Monday, September 24, 2007

காதல் குளிர் - 1

"ஏய் ப்ரகாஷா......லேப்டாப்புக்குள்ளயே போயிறாத. மண்டைய வெளியவும் நீட்டு. நான் நாளைக்கு டெல்லிக்குப் போறேன். அதான் சொல்லலாம்னு வந்தேன்."

ப்ரகாஷா என்று அழைக்கப்பட்டவன் நிமிர்ந்து பார்த்துப் புன்னகைத்தான். பார்ப்பதற்கு திரைப்பட நடிகர் சூர்யா போல இருப்பான். அதென்ன போல. சூர்யா என்றே வைத்துக் கொள்ளுங்களேன். உங்களுக்கும் கற்பனை செய்வதற்கு எளிதாக இருக்கும்.

"ஹே! ரம்யா....வா வா உக்கார். டெல்லிக்கு என்ன திடீர்னு ப்ரயாணம்?"

அவனைச் சூர்யா என்று சொல்லி விட்டோம். அப்படியானால் ரம்யா? அசின்....வேண்டாம். வேண்டாம். ஜோதிகா என்றே வைத்துக் கொள்வோமே.

இப்பொழுது புரிந்திருக்குமே. அவன் கதாநாயகன். அவள் கதாநாயகி. அடுத்து காதல்தான். அவ்வளவுதான் கதை. ஆனால் அது எப்படி நடக்கின்றது என்று கதை முழுக்க படித்துத் தெரிந்து கொள்வோமே.

ப்ரகாஷாவும் ரம்யாவும் பெங்களூரில் ஒரு பெரிய மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்கின்றார்கள். இருவரும் லீட் பதவியில் இருப்பவர்கள். தமிழ் இலக்கணப்படி சொன்னால் அவர்கள் வேலை மேய்த்தலும் மேய்க்கப்படுவதும். இவர்களிடம் இவர்களது மேனேஜர்கள் வேலை வாங்குவார்கள். அது மேய்க்கப்படுவது. இவர்கள் இருவரும் தங்களுக்குக் கீழ் ஒரு சிறிய கூட்டத்தை வைத்து வேலை வாங்குவார்கள். அது மேய்த்தல்.

வழக்கமாக தமிழ்த் திரைப்படங்களில் கதாநாயகன் தமிழாகவும் கதாநாயகி வேறு மொழியாகவும் இருப்பார்கள். ஆனால் காதல் குளிரில் வேறு மாதிரி. ப்ரகாஷா கன்னட மகா. ரம்யா தமிழச்சி.


வேலையில் சேரும் பொழுதுதான் முதற் பழக்கம். கடந்த நான்கரை வருடங்களில் இருவரும் இவ்வளவு தூரம் வேலையிலும் நட்பிலும் முன்னேறியிருக்கின்றார்கள். இருவரும் காதலிக்கின்றார்களா என்று கேட்டால்....ஆமாம் என்றும் சொல்லலாம். இல்லை என்றும் சொல்லலாம்.

உள்ளுக்குள் காதல் உண்டு. ப்ரகாஷாவிற்குத் தன் காதல் புரிந்தது விட்டது. ரம்யாவிற்கு அது இன்னமும் தெளிவாகப் புரியவில்லை. அவ்வளவுதான் விஷயம். அதைப் புரிய வைக்கத்தான் ப்ரகாஷாவும் படாதபாடு படுகிறான்.

ரம்யா ப்ரகாஷாவின் க்யூபிக்கிளில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்தாள்.

"என்ன திடீர்னு டெல்லி?" திரும்பவும் ரம்யாவைக் கேட்டான்.

"அட. அதுவா...நம்ம ஹெச்.ஆர் இருக்காங்கள்ள.....அதாம்ப்பா நல்லாயிருக்குறவங்களையெல்லாம் நம்ம கம்பெனியில சேத்து அவங்க வாழ்க்கையப் பாழடிக்கிறாங்களே....அவங்க டெல்லியில இருக்குற பலரோட வாழ்க்கைய வீணடிக்கனும்னு அங்க இண்டர்வியூ வெச்சிருக்காங்களாம். அதுக்குப் போகனும்னு கேட்டு மெயில் அனுப்பீருந்தாங்க. நானும் சரீன்னு சொல்லீட்டேன். ஆனா ஒரு கண்டிஷனோட. அது என்னன்னு தெரியுமா?" கேட்டு விட்டு ப்ராகாஷின் முகத்தையே ஆவலோடு பார்த்தாள்.

"என்னது?" அமைதியாகப் புன்னகையோடு கேட்டான்.

"அப்படிக் கேளு. இண்டர்வியூ ஞாயித்துக்கெழமை. ஆனா எனக்கு வியாழக் கெழமை நைட்டே பிளைட் புக் பண்ணனும்னு கண்டிஷன். வெள்ளிக்கிழமை லீவு. அது ஏன்னு தெரியுமா?" திரும்பவும் ப்ரகாஷாவின் முகத்தையே ஆவலோடு பார்த்தாள்.

"ஏன்?" மறுபடியும் அமைதியாகப் புன்னகையோடு கேட்டான்.

"அப்படிக் கேளு. நொய்டால யாரு இருக்காங்க? சப்யாவும் சித்ராவும் இருக்காங்கள்ள. அவங்க ரெண்டு பேரும் நொய்டா போய் ஒரு வருஷத்துக்கும் மேல ஆச்சு. அதுக்கப்புறம் ஃபோன்ல பேசிக்கிறதோட சரி. மெயில் அனுப்புறதோட சரி. இந்த இண்டர்வியூவச் சாக்கா வெச்சுக்கிட்டுப் பாத்திரலாம்ல. அதான். வெள்ளியும் சனியும் அவங்களோட சுத்தீட்டு ஞாயித்துக்கெழம இண்டர்வியூ எல்லாம் எடுத்திட்டு திரும்பவும் பெங்களூர். எப்படிப் பிளான்?" முகத்தை பொம்மை போல வைத்துக் கொண்டு கேட்டாள்.

அவளுடைய முகத்தைப் பார்த்துக் கஜினி சூர்யா போல ஷார்ட் டெர்ம் மெமரி லாசுக்குப் போனான். அவனுக்குள் தூங்கிக்கொண்டிருந்த பீ.பி.ஸ்ரீநிவாஸ் பாடினார். "நின்ன கண்ண கண்ணடியல்லி கண்டே நன்ன ரூபா (உந்தன் கண்ணின் கண்ணாடியிலே கண்டேன் எந்தன் ரூபம்)"

"ஏய்...என்ன பாத்துக்கிட்டேயிருக்க.... பொறாமையா இருக்கா? நான் போய் சப்யாவையும் சித்ராவையும் பாக்கப் போறேன்னு? சரி....எனக்கு வேலையிருக்கு. இதச் சொல்லலாம்னுதான் வந்தேன். வர்ரேன்....." சொல்லி விட்டு பதிலை எதிர்பார்க்காமல் போனாள் ரம்யா.


யாரிந்த சப்யாவும் சித்ராவும்? இவர்களும் ரம்யா ப்ரகாஷாவோடு வேலைக்குச் சேர்ந்தவர்கள்தான். ச்ப்யாவின் முழுப்பெயர் சப்யாசாச்சி. பெங்காலிப் பையன். மிஸ்டர் அண்டு மிசஸ் ஐயர் படத்தில் நடித்த ராகுல் போஸ் போல இருப்பான். சித்ரா பெங்களூர் தமிழ். அதே மிஸ்டர் அண்டு மிசஸ் படத்தில் நடித்த கொன்கொனா சென் போல இருப்பாள். இனிமேல் இவர்களை அவர்களாகவே உருவகம் செய்துகொள்ளுங்கள். இருவரும் காதலித்துக் கல்யாணமும் செய்து கொண்டு நொய்டாவிற்குப் போய் விட்டார்கள். இருவர் வீட்டிலும் நிறைய பிரச்சனைகள் இருந்ததால் நொய்டாவில் வேலை தேடிப் போய் விட்டார்கள். இருவர் வீடுகளுக்குமே அது தொலைவுதான். அந்தத் தொலைவு இருவர் வீட்டாரிடமும் நன்றாகவே வேலை செய்தது. குழந்தை பிறந்ததும் இருவீட்டுப் பிரச்சனைகளும் தீர்ந்தும் போனது.

எப்பொழுதும் ஒன்றாகவே இருந்த கூட்டணி இப்பிடிப் பிரிந்து ஒன்று மத்திய அரசாங்கமாகவும் மற்றொன்று மாநில அரசாங்கமாகவும் மாறிப் போனது. ஆனாலும் கூட்டணி ஒப்பந்தப்படி ஃபோனிலும் மெயிலிலும் விடாத தொடர்பு. ஆனால் ரம்யாவும் சரி..ப்ரகாஷாவும் சரி...நொய்டா சென்று பார்க்கவேயில்லை. இப்பொழுது ரம்யாவிற்கு அலுவலகம் வழியாக ஒரு வாய்ப்பு. ஆகையால் அவளுடைய கொண்டாட்டத்திற்குக் கேட்கவா வேண்டும்.

தொடரும்...

இந்தக் கதையில் இதே நடிகர்களை நினைவில் வைத்துப் படியுங்கள். இந்தக் கதைக்காகப் படங்களைத் தேடுக் கொடுக்கும் தேவ், ராம், சிவிஆருக்கு என்னுடைய நன்றிகள். கதைக்குப் பொருத்தமாக இருக்கும் என்று கருதினால் அந்தப் படத்தினை எனக்கு நீங்களும் அனுப்பலாம்.

Sunday, September 09, 2007

பி.மு பி.பி

என்னனு பாக்குறீங்களா? இதுவும் கி.மு கி.பி மாதிரிதான். ஆனா ஈழம் தொடர்பானது. பிராபகரனுக்கு முன்பு. பிரபாகரனுக்குப் பின்பு.

அதுக்குள்ள பிமு பிபி பத்திப் பேச வேண்டிய நேரம் வந்திருச்சான்னு கேக்காதீங்க. ஆனா யோசிக்க வேண்டிய நேரம் வந்திருச்சு. என்ன யோசனைன்னு கேக்குறீங்களா? சொல்றேன். ஆனா ஒன்னு. இந்தக் கட்டுரை ஒரு வெளியாள் சிந்தனைங்குற மனசுல வெச்சுக்கிட்டுப் படிங்க. எந்த வண்ணமும் பூசாம இப்பிடிப்பட்ட சமயத்துல என்ன நடக்கும்னு யோசிங்க. அதப் பின்னூட்டமா போடுங்க. நாகரீகமான பின்னூட்டமா இருக்கனும். தனிநபர்த் தாக்குதலாவோ இனத்தாக்குதலாவோ இல்லாம இருந்தா நல்லாருக்கும்னு கேட்டுக்கிறேன்.

இன்றைக்கு விடுதலைப்புலிகள் இயக்கத்துக்குத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்னு எல்லாருக்கும் தெரியும். குறைந்த பட்சம் அப்படித்தான்னு நெறையப் பேரு நெனச்சுக்கிட்டிருக்கோம். இன்னைக்கு நெலமை எல்லாருக்கும் தெரிஞ்சதுதானே. நாளைக்கு? பிரபாகரன் ரொம்ப நாளைக்கு இருப்பாருன்னு வெச்சுக்குவமே. அதுக்குள்ள ஈழப் பிரச்சனை தீந்திருச்சுன்னா நல்லது. இல்லைன்னா?

ஏன் சொல்றேன்னா....அந்தப் பக்கம் பாத்தீங்கன்னா.....ஆளு மாறிக்கிட்டே இருந்தாலும் யாராவது தலைவர்னு இருந்துக்கிட்டேயிருக்காங்க. அதுக்குக் காரணம் அரசியல்+ஜனநாயகம். நல்லது செய்றாங்களோ கெட்டது செய்றாங்களோ.....பண்டாரநாயக, பிரேமதாச, சந்திரிகா குமாரதுங்க, ரணில் விக்ரமசிங்கே...இப்ப மகிந்த ராஜபக்ஷன்னு ஒருத்தர் இருந்துக்கிட்டேயிருக்காங்க. இப்ப இருக்குற மகிந்த போனாலும் அடுத்து ஒரு மந்திரிகா வர்ரதுக்கு வாய்ப்புகளும் வசதிகளும் நெறைய இருக்கு. ஆனா....இந்தப் பக்கம்?

ஏற்கனவே கருணாஸ் அது இதுன்னு பிரிஞ்சி போயி பிரச்சனைகள் வேற இருக்குது. இந்த நிலையில அடுத்த கட்டத் தலைவரா யாரு வருவாங்க? எப்படி வருவாங்க? அதுக்கான வழிமுறைகள் என்ன? அதுபத்தி எதுவுமே வெளிப்படையாத் தெரியலையே. இப்படி இருக்குறதால சாதக பாதக அம்சங்கள் என்னென்ன? சாதகத்துலயும் பாதகத்துலயும் எது நெறைய?

ஆக பிபின்னு யோசிச்சா....இந்தப் பக்கம் என்ன நடக்கலாம்னு தெளிவாத் தெரியாத நெலை. கூட்டணிப் பூசலாகலாம். நாலஞ்சுக் குழுவாகலாம். இப்ப எதுக்குற மாதிரி எதுக்க முடியாமப் போகலாம். அதுவே சிங்களப் பேரினவாதத்தைத் நிலைநிறுத்த அடுத்தடுத்த சிங்களத்தலைவர்கள் வந்துக்கிட்டேயிருப்பாங்க. ஆனா இங்க? தெளிவில்லாத நிலைதான் தோணுது. இதைத்தான் சிங்கள அரசாங்கமும் இனவாதிகளும் எதிர்பாப்பாங்கன்னு நெனைக்கிறேன். அதுக்காக முயற்சிகளும் செய்வாங்க. அது எவ்ளோ பலன் தருமோ தெரியாது. ஆனா எத்தனை நாளைக்கு? கண்டிப்பா என்னால பிபிய தமிழர்களுக்கு நல்ல விதமா இருக்கும்னு நெனைக்க முடியலை. ஈழத்தமிழர்கள் நல்லாயிருக்கனும்னு நெனைக்கிறது உண்டுதான். ஆனா இந்த விஷயத்துல?

மக்களே ஒங்க கருத்துகளைச் சொல்லுங்க.

அன்புடன்,
கோ.இராகவன்

Saturday, September 08, 2007

தமிழ் ஊடு கேளுங்க....

ஊடு கட்டி அடிக்கப் போறதா பயந்துக்கிறாதீங்க....ஊடுன்னா தெரியுந்தானே...மந்திரம் மாந்திரீகம் மாதிரி. அப்படித் தமிழ்ல ஊடு கட்டி அடிச்சா எப்படியிருக்கும்?

சுசீலா ராமன்னு ஒரு தமிழ்ப் பொண்ணுதான்...இப்பிடி ஊடு கட்டி அடிச்சது. அதுவும் பாரீஸ்ல. கூட யார்னு நெனைக்கிறீங்க? கோவை கமலா. சேது படத்துல "கானக் கருங்குயிலே கச்சேரிக்கு வர்ரியா வர்ரியா"ன்னு பாடுனாங்களே. அவங்கதான். கே.பி.சுந்தராம்பாள் மாதிரிப் பாடுவாங்களே...அவங்கதான். அவங்களும் சுசீலா ராமனும் ஊடு கட்டி அடிச்சதுதான் இந்தத் தமிழ் ஊடு. பாரீஸ் மக்களுக்கு இப்பிடி ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு.

உள்ளபடிக்கு இத முருகனருள்ளதான் போட்டிருக்கனும். ஆனாலும் மகரந்தத்துல போட்டாச்சு. மக்களே. கேட்டு ரசிச்சி...உங்க கருத்துகளை அள்ளி விடுங்க பாக்கலாம். வேலவா.............!!!!!!!!!!!!!!



அன்புடன்,
கோ.இராகவன்

Thursday, August 16, 2007

தஸ்லீமாவைத் தாக்கியது சரியா?

தஸ்லீமாவைத் தெரியாதவர்கள் கிடையாது என்று சொல்லும் நிலைக்கு அவரது எதிர்ப்பாளர்கள் அவருக்குப் பிரபலத்தைத் தேடித் தருகிறார்கள். சமீபத்தில் அவர் தாக்கப்பட்டார். ஐதராபாத்தில்.

அவர் என்ன சொன்னார் என்று இன்னும் படிக்கவில்லை. நேரமின்மையின் காரணமாகவே அது. ஆனால் தாக்கப்பட்டார் என்று தெரிந்தும் வலைப்பூ பரபரப்பாக இல்லாமல் இருந்தது வியப்புதான். தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டது. வலைப்பு அல்லோகல்லோலப் பட்டது. சிவசேனை அட்டகாசங்களும் வலைப்பூக்களில் பரவலாகப் பேசப்பட்டது. சிவசேனையின் செயல்கள் கண்டிக்கப்பட வேண்டியதுதான். அதைக் கண்டித்ததும் சரிதான்.

ஆனால் தஸ்லீமா தாக்கப்பட்டது? நமது அமைதி வியப்புதான். அவர் கருப்பைச் சுதந்திரத்தைப் பற்றிப் பேசியதாகக் கேள்விப்படுகிறேன். பெண் ஏன் அடிமையானாள் என்ற புத்தகத்தில் பெரியாரும் அதே போன்ற...அல்லது அதே கருத்தைச் சொல்லியிருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். (முதலில் பெரியார் சொன்னதையும் தஸ்லீமா சொன்னதையும் படிக்க வேண்டும்.)

தஸ்லீமா தாக்கப்பட்டது சரியா தவறா என்று நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள். இதோ நீங்களே சொல்லுங்கள். ரகசிய வாக்கெடுப்புதான். தஸ்லீமா சொன்னதையும்...அவரை ஒரு சட்டமன்ற உறுப்பினர் தாக்கியதன் பின்னணியை மட்டும் வைத்து உங்கள் கருத்தைச் சொல்லுங்கள். அவன் இவனை அடித்த பொழுது எங்கே போனோம். இவனை அவன் கடித்த போது எங்கே போனோம் என்ற கேள்விகள் சண்டைகள் வேண்டாம். அதெல்லாம் நடக்கும் பொழுது அதற்கென்று ஓட்டெடுப்பு வைத்துக் கொள்ளலாம்.

இப்பொழுது இந்தச் சூழ்நிலையை மட்டும் வைத்து, உங்கள் வாக்கை அளியுங்கள். பின்னூட்டத்தில் எதையும் சொல்ல விரும்பினால் அதையும் சொல்லுங்கள்.



அன்புடன்,
கோ.இராகவன்

Friday, August 03, 2007

பூங்கா - கவிதை

கவிதைகள் எழுதப்படுவதில்லை. பிறக்கின்றன. பிரசவத் தேதியைக் கூட கவிதைக் குழந்தைதான் முடிவு செய்கிறது என்று நம்புகிறவன் நான். ஆகையால்தான் கவிதை எழுத நான் முயற்சிப்பதில்லை. இன்று தன்னைத்தானே என் வழியே பிரசவித்துக் கொண்டது ஒரு கவிதை. அந்தக் கவிதை இங்கே.



பூங்காவைச் சுற்றிச் சுற்றி
நான் பறக்கிறேன்
எனது பூங்கா
வரப்பில்லாதது
பொறுப்பில்லாதது
நிலம் பழையதாகிக் கொண்டிருக்கிறது
பழுதாகிக் கொண்டிருக்கிறது
வானமோ வெகுதொலைவில்
பூங்காவைச் சுற்றிச் சுற்றி
நான் பறக்கிறேன்


தாயுமானவனாக,
கோ.இராகவன்

Sunday, July 22, 2007

ஹாரி பாட்டரும் இனவெறியும்



ஹாரிபாட்டர் கதையில என்னதான் இருக்கு?
ஏன் இப்பிடி பைத்தியமா அலையிறாங்க?
நடுநிசில கட வாசல்ல வரிசைல நின்னு வாங்கித்தான் ஆகனுமா?
விடியிற வரைக்கும் கூடப் பொறுக்க முடியலையா?
சிறுசு பெருசுன்னு வயசு பாக்காம எல்லாரையும் மயக்க எந்த ஊர் சொக்குப்பொடியத் தூவி கதை எழுதீருக்காங்க?

இந்தக் கேள்விக்கெல்லாம் விடை தெரியலையா? அப்ப நீங்க இந்தப் பதிவைப் படிக்கனும். விடை தெரியும்னாலும் இந்தப் பதிவைப் படிச்சு நான் சொன்னது சரிதான்னு சொல்லனும். பதிவுக்குப் போவோமா?

