உலகத் தொலைக்காட்சியில் முதன் முறையாக என்பது மாதிரி உலக வலைப்பதிவுகளில் முதன் முறையாக இந்த மாதிரி ஜி.ரா போடும் முதல் பதிவு என்று சொல்லலாம் என்றே நினைக்கிறேன்.
வழக்கமாக ஒருவர் பின்னூட்டம் இட்டால் அதற்கான மறுமொழியைப் பின்னூட்டமாகவே இடுவது வழக்கம். விடாது கருப்பு என்னைக் குறிப்பிட்ட இனத்தின் அடிவருடி என்று எழுதிய பொழுதும் அந்தப் பதிவுக்குத் தொடர்பான கருத்தை மட்டும் சொல்லி ஒதுங்கிச் சென்றவன் நான். போலியின் அசிங்கமான பின்னூட்டங்களைக் கூட கண்டுகொள்ளாமல் இருக்கும் நான் ஒரு பின்னூட்டத்திற்குப் பதிவு போட வேண்டிய நிலை. புரியாதவர்கள் இங்கே சென்று பதிவையும் பின்னூட்டங்களையும் ஜெயராமனின் பின்னூட்டத்தையும் பார்க்கவும். பிறகு இந்தப் பதிவைத் தொடர்ந்து படிக்கவும்.
சண்டப் பிரச்சண்டன் பத்திரிகை நிருபர் பாராமுகம் ஜி.ராவைப் பேட்டி காண வருகிறார்.
பாரா : வணக்கம் ஜி.ரா. நல்லாயிருக்கீங்களா?
ஜி.ரா : நல்லாயிருக்கேங்க. நீங்க எப்படி?
பாரா : எனக்கென்ன! ஒரு பய திரும்பிப் பாக்க மாட்டேங்குறான். பாராமுகமாவே இருக்காங்க எல்லாரும்.
ஜி.ரா : ஹா ஹா ஹா. சரி. சொல்லுங்க.
பாரா : இல்ல. ஒங்களுக்கு நல்ல வேல இருக்கான்னு....
ஜி.ரா : இருக்குன்னு நெனைக்கிறேன். ஓரளவு படிச்சிருக்கேன். ஓரளவு பிரபலமான நிறுவனத்துல ஓரளவு நல்ல பதவியில இருக்கேன்.
பாரா : அப்புறம் ஏன் சொல் ஒரு சொல்லுன்னு பதிவு போடுறீங்க? வேலைக்கு மத்த வேலையா?
ஜி.ரா : அது வந்துங்க.....தமிழ்ல எல்லாரும் பயன்படுத்திக்கிட்டிருந்த சொற்கள் பல இன்னைக்கு விலகிப் போயிருக்கு. அதையெல்லாம் திரும்ப மக்களுக்கு ஞாபகப் படுத்தத்தான்.
பாரா : ஆனா மத்த மொழியெல்லாம் மற்ற மொழிச் சொற்களை ஏத்துக்கிட்டு நல்லா ஓடுறதாகவும்...உங்களுக்கப் போன்ற அதிமேதாவிகள் தமிழை வளர விடாம ஓட விடாம பிடிச்சு வெச்சுக்கிறதாகவும் சொல்றாங்களே!
ஜி.ரா : அடடே! அப்படியா சொல்றாங்க! நான் அதிமேதாவீங்கறத இப்பவாச்சும் கண்டு பிடிச்சாங்களே. ரொம்ப நன்றி. இந்த சமயத்துல எல்லாரும் என்னை அதி ஜி.ரா-ன்னு கூப்பிடனும்னு கேட்டுக்கிறேன்.
அப்புறம் இன்னொரு தகவல். எந்த மொழியும் தன்னிடத்தில் இல்லாதத அடுத்த மொழியில் இருந்து கடன் வாங்கலாம். தப்பில்லை. நேத்து மொளச்ச மொழிகள் எல்லாம் அப்படிச் செஞ்சுதான் வளந்திருக்கு. ஆனா நம்ம கிட்ட ஏற்கனவே இருக்குறத தூக்கிப் போட்டுட்டு புதுசு வாங்கக் கூடாது. நம்ம கிட்ட என்ன இருந்ததுங்குறதயும் என்ன இருக்குங்கறதயும் நினைவு படுத்திக்கிறதுலயும் தப்பில்ல. எங்க தாத்தா முன்சீப்பு. எங்க பெரிய தாத்தா பெரிய பாகவதர்னு பெருமை பேசுறது சுகமா இருக்குது. இது தப்பாப் படுதா? கோயில்ல புதுமையப் புகுத்தனும்னா மட்டும் பழைய சம்பிரதாயம்னு சொல்லி மாறக்கூடாதுன்னு சொல்றாங்க. நீதிமன்றத் தீர்ப்புன்னு சொல்லி கொண்டாடிக்கிறாங்க. மாத்தச் சொன்னா சண்டைக்கு வாராங்க. ஆனா தமிழ்ல இருக்குற பழைய சொல்லு மட்டும் மாறனுமா?
பாரா : புரியுது. புரியுது. அப்புறம் இந்த வடமொழி பத்தி....
ஜி.ரா : ஆம வடயா? உளுந்த வடயா?
பாரா : விட்டா கீழ வுழுந்த வடம்பீங்க போல. நான் சொல்றது வடபழநீல இருக்குதே அந்த வட.
ஜி.ரா : வடபழநீல ஓட்டல் சரவணபவன் ரொம்பப் பிரபலம். கோயிலுக்குப் போனா அங்கயும் போகாம விடுறதில்ல. அங்க தயிர் வட கிடைக்கும். அதச் சொல்றீங்களா?
பாரா : ஐயொ! அதி ஜீ.ரா. நான் சொல்றது வடக்கு. வடக்கு.
