Tuesday, May 02, 2006

6. மருதமலையில் அல்பப் பண்டம்

கோவைக் குற்றாலம் முடிஞ்சதும் நேரா மருதமலைதான். ரொம்பச் சின்னப் பிள்ளைல மருதமலை பாத்த நெனவு. அதுக்கப்புறம் போனதேயில்லை. அப்பக் கீழ இருந்து மேல நடந்தே ஏறுனோம். பொதுவா முருகங் கோயில் மல மேல இருந்தா நடந்துதான் ஏறுறது வழக்கம். ஆனா மருதமலை அடிவாரம் வந்தது தெரியாம வண்டிக்குள்ள உக்காந்திருந்தேன். வண்டி மலைல ஏறத் தொடங்கீருச்சு.

நிப்பாட்டுங்க நிப்பாட்டுங்கன்னு கத்தி எறங்கீட்டேன். கூடவே நாலு நண்பர்களும் எறங்கீட்டாங்க. அப்படியே படியில ஏறிப் போனோம். நல்ல காத்து. உறைக்காத வெயில். ஏற்கனவே ரொம்பச் சுத்துனதுனால கொஞ்சம் களைப்பு. ஆனாலும் ஏறுனோம். வழியில முழுக்க மண்டபங்கள். அத்தனையும் தேவர் பிலிம்ஸ் சாண்டோ சின்னப்பாத் தேவர் கட்டுனது. அருமையான முருக பக்தர் அவர். கருப்புப் பணமே வெச்சிருக்காத நல்ல திரைத்துறைக்காரர்.

அப்படியே ரெண்டு மூனு போட்டோ பிடிச்சிக்கிட்டு மலையேறுனோம். ஏறுனப்புறந்தான் தெரிஞ்சது தங்கத் தேர் பொறப்பட இருக்குறது. சரி. தேர் நகர்ரதப் பாத்துட்டு முருகனப் பாக்கலாம்னு தேர் கிட்ட போனோம். தங்கத் தேர் இழுக்க நமக்கும் ஆசைதான். ஆசையிருக்கு அம்பாரி ஏறன்னு பழமொழியே இருக்கே. தேர் நகரல. எல்லாரும் வந்து தள்ளுங்கன்னு கூப்டாங்க. ஆகா வந்ததுடா வாய்ப்புன்னு தேரப் பிடிச்சித் தள்ளுனோம். திடீர்னு ஒருத்தர் வந்து நகருங்க நகருங்கன்னாரு. என்னடான்னு நகந்துகிட்டோம்.

அப்புறம் தேர் நகரலை. அங்கையே நின்னுச்சு. இழுத்து இழுத்துப் பாக்குறாங்க....ம்ஹூம்...கடைசீல சங்கிலி ஏதோ மாட்டிக்கிட்டு சிக்கிக்கிட்டு இருக்கு. தேரப் பாக்கனும்னு நெனச்சோம். பாத்தாச்சு. இழுக்கனும்னு நெனச்சோம் தள்ளியே விட்டாச்சு. இப்ப கோயிலுக்குள்ள போவோமுன்னு உள்ள போனோம். கூட்டமில்லை. நல்ல தரிசனம். தமிழில் சொல்லாகி, அந்தச் சொல்லுக்கும் மதிப்பைத் தரும் பொருளாகி எல்லாமுமாகி நிற்கிறவனைக் கண்டு தொழுது வணங்கிகோம்.

அப்புறம் அப்படியே பாம்பாட்டிச் சித்தர் குகைக்குப் போனோம். அது கொஞ்சப் படிக கீழ எறங்கனும். அங்க போகும் போதுதான் எங்க கூட வந்தவரு மலைக்கு மேல இருக்குற பழைய முருகங் கோயிலைப் பத்திச் சொன்னாரு. அதுக்குக் காட்டுக்குள்ள போகனுமாம். முந்தி ஒரு நண்பர் வந்து போகனும்னு அடம் பிடிச்சாராம். இவங்கள்ளாம் என்னடான்னு வேண்டா வெறுப்பாக் கூடப் போனாங்களாம். ஆனா தண்ணி கிண்ணி எடுத்துக்காம. எல்லாரும் கோயிலுக்குப் போயிட்டுத் தவிச்சுப் போயி தவங்கிப் போயி வந்திருக்காங்க. ஆனா அங்க போகனும்னு ஒத்தக்கால்ல நின்னவரு நல்லா ஜம்முன்னு ஏறி எறங்கீட்டாராம்.

