Wednesday, September 27, 2006

சீனியம்மா - சிறுகதை

"ஏல சீனி. இப்ப எப்பிடியிருக்கு? சவுரியந்தானா?" சீனியம்மாவிடம் கேட்டது மாரியம்மா.

சீனியம்மா சென்னைக்குப் போயி கண்ணு ஆப்புரேசன் செஞ்சிட்டு வந்துருக்குல்ல. அதான் ஊருல எல்லாரும் வந்து பாக்காக. புதூரு கொளக்கட்டாங்குறிச்சிதான் சீனியம்மாவுக்குச் சொந்தூரு. மிஞ்சி மிஞ்சிப் போனா தெக்க நாலாரமும் வெளாத்திகொளமும் போயிருக்கும். வடக்க அருப்புகோட்ட. கெழக்க சாத்தூரு. இதத் தாண்டி எங்க போயிருக்கு. அதான் இப்பச் சென்னைக்குப் போயிட்டு வந்துருக்கே.

"இப்ப நல்லாத் தெரியுது மாரி. ஒரு வாரத்துக்கு டாக்குடரு மூடுன மானிக்கி இருக்கனுன்னு சொல்லீருக்காரு. தோட்டந் தொரவு போய்ப் பாக்க முடியாது. இப்பிடி வீட்டுக்குள்ளயே கெடக்க வேண்டியிருக்கு." சொகமா அலுத்துக்கிருச்சி சீனியம்மா.

"அட இதென்ன பச்சத்துணி போட்டுல்ல மூடீருக்கு. இதத் தொறக்கக் கூடாதாக்கும்......" இழுவ எசக்கிதான். வேறாரு.

"இவ ஒரு இவ. பெரிய படிச்ச டாக்குடரு சொன்னா சும்மாவா இருக்கும். கூரில்லாமக் கேக்கியே? நம்ம அழகரு சென்னப் பட்டணத்துல இருக்கப் போயி சரியாப் போச்சு. இல்லீன்னா செலவுக்கு எங்க போக? சாத்தூரு டாக்குடரு கிட்டதாம் போகனும். ஆனாலும் பட்டணம் பட்டணந்தேன்." பெருமதான் சீனியம்மாவுக்கு. பின்னே மகன் வயுத்துப் பேரன் அழகருதான கூட்டீட்டுப் போயி பெரிய ஆசுப்பித்திரீல கண்ணு மருந்து காட்டி ஆப்புரேசன் செலவு செஞ்சது. மாரி மகன் அருப்புக்கோட்ட மில்லுல சூப்பருவைசருதான. எசக்கிக்கு மகதான். அவளையும் உள்ளூருல குடுத்துருக்கு. இவுக எங்க பட்டணம் போயி.....அந்தப் பெருமதான் நம்ம சீனியம்மாவுக்கு.

"இந்தால...பட்டணம் நாங்க எங்க பாக்க? என்னென்ன பாத்தன்னு சொல்லு. கேட்டுக்கிருதோம்." மாரியம்மா எறங்கி வந்துருச்சி. வெவரம் கேக்குறதுல்ல ரொம்பக் கெட்டிக்காரி மாரி.

"அதயேங் கேக்க மாரி. நம்மூருல பஸ்சு வர்ரதே பெரிய பாடு. அங்கன எங்கன பாத்தாலும் பிளசருதாம் போ. சர்ரூ சர்ரூன்னு போகுது. அழகரு வீட்டுலதான் தங்கீருந்தேன். கூடக் கூட்டாளிக ரெண்டு பயலுக. பாட்டி பாட்டீன்னு பாசமாக் கூப்புட்டானுக. கூட வேல பாக்குற பயலுகளாம். நல்லபடியாப் போயிருந்தா பொங்கிப் போட்டுருப்பேன். பாவம் கெளப்புக் கடைலயே எப்பவும் திங்கானுக. நம்ம சொருணந்தான் ரெண்டு நாளைக்குச் செஞ்சு போட்டா. (சொருணம் அழகரப் பெத்தவ. சீனியம்மாவோட மகன் வெள்ளச்சாமியக் கட்டுனவ.) நல்லாருக்கு நல்லாருக்குன்னு ருசிச்சி ருசிச்சி சாப்புட்டானுக. பாவம் யாரு பெத்த புள்ளைகளோ!"

