Thursday, May 11, 2006

அலசிப் பிழிஞ்ச தேர்தல் முடிவுகள்

தேர்தல் முடிஞ்சிருச்சி. முடிவுகளும் தெரிஞ்சிரிச்சி. இப்ப என்ன பண்றது? இந்த முடிவுகள்ள இருந்து நமக்கு என்ன தெரியுதுன்னு அலசிப் பாக்க வேண்டியதுதானே.

மொதல்ல வெற்றி பெற்றவங்களுக்கு வாழ்த்துகள். வெற்றி பெறாதவங்க வருத்தப்பட வேண்டாம். மக்கள ஏமாத்த நமக்கு வாய்ப்புகள் கிடைச்சிக்கிட்டே இருக்கும். காத்துக்கிட்டிருங்க. பலன் கிடைக்கும்.

தேர்தல் தொடங்குனப்பவே எனக்கு ஆசதான். அதாவது கூட்டணி ஆட்சிதான் வரனும்னு. ஜெயலலிதாவையும் கருணாநிதியையும் ஒரே மாதிரிதான் வெச்சிருந்தேன். ரெண்டு பேரும் ஆட்ச்சிக்கு வர்ரது ஏனோ பிடிக்கல. இப்போதைக்கு இவங்க ரெண்டு பேரையும் விட்டா வேற வழியே இல்லைங்கறதால, கூட்டணி ஆட்சி வந்தா நல்லாயிருக்கும்னு நெனச்சேன். நல்ல வேளையா அப்படியே நடந்துருச்சு.

இந்த முடிவுகள்ள இருந்து ஒன்னு நல்லாப் புரியுது. திமுக அதிமுக ரெண்டும் மக்கள் ஒரே மாதிரிதான் பாக்குறாங்கன்னு. யாரு நெறையா கூட்டணி சேக்குறாங்களோ....அவங்களுக்கு கூடுதல் ஓட்டு. அவ்வளவுதாங்க விஷயம்.

இந்தத் தேர்தல் முடிவுகள்ள மூனு தகவல்கள் எனக்கு வியப்பத்தான் குடித்துச்சி. அதுவும் நான் எதிர் பார்க்காத வகையில.

மொதல்ல குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது விஜயகாந்த். இவர நான் ஒரு பொருட்டாவே தேர்தல்ல மதிக்கலை. அதுக்காக தமிழ்மணத்துல இருக்குற பல நண்பர்களைப் போல அசிங்கமாவும் நாகரீகமில்லாமலும் திட்டலை. அது தப்பு. எதிரியாயிருந்தாலும் மரியாதைக் கொறவா பேசக்கூடாது. இத்தன நியாயம் பேசுற நண்பர்களுக்கு என்னோட வேண்டுகோள் இது. நீங்க பேசுற நியாயங்களோட இதையும் சேத்துக்கோங்க.

சரி. விஜயகாந்துக்கு வருவோம். அவருக்கு ஒரு ஓட்டு வங்கி இருக்குன்னு நிரூபிச்சிட்டாரு. அதுதான் உண்மை. லேட்டாவும் லேட்டஸ்டாவும் வர்ரேன் போறேன்னு சொல்லாம ஒரு முடிவோட எறங்குனதுக்கான பலன் கிடைச்சிருக்கு. அவரத் தோக்கடிக்க அத்தன வழிமுறைகளையும் பாமக செஞ்சது. நாலு விஜயகாந்த் போட்டி போட வைக்கிறது. அத நம்ம வலைப்பூ நண்பர்கள் கூட கிண்டலாச் சொல்லிச் சிரிச்சது......வேண்டாங்க. நம்மள்ளாம் கொஞ்சம் படிச்சவங்க. இதெல்லாம் நமக்கு வேண்டாம்.

இவர் ஜெயிக்க மாட்டார்னு நான் நெனைக்கலை. ஆனா நம்புனேன். நல்ல ஓட்டு வாங்கி மூனாவது எடத்துக்கு வருவாருன்னு நெனச்சேன். ஆனா முதலிடங்க. இவர மட்டும் ஜெயலலிதா கூட்டணில சேத்திருந்தாங்க (முயற்சி செஞ்சாங்கன்னு கேள்விப் படுறோம்.)..ஜெயிச்சிருந்திருக்கலாம். ஓட்டுக் கணக்கு சொல்லுதே. ஊருருக்கு ஓரளவு நல்லாவே வாங்கீருக்காங்க. பாராட்டுகள் விஜயகாந்த். விருத்தாச்சலத்த நீங்க விருத்தி பண்றதுலதான் உங்க தெறமைய புரிய வைக்கனும். இது வரைக்கும் சினிமாவுல இருந்து அரசியலுக்கு வந்தவங்கள்ளாம் நெடுநாள்த் திட்டங்கள்னு எதுவுமே யோசிக்கலை (குடும்பத்துக்கும் நண்பர்களுக்கும் யோசிச்சாங்க. பதவிக்கு வர்ரதுக்கும் இலவசத்ததான் யோசிச்சாங்க). நீங்க என்ன பண்ணப் போறீங்களோ.

பாமகவுக்கு இங்க ஒரு வேண்டுகோள். விஜயகாந்த் விருத்தாசலத்துக்கு நல்லது செஞ்சா(!) ஒத்துழைப்புக் குடுக்கலைன்னாலும் குழப்பம் பண்ணாதீங்க. பண்ணலாம்....அது விஜயகாந்த்துக்குத்தான் உதவும்.

அடுத்தது வைகோ பங்கு. இவருடைய பங்கு ஒன்னுமே இல்லைன்னு சொல்ல முடியாது. தமிழகத்துல ஆறும் புதுவைல ஒன்னும்(!). கடைசி நேரத்துல இவரு எடுத்த முடிவுக்கு இவ்வளவு கிடைச்சது மட்டுமல்ல..........தோத்த இடங்கள்ள உள்ள வாக்கு வித்தியாசமும் சொல்லும் உண்மையான நெலமையை. அன்பழகனுக்கே நானூறு ஓட்டு வித்தியாசந்தான். பல இடங்கள்ள கொறஞ்ச வாக்கு வித்தியாசத்துல தோத்ததும் மதிமுகவுக்கு இருக்குற ஓரளவு பரவலான செல்வாக்குக்கு எடுத்துக்காட்டு. அதிமுகவும் மதிமுகவும் ஒருத்தருக்கொருத்தர் ஒழுங்கா உதவியிருக்காங்க. அதுவும் பல தொகுதிகள்ள தெரியுது. சென்னையிலேயே மூன்று தொகுதிகள்ள மதிமுக வாக்குகள் எதிர் பார்த்ததை விடவும் அதிகம். சென்னை திமுகவின் கோட்டைங்கறது இனிமே மாயைதான். ஸ்டாலினுக்கே ரெண்டாயிரம் ஓட்டுதான் வித்தியாசம். பல திமுக தலைகள் பத்தாயிரம் ஓட்டு வித்தியாசத்துல வெற்றி பெற்றப்போ சென்னைல இப்படி ஒரு நெலமைங்குறது திமுகவுக்கு நல்லதில்லை.

இன்னொரு விஷயம். வைகோ நெனச்சத சாதிச்சிட்டாருன்னு சொல்வேன். வைகோவும் கூட்டணியில இருந்திருந்தா நிச்சயமா இத விடவும் அதிக தொகுதிகள் திமுகவுக்குக் கிடைச்சிருக்கும். பெரும்பான்மை கூட கிடைச்சிருக்கலாம்னு ஓட்டுக் கணக்கு வெச்சுப் பாக்கும் போது தெரியுது. திமுகவுக்குத் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால வைகோவுக்குப் பின்னால பலன் கிடைக்கிறதுக்கான வாய்ப்பு இருக்கு. இன்னைக்குப் பொழுதுக்கு ஆக வேண்டியதப் பாத்தாச்சு. நாளைக்கு நடக்கப் போறது யாருக்குத் தெரியும்? விடாம போராடுங்க. ஒங்களுக்கும் வாய்ப்பு வரலாம். ஆனா ஒன்னு, இந்தத் தேர்தல்ல நீங்க கொடுத்தது பெரிய விலை. அதிமுக கூட்டணிக்குப் போனதச் சொல்றேன். மத்தவங்கள்ளாம் யோக்கியங்கன்னு சொல்ல வரலை. அவங்கள்ளாம் மொதல்ல இருந்தே கெட்டவங்க. புதுசா தப்பு செய்ற நீங்க கெட்டவங்களாகி அவங்கள்ளாம் நல்லவங்களாயிட்டாங்க பாத்தீங்களா....இன்னமும் ஒன்னும் கெட்டுப் போகலை. அடுத்தடுத்து பொறுமையா யோசிச்சு எடுக்குற முடிவை முதல்லயே எடுங்க. கடைசீ நேரத்துல எடுக்காதீங்க.