ஜி.ரா : ஓ வடக்கு மொழியா....அதாவது சமஸ்கிருதம். அதுவும் ஒரு பழைய மொழி. நிறைய இலக்கியங்களும் இருக்கு. அதுக்கென்ன?
பாரா : அதில்லைன்னா தமிழ் இல்ல.....பல தமிழ்ச் சொற்கள் அதுலருந்துதான் வந்ததுன்னு சொல்றாங்களே.....அதப் பத்தி.
ஜி.ரா : சமஸ்கிருதச் சொற்கள் தமிழில் இன்னைக்குப் புழக்கத்துல இருக்குங்கறது உண்மைதான். ஆனா அதுலருந்துதான் தமிழ் வந்துச்சுன்னு சொல்றது பால்பாயாசத்துலதான் பால் கறக்குறாங்கன்னு சொல்ற மாதிரி. ஹா ஹா. இன்னைக்கு தமிழில் ஆங்கிலச் சொற்களும் கலந்து பேசுறாங்க. நாளைக்கு ஆங்கிலம் இல்லைன்னா தமிழ் இல்லைன்னு சொல்வாங்க. ஆங்கிலத்துல இருந்துதான் தமிழ் வந்ததுன்னு பீட்சாவுல இருந்துதான் சீஸ் எடுக்குராங்கன்னு சொல்வாங்க. நாமளும் ஆமான்னு கேட்டுக்கனும் போல. மொத்தத்துல தமிழப் பலி குடுத்தாவது சமஸ்கிருதத்தைக் காப்பாத்தனுமா! பெரிய கொடுமையா இருக்கே!
பாரா : அப்ப தமிழர்கள் தமிழ்ல மட்டுந்தான் பேசனுங்கிறீங்களா?
ஜி.ரா : இதென்ன கொடுமையா இருக்கு. கேழ்வரகு ஒடம்புக்கு நல்லதுன்னு சொன்னா....அத மட்டுந்தான் திங்கனுமான்னு கேப்பீங்க போல. தமிழில் பேசுறப்போ முடிஞ்ச வரைக்கும் தப்பில்லாம தமிழ்ல பேசனும். அடுத்த மொழிகளும் தெரிஞ்சிருக்கனும். அடுத்தவங்களோட தொடர்பு கொள்ள வேண்டி போது தேவைப்படுமில்லையா. அந்தந்த மொழியில சிறப்பா பேச முயற்சிக்கிறதுல தப்பில்ல. தமிழ்ல அப்படி இப்பிடி பேசுனா என்னன்னு பேசுறவங்க.....அடுத்தவங்களோட அடுத்த மொழியில பேசுறப்போ அத ரொம்பச் சரியா பேச முயற்சிப்பாங்க. அவ்வளவுதான்.
பாரா : அவ்வளவுதானா?
ஜி.ரா : இன்னும் நெறைய சொல்லலாம். இவங்களுக்கு சொன்னாப் புரியாது. இது போதும்னு நெனைக்கிறேன்.
பாரா : அப்ப என்னதான் முடிவு? நீங்க என்ன செய்யப் போறீங்க? நல்ல வேலையப் பாக்கப் போறீங்களா? இல்ல...
ஜி.ரா : எனக்கிருக்குற நல்ல வேலையப் பாக்கப் போறேன். அத்தோட சொல் ஒரு சொல்லுல இன்னும் நிறைய தமிழ்ச் சொற்களை அறிமுகப் படுத்தும் ரொம்ப நல்ல வேலையையும் தொடர்ந்து செய்யப் போறேன். வடமொழிச் சொல்லப் பயன்படுத்தனும்னு ரொம்பப் பேர் விரும்பும் போது தமிழ்ச் சொல்லப் பயன்படுத்தனும்னு எனக்கு விருப்பம் இருக்கக் கூடாதா? சொல் ஒரு சொல் திரியில நான் தொடர்ந்து பதிவுகள் போடுறதில்லைன்னு வருத்தப்பட்டாரு. இனிமே அந்த வருத்தம் அவருக்கு இருக்காதுன்னு சொல்லி இப்ப முடிச்சிக்கிறேன்.
பாரா : இதுக்கெல்லாம் ஒங்களுக்குத் தொணையா யாரு இருக்காங்க? வலைப்பதிவுல சங்கம் வெச்சிருக்கீங்களா? இல்ல...அடையாளம் தெரியாத பின்னூட்டம் போட ஏற்பாடு செஞ்சிருக்கீங்களா? இல்ல வேற ஏதாவது?
ஜி.ரா : எனக்கு எப்பவும் வேலும் மயிலும் வடிவேலனும்தான் துணை. அவனை மட்டும் நம்பித்தான் நான் எதுவும் செய்றது.
பாரா : அப்பச் சரி. எல்லாம் நல்லா நடக்கட்டும். நான் பொறப்படுறேன்.
ஜி.ரா : ரொம்ப நல்லது. பலகாரத்தச் சாப்பிட்டீங்க. சரி. பலகாரத் தட்ட வெச்சுட்டுப் போங்க.
அன்புடன்,
கோ.இராகவன்
Subscribe to:
Post Comments (Atom)
43 comments:
நீங்கள் ஸொல்வது அரஸியல் போல் இருக்கிறது ஈ.வே.ராமஸாமி நாயக்கரே தமிழை திருத்துகிறேன் என்று ஸொல்லி ஒன்னும் ஸெய்ய முடியாமல் போனது ஷாக்ச்ஷாத் அந்த பரமஸிவனே பார்வதியோடு வந்து அருள் பாலித்தால் தான் இந்த நிலை மாறும் இல்லையென்றால் ஒன்னும் ஸெய்ய மூடியாது
யப்பா ச்சே இதை கடினமான வார்தைகளை எழுதும் மியூசு வாழ்க
இராகவன்
தொடரட்டும் உங்கள் நற்பணி...