"அது கெடக்கட்டும். ஆசுபித்திரி எப்பிடி? வீட்டுக்குப் பக்கத்துலயா?" எசக்கிக்கு வந்த சந்தேகம்.

லேசா முக்கி மொணங்குச்சு சீனியம்மா. "க்கூம். ஆசுபித்திரி ஒரு மூலைல. வீடு ஒரு மூலைல. புதூருலயிருந்து நாலாரம் போயி அங்கேருந்து வெளாத்திகொளம் போயி இன்னும் தெக்கால போற தூரம். கொஞ்சம் போனா குறுக்குச்சாலயே வந்துரும் போல. அம்புட்டு தூரம். அதுவும் ஆட்டோவுல கூட்டீட்டுப் போனான். ஆட்டோ ஆட்டுன்னு ஆட்டீருச்சு. லேசா கக்க வந்தது. கண்ண மூடிட்டுப் பல்லக் கடிச்சிட்டுப் போயிட்டேன்.

பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய ஆசுபித்திரி மாரி. அஞ்சாறு மாடியிருக்கும். அடேங்கப்பா...நிமுந்து பாத்தா கழுத்து வலிக்கு. உள்ள போனா ஆளு வெச்சித் தரையத் தொடச்சிக்கிட்டே இருக்காங்க. அப்பிடித் தொடைக்கங்காட்டிதான் தரை வழுவழூன்னு இருக்கு. ஆசுபித்திரி நடத்துறவக வெளிநாட்டுக்காரக போல. ஏன்னா அழகரு அவுககிட்ட இங்குலூசு பேசுனான். அவுக கிட்டப் பேசப் பயந்து கிட்டுத்தேன் நானு தலையத் தலைய ஆட்டுனேன். அதுவும் அவகளுக்குச் சிரிப்புதாம் போ.

அங்கன ஒருத்தி எந் தண்டட்டியப் புடிச்சிப் பாக்கா. என்னவோ பட்டிக்காட்டன் முட்டாய்க் கடையப் பாத்தாப்புல.

அத விடு. அங்க ஒரு பெரிய தெராசு இருக்காத்தா. ஒரே வேளைல நாலஞ்சு பேர நிப்பாட்டி நிறுக்கலாம். அத்தாம் பெருசு. அடிக்கடி அதுல ஆளுகள எட போட்டுப் பாத்தாக. நாம் போனதுங் கூட மொதல்ல என்ன எட பாத்தாக. ரெண்டு நாளு கழிச்சிப் பொறப்படும் போதும் எட பாத்துத்தான் விட்டாக. அவ்வளவு பதமா எதமா பாத்துக்கிட்டாக. எட பாக்கைல அப்பிடியே ஜிவ்வுங்குது. பெரிய தராசுல்ல. நான் அழகரு கையப் பிடிச்சிக் கிட்டேன்.

அங்கனயே ரூம்புல சாப்பாடு. உள்ளயே படுக்கச் செய்ய வசதி. பளபளக் கக்கூசு. பெரிய பதவிசாத்தா....."

மாரியம்மாவும் எசக்கியும் இதெல்லாங் கேட்டுக் கெறங்கிப் போனாக. சீனியம்மா சொன்னத வெச்சிப் பாத்தா ஆசுபித்திரி கட்டபொம்மங் கட்டுன அரமண கெணக்கா இருக்கனுமுன்னு நெனச்சிக்கிட்டாக. அந்த ஆசுபித்திரிக்கு ஒரு வாட்டியாச்சும் போய்ப் பாக்கனுமுன்னு மனசுக்குள்ள இருக்கங்குடி மாரியாத்தாளுக்கு நேந்துக்கிருச்சி எசக்கி. மூனாவது பொறக்கப் போற பேரனுக்கோ பேத்திக்கோ இருக்கங்குடீல மொட்டையெடுத்து காது குத்தி கெடா வெட்டனுமுன்னு நேந்துக்கிருச்சி. இல்லைன்னாலும் எல்லா அங்கதான் செய்யுறது.

ரெண்டு பேருங் கொஞ்ச நேரம் சீனியம்மாகிட்ட பேசீட்டுப் பொறப்பட்டாக. அப்பப் பாத்து வந்தான் அழகரு. வட்டக் கெணத்துல குளிச்சிட்டு துண்டக் கெட்டிக்கிட்டு வந்தான். திண்ணைல வெச்சிக் கெழவிக அவனப் பிடிச்சிக்கிட்டாக.

