Tuesday, October 14, 2008

சினிமாப் பைத்தியம்

நம்மளையும் பதிவர்னு அப்பப்பக் காட்டிக்கிறதுக்குன்னே கண்டுபிடிச்சதுதான் இந்தத் தொடர்பதிவுகள் போல..... ஸ்ரீதர் அண்ணாச்சியும் பிரபா அண்ணாச்சியும் கலக்கல் பதிவுகள் போட்டுட்டாங்க. எனக்கும் ஏதோ தெரியும்னு கூப்டுட்டாங்க. நாமள்ளாம் சினிமாலயே பொறந்து வளர்ந்து வாழ்ந்துக்கிட்டிருக்குறவங்களாச்சே. கொஞ்ச நாளா எழுதாம வேற இருந்தேனா.... வெட்டிப்பய பாலாஜி வேற...என்னது ஒன்னுமே எழுத மாட்டேங்குறீங்களேன்னு கேட்டுட்டான். இப்பிடியாக உலக்கத்தரமான சினிமா ரசிகன்னு இன்னும் ஒலகம் என்னைய நம்புறதால இந்தப் பதிவை எழுதீருவோம்னு முடிவு பண்ணி...எழுதியாச்சுங்கோவ். கேள்வி பதில்களுக்குப் போவோமா. போய்த்தானே ஆகனும். வேற வழி. எழுதச் சொன்னீங்கள்ள...இப்பப் படுங்க...அதாவது படிங்க. :)

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

எந்த வயசுலன்னு சரியாத் தெரியலைங்க. தூத்துக்குடில புதுக்கிராமத்துல பெருமாள் கோயிலுக்கும் எண்ணெய்க் கடைக்கும் நடுவுல ஒரு பெரிய சொவரு. அந்தச் சொவர்லதான் மொதமொதச் சினிமா பாத்த நெனைவு. ஆமா. அதுல ஊர்ச் சினிமா போஸ்டரெல்லாம் ஒட்டுவாங்க. சார்லஸ், மினிசார்லஸ், கார்னேஷன், பாலகிருஷ்ணா, முருகன், ஜோசப்...இப்பிடியாப்பட்ட தியேட்டர்கள்ள என்னென்ன படங்க ஓடுதுன்னு ஒட்டீருப்பாங்க. அதுலதான் மொதல்ல பார்கத் தொடங்குனேன். கடைசியாப் போனப்பக்கூட அந்தச் சொவத்துல சினிமா பாத்தேன். :)

பொதுவாவே சின்னப்பிள்ளைல அத்தை கூட்டீட்டுப் போவாங்க. அவங்க கூடப் போய்த்தான் மொதல்ல படம் பாத்திருக்கேன். புதுசு பழசுன்னு கதம்பமா இருக்கும்னு நெனைக்கிறேன். ஏதோ ஒரு விஜயகாந்த் படம்....போஸ்டர்ல மலை, பாம்பு எல்லாம் இருந்துச்சு. அப்பல்லாம் சார்லஸ் தியேட்டர்தான் பெரிய தியேட்டர். உண்மையிலேயே பெரிய தியேட்டருதான். அதுல திரைக்கு முன்னாடி பெரிய மேடையெல்லாம் இருக்கும். அதுலதான் எல்லாம் கொண்டு வந்து வெச்சு சினிமா காட்டுவாங்கன்னு நெனச்சேன். போஸ்டர்ல பாம்பப் பாத்துட்டு....அப்ப சார்லஸ் தியேட்டர் மேடைல பாம்பு வருமான்னு அத்தையக் கேட்டேன். ஆமான்னு சொன்னாங்க. அப்ப அந்தப் படத்துக்கே வரலைன்னு சொல்லீட்டேன். அதே மாதிரிப் போகவும் இல்லை.

ஆனா மொதமொதலா தனியாப் போன படம் நெனைவிருக்கு. சரஸ்வதி சபதம். தனியான்னா....தனியா இல்ல. வீட்டோட போகாம...நண்பனோட சேந்து போனது. பக்கத்து வீட்டு தேன்ராஜோட அந்தப் படத்துக்கு அனுப்புனாங்க. ஏன்னா பழைய படம்னாலும் நல்லாருக்கும்னு. எந்த வயசுலன்னு மறந்து போச்சு.

