இப்பொழுது தமிழ்மணத்தில் பிரபலமாக இருக்கும் சர்ச்சை இதுதான். இந்தக் கேள்வியை யாருக்கும் சொல்வதற்காக கேட்கவில்லையானாலும் நான் எனக்காகக் கேட்டுக் கொண்டேன். அப்படிக் கேட்டு எனக்குத் தோன்றியதை ஒரு பதிப்பாகப் போடுகிறேன்.
என்னைப் பொருத்த வரை என்பது இந்து என்றே என்னுடைய சான்றிதழ்கள் சொல்கின்றன. ஆனால் அந்தச் சொல்லுக்கு நான் கொண்டுள்ள பொருள் என்ன?
இந்து மதம் என்று நான் சொல்வது பல மதங்களின் பல பண்பாடுகளின் பல பழக்கவழக்கங்களின் கூட்டே. அந்த வகையில் அந்தப் பெயரை எனது அடையாளத்திற்காக பயன்படுத்துகிறேன்.
நான் இந்து என்பதால் என்னை யாரும் வேதத்தையும் கீதையும் அல்லது வேறெந்த நூலையும் மதிக்க வேண்டும் என்று கட்டாயத்திற்கு நான் கட்டுப் பட மாட்டேன். கடவுள் நம்பிக்கை எனக்கு உண்டு. அந்தத் தேடலைத் தமிழைக் கொண்டே நான் துவக்கினேன். தமிழ் நூல்கள்தான் எனக்கு வழிகாட்டி. அந்த நூல்களைப் படித்து அவற்றில் எனக்குப் பிடித்த வகையில்தான் நான் வழிபடுகிறேன். இறைவனை நம்புகிறேன்.
நான் இந்து என்று சொல்லிக் கொள்வதால் எக்குறிப்பிட்ட வேதங்களையும் எக்குறிப்பிட்ட இனத்தாரையும் மதித்து நடக்க வேண்டும் என்று என்னை யாருக் கட்டுப்படுத்த முடியாது. ஏனென்றால் என்னுடைய மதம் என்பது கீரனாரும் அருணகிரியாரும் அப்பரும் சம்பந்தரும் புனிதவதியாரும் வள்ளுவரும் வாழ்ந்து காட்டிய வழி. யாருக்கும் யாரும் அடிமையில்லை. எல்லாரும் ஓர் குலம். எல்லாரும் ஓர் நிறை.
நான் மதம் மாற வேண்டிய தேவையில்லை. ஏனென்றால் நான் எந்த வழியில் போனாலும் போகுமிடம் ஒன்றுதான் என்று நம்புகிறவன். முன்பே ஒரு பதிவில் சொல்லியிருந்தேன். சிலர் அரிசையைப் பொங்கித் தின்கிறார்கள். சிலர் இட்டிலியாக்கியும் சிலர் தோசையாக்கியும் சிலர் புட்டு சுட்டும் உண்கிறார்கள். நான் எனக்குப் பிடித்த வகையில் தின்கிறேன். நான் இப்பிடித்தான் தின்ன வேண்டும் என்று என்னை யாரும் கட்டாயப் படுத்த முடியாது. ஆகையால் இறைவனை அடையவும் நல்வழி பெறவும் நான் மதம் மாறத் தேவையில்லை. ஈஷ்வரு அல்லா தேரே நாம்.
ஆகையால்தான் The Passion என்ற திரைப்படத்தைப் பார்த்து அதில் ஏசுவைக் காட்டியிருக்கும் விதத்தைப் பார்த்து அந்த இயக்குனர் மேல் ஆத்திரம் வருகிறது. என்னுடைய வழியில் போனால்தான் இறைவனை நீ அடைய முடியும் என்று சொல்கிறவரைப் பார்த்துச் சிரிப்பு வருகிறது. இறைவனை என்னால்தான் அடைய முடியும் என்று சொல்கிறவர்கள் நகைச்சுவையாளர்களாகத் தெரிகின்றனர். தானே கடவுள் என்று சொல்லிக் கொள்ளும் கடவுள்-மனிதர்கள் கோமாளிகளாகத் தெரிகின்றார்கள்.
கோயிலுக்குப் போவேனா? போவேன். கோயிலுக்குப் போகத்தான் வேண்டுமா என்றால் எனது விடை இல்லை என்பதே. ஆனாலும் போவது பலர் கூடும் இடத்தில் இறைவனை நினைப்பதற்கே. திருநீறு இட்டுக் கொள்வேன். குங்குமமும் இட்டுக் கொள்வேன். என்னுடைய முகத்திற்கு அது கொடுக்கும் பொலிவை உணர்கிறேன் நான்.
