Monday, February 11, 2008

தங்க மரம் - 5

முன்கதைச் சுருக்கம்

கதிரவனின் தாயார் அவனது பதினெட்டாவது வயதில் ஒரு சிறிய பெட்டியைக் கொடுத்து தந்தையாரின் கட்டளைப் படி ஒரு செயலைச் செய்து முடிக்க வேண்டுமென்று சொன்னார். அதை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் உட்கார்ந்திருந்த கதிரவன் நண்பன் சித்திரையிடன் இந்தச் செய்தியைச் சொல்லச் சென்றான்.

ஏரி சூழ் கூம்புமலையில் ஊழிவாயன் தன்னுடைய அறையில் இருந்த ஏழு உருளைகளை ஒவ்வொன்றாகத் திறந்து பார்க்கிறான். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு நிறத்தில் ஒரு பெண் வந்து கொஞ்சலில் தொடங்கி மிரட்டலில் முடிக்கிறாள். அவளை விடுவிக்காவிடில் ஊழிவாயன் வீழ்வான் என்று மிரட்டுகிறாள். மற்றும் பாகம்-3 பாகம்-4

பாகம் - 5

உருளைப் பெண்ணின் மிரட்டலைக் கேட்டு ஆத்திரத்தோடு இருந்த ஊழிவாயனின் எரிகின்ற சினத்தில் எண்ணெய் ஊற்றியது தேலி. அது ஊழிவாயனுக்கு ஏதும் கெட்டது நல்லது நடக்குமானால் முன்னால் எச்சரிக்கும் பறவை. காய் காய் என்று கத்தியது. அந்தக் கத்தலைக் கேட்டு தேலியிடன் சென்றால் ஊழிவாயன்.

"ஊழிவாயா.... நீ விரைந்து செயல் முடிக்க வேண்டிய வேளை வந்துவிட்டது. நீ பிடித்து வைத்திருக்கும் செங்கோமானின் மனைவி தன்னுடைய மகன் கதிரவனிடம் உன்னை அழிக்கும் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார். அவன் வெற்றி பெறுவானோ! தோல்வி பெறுவானோ! ஆனால் உனக்கு ஒரு எதிரி உண்டாகி விட்டான்."

ஊழிவாயனின் நெஞ்சிலிருந்த வைரம் செவேலென்று ஒளிர்ந்தது. "தேலி... இப்பொழுது அந்தச் சிறுவன் எங்கிருக்கிறான்? உடனே சொல்...நான் சென்று கொன்று வருகிறேன்."

தேலி கிக்கித்தது. "ஹா ஹா எந்த இடத்தில் இருக்கிறான் என்று சொல்ல முடியாது. அது என்னுடைய ஆற்றலுக்கு அப்பாற்பட்டது. ஆனால் இன்று அவனுடைய பிறந்தநாள். ஆகையால் இல்லத்தில் இருப்பான் என்றுதான் தோன்றுகிறது."

அடுத்த நொடியிலேயே அந்த இடத்திலிருந்து மறைந்தான் ஊழிவாயன். மிக விரைவில் கதிரவனின் இல்லத்தில் தோன்றினான். "கதிரவா....வா இங்கே?"

ஆரவாரத்தையும் ஆர்ப்பாட்டத்தையும் கேட்டு வெளியே வந்தார் அமுதம். வந்திருப்பவன் கொடியவன் என்று மட்டும் உடனே புரிந்தது. "யார் நீர்? என்ன வேண்டி உள்ளே வந்தீர்?" சற்று அதட்டலோடுதான் கேட்டார்.

"ஓ நீதான் அமுதமா? கதிரவனின் தாய்தானே? என்னைக் கண்டு அச்சப்படாமல் என்னையே அதட்டத் துணிந்த உம்மைச் சும்மா விடமாட்டேன். மந்திரங்களைக் கற்றவன் நான். அதைப் புரிக." உறுமினான்.

"தமிழைக் கற்றவர்கள் நாங்கள். தமிழ்வேளை உற்றவர்கள் நாங்கள். உன்னுடைய மந்திரங்களும் தந்திரங்களும் எங்கள் உண்மைச் சொல்லுக்கும் செயலுக்கும் முன்னால் அற்றுப் போகும். அதைப் புரிக முதலில்." மறமும் அறமும் பொலிந்து சினந்தது அமுதத்தின் முகத்தில்.