அப்புறம் அம்மா அப்பாகூட திரும்ப வந்தப்புறமும் நிறையப் படங்கள் பாத்திருக்கேன். அதுலயும் பழசு..புதுன்னு கலந்தே இருக்கும். பொதுவா சிவாஜி படம்னா பழைய படம்னாலும் வீட்டுல கூட்டீட்டுப் போவாங்க. அப்புறம் பாக்கியராஜ் படங்கள், பாலச்சந்தர் படங்கள், விசுப்படங்கள், கமல் படங்கள் இப்பிடியெல்லாமும் இருக்கும். ஆனா எம்.ஜி.ஆர் படங்களோ ரஜினி படங்களோ இருக்காது. எனக்குத் தெரிஞ்சு அப்பாவும் தங்கச்சியும் சேந்து போய் பாட்சா படம் பாத்தாங்க. அதுக்கும் நான் போகலை. இன்னமும் பாக்கலை.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

கடைசியாவா..... தியேட்டர்லயா.... தமிழா.....ம்ம்ம்ம்.... தசாவதாரம். நெதர்லாந்துல பாத்தேன். அது ஒரு பெரிய கதைன்னே சொல்லனும். நெதர்லாந்து வந்தப்புறம் நான் தியேட்டர்ல போய் பாத்த மொதப்படம் அதான். ஜிவாஜி வந்தப்பக் கூடப் போகலை. குருவி கூட வந்துச்சு. ஒருத்தரு குருவி வருதுன்னு சொன்னாரு. நான் சொன்னேன்....விஜய் படங்கள்ளாம் பாக்குறதில்லைங்கன்னு. அவரும் விடாம....ஊர்லன்னா எவன் பாப்பான்? இங்கன்னுதான் பாக்கப் போறேன்னு சொன்னாரு. இங்குட்டு எங்குட்டோ... விஜய் படம்னு வந்துட்டாலே பாக்குறதில்லைன்னு சொன்னேன். அவரு பேசவேயில்லை.

அப்படி இருந்தவன் தசாவதாரம் எப்ப வருமுன்னு காத்திருந்தேன். ஒரு கூட்டமா டிரெயின்ல போனோம். அல்மீரா-ன்னு பக்கத்து ஊருல படம். எட்டு மணிக்குத் தொடங்கி பத்தரைக்கு முடியும்னாங்க. போனா... பொட்டி வரலை. சரீன்னு பக்கத்துல இருந்த டோனேர் கபாப் கடைல போய் சாப்ட்டு வந்தா..இன்னும் வரலை. அந்தா வருது....இந்தா வருதுன்னு சொல்லீட்டே இருந்தாங்க. நேரமாகுதுன்னதும் எல்லாருக்கும் இலவசமா காப்பி டீ குடுத்தாங்க. குடிச்சிட்டு உக்காந்திருந்தோம். ஒருவழியா படத்த பத்து மணிக்குப் போட்டாங்க. அதுல என்னன்னா....கமல் அமெரிக்கால இருந்து ஏரோப்பிளேன்ல இந்தியாவுக்கு வந்து பல்ராம்நாயுடுவைப் பாக்குறாரு...ஒடனே அசின் குய்யோ முய்யோன்னு கத்துறாங்க....கமலும் அசினும் சிலையைத் தூக்கீட்டு ஓடுறாங்க. என்னடா இதுன்னு பாத்தா பத்து நிமிசங்கழிச்சி திரும்ப விட்ட எடத்துல இருந்து பல்ராம்நாயுடு... லட்டியடி பத்தி விளக்குனாரு. அடப்பாவிகளா....ஊருவிட்டு ஊரு வந்து படம் பாத்தா....ரீல மாத்திப் போட்டுட்டியே டச்சான்னு கதறுனோம்.


அத்தோட முடிஞ்சதா கதை...படம் முடியுறப்போ ஆம்ஸ்டர்டாமுக்குப் போற கடைசி வண்டியும் போயாச்சு. அடுத்த வண்டி..அடுத்த நாள்தான். பெருங்கூட்டமே ரயில்வே ஸ்டேஷன்ல நிக்குது. அப்புறமென்ன...டாக்சி பிடிச்சி வீட்டுக்கு வந்தோம். பன்னிரண்டு யூரோ படத்துக்கு எழுவது யூரோ டாக்சி.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

