Wednesday, May 17, 2006

பரபரப்புப் புத்தகமும் பக்குவமற்ற கொள்கைகளும்

டாவின்சி கோடு புத்தகம் பரபரப்பான புத்தகந்தானே. அது வந்த பொழுது எத்தனை விதமான விமர்சனங்கள். ஏற்புகள். மறுப்புகள். ஆனாலும் புத்தகம் விற்பனையில் புதுச் சாதனை படைத்தது. நானும் அந்தப் புத்தகத்தைப் படித்தேன். என்னைப் பொருத்த வரையில் அந்தப் புத்தகத்தில் கலை மதிப்பு என்பது சுழி. அதாவது அந்தப் புத்தகத்தில் கொஞ்சமும் கலைத்தன்மை இல்லை என்கிறேன். ஆயினும் தொடர்ந்து படிக்க வைக்கும் நடை. முடிவில் காத்திருக்கும் பரபரப்புத் தகவல். இவையிரண்டுந்தான் அந்தப் புத்தகத்தின் சிறப்புகள்.

விற்பனையில் சிறந்த புத்தகங்கள் திரைப்படங்களாவது ஆங்கிலத்தில் நிறைய உண்டு. அந்த வகையில் டாவின்சி கோடு புத்தகத்தைப் படமாக்குவதில் எந்தத் திரைப்படத் தயாரிப்பாளருக்கும் மறுகருத்து இருக்கப் போவதில்லை. ஆகையால்தான் மிக விரைவிலேயே திரைப்படமும் தயாரானது. வெளியாக இருக்கிறது. நானும் ஆவலுடன் காத்திருந்தேன். பொதுவாகவே ஆங்கிலத்தில் நான் படித்த புத்தகங்கள் படங்களாக வந்திருக்கின்றன. அவைகளை ரசித்தும் இருக்கிறேன். விலக்கியும் இருக்கிறேன். டாவின்சி கோடை மற்றும் வரவேற்காமல் போவேனா?

இந்தப் படத்தைப் பார்ப்பதற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்ய இருக்கும் பொழுதுதான் படத்தைத் தடை செய்து விட்டதாகச் செய்தி. தணிக்கைக் குழுவா மத்திய அரசா என்று முதலில் தெரியவில்லை. பிறகுதான் தணிக்கைக் குழு படத்தை வெளியிடலாம் என்று சான்று கொடுத்த பிறகும் அரசு அதைத் தடை செய்திருப்பது தெரிந்தது.

என்ன காரணம் என்று கேள்விப்படுகையில் சிரிப்பும் வேதனையும் கலந்து வந்தன. கிருத்துவ மதச் சாமியார்கள் சிலர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருப்பதுதான். அதுவும் சாகும் வரை உண்ணாவிரதம். உடனே அரசாங்கமும் அவர்கள் அனுமதியின்றி படத்தை வெளியிட மாட்டோம் என்று கேணத்தனமான ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கின்றனர்.

கேணத்தனம் என்று சொல்வதற்காக யாரும் ஆத்திரப் படத் தேவையில்லை. கருத்து சுதந்திரம் என்பது அடுத்தவனைப் பற்றிப் பேசும் வரைக்குந்தான் என்ற நிலைக்கு அரசாங்கம் நம்மைக் கொண்டு வந்து விட்டிருக்கிறது. வலைப்பூவிலும் இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பற்றியெல்லாம் பேசி இந்தப் படத்தைத் தடை செய்தது சரியென்று வாதம்.

கீமாயணம் எழுதிய பொழுது பெரியாருக்குக் கருத்துச் சுதந்திரதிரத்தைக் கொடுக்கவில்லையா? என்னைக் கேட்டால் அவர் கீமாயணம் எழுதியது சரி என்பேன். அவருடைய கருத்தைச் சொல்லியிருக்கிறார். அவ்வளவுதார். ஏற்பவர் ஏற்கட்டும். ஏற்காதல் ஏற்காமல் போகட்டும். அவ்வளவுதான் விஷயம். எது எப்படியோ....ராமாயணத்தைப் பெரிதாக நினைக்கின்றவர்களது மனது புண்படுமே என்று பலரும் நினைக்கவில்லை.

இராமாயணம் பொய் என்று நிரூபிக்கத்தான் பெரியார் கீமாயாணம் எழுதினார் என்று சொல்கிறவர்களுக்கு ஒரு செய்தி. பைபிளில் சொல்லியிருப்பது பொய் என்று நிரூபிக்கத்தான் இந்தக் கிருத்துவக் டாவின்சிக் கோடாயணம் எழுதப் பட்டிருக்கிறதாம். பெரியாருக்கு இருந்த சுதந்திரம் டேன் பிரவுனுக்கும் கொடுக்க வேண்டும்.

இன்றைக்கும் வலைப்பூவில் இந்துக் கடவுள்கள் கடவுள்களே இல்லை என்று சொல்லும் அளவிற்குக் கருத்துச் சுதந்திரம் இருக்கிறது. அப்பொழுதெல்லாம் மற்றவர்கள் மனம் புண்படும் என்று வருத்தப்படாதவர்கள் இப்பொழுது இந்தப் படத்தால் குறிப்பிட்டவர்கள் மனம் புண்படும் என்று சொல்லும் நிலைதான் இப்பொழுதைய உண்மையான நிலை.

அர்ச்சகர்களாக யாரும் வரலாம் என்ற சட்டம் மிகச் சரிதான். அதை அரசாங்கம் கொண்டு வந்ததும் சரிதான். அதை எதிர்ப்பவர்களை எதிர்க்க எத்தனை பேர் கச்சை கட்டிக் கொண்டு வந்தீர்கள். ஒவ்வொரு மதத்திலிருந்தும். எந்த மதத்தில் இல்லாதவர்களும் கூட.

படத்தினை வெளியிடுவதில் எந்தத் தவறும் இல்லை என்று தணிக்கைக் குழுவும் சொல்லி விட்டது. அதற்குப் பிறகு படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று சில சாமியார்கள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். எத்தனை பேர் வந்து கேட்டீர்கள்? ஒரே ஒரு பதிவுதான். அதிலும் கூட இந்தத் தடை தேவையில்லாதது என்று பட்டும் படாமல்தான் ஒரு சிலரால் சொல்ல முடிந்தது. தவறு என்று கூடச் சொல்லும் துணிவு ஒரு சிலரைத் தவிர யாருக்கும் இல்லை.

கிருத்துவ மதம் பிறந்து வளர்ந்து செழித்தோங்கி இருக்கும் நாடுகளில் எல்லாம் தடை இல்லை. எந்தச் சாமியாரும் கேட்கவில்லை. ஏன்? அவர்களுக்கு இருக்கும் பக்குவம். ஒரு முறை வலைப்பூவில் ஜோசப் சார் சொன்னார். "இது போல நிறைய ஏடுகள் கிடைத்திருக்கின்றன. அவைகள் நிரூபித்தவை ஒன்றுமில்லை" என்று. (யூதாஸ் தொழுகை ஏடுகள் தொடர்பாக.) அது நம்பிக்கை. அது பக்குவம். அதுதான் சகிப்புத்தன்மை. "நீ சொல்வதைச் சொல்லிக் கொள். எனக்குத் தெரியும் எது உண்மையென்று." ஆகையால்தான் கிருத்துவ நாடுகளில் இந்தப் படத்திற்குத் தடையை யாரும் கோரவில்லை. வாடிகன் அதிகார மையமும் அமைதி காக்கிறது.

ஆனால் இந்தியாவில் எழுகிறது பிரச்சனை. சகிப்புத்தன்மையும் பக்குவமும் கருத்துச் சுதந்திரமும் இன்றி. இது போராட்டத்திற்கான நோக்கத்தையே ஐயத்திற்குள்ளாக்குகிறது.

ஃபயர், வாட்டர் பிரச்சனையில் தணிக்கைக் குழு இருக்கிறது என்று வரிந்து கட்டிக் கொண்டு வந்தவர்களில் நானும் ஒருவன். ஆனால் இன்றைக்குத் தணிக்கைக் குழு இருக்கிறது என்று சொல்ல அன்றைக்கு வந்த குரல்கள் வரவில்லை.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையால் மதச்சார்பின்மையையும் இந்தியர்களின் சகிப்புத்தன்மையும் இன்னமும் கீழே போயிருக்கின்றன என்றால் மிகையாகாது.

போராடுகின்றவர்களே.....இந்தப் படம் மிகப் பெரிய வெற்றி அடையப் போகிறது. இதோ இன்னும் ஒரு வாரத்தில் திருட்டு டீவிடியில் எந்த வெட்டும் இன்றி முழுப்படமும் காணக் கிடைக்கப் போகிறது. தியேட்டரில் போய்ப் பார்க்க நினைத்தவர்கள் வீட்டிலேயே பார்க்கப் போகிறார்கள். அதுவும் அவர்களிடமே அந்த டீவிடி சொந்தமாக இருக்கப் போகிறது. இதுதானா உங்கள் எண்ணம்? இந்தப் படத்திற்கு நல்லதொரு விளம்பரத்தை நீங்களே தேடித் தந்துவிட்டீர்கள். நன்றி.

அன்புடன்,
கோ.இராகவன்

60 comments:

said...

அருமை ராகவன்,

கருத்து சுதந்திரம்,கலை சுதந்திரம் நாட்டுக்கு தேவை.கிறிஸ்தவ மதம் தழைத்தோங்கும் ஐரோப்பாவில் பல நாடுகளிலும் இந்த படம் எந்த எதிர்ப்பும் இல்லாமல் திரையிடப்படும்பொது நமது நாட்டில் எதிர்ப்பு என்பது வெட்ககேடு.


என் நம்பிக்கையை புண்படுத் துகிறீர்கள் என்று சொல்வது புரிதல் இல்லாத வாதம்தான்.

said...

//ஏற்பவர் ஏற்கட்டும். ஏற்காதல் ஏற்காமல் போகட்டும். அவ்வளவுதான் விஷயம்.//

//இந்தப் படத்திற்கு நல்லதொரு விளம்பரத்தை நீங்களே தேடித் தந்துவிட்டீர்கள்.//

ராகவன்,
நீங்கள் சொன்ன இவை தான் என் கருத்தும்.

said...

