எஸ்.பி.பீ தொடர்ந்து சொன்னார். "சான்சுக்காக விஸ்வநாதன் சார் கிட்ட போனப்போ ஒடனே என்னைய ஏத்துக்கல. ரெண்டு வருஷம் கழிச்சுதான் வாய்ப்பு குடுத்தாரு. ஏன்? நான் ஆந்திரா கொல்ட்டி. என்னோட தமிழ் சரியாயிருக்காது. அதுனாலதான் ரெண்டு வருஷம் கழிச்சு தமிழ் நல்லா படிச்சப்புறமா வாய்ப்பு கொடுத்தார். இந்த விஷயத்துல அவரு சார் ரொம்ப ஸ்டிரிக்ட். இந்தக் கண்டிப்பு எல்லா இசையமைப்பாளர் கிட்டயும் இருக்கனும்"
இந்தக் கருத்தை அனைவருமே வலியுறுத்தினார்கள். மெல்லிசை மன்னராகட்டும். பி.சுசீலாவாகட்டும். எஸ்.ஜானகியாகட்டும். மலேசியா, எஸ்.பி.பீ, மாணிக்க விநாயகமாகட்டும், பி.பீ.ஸ்ரீநிவாஸ் ஆகட்டும். அனைவரும் வலியுறுத்தியது பாடல்களில் முறையான தமிழ் உச்சரிப்பு.
உபசரணைகளும் இடைவேளையும் முடிந்த பின் ஜானகி அவர்கள் பாடத் துவங்கினார்கள். டிக் டிக் டிக் என்ற படத்தில் வரும் "இது ஒரு நிலாக் காலம்" பாடலைப் பாடினார். திரையில் ஸ்வப்னா என்ற நடிகை நடித்த பாடல் அது. மேக்கப் இல்லாத மாதவியையும் ராதாவையும் இந்தப் பாட்டில் பார்க்கலாம் (அல்லது பயப்படலாம்). அதைத் தொடர்ந்து ஜெயப்ரதாவிற்காக ஏழைஜாதி படத்தில் பாடிய "அதோ அந்த நிதியோரம்" என்ற பாடலைப் பாடினார்.
ஒரு பாடலுக்கு மெல்லிசை மன்னர் திரும்பத் திரும்ப மெட்டுப் போட்டும் திருப்தி இல்லாமல் ஆறு மாதங்கள் கழித்து நிறைவான ஒரு மெட்டுப் போட்டாராம். அந்தப் பாடலைத்தான் அடுத்து சுசீலா பாடினார். ஆம். நமது நெஞ்சம் மறக்காத "நெஞ்சம் மறப்பதில்லை" பாடல்தான் அது.
என்னுடைய நண்பன் ஒருவன் வங்காளத்தைச் சேர்ந்தவன். இப்பொழுது அமெரிக்காவில் இருக்கிறான். மூன்று நான்கு வருடங்களுக்கு முன்பெல்லாம் என்னுடைய அலுவலகக் கணிணியில் பாடல்கள் ஒலித்துக் கொண்டேயிருக்கும். பாட்டுக் கேட்காமல் வேலை செய்ததே இல்லை. அப்பொழுது ஒரு குறிப்பிட்ட பாடல் மட்டும் அவனை மிகவும் கவர்ந்தது. அந்தப் பாடலை வருகையில் மட்டும் அமைதியாக வேலைகளைப் போட்டு விட்டு பாட்டு கேட்பான். பாட்டு முடிந்த பிறகே வேலையைத் தொடர்வான். இசைஞானி இளையராஜாவின் இசையில் வந்த "வரம் தந்த சாமிக்கு" என்ற பாடல்தான் அது. சுசீலா அவர்களின் தாலாட்டும் குரலில் சாமியே தூங்கும் பொழுது...இவன் எம்மாத்திரம்! அந்தப் பாடலைத் தெலுங்கில் "வடபத்ர சாயிக்கி" என்று மேடையில் பாடினார் பி.சுசீலா. கூட்டம் அமைதியாக ரசித்தது. அந்தப் பாட்டு முடிந்ததும் நிகழ்ச்சிக்கு குன்னக்குடி வைத்தியநாதன் வந்திருப்பதாக அறிவித்தார்கள்.