நல்ல கேள்வி. படத்தோட பேரு அந்த நாள். நேத்துத்தான் (13ம் தேதி அக்டோபர் மாதம் 2008ம் வருடம்) பாத்தேன். சிவாஜிக்கு மிகை நடிப்புன்னு எவன்யா சொன்னான்.... சொன்ன பயக பூராம் இந்தப் படத்த இம்போசிசன் மாதிரி பத்து வாட்டி பாருங்க. அவரு இயக்குனர் நடிகர்யா. இயக்குனர் என்ன கேக்குறாரோ அப்படியே குடுப்பாரு. சிவனா நடிங்கன்னா சிவனா வந்தார்ல. திருவிளையாடல் படத்துல. கப்போலோட்டிய தமிழன் படத்தப் பாத்துட்டு "அப்பா"ன்னு வ.உ.சியின் மகனே கதறுனார்ல. கட்டபொம்மன்னா இப்பிடித்தான் இருப்பார்னு நம்ப வெச்சிட்டாரேய்யா.... கயத்தாறுல இருக்குற கட்டபொம்மன் சில கூட இவரு சாயல்ல இருக்கு. உண்மையான கட்டபொம்மனே வந்தாக்கூட சிவாஜி மாதிரி இல்லைன்னு நம்மாளுக திருப்பி அனுப்பிச்சிருவாக போல. ஆயிரஞ் சொல்லுங்கய்யா.... அவரு அவருதான்.

அந்த நாள் மாதிரி விறுவிறுப்போட இப்ப ஒரு படமும் வர்ரதில்லைங்குறதும் ஒரு உண்மை. எங்கப்பாரு பொறந்த சமயத்துல வந்த படம். அத இன்னமும் ரசிக்க முடியுதேய்யா... இப்பிடியெடுக்கனும்யா படத்தன்னு நெனச்சேன்.

என்னது... எங்க பாத்தேனா.. ஹி ஹி.. இந்தப் படத்தோட ஒரிஜினல் டிவிடியோ விசிடியோ எங்கிட்ட இல்லைங்க. நான் இந்தியாவுல ஒரிஜினல்தான் வாங்குவேன். இப்பத்தான் சல்லிசா கெடைக்குதே. நெதர்லாந்துல எங்க போறது? இண்டர்நெட்லதான் பாத்தேன். தப்புத்தான்.. ஆனா வெற வழி இல்லையேய்யா....

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா

முதல் மரியாதை மற்றும் கல்யாண அகதிகள். முன்னது காவியம். அதைப் பத்தி எவ்ளோ வேணும்னாலும் சொல்லலாம். சுருங்கச் சொன்னா.... தமிழில் வந்த மிகச்சிறந்த படங்களில் முதல்மரியாதைக்கும் என்றும் உண்டு முதல் மரியாதை.

கல்யாண அகதிகள் படம் வந்தப்பவும் பாத்திருக்கேன். ஆனா அப்ப நினைவிருந்தது அம்மா வீட்டுல செஞ்சி எடுத்துட்டு வந்த கேக்கோட ருசி. ஆனா படம் பாத்த தேட்டர் நினைவிருக்கு. திருச்சி காவேரி தியேட்டர். சின்ன வயசுல இருந்தே படம்..படம் பாத்த தியேட்டரும் மனசுல பச்சக்க்குன்னு பதிஞ்சிருது. படத்தையும் விட.

அப்புறம் ரொம்ப நாள் கழிச்சி அந்தப் படத்தைப் பாத்தேன். பெண்ணியமெல்லாம் ஒரு பக்கம் இருக்க.....ரொம்ப ரசிச்சது சரிதா, ஒய்.விஜயா, மற்றும் சீமா.

ரொம்ப இயல்பான நடிப்பு சரிதாவுக்கு. அதை நான் சொல்லனும்னு அவசியமில்லை. ஒங்களுக்கேத் தெரியும். இல்லைங்குறீங்களா?

ஒய்.விஜயாவை ஏன் வீணடிச்சிட்டோம். கல்யாண அகதிகள் படத்துல பாருங்க. ஒரு நல்ல வேலைல உள்ள பெண்மணியாகவும்..கணவனிடம் விவாகரத்து கோரும் மனைவியாகவும் நடிச்சிருப்பாங்க. ஒய்.விஜயா...நீங்க நல்ல நடிகைன்னு சொல்ல ரெண்டு படங்கள் போதும். கல்யாண அகதிகள் ஒன்னு. மூன்று முடிச்சு இன்னொன்னு.