சம்பந்தபட்ட பிரச்சினையின் முழு பரிமாணமும், எதிர்ப்பவர்கள் (விஷயம் இருப்பதாக சொல்லுபவர்கள். கண்மூடித்தணமாக என்னவென்றே தெரியாமல் தொட்ர்பவர்கள் அல்ல) என்ன காரணம் சொல்லுகிறார்கள் என்று தெரியாமல், வெட்டு ஒன்றாக கருத்து சொல்ல யோசனயாக உள்ளது. என்னுடைய அளவுகோலின்படி, சாகும் வரை உண்ணாவிரதம் இருக்குமளவு வஞ்சகமாக இதில் ஏதும் இருக்கிறதா என கேள்வி கேட்க தோன்றுகிறது. ஆனால், எதிர்த்து கருத்து தெரிவிக்கும் உரிமையை மதிக்கிறேன். அந்த உரிமையை கண்டித்து பல பேர் இங்கு குரல் எழுப்புவது மடமை.

குமரன் அவர்களின் பதிவில் இட்ட பின்னூட்டம்:

// இந்தியாவில் மட்டும் தடை ஏன்?
//

ஸ்பெயின், கிரீஸ், இன்னும் சில நாடுகளிலும் தடை.

இந்த புத்தகத்தில் என்ன இருக்கிறது என தெரியாமலேயே பலர் விமரிசிப்பது போல தோன்றுகிறது.

இந்த புத்தகத்தை நானும் படித்தேன். இதை எழுதிய டேன் ப்ரொவ்ன், படிப்பவர்களை இழுத்து பிடிப்பது போல கதைக்களம், வர்ணனை அமைப்பதில் வியக்கத்தக்க கில்லாடி (இவருடைய 'தேவதைகளும் சாத்தான்களும்' படித்து பாருங்கள்). புத்தகத்தில் இருப்பது போல படம் வரவில்லையென கேன்ஸ் பட அறிமுக கருத்தில் சொல்லியுள்ளார்கள்.

இயேசு மணம் புரிந்ததுக்கு, டாவின்சி யுடைய கருத்துக்களையும், அவருடைய ஓவியத்தை மட்டுமே ஆதாரமாக கதையில் சொல்லுகிறார்கள். மேலும், பிரதான வாடிகன் கிறிஸ்துவ நம்பிக்கையை மெலிதாக தட்டி விட்டு, ஓபஸ் டீ எனும் ஒரு அமைப்புடய செயல்பாடுகளையும், டாவின்சி தலைமை தாங்கியதாக சொல்லும் 'அறிவாளர்கள்' குரூப்பையும் 'விவகாரமான'தாக விவரிக்கிறார்கள்.

வஞ்சக எண்ணத்தோடு கதை அமைத்திருக்கிறாரா என சொல்ல முடியாவிட்டாலும் வர்த்தக நோக்கு தென்படுகிறது.

எல்லாமே விமர்சனத்துக்கு உரியது என சொல்லுபவர்கள், ஆரோக்கியமான ஒன்றுக்கும், அவதூறு/விஷமம் பரப்பும் ஒன்றுக்கும் ஒரே அளவுகோல் கொள்ள முடியுமா என சிந்திக்க வேண்டும். உதாரணமாக, காந்தி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எல்லா நேரங்களிலும் ஆதரவாக இல்லை என்பதும், தள்ளாத வயதிலும் பெண்பித்தராக இருந்தார் என்பதும், ஒரே விமரிசன அளவுகோல் அடிப்படையில் வருமா?

said...

ராகவன் நீங்கள் சொன்ன கருத்துக்கள் அனைத்துமே சரியே பலர் சொல்வது போல ஹிந்து கடவுள்களை என்ன வேண்டுமானாலும் சொல்லி விடலாம் யாரும் ஒன்றும் செய்ய மாட்டார்கள் என்பது உண்மையில்லை. பயர் படப் பிரச்சனை ஒரு பிரச்சனையே இல்லை, அது இந்தப் படப் பிரச்சனை இப்பொழுது நடக்கும் பிரச்சனை விட 10000 மடங்கு பூதாகரமாக வெடித்தது என்பது உண்மை. நான் என்னுடைய பதிவில் பொதுவான ஒரு நிலையில் நின்று எழுதினேன் ஆகவேதான் உங்களுக்கு அது பட்டும் படாமலும் எழுதியது போல் தோன்றுட்கிறது. நான் ஹிந்து சார்பு நிலை எடுத்து எழுத நம்மைப் போன்ற ஹிந்துக்கள் ஒன்றும் மஹாத்மாக்கள் இல்லையே. இந்தப் படத்திற்க்கு தற்காலிக தடைதான் அது திரை அரங்குகளில் மீண்டும் வர வாய்ப்புண்டு

said...

// முத்து ( தமிழினி) said...
அருமை ராகவன்,

கருத்து சுதந்திரம்,கலை சுதந்திரம் நாட்டுக்கு தேவை.கிறிஸ்தவ மதம் தழைத்தோங்கும் ஐரோப்பாவில் பல நாடுகளிலும் இந்த படம் எந்த எதிர்ப்பும் இல்லாமல் திரையிடப்படும்பொது நமது நாட்டில் எதிர்ப்பு என்பது வெட்ககேடு. //

வெளிப்படையான உங்கள் கருத்திற்கு நன்றி முத்து.

said...

// ஜோ / Joe said...
//ஏற்பவர் ஏற்கட்டும். ஏற்காதல் ஏற்காமல் போகட்டும். அவ்வளவுதான் விஷயம்.//

//இந்தப் படத்திற்கு நல்லதொரு விளம்பரத்தை நீங்களே தேடித் தந்துவிட்டீர்கள்.//

ராகவன்,
நீங்கள் சொன்ன இவை தான் என் கருத்தும். //

உண்மைதான் ஜோ. இப்பொழுதுதான் இந்தப் படத்தை எப்படியாவது பார்த்தே தீர வேண்டும் என்ற ஆவல் எல்லாருக்கும் உண்டாகும்.

said...

raghavan.

you cut the link which has been given by selvan into two parts and publish again..

that should solve the problem

said...

// salmaan said...
சம்பந்தபட்ட பிரச்சினையின் முழு பரிமாணமும், எதிர்ப்பவர்கள் (விஷயம் இருப்பதாக சொல்லுபவர்கள். கண்மூடித்தணமாக என்னவென்றே தெரியாமல் தொட்ர்பவர்கள் அல்ல) என்ன காரணம் சொல்லுகிறார்கள் என்று தெரியாமல், வெட்டு ஒன்றாக கருத்து சொல்ல யோசனயாக உள்ளது. என்னுடைய அளவுகோலின்படி, சாகும் வரை உண்ணாவிரதம் இருக்குமளவு வஞ்சகமாக இதில் ஏதும் இருக்கிறதா என கேள்வி கேட்க தோன்றுகிறது. ஆனால், எதிர்த்து கருத்து தெரிவிக்கும் உரிமையை மதிக்கிறேன். அந்த உரிமையை கண்டித்து பல பேர் இங்கு குரல் எழுப்புவது மடமை. //

சல்மான். எப்படி ஒன்றை ஆதரிப்பதற்கு சுதந்திரம் உண்டோ...அப்பொழுதே ஒன்றை மறுப்பதற்கும் சுதந்திரம் உண்டு என்று ஆகி விடுகிறது. இந்தப் புத்தகம் கேவலம்..மட்டம்...பொய்...படம் முழுக்கப் பொய் என்று சொல்லலாம். அதற்காக என்னுடைய மதத்தைப் பற்றி ஒன்றுமே சொல்லாதே என்றால் அது முறையன்று. பொதுவில் உள்ள எதுவும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதன்று. மேலும் டேன் பிரவுன் ஒன்றும் இந்தப் பிரச்சனையை முதன் முதலாகக் கிளப்பியர் இல்லை. இந்தப் பிரச்சனை பல நூறு ஆண்டுகளாக உள்ளதுதான். டேன் பிரவுன் கதையோடு எழுதினார். ஆனால் அதை மட்டுமே வைத்துப் பல புத்தகங்களும் டீவீடிகளும் வந்துள்ளன தெரியுமா?

// // குமரன் அவர்களின் பதிவில் இட்ட பின்னூட்டம்:

// இந்தியாவில் மட்டும் தடை ஏன்?
//

ஸ்பெயின், கிரீஸ், இன்னும் சில நாடுகளிலும் தடை. //

மற்ற ஐரோப்பிய நாடுகளில் தடை இல்லையே. குறிப்பாக ரோம் மற்றும் ஃபிரான்ஸ்...

// இந்த புத்தகத்தில் என்ன இருக்கிறது என தெரியாமலேயே பலர் விமரிசிப்பது போல தோன்றுகிறது.

இந்த புத்தகத்தை நானும் படித்தேன். இதை எழுதிய டேன் ப்ரொவ்ன், படிப்பவர்களை இழுத்து பிடிப்பது போல கதைக்களம், வர்ணனை அமைப்பதில் வியக்கத்தக்க கில்லாடி (இவருடைய 'தேவதைகளும் சாத்தான்களும்' படித்து பாருங்கள்). புத்தகத்தில் இருப்பது போல படம் வரவில்லையென கேன்ஸ் பட அறிமுக கருத்தில் சொல்லியுள்ளார்கள். //

இருக்கலாம், பொதுவாகவே நாவலைப் படமாக்கும் பொழுது அது அவ்வளவு சிறப்பாக வராது.

// இயேசு மணம் புரிந்ததுக்கு, டாவின்சி யுடைய கருத்துக்களையும், அவருடைய ஓவியத்தை மட்டுமே ஆதாரமாக கதையில் சொல்லுகிறார்கள். மேலும், பிரதான வாடிகன் கிறிஸ்துவ நம்பிக்கையை மெலிதாக தட்டி விட்டு, ஓபஸ் டீ எனும் ஒரு அமைப்புடய செயல்பாடுகளையும், டாவின்சி தலைமை தாங்கியதாக சொல்லும் 'அறிவாளர்கள்' குரூப்பையும் 'விவகாரமான'தாக விவரிக்கிறார்கள்.

வஞ்சக எண்ணத்தோடு கதை அமைத்திருக்கிறாரா என சொல்ல முடியாவிட்டாலும் வர்த்தக நோக்கு தென்படுகிறது. //

தெளிவான வர்த்தன நோக்கு என்றே நினைக்கிறேன். படத்தை எடுத்தவர்களும் நடித்தவர்களும் கிருஸ்துவர்கள்தானே. அவர்களுக்கு அந்தக் கதைக்களத்தில் ஆழம் புரிந்திருக்கும் என்றே நம்புகிறேன்.