மனதோடு மழைக்காலம் என்று திரைப்படம் வெளிவரயிருக்கிறது. அதில் கார்த்திக்ராஜாவின் இசையில் கௌசிக் என்று ஒரு பாடகர் அறிமுகமாகிறார். அவரும் ஜானகியும் சேர்ந்து அடுத்து பாடலாக "அடி ஆத்தாடீஈஈஈஈஈஈஈஈஈஈ இளமனசொன்னு றெக்க கட்டிப் பறக்குது" என்று பாடி நம்மைப் பறக்க வைத்தார்கள். புதுப்பாடகராக இருந்தாலும் கௌசிக்கின் குரல்வளம் சிறப்பாக இருந்தது. அவர் நன்றாக வரவேண்டும் என்று ஜானகி வாழ்த்தினார்.
அமைந்த பாடல் என்று சொல்வார்கள். குறிப்பிட்ட பாடகருக்கென்றே அமைந்த பாடலாக இருக்கும். வரம் தந்த சாமிக்கு பாடல் பி.சுசீலாவுக்கு அமைந்த பாடல் என்றே சொல்லலாம். அதே போல ஜானகிக்கு அமைந்த பாடல்களில் இந்தப் பாடலும் ஒன்று. மெல்லிசை மன்னர் மெட்டமைத்து இசைஞானி இசைக்கருவி கோர்த்த அருமையான பாடல் அது. ஆம். "ஊரு சனம் தூங்கிருச்சே" என்ற பாடல்தான். ஜானகிக்கென்றே அமைந்த பாடல். மெல்லிசை மன்னரின் பிரத்யேக சங்கதிகள் அமைந்த அந்தப் பாடலை ஜானகி மிகவும் லகுவாகப் பாடினார். கூட்டம் மிகவும் ரசித்தது என்று சொல்லவும் வேண்டுமோ!
இத்தனை பாடல்கள் பாடப் பட்டுக் கொண்டிருக்கும் பொழுது நடிகர் ஜெயராம் ஒரு மலையாளப் பாடலைக் கேட்டார். உடனே ஜானகி "கானக்குயிலே" என்ற மலையாளப் பாட்டின் சிறுபகுதியைப் பாடினார்.
"முத்துமணி மால...என்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட....!" சின்னக்கவுண்டர் படத்தில் இடம்பெற்ற பாடலை பி.சுசீலாவும் சங்கரும் இணைந்து பாடினார்கள். A.M.ராஜா-ஜிக்கி கிருஷ்ணவேணி அவர்களின் புதல்வரான சந்திரசேகருடன் இணைந்து அடுத்த பாடலாக "வாடிக்கை மறந்ததும் ஏனோ" என்ற கல்யாணப் பரிசு பாடலைப் பாடினார் சுசீலா. தொடர்ந்தது ஜானகியின் குரலில் "முதல்வனே முதல்வனே முதல்வனே".
அடுத்த பாட்டுக்கு அரங்கத்தில் அங்கெங்கு எழுந்து ஆடினார்கள். லலிலலிலலோ என்று தொடங்கிய ஜானகி மூச்சு விடச் சிரமப் பட்டார். உடனே மைக்கை விட்டு ஓடிச் சென்று மூச்சுமருந்து எடுத்துக் கொண்டு வந்து பாடலைத் தொடர்ந்தார். "மச்சானப் பாத்தீங்களா" பாடலைத்தான். இளையராஜாவிற்கு திரைவாழ்வு தந்த பாடல். ஜானகி அவர்களுக்கும் புகழைத் தந்த பாடல். எல்லோரும் இந்தப் பாடலை ரசித்தார்கள். பலர் விசிலடித்துக் கொண்டு ஆடினார்கள். மகிழ்ச்சியோடு பாடி முடிந்ததும் அதே பாடலைச் சோகமாகப் பாடினார் ஜானகி.
