மடமையைக் கொளுத்துவோம்
"தாயே! அண்ணல் காத்துக்கொண்டிருக்கிறார். பல்லக்கும் ஆயத்தமாக இருக்கிறது. புறப்படலாமா அம்மா?". பணிவோடு கேட்டுவிட்டு மறுமொழிக்காக அன்னையின் திருமுகத்தையே ஆவலுடன் நோக்கிக்கொண்டிருந்தான் அனுமன். இதுநாள்வரை மேகம் மறைத்த நிலவைப் போல ஒளி இழந்திருந்த சீதையின் திருமுகத்தில் புன்னகை பெருகி பொலிவைக் கூட்டியது. அனுமனுக்கோ கால்கள் தரையில் நிற்கவில்லை. அன்னையையும் அண்ணலையும் ஒருசேரக் காணும் பேறல்லவா கிடைக்கப் போகிறது. கூடுதலாக அன்னையின் புன்னகை அவன் உள்ளத்தை குதியாட்டம் போடவைத்தது.
"அனுமா! நல்ல செய்தி கொண்டு வந்தாய். என்னிடத்தில் இப்பொழுது தருவதற்கு அன்பைத்தவிர ஒன்றுமில்லை. அது உனக்கு என்றும் குறைவில்லாமல் உண்டு. நீடு வாழி! மகனே! என்று அண்ணல் காடேகினாறோ அன்றே பல்லக்கு ஏறுவதை புறக்கணித்துவிட்டேன். வனவாச வாக்கை முறிக்கும் கோடாலியல்லவா அது. நான் நடந்தே வருகிறேன். நீ என்னுடன் வந்து வழிகாட்டு. காத்துக் காத்துப் பூத்த என் கண்கள் அவரின் கோலக்காட்சியைக் காண ஆவலாக உள்ளன. நிறையப் பேசினால் அழுதுவிடுவேன் போல் இருக்கிறது. நேரத்தைக் கடத்தவேண்டாம். செல்வோம் வா" என அனுமனை அழைத்துக் கொண்டு நடந்தாள் ஜானகி. கால்களில் துள்ளல். கண்களில் கண்ணீர். உள்ளத்தில் உவப்பு. விரைந்து நடக்கவோ நாணம். மெதுவாகச் செல்ல மனம் விடவில்லை. தவிப்போடு நடந்தாள் வைதேகி.
கரிய திருமேனி கரும்பாறையில் அமர்ந்திருந்தது. வீடணன், சுக்ரீவன், அங்கதன், ஜாம்பவன் முதலானோர் முன்னின்றனர். ஏனைய வானரக் கூட்டம் பின்னின்றது. இலக்குவன் அருகில் நின்றான். அவனுக்கோ அண்ணியெனும் அன்னையைக் காணும் ஆவல். அண்ணன் முகத்தில் அந்த ஆவலைக் காணத் திரும்பியன் குழப்பத்தில் ஆழ்ந்தான். கருப்பு நிறமென்றாலும் களையான இராமனின் வதனம் மேலும் கருத்து புயலுக்கு முந்திய முகிலைப் போல அமுக்கமாகவும் அச்சப்படுத்தும் விதமாகவும் இருந்தது. ஒன்றும் புரியாமல் தவித்தான் இலக்குவன். கூடிவரும் வேளையில் குழப்பம் நேர்ந்து விடக்கூடாதே என்று அவன் நெஞ்சம் வேண்டிக்கொண்டு இருந்தது.