// எல்லாமே விமர்சனத்துக்கு உரியது என சொல்லுபவர்கள், ஆரோக்கியமான ஒன்றுக்கும், அவதூறு/விஷமம் பரப்பும் ஒன்றுக்கும் ஒரே அளவுகோல் கொள்ள முடியுமா என சிந்திக்க வேண்டும். உதாரணமாக, காந்தி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எல்லா நேரங்களிலும் ஆதரவாக இல்லை என்பதும், தள்ளாத வயதிலும் பெண்பித்தராக இருந்தார் என்பதும், ஒரே விமரிசன அளவுகோல் அடிப்படையில் வருமா? //

உண்மை அதுவென்று நம்புகிறவர்கள் அதைச் சொல்வதில் தவறென்ன. அப்படி இல்லை என்று சொல்கிறவர்கள் அதை இல்லை என்று நிரூபிக்கத்தான் வேண்டும்.

said...

ராகவன்

அந்த சுட்டியை எடுத்துவிட்டால் பிரச்சனை இருக்காது.

உங்கள் டெம்ப்ளேட்டுக்கு வந்த சிரமத்துக்கு வருந்துகிறேன்

said...

இந்த புத்தகத்தில் என்ன இருக்கிறது என தெரியாமலேயே பலர் விமரிசிப்பது போல தோன்றுகிறது.//that is what happens everytime - whether it was Satanic Verses or scripts of Water...and now the Code..!

said...

// உண்மை அதுவென்று நம்புகிறவர்கள் அதைச் சொல்வதில் தவறென்ன. அப்படி இல்லை என்று சொல்கிறவர்கள் அதை இல்லை என்று நிரூபிக்கத்தான் வேண்டும்.
//


நன்றி ராகவன்.

முதலில், நான் குறிப்பிட்டு சொல்லியிருந்தேன்:-அவதூறு/விஷமம் பரப்பும் ஒன்றுக்கும் - என. எதை வேண்டுமானாலும் 'பத்த' வைத்து விட்டு போகலாம் என்பதற்கு இடமளிக்கலாமா? நம்மை (குடும்பம், நாணயம், இன்ன பிற)பற்றி தெரிந்தே அவதூறு பரப்பினால், நாம் எதிர்ப்பு தெரிவிப்போமல்லவா?

உண்மையென விளங்கி கொண்டவர்கள் (கவனிக்க- நம்பினால் மட்டும் போதாது), தாராளமாக சொல்வதோடு, மற்றவர்களும் விளங்க வேண்டி நிரூபிக்கும் முயற்சியும் செய்ய வேண்டும். அப்படி இல்லை என்று சொல்கிறவர்கள் அதை இல்லை என்று நிரூபிக்கத்தான் வேண்டும் என ஒரு சார்பாக மட்டும் சொல்வதில் ...?

நான் இங்கு சொன்னவை 'பரபரப்பு' புத்தகம் குறித்து அல்ல. எதை வேண்டுமானாலும் 'பத்த' வைத்து விட்டு போவதை ஊக்குவிக்க வேண்டும் என்கிற புனித பிம்பம் குறித்து!

நட்புடன்,
சல்மான்

said...

செல்வன் உங்கள் கமெண்ட்டை அழித்து விட்டேன். அது டெம்ப்ளேட்டைப் பதம் பார்த்து விட்டது. அதே கமெண்ட்டைக் கீழே கொடுத்திருக்கிறேன்.

செல்வன் said...
The film "is going to feel very injurious and uncomfortable," said Raul Lopez, spokesman for Opus Dei in Mexico.

"What is Christian is to turn the other cheek," he said.

"We tell them to pray for Dan Brown."

http://news.yahoo.com/s/afp/20060517/ts_alt_afp/afpentertainmentusfilm_060517230606;
_ylt=Ar5QQZHoDtObB5wHx4fmXWTKOrgF;_ylu=X3oDMTA5aHJvMDdwBHNlYwN5bmNhdA--

said...

//கேணத்தனம் என்று சொல்வதற்காக யாரும் ஆத்திரப் படத்//
கேணத்தனம் தமிழ் சொல்லே எனவே ஆத்திரபட என்ன இருக்கிறது. அத்தோடு செயலும் அப்படியே.

//ஆனால் இந்தியாவில் எழுகிறது பிரச்சனை. //

இந்தியாவில் தானே சிறுபான்மை சமுதாயம், பிற நாடுகளில் இவர்கள் பெருன்பான்மையர், ஓட்டு போடும் போது நாம் நாட்டில் உள்ளது போல் அங்கும் சிறுபான்மை மக்களை தான் மதிப்பர் போலும்.

//நீ சொல்வதைச் சொல்லிக் கொள். எனக்குத் தெரியும் எது உண்மையென்று//

இந்த நிலை வர இன்னும் 2 நூற்றாண்டு ஆகும்.

//இதோ இன்னும் ஒரு வாரத்தில் திருட்டு டீவிடியில்//
அரசியல் சாயம் படிந்த அரசாங்கமும் இதை தானே விரும்புகிறது.

(நான் எப்போதும் அரசியலை தவிர்பது வழக்கம் ஆனால் இந்த செய்தி விவாதத்தை கண்டு பொருக்க முடியவில்லை, கொஞ்சம் பொருமி விட்டேன். பொருத்துக்கொள்ளவும்)

said...

my comment on the book is here.

said...

ராகவா,
மிகச் சரியாகச் சொன்னீர்கள். இந்த விவகாரம் பற்றி இப்போதுதான் முழுமையாகத் தெரிய வந்தது.

நீங்கள் தலைப்பிலேயே இன்னும் தெளிவாகச் சொல்லலாம் என்பது என் கருத்து. எனக்கென்னவோ இந்தப் படத்திற்குத் தேவையில்லாத விளம்பரத்தை இந்த போலி மதச்சார்பின்மை (நன்றி: பாஜக :)) அரசு தருகிறது என்பேன்.

இதை விட சர்ச்சைகளைக் கெளப்பும் பேஷன் ஆஃப் கிரைஸ்ட் படம் எல்லாம் பட்டை கிளப்பியது. இந்தியாவில் வந்ததா என்று தெரியவில்லை. ஆனால் டிவிடிக்களில் வந்து விட்டது.

நம்பிக்கை, நம்பிக்கையின்மை பற்றியெல்லாம் அரசு கவலைப்பட்டு தடை விதித்ததாகத் தெரியவில்லை. வெற்று மிரட்டல்தான் காரணம்.

said...

// முத்து ( தமிழினி) said...
raghavan.

you cut the link which has been given by selvan into two parts and publish again..

that should solve the problem //

செஞ்சிட்டேன் முத்து. :-) இப்ப ஒழுங்கா வருது. நன்றி.

said...

// செல்வன் said...
ராகவன்

அந்த சுட்டியை எடுத்துவிட்டால் பிரச்சனை இருக்காது.

உங்கள் டெம்ப்ளேட்டுக்கு வந்த சிரமத்துக்கு வருந்துகிறேன் //

அட! வருந்தெல்லாம் வேண்டாங்க....சுட்டியை எடுக்கலை. முத்து சொன்னபடி உடச்சுப் போட்டிருக்கேன். இப்ப சரியாயிருக்கு.

said...

// Dharumi said...
இந்த புத்தகத்தில் என்ன இருக்கிறது என தெரியாமலேயே பலர் விமரிசிப்பது போல தோன்றுகிறது.//that is what happens everytime - whether it was Satanic Verses or scripts of Water...and now the Code..! //

உண்மைதான் தருமி. சரியாகச் சொன்னீர்கள். நீங்கள் கொடுத்துள்ள உரலும் பார்த்தேன். நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

said...

// நான் இங்கு சொன்னவை 'பரபரப்பு' புத்தகம் குறித்து அல்ல. எதை வேண்டுமானாலும் 'பத்த' வைத்து விட்டு போவதை ஊக்குவிக்க வேண்டும் என்கிற புனித பிம்பம் குறித்து!

நட்புடன்,
சல்மான் //

எதை வேண்டுமானாலும் பத்த வைப்பது சரியென்று நானும் சொல்லவில்லை.

ஆனால் இந்தப் புத்தகம் அந்த வகையில் வருகிறது என்று நான் நம்பவில்லை. Priory of Sion, Temple of Knights ஆகியவை முழுக்க முழுக்க உண்மையானவை என்று நிரூபிக்கப் பட்டிருக்கிறதே. அது மட்டுமின்றி...இந்த விஷயம் தொடர்பாக வெளிவரும் முதல் புத்தகமும் இதுவல்ல. நூற்றாண்டுகளாய் இந்தப் பிரச்சனை இருப்பதும் தெரிகிறதே.

said...

////நீ சொல்வதைச் சொல்லிக் கொள். எனக்குத் தெரியும் எது உண்மையென்று//

இந்த நிலை வர இன்னும் 2 நூற்றாண்டு ஆகும். //

சிவமுருகன், வரும்கிறீங்க....எனக்கு நம்பிக்கை இல்லை. உலகம் முழுக்கவே சகிப்புத்தன்மை கொறஞ்சிக்கிட்டு வருது. இன்னமும் ஒரு முழு நூற்றாண்டு இப்பிடியே வாழ்றதே பெரிய விஷயம்னு தோணுது.

////இதோ இன்னும் ஒரு வாரத்தில் திருட்டு டீவிடியில்//
அரசியல் சாயம் படிந்த அரசாங்கமும் இதை தானே விரும்புகிறது.

(நான் எப்போதும் அரசியலை தவிர்பது வழக்கம் ஆனால் இந்த செய்தி விவாதத்தை கண்டு பொருக்க முடியவில்லை, கொஞ்சம் பொருமி விட்டேன். பொருத்துக்கொள்ளவும்) //

பொறுக்க முடியாமல் நீங்கள் பொருமியதை நானும் பொறுத்துக் கொண்டேன் சிவமுருகன்.

said...

//கீமாயணம் எழுதிய பொழுது பெரியாருக்குக் கருத்துச் சுதந்திரதிரத்தைக் கொடுக்கவில்லையா?//

கீமாயணத்தை பெரியார் எழுதியதாக உங்களுக்கு யார் சொன்னது? பெரியார் எழுதவில்லை. எனக்கு தெரிந்து அதை எழுதியவர் எம். ஆர். ராதா.

said...

its right,
what is the problem in releasing this movie in india? like typical christian countries like america and all they are releasing this, what is the problem in india? typical politics other than that nothing is there,
srishiv

said...

// பிரதீப் said...
ராகவா,
மிகச் சரியாகச் சொன்னீர்கள். இந்த விவகாரம் பற்றி இப்போதுதான் முழுமையாகத் தெரிய வந்தது. //

இப்பவாவது தெரிய வந்ததே. இப்ப படத்தைக் கிருத்துவ குருமார்களுக்குப் போட்டுக் காட்டுகிறார்கள். இன்றைக்குத் தாளில் வந்திருந்தது.