இதப் பேசிக்கிட்டே வந்து அங்க பிரசாதக் கடைல முறுக்கு, தினைமாவு எல்லாம் வாங்கிக் கிட்டோம். எறங்குற எடத்துலயே ஒரு ஓட்டல். உள்ள போயி ஆளுக்கொரு காப்பி. நல்லா இருந்தது. சின்னக் கடைன்னாலும் கமகமன்னு ஆவி பறக்கக் காப்பி சுகமா இருந்துச்சு. ரசிச்சுக் குடிச்சிட்டு கீழ எறங்குனோம்.

அப்பத்தான் என் கண்ணுல பட்டுச்சு அது. அதாங்க எலந்தவடை. தூத்துக்குடிப் பக்கமெல்லாம் கெடைக்காது. நாங்க கரூர்ல இருந்தப்பதான் எலந்தவடை எங்களுக்கு அறிமுகம் ஆச்சு. பத்துகாசுக்கு ஒரு சின்ன பாலித்தீன் பாக்கெட்டுல கருப்பாக் களிம்பா கிடைக்கும். அதுக்குள்ள எலந்தக் கொட்டைகளும் முழுசாவோ ஒடஞ்சோ கெடக்கும். அதப் பல்லால கடிச்சு பைக்குள்ள இருக்குறத வாய்க்குள்ள எடுத்துக்கனும். சொவச்சிச் சொவச்சிச் சாப்புட்டுட்டு கொட்டையெல்லாம் மெல்ல முடிஞ்சா மெல்லலாம். இல்லைன்னா துப்பீறலாம். அதுதான் எலந்த வடை. எலந்தப் பழமும் புளியும் வெல்லமும் போட்டு இடிச்சிச் செஞ்ச நம்மூர் அமுதம்.

அது சிட்ட சிட்டயா ஒரு கடைல தொங்குச்சு. அத வாங்குனேன். அப்பயே ஒன்னப் பிச்சித் தின்னு என்னோட பழைய மறந்து போன சுவையத் தெரிஞ்சிக்கிட்டேன். அடடா! எலந்த வடையோ எலந்த வடை!

அப்புறம் இருட்டு வேளை. படபடன்னு லாட்ஜுக்குப் போயி துணிமணிகள எடுத்துக்கிட்டு நண்பனோட அக்கா வீட்டுக்கு வலுக்கட்டாயமா கடத்தப் பட்டோம். அங்க இட்லி, ரவா உப்புமா, வடை, சட்டினி, சாம்பார், பூண்டுக்கொழம்பு, இன்னும் சில பல வகையறாக்களால தாக்கப்பட்டு ஒரு வழியா தப்பிச்சி பஸ்ஸப் பிடிச்சிக் கோயில்பட்டில வந்து விடியக் காலைல நாலரை மணிக்கு எறங்குனோம்.

தொடரும்.

32 comments:

இலவசக்கொத்தனார் said...

அப்படியே சைடில ஆதி முருகன் (பேர் சரியா ஞாபகம் இல்லை) சன்னிதி இருக்குமே. அதுதான் சுயம்பு சுவாமின்னு சொல்லுவாங்க.

சாயங்கால நேரம் அங்கயிருந்து கோவை நகர விளக்குகளின் வெளிச்சத்தைப் பார்ப்பது நல்லா இருக்கும்.

நான் கோவையில் இருந்த போது வாரம் ஒரு முறையாவது செல்ல முயலுவேன்.

இலவசக்கொத்தனார் said...