அது ஊழிவாயனின் சீற்றத்தை ஏற்றத்தில் வைத்தது. "பெண்ணே... உனது கணவனைப் பிடித்து வைத்திருக்கிறேன் இத்தனை ஆண்டுகளாக. அப்படியிருக்கையில் நீ என்ன செய்து விட முடியும்? உன்னுடைய மகன் என்ன செய்து விட முடியும்? உங்களைப் பொடியாக்கி மண்ணில் முளைக்கும் செடியாக்க நொடி கூடப் பிடிக்காது."

தன்னுடைய கணவனைப் பிடித்து வைத்திருப்பவன் வந்திருப்பவன் என்ற எண்ணம் அவருடைய உள்ளத்திலிருந்த அன்பையெல்லாம் கிளறி ஆத்திரமாக்கி ஊழிவாயன் மேல் பாய்ச்சியது. "கொடியவனே.....யார் பொடியாவார்? குற்றத்தைக் கொற்றம் என்று நினைக்கும் உன் போன்றவரே பொடியாவர். என்னவரை நீ பிடித்து வைத்திருக்கலாம்...ஆனால் நீ மாண்டு அவரும் மீண்டு வருவது உறுதி. இது வேலைப் பிடித்தவனின் காலைப் பிடித்த என் ஆணை. இப்பொழுதே அவரை விடுவித்துப் பிழைத்துப் போ. இல்லையேல் அழிவு உனது. பொலிவு எமது."

"மடப் பெண்ணே...பேச்சைக் குறை. உன் தமிழறிவை பள்ளியில் காட்டு. இந்தக் காட்டுக்கள்ளியிடம் காட்டாதே. இது பார் ஏவி விடுகிறேன் நெருப்பை."

சிரித்து விட்டார் அமுதம். "நெருப்பா? ஒவ்வொரு நாளும் எங்கள் அடுக்களையில் அதில்தான் வேகிறது பருப்பு. நீ ஏவி விடு. அதைச் சாம்பலாக்கி நான் காற்றில் தூவி விடுகிறேன்."

கையிலிருந்த மந்திரத்தண்டை எடுத்துத் திருகினான் ஊழிவாயன். தண்டிலிருந்து கபகபவென நெருப்புக் கொப்புளங்கள் பொங்கிப் பரவின. அந்தக் கொப்புளங்கள் அமுதத்தைச் சுற்றி வளைத்தன.

"உணவு என்பது உயிருக்கு அடிப்படை. அதை உண்டாக்கத் தேவை தீயெனும் படை. பசிப்போரை எதிர்க்கும் நெருப்பே நீ இப்போர் மறந்து சமைப்போர் அடுப்பில் புகுக. உணவு உண்டாக்குக. மீந்த சாம்பல் எங்கள் வழிபாட்டுக் கொப்பரையில் திருநீறாகுக." அமுதம் சொல்லச் சொல்ல நெருப்புக் கொப்புளங்கள் அவரிடமிருந்து விலகி அடுப்பறைக்குள் சென்று அடுப்புக்குள் புகுந்தது.

ஒன்றும் அறியாத பெண் தான் ஏவிய நெருப்பை அணைத்ததை ஊழிவாயனால் ஏற்க முடியவில்லை. உடனே ஒரு மாயப்பேயை உருவாக்கி ஏவினான். அந்தப் பேயும் தலையை விரித்துப் போட்டுக் கொண்டு முண்டக்கண்டை விழித்துக் கொண்டும்....பார்க்கச் சகிக்காத உருவத்தோடு சிவந்த நாக்கை நீட்டி மிரட்டியது. கூ கூ ஹிஹ் ஹிஹ் என்று ஓலமிட்டது. பேய்க்கு மிரளாதார் உண்டோ. ஆனால் அமுதம் மிரளவில்லை. "சீச்சீ...பேயே...போயேன். ஆண்டவனையே அச்சத்தால் வணங்காமல் அன்பால் வணங்குகின்றவர்கள் நாங்கள். உன்னைக் கண்டு அஞ்சினால்....அந்த இறைவனுக்குத்தான் இழுக்கு. மறைந்து தொலைந்து போ..." அச்சம் மிச்சமிருக்கும் வரைதான் எந்தக் கொடுமையும் தெரியும். பயம் மறைந்ததும் கொடூரத்தின் சுயம் மறைந்து விடும். அதுதான் அங்கும் நடந்தது. மாயப்பேய் மாயமாய்ப் போனது.