"எய்யா அழகரு. ஒங்க ஐயாளம்மாவ ஆசுபித்திரில போனப்பயும் வந்தப்பயும் பெரிய தெராசுல எட பாத்தாகளாமுல. என்ன எடையாம்? எம்புட்டுக் கூடிச்சாம்? கொறஞ்சுச்சாம்?" கேட்டது வெவரம் மாரியம்மா.

"அது தெராசில்ல பாட்டி. அது லிஃப்டு. அது மேல போகும். கீழ வரும்."

"இவன் ஒருத்தன் வெவரம் புரியாம. அதுதான் தெராசு. அதத்தான சீனி சொல்லுச்சு. தெரியலைன்னா தெரியலைன்னு சொல்லுல. சரி. வர்ரோம். நேரமாச்சு. வீட்டுப் பக்கம் வர்ரது. சுடுகருவாரு சுட்டுத்தர்ரேன்...." கிழவிக ரெண்டும் சொல்லீட்டு நகந்து போய்க்கிட்டேயிருந்தாக. அழகருதான் செலயா நின்னான்.

அன்புடன்,
கோ.இராகவன்

22 comments:

said...

என்னங்க ஒரு வாரம் கழிச்சு போட்டுட்டீங்க???

கதை அட்டகாசமா இருக்கு... இந்த வட்டார மொழிதான் நமக்கு வர மாட்டேங்குது...

நீங்க பட்டயக்கெளப்பறீங்க!!!

said...

இராகவன்,
அருமையான கதை. கிராமிய வாசனையுடன் சொல்லியுள்ளதால் மிகவும் சுவையாகவுள்ளது. சொன்னால் நம்புவீர்களோ தெரியாது, இக் கதையைப் வாசித்த போது என் சின்ன வயது ஞாபகம்தான் வந்தது. நானும் ஈழத்தில் ஒரு பழமை வாய்ந்த ஊரில் பிறந்து வளர்ந்தவன்.சின்னப் பெடியனாக இருந்த போது முதல் முறையாக யாழ்ப்பாணப்பட்டினம்[நகரம்] சென்ற போது சீனியம்மா மாதிரித்தான் வியப்புற்றேன்.

//"எய்யா அழகரு. ஒங்க ஐயாளம்மாவ ஆசுபித்திரில போனப்பயும் வந்தப்பயும் பெரிய தெராசுல எட பாத்தாகளாமுல. என்ன எடையாம்? எம்புட்டுக் கூடிச்சாம்? கொறஞ்சுச்சாம்?" கேட்டது வெவரம் மாரியம்மா.

"அது தெராசில்ல பாட்டி. அது லிஃப்டு. அது மேல போகும். கீழ வரும்."

"இவன் ஒருத்தன் வெவரம் புரியாம. அதுதான் தெராசு. அதத்தான சீனி சொல்லுச்சு. தெரியலைன்னா தெரியலைன்னு சொல்லுல. சரி. வர்ரோம். நேரமாச்சு. வீட்டுப் பக்கம் வர்ரது. சுடுகருவாரு சுட்டுத்தர்ரேன்...." கிழவிக ரெண்டும் சொல்லீட்டு நகந்து போய்க்கிட்டேயிருந்தாக. அழகருதான் செலயா நின்னான்.//

ஹி ஹி... விழுந்து விழுந்து சிரிக்க வைச்ச வரிகள்.

said...

நடை மொழி வழக்கு எல்லாம் சூப்பர். கதையில பெருசா ஏதாச்சும் இருக்குமோன்னு எதிர்பார்த்தேன்.

மெசேஜ் ஏதாச்சும் சொல்றீங்கன்னா புரியல.

சுவாரஸ்யத்துக்குத்தான்னா அவ்வளவாயில்ல.

said...

//வெட்டிப்பயல் said...

என்னங்க ஒரு வாரம் கழிச்சு ோட்டுட்டீங்க??? //

வெட்டி, ஒவ்வொரு வாட்டியும் போட்டி வெக்கும் போது எழுதுறதுதான். ஆனா போட்டிக்கு அனுப்புறதில்லை. மரணத்துக்கும் உறவுக்கும் கூட எழுதினேன். கருவுல இருந்த திருப்தி கதையில இல்ல. ஆகையால அனுப்புல. இந்தக் கதைல லேசான ஒரு திருப்தி. ஆகையால இங்க போட்டாச்சு.

