Monday, August 07, 2006

4. மெல்லிசை மன்னரும் ஆந்திரா கொல்ட்டியும்

"இல்ல எதுவும் சொல்லனுமா? பாடுறதுக்கு முன்னாடின்னு கேட்டேன்" என்று இரண்டாம் முறையாக சுசீலா கேட்டார். "ஆமாம். கண்டிப்பாச் சொல்லனும்"னு என்று சுசீலாவிடம் சொன்னவர் கூட்டத்தைப் பார்த்துச் சொன்னார். "கொஞ்ச நேரத்துக்கு நான் பி.சுசீலாவைக் காதலிக்கப் போறேன். ஆமா. இப்போ ஒரு டூயட் பாட்டு. டீ.எம்.எஸ் பாடியது. இப்ப அவருக்குப் பதிலா நான் பாடப் போறேன். பாடலாமா?"

கேட்டு விட்டு இசைக்குழுவிற்குச் சைகை காட்டினார். பாடல் தொடங்கியது. டொக் டொக் டொக் டொக்...குதிரைக் குளம்பு ஒலிக்க....ஜானகி "ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்" என்று தொடங்கினார். அதுவும் கனமான ஆண் குரலில். அரங்கம் ஸ்தம்பித்தது. ஆனால் ஜானகி படக்கென்று சிரித்து விட்டார். பிறகு சமாளித்துக் கொண்டார். பாடல் மீண்டும் முதலில் இருந்து தொடங்கியது.

பாட்டில் பி.சுசீலா "ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்" என்று பாடுகையில் ஜானகியைக் கை காட்டினார். புரிகிறது அல்லவா. இப்பிடிக் குறும்பு கொப்புளிக்கும் விளையாட்டுகளாக பாடல் நகர்ந்தது. பாடல் முடிந்ததும் "தேங்க் யூ வெரி மச்" என்று டீ.எம்.எஸ் சொல்வது போலச் சொல்லி முடித்தார் எஸ்.ஜானகி. எல்லாருக்கும் கை வலித்தது. ஆமாம். அந்த அளவு தட்டியிருக்கிறோம்.

பிறகு பேசிய ஜானகி இது புதிய முயற்சி என்றார். பிறகு கீழே அமர்ந்திருந்த பி.பீ.ஸ்ரீநிவாஸ் போலப் பாடப் போவதாகச் சொல்லி அவர் பாடிய "அனுபவம் புதுமை" பாடலைக் கொஞ்சம் பாடினார். அதற்கு ஸ்ரீநிவாஸ் அவர்களும் ஒன்ஸ்மோர் கேட்டார். அடுத்து எஸ்.பீ.பாலசுப்பிரமணியம் பாடிய பனிவிழும் மலர்வனம் பாடலை முயற்சித்தார்.

முதலில் நன்றாக இருந்த இந்தச் சோதனை பிறகு கொஞ்சம் சோதனையாக இருந்தது என்பது என் கருத்து. இப்படிச் சொல்வது ஜானகியின் குரல்வளத்தைக் குறை சொல்வதாகாது.

ஆனால் அந்தச் சோதனையைச் சாதனையாக்கும் வகையில் வந்தது அடுத்த பாடல். ஆமாம். பதினாறு வயதினிலே படத்தில் உள்ள "செந்தூரப் பூவே பாடல்". எஸ்.ஜானகி முதன்முதலாக தேசிய விருது பெற்ற பாடல். அந்தப் பாடலைத் தெலுங்கில் பாடியது பி.சுசீலா. "சிறுமல்லிப் பூவா...சிறுமல்லிப் பூவா" என்று தொடங்கும் அந்தப் பாடல். ஆனால் மேடையில் தமிழில் பி.சுசீலாவும் தெலுங்கில் எஸ்.ஜானகியும் பாடினார்கள்.

அதிலும் எப்படி ஒருவர் பல்லவி பாடி முடிப்பார். உடனே அடுத்தவர் பல்லவியைப் பாடுவார். அடுத்து அனுபல்லவி...இப்படி இருவரும் மாறிமாறி பாடுவார்கள். இசைக்கருவியாளர்களுக்குக் கடினமான வேலை. ஒரு இசைக்கோர்வையை வாசித்து விட்டு உடனே அதே கோர்வையை மீண்டும் வாசிக்க வேண்டும். இப்படி ஒவ்வொன்றையும் இரண்டு முறை வாசிக்க வேண்டும். ஒவ்வொரு முறையில் ஒவ்வொரு மொழி. ஒவ்வொரு குரல். ஆனாலும் மிகச்சிறப்பாக அமைந்தது இந்தப் பாடல். நிகழ்ச்சியிலேயே மிகச்சிறப்பாகக் கையாளப்பட்ட பாடல் என்று இதைச் சொல்லலாம். ராஜாவின் பார்வைக்குக் கிடைத்த வரவேற்பைப் போல இரண்டு மடங்கு வரவேற்பை இந்தப் பாடல் அள்ளிக் கொண்டு போனது.