இப்படி முருகனைப்பத்தி ஒரு வரி எழுதிட்டு, இலந்த வடைக்கு ஒரு பதிவு பூராவுமா? என்ன அநியாயமய்யா இது? அந்த முருகன் எவ்வளவு அழகா இருப்பாரு. உம்ம நடையில அதைப் படிக்கலாமுன்னு இருந்தா இப்படி ஏமாத்திட்டீரே.

சிங். செயகுமார். said...

மகரந்தம் மருதமலை கடந்தும் மணத்ததா..எல்லாம் பொய் எலந்த வாசம்தான் எனக்கு அடிக்குது.

பொன்ஸ்~~Poorna said...

இன்னும் தெளிவான படம் போட்டிருக்கலாம்.. எலந்தவடைக்கு :) :)

Muthu said...

//எலந்தவடை//

நானும் எலந்தபழம் எலந்தவடைக்கு அடிமைதான்..பூச்சி புழு எல்லாம் இருக்கும்னு வீட்டில் கடும் எதிர்ப்பு இருந்தாலும் நான் சாப்பிடுவேன்..

லீவுல ஊருக்க போனா எலந்தபழம் பொறுக்கறதில ஸ்பெஷிஸ்ட் நானு...அதுவெல்லாம் ஒரு காலம்...

(மருதமலை???ஹிஹி ஒரு முறை போயிருக்கேன்..சின்னதா காம்பேக்டான மலை..அழகா நடந்து போகலாம்.வரலாம்.நல்லா இருக்கும்)

சிவா said...

ராகவன்! ஊர் சுற்றும் கதை நல்லா இருக்கு. இலந்த வடைய போட்டோ எல்லாம் புடிச்சி போட்டு பதிவு போடறீங்க..அடடா..

மருதமலை நமக்கும் பக்கம் தான். எப்படின்னு கேக்கறியலா. மாமனார் வீடு கோயமுத்தூர் தான். பைக்க எடுத்துட்டு மருதமலைக்கு போய்ட்டு வந்துடலாம். பக்கம் தான். ஒரு தடவை போய் இருக்கேன். இந்த தடவை குடும்பத்தோடு போய் வர வேண்டும்.

'மருதமலை மாமணியே முருகையா' பாடல் தான் மனசுக்குள் ஒலிக்கிறது.

ilavanji said...

ராகவன்,

"மருதமலை மாமணியே முருகைய்யா..."

ம்ம்ம்... பழசையெல்லாம் கெளருதப்பா உங்க பதிவு.. எலந்தவடை உட்பட... அட்டைல மூனு பாக்கெட்டுதான் இருக்கு.. மத்ததெல்லாம் நீரே ஸ்வாகா செய்த பிறகு எடுத்த போட்டோவா?

சிவா! நீங்க நம்மூரு மாப்ளையா?! சொல்லவேல்ல!!

குமரன் (Kumaran) said...

//தமிழில் சொல்லாகி, அந்தச் சொல்லுக்கும் மதிப்பைத் தரும் பொருளாகி எல்லாமுமாகி நிற்கிறவனைக் கண்டு தொழுது வணங்கிகோம்.
//

இதை விட இன்னும் என்ன சொல்றது கொத்ஸ். அதான் ரொம்ப அழகா சொல்லிட்டாரே முருகனைப்பத்தி. இப்ப எல்லாம் ஆன்மிகச் செம்மல் அருணகிரிநாதர் மாதிரி விரிச்சு சொல்லாம திருவள்ளுவர் மாதிரி சுருக்கிச் சொல்லத் தொடங்கிட்டார்.

குமரன் (Kumaran) said...

கொத்ஸ். இன்னொன்னு தெரியாதா? விவகாரமான சங்கதிகளைத்தான் மகரந்தத்துல எழுதுவாரு. மருதமலை முருகனைப் பத்தி எழுதணும்ன்னா அதுக்கு இனியது கேட்கின் வலைப்பூவிற்கு போக வேண்டும். மகரந்தத்துல இருக்கிற பழைய பதிவுகளைப் படிச்சுப் பாருங்க; நான் என்ன சொல்றேன்னு புரியும். :-)

பரஞ்சோதி said...