என்னடா ஹாரி பாட்டர்ல இனவெறின்னு பாக்குறீங்களா? ஆமா. கதைக்கும் அதுக்கும் தொடர்பு இருக்கு. விளக்கமாச் சொல்றேன்.

கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு முன்னாடி மொதப் புத்தகம் வந்துச்சு. ஒன்னு...ரெண்டு..மூனுன்னு...இப்பக் கடைசிப் புத்தகம் ஏழாவது பாகமா வந்திருக்கு. ஜே.கே.ரௌலிங் அப்படீங்குற இங்கிலாந்து எழுத்தாளர் எழுதுன கதைதான் இது.

கதையோட மையக்கருத்தே இனவெறிக்கு எதிராகப் போராடுறதுதான். ஆமா. அதப் படிக்கிறவங்களுக்கு இந்த உலகத்துல நடந்த நடக்குற இனவெறிப் படுகொலைகள் கண்டிப்பா நினைவுக்கு வரும். நல்லாக் கவனமாக் கேளுங்க. கதைச் சுருக்கத்தத் தெளிவாச் சொல்றேன்.

நம்மள்ளாம் சாதாரண மனிதர்கள்தானே. இதுல நம்மளப் போல மனிதர்கள் சிலருக்கு மந்திரஜாலமெல்லாம் தெரிஞ்சிருக்கு. அவங்களால நெறைய ஜாலங்கள் செய்ய முடியும். இப்ப ரெண்டு இனம் இருக்குதா? மந்திரம் தெரிஞ்ச இனம். தெரியாத இனம். தெரிஞ்ச இனத்துக்கு wizard communityன்னு பேரு. தெரியாதவங்களுக்கு mugglesனு பேரு.

இந்த mugglesஐ விட wizardsக்கு நெறைய சக்தி இருக்குதான. அந்தச் சக்தியை சாதாரண மனிதர்களுக்கு எதிராப் பயன்படுத்தாம அமைதியா வாழனும்னு wizard communityல ஒரு கூட்டம் நெனைக்குது. அதுவுமில்லாம muggles இனத்தோட கலப்புத் திருமணமும் செஞ்சுக்கலாம்னும் அவங்க நெனைக்குறாங்க.

ஆனா இன்னொரு கூட்டம் இருக்கு. அவங்களுக்கு இனவெறி. wizard ரத்தம் எப்படிச் சாதாரண ரத்தத்தோட கலக்கலாம்னு நெனைக்கிறவங்க அவங்க. muggles எல்லாம் கீழானவங்க. அவங்க இருந்தா என்ன..இல்லைன்னா என்னனு இவங்க நெனைக்கிறாங்க. அவங்கள அப்பப்ப கொல்றது..கொடுமைப் படுத்துறதுன்னு இருக்காங்க. அதுவுமில்லாம கலப்புத் திருமணம் செஞ்சவங்க கொழந்தைங்களும் wizard/witchஆ இருந்தா அவங்களையும் வெறுக்குறாங்க. தங்களை Pure Blood அப்படீன்னு அழைக்கிறாங்க. அப்படிச் சுத்த ரத்தக் கல்யாணத்துல பொறக்காத wizard/witch குழந்தைகளை Mud Bloodன்னு கேவலமாச் சொல்வாங்க.

இப்பிடி wizard community ரெண்டா பிரிஞ்சிருக்குறப்போ நடக்குறதுதான் ஹாரி பாட்டர் கதை. ஒரு கெட்டவன் வோல்டேமார்ட்(Voldemort). தன்னை Pure Bloodன்னு சொல்லிப் பெரிய ஆளா வர்ரான். ஒரு கூட்டத்தச் சேத்துக்கிட்டு கொடுமைகளச் செய்றான்.

ஹோக்வர்ட்ஸ் (Hogwards) பள்ளிக்கூடத்துல இந்தப் பிள்ளைங்க படிக்கனும். மொத்தம் ஏழாண்டுப் படிப்பு. சரியா பதினோரு வயசுல சேந்து பதினெட்டு வயசுல படிச்சு முடிச்சு வெளிய வருவாங்க. அந்தப் பள்ளிக்கூடத்துல தலைமையாசிரியரா ஒரு நல்லவர் இருக்காரு. டம்பிள்டோர் (Dumbledore)னு பேரு. அவரு கெட்டவனுக்கு எதுராப் போராட ஒரு கூட்டத்த உருவாக்குறாரு. அதுல ரெண்டு பேரு ஜேம்ஸ் மற்றும் லில்லி. அவங்களுக்கு ஒரு குழந்தைதான் ஹாரி பாட்டர்.

நம்மூர்ல ஜாதகம் எழுதுறாப்புல அவங்க Prophecy எழுதுறாங்க. அதாவது இந்தக் குழந்தை என்னாகும்னு. அதுல இந்தக் கொழந்தையால வோல்டேமார்ட்டுக்குக் கெடுதீன்னு சொல்லுது. இதத் தெரிஞ்சிக்கிட்டு அவன் இவங்களக் கொல்ல வர்ரான். ஜேம்சையும் லில்லியையும் கொன்னுட்டு பாட்டரைக் கொல்லப் போறான். அப்பத்தான் அந்த அதிசயம் நடக்குது. ஆமா. அந்தக் கொழந்தை தப்பிச்சிருது. ஆனா வோல்டேமார்ட் சக்தியெல்லாம் இழந்து ஒன்னுமில்லாமப் போயிர்ரான். கதை தொடங்குறதே அங்கதான்.

அந்த அனாதைக் குழந்தை இப்ப ரொம்பப் பிரபலமாயிருது. டம்பிள்டோர் அத லில்லியோட அக்கா வீட்டுல வளர்க்க விட்டுர்ராரு. அவனுக்குப் பதினோரு வயசு ஆகைல ஹாக்வோர்ட்ஸ் பள்ளிக்கூடத்துல படிக்கப் போறான். மொத்தம் ஏழு வருசம்னு சொன்னேனே. ஒவ்வொரு வருசத்துல நடக்குறதும் ஒவ்வொரு புத்தகம். இப்ப ஜூலை 21 2007ல வந்தது ஏழாவது புத்தகம்.

அந்தப் பள்ளிக்கூடத்துல ரான் (Ron) மற்றும் ஹெர்மயானி(Hermione) அப்படீன்னு ரெண்டு நண்பர்கள் கிடைக்குறாங்க. சக்தியெல்லாம் இழந்த வோல்டேமார்ட் திரும்பவும் சக்தி பெற்று உருவம் பெற்று ஹாரிபாட்டரைக் கொன்னுரனும்னு விரும்புறான். மொத மூனு புத்தகத்துலயும் மூனு விதமா முயற்சி செய்றான். ஆனா தோல்விதான். ஆனா நாலாவது புத்தகத்துல அவனுக்கு வெற்றி. முழு உருவம் வந்துருது. அஞ்சுல அவன் திரும்ப வந்தத மக்கள் நம்ப மாட்டேங்குறாங்குறாங்க. ஆனா அந்தப் புத்தகம் முடியுறப்போ மக்களுக்கு உண்மை தெரிஞ்சிருது. ஆறாவது புத்தகத்துலயும் ஏழாவது புத்தகத்துலயும் கடுமையான சண்டைகள். உயிரிழப்புகள். அப்பப்பா! கடைசில நல்லவன் வெற்றி பெறுவதுதான் கதை.

அட இவ்வளவுதானான்னு நெனச்சிராதீங்க. இத ஏழு புத்தகத்துல சொல்லனுமே. எத்தனை பாத்திரங்கள் அதுக்குத் தேவை. எவ்வளவு விறுவிறுப்பும் சுறுசுறுப்பும் தேவை. மாயாஜாலம்னு முடிவெடுத்தாச்சு. சொன்னதையே திரும்பச் சொல்லாம எவ்வளவு சொல்லனும். இதையெல்லாம் நல்லா செஞ்சிருக்காங்க ஜே.கே.ரௌலிங்.

இனவெறிக் கொடுமைகளை அவங்க விவரிக்கும் பொழுது இரண்டாம் உலகப் போர் சமயத்துல நாஜிகள் செஞ்ச வம்புகள் நினைவுக்கு வரும். அத வெச்சுத்தான் எழுதீருப்பாங்கன்னு நெனைக்கிறேன். ஏழாவது புத்தகத்துல வோல்டேமார்ட் ஆளுங்க எல்லாத்தையும் பிடிச்சிருவாங்க. அப்ப Pure Blood இல்லாதவங்கள்ளாம் அரசாங்கத்துக்கிட்ட பதிவு செய்யனும். அவங்களுக்கு மந்திரதந்திரம் தெரிஞ்சாலும் சொல்லக் கூடாது. பயன்படுத்தக்கூடாது. மீறிப் பயன்படுத்துனா கொல்றது. இந்த மாதிரியெல்லாம் படிக்கும் போது நம்ம நாட்டுலயும் வெளிநாடுகளிலும் நடந்த/நடக்குற கொடுமைகள் நினைவுக்கு வரும்.

புத்தகத்தோட வெலை கூடதான். ஒத்துக்க வேண்டியதுதான். அதே நேரத்துல புத்தகம் வந்ததுமே அதோட மின்பதிப்பும் கிடைச்சிருது. Technology has improve soooooooooo much. :))) ஆகையால வாங்குற கூட்டம் கொடுத்த காசு போதும். மத்தவங்க டௌன்லோடு பண்ணிக்கலாம்னு நெனைக்கிறேன்.

ஆனா புத்தகத்தைப் படிக்க முயற்சி செஞ்சு பாருங்க. அப்பத்தான் அதுல இருக்குறது புரியும். படம் பாருங்க. ஆனா புத்தகத்தோட ஒப்பிடும் போது படம் ஒன்னுமேயில்லை. படிச்சா விட முடியாது. அந்த அளவுக்கு ஈர்க்கும். சனிக்கிழமை காலைல ஒம்பது மணிக்கு புத்தகத்த வாங்குனேன். ராத்திரி கொஞ்ச நேரம் மட்டும் தூங்கீட்டு புத்தகத்தப் படிச்சு முடிச்சாச்சு. அந்த அளவுக்கு புத்தகம் என்னை மட்டுமில்ல...ரொம்பப் பேரை ஆட்டுவிச்சிருக்கு. படிக்காமலேயே அதுல என்ன இருக்குன்னு கேட்டீங்கன்னா....ஒன்னுமில்லை...போய் சாப்புடுங்கன்னு சொல்வேன்.

ஏழாவது புத்தகத்தப் பத்தி இந்தச் சுட்டியில பாருங்க. அதுல பல சுட்டிகள் இருக்கு. ஒவ்வொன்னும் நெறைய தகவல்கள் தரும். இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆறாவது புத்தகம் வந்த பொழுது நான் எழுதிய பதிவு இங்கே.

இந்தக் கதைய எழுதுனாங்களே...அவங்க சோத்துக்குக் கஷ்டப்பட்டவங்க. இந்தக் கதையால இன்னைக்கு இவ்வளவு தூரம் முன்னேறியிருக்காங்க. எழுத்துக்கு இருக்குற வலிமை அவ்வளவு. வாங்க...ஹாரி பாட்டர் படிக்கலாம்.









அன்புடன்,
கோ.இராகவன்

Tuesday, July 17, 2007

புகைப்படப் போட்டிக்கு

புகைப்படப் போட்டிக்கு

தலைப்பு : இயற்கை

முதற்படம்


இரண்டாம் படம்



அன்புடன்,
கோ.இராகவன்

Wednesday, July 11, 2007

3 இன் 1 மூன்று சுரங்களுக்குள் அபூர்வ ராகம்

இசையின்பம் வலைப்பூவுல 3 இன் 1 மூன்று ஸ்வரங்களுக்குள் அப்படீன்னு ஒரு பதிவு போட்டிருந்தாங்க நம்ம ஜீவா. அதுல மகதிங்குற ராகத்தை இளையராஜா பயன்படுத்திப் பாட்டுப் போட்டுருந்ததைச் சொல்லியிருந்தாங்க. ரொம்ப நல்ல பாட்டு. நானும் கேட்டேன். ஷ்ரேயா கோஷல் நல்லாப் பாடுறாங்க.

ஆனா பாருங்க. இந்த ராகத்தை முதன்முறையா திரைப்படத்துல பயன்படுத்துனது மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். எல்லாருக்கும் தெரிஞ்ச பாட்டுதான். அபூர்வ ராகங்கள் படத்துல வரும் "அதிசய ராகம் ஆனந்த ராகம் அழகிய ராகம்...அபூர்வ ராகம்". ஆமா. ஏசுதாஸ் பாடிய கண்ணதாசனின் பாட்டேதான்.

அபூர்வ ராகங்கள்னு படத்துக்குப் பேரு வெச்சாச்சே...பாட்டும் அபூர்வராகங்கள்ள போட்டா நல்லாயிருக்குமேன்னு மெல்லிசை மன்னர் பாலமுரளிகிருஷ்ணா கிட்ட கேட்டாராம். அப்பத்தான் இந்த மகதி ராகத்தைப் பயன்படுத்தினாராம்.

இந்த யூடியூபைப் பாருங்க. அபூர்வ ராகங்கள் படத்துல சில காட்சிகள் வருது. அதிசய ராகம் பாட்டு வரும் போது அதுல மெல்லிசை மன்னர் எப்படி இந்த ராகத்தைப் பயன்படுத்தினாருன்னும் சொல்றாரு. நல்லாக் கேளுங்க. ஏழெட்டு நிமிட வீடியோதான்.


அன்புடன்,
கோ.இராகவன்

Friday, June 29, 2007

மேக்கப் மகிமை

மேக்கப் போடுறதுக்கு முன்னாடி



மேக்கப் போட்டதுக்குப் பின்னாடி



என்னையக் கேட்டா கமலஹாசன் செஞ்சதெல்லாம் இதுக்கு முன்னாடி ஒன்னுமில்லைன்னுதான் தோணுது. உள்குத்து ஒன்னுமில்லை ரஜினி ரசிகர்களே. மனசறிஞ்சு சொல்றேன்.

இன்னைக்கு எங்க அலுவலகத்துல இந்த மின்னஞ்சல்தான் பெரிய பேச்சு.

அன்புடன்,
கோ.இராகவன்

Saturday, June 23, 2007

மாமாமாமாமாமாமாமா இப்பிடி இருக்கனும்!

மாமாமாமாமாமாமாமான்னா புரியலையா...ஒரு மா ரெண்டு மா....அட எட்டுமா...அட எட்டுமா இப்பிடி இருக்கனும்! அதாங்க தலைப்பு. நம்மளப் பத்தி எட்டு தகவல்கள் சொல்லனுமாமே. அமெரிக்காவுல கொத்தனார் கூப்டாக....கொல்கத்தாவுல நிர்மலா கூப்டாக....எங்கெரகம்னு அலப்பர செய்யாம ஒத்துக்கிட்டேன். :) இல்லைன்னா கூப்புடாம விட்டுருவாகய்யா! :))))) சரி. ஒவ்வொன்னாப் பாப்பமா?

1. பொறப்பு: இப்பல்லாம் பிள்ளைக ஆசுப்பித்திரியிலதான் பொறக்காங்க. எங்க சமயத்துல அட...80க்கு முன்னாடி இருந்துச்சே அந்த எழுவதுலதாங்க. பொறந்தது ஆசுப்பித்திரியா வீடாங்குற கேள்வி ரொம்ப சகஜம். சிலரு வீடும்பாங்க. சிலரு டாக்டரு ஆசுப்பித்திரிலம்மாக. நான் ரெண்டையுஞ் சொல்வேன். ஆமா. பொறந்தது டாக்டரம்மா வீட்டுல்ல. தூத்துக்குடியில கோயில்பிள்ளை டாக்டரம்மான்னு ஒருத்தங்க இருந்தாங்க. அவங்க வீட்டுலதான் நான் பொறந்தேன். ஆனா பாருங்க...அந்த டாக்டரம்மாக்கு ஒரு கை கெடையாது. அதுனால என்ன...திறமைய ஊனமா நிப்பாட்ட முடியும்! இதுல எனக்குப் பெருமைதாங்க.

2. தடுப்பூசி: கொழந்த பொறந்தப்ப...தடுப்பூசி போடுவாங்கள்ள...அது எனக்கும் போட்டாங்க. வழக்கமா எல்லாரும் நொட்டாங்கைல போட்டா...எனக்கு வலக்கைல போட்டாங்க. ஒடனே அழுதிருக்கேன். எங்க பாட்டி...வழக்கமா ஊசி போட்டா தேச்சு விடுவாகள்ளன்னு தேச்சு விட்டுட்டாங்க. அந்த ரெக்கு புண்ணாயிருச்சு. அதுனால பாருங்க. இன்னமும் தழும்பு பெருசா இருக்கும். இங்க நெதர்லாந்து வந்தப்புறம்....காசநோய் பரிசோதனை செய்வாங்க. கண்டிப்பா செய்யனும். அரசாங்க உத்தரவு. அப்ப தடுப்பூசி போட்ட தழும்பக் காட்டுன்னாக. நான் வலது கையக் காட்டுனேன். நொட்டாங்கைல இல்லையேன்னு கேட்டாங்க. அவங்களுக்கும் இந்தக் கதையச் சொல்ல வேண்டியதாப் போச்சு. எங்க பாட்டி புகழ நெதர்லாந்து வரைக்கும் கூட்டீட்டு வந்தாச்சு.

3. நெத்திக்கண்ணும் மச்சமும்: என்னடா நெத்திக்கண்ணுன்னு கேக்கீங்களா? ஆமாங்க. நெத்தியில நடுவுல கண்ணு மாதிரி ஒரு பெரிய மச்சம். பொறந்ததுல இருந்தே இருக்குது. மொகத்தப் பாத்தா தெளிவாத் தெரியும். இருக்கங்குடி...மாசார்பட்டீன்னு கேள்விப்பட்டிருக்கீங்களா? தெரியலையா? அது தூத்துடி மாவட்டமா...விருதுநகர் மாவட்டமான்னு சரியாத் தெரியலை. இருக்கங்குடி விருதுநகர் மாவட்டந்தான். ஆனா மாசார்பட்டி தெரியலை. அங்க பஸ்சுல எறங்கி உள்ள ரெண்டு மூனு கிலோமீட்டரு நடந்தா வரும் கைலாசரம்..அட கைலாசபுரம். சின்னப் பட்டிக்காடு. எங்க இருந்த காடுகரைகளைக் கொஞ்ச வருசம் என்னோட தாத்தா பாட்டி பாத்துக்கிட்டிருந்தாக. அப்ப ஒரு வருசம் அந்தூருத் திருவிழா. எங்கக் குடும்பமே போயிருந்தோம். அப்ப திண்ணைல உக்காந்திருந்தப்பா வந்தாரு ஒரு கிளி சோசியரு. என்னவோ என்னையப் பிடிச்சு இழுத்து உக்கார வெச்சிட்டாக. அவரு என்ன சொன்னாரு நெனவில்லை. ஆனா என்னோட வலது தோள்பட்டைல மச்சமிருக்கனும்னு சொன்னாரு. என்னை வளத்தது எங்க அத்தை. அவங்க இல்லைன்னு சாதிக்காங்க. சொசியக்காரரும் சாதிக்காரு. சிட்டைல எழுதீருக்குன்னு காட்டுறாரு. சட்டையக் கழத்துன்னு பாத்தா உண்மையிலேயே மச்சம். சோசியத்த நான் நம்ப மாட்டேன். ஆனா இந்த நிகழ்ச்சி அப்படியே மனசுல பதிஞ்சிருச்சு.

4. இசை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதுலயும் தமிழ்ப் பாட்டுக ரொம்ப பிடிக்கும். எனக்குப் பிடிச்ச பாடகி இசையரசி பி.சுசீலான்னு எல்லாருக்கும் தெரியும். அதான் வலைப்பூவே இருக்கே. அது மாதிரி பிடிச்ச இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். அவருக்கும் ஒரு வலைப்பூ தொடங்கனும். மொதல்ல இசையரசி வலைப்பூவை நிலைநிறுத்திக்கிருவோம். இசைஞானியும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். இசைப்புயலும்தான். ஒருமுறை படிக்கையில் சென்னை வந்திருந்தேன். விடுமுறைக்காலம். ஏதோ ஒரு படம்....ஹா...ராஜபார்ட் ரங்கதுரை. அந்தப் படம் வீட்டுல எல்லாரும் பாத்துக்கிட்டிருந்தோம். அதுல ஒரு பாட்டு. மதனமாளிகைன்னு தொடங்கும். அதுல பாருங்க. நாயகரு மேடையில பாடுவாரு. அதக் கேட்டுக் கதாநாயகி அப்படியே கனவுல போயிரனும். டி.எம்.எஸ் மொதல்ல மதன மாளிகையில் மந்திரமாலைகளால்...அப்படீன்னு நாடக பாணியில் இழுவையாப் பாடுவாரு....ஒடனே..அன்பே அன்பே அன்பேன்னு நாயகி கற்பனைக்குப் போயிருவாங்க. அது இசையரசி குரல்ல. அந்தப் பாட்டு என்னவோ ரொம்பப் பிடிச்சுப் போச்சு. மெல்லிசை மன்னரைப் பாத்தாத்தான் ஆச்சுன்னு அடம் பிடிச்சு...டைரக்டரியில அவரு நம்பரத் தேடிப் பிடிச்சு...வீட்டுல இருந்த பொடிசுகளாப் போய் சாந்தோம்ல இருக்குற அவரு வீட்டுல பாத்துட்டு வந்தோம். அப்ப ஏது கேமரா கீமரால்லாம். அவர் கிட்ட என்ன கேக்குறதுன்னு கூடத் தெரியலை. பாக்கனும்னு வந்தோம்னு சொல்லீட்டு...ரெண்டு வார்த்த பேசீட்டு வந்துட்டோம். ம்ம்ம்...இப்பன்னா கூட ரெண்டு கேள்வி கேட்டிருப்பேன்.

