Thursday, June 05, 2008

பிரியாணி - 2

ஒரு வீட்டுக்குள்ள ஒளிஞ்சிக்கிறனும். அதுவும் குடும்பத்தோட. அந்த வீடு பெருசுன்னாலும் அந்த வீட்டுக்குல பெரும்பகுதி அப்பாவோட அலுவலகம். அங்க தெனமும் காலைல வேலைக்கு வருவாங்க. சாந்தரம் போயிருவாங்க. அவங்களுக்கு யாருக்குமே தெரியக் கூடாது. வெளியவும் வரமுடியாது. இப்பிடி ரெண்டு வருசம் இருக்கனும். தெரிஞ்ச ஒரு நபர் மட்டும் வீட்டுக்கு வேண்டியதைத் திருட்டுத்தனமா கொண்டு வந்து குடுப்பாரு. அதுகூட அளவாத்தான் இருக்கும். வயசோ 13-14க்குள்ள. அதுலயும் பொண்ணு வேற. என்ன பண்றது?

நாஜிகளைப் பத்திக் கேள்விப்பட்டவங்களுக்கும் நிறைய புத்தகம் படிக்கிற ஆர்வம் இருக்குறவங்களுக்கும் நான் சொல்ல வர்ரது புரிஞ்சிருக்கும். ஆமா. ஆனா பிராங்க். அந்தப் பொண்ணோட பேரு. ஜெர்மனியில் பிறந்த யூதப் பெண். அங்க நாஜிகளின் தொல்லையால நெதர்லாந்து தப்பிச்சு வந்த குடும்பம். ஆம்ஸ்டர்டாமில் ஒரு உணவுப் பொருள் தொழிலை உருவாக்கி வாழத் தொடங்குறாங்க. அப்பத்தான் வருது இரண்டாம் உலகப்போர். ஜெர்மனிக்காரங்க ஆம்ஸ்டர்டாமைப் பிடிச்சிர்ராங்க. யூதர்கள் எல்லாரும் நாட்டை விட்டுப் போயிரனும்னு சொல்றாங்க. இத நெதர்லாந்து மக்கள் ஒத்துக்கலை. ஆனால் ஜெர்மானிய ராணுவம் வெச்சதே சட்டம்.

வேற வழியில்லாம இந்த ஒளிஞ்சு வாழும் வாழ்க்கையை தேர்ந்தெடுக்கிறாரு ஆனாவின் அப்பா. கொஞ்சம் கூடச் சத்தமே வரக்கூடாது. ஏன்னா பகல்ல கீழ வேலை செய்றவங்க. இரவுல அமைதி. கொஞ்சம் சத்தம் போட்டாக்கூட வெளிய தெரிஞ்சு போகும் வாய்ப்பு உண்டு. ரெண்டு வருசம் இப்பிடி வாழ்க்கை. ஆனா அப்புறம் ஜெர்மனிக்காரங்களுக்குத் தெரிஞ்சு போகுது. அப்புறம் என்ன...பிடிச்சிக் குடும்பத்த ஜெர்மனிக்குக் கொண்டு போயிர்ராங்க. அங்க போய் குடும்பத்தைப் பிரிச்சி சிறைகளில் அடைச்சுக் கொடுமை படுத்துறாங்க. அதுல எல்லாரும் இறந்து போயிர்ராங்க. அப்பா ஓட்டோ பிராங்கைத் தவிர. போருக்குப் பிறகு ஆம்ஸ்டர்டாமுக்குத் திரும்பி வர்ரவர் கிட்ட ஒரு டைரியைக் குடுக்குறாங்க அவங்களுக்கு ரெண்டு வருஷமா உதவிய பெண்மணி.

ஆனாவோட 13வது வயதுல அவர் கொடுத்த பரிசு அந்த டைரி. இரண்டு வருட வாழ்க்கைல நடந்ததையெல்லாம்...தன்னுடைய மனதில் இருந்ததையெல்லாம்.... அந்த டைரியில் அன்பா, ஆசையா, கோவமா, இயலாமையா, வெறுப்பா, அகிம்சையா... பலவிதங்கள்ள பதிஞ்சு வெச்சிருக்கா அந்தப் பொண்ணு. கைதுக்குப் பிறகு அந்த அறையிலிருந்து உதவி செய்த பெண் சேகரிச்சுப் பத்திரமா வெச்சிருந்து குடுத்திருக்காங்க. அந்த டைரியை வாங்குன ஒரு தந்தையோட மனநிலையைக் கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. அப்பப்பா! அத டைரியாவா பாத்திருப்பாரு? அந்த மக பொறந்தப்ப கைல எப்படி வாங்குனாரோ.. அப்படித்தான வாங்கீருப்பாரு. பாவம்யா அந்த மனுசன். வாங்கருனவரு அதைப் புத்தகமாப் பதிப்பிச்சாரு. ஆனா பிராங்கின் டைரி என்ற பெயரில் மிகப் பிரபலம் பெற்றது அந்தப் புத்தகம். இப்ப அந்த வீடு ஆம்ஸ்டர்டாம்ல ஒரு கண்காட்சியா இருக்கு. சகிப்புத்தன்மைக்கு ஒரு எடுத்துக்காட்டா.