கூட்டத்தில் எழுந்த சிறிய சலசலப்பு சீதையின் வரவுக்குக் கட்டியங் கூறியது. இராமனுக்கு எதிராக எதையுமே நினைத்திராத அவள் இன்று அவன் எதிரே தலைகுனிந்து அமைதியாக நின்றாள். விம்மலை வெளிக்காட்டாமல் உள்ளமும் உடலும் ஒடுங்கியிருந்தாள். அன்னையைக் கண்டு அன்போடு வணங்கி நின்றான் இலக்குவன். "இலக்குவா!" என்ற அண்ணனின் குரல் அபஸ்வரமாக அவன் செவிகளில் விழுவும் திரும்பிப் பணிந்து நின்றான். சிறிய தூறலாகத் தொடங்கும் பெருமழைபோல இராமன் திருவாயினின்று சொற்கள் வந்து விழலாயின. "இலக்குவா! நெருப்பு மூட்டு". முதலில் திடுக்கிட்டாலும் ஒருவழியாகச் சமாளித்துக் கொண்டு விறகு சேகரித்தான் இலக்குவன். எல்லாம் ஈரவிறகுகளாகக் கிடைத்தன. அனைத்தையும் கூட்டி நெருப்பு மூட்டினான். புகையே இல்லாமல் ஈர விறகுகள் எரியத்தொடங்கின. புகையப்போவதெல்லாம் வேறிடத்தில் என்று அந்த ஈர விறகுகள் அறியுமோ என்னவோ!
"சீதா இந்த நெருப்பில் மூழ்கி என்னிடம் வா" உணர்ச்சியற்று ஒலித்தது அண்ணலின் குரல். அரண்டான் இலக்குவன். விதிர்த்தான் வீடணன். அதிர்ந்தான் அனுமன். கலங்கியது கூட்டம். அனுமனின் கண்களில் குற்றாலம் குமுறியது. உடம்பு வெடவெடவென நடுங்கியது. "அன்னையின் மீது ஐயன் ஐயம் கொண்டாரே! அன்னையைப் பார்க்கையில் பரிதவிப்பு தோன்றுகிறது. ஆனால் அண்ணலிடம் நான் என்ன சொல்ல இயலும். யார் பக்கம் இருப்பேன்". மருண்டு போனான் அனுமன். இராமன் கூறியது அனைவரின் காதுகளிலும் இன்னும் ஒலித்துக்கொண்டிருந்தது. ஆயினும் எங்குமில்லாத அமைதி.
இதுவரை ஒடுங்கியிருந்த சீதையின் பெண்மை விழித்தெழுந்தது. "ஸ்வாமி! இதுவரை உங்களை ஏன் எதற்கு என்றெல்லாம் கேட்டறியாத நான், உங்களைக் கைப்பிடித்தவள் கேட்கிறேன். எதற்காக இந்த நெருப்புக் குளியல்?"
"தேவி! உன்னுடைய புனிதத்தன்மையை ஊராருக்கும் உலகோருக்கும் உணர்த்தும் சோதனைக் களமிது. தனலாடி வா"
"என் மீது ஐயமா? அதை உடன் பிறந்தே கொல்லும் வியாதி என்றல்லவா பழிப்பார்கள். அது உங்களைத் தீண்டியதா? இரகு குலத்தில் இதென்ன புது வழக்கம். நம் இல்லறத்துக்கே இது இழுக்கல்லவா. நீங்களே இப்படிச் சொன்னால், ஊரும் உலகமும் உங்களைப் பின்பற்றாதா?"