// கதை அட்டகாசமா இருக்கு... இந்த வட்டார மொழிதான் நமக்கு வர மாட்டேங்குது...

நீங்க பட்டயக்கெளப்பறீங்க!!! //

நன்றி. அட்டகாசம்னு சொல்ல மாட்டேன். தெக்கத்தி வாசத்தக் கொண்டு வரப் பாத்திருக்கேன். ஓரளவு வந்திருக்குன்னே சொல்லனும்.

said...

// வெற்றி said...

இராகவன்,
அருமையான கதை. கிராமிய வாசனையுடன் சொல்லியுள்ளதால் மிகவும் சுவையாகவுள்ளது. சொன்னால் நம்புவீர்களோ தெரியாது, இக் கதையைப் வாசித்த போது என் சின்ன வயது ஞாபகம்தான் வந்தது. நானும் ஈழத்தில் ஒரு பழமை வாய்ந்த ஊரில் பிறந்து வளர்ந்தவன்.சின்னப் பெடியனாக இருந்த போது முதல் முறையாக யாழ்ப்பாணப்பட்டினம்[நகரம்] சென்ற போது சீனியம்மா மாதிரித்தான் வியப்புற்றேன். //

பொதுவாகவே புது இடத்திற்குப் போகின்றவர்களுக்கு உண்டாகும் வியப்புதான் சீனியம்மாவிற்கு. உங்கள் நினைவைச் சீனியம்மா தூண்டியது மகிழ்ச்சியாக இருக்கிறது.

// //"எய்யா அழகரு. ஒங்க ஐயாளம்மாவ ஆசுபித்திரில போனப்பயும் வந்தப்பயும் பெரிய தெராசுல எட பாத்தாகளாமுல. என்ன எடையாம்? எம்புட்டுக் கூடிச்சாம்? கொறஞ்சுச்சாம்?" கேட்டது வெவரம் மாரியம்மா.

"அது தெராசில்ல பாட்டி. அது லிஃப்டு. அது மேல போகும். கீழ வரும்."

"இவன் ஒருத்தன் வெவரம் புரியாம. அதுதான் தெராசு. அதத்தான சீனி சொல்லுச்சு. தெரியலைன்னா தெரியலைன்னு சொல்லுல. சரி. வர்ரோம். நேரமாச்சு. வீட்டுப் பக்கம் வர்ரது. சுடுகருவாரு சுட்டுத்தர்ரேன்...." கிழவிக ரெண்டும் சொல்லீட்டு நகந்து போய்க்கிட்டேயிருந்தாக. அழகருதான் செலயா நின்னான்.//

ஹி ஹி... விழுந்து விழுந்து சிரிக்க வைச்ச வரிகள். //

நன்றி வெற்றி. அது சீனியம்மாவின் வெற்றி.

said...

// சிறில் அலெக்ஸ் said...

நடை மொழி வழக்கு எல்லாம் சூப்பர். கதையில பெருசா ஏதாச்சும் இருக்குமோன்னு எதிர்பார்த்தேன்.

மெசேஜ் ஏதாச்சும் சொல்றீங்கன்னா புரியல. //

சிறில் எங்கிட்ட மெசேஜ் எல்லாமா எதிர் பாக்குறது :-)))))))))))

// சுவாரஸ்யத்துக்குத்தான்னா அவ்வளவாயில்ல. //

எனக்கும் அதே எண்ணந்தான். ஆனால் சீனியம்மா பாத்திரம் இன்னும் மெருகேற்றப்பட வேண்டியது. இந்தப் பாத்திரம் இன்னும் நிறைய கற்பனைகளைக் கொண்டு தருகிறது. இவரை வைத்தே சிறுகதைகளும் பெருங்கதைகளும் எழுதலாம் என்று தோன்றுகிறது. பார்க்கலாம். சீனியம்மா எனக்கு எவ்வளவு உதவுகின்றார் என்று.

said...