அடுத்து இன்னொரு இளையராஜா பாடல். ஆனால் இந்த முறை பி.சுசீலா. வைதேகி காத்திருந்தாள் படத்திலுள்ள "ராசாவே ஒன்னக் காணாத நெஞ்சு" பாடலைப் பாடினார். முடிந்ததும் பாடகி மஹதி மேடையேறி இசைக்குயில்கள் இருவருக்கும் மலர்க்கொத்து கொடுத்து வாழ்த்துப் பெற்றுக் கொண்டார். திரையிசைத் திலகம் இசையில் பாடிய "உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல" பாடலை அடுத்து பாடினார் பி.சுசீலா. நேரம் மிகவும் ஆகியிருந்தது. பத்தரை மணி. அடுத்த நாள் திங்கள். அலுவலகம் போக வேண்டிய அவசரம். நானும் கூட வந்த கமலாவும் கிளம்பி விட்டோம். கடைசியாக எஸ்.ஜானகி அவர்கள் "இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலைக் கேட்கின்றேன்" என்ற மெல்லிசை மன்னரின் பாடலைப் பாடி நிகழ்ச்சியை நிறைவு செய்தாராம். மொத்தத்தில் மிகவும் நிறைவான நிகழ்ச்சி.
அன்புடன்,
கோ.இராகவன்
Subscribe to:
Post Comments (Atom)
14 comments:
//திரையில் ஸ்வப்னா என்ற நடிகை நடித்த பாடல் அது. மேக்கப் இல்லாத மாதவியையும் ராதாவையும் இந்தப் பாட்டில் பார்க்கலாம் (அல்லது பயப்படலாம்).//
மேக்கப் மட்டுமா கம்மி...ஹி..ஹி...ஹி...
//"அதோ அந்த நிதியோரம்"//
என்னா ஓய்...சனிக்கெழமை ஹேங்க்-ஓவர் இன்னும் தெளியலையா?
//அந்தப் பாடலைத்தான் அடுத்து சுசீலா பாடினார்.ஆம்.நமது நெஞ்சம் மறக்காத "நெஞ்சம் மறப்பதில்லை" பாடல்தான் அது.//
எப்போது கேட்டாலும் ஒரு இனம்புரியா சோகமும்,பீதியும் உள்ளத்தைக் கவ்வும்.
"தாமரை மலரில் மனதினை எடுத்து தனியே வைத்திருந்தேன்..."
Oh..such a soul stirring and haunting piece.
//இசைஞானி இளையராஜாவின் இசையில் வந்த "வரம் தந்த சாமிக்கு" என்ற பாடல்தான் அது. சுசீலா அவர்களின் தாலாட்டும் குரலில் சாமியே தூங்கும் பொழுது...இவன் எம்மாத்திரம்! அந்தப் பாடலைத் தெலுங்கில் "வடபத்ர சாயிக்கி" என்று மேடையில் பாடினார் பி.சுசீலா.//
தெலுங்கிருந்து மொழி மாற்றம் செய்யப்பட்ட படமாக இருந்தாலும்,"சிப்பிக்குள் முத்து"வின் பாடல்கள் ஒரிஜினல் தமிழ் பாடல்கள் போலவே இருக்கும்.காரணம் ராசாமும்,டையமண்டும் தான்.எங்க பாட்டிக்கு ரொம்பப் பிடித்த பாடல் இது.
//தொடர்ந்தது ஜானகியின் குரலில் "முதல்வனே முதல்வனே முதல்வனே".//
ஜானகியம்மா ரகுமானின் இசையில் வெகு சில பாடல்களே பாடியிருந்தாலும்,பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்.
"ஒட்டகத்தைக் கட்டிக்கோ..","நெஞ்சினிலே,நெஞ்சினிலே","முதல்வனே..முதல்வனே".. என்று சங்கிலித்தொடர் போலச் செல்லும் அந்த பாடல்களின் அணிவரிசை.சங்கர் மகாதேவன்,ஜானகி குரல்களில் ஒலிக்கும் இந்தப் பாடல் என்னோட ஆல்டைம் ஃபேவரிட்.
//நானும் கூட வந்த கமலாவும் கிளம்பி விட்டோம். கடைசியாக எஸ்.ஜானகி அவர்கள் "இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலைக் கேட்கின்றேன்" என்ற மெல்லிசை மன்னரின் பாடலைப் பாடி நிகழ்ச்சியை நிறைவு செய்தாராம்.//
அடடே.அற்புதமான பாடலாச்சே...சே.ஜீரா மிஸ் பண்ணீட்டீங்களே...??