இராமனின் இதழ்களில் என்றுமில்லாத அமைதி குடிபுகுந்தது. இலக்குவனும் அனுமனும் கண்களில் காவிரி பெருக்கினர். அமைதியை உடைக்க வானர மன்னன் சுக்ரீவன் வாய்திறந்தான். "அம்மா! ஐயனுக்கு உங்கள் மீது சந்தேகம் இருக்குமென்று நாங்கள் கருதவில்லை. அப்படி இருக்க வாய்ப்பே இல்லை. நாளை நாட்டுக்கு அரசியாகப் போகும் நீங்கள் குற்றமற்றவராக இருக்கவேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பார்கள். அதை நீங்கள் உறுதிபடுத்துவது முறையல்லவா? தங்களை குற்றமற்றவர் என்று அவர்களுக்கு விளங்கவைக்க வேண்டியது உங்கள் கடமை அல்லவா"
"நன்று! கிஷ்கிந்தை மன்னர் சுக்ரீவரே நன்று! அப்படியானால் அரசுக் கட்டிலில் அமர்வதென்று அவர் முடிவெடுத்துவிட்டாரா? என்னைக் குற்றமற்றவள் என்று ஊருக்குச் சொல்லி பதவியைப் பிடிக்கப் போகிறாரா? என்னை நெருப்பில் ஏற்றி அவர் அரியணை ஏறப்போகிறாரா? நான் நெருப்பில் இறங்கினால் எல்லோரும் நம்பிவிடுவார்கள் என்று உறுதியிட்டுக் கூறயியலுமா? அதற்குப்பின்னும் யாரேனும் கேள்வி எழுப்பினால் என்ன செய்வார்? என்னைத் துறப்பாரா? பதவியைத் துறப்பாரா?" இராமனின் வில்லம்புகளை விடவும் வேகமாக சீதையின் சொல்லம்புகள் பாய்ந்தன.
"அம்மா! இந்த மண்ணுக்கு அவரைப்போல மன்னர் கிடைக்க வேண்டுமல்லவா? மக்கள் அவரை இழக்கலாமா?". சொற்களை உடைந்த கற்களைப் போல் அடுக்கினான் வீடணன்.
"இலங்கை வேந்தே! நல்ல மன்னரைப் பற்றி நீங்கள் வாய்திறந்து விட்டீர்கள். உங்களை ஒன்று கேட்கிறேன். நீங்கள் உங்கள் அண்ணனை விட்டு நீங்கியது எதனால்? அவர் இந்த நாட்டு மக்களுக்கு அடாது செய்தாரா? அவருடைய ஆட்சியில் இலங்கை மக்கள் துன்பப்பட்டார்களா? இங்கே பெண்களுக்கு பாதுகாப்பில்லாது போய்விட்டதா? சிறுவர்களுக்கு கிடைக்க வேண்டிய கல்விக்குத் தடையிட்டாரா? சொல்லுங்கள். மாற்றான் மனைவியாகிய என்னைத் தீண்ட நினைத்த குற்றத்தினால்தானே அவரை விட்டுவிலகினீர்கள். அதற்குன்டான தண்டனையை அவர் அடைந்துவிட்டார். அது முறைதான். இலங்கைக் குடிமகன் என்ற நிலையிலிருந்து நீங்கள் சொல்லுங்கள். உங்கள் தமையர் சிறந்த மன்னரா? இல்லையா?"
தலைகுனிந்தான் வீடணன். பெண்குலத்தின் பிரதிநிதியாக வைதேகி தொடர்ந்தாள். "என்னுடைய மாமன் நல்ல அரசர் இல்லையா? என் மகனை ஒத்த பரதன் சிறந்த மன்னன் இல்லையா? அவனுடைய ஆட்சியில் அயோத்தி மக்கள் நலமாகத்தானே வாழ்கிறார்கள். என்னவர் மன்னவரானாலும் சிறப்பாகத்தான் ஆட்சி புரிவார். பிறகு ஏன் இத்தனை பேச்சு என்று நினைக்கின்றீர்களா? அயோத்தி இவருக்கு முன்னும் இருந்தது. இவருக்குப் பின்னும் இருக்கும். அயோத்திக்கு வேறோர் அரசர் கிடைப்பார்கள். ஆனால் எனக்கு...?". உணர்ச்சியின் வேகத்தில் விம்மல் பொருமலாக மாறுகிறது. "நெருப்பில் இறங்க வேண்டியது நான். இறங்கச் சொன்னது அவர். நான் கேள்வி கேட்டது அவரிடம். அவரைத்தவிர அனைவரும் ஒவ்வொரு விளக்கம் கொடுக்கிறீர்கள். அவர் என்ன கூறப்போகிறார் என்பதை அவர் கட்டிய மனைவி என்ற முறையில் கேட்க விருப்பப்படுகிறேன்."