நடிகை சீமா. அவங்க ரொம்ப அழகாத் தெரிஞ்சாங்க. அந்தப் படத்துல அவங்க அழகைத்தான் ரசிச்சேன். மொத வாட்டிப் படம் பாத்தப்பவும் சீமான்னு தெரியாம...அவங்க அழகா இருக்காங்கன்னு ரசிச்சேன்.

ஆனா ரொம்பப் பிடிச்சது படத்தோட முடிவுதான். இந்தப் பொண்ணு இந்து. அந்தப் பையன் கிருஸ்துவன். காதலுக்குப் பையன் வீட்டுல பச்சைக்கொடி. என்ன.... பொண்ணு மதம் மாறனும். ஆனா மாறாம...காதலைத் தூக்கிப் போட்டுட்டுப் போயிர்ரா. காதல் பெருசுதான். ஆனா அவ சொல்ற காரணம் காதலை விட மதம் பெருசுன்னு இல்ல. "முருகன் இருக்கான்னு நம்புறேன். நாளைல இருந்து ஏசுதான் கடவுள்னு எப்படி நான் நம்புறது"ன்னு கேக்குறா. தோழி சொல்றா..."அட..இவ்ளோதானா....வெளிய ஏசுவேன்னு சொல்லீட்டு உள்ள முருகான்னு சொல்லேண்டி". ஆனா இவ அதுக்கும் ஒத்துக்க மாட்டேங்குறா..."நான் யாரை ஏமாத்துறேன். ஏசுவையா..முருகனையா...நான் ஏன் ஏமாத்தனும்?" இந்தக் கேள்விக்கு விடை கிடைக்காமத்தான் அவ காதலை உதறீட்டு வந்துர்ரா. இதுல பொண்ணு முருக பக்தைங்குறதால மட்டுமில்ல...இது எந்த மதத்த நம்புறவங்களுக்கும் பொருந்தும். இது என்னோட கருத்து.

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

தமிழ் சினிமா...அரசியல்... இது ரெண்டும் ஒன்னுதானே. வெவ்வேறையா? :) சரி. கேட்டுட்டீங்க. சொல்றேன். இந்தச் சினிமா நடிகர்கள்ளாம் எப்ப தங்களை நடிகர்கள்னு மட்டும் நெனைப்பாங்க? அவங்களைச் சொல்லக் கூடாது. மக்களைச் சொல்லனும். நடிகனை நடிகனா மட்டும் பாக்கத் தெரியாத தமிழ்நாட்டு "மட" மக்களைச் சொல்லனும். அந்த "மட" மக்களை நம்பி அரசியல் நடத்துற சினிமாக்காரங்களையும்....அந்தச் சினிமாக்காரங்களை நம்பி அரசியல் பண்ற அரசியல்வாதிகளும் தான் ரொம்பவும் மனதைத் தாக்குது. திருந்த மாட்டீங்களா?


5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?

தொழில்நுட்பமா.... அதெல்லாம் அவ்வளவா புரியாது. ஆனாலும் சின்ன வயசுல அக்னி நட்சத்திரம் பாத்தப்போ...ஏன் இந்தப் படத்துல ஒன்னுமே தெளிவாத் தெரிய மாட்டேங்குதுன்னு நெனைச்சதுதான் என்னோட தொழில்நுட்பத் திறமை. :)

ஆனா கொஞ்ச நாள் கழிச்சித் திருடா திருடா பாக்குறப்போ....அந்தத் தொழில்நுட்பத்தை ரசிச்சிப் பாத்தேன். அதுலயும்.... சந்திரலேகா பாட்டு முடியுறப்போ சுத்தியிருக்குற வெளக்குகள் அணைஞ்சிக்கிட்டே வந்து... கடைசில திரையில ஒரு ஓரத்துல அனு அகர்வால் (பேரு சரியா?) மட்டும் தெரிவாங்க. அந்தக் காட்சியை ரொம்பவும் ரசிச்சேன். ஆனா அதே நேரத்துல ஸ்ரீதரோட பழைய படங்களைப் பாக்குறப்போ... அவருடைய காலகட்டத்துக்கு நெறையவே முயற்சி செஞ்சிருக்காருன்னு தோணுச்சு. நெஞ்சம் மறப்பதில்லை படம் பாத்துப் பாத்து ரசிச்சேன். படமா...அது.... அதுல பாருங்க ஸ்ரீதர் எடுத்த ரெண்டு பாட்டுகள் இப்ப டீவில போட்டாலும் விடாமப் பாப்பேன். ஒன்னு "விழியே கதை எழுது". இன்னொன்னு "தங்கத்தில் முகமெடுத்து." எம்.ஜி.ஆர் லாதாவோட கையப் பிசையுறதப் பாத்தாக் கஷ்டமா இருந்தாலும்.... என்னவோ..அந்தப் பாட்டைப் பாப்பேன்.

6. தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா

அட இப்பிடிக் கேக்கலாமா? எனக்கும் பசுநேசன், சிங்கமுடித் தலை நடிகர் பத்தியெல்லாம் எப்படித் தெரியும்னு நெனைக்கிறீங்க? சினிமா பத்தி வாசிச்சுத்தானே. ஹிஹி. அதுவுமில்லாம மெல்லிசை மன்னர் ஆனந்த விகடன்ல ஒரு தொடர் எழுதுனாரு. அது...அப்புறம் இந்தக் குளத்தில் கைகழுவியவர்கள்...இல்ல ... இல்ல... கல்லெறிந்தவர்கள்.... அப்புறம் வாலி எழுதுன சுயசரிதை... மகேந்திரன் எழுதுனது...இப்பிடியெல்லாம் படிச்சிருக்கேனே.

7.தமிழ்ச்சினிமா இசை?

இது பத்தி எழுதுனா... எழுதிக்கிட்டேயிருக்கனும். அவ்ளோ இருக்கு. மெல்லிசை மன்னர் ரொம்பப் பிடிக்கும். ஏ.ஆர்.ரகுமான் இசை பிடிக்கும். இளையராஜா இசையும் ரொம்பப் பிடிக்கும். பொதுவாவே நல்ல இசைன்னாலே ரொம்பப் பிடிக்கும். இப்ப ஒவ்வொரு பாட்டுகள் நல்லா இருந்தாலும்.... பொதுவாவே இசை தொய்வாத்தான் இருக்கு. இந்த நிலை மாறனும். கண்டிப்பா மாறனும். மாறியே ஆகனும்.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

அதெல்லாம் நல்லாப் பாப்பேன். சின்ன வயசுல...இப்பயும் வயசு நெனைவில்லை. தொலைக்காட்சியில ஞாயித்துக் கெழமை மதியம் "பிராந்தி"யப் படங்கள் போடுவாங்கள்ள... அதுல ஒரு படம். என்ன மொழின்னு புரியலை. நடிகரு யாருன்னு தெரியலை. கீழ ஓடுற எழுத்துகளைப் புரிஞ்சிக்கிற வயசும் இல்லை. ஆனா படமும்...கதையும் மனசுல அப்படியே பதிஞ்சிருச்சு. கிட்டத்தட்ட 20 வருடங்கள் கழிச்சி ஒரு நண்பனோட பேசுறப்போ பிடிச்ச படங்களைப் பத்திப் பேச்சு வந்துச்சு. அப்ப மனசுல பதிஞ்சிருந்த கதையைச் சொன்னேன். சொல்லச் சொல்லக் கேட்டுட்டு அவன் சொன்னான்.... "இது வங்காளப் படம்....பேரு பஞ்ச்சரமேர் பாகான். 1980ல வந்த படம்"... விடுவேனா அப்புறம்... அடுத்து கொல்கொத்தா போனப்ப படத்த வாங்கீட்டு வரச்சொல்லிப் பாத்தேன். அப்பப்பா... படமா அது... தமிழில் இது மாதிரி எடுக்க மாட்டாங்களாய்யா! எடுத்தாலும் மக்களே..போய்ப் பாப்பீங்களாய்யா?

இந்தப் படத்தைப் பாக்கனும்னா இந்தச் சுட்டிக்குப் போங்க. உண்மையிலே அருமையான படம்.

தெலுங்கு, கன்னடம், மலையாளம்னு மொழிகள் புரியுங்குறதால...எல்லாத்தையும் பாக்குறதுண்டு. தெலுங்குன்னாலே பொதுவாகவே மசாலாங்குறது நம்ம சொல்றது எக்கச்சக்கம்னாலும்....அங்கயும் நெறைய அருமையான படங்கள் இருக்கு. விஸ்வநாத் படங்கள் ஒரு பக்கம் இருக்க.... அவை தவிரவும் நெறைய நல்ல படங்கள் இருக்கு. கோரிண்ட்டாகு-ன்னு ஒரு படம். அதாவது மருதாணி....சோபன்பாபு, சாரதால்லாம் நடிச்சிருக்காங்க. அதுல சின்னவயசுச் சோபன்பாபுவுக்கும் அவரோட தங்கச்சிக்கும் சோறு ஊட்டிக்கிட்டே சாவித்திரி ஒரு பாட்டுப் பாடுவாங்க. புருஷனால துன்புறுத்தப்படும் ஒரு பட்டிக்காட்டு அப்பாவிப் பெண். அவங்க பாட்டுப் பாடுறப்போ சட்டுன்னு அழுதுட்டேன். இன்னொரு வாட்டி அந்தப் படத்தைப் பாக்குற மனத்துணிவு எனக்கில்லை.