கீழ்க்கண்ட சுட்டிகள்ள போய்ப் பாருங்க. இன்னும் நெறைய விவரங்கள் கெடைக்கும்.

http://en.wikipedia.org/wiki/Anne_Frank
http://www.annefrank.org/

http://en.wikipedia.org/wiki/The_Diary_of_a_Young_Girl

************************************************************

இங்க நெதர்லாந்துல வேலை நிறுத்தப் போராட்டமாம். அதுவும் பேருந்துகள். எதுக்கு வேலை நிறுத்தம்? சம்பளம் கூட்டத்தான். வேற எதுக்கு இருக்கும்!!!! ஆனா பாருங்க அவங்க வேலை நிறுத்தம் பண்ணனும்னு முடிவெடுத்த நேரம் பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்குப் பரிச்சை நடக்குற நேரம். ஜூன் 1ல இருந்துதான் எல்லாப் பள்ளிக்கூடமும் விடுமுறை. அப்ப எப்படிப் போராட்டம் பண்றது!

லீவு இன்னும் விடலை. இப்பப் போராட்டமும் பண்ணனும். பிள்ளைகளுக்கும் தொந்தரவா இருக்கக் கூடாது. அதுக்கு என்ன செய்யனும்!!!!! செஞ்சாங்களே!

அதாவது காலைல ஆறு மணில இருந்து ஒம்பது மணி வரைக்கும் பேருந்துகள் ஓடும். அதே போல மாலை நாலு மணியிலிருந்து ஏழு மணி வரைக்கும் பேருந்துகள் ஓடும். ஆனா அப்ப யாருக்கும் பயணச்சீட்டு குடுக்கப்பட மாட்டாது. அதாவது காசு குடுக்க வேண்டாம். (நம்மதான் புத்திசாலியாச்சே! ஏற்கனவே பாஸ் வாங்கி வெச்சிருக்கோமே!!!!). மத்த நேரத்துல எல்லாம் பேருந்துகள் ஓடாது. டிராம், மெட்ரோ பயன்படுத்திக்க வேண்டியதுதான்.

இப்ப ஜூன் ஒன்னாந் தேதி வந்துருச்சுல்ல. ஆகையால முழு அடைப்பு பேருந்துகளுக்கு. டிராம்+மெட்ரோவே சரணம். போராட்டம்னு வந்தாலும் கோரிக்கைன்னு வந்தாலும் பள்ளிப்பிள்ளைகளின் படிப்புன்னு வந்தா அதை மதிச்ச பெருந்தன்மையைப் பாராட்டித்தான் ஆகனும்.

************************************************************

எத்தனையோ வள்ளி திருமணம் பாத்திருப்பீங்க. இந்த வள்ளிதிருமணம் பாருங்க. வயித்து வலி நிச்சயம். எஸ்.எஸ்.சந்திரன் முருகனாகவும் மனோரமா வள்ளியாவும் ஓமக்குச்சி நரசிம்மன் நாரதராகவும் உசிலைமணி பிள்ளையாராகவும் நடிச்சிருக்காங்க. Youtubeல இந்தப் பாடலை வலையேத்தியிருக்கும் வெல்லூர் விஜயகுமார் embedding disable செய்து வைத்திருக்கிறார். ஆகையால் இந்தச் சுட்டியை அழுத்திப் பாடலைப் பாருங்கள். சிரிப்பும் இலவசமாக வயிற்றுவலியும் உறுதியாகக் கிடைக்கும். இளையராஜாவின் பாடல்கள் நகைச்சுவையோடு ரீமிக்ஸ் செய்யப்பட்டு இளையராஜாவும் பி.எஸ்.சசிரேகாவும் பாடியிருக்கிறார்கள்.

http://uk.youtube.com/watch?v=pghHNdpt4I0



அன்புடன்,
கோ.இராகவன்

10 comments:

said...

ஆனி ப்ராங்க் மியூசியம் போன்றவை ரொம்பவே சோகமாய் இருப்பதால் பொதுவாகப் போவதில்லை. அங்கு வந்த பொழுது வாசல் வரை சென்றுவிட்டு வேண்டாம் எனத் திரும்பிவிட்டேன். அப்படியேதான் போலந்து போன பொழுது ஆஸ்விச் கூட போகவில்லை.

அப்புறம் அந்த நகர்படம் சூப்பர்!! :))

said...