தன்னுடைய முந்தைய சாதனைகள் அத்தனையும் அமுதம் அழித்து அவமானப்படுத்திவிட்டதாகவே கருதினான். அதே நேரத்தில் அவரிடம் இருக்கும் சக்தி என்னதென்றும் அதன் அளவு எவ்வளவென்றும் கருதிட முடியாமல் தவித்தான். வலிமை தெரியாமல் அடுத்த படையை ஏவுவது அவனுக்குச் சரியானதாகப் படவில்லை. அந்த நொடியில் ஒரு திட்டம் தோன்றியது.

அமுதம் என்ன நடக்கின்றது என்று யோசிக்கும் முன்னமே ஒரு மயக்கக் குளிகையை தரையில் உருட்டினான். அதிலிருந்து மயக்கப்புகை அறையெங்கும் பரவியது. வெட்டுப்பட்ட கொடி போல தரையில் வீழ்ந்தார் அமுதம்.

மந்திரத்தண்டை மீண்டும் திருகினான். அதிலிருந்து சிறிய குமிழ் வெளிவந்தது. அந்தக் குமிழைப் பார்த்துச் சொன்னான். "கண்ணாடிக்குமிழே...இதோ இங்கே மயங்கிக் கிடக்கும் பெண்ணை சிறைப்படுத்திக் கொண்டு கூம்புமலைக்குச் செல்."

அவன் கட்டளையைப் புரிந்து கொண்ட குமிழ் சிறிது சிறிதாக காற்றடைக்கப்படுவது போலப் பெரிதானது. அப்படியே மிதந்து சென்று அமுதம் மீது அமர்ந்து அப்படியே அவரை தனக்குள் அடைத்துக் கொண்டது.

"ம்ம்ம்ம்...கூம்புமலைக்குச் செல்... வெளியிலிருந்து எந்தச் சத்தமும் உள்ளே வரக்கூடாது. உள்ளேயிருந்து எந்தச் சத்தமும் வெளியே வரக்கூடாது. இந்தப் பெண் பேசியே கூம்புமலையைச் சிதைத்து விடக்கூடும். ஆகையால் குரல் வெளியே வரவே கூடாது. செல்" உறுமினான் ஊழிவாயன்.

அந்தக் குமிழ்..அப்படியே அந்தரத்தில் எழும்பிப் பறந்தது.... சட்டென்று மறைந்தது. ஊழிவாயனும்தான். அந்த பொழுதில்தான் காட்டிற்குள் கதிரவனும் சித்திரையும் ஒரு பெரிய உண்மையைத் தெரிந்து கொண்டார்கள்.

தொடரும்...

அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

24 comments:

said...

ஜிரா...
கதை சூடு பிடிச்சிருச்சே!
இப்படியே நகர்த்திக்கிட்டுப் போங்க! நாங்க உங்க கூடவே வாரோம்! :-)

//இது வேலைப் பிடித்தவனின் காலைப் பிடித்த என் ஆணை//

சூப்பரு!
வேலைப் பிடித்தவனின் காலைப் பிடித்தவர்க்கு வேதனை இல்லை என்பேன் - கேபிஎஸ் பாட்டு தான் ஞாபகத்துக்கு வருது!

//மந்திரங்களைக் கற்றவன் நான். அதைப் புரிக." உறுமினான்//

மந்திரமாவது நீறு! வானவர் மேலது நீறு!

//இல்லையேல் அழிவு உனது. பொலிவு எமது.//

பொலிக பொலிக போயிற்று வல்லுயிர் சாபம்! - திருவாய்மொழின்னு கதை களை கட்டுது!

//மயக்கப்புகை அறையெங்கும் பரவியது. வெட்டுப்பட்ட கொடி போல தரையில் வீழ்ந்தார் அமுதம்//

அடப் பாவி ஊழிவாயா!
சரி விடுங்க!
நாள் என் செய்யும், வினை தான் என் செய்யும்?
தோளூம் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே!

கதிரவனுக்கு வேலை தொடங்கிருச்சி!

said...

வசனம் எல்லாம் கலக்குது அண்ணாச்சி!!
கதையும் சூடு பிடிச்சிருச்சு!!

நடத்துங்க!! B-)

said...