நல்ல பதில். உங்களை எள்ளி எழுதியவருக்கும் நல்ல முறையில் பதில் சொல்லுறீங்க. வாழ்த்துக்கள்.
தூய தமிழ் வார்த்தைகளை அறிமுகப்படுத்தும் உங்க(குமரன் + நீங்க) பதிவு எனக்கு மிகவும் பிடித்த பதிவு. தொடர்ந்து செய்யவும்.. ஒரே வர்த்தைய ஒரு பதிவுல போடாம பல தொடர்புள்ள பல வார்த்தைகளை தொகுத்தால் இன்னும் எளிதாய் படிக்க உதவும்.
மொழி வளர்வதற்கு வெளி வார்த்தைகளும் தேவை எனும் ஒரு கருத்தை ஜெயராமன் வைத்திருந்தபோதும் 'நல்ல சுவையில்' அவரது பின்னூட்டம் எழுதப்படவில்லை என்பதும் உண்மை.
விட்டுத் தள்ளுங்க ஜிரா..
இதற்கெல்லாம் பதில் சொல்வதே தேவையில்லாத வேலை...
இந்த நேரத்தில் நீங்கள் 'சொல் ஒரு சொல்'லில் ஒரு பதிவு இட்டிருந்தால் பயனுள்ளதாய் இருந்திருக்கும் :)
//இன்னும் நிறைய தமிழ்ச் சொற்களை அறிமுகப் படுத்தும் ரொம்ப நல்ல வேலையையும் தொடர்ந்து செய்யப் போறேன்//
இது தானே எங்கள் தேவை :)
ஜி.ரா,
//வடமொழிச் சொல்லப் பயன்படுத்தனும்னு ரொம்பப் பேர் விரும்பும் போது தமிழ்ச் சொல்லப் பயன்படுத்தனும்னு எனக்கு விருப்பம் இருக்கக் கூடாதா? //
நீங்க போடுங்க ஜி.ரா, நாங்க எல்லாம் இருக்கிறோமில்ல. எனக்கு சுத்தம். நீங்க எடுத்துக் கொடுத்தாத்தான் உண்டு.
போடுங்க சாமீ, சொல் ஒரு சொல்!!
தமிழ் மொழிக்கு மொத்தமே 5 எழுத்துக்கள்தான் மற்றதெல்லாம் செங்கிருதம் மற்றும் பிற மொழிகளில் இருந்து வந்தது என்று சொன்ன திருவாளர்கள் தோன்றி, நம்மை உய்வித்த நாடுதானே இது...
பிறகு வேறென்ன சொல்வார்கள்?
நீர், மீன் போன்றவை தமிழிலிருந்து செங்கிருதத்திற்கு போனவை என்று நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன்.
தவறென்றால்.. இவைகளுக்கான வேர்சொற்களை செங்கிருதத்தில் அவர்கள் கண்டுபிடித்து தருவார்களா...
இராகவன், தொடருங்கள் உங்கள் பணியை...
எந்த சங்கமும் இல்லைன்னு நீங்களே சொன்னா எப்படிங்க ஜிரா..
இப்போ 'ம்'னு சொல்லுங்க.. "தலைவர் அதி ஜீ.ரா ரசிகர் சங்கம்"னு தொடங்கிடலாம்..
சென்னைக் கிளைக்கு முதல் தொண்டர் வந்தாச்சு.. ;)
(அதி ஜீரா தான் நல்லா இல்லை.. ஏதோ அதிகமா சீனி போட்ட ஜீரா மாதிரி இருக்கு :)) )
அதி ஜீரா...சர்க்கரைப் பாகு(கூழ்?)லிருந்து எடுப்பாங்களே அதுவா? :-))
//ஆங்கிலத்துல இருந்துதான் தமிழ் வந்ததுன்னு பீட்சாவுல இருந்துதான் சீஸ் எடுக்குராங்கன்னு சொல்வாங்க.//
ஒத்துகிடறன்...நீங்க அதிமேதாவி தான்னு ஒத்துக்கிடறன்...:-))...;-))
ரொம்ப மகிழ்ச்சி ராகவன்! இன்னும் நிறைய தமிழ் சொற்களைத் தெரிந்து கொள்ளும் ஆவலில் இதைக் கேட்கிறேன்.
Comfort Zone - இதை தமிழில் மொழி பெயருங்களேன். (நான் சௌகர்ய வட்டம் ன்னு சொன்னேன், வசதி வட்டம் ன்னு ஒருத்தர் சொன்னாங்க)
அப்புறம், செவிடங்காதுல சங்கு ஊதறதுன்னு சொல்லுவாங்கல்ல, அது பழமொழியா இல்லை சொலவடையா?...
சூரியனைப் பார்த்து நாய் குறைத்தல் போல ன்னு ஒரு பழைய செய்யுளில் படிச்சிருக்கேன். அது நாலடியாரா? அப்புறம் அது உவமையா? உருவகமா???
பன்னிக்கு சேத்துல விளையாடறதுன்னா ரொம்ப பிடிக்குமாம். அதுக்கு புடிக்குதுன்னு சேத்துல விளையாண்டா சேறு நம்ம மேலதான் ஒட்டிக்குமாம். இது கூட எங்கயோ புறநானூறுல படிச்சதா ஞாபகம். தெரிஞ்சா சொல்லறீங்களா?
