நெரி கட்டீருச்சுன்னு சொல்வாங்க. கேள்விப்பட்டிருக்கீங்களா? தூத்துக்குடி மாவட்டத்துல பதவளை கட்டீருக்குன்னு சொல்வாங்க. கைகால்ல எங்கையாவது புண்ணு வந்தா பக்கத்துல எங்கையாவது கட்டிகட்டிக்கிரும். அதத்தான் நெரி கட்டுறதுன்னு சொல்வாங்க. தென்னமரத்துல தேள் கொட்டுனா பனமரத்துல நெரி கட்டுச்சாங்குற சொலவடை ரொம்பவே பிரபலம். அந்த மாதிரி ஒரு தகவல்தான் நான் சொல்லப் போறது.
மூனு வாரத்துக்கு முன்னாடி ஒரு coferenceல் கலந்து கொண்டிருந்தேன். அலுவலகப் பணி தொடர்பாதான். நெறைய மென்பொருள் நிறுவனங்களில் இருந்தெல்லாம் ஆளுங்க வந்திருந்தாங்க. ஒவ்வொருத்தரும் அவங்களுக்குத் தெரிஞ்ச மென்பொருளியல் பத்தி எடுத்து விட்டுக் கிட்டு இருந்தாங்க. மொதல்ல பெரிய பெரிய ஆளுங்க. பல முன்னணி நிறுவனங்கள்ள இருக்குற முன்னணி ஆளுங்க நாலஞ்சு பேருங்க மேடையில பல தகவல்களைச் சொல்லிக்கிட்டு இருந்தாங்க. கோட்டு சூட்டு போட்டுக்கிட்டு ஜம்முன்னு லேப்டாப்கள வெச்சிக்கிட்டு விதவிதமா படம் காட்டிக்கிட்டு இருந்தாங்க.
அப்ப திடீர்னு ஒரு அறிவிப்பு. ஒருத்தர மேடைக்குக் கூப்பிட்டாங்க. ரொம்ப எளிமையா இருந்தார். நல்லாப் படிச்சவருன்னு தெரிஞ்சது. ஆனா ஆளப் பாத்தா அடிச்சிப் போட்ட மாதிரி நொந்து நூலாகி அந்து அல்வாவாகியிருந்தாரு. அவரு இந்த conference நடத்துற அமைப்புக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுக்க வந்திருந்தாரு. அந்த அமைப்பு லாபம் கருதி நடத்தும் அமைப்பு இல்லை. அதற்குக் கண்டிப்பாக நிதி தேவை. ஆனா இவர் ஏன் ஒரு லட்சம் கொடுக்கனும்?
அதையும் அவரே சொன்னாரு. அவரோட பெயரைச் சொல்லலை நான். அவர் ஒரு ஏழைக் குடும்பத்துல இருந்து முன்னுக்கு வந்தவர். அவரோட அப்பா வீடுவீடா டீத்தூளு வித்துக்கிட்டு இருந்தவராம். இவருதான் வீட்டுல ரெண்டாவது. இவருக்கு ஒரு அக்கா. அப்புறம் ரெண்டு தங்கச்சிங்க. கடைசியா ஒரு தம்பி. இவருக்கும் இவரு தம்பிக்கும் கிட்டத்தட்ட பத்துப் பன்னிரண்டு வயசுக்கும் மேலயே வித்யாசம். இவரு படிக்கிறதுக்காக இவருக்கு இவங்க அக்கா படிப்பை விட்டுட்டு வேலைக்குப் போனாங்க. இவரும் படிச்சாரு. நல்லாவே படிச்சாரு. வெளிநாடெல்லாம் போனாரு. குடும்பமும் முன்னேறிச்சு. மாசத்துக்கு முப்பது நாளும் ஏரோப்பிளேன்ல பறக்குற அளவுக்குப் பெரிய ஆளானாரு. தங்கச்சி தம்பிகள படிக்க வெச்சாரு. எல்லாரும் நல்லா வந்தாங்க.