மூனாவது காங்கிரஸ். கருணாநிதி அத்தன சீட்டு அள்ளிக் கொடுத்தப்ப, காங்கிரஸ் எப்படிப் பொழைக்கப் போகுதோன்னு நெனச்சேன். ஆனா கொடுத்த வாய்ப்பை நல்லாப் பயன்படுத்திக்கிட்டாங்க. இன்னைக்கு காங்கிரஸ் இல்லாம ஆட்சியமைக்க முடியாதுங்கறதுதான நெலமை. காங்கிரஸ்காரங்களா...வாழ்த்துகள். அடுத்த தேர்தல்ல சிதம்பரத்த உள்ள எறக்கப் பாக்கலாம். வாய்ப்பு பிரகாசமா இல்லைன்னாலும் நெறைய சீட்டுகள அள்ள வாய்ப்பிருக்கு. அது அடுத்த தேர்தல் நிலவரத்தப் பொறுத்துதான். ஒருவேளை இப்ப இருக்குற மத்திய அரசுக்கும் திமுகவுக்கும் சண்டைன்னு வெச்சுக்கோங்க. அப்ப காங்கிரசும் பாமகவும் நெனச்சா ஜெயலலிதாவையே முதல்வர் ஆக்கலாம். ஆனா..நடக்குற காரியமா அது? இன்னைக்குத் தமிழகத்துல இருக்குற எல்லாத் தலைவர்களுமே கூட்டணி ஆட்சிய ஓரளவுக்கு நல்லா கொண்டு போக முடியும். ஆனா முடியாத ஒரே ஆளு ஜெயலலிதாதான். தின்னாத் தனியிலை. இல்லைன்னா பட்டினிங்குறதுதான் அவரோட கொள்கை. ஒருவேளை பசி வந்தா பத்தும் பறந்து போகுமோ என்னவோ!

மத்த படி விடுதலைச் சிறுத்தைகளுக்கு ரெண்டு இடம் கிடைச்சிருக்கு. பாமக பதினேழு. பாமகவும் முடிஞ்ச வரைக்கும் நல்லாச் செஞ்சிருக்காங்க. கம்யூனிஸ்ட் கட்சிகளும் சிறப்பா செஞ்சிருக்காங்க. எல்லாருக்கும் வாழ்த்துகள்.

ஜெயலலிதாவுக்கு இப்பவாவது எல்லாரையும் அணைச்சிக்கிட்டுப் போறதுன்னா என்னன்னு தெரிஞ்சா நல்லது. இல்லைன்னா திண்டாட்டந்தான். சண்டை போட்டுக்கிட்டேயிருந்தா எப்பிடி. அடுத்தவங்களை மதிக்கக் கத்துக்கனும். மனுசனை மனுசனா நடத்தக் கத்துக்கனும். வேன்ல உக்காந்துக்கிட்டு டயரத் தொட்டுக் கும்பிடுறவங்களை ஆசி குடுக்குற அசிங்கங்கள் நிக்கனும். ஒங்களுக்குன்னு வாக்கு வங்கி நல்லாவே இருக்கு. அதைப் பெருக்குறதும் கரைக்கிறதும் ஒங்க கையிலதான் இருக்கு.

கடைசியா கருணாநிதிக்கு. திரும்ப முதல்வராகப் போறீங்க. வாழ்த்துகள். ஆனா இந்தப் பதவிக்கு வர்ரதுக்கு நீங்க எடுத்த இலவச வாள் மேல எனக்குக் கொஞ்சம் கூடப் பிடித்தம் இல்ல. இந்த இலவசங்க உங்களுக்குத் தேர்தல்ல உதவீருக்கு. இதெல்லாம் சாத்தியம்னு சிதம்பரம் புள்ளி விவரக் கணக்கு சொல்லலாம். ஆனா இந்தத் தேர்தல்ல நீங்க தொடங்கி வெச்ச இலவசக் கூத்து எல்லாரையும் எப்பிடிப் பைத்தியமாக்குச்சு பாத்தீங்களா. போன தேர்தல் வரைக்கும் ஒங்களுக்குத்தான் ஓட்டுப் போட்டேன். இந்தத் தேர்தல்ல ஓட்டே போடல. யாருக்குப் போடுறோமோ இல்லையோ...ஒங்களுக்குப் போடக் கூடாதுன்னு நான் முடிவு செஞ்சிருந்தேன்.

மத்தவங்க வேணும்னா ஜெயலலிதாவை விட நீங்க செம்மல்னு நிருபிக்க ஆயிரம் சொல்லலாம். ஆனால் என்னுடைய மதிப்புல நீங்க கொறஞ்சுதான் போயிட்டீங்க. நான் ஒருத்தன் மட்டும் தமிழ்நாடு இல்லை. ஆனா என்னைப் போல நெறையப் பேரு நெனக்கத் தொடங்குனா அது உங்க கட்சிக்கு நல்லதில்லை. இந்த ஆட்சியில ஒங்க கிட்ட இருந்து எதுவுமே எதிர் பார்க்கலை. ஏன்னா உங்க தேர்தல் அறிக்கைல உண்மையான தொலை நோக்குத் திட்டங்கள் எதுவுமே இல்லை. ஏதாவது செஞ்சீங்கன்னா நிச்சயம் பாராட்டுவேன். இல்லைன்னா.....எது எப்படியோ திரும்ப முதல்வரானதுக்கு என்னோட வாழ்த்துகள்.

வாழ்த்துகளுடன்,
கோ.இராகவன்

45 comments:

said...

//அப்ப காங்கிரசும் பாமகவும் நெனச்சா ஜெயலலிதாவையே முதல்வர் ஆக்கலாம். ஆனா..நடக்குற காரியமா அது?//
ராகவன், நடக்குற காரியம்தான். ஆனால், அதனால் காங்கிரசுக்கும், பாமகவுக்கும் பெரிய இழப்புதான் வரும். ஆதாயம் அதிமுகவுக்கு மட்டும்தான்.

said...

ஜி.ரா. நல்ல அலசல்.

//லேட்டாவும் லேட்டஸ்டாவும் வர்ரேன் போறேன்னு சொல்லாம //
இந்த வரிகளைத் தவிர்த்திருக்கலாமோ....!!?

தவிர்த்து இருக்கலாம் என்பது என் அபிப்ராயாம்..:)

said...

ராகவன்,

நல்லாத்தான் அலசிட்டீங்க.

நடுநிலையான நேர்மையான பதிவு.
இதுக்கே உங்களைப் பாராட்டணும்.

வாழ்த்து(க்)கள்.
நல்லா இருங்க.

said...

ஆனா உங்க ஆசை அதிமுக வரவேண்டும் என்பதுதானாமே?:))

said...

//பாமக பதினேழு. பாமகவும் முடிஞ்ச வரைக்கும் நல்லாச் செஞ்சிருக்காங்க.
//
அடேடே இப்படிலாம் சொன்னா என்னத்துக்கு ஆவறது, நீங்களும் பாமக காலி, காத்து போன பலூன் இப்படித்தானே எழுதனும் :-)

said...

மிக மிக நல்ல அலசல். கருத்துள்ள வாதங்கள்.

வைகோ சென்றது கூட பெரிதில்லை. ஆனால், அவர் சென்றபின் பேசிய பேச்சுக்களும், புண்ணியவதி என்றெல்லாம் சொல்லி ஜெ வை அளவுக்கதிகமாக தூக்கியதும், கன்ணியம் காக்கத் தவறியதுவுமே அவருடைய நிலையை மோசமாக்குகிறது.

கடைசியாக, கலைஞர் மீது கொஞ்சம் அதிகமாகவே கோபப்படுகிறீர்களோ என நினைக்கிறேன். அவருடைய தேர்தல் அறிக்கையின் சில நல்ல அம்சங்கள் இலவச அறிவிப்புக்குத் தந்த முக்கியத்துவத்தினால் அவராலேயே சுட்டிக் காட்டப்படாமல் விடப்பட்டுள்ளன. அவற்றை செயல்படுத்தினால், அவர் பெயர் பெறுவார்.

ஆனால், இந்த இலவச வாளினை அவர் ஏன் எடுத்தார் என கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.

இவர் தேர்தல் அறிக்கை விடுவதற்கு முன் இருந்த நிலமை என்ன? எல்லா பத்திரிக்கைகளும் மக்கள் மீண்டும் அம்மா பக்கம்தான் என்றே சொல்லிவிட்டன. ஏன், இவர் நல்லாட்சி புரிந்தார் என்பதற்காகவா? தான் செய்த தவறுகளையும், அராஜகங்களையும், அட்டூழியங்களையும் தானே குறைத்துக் கொண்டும், சுனாமி/வெள்ள நிவாரணங்களை பணமாக (ஏதோ தன் கையிலிருந்து கொடுப்பது போல) கொடுத்தும், இலவச சைக்கிள்/பாட புத்தகங்கள் கொடுத்தும், மக்களைத் தன் பக்கம் திருப்பிக் கொண்டார் என்றார்கள். வைகோவையும், திருமாவையும் இணைத்துக் கொண்டுவிட்டதால் ஆட்சி அம்மாவிற்கே என்ற நிலை. என்ன செய்யப் போகிறார் இவர் என்ற நேரம், இவர் இந்த அஸ்திரத்தை எடுத்தார். இது இருந்திருக்காவிட்டால், நிச்சயம் இழுபறியோ தோல்வியோ ஏற்பட்டிருக்கும்.

1996-2001 ல், ஓரளவுக்கு நல்லாட்சி தந்தும், தொலைநோக்கு எண்ணம் கொண்டு திட்டங்கள் செயல்படுத்தியிருந்தும் தன்னைத் தோற்கடித்த மக்கள் மனோபாவம் தந்த படிப்பினை, இந்த இலவச அஸ்திரப் பிரயோகம்.

said...