// அந்த ஆசுபித்திரிக்கு ஒரு வாட்டியாச்சும் போய்ப் பாக்கனுமுன்னு மனசுக்குள்ள இருக்கங்குடி மாரியாத்தாளுக்கு நேந்துக்கிருச்சி எசக்கி. மூனாவது பொறக்கப் போற பேரனுக்கோ பேத்திக்கோ இருக்கங்குடீல மொட்டையெடுத்து காது குத்தி கெடா வெட்டனுமுன்னு நேந்துக்கிருச்சி. இல்லைன்னாலும் எல்லா அங்கதான் செய்யுறது.//

ரசித்துப் படித்தேன் :-)

சீனியம்மாவின் அடுத்த அவதாரம் எப்போ??

said...

//"எய்யா அழகரு. ஒங்க ஐயாளம்மாவ ஆசுபித்திரில போனப்பயும் வந்தப்பயும் பெரிய தெராசுல எட பாத்தாகளாமுல. என்ன எடையாம்? எம்புட்டுக் கூடிச்சாம்? கொறஞ்சுச்சாம்?" கேட்டது வெவரம் மாரியம்மா.//

தெக்கத்தி வட்டார வழக்கில நீங்க சிறுகதை எழுதியிருக்கிறது நல்லாருக்கு. மேலே உள்ள வரிகளைப் படிச்சதும் ஒரு படத்துல செந்தில் "மேலே போற கரெண்ட் கம்பியை அறுத்தா அதுக்குள்ளேருந்து நெறைய சீமை எண்ணை கெடைக்கும்"னு சொல்லற டயலாக் ஞாபகம் வந்துச்சு.
:)

said...

நல்ல கதை இராகவன். ரொம்ப நாளாச்சு நீங்க இப்படி கதை எழுதிப் படிச்சு. அதுவும் வட்டார வழக்குல. இதுக்கு முன்னாடி எழுதுன கதை காரைக்கால் அம்மையைப் பத்தித் தானே. அடுத்து ஒளவையாரைப் பத்தியா எழுதப்போரீங்க? :-)

இந்த மேல போறது கீழ வர்றது தராசு தான்கறது உங்க சொந்த அனுபவத்துலப் பட்டதா? இல்லை கற்பனை தானா?

said...

இந்த மேல போறது கீழ வர்றது தராசு தான்கறது உங்க சொந்த அனுபவத்துலப் பட்டதா? இல்லை கற்பனை தானா? //

அதானே..

சரி.. கதையில இன்னும் கொஞ்சம் சத்து சேத்துருக்கலாமோன்னு தோனுது..

வெறும் லிஃப்ட்டுக்காக ஒரு கதையான்னு தோனிருச்சி கடைசியில..

குமுதத்துல வர்ற ஒரு பக்க கதை மாதிரி இருக்கு..

இருந்தாலும் நடை நல்லாருக்கு..

said...

சினிமாவிற்கு போன சித்தாள் மாதிரியா?

said...

ராகவன்

மாமியார் ஊருக்கு போய்ட்டு வந்த மாதிரி இருக்கு உங்க நடை.. சீனியம்மா பிரபலாமான பெயர் அங்க குறிஞ்சாகுளம்.. இந்த ஊர தெரியாதவங்க இருக்க மாட்டாங்க.. நீங்க அந்தப்பக்கம்னா தெரிஞ்சிறுக்கும் திருமணம் ஆன புதுசுல, இந்த கொளக்கட்டாங்குறிச்சி ஊர் பேர கேட்டு அப்பிடி சிறிச்சேன்..

நல்லா இருக்கு

மங்கை

said...

என்னமோ மிஸ்ஸிங் ஜிரா. ஒரு முழுக்கதை படிச்சா மாதிரி இல்லை. ஆனா நம்ம ஊரு வாசம். நல்ல நின்னு ரசிச்சேன் போங்க.

said...

வட்டார வழக்கு வலிஞ்சு வராம இயல்பாத்தான் இருக்கு ராகவன்.

சீனியம்மா இப்ப நல்லா இருக்கா?

இன்னொரு கதையிலே அவுங்களைப் பார்க்கணுமுன்னு 'நேர்ந்துக்கிட்டு' இருக்கேன்:-)

said...

// சுதர்சன்.கோபால் said...

ரசித்துப் படித்தேன் :-)

சீனியம்மாவின் அடுத்த அவதாரம் எப்போ?? //

சீனியம்மா இனிமே வருவாங்க...அடிக்கடி வருவாங்க...அடுத்த அவதாரமா...அடுத்து யாராவது போட்டி வெச்சாச் சொல்லுங்க...எழுதீருவோம்.

said...

// கைப்புள்ள said...