கடைசித் தங்கச்சியும் தம்பியும் மென்பொருள் துறைக்குள்ள நொழைஞ்சாங்க. அதுலயும் அந்தத் தம்பி ஷஷாங்க் ரொம்பவே புத்திசாலியாம். அண்ணனுக்கும் அவனுக்கும் வயசு வேறுபாடு நிறைய இருந்தாலும், வெளிநாட்டுல இருந்தாலும் நல்ல நெருக்கமா இருந்து தெரிஞ்சிக்க வேண்டிய உலக நடப்புகளத் தெரிஞ்சிக்கிட்டு நல்லா படிச்சானாம். Wipro நிறுவனத்துல வேலை கெடச்சு நல்ல வேலையும் செஞ்சானாம்.
அவனுக்கும் வெளிநாட்டுக்குப் போறதுக்கு வாய்ப்பு வந்தது. அவன் வேல பாக்குற கம்பெனியில இருந்து. அமெரிக்கா அவனையும் வரவேற்றது. அவன் அங்கு சென்ற நிறுவனம் WTC கட்டடத்தில் இருந்தது. அவன் தலையெழுத்து. அந்த 9/11 கோரச்சம்பவம் நடந்தது. ஷஷாங்கின் கதை அத்தோடு முடிந்தது. ஆனால் அவனது குடும்பத்தின் கதை?
செய்தியைக் கேட்டு மயங்கி விழுந்தாராம் அவனது தாய். அத்தோடு சரி. இன்னும் மனநிலை தெளியாமல் ஒரு நடைப்பிணமாக வீட்டுக்குள்ளேயே இருக்கிறார். அந்தச் சம்பவத்திற்குப் பிறகு அவர் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. அறுபதுகளில் இருக்கும் அவரது தோற்றம் தொன்னூறுகளில் இருப்பவரைப் போல மாறிவிட்டது. தந்தையோ எப்படியோ உயிரைப் பிடித்துக் கொண்டு மனைவிக்காக இருக்கிறார்.
இவரால் அதற்கு மேல் தாய் தந்தையரை விட்டு இருக்க முடியவில்லை. இந்தியாவிற்குத் திரும்பி விட்டார். ஒரு நல்ல நிறுவனத்திலும் வேலைக்குச் சேர்ந்தார். ஆனால் நிம்மதி? ஷஷாங்கை உலகிலிருந்து அழிக்கத் தீவிரவாதம் என்ற ரப்பர் இருந்தது. ஆனால் இவர்கள் மனதிலிருந்து அழிக்க எந்த ரப்பரையும் எந்த மதத்து ஆண்டவனும் அருளவில்லை. அவன் ஓரிறைவனாக இருந்தாலும் சரி. முப்பத்து முக்கோடி தேவர்களாயும் அவர்களுக்கும் மேலான ஆதிசிவனாக இருந்தாலும் புத்தனாய், அருகனாய் எத்தனை பேரானாலும் சரி.
ஷஷாங்க் எங்கெல்லாம் மகிழ்ந்திருந்தானோ, ஷஷாங்கோடு எவையெல்லாம் தொடர்புடையனவோ அங்கெல்லாம் ஷஷாங்கின் பெயரில் ஏதாவது செய்யத் தொடங்கினார்கள். அவன் படித்த பள்ளிக்கு வகுப்பறைகள். கல்லூரியில் வகுப்பறைகள். அவன் பெயரில் ஒரு கல்வி அறக்கட்டளை. அவன் பணி செய்த மென்பொருள் தொடர்பான உதவிகள். அந்த வகையில்தான் ஒர் லட்ச ரூபாய் நிதியுதவி. இப்படி ஷஷாங்கோடு தொடர்பு கொண்டிருந்த ஒவ்வொன்றையும் தேடித் தேடி ஷஷாங்கைத் தேடிக் கொண்டிருக்கிறது அந்தக் குடும்பம்.
தீவிரவாதத்தை எதிர்ப்பது என்பது தனக்குப் பிடிக்காதவர்களை எதிர்ப்பது மட்டுமே என்று வலைப்பூ வரைக்கும் வந்துவிட்ட நிலையில், அடுத்தவனைச் சொன்னியா...என்னயச் சொல்ல வந்துட்ட போன்ற எண்ணங்களுமே.......அடுத்தவன் எப்படியிருந்தால் என்ன...நான் நல்லவனாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் எப்பொழுது எல்லாருக்கும் வருமோ!