\\இப்ப ஜூன் ஒன்னாந் தேதி வந்துருச்சுல்ல. ஆகையால முழு அடைப்பு பேருந்துகளுக்கு. டிராம்+மெட்ரோவே சரணம். போராட்டம்னு வந்தாலும் கோரிக்கைன்னு வந்தாலும் பள்ளிப்பிள்ளைகளின் படிப்புன்னு வந்தா அதை மதிச்ச பெருந்தன்மையைப் பாராட்டித்தான் ஆகனும்.
\\

பாராட்ட பட வேண்டிய விஷயம்...நம்ம ஊர்லையும் இப்படியும் வந்தா ரொம்ப சந்தோமாக இருக்கும் ;))

said...

\\அத டைரியாவா பாத்திருப்பாரு? அந்த மக பொறந்தப்ப கைல எப்படி வாங்குனாரோ.. அப்படித்தான வாங்கீருப்பாரு\\

அவரது மனநிலை அத்தருணத்தில் எப்படி இருந்திருக்கும் என ரொம்ப சரியாக சொல்லியிருக்கிறீங்க ராகவன்:))

said...

\ஆனா அப்ப யாருக்கும் பயணச்சீட்டு குடுக்கப்பட மாட்டாது. அதாவது காசு குடுக்க வேண்டாம். \\

அட?

\\(நம்மதான் புத்திசாலியாச்சே! ஏற்கனவே பாஸ் வாங்கி வெச்சிருக்கோமே!!!!). \\

:))))

said...

குடும்பத்தைப் பிரிச்சி சிறைகளில் அடைச்சுக் கொடுமை படுத்துறாங்க.
மிகவும் கொடுமை! :(

//போராட்டம்னு வந்தாலும் கோரிக்கைன்னு வந்தாலும் பள்ளிப்பிள்ளைகளின் படிப்புன்னு வந்தா அதை மதிச்ச பெருந்தன்மையைப் பாராட்டித்தான் ஆகனும்.//

கண்டிப்பாக பாராட்டவேண்டும்!

வள்ளி திருமணம் - அருமை :)

said...

டைரியைப் பத்திரமா வச்சிருந்து அப்பாகிட்ட கொடுத்தவங்களையும் பாராட்டத்தான் வேணும்...

//பள்ளிப்பிள்ளைகளின் படிப்புன்னு வந்தா அதை மதிச்ச பெருந்தன்மையைப் பாராட்டித்தான் ஆகனும்.//

நிச்சயமா, ஜிரா. நம்ம ஊர் மக்கள் கத்துக்க வேண்டியது எவ்வளவோ இருக்கு... ஹும்... :(

said...

// இலவசக்கொத்தனார் said...

ஆனி ப்ராங்க் மியூசியம் போன்றவை ரொம்பவே சோகமாய் இருப்பதால் பொதுவாகப் போவதில்லை. அங்கு வந்த பொழுது வாசல் வரை சென்றுவிட்டு வேண்டாம் எனத் திரும்பிவிட்டேன். அப்படியேதான் போலந்து போன பொழுது ஆஸ்விச் கூட போகவில்லை. //

உண்மைதான் கொத்ஸ். அது சோகம்தான் என்றாலும்..ஒருமுறையேனும் செல்ல வேண்டும். நமக்கெல்லாம் அது பாடம்.

// அப்புறம் அந்த நகர்படம் சூப்பர்!! :)) //

வள்ளி திருமணம்தானே.. அது கலக்கலோ கலக்கல்.

said...

யுத்த காலங்களில் இப்படியான நெகிழ்வான வார்த்தைகளில் அடங்காத சம்பவங்கள் நடைபெறத்தான் செய்கின்றன. ஆனால் அவை எல்லாம் வெளிவருகின்றனவா என்பது ஐயமே.
டைரியின் மூலமாவது அச்சிறுமியின் அஞ்ஞாதவாசம் வெளிப்படுத்தப்பட்டது ஒரு ஆறுதல்.

வள்ளிதிருமணம் கலக்கல். உல்டா பண்ணியபாடல்களால் பாடல்களின் உண்மையான வரிகள் மறந்து போகின்றன. :)

பகிர்தலுக்கு நன்றி ராகவன்.

said...

வள்ளி திருமண நாடகத்தைப் பார்த்ததில் என்னுடைய சிறுவயதில் வந்த திரைப்படப் பாடல்கள் எல்லாம் நினைவிற்கு வந்துவிட்டன. நன்றாக இருந்தது இராகவன். :-)

said...

//அதாவது காலைல ஆறு மணில இருந்து ஒம்பது மணி வரைக்கும் பேருந்துகள் ஓடும். அதே போல மாலை நாலு மணியிலிருந்து ஏழு மணி வரைக்கும் பேருந்துகள் ஓடும்.//

க்ரேட்... நம்ம ஊர்லையும் இருக்கானுங்களே.. சங்கம் வைத்து மக்களை வதைக்க..