அசைவம் உண்பேனா? உண்பேன். கோயிலுக்குப் போகும் முன்னும் உண்டிருக்கிறேன். பின்னும் உண்டிருக்கிறேன். கிடா வெட்டப்படும் கோயில்களிலும் உண்டிருக்கிறேன். அசைவம் என்பது உணவுப் பழக்கம். அதற்கும் கடவுள் நம்பிக்கைக்கும் தொடர்பில்லை என்று நினைக்கிறவன் நான். வள்ளுவரோடு நான் வேறுபடுவது இங்கு மட்டுந்தான்.
சிலை வணக்கம் என்பது.....அடக்கடவுளே....நான் சிலையையா வணங்குகிறேன்! எங்கும் நிறைந்த இறைவன் அந்தச் சிலையில் இல்லாமல் போவானா? புல்லினும் பூண்டிலும் அனைத்திலும் இருப்பவனை எப்படியெல்லாம் உணர்ந்து வழிபட முடியுமோ அப்படியெல்லாம் வழிபடலாம். வழிபடாமலும் இருக்கலாம். ஏனென்றால் சும்மா இரு என்பதைப் போன்ற சிறந்த அறிவுரை எதுவுமில்லை.
தமிழ். தமிழ். அதுதான் எனக்கு ஆன்மிக உணர்வைத் தந்து விளக்காக என்றும் சுடர் விட்டு எரிந்து ஒளி காட்டுவது. அந்தத் தமிழைக் கொண்டுதான் நான் வழிபாடு செய்கிறேன். அந்தத் தமிழைக் கொண்டுதான் நான் இறைவன் திருவடியை அடியும் வகை கொண்டேன். இதற்கெல்லாம் தடை சொல்வார் யாராயினும் மதியேன்.
அனைவரும் எனது சகோதரர்களே. உங்கள் நம்பிக்கையை நான் மதிக்கிறேன். என்னுடைய நம்பிக்கையை நீங்கள் மதிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். மதத்தால் மொழியால் இனத்தால் அல்லது வேறு ஏதேனும் வழியில் உயர்ச்சி தாழ்ச்சி சொல்வதை ஏற்கிலேன். இதுதான் எனது வழி. இதுதான் என்னுடைய சான்றிதழில் குறிப்பிட்டிருக்கும் இந்து சொல்லுக்கு நான் கொண்டிருக்கும் பொருள். இதற்கு மற்றவர்கள் கொண்ட பொருள் எதுவாயினும் எனக்குக் கவலையில்லை. இந்தச் சொல் எந்த வழியில் தோன்றியது என்றாலும் எனக்குக் கவலையில்லை. இந்து என்பதற்குப் பதிலானத் தமிழ் மதம் என்றும் சொல்லிக் கொள்ளலாம். அத்தோடு இந்து என்ற இந்தச் சொல்லோ கிருஸ்துவன், புத்தன், முஸ்லீம் என்ற வேறு எந்தச் சொல்லுமோ என்னைக் கட்டுப் படுத்த முடியாது. கட்டுப் படுத்தவும் விட மாட்டேன். உங்கள் வழி உங்களுக்கு. எனது வழி எனக்கு.
இவ்வளவுதானா என்று என்னால் சொல்ல முடியவில்லை. இன்னும் நிறைய கொள்கைகள் உள்ளன. இப்பொழுதைக்குத் தோன்றியவை இவ்வளவுதான்.
அன்புடன்,
கோ.இராகவன்
Subscribe to:
Post Comments (Atom)
21 comments:
//உங்கள் நம்பிக்கையை நான் மதிக்கிறேன். என்னுடைய நம்பிக்கையை நீங்கள் மதிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். //
இது மொழி, மதம், சமயம் என எதுவாயினும், அடுத்தவர் கருத்தை மதிக்கவும், அவர் மீது தன் கருத்தை திணிக்காமல் இருக்கவும், அடுத்தவரை எள்ளி நகையாடாமௌம் இருந்தாலே போதும். அவரவருக்கு அவரவர் வழியென சென்றால் போதும்.