நல்லா அலசிப் பிழிஞ்சிருக்கீங்க ஜிரா..
// மத்தவங்க வேணும்னா ஜெயலலிதாவை விட நீங்க செம்மல்னு நிருபிக்க ஆயிரம் சொல்லலாம். ஆனால் என்னுடைய மதிப்புல நீங்க கொறஞ்சுதான் போயிட்டீங்க. //
நானும் அதே தான் நினைச்சேன்..

said...

நல்ல அலசல் ஐயா.
இதில முதலாவதா நான் பாராட்ட விரும்புறது காங்கிரஸ் தலைவர்களைத்தான். என்னமோ ஏதோன்னு இருந்த கட்சிக்குக் கூட்டணி பலமும் சரி, அவர்கள் சொந்த பலமும் சரி, கோஷ்டிப் பூசல்களை மீறி நல்லாக் கெடைச்சிருக்கு.

said...

சூப்பராவே பிழிஞ்சிருக்கீங்க!

இந்த தேர்தல்ல எந்த உழைப்பும் இல்லாம சுலபமா காங்கிரஸ் 35 சீட்டு வாங்கியிருக்கு. திமுகவும் அதிமுகவும் இவர்களுடன் சேரமாலிருந்தால் நல்லாயிருக்கும்.

ஜெ முதல்வராவது அடுத்த மத்திய தேர்தலை பொறுத்தது. பா.ம.கவின் லாபங்களை பொறுத்தது. கலைஞர் தொடர்வதை பொறுத்தது.
அதனால் அந்த சூழ்நிலையை மறுக்க முடியாது. நடக்கலாம்....

said...

எல்லாம்சரி, ஜிரா. ஆனா, "மனுசனை மனுசனா நடத்தக் கத்துக்கனும். வேன்ல உக்காந்துக்கிட்டு டயரத் தொட்டுக் கும்பிடுறவங்களை ஆசி குடுக்குற அசிங்கங்கள் நிக்கனும்"// - இது நடக்கிற காரியம்னு எனக்குத் தோணலை!

said...

// Muthu said...
//அப்ப காங்கிரசும் பாமகவும் நெனச்சா ஜெயலலிதாவையே முதல்வர் ஆக்கலாம். ஆனா..நடக்குற காரியமா அது?//
ராகவன், நடக்குற காரியம்தான். ஆனால், அதனால் காங்கிரசுக்கும், பாமகவுக்கும் பெரிய இழப்புதான் வரும். ஆதாயம் அதிமுகவுக்கு மட்டும்தான். //

அதுவும் உண்மைதான் முத்து. பேருக்கு நாலஞ்சு மாசம் ஆட்சி செஞ்சிட்டு...இல்லைன்னா ஆட்சியக் கவுத்துட்டு கூட்டணியோட தேர்தலச் சந்திக்கத்தான் அவர் திட்டம் போடுவார். அப்பத்தான தனி மெஜாரிட்டி கிடைக்கும்.

said...

// Dev said...
ஜி.ரா. நல்ல அலசல்.

//லேட்டாவும் லேட்டஸ்டாவும் வர்ரேன் போறேன்னு சொல்லாம //
இந்த வரிகளைத் தவிர்த்திருக்கலாமோ....!!?

தவிர்த்து இருக்கலாம் என்பது என் அபிப்ராயாம்..:) //

கண்டிப்பாக தவிர்த்திருக்கலாம் தேவ். ஆனா பாருங்க பொது வாழ்க்கைல வந்தப்புறம் விசர்சனத்துக்கு யாரும் தப்ப முடியாது. இதை ரொம்பவும் பெரிசாக்க வேண்டாம்னுதான் சுருக்கமா நிப்பாட்டீட்டேன்.

said...

// துளசி கோபால் said...
ராகவன்,

நல்லாத்தான் அலசிட்டீங்க.

நடுநிலையான நேர்மையான பதிவு.
இதுக்கே உங்களைப் பாராட்டணும்.

வாழ்த்து(க்)கள்.
நல்லா இருங்க. //

நன்றி டீச்சர். இதுதான் நடுநிலைமையான்னு எனக்குத் தெரியல. என்னோட பார்வை இது.

said...

// விடாதுகறுப்பு said...
ஆனா உங்க ஆசை அதிமுக வரவேண்டும் என்பதுதானாமே?:)) //

அப்படியில்லை கருப்பு. ஜெயலலிதாகிட்ட இருந்து தப்பிச்சு கருணாநிதிக்கிட்ட மாட்டிக்கிரக் கூடாதுங்குறதுதான் என்னுடைய எண்ணம். இது வரைக்கும் நான் அதிமுகவுக்கு ஓட்டுப் போட்டதே கிடையாது என்பதுதான் உண்மை. இந்த நிலையிலேயே அதிமுக தொடர்ந்தால் இனிமேலும் போடும் நிலை இல்லை என்பதுதான் என் எண்ணம்.

said...

// குழலி / Kuzhali said...
//பாமக பதினேழு. பாமகவும் முடிஞ்ச வரைக்கும் நல்லாச் செஞ்சிருக்காங்க.
//
அடேடே இப்படிலாம் சொன்னா என்னத்துக்கு ஆவறது, நீங்களும் பாமக காலி, காத்து போன பலூன் இப்படித்தானே எழுதனும் :-) //

அட நீங்க வேற குழலி....பொதுவாகவே அப்படியெல்லாம் எழுதுறதில்லைங்க. :-))

இந்த முறை திமுக கூட்டணியில் எல்லாக் கட்சிகளும் 70 சதவீதம் ஜெயிச்சிருக்குறப்ப பாமக 58 சதவீதந்தான் ஜெயிச்சிருக்கு. அது உண்மைன்னாலும் முடிஞ்ச வரைக்கும் முயற்சி செஞ்சிருக்காங்க. 17 சீட்டு கையில இருக்கே.

said...

// Krishna said...
மிக மிக நல்ல அலசல். கருத்துள்ள வாதங்கள். //

நன்றி கிருஷ்ணா.

// வைகோ சென்றது கூட பெரிதில்லை. ஆனால், அவர் சென்றபின் பேசிய பேச்சுக்களும், புண்ணியவதி என்றெல்லாம் சொல்லி ஜெ வை அளவுக்கதிகமாக தூக்கியதும், கன்ணியம் காக்கத் தவறியதுவுமே அவருடைய நிலையை மோசமாக்குகிறது. //

உண்மைதான். சரியான பொழுதில் எடுத்துக் குடுத்தீர்கள். சேரிடம் அறிந்து சேர்னு சொல்லுவாங்க. அதிமுகவோட கூட்டணி வெச்ச நேரம்...அவர் வாயில இருந்தும் வழக்கமான அரசியல் புகழ்ச்சிகளும் வீண் சவால்களும். வருங்காலம்தான் வைகோவிற்கு பதில் சொல்லும்.

// கடைசியாக, கலைஞர் மீது கொஞ்சம் அதிகமாகவே கோபப்படுகிறீர்களோ என நினைக்கிறேன். அவருடைய தேர்தல் அறிக்கையின் சில நல்ல அம்சங்கள் இலவச அறிவிப்புக்குத் தந்த முக்கியத்துவத்தினால் அவராலேயே சுட்டிக் காட்டப்படாமல் விடப்பட்டுள்ளன. அவற்றை செயல்படுத்தினால், அவர் பெயர் பெறுவார். //

கருணாநிதி மேல் எதிர்பார்ப்பு இல்லை என்பது உண்மைதான். ஆனால் அவர் நல்ல திட்டங்களைச் செயல் படுத்தினால் நிச்சயமாகப் பாராட்டுவேன். ஐயமில்லை.

// ஆனால், இந்த இலவச வாளினை அவர் ஏன் எடுத்தார் என கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.

இவர் தேர்தல் அறிக்கை விடுவதற்கு முன் இருந்த நிலமை என்ன? எல்லா பத்திரிக்கைகளும் மக்கள் மீண்டும் அம்மா பக்கம்தான் என்றே சொல்லிவிட்டன. ஏன், இவர் நல்லாட்சி புரிந்தார் என்பதற்காகவா? தான் செய்த தவறுகளையும், அராஜகங்களையும், அட்டூழியங்களையும் தானே குறைத்துக் கொண்டும், சுனாமி/வெள்ள நிவாரணங்களை பணமாக (ஏதோ தன் கையிலிருந்து கொடுப்பது போல) கொடுத்தும், இலவச சைக்கிள்/பாட புத்தகங்கள் கொடுத்தும், மக்களைத் தன் பக்கம் திருப்பிக் கொண்டார் என்றார்கள். வைகோவையும், திருமாவையும் இணைத்துக் கொண்டுவிட்டதால் ஆட்சி அம்மாவிற்கே என்ற நிலை. என்ன செய்யப் போகிறார் இவர் என்ற நேரம், இவர் இந்த அஸ்திரத்தை எடுத்தார். இது இருந்திருக்காவிட்டால், நிச்சயம் இழுபறியோ தோல்வியோ ஏற்பட்டிருக்கும். //

உண்மைதான். இலவசம் இல்லாமல் இருந்திருந்தால் இந்த அளவிற்கு வந்திருக்க முடியாதுதான்.