ஒவ்வொரு மதத்திலும் இருக்கின்றவர்களுக்கு ஒரு வேண்டுகோள். குறிப்பாக தங்கள் மதமே சிறந்தது என்று நம்புகின்ற மனிதர்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்களது மதமே சிறந்ததாக இருக்கட்டும். உங்களது மதத்தை அமைதி வழியில் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது. நீங்கள் எதிர்க்காவிட்டாலும் பரவாயில்லை. உங்களோடு உள்ள குற்றவாளிகளை ஆதரிக்காதீர்கள். அடுத்தவன் ஒழுங்கா என்று கேட்பது மிக எளிது. நாம் ஒழுங்கு என்று அடுத்தவனை நம்ப வைப்பது மிகக் கடினம். நான் சொல்ல வந்தது என்னவென்று எல்லாருக்கும் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். புனிதப் பசுவோ, புனிதமில்லாத கொசுவோ...தோன்றியதைச் சொல்லி விட்டேன்.
வேதனையுடன்,
கோ.இராகவன்
Subscribe to:
Post Comments (Atom)
25 comments:
---- புனிதப் பசுவோ, புனிதமில்லாத கொசுவோ...தோன்றியதைச் சொல்லி விட்டேன் ----
நச்ச்ச்ச்ச்....
தற்சமயம் நாட்டுக்குத் தேவையான கருத்துகளோடு கூடிய கட்டுரை.
வாழ்க...வளர்க
மனிதர்களே,
ஜாதி, மதம் பார்த்து தீவிரவாதத்தை ஆதரிக்காதீர்கள். அது உங்கள் ஜாதிக்கும், மதத்துக்கும் நீங்கள் செய்யும் துரோகம். சாகும் ஒவ்வொரு அப்பாவிக்கும் ரத்தம் சிவப்பு நிறம் தான். நம்மைபோல் அவனும் பிள்ளை குட்டிக்காரன் தான்.
வேதனையை பகிர்ந்து கொள்ளும்
செல்வன்
நல்ல பதிவுங்க ஒவ்வொரு மனுஷனுக்கு அவனவன் ஈகோ தான் முக்கியம் ஆக தனக்குத் தெரிந்தது படி தான் எல்லாம் நடக்குது ஆக நான் தான் சரி என்று தான் கடைசி வரை இருப்பார்கள். இறை தேடுவது பற்றி கவலை இல்லை இவர்களுக்கு தன் ஈகோவுக்கு இரை தேடுவது பற்றித் தான் கவலை.
மனுஷன் ஒவ்வொருத்தனும் ஈகோவைக் குறைத்துக் கொண்டாலே பாதிப் பிரச்சனைகள இருக்காது.
ராகவா,
அருமையான எழுத்துநடையில் நல்ல கருத்தை வலியுறுத்தி உள்ளீர்கள்.
//கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது. நீங்கள் எதிர்க்காவிட்டாலும் பரவாயில்லை. உங்களோடு உள்ள குற்றவாளிகளை ஆதரிக்காதீர்கள். அடுத்தவன் ஒழுங்கா என்று கேட்பது மிக எளிது. நாம் ஒழுங்கு என்று அடுத்தவனை நம்ப வைப்பது மிகக் கடினம்.//
சுடும் நிஜம் ராகவன். சுலபமா கேட்டு விடுகிறோம் அவன் பண்ணான் இல்ல நான் ஏன் பண்ணக்கூடாதுன்னு.
ராகவன்.. நல்ல பதிவு..பதிவுடன் முழுவதும் உடன்படுகிறேன்..
அப்பாவிகளை கொல்லும்/துன்புருத்தும் எந்த செயலும் எங்கும், எந்த நிலையிலும் ஏற்றுக்கொள்ள தக்கது அல்ல.
//அடுத்தவன் எப்படியிருந்தால் என்ன...நான் நல்லவனாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் எப்பொழுது எல்லாருக்கும் வருமோ!//
வேதனையான உண்மை.