அதே மாதிரி கன்னடத்துல நாகமண்டலா, பூதய்யனு மக ஐயூ ஆகிய படங்கள் மிக அருமையோ அருமை. திரும்பத் திரும்பப் பாத்து ரசிக்கக் கூடிய படங்கள். மலையாளத்துலயும் படங்கள் இருக்கு. இதுல பாருங்க... நான் சொன்ன எந்தப் படத்தைப் போலவும் தமிழில் படம் வரவேயில்லை. வந்து வெற்றியும் பெறவில்லை.

தமிழில் இயல்பான படங்களே இல்லையான்னு கேக்கலாம். இருக்குது. எண்ணிப் பாத்தா விரல் விட்டு எண்ணக் கூடிய அளவுலதான் இருக்குது. ஆனாலும் என்னவோ நம்மல்லாம் மசாலாவுக்குள்ளயே மூழ்கிப் போயிருக்கோம்.

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

நேரடித் தொடர்பெல்லாம் இல்லை. எதிரடித் தொடர்புதான் இருக்குது. அதாங்க...திரைக்கு எதிரா உக்காந்திருக்கும் தொடர்பு. அவ்ளோதாங்க.

தொடர்புன்னு இருந்தா கண்டிப்பா ஏதாச்சும் நல்லது செய்யலாம். என்ன.... நல்ல கதையா எழுதிக் குடுக்கலாம். யாராச்சும் தயாரிக்கத் தயாரா இருக்கீங்களா? எந்த மாதிரி கதை வேணும்னு சொல்லுங்க. நான் தயார். :)

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

எதிர்காலமாவது திருந்தும்னு எதிர்பாக்குறேன். மத்தபடி என்ன சொல்றதுன்னு தெரியலை. வன்முறைய விட்டு வெளிய சிந்திக்க மாட்டீங்களா? :(

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

என்னாகும்? நாடகங்களுக்கு வரவேற்பு பெருகும். மேடை நாடகங்களும் சரி....தொலைக்காட்சி நாடகங்களும் சரி. சினிமாக்காரங்கள்ளாம் நாடகத்துக்குப் போய்ட்டதால....நாடகக்காரங்களுக்குக் கோவம் வந்தாலும் வரலாம். சண்டை வரலாம். சினிமா நடிகர்களோட சம்பளம் கொறையும். மேடை நாடகத்துல நடிக்கிறதுக்காக கொஞ்சமாவது நடிக்க முயற்சி செய்வாங்க.

இவ்வளவுதாங்க எனக்குத் தெரிஞ்சது. அதையும் சொல்லீட்டேன். அஞ்சு பேரைக் கூப்புடனுமாம். அஞ்சாத பேர்களைக் கூப்புடுறேன்.

அ. ஆன்மீகச் செம்மல் குமரன்
ஆ. காமிராக் கவிஞர், புகைப்படப் புலவர் சிவிஆர்
இ. அன்புச் சகோதரி துர்கா
ஈ. இந்த வார நட்சத்திரம் இளா
உ. தப்பிச்சு ஓடாத கப்பி

கூப்டாச்சுங்க.

அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

18 comments:

said...

உங்களைக் கூப்பிட்டவரே என்னையும் கூப்பிட்டு இருக்காரு!! நீங்க கூப்பிட்ட 5 பேரில் ரெண்டு பேரை நானும் கூப்பிட்டு இருக்கேன். என்னே நம் ஒற்றுமை! :))

said...

கலக்கல் ராகவன், சுடச் சுட வேண்டுகோளை நிறைவேற்றியதற்கு மிக்க நன்றி

said...

ம்

said...

Moral of the pathivu:
எம்.ஜி.ஆர், ரஜினி, விஜய் படங்களைப் பார்க்கமாட்டேன்! :))

said...