// 1996-2001 ல், ஓரளவுக்கு நல்லாட்சி தந்தும், தொலைநோக்கு எண்ணம் கொண்டு திட்டங்கள் செயல்படுத்தியிருந்தும் தன்னைத் தோற்கடித்த மக்கள் மனோபாவம் தந்த படிப்பினை, இந்த இலவச அஸ்திரப் பிரயோகம். //

சரி..அப்ப கூடப் பத்து சீட்டுக்கு கூட்டணி மாறுன வைகோவுக்கும் இவருக்கும் என்ன வேறுபாடு. கருணாநிதி செய்வதால் மட்டும் தவறு சரியாகி விடாது என்பது கருத்து. மற்றபடி அவருடன் எனக்குத் தனிப்பட்ட விரோதம் என்ன இருக்கு. எனக்கு ஒரு பத்து ஏக்கர் நிலம் வேணும். சேவை செய்யத்தான். இவர் கிட்டப் போயிக் கேக்கலாமான்னு யோசிச்சிக்கிட்டு இருக்கேன். உண்மையாங்க.

said...

// பிரதீப் said...
நல்ல அலசல் ஐயா.
இதில முதலாவதா நான் பாராட்ட விரும்புறது காங்கிரஸ் தலைவர்களைத்தான். என்னமோ ஏதோன்னு இருந்த கட்சிக்குக் கூட்டணி பலமும் சரி, அவர்கள் சொந்த பலமும் சரி, கோஷ்டிப் பூசல்களை மீறி நல்லாக் கெடைச்சிருக்கு. //

உண்மைதான் பிரதீப். டீவியில வசந்தகுமார், யசோதா முகங்கள்ள சிரிப்பப் பாக்கனுமே...அடடா!

said...

// தயா said...
சூப்பராவே பிழிஞ்சிருக்கீங்க!

இந்த தேர்தல்ல எந்த உழைப்பும் இல்லாம சுலபமா காங்கிரஸ் 35 சீட்டு வாங்கியிருக்கு. திமுகவும் அதிமுகவும் இவர்களுடன் சேரமாலிருந்தால் நல்லாயிருக்கும். //

திமுகவும் அதிமுகவும் சேராம இருந்தா முப்பத்தஞ்சுக்கு எங்க போறது...ஆனா எனக்கென்ன தோணுதுன்னா...அடுத்த தேர்தல்ல இவங்க சிதம்பரத்த எறக்கி ஆளம் பாப்பாங்கன்னு தோணுது.

// ஜெ முதல்வராவது அடுத்த மத்திய தேர்தலை பொறுத்தது. பா.ம.கவின் லாபங்களை பொறுத்தது. கலைஞர் தொடர்வதை பொறுத்தது.
அதனால் அந்த சூழ்நிலையை மறுக்க முடியாது. நடக்கலாம்.... //

அதே அதே....

said...

// Dharumi said...
எல்லாம்சரி, ஜிரா. ஆனா, "மனுசனை மனுசனா நடத்தக் கத்துக்கனும். வேன்ல உக்காந்துக்கிட்டு டயரத் தொட்டுக் கும்பிடுறவங்களை ஆசி குடுக்குற அசிங்கங்கள் நிக்கனும்"// - இது நடக்கிற காரியம்னு எனக்குத் தோணலை! //

எனக்கும் அப்படித்தான் தோணுது. ஜெயலலிதா நெறைய மாற வேண்டியிருக்கு. அதுக்கெல்லாம் வாய்ப்பில்லைனுதான் நெனைக்கிறேன்.

இன்னைக்குப் பேப்பர்ல பாத்தீங்களா...கருணாநிதியைப் பாக்கப் போன போலீஸ் டிஐஜி, அவரோட கால்ல விழுந்து எந்திருச்சிருக்காரு :-)))))))

said...

//தொடங்குனப்பவே எனக்கு ஆசதான். அதாவது கூட்டணி ஆட்சிதான் வரனும்னு.//

இதைப்பற்றி நானும் பதிந்திருந்தேன்
http://govikannan.blogspot.com/2006/05/5.html

said...

விஜயகாந்த பபசோதனை மாபெரும் வெற்றி என்று சொல்ல முடியா விட்டாலும் ஒரு சீட்டும் சில தொகுதிகளில் நிறைய வாக்கும் கிடைத்தது மற்ற பலருக்கும் தனித்து போட்டி என்ற ஆசையை தூண்டும்(குறிப்பாக காங்கிரஸ்)

ஆனால் காங்கிரசு வென்ற சீட்டுக்களை வைத்து அவர்கள் செல்வாக்கை அறியமுடியாது இப்பொதைக்கு.

இந்த பதிவு பொலிடிக்கலி கரெக்ட் பதிவு தான். எனக்கு சில மாற்று கருத்துக்கள் உள்ளன.விரிவாக எழுதுகிறேன்.

கிருஷ்ணா கூறிய இலவசம் பற்றிய கருத்தை நர்ன ஆமோதிக்கிறேன்.

சர்வாதிகாரம் ஒழிவது மிக முக்கிய லாபம்.யாரும் அதைப்பற்றி சந்தோசப்படுவதாக தெரியவில்லை.
வெள்ள நிவாரணம் என்று பணக்காரர்கள் கூட 2000 வாங்கிய சென்னையின் ஓட்டுப்பி்ச்சையை பற்றி யாரும் எழுதவில்லை.

ஆளுங்கட்சியின் பணபலத்தைப்பற்றி யாரும் எழுதவில்லை.

ராகவன் கூறியதுபோல் நடுநிலை என்பது கடினம்தான்.

said...

//சரி..அப்ப கூடப் பத்து சீட்டுக்கு கூட்டணி மாறுன வைகோவுக்கும் இவருக்கும் என்ன வேறுபாடு. கருணாநிதி செய்வதால் மட்டும் தவறு சரியாகி விடாது என்பது கருத்து. //

உங்கள் ஒப்பீடு எனக்குப் புரியவில்லை. விருப்பமிருந்தால் தெளிவுபடுத்தவும்.

said...

சர்வாதிகாரமா, முத்து அண்ணாத்த எங்கிருக்கீங்க. அது அம்மாவோட, துணிவு, தலைமைத் திறமை, கட்டுக்கோப்பு, உறுதியான மனதுன்னு தெரியாதா?

அம்மா என்ன அரசாங்க பணமா குடுத்தாங்க, தன் சொந்த பணத்த குடுத்தாங்க, யாருக்கு வேணாலும் குடுப்பாங்க. உங்களுக்கு எங்க வலிக்குது.

said...

//இவங்க சிதம்பரத்த எறக்கி ஆளம் பாப்பாங்கன்னு தோணுது.//

சிதம்பரத்தை விட்டு ஆழம் பார்க்குறதா? அவரே ஒத்துக்க மாட்டார். எப்போ டிவி கொடுக்க முடியும் என்று சொன்னாரோ அப்பவே "நீயெல்லாம் என்னத்த நிதியமைச்சர்" என்றாகிவிட்டது. நினைத்துப்பாருங்கள் கம்பெனிகளிலும் அரசு அலுவலர்களும் தான் முறையாக (ஏற்கனவே பிடித்து தான் கொடுக்கிறார்கள். இல்லையென்றால் இவர்களும் ஏய்க்கலாம்!) வரி செலுத்துகிறார்கள். அவர்கள் உழைப்பை சுரண்டி இங்கே இவர்கள் உமி ஊதிக்கொண்டிருக்கிறார்கள். நிதியமைச்சர் இன்னும் என்ன "செஸ் வரி" சேவை வரி போடலாம் என யோசித்துக்கொண்டிருக்கிறார்.

அதனால் "Intellectual" சிதம்பரத்தின் பால் பெருமை கொண்டாலும் மத்திய தர வருமானம் கொண்டவர்கள் ஆதரிக்க மாட்டார்கள்.

கூட்டணி ஆட்சியால் தயாநிதியை இனி காங்கிரஸாரும் கேள்வி கேட்க முடியாது. இருவரும் சேர்ந்து விளையாடுவார்கள். நாம் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியது தான்.

said...

ராகவன்,

உங்க பதிவையும் அதற்கு வந்த பின்னூட்டங்களையும் படித்து பார்த்தேன்.

எனக்குத் தோன்றியதை எழுதுகிறேன். ஒருவேளை இவை உங்களுடைய கருத்தை ஏற்றுக்கொள்ளாதவையாகவும் இருக்கலாம்.தவறாக நினைக்கக்கூடாது. நீங்கள் எப்போதுமே நடுநிலையானவர் என்று எனக்குத் தெரியும்.. ஆனால் இம்முறை.. ஏனோ தெரியவில்லை.. லேசான ஒருதலைப் பட்சமான..

சரி விஷயத்துக்கு வருவோம்..

முதலில் விஜயகாந்த் விஷயம்..

அவருக்கு அவருடைய கட்சி நின்ற இடங்களில் எல்லாம் கணிசமான, அதாவது யாரும் எதிர்பார்க்காத அளவு வாக்குகள் கிடைத்திருப்பது நிஜம்தான். ஆனால் அதற்கு, அவர் வேண்டுமானால் 'பார்த்தாயா என் பெருமையை' என்று பறைசாற்றிக்கொள்ளலாமே தவிர அதனால் தமிழகத்துக்கு என்ன லாபம்? சரி. அவர் மட்டும் தனியாக சட்டப்பேரவையில் இருந்து என்னத்தை சாதித்துவிடப்போகிறார் என்று நினைக்கிறீர்கள்?