பவழ இதழ்கள் திறந்தன. "தேவி! உன்னுடைய இந்த நிலைக்குக் காரணம் நீயேதான். ஒருவருடைய உயர்வுக்கும் தாழ்வுக்கும் அவரவரே காரணம். யாகாவாராயினும் நாகாக்க வேண்டும். காவாக்கல் ஊரார் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாக நேரிடும். எந்த நிலையிலும் மற்றவர் மனம் புண்படும்படி பேசுதல் தகாது. அதிலும் எதிர்பாலாரிடம் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தேவி! உனக்கு நினைவிருக்கிறதா? அன்று மானைத்தேடி நான் சென்ற நாள். நாம் பிரிந்த நாள். அன்று நீ செய்த பிழைக்குத் தண்டனையாகத்தான் இந்த அக்கினிப் பிரவேஸம்."
"ஸ்வாமி. அன்று நான் செய்த தவறா! இலக்குவன் கிழித்த கோட்டைத் தாண்டியதைச் சொல்கிறீர்களா?".
"இல்லை தேவி. இலக்குவன் கோட்டைத் தாண்டியது விருந்தோம்பலுக்காக. அதில் தினையளவும் தவறில்லை. நல்ல இல்லத்தரசியாக உன் கடமையை நீ செய்ய நினைத்தாய். அது பாராட்டுக்குறியது. ஆனால் இது மாரீசன் உன் பெயரையும் இலக்குவன் பெயரையும் உரக்கச் சொல்லி அழைத்தவேளை நடந்தது. முதலில் இலக்குவனை போய் பார்த்துவரச் சொன்னாய். அவன் முதலில் மறுத்தான். அப்போது நீ உரைத்தது நினைவிருக்கிறதா?"
ஆத்திரத்திலும் ஆவேசத்திலும் அன்று பேசியது இன்று நினைவுக்கு வந்தது ஜானகிக்கு. "இலக்குவா! நீ என் பேச்சை மீறலாமா? உன் அண்ணனுக்கு ஒரு துன்பமென்றால் போய்க்காப்பாற்ற மறுக்கிறாயே! என்ன உடன்பிறப்பு நீ! அன்று ஒரு தம்பி நாட்டை கைப்பற்ற சூழ்ச்சி செய்தான். இன்று நீ என்னைக் கைப்பற்ற முயற்சி செய்கிறாயா?". அப்பொழுது சொன்னதற்கு இப்பொழுது வருந்தினாள் சீதை.
இலக்குவன் சோகத்தின் வேகம் தாங்கமாட்டாது இலங்கை நிலத்தில் வீழ்ந்து அழுகிறான். தன்னால் தன் அன்னைக்கு நேர்ந்த இக்கட்டின் குற்ற உணர்ச்சி அவனைத் துன்புறுத்தியது. செவ்விதழ்கள் மீண்டும் அசைந்தன. "இப்பொழுது புரிகிறதா தேவி. அன்று ஒரு குற்றமும் அறியாத இலக்குவன் மீது நீ சாற்றிய குற்றச்சாட்டுக்கு என்ன சொல்லப் போகிறாய். அவன் அதை அன்றே மறந்துவிட்டான். ஆனால் அவனுக்கு நேர்ந்த கொடுமைக்கு பரிகாரமே இது".