பாரா: அதி ஜீ.ரா சம்ஸ்கிர்ததில் பிளாக் போடாம வேலையத்து நீஸ பாஷையான தமிழில் எதுக்கு பிளாக்கு கிளாக்குன்னு திரியரேள்? அது எக்கேடு கெட்டா உனக்கென்னவோய்.
பாரா: சரி சமஸ்கிர்தம் தெரியலைன்னா இங்லீஸ்ல போட வேண்டியது தானே? பிளாக் படிக்கிறவங்க எல்லோருக்கும் இங்கிலீஸ் தெரியுங்கிறது தெரியும்மோன்னா.
பாரா: பேஸான உத்யோகத்துல இருக்கீங்க எதுக்குன்னா இந்த பிளாக் சமாச்சாரம்ல்லாம். கோயில் குளம்ன்னு பகவானை சேவிச்சா புண்ணியமாவது கிடைக்கும்.
கலி முத்திடுது பகவானே காப்பாத்துப்பா
//அதி ஜி.ரா-ன்னு கூப்பிடனும்னு கேட்டுக்கிறேன்.
//
அதி ஜி.ரா. அதி ஜி.ரா. அதி ஜி.ரா. அதி ஜி.ரா. அதி ஜி.ரா. அதி ஜி.ரா. அதி ஜி.ரா. அதி ஜி.ரா. அதி ஜி.ரா.
நன்றி
ராகவன்.
தங்கள் பணி தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்கள்.
அப்படியே 60வது ்சுதந்திர தின வாழ்த்துக்ளையும் கூறிக்கொள்கிறேன்.
இராகவன்,
உங்களின் பணி மிகவும் மெச்சத்தக்க பணி. உங்கள் பணியால் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் அனைவரும் பயனடைகிறார்கள் என்றால் மிகையாகாது. தொடருங்கள். தன்மானத் தமிழர்கள் உங்கள் பின்னால்.
மகேந்திரன்,
யப்பா ச்சே இதை கடினமான வார்தைகளை எழுதும் மியூசு வாழ்க
ஹா ஹா ஹா ஹா :- ) !!
நன்றி தலைவரே.
நமக்குள்ளே: அப்படி எழுதுவது ஒன்றும் கஷ்டமில்லை, மகேந்திரன். பேஸுவது போல எழுதினால் கஷ்டம் இராது. அதை விட்டுவிட்டு எல்லா இடங்களிலும் வலிந்து திணிப்பது வலிதான் ஏற்படுத்தும். திணிப்பை நான் ஏற்றுக்கொள்வதில்லை அது தமிழானாலும், ஸம்ஸ்க்ருதமானாலும்.
நான் ஸொல்லுவதில்லை, அவ்வப்போது ஜொள்ளுவதுண்டு, என்பதை இவ்விடத்தில் சொல்லிக்கொள்கிறேன்.
அதி ஜிரா :-)!,
ஜயராமன் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை படித்தேன். நீங்கள் புரிந்துகொண்டபடி அவர் தமிழ்வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது என்றோ, தமிழ் வார்த்தைகளுக்குப் பதிலாக ஸம்ஸ்க்ருத வார்த்தைகள் உபயோகம் செய்ய வேண்டும் என்றோ சொல்லவில்லை.
எல்ல மொழிகளிலும் கலப்பு என்பது இயல்பான விஷயம் என்றும், அதை விட்டு விட்டு தூய்மைப் படுத்துகிறேன் என்பதெல்லாம் ஜல்லியடிப்பது என்று கூறியிருக்கிறார்.
தாங்கள் புரிந்து கொண்டதற்கும், அவர் சொன்னதற்கும் வேறுபாடு இருக்கிறது.
ஒரு நல்ல மனம் காயப்பட்டிருப்பதும் நல்ல முயற்சி கேலியாக்கப் பட்டிருப்பதும் வருந்தத் தக்கது.
போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் அந்த மயிலவனுக்கே!
தொடர்க உங்கள் நற்பணியை.
//நிறைய தமிழ்ச் சொற்களை அறிமுகப் படுத்தும் ரொம்ப நல்ல வேலையையும் தொடர்ந்து செய்யப் போறேன்//
அதை நாங்க இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்.
கேழ்வரகு ஒடம்புக்கு நல்லதுன்னு சொன்னா....அத மட்டுந்தான் திங்கனுமான்னு கேப்பீங்க போல..//
இது !! :)
ரொம்ப நல்லா இருக்குது இந்த வரிகள்.
தொடருங்கள்.
அது யாருங்க அந்த உதயகுமார்..செம 'உள்குத்து'வா என்னமோ சொல்றாரு. அம்மாடியோவ் !!
language என்ற வார்த்தைக்கு பொருளின் கீழே அதன் வேர்ச்சொல் பற்றிய குறிப்பை dictionary.com இல் இவ்வாறு காணலாம். [Middle English, from Old French langage, from langue, tongue, language, from Latin lingua. See dgh- in Indo-European Roots.]
(http://dictionary.reference.com/browse/language)
தவிர விக்கிபீடியாவில் Linguistics
வார்த்தைக்கு இப்படியாச் சொல்லுகிறது. இதில் நம்பர் 1 ஐ கவனிக்கவும்.
The study of linguistics can be thought of along three major axes, the endpoints of which are described below:
1.Synchronic and Diachronic - Synchronic study of a language is concerned with its form at a given moment; Diachronic study covers the history of a language (group) and its structural changes over time.
2.Theoretical and applied - Theoretical (or general) linguistics is concerned with frameworks for describing individual languages and theories about universal aspects of language; applied linguistics applies these theories to other fields.
3.Contextual and independent - Contextual linguistics is concerned with how language fits into the world: its social function, how it is acquired, how it is produced and perceived. Independent linguistics considers languages for their own sake, aside from the externalities related to a language. Terms for this dichotomy are not yet well established--the Encyclop椩a Britannica uses macrolinguistics and microlinguistics instead.