a nice fellow...thatz what I believe :-))
இராகவன், இந்த நேரத்தில் எதற்காக இந்தப் பதிவு என்று தெரியவில்லை. இதில் நீங்கள் சொல்லியிருக்கும் எல்லாமும் எனக்கும் பொருந்திப் போகின்றன - ஒன்றைத் தவிர - கடவுள் மனிதரைத் தவிர. இறைவன் மனிதனாக அவதாரமாக வரமுடியும் என்பதில் நம்பிக்கை உள்ளவன் நான். அதனால் நான் வாழும் இந்தக் காலத்திலும் இறைவனின் அவதாரம் நிகழலாம். அதே நேரத்தில் எல்லாக் காலத்திலும் இறையவதாரம் என்று சொல்லிக்கொண்ட ஏமாற்றுப் பேர்வழிகளும் இருந்தனர் என்பதால் கொஞ்சம் விழிப்பாக இருக்கிறேன். அவ்வளவுதான்.
//அனைவரும் எனது சகோதரர்களே. உங்கள் நம்பிக்கையை நான் மதிக்கிறேன். என்னுடைய நம்பிக்கையை நீங்கள் மதிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். மதத்தால் மொழியால் இனத்தால் அல்லது வேறு ஏதேனும் வழியில் உயர்ச்சி தாழ்ச்சி சொல்வதை ஏற்கிலேன்.//
அருமை ராகவன். உங்களது பதிவு என்னைக் கவர்ந்தது. தொடருங்கள் உங்கள் கொள்கைகளை படிக்க ஆவலாய் இருக்கிறது.
// நான் இந்து என்பதால் என்னை யாரும் வேதத்தையும் கீதையும் அல்லது வேறெந்த நூலையும் மதிக்க வேண்டும் என்று கட்டாயத்திற்கு நான் கட்டுப் பட மாட்டேன். // உங்களை இதுவரை யாரும் கட்டாயப்படுத்தியிருக்கிறார்களா?
// நான் இந்து என்று சொல்லிக் கொள்வதால் எக்குறிப்பிட்ட வேதங்களையும் எக்குறிப்பிட்ட இனத்தாரையும் மதித்து நடக்க வேண்டும் என்று என்னை யாருக் கட்டுப்படுத்த முடியாது. // உங்களை இதுவரை யாரும் கட்டாயப்படுத்தியிருக்கிறார்களா?
மேற்குறிப்பிட்ட இரு வாக்கியங்களும் சமீப சர்ச்சைகளின் பாதிப்பில் சேர்க்கப்பட்டவை போல் தோன்றுகிறது... எந்த மதமாக இருந்தாலும் மத நம்பிக்கை கொண்டவர்கள் அவர்கள் அளவில் அந்த நம்பிக்கை குறித்து பெருமையோ சிறுமையோ கொள்ளாமல் அடுத்தவருக்கு பாதிப்பில்லாமல் தமது நம்பிக்கையை பின்பற்றினால் ப்ரச்னை இல்லை. அது போல் மதம் மறுத்தவர்களும் தமது நம்பிக்கை குறித்து பெருமையோ சிறுமையோ கொள்ளாமல் தம்மளவில் மட்டும் பின்பற்றினால் ப்ரச்னை இல்லை.. ஆனால் ஏனோ நாஸ்திகர்கள் ஆஸ்திகர்களின் நம்பிக்கை குறித்து பேசும் போது அது (பகுத்)அறிவு அற்ற செயல், சிந்திக்கத்தெரியாதவர்கள் என்பது போன்று எண்ணங்களை வெளிப்படுத்துதான் ப்ரச்னை.. சமீபத்தில் கூட ஆத்திகர்களை விட நாத்திகர்கள் அறிவாளிகளாக பிரகாசிக்கிறார்கள் போன்ற புள்ளிவிவரங்கள் வெளியானதை பார்த்திருக்கலாம்.