// நீங்கள் தலைப்பிலேயே இன்னும் தெளிவாகச் சொல்லலாம் என்பது என் கருத்து. எனக்கென்னவோ இந்தப் படத்திற்குத் தேவையில்லாத விளம்பரத்தை இந்த போலி மதச்சார்பின்மை (நன்றி: பாஜக :)) அரசு தருகிறது என்பேன். //

முழுக்க முழுக்க உண்மைதான்.

// இதை விட சர்ச்சைகளைக் கெளப்பும் பேஷன் ஆஃப் கிரைஸ்ட் படம் எல்லாம் பட்டை கிளப்பியது. இந்தியாவில் வந்ததா என்று தெரியவில்லை. ஆனால் டிவிடிக்களில் வந்து விட்டது. //

இந்தியாவில் திரையரங்குகளில் வந்தது. மிகவும் நல்ல இயக்கம். ஆனால் திரையில் அளவுக்கு அதிகமான வன்முறை. அந்தப் பத்திற்கு யூதர்கள் எதிர்ப்புத் தெரிவித்தார்களாம். பைபிளில் இருப்பதைப் படமாக எடுத்திருக்கிறார்கள் என நினைக்கிறேன். அப்படியானால் யூதர்கள் பைபிளை ஏற்றுக் கொள்ளாதவர்களா? (தெரிந்து கொள்வதற்காகக் கேட்கிறேன்.)

// நம்பிக்கை, நம்பிக்கையின்மை பற்றியெல்லாம் அரசு கவலைப்பட்டு தடை விதித்ததாகத் தெரியவில்லை. வெற்று மிரட்டல்தான் காரணம். //

நானும் அப்படித்தான் நினைக்கிறேன். ஆனால் மிரட்டினால் தடை விதிக்க வேண்டுமா?

எனக்குத் தெரிந்து இந்திய அரசு Indiana Jones and Temple of Doom படத்திற்குக் கூட தடை விதிக்கவில்லை. ஆனால் படப்பிடிப்பிற்குத் தடை விதித்தது. அந்தப் படத்தில் இந்தியர்கள் பாம்பு தின்னிகள். ரத்தம் குடிப்பார்கள் என்ற ரேஞ்சுக்குக் காட்சிகள் இருக்கும். இதை இந்தியாவில் எடுக்கக் கூடாது என்றதும் இலங்கையில் போய் படத்தை எடுத்தார்கள். ஆனால் படம் இந்தியாவில் வெளியானது என்று நினைக்கிறேன். அப்பொழுதும் காங்கிரஸ் அரசாங்கம்தான். இப்பொழுதும் காங்கிரஸ் அரசாங்கம்தான். ஆனால் என்ன கொள்கை வேறுபாடு?

said...

// // ROSAVASANTH said...
//கீமாயணம் எழுதிய பொழுது பெரியாருக்குக் கருத்துச் சுதந்திரதிரத்தைக் கொடுக்கவில்லையா?//

கீமாயணத்தை பெரியார் எழுதியதாக உங்களுக்கு யார் சொன்னது? பெரியார் எழுதவில்லை. எனக்கு தெரிந்து அதை எழுதியவர் எம். ஆர். ராதா. //

ஓ அதை எழுதியது எம்.ஆர்.ராதாவா? தெரியாமல் சொல்லி விட்டேன். தகவலுக்கு நன்றி ரோசாவசந்த். அது சரி....அந்தப் புத்தகம் கிடைக்குமா?

said...

//அந்தப் புத்தகம் கிடைக்குமா?//

திக புத்தக ஸ்டால்களில் கிடைக்கும் என்றுதான் தோன்றுகிறது.

said...

ராகவா, நண்பன் செல்வன் மூலமாக முத்தமிழ் குழுமத்தில் உங்களின் இந்தக் கட்டுரையை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நாவலாக வந்தப் போதே மிகுந்த பரப்பரப்புக்கு உண்டானது. இப்பொழுது திரைப்படமாக வரும்போது பரபரப்புக்கு பஞ்சமா என்ன? எப்படியோ படத்துக்கு இதனால் நல்ல ஓசி விளம்பரம்.
பார்க்க வேண்டும் என்ற ஆவலைத்தூண்டுகிறது.

said...

இந்தப் படத்திற்கு நல்லதொரு விளம்பரத்தை நீங்களே தேடித் தந்துவிட்டீர்கள். நன்றி.//

ஆமாம் ராகவன். ஒரு மூன்றாந்தர நாவலுக்கும் அதன் பிரதியான திரைப்படத்திற்கும் இது தேவையற்ற விளம்பரம்தான்.

முதன் முதலாக கேன்ஸ் திரைப்படவிழாவில் திரையிடப்பட்டு மிக, மிக சாதாரணமான படம் என்று விமர்சிக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு இப்படியொரு விளம்பரம் தேவைதானா என்று தெரியவில்லை..

said...

கிறிஸ்தவ மதம் தழைத்தோங்கும் ஐரோப்பாவில் //

விவரம் இல்லாமல் இத்தகைய அறிவிப்புகள் வருவதைப் படிக்கும்போது வேடிக்கையாக உள்ளது.

ஐரோப்பாவில் கிறிஸ்தவ மதம் தழைத்தோங்குகிறதா?

கிறிஸ்துமஸ், ஈஸ்டர் போன்ற திருவிழாக்களைத் தவிர ஆலயத்திற்கே செல்லாத கிறிஸ்தவர்களைக் கொண்ட கண்டம் ஐரோப்பா கண்டம். ஆசியக் கண்டத்தில்தான் இன்னமும் கிறிஸ்துவம் மட்டுமல்ல எல்லா மதங்களுமே உயிருடன் இருக்கிறதென்றால் மிகையாகாது. அதற்கு வேறொரு காரணமும் உண்டு. மதம் என்பதும் ஒரு மனிதனின் உணர்வை மட்டுமல்ல அறிவையும் சார்ந்தது. அறிவுஜீவிகள் நிறைந்த அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலிய கண்டங்களில் கடவுள் நம்பிக்கையே அற்றுபோயிருக்கும் இந்த காலத்தில் மத நம்பிக்கை எங்கே இருக்கிறது..

அவர்கள் ஏசுவை ஏசினாலும் சரி, அல்லாவை வைதாலும் சரி கண்டுக்கொள்ளவே மாட்டார்கள்.. அவர்களுக்கெல்லாமே பொழுதுபோக்குத்தான்..

said...

// மஞ்சூர் ராசா said...
ராகவா, நண்பன் செல்வன் மூலமாக முத்தமிழ் குழுமத்தில் உங்களின் இந்தக் கட்டுரையை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நாவலாக வந்தப் போதே மிகுந்த பரப்பரப்புக்கு உண்டானது. இப்பொழுது திரைப்படமாக வரும்போது பரபரப்புக்கு பஞ்சமா என்ன? எப்படியோ படத்துக்கு இதனால் நல்ல ஓசி விளம்பரம்.
பார்க்க வேண்டும் என்ற ஆவலைத்தூண்டுகிறது. //

உங்களுக்கும் செல்வனுக்கும் நன்றி பல.

உண்மைதான். சும்மா போன ஓணானை மடியில கட்டிக்கிட்ட மாதிரிதான். படம் போர்னு ரிவியூ சொல்லுது. ஆனா பாருங்க...இத்தன நடந்தப்புறம் பாக்காம இருக்க முடியுமா? புக்க வேற படிச்சிட்டேன். ஆனா புக்கா படிச்சிட்டுப் படமாப் பாத்துட்டு அப்பிடியே விட்டுற வேண்டியதுதான்.

said...

// ஆமாம் ராகவன். ஒரு மூன்றாந்தர நாவலுக்கும் அதன் பிரதியான திரைப்படத்திற்கும் இது தேவையற்ற விளம்பரம்தான். //

உண்மைதான் ஜோசப் சார். அந்தக் கதையை நானும் படித்திருக்கிறேன். அதைத் தொடக்கத்திலேயே குறிப்பிட்டும் இருக்கிறேன். சர்ச்சைக்குரிய தகவல் பலப்பல நூற்றாண்டுகளாகவே விவாதத்தில் இருப்பதுதான். அதைப் புத்தகத்தில் புகுத்தி நல்ல விறுவிறுப்பாக அமைத்திருக்கிறார் டேன் பிரவுன். அவ்வளவுதான். அந்தத் தகவல் உண்மைதான் என்பதற்கு இந்தப் புத்தகத்தில் போதிய ஆதாரங்கள் இல்லை.

// முதன் முதலாக கேன்ஸ் திரைப்படவிழாவில் திரையிடப்பட்டு மிக, மிக சாதாரணமான படம் என்று விமர்சிக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு இப்படியொரு விளம்பரம் தேவைதானா என்று தெரியவில்லை.. //

அதேதான் நானும் சொல்வது. அதே நேரத்தில் படம் நன்றாக இருந்தாலும் அதைக் கண்டு கொள்ளாமல் விடுவதே நல்லது. எது அளவுக்கு அதிகமாக அடக்கப்படுகிறதோ...அது அளவுக்கு அதிகமான எதிர்ப்புச் சக்தியும் அளவுக்கு அதிகமாக வளரும்.

said...

// விவரம் இல்லாமல் இத்தகைய அறிவிப்புகள் வருவதைப் படிக்கும்போது வேடிக்கையாக உள்ளது.

ஐரோப்பாவில் கிறிஸ்தவ மதம் தழைத்தோங்குகிறதா? //

தழைத்தோங்கியன்னு வெச்சுக்கலாமா?

// கிறிஸ்துமஸ், ஈஸ்டர் போன்ற திருவிழாக்களைத் தவிர ஆலயத்திற்கே செல்லாத கிறிஸ்தவர்களைக் கொண்ட கண்டம் ஐரோப்பா கண்டம். //

ஜோசப் சார். இது உண்மைதான் என்றாலும்...ஐரோப்பியர்கள் கிருத்துவ மதத்தின் தோற்றத்தில் இருந்து பங்கு கொண்டு வந்திருக்கிறார்கள். இந்தியாவில் இருக்கும் இன்றைய இந்து மதத்தைப் போல. அதாவது அதுல நிறைய மாறியிருக்கும். அந்த மாற்றங்களோடு நேரடியாக தொடர்பு கொண்டு அதில் விழுந்து எந்திருத்து ஏற்றுக் கொண்டு மறுத்து என்று அனைத்தையும் நேரடியாகப் பார்த்தவர்கள். பொங்கல் தீபாவளி பொறந்த நாளுன்னா கோயிலுக்குப் போறது. இல்லைன்னா வீட்டுலயே வெளக்கேத்தி வெச்சுக்கிறது. அவ்வளவுதான். நம்மூர்ல கூட்டம் நெறைய இருக்குறதால பக்தி பெருகீட்ட மாதிரி தெரியுது. உள்ளபடிக்கு பக்தி பெருகல. கூட்டந்தான் பெருகீருக்கு.