எப்போ பார்த்தாலும் சாப்பாடு தானா, அப்படியே நம்ம முருகனையும் பற்றி கொஞ்சம் சொல்லியிருந்தா நல்லா இருந்திருக்கும், பரவாயில்லை.

அப்புறம் நம்ம சிவா கொடுக்காபுளி பற்றி சொன்ன போதே நான் எலந்தைப்பழம் பற்றி எழுத நினைச்சேன், எங்கே நேரம் தான் கிடைக்க மாட்டேங்குது.

Suka said...

ஆஹா..ராகவன்...மருதமலை படங்களுக்கு நன்றி. இன்னும் எடுத்திருந்தால் அதையும் பதியுங்கள்.

மருதமலை ஏறி இறங்குவது நல்ல உடற்பயிற்சியாய் இருந்திருக்கும் தானே.

அதிக செங்குத்ததகவும் இருக்கது..வயதானவர்களும் ஏறலாம்.. இளைப்பாற ஆங்காங்கே மண்டபங்களும் இருக்கும்..

ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே..

ஆமாம்.. இலந்தைவடையோடு மலைநெல்லியும் பொறிகடலையும் வாங்கவில்லையா.. :) ?

துளசி கோபால் said...

ராகவன்,

இப்பத்தான் பெரு(சு) இலந்தவடைப்பதிவு போட்டுருக்கார். நானும் ரெண்டொருநாளிலே எழுதறேன்னு சொல்லிட்டு இங்கெ வந்துபார்த்தா
இங்கெனெயும் இலந்தவடை விடாமத் துரத்துதேப்பா:-))))

சரி. தேர் இழுக்கச் சான்ஸ் கிடைச்சதே நல்ல சகுனம்தான். எதுக்குன்னு யாரும் கேக்காதீங்க!:-))))

எப்படிக் கூட்டமில்லாமப்போச்சு? எல்லோரும் தேரைச் சுத்தி இருந்துருப்பாங்க,இல்லே?

நானும் முந்தி ஒருக்கா மருதமலை போனேன். அது இருக்கும்.........ம்ம்ம் வேணாம்.
கனகாலம் முந்தி.

சென்னைக்கு வந்தாச்சா?

டிபிஆர்.ஜோசப் said...

சொவச்சிச் சொவச்சிச் சாப்புட்டுட்டு //

நீங்க ரசிச்சி சாப்டா மாதிரியே நீங்க எழுதுன படிச்சதும் எனக்கும் இருந்தது..

படத்த பார்த்தா ஏதோ புளியம்பழம் வடை மாதிரி இருக்கு.. புளிக்குமோ?

G.Ragavan said...

// இலவசக்கொத்தனார் said...
அப்படியே சைடில ஆதி முருகன் (பேர் சரியா ஞாபகம் இல்லை) சன்னிதி இருக்குமே. அதுதான் சுயம்பு சுவாமின்னு சொல்லுவாங்க. //

அட இந்தத் தகவல யாரும் சொல்லலையே....

// சாயங்கால நேரம் அங்கயிருந்து கோவை நகர விளக்குகளின் வெளிச்சத்தைப் பார்ப்பது நல்லா இருக்கும். //

நானும் பாத்தேன். ரொம்ப நல்லாயிருந்தது. ஜம்முன்னு.....

// நான் கோவையில் இருந்த போது வாரம் ஒரு முறையாவது செல்ல முயலுவேன். //

நல்லதுதாங்க...மலைப்படி ஏறி எறங்குறதும் மலக்காத்தும் ஒடம்புக்கு நல்லதுதான். அதே போல அங்க விக்குற அதிரசம், வடை, முறுக்கு, தினைமாவு, இலந்தவடை....எல்லாம்....

G.Ragavan said...