அது ஒன்று. இந்த அளவுக்கு மக்கள் வாக்களித்திருக்கிறார்களே அதற்கு நன்றி தெரிவித்து ஒரு அறிக்கை விடத்தெரிந்ததா அவருக்கு? வேறொன்று தெரியுமா? அவர் வெற்றி பெற்ற விருத்தாச்சலத்திலேயே மக்களும், வணிகர்களும் நேற்று வெளியே வர அஞ்சி சாலையே வெறிச்சோடிகிடந்ததாம். முதன் முதலாக தேர்தலில் போட்டியிட விரும்பியவர் ஏதோ பத்து இடத்தில் நின்றோம் அதில் கவனத்தை செலுத்தினோம் என்று இல்லாமல் சகட்டு மேனிக்கு ஆட்களை நிற்க வைத்து ஒரேயொரு இடத்தில் வெற்றி பெற்று நியாயமாய் ஜெயித்திருக்க வேண்டிய திமுக/அதிமுக வேட்பாளர்களை தோற்க வைத்து.. இது அவர் தமிழகத்துக்கு செய்த துரோகம் என்றே நான் கருதுகிறேன். அவருக்கு அரசியல் அனுபவம் போதாதென்றுமட்டுமல்ல மன முதிர்ச்சியும் போறாதென்றே நான் சொல்லுவேன்.

அடுத்தது வை.கோ..

அவரும் என்னத்தை பெரிதாக சாதித்துவிட்டார்? தி.மு.க விற்கு நியாயமாக விழவேண்டிய வாக்குகளை கலைத்ததுதான் அவர் சாதித்தது. அவருக்கும் வேண்டுமானால் தனிப்பட்ட முறையில் ஒரு வக்கிரமமான சந்தோஷம் இருக்கலாம். ஆனால் நடந்தது என்ன? ஒரு ஸ்திரமற்ற நிலமை.. கூட்டணி ஆட்சி என்பது நடைமுறைக்கு ஒத்து வராதது. மக்களுக்கு நல்லது என்று நினைக்கும் விஷயங்களை எடுக்க துணிவில்லாமல் ஆட்சியாளர்களை தங்களுடைய ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதையே நினைத்துக்கொண்டு நிலைதடுமாற வைக்கும். கேரளா இன்றும் வளராமல் இருப்பதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்? கூட்டணியாட்சிதான். எல்லா கட்சிகளும் அவரவர் ஆளுகின்ற காலத்தில் சேர்த்துக்கொள்ளக்கூடியதை சேர்த்துக்கொள்வதிலும் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொள்வதிலும்தான் குறியாயிருந்தார்களே தவிர உருப்படியாக யாரும் ஒன்றும் செய்யவில்லை.

சரி.. இனி அவருக்கு அதிமுகவில் என்ன மதிப்பிருக்கும் என்று நினைக்கிறீர்கள்? கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு உதவிய டாக்டரின் நிலை என்னவாயிருந்தது என்று உங்களுக்கு தெரியாதா? அவருடைய மகனை எம்.பி ஆக்கக் கூட ஜெ தயாராக இல்லையே.. அவமானம் தாங்க முடியாமல்தானே அவரே வெளியேறினார்? அந்த நிலைக்கு வை.கோ நிச்சயம் தள்ளப்படுவார். அப்போதும் மு.க. அவரை கைகளை விரித்துக்கொண்டு வா என்பார்.. எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.

மு.கவைப் பற்றி.

அவரை எந்தவிதத்திலும் ஜெ வோடு ஒப்பிடமுடியாது, கூடாது என்பதுதான் என்னுடைய கருத்து. அவர் நான்கு முறை முதல்வராய் இருந்தும் இன்றும் எல்லோரையும் அரவணைத்துச் செல்லவேண்டும் என்று நினைப்பவர். போக மாட்டேன், போக மாட்டேன் என்று கூறிக்கொண்டிருந்த சரத் திடீரென்று கழகத்தை விட்டு சென்றபோதும் அவசரப்படாதே என்று கூறியவர் அவர். அவசரப்பட்டு போய் அவமானப்பட்டு திரும்பி வந்த விஜய ராஜேந்திரனை மீண்டும் மன்னித்து ஏற்றுக்கொண்டவர் அவர். இவர்கள் இருவராலும் பெரிதாக கழகத்துக்கு லாபம் இருக்கப்போவதில்லை என்று தெரிந்தும் அவர்களை மன்னிக்க தயாராயிருந்தவர் அவர். அவர் எங்கே ஜெ எங்கே..

மு.க வாக்களித்ததில் கேஸ் அடுப்பு, தொலைக்காட்சியை தவிர மற்ற எல்லாவற்றையும் ஆதரிப்பவன் நான்.
அவர் முடியும் என்று நினைத்தால் செய்துவிட்டு போகட்டுமே.. நிச்சயம் வருமான வரியில் செஸ் வைக்க மாட்டார்.. அதற்கு ப.சி.யும் சரி பிரதமரும் சரி லேசில் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். அதற்காகவே காங்கிரஸ் அமைச்சரவையில் பங்கு கொள்ளாது என்று நினைக்கிறேன்.

தேசீய மற்றும் மாநில அளவில் அரசியல் அனுபவம் பெற்ற கட்சிகளைக்கொண்ட இரண்டு கூட்டணிகள் நேருக்கு நேர் மோதிக்கொள்ளட்டும். அப்போதுதான் யாரை மக்கள் உண்மையாக ஆதரிக்கிறார்கள் என்பதை கண்டுக்கொள்ள முடியும். அதை குலைக்கும் எந்த ஒரு கட்சியையும் அதாவது விஜயகாந்த் போன்ற தனிமனித கட்சிகளை இனியும் மக்கள் ஆதரிக்கலாகாது என்பதற்கு இத்தேர்தல் ஒரு பாடமாக இருக்க வேண்டும்..

said...

// கூட்டணி ஆட்சியால் தயாநிதியை இனி காங்கிரஸாரும் கேள்வி கேட்க முடியாது. இருவரும் சேர்ந்து விளையாடுவார்கள். நாம் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியது தான். //

ஆமாம் - நாங்கள் உங்களை அங்கே அட்ஜஸ்ட் செய்துகொள்கிறோம். நீங்கள் எங்களை இங்கே அட்ஜஸ்ட் செய்துகொள்ளுங்கள் என்றா?
:-)))

said...

// GOVIKANNAN said...
//தொடங்குனப்பவே எனக்கு ஆசதான். அதாவது கூட்டணி ஆட்சிதான் வரனும்னு.//

இதைப்பற்றி நானும் பதிந்திருந்தேன்
http://govikannan.blogspot.com/2006/05/5.html //

அப்படிப் போடுங்க....நீங்களும் அப்படித்தான் சொல்லீருக்கீங்களா. ஆகா!

said...

// முத்து ( தமிழினி) said...
விஜயகாந்த பபசோதனை மாபெரும் வெற்றி என்று சொல்ல முடியா விட்டாலும் ஒரு சீட்டும் சில தொகுதிகளில் நிறைய வாக்கும் கிடைத்தது மற்ற பலருக்கும் தனித்து போட்டி என்ற ஆசையை தூண்டும்(குறிப்பாக காங்கிரஸ்) //

உண்மைதான். இது மாபெரும் வெற்றி என்று சொல்ல முடியாது. ஆனால் அவரையும் அவரது கட்சியையும் பொறுத்த வரை நல்ல தொடக்கம். இதை எப்படி கொண்டு செல்கிறார் என்பதைப் பொறுத்தே அவர் வருங்காலம் அமையும்.

// ஆனால் காங்கிரசு வென்ற சீட்டுக்களை வைத்து அவர்கள் செல்வாக்கை அறியமுடியாது இப்பொதைக்கு. //

இதுவும் உண்மைதான்.

// இந்த பதிவு பொலிடிக்கலி கரெக்ட் பதிவு தான். எனக்கு சில மாற்று கருத்துக்கள் உள்ளன.விரிவாக எழுதுகிறேன். //

மாற்றுக்கருத்துகள் நிச்சயம் இருக்கலாம். தவறில்லை. எதிர்க்கருத்து என்பதை எதிரியின் கருத்து என்று எடுத்துக் கொள்ள நாம் அரசியல்வாதிகள் இல்லையே.

// கிருஷ்ணா கூறிய இலவசம் பற்றிய கருத்தை நர்ன ஆமோதிக்கிறேன்.

சர்வாதிகாரம் ஒழிவது மிக முக்கிய லாபம்.யாரும் அதைப்பற்றி சந்தோசப்படுவதாக தெரியவில்லை.
வெள்ள நிவாரணம் என்று பணக்காரர்கள் கூட 2000 வாங்கிய சென்னையின் ஓட்டுப்பி்ச்சையை பற்றி யாரும் எழுதவில்லை. //

இது எப்ப? எங்களுக்கெல்லாம் ஒன்னும் கிடைக்கலையே....

// ஆளுங்கட்சியின் பணபலத்தைப்பற்றி யாரும் எழுதவில்லை. //

இல்லை. உண்மைதான். ஆனால் நான் தேர்தல் முடிவுகளைத்தான் அலசியிருந்தேன். தேர்தலில் எப்படிச் செயல்பட்டார்கள் என்பதை அல்ல. அதனால் குறிப்பிடவில்லை.

// ராகவன் கூறியதுபோல் நடுநிலை என்பது கடினம்தான். //

ஆமாம். நமக்குத் தெரிந்த செய்திகளை வைத்து நாம் சிந்திக்கிறோம். அதில் எவ்வளவு உண்மை இருக்கும் என்பதைப் பொருத்தும் நாம் உண்மையை எவ்வளவு ஏற்றுக் கொள்ள விரும்புகிறோம் என்பதைப் பொருத்தும்தான் நடுநிலைமை என்பது விளங்கும்.

said...