இந்தப் பாடல் முடிந்தது எஸ்.ஜானகி "மன்றத்தில் ஓடி வரும்" என்ற மெல்லிசை மன்னரின் பாடலை நினைவு கூர்ந்து சிறிது பாடினார். அதற்குள் இடைவேளை வந்தது. ஒவ்வொரு சிறப்பு விருந்தினராக மேடைக்கு அழைக்கப்பட்டனர். பி.பீ.ஸ்ரீநிவாஸ் முதலில் மைக்கைப் பிடித்தார். இரண்டு இசைமேதைகளையும் புகழ்ந்து அவர்களுடன் பாடிய பாடல்களை நினைவு கூர்ந்தார். இருவரையும் பாராட்டி ஒரு பெரிய குறுங்கவிதை எழுதி வந்து படித்தார்.

எஸ்.பி.பீ, மலேசியா வாசுதேவன், ஜெயராம், மாணிக்க விநாயகம் போன்றோர் இருவரின் கால்களிலும் விழுந்து வணங்கினார்கள். அடுத்து மெல்லிசை மன்னர் மேடையேறினார். மேடையில் இருந்த அனைவரும் அவரது காலில் விழுந்தார்கள். முதலில் பி.சுசீலா. பின்னர் எஸ்.ஜானகி. பிறகு பி.பீ.எஸ். பிறகு எஸ்.பி.பீ. பிறகு மலேசியா. பிறகு மாணிக்க விநாயகம். பிறகு எல்லாரும் விழுந்தார்கள். ஒரு பெரிய பட்டுத் துண்டை சுசீலாவிற்கும் ஜானகிக்கும் சேர்த்துப் போர்த்தினார்.

மைக்கைக் கையில் பிடித்தார் மெல்லிசை மன்னர். "இந்த மாதிரி நிகழ்ச்சிக்கு வந்தா எல்லாரும் என்னோட கால்ல விழுந்து என்னைக் கெழவனாக்கிறாங்க. எனக்கு வயசு 22தான். நான் கலைஞன் இல்லை. முதலில் ஒரு ரசிகன். என்னவோ என்னாலதான் இவங்களுக்கு நல்ல பேர் கெடச்சதுன்னு இங்க எல்லாரும் சொன்னாங்க. ஆனா அது உண்மையில்ல. இவங்கள்ளாம் நல்லாப் பாடி எனக்கு நல்ல பேரு வாங்கிக் கொடுத்தாங்க. அதுதான் உண்மை. பி.சுசீலாவும் சரி. எஸ்.ஜானகியும் சரி. இரண்டு பேருக்கும் தமிழ் உச்சரிப்பு ரொம்பச் சுத்தமா இருக்கும். அவர்களுடைய சாதனை மிகப் பெரியது" இப்படி வஞ்சனையில்லாமல் இருவரையும் மனமாரப் பாராட்டினார். பேசி முடித்ததும் மேடையை அடைத்துக் கொண்டிருக்காமல் படபடவென சுறுசுறுப்புடன் (இந்த வயதில்) கீழிறங்கினார்.

அடுத்து எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மைக்கைப் பிடித்தார். அவருடைய திரையுலகப் பயணம் தொடங்கவே இவர்கள் இருவரும்தான் காரணம் என்பதைக் குறிப்பிட்டார். ஒரு போட்டியில் பாடிய இவரை நடுவராக இருந்து ஊக்குவித்து திரைப்படத்திற்கு முயற்சிக்கச் சொன்னவர் எஸ்.ஜானகியாம். பின்னாளில் வாய்ப்புக் கிட்டியபின் தமிழில் (மெல்லிசை மன்னரின் இசையில்) முதல் பாடல் பி.சுசீலாவுடன். தெலுங்கில் பி.சுசீலாவுடன். கன்னடத்தில் பி.சுசீலாவுடன்.

தொடர்ந்து சொன்னார். "நான் ஆந்திரா கொல்ட்டி..............."

தொடரும்....

15 comments:

said...

ராகவன், 'சிறுமல்லி பூவே' என்ற தெலுங்கு பாட்டையும் பாடியது ஜானகி தான்

said...

ஸ்ரீசரண், இந்தத் தகவலை மேடையில் ஜானகிதானே சொன்னார்கள்.

எனக்குத் தெரிந்து தமிழில் ஒரு பாடகர்...தெலுங்கில் அதே பாடலுக்கு வேறொரு பாடகர் என்று ராஜா நிறையவே செய்திருக்கிறார்.