சக மனிதரிடத்தில் அன்பு காட்ட, அடுத்தவர் நம்பிக்கையை மதிக்கத் தெரிந்த சமூகம் எப்பொழுது வருமோ??
ராகவா!
மிகத் தேவையான கருத்து; எந்த இறைவனும் மற்றவருக்குக் துன்பம் கொடுக்கும்படி கூறவில்லை.
"பக்கத் திருப்பவன் துன்பம் பார்க்கப் பொறாதவன் புண்ணியமூர்த்தி"
வன்முறையைக் கையிலெடுக்கும் அனைவரும் உணரவேண்டும்.
யோகன் பாரிஸ்
பெங்களூரில் நெறி என்றிருந்திருக்கலாம் தலைப்பு... அந்தப் பெரியவர் மிகப் பெரிய நீதிநெறியைத்தானே உணர்த்திச் சென்றிருக்கிறார்... அவருக்கும் அவர்தம் குடும்பத்திற்கும் மனநிம்மதி கிடைக்க இறையருள் உதவட்டும்.
நாமும் மதப்பிணக்கின்றி வாழ்வோம்
இங்கே மதம் பிடித்து அலைவது யானைகள் அல்ல மனிதர்கள் தான் என எங்கோ படித்தது நினைவிற்குவருகிறது...தீவிரவாதம் எதனால் ஒருவருடைய மனதை ஆக்கிரமித்து அநியாய செயல்களைச் செய்யத்தூண்டுகிறது? வன்மம் பழிவாங்கும் உணர்ச்சி, பகைமை, பொறாமை இவைகளால்தானே? இவை வளர்ப்பினால் வந்தவைகள் என்றால் அதற்கு யார் பொறுப்பு? விஷத்தை வேரிலேயே கிள்ளி எறியாமால் விருட்சமாகி வளர்த்துவிட்டது யார்?தீவிரவாதச் செயலினால் எத்தனன அப்பாவிகள் உயிர்பலியாகி, அவர்களது இழப்பில் குடும்பம் நடைப்பிணமாய்த் தவிக்க நேரிடுகிறது? விடை தெரியாத வெறும் கேள்விகளே வாழ்க்கை என்றாகிவிட்டதா?
ராகவன்!
மனதை நெகிழவைக்கும் கட்டுரைஎழுதி இருக்கிறீர்கள்..
ஷைலஜா
காயம் பட்டவன் காயப்படுத்தினவனை அடிக்கிறான். அவன் ஓங்கும் கை எத்தனை தலைகள் மேல் விழுந்துவிட்டது.
ஷஷஆன்கைத் தேடும் அம்மாவுக்கு
யார் பதில் சொல்வது. இங்கேஎயே அந்தப் பிள்ளைக்கு அறிவுத்தீனியும் கிடைத்திருந்தால் அவன் ஏன் அங்கே போகிறான்.
இத்தனை கேள்விகளுக்கும் பதில் சொல்ல மனித மூளைக்குத் தெம்பு இல்லை. தெரிந்ததெல்லாம் பழிக்குப் பழி.
கடல் கொண்டு மூடினாலும் தணியாத எரிமலை தீவிரவாதம்.
பிரார்த்தனை தவிர வேறு வழி தெரியவில்லை.
நெரி கட்டிக் கொள்வது கேட்டு நிறைய நாளாச்சு.
காயமும் வேண்டாம், நெரியும் வேண்டாம்.
மிக நல்ல பதிவு ராகவன் அவர்களே,
நெஞ்சை நெகிழ வைத்தது..
பாலா
//புனிதப் பசுவோ, புனிதமில்லாத கொசுவோ...தோன்றியதைச் சொல்லி விட்டேன்.//
புரியவேண்டியவங்களுக்குப் புரிஞ்சா சரி.