// //சரி..அப்ப கூடப் பத்து சீட்டுக்கு கூட்டணி மாறுன வைகோவுக்கும் இவருக்கும் என்ன வேறுபாடு. கருணாநிதி செய்வதால் மட்டும் தவறு சரியாகி விடாது என்பது கருத்து. //

உங்கள் ஒப்பீடு எனக்குப் புரியவில்லை. விருப்பமிருந்தால் தெளிவுபடுத்தவும். //

தெளிவு படுத்துவதில் எனக்கு மறுப்பு இல்லை.

கட்சிக்காகவும் தனது சொந்த நலனுக்காகவும் கூட்டணி மாறினார் வைகோ.

இலவசத்தைக் கொடுத்தாவது வெற்றி பெற வேண்டும் என்று முடிவு செய்தார் முக. தமிழகத்தைப் பொன்னான மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற தணியாத வேட்கை அவருக்கு இருக்கிறது என்று என்னால் நம்ப முடியவில்லை.

இதுதான் என்னுடைய ஒப்பீடு.

said...

// சிதம்பரத்தை விட்டு ஆழம் பார்க்குறதா? அவரே ஒத்துக்க மாட்டார். எப்போ டிவி கொடுக்க முடியும் என்று சொன்னாரோ அப்பவே "நீயெல்லாம் என்னத்த நிதியமைச்சர்" என்றாகிவிட்டது. நினைத்துப்பாருங்கள் கம்பெனிகளிலும் அரசு அலுவலர்களும் தான் முறையாக (ஏற்கனவே பிடித்து தான் கொடுக்கிறார்கள். இல்லையென்றால் இவர்களும் ஏய்க்கலாம்!) வரி செலுத்துகிறார்கள். அவர்கள் உழைப்பை சுரண்டி இங்கே இவர்கள் உமி ஊதிக்கொண்டிருக்கிறார்கள். நிதியமைச்சர் இன்னும் என்ன "செஸ் வரி" சேவை வரி போடலாம் என யோசித்துக்கொண்டிருக்கிறார். //

உண்மைதான் தயா. நியாயமாக உழைக்கும் நமக்குத்தான் வரியைப் பிடித்துக் கொண்டு சம்பளம் தருகிறார்கள். அதிலும் வரி மேல் வரி போட்டு உறிஞ்சுவது சரியல்ல. நாட்டுக்குக் கொடுக்க எல்லாரும் கடமைப் பட்டுள்ளோம். ஆனால் அளவுக்கு அதிமாக பாரம் வைத்தால் அச்சாணி முறியும் என்பது அவர்களுக்குப் புரியவில்லை.

// அதனால் "Intellectual" சிதம்பரத்தின் பால் பெருமை கொண்டாலும் மத்திய தர வருமானம் கொண்டவர்கள் ஆதரிக்க மாட்டார்கள். //

அவருடைய மகனை வேறு போலீஸ் ஸ்டேஷனுக்குத் தள்ளிக் கொண்டு போனார்களாமே! இந்தச் செய்தி உண்மையா?

// கூட்டணி ஆட்சியால் தயாநிதியை இனி காங்கிரஸாரும் கேள்வி கேட்க முடியாது. இருவரும் சேர்ந்து விளையாடுவார்கள். நாம் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியது தான். //

நான் வேறு மாதிரி யோசிக்கிறேன். அங்கு தயாநிதி வம்பு செய்தால் இங்கு இறுக்கிப் பிடிக்கலாம். அது காங்கிரஸ் திமுக உறவில் இருக்கும் சுமூகத்தைப் பொறுத்தது.

ஏற்கனவே காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வீரப்ப மொய்லியைச் சந்தித்து அமைச்சர் பதவியும் துணை முதல்வர் பதவியும் வாங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்களாம்.

said...

// tbr.joseph said...
ராகவன்,

உங்க பதிவையும் அதற்கு வந்த பின்னூட்டங்களையும் படித்து பார்த்தேன்.

எனக்குத் தோன்றியதை எழுதுகிறேன். ஒருவேளை இவை உங்களுடைய கருத்தை ஏற்றுக்கொள்ளாதவையாகவும் இருக்கலாம்.தவறாக நினைக்கக்கூடாது. நீங்கள் எப்போதுமே நடுநிலையானவர் என்று எனக்குத் தெரியும்.. ஆனால் இம்முறை.. ஏனோ தெரியவில்லை.. லேசான ஒருதலைப் பட்சமான.. //

ஜோசப் சார். நான் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டேன். நடுநிலைமையோடு நான் எழுதியிருக்கிறேன் என்று சொல்லவே மாட்டேன். எனக்குத் தோன்றியதை எழுதியிருக்கிறேன். அவ்வளவுதான். கலைஞரைப் புகழ்வதுதான் நடுநிலைமை என்றால் அதை என்னால் செய்ய முடியாது. அவர் நல்ல திட்டம் எதுவாயினும் அதை நல்லபடியாகச் செயல்படுத்தட்டும். அதை நிச்சயம் நான் பாராட்டுவேன்.

// சரி விஷயத்துக்கு வருவோம்.. //

வந்துட்டேன்.

// முதலில் விஜயகாந்த் விஷயம்.. //

சரி

// அவருக்கு அவருடைய கட்சி நின்ற இடங்களில் எல்லாம் கணிசமான, அதாவது யாரும் எதிர்பார்க்காத அளவு வாக்குகள் கிடைத்திருப்பது நிஜம்தான். ஆனால் அதற்கு, அவர் வேண்டுமானால் 'பார்த்தாயா என் பெருமையை' என்று பறைசாற்றிக்கொள்ளலாமே தவிர அதனால் தமிழகத்துக்கு என்ன லாபம்? சரி. அவர் மட்டும் தனியாக சட்டப்பேரவையில் இருந்து என்னத்தை சாதித்துவிடப்போகிறார் என்று நினைக்கிறீர்கள்? //

ஜோசப் சார். இந்த நாட்டில் தேர்தலில் போட்டி இட அனைவருக்கும் உரிமை உண்டு. அப்படிப் போட்டி இடுகின்றவர்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பும் மக்களுக்கும் உண்டு. மக்கள் போடுகின்ற வாக்குகளின் விளைவை அவர்கள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அந்த வகையில் ஒரு கட்சி அமைத்து போட்டியிட்டிருக்கிறார் விஜயகாந்த். ஓரளவு வாக்கும் வாங்கியிருக்கிறார். இது ஜனநாயக உரிமை. இதில் நீங்கள் குற்றம் காண்பது எனக்கு வியப்பாக இருக்கிறது. அவர் என்ன சாதிப்பார் என்று எனக்குத் தெரியாது. அவரை நான் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. ஆனால் அவர் இந்த அளவிற்குச் செய்திருக்கிறார் என்பதற்குப் பாராட்டினேன். விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் நல்ல விளைவைத் தரும் என்பதற்காக. இனிமேல் அவருடைய செயல்பாடுகளைப் பொறுத்துதான் அவரது எதிர்காலம் என்று தெளிவாகக் குறிப்பிட்டேனே.

// அது ஒன்று. இந்த அளவுக்கு மக்கள் வாக்களித்திருக்கிறார்களே அதற்கு நன்றி தெரிவித்து ஒரு அறிக்கை விடத்தெரிந்ததா அவருக்கு? //

விட்டாரே. பேப்பரில் பார்த்தேனே.

// வேறொன்று தெரியுமா? அவர் வெற்றி பெற்ற விருத்தாச்சலத்திலேயே மக்களும், வணிகர்களும் நேற்று வெளியே வர அஞ்சி சாலையே வெறிச்சோடிகிடந்ததாம். //

ஏன்? மக்களுக்கு விஜயகாந்த் வந்து எல்லாரையும் அடிச்சிருவாருன்னு பயமா?

said...

// முதன் முதலாக தேர்தலில் போட்டியிட விரும்பியவர் ஏதோ பத்து இடத்தில் நின்றோம் அதில் கவனத்தை செலுத்தினோம் என்று இல்லாமல் சகட்டு மேனிக்கு ஆட்களை நிற்க வைத்து ஒரேயொரு இடத்தில் வெற்றி பெற்று நியாயமாய் ஜெயித்திருக்க வேண்டிய திமுக/அதிமுக வேட்பாளர்களை தோற்க வைத்து.. இது அவர் தமிழகத்துக்கு செய்த துரோகம் என்றே நான் கருதுகிறேன். அவருக்கு அரசியல் அனுபவம் போதாதென்றுமட்டுமல்ல மன முதிர்ச்சியும் போறாதென்றே நான் சொல்லுவேன். //

இதைத் துரோகம் என்று எப்படிச் சொல்ல முடியும்? இப்பிடித்தான் முடிவு வரும் என்று தெரிந்தேவா போட்டியிட்டார்? இல்லை விஜயகாந்த் இத்தனை ஓட்டுகளை முதலிலேயே பிரிப்பார் என்று நீங்கள் நினைத்தீர்களா? ஒரு வேளை தம்பி வருக என்று கருணாநிதி அவரை அரவணைத்துக் கூட்டணியில் சேர்த்துக் கொண்டால் அவருக்கும் முதிர்ச்சி வந்து விட்டது என்று நீங்கள் சொல்லலாம்.

// அடுத்தது வை.கோ..