O...gira, Innikki nena? me the firshtu???? :-)

Seri padam kaanome! Enge? Enge?
Mayajaala dishum dishum nadakkuthu! Video, atleast padam pattaiya kelappume?

said...

நெருப்பு பருப்புன்னு அம்மா சும்மா கலக்கறாங்களே!! கதிரவன் என்ன விஜய.டி.ஆர் தம்பியா!! :))

சீக்கிரம் அவங்க கண்டுபிடிச்சதைச் சொல்லுங்க.

said...

அஞ்சு நிமிஷத்துல ரெண்டு பத்தி நடுவுல சேத்துட்டீங்களா இராகவன்? இடுகையைப் படிச்சுட்டு நடுவுல அஞ்சு நிமிஷம் வேற வேலை பாத்துட்டு வந்து பாத்தா இரவிசங்கர் பின்னூட்டம். அதைப் படிச்சா நான் படிக்காததை எல்லாம் சொல்லியிருக்காரு. அதனால இன்னொரு தடவை இடுகையைப் படிச்சேன். :-)

அப்பா அம்மா ரெண்டு பேரையும் புடிச்சு வச்சதால கதிரவனுக்கு இன்னும் சூடு கூடும்ன்னு நினைக்கத் தோணினாலும் அவங்க ரெண்டுபேரையும் இன்னார் தான் கடத்தி வச்சிருக்காங்கன்னு அவனுக்குத் தெரியுமான்னு ஒரு கேள்வி எழுந்து நிக்கி.

said...

கதை சூப்பரா போகுது...

போன பாகம் கொஞ்சம் தோய்வடைஞ்ச மாதிரி இருந்தது. இது பட்டையை கிளப்புது :-)

said...

ஜி.ரா படம் எடுத்தா 100 நாள் ஓடும் போல தெரியுது.. டயலாக்ஸ் எல்லாம் பட்டையை கிளப்புது...

டீ.ஆரே தோத்தாரு :-)

said...

அடப்பாவி ஊழிவாயா.....

ம்ம்ம் அப்புறம் என்னாச்சு?

பாவம் அமுதம்.

said...

5 பகுதியும் இப்பத்தான் படிச்சுட்டு வரேன்...சுவாரசியமா போகுது...கலக்குங்க :))

said...

3டி அனிமெஷன் எல்லாம் கலக்கலா பண்ணலாம் போல. ரொம்பசுவாரஸ்யமா கொண்டு போறீங்க ஜிரா.


//"கொடியவனே.....யார் பொடியாவார்? குற்றத்தைக் கொற்றம் என்று நினைக்கும் உன் போன்றவரே பொடியாவர். என்னவரை நீ பிடித்து வைத்திருக்கலாம்...ஆனால் நீ மாண்டு அவரும் மீண்டு வருவது உறுதி. இது வேலைப் பிடித்தவனின் காலைப் பிடித்த என் ஆணை. இப்பொழுதே அவரை விடுவித்துப் பிழைத்துப் போ. இல்லையேல் அழிவு உனது. பொலிவு எமது."//

அப்படியே கண்ணாம்பாவை கண் முன் கொண்டு வரும் வசனம். கலக்குங்க.

கதை-வசனகர்த்தா ஜிரா, வாழ்க, வாழ்க. :-)

said...

ஆகா அருமையா இருக்குங்க. கலக்கல் 3டி படம் பார்க்கற எபக்ட் இருக்கு. சுத்த தமிழ படிச்சு ரொம்ப நாள் ஆச்சுங்க.

said...

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ஜிரா...
கதை சூடு பிடிச்சிருச்சே!
இப்படியே நகர்த்திக்கிட்டுப் போங்க! நாங்க உங்க கூடவே வாரோம்! :-) //

சரிங்க...அதாவது நல்லவங்களுக்குக் கஷ்டம் வந்தா சூடுபிடிக்குது. :) இனிமே நல்லவங்களுக்குக் கஷ்டத்துக்கு மேல கஷ்டத்தக் குடுத்துருவோம்.