ஆனா இந்திய நாட்டுக் கிருத்துவ மதம் என்பது, முழுமையாக வந்தது. வரும் பொழுதே அனைத்தும் கொண்டு வந்தது. அதாவது தோற்றம் வளர்ச்சி என்ற நிலையைத் தாண்டி முழுமை பெற்று வந்தது. இதையும் கருத்தில் கொள்ள வேண்டும். அது தவறு என்று சொல்லவில்லை. மாறாக ஆராய்ந்து சொல்லியிருக்கிறேன். அவ்வளவுதான்.

// ஆசியக் கண்டத்தில்தான் இன்னமும் கிறிஸ்துவம் மட்டுமல்ல எல்லா மதங்களுமே உயிருடன் இருக்கிறதென்றால் மிகையாகாது. அதற்கு வேறொரு காரணமும் உண்டு. மதம் என்பதும் ஒரு மனிதனின் உணர்வை மட்டுமல்ல அறிவையும் சார்ந்தது. அறிவுஜீவிகள் நிறைந்த அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலிய கண்டங்களில் கடவுள் நம்பிக்கையே அற்றுபோயிருக்கும் இந்த காலத்தில் மத நம்பிக்கை எங்கே இருக்கிறது.. //

கடவுள் நம்பிக்கை என்பது தேவையானது என்றாலும் தேவையில்லை என்றும் சொல்லலாம். அது அவரவர் விருப்பம். நம்பினால் நம்புங்கள். நம்பாவிட்டாலும் பாதகமில்லை. ஆனாலும் நீங்கள் சொல்லும் ஐரோப்பியர்களின் சான்றிதழ்களில் கிருத்துவம் என்றுதானே மதம் இருக்கிறது. அதுதான் அவர்கள் அடையாளமும் கூட. அதை மறுக்க முடியாது.

// அவர்கள் ஏசுவை ஏசினாலும் சரி, அல்லாவை வைதாலும் சரி கண்டுக்கொள்ளவே மாட்டார்கள்.. அவர்களுக்கெல்லாமே பொழுதுபோக்குத்தான்.. //

ம்ம்ம்ம்....இது கொஞ்சம் பொதுவாகச் சொன்ன கருத்து என்று தெரிகிறது.

said...

Ragavan,
(I am not used to tamil fonts, just want to share my opinion)
The real problem comes when somebody does not read that book "FULLY" and start presenting their opinion. Similarly many pepl do not even know whats difference betwen Vedas and Upanishads and they comment on it so NICELY!! and it is taken as "Freedom of Exression".. Now why dont they consider this issue to be the same..
Simple Equation, If you donot want to get commented, first it should be followed, which has never been in practise, So face it with proofs...Even after pepl are not consider, Leave it to God !!!!

said...

வெட்டுகள் இல்லாமல் சென்சார் போர்டு இந்தப் படத்தை வெளியிட அனுமதி அளித்தது.ஆனால் இரு நிபந்தனைகளுடன்.
http://in.rediff.com/movies/2006/may/18da1.htm

said...

// பைபிளில் இருப்பதைப் படமாக எடுத்திருக்கிறார்கள் என நினைக்கிறேன். அப்படியானால் யூதர்கள் பைபிளை ஏற்றுக் கொள்ளாதவர்களா? (தெரிந்து கொள்வதற்காகக் கேட்கிறேன்.)

ராகவன்,
கிறிஸ்துவுக்கு முந்திய பழைய ஏற்பாடு தான் யூதர்கள் ஏற்றுக்கொண்டது .அது கிறிஸ்தவர்களுக்கும் பொது .ஆனால் இயேசுவின் வாழ்க்கையை சித்தரிக்கும் புதிய ஏற்பாடை யூதர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை .காரணம் அவர்கள் இயேசுவை வாக்களிக்கப்பட்ட மெசியாவாக ஏற்கவில்லை .இன்னும் காத்திருக்கிறார்கள் .கிறிஸ்தவர்கள் வாக்களிக்கப் பட்ட மெசியா இயேசு தான் என்கிறார்கள் .இது தான் வேறுபாடு.

said...

I didn't read Da Vinci Code but I watched the movie last weekend.
If you say something new and contradiction to others belief,you get noticed and you make money out of it.That's the whole point i guess.This movie can be enjoyed as yet another thriller movie with some twist.

At the end of the movie Tom Hanks says, "What you believe is what matters" that's what you have also said Raghavan.

Very good post indeed.:)

said...

டாவின்சு கோடு நூலை கடந்த வாரம்தான் முழுமையாகப் படித்து முடித்தேன். இன்று அந்தத் திரைப்படத்தையும் பார்த்தேன்.
இந்த நூல்/திரைப்படம் பற்றி நான் இங்கே ஒரு கருத்தும் சொல்ல விரும்பவில்லை. எனினும் அனைவரும்
இந்த விடயத்தில் வள்ளுவர் வழியைப் பின்பற்றுவதே சிறந்தது என எண்ணுகிறேன்.
"எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு"

said...

//அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையால் மதச்சார்பின்மையையும் இந்தியர்களின் சகிப்புத்தன்மையும் இன்னமும் கீழே போயிருக்கின்றன என்றால் மிகையாகாது.//

போலி மதச்சார்பி்ன்மை எகிறியிருக்கிறது என்று சொல்வது உண்மையாக இருக்கும்.

ஒரு மதத்தை பரப்பிக்கொண்டிருக்கும் போது இது போன்ற படங்கள் மக்களின் மனத்தில் அந்த மதத்தை பற்றிய சந்தேகங்களை தோற்றுவிக்கும். படத்தை எதிர்ப்பவர்கள் வெளிப்படையாக இக்கருத்தை தெரிவிக்கவி்ல்லையென்றாலும் வேறு வார்த்தைகளில் அதை சொல்லியிருக்கிறார்கள்.

அரசாங்கமும் துணை போவது போலி மதச்சார்பின்மையின் உச்சம். தியேட்டர்களின் பாதுகாப்பக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என கோவா முதலமைச்சர் சொல்கிறார்.
"மோடி"யை மட்டுமே எதிர்ப்பவர்கள் இதை கண்டிக்க மாட்டார்கள்.

இதனால் "பொறுமை" காப்பவர்கள் கூட சகிப்புத்தன்மை இழக்க வேண்டியது தான்.

said...

// Sudharshan said...
Ragavan,
(I am not used to tamil fonts, just want to share my opinion)
The real problem comes when somebody does not read that book "FULLY" and start presenting their opinion. Similarly many pepl do not even know whats difference betwen Vedas and Upanishads and they comment on it so NICELY!! and it is taken as "Freedom of Exression".. Now why dont they consider this issue to be the same..
Simple Equation, If you donot want to get commented, first it should be followed, which has never been in practise, So face it with proofs...Even after pepl are not consider, Leave it to God !!!! //

சுதர்சன், உண்மைதான். நம்மால் முடிந்ததைச் செய்ய வேண்டும். அதற்கு மேல் ஆண்டவன் விட்ட வழி.

எனக்குத் தெரிந்து அந்தப் புத்தகத்தில் ஏசுநாதரைப் பற்றித் தவறாக எதுவும் சொல்லவில்லை. அவருக்கு மனைவி இருந்து குழந்தையும் இருந்தது என்று சொல்லியிருக்கிறார்கள். இது எவ்வளவு உண்மை என்று எனக்குத் தெரியாது. அது அவரது நம்பிக்கை.

இன்னொரு விஷயம் இதுவும் எவ்வளவு உண்மை என்று எனக்குத் தெரியாது. குரானில் ஏசு சிலுவையில் அறையப்பட்டு இறக்கவில்லை என்று சொல்லியிருக்கிறதாம். இதைப் பற்றி முஸ்லீம் நண்பர்கள் சொல்லலாம்.

இதுவும் கிருத்துவ நம்பிக்கைக்கு மாறுபட்டதே என்பது என் கருத்து. அப்படி ஒரு மாற்றுக் கருத்து என்பதால் குரானைத் தடுப்பது எப்படிச் சரியாகாதோ அப்படித்தான் இதுவும் என்று தோன்றுகிறது.

said...

// சுதர்சன்.கோபால் said...
வெட்டுகள் இல்லாமல் சென்சார் போர்டு இந்தப் படத்தை வெளியிட அனுமதி அளித்தது.ஆனால் இரு நிபந்தனைகளுடன்.
http://in.rediff.com/movies/2006/may/18da1.htm //

ஆகா....ஆனால் அந்தப் புத்தகத்தில் அவர் எல்லாம் உண்மையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது என்று சொல்லியிருக்கிறாரே...எது எப்படியோ...படம் வருகிறது. இந்திய அரசாங்கம் ஒரு தவறான முன்னுதாரத்தை ஏற்படுத்தி விட்டது. இனிமேல் ஒவ்வொரு படத்திற்கும் மதவாதிகள் வீதிக்கு வரும் நிலை வரலாம்.

said...

// ராகவன்,
கிறிஸ்துவுக்கு முந்திய பழைய ஏற்பாடு தான் யூதர்கள் ஏற்றுக்கொண்டது .அது கிறிஸ்தவர்களுக்கும் பொது .ஆனால் இயேசுவின் வாழ்க்கையை சித்தரிக்கும் புதிய ஏற்பாடை யூதர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை .காரணம் அவர்கள் இயேசுவை வாக்களிக்கப்பட்ட மெசியாவாக ஏற்கவில்லை .இன்னும் காத்திருக்கிறார்கள் .கிறிஸ்தவர்கள் வாக்களிக்கப் பட்ட மெசியா இயேசு தான் என்கிறார்கள் .இது தான் வேறுபாடு. //

ஜோ...தகவலுக்கு நன்றி ஜோ. ஒரு குழப்பம் தீர்ந்தது.

அப்படியானால் யூதர்கள் ஏற்காத ஒரு கருத்தைக் கிருத்துவர்கள் சொல்கிறார்கள் அல்லவா. அந்தச் சுதந்திரம் அவர்களுக்கு இருப்பது போல, அடுத்தவர்களுக்கும் அந்தச் சுதந்திரம் வேண்டும் என்று சொல்வதுதான் எனது கருத்து. மற்றபடி கிருத்துவத்தை எதிர்த்து அல்ல. நான் சொல்ல வருவது உங்களுக்கும் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் நான் குறிப்பிட்ட கருத்தைத்தான் நீங்களும் குறிப்பிட்டிருந்தீர்கள்.