அவரும் என்னத்தை பெரிதாக சாதித்துவிட்டார்? தி.மு.க விற்கு நியாயமாக விழவேண்டிய வாக்குகளை கலைத்ததுதான் அவர் சாதித்தது. //

நியாயமாக விழ வேண்டிய வாக்குகள் என்றால் அவை விழுந்திருக்கும். வைகோ பிரிந்ததில் அதிருப்தி உற்றவர்கள் அவருக்கு வாக்களித்திருப்பார்கள் என்று நம்பவில்லை. வைகோவுக்குத்தான் ஓட்டுப் போட வேண்டும் என்று நினைத்தவர்கள் அவருக்குத்தான் எப்படியும் ஓட்டுப் போட்டிருப்பார்கள். அவைகளை நியாயமான திமுக ஓட்டு என்று சொல்ல முடியாது.

அவர் சாதித்தது என்று நான் சொல்வது....அவருடைய கட்சியின் நிலையிலிருந்து நான் சொன்னது. நிச்சயமாக அவர் கூட்டணி மாறாமல் இருந்திருந்தால் திமுக பெரும்பான்மை பெற்றிருக்கும் என்றே நம்புகிறேன். இப்படிப் பார்த்தால் இந்திராகாந்திக்கு விதவைகள் மறுவாழ்வு கொடுக்கப் பேசிய வக்கிரங்களும் வெளியே வரும். திமுக என்ற பக்கத்திலிருந்து பார்த்தால் வைகோ செய்தது தவறென்றே தோன்றும். நான் விஜயகாந்த், வைகோ, பாமக என்று அவரவர் பக்கங்களிலிருந்து பார்த்து எழுதியிருந்தேன்.

// அவருக்கும் வேண்டுமானால் தனிப்பட்ட முறையில் ஒரு வக்கிரமமான சந்தோஷம் இருக்கலாம். ஆனால் நடந்தது என்ன? ஒரு ஸ்திரமற்ற நிலமை.. கூட்டணி ஆட்சி என்பது நடைமுறைக்கு ஒத்து வராதது. //

அடடே! அப்படியா? அப்படியானால் மத்திய அரசிலிருந்து உடனே திமுக விலகுவதுதான் நல்லது. கூட்டணி ஆட்சி மாநிலத்துக்கு மட்டுமல்ல நாட்டுக்கும் கெடுதி. தேர்தலில் போட்டியிடும் போது கூட்டணி வேண்டும். ஆட்சியில் தனியாகத் திங்க வேண்டுமா...இதென்ன சார் நியாயம்? தனிப்பெரும்பான்மை வேண்டுமென்றால் திமுக தனித்து நின்றே பெற்றிருக்கலாமே. பேசாமல் அடுத்த மாநில மத்தியத் தேர்தல்களில் ஒவ்வொரு கட்சியும் தனித்துப் போட்டியிடட்டும் என்ற சட்டம் கொண்டு வந்து விடலாம். மக்களுக்கும் கூட்டணி ஆட்சியின் ஸ்திரமற்ற நிலையைச் சொல்லி ஒருத்தருக்கே வாக்குப் போடுமாறு வேண்டிக் கேட்டுக் கொள்ளலாம்.

சார். கூட்டணி ஆட்சிதான் இன்றைய நிதர்சனம். திமுக தமிழ்கத்தின் தனிப்பெருங்கட்சி அல்ல. அதிமுகவும்தான். இரண்டும் போனால் நல்லதே என்று மக்கள் நினைக்கத் துவங்கி விட்டார்கள் என்றே நான் நம்புகிறேன். இது தொடக்கம் என்றே கருதுகிறேன்.

// மக்களுக்கு நல்லது என்று நினைக்கும் விஷயங்களை எடுக்க துணிவில்லாமல் ஆட்சியாளர்களை தங்களுடைய ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதையே நினைத்துக்கொண்டு நிலைதடுமாற வைக்கும். கேரளா இன்றும் வளராமல் இருப்பதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்? கூட்டணியாட்சிதான். எல்லா கட்சிகளும் அவரவர் ஆளுகின்ற காலத்தில் சேர்த்துக்கொள்ளக்கூடியதை சேர்த்துக்கொள்வதிலும் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொள்வதிலும்தான் குறியாயிருந்தார்களே தவிர உருப்படியாக யாரும் ஒன்றும் செய்யவில்லை. //

கேரளாவைப் பார்த்து நீங்கள் சிரிக்கிறீர்கள். அவர்கள் நம்மைப் பார்த்துச் சிரிக்கிறார்கள். அது தெரியுமா உங்களுக்கு?

// சரி.. இனி அவருக்கு அதிமுகவில் என்ன மதிப்பிருக்கும் என்று நினைக்கிறீர்கள்? கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு உதவிய டாக்டரின் நிலை என்னவாயிருந்தது என்று உங்களுக்கு தெரியாதா? அவருடைய மகனை எம்.பி ஆக்கக் கூட ஜெ தயாராக இல்லையே.. அவமானம் தாங்க முடியாமல்தானே அவரே வெளியேறினார்? அந்த நிலைக்கு வை.கோ நிச்சயம் தள்ளப்படுவார். அப்போதும் மு.க. அவரை கைகளை விரித்துக்கொண்டு வா என்பார்.. எழுதி வைத்துக்கொள்ளுங்கள். //

வருங்காலம் எப்படி என்று என்னால் சொல்ல முடியாது சார். ஜோசியத்தைப் பாக்கவும் தெரியாது. நம்பவும் தெரியாது. எது நடக்கனுமோ அது நடக்கும். அவரவர் செய்கைக்கு அவரவர் வினை. அதுக்கு அவரவரே பொறுப்பு.

// மு.கவைப் பற்றி.

அவரை எந்தவிதத்திலும் ஜெ வோடு ஒப்பிடமுடியாது, கூடாது என்பதுதான் என்னுடைய கருத்து. அவர் நான்கு முறை முதல்வராய் இருந்தும் இன்றும் எல்லோரையும் அரவணைத்துச் செல்லவேண்டும் என்று நினைப்பவர். போக மாட்டேன், போக மாட்டேன் என்று கூறிக்கொண்டிருந்த சரத் திடீரென்று கழகத்தை விட்டு சென்றபோதும் அவசரப்படாதே என்று கூறியவர் அவர். அவசரப்பட்டு போய் அவமானப்பட்டு திரும்பி வந்த விஜய ராஜேந்திரனை மீண்டும் மன்னித்து ஏற்றுக்கொண்டவர் அவர். இவர்கள் இருவராலும் பெரிதாக கழகத்துக்கு லாபம் இருக்கப்போவதில்லை என்று தெரிந்தும் அவர்களை மன்னிக்க தயாராயிருந்தவர் அவர். அவர் எங்கே ஜெ எங்கே.. //

ஜெ மனிதனை மனிதனாக மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் உறுதி படக் கூறியிருக்கிறேன். அவரது அரவணைத்துச் செல்ல முடியாத தன்மையைத் தின்னாத் தனியிலை. இல்லைன்னா பட்டினி என்று கிண்டலாகச் சொல்லியிருக்கிறேன்.

ஒவ்வொருவரிடம் ஒவ்வொரு நல்லது கெட்டது இருக்கத்தான் செய்கிறது. ஜெயலலிதாவை நான் கண்டுகொள்ளவேயில்லை. அதே சமயத்தில் கருணாநிதியைச் செம்மனச் செம்மல் என்று கொண்டாட என்னால் முடியாது. நல்லது செய்தால் பாராட்டுவேன். அல்லது செய்தால் இடித்துரைப்பேன். இது அவருக்கு மட்டுமல்ல எல்லாருக்கும் தான்.

// மு.க வாக்களித்ததில் கேஸ் அடுப்பு, தொலைக்காட்சியை தவிர மற்ற எல்லாவற்றையும் ஆதரிப்பவன் நான்.
அவர் முடியும் என்று நினைத்தால் செய்துவிட்டு போகட்டுமே.. நிச்சயம் வருமான வரியில் செஸ் வைக்க மாட்டார்.. அதற்கு ப.சி.யும் சரி பிரதமரும் சரி லேசில் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். //

அப்பக் கொஞ்சம் கஷ்டப்பட்டா ஒத்துக்குவாங்கன்னு சொல்றீங்களா? இலவசத்தைக் கருணாநிதி குடுத்தால் பாராட்டவும் ஜெயலலிதா குடுத்தால் எதிர்க்கவும் என்னால் முடியாது. இரண்டு பேர் செய்தாலும் தப்புதான். குடுக்க முடியும் என்று நினைத்தால் குடுக்கட்டுமே என்று நீங்கள் சொல்வது கருணாநிதி, ஜெயலலிதா இருவருக்குமே பொருந்தும் என்று நினைக்கிறேன்.

// அதற்காகவே காங்கிரஸ் அமைச்சரவையில் பங்கு கொள்ளாது என்று நினைக்கிறேன். //

இது போகப் போகத்தான் தெரியும். உள்ளேயிருந்தால் கூட பதவிச் சுகத்தில் சும்மாயிருப்பார்கள். வெளியே இருந்தால் ஆட்டம் ஜாஸ்த்தியாக இருக்கும்.

