Thursday, April 06, 2006

3. படிப்படியா மலையிலேறி

ஆனையால பிரச்சனைன்னு சொன்னேல்ல....அது என்னன்னு இப்பச் சொல்றேன்.

கோவைக் குற்றாலங்குறது கோயமுத்தூருக்குப் பக்கத்துல இருக்கக் கூடிய காட்டருவி. கொஞ்சம் மலைக்காட்டுக்குள்ள போயி அருவீல குளிக்கனும். அதுக்குக் கோவைலருந்து பஸ்சும் போகுது. ஆனாலும் வண்டி வெச்சுக்கிட்டு போறது நல்லது. வழியில நல்ல இயற்கைக் காட்சிகள் உண்டு. அழகான பச்சை மலைகள். மலைக்குக் கீழ பச்சை வயல்கள். ரொம்ப நல்லாருந்தது பாக்க.

நாங்க பேரூர் கோயில முடிச்சிக்கிட்டு நேரா கோவைக் குற்றாலத்துக்குப் போனோம். வழியில காருண்யா காலேஜ் நல்லா எடத்த வளைச்சுப் போட்டுக் கட்டீருக்காங்க. அங்கயே ஜெபக் கூடம் எல்லாம் இருக்கு. நாங்க அதெல்லாம் கண்டுக்காம இயற்கை அழக ரசிச்சிக்கிட்டே மலையடிவாரத்துக்குப் போய்ச் சேந்தோம்.

எங்களுக்கு முன்னாடியே ஒரு பஸ்சும் சில வேன்களும் நின்னுக்கிட்டு இருந்திச்சு. ஆனா யாரையும் உள்ள விடல. ஒரு தூக்குத் தூக்கி கதவு (சினிமா செக் போஸ்ட்டுல பாத்திருப்பீங்களே) கீழ இறக்கியிருந்தது. சரீன்னு வண்டிய விட்டு எறங்கி கொறிக்கிறதுக்கும் குடிக்கிறதுக்கும் (பச்சத் தண்ணிதாங்க) வாங்கிக் கிட்டோம்.

நெறைய முன்னோர்கள் இருந்தாங்க. என்ன துறுதுறுப்பு. என்ன சுறுசுறுப்பு.அவங்கள வெரட்டிக்கிட்டு கடைக்காரங்க நல்ல வியாபாரம் பண்ணீட்டிருந்தாங்க. நாங்க நேரா டிக்கெட் கவுண்டருக்குப் போய் விசாரிச்சோம். அப்பத்தான் அந்த ஆனைப் பிரச்சனை தெரிஞ்சது.

ரெண்டு நாளைக்கு முன்னாடி ஒரு ஆனை உள்ள வந்து ஒரு சின்னப் பிள்ளைய கீழ தள்ளி விட்டுருச்சாம். அப்புறம் எங்கயோ உள்ள ஓடிப் போயிருச்சு போல. அதே போல இன்னைக்குப் பன்னெண்டு ஆனைக உள்ள வந்துருச்சாம். அதுல பிரச்சனையில்லை. ஒத்த ஆனையா இருந்தாத்தான் பிரச்சனை. கூட்டமா வந்தாக் கூட்டமா அமைதியாப் போயிருமாம். ஆனா பாருங்க...இந்தப் பன்னெண்டுல ஒன்னு மட்டும் வழிமாறிப் போயிருச்சாம். அத தெச திருப்பிக் காட்டுக்குள்ள வெரட்ட ஆளுங்க போயிருக்கிறதால யாரையும் உள்ள விட மாட்டாங்களாம்.

எப்ப உள்ள விடுவாங்கன்னு அவங்களுக்கும் தெரியாததால....அடுத்து என்ன செய்யலாம்னு யோசிச்சோம். நண்பனோட அண்ணந்தான் பூண்டியையும் ஈஷா தியான மண்டபத்தையும் மொதல்ல பாத்துட்டா சாப்பாட்டுக்கு அப்புறமா திரும்ப வந்து பாப்போம்னு சொன்னாரு. சரீன்னு வண்டிய பூண்டியப் பாத்துத் திருப்புனோம்.