மெல்லத் தெளிந்தாள் சீதை. "நன்று! மிக நன்று! வீட்டுக்குள் நடந்த விவாதத்திற்கு வீதியில் விசாரணை. அரங்கத்துக்குள் நடக்க வேண்டியது அம்பலத்துக்கு வந்தது ஏன்? தெரியாமல் செய்த பிழைக்கு ஊரார் அறிய தண்டனையா? குற்றம் என்னுடையதுதான். அன்று நான் அப்பிடிப் பேசியிருக்கக் கூடாது. இலக்குவா அன்று நீ பட்ட வேதனையை இன்று நான் புரிந்துகொண்டேன். என்னை மன்னித்துவிடு. தவறுக்கு உண்டான தண்டனையை நான் ஏற்கனவே அடைந்து விட்டேன். அப்படியிருக்க வழக்கு மீண்டும் அவைக்கு வரக்காரணம் என்ன? ஒருவேளை தனிமையில் இலக்குவன் முன் என்னை இதே தண்டனைக்கு உட்படச் சொன்னால் ஒத்துக்கொண்டிருப்பேன். அந்தக் குற்றத்திற்கு ஊரரிய தண்டனை ஏற்க நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். அப்படி ஒருவேளை நான் ஏற்றுக்கொண்டாலும் உலகம் இதை நாளை எப்படி எடுத்துக்கொள்ளும்? எதையும் பேசும். சீதையின் மேல் ஐயம் கொண்டுதான் இப்படிப் பட்ட தண்டனை கொடுக்கப்பட்டது என்றும் பேசும். இதையே காரணம் காட்டி நாளைய பெண்களை நெருப்பில் தள்ளினாலும் தள்ளும் இந்த உலகம். அப்படி நேர ஒரு தவறான வழிகாட்டியாக இருக்க எனக்கு விருப்பமில்லை. கோசலை நந்தா! நெருப்பைத் தழுவி உம்மைச் சேரச் சொன்னீர்கள். அது நடக்காது. உங்களுக்குத் தெரியுமா? உங்கள் மோதிரத்துடன் அனுமன் என்னைச் சந்திக்க வந்தான். என்னை அவன் தோள்களில் தொற்றிக் கொள்ளச் சொன்னான். ஒரு மகனாய் என்னை உங்களிடத்து சேர்ப்பேன் என்றான். அவனிடம் மறுத்து நான் சொன்னேன். அனுமா! இங்கிருந்து செல்லவும் இராவணனைக் கொல்லவும் என் சொல்லால் முடியும். ஆனால் அன்னார் வில்லுக்கு அது இழுக்கு. என்னைக் கவர்வதன் மூலம் அவரைச் சீண்டிப் பார்க்கிறான் இலங்கை வேந்தன். ஆதலால் அவர் வந்து வில்லால் அழைத்தால் மட்டுமே நான் வருவேன்."
"இப்படியெல்லாம் உங்கள் வில்லுக்குக் கூட மதிப்புக் கொடுத்த என் பெண்மைக்கு மதிப்புக் கொடுக்கத் தவறிவிட்டீர்களே! ஒரு நல்ல கணவன் மனைவிக்கு அழகு நாலுபேர் அறியாவண்ணம் குடும்ப விவகாரத்தை சீர்செய்வது. ஆனால் நீங்கள் அப்படிச் செய்யத் தவறிவிட்டீர்கள். உறவுகளுக்குள் குழப்பம் வந்தால் பிரிவுதான் சிறந்த மருந்து. அதுமட்டுமல்லாது நான் நெருப்பில் இறங்கப்போவதுமில்லை. ஆகவே உங்களைப் பிரிவது என்ற முடிவுக்கு நான் வந்துவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள்."