(http://www.reference.com/browse/wiki/Linguistics)
மொழியைப் பற்றிய முழுமையான ஆராய்ச்சி என்பது இனத்தை, அதன் தோற்ற வளர்ச்சி, பாதிப்புகளைப் பற்றிய ஆராய்சியில் முக்கிய பங்கு வகிக்கக்கூடியது என்பதை அனைவரும் அறிவர். இனத்தை பற்றிய ஆராய்ச்சி என்றாலே எரிச்சல் அடையக்கூடியவர்கள் இருக்கிறார்கள். அதன் காரணங்கள் அறிந்ததுதான். அதற்கு இன, மொழி, தேச அடையாளங்களைக் கடந்திருப்பவராய் இருக்கவேண்டியதில்லை. காலையில் இந்துவோடு மேட்ரிமோனியலில் தனது சாதியில் பெண்பார்ப்பவராயும் அவர்கள் இருக்கலாம். மொழி, சாதி எல்லாம் எப்போது எவ்வளவு சுத்தமாய் இருக்கவேண்டும் என்பதற்கான அளவுகோல் அப்போது வேறு.
இன்னொன்று, தமிழில் தனக்கு வார்த்தைகள் தெரியவில்லை என்பது வேறு; தமிழில் வார்த்தைகள் இல்லை என்பது வேறு. பின்னதைச் சொல்ல மிகுந்த தைரியம் வேண்டும்; அதற்கு தமிழை கரை கண்டிருக்க வேண்டும். அல்லது தமிழின் மேல் வெறுப்பு இருக்கவேண்டும்.
பி.கு:
சொல் ஒரு சொல் நான் விரும்பி வாசிக்கும் பதிவு. குமரனுக்கும் உங்களுக்கும் என் நன்றி.
தங்கள் மனம் காயப் பட்டிருப்பதை உணர முடிகிறது. ஆயினும் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் தங்கள் பதிவுகளைப் படித்து பயன்பெறும் நண்பர்களுக்காகத் தங்கள் பணியைத் தொடர வேண்டுகிறேன்.
ராகவா,
எத்தனை முறை கொட்டப்பட்டாலும் குளவியாகமா எப்படிய்யா இருக்கே?:)))
ஏகப்பட்ட பதிவ வருது? என்னா மேட்டரு? பெஞ்சில குந்திக்கினுக்கீறியா?
பதிவுக்கு சம்பந்தப்பட்டு நான் என்ன சொல்றது? தங்கமணி செல்லிட்டாரே...
//ஒரு நல்ல மனம் காயப்பட்டிருப்பதும் நல்ல முயற்சி கேலியாக்கப் பட்டிருப்பதும் வருந்தத் தக்கது.
போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் அந்த மயிலவனுக்கே!
தொடர்க உங்கள் நற்பணியை.
//
உங்களின் தமிழைத் தொடர்ந்து படிப்பவன் என்ற முறையில் திரு.மணியனின் கருத்தை நானும் வழிமொழிகின்றேன்.
ஒரு நல்ல "தமிழ்"மனம் காயப்படிருக்கின்றது. அதற்க்காக வருந்துகின்றேன்.
தொடரட்டும் உங்களின் தமிழ்ப்பணி!
அன்புடன்...
சரவணன்.
Those references that I missed providing has been provided, and substantiate my views. Thanks.
//பேஸுவது போல எழுதினால் கஷ்டம் இராது. அதை விட்டுவிட்டு எல்லா இடங்களிலும் வலிந்து திணிப்பது வலிதான் ஏற்படுத்தும். திணிப்பை நான் ஏற்றுக்கொள்வதில்லை அது தமிழானாலும், ஸம்ஸ்க்ருதமானாலும்.//
ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா
நல்ல கூத்து!
நல்லா எள்த்றீங்கோ, நல்லா பேஸ்றீங்கோ
(பேஸ்றது மாத்ரி எள்திப் பார்த்தேன், வேறொண்ணுமில்லே).
//இப்போ 'ம்'னு சொல்லுங்க.. "தலைவர் அதி ஜீ.ரா ரசிகர் சங்கம்"னு தொடங்கிடலாம்.. //
அனேகமா வரலாற்றில் பொன்ஸக்கா வாழ்ந்த காலத்தை நான்காவது சங்க காலம் என்று அழைத்தாலும் அழைப்பார்கள். :)
ஜிரா, உங்களது சொல் ஒரு சொல் வலைபூவை தொடர்ந்து படித்து பின்னூட்டம் போட முடியாவிட்டாலும் அது ஒரு மிக நல்ல முயற்ச்சி..
வழக்கம்போல ஏப்போதும் வைக்கும் கோரிக்கையையும் வைத்துவிடுகிறேன் : கலிங்கத்துபரனி.யாராச்சும் அதை விளக்கி எழுதுங்க சாமிகளா.
ராகவன்,
நீங்கள் அடிவருடினீர்களா இல்லையா என்பது உங்கள் மனசாட்சிக்கு நிச்சயமாக தெரிந்திருக்க வாய்ப்புண்டு.
மற்றபடி சமஸ்கிருதம்தான் தமிழைவிட பெரியது என்று குரைக்கும் சில ஜந்துக்களை மகேந்திரன் நன்றாக கிண்டல் செய்துள்ளார்கள்.
பக்தர்களிடம் தட்டேந்தி பிச்சையெடுப்பது மட்டும் தமிழில். ஆனால் ஆண்டவனிடம் பேசுவது மட்டும் சம்ஸ்கிருதத்தில்!!!