5. மொதமொதல் மெயில் ஐடி ஹாட்மெயில்தான். அதுதான் தொடர்ந்து பயன்படுத்திக்கிட்டிருந்தேன். திடீர்னு பாத்தா யாஹூவுக்கு மாறியிருந்தேன். அதுல ரெண்டு மூனு ஐடி வேற. நாளாக ஆக...ஹாட்மெயில் ஐடி காணாமப் போயிருச்சு. அக்கவுண்ட் தானா மூடிக்கிச்சு. அந்த ஐடி இப்ப இல்லவேயில்லை. திடீர்னு பாருங்க நண்பி ஒருத்தி..டேய்...ஒனக்கு இன்விடேஷன் அனுப்புறேன்னு சொன்னா...ஏய். ஒனக்குதான் ஏற்கனவே கல்யாணம் ஆயிருச்சே..திரும்பவும் எதுக்கு இன்விடேஷன்னு கேட்டேன். "டேய்"னு சாமியாடீட்டு..புதுசா ஜிமெயில்னு ஒன்னு வந்திருக்கு. ரொம்ப நல்லாயிருக்குன்னு சொன்னா. என்னடா கருமம்...ஏற்கனவே ஒன்னு இருக்கே...இன்னொரு ஐடியான்னு நெனச்சேன். சரி இருக்கட்டும்னு தொறந்து வெச்சா...இப்ப ஜிமெயில்தான். யாஹூ மறந்தே போச்சு.....ம்ம்ம்...இப்போதைக்கு ஜிமெயில். நாளைக்கு என்ன மெயிலோ!

6. புத்தகங்கள் நெறைய படிப்பேன். தமிழும் ஆங்கிலமும். வேற மொழிகள் எழுதப் படிக்கத் தெரியாதே. ஹாரி பாட்டர் கதை ரொம்பப் பிடிக்கும். அதே மாதிரி லார்டு ஆஃப் தி ரிங்ஸ். நாலஞ்சு வாட்டி புத்தகத்தப் படிச்சாச்சு. இன்னமும் ஒவ்வொரு வாட்டி படிக்கும் போதும்..ஒவ்வொன்னு புதுசாயிருக்குது. படத்தை ஏழெட்டு தடவைக்கு மேலப் பாத்தாச்சு. இன்னமும் ஆவல் தீரலை. காவியம்யா காவியம். அதுல பேசுறதுக்கு ஒரு புது மொழியையே உருவாக்கீருக்காருய்யா ஜே.ஆர்.ஆர்.டோல்கியன். என்ன எழுத்து! என்ன கற்பனை! அடடா!

7. சொரியாசிஸ் (psoriasis) அப்படீங்குற நோயைப் பத்திக் கேள்விப்பட்டிருக்கலாம். அந்த நோய் எனக்கு உண்டு.

8. விமானப் பயணம் எனக்கு மிகவும் பிடிக்கும். முதன்முதலில் நான் விமான நிலையத்திற்குள் நுழைந்தது பெங்களூரில்தான். வேலைக்கு வந்த பிறகு டெல்லிக்கு ஒரு பயிற்சிக்காக சென்ற பொழுதுதான் முதல் விமானப் பயணம். பிறகு பலமுறை விமானம் ஏறியாச்சு. ஆனாலும் ரொம்பவும் ரசிச்ச விமானப் பயணம் பிரசில்ஸ்ல இருந்து ரோம் போனதுதான். ஸ்விஸ் வழியா போச்சு. வேணுக்குமுன்னே வண்டிய ஆல்ப்ஸ் மலை மேல கூடி ஓட்டுனாங்க. ஜன்னல் வழியா பாக்கனுமே...அடடடா! அட்டடடடா! ஸ்விஸ் போகனுமப்போய். அனேகமா ஆகஸ்ட் மாசம். முருகன் சொன்னாப் போகலாம். எல்லாம் அவன் விருப்பம். அதே மாதிரி கிரீஸ், இத்தாலி, எகிப்து, ஆஸ்த்திரியா, பின்லாந்து, நார்வே...அட பல ஊருக இருக்குங்க. அங்கெல்லாம் போகனும்.

எட்டு போட்டாச்சுங்க. அடுத்து எட்டு பேரைக் கூப்புடுனமாமே.

1. சிவிஆர்
2. பக்காத்தமிழன் கோப்ஸ்
3. மை ஃபிரண்டு
4. யோகன் ஐயா
5. ஜோசப் சார்
6. குமரன்
7. காபி
8. மலேசிய மாரியாத்தா


அன்புடன்,
கோ.இராகவன்

Tuesday, June 19, 2007

எம்.ஆர்.ராதா பாடிய தேவாரம்

எம்.ஆர்.ராதா எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவர். அருமையான குணச்சித்திர நடிகர். நகைச்சுவை..எதிர்மறை...அட...என்ன படங்க அது...பார் மகளே பார்...அதுல நட்டுவாங்கனாரா வருவாரே....சூப்பருங்க அது.

அவரு வயசானப்புறம் முருகன் படத்துல நடிச்சாலும் அருமையான நடிப்பு. அப்ப வந்த ஒரு படந்தான் பஞ்சபூதம். அஞ்சு வில்லன்கள்ள அவரும் ஒருத்தர்.

அந்தப் படத்துல இவரு பாடுற தேவராந்தான் சூப்பர் காமெடி. இந்தப் படத்துக்கு இசை சங்கர் கணேஷ்னாலும்...எம்.ஆர்.ராதா எம்.ஆர்.ராதாதான்...பரமேஷ்வரா...பரமேஷ்வரா.... :)

நீங்களும் கேட்டு ரசிங்க. சிரிங்க. :-)))))



அன்புடன்,
கோ.இராகவன்

Monday, June 18, 2007

பார்த்த ஞாபகம் இல்லையோ - பாகம் 8

முன்கதைச் சுருக்கம்

ரோட்டோரத்தில் வரும் போகும் பேருந்துகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் பொன்னுச்சாமி. பத்து வருடங்களுக்கு முன்னர் ஓடிப்போன மகளைப் பற்றி ஒரு செய்தி. அதான் வந்திருக்கிறார். காவேரி அவர் மகள். பள்ளிக்கூடத்தில் உடன் படித்தவன் வினோத். நல்ல பையன். ஒரு நாள் காதல் என்று உளற...நட்பு மறைகிறது. பட்டினம் போகிறாள் காவேரி. பொறியியல் படிக்க. அங்கு நண்பர்களாகிறார்கள் உமாவும் வசந்தும். வசந்தின் மீது ஒரு வித நட்பு கலந்த காதலில் இருக்கிறாள் காவேரி. உமா யாரையோ காதலிப்பதாகவும் அறிமுகப் படுத்த விரும்புவதாகம் உமாவை அழைத்துச் செல்கிறாள். அது பழைய வினோத். அப்பொழுது பூக்கொத்தோடு காவேரியிடம் தன்னுடைய காதலைச் சொல்கிறான் வசந்த்.

இப்பொழுது பேருந்து நிலையத்தில் விட்டுவிட்டு வந்த பொன்னுச்சாமியைப் பார்ப்போமா?

சிந்தாநதி'யின் ஞாபகம் -1

வெட்டிப்பயல்'ன் ஞாபகம் -2

CVR'ன் ஞாபகம் 3

ஜி'யின் ஞாபகம் - 4

இம்சை அரசியின் ஞாபகம் - 5

வைகை ராமின் ஞாபகம் - 6

தேவின் ஞாபகம் - 7

பார்த்த ஞாபகம் இல்லையோ - பாகம் 8

"ஐயா பெரியவரே! ஏதாச்சும் ஜோடா குடிக்கிறீகளா? ரொம்ப நேரமா காத்திருக்காப்புல இருக்கு. வேண்டப்பட்டவக யாரும் வர்ராங்களா?"

பொன்னுச்சாமி நிமிர்ந்து பார்த்தார். "இல்லப்பா" என்று வாயைத் திறந்து சொல்லாமல் தலையை மட்டும் ஆட்டி மறுத்தார்.

"சரிய்யா...வெயில்ல ஏன் கருவாடாக் காயுறீக? இங்க பெஞ்சுல வந்து உக்காருங்க."

இந்த முறை சோமு சொன்னதைப் பொன்னுச்சாமி கேட்டுக் கொண்டார். மெள்ளப் போய் பெஞ்சில் உக்கார்ந்தார். வெற்றிலைக் குதப்பலைக் கம்போரமாகத் துப்பி விட்டு, "தம்பி ஒரு ஜோடா குடு" என்று கேட்டார்.

தான் கேட்கும் போது மறுத்து விட்டு இப்பொழுது பெரியவர் கேட்கிறாரே என்று சோமு வியந்தாலும் பேசாமல் சோடாவை உடைத்துக் கொடுத்தான். முதலில் சோடாவால் வாயைக் கொப்புளித்து விட்டு...மிச்சத்தை மடமடவெனக் குடித்தார்.

"எம்புட்டு?" என்று ஒரு ரூவாய்க் காசை நீட்டினார். அதை வாங்கிக் கொண்டு "சரியாப் போச்சு" என்று சொல்லி பெட்டியில் போட்டுக் கொண்டான் சோமு.

"ரொம்ப தேரமா இருக்கீக. யாரு வர்ரது? சொந்தக்காரவுகளா?" கேட்கத் தொடங்கினால் நிப்பாட்ட மாட்டான் சோமு.

"ஆமாந்தம்பி. நம்ம மருமகப் பிள்ளை வர்ராரு. வெளிநாட்டுல இருந்து.வர்ராரு. அதான்." அவரது குரலில் மகிழ்ச்சியை விட எதிர்பார்ப்புதான் இருந்தது.

"அப்ப ஒங்க பொண்ணு வரலையா?"

ஒன்றும் பேசாமல் வெறும் முகத்தோடு சோமுவைப் பார்த்தார். திரும்பவும் சாலையைப் பார்த்து திரும்பிக் கொண்டார். அடுத்தடுத்து இரண்டு பேருந்துகள் வந்து போயின. பலர் இறங்கிப் போயினர். ஏறிப் போயினர். ஆனால் பொன்னுச்சாமி எதிர்பார்த்தவர் வரவில்லை. வந்தாலும் அவரால் கண்டுபிடிக்க முடியாதுதான். கடித உறைக்குள் இருந்த படத்தை மீண்டும் ஒருமுறை பார்த்தார். காவேரிதான்....குழந்தையாகக் குமரியாகப் பார்த்த மகளை பெண்ணாகப் பார்த்து பூரித்தார். கையில் குழந்தை. அடுத்து நிற்பதுதான் மாப்பிள்ளை. நல்ல வாட்டசாட்டம். ஆனா பார்த்த ஞாபகம் இல்லையே. திரும்பவும் சாலையைப் பார்த்தார்.

அவருடைய காத்திருப்பு வீணாகவில்லை. அவர் எதிர்பார்த்த மருமகன் பேருந்தில் வரவில்லை. காரில் வந்தான். அடையாளம் கண்டுபிடிக்கப் பெரியவர் சிரமப்படவில்லை. அவர் உட்கார்ந்திருந்த கடைக்குப் பக்கத்தில் ஒரு கட்சிக் கொடி. அந்தக் கொடிக்கம்பத்துக்குப் பக்கத்தில் வந்து நின்ற காரிலிருந்து இறங்கியவர்தான் படத்தில் இருந்தவர் என்று உடனே தெரிந்து கொண்டார்.

உடனே படக்கென்று எழுந்தார். லேசான தள்ளமாட்டம். வந்தவரை நோக்கி நடந்தார். ஒருவரையொருவர் எதிர்பார்த்தவர்கள்தானே. வந்தவர் பெரியவரின் காலைத் தொட்டுக் கும்பிட்டார். "மாமா. நாந்தான் வினோத். உங்க மருமகன். நல்லாயிருக்கீங்களா?"

என்னவோ தெரியவில்லை. பெரியவர் குழைந்து போயிருந்தார். வினோத்தை உற்று உற்றுப் பார்த்தார். குபுக்கென்று ஏதோ ஒன்று பொங்கிப் பெருகி கண்ணில் வழிந்தது. ஓ! அன்பு. காவேரி படிக்கப் போன பிறகு தனிமையிலேயே கழிந்தது. ஒட்டும் இல்லை. உறவும் இல்லை. காய்ச்சல் வந்து காய்ந்த பொழுதுகளில் கூட கக்கூசுக்குத் தனியாகப் போகும் அவல நிலை. அப்படியெல்லாம் பட்டவருக்குத் திடீரென்று உறவுகள் வருகின்றன.

"நல்லா இருக்கேய்யா! நீங்க சவுரியந்தான? காவேரியும் பிள்ளையும் வரலையா?"

பொன்னுச்சாமியின் கைகளைப் பற்றினான் வினோத். "வந்திருக்காங்க மாமா. அவங்க கிட்ட கூட்டீட்டுப் போகத்தான் இப்ப வந்திருக்கேன். வாங்க. கார்ல ஏறுங்க."

கடவுள் மட்டுமல்ல தயக்கம் எங்கேயிருக்கிறது என்று ஆராய்ச்சி செய்தால் கண்டுபிடிக்க முடியாது என்றுதான் தோன்றுகிறது. அந்தத் தயக்கம் பொன்னுச்சாமியை கொஞ்சம் தடுமாற வைத்தது. இருந்தாலும் கையைப் பிடித்து வினோத் அழைக்கும் பொழுது...அவரால் மறுக்க முடியவில்லை. மகளையும் பேத்தியையும் பார்க்கக் காரில் ஏறினார்.

தொடரும்....

=====================================================================

நண்பர்களே

இந்த தொடர்கதை மூலம் ஒரு புதிய முயற்சி.
இந்தக் கதை தொடர்கதையாக வலைப்பதிவு சங்கிலி வழியாக எடுத்துச் செல்லப் படும்.

இந்த தொடரின் அத்தியாயங்களை வெவ்வேறு பதிவர்கள் தொடர வேண்டும்.

இதே தலைப்பில் தொடர் எண் இட்டு எழுதப் பட வேண்டும்.

ஒவ்வொருவரும் கதையை எழுதி இந்த குறிப்பை இறுதியில் இட்டு அடுத்து தொடர இன்னொருவரை அழைக்க வேண்டும்.

இந்த வித்தியாசமான முயற்சிக்கு தோள் கொடுக்க வாருங்கள்.

அடுத்ததாக ஒன்பதாவது பகுதியை எழுத சிறில் அலெக்சை அழைக்கிறேன்.

அன்புடன்,
கோ.இராகவன்

Thursday, June 07, 2007

ஜெயலலிதாவை இன்னமுமா கைது செய்யலை?

சமீபத்துல எல்லாரும் இதத்தானய்யா பேசுறாங்க. அந்தம்மா தப்பு செஞ்சாங்கன்னு இவரு சொல்றாரு. தப்புன்னா தேர்தல்ல நிக்க முடியாமப் போறது மட்டுந்தான் தண்டனையா? சட்டத்தை ஏமாத்துனதுக்கு வழக்குப் போட மாட்டாங்களா? சிபிஐ விசாரணைதான் இப்ப வெக்குறாங்களே. அத வெச்சுட்டா போதுமாமே. சட்டம் தன் கடமையைச் செய்யுமே. அதுக்கப்புறம் யாரும் அதைப் பத்திப் பேச வேண்டாம். ஏன்னா சிபிஐ விசாரணை வெச்சா...என்ன நடக்குதுன்னு பொருத்திருந்துதான் பாக்கனும்.

ஜெயலலிதா கொடநாட்டுல மட்டுமா அரமனை வெச்சிருக்கப் போறாரு. உண்மையிலே தூண்டித் துருவுனா எல்லா ஊர்லயும் இருக்கும். ஆனாலும் இப்ப இருக்குற சூழ்நிலையில அவரைக் கைது செய்வாங்கன்னு நான் எதிர்பார்க்கலை. ஏன்னா...அதை வெச்சு எப்படி அனுதாப அலை உருவாக்கனும்னு ஜெயலலிதாவுக்குத் தெரியும்னு கருணாநிதிக்கும் தெரியும். அதுனால அந்த முடிவை எடுப்பாங்கன்னு நெனைக்கலை. எடுத்தாலும் தப்பில்லைங்குறதுதான் என்னோட கருத்து.

தேர்தல்ல நிக்க விடாமச் செய்றது ஒரு விதத்துல ஜெக்கு பயங்கர அடிதான். ஆனா அதுதான் அவருக்கு ஒரு விதத்துல வசதியும் கூட. ஏற்கனவே ஒரு நிழல் முதல்வர வெச்சி அவங்க அரசாட்சி செஞ்சாச்சு. எதுன்னாலும் பழியை அவர் மேல போட்டுட்டு இவங்க நிம்மதியா இருக்கலாம். இவங்கள என்னதான் செய்றது? என்ன தண்டனை குடுத்தாலும் அத அவங்களுக்கு வாகா வளைச்சுக்கிறாங்களே!

ஆனா இன்னொரு பிரச்சனை இருக்கு. ஏற்கனவே இந்தம்மாவுக்கு எப்ப எதச் சொல்லனும்னு தெரியாது. செய்யனும்னும் தெரியாது. தப்பித்தவறி இந்தக் கைது அவங்களுக்கு ஒரு அனுதாப அலைய உருவாக்கீச்சிருச்சுன்னு வெச்சுக்குங்க...அடுத்து அவங்கதான் முதல்வர். நம்ம மக்களைப் பத்தி நமக்கு நல்லாத் தெரியுமே. உடனே சும்மாயிருப்பாங்களா? ஏற்கனவே சபதம் செஞ்சிருக்காங்களே...ஒடனே பழிக்குப் பழி. அதை எப்படிப் பயன்படுத்திக்கனும்னு கருணாநிதிக்கும் தெரியும். இப்பிடி எல்லாமே சங்கிலித் தொடராவே போய்க்கிட்டிருக்குமோ!

அடப்போங்கப்பா....அரசியல்வாதிகளே இப்படித்தான். என்னவோ பொலம்பனும்னு தோணிச்சு. எங்க போய்ப் பொலம்புறது. உங்க கிட்டதான வந்து உரிமையோட பொலம்ப முடியும்!

Monday, May 21, 2007

பெரியார் - திரைப்படம்



பெரியார் பற்றிய தெரிதலும் புரிதலும் மிகக் குறைவுதான் எனக்கு. பள்ளிக்கூடத்தில் படித்ததுண்டு. அதற்குப் பிறகு பலர் சொல்லித் தெரிந்து கொண்டதுண்டு. வலைப்பூக்களிலும் கொஞ்சம் படித்ததுண்டு. அவ்வளவுதான். ஆகையால் பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல்தான் படம் பார்க்க உட்கார்ந்தேன். அந்த வகையில் படத்தைப் பற்றியும் அதில் சொல்லப்படும் பெரியார் பற்றியும் என்னுடைய கருத்துகளை இந்தப் பதிவில் சொல்ல விரும்புகிறேன்.

வரலாற்றை திரைப்படமாக எடுப்பது என்பது எளிதன்று. அந்த வகையில் இந்தப் படம் ஒரு நல்ல முயற்சி. திரைக்கதையில் சிற்சில இடங்களில் தொய்வுகள் இருந்தாலும்.....இந்தப் படம் ஒரு நல்ல முயற்சி என்பதில் ஐயமில்லை. பாடல்களை விட பின்னணியிசை நன்றாக அமைந்திருக்கிறது.