போற வழியிலேயே ஒரு பக்கமாத் திரும்புனா ஈஷா தியான மண்டபம் வரும். ஆனா நாங்க நேரா பூண்டிக்குப் போனோம். நல்ல வெயில். புளியமரங்க நெறைய இருந்திச்சு. அந்த எலைகளும் சில புளியம் பிஞ்சுகளும் ரொம்பக் காஞ்சதுகளும் அங்கங்க கெடந்தது. அதையெல்லாம் கண்டும் காணாம நேரா கோயிலுக்குள்ள போனோம். நடுவுல சிவன். இந்தப் பக்கம் அம்மன். அந்தப் பக்கம் பிள்ளையாரு. இங்க ஐயருங்க பூஜை கெடையாது. கவுண்டர்கள்தான். நிர்வாகமும் அவங்க கிட்டதான் இருக்குது. இங்க மட்டும் இல்லாம பொதுக்கோயில்கள்ளயும் இது போல எல்லாச் சமூகத்தாரும் பாகுபாடு இல்லாம பூஜை செய்ற நெலம வரனும். (இது பத்தி இன்னொரு பதிவு போடனும். அதுனால இங்க நிப்பாட்டிக்கிரலாம்.)

அங்க சாமியக் கும்புட்டுட்டு திரும்பிப் பாத்தா நெறையப் பேரு கைல மூங்கில் கழியோட நிக்குறாங்க. வயசானவங்க இல்ல. இளவட்டங்களும் நல்லா கெதியா இருக்குறவங்களும் கூட கழியோட இருந்தாங்க. என்னன்னு கேட்டா மலையக் காட்டுனாங்க. செங்குத்தா கற்படிகள் போகுது. அதுல நாலு மணி நேரம் படிப்படியா மலையிலேறிப் போனா அங்க ஒரு குகைக்கோயில் இருக்காம். அதுக்குள்ள ஒரு சிவலிங்கமும் இருக்காம். பெரும்பாலும் ராத்திரி மலையேறி விடியக்காலைல சாமியப் பாத்துட்டு காலைலயே கெளம்பி மதிய வேளைக்கு கீழ வந்துருவாங்களாம்.

நாங்க போனது மதியங்கறதுனால கீழ எறங்குறவங்களத்தாம் பாத்தோம். மொத்தம் ஏழுமலையத் தாண்டிப் போகனுமாம். அந்தக் குகைல ஒரு ஓட்டை இருக்காம். அதுல தேங்காய உருட்டி விட்டா நேரா மலையடிவாரத்துக்கு வந்துருமாம். நாங்க மேல போகலையா அதுனால தேங்காய உருட்டி விடலை.

வந்தது வந்துட்டோமேன்னு கொஞ்ச தூரம் ஏறுனோம். செங்குத்தா இருக்குறதால மூச்சு வாங்குச்சு. கம்பில்லாம ரொம்ப ஏற முடியாதுன்னு தெரிஞ்சது. சரீன்னு ஒவ்வொருத்தரா கீழ எறங்கினோம். இப்போ இன்னமும் கஷ்டமா இருந்தது. நிதானமா எறங்குனோம். வழியில ஒரு பக்கத்துல சின்ன ஒத்தையடிப் பாத மாதிரி தெரிஞ்சது. அப்பிடியே அதுல உள்ள போனேன். ஒரு பயலும் கூட வரல. உள்ள போனா அங்க ஒரு சின்ன ஓட்ட. சின்ன குகை வாசல் மாதிரி இருந்தது. குனிஞ்சி உள்ள எட்டிப் பாத்தேன். உள்ள பத்துப் பன்னிரண்டு பேரு நிக்கவும் உக்காரவும் வசதியுள்ள ஒரு குகை. அதுல என்ன இருக்குங்குறீங்க? ஒரு சிவலிங்கம்.

குகைக்குள்ள நேரா நுழைய முடியாது. தரையோட தரையா குனிஞ்சி போகனும். சட்டைய அழுக்காக்க வேண்டாம்னு உள்ள போகல. அதுக்குள்ள நண்பர்கள் ரெண்டு பேரும் என்னமோன்னு வந்துட்டாங்க. அவங்களும் குனிஞ்சி குகையப் பாத்துக்கிட்டாங்க. ஒரு நண்பனோட ஃபிலிம் கேமராவுல கொஞ்ச ஃபோட்டோக்கள் எடுத்துக்கிட்டோம்.