// இலவசக்கொத்தனார் said...
இப்படி முருகனைப்பத்தி ஒரு வரி எழுதிட்டு, இலந்த வடைக்கு ஒரு பதிவு பூராவுமா? என்ன அநியாயமய்யா இது? அந்த முருகன் எவ்வளவு அழகா இருப்பாரு. உம்ம நடையில அதைப் படிக்கலாமுன்னு இருந்தா இப்படி ஏமாத்திட்டீரே. //

மேல குமரன் சொன்ன மாதிரி...அதுக்குதான் தனி வலைப்பூவே இருக்கே.....இங்க இந்த மாதிரி கில்பான்ஸ்தான் நெறையக் கெடைக்கும்.

G.Ragavan said...

// சிங். செயகுமார். said...
மகரந்தம் மருதமலை கடந்தும் மணத்ததா..எல்லாம் பொய் எலந்த வாசம்தான் எனக்கு அடிக்குது. //

ஹி ஹி உண்மைதான் சிங்கு....(இந்தப் பேரு நல்லாருக்கே...) அதான் நாலும் ஆறு எலந்தவட பாக்கெட்டு வாங்கி.....ஹி ஹி

G.Ragavan said...

// பொன்ஸ் said...
இன்னும் தெளிவான படம் போட்டிருக்கலாம்.. எலந்தவடைக்கு :) :) //

பொன்ஸ், அப்படித்தான் நெனச்சேன்....என்னவோ சரியா வரலை....எது எப்படியோ பிதுக்கி வாயில போட்டப்போ நல்லாருந்தது...

G.Ragavan said...

// நானும் எலந்தபழம் எலந்தவடைக்கு அடிமைதான்..பூச்சி புழு எல்லாம் இருக்கும்னு வீட்டில் கடும் எதிர்ப்பு இருந்தாலும் நான் சாப்பிடுவேன்..//

முத்து, அது கழுத இருந்தா இருந்துட்டுப் போகுது.....கோழி கூடத்தான் புழு பூச்சியெல்லாந் திங்குது..விட்டு வைக்கிறோமா என்ன? ;-)

// லீவுல ஊருக்க போனா எலந்தபழம் பொறுக்கறதில ஸ்பெஷிஸ்ட் நானு...அதுவெல்லாம் ஒரு காலம்... //

நீங்க பொறுக்குறதுல ஸ்பெஷலிஸ்ட்டு...நானோ அதக் கழுவி உப்பும் மொளகாப்பொடியும் போட்டுத் திங்குறதுல ஸ்பெஷலோ ஸ்பெஷலிஸ்ட்டு...

// (மருதமலை???ஹிஹி ஒரு முறை போயிருக்கேன்..சின்னதா காம்பேக்டான மலை..அழகா நடந்து போகலாம்.வரலாம்.நல்லா இருக்கும்) //

இருந்துச்சி இருந்துச்சி....நல்லாவே இருந்துச்சி...

Sivabalan said...

Nice photos!!

மருதமலை is just 3 km away from My village. Nice place.

இலவசக்கொத்தனார் said...

//அட இந்தத் தகவல யாரும் சொல்லலையே....//

நான் கேட்கறதுக்கெல்லாம் இப்படியே சொல்லறீங்களே.

G.Ragavan said...

// சிவா said...
ராகவன்! ஊர் சுற்றும் கதை நல்லா இருக்கு. இலந்த வடைய போட்டோ எல்லாம் புடிச்சி போட்டு பதிவு போடறீங்க..அடடா.. //

சிவா...போனா வந்தா நடந்ததச் சொல்றதும் ஒரு சொகந்தானே.........அதுலயும் எலந்தவடை.....ஷ்ஷ்ஷ்ஷ்

// மருதமலை நமக்கும் பக்கம் தான். எப்படின்னு கேக்கறியலா. மாமனார் வீடு கோயமுத்தூர் தான். பைக்க எடுத்துட்டு மருதமலைக்கு போய்ட்டு வந்துடலாம். பக்கம் தான். ஒரு தடவை போய் இருக்கேன். இந்த தடவை குடும்பத்தோடு போய் வர வேண்டும். //

அடடே! அப்படியா...கோயமுத்தூர் மாப்பிள்ளையா நீங்க...சொல்லவேயில்லை....