இந்தப் படத்தில் நடித்த அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். சத்யராஜைப் பொருத்த வரையில் இந்தப் படம் அவருக்கு ஒரு நல்ல வாய்ப்பு. பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். நல்ல நடிகர்தான். சமீப காலத்தில் நடிக்கும் குத்தாட்டப் படங்களால் எரிச்சல் உண்டாக்கியவர் இந்தப் படத்தில் பிராயச்சித்தம் தேடிக் கொள்கிறார். நடிகர் திலகம் நடிக்க விரும்பிய பாத்திரம் இவருக்கு. அந்த அளவுக்கு நடிப்பு இல்லையானாலும்...இரண்டாவது பாதியில் நல்ல நடிப்பைக் காட்டியிருக்கிறார்.

ஜோதிர்மயி.....இவ்வளவு நல்ல நடிகையா நீங்கள்? தெரியாமல் போய் விட்டதே. இப்படியெல்லாம் நடித்தால் தமிழில் வாய்ப்புக் கிடைப்பது மிகக் கடினம். உங்கள் நடிப்பைப் பாராட்டுகிறேன். குஷ்பூவைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. நல்ல நடிகை என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். இன்னும் பாராட்டப்பட வேண்டியவர்கள் பெரியாரின் தாயாக வரும் மனோரமாவும் அவரது கணவனாக நடித்த அந்தத் தெலுங்கு நடிகரும். நாராயணா நாராயணா என்று சொல்லிக் கொண்டே தெலுங்கு கலந்த தமிழில் புலம்பும் மனோரமாவின் நடிப்பு சிறப்பு. மகனை நினைத்துப் புலம்பும் கட்டங்களில் காட்டப்பட வேண்டிய எரிச்சலை மிக அழகாகக் காட்டியிருக்கிறார். அந்தத் தெலுங்கு நடிகர்....பெரியாரின் தந்தையாக நடித்தவர்....பெயர் என்னங்க? நல்லா நடிச்சிருக்கீங்க. தெலுங்கு கலந்த தமிழ் பேச மனோரமா பட்ட சிரமம் இவருக்கு இல்லை.

ராஜாஜி, காந்தி, கருணாநிதி, எம்.ஜி.ஆர், வீரமணி என்று எல்லாரும் வருகிறார்கள். ஆனால் அளவான பாத்திரங்கள். அந்த அளவோடு அவர்கள் நடித்துள்ளார்கள். சரி. ஒவ்வொருவராகச் சொல்லிக் கொண்டேயிருந்தால் அலுப்புத் தட்டும். படம் சொல்லும் கருத்துகளுக்கு வருவோம். இந்தப் படத்தில் சொல்லப்படுவது உண்மையான நிகழ்ச்சிகள் என்று நம்பிக்கொண்டே தொடர்கிறேன்.

ஆரம்பகட்டத்தில் பெரியார் தீராத விளையாட்டுப்பிள்ளையாகத்தான் இருந்திருக்கிறார். ஆனாலும் குழந்தைத் திருமண எதிர்ப்பு, கைம்பெண் மறுமணம் என்றும் சிந்தித்திருக்கிறார். பாராட்டப்பட வேண்டியது. தாசி வீட்டுக்குப் போனவர் என்பதால் அவர் எதிர்த்த குழந்தைத் திருமணங்கள் ஆதரிக்கபடலாகாது. அந்த எதிர்ப்பு சரியானதே. ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதே. கைம்பெண் மறுமணமும் ஆதரிக்கப்பட வேண்டியதே.

படத்திற்கு வருவோம். பெரியார் பிறந்தது ஒரு முற்படுத்தப்பட்ட வகுப்பில். அந்த வகுப்பிற்காக ஏதாவது போராட்டம் நடத்தி சாதித் தலைவராகவும் அரசியல் தலைவராகவும் ஆகியிருக்கலாம். ஆனால் ஆகவில்லை. சாதீய வேறுபாடுகளைக் களைவதுதான் அவருக்குக் குறிக்கோளாக இருந்திருக்கிறது. இன்றைக்கும் சாதி பார்ப்பது இருக்கிறது. ஆனால் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விடக் குறைவாகத்தான் இருக்கிறது. இது இன்னும் குறையும் என்று நம்புவோம். குறைய வேண்டும் என்று விரும்புவோம்.

வளர்ந்து திருமணம் செய்த மகனாக இருக்கையில் அப்பாவிடம் செருப்பால் அடி வாங்கியிருக்கிறார். அதுவும் மிகச்சரியான காரியத்தைச் செய்ததற்கு. அப்பொழுதுதான் காசிக்குப் போகிறார். அங்கே பிராமணர்களுக்குச் சோறு போட்டால்தான் புண்ணியம் என்று சொல்கிறார்கள். பசித்த எவருக்கு அன்னமிட்டாலும் அது புண்ணியம். வள்ளுவரே சொல்லியிருக்கிறார். வறியார்க்கொன்று ஈவதே ஈகை. எச்சில் சோற்றைச் சாப்பிடும் நிலை. அடக்கொடுமையே.

காசியை விட்டு வந்த பிறகுதான் காங்கிரசில் சேருகிறார். ஆனாலும் அவரது குறிக்கோள் சமூக சீர்திருத்தம் என்பதாகவே இருந்திருக்கிறது. அது நடக்காது என்று தெரிந்து கொண்ட நிலையில்தான் காங்கிரசை விட்டு விலகியிருக்கிறார்.

வைக்கம். மிகவும் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய போராட்டம். ஈழவர் என்றால் இத்தனை தூரமும்...ஒவ்வொரு சாதிக்காரரும் ஒவ்வொரு தூரம் ஒதுங்கியிருக்க வேண்டும் என்று நம்பூதிரிகள் சொல்லியிருப்பது மிகக்கொடுமை. அப்பொழுது ஒரு சிறுவன்...அந்த நாய் எவ்வளவு தூரம் ஒதுங்கியிருக்க வேண்டும் என்று கேட்பது கிண்டல். ஆனால் வேதனை தரக்கூடிய கேள்வி. நல்லவேளையாக இன்றைக்கு அந்த நிலை மாறியிருக்கிறது. பெரியாருக்கு நன்றி.

ஊருக்கு உபதேசம் வீட்டுக்குள் பலவேசம் என்று வாழவில்லை அவர். போராட்டங்களுக்கு வீட்டுப் பெண்களையே முன்னிறுத்தியிருக்கிறார். கள்ளுக்கடை மறியல் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. அவரது மனைவியும் தங்கையும்தான் முன்னின்று போராடியிருக்கிறார்கள்.

இந்தப் படத்திலும் பெரியாரின் வாழ்க்கையிலும் நான் விரும்பி ரசித்த கட்டம் பெரியார்-மணியம்மை திருமணம். அது உடல் தேவையோ...மனத்தேவையோ....இரண்டு உள்ளங்கள் ஒப்பிச் செய்த பிணைவு. அதில் குறுக்கிட எந்த அரசியல்வாதிக்கும்.....அட...எந்த மனிதனுக்கும் உரிமையில்லை. பொருட்டாக மதிக்கவும் தேவையில்லை. "ஐம்பதிலும் ஆசை வரும்" என்று டி.எம்.எஸ் பாடலை எல்லாரும் ரசித்துதானே கேட்டோம். ஐம்பது வயதானவர்கள் எல்லாரும் விரதம் வைத்துக் கொண்டிருக்கிறார்களா என்ன? என்னைப் பொருத்த வரையில் பெரியார்-மணியம்மை திருமணம் என்பது மிகவும் ஏற்றுக்கொள்ளத்தக்கது. பெரியார்...இது தொடர்பாக உங்களையும் மணியம்மையையும் நான் புரிந்து கொள்கிறேன்.

அதே போல இன்னொரு கட்டம். ஒரு மாநாடு நடக்கிறது. அதில் சமைக்க ஆதிதிராவிடர்கள் என்று அழைக்கப்படுகின்றவர்களை அழைத்துச் சமைக்க வைக்கிறார். அதுவரையில் பிராமணர்கள் மட்டுமே சமைத்துக் கொண்டிருந்த நிலை மாறுகிறது. நான் என்னுடைய நினைவு செல்லும் வழியில் சென்று யோசித்துப் பார்க்கிறேன்.

என்னுடைய தாத்தா-பாட்டி திருமணத்தில் கண்டிப்பாக எங்கள் சாதியிலிருந்துதான் சமையல்காரர்கள் வந்திருப்பார்கள். வெளியிலிருந்து கூப்பிட்டிருப்பார்கள் என்று நினைக்கவில்லை. அதே நேரத்தில் பிராமணர்களும் வந்து சமைத்திருப்பார்கள் என்று நம்பவில்லை. ஆனால் என்னுடைய பெற்றோரின் திருமணத்தில் இந்த நிலையில் ஒரு மாற்றம். சாதி பார்த்து சமையல்காரர்கள் அழைக்கப்படவில்லை. என்னுடைய சகோதரிகளின் திருமணத்திலும் அப்படியே. சமைக்கத் தெரியுமா...நல்ல பண்டங்கள் செய்வார்களா என்றுதான் பார்த்தோம். சாதி..கீதியெல்லாம் பார்க்கவில்லை. உடனே எல்லாரும் கேட்பார்கள். சமையலுக்குச் சாதி பார்க்கவில்லை..மாப்பிள்ளைக்கு எப்படி என்று...உண்மைதான். நல்ல கேள்வி. கண்டிப்பாகப் பார்க்கப் பட்டது. அதே நேரத்தில் சென்ற தலைமுறையிலும் இந்தத் தலைமுறையிலும் மாநிலம் தாண்டிய காதற் திருமணங்கள் எங்கள் குடும்பத்தில் நடந்திருக்கிறது. இது குறித்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இட்ட தீபாவளிப் பதிவிலேயே சொல்லியிருக்கிறேன். ஆனால் இது அதற்கு முந்தைய தலைமுறைகளில் நடந்திருக்க வாய்ப்பில்லை. ஆக..ஒரு முன்னேற்றம் இருக்கிறது. ஆனால் இன்னும் போக வேண்டும். அந்த வகையில் மாற்றம் வரவேற்கத்தக்கதே.

பொதுவில் சாதீய வேறுபாடுகள் களையப்பட வேண்டும் என்பதில் ஐயமில்லை. அந்த வகையில் பெரியாரின் கருத்துகளை நான் ஆதரிக்கிறேன்.

"உடலுறவு சந்தோசத்துக்க்காக இந்தக் கல்யாணத்தைப் பண்ணிக்கலைங்க. அதுதான் நோக்கம்னா அதுக்குக் கல்யாணமே அவசியமில்லைங்க. அது நம்ம இயக்கத்துல இருக்குற மைனர்களுக்கு ஏன் புரியலைன்னு எனக்குத் தெரியலைங்க. மணியம்மை ஒன்னும் சின்னக் கொழந்தை இல்லங்க. அவங்களுக்கு முப்பது வயசாகுது. அவங்க சம்மதத்தோடத்தான் இந்தக் கல்யாணம் நடந்துருக்குது. நம்ம இயக்கத்துல எனக்கு நம்பிக்கையானவங்க ஒருத்தருமில்லைன்னு சொன்னா அது ஒங்களுக்கெல்லாம் உறுத்தலா இருக்குதுங்க." - மணியம்மையோடு திருமணம் முடித்து விட்டு பெரியார் சொன்னது. ஆகையால் இனிமேல் பெரியாரை அவர் எழுத்துகளைப் படித்து மட்டுமே புரிந்து கொள்ள விரும்புகிறேன். ஏனென்றால் அவர் சொன்ன இந்தக் கருத்தைக் கூட அவர் பெயரைச் சொல்கின்றவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றே நினைக்கின்றேன். பெரியார் மட்டுமல்ல பல பெரியவர்களுக்கு இந்த நிலைதான்.

எல்லாரையும் கேட்டுக் கொள்வது என்னவென்றால்...பெரியாரின் எழுத்தைப் படியுங்கள். வெறும் கடவுள் எதிர்ப்புக்குள் மூழ்கி விடாதீர்கள். அவர் சொன்னதை அப்படியே ஏற்றுக்கொள்ளாதீர்கள். அதைச் சிந்தித்துப் பார்த்து ஏற்றுக்கொள்ளுங்கள். அதைத்தான் அவரும் விரும்புகிறார். கும்பிடாவிட்டால் நரகம்....சொன்ன பேச்சைக் கேட்காவிட்டால் கொடும் தண்டனை என்பதை எதிர்க்க்கின்றவர் அவர்.

அன்புடன்,
கோ.இராகவன்

Thursday, May 17, 2007

தெலுங்குல கற்றாரைக் கற்றாரே

கற்றாரைக் கற்றாரே காமுறுவர்னு கேள்விப்பட்டிருப்பீங்க. உண்மையான கலைஞர்கள் அப்படித்தான் இருப்பாங்க. அவரு சவுண்டு இஞ்சினியரு...இவரு சுக்குநீருன்னு எல்லாம் சொல்ல மாட்டாங்க.

இதுல பாருங்க...நம்ம தமிழ் இசையமைப்பாளருங்க ரெண்டு பேரு...தெலுங்குல காமுறுறாங்க. அட...இங்க போய்ப் பாருங்க. இது பத்தி ஒங்க கருத்து என்னன்னு எழுதுங்க.




இதுல மெல்லிசை மன்னரும்..இசைஞானியும் தமிழத்தான் தெலுங்கு மாதிரி பேசுறாங்க. இருந்தாலும் அது புரியாதவங்களுக்காக...கீழ கொடுத்திருக்கிறேன்.

மெல்லிசை மன்னர் : நான் இளையராஜாவின் விசிறி. அவரு நல்லா இசையமைக்கிறாரு. யாராவது நல்லா இசையமைச்சா...அவங்களுக்கு ஃபோன் போட்டு நல்லாயிருந்ததுன்னு சொல்றது என்னோட வழக்கம்.
(இளையராஜாவின் பேட்டியில...மெல்லிசை மன்னர்...அன்னக்கிளி பாட்டக் கேட்டுட்டு நேராவே ஸ்டூடியோவுக்குப் போய் பாராட்டுனதா சொன்னாரு. அது இப்ப நெனைவுக்கு வருது)

இசைஞானி : மெல்லிசை மன்னர் கிட்ட நெறைய ந்ல்லது இருக்கு. அவரப் பாத்து வளந்தவங்க நாங்க...ஒரு எடுத்துக்காட்டு சொல்றேன்...இசையமைப்பாரு...மெட்டுப் போடுவாரு..இல்லைன்னா கவிஞர் பாட்டெழுதுனா அதுக்கு மெட்டுப் போடுவாரு. மொதல்ல டைரக்டர்...அப்புறம் புரொடுயூசர்...அப்படியே..ஆபீஸ் பாய் வந்தா..ஆபீஸ்பாயண்ணான்னு கூப்புட்டு அவர் கிட்டயும் பாட்டைப் போடுவாரு. அவங்களுக்கெல்லாம் பிடிச்சிருந்தாதான் அந்தப் பாட்டு ஓகேயாகும். இல்லைன்னா வேற பாட்டு போடுவாரு. இத இங்க கண்டிப்பாச் சொல்லனும்...இல்லைன்னா..இது யாருக்கும் தெரியாமப் போயிரும். அதான் இங்க சொல்றேன். ஆனா இந்த மாதிரி நல்ல பழக்கத்தை அவர் கிட்ட இருந்து நான் படிக்கலை. நான் மெட்டுப் போட்டா கவிஞருக்கு மட்டுந்தான். அப்புறம் ரெக்கார்டிங் எல்லாம் முடிஞ்சப்புறந்தான் மத்தவங்களுக்கு.

மெல்லிசை மன்னர்: அவருக்கு டவுட்டு இல்லை. அதுனால அப்படி. ஆனா இங்க அப்படி இல்லையே. டவுட்டு இருக்கு. எல்லார் கிட்டயும் கேக்க வேண்டியிருக்கு.

அனைவரும் சிரிக்கின்றார்கள்.


அன்புடன்,
கோ.இராகவன்

Monday, May 14, 2007

இதப் பாத்தா கேட்டா என்ன தோணுது?

இந்தச் சுட்டிக்குப் போங்க. அங்க ஒரு வீடியோ இருக்கும். அதப் பாருங்க. ஒரு மலையாளப் பாட்டு. பாத்துட்டு....தமிழ்ல்ல அது என்ன படம் என்ன பாட்டுன்னு கண்டுபிடிச்சுச் சொல்லுங்க பாக்கலாம். இது பத்தி நெறைய தகவல் கொடுத்தா ரொம்ப நல்லாயிருக்கும். இந்தப் பாட்டு ஒரு தற்செயல் கண்டுபிடிப்பு.

அன்புடன்,
கோ.இராகவன்

Monday, May 07, 2007

குற்றப்பத்திரிக்கை - விமர்சனம்

இந்தப் படத்தை எல்லாரும் கேள்விப்பட்டிருப்பீங்கதானே? 1994லயோ என்னவோ எடுத்த படம். கிட்டத்தட்ட பன்னிரண்டு வருட இருட்டறை வாசத்திற்குப் பிறகு வெள்ளித்திரையைத் தொட்டு அதே வேகத்தில் மீண்டும் உறக்கத்திற்குச் சென்ற படம். இத்தனை வருடமாக ஒரு படத்தை ஏன் விடாமல் தடுத்திருக்க வேண்டும்? இப்பொழுது ஏன் திடீரென்று விட்டிருக்க வேண்டும்? இந்த இரண்டு கேள்விகளும் உந்தத்தான் இந்தப் படத்தை நானும் பார்த்தேன்.

இரண்டு அசிஸ்டெண்ட் கமிஷனர்கள். ராம்கி மற்றும் ரகு. அவர்களைச் சுற்றித்தான் கதை. ராம்கிக்கு ரம்யா கிருஷ்ணன். ரகுவிற்கு ரோஜா. இவர்கள் வாழ்க்கையில் ராஜீவ்காந்தியின் கொலை எப்படி வருகிறது என்பதுதான் கதை. அதான் இரண்டு கதாநாயகர்களுமே அசிஸ்டெண்ட் கமிஷனர்கள் என்று சொல்லி விட்டோமே. பிறகென்ன? அவர்களே ஓடித் தேடிக் குற்றவாளிகளைப் பிடித்துவிட மாட்டார்களா? நடுநடுவில் நம்பியார் வந்து "சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க உங்க உதவி வேணும்"னு வழக்கமா விஜயகாந்த் கிட்ட கேட்டத இதுல இவங்க ரெண்டு பேர் கிட்டயும் கேக்குறாரு.

சினிமாவுல வில்லன் மன்சூர் அலிகான். அவரோட பேரு சிவா. அவரு படக்குன்னு ஒரு கண்ண அடிக்கடி மாட்டுறாரு. முடியுமா என்ன? அட. அவரு ஒற்றைக்கண் சிவராசன்னு சொல்றாங்களாம். அவரோட தலைமைல ஒரு பெரிய கூட்டம் இந்தியாவுக்கு வருது. எங்க இருந்துன்னு சொல்ல மாட்டாங்களாம். ஆனா வர்ரவங்க பேசுறத வெச்சு நம்ம கண்டுபிடிச்சிரலாமாம். நல்ல நாள்ளயே மன்சூரலிகானுக்குத் தமிழ் தகராறு. இதுல! அந்தக் கூட்டத்துல ராஜேஷும் ஒருத்தரு. பெண்களும் இருக்காங்க. எல்லாருடைய முகச்சாடை உடலமைப்பு எல்லாம் ராஜீவ்காந்தி கொலைக்குற்றவாளிகள் என்று கருதப்படுகிறவர்களை ஒத்தே இருக்கின்றன.

சரி. கதைக்கு வருவோம். இவங்கள்ள ஒருசிலர் வேன் எடுத்துட்டுப் போய் ஒரு அப்பார்ட்மெண்ட்டுல தங்கியிருந்த ஒரு சிலரைக் கொலை செஞ்சிர்ராங்க. அதுல ஒருத்தர் பத்மனாபா மாதிரி எனக்குத் தெரிஞ்சதுக்குக் கண்ணாடியைத் தொடைக்காதது கூடக் காரணமாய் இருந்திருக்கலாம். அப்படியே தப்பிச்சுப் போயிர்ராங்களாம். அதுக்கு உள்ளூர் அரசியல்வாதி ஒருத்தர் உதவுறாரு. இவரு எந்தக் கட்சின்னு கடைசி வரைக்கும் சொல்லவே மாட்டேங்குறாங்க. அதுவுமில்லாம ஒருத்தர் மட்டும்தான் உதவி பண்றாரு கடைசி வரைக்கும். தேவையில்லாம இங்க வைகோவைப் பத்திப் பேச வேண்டாமே.