சீட்டகோக்கா சிலக்கா (அலைகள் ஓய்வதில்லை) தெலுங்குப் படத்தில் வாணியின் ராஜ்யம்தான். அதே போல பிரியா படத்தில் தமிழில் பி.சுசீலா, ஜென்சி, ஜானகி என்று ஆளுக்கொன்று பாடியிருப்பார்கள். ஆனால் கன்னடத்தில் எல்லாம் ஜானகி. தூங்காத விழிகள் ரெண்டு பாடலைத் தெலுங்கில் குரிசேனி சிறு நவ்வுனே என்று வாணி ஜெயராம் பாடியிருக்கிறார். நானொரு சிந்து தெலுங்கில் பி.சுசீலாவால் நேனொக சிந்துவாகப் பாடப்பட்டது. இன்னும் சொல்லலாம். நன்ன ஜீவா நீனே..நன்ன ப்ரேம கீதே நீனே என்ற எஸ்.பி.பீயின் கன்னடப்பாடல் தமிழுக்கு வரும் பொழுது "தேவன் தந்த வீணை" என்று ஜானகியும் ஜெயச்சந்திரனும் பாடினார்கள்.

அப்படி இதுவும் இருக்கலாம் என நினைக்கிறேன். இந்தத் தகவலுக்கு என்னிடம் ஆதாரம் இல்லை. மேடையில் ஜானகி சொல்லியதுதான் ஆதாரம்.

ஒருவேளை அந்தத் தெலுங்குப் பாடல் கிடைக்குமானால் ஒரு முடிவுக்கு வரலாம்.

said...

இராகவன்,
நல்ல தொடர். தவறாமல் படித்து வருகிறேன். நீங்களும் படிக்கச் சுவையாகச் சொல்லுகிறீர்கள். மெல்லிசை மன்னரின் பரம இரசிகன் நான். என்ன பண்பு! அவர் சில வருடங்களுக்கு முன் கனடாவில் ஓர் இசை நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். கவியரசர் பற்றி சில நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார், அப்போது அழுதே விட்டார். அந்த அளவுக்கு கவியரசர் மேல் பாசமும் மதிப்பும் வைத்திருக்கிறார். தொடருங்கள். அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளேன்.

said...

// வெற்றி said...
இராகவன்,
நல்ல தொடர். தவறாமல் படித்து வருகிறேன். நீங்களும் படிக்கச் சுவையாகச் சொல்லுகிறீர்கள். மெல்லிசை மன்னரின் பரம இரசிகன் நான். என்ன பண்பு! அவர் சில வருடங்களுக்கு முன் கனடாவில் ஓர் இசை நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். கவியரசர் பற்றி சில நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார், அப்போது அழுதே விட்டார். அந்த அளவுக்கு கவியரசர் மேல் பாசமும் மதிப்பும் வைத்திருக்கிறார். தொடருங்கள். அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளேன். //

வெற்றி, நானும் மெல்லிசை மன்னரின் ரசிகந்தான். அவருக்கும் கவியரசருக்கும் உள்ள நட்பு தெரியாததா! புரியாததா! இசையும் தமிழும் இணைந்த நட்பு. அந்த நட்பின் அடையாளம் காலத்தால் அழியாத பல பாடல்களாக மட்டுமன்றி தியாகராய நகரில் சிலையாகவும் நிற்கிறது.

said...

ராகவன், இளையராஜா ஓரே பாடலை வேறு மொழிகளில் மற்ற பாடகர்,பாடகிகளுக்கு கொடுத்திருக்கிறார். ஆனால் ஒரு சில பாடல்கள் ஜானகிக்காகவே உருவாக்கி இருப்பார். அதில் ஒன்று தான் செந்தூரபூவே. மேடையில் ஜானகி அப்படி சொல்லவில்லை. இந்த பாடல் சுசீலாவிற்கு பிடித்த பாடல் ஆதலால் அவரும் பாடுகிறார் என்று தான் சொன்னார்கள். உங்களுக்கு இன்னும் சந்தேகம் இருந்தால் இந்த சுட்டிக்கு சென்று பாடலை பதிவிறக்கம் செய்து கேட்டு பாருங்கள்
http://music.cooltoad.com/music/song.php?id=190592
நன்றி

said...

தகவலுக்கு நன்றி ஸ்ரீசரண். நான் தவறாகக் கேட்டு விட்டேன் போலிருக்கிறது. தவறைத் திருத்தியமைக்கு மிக்க நன்றி. நான் சொன்னது தவறான தகவல்தான்.

said...

ராகவன்!