//மொத்தத்தில் மிகவும் நிறைவான நிகழ்ச்சி.//
நல்லா இருங்கப்பூ...(சத்தியமா இங்கே ஒண்ணும் பொகையலை...)
ராகவன்,
அருமையா எழுதி இருக்கீங்க. நாங்களும் கூடவந்து பார்த்து/கேட்ட மாதிரி இருந்தது. ஆமாம் அந்த
'வரம் தந்த சாமி' பாட்டு என்ன படம்?
//'வரம் தந்த சாமி' பாட்டு என்ன படம்? //
சிப்பிக்குள் முத்து!
அருமையான பாடல் அது.
லாலி லாலி லாலி லாலி
வரம் தந்த சாமிக்கு சுகமான லாலி..
என்று ஆரம்பிக்கும்.
Nice one raghavan
chandravathana I think its chippikul mutthu
// சுதர்சன்.கோபால் said...
//திரையில் ஸ்வப்னா என்ற நடிகை நடித்த பாடல் அது. மேக்கப் இல்லாத மாதவியையும் ராதாவையும் இந்தப் பாட்டில் பார்க்கலாம் (அல்லது பயப்படலாம்).//
மேக்கப் மட்டுமா கம்மி...ஹி..ஹி...ஹி... //
நானும் ஹி ஹி ஹி ஹி
// //"அதோ அந்த நிதியோரம்"//
என்னா ஓய்...சனிக்கெழமை ஹேங்க்-ஓவர் இன்னும் தெளியலையா? //
ஹி ஹி நதியோரம்...நதியோரம்....
// //அந்தப் பாடலைத்தான் அடுத்து சுசீலா பாடினார்.ஆம்.நமது நெஞ்சம் மறக்காத "நெஞ்சம் மறப்பதில்லை" பாடல்தான் அது.//
எப்போது கேட்டாலும் ஒரு இனம்புரியா சோகமும்,பீதியும் உள்ளத்தைக் கவ்வும்.
"தாமரை மலரில் மனதினை எடுத்து தனியே வைத்திருந்தேன்..."
Oh..such a soul stirring and haunting piece. //
உண்மைதான் சுதர்சன். இந்தப் பாடலை எப்பொழுது கேட்டாலும் நமது நெஞ்சை நம்மிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பிடுங்கி பெட்டிக்குள் ஒளித்து வைத்தது போன்ற உணர்வு வரும். அதாவது பொம்மை பிடுங்கப்பட்ட குழந்தையின் நிலை.
// //இசைஞானி இளையராஜாவின் இசையில் வந்த "வரம் தந்த சாமிக்கு" என்ற பாடல்தான் அது. சுசீலா அவர்களின் தாலாட்டும் குரலில் சாமியே தூங்கும் பொழுது...இவன் எம்மாத்திரம்! அந்தப் பாடலைத் தெலுங்கில் "வடபத்ர சாயிக்கி" என்று மேடையில் பாடினார் பி.சுசீலா.//
தெலுங்கிருந்து மொழி மாற்றம் செய்யப்பட்ட படமாக இருந்தாலும்,"சிப்பிக்குள் முத்து"வின் பாடல்கள் ஒரிஜினல் தமிழ் பாடல்கள் போலவே இருக்கும்.காரணம் ராசாமும்,டையமண்டும் தான்.எங்க பாட்டிக்கு ரொம்பப் பிடித்த பாடல் இது.//
உண்மை. இந்தப் படத்தில் வைரமுத்துவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
கருயானை முகனுக்கு.............
கருயானை முகனுக்கு மலையன்னை நானே
பார் போற்றும் முருகனுக்குப் பார்வதியும் நானே - என்று அழகாகத் தமிழ் படுத்தியிருப்பார்.
////தொடர்ந்தது ஜானகியின் குரலில் "முதல்வனே முதல்வனே முதல்வனே".//
ஜானகியம்மா ரகுமானின் இசையில் வெகு சில பாடல்களே பாடியிருந்தாலும்,பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்.