ஜோ, ஜோசப் சார்...எனக்கு இன்னொரு சந்தேகம். ஏசுநாதருக்கு மனைவியும் குழந்தையும் இருந்தார்கள் என்று சொல்வதால் அவருக்கு எப்படிக் குறையாகும்? ஏனென்றால் இந்தப் புத்தகத்தைப் படித்த எனக்கு அப்படி ஒன்றும் தோன்றவில்லை. இறைத்தூதர் என்றால் திருமணம் செய்யாமல் இருக்க வேண்டும் என்ற கட்டாயமா? கொஞ்சம் பிரச்சனையின் மூலத்தை விளக்குங்களேன்.

said...

// I didn't read Da Vinci Code but I watched the movie last weekend. //

நான் இந்த வாரயிறுதியில் பார்க்கலாம் என்றிருக்கிறேன். இந்தியாவில் வெளிவருமானால்.

// If you say something new and contradiction to others belief,you get noticed and you make money out of it.That's the whole point i guess.This movie can be enjoyed as yet another thriller movie with some twist. //

இருக்கலாம். எனக்கும் அப்படித்தான் தோன்றியது.

// At the end of the movie Tom Hanks says, "What you believe is what matters" that's what you have also said Raghavan.

Very good post indeed.:) //

நன்றி ராமசுப்பு. அடுத்தவன் சொல்வதால் நம்பிக்கை அசையுமென்றால்...அது நம்பிக்கையின் பிழை என்பது என் கருத்து.

said...

//
அடுத்தவன் சொல்வதால் நம்பிக்கை அசையுமென்றால்...அது நம்பிக்கையின் பிழை என்பது என் கருத்து.
//

சிறப்பான வார்த்தை. இதை எதிர்ப்பவர்கள் உணரவேண்டும். முக்கியமாக, யூதம் தவிர்த்த ஆபிரஹாமிய மதங்கள் (கம்யூனிஸம் உட்பட).

வஜ்ரா ஷங்கர்.

said...

நான் ஒரு (பழைய) கிறித்துவன் என்ற முறையில்:
இக்கதை போன்ற பல கதைகள் கிறித்துவத்தை மையமாக கொண்டு வந்துள்ளன. இவையெல்லாமே 'storm in the tea cup' கதைதான்! அந்தந்த நேரத்து sensation ..அவ்வளவே. இதைவிடவும் பைபிளை கேலி செய்யும், Irving Wallace-ன் Seven Minutes என்ற கதை 'பயங்கரமாக' இருக்கும். அவரே எழுதிய Word என்ற புத்தகம் 99% கிறித்துவ நம்பிக்கைகளைக் கேள்விக்குள்ளாக்குவது போல இருக்கும்.
இக்கதைகளை நான் வாசித்தபோது நான் ஒரு 'நல்ல விசுவாசி'. இருப்பினும் அது என்னை எந்த அளவிலும் பாதிக்கவில்லை.

மத நம்பிக்கைகள் இது போன்ற கதைகளாலோ, படங்களாலோ கேள்விக்கு உட்படுவதில்லை என்பதே என் அனுபவம். அதற்கு 'வேறுவித சிந்தனைகள்' தேவை!!

said...

ராகவன்,
இயேசு திருமணமானவர் எனச் சொல்வதில் பல பிரச்சனைகல் எழுகின்றன,

1. அவரின் தெய்வத்தன்மை பாதிக்கப்படுகிறது. யூத கடவுளுக்கு திருமணமாகவில்லை, கடவுள் பொதுவானவர் என்கிறதை திருமணமானவர் என்பது பாதிப்பதாக உணரப்படலாம். இயேசு ஒரு சாதாரணமனிதர் அல்லது வெறும் இறைதூதர்(குர் ஆன்) என ஆகிவிடும்.

2. 'காஸ்பல்' தமிழில் 'நற்செய்தி' என நான்கு புதிய ஏற்பாட்டு புத்தகங்கள் இயேசுவின் வாழ்க்கையையும் போதனைகளையும் சொகின்றன. இவை எவற்றிலுமே இயேசுவுன் திருமணம் பதிவாக்கப்படவில்லை. இயேசு திருமணமானவர் என்பது இந்த நற்செய்திகள்(மத்தேயு, மார்க்கு, ஜான், லூக்காஸ்) போய்யானவை அல்லது திருத்தப்பட்டவை என்பது போலாகும்.

டாவின்சி கோட் வெறும் Legends எனப்படும் உண்மைக்கு அருகிலுள்ல அல்லது நிகழ்வுகளின் அடிப்படையிலான கதைகளை வைத்து பின்னப்பட்டுள்ளது.
அதற்காக கிறித்துவம் வரலாற்றை திரித்ததே இல்லை என்பதற்கில்லை.

said...

ராகவன்,
சிறில் உங்களுக்கு பதில் சொல்லி விட்டார் என நினைக்கிறேன். அவர் சொன்னது போல கிறிஸ்தவர்கள் இயேசு-வை இறை தூதர் (முஸ்லிம்-களின் நம்பிக்கை) என்னும் நிலை தாண்டி இறைமகனாகவே ,இறைவனின் மனித உருவாகவே கருதுவதாலும் ,அவருடைய பிறப்பின் குறிக்கோளே மனிதரின் பாவங்களுக்காக தன் உயிரைக் கொடுப்பதேயன்றி தனக்கென ஒரு தனிப்பட்ட குடுப்பத்தை அமைத்துக்கொள்வதல்ல என்று நம்புவதாலும் ,இதுவரை நம்பப்படுகிற இயேசு பற்றிய புதிய ஏற்பாட்டில் இயேசு இல்லற வாழ்வில் ஈடுபட்டதாக இல்லை என்பதாலும் ,இது இயேசுவை அவமானப்படுத்துவது என்பதை விட தங்கள் நம்பிக்கையை அவமானப்படுத்துவதாக நினைக்கிறார்கள் போலும் .

said...

//என்னைப் பொருத்த வரையில் அந்தப் புத்தகத்தில் கலை மதிப்பு என்பது சுழி. அதாவது அந்தப் புத்தகத்தில் கொஞ்சமும் கலைத்தன்மை இல்லை என்கிறேன்.//

அதுவா முக்கியம்?

said...

// வெற்றி said...
டாவின்சு கோடு நூலை கடந்த வாரம்தான் முழுமையாகப் படித்து முடித்தேன். இன்று அந்தத் திரைப்படத்தையும் பார்த்தேன்.
இந்த நூல்/திரைப்படம் பற்றி நான் இங்கே ஒரு கருத்தும் சொல்ல விரும்பவில்லை. எனினும் அனைவரும்
இந்த விடயத்தில் வள்ளுவர் வழியைப் பின்பற்றுவதே சிறந்தது என எண்ணுகிறேன்.
"எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு" //

நல்ல கருத்து வெற்றி. நானும் ஏற்றுக் கொள்கிறேன்.

said...

// தயா said...
//அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையால் மதச்சார்பின்மையையும் இந்தியர்களின் சகிப்புத்தன்மையும் இன்னமும் கீழே போயிருக்கின்றன என்றால் மிகையாகாது.//

போலி மதச்சார்பி்ன்மை எகிறியிருக்கிறது என்று சொல்வது உண்மையாக இருக்கும். //

நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.

// ஒரு மதத்தை பரப்பிக்கொண்டிருக்கும் போது இது போன்ற படங்கள் மக்களின் மனத்தில் அந்த மதத்தை பற்றிய சந்தேகங்களை தோற்றுவிக்கும். படத்தை எதிர்ப்பவர்கள் வெளிப்படையாக இக்கருத்தை தெரிவிக்கவி்ல்லையென்றாலும் வேறு வார்த்தைகளில் அதை சொல்லியிருக்கிறார்கள்.

அரசாங்கமும் துணை போவது போலி மதச்சார்பின்மையின் உச்சம். தியேட்டர்களின் பாதுகாப்பக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என கோவா முதலமைச்சர் சொல்கிறார்.
"மோடி"யை மட்டுமே எதிர்ப்பவர்கள் இதை கண்டிக்க மாட்டார்கள்.

இதனால் "பொறுமை" காப்பவர்கள் கூட சகிப்புத்தன்மை இழக்க வேண்டியது தான். //

இது குறித்து என்னுடைய கருத்தைக் கீழே கொடுத்திருக்கிறேன்.

said...

// Cyril அலெக்ஸ் said...
ராகவன்,
இயேசு திருமணமானவர் எனச் சொல்வதில் பல பிரச்சனைகல் எழுகின்றன,

1. அவரின் தெய்வத்தன்மை பாதிக்கப்படுகிறது. யூத கடவுளுக்கு திருமணமாகவில்லை, கடவுள் பொதுவானவர் என்கிறதை திருமணமானவர் என்பது பாதிப்பதாக உணரப்படலாம். இயேசு ஒரு சாதாரணமனிதர் அல்லது வெறும் இறைதூதர்(குர் ஆன்) என ஆகிவிடும்.

2. 'காஸ்பல்' தமிழில் 'நற்செய்தி' என நான்கு புதிய ஏற்பாட்டு புத்தகங்கள் இயேசுவின் வாழ்க்கையையும் போதனைகளையும் சொகின்றன. இவை எவற்றிலுமே இயேசுவுன் திருமணம் பதிவாக்கப்படவில்லை. இயேசு திருமணமானவர் என்பது இந்த நற்செய்திகள்(மத்தேயு, மார்க்கு, ஜான், லூக்காஸ்) போய்யானவை அல்லது திருத்தப்பட்டவை என்பது போலாகும்.

டாவின்சி கோட் வெறும் Legends எனப்படும் உண்மைக்கு அருகிலுள்ல அல்லது நிகழ்வுகளின் அடிப்படையிலான கதைகளை வைத்து பின்னப்பட்டுள்ளது.
அதற்காக கிறித்துவம் வரலாற்றை திரித்ததே இல்லை என்பதற்கில்லை. //

தகவலுக்கு நன்றி சிறில். இது போன்ற தகவல்களும் பிரச்சனையில் ஆழத்தைப் புரிந்து கொள்ள உதவுகின்றன. நான் கேட்டதின் பொருளைப் புரிந்து கொண்டு விளக்கியதிற்கு நன்றி சிறில். பொதுவாகவே வலைப்பூவில் மதம் குறித்து எழுதுகையில் அந்த இடம் சண்டைக்காடாய்க் கிடக்கும். அப்படியில்லாமல் இந்தத் திரி செல்வது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. புரிந்து கொண்டமைக்கு மிக்க நன்றி சிறில்.

said...