// 'மருதமலை மாமணியே முருகையா' பாடல் தான் மனசுக்குள் ஒலிக்கிறது. //

அதுதான் மதுரை சோமு.......

G.Ragavan said...

// இளவஞ்சி said...
ராகவன்,

"மருதமலை மாமணியே முருகைய்யா..."

ம்ம்ம்... பழசையெல்லாம் கெளருதப்பா உங்க பதிவு.. //

அடடே...உங்க பழசெல்லாம் அல்வா மாதிரீன்னு சொல்லுங்க....கெளறுதேன்னு சொன்னீங்களே..

// எலந்தவடை உட்பட... அட்டைல மூனு பாக்கெட்டுதான் இருக்கு.. மத்ததெல்லாம் நீரே ஸ்வாகா செய்த பிறகு எடுத்த போட்டோவா? //

கண்டு பிடிச்சிட்டீரே....வாங்குனதுமே ஒன்னப் பிச்சி...லபக்கு...........

G.Ragavan said...

// இதை விட இன்னும் என்ன சொல்றது கொத்ஸ். அதான் ரொம்ப அழகா சொல்லிட்டாரே முருகனைப்பத்தி. இப்ப எல்லாம் ஆன்மிகச் செம்மல் அருணகிரிநாதர் மாதிரி விரிச்சு சொல்லாம திருவள்ளுவர் மாதிரி சுருக்கிச் சொல்லத் தொடங்கிட்டார். //

வாங்க குமரன்...என்னை வள்ளுவராக்கீட்டீங்களா....அவர் அளவுக்கெல்லாம்...நம்ம முடியுங்களா....ஆனா முயற்சிக்கனும். தப்பில்லை.

G.Ragavan said...

// துளசி கோபால் said...
ராகவன்,

இப்பத்தான் பெரு(சு) இலந்தவடைப்பதிவு போட்டுருக்கார். நானும் ரெண்டொருநாளிலே எழுதறேன்னு சொல்லிட்டு இங்கெ வந்துபார்த்தா
இங்கெனெயும் இலந்தவடை விடாமத் துரத்துதேப்பா:-)))) //

அதுதான் டீச்சர்...இலந்தவடை மகிமை :-) நானும் பெருவோட பதிவுல போய் பின்னூட்டம் போட்டுட்டேன்.

// சரி. தேர் இழுக்கச் சான்ஸ் கிடைச்சதே நல்ல சகுனம்தான். எதுக்குன்னு யாரும் கேக்காதீங்க!:-)))) //

நானும் கேக்கலை டீச்சர் :-)

// எப்படிக் கூட்டமில்லாமப்போச்சு? எல்லோரும் தேரைச் சுத்தி இருந்துருப்பாங்க,இல்லே? //

அங்கயும் அவ்வளவு கூட்டமில்லை. நின்னு பொறுமையா பாத்துக் கும்பிடற அளவுக்கு இருந்துச்சு. ரொம்பவே நல்ல தரிசனம்.

// நானும் முந்தி ஒருக்கா மருதமலை போனேன். அது இருக்கும்.........ம்ம்ம் வேணாம்.
கனகாலம் முந்தி.

சென்னைக்கு வந்தாச்சா? //

வந்தாச்சு டீச்சர். சென்னைல தான் இருக்கேன்.

G.Ragavan said...

// // tbr.joseph said...
சொவச்சிச் சொவச்சிச் சாப்புட்டுட்டு //

நீங்க ரசிச்சி சாப்டா மாதிரியே நீங்க எழுதுன படிச்சதும் எனக்கும் இருந்தது..//

இருக்கனும் சார்....அதுதான் எலந்த வடை...ஆகா...