//"எய்யா அழகரு. ஒங்க ஐயாளம்மாவ ஆசுபித்திரில போனப்பயும் வந்தப்பயும் பெரிய தெராசுல எட பாத்தாகளாமுல. என்ன எடையாம்? எம்புட்டுக் கூடிச்சாம்? கொறஞ்சுச்சாம்?" கேட்டது வெவரம் மாரியம்மா.//

தெக்கத்தி வட்டார வழக்கில நீங்க சிறுகதை எழுதியிருக்கிறது நல்லாருக்கு. மேலே உள்ள வரிகளைப் படிச்சதும் ஒரு படத்துல செந்தில் "மேலே போற கரெண்ட் கம்பியை அறுத்தா அதுக்குள்ளேருந்து நெறைய சீமை எண்ணை கெடைக்கும்"னு சொல்லற டயலாக் ஞாபகம் வந்துச்சு.
:) //

வாங்க கைப்புள்ள...அந்தக் காமெடி கலக்கல் காமெடி...ஏலா...பெரிய பானைய எடுத்தான்னு இவரு கேப்பாரு...கடைசியில ஷாக் அடிச்சு கீழ விழும் போது பாவமா இருக்கும்.

said...

// குமரன் (Kumaran) said...

நல்ல கதை இராகவன். ரொம்ப நாளாச்சு நீங்க இப்படி கதை எழுதிப் படிச்சு. அதுவும் வட்டார வழக்குல. இதுக்கு முன்னாடி எழுதுன கதை காரைக்கால் அம்மையைப் பத்தித் தானே. அடுத்து ஒளவையாரைப் பத்தியா எழுதப்போரீங்க? :-) //

ஏன் இப்படிக் கேக்குறீங்க? ஔவையார வெச்சு எழுதுறதுக்கு நெறையப் பேர் இருக்காங்க. அதுனால இல்ல. இந்தக் கேள்விய எதனால கேட்டீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா?

// இந்த மேல போறது கீழ வர்றது தராசு தான்கறது உங்க சொந்த அனுபவத்துலப் பட்டதா? இல்லை கற்பனை தானா? //

என்னங்க இது...லிப்டுன்னா அள மேலயும் கீழயும் கொண்டு போறதுன்னு எனக்குத் தெரியாதா! சின்னப்புள்ளைல வேணா தெரியாம இருந்திருக்கலாம். இது சீனியம்மாவோட அனுபவங்க....உண்மையச் சொல்லனும்னா சீனியம்மான்னு பாத்திரம் வெச்சாலும் இதுக்கு இன்ஸ்பிரேஷன் எங்க தாத்தாக்கள்ள ஒருத்தர். ரொம்பக் காமெடி செஞ்சிக்கிட்டேயிருப்பாரு..இப்படித்தான் ஏதாவது. அவரை இன்ஸ்பிரேஷனா வெச்சி எழுதுனதுதான் இந்தக் கதை. சின்ன வயசுல கூடையில கோழியுஞ் சேவலும் ஒரு கூடையில போட்டுக் கொண்டு போவாரு. நானெல்லாம் லீவுக்கு ஊருக்குப் போறாளுதான. கூடயே போவேன். வயக்காட்டுக்குள்ள நாகரு இருக்கும். அங்க போயி கோழிக்கும் சேவலுக்கும் வீடுபேறு வாங்கிக் குடுத்துட்டு றெக்கையப் பிச்சி மஞ்சக் குளிப்பாட்டி வீட்டுல கொண்டு வந்து குடுப்பாரு...இந்த மாதிரி காரியங்கள்ள சகலகலா வல்லவரு.

said...

// tbr.joseph said...
சரி.. கதையில இன்னும் கொஞ்சம் சத்து சேத்துருக்கலாமோன்னு தோனுது..

வெறும் லிஃப்ட்டுக்காக ஒரு கதையான்னு தோனிருச்சி கடைசியில..

குமுதத்துல வர்ற ஒரு பக்க கதை மாதிரி இருக்கு..

இருந்தாலும் நடை நல்லாருக்கு.. //

நன்றி சார். இந்தப் பாத்திரம் இன்னமும் மெருகேறனும். ஏறும். அப்ப உங்களுக்குப் பிடிச்ச மாதிரி எழுதுறேன் சார்.

said...

// மங்கை said...