நம்பியார் குளோசப்ல வந்து, "ஆட்சியைக் கலைக்கப்போறாங்க. அதுனால சட்டம் ஒழுங்கை நீங்கதான் சரியாப் பராமரிக்கனும்"னு பொறுப்பை கதாநாயகர்கள் கைல ஒப்படைக்கிறாரு. ஆட்சியையும் கலைச்சிர்ராங்க. அட. திமுக ஆட்சியைத்தான் 1990ல கலைச்சாங்கள்ள. அப்பக் கொஞ்சம் கலவரம் நடக்குது. கதாநாயகர்கள் நல்லா சண்டை போட்டுத் தடுக்குறாங்க. அப்பத்தான் தேர்தல் வருது. அதே தேர்தல்தான். 1991.

நம்பியார் திரும்பவும் குளோசப்ல வந்து, "முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி அவர்கள் தமிழ்நாட்டிற்குச் சுற்றுப்பயணம் வர்ரதால பாதுகாப்பு ஏற்பாடு சிறப்பா இருக்கனும்"னு கேட்டுக்கிறாரு. ஸ்ரீபெரும்புதூர் பாதுகாப்பு ரகு கைக்கு வருது. ராஜீவ்காந்தி என்ற பெயரைப் பயன்படுத்துவார்கள் என்று நான் நினைக்கவில்லை. ஏதோ ஒரு பெயரைச் சொல்வார்கள் என்று நினைத்தேன். அதே நேரத்தில் எதிர்த்தரப்பின் மைய அடையாளத்தைப் பத்தி ஒன்றும் பேசாத நிலையில் இவரது பெயரைப் பயன்படுத்தியிருப்பது சற்று உறுத்தலாகத்தான் தெரிந்தது.

மன்சூரார் கூட்டணி ஒரு போட்டோகிராபரைப் பிடித்து அவர்களோடு படமெடுக்க அழைத்துச் செல்கிறது. தேர்தல் பிரச்சாரத்திற்கு ராஜீவ்காந்தி வருகிறார். இந்தி நடிகர் அனுபம்கெர் வெள்ளை ஜுப்பா பைஜாமாவில் ராஜீவ்காந்தியாக வருகிறார். போட்டோக்காரர் சுற்றிச்சுற்றிப் படமெடுக்கிறார். அப்பொழுது மன்சூராருடன் வந்த பெண் கையில் மாலையோடு அனுமதி கேட்கிறார். கூட்டம் நெருக்கித் தள்ளுகிறது. வேறு எந்தப் பெரிய தலைவர்களும் அங்கு இல்லை. அதற்குள் அந்தப் பெண் மாலையைப் போட்டு காலைத் தொடக் குனிகிறாள். குனிந்தவள் குண்டை இயக்கிவிடுகிறாள். முடிந்தது. அதற்குப் பிறகு இவர்கள் தப்பிக்க முயற்சிப்பதும்...அசிஸ்டெண்ட் கமிஷனர்கள் பிடிக்க முயல்வதும் கதை.

இதில் பிரச்சனை என்னவென்றால் மன்சூரார் கூட்டத்தார் எல்லாரும் கொடியவர்கள் (வழக்கமான தமிழ்சினிமா வில்லன்களைப் போல) என்ற மனநிலைக்குப் படம் பார்க்கிறவர்களைக் கொண்டு வந்து விடுகிறார்கள். அவர்களது நடையும். அதற்கான பின்னணி இசையும். இளையராஜாவாமே! அதுவுமில்லாமல் மன்சூராரின் கூட்டணித்தற்கொலைக்குப் பிறகும் சிலர் தப்பித்து....அசிஸ்டெண்ட் கமிஷனர்களின் மனைவியரைத் துன்புறுத்துகிறார்கள். பிறகு அசிஸ்டெண்ட் கமிஷனர்களால் சுடுபட்டுச் செத்துப் போகிறார்கள். அடப்பாவிகளா! உண்மையையும் கற்பனையையும் கலக்கும் போது எத எங்க கலக்கனும்னு தெரியாது? சரக்கு மட்டும் நல்லா கலக்கத் தெரியும் போல இருக்கு. இதில் சிவராசன் தற்கொலை காட்சியை அளவுக்கு மீறி வளர்த்து......சிவபூஜை செய்து விட்டு அவர்கள் அனைவரும் தற்கொலை செய்து கொள்கிறார்கள். வெளியில் அந்த வீட்டிற்குள் நுழைய அசிஸ்டண்ட் கமிஷனர் பயங்கரமாக சண்டை போடுகிறார். நன்றாகச் சண்டை போட்டு....எல்லாரும் இறந்ததும் வீட்டிற்குள் நுழைகிறார்.

அத்தோட முடிஞ்சதா? படம் முடியும் போது ரெண்டு கமிஷனர் குடும்பமும் குழந்தையோடு கடற்கரையில் இருக்கும் பொழுது தப்பித்தவர்களில் இன்னும் ஒருவன் துப்பாக்கியோடு எழுந்து நிற்கிறான். அவன் வானத்தைப் பார்த்துச் சுட்டதும் திரையில் "No More Violence" என்று ரத்தச்சிவப்பில் வருகிறது. படம் பார்த்த நம் வாயில் வராததுதான் மிச்சம்.

படத்தில் இன்னொரு காட்சி. ராஜீவ்காந்தி மரணத்துக்குப் பிறகு திமுக கொடிக்கம்பத்தை வெட்டப்போகின்றார்கள். சந்திரசேகர் தடுக்கிறார். அவரையும் வெட்டப் போகிறார்கள். அப்பொழுதும் அசிஸ்டெண்ட் கமிஷனர் வந்து காப்பாற்றுகிறார். அப்போது சந்திரசேகர் சிறிது உணர்ச்சிபூர்வமாக கட்சிக் கொடியைப் பற்றிப் பேசுகிறார். திமுக பிரச்சாரம் என்ற உணர்வு அந்நேரம் வராமல் இல்லை.

இன்னொரு காட்சி. எல்லார் மனதிலும் இன்றைக்கும் எழும்பிக் கொண்டிருக்கும் பதிலில்லாத கேள்வி. காங்கிரஸ்காரர் என்று மார்தட்டுகிறவர் அனைவருக்கும் இன்றும் கேட்கப்படும் கேள்வி. இப்படி ஒரு காட்சியில் வருகிறது. ரகுவை சஸ்பென்ஷன் செய்து விடுகிறார்கள். அவர் பொறுப்பில்தானே ராஜீவ்காந்தி பாதுகாப்பு இருந்தது. சஸ்பென்ஷனுக்கு நியாயம் கேட்க கமிஷனரைப் பார்க்க ராம்கியோடு போகிறார். அங்கு ஒரு (காங்கிரஸ்) தலைவர் வந்து கமிஷனரிடம் அவரது கட்சிக்காரர்களையும் சேர்த்துக் கைது செய்திருப்பதைப் பற்றி பேச வருகிறார். அவர் துன்பியல் சம்பவம் நடந்த இடத்தில் போலீஸ்காரர்கள் ஓடி ஒளிந்தார்கள் என்றும் பேசிவிடுகிறார். உடனே ரகு வெகுண்டெழுந்து சொல்கிறார். "அவரு கூடச் சேந்து செத்தது யார் சார்? பொதுமக்களும் போலீஸ்காரங்களுந்தான். ஒங்க கட்சிக்காரங்க யாராவது ஒருத்தர் செத்தாங்களா? குண்டு வெடிக்கிற வரைக்கும் கூடவேயிருந்த நீங்க...குண்டு வெடிக்கிறப்போ எங்க சார் போனீங்க? அப்போ குண்டு வெடிக்கப் போகுதுன்னு தெரியுமா?"

மொத்தத்தில் இந்திய அரசியல்சட்டத்திற்கு முடிக்கப்பட்ட வழக்காக இருக்கும் ராஜீவ்காந்தி கொலையை வைத்து சின்னப்பிள்ளைத்தனமாய் ஒரு படம். இந்தப் படம் பார்த்த பிறகு வழக்கின் தீர்ப்பு நகலைக்கூடப் படித்துப் பார்த்தேன். பல ஐயங்கள் எழாமல் இல்லை. கூகிளாண்டவர் உதவியை நாடினால் பலப்பலச் சந்தேகங்கள். அவைகளை வெளிப்படையாக விளக்காமல் வழக்கு முடிந்து விட்டதோ என்று தோன்றுகிறது. இன்னமும் ஏதோ ஒரு அழுத்தத்தின் காரணமாகவே வழக்கு சற்று விரைவில் முடிக்கப்பட்டு விட்டதோ என்றும் கூடத் தோன்றுகிறது. முதலில் எல்லாருக்கும் தூக்கு என்றார்கள். கைது செய்யப்படும் பொழுது ஆதிரையின் வயது 17. பிறகு தீர்ப்புகள் மாறின. நடுவில் திமுகவின் பெயரும் திமுக தலைவர் கருணாநிதியின் பெயரும் ஜெயின் கமிஷனில் வந்து மத்திய அரசைப் பிரசாதமாக உருட்டி விழுங்கியது.

ஆனால் ஒன்று ராஜீவ்காந்தியின் மரணத்திற்குப் பிறகு இந்திய அரசியலில் ஒரு நல்ல மாற்றம் வந்திருப்பதாகவே நினைக்கிறேன். ஏனென்றால் முன்பெல்லாம் மத்திய ஆட்சி நினைத்தால் மாநிலத்தைக் கலைக்கும். உலைக்கும். குலைக்கும். இப்பொழுது மாநில ஆட்சிகள் எல்லாம் சேர்ந்து மத்தியில் ஆட்சி செய்வதால் அது குறைந்து போயிற்று. குறிப்பாக உத்திரப்பிரதேசதமே இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் என்ற கேடுகெட்ட நிலையையும் ஒரு வழியும் பின்னாளில் மாறிப்போனது. நேருவின் வாரிசு அரசியல் இன்னும் நேரடியாக பதவிக்கு வரமுடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறது. அடுத்த தலைமுறையோ ஸ்பெயினுக்கும் பதவிக்கும் நடுவில் அல்லாடிக் கொண்டிருக்கிறது. என்னவோ நடக்குது. நடக்கட்டும்.

மொத்தத்தில் குற்றப் பத்திரிக்கை குற்றமுள்ள பத்திரிக்கை.

அன்புடன்,
கோ.இராகவன்

Friday, April 20, 2007

அழகிய தமிழ்மகள் இவள்

கண்ணுக்கு மையழகுன்னு கவிஞர்கள் பாடியிருக்காங்க. அதே மாதிரி வலைப்பூக்கள்ள நண்பர்கள் எல்லாரும் அழகு பத்தி ஏற்கனவே பதிவு போட்டாச்சு. நம்மள குமரனும் அனுசுயாவும் (இங்க பேர மொதல்ல அநுசுயான்னு எழுதினேன். அவங்க கோவிச்சுக்கிட்டாங்க. அதுக்கப்புறம் மரியாதையா அனுசுயான்னுதான் கூப்பிடுறது.) கூப்பிட்டிருக்காங்க. பதிவு போட முடியாத அளவுக்கு நேரமின்மை. ஆனாலும் அழகைப் பத்திச் சொல்லக் கொஞ்ச நேரம் ஒதுக்கியாச்சு. அதான் இந்தப் பதிவு.

"அழகிய தமிழ்மகள் இவள்" அப்படீன்னு தலைப்பு வெச்சாச்சு. ஏன்? நம்முடைய தாய்மொழியாகிய தமிழ் அழகுன்னு சொல்லத்தான். அப்ப கன்னடம், மலையாளம், தெலுங்கு, வங்காளமெல்லாம்? அவைகளும் அழகுதான். எல்லா மொழியும் அழகுதான். பொதுவாவே மொழின்னாலே அழகுதான். அவங்கவங்களுக்கு அவங்கவங்க தாய்மொழி அழகு. அதான் அழகிய தமிழ்மகள்னு நான் தலைப்பு வெச்சேன்.

ஏன் மொழி அழகு? யோசிச்சுப் பாருங்க. ஒருத்தர் கிட்ட இனிப்புன்னு சொல்லனும். மொழியே இல்லை. வெறும் சைகைதான். சேட்டாயிருந்தா வாயில லட்டத் திணிக்கலாம். நம்மூரு ஆளுங்கன்னா அதிரசத்தத் திணிக்கலாம். சரியய்யா. இதோவது திங்கிறது. வலிக்குதுன்னு எப்படிச் சொல்றது? எதுக்க நிக்குறவர கட்டயக் கொண்டு சாத்த வேண்டியதுதான். இப்படி ஒவ்வொன்னுக்கும் நெனைச்சுப் பாருங்க. கண்ணுல மண்ணு விழுந்திருச்சு, கீழ விழுந்து இடுப்பு பிடிச்சிக்கிச்சு, வெந்நிய கொதிக்கக் கொதிக்கக் கால்ல ஊத்திக்கிட்டேன்...இதையெல்லாம் சொல்லனும்னா....சரி. அத விடுங்க. ரசங்கள் ஒம்போதையும் எப்படிக் காட்டுறது? புரிய வைக்கிறது? பத்மினி இருந்திருந்தாங்கன்னா "மலர்ந்திருக்கும் முகத்தில் நவரசத்தையும் செக்கச் சிவந்திருக்கும் இதழில் கனிரசத்தையும்" அபிநயத்துலயே காட்டீருப்பாங்க. ஆனா நம்ம எப்படி? அதுக்குத்தான் உண்டானது மொழி.

இப்ப....ஒருத்தர் வந்து ஒங்ககிட்ட "பால் பொங்கீருச்சு"ன்னு சொன்னதும் ஒங்களுக்குப் புரிஞ்சு போகும். ஒரு சட்டியில வெள்ளவெளேர்னு பால் காஞ்சி பொங்கி வழியிறதெல்லாம் ஒரு நொடிக்குள்ள ஒங்களுக்குப் புரிஞ்சு போகும். இத எங்க வெச்சு எத்தன மணிக்குச் சொன்னாலும் புரிஞ்சு போகும். எலுமிச்சை ரசம்னோ எலும்பு சூப்புன்னோ படிக்கும் போதே நெறையப் பேருக்கு எச்சி ஊறுதே! இப்படி எளிமையா தகவல்களைப் பரிமாறிக்கிறதுக்காக பிறந்த மொழிகள் வளர்ச்சியடைந்து இலக்கணங்களையெல்லாம் வகுத்துக்கொண்டு வளர்ந்த பின்னால அந்த இலக்கியங்கள்ள இந்தச் சுவையெல்லாம் எப்படியிருக்குன்னு படிச்சுப் பாத்தா மொழி ஏன் அழகுன்னு தெரியும்? ஏன் நம்ம அதத் தமிழ்க் கடவுளின் வடிவமாகவே வாழ்த்திப் போற்றுகிறோம்னு தெரியும். அந்த அருமையான தமிழ் மொழியில சில அழகான பகுதிகளை நாம பாப்போமா? மூனு பகுதிகதான். அறம் பொருள் இன்பம்னே பாப்போம். அறத்துல ஆன்மீகம். அனாவுக்கு ஆனா. பொருள்ள கொடுக்கல் வாங்கல். இன்பத்துல காதல். இந்த மூனையும் பாப்போம். மூனுக்குப் போகலாம் வாங்க.

மொதல்ல ஆன்மீகம். திருவள்ளுவரே இறைவணக்கத்தோடதான தொடங்கீருக்காரு. நம்ம மொதல்ல கச்சியப்பர எடுத்துக்குவோமா? அட...அழகென்ற சொல்லுக்கு முருகான்னு தமிழ் எப்பயோ ஒத்துக்கிட்டாச்சு. ஆகையால நாம அங்கயிருந்தே தொடங்குவோம். பரமசிவம் பரமசிவம்னு (ரெண்டு பேரு இல்லங்க) ஒருத்தர் இருந்தாரு. அவரு கடவுள். சரி. கும்புடு. அவரு சமாச்சாரம்..இல்லல்ல சம்சாரம் பார்வதி. சரி கும்புடு. அவருக்கு முருகன்னு ஒரு பையன். நிறுத்தேய். புருசன் பொண்டாட்டி ரெண்டு பேரு இருக்காங்கள்ள. அப்புறம் இவரு யாரு? அவங்க ரெண்டு பேரும் பாத்துக்க மாட்டாங்களா? பாத்துக்குவாங்க. ஆனாலும் இவரும் பாத்துக்குவாரு. எப்படி? நாளை எப்படிப் பிரிக்கலாம்? இரவு பகல். சரி. இந்த இரவையும் பகலையும் இணைக்குதே மாலை. அந்த மாலை மாதிரி முருகன்.

புரியலையா? மொதல்ல இரவு பகல் ரெண்டும் வெவ்வேறன்னு நெனைக்கிறதே தப்பு. நாள் ஒன்னுதான். அத நம்ம இரவாகவும் பகலாகவும் உணர்ரோம். சரியா? வெளிச்சமே இல்லாத இருட்டறையில இருக்குறவனுக்கும் நாள் ஒன்னுதான். ஆனா அவன் உணர மாட்டான். வெளியில இருக்குறவன் நாளை இரவாகவும் பகலாகவும் உணர்ரான். பகல்லா வெளிச்சம். இரவுன்னா இருட்டு. ஒவ்வொன்னுலயும் ஒவ்வொரு பிரச்சனை. ஆனா இரண்டையும் இணைக்குதே மாலை. அதுல? லேசான வெளிச்சமும் இருக்கும். ஆனா சுடாது. மெல்லிய இருட்டும் இருக்கும். ஆனா மருட்டாது. ஒரு மாதிரி சிலுசிலுன்னு இருக்கும்ல. அப்படித்தான் முருகன் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நடுவுல பகலையும் இரவையும் இணைக்கும் மாலையாக நம்மை இன்பத்தில் ஆழ்த்துகிறார். இதத்தான் கச்சியப்பர் கந்தபுராணத்துல இப்படிச் சொல்றாரு.

ஏலவார் குழல் இறைவிக்கும் எம்பிரான் தமக்கும்
பாலனாகிய குமரவேள் நடுவுறும் பான்மை
ஞாலமேவுறும் இரவொடு பகலுக்கும் நடுவாய்
மாலையாவதொன்று அழிவின்றி வைகுமாறு ஒக்கும்

அதுல பாருங்க...இரவும் பகலும் இருக்குற வரைக்கும் மாலை இருக்கும். அதத்தான் அழிவின்றி வைகுமாறு ஒக்கும்னு சொல்றாரு. நான் ரெண்டு பத்தி எழுதி விளக்குனத இவரு நாலே வரியில எவ்வளவு அழகாச் சொல்லீட்டாரு பாத்தீங்களா. இதுக்கு இன்னும் ரெண்டு பக்கத்துக்கு வெளக்கம் எழுதலாம்.

அடுத்தது பொருளுக்குப் போவோம். புறநானூற எடுத்துக்குவோமா? அதுல எனக்கு ரொம்பப் பிடிச்ச பாட்டு இதாங்க.

ஈயென இரத்தல் இழிந்தன்று அதனெதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று
கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று அதனெதிர்
கொள்ளேன் என்றல் அதனிலும் உயர்ந்தன்று


அடடா! என்ன அனுபவிச்சுச் சொல்லீருக்காங்க. ஒருத்தர் கிட்ட போய் இன்னது வேணும்னு கேக்கனும். அப்படிக் கேக்க எவ்வளவு வெக்கமா இருக்கும். என்ன செய்ய....வயித்துப்பாடாச்சே..கேட்டாச்சு. அப்ப அவரு குடுத்துட்டா நல்லது. இல்லைன்னு சொல்லீட்டா? அது இன்னமும் அசிங்கம். வெக்கத்த மானத்த விட்டுக் கேட்டதுக்கு நல்ல பலன். இன்னுஞ் சிலர் இருப்பாங்க. நம்ம படுற பாட்டப் பாத்ததுமே அவங்களே வந்து உதவுவாங்க. இந்தாடா வெச்சுக்கோன்னு அவங்க குடுத்தா அது எவ்வளவு நல்லாயிருக்கும். அப்படி அவங்க குடுக்கைல..."இருக்கட்டுண்டா...சாமாளிச்சுக்குவேன். இப்ப வேண்டாம். வேணுங்குறப்ப நானே கேட்டு வாங்கிக்கிறேன்" அப்படீன்னு மனவுறுதியோட சொல்ல முடிஞ்சா? அது இன்னமும் இனிமைதான? அதத்தாங்க இந்தப் புலவர் சொல்லீருக்காரு. இவரு பேரு மறந்து போச்சு. நினைவிருக்குறவங்க சொல்லுங்க. இன்னொரு வாட்டி படிச்சுப் பாருங்க. நாலு வரிக்குள்ள நானூறு பொருள் இருக்கும். அதுனாலயும் புறநானூறுன்னு பேரு வெச்சாங்களோ! கொடுக்கல் வாங்கலையும் எவ்வளவு அழகாச் சொல்ல முடியுது தமிழ்ல!