கீழ எறங்கி அங்க இருந்த கொழாயில கையக் காலக் கழுவிக்கிட்டு வண்டீல ஏறி நேரா ஈஷா தியான லிங்கத்துக்குப் போனோம். போற வழியில ரெண்டு பக்கமும் மரங்கள் ரொம்ப அழகா இருந்தது. எறங்கி ஃபோட்டோ எடுத்துக்கிட்டோம். ரெண்டு பக்கமும் மரங்கள் இருந்த அந்த வழியில கடைசீல இருந்தது ஈஷா தியான மண்டபம்.

தொடரும்...

14 comments:

said...

ராகவன்,

ரொம்ப நல்லா இருக்கு உங்க பயணக்கட்டுரை. நீங்க சொன்ன செங்குத்தான மலை வெள்ளியங்கிரி மலையா?

அழகான் மரியாதை நிறைந்த கொங்குத் தமிழைப்பற்றியும், மக்களைப்பற்றியும் ஒண்ணூம் சொல்லலையே ??

said...

சுத்துங்க சுத்துங்க :) துளசியக்காவுக்கு போட்டியா இன்னொருத்தர் பயணக்கட்டுரை எழுத ஆரம்பிட்டாரு... நல்ல நேர்ல உக்காந்து சொல்ற மாதிரியே எழுதிருக்கீரு..


அன்புடன்
ஜீவா

said...

சுத்துங்க சுத்துங்க :) துளசியக்காவுக்கு போட்டியா இன்னொருத்தர் பயணக்கட்டுரை எழுத ஆரம்பிட்டாரு... நல்ல நேர்ல உக்காந்து சொல்ற மாதிரியே எழுதிருக்கீரு..


அன்புடன்
ஜீவா

said...

கொஞ்சம் எடுத்த போட்டோவெல்லாம் போடலாமில்ல. நாங்களும் பார்ப்போமே.

said...

பார்தீங்களா ராகவன்,

'நமக்கு தரிசனம் லபிச்சிருக்குன்னா கடவுள் எப்படியும் வழி காமிச்சுருவார்'னு நான் நம்புறது மாதிரியே
உங்களுக்கும் தரிசனம் கிடைச்சது.

எல்லாம் நாம் எப்பவோ செஞ்ச தருமம். வேற என்ன சொல்ல?

said...

// ராகவன்,

ரொம்ப நல்லா இருக்கு உங்க பயணக்கட்டுரை. நீங்க சொன்ன செங்குத்தான மலை வெள்ளியங்கிரி மலையா? //

ரொம்பவே சரியாச் சொன்னீங்க ஜெயஸ்ரீ. அது வெள்ளிங்கிரி மலைதான். பேரைச் சொல்லாம விட்டது தப்புத்தான். தப்புத்தான். :-)

//அழகான் மரியாதை நிறைந்த கொங்குத் தமிழைப்பற்றியும், மக்களைப்பற்றியும் ஒண்ணூம் சொல்லலையே ?? //

அந்த அளவுக்கு மக்களோட பழக நேரம் கிடைக்கல ஜெயஸ்ரீ. இருந்ததே ஒரு நாள். அதுல நெறைய இடம் சுத்துனோம். அதுனால இடங்களத்தான் பாக்க முடிஞ்சது. அடுத்த வாட்டி தனியா கோவைக்கே ஒரு டிரிப் போட்டுருவோம்.

said...

// சுத்துங்க சுத்துங்க :) //

ஜீவ்ஸ்...எதன்னு சொல்லுங்க. மக்கள் ரீலுன்னு நெனச்சுக்கப் போறாங்க. ஹா ஹா ஹா

// துளசியக்காவுக்கு போட்டியா இன்னொருத்தர் பயணக்கட்டுரை எழுத ஆரம்பிட்டாரு... நல்ல நேர்ல உக்காந்து சொல்ற மாதிரியே எழுதிருக்கீரு.. //

டீச்சர் எங்க...நான் எங்க...அவங்க எக்ஸ்பீரியன்ஸ் கூட என்னோட வயச விட நெறையா இருக்கும். (ஆனாலும் குருவை மிஞ்சிய சிஷயன் ஆகலாந்தானே ;-) )

அன்புடன்
ஜீவா

said...