// Abuaadhil said...
எந்த மதத்தவராக இருந்தாலும் கருத்துச் சுதந்திரத்துக்கும் ஒரு அளவு உண்டு என்பதை உணரவேண்டும். தலைவலியும் திருகுவலியும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்பது போல நடந்துக்கொள்ளக்கூடாது. //

அபூஆதி. இந்த விளக்கம் எனக்கா? டேன் பிரவுனுக்கா? விளக்கமாகச் சொன்னால் நானும் சொல்வதற்கு கருத்து இருக்கிறது.

// ஒரு மதம்/இயக்கம் முன் வைக்கிற சித்தாந்தங்களை எந்த அளவுக்கும் கடுமையாக விமர்சிக்கலாம். விவாதம் புரியலாம். காழ்ப்புணர்வின்றி வாதப்பிரதிவாதங்களால் நட்புடன் மோதிக்கொள்ளலாம். தெளிவு பெறலாம். மேலும் குழம்பலாம் (அ) குழப்பலாம்.

ஆனால் அந்தந்த மதத்தின் உதாரண புருஷர்களை 'கருத்துச்சுதந்திர'த்தின் பேரால் கேவலமாக அரைகுறை புரிதல்களுடன் கடுமையாகவும் ஈனமாகவும் விமர்சிப்பது கட்டாயம் தடுக்கப்படவேண்டும். ஏனெனில், அந்தந்த மதத்தவர்க்கு அந்தந்த மஹான்கள் தாய் தந்தையரை விடவும் நேசத்துக்குரியவர்கள்.

இந்த அடிப்படையிலேயே எம். எஃப். ஹுஸைனையோ, ஸல்மான் ருஷ்டியையோ, நமது தமிழ் வலைப்பூக்களிலேயே ' நேச'த்துடன் அடுத்த மதத் தலைவர் பற்றி அடிமன வெறுப்பு கக்கி எழுதுபவர்களையோ என்னால் 'கலை'யின் சாக்கு;'கருத்து சுதந்திர'த்தின் சாக்கு சொல்லி ஆதரிக்க முடியவில்லை. நல்லிணக்கம் விரும்பும் யாராலும் முடியாது தானே! //

அபூஆதி...நேசத்துடன் என்று சொல்லும் பொழுதே நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள் என்று எனக்குப் புரிகிறது. அது குமாரோடு சேர்ந்தாலும் சரி. இறையோடு சேர்ந்தாலும் சரி. நான் அந்தத் திரிகளுக்குப் போவதை எப்பொழுதே நிறுத்தி விட்டேன்.

ஆனால் ஒன்று. இதே வலைப்பூவில்தான் முருகனும் பிள்ளையாரும் கடவுளே இல்லை என்று சொல்லும் சுதந்திரத்தையும் கோயில் வழிபாடுகளை இழிவென்றும் சொல்லும் பதிவுகளையும் அனுமதித்திருக்கிறோம். டான் பிரவுன் செய்தது தவறென்றால் இந்தப் பதிவுகளும் தவறு. இது போன்ற பதிவுகள் ஒருவருடைய மத நம்பிக்கையின் அடிப்படையில் எழுகிறது என்றால்...டான் பிரவுன் அவரது நம்பிக்கையின் அடிப்படையில் எழுதியிருக்கிறார் என்பேன். அடுத்தவனை அடிக்கிறவன் தன்னை யாரும் அடிக்கக் கூடாது என்று சொல்லக் கூடாது என்பதே எனது கருத்து.

said...

வெற்றி சார்,
ஒரு குறள் சொன்னாலும் திருக்குறளா(ளை) சொன்னீங்க.

said...

//குரானில் ஏசு சிலுவையில் அறையப்பட்டு இறக்கவில்லை என்று சொல்லியிருக்கிறதாம்....

இதுவும் கிருத்துவ நம்பிக்கைக்கு மாறுபட்டதே என்பது என் கருத்து. //

பவுல் அடிகளாரின் கிறித்துவ நம்பிக்கைக்கு வேண்டுமெனில் இது மாறு பட்டதாக இருக்கலாம்.

ஆனால் பைபிளுக்கு மாறுபடவில்லை. பைபிளில் (உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாயெண்ணாமலும் அருவருக்காமலும் தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து தம்மைநோக்கி அவன் கூப்பிடுகையில் அவனைக் கேட்டருளினார்.)என்று இயேசுவை சிலுவையில் அறையும் பொழுது அவர் செய்த பிரார்த்தனையைக் கேட்டு அவரை கர்த்தர் காத்ததாக தெளிவாக வருகிறது.

எனவே இயேசுவின் சிலுவை மரணம் குறித்து பைபிளின் கருத்துக்கு குரான் மாறுபடவில்லை.

said...

//வலைப்பூவிலும் இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பற்றியெல்லாம் பேசி இந்தப் படத்தைத் தடை செய்தது சரியென்று வாதம்.

நேசத்துடன் என்று சொல்லும் பொழுதே நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள் என்று எனக்குப் புரிகிறது. அது குமாரோடு சேர்ந்தாலும் சரி. இறையோடு சேர்ந்தாலும் சரி. நான் அந்தத் திரிகளுக்குப் போவதை எப்பொழுதே நிறுத்தி விட்டேன்.//


இதைத் தான் சிலேடை/உள்குத்து என்பார்களோ?

சகோதரரே!

நேசத்துடன் நீங்கள் இறையை சேர்த்ததால் ஒரு சிறு சுய விளக்கம்.

நேசத்தோடு இறையை சேர்த்த நீங்கள் அதனை "திரி" என்ற வார்த்தையால் வைதுள்ளீர்கள். எதனால் அப்படி கூறினீர்கள் என்பது எனக்கு விளங்கவில்லை. என்னில் ஏதேனும் தவறை கண்டீர்கள் எனில் அதனை தாராளமாக என்னிடம் நீங்கள் நேரடியாகவே கேட்டு விளக்கம் பெற்றிருக்கலாம். அது தான் சரியான அணுகு முறையும் கூட. மனிதன் என்பவன் தவறு செய்பவன் தான். அதனை நீங்கள் என்னிடம் சுட்டிக் காட்டி நான் அதனை கண்டு கொள்ளவில்லை எனில் உங்கள் நிலை பாடு சரியானதே. அதை விட்டு இவ்வாறு செய்வது சரியா?

என்னில் என்ன தவறை கண்டாலும் அதனை நேரடியாக சுட்டிக் காட்டுங்கள். எப்பொழுதும் விமர்சனங்களை எதிர்கொள்ள நான் தயாராகவே உள்ளேன்.

டாவின்சி கோட் விஷயத்தைப் பொறுத்த வரையில் என் நிலைபாட்டையே கூறினேன். அதற்கு இந்தியாவின் பன்முகத்தன்மையை துணைக்கழைத்ததில் என்ன தவறு கண்டீர்கள் என்பதைச் சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்கிறேன்.

மதம் சார்ந்த விஷயத்தை "பணம் பண்ண" பொழுது போக்காக ஆக்குவது சரியல்ல என்பதே என் வாதம்.

மூட நம்பிக்கைகளை கேள்வி கேட்பதில் தப்பில்லை. நம்பிக்கை சார்ந்த விஷயத்திலும் கூட அந்நம்பிக்கை தவறு எனில் ஆதாரத்துடன் சுட்டிக் காட்டுதும் அதனை ஆரோக்கியமான விவாதம் ஆக்குவதும் கூட தவறில்லை. ஆனால் எவ்வித ஆதாரமுமின்றி அனுமானங்களை "பணம் பண்ண" பொழுது போக்கு ஆக்குவது சரியா என்பதை சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இதனை மத மாற்றத்திற்கு எதிர் ஆகி விடும் என்பதால் தான் இந்தியாவில் பாதிரிமார்கள் எதிர்க்கிறார்கள் என்று கூறினால் அதில் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. (மாற்றம் என்பது மனதிலிருந்து ஆரம்பமாக வேண்டியது என்பதில் உறுதியுடையவன் நான்)

அம்மாற்றம் நேசத்தையுடைய குமாருக்கும் வரவேண்டும் என்பதே என் அவா.

அன்புடன்
இறை நேசன்

said...

ஜிரா,

ஜோசப் சாரின் ஆங்கில பதிவில் நான் சொன்னதையே இங்கும் திருப்பி சொல்கிறேன்.

மதங்கள்,கடவுள்கள், நம்பிக்கைகள் - எல்லாவற்றையும் விமர்சிக்கும் உரிமை எல்லோருக்கும் இருக்க வேண்டும்.

அது அடுத்தவனை எத்தனை புன்படுத்தினாலும் சரி.

மதங்களையும், நம்பிக்கைகளையும் நாம் விமர்சிக்க கூடாது என்றால் இன்னும் ஐரோப்பியர்கள் சூரியன் தான் பூமியை சுற்றுகிறது என்று சொல்லி கொண்டு இருக்க வேண்டும்!

Heliocentric தியரிக்கு அத்தனை எதிர்ப்பு இருந்தது சர்சிடம் இருந்து.
(தவறாக இருந்தால் திருத்தவும்)

எந்த மதமானாலும், மதம் சார்ந்த institution ஆனாலும் அங்கு தீயவை வந்து சேர்ந்துவிடும்.

//இவை எவற்றிலுமே இயேசுவுன் திருமணம் பதிவாக்கப்படவில்லை//

Gospel of Judas?

அப்புறம் நாம் கவனிக்க வேண்டியது சர்ச் தனக்கு வேண்டாத விஷயங்களை அழிக்க முயற்ச்சி செய்து இருக்கிறது என்று ஒரு குற்றசாட்டு உண்டு.

said...

// // நேசத்துடன் என்று சொல்லும் பொழுதே நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள் என்று எனக்குப் புரிகிறது. அது குமாரோடு சேர்ந்தாலும் சரி. இறையோடு சேர்ந்தாலும் சரி. நான் அந்தத் திரிகளுக்குப் போவதை எப்பொழுதே நிறுத்தி விட்டேன்.//

இதைத் தான் சிலேடை/உள்குத்து என்பார்களோ?

சகோதரரே!

நேசத்துடன் நீங்கள் இறையை சேர்த்ததால் ஒரு சிறு சுய விளக்கம்.