அறமும் பொருளும் முடிஞ்சது. அடுத்தது இன்பம். இந்த இன்பம் இருக்குதே. இது பலவகைப்படும். சில குடும்பங்களப் பாத்தீங்கன்னா சாப்பாட்டு வேளையில பூட்டு தொங்கும். ஆனா உள்ள ஆளிருக்கும். உள்ள இருந்தே பூட்டிக்கிட்டு பெருச்சாளி மாதிரி பொந்துக்குள்ள உக்காந்து திம்பாங்க. இன்னுஞ் சிலரு...தண்ணியப் போட்டாத்தான் நாளே தொடங்கும். இப்பிடி பலவகையான இன்பங்கள் இருக்கு. ஆனா எல்லாருக்கும் பொதுவான இன்பம் காதல். காதலிக்கலைன்னு யாராவது சொன்னா அது பொய். ஒருதலையாகவாவது எல்லாரும் காதலிச்சிருப்பாங்க. அதே மாதிரி இன்னும் சில பொய்கள் இருக்கு. நான் சரோஜாதேவி டைப் புத்தகங்கள் படிச்சதே இல்லப்பா...நீலப்படம் பாத்ததே இல்லப்பா....மக்களே...இப்பிடி யாரவது சொன்னா (குறிப்பா பசங்க) அவங்க கிட்ட இருந்து எதுக்கும் தள்ளியே இருங்க. சரி. நம்ம அழகுக்கு வருவோம். காதல்....ஆணைக் கேட்டா பெண்ணும்பான். பெண்ணைக் கேட்டா ஆணும்பான். இப்பல்லாம் மாத்தியும் சொல்றாங்க. எப்படியோ ஒருத்தருக்கு ஒருத்தர் பிடிச்சிருக்கு. அவ்வளவுதான் விஷயம்.

இந்தக் காதல் உணர்வோட காதலி பந்து விளையாடுறதப் பாத்தா? தக்கு தக்குன்னு மனசுக்குள்ள நூறு கவிதை பிறக்காதா? நம்ம ராசப்பரு மட்டும் என்ன விதிவிலக்கா? அதாங்க...திரிகூட ராசப்பக் கவிராயரு. சந்தத்த அள்ளிச் சூரை விடுறாரு. அப்படியே பிடிச்சுக்கோங்க.

பொங்கு கனங்குழை மண்டிய கெண்டை
புரண்டு புரண்டாட
குழல் மங்குலில் வண்டு கலைந்தது கண்டு
மதன் சிலை வண்டோட
இனி இங்கிது கண்டுல கென்படு மென்படு
மென்றிடை திண்டாட
மலர்ப் பங்கய மங்கை வசந்த சவுந்தரி
பந்து பயின்றாளே


ஒவ்வொரு வரிக்கும் எதுகையும் மோனையும் தாராளமா விட்டுப் பிசைஞ்ச பாட்டு இது. படிக்கும் போதே பந்து எம்பிக் குதிக்கிற மாதிரி இருக்கும். இதுல ஒரு வரி. "இனி இங்கிது கண்டுல கென்படு மென்படு மென்றிடை திண்டாட". இத எப்படிப் படிக்கனும் தெரியுமா? "இனி இங்கு இது கண்டு உலகு என்படும் (என்று) மென்படும் மெல்லிய இடை திண்டாட". இப்ப லேசாப் புரிஞ்சிருக்குமே. இப்பிடி அழகழகா பிரிச்சி மேஞ்சிருக்காரு திரிகூட ராசப்பரு. திருக்குறாலக்குறவஞ்சி படிங்க. பிரமாதமா இருக்கும். இன்னொரு பந்தாட்டப் பாட்டு கீழ இருக்கு.

செங்கையில் வண்டு கலின்கலின் என்று செயஞ்சொல் என்றாட - இடை
சங்கதம் என்று சிலம்பு புலம்பொடு தண்டை கலந்தாட - இரு
கொங்கை கொடும்பகை வென்றனம் என்று குழைந்து குழைந்தாட - மலர்ப்
பைங்கொடி நங்கை வசந்த சவுந்தரி பந்து பயின்றாளே!


இந்த வரிகளைக் கவியரசர் கண்ணதாசன் ஆதிபராசக்தி படத்துல ரொம்ப அழகா பயன்படுத்தியிருந்தாரு. இதே நூல்ல இருந்து ஒரு பாட்ட ஏ.ஆர்.ரகுமான் எடுத்து இசையமைச்சிருக்காரு. காதலன் படத்துக்கு.

இந்திரையோ இவள் சுந்தரியோ
தெய்வ ரம்பையோ மோகினியோ
மனம் முந்தியதோ விழி முந்தியதோ
கரம் முந்தியதோ எனவே......


மனம் நெனைக்குது.....அந்த நெனப்புலதான் காதலன் முன்னாடி வர்ரானான்னு கண்ணு பாக்குது...அவனப் பாத்ததும் காதல் உணர்ச்சி தலைக்கேற கை அவனைத் தொடுது (அந்தக் காலத்துல காதலந்தான் மொதல்ல தொடனும்...காதலி தொட்டா அசிங்கம்னு தமிழர்கள் நெனைக்கலை). அப்படி மனசு நெனச்சு முடிக்கு முன்னாடியே கண் பார்த்து...கண் பார்த்து முடிக்கும் முன்னாடியே கை தொட்டிருச்சாம். ஆக..கை தொடும் போது மனம் இன்னும் நெனச்சு முடிக்கலை. அந்த ஒரு நொடியில நெனைச்சுக்கிட்டே பாத்துக்கிட்டே தொட்டுக்கிட்டாளாம் காதலி. அடடா!

ஒன்ன நெனச்சுக்கிடே ஏஏஏஏ
ஒன்ன பாத்துக்கிட்டே ஏஏஏஏ
ஒன்ன தொட்டுக்கிட்டேன் மாமாஆஆஆஆ
ன்னு இன்னைக்கு சினிமாவுல எழுதுனா அது எங்கயோ போயிரும்.

இப்பிடித்தாங்க அழகழகா நம்ம தமிழ் மொழியில சொல்லீருக்காங்க. அதுல கொஞ்சத்த ஒங்களுக்குச் சொல்லீருக்கேன். என்ன நெனச்சு என்னைய அழகெழுதக் கூப்பிட்டாங்களோ! ஏதோ நமக்குத் தெரிஞ்சதச் சொல்லியாச்சு! அடுத்து மூனு பேரைக் கூப்பிடனுமாமே! முருகா! முருகா! முருகா! கூப்பிட்டாச்சு. இனிமே தமிழ்ல யார் பதிவு போட்டாலும் அவன் போட்ட பதிவுதானே! :-) (அட...நமக்கு முன்னாடியே எல்லாரும் பதிவு போட்டாச்சு. இப்ப யாரக் கூப்புடுறது?)

அன்புடன்,
கோ.இராகவன்

Tuesday, March 20, 2007

நான் கொஞ்சம் weird

இப்ப வலைப்பூக்கள்ள எல்லாரும் அஞ்சு அஞ்சுன்னு சொல்றாங்களே. அதுக்காக அஞ்சாமலும் இருக்க முடியுமா? அஞ்சுவது அஞ்சாமை பேதமையாச்சே. நம்ம கோபிநாத்தும் சிறிலும் அவங்க எந்த வகையில வித்தியாசமானவங்கன்னு பதிவு போட்டுட்டு...அதுல நம்மளையும் கோத்து விட்டுட்டாங்க. நன்றி நண்பர்களே. ஆகையால என்னைப் பத்திய அஞ்சு குண்டக்க மண்டக்க தகவல்களைச் சொல்லியிருக்கேன். அஞ்சீராதீக.

1. எதையோ நெனச்சிக்கிட்டிருந்தா அதுவாவே ஆயிருவோமாமே! அது மாதிரி...சமயங்கள்ள சில நெனைப்புகள் வரும். ஏதோ ஒரு பாட்டு திடீர்னு நெனைவுக்கு வரும். பாத்தா ரெண்டொரு நாள்ள அதே பாட்டு பாக்கக் கிடைக்கும். இதே மாதிரி ஏதோ படத்தப் பத்தித் தோணும். கொஞ்ச நாள்ளயே அந்தப் படமும் பாக்கக் கிடைக்கும். பாட்டு படம்னு மட்டுமல்ல....பல விஷயங்கள்ள இப்பிடி நடக்குது. என்னோட வாழ்க்கைல நெறைய நிகழ்ச்சிகள். இது வெறும் தற்செயல் நிகழ்ச்சியாகக் கூட இருக்கலாம். ஆனா அடிக்கடி நடக்குது. நல்லதுகளும் எக்கச்சக்கமா நடந்திருக்கு. பல கெட்டதுகளும் நடந்தது. அதெல்லாம் மத்தவங்க தொடர்பான செய்திகள். ஆகையால எல்லாத்தையும் விவரமாச் சொல்ல விரும்பல.

2. சாப்பாட்டுலயும் நமக்குக் கொஞ்சம் குண்டக்க மண்டக்க ஆசைகள் உண்டு. இடியாப்பத்துக்குப் பூண்டுக் குழம்புல தொடங்குவோம். சர்க்கரைப் பொங்கலுக்குத் தேங்காச் சட்டினியும் மொச்சைக் கொழம்பும் முயற்சி செஞ்சிருக்கீங்களா? சரி. அத விடுங்க....மீன் துண்டுகளைப் பொரிகடலை மாவுல பெரட்டிப் பொரிச்சிச் சாப்பிட்டதுண்டோ? இத கோழிக்கும் செய்யலாம். ஆரஞ்சு சிக்கன் தெரியுமா? ஓட்ஸ்ல பிஸி-ஓட்ஸ்பாத் செஞ்சு சாப்புடுறதும்....கோதுமை ரவை தோசை சுடுறதும்....பூசணியையும் கோழியையும் சேத்துச் சமைக்கிறதும்..மீனைப் பொரிச்சிக் கொத்துமல்லி+புதினா+பச்சை மிளகாய்க் கூழ்ல சமைக்கிறதும்..இப்பிடி பல கண்டுபிடிப்புகள். இப்பிடி எதையாவது செஞ்சு சாப்பிட்டாத்தான் நாக்கு ஒத்துக்குது. முந்தியெல்லாம் புளி+மிளகாய்+உப்பு மட்டும் வெச்சு அரைச்சச் சண்டாளத் தொவையல பிடிபிடிச்ச நாக்கு இப்பல்லாம் ஒறைப்பையே ஏத்துக்குறதில்லை. எனக்குப் பிடிச்ச மாதிரி ரெண்டு பேராலதான் தொடர்ந்து வகைவகையா சமைக்க முடியும். ஒன்னு அம்மா. இன்னொன்னு நானு.

3. பொதுவா எல்லாரும் வேலைய நல்லா செஞ்சிக்கிட்டிருக்கும் பொழுது நான் அமைதியா இருப்பேன். ஏதோன்னு செஞ்சிக்கிட்டிருப்பேன். ஆனா எதாவது பிரச்சனைன்னா மட்டும் மூளை நல்லா வேலை செய்யும். உக்காந்து தெளிவா யோசிக்கும். இத ஒரு வாட்டி...ரெண்டு வாட்டி இல்ல...பல வாட்டி பாத்திருக்கேன். என்னவோ போங்க...ஊரோட ஒத்து வேலை செய்ற தெறமை இல்லையோன்னு நெனைச்சுக்குவேன். ஆனாலும் பிரச்சனை வந்தாலாவது மூளை வேலை செய்யுதேன்னு திருப்தி பட்டுக்கிறுவேன். அத்தோட சொல் பேச்சுக் கேளாமை வேற. பொதுவா யாராவது சொன்னா...அதக் கேட்டு நடக்கிறதில்லை. சொல் பேச்சுக் கேளாதவன் அப்படீங்குற பேர் எனக்கு வீட்டுல ரொம்ப உண்டு. அது உண்மையும் கூட.

4. கனவுகள். அதுல என்ன weirdனு கேக்குறீங்களா? முந்தியெல்லாம் பல கனவுகள் நெனைவுல இருக்கும். என்ன வந்ததுன்னு அடுத்த நாள் நண்பர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவேன். ஒரு கட்டத்துல என்ன ஆச்சுன்னா...கனவு கண்டுக்கிட்டிருக்கும் போதே "இது கனவு..இத நாளைக்கு நெனைவு வெச்சிருந்து மெயில் அனுப்பனும்னு தோணும்". பல சமயங்கள்ள கதைகள் கனவுல வந்திருக்கு. ஒருமுறை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கனவில் வந்து சொல்லியதுதான் பெண்ணைப் பெற்றவன் அப்படீங்குற கதை.

5. இது காலேஜ்ல படிக்கைல நடந்தது. ஒரு குறிப்பிட்ட பேண்டும் சட்டையும் போட்டுட்டுப் போனா நல்லா எழுதி நல்ல மதிப்பெண் கிடைக்குங்குற நம்பிக்கை. அதுலயும் தேர்வு நாள்கள்ள மஞ்சப்பைதான். துணிக்கடைகள்ள முந்தி குடுத்துக்கிட்டிருந்தாங்களே! அந்த மஞ்சப்பைதான். அதுவுமில்லாமா ஒரு குறிப்பிட்ட எடம் இருக்கு. அந்த எடத்துல போய்தான் மொதல்ல உக்காருவேன். அங்க உக்காந்திருந்துட்டு சரியா தேர்வு நேரத்துல மட்டுந்தான் தேர்வறைக்குள்ள போவேன். ஆனா இதெல்லாம் வேலை செஞ்சிருக்கு. யார் கண்டா நானே ஒரளவுக்குப் படிச்சிருக்கலாம். ஆனால் இன்னமும் அந்த சட்டை இன்னும் இருக்கு. அது எனக்கு ரொம்பவும் பிடிச்ச சட்டை. ஒரு மாதிரி கருப்புச் சட்டை. லேசா ஊதா நிறத்துலயும் பழுப்பு நிறத்திலயும் பளபளன்னும் கொசகொசன்னு ஓவியங்கள் உள்ள சட்டை.

இப்ப நம்ம அஞ்சு பேரக் கூப்பிடனும்ல. விட முடியுமா? மாட்டிக்கிட்டீங்களா?
1. காபி
2. தேவ்
3. வல்லிசிம்ஹன்
4. ஓமப்பொடியார்
5. கோவி.கண்ணன்

அன்புடன்,
கோ.இராகவன்

12ம் (இறுதிப்) பகுதி கள்ளியிலும் பால்

முந்தைய பகுதி இங்கே

"ஆமா...எப்ப நெதர்லாந்துக்குக் கெளம்புற? விசா எல்லாம் கெடைச்சிருச்சா? அதுக்கு ஏதாவது முயற்சி செஞ்சிருக்கியா?" இந்தக் கேள்வியைக் கேட்ட தேன்மொழியின் ஆர்வம் நமக்கு மட்டும் இல்லாமலா போகும்? சரவணனையும் சந்தியாவையும் வீட்டிற்கு விருந்திற்கு அழைத்திருந்தாள் தேன்மொழி. சரவணன் தேன்மொழியின் கணவனோடு பேசிக்கொண்டிருக்கையில் சந்தியாவும் தேன்மொழியும் உள்ளே பேசிக்கொண்டிருந்தனர்.

"நெதர்லாந்துக்கா? நானா? நான் ஏண்டி அங்க போகனும்? எல்லாரும் இதத்தான் கேக்குறாங்கன்னா...நீயுமா? ஒனக்குக்குத்தான் என்னையப் பத்தித் தெரியுமே."

"தெரியும். தெரியும். ஆனாலும் கல்யாணம் செஞ்சாச்சு. நான் அன்னைக்கே சொன்னேன். சரவணன் கேட்டதும் நீ ஒத்துக்குவன்னு. அதான் நடந்தது. அதே மாதிரி அவன் பின்னாடி குடுகுடுன்னு ஓடத்தான் போற." கண்ணைச் சிமிட்டிச் சொன்னாள் தேன்மொழி.

"ஆகா....உலகமகா ஜோசியக்காரி. சினிமாவுக்குப் பாட்டெழுதுறத விட்டுட்டு நீ ஜோசியம் பாக்கப் போகலாம். கல்யாணம் ஏன் செஞ்சோம்? எனக்கா? இல்ல அவனுக்கா? கண்டிப்பா இல்ல. எங்களுக்கு வேணுங்குறதும் எங்கயும் கிடைக்கும். ஆனா சுந்தருக்கு? அவனுக்காகத்தான் கல்யாணம்."

"சுந்தருக்கா? அம்மா முரண்பாடுகளின் மொத்த உருவமே! தனியா அவனை வளர்க்க முடியும்னுதானே குழந்தையே பெத்துக்கிட்ட. அப்புறம் எதுக்கு கல்யாணம். திடீர்னு பயம் வந்திருச்சா?"

"இல்லடீ. இல்ல. No பயம். பிரச்சனை என்னன்னா? யாரோ தெரியாத donorனா பிரச்சனையே இல்லை. ஆனா இங்க...சரவணன். அவன் கிட்ட ரொம்ப நாள் மறைக்கவும் முடியலை. என்னோட கொழந்தைதான...எனக்கும் பங்கு உண்டுன்னு அவன் கேக்கும் போது மறுக்குறது சரியில்லைன்னு தோணுச்சு. அதான். அந்த ஒரு காரணந்தான். மத்தபடி இந்த கல்யாணத்தாலதான் எனக்கும் சரவணனுக்கும் எந்த உறவும் உருவாகனும்னு இல்ல. புரிஞ்சதா? அதுனால......."

"அதுனால?"

"நானும் சுந்தரும் சென்னையில என்னோட அப்பார்ட்மெண்டுல இருப்போம். எனக்கும் வேலை இருக்கு. எனக்கும் அம்மா அப்பா இருக்காங்க. அதுனால சரவணனோட வீட்டுலயும் இருக்க மாட்டேன். அப்பப்போ போய்ப் பாத்துக்கலாம். அவ்வளவுதான். ஆகையால சரவணன் மட்டும் நெதர்லாந்து கெளம்பிப் போறான். அடுத்த வாரம். தன்ன்ன்னியா!"

அந்த அடுத்த வாரம் விரைவிலேயே வந்தது. சென்னை விமான நிலையத்தில் அவனை வழியனுப்பி வைத்து விட்டு வீட்டிற்குப் போனார்கள் அனைவரும். வழக்கமாக தனிமையில் கட்டிக்கொள்ளும் சரவணனும் சந்தியாவும்..அன்று அனைவரின் முன்னிலையிலும் கட்டிக் கொண்டு பிரிந்தார்கள். சந்தியா அன்று அலுவலகத்திற்கு விடுப்பு. ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தாள். மாலை நான்கு மணி இருக்கும். ஒரு தொலைபேசி அழைப்பு.

"Hi Sandhya, itz Jaideep here. how are you doing?"

ஓ! அந்த சினிமாக்காரனா! "Hey Jaideep! how are you? i am doing very fine. whatz up?"

"Me fine. Today I saw you in the airport. And from that time.....something is bubbling in my stomach. how about evening? can you come to GRT grand? i am there in 2047. It will be nice if you can make it around 6."

ஏண்டா...அன்னைக்கு அந்த நடிகன் பின்னாடி ஓடுனியே...இன்னைக்கு என்ன...நான்? anyway....you are good...i know..சரி. ஒத்துக்கலாம். "Oh sure Jai. Itz treat to me....I will be there at 6. 2047, right?"

அந்த 2047ல் சரியாக ஆறு மணிக்கு இருந்தாள் சந்தியா. உள்ளே வெறும் ஷார்ட்சோடு காத்துக்கொண்டிருந்தான் ஜெய்தீப். வேறொரு இளைஞன் ஒருவனும் அங்கிருந்த சோபாவில் சாய்ந்து கொண்டு தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தான். சந்தியாவின் கண்கள் அவனையும் நோட்டம் விடத் தவறவில்லை. வந்த சந்தியாவைக் கட்டி அணைத்து முத்தமிட்டு வரவேற்றான் ஜெய். "Hey Sandhya...meet my friend sukh. Please have a small talk. I will take bath and come fast." குளியலறைக்குள் சென்று கதவைப் பூட்டிக் கொண்டான் ஜெய்.

சுக்கின் விரல் சந்தியாவெங்கும் ஓடி....எவைகளையெல்லாம் களைய வேண்டுமோ...அவைகளையெல்லாம் களைந்தன. சந்தியாவிற்கு மட்டும் களையெடுக்கத் தெரியாதா என்ன? உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்தார். வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்தார். விழலுக்கும் நீர் பாய்ச்சி மாய மாட்டார்.

"வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலாவே" சந்தியாவின் அலைபேசி பாடியது. எரிச்சல். "Wait Sukh. let me check whoze that?" அவசரமாக அலைபேசியை எடுத்தாள், "ஹலோ?"

"ஹே சந்தி! சரவணன் பேசுறேன். எப்படி இருக்க. இப்பதான் வந்து சேந்தேன்."

"One sec Sukh." சுக்கிடம் இருந்து தன்னை எடுத்துக் கொண்டு விலகினாள். "நல்லாயிருக்கோம். நீ எப்படி இருக்க? ஃபிளைட் வசதியா இருந்ததா?"

"நல்லாயிருந்தது. இப்பதான் வீட்டுக்குள்ள நொழைஞ்சேன். வழியெல்லாம் உன்னையும் சுந்தரையுந்தான் நெனச்சுக்கிட்டேயிருந்தேன். அதான் வந்ததும் கூப்டாச்சு. வீட்ல இருக்கியா? இன்னைக்கு ஆபீசுக்குப் போகலைன்னு சொன்னியே. ஏன் குரல் ஒரு மாதிரி இருக்கு?"

"ஆமா. வீட்டுலதான்..நல்லா தூங்கீட்டிருந்தேன். நீ கூப்டதும்தான் எந்திரிச்சேன். அதான் குரல்..."

"சரி. சரி. நீ தூங்கு. எனக்கும் தூக்கம் வருது. எட்டு மணிக்கு ஃபோன் பண்ணு. சரியா? Take care. Bye."

அலைபேசியை கையில் வைத்துக்கொண்டு யோசித்தாள்.

"Whoz that Sandhya? What are you contemplating?" எழுந்து வந்து சந்தியாவோடு உரசினான் சுக். குளித்து முடித்திருந்த ஜெய்தீப் குளியலறையிருந்து வெளியே வந்தான். "hey! what happened? I was expecting a visual treat 'when i come out. I opened the door expecting you both in action...but!"

"Hey Jai. We started. But Sandhya got a call and she in to thoughts. What happened Sandhya?" வாயால்தான் கேட்டான் சுக். ஆனால் கையும் பேசியது.

"From home. Some problem. Need to go immediately." ஏதோ யோசனையோடு சொன்னாள்.

"What? leaving now? just another 10 minutes Sandhya? please......." சுக் கெஞ்சினான்.

"No Sukh. I have to. something serious....now I really cant. Please understand. Anyway Jai is here. You still have option...I will join tomorrow." சுக்கிடம் இருந்து விடுவித்துக் கொண்டு உடைகளை மாட்டிக் கொண்டு கிளம்பினாள். அணைத்து முத்தமிட்டு வழி அனுப்பினார்கள். ஆனால் வரும் பொழுது சந்தியாவின் அணைப்பிலிருந்த இறுக்கம் இப்பொழுது இல்லாமல் இருந்தது அவர்களால் உணர முடிந்தது.

அன்புடன்,
கோ.இராகவன்

Thursday, March 15, 2007

11ம் பகுதி கள்ளியிலும் பால்

முந்தைய பகுதி இங்கே

"உண்மையாவா சொல்ற சந்தியா? நெஜமாவா?" நமக்கு ஒரு குழந்தை இருந்து அது நமக்கே தெரியாமல் இருந்து...பிறகு தெரிய வந்தால்? இவ்வளவு ஆச்சரியமாகத்தான் யாரும் கேட்பார்கள். சரவணனின் கேள்விக்கு ஆமாம் என்ற ஒரு சொல் விடைதான் சந்தியாவிடம் இருந்து கிடைத்தது.

"சரி. சந்தியா. நீ சொல்றத நம்புறேன். ஆனா இப்ப என்னால எதையும் யோசிக்க முடியல. நாளைக்குக் காலைல இதப் பத்திப் பேசிக்கலாம். Good Night" சரவணனால் பேச முடியவில்லை. எதையாவது யோசிக்க முடிந்தால்தானே அதைப் பேச முடியும். அப்படி யோசிக்காமல் எதையாவது சொல்லிவிடக்கூடாதே என்றுதான் காலையில் பேசுவதாகச் சொன்னான்.

திடீரென பெரிய மனிதனாக மாறிவிட்டது போல இருந்தது. கண்ணாடித் தொட்டிக்குள் இருக்கும் மீன் போல உணர்ந்தான். என்னவோ ஊர் உலகத்தில் எல்லாரும் அவனையே பார்த்துக்கொண்டிப்பது போல. எதையோ சாதித்த பெருமை. ஆனாலும் என்னவோ சோகம் கலந்த ஆத்திரம். இரவு முழுவதும் அவனுக்குத் தூக்கம் மறந்து போனது. கிட்டத்தட்ட ஐந்து மணிக்கு சந்தியாவிற்கு ஒரு செய்தி அனுப்பினான். "GM Sandhy. Dont go to office. I'm coming 2 ur house 2 c u and sundar. wanna talk 2 u"

சொன்னது போலச் சரியாக பத்து மணிக்கு சந்தியாவின் வீட்டில் இருந்தான். அந்த நேரத்திலும் அவனுக்கு அங்கு சிவகாமி காபி போட்டுக் கொடுத்தார். சுந்தர் சரவணனிடம் எளிதாகச் சேர்ந்து கொண்டான். அவர்கள் கொஞ்சிக் கொண்டதையெல்லாம் விலாவாரியாக விவரிப்பதை விட ஒரு பாடலைச் சொல்லி எளிதாக விளக்கி விடுகிறேன்.

கவியரசரின் ஒரு பாடல். கவியரசர் என்றால் கண்ணதாசந்தான். வேறு யாரையும் நினைக்க வேண்டாம். ரிஷிமூலம் என்ற படத்தில் இளையராஜாவின் இசையில் டி.எம்.சௌந்தரராஜனும் பி.சுசீலாவும் பாடியது. "நேரமிது நேரமிது நெஞ்சில் ஒரு பாட்டெழுத" என்று தொடங்கும் பாடலில் இப்படி வரும்.

மனைவி: திங்கள் ஒளி திங்களைப் போல்
உங்கள் பிள்ளை உங்களைப் போல்
உங்களைத்தான் நாடுகிறான்
என்னிடம் ஆசையில்லை
கணவன்: நீ பெற்ற பிள்ளையின்
கோபமும் வேகமும்
உன்னைப் போலத் தோன்றுதே

அப்படித்தான் சுந்தரும் எளிதாக சரவணனுடன் சேர்ந்து கொண்டான் என்று நினைக்கிறேன். அந்தப் புதுமையான குடும்பத்திற்கும் கொஞ்சம் தனி நேரமும் இடமும் கிடைத்தது. அப்பொழுது சரவணனுன் சந்தியாவும் மனம் விட்டுப் பேசி சில முடிவுகள் எடுக்க முடிந்தது.

முதலில் சரவணன் இப்படிக் கேட்டான். "சந்தி, சுந்தர் எனக்கும் மகன். அப்ப அவன் எனக்கும் சொந்தம். அதுனால இவனோட அப்பா நாந்தானு மொதல்ல ரெக்கார்ட் பண்ணனும்."

"சரி. Thatz easy. செஞ்சிரலாம்."

"அப்புறம் நம்ம கல்யாணம் செஞ்சுக்கிட்டா என்ன?"

"என்னது கல்யாணமா? அப்படி வா வழிக்கு! ஒன்னோட கொழந்தைய பெத்துக்கிட்டேன்னு தெரிஞ்சதும்....கல்யாணம்னு என்னைய அடிமைப்படுத்தப் பாக்குறியா? நீ ஏன்டா இப்பிடி? இந்த ஒலகத்துல பெண்கள லேசா எப்படி அடிமைப் படுத்தலாம் தெரியுமா? கொழந்தைங்கள வெச்சு. குழந்தைங்க மட்டும் இல்லைன்னா இன்னைக்கு நாட்டுல நெறையாப் பொம்பளைங்க என்னைக்கோ புருஷங்களைத் தொரத்தீருப்பாங்க. நான் ஒன்னய கல்யாணம் செஞ்சுக்கனும். காலெமெல்லாம் ஒன்னையையும் ஒன்னோட கொழந்தையையும் பாத்துக்கிட்டு உன்னோட பேர எனக்கு இன்ஷியலா போடனும். அதான ஒனக்கு வேண்டியது?" சட்டென்று கேட்டாள் சந்தியா.

"Oh my god! ஒன்னோட சொற்பொழிவு முடிஞ்சதா? மண்டு. நீ எப்படி இருந்தாலும் S.Sandhyaதான். அத மொதல்ல தெரிஞ்சிக்க. இனிஷியலுக்காக சொல்லலை. சுந்தருக்காக மட்டுந்தான் சொல்றேன். புரிஞ்சிக்கோ. நம்ம கல்யாணம்னு செஞ்சுக்கிட்டாலும் ஒருத்தொருக்கொருத்தர் எடஞ்சலா இருக்கக் கூடாது. நம்ம நட்பு பழையபடிதான் தொடரும். எல்லா விஷயத்துலயும். உன்னோட சந்தோஷத்துக்கு நான் கண்டிப்பா குறுக்க நிக்க மாட்டேன். நீயும் சுந்தரும் வழக்கம் போல சென்னைலயே இருக்கலாம். சரியா? It is just an agreement recorded but not binding. Mutualy beneficial. Mutualy exclusive. Mutualy accepted"

சரவணன் சொல்லி முடித்ததும் அவசரப்பட்டுச் சொல்லிவிட்டோமோ என்று நினைத்தாள். ஆகையால் கொஞ்சம் யோசித்தாள். யோசனையெல்லாம் முடிந்த பிறகு அவன் சொல்வதுதான் சரியென்று தோன்றியது. அவள் அவளாகவும் அவன் அவனாகவும் இருந்து கொள்ள முடியும் என்றால் அவளுக்குச் சரி என்று தோன்றியது. ஒரு வேளை நாளை அவன் முருங்கை மரத்தில் ஏறினால்? சரி. வேப்பிலை அடித்துத் துரத்தி விடலாம் என்று எண்ணிக்கொண்டாள். அவள் மனம் இந்த பொம்மைத் திருமணத்திற்கு ஒத்துக்கொண்டது. ஆனால் அவளுடைய தன்மானத்தை இழக்க விரும்பாமல் ஒரு பிரச்சனையை எழுப்பினாள்.

"சரவணா, எல்லாம் சரிதான். ஆனா artificial inseminationனு எல்லாருக்கும் சொல்லியிருக்கேன். இப்பப் போயி எப்படி மாத்திச் சொல்றது? அப்ப நான் சொன்னது பொய்னு தெரிஞ்சிடும். அப்புறம் எனக்குக் கண்டிப்பா கெட்ட பேர்தான் கிடைக்கும். you know how hypocrats think. இதுக்கு என்ன வழி?"

சரவணன் யோசித்தான். சந்தியாவும் தோற்கக் கூடாது. உண்மையும் வெளியே தெரிய வேண்டும். "Dont worry Sandhy. உனக்குக் குழந்தை பிறக்க நாந்தான் donorஆ இருந்தேன்னு சொல்லீர்ரேன். சுந்தர் பொறந்ததுக்குப் பிறகு யோசிச்சுப் பாக்கும் போது இந்த முடிவுக்கு வந்தோம்னு சொல்லீரலாம். அதெல்லாம் நான் பேசிக்கிறேன். இந்த விஷயத்த எல்லாம் யாரும் துருவித் துருவிக் கேக்க மாட்டாங்க. சரி. நான் இப்பவே ஒங்க அப்பா கிட்ட பேசுறேன். அப்படியே வீட்டுக்குப் போய் என்னோட அப்பா கிட்டயும் அம்மா கிட்டயும் சொல்லிச் சம்மதம் வாங்கீர்ரேன்."

சொன்னபடி சுந்தரராஜனிடமும் சிவகாமியுடனும் பேசினார். அவர்களுக்குப் பெரிய ஆச்சரியம். ஆனால் திருமணத்திற்கு உடனே ஒத்துக்கொண்டார்கள். நல்லவேளை என்று நினைத்திருப்பார்கள். அதே போல அவனுடைய வீட்டிலும் பேசிச் சம்மதமும் வாங்கி விட்டான். மாடு வாங்கப் போனால் கன்றோடு கூட்டிக் கொண்டு வருகிறானே என்று நினைத்தார்கள். ஆனால் குழந்தை சரவணனுடையதுதான் என்று உறுதியாக அவன் அடித்துச் சொன்னதும் அவர்களும் ஒருவழியாக ஒத்துக்கொண்டார்கள்.

கண்ணனுக்கும் தகவல் போனது. வாணியும் மிகவும் மகிழ்ந்தாள். ராஜம்மாள் இதையும் நாலைந்து விதமாகப் பேசினாலும் அவரால் என்ன செய்ய முடியும்? நடப்பதைப் பார்த்துக்கொண்டு சும்மாயிருந்தார். மிகவும் எளிமையான பதிவுத் திருமணமாக நடந்தது. தாலியெல்லாம் கட்டிக்கொள்ள மறுத்து விட்டாள் சந்தியா. சரவணனும் அதில் விருப்பமில்லாமல் இருந்தான். மோதிரம் மட்டும் மாற்றிக் கொண்டார்கள். அது கூட மற்றவர்களின் வற்புறுத்தலுக்காகத்தான். அவர்களின் முதலிரவும்(!) நல்லபடியாக நடந்தது.

தன்னுடைய வீட்டை விட்டு வர மறுத்து விட்டாள் சந்தியா. அவளுடைய பெற்றோர்களும் இருக்கிறார்களே. அவர்கள் டி.நகர் வீட்டில் கண்ணனோடு இருக்கப் போவதாகச் சொன்னார்கள். ஆனால் சந்தியா குறுக்கே விழுந்து தடுத்து விட்டாள்? சரவணன் அவனது பெற்றோர்களை விட்டு வருகிறானானா என்ன? பிறகு அவள் மட்டும் ஏன் என்று கேட்டு எல்லார் வாயையும் அடைத்து விட்டாள். சரவணன் விரைவிலேயே நெதர்லாண்டு திரும்ப வேண்டும் என்பதால் இங்கு கொஞ்ச நாளும் அவன் வீட்டில் கொஞ்ச நாளுமாகக் களி(ழி)த்தான்.

(அடுத்த பகுதியில் இந்தக் கதை முடியும்.)

தொடரும்.....

Tuesday, March 13, 2007

10ம் பகுதி கள்ளியிலும் பால்

முந்தைய பகுதி இங்கே

"நீ எதுக்கு முசுமுசுன்னு அழுகுற? அதான் டாக்டர் கிட்ட போறோமே. ஒன்னயப் பாத்து இவனோட அழுகையும் கூடுது பாரு." சிவகாமி சந்தியாவை அதட்டினார். எதற்கு என்று கேட்கின்றீர்களா? வரிசையாகச் சொல்கிறேன்.

1. கவிப்பூ தேன்மொழியின் "கள்ளியிலும் பால்" கையெழுத்து நிகழ்ச்சிக்காகச் சுந்தரைத் தூக்கிக் கொண்டு சந்தியாவும் சிவகாமியும் ஸ்பென்சர் பிளாசாவில் உள்ள லேண்ட்மார்க் கடைக்குச் சென்றனர்.

2. அங்கு எக்கச்சக்க கூட்டம் தேனை மொய்த்துக்கொண்டிருந்தது. இருந்தாலும் தேன்மொழி சந்தியாவை முன்னால் அழைத்து ஒரு புத்தகத்தைப் பரிசளித்தாள்.

3. அந்நேரம் பார்த்து சுந்தர் முனகலில் தொடங்கி அழுகைக்கு மாறி கதறலுக்குத் தாவினான். சிவகாமி என்ன செய்தும் அழுகை நிற்கவில்லை.

4. தேன்மொழியிடம் அவசரமாக விடை பெற்று இருவரும் வெளியே வந்தனர். நேராக மலர் மருத்துவமனைக்குச் சென்று குழந்தை மருத்துவர் மதிவதனனைப் பார்க்கச் சென்றார்கள்.

5. வழியில் சரவணன் சந்தியாவைத் தொலைபேசியில் அழைத்திருக்கிறான். சிவகாமியிடம் அழைப்பது யாரென்று பார்க்கச் சொன்னாள் சந்தியா. யாராக இருந்தாலும் பிறகு பேசுவதாகச் சொல்லச் சொன்னாள். ஆனால் அது சரவணன் என்பதால் சிவகாமி "சுந்தருக்கு உடம்பு சரியில்லை. மலருக்குப் போறோம். பிறகு பேசுறோம்" என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லி விட்டார்.

6. ஏற்கனவே சுந்தர் அழுவதால் கலங்கியிருந்த சந்தியா இதைக் கேட்டதும் மிகவும் துவண்டு போனாள். என்ன செய்வது என்று ஒரு அச்சம். அது மெல்லிய அழுகையாகக் கண்களில் வழிந்தது.

அப்பொழுதுதான் சிவகாமி சந்தியாவை அழாமல் இருக்கச் சொன்னார். சுந்தர் அழுவதுதான் அவள் அழுகைக்கான முழுக்காரணம் என்பது சிவகாமியின் நினைப்பு.

சிவகாமியிடம் பேசிய பிறகு குழம்பிப் போனான் சரவணன். சுந்தருக்கு உடம்பு சரியில்லை என்று சொன்னது அவனைக் குழப்பியது. சுந்தரராஜன் என்று சொல்லியிருப்பாரோ என்று நினைத்தான். பெரியவரும் கூட. அவருக்கு எதுவும் பிரச்சனை இருக்கலாம் என்று நினைத்து பயந்தான். அப்பொழுது அடையாறில்தான் இருந்ததால் மலருக்கே நேராகச் சென்று விடலாம் என்று முடிவு செய்தான்.

இதுவரை வாசகர்கள் அனைவரும் எதிர்பார்த்த சரவணன் சுந்தர் சந்திப்பு மலர் மருத்துவமனை வாசலில் நடந்தது. சரவணனை அங்கு எதிர்பார்க்காத சந்தியா கொஞ்சம் திடுக்கிட்டுத்தான் போனாள். அழுததன் காரணமாக மூக்கை உறிஞ்சிக் கொண்டிருந்தாள். சரவணனைப் பார்த்து சிவகாமி சம்பிரதாயமாக "நல்லாயிருக்கியா சரவணா" என்று முதலில் கேட்டார்.

பிறகு, "நீயே சொல்லுப்பா சந்தியாகிட்ட. சுந்தர் அழுகுறான்னு இவளும் முசுமுசுன்னு அழுகுறா. குழந்தைன்னா அப்படி இப்பிடி ஏதாவது இருக்கும். அழுதா ஆச்சா?" என்று சொன்னவர் சந்தியாவைப் பார்த்து "வா உள்ள போகலாம்" என்று அழைத்து உள்ளே சென்றார்.

மலர் மருத்துவமனையில் சுந்தரின் பெயர் ஏற்கனவே பதியப்பட்டிருந்தது. அங்கு பிறந்தவந்தானே. அதுவுமில்லாமல் மதிவதனன்தான் சுந்தருக்கு முதலிலிருந்தே மருத்துவம் பார்ப்பது. ஆகையால் அவனை நன்றாக அறிவார் அவர். சுந்தருடைய விவரங்களை மருத்துவமனை ரிசப்ஷனில் சரிபார்க்கையில் சரவணனுக்குச் சுந்தர் சந்தியாவின் குழந்தை என்று தெரிந்து போனது. அவனுக்கு எப்படி இருந்திருக்கும்? நீங்களே சொல்லுங்கள்? ஒரு நெருங்கிய தோழி. அனைத்தையும் பகிர்ந்து கொள்ளும் உண்மையான அன்புடைய தோழி. அவளுக்குக் குழந்தை பிறந்த செய்தியையே சொல்லாமல் மறைத்திருந்தால்? ஏன் அப்படிச் செய்தாள் என்று கேள்விகள் முளைக்குமல்லவா? அதுவுமில்லாமல் சந்தியாவிற்குக் குழந்தை பிறந்தது....இவனுக்கே குழந்தை பிறந்தது போலத் தோன்றியது. ஒவ்வொரு பொழுது நாமும் இப்பிடிச் சொல்வோம். "ஏய்...என்னோட மருமகனா இருந்தாலும் மகன் மாதிரி." என்று. அந்த மாதிரி...சந்தியாவை வெளியாள் என்று அவனால் நினைக்க முடியவில்லை.