(இந்த பத்தி உங்களுக்காக இல்லை) இந்து என்பது மதமே இல்லை? எனக்கு பிடிக்கவில்லை என்கிறீர்களா, சரி ஒன்றும் ப்ரச்னை இல்லை. உங்கள் வசதிப்படி உங்கள் வாழ்க்கை முறையை என்ன பெயர் வேண்டுமானாலும் வைத்து வாழ்ந்து கொள்ளுங்கள் இந்தியாவில் பிறந்தால் by default இந்து மதத்தில் கட்டாயமாக சேர்த்துவிடுகிறார்கள் என்று வருத்தப்படுகிறீர்களா? ஆனால் மதம் மறுத்தும் வாழ முடியும்.. என்ன கொஞ்சம் முயற்சி செய்ய வேண்டும். என்னதான் நிறுவனப்படுத்திவிட்டாலும் அதை மாற்ற வேண்டும் என்று எண்ணும்போது நோகாமல் நோம்பி கும்பிட முடியுமா.. யாராவது ஒருவர் புரட்சியை ஆரம்பிக்க வேண்டியதுதான்.. (புரட்சி என்பது வலைப்பதிவில் வீரவசனம் எழுதிவிட்டு சினிமா பார்க்க போவதில்லை) கமல்ஹாசன் தம் பிள்ளைகளை பள்ளியில் சேர்த்த போது மதம் என்ற இடத்தை வெறுமையாக விட்டே சேர்த்ததாக படித்த நினைவு. அதனால் மதம் மறுக்க ஆசைப்படுபவர்கள் தமது ஆணித்தர உபதேசத்தை ஊருக்கு செய்வதற்கு முன்பு தமது குடும்பத்தில் இருந்து ஆரம்பிப்பது பல விஷயங்களில் நல்லது. குழந்தைகளாவது குழம்பாமல் வளரும். பகுத்தறிவு ப்ரச்சாரத்தை ஊருக்கெல்லாம் சொல்லும் ஒருவரின் மனைவி கடவுள் நம்பிக்கையோடு இருக்க, கேட்டால் அப்போது மட்டும் எனது மனைவியின் தனி மனித நம்பிக்கையில் நான் தலையிடுவது இல்லை என்பது போன்ற சப்பை வாதங்கள் வரும்போது, அப்போ என்ன இதுக்கு ஊரார் நம்பிக்கையில் மட்டும் தலையிடுகிறாய் என்று எரிச்சலாக வருகிறது.
முதலில் நான் எல்லா உயிர்களையும் நேசிக்கும் மனிதன். பிறகுதான் எல்லாமே.
ராகவன் உங்களின் பெரும்பாலுமான கருத்துக்கள் என் எண்ண்ங்களுடன் ஒத்துப்போகின்றன.உங்கள் பதிவுக்கு நன்றி.
என் இருபதாவது வயதில் இந்தி எதிர்ப்பு, இறை எதிர்ப்பு (குறிப்பாக இந்து மத எதிர்ப்பு), இன எதிர்ப்பு (பிராமணனென்பவன் கொடுங்கோலன் ) போன்ற உணர்வுகள் தமிழகத்தில் வளர்ந்த எனக்கு அதிகமாக ஊட்டப்பட்டதால் நான் திராவிடர் கழக கூட்டங்களுக்கு செல்வது வழக்கம். ஆனால் அங்கு மனிதநேயத்தை பற்றி நான் பெற்ற அறிவை விட மனிதர்களை வேறுபடுத்தி வெறுப்பு உணர்வு ஊட்டும் செயலே அதிகமாக இருந்தது. அப்பொழுது என் மனதில் இருந்த இந்தி எதிர்ப்பு உணர்வால் நான் இந்தியை தவிர மற்ற அனைத்து மொழிகளையும் கற்க ஆரம்பித்தேன். (உதவி பாலாஜி பதிப்பகத்தின் 30 நாட்களில் கன்னடம் போன்ற புத்தகங்கள்). இன்று போலி திராவிடம் பேசும் அரசியல்வாதிகளை விட எனக்கு தலித் மற்றும் மற்ற இன நண்பர்கள் உண்மையாக நட்பு பாராட்டும் நண்பர்கள் அதிகம். இன்று என்னால் பெரும்பாலன இந்திய மொழிகளை படிக்கமுடியும் இந்தியையும் சேர்த்து. எல்லா மத நூல்களும் என் இல்லத்தில் உண்டு (பைபிள், குரான் உட்பட).அவற்றை முழுமையாக இல்லாவிட்டாலும் நன்றாக படித்திருக்கிறேன். தேவாரமும், திருவாசகமும் திவ்யப்ரபந்தமும் கம்ப ராமாயணமும் என் தமிழ் அறிவை வளர்த்தன. மற்ற மொழிகளின் அறிவு என் மொழி வெறியைக் குறைத்தன. எல்லா மதங்களும் நாத்திகமும் நாடுவது குறைகளற்ற அன்பு சமாதனமான வாழ்க்கை என்பதனை புரிந்ததனால் நான் இன்று பூணூல் அணியாத பிராமணன். தமிழைத்தாய் மொழியாக கொண்ட ஆரியன். சம்ஸ்க்ருதத்தை புரிந்து கொள்ள முயற்சிக்கும் திராவிடன்.
குழலியும்,முகமூடியும, டோண்டுவும் மற்றும் அனைத்து இணைய நண்பர்களனைவருமே என் நண்பர்கள்.