// கொஞ்சம் எடுத்த போட்டோவெல்லாம் போடலாமில்ல. நாங்களும் பார்ப்போமே. //

அந்த வேதனைய ஏங் கேக்குறீங்க கொத்ஸ்....மொத்தம் மூனு கேமரா. ஒன்னு ஃபிலிம். மத்த ரெண்டும் டிஜிடல். பூண்டீல வெளிய எடுத்தது பிலிம் கேமரா. அதுல ஏற்கனவே பாதி எடுத்துட்டு மீதி கொஞ்சம் பிலிம் இருந்தது. அதுல எடுத்த போட்டோக்கள் எல்லாம் ஒன்னுமே வரலை. ரெண்டாவது ரோல்ல எடுத்ததுக மட்டுந்தான் வந்துருக்கு. அதுனால பூண்டி கோயில்ல போட்டோக்கள் இல்லை.

சரி குற்றாலத்துக்குப் போற வழியையும் ஈஷா வாசலையும் போடலாம்னு நெனச்சேன். ஆனா நேத்து பிளாகர் போட்டோவே போட விடலை...சரீன்னு விட்டுட்டேன். அடுத்த பதிவுல சேத்துப் போட்டுட்டாப் போகுது....

said...

// பார்தீங்களா ராகவன்,

'நமக்கு தரிசனம் லபிச்சிருக்குன்னா கடவுள் எப்படியும் வழி காமிச்சுருவார்'னு நான் நம்புறது மாதிரியே
உங்களுக்கும் தரிசனம் கிடைச்சது. //

உண்மைதான் டீச்சர். மருதமலைல இன்னும் வித்தியாசமான அனுபவம். அதுக்கு ரெண்டு பதிவு காத்திருக்கனும்.

// எல்லாம் நாம் எப்பவோ செஞ்ச தருமம். வேற என்ன சொல்ல? //

எல்லாம் பெத்தவங்க சேத்து வெச்சது. நான் எந்தத் தருமத்தச் செஞ்சேன்?

said...

டீச்சர் பதிவுல பாத்தாச்சு. இனிமேலும் இங்க இருக்கற போட்டோவைப் போட்டு ஏமாத்த முடியாது. மாத்துமைய்யா அதை முதலில்.

அப்புறம் நம்ம பதிவுல நீங்க குடுத்த அறிவுரையை ஃபாலோ பண்ண ஆரம்பிச்சுருக்கேன். வந்து பாத்து சரியான்னு சொல்லுங்க.

said...

// டீச்சர் பதிவுல பாத்தாச்சு. இனிமேலும் இங்க இருக்கற போட்டோவைப் போட்டு ஏமாத்த முடியாது. மாத்துமைய்யா அதை முதலில். //

சரி மாத்தீட்டாப் போச்சு. இப்ப டிரிப்ல எடுத்த படத்தப் போட்டாப் போச்சு...

// அப்புறம் நம்ம பதிவுல நீங்க குடுத்த அறிவுரையை ஃபாலோ பண்ண ஆரம்பிச்சுருக்கேன். வந்து பாத்து சரியான்னு சொல்லுங்க. //

அறிவுரையா....அதெல்லாம் எனக்குத் தெரியாது.......ஆனாலும் நீரு என்ன செய்றீருன்னு வந்து பாக்குறேன்.

said...

இந்தப் படம் கோவைக் குற்றாலத்துக்குப் போற வழியில எடுத்தது..........
http://i80.photobucket.com/albums/j194/ragavang/OnTheWayToKovaiKutralam.jpg

இந்தப் படம் நானும் என் நண்பர்களும் ஈஷா தியான மண்டபத்தின் முன்னால்...
http://i80.photobucket.com/albums/j194/ragavang/InFrontOfEsha.jpg

said...

ராகவன்
கட்டுரையை சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறீர்கள்.
படங்களையும் போட்டால் இன்னும் நல்லாயிருக்கும்.

said...

இந்தப் படம் கோவைக் குற்றாலத்துக்குப் போற வழியில எடுத்தது..........
http://i80.photobucket.com/albums/j194/ragavang/OnTheWayToKovaiKutralam.jpg

இந்தப் படம் நானும் என் நண்பர்களும் ஈஷா தியான மண்டபத்தின் முன்னால்...
http://i80.photobucket.com/albums/j194/ragavang/InFrontOfEsha.jpg


படங்களை கட்டுரைகளுடன் சேர்த்துப் போடுங்கள்.
இன்னும் அழகாக இருக்கும்