மீன் தமிழ் வார்த்தை அல்ல என்று இந்த ஜந்து சொல்லி நாம் கேட்பதாவது? புது அறஞ்சொற் பொருள் விளக்கத்தை இந்த மதிகெட்ட மூடர்களிடம் கேட்டுத்தான் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் நாமும் நம் தமிழும் இல்லவே இல்லை.
ஒண்ட வந்த நாய் ஊர் பிடாறியைத் துரத்திய கதைதான்! நான் சமஸ்கிருதத்தையும் சேர்த்தே சொன்னேன்!!!
//ஜி.ரா : ஆம வடயா? உளுந்த வடயா?//
எந்த வடையானால் என்ன ?வாடையில்லாத ஊசிப்போகாத வடையாக இருக்கிறதா ?
ராகவன்,
உங்களின் "சொல் ஒரு சொல்" பதிவுகளுக்கு நானும் ரசிகன் ! தொடர்ந்து எழுதுங்கள், நண்பரே ! இந்த பதிவும் சுவையாகவே இருந்தது :)
என்றென்றும் அன்புடன்
பாலா
ராகவன்,
உங்களின் "சொல் ஒரு சொல்" பதிவுகளுக்கு நானும் ரசிகன் ! தொடர்ந்து எழுதுங்கள், நண்பரே ! இந்த பதிவும் சுவையாகவே இருந்தது :)
என்றென்றும் அன்புடன்
பாலா
சமஸ்கிருதத்துக்கு தமிழில் செங்கிருதம் என்பது புதிய அறிவு.
தமிழில் சாதாரணமாக பயன்பாட்டில் இல்லாத ஒன்றை - வேண்டுமென்றே வடமொழி எழுத்துக்களை சேர்த்து - எழுதும் பாணி மிகவும் எரிச்சலை ஏற்படுத்துகிறது.
கருத்து கந்தசாமி - சூப்பர் சார்
ஜி.ரா. உங்கள் தமிழ்ப்பணி தொடர வாழ்த்துக்கள்.
ஜி.ரா,
நீங்க அவர் ஒருத்தர் சொன்னார்னு இவ்வளவு நேரத்தை வீணடித்திருக்கத் தேவையில்லை.
உங்களுடைய பதிவுகளை தொடர்ந்து படிப்பவர்களுக்கு தெரியும் நீங்கள் யாரென்று...
ராகவன்,
ஜயராமன் எப்பவுமே இப்படித்தான்..
அவர் சொல்ல வர்ற விஷயம் (இதுவும் வடமொழியோ) நல்லதாருந்தாலும் சொல்ற விதம் சரியா இல்லாம போயி அவர் சொல்ற விஷயம் எடுபடாம போயிரும்.
அவர் சொல்ல வர்றது என்னன்னு கொஞ்ச நேரம் யோசிச்சி பாருங்க. பிறமொழி சொற்கள் தமிழில் கலப்பதை தவிர்க்க முடியாது. அது பாட்டுக்கு இருக்கட்டும்னு போய்ட்டே இருக்க வேண்டியதுதான். அப்படீன்னுதானே..
கடைசியில தேவையில்லாத ஒரு வாக்கியத்த போட்டு எல்லாத்தையும் கெடுத்துட்டார். இந்த மாதிரி என்னோட ரெண்டு பதிவிலயும் இப்படி செஞ்சிருக்கார்.
அவர் சொன்னதால நீங்க டென்ஷனாயி இதுக்குன்னு ஒரு பதிவு போட்டீங்களா? ஆச்சரியமா இருக்கு..
விட்டுத்தள்ளுங்க..
சொல் ஒரு சொல் நான் மிகவும் விரும்பிப் படிக்கற பதிவுகள்ல ஒன்னு.. தொடர்ந்து எழுதுங்க..
நீங்க தொடர்ந்து எழுதுங்கள்.
எவர் தொடர்பு இல்லாமல் பேசினாலும் விட்டு தள்ளுங்கள்.
தொடர்ந்து படிக்க தான் நாங்க இருக்கோம்.
ஜிரா,
போலியின் அசிங்கமான பின்னூட்டங்கள் என்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
எதிராளியின்மேல் எந்த தவறும் இல்லாமல் எங்கள் இயக்கமோ, தலைமையோ அல்லது உறுப்பினர்களோ யாரையும் இதுவரை நிந்தனை செய்தது இல்லை.
தேவையில்லாமல் பொய் சொல்ல வேண்டாம். உங்கள் செயல்களாலேயே நீங்கள் தண்டிக்கப்படுகிறீர்கள். நினைத்துப் பாருங்கள்.
ரமேஷ்.
ஜி.ரா.,
தங்களது நியாமான உணர்வுகளை இந்தப் பதிவினில் காணமுடிகிறது. எங்கள் ஆதரவு உங்கள் நல்ல பணிக்கு நிச்சயம் உண்டு.. தொடருங்கள்...
ராகவன்,
//எனக்கு எப்பவும் வேலும் மயிலும் வடிவேலனும்தான் துணை. அவனை மட்டும் நம்பித்தான் நான் எதுவும் செய்றது.//
என்னையும் உங்கள் நம்பிக்கைக்குரிய நண்பர்கள் வரிசையில் சேர்த்துக் கொள்ளலாம்.
அணிலாக எதாவது பண்ணுவேன், அல்லது பண்ணமுயற்சிப்பேன்.
தொடரட்டும் உங்கள் தமிழ்ப்பணி.
எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும்.. மெய்ப்பொருள் காண்போம் அறிவுடன்.
நன்றி
ராகவன்.. சொல் ஒரு சொல் - நான் படித்தது இல்லை..இப்பொழுது தெரிந்து கொண்டேன்... கூடியவரையில் படிக்கிறேன்... :-)
அது ஒரு நல்ல இனிய முயற்சி என்பதில் எந்தவித ஐயமும் இருக முடியாது..