முதலில் நான் எல்லா உயிர்களையும் நேசிக்கும் மனிதன். பிறகுதான் எல்லாமே.
//இந்து மதம் என்று நான் சொல்வது பல மதங்களின் பல பண்பாடுகளின் பல பழக்கவழக்கங்களின் கூட்டே. அந்த வகையில் அந்தப் பெயரை எனது அடையாளத்திற்காக பயன்படுத்துகிறேன்.//
imm..continue
//தமிழ். தமிழ். அதுதான் எனக்கு ஆன்மிக உணர்வைத் தந்து விளக்காக என்றும் சுடர் விட்டு எரிந்து ஒளி காட்டுவது. அந்தத் தமிழைக் கொண்டுதான் நான் வழிபாடு செய்கிறேன். அந்தத் தமிழைக் கொண்டுதான் நான் இறைவன் திருவடியை அடியும் வகை கொண்டேன். இதற்கெல்லாம் தடை சொல்வார் யாராயினும் மதியேன்.//
இந்த உணர்வு எல்லோருக்கும் வந்துவிட்டால், நம் தமிழறிஞர்களே அய்யன் வள்ளுவர் உட்பட தெய்வமாகவும் ,தமிழ் மொழி தெய்வம மொழியாகவும் அறியப்பட்டும், யாரோ வடனாட்டானின் தெய்வத்தை அவன் சமஸ்கிரதத்தில் வழிபட, அதை நாம் வழிபடப் போய் உன் பாசை என் கடவுளுக்கு புரியாது என்று சொல்லியும் நாம் வாள் பிடித்துக்கொண்டு நிற்கிறோம். அவன் சொல்வதும் ஞாயம் தான் அவனுடைய பாசைத்தான் அவன் சாமிக்கு புரியும் தீம்தமிழ் எங்கே புரியப்போகிறது. ஒன்று அத்தகைய கடவுள்களை புறக்கணிப்போம், அல்லது அவர்களுடைய கடவுள்கள் நாம் வணங்கியவையே என்பதை வரலாற்றின் வழி நிரூபணம் செய்து மூக்கறுபோம்,
எங்கெங்கோ தோன்றுகின்ற ஓடையெல்லாம்
இறுதியிலே கடலில் சென்று
சங்கமாம் பான்மையினைப் போன்றுலகோர்
பின்பற்றும் தன்மை யாலே
துங்கமிகு நெறி பலவாய் நேராயும்
வளைவாயும் தோன்றி னாலும்
அங்கு அவைதாம் எம்பெரும! ஈற்றில் உனை
அடைகின்ற ஆறே யன்றோ!
வாழ்க!வாழ்க!ஆழ்ந்த கருத்துக்கள்!
ஜாதி மற்றூம் மதம் என்று புலம்பும் மாக்களுக்கு சரியான சவுக்கடி இந்த பதிவு.
யூ டூ ராகவன்?
பொதுவாக இந்து மதம் என்னும் போது அதை பிராமண ஆதிக்க மதம் என்று பார்ப்பதும் , பெரும்பான்மையான பிராமணர்கள் வட மொழியே கடவுளுக்கு உகந்த மொழி என்று சொல்லுவதுமே பிரச்சனையின் மூலம். இந்து மத தலைவர்கள் என்று கூறிக்கொள்ளும் மடாதிபதிகள் குறிப்பாக காஞ்சி மட ஜெயேந்திரர் குடமுழுக்கை தமிழில் நடத்தக்கூடாது வட மொழியில் தான் நடத்தவேண்டும் என்று சமீபத்தில் கூறியது நினைவுகூறதக்கது, கரூரில் ஒரு சிவாலயத்தில் சில சிவனடியார்கள் தமிழில் குடமுழுக்கு நடத்தவேண்டும் என்று உண்ணாவிரதம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தி கைதானதும் தற்போது நடந்த சம்பவமே. இது போன்ற சம்பவங்கள் வட மொழி ஆதிக்கத்தையும் பிராமண எதிர்ப்பையும் சூடா வச்சுக்குது. எல்லாம் நன்மைக்கே.
இந்து மத எதிர்ப்பு என்பதை இங்கு பிராமண (வட மொழி) ஆதிக்க எதிர்ப்பு என்று கொண்டு சிலர் வாதாடும் போது அவர்கள் மொத்த இந்து மதத்தையும் எதிர்ப்பது போன்ற பிம்பம் உருவாவது தவிர்க்க இயலாதது. அதனால் நான் இந்துவா என்று கேட்டவே தேவையில்லை. நமக்கு யாராவது சான்றிதல் தரணுமா என்ன?