"அதுமட்டுமல்ல. என்று சந்தேகம் என்று வந்துவிட்டதோ அன்றே உறவு சீர்கெட்டுவிடும். அதை செம்மை செய்யும் வழிமுறைகள் இதுவரை இல்லை. நெருப்பு என்னை வென்றால், களங்கம் எனக்குக் கற்பிக்கப்படும். நெருப்பை நான் வென்றால், நெருப்பின் மீதே களங்க முத்திரை குத்தப்படும். இருவருக்கு இடையில் உள்ள பிரச்சனையில் மூன்றாவதாக நுழைய மனிதர்கள் என்ன, உயிரற்ற எந்தப் பொருளுக்கும் உரிமையில்லை. அப்படியிருக்க, சேர்ந்தாரைக் கொல்லிக்கு நீதிபதி பதவியா? பெண்களுக்காக நாளைக்கு அவர்கள் இப்படிப்பட்ட நீதிமன்றத்தில் நிற்கக்கூடாதென்பதற்காக என் கணவரைப் பிரிகிறேன். இலக்குவா! அன்று உன் தூய மனதிற்கு துன்பம் தந்தறக்காக என்னவரை ஒரு முறை பிரிந்து வருந்தினேன். இன்று என் பெண்மைக்கு நேர்ந்த துயரத்தில், வருத்தமின்றி என் கணவரைப் பிரிகிறேன். வருகிறேன்."
"நான் தனியாக இருந்தால் என்மீது தூற்றல்கள் இடையறாது விழும். கணவனைப் பிரிந்த பெண்களுக்குத் தாய் வீடுதானே முதல் அடைக்கலம். நாளைய மகளிர் குலம் தனியாக வாழும் திறம் பெறட்டும். தன்னுடைய கால்களில் தாமாகவே நிற்கும் திறம் பெறட்டும். பெண்ணாலும் தனித்து வாழ இயலும் என்ற நிலை உண்டாகட்டும். அதற்கு முதல்படியாக என்னுடைய முடிவு இருக்கட்டும். அம்மா! என்னைப் பெற்றவளே மண்மகளே! உன் மகள் அழுகிறாளம்மா! உன்னை அழைக்கிறாளம்மா! என்னை உன்னோடு சேர்த்துக்கொள்! அதன் மூலம் என் தூய்மை எல்லோர்க்கும் விளங்கட்டும். நாளை எந்தப் பெண் மீதும் பழிபோட நினைப்பவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கட்டும். உன்னிடத்தில் பிறந்தாலும் உன்னோடு வாழ எனக்கு இதுவரை கொடுத்து வைக்கவில்லை. இனியாவது ஒரு மகளாக என் கடமையைச் செய்ய எனக்கு வழிகாட்டம்மா!" கதறினாள் சீதை.
விண்ணீர் விழுந்தாலே நெகிழ்பவள், தன் மகளின் கண்ணீரைப் பொறுப்பாளா? வெடித்துக்கொண்டு வந்தாள். மகளை வாரி அணைத்தாள். பழித்தோர் நடுவே இன்னும் தன் மகளை இருக்கவிடாமல் விரைந்து மறைந்தாள். மறைந்த இடத்தில் மேடிட்டிருந்தது. அங்கே மாதர் தம்மை இழிவு செய்யும் மடமை கொளுத்தப்பட்டிருந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
14 comments:
மிகவும் அருமையான கதையாக்கம்..
ஒரு சந்தேகம்.. இராமாயணத்தில் நீங்கள் கூறிய இடத்தில் பூமித்தாய் சீதா பிராட்டியை அழைத்துக்கொள்ள மாட்டாள் என்று நினைக்கிறேன்..
இப்படி உங்கள் கற்பனைப்படி நிகழ்ந்திருந்தால் இராமாயணம் எப்படி போயிருக்கும் என்பது உன்னொரு பக்கம்.
நல்ல கற்பனை.. வளர்க உங்கள் எழுத்து
அன்புடன்
விச்சு
neyvelivichu.blogspot.com
பாராட்டுகளுக்கு நன்றி மூர்த்தி.
விச்சு, நீங்கள் சொல்வது போல இராமாயணம் முடியாது. எப்படி முடிந்திருக்க வேண்டும் என்ற என்னுடைய ஆவல்தான் இந்தக் கதை. நீங்கள் கதையைப் படித்துப் பாராட்டியதற்கு நன்றிகள் பல.