"ஒட்டகத்தைக் கட்டிக்கோ..","நெஞ்சினிலே,நெஞ்சினிலே","முதல்வனே..முதல்வனே".. என்று சங்கிலித்தொடர் போலச் செல்லும் அந்த பாடல்களின் அணிவரிசை.சங்கர் மகாதேவன்,ஜானகி குரல்களில் ஒலிக்கும் இந்தப் பாடல் என்னோட ஆல்டைம் ஃபேவரிட். //
ஏ.ஆர்.ரகுமான் - ஜானகி கூட்டணியில் எனக்குப் பிடித்தது ஒட்டகத்தக் கட்டிக்கோ பாட்டு.
// //நானும் கூட வந்த கமலாவும் கிளம்பி விட்டோம். கடைசியாக எஸ்.ஜானகி அவர்கள் "இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலைக் கேட்கின்றேன்" என்ற மெல்லிசை மன்னரின் பாடலைப் பாடி நிகழ்ச்சியை நிறைவு செய்தாராம்.//
அடடே.அற்புதமான பாடலாச்சே...சே.ஜீரா மிஸ் பண்ணீட்டீங்களே...?? //
உண்மை சுதர்சன். மிகவும் நல்ல பாட்டு. ஆனால் நேரமாகி விட்டது. அத்தோடு மழை வரப் போகிறதோ என்று நான் பைக்கில் வரவில்லை. அதனால்தான் ஒரு பாட்டு போனால் போகட்டும் என்று சொல்லி கூட்டம் வெளியே வருமுன்னமே நாங்கள் வெளியே வந்து விட்டோம்.
// //மொத்தத்தில் மிகவும் நிறைவான நிகழ்ச்சி.//
நல்லா இருங்கப்பூ...(சத்தியமா இங்கே ஒண்ணும் பொகையலை...) //
பொகையலையா! சரி...இன்னொன்னு சொல்றேன். இந்த வெள்ளிக்கெழம...அதான் ரெண்டு நாளுக்கு முன்ன....சென்னை காமராஜார் அரங்கத்துல...மொத வரிசைல உக்காந்து கச்சேரி....ஆமா...பி.சுசீலாதான் பாடுனாங்க. ஹி ஹி.
// துளசி கோபால் said...
ராகவன்,
அருமையா எழுதி இருக்கீங்க. நாங்களும் கூடவந்து பார்த்து/கேட்ட மாதிரி இருந்தது.//
நன்றி டீச்சர்.
// ஆமாம் அந்த
'வரம் தந்த சாமி' பாட்டு என்ன படம்? //
மேல பாருங்க...நாமக்கல்லாரும் அனிதாவும் எனக்கு முந்தி படத்தோட பேரு "சிப்பிக்குள் முத்து"ன்னு சொல்லீட்டாங்க.
ராகவன்,
நீங்க சொன்னா மாதிரி ஒரு பாடகருக்கு அவர் எந்த மொழியில் பாட விரும்புகிறாரா அதை சரியாக உச்சரிக்க தெரிந்திருக்க வேண்டும். இப்போதுள்ள தமிழ் பாடகர்களை இவ்விஷயத்தில் குறை கூறும் பாலசுப்பிரமணியம் ஹிந்தியில் பாட சென்றபோது அதை புரிந்துக்கொண்டிருந்தாரா என்று தெரியவில்லை. அத்தனை மோசமாக இருக்கும் அவருடைய ஹிந்தி உச்சரிப்பு.
இப்போதெல்லாம் வார்த்தைகளைவிட ரிதத்துக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. ஆகவேதான் தமிழ் என்ற வார்த்தையைக் கூட உச்சரிக்க முடியாதவர்களையெல்லாம் அழைத்துவந்து வாய்ப்பு தருகிறார்கள்.
ஊரு சனம் தூங்கிருச்சி, முத்து மணி மால.. இசைஞானியில் இந்த பாடல்கள் எனக்கும் மிகவும் பிடிக்கும்.
ஆக, ஒங்களோட இந்த தொடர் நாங்களே கலந்துக்கிட்டிருந்தாப்பல இருந்தது ராகவன்..
அது சரி கடைசியா ஒரு கேள்வி.. அது யாரு ஒங்கக்கூட வந்த கமலா?
// tbr.joseph said...