தென்னாடுடைய சிவனே போற்றி.
//பகுத்தறிவு ப்ரச்சாரத்தை ஊருக்கெல்லாம் சொல்லும் ஒருவரின் மனைவி கடவுள் நம்பிக்கையோடு இருக்க, கேட்டால் அப்போது மட்டும் எனது மனைவியின் தனி மனித நம்பிக்கையில் நான் தலையிடுவது இல்லை என்பது போன்ற சப்பை வாதங்கள் வரும்போது, அப்போ என்ன இதுக்கு ஊரார் நம்பிக்கையில் மட்டும் தலையிடுகிறாய் என்று எரிச்சலாக வருகிறது.//
இது தாங்க பிரச்சினை. ஆனால் யாரும் இதை கேட்பதில்லை.
மொழி கடவுளுக்கு புரியாது என சொல்வதெல்லாம் அரசியல் காரணங்கள் தான். இன்றைக்கு எல்லாத் துறைகளிலுமே காசு தான் பிரதானமாகிவிட்ட பிறகு இந்த மாதிரி அரசியல் செய்பவர்கள் பிழைத்துக்கொள்கிறார்கள். (நான் இருதரப்பினரையுமே குறிப்பிடுகிறேன்)
ஒலி அலைகளுக்கு ஒரு சக்தி இருக்கிறது. ஓம் என்றை நீங்கள் தமிழில் உச்சரித்தாலும் ஹிந்தியிலோ சமஸ்கிருதத்திலோ எழுதி வைத்து படித்தாலும் அதன் அதிர்வலைகள் உருவாக்கும் தாக்கம் ஒன்று தான்.
நாம் சரியானவரிடத்தில் கேள்வியும் கேட்பதில்லை. பதிலை தெரிந்துகொள்ள ஆர்வமும் காட்டுவதில்லை.
இன்றைக்கும் சிவன் கோயில்களில் தேவாரம் பாடும் வழக்கம் இருக்கிறது. அது தமிழ் தானே.
இன்றைக்கு கோயிலில் இருக்கும் அர்ச்சகர்களிடம் ஒரு அர்பணிப்பு கிடையாது. அதனால் கடனே என்று சொல்கிறார்கள். நமக்கு அது புரியவில்லை என்றால் அவர்களுக்கு இன்னும் வசதி.
அனைவரும் கூடும் இடத்தில் நல்ல அதிர்வலைகளை உருவாக்கி மனதில் அமைதியையும் நிம்மதியையும் தரவேண்டியவை. இப்படிப்பட்ட சர்ச்சைகளும் அலட்சியமும் ஒரு சீரிய நோக்கத்தை சிதைத்து விட்டது.
ராகவன்,
இந்தப் பதிவை நீங்க போட்டவுடனே படிச்சிட்டேன். ஆனாலும் இதைப் பத்திக் கொஞ்சம் யோசிக்க வேண்டி இருந்துச்சு.
கொஞ்சம் இதைப் பத்தி யோசிக்கவும் செஞ்சேன். இப்ப என் மனசுலே படறது, இது ஒரு நல்ல பதிவு.
சாப்பாட்டுக்கும் சாமிக்கும் என்ன சம்பந்தம்? உணவுன்றது பழக்கத்தாலே வந்தது.அதனாலே அசைவம் சாப்பிடறவங்களுக்கு
சாமி இல்லையா என்ன?
கடவுள்ன்றவர் நம்ம தாய். நம்ம தாய்கிட்டே என்ன மொழி பேசுவோம்? வழக்கமா வீட்டுலே பேசற மொழிதானே?
பக்கத்து வீட்டு ஹிந்திக்காரர் அவர் அம்மாகிட்டே ஹிந்தி பேசறாரேன்னு நாமளும் நம்ம அம்மாகிட்டே ஹிந்தி
பேசமுடியாதுல்லையா?
அய்யோ என்ன சொல்லவந்து என்ன சொல்லிக்கிட்டு இருக்கேன்....
இந்துன்றது ஒரு மதம் இல்லைப்பா. அது ஒரு வாழ்க்கை முறை. பிறருக்குத் தீங்கு செய்யாம வாழணுமுன்னு நினைக்கறதுதான்
உண்மையான மதம். ஆனா இதையேதான் எல்லா மதங்களும் சொல்லுது.