////இது வேலைப் பிடித்தவனின் காலைப் பிடித்த என் ஆணை//
சூப்பரு!
வேலைப் பிடித்தவனின் காலைப் பிடித்தவர்க்கு வேதனை இல்லை என்பேன் - கேபிஎஸ் பாட்டு தான் ஞாபகத்துக்கு வருது!//

அந்தப் பாட்டெல்லாம் கேட்டிருக்கீங்களா? :-P

////இல்லையேல் அழிவு உனது. பொலிவு எமது.//

பொலிக பொலிக போயிற்று வல்லுயிர் சாபம்! - திருவாய்மொழின்னு கதை களை கட்டுது! //

என்னடா கே.பி.எஸ், தேவாரம்னு சொல்றீங்களேன்னு பாத்தேன். இப்பத் திருவாய்மொழியும் களை கட்டுது :)

////மயக்கப்புகை அறையெங்கும் பரவியது. வெட்டுப்பட்ட கொடி போல தரையில் வீழ்ந்தார் அமுதம்//

அடப் பாவி ஊழிவாயா!
சரி விடுங்க!
நாள் என் செய்யும், வினை தான் என் செய்யும்?
தோளூம் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே!

கதிரவனுக்கு வேலை தொடங்கிருச்சி!//

மொத அத்தியாயத்துலயே வேலை தொடங்கீருச்சு. அவந்தான் நேரத்த வீணாக்கீட்டான்.

said...

போன்றவரே பொடியாவர். என்னவரை நீ பிடித்து வைத்திருக்கலாம்...ஆனால் நீ மாண்டு அவரும் மீண்டு வருவது உறுதி. இது வேலைப் பிடித்தவனின் காலைப் பிடித்த என் ஆணை. இப்பொழுதே அவரை விடுவித்துப் பிழைத்துப் போ. இல்லையேல் அழிவு உனது. பொலிவு எமது."//

அப்படியே கண்ணாம்பாவை கண் //அதே அதே.

said...

ஜிரா..இந்த பகுதியில வேகம் சூப்பர் ;))

\\\இது வேலைப் பிடித்தவனின் காலைப் பிடித்த என் ஆணை. இப்பொழுதே அவரை விடுவித்துப் பிழைத்துப் போ. இல்லையேல் அழிவு உனது. பொலிவு எமது."
\\


ஆஹா...ஆஹா...ஜிரா வார்த்தைகளில் புகுந்து விளையாடி இருக்கிங்க ;))

said...

// CVR said...
வசனம் எல்லாம் கலக்குது அண்ணாச்சி!!
கதையும் சூடு பிடிச்சிருச்சு!!

நடத்துங்க!! B-) //

சூடு பிடிச்சிருச்சா??? ஓ கதைக்கா :) அப்பச் சரி அப்பச் சரி

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
O...gira, Innikki nena? me the firshtu???? :-)

Seri padam kaanome! Enge? Enge?
Mayajaala dishum dishum nadakkuthu! Video, atleast padam pattaiya kelappume? //

படம் போடுற கிரண் மூனு வாரம் லீவு போட்டுட்டு அமெரிக்கால இருந்து இந்தியாவுக்குப் போயிட்டான். அவன் வந்தாத்தான் படம்.

என்னது வீடியோவா? அதுதான் கொறைச்சல். :) அதுக்கு நான் எங்க போவேன்?

said...

// இலவசக்கொத்தனார் said...
நெருப்பு பருப்புன்னு அம்மா சும்மா கலக்கறாங்களே!! கதிரவன் என்ன விஜய.டி.ஆர் தம்பியா!! :))

சீக்கிரம் அவங்க கண்டுபிடிச்சதைச் சொல்லுங்க. //

ஹா ஹா ஹா

அவங்க கண்டுபிடிச்சது தெரிய இன்னும் வாரக்கணக்குல ஆகுமே....

// குமரன் (Kumaran) said...
அஞ்சு நிமிஷத்துல ரெண்டு பத்தி நடுவுல சேத்துட்டீங்களா இராகவன்? இடுகையைப் படிச்சுட்டு நடுவுல அஞ்சு நிமிஷம் வேற வேலை பாத்துட்டு வந்து பாத்தா இரவிசங்கர் பின்னூட்டம். அதைப் படிச்சா நான் படிக்காததை எல்லாம் சொல்லியிருக்காரு. அதனால இன்னொரு தடவை இடுகையைப் படிச்சேன். :-) //

இல்லையே....அப்படியேதானே இருக்கு...