ராகவன்,
நீங்க சொன்னா மாதிரி ஒரு பாடகருக்கு அவர் எந்த மொழியில் பாட விரும்புகிறாரா அதை சரியாக உச்சரிக்க தெரிந்திருக்க வேண்டும். இப்போதுள்ள தமிழ் பாடகர்களை இவ்விஷயத்தில் குறை கூறும் பாலசுப்பிரமணியம் ஹிந்தியில் பாட சென்றபோது அதை புரிந்துக்கொண்டிருந்தாரா என்று தெரியவில்லை. அத்தனை மோசமாக இருக்கும் அவருடைய ஹிந்தி உச்சரிப்பு. //
ஹிந்தியில் பாலு எப்படிப் பாடினார் என்று எனக்குத் தெரியாது. ஏனென்றால் எனக்கு ஹிந்தி தெரியாது. ஆனால் பி.சுசீலா அவர்கள் ஹிந்தியில் பாடுவதை அவ்வளவாக விரும்பவில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் எனக்குத் தெரிந்து முடிந்த வரை எல்லா மொழிகளிலும் சிறப்பாக உச்சரிக்கின்றவர் வாணி ஜெயராம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். திரையில் அவருடைய முதல் பாடலான "போலே ரே பப்பீ ஹரா" பாடலுக்காக அவர் தான்சேன் விருது பெற்றாரே!
ஒருவேளை வாய்ப்புக் குறைவாக இருப்பதால் பாலு சொல்லியிருப்பாரோ என்னவோ! எனக்குத் தெரியவில்லை.
// இப்போதெல்லாம் வார்த்தைகளைவிட ரிதத்துக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. ஆகவேதான் தமிழ் என்ற வார்த்தையைக் கூட உச்சரிக்க முடியாதவர்களையெல்லாம் அழைத்துவந்து வாய்ப்பு தருகிறார்கள். //
இருக்கலாம் சார். ஒன்னு ரெண்டு பேரு நல்லாப் பாடுறாங்க. மத்தபடிக்கு.....எல்லாம் டப்ஸ்தான்.
// ஊரு சனம் தூங்கிருச்சி, முத்து மணி மால.. இசைஞானியில் இந்த பாடல்கள் எனக்கும் மிகவும் பிடிக்கும். //
இந்த ரெண்டு பாட்டுகளும் யாருக்குப் பிடிக்காம இருக்கும் சார். அருமையான பாட்டுக. அதுலயும் ஊருசனம் மெல்லிசையும் இசைஞானியும் கலந்து அவிச்ச கொழுக்கட்டை. முத்துமணி மாலை ஒரு சுவையான ஆப்பம்+தேங்காப்பால்.
// ஆக, ஒங்களோட இந்த தொடர் நாங்களே கலந்துக்கிட்டிருந்தாப்பல இருந்தது ராகவன்.. //
நன்றி சார்
// அது சரி கடைசியா ஒரு கேள்வி.. அது யாரு ஒங்கக்கூட வந்த கமலா? //
அவங்க என்னுடைய நண்பர். முன்பு tfmpage வழியாக நண்பரானார். துளசி டீச்சர் வயது இருக்கும். நல்ல சுறுசுறுப்பானவர். கலகலப்பானவர். நான் மதிப்பும் மரியாதை வைத்திருக்கும் ஒருவர்.
இசையை அனுபவிப்பதற்கும் ஒரு வரம் வேண்டும் ராகவன்.
எத்தனையோ பாடல்கள் கேட்டு தான் எங்கள் தமிழ் உச்சரிப்பு
மாறாமல் இருக்கிறது.
சுசீலா ,ஜானகி இவர்கள் பாடல்கள் குறைந்த படங்களில் நிறைவாக ஒலிக்கும். இப்போது படமும் நிறைய. பாடகர்களும் ஏராளம்.
தமிழ் கொஞ்சம் ஒளிந்து கொள்கிறது. இசை அமைப்பவர்கள் எந்தப் பாட்டு அமைத்தாலும் ஏற்கனவே கேட்ட நினைவு வருகிறது.நல்ல வேளை, இவர்கள் பாடிய(10 வருடங்களுக்கு முன்னால்) காலங்களில் குத்துப் பாடல்கள் வரவில்லை.