ஆனா தெரிஞ்சோ தெரியாமயோ இப்ப கிறிஸ்து, நபியைத்தவிர மத்த சாமிக்கெல்லாம் இந்துக் கடவுள்னு பெயர் வந்து, நாமெல்லாம்
இந்துக்கள்னு அறியப்படுகிறோம், கவர்மெண்ட்டுக் கணக்கெடுப்புக்காக.
அன்பே கடவுள்.
ராகவன்,
உங்க மற்ற பதிவுகளைப் படித்திருக்கிறேன். ஆனால் பின்னூட்டமிட்டதில்லை.
இந்த பதிவும் ஒரு நல்ல அருமையான பதிவே!
என் வழிபாட்டு முறை எனக்கு! உன் வழிபாட்டு முறை உனக்கு! நீ விரும்பும் வடிவில் உன் கடவுள்! நான் விரும்பும் வடிவில் என் கடவுள்! அவ்வளவே! இதிலெதற்கு சண்டைகளும் சச்சரவுகளும்?
நம்பிக்கையை மதிக்கிறோமோ இல்லையோ தலையிடது இருந்தாலே போதுமானது!
(இதன் நகல்:
http://commentsofshibi.blogspot.com/2006/04/06-2006.html)
மற்றவரை எள்ளித்தான் தன் கருத்தை நிலைப்படச் செய்ய வேண்டும் என்ற உணர்வின்றி, தத்தம் வாதங்களை எடுத்து வைத்தாலன்றி,
இது போன்ற சந்தேகங்களும், கேள்விகளும் தொடர்வதைத் தடுக்க இயலாது.
இதெல்லாம் வேண்டாம் என, ஒதுங்கி தன் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டு செல்வதே சிறந்தது என்பதை, நம் வலைப்பூ நண்பர்கள் எனக்கு உணர்த்தியுள்ளார்கள்.
சாக்ரடீஸ் சொன்னது போல, 'உன்னையே நீ அறிவாய்'தான் சரியென்று தோன்றுகிறது..
அருமையான பதிவு அண்ணா.
வாழ்த்துகள்.
நானே இதைப் பற்றி பலகாலமாக சொல்ல நினைத்திருந்தேன், அப்புறம் என்ன சொன்னாலும் எதுவும் எடுபடாது என்று தெரியும் தானே என்று விட்டு விட்டு, சொன்னால் புரிந்துக் கொண்டு காது கொடுத்து கேட்கும் குழந்தைகளுக்கு அறிவுரை சொல்ல போயிட்டேன்.:)
ராகவன்,
அதையே நீங்க எடுத்த வைச்சா எஃபக்டே வேறதான்.எனிவே மேஸேஜ் ஒன்றுதான்.
இதை பற்றி நிறைய எழுதனும்ன்னு இருக்கேன் ராகவன். உங்க பதிவுக்கு பதில் தான். கொஞ்சம் டைம் எடுக்கும். பாப்போம்.
நண்ப,
உன் பதிவின் தலைப்பு என்னை இந்தப்பக்கம் இழுத்துவந்தது. நான் ஹிந்துவா என்ற கேள்வியை ஆராயும் முன்னர், சற்றே ஹிந்து என்றால் என்ன என்று பார்ப்பது சாலச்சிறந்தது. முதலில் ஹிந்து என்பது மதம் என்பதையும், அது பல பண்பாடுகளும் பழக்கவழக்கங்களும் சேர்ந்த ஒரு கலவை என்பதையும் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், தற்போதிருக்கும் பெரும்பாலான இளைய தலைமுறையினருக்கு இருக்கும் பிரச்சனையே தான் சார்ந்திருக்கும் அல்லது தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் ஒரு விஷயத்தைப்பற்றி இருக்கும் ஆராய்தல் மிகவும் குறைவாகும். ஹிந்து என்பது ஒரு சமீபகால வார்த்தை. சனாதன தர்மம் என்பதை புரியாதபோது எது ஹிந்து, நான் ஹிந்துவா என்ற கேள்விகளுக்கு விடையளிப்பது மிகவும் சிறுபிள்ளைத்தனமாக இருக்கும். இங்கே எனது நோக்கம் உனக்கு எது ஹிந்து என்பதற்கான விளக்கமளிக்கவோ, சனாதன தர்மத்தைப்பற்றி விரிவுரையாற்றவோ அல்ல. அது என்னால் இயலாததும் கூட.