நடையும், முடிவும் நன்றாக இருந்தது... ஆனால் ஒரு இலக்கிய வடிவமாக இராமயணம் நிற்கையில் அதன் சோகம் புரிந்துகொள்ளகூடியது. அது சமயமாகவும், அரசியலாகவும் வடிவெடுக்கையில் கொளுத்தத்தக்கது. நன்றிகள்..
உண்மைதான் தங்கமணி. ஒரு நல்ல இலக்கியமாக இராமாயணத்தைக் கருதலாம். மத நூலாகவோ வாழ்வியல் நூலாகவோ கருத முடியாது என்பதே எனது கருத்தும்.
மிகவும் அருமையான பதிவு. நன்றிகள் இராகவன். இது மட்டும் அல்ல உங்கள் மற்ற பதிவுகளும் மிக அருமை. நன்றிகள்.
இக்கதைய பற்றி:
முடிவும், அதன் தாக்கங்களும் சிறப்பு.
அற்புதமான நடை. ஏதாவது அச்சு ஊடகத்திற்கு அனுப்புங்களேன்.
paari.weblogs.us
படித்துக் கருத்திட்டமைக்கு நன்றி பாலாஜி.
அச்சூடகத்திற்கு அனுப்புமளவிற்கு இந்தக் கதையில் புதுமையில்லை என்பது எனது கருத்து. பலரும் ஏற்கனவே சொன்னதுதான். சொல்லிய விதம் வேண்டுமானால் மாறுபடலாம். இன்னும் சிறப்பாக எழுதி அந்தக் கதைகளை அச்சூடகத்திற்கு அனுப்பலாம் என்று எண்ணம்.
நண்பா இராகவா! இன்றுதான் உம் வலைப்பூவை கண்டேன். காகுத்தன் கதையை..கலியுகத்திற்கு ஏற்ற வகையில் தீர்க்கமான தெளிவான நடையில் சொல்லியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்!
நன்றி பாசிட்டிவ் ராமா....நீங்கள் படித்துக் களித்ததில் மகிழ்ச்சி.
ராகவன்,
இன்னுமொரு நல்ல கதை உங்கள் வலைப்பதிவில். பல நுட்பமான விஷயங்களை கவனித்து எழுதியுள்ளீர்கள்.
ஏது வாலியின் பார்வையை இன்னும் தொடாமல் விட்டு வைத்திருக்கிறீர்கள்? உங்கள் கற்பனை புதுமையாய் இருக்கும் என்று எண்ணுகிறேன்.
என் நண்பர்கள் எல்லோருக்கும் உங்கள் வலைப்பதிவின் சுட்டியை அனுப்பிக் கொண்டிருக்கிறேன். இந்த நல்ல எழுத்துகளை இன்னும் நிறைய பேர் படிக்க வேண்டும்.
குமரன்.
மிகவும் ரசித்தேன். தொடரவும்.
அன்புடன்,
எல்லே ராம்
குமரன், என்னைத் திக்குமுக்காட வைக்கின்றீர்கள். உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி. கதையைப் படித்து கருத்திட்டமைக்கு நன்றி.
நன்றி எல்லே ராம். நீங்களும் படித்து மகிழ்ந்தது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
படித்தேன்
யோசித்தேன்
ரசித்தேன்
வாழ்த்துக்கள்!! :-)
// CVR said...
படித்தேன்
யோசித்தேன்
ரசித்தேன்
வாழ்த்துக்கள்!! :-) //
ஆகா...உனக்குப் பிடிச்சிருக்கா இது. பாராட்டுக்கு நன்றி.
மொத்தமுள்ள பெண்மையின் குரல் இதுவாகத்தான் இருக்கும்.
நெற்றிக்கண் திறந்தாலும் குற்றம் குற்றமே.
இராமன் பாவம்.
நல்ல கணவனாக இருக்க நேரம் கிடைக்காமல்
காவியம் முடிந்தது.
தீர்க்கமான வாக்கியங்கள்.
Post a Comment