உண்மையைச் சொன்னால் மொத்தத்தில் தடுமாறித்தான் போனான் சரவணன். நல்லவேளை. அவன் சற்று யோசித்து முடிவெடுக்கின்றவன். ஆகையால் அங்கு எதுவும் கேட்கவும் விரும்பவில்லை. சந்தியாவும் சிவகாமியையும் திரும்ப வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டு இவன் வீட்டிற்குச் சென்றான். வீட்டில் படுக்கையில் சாய்ந்து படுத்தவன் யோசித்துக் கொண்டேயிருந்தான். அப்படியா யோசிப்பார்கள்? அதுவும் இரவு பத்து மணி வரைக்கும். பிறகு யோசனைகளைத் தலையணக்கு அடியில் தள்ளி வைத்து விட்டு சந்தியாவை அலைபேசியில் அழைத்தான்.

சந்தியா அதற்குள் சுதாரித்திருந்தாள். இனிமேல் எதையும் மறைப்பதில் பயனில்லை. உண்மையைச் சொல்லிவிட வேண்டியதுதான் என்ற நிலைக்கு அவளும் வந்திருந்தாள். என்ன நடந்தாலும் சரி என்று அவள் துணிந்திருந்தாள். அதுவுமில்லாமல் வயிற்றுச் சூட்டினால் அழுத சுந்தர் மருந்து குடித்து விட்டு அமைதியாகத் தூங்கிக்கொண்டிருந்தான். சரியாக அந்நேரத்தில் சரவணனின் அலைபேசி அழைப்பு வந்தது.

"ஹே சந்தி, என்ன பண்ற?"

"ஒன்னும் பண்ணலடா. சும்மா உக்காந்திருக்கேன்."

"சுந்தருக்கு இப்ப எப்படி இருக்கு?" நேரடியாக பிரச்சனைக்குள் தலையை விட்டான் சரவணன்.

"மருந்து குடுத்தப்புறம் நல்லா தூங்குறான். வயித்து வலி குறைஞ்சிருக்கனும்." அவளும் சளைத்தவள் இல்லையே.

"சுந்தரப் பத்தி எங்கிட்ட ஒன்னுமே சொல்லலையே சந்தி! ஏம்மா?" சமயங்களில் நமக்கு வேண்டியவர்கள் ஏதாவது செய்து விட்டால் அவர்கள் மீது ஆத்திரத்தை விட வருத்தம்தான் வரும். அந்த வருத்தத்தில்தான் கேட்டான் சரவணன்.

"உண்மதான். கண்டிப்பா ஒங்கிட்ட சொல்லீருக்கனும். ஆனா ஏதோ நெனைச்சுக்கிட்டு மறைச்சிட்டேன். உன் கிட்ட மறைச்சது என்னைக் குத்தாத நாளே கிடையாது. ஆனா இந்தக் குழந்தையைப் பெத்துக்கிறதுக்கு நீதான் காரணம் தெரியுமா?"

"என்னது நானா? என்ன சொல்ற?" சரவணன் என்ற பெயரை ஹிரோஷிமா நாகசாகி என்று மாற்றியிருக்கலாம். இல்லை ஈராக் என்று மாற்றியிருக்கலாம்.

"ஆமா. நீ சென்னைல இருந்த வரைக்கும் உன்னோட துணையும் நட்பும் இருந்ததால எனக்கு ஒன்னும் தெரியல. ஆனா நீ நெதர்லாண்ட் போனப்புறம் திடீர்னு ஒலகத்துல தனியா நிக்குற மாதிரி நெனைப்பு வந்தது. ஒன்னய திரும்ப வான்னும் கூப்பிட முடியலை. நீ என்னை அங்க வரச்சொன்னப்பவும் ஒத்துக்க முடியலை. இந்த நிலமைல என்னோட தனிமையப் போக்க ஒரு குழந்தை வேணும்னு தோணிச்சு. அதான் பெத்துக்கிட்டேன். அதுனால என்னோட தனிமை போச்சு. என்னை விட்டு நீ போனதுக்கு உன்னையப் பழி வாங்குனதா ஒரு திருப்தி. அதான் உங்கிட்ட சொல்ல முடியாமத் தவிச்சேன். ஆனா என்னைக்காவது உண்மை வெளிய வரும்னு தெரியும். அதுனால எனக்குக் கஷ்டம் வந்தா உதவ நீ இருக்கன்னு தெரியும். அதுனாலதான் அப்படியே விட்டுட்டேன். இதுக்காக உன் கிட்ட மன்னிப்பு கேக்க மாட்டேன். ஏன்னா நான் செஞ்சது தப்புன்னா நீ கொடுக்குற தண்டனை எதானாலும் சரி. ஏத்துக்கத் தயார்." திரைப்பட வசனம் போல இருந்தாலும் சந்தியா உண்மையைத்தான் சொன்னாள்.

"எல்லாம் சரிம்மா. எதுன்னாலும் எங்கிட்டதான வந்து கேப்ப! அப்படியிருக்குறப்போ ஒனக்குக் கொழந்த வேணும்னதும் என்னோட நெனைப்பு வரலயே. அதத்தான் என்னால தாங்கிக்க முடியல. அந்த அளவுக்கா என் மேல கோவம்?" சரவணனும் உண்மையைத்தான் சொன்னான்.

"இல்லடா. இல்ல. குழந்தை வேணும்னதும் நான் மொதல்ல உன்னையத்தான் நெனச்சேன். அதுனால.......Sundar is our son. அதாவது சுந்தர் ஒனக்கும் எனக்கும் பொறந்தவன்."

தொடரும்.....

Monday, March 12, 2007

முருகனும் தெய்வயானையும்

சமீபத்தில் முருகனைப் பற்றி ஹரிஹரன் ஒரு பரபரப்புப் பதிவு போட அதற்குப் பதிலாக விடாதுகருப்பு ஒரு பதிவு போட. பிறகு முத்துக்குமரனின் வடமொழி பற்றிய ஒரு பதிவில் ஒரு பின்னூட்டம் விழுந்தது. அதை வைத்து முத்துக்குமரன் ஒரு பதிவு போட அதில் அனானி நண்பர் ஒருவர் இந்தப் பிரச்சனை குறித்து என்னுடைய கருத்து என்ன என்று கேட்டிருந்தார்.

முருகனைப் பற்றி தகவல் பரிமாற்றம் என்ற வகையில் நடக்கும் கலந்துரையாடலில் கருத்துச் சொல்வது சரியென்றே தோன்றுகிறது. அனைத்தும் அறிந்தவன் அல்லன் என்றாலும் தெரிந்ததைச் சொல்வது சரிதானே. அதைத்தான் இங்கு சொல்லப் போகிறேன். அதை ஏற்கனவே முத்துக்குமரனின் இந்தப் பதிவில் கூறியிருந்தாலும் சற்று விளக்கமாக இங்கு சொல்கிறேன். அதற்குக் காரணம் அங்கு மற்றொரு நண்பர் கேட்ட கேள்வி. முருகனை வள்ளி தெய்வயானையோடு போற்றி வணங்கும் நான் எனக்கும் முருகனுக்கும் நேர்மையாக கருத்தை எடுத்து வைக்கிறேன். அனைத்தும் முருகன் செயல். "யாம் ஓதிய கல்வியும் எம்மறிவும் தாமே பெற வேலவர் தந்ததினால்!"

ஜிரா: "எனக்குத் தெரிந்து தெய்வயானையைப் பழைய தமிழ் நூல்களில் காண முடியாது. திருமுருகாற்றுப்படை உட்பட."

GR,
Refer line 6 in Tirumurukatrupadai. Here the 'Karpu' mentioned is Deivayanai. Read great scholar Kamil V. Zvlebil's legendary research work on Muruka.
Thanks
VRP

சரி. பழைய தமிழ்நூல்களைப் பார்த்தால் முருகனையும் வள்ளியையும் மட்டுமே காணமுடியும். இளங்கோவடிகளின் சிலப்பதிகாரமாக இருந்தாலும் வள்ளியும் முருகனும்தான் வருவார்கள். தெய்வயானையைப் பற்றிய குறிப்பு கிடையாது. தமிழில் முதலில் எழுந்த இறைநூல் திருமுருகாற்றுப்படை என்பார்கள். அதுவுமில்லாமல் ஆற்றுப்படை வீடுகளைத் தொகுத்ததும் அந்த நூல்தான். அந்த நூலில்தான் முதல் படைவீடாக திருப்பரங்குன்றம் சொல்லப்படுகிறது. பலர் பழநிதானே முதற்படை வீடாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஏனென்றால் கனி கிடைக்காது நின்றது...பிறகு தந்தைக்கு மந்திரம் சொன்னது...பிறகு சூரனை வென்றது..பிறகு தெய்வயானையை மணந்தது...வள்ளியை மணந்தது....இரண்டு மனைவியரோடு நின்றது என்று வரிசையாக நினைப்பார்கள்.

ஆனால் நக்கீரர் மக்களை இறைவனிடம் ஆற்றுப்படுத்துவதறாக எடுத்துக்கொண்டது ஆறுவீடுகள். அவைகள் வரிசையாக திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், திருவாவினன்குடி, திருவேரகம், குன்றுதோறாடல், பழமுதிர்ச்சோலை என்று வரும். ஆகையால் இதுதான் சரியான வரிசை. இதில் முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தில் இப்பொழுது தெய்வயானையை மணம் புரிந்ததாகச் சொல்லப்படுகிறது.

ஆனால் திருமுருகாற்றுப்படையில் அப்படியொரு திருமணம் நடந்ததாகவே நக்கீரர் சொல்லவில்லை என்பது என் கருத்து. ஆனால் வள்ளியைப் பற்றிய குறிப்பு பெயரோடு உண்டு. "குறவர் மடமகள் கொடி போல் நுசுப்பின் மடவரல் வள்ளியொடு நகை அமர்ந்தன்றே" என்று குறிப்பிடுகிறார். அதாவது முருகப் பெருமான் குறக்கொடியாம் குலக்கொடி வள்ளியொடு மகிழ்ச்சி தரும் புன்னகை பொலிய அமர்ந்திருக்கிறாராம். வள்ளி என்று சொல்லி அவள் குறத்தி என்ற சொல்லியிருக்கிறார்.

சரி. நண்பர் குறிப்பிடும் ஆறாம் வரிக்கு வருவோம். இது திருப்பரங்குன்றத்திற்கு உரியது. "மறு இல் கற்பின் வாணுதல் கணவன்" என்பது அந்த வரி. இதற்குப் பொருள் என்ன?

மறு இல் கற்பின் - குற்றமற்ற பண்புடையவளின்
வாணுதல் கணவன் - ஒளிர்பொலி நெற்றி கொண்ட கணவன்

நற்பண்புடைய ஒரு பெண்ணின் கணவன் என்பது அந்த வரிக்கான பொருள். அதில் தெய்வயானையைப் பற்றிய குறிப்பு எங்கே இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. சரி. பெயரைக் குறிப்பிடா விட்டாலும் யாருடைய மகள் என்று சொல்லியிருக்கலாமே? வள்ளி என்பவள் குறத்தி என்று விரித்துச் சொன்ன நக்கீரருக்கு தெய்வயானை என்பவள் ஆனை வளர்த்த மகள் என்றோ தேவேந்திரன் மகளென்றோ சொல்லியிருக்கலாமே!

ஒருவேளை நக்கீரருக்குத் தேவேந்திரனைப் பற்றித் தெரியாமல் இருந்திருக்குமா என்றால் அதுவும் இல்லை. "யானை எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வன்" என்றும் சொல்லி விடுகிறார். அதாவது ஆனை எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வன் முருகனைப் போற்றினான் என்று சொல்ல வருகிறார்.

நண்பர் வி.ஆர்.பி சொல்லியிருப்பது போல கற்பு என்ற சொல்லாடல் தெய்வயானையைக் குறிப்பதாகக் கொண்டால்....ஏன் தெய்வயானையை மட்டும் கற்பு என்ற சொல்லால் குறிப்பிட வேண்டும்? வள்ளிக்குக் கற்பு கிடையாதா? இவைகளே எனக்கு எழும் கேள்விகள்.

ஆனால் பிற்காலத்தைய நூல்களில் கண்டிப்பாக தெய்வயானை பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. மறுக்க முடியாது. ஆனால் சங்க நூல்களில்? என்னறிவுக்கு எட்டி இல்லை. இன்னொரு தகவல். பிள்ளையாரின் துணையால்தான் முருகன் வள்ளியை மணந்தார் என்ற குறிப்பும் திருமுருகாற்றுப்படையில் இல்லை.

இவையனைத்தும் எனக்குத் தெரிந்த கருத்துகள். இந்தக் கருத்துக்கு மறுப்புக் கருத்திருந்தால் தெரிந்து கொள்ள ஆயத்தமாக இருக்கிறேன்.

மூவிரு முகங்கள் போற்றி
முகம் பொழி கருணை போற்றி
ஏவரும் துதிக்க நின்ற ஈராறு தோள் போற்றி

அன்புடன்,
கோ.இராகவன்

தூத்துக்குடியை ஆண்டவந்தான் காப்பாத்தனும்

உண்மை அதுதாங்க. போன வாரம் தூத்துக்குடிக்கு அவசர வேலையாப் போக வேண்டியிருந்தது. அப்பப் பாத்ததையும் கேட்டதையும் வெச்சுத்தான் சொல்றேன் தூத்துக்குடிய ஆண்டவந்தான் காப்பாத்தனும்னு.

மதுரைப் பக்கத்தில இருந்து தூத்துக்குடிக்குப் போறவங்க பாஞ்சாலங்குறிச்சிக்கான குறுக்குச்சாலை வழியாகப் போகனும். அப்படித் தூத்துக்குடிக்குள்ள நொழையும் போது மொதல்ல புதிய பேருந்து நிலையம் வரும். அது நான் சின்னப்பிள்ளையிலேயே பழைய பேருந்து நிலையமாயிருச்சு. இருந்தாலும் அது ரெண்டாவது வந்ததால இன்னைக்கும் புதிய பேருந்து நிலையந்தான். அந்தப் பேருந்து நிலையத்தை ஒட்டி ரயில்வே தண்டவாளம் ஓடும். அதுதான் தூத்துக்குடியப் பிரிக்கிறது.

அந்த ரயில்வே தண்டவாளத்துல ஒன்னாங் கேட்டு, ரெண்டாங் கேட்டு, மூனாங்கேட்டுன்னு மூனு கதவுகள். ரயில் போறப்ப மட்டும் மூடுவாங்க. அதுல மூனாங்கேட்டுங்குறது புதிய பேருந்து நிலையம் பக்கத்துல இருக்கு. அது வழியாத்தான் பழைய பேருந்து நிலையத்துக்கும் ஊருக்குள்ளயும் போயாகனும். ஆனா பாருங்க...அங்க எப்பவுமே ஒரே நெரிசல். கூட்டம். போக்குவரத்துக் குழப்பம்னு எக்கச்சக்க பிரச்சனைகள்.

சரி...இந்த மாதிரிப் பிரச்சனைகளை ஒரு மேம்பாலம் தீத்துருதே. அதுனால ரெண்டு வருசத்துக்கு முன்னாடி பாலம் கெட்டத் தொடங்குனாங்க. அதுக்கேத்த மாதிரி பெரிய தூண்களை எழுப்பியும் சாரச்சுவரு கட்டியும்னு வேலை தொடங்குச்சு. ஆனா இன்னைக்கும் அது அப்படியே இருக்கு. வேலை அதுக்கப்புறம் நடக்கலை.

ஏன்னா அதுக்குக் காரணம் தூத்துக்குடி பெரியசாமிதான்னு ஊருக்குள்ள பேச்சு. இவரு பலமுறை சட்டமன்ற உறுப்பினரா இருந்திருக்காரு. கட்சித் தலைமையிடம் நல்ல செல்வாக்கு. ஊருக்குள்ளயும் வெளியயும் நல்ல சொத்து. அவருதான் பாலங்கட்ட விடாம தடுக்கிறது. அதுக்கு வெளிப்படையா சொல்ற காரணம்...பாலங்கட்டுனாலும் பிரச்சனை தீராதாம். ஆனா உண்மையான காரணம் வேற. பாலம் வந்துச்சுன்னா பக்கத்துலயே இருக்குற அவரோட மக பேர்ல கெட்டுன பெரிய ஓட்டல அது மறைக்குமே. அதுவுமில்லாம அந்த மகதான இப்போதைய சட்டமன்ற உறுப்பினரும் கூட. அமைச்சரும் கூட.

அத்தோட விட்டாரா? இன்னொரு புதுத்திட்டத்தையும் கொண்டு வந்துருக்காரு. அதாவது தூத்துக்குடி வளர்ந்துக்கிட்டே போகுதாம். அதுனால ரயில் நிலையத்த ஏற்கனவே இருக்குற எடத்துல இருந்து நகட்டி ஊருக்கு வெளிய இருக்குற மீளவட்டானுக்குக் (பக்கத்துச் சிற்றூர்) கொண்டு போயிரனுமாம். அப்படிக் கொண்டு போயிட்டா...பழைய தண்டவாளங்க தேவையில்லையே. கேட்டப் பூட்ட வேண்டிய அவசியமில்லையே. அப்ப மேம்பாலம் வேணும்னு கேக்க மாட்டாங்கள்ள. அதுவுமில்லாம மீளவட்டான் வட்டாராத்துல இவரு நெலம் வாங்கிப் போட்டிருக்காருன்னு சொல்றாங்க. ரயில் நிலையம் அங்க போயிட்டா? நெலத்தோட மதிப்பு எங்கயோ போயிரும்ல. அடேங்கப்பா! ஒரே கல்லுல ரெண்டு மாந்தோப்பு.

இதுல இன்னொரு நகைச்சுவை என்னன்னா....முந்தி தூத்துக்குடிக் கலெக்டரா இருந்த ஹேமந்த்குமார் சின்ஹாங்குறவரு ஆயிரத்து தொள்ளாயிரத்துத் தொன்னூறுகள்ளயே தூத்துக்குடிக்கான ரயில்வே நிலையத்தை மீளவட்டானுக்கு மாத்தனும்னு சொன்னாரு. அப்ப அதக் குறுக்க விழுந்து தடுத்தது இவர்தானாம்.

இப்படி ஒரு மக்ரூன் மாதிரி (தூத்துக்குடிக்காரங்களுக்கு லட்ட விட மக்ரூன் பெருசு) பிரச்சனை இருக்கும் போது எதிர்க்கட்சி புகுந்து விளையாடியிருக்க வேண்டாமோ? ஆனா முக்கிய எதிர்க்கட்டிகளான அதிமுகவும் மதிமுகவும் சத்தமே காட்டலை. ஆனா பாருங்க திமுகவோட கூட்டணிக்கட்சியான காங்கிரஸ் கட்சி கிண்டலடிக்கி. முனிசிபல் ஆபீஸ் முன்னாடி மிகப் பெரிய தட்டி வெச்சிருக்காங்க. அதுலதான் நான் சொன்ன தகவல்களைக் கிண்டலாச் சொல்லியிருக்காங்க. அதுல காங்கிரஸ் கட்சியோட உள்ளூரு, மாநில, அகில இந்தியப் புள்ளிகளோட அத்தன பேரோட படங்களும் இருக்கு. இருந்தாலும் இன்னும் ஒரு முடிவும் தெரியல. வேலை நடக்குற அடையாளமே காணோம். அதிகுமவுக்கும் மதிமுகவுக்கும் கிடைச்ச எதோ ஒன்னு காங்கிரசுக்குக் கிடைக்கலையோ என்னவோ!

அதுவுமில்லாம ஊருக்குள்ள சாலைகளைப் பாக்கனுமே.....பிறந்தநாள் கொண்டாடுவாங்களே அது மாதிரி சாலைல போறவங்க வர்ரவங்க அந்தக் குழிக்கு மூனு வயசு. இந்தக் குண்டுக்கு நாலு வயசுன்னு பேசுறாங்க. ஆனாலும் குழிங்களும் குண்டுங்களும் நாளொரு குட்டியா போட்டு வம்ச விருத்தி செய்றாங்க. அதுக்குக் குடும்பக் கட்டுப்பாட்டுக்கும் வழியக் காணோம். இது எந்தக் கட்சியில இருந்து சட்டமன்ற உறுப்பினர் வந்தாலும் இந்த நெலமைதான். அதான் சொன்னேன்....தூத்துக்குடிய ஆண்டவந்தான் காப்பாத்தனும்னு.

(இந்தப் பதிவிற்கான தகவல்கள் தூத்துக்குடி வாழ் மக்கள் சிலரிடம் இருந்தும் தூத்துக்குடிச் சுவரொட்டிகளில் இருந்தும் ரோடுகள், பாலங்கள் ஆகியவற்றின் நிலமைகளை நேரில் பார்த்ததில் இருந்தும் பெறப்பட்டன.)

அன்புடன்,
கோ.இராகவன்