//இன்னும் நெறைய சொல்லலாம். இவங்களுக்கு சொன்னாப் புரியாது. இது போதும்னு நெனைக்கிறேன்.//
:-)
ராகவா!
"காச்ச மரம்தான் கல்லடிப்படும்" ; சொல்லொரு சொல் -நானும் விரும்பிப் பங்கேற்கும் ஓர் அறிவு பூர்வமான , அறிவை மேம்படுத்தும் ,விளையாட்டு. மேலும் ஜெயராமன் அண்ணா என்ன? சொன்னார் .என இன்னும் படிக்கவில்லை.நீங்கள் தொடரவும்.
வேலிருக்கையில் மயிலிருக்கையில் வேறு ,துணையும் வேண்டுமோ?????
யோகன் பாரிஸ்
இராகவன். உங்களிடம் முன்பே சொன்னது போல் இந்தப் பதிவை இரண்டு நாட்கள் முன்னரே படித்துவிட்டேன். இன்று தான் பின்னூட்டம் இடுவதற்கு நேரம் கிடைத்தது.
படிக்கத் தொடங்கியது முதல் முடிக்கும் வரை சிரித்துக் கொண்டே இருந்தேன். நகைச்சுவையுடன் நன்றாக எழுதியிருக்கிறீர்கள். முக்காலே மூன்று வீசம் எல்லாக் கருத்துகளுடனும் ஒத்துப் போகிறேன். அந்த மிச்சம் ஒரு வீசம் கூட ஒத்துப் போகும் கருத்துகள் தான்; ஆனால் சில உள்குத்துகள் இருப்பது போல் என் மனதிற்குத் தோன்றுகிறது; அவற்றையும் எடுத்துச் சொல்கிறேன்.
சண்டப் பிரசண்டன் பத்திரிகை (சொல் ஒரு சொல்லுக்கு ஒரு வார்த்தை - 'பத்திரிகை' தமிழா?) நிருபர் ('நிருபர்' தமிழா?) பாராமுகம் நீங்கள் தானே? :-) இது வரை யாராவது உங்களைக் குடைந்தால் பாராமுகமாய் இருந்த நீங்கள் இப்போது அதிஜீராவாய் மாறிவிட்டீர்கள். சரியா? :-)
//பாரா : எனக்கென்ன! ஒரு பய திரும்பிப் பாக்க மாட்டேங்குறான். பாராமுகமாவே இருக்காங்க எல்லாரும்.
//
ஆனா இதப் படிச்சவுடனே பாராமுகம் நானோன்னு தோணுது. :-))
//ஞாபகப் படுத்தத்தான்.
//
தமிழ். தமிழ் வேண்டும் இங்கே. :-))
//பாரா : புரியுது. புரியுது. அப்புறம் இந்த வடமொழி பத்தி....
ஜி.ரா : ஆம வடயா? உளுந்த வடயா?
//
இங்கே தான் அந்த தேவையில்லாத கிண்டல் வந்ததுன்னு நினைக்கிறேன். வடமொழின்னு சமஸ்கிருதத்தைச் சொல்றது வடமொழியாளர்கள் இல்லை (அவர்கள் யாரும் சமஸ்கிருதத்தை உத்திர பாஷை என்று சொல்வதில்லை). அப்படிக்குறிக்கும் வழக்கம் தமிழ் வழக்கம். அதனை நீங்கள் நகைச்சுவையாக எழுதுவதாக எண்ணிக் கொண்டு கிண்டல் செய்திருக்கிறீர்கள். தமிழ் வழக்கத்தைக் கிண்டல் செய்கிறீர்களா? இல்லை வடமொழியையே கிண்டல் செய்கிறீர்களா? தமிழைக் கிண்டல் செய்தால் பொங்கியெழ நாமெல்லோரும் இருக்கிறோம். வடமொழியைக் கிண்டல் செய்தால் கண்டுகொள்ள யாருமே இல்லை என்று நினைத்து இப்படிச் சொல்லிவிட்டீர்களா? (ஐயையோ. மீண்டும் இப்படி அடுக்கடுக்காய் கேள்விகள் கேட்கிறேனே. எனக்குப் பொல்லாத காலம் தான்)
தன் தாயை வாழ்த்த மற்றவர் தாயைக் கிண்டல் செய்ய வேண்டியதில்லை என்று அறிந்தவர் தானே இராகவன் நீங்கள். தமிழை வாழ்த்த வடமொழியை ஆமவடயா உளுந்த வடயா என்று கிண்டல் பண்ண வேண்டுமா? ஏதோ ஒரு வேகத்தில் எழுதிவிட்டீர்கள் என்று உணர்ந்தாலும் சுட்டிக்காட்ட வேண்டும் என்று தோன்றியதால் சுட்டிக் காட்டுகிறேன். பதில் தேவையில்லை.
//அதுலருந்துதான் தமிழ் வந்துச்சுன்னு சொல்றது பால்பாயாசத்துலதான் பால் கறக்குறாங்கன்னு சொல்ற மாதிரி. ஹா ஹா. இன்னைக்கு தமிழில் ஆங்கிலச் சொற்களும் கலந்து பேசுறாங்க. நாளைக்கு ஆங்கிலம் இல்லைன்னா தமிழ் இல்லைன்னு சொல்வாங்க. ஆங்கிலத்துல இருந்துதான் தமிழ் வந்ததுன்னு பீட்சாவுல இருந்துதான் சீஸ் எடுக்குராங்கன்னு சொல்வாங்க. //
இது மிக மிக அருமை. விழுந்து விழுந்து சிரித்தேன். உக்காந்து சிந்தித்தீர்களோ? :-)
//கேழ்வரகு ஒடம்புக்கு நல்லதுன்னு சொன்னா....அத மட்டுந்தான் திங்கனுமான்னு கேப்பீங்க போல. //
இதுவும் ஒரு நல்ல எடுப்பு. (பாயின்ட் என்பதை என்ன சொல்லலாம்?)