தொடர் அருமையாக இருக்கிறது. ''செந்தூரப்பூவே '' ஜானகியின் ஹிட் பாடலல்லவா?
வயது போன தடுமாற்றம் இயல்புதானே. அட உங்களச் சொல்லேல்லீங்க.. :) சுசிலா அம்மாவச் சொன்னேன்:)

said...

நல்ல அருமையான நடையில் உங்கள் பார்வையில் நிகழ்ச்சியை நேரில் காண்பது போல் உள்ளது.

நான் ஆந்திரா கொல்ட்டி.......???????

said...

சிறந்த தொடர்கதை ஆசிரியர் ராகவன், அந்தப் பாட்டுக்கெல்லாம் அங்கங்க சுட்டி கண்டுபிடிச்சு கொடுத்தா இன்னும் நல்லா இருக்கும் இல்ல?

இப்போ எனக்கு இந்த "மன்றத்தில் ஓடி வரும்" பாட்டு கேட்கணும் போலிருக்கு.. எங்க போய்க் கேட்பேன்!! :(

said...

பொன்ஸ்,
கவலையை விடுங்கள். இருக்கவே இருக்கிறது musicindiaonline.com.
கீழுள்ள சுட்டிக்குச் சென்று நீங்கள் விரும்பிய பாடலைக் கேட்டு மகிழுங்கள். அருமையான பாடல். எனக்கும் நீங்கள் குறிப்பிட்ட பாடல் மிகவும் பிடிக்கும். கவியரசரின் வரிகளல்லவா!

http://www.musicindiaonline.com/p/x/yrfgyvoXZt.As1NMvHdW/

said...

ராகவன் தொடர் என்பதால் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு சஸ்பென்ஸ் இருந்துதான் ஆகணுமா, தேவையில்லையென்று நினைக்கிறேன்.

மற்றபடிக்கு நல்ல ஒரு தொடர்.

said...

அடடடடா.. இத தொடரா எழுதறீங்களா பின்னூட்டங்கள படிச்சித்தான் தொடர்னு தெரிஞ்சிக்கிட்டேன்..

கொஞ்ச நாளாவே தமிழ்மணம் பக்கம் வரலையா படிக்காம விட்டுட்டேன்..

இனி பின்னோக்கி போய் படிக்கணும்..

எனக்கும் மிகப் பிடித்த இசையமைப்பாளர் மெ. மன்னர். அப்புறம் சுசீலா, டிஎம் எஸ், ஜானகின்னா ரொம்பவும் பிடிக்கும்..

said...

//நன்ன ஜீவா நீனே..நன்ன ப்ரேம கீதே நீனே என்ற எஸ்.பி.பீயின் கன்னடப்பாடல் தமிழுக்கு வரும் பொழுது "தேவன் தந்த வீணை" என்று ஜானகியும் ஜெயச்சந்திரனும் பாடினார்கள்.//

இந்த பாடல் தமிழில் திரு.ஜெயச்சந்திரன் பாடியதா? எஸ்.பி.பி என்று எனக்கு நினவு தவறாக இருந்தால் யாரேனும் திருத்துங்களேன். ராகவன் சாருடன் சேர்ந்து என் தலையும் வெடித்துவிடும். ஆந்திரா கொல்டி... அப்படின்னு சொன்னது எஸ்.பி.பி ஐ தான் மதுமிதா அவர்களே. அநியாயமாக சஸ்பென்ஸ் வைத்துவிட்டார்.

said...

//நன்ன ஜீவா நீனே..நன்ன ப்ரேம கீதே நீனே என்ற எஸ்.பி.பீயின் கன்னடப்பாடல் தமிழுக்கு வரும் பொழுது "தேவன் தந்த வீணை" என்று ஜானகியும் ஜெயச்சந்திரனும் பாடினார்கள்.//

இந்த பாடல் தமிழில் திரு.ஜெயச்சந்திரன் பாடியதா? எஸ்.பி.பி என்று எனக்கு நினவு தவறாக இருந்தால் யாரேனும் திருத்துங்களேன். ராகவன் சாருடன் சேர்ந்து என் தலையும் வெடித்துவிடும். ஆந்திரா கொல்டி... அப்படின்னு சொன்னது எஸ்.பி.பி ஐ தான் மதுமிதா அவர்களே. அநியாயமாக சஸ்பென்ஸ் வைத்துவிட்டார்.

said...

இவ்வளவு அருமையாக எழுதிவிட்டு கடைசியில் ஏதோ கூறியுள்ளீர்களே கலட்டி என்று??? அதன் அர்த்தம் என்ன? யாழ்ப்பாணத்தில் கலட்டி என்று ஒரு பிரதேசம் இருப்பதாக ஞாபகம்!