நேசத்தோடு இறையை சேர்த்த நீங்கள் அதனை "திரி" என்ற வார்த்தையால் வைதுள்ளீர்கள். எதனால் அப்படி கூறினீர்கள் என்பது எனக்கு விளங்கவில்லை. என்னில் ஏதேனும் தவறை கண்டீர்கள் எனில் அதனை தாராளமாக என்னிடம் நீங்கள் நேரடியாகவே கேட்டு விளக்கம் பெற்றிருக்கலாம். அது தான் சரியான அணுகு முறையும் கூட. மனிதன் என்பவன் தவறு செய்பவன் தான். அதனை நீங்கள் என்னிடம் சுட்டிக் காட்டி நான் அதனை கண்டு கொள்ளவில்லை எனில் உங்கள் நிலை பாடு சரியானதே. அதை விட்டு இவ்வாறு செய்வது சரியா?

என்னில் என்ன தவறை கண்டாலும் அதனை நேரடியாக சுட்டிக் காட்டுங்கள். எப்பொழுதும் விமர்சனங்களை எதிர்கொள்ள நான் தயாராகவே உள்ளேன். //

வாங்க இறைநேசன். என்னுடைய வலைப்பூவுல இது ஒங்களோட மொதப் பின்னூட்டம்னு நெனைக்கிறேன். வருகைக்கு நன்றி.

உள்குத்தும் வெளிக்குத்தும் ஒன்னுமில்லை. நானும் மொதல்ல ஒங்க வலைப்பூவுக்கு வந்துக்கிட்டுதான இருந்தேன். மறந்துட்டீங்களா....ஆனா ஒரு கட்டத்துல உங்க கருத்துகள் சிலத ஏத்துக்க முடியல. வாதம் விவாதம் பண்ணவும் எனக்கு விருப்பம் இல்ல. அதுனால அங்க வர்ரதில்லை. மத்தபடி ஒங்க மேல எனக்கு எந்த வருத்தமோ கோவமோ இல்லை. அவ்வளவுதான்.

said...

// டாவின்சி கோட் விஷயத்தைப் பொறுத்த வரையில் என் நிலைபாட்டையே கூறினேன். அதற்கு இந்தியாவின் பன்முகத்தன்மையை துணைக்கழைத்ததில் என்ன தவறு கண்டீர்கள் என்பதைச் சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்கிறேன்.

மதம் சார்ந்த விஷயத்தை "பணம் பண்ண" பொழுது போக்காக ஆக்குவது சரியல்ல என்பதே என் வாதம்.

மூட நம்பிக்கைகளை கேள்வி கேட்பதில் தப்பில்லை. நம்பிக்கை சார்ந்த விஷயத்திலும் கூட அந்நம்பிக்கை தவறு எனில் ஆதாரத்துடன் சுட்டிக் காட்டுதும் அதனை ஆரோக்கியமான விவாதம் ஆக்குவதும் கூட தவறில்லை. ஆனால் எவ்வித ஆதாரமுமின்றி அனுமானங்களை "பணம் பண்ண" பொழுது போக்கு ஆக்குவது சரியா என்பதை சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இதனை மத மாற்றத்திற்கு எதிர் ஆகி விடும் என்பதால் தான் இந்தியாவில் பாதிரிமார்கள் எதிர்க்கிறார்கள் என்று கூறினால் அதில் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. (மாற்றம் என்பது மனதிலிருந்து ஆரம்பமாக வேண்டியது என்பதில் உறுதியுடையவன் நான்)

அம்மாற்றம் நேசத்தையுடைய குமாருக்கும் வரவேண்டும் என்பதே என் அவா. //

மதமாற்றம் என்பது அவரவர் விருப்பம். அதுதான் என் நிலை.

என்னைப் பொறுத்த வரையில் பொதுவில் இருக்கும் எதுவும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதன்று. அது இந்து மதமோ, யூத, கிருத்துவ, இஸ்லாமிய மதங்களோ, புத்த, ஜைன மதங்களோ...இன்னும் இருக்கும் எந்த மதமோ...பொதுவில் உள்ளது விமர்சனத்திற்கு உள்ளாகும். அதைத் தடுக்க முடியாது.

தமிழ்க்கடவுளைப் பற்றி இவ்வளவு எழுதுகிற நான்...இறைநேசன் முருகனைக் கடவுளே இல்லை என்று சொல்லி விட்டார் என்று போராட்டத்தில் இறங்கினால் எனக்கும் இப்பொழுது போராட்டத்தில் இருப்பவர்களுக்கும் வேறுபாடு இல்லாமல் போய் விடும். உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. அதை நான் ஏற்றுக் கொள்ளவும் இல்லை. We agreed to disagree. அவ்வளவுதான். பிரச்சனை முடிந்தது. முருகனையா சொன்னாய்..விடேன் உன்னை என்று எகிறிக் குதித்தால்தானா முருகனுக்கு என்னைப் பற்றித் தெரியும்? இதுதான் நான் சொல்ல வருவது. நண்பர் ஜோ, முத்து, சிறில் ஆகியோர் சொல்வதும் கிட்டத்தட்ட இதுதான். ஜோசப் சார் ஒரு படி மேலே போய்...இது மாதிரி நெறையா வந்திருக்கு...இது பத்தோடு ஒன்னு பதினொன்னு விட்டுத்தள்ளு...என்கிறார். அது பக்குவம். இந்தப் பக்குவம் நமக்கெல்லாம் வந்து...நாமெல்லாம் அடுத்தவரிடம் குற்றத்தைக் காணாமல் நல்லதைக் கண்டு நட்புறவு கொள்ள வேண்டும் என்பதே என் அவா.

ஆனால் ஒரு உண்மையை நான் சொல்லியே ஆக வேண்டும். ஏற்கனவே சொன்னதுதான். எனக்கு கிருத்துவ மத வழக்குகள் தெரியாமல் இருந்தது. இந்தப் புத்தகத்தினைப் படித்த பிறகு ஏசுபிரான் மீது ஒரு அன்பு உண்டாகியிருக்கிறது என்றால் மிகையாகாது. வாடிகனில் அன்னையின் மடியில் அடித்துத் துவைத்துப் போடப்பட்ட கிழிந்த துணி போல நொந்து கிடந்த ஏசுவின் உடலைப் பார்த்ததும் எழுந்த அன்புணர்ச்சி மீண்டும் வந்தது என்றால் மிகையாகாது. கிருத்துவனாக இருந்தால்தான் ஏசுவின் மீது அன்பு செலுத்த வேண்டும் என்பதில்லையே.

Chronicles of Narnia என்ற ஒரு பெரிய கதைநூல் இருக்கிறது. குழந்தைகளுக்கான கதை போல இருக்கும். ஆனால் அதில் பொதிந்துள்ள கருத்துகள் பெரியவர்களுக்கானது.

அந்தக் கதையில் ஒரு சிங்கம் வரும். பெரிய சிங்கம். அந்தக் கதையில் அந்தச் சிங்கம் மிகச்சிறந்த பாத்திரம். அது ஏசுபிரானின் உருவகம். அப்படிச் சொல்ல மாட்டார்கள். ஆனால் சொல்லாமல் சொல்வார்கள். அந்தச் சிங்கம் ஒரு முறை சொல்லும். அதாவது வேறு ஒரு வழிபாட்டில் இருந்தவனுக்குச் சிங்கம் உதவி செய்யும். அதை ஏன் என்று கேட்கும் பொழுது அந்தச் சிங்கம் இப்பிடிச் சொல்லும்.

அவன் அதைக் கும்பிட்டிருந்தாலும் வாழும் முறைமையும் செய்கையும் நல்லதாகவே இருந்தது. அதனால்தான் அவன் அன்பு என்னிடமே வந்தது. இவன் என்னுடைய பேரையே சொல்லி வணங்கியிருந்தாலும் நல்லவனாக வாழவில்லை. அமைதியைக் குலைத்தான். அன்பைப் பழித்தான். அதனால்தான் அவன் அன்பை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.

இதுதான் எனது நம்பிக்கையும் கருத்தும். அவ்வளவுதாங்க. வாதத்துக்குன்னு சொல்லலை. சொல்லனும்னு தோணுச்சு.

said...

ராகவன்,
உங்கள் கருத்துக்கள் யாரையும் புண்படுத்தாமல் பக்குவமாக இருக்கிறது .அது ஒன்றும் புதிதல்ல என்றாலும் பாராட்டுக்கள் .

கிறிஸ்தவன் என்ற முறையில் ஒரு கருத்தை சொல்ல விழைகிறேன் .ஊடகங்களிலும் வலைப்பதிவுகளிலும் ஏதோ இந்திய கிறிஸ்திவர்கள் இதற்காக கொதித்தெழுந்தது போல ஒரு தோற்றத்தை உருவாக்கியிருக்கிறார்களே .இது உண்மையா ? இங்கே வலைப்பதிவில் எத்தனை கிறிஸ்துவர்கள் வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு வந்து விட்டார்கள் .பலருக்கு மனதில் வருத்தம் இருக்கலாம் .ஆனால் தங்கள் நம்பிக்கை குறித்த மாற்றுக்கருத்தே வர விட மாட்டோம் என்று பெரும்பான்மையான கிறிஸ்தவர்கள் நினைக்கவில்லை என்பதே என் கருத்து.

இந்திய கிறிஸ்துவர்கள் குறித்த புரிந்துணர்வு படித்த இந்துக்களிடையே கூட போதுமான அளவு இல்லை என்பது வருத்ததிற்குரியது.

said...

Ragavan
those who practice true christianity has taken this book as a fiction; those who r having religious fanatism has started the stir; those who wanted the advertisement have add fuel to the fire.
thanu

said...

அமிர் கானின் படம் குஜராத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. ஆக பத்துபேர் சேர்ந்து குரல் கொடுத்தால், ஓட்டுப் பெட்டி ஜனநாயகத்தில் இந்தமாதிரி தடைகளை எளிதில் செய்துவிடலாம் என்பதை 'எல்லா' இந்தியர்களும் தெரிந்துவைத்திருக்கிரார்கள் என்பதே உண்மை.

said...

// Cyril அலெக்ஸ் said...
அமிர் கானின் படம் குஜராத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. ஆக பத்துபேர் சேர்ந்து குரல் கொடுத்தால், ஓட்டுப் பெட்டி ஜனநாயகத்தில் இந்தமாதிரி தடைகளை எளிதில் செய்துவிடலாம் என்பதை 'எல்லா' இந்தியர்களும் தெரிந்துவைத்திருக்கிரார்கள் என்பதே உண்மை. //

ரொம்பச் சரியா சொன்னீங்க சிறில். தமிழ்நாட்டிலயும் இதச் செஞ்சாங்களே. வீட்டுக்கு வீடு வாசப்படிங்குறது இந்த விஷயத்துல மாறனுங்கறதுக்காகத்தான் சும்மா இருங்கன்னு சொல்றேன். கேக்குறவங்க கேக்கட்டும்.