// அப்பா அம்மா ரெண்டு பேரையும் புடிச்சு வச்சதால கதிரவனுக்கு இன்னும் சூடு கூடும்ன்னு நினைக்கத் தோணினாலும் அவங்க ரெண்டுபேரையும் இன்னார் தான் கடத்தி வச்சிருக்காங்கன்னு அவனுக்குத் தெரியுமான்னு ஒரு கேள்வி எழுந்து நிக்கி. //

நல்ல கேள்வி... அவனுக்கு அது இது வரைக்கும் தெரியலைன்னுதான் கதையப் படிக்கிறப்போ தெரியுது...

// துளசி கோபால் said...
அடப்பாவி ஊழிவாயா.....

ம்ம்ம் அப்புறம் என்னாச்சு?

பாவம் அமுதம்.//

ஊழிவாயன் அட்டூழியம் இன்னும் முடியலைங்க... இப்பத்தான் தொடங்கீருக்கு.. இன்னும் பாருங்க...அமுதத்தப் படாதபாடு படுத்தப் போறான்.

said...

//அவங்க கண்டுபிடிச்சது தெரிய இன்னும் வாரக்கணக்குல ஆகுமே....//

அவ்வளவு நாளா?

வல்லி மேடம் சொன்ன மாதிரி கண்ணாம்பா கண் முன் வந்து போனார்கள்..

said...

இன்று தான் மொத்த கதையை படித்தேன். ஒரு அலிப் லைலா பார்பது போல் உள்ளது!

said...

அழகு தமிழ் - தமிழின் வீரம் - அமுதத்தின் சொற்சிலம்பாட்டம் - அருமை அருமை - கண்ணாம்பாவை விட விஜயகுமாரி பொருத்தமாய் இருக்கும். பெற்றோர் கொடியவனின் கோட்டையில். என்ன செய்யப் போகிறான் கதிரவன் சித்திரையுடன் - பொறுப்போம் - பார்ப்போம் - படிப்போம்

said...

கூடவே வருகிறோம், இந்தவாரம் படம் மிஸ்ஸிங்?

said...

//இது வேலைப் பிடித்தவனின் காலைப் பிடித்த என் ஆணை. //

// மீந்த சாம்பல் எங்கள் வழிபாட்டுக் கொப்பரையில் திருநீறாகுக.//
அருமை போங்க .
//அச்சம் மிச்சமிருக்கும் வரைதான் எந்தக் கொடுமையும் தெரியும். பயம் மறைந்ததும் கொடூரத்தின் சுயம் மறைந்து விடும். //
முற்றிலும் உண்மை.
கதை நல்ல போகுது.

said...

// கப்பி பய said...
5 பகுதியும் இப்பத்தான் படிச்சுட்டு வரேன்...சுவாரசியமா போகுது...கலக்குங்க :)) //

அஞ்சையும் படிச்சாச்சா...ஆறாவது அடுத்து வரும். அதையும் படிச்சிருங்க. :)

// மதுரையம்பதி said...
அப்படியே கண்ணாம்பாவை கண் முன் கொண்டு வரும் வசனம். கலக்குங்க. //

கண்ணாம்பா எவ்ளோ பெரிய நடிகை. வசனத்தத் தொடங்கீட்டாங்கன்னா... கேட்டுக்கிட்டேயிருக்கலாமே.

// வல்லிசிம்ஹன் said...
அப்படியே கண்ணாம்பாவை கண் //அதே அதே. //

ஆகா...வாங்க வல்லீம்மா.


// அனுசுயா said...
ஆகா அருமையா இருக்குங்க. கலக்கல் 3டி படம் பார்க்கற எபக்ட் இருக்கு. சுத்த தமிழ படிச்சு ரொம்ப நாள் ஆச்சுங்க. //

திரி-டி படங்கள்ளாம் பாத்து எவ்ளோ நாள் ஆச்சு...ஆசையக் கெளப்புறீங்களே....

said...

பாவம் பா அமுதம்.விட்டுறச் சொல்லுங்க.. :(

said...

//இது வேலைப் பிடித்தவனின் காலைப் பிடித்த என் ஆணை. இப்பொழுதே அவரை விடுவித்துப் பிழைத்துப் போ. இல்லையேல் அழிவு உனது. பொலிவு எமது."//

//ஆண்டவனையே அச்சத்தால் வணங்காமல் அன்பால் வணங்குகின்றவர்கள் நாங்கள். //

அருமை, அருமை! தமிழ் துள்ளி விளையாடுது! தமிழ் வேள் மேல் வைத்த பற்றும்!