//இ. அன்புச் சகோதரி துர்கா//

பேபி சாலினி படம் பார்க்கிறவங்களையெல்லாம் கூப்பிட்டுவிட்டு இருக்கிங்க !

said...

சரவெடி ;)

said...

//தொடர்புன்னு இருந்தா கண்டிப்பா ஏதாச்சும் நல்லது செய்யலாம். என்ன.... நல்ல கதையா எழுதிக் குடுக்கலாம். யாராச்சும் தயாரிக்கத் தயாரா இருக்கீங்களா? எந்த மாதிரி கதை வேணும்னு சொல்லுங்க. நான் தயார். :)//

ஹி...ஹி... இப்படியாக வலை வீசிப் பாக்குறீங்களாக்கும் :-)

சங்கிலியை தொடர வச்சதுக்கு நன்றிங்கோவ்.

//
இலவக்கொத்தனார் said...

நீங்க கூப்பிட்ட 5 பேரில் ரெண்டு பேரை நானும் கூப்பிட்டு இருக்கேன். என்னே நம் ஒற்றுமை! :))//

5 பேருல 3 பேரு தப்பா கூப்பிட்டிருக்கீங்க... அப்புறம் என்னா ஒத்துமை? :-))

said...

// இலவசக்கொத்தனார் said...

உங்களைக் கூப்பிட்டவரே என்னையும் கூப்பிட்டு இருக்காரு!! நீங்க கூப்பிட்ட 5 பேரில் ரெண்டு பேரை நானும் கூப்பிட்டு இருக்கேன். என்னே நம் ஒற்றுமை! :)) //

எவ்ளோ பெரியவங்க நீங்க. ஒங்களுக்கும் எனக்கும் ஒத்துமையா.. ஆகா .. ஆகா... கொத்ஸ் அளவுக்கு எனக்கும் பின்னூட்டங்கள் அள்ளுமா?

சரி... சொல்லீருக்குற தகவல்களைப் பத்தி ஒன்னுமே சொல்லலையே?

said...

// கானா பிரபா said...
கலக்கல் ராகவன், சுடச் சுட வேண்டுகோளை நிறைவேற்றியதற்கு மிக்க நன்றி //

பிரபா அண்ணாச்சி சொன்னப்புறம் சும்மா இருக்க முடியுமா?

பதிவுல நான் சொன்னதப் பத்தி ஒன்னும் சொல்லலையே?

said...

//தொடர்புன்னு இருந்தா கண்டிப்பா ஏதாச்சும் நல்லது செய்யலாம். என்ன.... நல்ல கதையா எழுதிக் குடுக்கலாம். யாராச்சும் தயாரிக்கத் தயாரா இருக்கீங்களா? எந்த மாதிரி கதை வேணும்னு சொல்லுங்க. நான் தயார். :)//

ஹி...ஹி... இப்படியாக வலை வீசிப் பாக்குறீங்களாக்கும் :-)//

ரீப்பிட்டே!!!

உங்களது நினைவாற்றல் சூப்பர்.

ஆமா, ஜிரா ஏதோ கன்னட பட பேர் எல்லாம் சொல்லியிருக்கீங்களே, அது டிவிடி கிடைக்குதா இங்க?.

said...

//ஆகா .. ஆகா... கொத்ஸ் அளவுக்கு எனக்கும் பின்னூட்டங்கள் அள்ளுமா?//

கொத்ஸ் மாதிரி நீங்க ஒத்துழைக்க ரெடியா சொல்லுங்க கும்மியடிச்சுடலாம்...:)

said...

//Blogger கோவி.கண்ணன் said...

//இ. அன்புச் சகோதரி துர்கா//

பேபி சாலினி படம் பார்க்கிறவங்களையெல்லாம் கூப்பிட்டுவிட்டு இருக்கிங்க !//


கோவி அங்கிளுக்கு வயசு ஆச்சு :D
நான் Ben 10,strawberry shortcake,spongebob,இப்படிதான் பார்ப்பேன்.பேபி சாலினி எல்லாம் திருமதி சாலினி ஆகி பல வருசம் ஆச்சுங்கோ :P

said...

ஜி.ரா,
நம்ம நடிகர் திலகம் பத்தி சும்மா நச்சுண்ணு உறைக்குற மாதிரி சொன்னீங்க.

என் கிட்ட அந்தநாள் DVD இருக்கு.

said...