// படத்த பார்த்தா ஏதோ புளியம்பழம் வடை மாதிரி இருக்கு.. புளிக்குமோ? //

இது தூத்துடி பக்கத்துல கெடைக்காது...கரூரு...கோயமுத்தூரு அங்குட்டுதான் நெறைய....புளியும் இதுல கலந்துருப்பாங்க....இனிப்பும் புளிப்புமா இருக்கும். நல்லா ஜம்மன்னு இருக்கும்.

G.Ragavan said...

// Sivabalan said...
Nice photos!!

மருதமலை is just 3 km away from My village. Nice place. //

வாங்க சிவபாலன். அதென்ன 3 கிமீ ஊரு. பேரச் சொல்லுங்க....ஒடனே இங்க நானும் அந்த ஊருதான்னு சொல்ல ஆளு இருப்பாங்க....

Sivabalan said...

//அதென்ன 3 கிமீ ஊரு. பேரச் சொல்லுங்க....ஒடனே இங்க நானும் அந்த ஊருதான்னு சொல்ல ஆளு இருப்பாங்க.... //

மன்னிக்கவும். வடவள்ளி, எங்க கிராமத்தின் பெயர்!! யாரவது இருக்கிறிங்களா!!

பெத்தராயுடு said...

சிவபாலன்,
வடவள்ளி உங்களுக்கு கிராமமோ? எங்க, கல்வீரம்பாளையம்னு சொல்வீங்களோன்னு நெனச்சேன்.
எங்க சொந்தக்காரங்க நெறய பேர் வடவள்ளியில இருக்காங்க.

அட, முருகனுக்குப் பக்கத்துல வள்ளி, என்ன பொருத்தம் பாருங்க!

G.Ragavan said...

// //வழியா தப்பிச்சி பஸ்ஸப் பிடிச்சிக் கோயில்பட்டில வந்து விடியக் காலைல நாலரை மணிக்கு எறங்குனோம்.//

ஐய்ய்ய்யா!!!!!! எங்க ஊர்...

பாலா.ஆர் //

பாலா, அடுத்த பதிவுல ஒங்க ஊரப் பத்தியும் கொஞ்சம் சொல்லியிருக்கேன் பாருங்க...

G.Ragavan said...

// பெத்த ராயுடு said...
சிவபாலன்,
வடவள்ளி உங்களுக்கு கிராமமோ? எங்க, கல்வீரம்பாளையம்னு சொல்வீங்களோன்னு நெனச்சேன்.
எங்க சொந்தக்காரங்க நெறய பேர் வடவள்ளியில இருக்காங்க.

அட, முருகனுக்குப் பக்கத்துல வள்ளி, என்ன பொருத்தம் பாருங்க! //

பொருத்தமோ பொருத்தம்.......மிகப் பொருத்தம்.

Sivabalan said...

பெத்த ராயுடு, நீங்க சொன்ன மாதிரி இப்போ வடவள்ளி Townன் ஆகிவிட்டது!!

But it is after 1985. அதுக்கு முன்னாடி, அது நல்ல கிராமம்!!

// எங்க சொந்தக்காரங்க நெறய பேர் வடவள்ளியில இருக்காங்க // Very good!! Nice to hear!!

Sud Gopal said...

சமீபத்தில் திருக்குடமுழக்கு செய்யப்பட்ட இந்தக் கோயிலை ஏழைகளின் பழனின்னு சொல்லுவாங்க.ஆனாக் கூட்டம் இல்லாத நாட்களில் மலைப் பாதையில நடக்கும் கூத்துகள் இருக்கே..

சரி விடுங்க.
மருதமலை மாமணியேன்னும் பாட்டு இருக்கு.மல மல...மருதமலைன்னும் பாட்டு இருக்கு.

அப்புறம் இந்த எலந்த வடை மாதிரி எலந்த ஜூஸ்னும் ஒரு பதார்த்தம் இருக்கு.இதை நீங்க சாப்பிட்டு இருப்பீங்களான்னு தெரியலை.