Thursday, June 16, 2005

வெட்டு கத்திரி

வெட்டு கத்திரி

துணியை வெட்டும் கத்திரி அல்ல. செய்து வைத்தால் எல்லோரும் சேர்ந்து வெட்டும் கத்திரி. கத்திரி வதக்கல்களில் சற்று மாறுபட்ட வகை. இது மிகவும் எளிமையான பதார்த்தம். பூரிக்குத் தொட்டுக்கொள்ள மிகவும் சுவையாக இருக்கும்.

கத்திரிக்காய் (பெரியதும் பயன்படுத்தலாம். சிறியதும் பயன்படுத்தலாம்).
மிளகாய்த் தூள் - தேவையான அளவு
மஞ்சள் தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
நல்ல எண்ணெய் - தேவையான அளவு

1. பெரிய கத்திரிக்காய் என்றால் வட்ட வட்டமாக வெட்டிக் கொள்ளுங்கள். சிறிய கத்திரிக்காய் என்றால் நான்காக வெட்டிக்கொள்ளுங்கள். (கத்திரிக்காய் கழுவப்பட்டும் ஈரமின்றியும் இருக்க வேண்டும். காம்பை நீக்கியிருக்க வேண்டும்).

2. மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்புத் தூளை கலந்து கொள்ளவும்.

3. கத்திரிக்காயின் வெட்டப்பட்ட பக்கங்கள் இந்தக் கலவையில் படுமாறு அழுத்திப் புரட்டிக் கொள்ளவும்.

4. நான்-ஸ்டிக் அல்லது தோசைக்கல்லில் நல்லெண்ணெய் தடவி மிதமான தீயில் காய விடவும்.

5. தூள் கலவையில் புரட்டப்பட்ட கத்திரிக்காய் துண்டங்களை சட்டியில் இட்டு வேக விடவும். நன்றாக வேகும் வரை பக்கங்களை மாற்றி மாற்றி போடவும். கருகி விடக் கூடாது.

6. நன்றாக வெந்ததும் தட்டில் எடுத்து சுடச்சுட பரிமாறவும்.

இதை பூரிக்குத் தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும். சப்பாத்திக்கும் பொருந்தும். தயிற் சோற்றோடு சேர்த்து உண்டால், ஒவ்வொரு நாளும் இதைச் செய்ய வேண்டி வரலாம். பெரிய கத்திரிக்கயானால் சுடு சோற்றோடு கலந்து சிறிது நல்லெண்ணெய் சேர்த்து பிசைந்து தின்றால் நன்றாக இருக்கும். தண்ணீரே தேவைப்படாத எண்ணெயும் குறைவாகப் பிடிக்கும் பதார்த்தமிது. நல்லெண்ணெய் பயன்படுத்தினால் சுவை கூடும். செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள்.

2 comments:

said...

அட என்னோட அப்பிடிப்போடு அடிசில் திரட்டியில் தெரியவில்லையே என நான் கவலை கொண்டு இருக்கிறேன்., கத்தரி வதக்கல்...கலக்கல்...கத்திரிக்காய் வெட்டி எண்ணையி கடுகு,கத்தரிக்காய்,ம.மீ.தூள் சேர்த்து வதக்கி செய்வேன் நான். ரகவன் கத்திரியையும் செய்து பார்க்கிறேன்.

said...

செய்து பாருங்கள் அப்படிப் போடு. உங்களுக்குக் கண்டிப்பாகப் பிடிக்கும். மிகவும் சுவையுள்ளது இது.