ஏன்கிட்ட சினிமா பத்தியெல்லாம் ஏன் கேக்குறீங்க இராகவன்? அதுவும் மொதோ ஆளா? பாக்கலாம். என்னத்தை எழுதப் போறேனோ? :-)

said...

பதிவைத் தானே கலக்கல்னு நச்சென்று சொல்லீட்டேன், உண்மையிலேயே இயல்பான பதில்கள்

said...

நல்ல பதில்கள் ராகவன்.

தூத்துக்குடி புதுக்கிராமம் பெருமாள் கோவில் எண்ணெய்க்கடை என்று மிக மிக நெருக்கமாக வருகிறீர்கள். பயமாக இருக்கிறது.

//ஆனா ரொம்பப் பிடிச்சது படத்தோட முடிவுதான். இந்தப் பொண்ணு இந்து. அந்தப் பையன் கிருஸ்துவன். காதலுக்குப் பையன் வீட்டுல பச்சைக்கொடி. என்ன.... பொண்ணு மதம் மாறனும். ஆனா மாறாம...காதலைத் தூக்கிப் போட்டுட்டுப் போயிர்ரா. காதல் பெருசுதான். ஆனா அவ சொல்ற காரணம் காதலை விட மதம் பெருசுன்னு இல்ல. "முருகன் இருக்கான்னு நம்புறேன். நாளைல இருந்து ஏசுதான் கடவுள்னு எப்படி நான் நம்புறது"ன்னு கேக்குறா. தோழி சொல்றா..."அட..இவ்ளோதானா....வெளிய ஏசுவேன்னு சொல்லீட்டு உள்ள முருகான்னு சொல்லேண்டி". ஆனா இவ அதுக்கும் ஒத்துக்க மாட்டேங்குறா..."நான் யாரை ஏமாத்துறேன். ஏசுவையா..முருகனையா...நான் ஏன் ஏமாத்தனும்?" இந்தக் கேள்விக்கு விடை கிடைக்காமத்தான் அவ காதலை உதறீட்டு வந்துர்ரா. இதுல பொண்ணு முருக பக்தைங்குறதால மட்டுமில்ல...இது எந்த மதத்த நம்புறவங்களுக்கும் பொருந்தும். இது என்னோட கருத்து.//

கல்யாண அகதிகள் காலத்தில் பாலகுமாரன் திரை உலகில் இல்லை. இருந்திருந்தா, "வாரிசுகளுக்கு இட ஒதுக்கீடு கிடைக்கும்னா எதுவுமே தப்பில்லைம்மா"ங்கற மாதிரி ஏதாவது வசனம் எழுதி இருப்பார்.

கோவி.கண்ணன் அடுத்த ரவுண்டு வந்து இதனைப் படிக்க மாட்டார் என்கிற நம்பிக்கையுடன்.

said...

// மதுரையம்பதி said... ஹி...ஹி... இப்படியாக வலை வீசிப் பாக்குறீங்களாக்கும் :-)//

வலை வீசுறதில்லைங்க...வலைல வீசுறது.... ;)

// உங்களது நினைவாற்றல் சூப்பர்.//

அது ஒவ்வொரு பொழுது அப்படித்தாங்க. தொந்தரவு செஞ்சிக்கிட்டிருக்கும். :D

// ஆமா, ஜிரா ஏதோ கன்னட பட பேர் எல்லாம் சொல்லியிருக்கீங்களே, அது டிவிடி கிடைக்குதா இங்க?. //

கண்டிப்பாக் கிடைக்கும். பூதய்யனு மக ஐயு-வும் கிடைக்கும். நாகமண்டலாவும் கிடைக்கும். கிடைச்சா விடாதீங்க.

said...

// Blogger ஜோ / Joe said...

ஜி.ரா,
நம்ம நடிகர் திலகம் பத்தி சும்மா நச்சுண்ணு உறைக்குற மாதிரி சொன்னீங்க.

என் கிட்ட அந்தநாள் DVD இருக்கு. //

பின்ன என்னங்க ஜோ... ரெண்டு படம் பாத்துட்டுக் கருத்து சொல்றவங்களுக்கு இதத்தான் பண்ணனும். :) ஆனா படத்தப் பாத்துட்டு நல்லாருக்கு..நல்லாருக்குன்னு கண்டிப்பாச் சொல்வாங்க. ஆகையால அத்தன வாட்டி படத்தப் பாக்கச் சொல்றது..தண்டனையில்லை. பரிசுதான். என்ன சொல்றீங்க? :)