///தீவிரவாதத்தை எதிர்ப்பது என்பது தனக்குப் பிடிக்காதவர்களை எதிர்ப்பது மட்டுமே என்று வலைப்பூ வரைக்கும் வந்துவிட்ட நிலையில், அடுத்தவனைச் சொன்னியா...என்னயச் சொல்ல வந்துட்ட போன்ற எண்ணங்களுமே.......அடுத்தவன் எப்படியிருந்தால் என்ன...நான் நல்லவனாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் எப்பொழுது எல்லாருக்கும் வருமோ!//
அருமையா சொல்லி இருக்கீங்க ராகவன்
அவர பார்கனும்னு இருக்கு இப்போ
மங்கை
ஷஷாங்கின் குடும்பத்தார்க்கு உள்ள நன்மனதைப் பாருங்கள்! தீவிரவாதத்துக்கு எதிராகக் களம் இறங்கவோ, இல்லை இந்த வேதனையான நிகழ்வை ஒரு மதத்துடன் முடிச்சு போட்டோ, செயலாற்றவில்லை.
ஆக்கப்பூர்வமான செயல்களில் தான் தன் செல்வக் குழந்தையின் நினைவைக் குறித்து வைத்துக்கொள்கிறார்கள்!
//நாம் ஒழுங்கு என்று அடுத்தவனை நம்ப வைப்பது மிகக் கடினம்//
உண்மையாகவே தத்தம் மதங்களின் மீதோ இல்லை ஜாதி போன்ற உட்பிரிவுகளின் மீதோ அபிமானம் உள்ளவர்கள், ஒன்று மட்டும் செய்யலாம்.
முதலில் குற்றங்களை heroic act ஆக ஆக்காமல் இருந்தாலே போதும்.
மற்றவர் நம்மைப் பார்த்து, "உங்கள் பிரிவில் இவ்வளவு நல்ல விஷயங்கள் நடக்கிறதா. எப்படித் தான் செய்கிறீர்களோ" என்று ஏங்க வைத்தாலே போதும்! மற்ற மதிப்பு எல்லாம் தானே தேடி வரும்!
வளரும் சமுதாயத்தில் இதை விதைக்க விதைக்கத் தான், பின்னொரு நாளில் அறுவடை காண முடியும்! போர் என்பது சமூகப் பெருமையாக இருந்தது ஒரு காலத்தில்! இப்போது இல்லையே! அதை உருவாக்க முடிந்தது என்றால் இதுவும் முடியும்!!
An eye for an eye will leave the whole world blind!
ம்ம்ம்...ம்ம்..ம்
என்ன சொல்லி என்ன செய்ய..?
i am totally a pessimist in this.
நல்ல கருத்தை நச்சென்று சொல்லி உள்ளீர்கள்.
இராகவன்,
மனதைத் தொடும் பதிவு.
சிறப்பாக பதிவுசெய்துள்ளீர்கள் ராகவன்.
இப்படியொரு நல்ல மனச ஷஷாங்கோட குடும்பத்துக்கு குடுத்த அந்த கடவுளுக்கு நன்றி..
அத வெளிச்சம் போட்டு காட்டின ஒங்களுக்கு நன்றி, நன்றி:)
வழக்கம் போல் நெஞ்சைத் தொட்ட பதிவு உங்களிடமிருந்து
ஜி.ரா. அருமையானக் கட்டுரை.
அருமையான கருத்தை, தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள்...
பாராட்டுக்கள்...
ஷஷாங்கைப் பற்றி முன்பொருமுறை ரிடிப்பில் படித்ததாக நினைவு. நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்துருகும் நிகழ்ச்சி.
//ஒவ்வொரு மனுஷனுக்கு அவனவன் ஈகோ தான் முக்கியம் ஆக தனக்குத் தெரிந்தது படி தான் எல்லாம் நடக்குது ஆக நான் தான் சரி என்று தான் கடைசி வரை இருப்பார்கள். இறை தேடுவது பற்றி கவலை இல்லை இவர்களுக்கு தன் ஈகோவுக்கு இரை தேடுவது பற்றித் தான் கவலை.
மனுஷன் ஒவ்வொருத்தனும் ஈகோவைக் குறைத்துக் கொண்டாலே பாதிப் பிரச்சனைகள இருக்காது.
//
மிகப்பெரும் உண்மை என் எண்ணம்.
Post a Comment