//சொல் ஒரு சொல் திரியில நான் தொடர்ந்து பதிவுகள் போடுறதில்லைன்னு வருத்தப்பட்டாரு. இனிமே அந்த வருத்தம் அவருக்கு இருக்காதுன்னு சொல்லி இப்ப முடிச்சிக்கிறேன்.
//
கட்டாயம் அந்த வருத்தம் எனக்கு இல்லை இனிமேல். ஜயராமன் இப்படி ஒரு பின்னூட்டம் இட்டது ஒரு மறைமுகமான வரமே எனக்கு. எனக்கு மட்டும் இல்லை; சொல் ஒரு சொல் வலைப்பூவிற்கு. தமிழ்மணத்திற்கு. தமிழர்களுக்கு. தமிழுக்கு. :-)
//வலைப்பதிவுல சங்கம் வெச்சிருக்கீங்களா? இல்ல...அடையாளம் தெரியாத பின்னூட்டம் போட ஏற்பாடு செஞ்சிருக்கீங்களா? இல்ல வேற ஏதாவது?
//
ஹிஹி. சொன்னா கோவிச்சுக்க கூடாது. சொல்ல வேணாம்னு தான் பாக்குறேன். ஆனா சொல்லாம இருக்க முடியலை.
நீங்க வேணா சங்கம் வச்சுக்காம இருக்கலாம். ஆனால் 'ஜெயராமன்'னு எப்ப நீங்க தலைப்புல போட்டு எழுதுனீங்களோ அப்பவே நாலஞ்சு சங்கம் உங்களுக்குப் பின்னூட்டம் போட வந்தாச்சு பாருங்க. தமிழ்மணத்தின் தனிப்பெரும் குழுமத்தின் தலைவர்கள் எல்லாம் வந்துட்டாங்க. ஒருத்தர் ஊருக்குப் போயிருக்கார். மத்த ரெண்டு பேரும் வந்துட்டாங்க. அதனால இனிமே 'வேலும் மயிலும் வடிவேலனும் தான் துணை'ன்னு அப்பாவியா சொல்லிக்கிட்டு இருக்காதீங்க. என்ன?! :-)
அப்படியே பின்னூட்டம் போட்ட எல்லோருக்கும் ஒரு வேண்டுகோள். நீங்கள் முக்கால்வாசி பேர் சொல் ஒரு சொல் பதிவுகளைத் தொடர்ந்து படிக்கிறதா சொல்லியிருக்கீங்க. மிக்க மகிழ்ச்சி. படிக்கிறதோட நின்னுடாம முடிஞ்சவரைக்கும் எழுத்துலயும் பேச்சுலயும் பரிந்துரைக்கப் படும் சொற்களைப் புழங்கணும்ன்னு பணிவோட வேண்டிக் கொள்கிறோம். அந்தப் பதிவில் நானும் இராகவனும் மட்டுமே எழுதணும்ன்னு இல்லை. ஆர்வம் உடைய யாராயிருந்தாலும் சொல்லுங்க. இணைந்து எழுதலாம்.
திருவாளர். Muse
//எல்ல மொழிகளிலும் கலப்பு என்பது இயல்பான விஷயம் என்றும், அதை விட்டு விட்டு தூய்மைப் படுத்துகிறேன் என்பதெல்லாம் ஜல்லியடிப்பது என்று கூறியிருக்கிறார்.
//
திரு. ஜயராமன் அப்படித் தான் சொன்னாரா இல்லையா என்று தெரியாது. அவர் சொன்னதை நான் புரிந்து கொண்டவரை அவருக்குப் பதிலைச் சொல் ஒரு சொல் பதிவில் சொல்லியிருக்கிறேன். ஆனால் அவர் சொன்னதாக நீங்கள் இங்கே சொல்கிறீர்களே அதற்கான கருத்து இது.
எல்லா மொழிகளிலும் கலப்பு என்பது இயல்பான ஒன்று என்பதனை எல்லோரும் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் அந்த மொழிகளுக்கு உரிய சொற்களே இருக்கும் போது வந்த கலந்த சொற்களையே புழங்கினால் மொழிக்குரிய சொற்கள் வழக்கிழந்து அழிந்து போகிறதே? அதனைத் தடுப்பது தான் எங்கள் வேலை என்று கிளம்பியிருக்கிறோம். தமிழென்னும் கடலில் வந்து கலந்துள்ள வேற்றுமொழிச் சொற்களையெல்லாம் களைந்து தமிழ்ச்சொற்களைப் பரிந்துரைப்பது தான் நாங்கள் செய்வது - அது உங்களுக்குத் தூய்மைப் படுத்துவதாகத் தோன்றினால் நான் சொல்ல ஒன்றுமில்லை. நாங்கள் மற்ற மொழிச் சொற்களை தமிழ்க்கடலில் கலந்த தூய்மைக்குறைவு என்றும் சொல்லவில்லை; அவற்றிற்கு தமிழ்ச்சொற்களைப் பரிந்துரைப்பதைத் தூய்மைப் படுத்துவதாகவும் சொல்லவில்லை. அது நீங்கள் சொல்வதே.
//ஏகப்பட்ட பதிவ வருது? என்னா மேட்டரு? பெஞ்சில குந்திக்கினுக்கீறியா?
//
ஏறக்குறைய இதையே தான் இராகவனிடம் நேற்று கேட்டேன். :-)
Post a Comment