சுதந்திர தின வாழ்த்துக்கள்.
வணக்கம் அன்பு ராகவன்
லாலி லாலி பாடலும் என் நினைவுப் பதிவிலிருந்தும் ஓரம்கட்டமுடியாத ஒன்று. புலம் பெயர்வாழ்வில் , தனிமையில், மன உழைச்சலில் இருந்த காலங்களில் ஹெட்போனில் இந்தப்பாடலையும் ஒலிக்கவிட்டுக் காதை நிறைத்துக் கண்களை நீரால் நிரப்பிய காலம் நினைவுக்கு வருகின்றது.
ஸ்வாதி முத்யம் படத்துக்கும் கமலின் வாழ்க்கக்கும் சுவையான முடிச்சு உண்டு. ஸ்வாதி முத்யம் வந்த நாட் தான் கமலின் மகள் சுருதியும் பிறந்தாராம். எனவே இப்பட இயக்குனர் கே.விஸ்வநாத்தின் மனைவி, இன்று வரை சுருதியை ஸ்வாதி முத்யம் என்றே அழைத்து வருவதாகக் கமலின் ஒரு பேட்டியில் படித்திருந்தேன்.
தொடர் நல்லா இருந்தது இராகவன். நானும் கூட வந்து கேட்ட/பார்த்த மாதிரி இருந்தது. அது சரி. நான் தான் கூட வந்தேனே. :-) பாப்கார்ன் சாப்பிட்டுகிட்டு இருந்த என்னைத் தான் கடைசியிலே அங்கேயே விட்டுட்டுப் போயிட்டீங்க. நான் அப்புறம் பறந்து பறந்து வர்றதுக்குள்ள விடிஞ்சிருச்சு.
ஆக மயிலாரின் பெயர் "கமலா".
// manu said...
இசையை அனுபவிப்பதற்கும் ஒரு வரம் வேண்டும் ராகவன்.
எத்தனையோ பாடல்கள் கேட்டு தான் எங்கள் தமிழ் உச்சரிப்பு
மாறாமல் இருக்கிறது.//
உண்மைதான் மனு. சரியாகச் சொன்னீர்கள்.
// சுசீலா ,ஜானகி இவர்கள் பாடல்கள் குறைந்த படங்களில் நிறைவாக ஒலிக்கும். இப்போது படமும் நிறைய. பாடகர்களும் ஏராளம்.
தமிழ் கொஞ்சம் ஒளிந்து கொள்கிறது. இசை அமைப்பவர்கள் எந்தப் பாட்டு அமைத்தாலும் ஏற்கனவே கேட்ட நினைவு வருகிறது.நல்ல வேளை, இவர்கள் பாடிய(10 வருடங்களுக்கு முன்னால்) காலங்களில் குத்துப் பாடல்கள் வரவில்லை.
சுதந்திர தின வாழ்த்துக்கள். //
சுதந்திர நாள் வாழ்த்துகள் மனு. நீங்கள் சொல்வது போல இப்பொழுது பல பாடல்களைக் கேட்டதுமே அதன் மூலம் நினைவுக்கு வருவது உண்மைதான். இசைமேதைகளின் இசைவாரிசுகளின் இசையிலும் அதே நிலைதான்.
உங்க தொடரை படிக்கும் போது எனக்கு இந்த நிகழ்ச்சி நியாபகத்துக்கு வருது:
சப்த ஸ்வரங்கள் நிகழ்ச்சிக்கு ஜானகி அம்மா நீதிபதியா வந்திருந்தாங்க...
அது சின்ன பசங்களுக்கான போட்டி.
கடைசியா பரிசு வழங்கும் போது, ஒரு குழந்தை நல்லா பாடிச்சி மத்த குழந்தைகள் நல்லா பாடலன்னு சொன்னா அந்த குழந்தைகள் மனசெல்லாம் கஷ்டப்படும். அதனால எல்லா குழந்தைகளுக்கும் பரிசை கொடுத்துடுங்கன்னு சொல்லி, எல்லா குழந்தைகளுக்கும் பரிசு கொடுத்தாங்க!!!
ஜானகி அம்மா குரல் மட்டுமல்ல, மனசும் இனிமையானதே!!!
Post a Comment