ராகவன்

மாமியார் ஊருக்கு போய்ட்டு வந்த மாதிரி இருக்கு உங்க நடை.. சீனியம்மா பிரபலாமான பெயர் அங்க குறிஞ்சாகுளம்.. இந்த ஊர தெரியாதவங்க இருக்க மாட்டாங்க.. நீங்க அந்தப்பக்கம்னா தெரிஞ்சிறுக்கும் திருமணம் ஆன புதுசுல, இந்த கொளக்கட்டாங்குறிச்சி ஊர் பேர கேட்டு அப்பிடி சிறிச்சேன்..

நல்லா இருக்கு //

வாங்க மங்கை..குறிஞ்சாகுளம் தெரியாதா...என்னங்க இப்படிச் சொல்லீட்டீங்க... :-) கடைசியில ரொம்பப் பக்கத்து ஊராப் போயிட்டீங்க. இந்த ஊருகள்ளாம் தூத்துக்குடி மாவட்டந்தான்.

// ENNAR said...

சினிமாவிற்கு போன சித்தாள் மாதிரியா? //

அத நான் படிச்சதில்லையே என்னார்.

said...

// இலவசக்கொத்தனார் said...

என்னமோ மிஸ்ஸிங் ஜிரா. ஒரு முழுக்கதை படிச்சா மாதிரி இல்லை. ஆனா நம்ம ஊரு வாசம். நல்ல நின்னு ரசிச்சேன் போங்க. //

உண்மைதான் கொத்ஸ். அதுனாலதான் போட்டியிலயும் போடலை. ஆனாலும் சீனியம்மாவுக்கு புகழ் வாங்கிக் குடுத்தே தீர்ரதுன்னு வலைப்பூவுக்கு அறிமுகப் படுத்தியிருக்கேன். பாக்கலாம். எவ்வளவு கலக்குறாங்கன்னு.

// துளசி கோபால் said...

வட்டார வழக்கு வலிஞ்சு வராம இயல்பாத்தான் இருக்கு ராகவன்.

சீனியம்மா இப்ப நல்லா இருக்கா?

இன்னொரு கதையிலே அவுங்களைப் பார்க்கணுமுன்னு 'நேர்ந்துக்கிட்டு' இருக்கேன்:-) //

வருவாக டீச்சரு. கண்டிப்பா வருவாக...கருசக்காட்டுக்குள்ளயே இருந்தாப் பத்துமா? கம்பூட்டருக்கும் எட்டிப் பாத்தாதான நல்லது கெட்டது தெரியும்னு வெவரம் மாரியம்மா சொல்றாங்க.

said...

இராகவன் அண்ணா! கதையை விட முக்கியமான விசயம் ஒன்றை இங்கே நான் சொல்லோனும். இந்தப் பேச்சு வழக்குத் தமிழ் எனக்கு புரிய மிகவும் கடினமாக இருந்தது. இப்போ புரியுது ஈழத்தமிழர் தமிழை வாசிக்கையில் எவ்வளவு கஷ்டப்படுவீங்கண்டு ;) இது எந்தப் பிரதேச பேச்சு வழக்கு... சென்னைத் தமிழ் என்றால் நல்லாப்புரியும் காரணம் தமிழ் சினிமாதான் ;D

said...

// மயூரேசன் Mayooresan said...
இராகவன் அண்ணா! கதையை விட முக்கியமான விசயம் ஒன்றை இங்கே நான் சொல்லோனும். இந்தப் பேச்சு வழக்குத் தமிழ் எனக்கு புரிய மிகவும் கடினமாக இருந்தது. இப்போ புரியுது ஈழத்தமிழர் தமிழை வாசிக்கையில் எவ்வளவு கஷ்டப்படுவீங்கண்டு ;) இது எந்தப் பிரதேச பேச்சு வழக்கு... சென்னைத் தமிழ் என்றால் நல்லாப்புரியும் காரணம் தமிழ் சினிமாதான் ;D //

உண்மைதான் மயூரேசன். ஈழத்தமிழ் சற்று மாறுபட்டிருந்தாலும் அதுவும் எனக்கு ருசிக்கும். :-)

இந்தக் கதையில் பயிலும் வழக்கு தூத்துக்குடி வட்டார வழக்கு. தூத்துக்குடி மாவட்டத்துச் சிற்றூர்களில் புழங்கும் மொழி வழக்கு இது.