ஆனால் சில விஷயங்களை இங்கே பகிர விரும்புகிறேன். ஹிந்து என்பது உனது அடையாளமல்ல, நீ தான் அதன் அடையாளம், அது தான் நீ என்றும் சொல்லலாம். ஒரு ஹிந்து வேதத்தையோ கீதையையோ படித்திருக்கவேண்டிய கட்டாயமில்லை. ஆனால், அதுபற்றிய விவாதங்களிலிருந்து விலகியிருக்கலாம். நூல்களை மதிக்கவேண்டிய அவசியமும் இல்லை. வேதங்கள் கடவுளைப்பற்றி பேசவில்லை என்றும் சொல்லலாம். கடவுளுக்கும் வேதத்திற்கும் சம்பந்தமும் இல்லை. வேதம் ஒரு வாழ்கை முறையை பற்றியும் , தர்மத்தைப்பற்றியும் விவரிக்கிறது, உபநிஷத்துகள் அவற்றை விளக்குகின்றன.
எப்படி ஒரு நூலை மதிக்கவேண்டிய அவசியம் இல்லையோ அதுபோலவேதான் மொழியை மதிக்க வேண்டிய அவசியமும் இல்லை. மொழி என்பது ஒரு வாகனம். நமது என்னங்களை சுமந்து செல்லும் ஒரு சாதாரண சுமைதூக்கி. அதற்கு சற்றும் நாம் முக்கியத்துவம் தரத்தேவையில்லை. அது தமிழாகட்டும், சமஸ்கிருதமாகட்டும். எல்லோரும் ஓர்குலம் எல்லோரும் ஓர்நிரை எனும் நீ ஒரு மொழியை பற்றிக்கொள்ளவேண்டிய அவசியமும் இல்லை மற்ற மொழிகள் கற்று அதிலுள்ள மதவிசாரங்களை அறிய தடையும் இல்லை. மதம் மாறவேண்டிய தேவைகளுக்கும், இறைநம்பிக்கைக்கும் சம்பந்தமும் இல்லை. யார் இப்போது இறைநம்பிக்கைக்காக மதம் மாறுகின்றனர்? தானே கடவுள் என்று சொல்லிக் கொள்ளும் கடவுள்-மனிதர்கள் கோமாளிகளாகத் தெரிகின்றார்கள் என்றால் தப்பு அவர்களிடத்தில் இருக்கலாம் அல்லது நமது புரிதலிலும் இருக்கலாம். நாம் ஏன் மற்றவரை ஆராய முற்படவேண்டும்.
பலர்கூடும் இடத்திற்குசென்று இறைவனை நினைக்க வேண்டிய தேவை என்ன? அப்போது, தனியாக அமர்ந்து இமயமலை காடுகளில் மக்கள் என்ன செய்கிறார்கள்? குங்குமம் இட்டுக்கொள்வது முகப்பொலிவுக்காக மட்டுமன்று, அதிலிருக்கும் மருத்துவ குணங்களுக்காகவும் என்றும் உனக்கு தெரிந்திருக்கும். அதை புருவ மத்தியில் ஏன் இடுகிறோம் என்பதும் புரிந்தே இருக்கும். மதத்தால் மொழியால் இனத்தால் அல்லது வேறு ஏதேனும் வழியில் உயர்ச்சி தாழ்ச்சி சொல்வதை ஏற்கவியலாது என்று கடைசியில் கூறியது நகைப்பை தருகிறது. இந்து என்பதற்குப் பதிலானத் தமிழ் மதம் என்றும் சொல்லிக் கொள்ளலாம், என்று கூறும் போது என்ன சொல்வது இது அங்கதத்தின் உச்சம்.
உன்போன்ற இளைஞர்களுக்கு இப்போது இருக்கும் ஒரு மிகப்பெரிய பிரச்சனை அடையாளக்குழப்பம். ஐடென்டிடி க்ரைசிஸ் என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அதுவும் நீ தமிழ் பற்றி ஒரு பக்தியுடன், வேட்கையுடன் கூறியது சிரிப்பைதான் வரவழைக்கிறது. இது ஒரு உண்ர்சியை தூண்டுகிற சுய கலவரத்தால் ஏற்பட்ட பதிவு. தன்னை எதைவைத்து அடையாளப்படுத்திக்கொள்வது என்ற குழப்பத்தில் ஆழ்ந்து தவிப்பவருக்கு ஒன்றுதான் சொல்லலாம், தனித்திரு, பசித்திரு, விழித்திரு.
என்பதிலை நீ தவறாகப் புரிந்துகொள்ளவேண்டிய தேவையில்லை.
Post a Comment