞ்சிருவோம்

// ஆலோர் படம் சூப்பர். கிரனுக்குப் பாராட்டுக்கள்! திரிபுரம் எரித்த விரிசடைக் காட்சி தான் நினைவுக்கு வந்துச்சி அந்தக் கோபுரங்களைப் பார்த்தவுடன்! //

கிரணுக்கு ஸ்கெட்சிங் நல்லா வரும். ஆனா என்ன.. .தமிழ் படிக்க வராது. அதுனால நீங்க பாராட்டுனத அவனுக்கு ஆங்கிலத்துல மெயில்ல அனுப்பீட்டேன். :)

said...

கதை நன்றாக உள்ளது!!

said...

வாவ்...

இவ்வளவு சுவாரஸ்யமா கதை சொல்லும் இளைஞனை என் பாட்டிக்கு அப்புறம் இப்பத்தான் பார்க்கிறேன்.

//அடுத்த அத்தியாயத்திலிருந்து சுறுசுறு நிகழ்ச்சிகளும் திருதிரு திருப்பங்களுந்தான்.//


எல்லா அத்தியாய‌த்தையும் பார்த்துவிட்டுத்தான் தூங்க‌ப் போவேன் :)