// தேசீய மற்றும் மாநில அளவில் அரசியல் அனுபவம் பெற்ற கட்சிகளைக்கொண்ட இரண்டு கூட்டணிகள் நேருக்கு நேர் மோதிக்கொள்ளட்டும். அப்போதுதான் யாரை மக்கள் உண்மையாக ஆதரிக்கிறார்கள் என்பதை கண்டுக்கொள்ள முடியும். அதை குலைக்கும் எந்த ஒரு கட்சியையும் அதாவது விஜயகாந்த் போன்ற தனிமனித கட்சிகளை இனியும் மக்கள் ஆதரிக்கலாகாது என்பதற்கு இத்தேர்தல் ஒரு பாடமாக இருக்க வேண்டும்.. //

தனிமனித உரிமையிலேயே கை வைக்கிறீர்கள். காலம் விடை சொல்லும். முன்பே சொன்னது போல் விஜயகாந்த் ஜெயலலிதா பக்கம் போயிருந்தால் நாற்பது கோடி என்று சொல்லவும் கருணாநிதி பக்கம் வந்திருந்தால் நீதியை நிலை நாட்ட வந்தவர் என்று பாராட்டவும் நடந்திருக்கும். எது எப்படியோ....நடக்க வேண்டியது நடந்து விட்டது. நடக்க வேண்டியது நடக்கிறது. நடக்க வேண்டியது நடக்கும்.

said...

// // கூட்டணி ஆட்சியால் தயாநிதியை இனி காங்கிரஸாரும் கேள்வி கேட்க முடியாது. இருவரும் சேர்ந்து விளையாடுவார்கள். நாம் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியது தான். //

ஆமாம் - நாங்கள் உங்களை அங்கே அட்ஜஸ்ட் செய்துகொள்கிறோம். நீங்கள் எங்களை இங்கே அட்ஜஸ்ட் செய்துகொள்ளுங்கள் என்றா?
:-))) //

ஆக....அப்படியானால் திமுகவினரும் காங்கிரசாரும் விளையாடுவார்கள் என்றே முடிவு கட்டி விட்டீர்களா?

said...

ஜிரா,

நீங்களும் தேர்தல் பதிவு போட்டாச்சு. வாழ்த்துக்கள்.

எழுதியிருப்பது உங்கள் சொந்தக் கருத்து. அது சரி என்றோ, தவறு என்றோ நான் சொல்லக்கூடாது.

ஆனால் நீங்கள் எழுதிய விதமும், உபயோகப்படுத்திய கண்ணியமான வார்த்தைகளும் எனக்கு மிகவும் பிடித்தது.

வாழ்த்துக்கள்

said...

ராகவன்,

என்னுடைய ஒவ்வொரு வாதத்திற்கும் அசராமல் சாதுரியமாக பதிலளித்திருக்கிறீர்கள்.

உங்களுடைய வாதத்திறமைக்கு வாழ்த்துக்கள்.

said...

உம் பெயரிலும் பிராது கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் சம்மன் வரும்.

said...

I guess this is 99% unbiased analysis, btw, there is nothing called neutral stand.

said...

நல்ல அலசல் ராகவன்.
தேர் நிலைக்கு வந்திருக்கிறது. அராஜக ஆணவ ஆட்சி ஒழிக்கப்பட்டு ஜனநாயகத்தன்மையில் சிறிதளவாவது நம்பிக்கை உள்ள ஆட்சி வந்திருக்கிறது. முன்பே சொன்னது போல குறைந்த அளவு தீமை ஆட்சிக்கு வந்திருக்கிறது. வை.கோ, பாமக, விடுதலைசிறுத்தைகள் இந்த மூவருக்கும் இந்தத் தேர்தல் சிறிது பின்னடைவைத் தந்திருப்பது வருங்காலத்தில் அவர்களை வளர்க்கவே உதவும் என்று நினைக்கிறேன். இது பற்றி விரிவாக பதிவெழுதும் நோக்கம் இருக்கிறது.

வை.கோ பற்றிய உங்கள் கருத்துகளோடு சில புள்ளிகளில் வேறுபட்டாலும் பெரும்பான்மையானவற்றை
ஒத்துக்கொள்கிறேன்.

நன்றி

நன்றி

said...

// இலவசக்கொத்தனார் said...
ஜிரா,

நீங்களும் தேர்தல் பதிவு போட்டாச்சு. வாழ்த்துக்கள். //

என்ன செய்ய இலவசம். மழைக்காலம் பாத்தீங்களா...இப்பச் சுடுபொரி வித்தாத்தான் நல்லாப் போகும். :-) அப்படியில்லை. தேர்தல் முடிவுகள் வந்த பிறகு இது தேவை என்று தோன்றியது. அதனால் இட்டேன்.

// எழுதியிருப்பது உங்கள் சொந்தக் கருத்து. அது சரி என்றோ, தவறு என்றோ நான் சொல்லக்கூடாது. //

சொல்லலாம். தப்பில்லை. உங்கள் கருத்தை எடுத்துச் சொல்லி, அதற்கு என்னிடம் விடையில்லையென்றால் உங்கள் கருத்தை நான் ஏற்றுக் கொள்வேன் அல்லவா. ஆகையால் சொல்லலாம். நான் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டேன்.

// ஆனால் நீங்கள் எழுதிய விதமும், உபயோகப்படுத்திய கண்ணியமான வார்த்தைகளும் எனக்கு மிகவும் பிடித்தது. //

கொத்சு, இது இன்றைக்கு மிகவும் தேவையானது. இதை அரசியலில் ரெண்டு பக்கத்தாள்களும் காற்றில் பறக்க விட்டார்கள். எங்கே பத்து கெட்ட வார்த்தை பேசுறாங்க....எங்க எட்டு கெட்ட வார்த்தை பேசுறாங்கன்னு பாத்து எட்டு வார்த்தை பேசுறவன நல்லவனாக்க வேண்டியிருக்கு. அப்படியிருக்குறப்ப முடிஞ்ச வரைக்கும் எதிர்ப்பைக் கூடக் கண்ணியமா சொல்லனும்னு விரும்புறேன்.

// வாழ்த்துக்கள் //

நன்றி கொத்ஸ்.

said...

// tbr.joseph said...
ராகவன்,

என்னுடைய ஒவ்வொரு வாதத்திற்கும் அசராமல் சாதுரியமாக பதிலளித்திருக்கிறீர்கள்.

உங்களுடைய வாதத்திறமைக்கு வாழ்த்துக்கள். //

ஜோசப் சார்...என்னது இது....வாதமா பண்றோம். கருத்துப் பரிமாற்றம்னு சொல்லுங்க ஹி ஹி

said...

// முத்துகுமரன் said...
நல்ல அலசல் ராகவன்.
தேர் நிலைக்கு வந்திருக்கிறது. அராஜக ஆணவ ஆட்சி ஒழிக்கப்பட்டு ஜனநாயகத்தன்மையில் சிறிதளவாவது நம்பிக்கை உள்ள ஆட்சி வந்திருக்கிறது. முன்பே சொன்னது போல குறைந்த அளவு தீமை ஆட்சிக்கு வந்திருக்கிறது. வை.கோ, பாமக, விடுதலைசிறுத்தைகள் இந்த மூவருக்கும் இந்தத் தேர்தல் சிறிது பின்னடைவைத் தந்திருப்பது வருங்காலத்தில் அவர்களை வளர்க்கவே உதவும் என்று நினைக்கிறேன். இது பற்றி விரிவாக பதிவெழுதும் நோக்கம் இருக்கிறது. //

எழுதுங்கள் முத்துக்குமரன்....காத்திருக்கிறோம்.

// வை.கோ பற்றிய உங்கள் கருத்துகளோடு சில புள்ளிகளில் வேறுபட்டாலும் பெரும்பான்மையானவற்றை
ஒத்துக்கொள்கிறேன். //

இதையும் எழுதுங்கள். வைகோ இனிமேலாவது இந்தத் தேர்தலில் பேசியது போல பேசாமல் இருக்க வேண்டும். அதுதான் அவருக்கும் கட்சிக்கும் நல்லது. இந்தத் தேர்தலில் ரொம்பவே பேசி விட்டார்.

said...

//நமக்குத் தெரிந்த செய்திகளை வைத்து நாம் சிந்திக்கிறோம். அதில் எவ்வளவு உண்மை இருக்கும் என்பதைப் பொருத்தும் நாம் உண்மையை எவ்வளவு ஏற்றுக் கொள்ள விரும்புகிறோம் என்பதைப் பொருத்தும்தான் நடுநிலைமை என்பது விளங்கும்.//


well said raghav...really wonderful..keep it up

said...

//விஜயகாந்த் விருத்தாசலத்துக்கு நல்லது செஞ்சா(!) ஒத்துழைப்புக் குடுக்கலைன்னாலும் குழப்பம் பண்ணாதீங்க.// இதெல்லாம் நடக்கிற காரியமா..ரொம்ப ஜோக்கடிக்காதீங்க ராகவன். அவங்க அறிவாளி தனத்துக்கு விஜயகாந்த் எல்லாம் எப்படி சமாளிக்க போறாரோ.. :-))

said...

இந்தப் பதிவையும் பின்னூட்டங்களையும் படித்தேன்.

said...

ஜிரா நல்ல அலசல்.

இந்த ஆட்சியில ஒங்க கிட்ட இருந்து எதுவுமே எதிர் பார்க்கலை. ஏன்னா உங்க தேர்தல் அறிக்கைல உண்மையான தொலை நோக்குத் திட்டங்கள் எதுவுமே இல்லை. ஏதாவது செஞ்சீங்கன்னா நிச்சயம் பாராட்டுவேன். இல்லைன்னா.....எது எப்படியோ திரும்ப முதல்வரானதுக்கு என்னோட வாழ்த்துகள்.

Bulls Eye.